பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 15, 2014

நாகை பாராளுமன்ற தொகுதியில் ஏன் அண்ணன் திரு. ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்???


அண்ணண் திரு. ஏ.கே.எஸ்.விஜயன் அவர்கள்

தலைவர் கலைஞர் அவர்கள் தேர்வாலும், வணக்கத்துகுரிய தளபதியின் வழிகாட்டுதலாலும் நாடாளுமன்ற உறுப்பினராக நாகை தொகுதியில் பணியாற்றிய திரு. ஏ.கே.எஸ். விஜயன் அவர்கள்,தான் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது செயல்படுத்திய திட்டங்கள் கீழே! அண்ணன் அவர்களையே மீண்டும் நாகை மக்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என கீழே கொடுக்கப்பட்ட சாதனைகளை பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் நாகை தொகுதி வாக்காளர்களே!


கருகிய நெல் பயிர்களை தளபதிக்கு காட்டி தன் மாவட்டம் காவிரி வராமையால் படும் சிரமத்தை விளக்கும் போது!


** தஞ்சாவூர் - திருவாரூர் அகல ரயில்பாதை திட்டம் 1993ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டதை 2000ம் ஆண்டிலிருந்து மீண்டும் துவங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது


**திருவாரூர் - நாகப்பட்டினம் - நாகூர் அகல ரயில்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டது.


** நாகப்பாட்டினம் - வேளாங்கண்ணி அகல ரயில்பாதை திட்டம் (புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலிருந்து நிதி செலுத்தப்பட்டும்) கிடப்பில் கிடந்ததை நிறைவேற்றம் செய்யப்பட்டது.


** மயிலாடுதுறை - திருவாரூர் அகல ரயில்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டது.

**திருவாரூர் - பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை அமைக்கும் பணி ஒரே நேரத்தில் துவங்கி நடைபெறும் என அமைச்சரின் பதிலை பெற்று பணி துவங்கப்பட்டுள்ளது.

**திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில்பாதை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பாதையில் உள்ள பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

** வேளாங்கண்ணி - திருக்குவளை - திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

** திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி - திருவாரூர் - பட்டுக்கோட்டை  ஆகிய பணிகளுக்கு ரூ 140 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் மீதமுள்ள பணிக்கு 2014 மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அந்த பணிகளும் இந்த ஆண்டே தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

**தஞ்சாவூர்- திருவாரூர் - நாகப்பட்டினம் நான்குவழிச்சாலை மத்திய அரசின் அனுமதியோடு நிலம் கையகப்படுத்தப்பட்டும் மாநில அரசின் ஒத்துழைப்பு ஒப்பந்தம் வழங்காத காரணத்தால் தேசிய நெடுஞ்சாலை ஆணையமே 360 கோடிக்கு பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்கண்ட சாலை விரிவாக்கத்தில் திருவாரூர் விளமல் பகுதியில் சுமார் 250க்கும் மேற்ப்பட்ட வீடுகள் பாதிப்படைவதை அறிந்து மாற்றுவழியாக புறவழிச்சாலை அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் உத்தரவை பெற்றுத்தந்தது.

** தஞ்சை - மன்னை - திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் - கோடியக்கரை வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

** தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை அறிவித்த போது அதை முதலாவதாக நாகை மாவட்டத்துக்கு பெற்றுத்தந்தது.

** தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது மத்திய பல்கலைகழகம் திருவாரூரில் அமைந்திட நாடாளும்ன்ற உறுப்பினர் என்ற வகையில் நாடாளும்ன்ற ஒப்புதலை பெற்று பல்கலைகழகம் அமைத்திட முழு முயற்சி எடுத்தது.

**கேந்திர வித்யாலயா பள்ளி நாகை மற்றும் திருவாரூரில் அமைக்க அனுமதி வாங்கப்பட்டு நாகையில் அரசு இடம் தராத காரணத்தால் திருவாரூரில் முதலாவதாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

**அயல் நாடுகளில் வாழும் தொகுதி தமிழர்களுக்கு தேவையான உயிர்காப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கான அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தது.

**காவிரி பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, காவிரி நதி நீர் பங்கீடு ஆணையை அரசிதழில் வெளியிட பிரதம அமைச்சர், நீர்வள அமைச்சர், ஆகியோரை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியது.
ஏழைகளுக்கு உதவி!

** நாகையில் மீனவர்கள் நலம் காத்திட மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு  நடவடிக்கை மேற்கொள்ள தலைவர் காலைஞர் ஆலோசனைப்படி உச்ச நீதிமன்றத்தில் முதன் முதலாக வழக்கு தொடுத்தது.

**சுனாமியின் போது பாதிப்படைந்த உப்பு உற்பத்தி தொழிலாளர்களுக்கு ரூ 6000/=ம், உப்பள உரிமையாளர்களுக்கு ரூ 15,000/=ம் நிவாராணத்தொகை பெற்றுத்தந்தது.

**உப்பு உற்பத்தியாளர்களுக்கு நிலங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ 270 இலட்சத்தை தள்ளுபடி செய்தும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ750/=ஆக இருந்த வரிவிதிப்பை ரூ 102/= ஆக குறைத்து வரி விதிப்பு செய்து ஆணை பெற்று தந்தது.

**மத்திய அரசு அனுமதித்த பாலிடெக்னிக் கல்லூரியை திருத்துறைப்பூண்டியில் அமைத்து தந்தது.
சமச்சீர் கல்விக்காக ஜெயா ஆட்சியில் சிறை சென்ற எங்கள் நகரம் குண்டாமணி அண்ணனுக்கு கேடயம் கொடுத்து கௌரவித்த போது (மொத்தம் 45 பேர் சிறை புகுந்தனர்)

**தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரி திருக்குவளையில் துவக்கப்பட்டது.

**சட்டமன்றத்தில் துணை முதல்வர் தளபதி அறிவிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களின் கோரிக்கையின்படி கூத்தானல்லூர் பாய்கார தெருவில் பாலம் அமைக்கப்படும் என அறிவித்தது.

** நாகை துறைமுகம் விரிவாக்கம் செய்திட முதல்வர் கலைஞர் அவர்களிடமிருந்து ரூ 50/= கோடி பெற்று விரிவாக்கம் செய்தது.

**வேதாரண்யம் மற்றும் திருத்துறைபூண்டியில் அரசு கல்லூரி துவங்க சட்டமன்றத்தில் துணை முதல்வர் தளபதி அவர்கள் பதிலுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே எஸ்.விஜயன் அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கால்லூரி அமைக்கப்படும் என அறிவித்து ஆணை பிறப்பித்தது.

**திருவாரூரில் அரசின் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கலைஞர் அரசால் கொண்டுவரப்பட்டது.

**கலைஞர் அரசால் அறிவிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை அமைக்கும் பணி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி துவங்கி பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது இப்போது இருக்கும் அரசினால்.

**திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்திட வணக்கத்துக்குரிய தளபதி அவர்களால் உத்தரவு பெறப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவது.
இந்த வருட  தைப்புத்தாண்டில் வாழ்த்து பெற்ற போது - ஒரு இனிய அனுபவம்!

** (PMRF) பிரதமர் நிவாரண திட்டத்தின் கீழ் ரூ 70 இலட்சம் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக நாகை தொகுதி பயனாளிகளுக்கு பெற்று தந்தது.

**இந்தியாவிலேயே பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி கமிட்டி சேர்மனாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றதால் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகானம் எம்.பி மேம்பாட்டு நிதி மூலம் வழங்கிட அரசாணை பெற்று வழங்கியது.
மயிலாடுதுறை நகர கழகம் சார்பாய் அண்ணன் அவர்களுடன் தமிழ் புத்தாண்டு விழா!

**தலைவார் கலைஞர் அவர்களால் கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி துவக்கி வைக்கப்பட்டும் இது நாள் வரை இந்த அரசால் செயல்படாமல் உள்ளது.

** நாகையில் மீன் இறங்கு தளம் அமைக்க ரூ 32 கோடி நிதி  தலைவர் கலைஞர் அரசால் பெறப்பட்டது.

**முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுக்காவாக ஆணை பெறப்பட்டும் தமிழக அராசால் இதுவரை  செயல்படுத்தாமல் உள்ளது.

** குரூப் 1, +2 மாணவர்கள் நேரிடையாக பாலிடெக்னிக் சேருவதற்கு இருந்த தடையை நீக்கிட அகில இந்திய தொழில் நுட்ப தலைவரை அணுகி அந்த தடையை நீக்கி ஆண்டிற்கு சுமார் 10,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆணை பெற்றுத்தந்தது.

** சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைக்கப்பட்ட முத்துப்பேட்டை ஒன்றியம் மேல் நம்மங்குறிச்சி - நம்மங்குறிச்சி பாலம் அமைத்தது. ஓரத்தூர் பாமணி ஆற்றில் பாலம் அமைத்து தந்தது. கொராடாச்சேரி-கிளரியம்-பத்தூர் பாலம் அமைத்து தந்தது.

** நாடாளுமன்றத்தில் மக்கள் நலனுக்காக 464 கேள்விகளும், 97 விவாதங்களும், 18 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களும், 5 அரசு மசோதா சீட்டுகளும் (Government Bills) ஆகிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பணியாற்றியது.
தலைவர் கலைஞர் பிறந்த நாளில் ரத்த தானம் செய்யும் அண்ணன் ஏ.கே.எஸ் 

இவைகளை தவிர ...............

பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து செய்யப்பட்ட பணிகளின் விபரம் கீழே:-

பள்ளிக்கட்டிடம் - 115, சுற்றுச்சுவர் - 172, நூலக கட்டிடம் - 7, விளையட்டு மைதானாம் - 18, கணிணி பயன்பாடு - 10  = ரூபாய் 9,67,27,750 .00

அங்காடி கட்டிடம், பொது வினியோக கட்டிடம் -44, சமுதாய கூடம் -29, வணிக வளாகம் - 3, உழவர் சந்தை-1 = ரூபாய் 4,82,43,000.00

பாலங்கள் - 67, சாலைகள் - 273, படித்துறை - 47, மழை நீர் சேகரிப்பு - 4, ஜெனரேட்டர் அறை - 2, தொலைக்காட்சி அறை-2 = ரூபாய் 12,29,0,2500.00

மின்விளக்கு - 83, தூர்வாருதல்-47,குப்பை வண்டி - 1, கல்வெட்டு அமைத்தல் -8, நீர் பாசன தடுப்பு அணை -15 = ரூபாய் 3,94,43,710.00

குடி நீர் குழாய், குடி நீர் தொட்டி -64, மயான கொட்டகை, கருமாதி மேடை - 325, சைக்கிள் நிறுத்தம் - 7 = ரூபாய் 3,79,73,000.00

பேருந்து நிலையம் - 217, மகளிர் சுய உதவி கட்டிடம் - 5, கால் நடை நிலையம்-2, சுகாதார வளாகம்- 18 = ரூபாய் 3,84,42,418.00

துணை சுகாதார நிலையம் -1, கலை அரங்கம் - 1, சுற்றுலா பயணிகள் கட்டிடம் -1 = ரூபாய் 3,3,10,000.00

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யப்பட்ட பணிகளின் மொத்த தொகை = 38,70,42,378.00பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டு செய்யப்பட்ட சாலைப்பணிகள் விபரம்:-

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற்ற சாலைப்பணி - 201, சாலை மேம்பாடு - 27, பாலம் - 2 = ரூபாய் 13,7,20,081.00

இதே போல.......

நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சியால் விரிவாக்கம் செய்யப்பட்ட இரயில் வண்டிகள் விபரம் - (தேதியுடன்) :-

எர்ணாகுளம் - நாகூர் எக்ஸ்பிரஸ் விரிவாக்கம் - 30.03.2010


சென்னை எக்மோர் - நாகூர் எக்ஸ்பிரஸ் - 24.04.2010


நாகூர் - நாகை- வேளாங்கண்ணி பாசஞ்சர் - 20.12.2010


வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் - 20.12.2010


நாகூர் -பெங்களூர் வழி சேலம் எக்ஸ்பிரஸ் - 01.07.2012


மயிலாடுதுறை - திருவாரூர் பாசஞ்சர் - 12.05.2012


காரைக்கால் - மும்பை எக்ஸ்பிரஸ் - 12.05.2012


மற்றும் பாசஞ்சர் ரயில்கள் - 27.10.2013


வேளாங்கண்ணி - சென்னை link எக்ஸ்பிரஸ் - 22.06.2013
மேற்கூறிய அனைத்தும் நாகை பாராளுமன்ற தொகுதியில் இப்போது வேட்பாளராக களத்தில் நிற்கும் நாகை மாவட்ட திமுகழக செயலாளர் திரு. A.K.S.விஜயன். B.A., M.P அவர்கள் நாகை தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது செய்த சேவைகள்.

இதை தவிர வளைகுடா நாட்டில் பிழைக்க சென்ற தமிழர்கள் எதிர்பாராவிதத்தில் அந்த நாட்டு அரசால் தண்டனை விதிக்கப்பட்டு அடுத்த நாள் தூக்கிலிட இருந்த போது துரிதகதியில் செயல்பட்டு வெளிவிவகார துறை அமைச்சர், வெளி நாட்டு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் மற்றும் நேரிடையாக பிரதமர், அந்த நாட்டு தூதுவர் ஆகியோர்களை இரவோடு இரவாக சந்தித்து நிலமையை விளக்கி அந்த நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களிடம் பிரதமரை பேச வைத்து அந்த உயிர்களை காப்பாற்றியது, அது போல சமீபத்தில் நாகை, அக்கரைப்பேட்டை மீனவர்கள், மற்றும் காரைக்கால் மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது உடனே கட்சி தலைவர் கலைஞரை தொடர்பு கொண்டு விஷயத்தை விளக்கி, தலைவர் ஆணைப்படி மூத்த அமைச்சராக இருந்த திரு.டி.ஆர்.பாலு அவர்களை அழைத்து வந்து நாகையில் உண்ணாவிரதம் இருந்த மீனவர்களிடம் பேசி, பின்னர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் அங்கிருந்தபடியே பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரிடம் பேசி உறுதிமொழி வாங்கி பின்னர் மீனவர்கள்  சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததை கைவிட்டனர். அதன் படியே இன்று ( 15.03.2014) வரை இலங்கை சிறையில் இருந்த எல்லா மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

அது போல தமிழக அரசை கண்டித்து மாவட்டம் முழுமையும் ஏராளமான மக்கள் போராட்டங்கள் நடத்தி வெற்றியும் கண்டுள்ளார். அது போல ஓய்வறியா உழைப்பாளியாக, தான் இருக்கும் திருவாரூர் மாவட்ட சித்தமல்லியில் இருந்து விடியல் காலை கிளம்பி தினம் தோரும் தன் தொகுதி மக்களின் மற்றும் தான் கழக செயலாளராக இருக்கும் நாகை மாவட்டம் முழுமையிலும் தன் கட்சி காரர்கள் என்று மட்டும் இல்லாமல் அனைத்து பொதுமக்களின் வீட்டு சுக, துக்க நிகழ்வுகளில் இவர் கலந்து கொள்ளாத நிகழ்வே இல்லை எனலாம். இவர் மூச்சுக்காற்று படாத இடமே இந்த மாவட்டத்தில் இல்லை எனும் அளவு இவர் மக்களோடு மக்களாக  இருந்து மக்கள் பணியாற்றுபவர். பழக இனியவர். புன்னகை மாறாத முகத்துக்கு சொந்தக்காரர். கோபம் என்னும் குணம் ஒரு துளி கூட இவரிடத்தில் கிடையாது. தன் கட்சி, எதிர்கட்சி என எல்லோரிடமும் அன்பாய் பழகும் குணம் கொண்டவர். பழம்பெரும் கமயூனிஸ்ட் தலைவர் திரு. ஏ.கே சுப்பையன் அவர்களின் புதல்வராக இவர் இருப்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகாரர்கள் இவர் மீது அளப்பறிய அன்பு கொண்டவர்கள்.


எனவே மேற்கூறிய காரணங்களில் இருக்கும் உண்மை நிலையினை கருத்தில் கொண்டு அண்ணன் திரு. ஏ.கே.எஸ். விஜயன் அவர்களை “உதயசூரியன்” சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்! 


March 9, 2014

சில்வேனியா குண்டலகேசி என்னும் அழகி!அவள் பெயர் சில்வேனியா குண்டலகேசி! என் வீட்டுக்கு பின்பக்கம் தான் எங்கியோ அவள் இருப்பிடம். என் வீட்டு வழியே தான் காலை ஐந்து மணி முதல் ஆறுக்குள் போவாள். பின்னர் மாலை அதே போல ஐந்துக்கு மேல்  ஆறுக்குள் திரும்புவா. சரி வீட்டு வாசல் வழி போவான்னா... அதுவும் இல்லை. என் வீட்டில் கொல்லை பக்க மதில் வழியே நுழைந்து பின்னர் முன் வாசல் கேட் வழியே சாலையை தொட்டு கடந்து தான் போவாள்.ஷார்ட் கட்?? அவள் அழகுன்னா அழகு அத்தனை ஒரு அழகு. கருப்பும், ப்ரவுனும் சேர்ந்த இந்திய அழகிகள் கலர். சும்மா வழ வழன்னு வாழைத்தண்டு.....  வெயிட்.. வெயிட்... ஜொள்ளர்ஸ் அஸோசியேஷன் தோழர்ஸ்... இது வேற கதை.


அந்த சில்வேனியா குண்டலகேசி என்பது ஒரு பாம்பு தான்.(அந்த பெயரை நாங்கள் வைத்தமைக்கு விருமாண்டி என்ன கேஸ் போடாபோகிறாரா என்ன? அவர் மீது யாரும் கேஸ் போடாமல் இருந்தா சரி தான்) சுமார் ஒரு ட்யூப்லைட்டை விட கொஞ்சம நீளம் அதிகம். அதே போல மொத்தம் எனில் நல்ல முத்தின புடலங்காய் சைஸ்.  லேடி பாம்பு. (யார்ரா அது லேடின்னாலே பாம்பு தானேன்னு கொரல் கொடுக்குறது.... அதும் நேத்தி தான் வுமன்ஸ்டே வேற..கீப் கொய்ட்).. சரி விஷயத்துக்கு வருவோம். அந்த சில்வேனியா அப்படியாக என் வீட்டு வழியே காலை போய் மாலை திரும்புவதை என் வீட்டில் ஆரம்பத்தில் ஒரு வித அதிசயமாகவும், அவள் சின்சியாரிட்டி கண்டு ஆச்சர்யமாகவும், நிரம்ப பீதியுடனும் சிலாகித்து கொண்டிருந்தது போக இப்போதேல்லாம் ஒரு நாள் வரவில்லை எனில் “என்னாச்சி சில்வேனியாவுக்கு?” என்று ஒருவரை ஒருவர் “ நீ பாத்தியா அவளை” “ நீ பாத்தியா அவளை”ன்னு கேட்டுக்கொண்டும்... “ என்னங்க! இது ஆடிமாசம்ல... ஒரு வேளை அவள் ஆஃபீசில் ஆடி’ட்டிங் எதுனா இருக்கும்.இருட்டுக்கு மின்னாடியே போயிட்டு இருட்டினதும் வர்ரா” போலிருக்கு என சுயவிளக்கம் சொல்லிக்கொண்டும்... ஆக சில்வேனியா இல்லாத நாட்கள் எங்களுக்கு வெறுமை சூழ்ந்த நாட்கள் ஆகிவிடும் நிலைக்கு ஆகிவிட்டிருந்தோம்.


இப்படி சுமூகமாக போய்க்கொண்டு இருந்த போது தான் ஒரு நாள் மாலை கவனித்தேன். சில்வேனியாவுக்கு முகம் வாடிப்போய் மெதுவாய் களைப்பாய் ஊர்ந்து வந்தது.வயிற்று பக்கம் கொஞ்சம் பெரிதாய் இருந்தது.  அடடே என்னாச்சின்னு தெரியலையே என என் மனைவியை அழைத்து “ நாடி” பார்த்து எதுனா “விஷேஷமாக” இருக்குமோ என பார்க்க சொல்லலாம் என நினைத்த போதே என் மனைவியும் வர “அடடே சில்வேனியா மாசமா இருக்குது போலிருக்குங்க. கொஞ்சம் பால் எடுத்து வந்து ஊத்துங்க” என்றார் என் மனைவி. “ஏன் எதுக்கு? அது கிட்டத்துல போய் அதுக்கு பால் ஊத்தினா, அடுத்த நாள் எனக்கு பால் ஊத்திடலாம்னு ஆசையா? என்றேன். என் பயம் எனக்கு!


அய்யய்யோ! சின்னமாரியம்மன் கோவில் பக்கம் தான் அது ஆஃபீஸ் போகும். அங்க நிறைய நல்ல பாம்பு (ஆண்) கிடக்கு. ஒன்னு கெடக்கு ஒன்னு ஆகியிருக்குமோ? அடடே விஷயம் வெளியே தெரிஞ்சா நாலு பாம்பு நாலு விதமா பேசுமே என்னும் கவலை எனக்கு. இதை பத்தி எல்லாம் சில்வேனியா கவலைப்படவில்லை. அடுத்த அடுத்த நாளும் சின்ன மாரியம்மன் கோவில் பக்கம் ஆஃபீஸ் போவதை தவிர்க்கவில்லை. சரி எதுனா “லிவிங் டு கெதர்”ஆக இருக்கும்... நமக்கென்ன என விட்டு விட்டேன்.


ஒரு வாரம் முன்பாக மிகவும் மெதுவாக ஆஃபீஸில் இருந்து மிகவும் களைத்துப்போய் வந்தது. இப்போது கழுத்து முதல் கிட்ட தட்ட வால் வரையிலும் பருத்து போய் இருந்தது. அடடே... ஸ்கேன் எதும் எடுத்துச்சா? தெரியலையே? என்னிக்கு டேட் இருக்கும்? அந்த பாழாய் போன ஆஃபீஸில் மெட்டர்னிட்டி லீவ் எதும் கிடையாதா? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இந்த நேரத்திலும் சில்வேனியாவை வேலைக்கு அனுப்பும் அதன் குடும்பத்தின் மீது கடுப்பாய் வந்தது. ஒருவேளை சில்வேனியா வீட்டில் ஒரு கிழவி மட்டும் தான் துணைக்கு இருக்கனும். அப்பா அம்மா இல்லாத பெண் போலிருக்கு. இவள் சம்பாதிச்சு தான் கிழவிக்கும் பால், முட்டை ஊத்தனும் போல. இப்படித்தான் ஒரு பாலகுமாரன் கதையில் ஒரு பொண்ணு. சிவில் இஞினியரிங் படிச்சு வேலைக்கு போவா. அவ வீட்டில் ஒரு கிழவி. அந்த பெண் ஆஃபீசில் ஒரு கிழவனோடு லவ்ஸ் ஆகிடும். ஒரு நாள் வேலைக்கு போகும் போது அந்த கிழவி இவளை பார்த்து “ஆண்டவன் உன் பக்கம் எப்பதான் கண் திறப்பானோ?” என்று சொல்லும் போது அந்த பெண் நினைத்துக்கொள்வாள்...”ஏற்கனவே நாலைஞ்சு தடவை தொறந்துட்டார்”ன்னு. அது போல சில்வேனியா வீட்டிலும் நடக்குமோ? என்றேல்லாம் மனதில் கற்பனை செய்து கொண்டேன்.


பின்னர் ஒரு வாரம் சில்வேனியாவை என் வீட்டு பக்கம் காணவில்லை. மனசு கிடந்து அடித்துக்கொண்டது. என்ன ஆச்சுதோ தெரியலையே! வாயும் வயிறுமா இருந்த புள்ளயாச்சேன்னு கவலையோடு இருந்தேன். இன்று காலை விடிந்தும் விடியாத நேரம்.வாசல் பக்கம் வந்தேன். அடடே... மிக வேகமாக சில்வேனியா மீண்டும் தன் சிம்ரன் உடலோடு வந்தது. எப்போதும் ஒரே நீளமாக செல்லும் அது இன்று என்னை பார்த்ததும் ஒரு வித வெட்கத்துடன zig zag ஆக ஒரு நெளி நெளிந்து போனது. ஆகா டெலிவரி ஆகிடுச்சி போலிருக்கு. ஓடிப்போய் காலண்டரில் என்ன நட்சத்திரம் என பார்க்க தோனுச்சு. அப்படி தோணும் போதே ஆச்சர்யம். சில்வேனியா வந்த வழியில் ஒரு முழத்துக்கு ஒரு குட்டி சில்வேனியா. தன் அம்மா வழியில் போனது. அடடே அடுத்து ஒன்னு.... அடடே... இன்னும் ஒன்னு. மொத்தம் மூன்று குழந்தைகள். எல்லாம் அம்மா வழியில் போனது. அனேகமாக சில்வேனியா தன் ஆஃபீஸ்க்கு அழைத்துப்போய் தன் வீட்டுக்காரர் கிட்டே காமிக்கும் போலிருக்கு. “என்னங்க, பையன் என்னை போல இருக்கான். பொண்ணு உங்களைப்போல இருக்கால்ல”  என கேட்கலாம். அப்பாடி... எது எப்படியோ சிசேரியன் இல்லாம சுக பிரசவம் ஆனது வரை எனக்கு சந்தோஷம். புள்ள பெத்த பச்ச மண்ணு சில்வேனியா இத்தனை வெரசாவா ஆஃபீஸ் வரனும் என மனசு தவித்தது!


ஆச்சு! மாலை சில்வேனியா இப்போது தான் வீடு திரும்பியது. அதன் பின்னால் மூத்த மகள், அடுத்து ரெண்டாவது மகள். அடுத்து கடைக்குட்டி பயல். அவனுக்கு தான் கொஞ்சம் வால் ஜாஸ்தி. (வால் கொஞ்சம் நீளமாக இருந்ததால் நானே அதை ஆண் குழந்தை என முடிவு செய்து கொண்டேன்). இன்றைக்கு அது தான் பிரச்சனையே. பெண் குழந்தைகள் அழகாய் சில்வேனியா போல என் வாசல் கேட்டில் புகுந்து மண் வழியே சந்தில் புகுந்து கொள்ளைப்பக்கம் வழியே மதிலில் கீழே சில்வேனியா போட்டு வச்சிருந்த ஓட்டை வழியே போல இந்த வால்பையன் மாத்திரம் என் வீட்டு சிமெண்ட் போட்ட இடம் வழியே வந்து என் வண்டி மேல் ஏறி சந்து பக்கம் இறங்கி சில்வேனியாவுக்கு முன்னாடி போய் அந்த மதில் ஓட்டைக்கு ஓடினான். இதை சில்வேனியாவும் கண்டிப்பது போல தெரியவில்லை. மாறாக வீட்டுக்குப்போய் “அப்பனைப்போலவே ரொம்ப சுட்டி” என சொல்லி திருஷ்டி கழிப்பாள் போலிருக்கு! எனக்கு தான் அல்லுவிட்டு போச்சுது. கேட் வழி போவது எல்லாம் ஓக்கே தான். என் வண்டி நிறுத்தும் இடம் வழியே வந்தால்....?


{ இது போலத்தான் மூன்று வருடம முன்பாக என் வீட்டுக்குள் வந்த ஒரு பாம்பு பற்றி நான் எழுதி நீங்கள் படித்திருப்பீர்கள். (அப்படி படிக்காதவர்கள் இந்த சுட்டிக்கு போய் படிக்கவும் http://abiappa.blogspot.com/2010/08/blog-post_25.html ) }

இந்த வால்பையன் அது போல எதுனா துடுக்குத்தனமா இருந்தா என்ன செய்வது? இதுக்காகவே எங்கள் நகரில் இருக்கும் “ நாகம்மா” கிழவி கிட்டே போய் கன்சல்ட் செய்ய போனேன்!


“ஆத்தா, வீட்டுல வண்டி வைக்கும் இடம் வழியே பாம்பு குட்டி ஒன்னு வருது”


“ஒரு மூணு வருசம் மின்னாடி கூட வந்துச்சுல்லா.. அப்ப நான் சொன்ன மேரி நீனு பெரியமாரியம்மன் கோவில் பின்னாக்க இருக்கும் புத்துல முட்டை வச்சியா?”


“ம்.. வச்சனே, நாட்டு கோழி முட்டை வைக்கனுமா, ஒயிட்லகான் வைக்கலாமா? பால்வாடி டீச்சர் கிட்டே கம்மி காசுக்கு வாங்கின தானா அனா முட்டை போதுமான்னு கூட நான் கேட்டேன். நீ தான் எதுனா வையி. பாம்பு என்ன ஏ வி சிலயா போய் படிச்சுட்டு வந்திருக்கு கேட்டியே”

“இது நடந்து மூணு வருஷம் இருக்கும்லா... ஒன் வூட்டு பாலு கூப்பன் கூட மாசா மாசம் மாத்துறீல்ல. (ரினீவல்). இது சாமி விசயம். மூணு வருசத்துக்கு ஒரு முட்டைன்னா கட்டுபடியாவுமா? எப்பாவோ ஒன் இக்கிரிமெண்டு காலாவதியாயிருக்கும்.  மாசா மாசம் வக்கினும். அதான் ஒனக்கு காட்டாப்பு காட்டிருக்கு நாவம்மா... இன்னிக்கே அங்கிட்டு போயி ஒரு முட்டை வச்சிட்டு வா”


வீட்டுக்கு வந்தேன்.... ஃப்ரிட்ஜ் திறந்து பார்த்தேன். முட்டை எதும் இல்லை. ஆனால் சாப்பாட்டுக்கு தொட்டுக்க முட்டை மசாலா கறி இருந்தது. அதை ஒரு சின்ன டப்பாவில் கொட்டிக்கொண்டு புத்து பக்கம் போக வெளியே வந்தேன்.


என் மனைவியும் மகளும், மகனும் என்னிடம் “ ‘சினேக்’ கா,அமலா ‘பால்”, இதல்லாம் பெண் குட்டிகளுக்கு, ஆண் குட்டிக்கு நட்ராஜ் ஆசைப்படி சோட்டா பீம்  ... உங்களுக்கு ஆட்சேபனை இல்லியே”


“ஊகூம் இல்லை” என சொல்லிவிட்டு முட்டை மசாலாவுடன் வெளியே நடந்தேன். அவரவர் கவலை அவரவர்களுக்கு! ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம்! உலகத்திலேயே பாம்பு புத்துக்கு மசாலா முட்டை வைக்கப்போகும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்பது மட்டும் உண்மை!