.jpg)
சில விஷயங்கள் எதேச்சையாக நடக்கும். அப்படித்தான் நேற்று இரவு என் பள்ளிக் கூடத்தின் என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு.N.வெங்கட்ராமன் என்கிற NV சாரை பற்றி கனவு கண்டேன். காலை எழுந்து தமிழ்மணம் திறந்து பார்த்தா மயிலாடுதுறை சிவா ஒரு பதிவு போட்டிருந்தார். ரொம்ப நாளா ஆச்சே அவர் பதிவு போட்டு, ஊருக்கு போனாரே திரும்பி வந்துட்டாரா என்கிற நினைவுடனேயே திறந்து பார்த்தா NV சாரை பத்தி பதிவு போட்டிருக்கார். போட்டோவும் போட்டு. எனக்கு ஆச்சர்யமாக போய் விட்டது.
மற்ற ஆசிரியர்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அவர் பாடம் மட்டும் கற்று கொடுப்பதில்லை. கூடவே வாழ்க்கையும் கற்று கொடுப்பார். அவரின் அந்த அணுகுமுறை அவரின் சில சக ஆசிரியர்களுக்கும் சில நூறு சதவிகித நல்ல மாணவர்களுக்கும் கூட பிடிக்காமல் இருந்திருக்கும். ஆனால் எனக்கு அவருடைய அந்த அணுகுமுறை சரி என்றே தோன்றுகிறது. காரணம் பத்தாம் வகுப்பு வந்து விட்ட மாணவர்கள் ஓரளவு தன் வாழ்க்கையின் திசையை முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்கள். அதனால் கொஞ்சம் சுயமாக சிந்திக்க வேண்டும் என்கிற நோக்கோடு கொஞ்சம் விட்டு பிடிக்க வேண்டும் என நினைத்து மாணவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே சுதந்திரம் கொடுப்பார்.
அவர் வகுப்பு மாணவர்கள் மற்ற வகுப்பு மாணவர்களை விட கொஞ்சம் வித்தியாசமாகவே இருப்பர். பாடம் எடுத்து கொண்டிருக்கும் போது தூரத்தில் வராண்டாவில் தலைமை ஆசிரியர் வந்துவிட்டால் இவர் "பசங்களா இப்போ நாம் PR என்கிற கோடு வரைந்து அதில் SK என்கிற புள்ளியை குறிக்க போகிறோம்" என்பார். வகுப்பில் சத்தம் காதை கிழித்து கொண்டு போகும். காரணம் PR என்பது அந்த தலைமை ஆசிரியர் பெயர். SK என்பது உதவி தலைமை ஆசிரியர் பெயர். அந்த இருவருமே எங்க NV சார் படிக்கும் போது அவருக்கே ஆசிரியர்கள் என்பது வேறு விஷயம். மாணவர்களின் சத்தம் கேட்டு வகுப்பில் நுழையும் தலைமை ஆசிரியர், "மிஸ்டர். NV என்ன சத்தம் என்ன பாடம் நடத்தறேள்" என்று கேட்டு விட்டு கரும் பலகையை பார்ப்பார். அவருக்கு விஷயம் புரிந்து விடும். செல்லமாக "நாப்பத்தஞ்சு வயசாகறது, இன்னும் பழைய குறும்பு போகலை"என்று செல்லமாக சொல்லிவிட்டு போய் விடுவார். அப்போது இந்த மாதிரி விஷயங்கள் எங்கள் பள்ளியின் புரட்சி என்று கூட சொல்லலாம்.
ஒரு மாணவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே ஆசிரியர் வந்துவிட்டால் சைக்கிளை விட்டு இறங்க வேண்டும். அதுதான் நாம் ஆசிரியருக்கு தரும் மரியாதை என தவறாக யாராலோ ஒரு பழக்கம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது. அது பற்றி வகுப்பிலே NV சார் ஒரு முறை "எதுக்கு இறங்கனும், அதிலே என்ன மரியாதை! சரி அதுதான் மரியாதை என்றே வைத்துகொண்டாலும் எவனாவது முழுசா இறங்குவானான்னு பார்த்தா அதுவும் இல்லை. இறங்குவது போல பாவ்லா பண்ணுவான். சைக்கிள் சீட்டிலிருந்து * *தை தூக்கிட்டு திரும்பவும் வச்சிட்டு போயிடுவான். கையை தூக்கி வணக்கம் வைத்து மரியாதை செய்யலாம். ஆனா **தை தூக்கி மரியாதையா, இதுக்கு பேசாம வாத்தியாரை பார்க்காத மாதிரி திரும்பிகிட்டு போறது பெட்டர்" என்று சொன்னார். இப்படி ஒரு வாத்தியார் அப்போதெல்லாம் "கெட்ட" வார்த்தை பேசுவது சரியா என மனசு கேட்டாலும் சிந்திச்சு பார்க்கும் போது "ஆமாம் அவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்குதே" என தோன்றியது.
அவரின் திறமை இருக்கிறதே, வாவ், ஒரு மாதிரியான அசாத்திய திறமை அவருக்கு. ஆங்கில புலமையும் கணித புலமையும் வியப்படைய வைக்கும். அவரின் நகைச்சுவை அவருடைய மிக பெரிய சொத்து. பள்ளியின் அனைத்து விழாக்களையும் இவர் ஒரு ஆளாக நின்று நடத்திக்காட்டுவார்.
வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இப்பவும் பள்ளியின் பழைய மாணவர் சங்கத்திலே இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். வாழ்க்கைப் பாடத்தை நடத்தினார் என சொன்னேனே! அப்படிப்பட்ட அவரே ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் மிக பெரிய சறுக்கலை சந்திக்க நேர்ந்தது. ஏதோ பைனான்ஸ் கம்பனியால் தன் வீடு முதற்கொண்டு எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தது. "இனி NV அவ்வளவுதான்" என சொல்லியவர்கள் மத்தியில் மீண்டு எழுந்து வெற்றிக் கொடி நாட்டினார். அப்போது அவர் மட்டும் மனம் சோர்ந்திருந்தால் இன்று அவர் நம்மிடம் இருந்திருக்க மாட்டார். அவரிடம் படித்த எங்கள் அனைவருக்கும் அவர் நடத்திக்காட்டிய பிராக்டிகல் பாடம் அது என்றே நான் நினைக்கிறேன்.
சிறந்த ஆஞ்சனேய பக்தர். அவர் நடக்கும் வேகம் இன்றைக்கும் குறையவில்லை. எப்போதும் பிஸி தான். ஆணதாண்டவபுரத்திலே கோபால கிருஷ்ண பாரதிக்கு விழா எடுக்கறேன், நம்ம பள்ளி இலக்கிய மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு பண்றேன், "வீரப்பா பிள்ளை" கோப்பை வாங்க பசங்களை தயார் பண்றேன், "NV கோப்பை" மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான வேலை பண்றேன் என இப்பவும் எப்பவும் அவர் சுறுசுறுப்புதான். அவரிடம் படித்தேன் என்பதில் எப்பவுமே பெருமைப்பட்டு கொண்டிருக்கும் மாணவர்களில் நானும் ஒருவன்.