பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 28, 2008

எழுத்தாசான் "சுஜாதா"!!!




மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனந்த விகடனில் ஒரு முறை அவரின் மெலிந்த போட்டோ வந்த போது பின்னர் அவர் தெளிந்து வந்த போது சொன்னார்" தயவு செய்து அந்த போட்டோவை குழி தோண்டி புதைத்து விடுங்கள், சின்ன பசங்க பார்த்து பயப்படப்போகுது"ன்னு. அப்போதே பதறிப்போனோம். என்ன சார் நெசமாவே இறந்து போயிட்டீங்களா??? ஊடகங்கள் பொய்யாய் இருக்க கூடாதா!!
இதற்ககு மேல் என்ன எழுத எதுவும் இல்லை!!

February 20, 2008

விடுடா, வேற ஒரு சூப்பர் பிஸினஸ் இருக்கு!!!”

ஏழாவது படிக்கும் போதே “தொழிலதிபர்” ஆசை வந்ததுக்கு காரணம் நம்ம ஐடியா சுரங்கம் குரங்கு ராதா தாங்க. படிக்கும் போதே சம்பாதிக்கனும்டா அப்படின்னு ராதாகிட்ட யோசனை கேட்டப்ப தான் அவன் சொன்னான் “பேசாம தினத்தந்தியில சிரிப்பு எழுதி சம்பாதிக்கலாம்டா”.

எனக்கும் அது நல்ல யோசனையாத்தான் பட்டுச்சு. ரொம்ப பெரிய முதலீடு எல்லாம் இல்லை. அப்ப தினத்தந்தியிலே இரண்டு சிரிப்பு இருக்கும் கவர்ச்சி படத்துக்கு கீழே. 5 ரூபாய் பரிசு பெரும் வாசகர்ன்னு குனியமுத்தூர் குப்புசாமின்னு ஏதோ பேர் போட்டிருக்கும். அந்த இரண்டு சிரிப்பிலே ஒரு சிரிப்புக்கு சிரிப்பை அனுப்பும் நபர் தான் படம் வரையனும். அதுவும் போஸ்ட் கார்டிலே இண்டியன் இங்க்காலே வரைந்து அனுப்பனும். இங்க் ஓக்கே, 15 பைசா கார்டு ஓக்கே. சிரிப்புக்கு எங்கே போறது. சிரிப்பை நான் சொல்லனும் படத்தை ராதா வரையனும். கார்டு வாங்கும் காசிலே ஆளுக்கு பாதி போடனும், 5 ரூவாய் வந்துச்சுன்னா ஆளுக்கு 2.50 எடுத்துக்கனும் என பிஸினஸ் அக்ரிமெண்ட் எல்லாம் பக்காவா ரெடியாகிடுச்சு.

எல்லாம் ரெடியான பின்ன இங்க். கார்டு வச்சிகிட்டு ராதா என் மொகரகட்டையை பார்த்துகிட்டே இருக்க எனக்கு வேர்த்து வேர்த்து கொட்டுதே தவிர சிரிப்பு கொட்ட மாட்டங்குது. இந்த லெட்சணத்துல என் தம்பி வேற தானும் பார்ட்னர் ஆகனும்ன்னு அடம். போடா போடா போய் புட்டி பால் குடிடான்னா அழுதுகிட்டே அம்மா கிட்ட போய் “அம்மா என்னய சேர்த்துக்க மாட்டன்றாங்க”ன்னு அழுது அம்மாவை அடியாள் கணக்கா கூட்டிகிட்டு வந்துட்டான். அம்மா வந்து “டேய் ஒழுங்கு மரியாதையா இவனையும் விளையாட்டுக்கு சேர்த்துக்கல தொடப்ப கட்ட பிஞ்சு போகும்”ன்னு செல்லமா கெஞ்சினாங்க. எனக்கு செம கடுப்பு. முதல் முதல்ல ஒரு பிஸினஸ் பண்ண ஆரம்பிக்கும் போது அதை “விளையாட்டு”ன்னு கூலா சொல்றாங்களேன்னு. வேற வழியில்லாம அவனையும் சேர்த்துகிட்டாச்சு. ராதா மெதுவா என் காதிலே “டேய் பணம் மணியார்டர் வரும் போது இவன்கிட்ட சொல்லாம நாம ஸ்கூல் கிட்டயே போஸ்ட் மேனை அமுக்கிடுவோம்டா, அதனால இப்ப சேர்த்துப்பதா சொல்லி வைடா”ன்னு சொன்னது எனக்கும் ஓக்கேவா இருந்துச்சு.

ஏகப்பட்ட தடங்கலுக்கு பின்ன நாங்க மூணு பேரும் ரவுண்ட் கட்டி உக்காந்து யோசிக்க யோசிக்க எனக்கு ஒன்னுமே தோண மாட்டங்குது. ராதாவாவது பரவாயில்ல பாதி பைனான்ஸ் பண்ணின பார்ட்னர். அவனுக்கு கோவம் வருவது நியாயம். என் தம்பிக்கு வந்துச்சு பாருங்க கோவம் அது அநியாயம். “டேய் சீக்கிரமா ஜோக்கு சொல்லுடா இல்லாட்டி அம்மாகிட்ட போயி நீ என்னை அடிச்சேன்னு சொல்லி கூட்டிகிட்டு வந்துடுவேன்”ன்னு மிரட்டுறான். “போடா இவனே, நீயும் தானே பார்ட்னர் நீ சொல்ல வேண்டியது தானே”ன்னு நானும் பதிலுக்கு கத்த ராதா தான் சமாதானம் செஞ்சான். பின்ன என் தம்பியும் மோட்டுவளையை பார்த்துகிட்டு ஜோக்குக்கு தயார் பண்ண ஆரம்பிச்சான். எனக்கு சிரிப்பு தோணுவதுக்கு பதிலா தாத்தா செத்தது, மாடு முட்டுவது போன்ற சோக நிகழ்ச்சிகளாவே ஞாபகம் வருது. ஒரு கட்டத்துல ஜோக்கு தோண மாட்டங்குதேன்னு ஆத்திரமும் அழுகையும் வர இருந்துச்சு. இத்தனைக்கும் ராதா கொஞ்சம் கூட யோசனை பண்ணாம ஜாலியா படம் வரைய ரெடியா இருந்தான். அவனுக்கு என்ன அக்ரிமெண்ட் படி படம் வரைவது தானே அவன் வேலை அப்படீன்னு நினைப்பு.

அப்ப திடீர்ன்னு என் தம்பி “டேய் வந்துடுச்சுடா சிரிப்பு”ன்னு கத்த ரொம்ப ஆர்வமா “சொல்லுடா சொல்லுடா”ன்னு நாங்க கத்த மெதுவா தொண்டையை கணைச்சுகிட்டு “ராதா அண்ணே, அன்னிக்கு என்னா நடந்துச்சுன்னா என்னைய காவலுக்கு வச்சுட்டு அம்மா அரிசி பீப்பாயிலே மறைச்சு வச்சிருந்த ஹார்லிக்சை எங்க அண்ணன் திருடி திங்கும் போது நான் அவனை அம்மா கிட்ட மாட்டி வச்சு அம்மா இவனை வெளுத்தாங்க.”ன்னு சொன்னான். அதுக்கு ராதா “இதுல என்னாடா சிரிப்பு இருக்கு”ன்னு கேக்க என் தம்பி “இல்லண்ணே இதுக்கு பின்ன தான் சிரிப்பே, அப்புடி அடி வாங்கி கிட்டு இருக்கும் போது அவன் டவுசர் கழண்டு வுழுந்துடுச்சு”ன்னு சொல்லிட்டு அவன் சிரிக்க அதை கேட்டு ராதா சிரிக்க எனக்கு பத்திகிட்டு வந்துச்சு. உடனே ராதா கிடு கிடுன்னு படம் வரைய ஆரம்பிச்சான்.

“டேய் டேய் நிறுத்துங்கடா என் மானத்தை வித்து இந்த 5 ரூவா சம்பாதிக்கனுமா, போங்கடா இவனுங்களா, அதிலயும் அதை இவர் படமா வரைஞ்சு தமிழ்நாடே பார்க்கனுமா, வேற யோசிங்கடா”ன்னு கத்திட்டு ஒரு வழியா ஏதோ சிரிப்பு எழுதினோம். அந்த கார்டை சியாமளாதேவி கோவில்ல வச்சு கும்பிட்டு போஸ்ட் பண்ணியாச்சு.

பின்ன 1 வாரம் தான் டயம் கொடுத்தோம் தினதந்திக்கு. அதன் பின்னே என் தம்பிக்கு பொறுமை இல்லை. என் கிட்ட “டேய் 1 வாரம் ஆச்சு, பணம் வரும் போது நீயே எடுத்துக்க ஆனா என் பார்ட்னர்ஷிப்பை பிரிச்சு குடு இல்லாட்டி அம்மா கிட்ட போக வேண்டி வரும்” ன்னு மிரட்ட ஆரம்பிக்க எப்படியாவது அவனை கழட்டி விட்டுடலாம்ன்னு ஒண்ணேகால் ரூபாயை கொடுத்து கழட்டி விட்டேன்.

பின்ன நானும் ராதாவும் சேர்ந்து தினத்தந்திக்கு கார்டில் கடிதம் எழுதினோம். “அய்யா 1 வாரம் முன்பு நாங்க “சிரிப்பு” எழுதி அனுப்பினோம். அதற்க்கான பணம் 5 ரூபாய் இன்னும் வரவில்லை. கடிதம் கண்டவுடன் தாமதிக்காமல் அனுப்பி வைக்கவும்” என எழுதினோம். அதன் பின்பும் 1 வாரம் ஒரு சேதியும் தெரியாமல் கிணத்தில் போட்ட கல் மாதிரி இருந்ததால் நான் ராதாவிடம் “டேய் தினத்தந்தி எத்தனை பெருசு. நாம அப்படி எழுதியிருக்க க்கூடாது. இப்படி எழுதனும்டா”ன்னு சொல்லி இப்படி எழுதினோம். “அய்யா, தாங்கள் கண்டிப்பாக 5 ரூபாய் அனுப்பி இருப்பீர்கள். ஆனால் போஸ்ட்மேன் தரவில்லை. அதனால் மீண்டும் ஒரு முறை அனுப்பவும். அடுத்த அடுத்த சிரிப்புகளில் கழித்து கொள்ளலாம்” என எழுதி போட்டோம்.

ஒரு முன்னேற்றமும் இல்லை. அப்பப்ப என் தம்பி வேற “என்னடா பிஸினஸ் ஊத்திகிச்சா, எனக்கு தெரியும்டா அதை படிச்சுட்டு நானே கக்கூஸ்ல போய் அழுதேண்டா ,அதனாலத்தான் என் பார்ட்னர்ஷிப்பை பிரிச்சு வாங்கினேன்”ன்னு சொல்ல எனக்கு சரியான ஆத்திரம்.

இதற்கிடையில் நாங்க அந்த போஸ்ட்மேனை ஒரு நாளும் விடவில்லை. ஸ்கூல் கிட்டயே அமுக்கி “சார் எங்களுக்கு மணியார்டர் வந்துச்சா”ன்னு அரிச்சு எடுத்தோம். எங்க தொல்லை தாங்காம அவர் எங்களை பார்த்தா ஈட்டிகாரனை பார்ப்பது போல தலை மறைவாக ஆரம்பிச்சார். சரி அவர் சரியா வர மாட்டார்ன்னு அவர் வீட்டுக்கே போக ஆரம்பிச்சோம். கடைசியா அவர் “டேய் இன்னும் ஒரு தடவ என் கிட்ட கேட்டீங்கன்னா நேரா உங்க அப்பா கிட்ட வந்துடுவேன்”ன்னு மிரட்ட ஓடி வந்துட்டோம். வந்தும் பேசாம இருக்காம போஸ்ட் மாஸ்டருக்கு ஒரு கார்டு போட்டோம். “அய்யா எங்க தெரு காமராஜ் அப்பா என்கிற போஸ்ட்மேன் எங்களுக்கு வந்த 5 ரூபாயை தரவில்லை, வாங்கி கொடுக்கவும்” . பின்ன என்ன விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சு. ராதா அப்பாவுக்கு தெரிஞ்சு……….. கொஞ்ச நாள் எங்க தொழிலதிபர் ஆகும் ஆசையை ஒத்தி வைக்க வேண்டியதா போச்சு.

கொஞ்ச நாள் கழிச்சு ராதா சொன்னான் “விடுடா, வேற ஒரு சூப்பர் பிஸினஸ் இருக்கு!!!”.

February 11, 2008

அடங்கொய்யால!!!!

ஒரு கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்(!) என படிப்பினை ஊட்டும் நிகழ்ச்சி ஒன்றை நேற்றைக்கு பார்த்தேன். “மானாட மயிலாட” நிகழ்ச்சியை தவற விடக்கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக ஓடி வந்து டிவியை போட்டா ஒரு அம்மா அழுதுகிட்டு இருக்காங்க. ராஜ்குமார் என்கிற டான்சரின் அம்மா. அவுங்க அழுக பின்ன பையன் அழுக, நமீதா அழுக நானும் அழுக அய்யோடா அப்படி ஒரு சோகம் போங்க!

பின்ன ஸ்வேதா என்னும் டான்சர். அவங்க புருஷன் கிட்ட பேட்டி எடுத்தாங்க நமீதாவும் கலா மாஸ்ட்டரும்.

“உங்க மனைவி ரத்தீஸ் கூட டான்ஸ் ஆடினாங்களே அது பத்தி என்ன நினைக்கறீங்க”
நா தழுதழுக்க மாப்பிள்ளை சொன்னார் பாருங்க பதில் அப்படியே ஆடிபூட்டேன்!

“நான் குடுத்து வச்சவன்ங்க ஸ்வேதாவை மனைவியா அடைய, இத்தனை நாள் எல்லோரும் அவ கிட்ட வந்து ஆட்டோகிராப் வாங்குவாங்க வாங்கின பின்ன உங்க பேர் என்னான்னு கேப்பாங்க(J) ஆனா இப்போ இந்த நிகழ்ச்சிக்கு பின்ன ஸ்வேதா ஸ்வேதா ன்னு பேர் சொல்லி கூப்பிடும் போது போது ……உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்”

மாப்பிள்ளை பேட்டி குடுத்து கிட்டே இருக்கும் போதே ஸ்வேதா பக்கத்திலே இருக்கும் மத்த டான்ஸர்ஸ் ஸ்வேதா கண்ணை துடைச்சு விட்டு வராத அழுகையை வர வழைக்க இவர் கிட்ட பேட்டி எடுத்தாங்க நீதியரசி நமீதா!
“ஸ்வேதா, உங்க புருசன் நல்லா புருஷா நல்லா சொல்லுது நீங்க என்னா சொல்லுது” இது நமீதா!

மைக்கை வாங்கி கிட்டு ஸ்வேதா “நான் நெம்ப குடுத்து வச்சவ, அவர் எனக்கு புருசன் மாத்திரம் இல்ல”ன்னு சொல்லி கொஞ்சம் கேப் விட்டப்ப என் நண்பர்கள் கத்தியது எல்லாம் இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாத விஷயங்கள்! தொடர்ந்து ஸ்வேதா “ அவர் எனக்கு தாய் மாதிரி, காரணம் அரையிறுதிக்கு வரும் போது என் குழந்தைக்கு பயங்கரமா டைபாய்டு காய்ச்சல், ஷிவரிங்ல தூக்கி தூக்கி போடுது. அப்போ கூட என் புருசன் சொன்னார் ‘நீ போம்மா (நமக்கு கலைய வளர்க்கனும் அது தான் முக்கியம்) இந்த டென்சனை மனசுல வச்சுக்காம இதை மறந்துட்டு ஆடு’ன்னு சொல்லி என்னை அனுப்பி வச்சார்”ன்னு சொல்லிட்டு அழுகையோ அழுகை.

அதை பார்த்து கண் மை கலையாமல் கலா மாஸ்ட்டர் அழுக பின்ன என்ன என் நண்பர்கள் கூட நானும் மூக்கு சிந்தினேன்.
அதை விட அருமை மேடையிலே மழை பெய்யவிட்டு எல்லாரும் என்னமா டான்ஸ் ஆடினாங்கப்பா. அது முடிந்த பின்ன “பாடித்திரிந்த பறவைகளே” “முஸ்தப்பா முஸ்தப்பா டோண்ட் வொர்ரி முஸ்தப்பா”ன்னு மெழுகு வத்தி ஏத்திகிட்டு பாட்டு பாடினாங்க. அவங்க என்னதான் டோண்ட் ஒர்ரி முஸ்தப்பான்னு பாடினாலும் என்னால வொர்ரி பண்ணாம இருக்க முடியலை.

ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி டிவியை ஜட்டி காயப்போடும் உபகரணமாக மட்டுமே பயன் படுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. சரி இதன் தாக்கம் தமிழ்நாட்டிலே எப்படி இருக்குதுன்னு பார்ப்போம்ன்னு வீட்டுக்கு போன் செய்தேன். அபிபாப்பா தான் போன் எடுத்தா. “மானாட மயிலாட பாத்திங்களாடா”ன்னு கேட்டேன். அங்கிருந்து பதில் வந்தது “பாவம்ப்பா அந்த டைபாய்டு வந்த குழந்தை”
எனக்கு நச்சுன்னு நடு மண்டையில் அடிவாங்கின மாதிரி இருந்துச்சு!

February 9, 2008

எங்க வாத்தியார் NV சார்!!!




சில விஷயங்கள் எதேச்சையாக நடக்கும். அப்படித்தான் நேற்று இரவு என் பள்ளிக் கூடத்தின் என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு.N.வெங்கட்ராமன் என்கிற NV சாரை பற்றி கனவு கண்டேன். காலை எழுந்து தமிழ்மணம் திறந்து பார்த்தா மயிலாடுதுறை சிவா ஒரு பதிவு போட்டிருந்தார். ரொம்ப நாளா ஆச்சே அவர் பதிவு போட்டு, ஊருக்கு போனாரே திரும்பி வந்துட்டாரா என்கிற நினைவுடனேயே திறந்து பார்த்தா NV சாரை பத்தி பதிவு போட்டிருக்கார். போட்டோவும் போட்டு. எனக்கு ஆச்சர்யமாக போய் விட்டது.


மற்ற ஆசிரியர்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அவர் பாடம் மட்டும் கற்று கொடுப்பதில்லை. கூடவே வாழ்க்கையும் கற்று கொடுப்பார். அவரின் அந்த அணுகுமுறை அவரின் சில சக ஆசிரியர்களுக்கும் சில நூறு சதவிகித நல்ல மாணவர்களுக்கும் கூட பிடிக்காமல் இருந்திருக்கும். ஆனால் எனக்கு அவருடைய அந்த அணுகுமுறை சரி என்றே தோன்றுகிறது. காரணம் பத்தாம் வகுப்பு வந்து விட்ட மாணவர்கள் ஓரளவு தன் வாழ்க்கையின் திசையை முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்கள். அதனால் கொஞ்சம் சுயமாக சிந்திக்க வேண்டும் என்கிற நோக்கோடு கொஞ்சம் விட்டு பிடிக்க வேண்டும் என நினைத்து மாணவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே சுதந்திரம் கொடுப்பார்.


அவர் வகுப்பு மாணவர்கள் மற்ற வகுப்பு மாணவர்களை விட கொஞ்சம் வித்தியாசமாகவே இருப்பர். பாடம் எடுத்து கொண்டிருக்கும் போது தூரத்தில் வராண்டாவில் தலைமை ஆசிரியர் வந்துவிட்டால் இவர் "பசங்களா இப்போ நாம் PR என்கிற கோடு வரைந்து அதில் SK என்கிற புள்ளியை குறிக்க போகிறோம்" என்பார். வகுப்பில் சத்தம் காதை கிழித்து கொண்டு போகும். காரணம் PR என்பது அந்த தலைமை ஆசிரியர் பெயர். SK என்பது உதவி தலைமை ஆசிரியர் பெயர். அந்த இருவருமே எங்க NV சார் படிக்கும் போது அவருக்கே ஆசிரியர்கள் என்பது வேறு விஷயம். மாணவர்களின் சத்தம் கேட்டு வகுப்பில் நுழையும் தலைமை ஆசிரியர், "மிஸ்டர். NV என்ன சத்தம் என்ன பாடம் நடத்தறேள்" என்று கேட்டு விட்டு கரும் பலகையை பார்ப்பார். அவருக்கு விஷயம் புரிந்து விடும். செல்லமாக "நாப்பத்தஞ்சு வயசாகறது, இன்னும் பழைய குறும்பு போகலை"என்று செல்லமாக சொல்லிவிட்டு போய் விடுவார். அப்போது இந்த மாதிரி விஷயங்கள் எங்கள் பள்ளியின் புரட்சி என்று கூட சொல்லலாம்.


ஒரு மாணவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே ஆசிரியர் வந்துவிட்டால் சைக்கிளை விட்டு இறங்க வேண்டும். அதுதான் நாம் ஆசிரியருக்கு தரும் மரியாதை என தவறாக யாராலோ ஒரு பழக்கம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது. அது பற்றி வகுப்பிலே NV சார் ஒரு முறை "எதுக்கு இறங்கனும், அதிலே என்ன மரியாதை! சரி அதுதான் மரியாதை என்றே வைத்துகொண்டாலும் எவனாவது முழுசா இறங்குவானான்னு பார்த்தா அதுவும் இல்லை. இறங்குவது போல பாவ்லா பண்ணுவான். சைக்கிள் சீட்டிலிருந்து * *தை தூக்கிட்டு திரும்பவும் வச்சிட்டு போயிடுவான். கையை தூக்கி வணக்கம் வைத்து மரியாதை செய்யலாம். ஆனா **தை தூக்கி மரியாதையா, இதுக்கு பேசாம வாத்தியாரை பார்க்காத மாதிரி திரும்பிகிட்டு போறது பெட்டர்" என்று சொன்னார். இப்படி ஒரு வாத்தியார் அப்போதெல்லாம் "கெட்ட" வார்த்தை பேசுவது சரியா என மனசு கேட்டாலும் சிந்திச்சு பார்க்கும் போது "ஆமாம் அவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்குதே" என தோன்றியது.


அவரின் திறமை இருக்கிறதே, வாவ், ஒரு மாதிரியான அசாத்திய திறமை அவருக்கு. ஆங்கில புலமையும் கணித புலமையும் வியப்படைய வைக்கும். அவரின் நகைச்சுவை அவருடைய மிக பெரிய சொத்து. பள்ளியின் அனைத்து விழாக்களையும் இவர் ஒரு ஆளாக நின்று நடத்திக்காட்டுவார்.


வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இப்பவும் பள்ளியின் பழைய மாணவர் சங்கத்திலே இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். வாழ்க்கைப் பாடத்தை நடத்தினார் என சொன்னேனே! அப்படிப்பட்ட அவரே ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் மிக பெரிய சறுக்கலை சந்திக்க நேர்ந்தது. ஏதோ பைனான்ஸ் கம்பனியால் தன் வீடு முதற்கொண்டு எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தது. "இனி NV அவ்வளவுதான்" என சொல்லியவர்கள் மத்தியில் மீண்டு எழுந்து வெற்றிக் கொடி நாட்டினார். அப்போது அவர் மட்டும் மனம் சோர்ந்திருந்தால் இன்று அவர் நம்மிடம் இருந்திருக்க மாட்டார். அவரிடம் படித்த எங்கள் அனைவருக்கும் அவர் நடத்திக்காட்டிய பிராக்டிகல் பாடம் அது என்றே நான் நினைக்கிறேன்.


சிறந்த ஆஞ்சனேய பக்தர். அவர் நடக்கும் வேகம் இன்றைக்கும் குறையவில்லை. எப்போதும் பிஸி தான். ஆணதாண்டவபுரத்திலே கோபால கிருஷ்ண பாரதிக்கு விழா எடுக்கறேன், நம்ம பள்ளி இலக்கிய மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு பண்றேன், "வீரப்பா பிள்ளை" கோப்பை வாங்க பசங்களை தயார் பண்றேன், "NV கோப்பை" மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான வேலை பண்றேன் என இப்பவும் எப்பவும் அவர் சுறுசுறுப்புதான். அவரிடம் படித்தேன் என்பதில் எப்பவுமே பெருமைப்பட்டு கொண்டிருக்கும் மாணவர்களில் நானும் ஒருவன்.

February 7, 2008

வீக் என்ட் அசைவம்!!! கோவிக்காதீங்க, இப்படிக்கு அபிஅப்பா!!!

வீக் என்ட் ஆனா போதுமே ஆளாளுக்கு “வீக் என்ட் ஜொல்லு” வீக் என்ட் அசைவம்” என தூள் கிளப்பிகிட்டு இருக்க இந்த அபிஅப்பா மட்டும் இளிச்ச வாயனா! வேற வழியே இல்லை. அசைவம் பிடிக்காதவர்கள் கொஞ்சம் அப்பால போயிடுங்க. பின்ன என்னை குத்தம் சொல்லக்கூடாது.

முதல்ல கதையின் களம் பத்தி சொல்லிடனும். அதாவதுங்க “தட்டி மெஸ்” . மயிலாடுதுறையின் கூறைநாடு பகுதியிலே அங்கிருந்து காவிரி போகும் ஒரு சின்ன ரோட்டிலே நாலாவது கடையா இருக்கும். அதை கடைன்னு கூட சொல்ல முடியாது. அது ஒரு ஓட்டு வீட்டின் ஒரு பகுதிதான். 12 அடிக்கு 8 அடி அகலத்துல இருக்கும். வாசலில் 200 லிட்டர் மண்ணெண்னை டின் முக்கால் பாகம் மண் கொட்டி விறகு அடுப்பாக மாற்றப்பட்டு சும்மா தக தகன்னு இருக்கும். உள்ளே இரண்டு பக்கமும் அகலம் குறைவான சின்ன மரபெஞ்சும், சாப்பிட மேசையும் இருக்கும். ஒரு பக்கத்துக்கு குறைந்தது 8 பேர் உட்காரலாம். ஆனா 6 பேர் தான் உட்கார முடியும். காரணம் வந்து சாப்பிடும் கனவான்கள் எல்லாருமே கணபாடிகள் தான். இரண்டு பக்கமும் தேதி கிழிக்கும் காலண்டர் குறைந்தது 20 தேறும். அதிலே வைகோ படம் போட்ட காலண்டர் குறைந்தது 4 இருக்கும். வேலை நேரம் என பார்த்தால் மதியம் 12.00 மணி முதல் 3.00 வரை மட்டுமே.


சுப்ரமணியன் என்கிற மணி பத்தி இப்ப சொல்லியாகனும். எனக்கும் நண்பன் தான். அதனால் ஒருமையிலேயே சொன்னாதான் கொஞ்சம் இலகுவா இருக்கும் எனக்கு. ஜிம்முக்கு போய் வளர்த்த பாடி அவனுக்கு. வாகனம் என்பீல்டு மோட்டார் பைக். கழுத்திலே அவன் பாடிக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் முறுக்கு செயின் சின்னதா உட்கழுத்தோட இருக்கும். முண்டா பனியன், வேஷ்டி தான் காஸ்ட்டியூம். கடையின் மெனு என்று பார்த்தால் வகை வகையா இருக்கும் என நினைக்க கூடாது. சிம்பிள். ஜஸ்ட் மீன் குழம்பும், மீன் வருவலும்… இவ்வளவே! கடையில் பில், பில்குத்தும் கம்பி என எதுவும் கிடையாது.


மதியும் 12 மணி ஆச்சுன்னா மயிலாடுதுறையின் ஒட்டு மொத்த தொழிலதிபர்களுக்கும் ஒரு மாதிரி எச்சில் ஊற ஆரம்பிச்சுடும். நல்லா ருசியான சாப்பாடுன்னா அங்கே முதல் ஆளா நிப்பாங்க. சும்மா தனியா போய் சாப்பிடுவது என்பதெல்லாம் கிடையாது. ஒருத்தருக்கு ஒருத்தர் போன்ல “மாப்ள தட்டிக்கு போவுமா” என்பது போன்ற சம்பாஷனைகளால் டெலிபோன் எக்சேஞ்சே திணறும்.


காலை 11 மணிக்கு தான் மணி கிளம்புவார் மயிலாடுதுறையின் பெரிய மீன் மார்கெட்டுக்கு. அவருக்கு தனியாக வரும் திருமுல்லைவாசல் கடலில் இருந்தோ சின்னங்குடி கடலில் இருந்தோ. ஒன் அண்ட் ஒன்லி “வஞ்சிரம்” மீன் மட்டுமே. நல்ல பெரிய சைஸ் மீனாக வரும். துண்டு போட்டா நம்ம சத்தியராஜ் உள்ளங்கை சைஸ்க்கு இருக்கும் ஒரு பிசுக்கு. என் சுண்டு விரல் மொத்தம் தான் ஒரு துண்டு போடுவார் தல. அவருக்கு தனியா ஒரு இடம் மார்க்கெட்டிலே! அவர் சிஷ்ய கோடி பசங்க அவர் வரும் முன்னமே அந்த இடத்தை சுத்தம் செஞ்சு தொட்டியிலே தண்ணி எல்லாம் பிடிச்சு, மீனை கழுவி, செதில் எடுத்து தலையை மட்டும் வெட்டி தட்டி மெஸ்ஸுக்கு அனுப்பிடுவாங்க. அது தவிர மிக சின்ன மீன்கள் “பொருவா” “செங்காலா” போன்றவையும் சுத்தம் செய்யப்பட்டு அனுப்ப பட்டுவிடும். இந்த வஞ்சிரம் தலையும், சின்ன மீன்களும் தான் குழம்புக்கு.

மணி வந்த பின்ன துண்டு போட்டு மசாலா போட்டு, அடடா அந்த மசாலா பக்குவம் இருக்கே அது அலாதி. மசாலா எல்லாம் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு பைக்கின் பெட்டியிலே இருக்கும். மார்கெட்டுக்கு வந்த பின்ன எதிரே இருக்கும் பாய் கடையில் ஒரு எண்ணை பாட்டில் வாங்கி அதை ஒரு பெரிய அலுமினிய தட்டிலே ஊற்றி, அதிலே அந்த மசாலா பொடியை கொட்டி தேவையான அளவு கல் உப்பு(கல் உப்புதான் போடுவார்) போட்டு அதிலே ஒவ்வொறு துண்டா நல்லா குளிப்பாட்டி அந்த தட்டிலேலே வரிசையா அடுக்கிகிட்டே வரும் அழகு சூப்பரோ சூப்பர். பின்பு அந்த பெரிய்ய அலுமினிய தட்டை மெல்லிய வேஷ்டி துணியால மூடி கட்டி மார்கெட்டிலேயே வச்சுட்டு காவலுக்கு ஒரு பையனை போட்டு விட்டு “தட்டிமெஸ்ஸுக்கு பைக் படபடக்கும்.

அப்போ மணி 11.45 ஆகியிருக்கும். கடைக்கு வந்த உடனே அவர் வரும் முன்னமே அவரின் மத்த சிஷ்யகோடிகள் பொன்னி அரிசி களைந்து பெரிய அலுமினிய சட்டியில் வேக வச்சிருப்பாங்க. புளி கரைச்சு ஒரு பாத்திரத்திலே இருக்கும். வெந்தயம் போன்றவை எடுத்து வைக்கப்பட்டிருக்கும். மணி அங்க போன பின்ன குழம்பு வைக்கும் சட்டி அடுப்பில் ஏற்றப்பட்டு அது கொஞ்சம் காய்ந்த பின்ன வெறும் சட்டியில் வெந்தயம் போட்டு லைட்டா சூடு காமிக்கும் போது அன்றைய மீன் குழம்பின் ஆரம்ப வாசனை அந்த தெருவையே அள்ளிகிட்டு போகும்.


அடுத்து என்ன! சர சரன்னு குழம்புக்கான வேலை நடக்கும் எல்லாம் முடிஞ்சு புளி ஊத்தி உப்பு பார்த்த பின்ன விறகு அடுப்பை “சிம்”ல வச்சுட்டு திரும்பவும் மார்க்கெட்டுக்கு வண்டி கிளம்பிடும். அதுவரை குழம்பிலே மீன் போடப்பட மாட்டாது. அப்போ மணி 12.15 ஆயிருக்கும். அதுக்குள்ள நம்ம தொழிலதிபர் கூட்டம் எல்லாம் “ஸ்கார்ப்பியோ” “ஹூந்தாய் அக்செந்த்” அது இதுன்னு அந்த தெருவே நெறஞ்சு போயிடும். முன்னமே வந்தவங்களுக்கு முன்ன இடம்.


சரியாக 12.30க்கு குழம்பில் அந்த மீன் துண்டுகள் போடப்படும். அப்போது எல்லாம் உள்ளே வந்து உக்காந்திருக்கும் நாராயணன் ஜூவல்லரிகளும், ARC களும், பாண்டியன் மரவாடிகளும், ரமணாஸ்களும், இலை கழுவி இலவு காத்த கிளி போல மணியின் வருகைக்காக காத்திருக்கும். 12.45க்கு பைக் சத்தம் வந்தவுடன் ஒரு மாதிரி பரபரப்பு வந்திடும் அந்த ஏரியாவுக்கே. வாசலில் வெளியே டாக்டர்கள், வக்கீல்கள் வீட்டு வேலையாட்களும், கிளியனூர், எலந்தகுடி, வடகரையிலிருந்து வந்திருக்கும் செண்ட் போட்ட பாய்களும், சுந்தரம் தியேட்டரில் அவசரம் அவசரமாக டிக்கெட் வாங்கிகிட்டு, பாபு ஒயின்ஸில் 90 விட்டுகிட்டு வரும் பார்ட்டிகளும் ஏதோ “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ரேஞ்சில் காத்துகிடக்கும்.


மணி பைக் ஓட்ட பின்னால் ஒரு பையன் “அந்த” பிரசாத தட்டை தலையில் வச்சிக்கிட்டு வருவான். பைக்கில இருந்து இறங்கின மணி நேரா கடைக்கு வந்து “வாங்க அண்ணே! எல்லாரும் வாங்க, ரொம்ப லேட் பண்ணிபுட்டேன், தோ இப்ப ஆயிடும்…டே அந்த பேனை போடுடா”ன்னு சொல்லிகிட்டே அந்த 20 காலண்டரிலும் தேதி கிழிப்பார் தல!(ரொம்ப முக்கியம்)


அடுத்து இலை போடப்படும், ஆனா சோறு போடப்பட மாட்டாது. அடுத்த 7 நிமிஷத்திலே மீன் துண்டுகள் வருக்கப்பட்டு பொன் கலரில் முறுகலாக இல்லாமல் பதமாக வறுக்கப்பட்டு 12 இலைகளிளும் ஒரு ஒரு துண்டு வைக்கப்படும். அதன் பின்னரே சோறு போடப்படும். அந்த வாழை இலையில் பொன்னி அரிசி சோறு எப்படி இருக்கும்ன்னு கேட்டா, சின்ன கவுண்டர் படத்திலே ஜெயிலுக்கு போய் வந்த பின்ன விசயகாந்து குளிச்சு முடிச்சு வக்கனையா உக்காந்து இலை போட்டு சுட சுட சோறு போட்டு சாப்பிடுவாரே அப்படி இருக்கும். அப்போதான் குழம்பு திறக்கப்படும். என்னவோ “சொர்க்கவாசல்” திறப்பு மாதிரி அதுக்கு ஏகப்பட்ட பில்டப்பு நடக்கும். அவ்வளவு தான். சின்ன குழம்பு மீன் ஒண்ணும் நிறைய குழம்பும் பரிமாறப்படும். அதுக்குள்ள 3 ரவுண்டு வறுவல் மீன் உள்ளே போயிருக்கும். வேர்த்து வேர்த்து ஒழுகும் வியர்வையை பற்றி யாருக்கும் கவலை இருக்காது. வெளியே காத்து இருக்கும் மத்தவங்களை விட நாம் கொடுத்து வச்சவங்க என்னும் ஈகோ கிட்டதட்ட உள்ளே சாப்பிடும் எல்லோருக்கும் இருக்கும்.

"அண்ணே வைக்கோ அண்ணே குடவாசல் வரை வந்திருக்காரு! அதான் லேட்டு! ராத்திரி 12க்கு மீன் குழம்பு கேட்டாரு! ஒத்துபனா நானு....முடியாதுன்னு சொல்லிட்டன்ல" இது மணி!!! இதையெல்லாம் கேட்டுக்கனும். இல்லாட்டி "சூப்பர்டா மணி! நீ ரொம்ப கெடுத்து வச்சிட்ட வைக்கோவை"ன்னு என்னய மாதிரி உசுப்பேத்தினா அடுத்து அடுத்து ரெண்டு பிசுக்கு மீன் வரும்!

இப்படியாக சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது வீட்டிலிருந்து போன் வந்தா "எனக்கு காலையில சாப்பிட்ட பொங்கல் நெஞ்சை கரிக்குது சாப்பிட வரலை"ன்னு அதே சேம் பதிலை சொன்னா அழகா புரிஞ்சுப்பாங்க! சில தங்கமணிகள்"எனக்கும் ரெண்டு பிசுக்கு பார்சேல்ல்ல்ல்'ன்னு கத்துவங்க!!

பில்ன்னு பார்த்தா, ரொம்ப சிம்பிள்! மணிக்கு ரொம்ப அனுபவம் இதிலே! 500 ரூபாய் கொடுத்தாலும் மீதி வராது, 1000 ரூபாய் கொடுத்தாலும் மீதி வராது! பதிலுக்கு "ரொம்ப நன்றிண்ணே" தான் வரும்.

ஆனா சரியான சூப்பரான அசைவ சாப்பாடு சாப்பிட்ட திருப்தி இருக்கும்!!!

IT மக்கா ரொம்ப காலரர தூக்கி விட்டுக்காதீங்க! ஜஸ்ட் ஒரு வேளை சாப்பாடுக்கு எங்க பசங்க 500 ரூபாய் சர்வ சாதாரணமா செலவழிக்கிறாங்கப்பூ!!!

February 2, 2008

சிதம்பரத்துக்கு போன அப்பா(டா)சாமி!!!- இப்படிக்கு அபிபாப்பா!

நாந்தாங்க உங்க அபிபாப்பா எழுதறேன். அப்பா கூடவே நான் இருந்துட்டேன். அதனால அப்பா என் பத்தின பதிவெல்லாம் எழுதினாங்க. நீங்களும் சிரிச்சீங்க. தம்பி நட்ராஜ் பிறந்த போது பார்த்தது தான் அப்பா. நான் தானே அவன் கூட இருக்கேன். நட்ராஜ் லீலை எல்லாம் எனக்கு தானே தெரியும். அதனால நான் எழுதுகிறேன். வழக்கம் போல ஆதரவு தாங்க.

நான், அம்மா, தப்பிபாப்பா நட்ராஜ் மூணு பேரும் சிதம்பரம் போன கதை சொல்றேன் கேளுங்க. சிதம்பரம் போக முடிவாகி நாங்க கிளம்பி மயிலாடுதுறை பஸ்டாண்ட் வந்து ஒரு பஸ் பிடிச்சு அம்மாவுக்கு இஞ்சிமரப்பா, நார்த்தங்காய் ஊறுகாய் இதல்லாம் மீறி வரும் வாந்தியின் பொருட்டு ஜன்னல் ஓர சீட்டும் அதுக்கு அடுத்து தம்பி நட்ராஜ் சாரும் அடுத்து நானும் வசதியா உக்காந்தாச்சு. தம்பியை நான் பிடிச்சுகிட்டேன். அம்மா மடியிலே உக்காந்தா அம்மாவுக்கு கஷ்டம் என நடுவிலே உக்காத்தி பிடிச்சுகிட்டாச்சு. சீட் எல்லாம் ஃபுல் ஆகிடுச்சு. அப்போ ஒரு ஆன்ட்டி வந்து அவசர அவசமா ஏறினாங்க. அவங்களுக்கு மட்டும் சீட் இல்லை. நேர என் கிட்ட வந்து "பாப்பாவுக்குமா டிக்கெட் வாங்கியிருக்கு"ன்னு கேட்டாங்க. அதுக்கு நான் "வேணும்னா வாங்கிடலாம். அவன் சீட்டை விட்டு தூக்கினா கத்துவான். தொடர்ந்து 1 மணி நேரம் எல்லாம் கத்துவான். நடுவே தொண்டை வரண்டு போச்சுன்னா தண்ணி வாங்கி குடிச்சுட்டு கத்துவான்"ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "பரவாயில்ல நான் என் மடியிலே வச்சுக்கறேன்"ன்னு சொன்னாங்க. விதி வலியது!

மடியில வச்சிகிட்டு சும்மா இல்லாம "பாப்பா என்னா படிக்கிற"ன்னு கேட்டாங்க. அடுத்து "என்ன ரேங்"ன்னு கேப்பாங்க, நான் பிறந்ததில் இருந்து எழுவதாயிரத்து முன்னூத்து சொச்சம் தடவை பதில் சொன்ன கேள்வியாச்சே! சரி ஆன்ட்டி நல்ல ஃபார்ம்ல இருக்காங்க சிதம்பரம் போகும் வரை நாம தான் அவங்களுக்கு ஊறுகாய்ன்னு நெனச்சுகிட்டேன். சரி நறுக்குன்னு நாலு பதில் சொல்லிட்டா பின்ன கேக்க மாட்டாங்கன்னு "I.A.S" க்கு பிரிப்பேர் பண்ணிகிட்டு இருக்கேன்ன்னு சொன்னேன். அவங்களுக்கு ஆச்சர்யமா போச்சு. நான் ஒண்ணும் எடக்கு மடக்கா பதில் சொல்லலைங்க, பின்ன என்ன ஒரு டிகிரி முடிச்சாதான் IAS க்கு அட்டெண்ட் பண்ண முடியும்ன்னா LKG முதல் டிகிரி வரை எல்லாமே IAS க்கான பிரிப்பரேஷன் தானே. சுதாரிச்சுகிட்டாங்க. மெதுவா "பாப்பா நான் சிதம்பரம் BSNL ல வேலை பார்க்கிறேன்"ன்னு சொன்னாங்க. "வேலை பார்க்குறீங்களா?"ன்னு கேட்டேன்.நான் கேட்டதின் உள்குத்து அவங்களுக்கு புரியலை. கொஞ்சம் புரிய வைப்போம்ன்னு "பராமரிப்பு பணிகளால் உங்கள் தொலை பேசி பழுதடைந்து உள்ளது"ன்னு ஒரு ஆன்ட்டி அடிக்கடி சொல்லுவாங்களே அந்த ஆன்ட்டியா நீங்க?''ன்னு கேட்டேன். பேசாம இருந்துட்டாங்க.

சரி அப்பா துபாய்ல ஒரு மணி நேரம் டைம் பாசுக்கு 2 திர்காம் செலவழிச்ச அப்பா பேரை நாம் காப்பாத்தணுமே அந்த 2 ரூபாய் கூட செலவில்லாம சிதம்பரம் போகும் வரை டைம்பாஸ் பண்ணிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன். மெதுவா "ஆன்ட்டி என்ன பேசாம இருக்கீங்க" ன்னு கேட்டேன். என்னை கொஞ்சம் பயத்தோட பார்த்துட்டு "நீ என்ன பண்றே" ன்னு சாமர்த்தியமா கேட்டாங்க. "நான் ரிஷப்ஷனிஸ்டா இருக்கேன்"ன்னு சொன்னேன். அதன் பின்ன அவங்க பேசவே இல்லை. நான் இப்பவும் எடக்கு மடக்கா பேசலை. சரிதான் வீட்டுக்கு வரும் போன் கால் எல்லாம் நான் தான் அட்டெண்ட் பண்றேன். வீட்டுக்கு வருபவர்களை வா வா ன்னு கூப்பிடுவேன். எனக்கு ஒரு அஸிஸ்டெண்ட் கூட வச்சிருக்கேன். அவர் பேர் மிஸ்டர். டைகர். அவர் "வா"ள் வா"ள்" ன்னு கூப்பிடுவாரு. பின்ன என்ன நான் சொன்னது சரிதானே.

சரி இவங்க பேசாட்டி டைம் பாஸாகாதேன்னு மெதுவா அவங்க மடியில இருந்த தம்பி காலை கூசினேன். அவ்வளவு தான் வதக்கு வதக்குன்னு உதைக்க ஆரம்பிச்சுட்டான். ஒரு தடவை கூசினா தம்பி சராசரியா 37 தடவை உதைப்பான். "என்னது உன் தம்பி இப்படி உதைக்கிறான்"ன்னு கேட்டாங்க. "அவனுக்கு சந்தோஷம் வந்துடுச்சுன்னு அர்த்தம். சந்தோஷமானா அப்படிதான் உதைப்பான்"ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "சரி எப்பல்லாம் சந்தோஷம் வரும்"ன்னு கேட்டாங்க. அதுக்கு நான் " 37 செகண்டுக்கு ஒரு தடவை சிதம்பரம் வரும் வரை வரும் இன்னிக்கு" ன்னு சொன்னேன்.

அப்பத்தான் பார்த்தேன் தம்பி அவங்க முந்தானையில முக்கால் வாசி வாய்க்குள்ள வச்சி ஜொல்லு வடிச்சு நனைச்சுட்டான். சரி தம்பியும் நமக்கு சாதகமா களத்திலே இறங்கிட்டான்னு நெனச்சுகிட்டு அடுத்த 37 வது செகண்ட்ல இன்னும் ஒரு தடவை அவன் காலை கூசி விட்டேன். அவ்வளவு தான் தம்பிக்கு சந்தோஷம் பிச்சுகிச்சு. ஆன்ட்டிக்கு பிரஷர் எகிறிகிச்சு. சரின்னு அவங்க தம்பிய தூக்கி நிக்க வச்சாங்க அப்பவாவது உதைப்பதை நிப்பாட்டுவான்னு. நிக்க வச்ச வேகத்திலேயே கண்ணாடிய டபக்குன்னு கழட்டிட்டான். வாரி சீவின முடியோடு கண்ணாடி அவன் கையில வந்துடுச்சு. அதை நானும் அவங்களும் சேர்ந்து பிடுங்கும் முன்னமே தலையில இருந்த பூவுக்கு தாவிட்டான். பாதி பூ தம்பி கையிலே. மீதி அவங்க தலையிலே. இந்த நேரத்திலே பார்த்து டிரைவர் ஹார்ன் அடிக்கலாமா. தம்பிக்கு ஒரு பழக்கம். ஹாரன் சத்தம் கேட்டா இவரும் உதட்டால "பர்ர்ர்ர்"ன்னு ஹாரன் அடிப்பாரு. அவர் வாயில தான் ஜொல்லுபாண்டி அங்கிள் மாதிரி குடம் குடமா ஜொல்லு ஸ்டாக் இருக்குமே. தம்பி அடிச்ச ஹார்ன்ல அந்த ஆன்ட்டி முகம் குங்குமம் எல்லாம் கோடா வழியுது. தம்பி நல்ல ஃபார்ம்க்கு வந்துட்டான். அவங்க குங்குமத்துக்கு கீழே ஆஹா சாந்து வச்சிருப்பாங்க போல இருக்கு. கர்ச்சீப்பால தொடச்சா முகமெல்லாம் சிகப்பு. இப்ப அவங்க முகத்தை பார்த்தா எனக்கே "மூஞ்சி" காமிக்கணும் போல இருந்துச்சு. அந்த நேரம் பார்த்து தம்பி 3 தடவை அவங்களை பார்த்து "மூஞ்சி" காமிக்குது. அவங்க முகம் அப்ப தம்பி காமிச்ச மாதிரிதான் இருந்துச்சு!

இப்படியாக சீர்காழி வந்துடுச்சு. தம்பியும் அவங்ககூட விளையாடி களைச்சு போய் உக்காந்துட்டான். அப்பவும் திரும்பி திரும்பி கண்ணாடிய இழுத்துகிட்டு இருந்தான். அதுக்கு நான் "ஆன்ட்டி பேசாம தம்பி பேக்கை அவன் கழுத்தில மாட்டிவிட்டா பேசாம இருப்பான்"ன்னு ஐடியா குடுத்து அவன் கழுத்திலே மாட்டி விட்டேன். தம்பி வெயிட்டோட பேக் வெயிட்டையும் சேர்த்து சுமந்தாங்க. அப்போ சும்மா இல்லாம தம்பி பேக் திறந்து "பாவம் பாப்பா தண்ணி குடுப்போம்"ன்னு சொல்லி தண்ணி பாட்டிலை திறந்து தண்ணி குடுத்தாங்க. அப்பவாச்சும் நான் தடுத்து இருக்கலாம். தம்பி ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சா நாலு கிளாஸ் உச்சா போவான் என்பதை ஞாபகமா சொல்ல மறந்துட்டேன். கொஞ்ச நேரத்தில நெளிஞ்சாங்க ...பாவம் அந்த ஆன்ட்டி, பின்ன தம்பி சமத்தா தூங்கிட்டான்.

தெற்கு கோபுர வாசல் வந்த பின்ன அந்த ஆன்ட்டி தம்பியை சீட்டிலே உக்கார வச்சுட்டு இறங்கி போனாங்க. டெலிபோன் மணி போல சிரிச்சுகிட்டே வந்தவங்க கீரைகாரம்மா மாதிரி போனாங்க. இனி ஜென்மத்தில நின்னுகிட்டு வந்தாலும் வருவாங்க தவிர இந்த மாதிரி அவஸ்தை பட மாட்டாங்க. போகும் போது கேட்டாங்க "சரி பாப்பா பஸ்ஸிலே நான் சமாளிச்சுட்டேன் நட்டுவை. வீட்டிலே எப்படி சமாளிப்பீங்க"ன்னு கேட்டாங்க. அதுக்கு நான் "தம்பி தூங்கும் போது நான் அம்மா எல்லாம் சமாளிச்சுடுவோம், முழிச்சு கிட்டு இருக்கும் போது உங்கள மாதிரி சிரிச்ச மூஞ்சா யாராவது மாட்டுவாங்க"ன்னு சொன்னேன். இளிச்சவாய்ன்னு சொன்னா தப்பில்லையா அதான் சிரிச்ச மூஞ்சுன்னு சொன்னேன். "சரி பாப்பா சிதம்பரத்தில் இறங்கின பின்ன யார் சமாளிப்பாங்க"ன்னு கேட்டாங்க அதுக்கு நான் "கார் வச்சிகிட்டு ஒரு அத்தை காத்துகிட்டு இருக்காங்க"ன்னு சொன்னேன்!!!!

February 1, 2008

அய்யனாரும் தமிழச்சியும் இன்ன பிற சந்தோசங்களும்!!!

நான் ஹனிமூன் போனதிலே இரண்டு வேடிக்கையான விஷயம் இருக்கு. ஒன்னு ஹனிமூன் போன ஊர் "பழனி" இரண்டாவது அபிபாப்பா ஆறு மாத குழந்தையா இருக்கும் போது போனது. உலகத்திலே யாரும் செய்யாத புரட்சி இது. குழந்தையை ஹனிமூன் தூக்கிகிட்டு போனது. ஆக்சுவலி அந்த பயணத்தை ஹனிமூன்ன்னு சொல்றதை விட ஷேத்திராடனம்ன்னு தான் சொல்லனும். கல்யாணம் ஆகி ஹனிமூன் அழைச்சுட்டு போகாத பாவின்னு நாளை இந்த உலகம் சொல்லிடக்கூடாது இல்லியா அதனால அந்த பயணத்துக்கு ஹனிமூன்ன்னு பெயர் வச்சுட்டேன். சரி வாங்க அந்த கதையை பார்ப்போம்.

ஹனிமூன் போறதுன்னு முடிவான பின்ன தங்கமணி ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க "என்னங்க நீங்க தான குடும்ப தலைவர், அதனால நீங்க சொல்ற ஊருக்குதான் போகனும். எனக்கு கணவனே கண்கண்ட தெய்வம், "கல்" ஆனாலும் கணவன், "ஃபுல்" ஆனாலும் புருஷன் அதனால நீங்க சொல்ற ஊருக்குதான் போகணும், வேணும்னா நான் பத்து ஊர் பேர் எழுதி தாரேன், அதில ஒரு ஊர் நீங்க முடிவு பண்ணுங்க, உங்க கைய பிடிச்சுகிட்டு பேசாம வர்றேன்"ன்னு சொன்னாங்க. (பெண்ணீயவாதிகளே இப்போ கொஞ்சம் கோவப்பட்டுக்கோங்க, மேலும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தம்பி மோகன் தாஸ்க்கு வாழ்த்துக்கள்) அவங்க இப்படி சொன்ன பிறகு என் கண்ணில தண்ணி வந்துடுச்சு. என்னா ஒரு பதி பக்தின்னு நெனச்சு.

கொஞ்ச நேரத்திலே பத்து ஊர் பேர் எழுதி எடுத்து வந்தாங்க, நானும் அக்ரிமெண்ட் படி ஒரு ஊரை செலக்ட் பண்ணிட்டேன். அது "பழனி". பத்து ஊர் பெயருமே பழனின்னு இருந்த விஷயத்தை இங்க சொன்னா ஆணீயவாதிகளுக்கு குருதி அழுத்தம்(வார்த்தை உபயம் அண்ணாச்சி) அதிகமாக வாய்ப்பு இருப்பதால் சொல்லாமல் தவிர்க்கிறேன்.(இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாலராஜன் கீதா சாருக்கு வாழ்த்துக்கள்)

பாப்பா, பால்புட்டி, இன்னபிற பாப்பாவின் பேக் எல்லாம் நான் தூக்கிக்க நகை, நட்டு போன்ற காஸ்ட்லி விஷயங்களை தங்கமணி சுமக்க ஜெகஜோதியா கிளம்பிட்டோம்.(நட்டு அப்பவே பிறந்துட்டானான்னு கேக்கப்பிடாது) நான் இதற்கு முன்பாக இரண்டாம் வகுப்பு படிக்கும் போது பார்த்ததுதான் பழனியை. பழனி எனக்கு புதுசு. அதையெல்லாம் தங்கமணிகிட்ட காமிச்சுக்க முடியுமா? என்னவோ பழனியே நான் தான் வடிவமைச்சு உண்டாக்கினது போல பஸ்ஸிலே ரொம்ப பீலா விட்டு கிட்டே வந்தேன். "அங்க பாரு அந்த ஊர்ல மலை ஒண்ணு இருக்கும் பாரு, இப்பவும் பார்த்துகிட்டே இருக்கலாம். அதுல பஸ் போற ரூட் எல்லாம் அப்படியே என்னமா இருக்கும் தெரியுமா. அங்க ரோடு போட்டதை பார்த்துதான் திருப்பதியிலயே போட்டாங்க தெரியுமா, மலை மேல ஏறினா பஸ்ஸை விட்டு இறங்கின உடனே முருகன் கோவில் வந்துடும் சட்டுன்னு" இப்படியாக பஸ்ஸிலே மொக்கை போட்டுகிட்டு வந்தேன். "என்னங்க மெதுவா பேசுங்க நாலு பேர் காதில விஷப்போகுது மெதுவா பேசுங்க"ன்னு திட்டு வேற. "அந்த முருகன் வலப்பக்கம் வள்ளியும் இடப்பக்கம் தெய்வானையும் காண ஆயிரம் கண் வேண்டும்ன்னு நான் சொன்னப்ப கொஞ்சம் அதிர்ந்துதான் போயிட்டாங்க தங்கமணி. பின்ன தான் தெரிஞ்சுது, என் அபத்த பீலா எல்லாம். நம்ம சாருக்கு அங்க சிங்கிள் பீஸ் காஸ்ட்டியூம்ன்னு. அட ஆண்டவா!!

பழனி பஸ்ட்டாண்டில் இறங்கியதுமே கச கசன்னு கூட்டம். நான் தங்கமணியை பார்த்து "தோ பார், பேசாம என் கூடவே வா, கூட்டத்துல காணாம போயிடாதே" ன்னு சொல்லிட்டு கட கடன்னு நடக்க ஆரம்பிச்சுட்டேன். கோவில் எந்த பக்கம் இருக்குன்னு கேட்டா தங்கமணிக்கு முன்னால அசிங்கமா போயிடுமேன்னு யார்கிட்டயும் கேக்கலை. "என்னங்க இந்த பக்கமா போறீங்களே"ன்னு கேட்டதுக்கு "பேசாம வா எனக்கு பழனில தெரியாத இடமா இது தான் ஷார்ட்கட்"ன்னு சொல்லி கிட்ட தட்ட ஒரு மணி நேரம் நடந்தாச்சு கோவில் வந்தபாடில்லை. எனக்கு அதுக்கு மேல நடக்க சக்தி இல்லாததை காமிச்சுக்காம "தோ பார் இன்னும் ரொம்பதூரம் நடக்கணும் நீயோ டயர்டா இருக்க பாப்பாவும் வெயில்ல கசங்குது பேசாம ஆட்டோவிலே போயிடுவோமா"ன்னு கேட்டதுக்கு "உங்களை நம்பி ஒரு மணி நேரம் நடந்தாச்சு இன்னும் 2 நிமிஷத்திலே மலையடிவாரம் வந்திடும் ஆட்டோ வேணாம்"ன்னு சொன்னாங்க. "பார்ர்ரா பார்ரா ஆட்டோகாரனுக்கு பத்து ரூவா குடுக்க விடமாட்டியே சரியான கஞ்சூஸ்"ன்னு சொல்லிகிட்டே ஆட்டோவை கூப்பிட்டேன்.

மலையடிவாரம் போகணும் எவ்வளவுப்பான்னு கேட்டதுக்கு அவன் என்னை பார்த்த பார்வை இருக்கே இப்பவும் மறக்க முடியாது. "நீங்க எவ்வளவு கொடுத்தாலும் சரிதான்"ன்னு சொன்னான். உடனே நான் "பத்தியா என்கிட்ட எவனும் பேரமே பேச மாட்டான், மாயவரத்துகாரனா இருப்பான் போல இருக்கு, என்னை தெரிஞ்சு இருக்கும் ஆனா பாரு அவனை எனக்கு தெரியல, பாசக்கார பசங்க நம்ம ஊர் பசங்க"ன்னு சொல்லிகிட்டே ஆட்டோவிலே உக்காந்தா அவன் ஓட்டாம தள்ளிகிட்டே போறான். "என்ன் ஸ்டார்டிங் டிரபிலா"ன்னு கேட்டதுக்கு "எதுக்கு சார் பெட்ரோல் வேஸ்ட் பண்ணனும், இறங்குங்க மலையடிவாரம் வந்துடுச்சு"ன்னு சொன்ன பின்ன தான் தெரிஞ்சுது மலையடிவாரத்திலேயே நின்னு கிட்டு மலையடிவாரத்துக்கு ஆட்டோவிலே போயிருக்கேன்ன்னு.

தங்கமணிய பார்த்து "என்ன எதுக்கெடுத்தாலும் கெக்கே பிக்கேன்னு எனக்கு தெரியாதா இதுதான் மலையடிவாரம்ன்னு, உழைக்காம பிச்சை எடுக்கிறவனுக்கு பத்து ரூவா பிச்சை போடுறதை காட்டிலும் இந்த உழைப்பாளிக்கு கொடுக்கலாம்ன்னு தோணுச்சு சும்மா குடுத்தா வாங்க மாட்டான் எங்க ஊர்க்காரனாச்சே அதான் சும்மா ஆட்டோவிலே ஏறி இறங்கி கொடுத்தேன்"ன்னு ஒரு வழியா சமாளிச்சேன். பாவி ஆட்டோக்காரன் அதுக்கு தான் அப்பவே சொன்னானா கொடுக்கிறத கொடுன்னு. அநியாயமா பத்து ரூவா போச்சே!

மலையடிவாரத்தில இருந்து மேலே போக பஸ் எங்க ஏறணும்ன்னு தெரியலையா எனக்கு அது தங்கமணிக்கு தெரிஞ்சா அசிங்கமா போயிடுமேன்னு அவங்ககிட்ட "அந்த கடைக்காரன் ரொம்ப தெரிஞ்சவன் பழனி வர வந்துட்டு பேசாம போனா தொலைச்சுடுவான் இரு பேசிட்டு வாரேன்"ன்னு சொல்லிட்டு போனேன். போய் "என்னங்க மலையடிவாரத்துக்கு பஸ் ஏற பஸ்ஸ்டாண்ட் எங்க இருக்கு"ன்னு சிரிச்சுகிட்டே கேட்டேன். தூரத்தில இருந்து தங்கமணி பார்த்துகிட்டு இருக்காங்களா, அதனால சிரிச்சுகிட்டே கேட்டேன்...........................

பின்ன திரும்பி வந்தேன். "என்னங்க பஸ் எங்க ஏறணுமாம்"ன்னு கேட்டாங்க. அதுக்கு நான் "ஹய்யோ ஹய்யோ நீ நான் சொன்னத எல்லாம் நம்பிட்டியா ஹய்யோ ஹய்யோ பஸ் எல்லாம் மேல போகாது நாம தான் நடந்து போகனும்"ன்னு சொன்னேன். "சரிங்க அந்த கடைக்காரன் கிட்ட நீங்க சிரிச்சு சிரிச்சு பேசினீங்க அவன் கோவமா கைநீட்டி நீட்டி பேசினானே"ன்னு கேட்டதுக்கு நான் "அதான் சொன்னேனே எப்ப பழனி வந்தாலும் அவனை பார்ப்பேன். போன தடவை பார்க்கலை அதான் அவனுக்கு கோவம். தொண தொணன்னு கேள்வி கேக்காத வா"(எவ்வளவு தான் ஒரு மனுஷன் சமாளிப்பான்)

மலை ஏற ஆரம்பிச்சதுமே ஒரு கோவில் சிப்பந்தி டவாளி வெள்ளை யூனிஃபார்ம் குறுக்கே சிகப்பு பட்டை போட்டு கிட்டு இருந்தார். அவர் எங்க கிட்ட வந்து "அடடா பார்த்து எத்தன நாளாச்சு, வணக்கம்ய்யா, அம்மா வணக்கம் இது தான் பாப்பாங்களா, நீங்க வர்றத முன்னாடியே சொல்லிட்டியலா"ன்னு குசலம் விசாரிச்சுட்டு போனார். எனக்கு அவரை எங்கயுமே பார்த்த ஞாபகம் இல்லை. உடனே நான் தங்கமணி கிட்ட " அவரு நம்ம ஊர்க்காரர் தான். அப்பாதான் வேலை பண்ணி வச்சாங்க, இப்பவும் ரொம்ப விசுவாசமா இருக்கார் பாரு. எங்க வந்தாலும் நம்ம ஊர் ஆளுங்கதாம்ப்பா, பாரேன் என்னால உனக்கும் ஒரு ஃப்ரீ வணக்கம் கிடைச்சுது" ன்னு சொல்லி மேலே நடக்க ஆரம்பிச்சோம்.

"ஏங்க யானை பாதையிலே போவோமா"ன்னு கேட்ட போது கூட எனக்கு அப்படி ஒரு பாதை இருப்பது தெரியாது. இருந்தாலும் சமாளிச்சுகிட்டு " தோ பார் மனுஷனுக்கு சின்ன கால் அதனால சின்ன படி, யானைக்கு பெரிய கால் அதனால பெரிய பெரிய படியா இருக்கும் கஷ்டம்"ன்னு சொன்னேன். "இல்லீங்க எனக்கு யானை பாதை பார்க்கணும் போல இருக்கு அதுவும் பெரிய பெரிய படியா இருக்கும்ன்னு வேற சொல்லிட்டீங்க பார்த்தே ஆகணும்"ன்னு சொல்லிட்டாங்க. " விதி யாரை விட்டுச்சு அந்த பெரிய படில ஏறி இறங்கினாத்தான் உனக்கு தெரியும் ஆசை பட்டுட்டே அனுபவி"ன்னு சொல்லிட்டு "யானை பாதை"போர்டு பார்த்து அதிலே நுழைஞ்சா அடங்கொக்கமக்கா படியே இல்லாம மொழுக்கட்டீன்னு இருக்கு. "என்னங்க பெரிய படியா இருக்கும்ன்னு சொன்னீங்க படியே இல்லியே"ன்னு கேட்டதுக்கு " படில ஏறி கஷ்டப்பட்டு போனாதான் புண்ணியம்ன்னு நெனச்சு உன்னை பயம் காட்ட யானை பாதையிலே பெரிய படியா இருக்கும்ன்னு சொன்னேன், இப்ப புண்ணியத்து பர்சண்டேஜ் குறைஞ்சு போச்சு உன்னால"ன்னு சொன்னதுக்கு அவங்க "அதனால என்ன 'தர்ம தரிசன'த்திலே போனா இந்த புண்ணியத்தை சரி கட்டிடலாம்"ன்னு சொல்லி 200 ரூபாயை மிச்சம் பிடிச்சுட்டாங்க.

ஒரு வழியா மேலே போய் சேர்ந்தாச்சு. "தர்ம தரிசன" கியூவை பார்த்ததுமே எனக்கு கண்ணை கட்டிடுச்சு. பாப்பா திணறி கசங்கி போயிடுச்சு. பாப்பாவை தலைக்கு மேல தூக்கிகிட்டேன். அப்ப வரிசையை ஒழுங்கு செய்யும் கோவில் சிப்பந்தி " அடடா எப்ப வந்தீங்க நல்லா இருக்கீங்களா அய்யா வணக்கம் அம்மா எப்படி இருக்கீங்க சரி எதுக்கு தர்ம தரிசனத்துல வர்ரீங்க, நேரா வர வேண்டியது தானே, இது என்ன புது பழக்கம்" அப்புடி இப்புடீன்னு சொல்ல எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. சரி நல்ல வாய்ப்புன்னு "அது ஒண்ணுமில்லீங்க வீட்டுல தர்ம தரிசனத்துல வர்ரேன்னு வேண்டிகிட்டாங்க அதான் ஆனா நமக்கு இதல்லாம் புதுசு, இதான் நம்ம வீட்டுல" அப்படின்னு அறிமுக படுத்தி வச்சேன். நம்ம ஊர்க் காரர் போல இருக்கு என்னை தெரியும் போல இருக்குன்னு நெனச்சுகிட்டு. அதுக்கு அவரு "என்னங்கய்யா எங்க அம்மாவ எங்களுக்கே அறிமுக படுத்தறீங்களே"ன்னு கேட்டாரு. ஒரு வேளை கல்யாணத்துக்கு வந்திருப்பார் போல இருக்குன்னு நெனச்சுகிட்டு நம்ம ஊர் பாசமே பாசம் என்னமா "எங்க அம்மா"ன்னு சொந்தம் கொண்டாடுறார் பாருங்க அதாங்க மாயவரம்.
உடனே நான் தங்கமணிகிட்ட சொன்னேன் "பத்தியா நம்ம ஊர் பாசத்தை,இவரும் மாயவரம் தான். நான் தான் சொன்னனில்ல தர்ம தரிசனம் வேண்டாம்ன்னு, அய்யா வந்தா ஸ்ட்ரெயிட்டா சாமிகிட்ட கூட்டிகிட்டு போயிடுவாங்க டிக்கெட் எதுவும் கிடையாது. என்னால உனக்கு வேற மரியாதை அனுபவி அனுபவி".

"என்ன வேண்டுதலோ போங்க உங்க வேண்டுதலுக்கு பாப்பாவை ஏன் கசக்குறீங்க இங்க குடுங்க நான் கொண்டு போய் தண்டபாணி சன்னதில போடுறேன் நீங்க பின்னால வாங்க"ன்னு பிடுங்கிகிட்டு போயிட்டார். எனக்கு பயமா போச்சு அவர் கோவில் ஆளுதானா இல்லியா, அய்யோ கழுத்திலே எல்லாம் நகை எல்லாம் இருக்கேன்னு பயந்து போய் "என்னங்க என்னங்க வேண்டாம் வேண்டாம்"ன்னு கத்த கத்த எல்லார் தலைக்கு மேலயும் பாப்பா மட்டும் தூரக்க போவது மட்டும் தெரிஞ்சுது. நான் இத்தன கத்தியும் தங்கமணி கல்லுளிமங்கியாட்டம் இருக்கவே எனக்கு சரியான கோவம்.

"ந்தா பாப்பாவை ஒருத்தன் தூக்கிட்டு போறான் பார்த்துகிட்டு கத்தாம இருக்கியே"ன்னு கேட்டதுக்கு "உங்க ஊர் ஆளுதானேன்னு பேசாம இருந்துட்டேன்"ன்னு சொன்னாங்க. ஒரு வழியா நாங்க நொந்து நூலாகி முருகன் கிட்ட வரும் போது பாப்பா ஜாலியா குருக்கள் எல்லாம் உட்காந்து இருக்கும் இடத்திலே வாயிலே விரலை வச்சுகிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கு. எங்களை பார்த்ததுமே கேட் திறக்கப்பட்டு நாங்களும் அந்த இடத்துக்கு கூப்பிடப்பட்டோம்.

எனக்கு ஒன்னுமே புரியலை. அப்ப கூட நான் தங்கமணி கிட்ட "அய்யர் நம்ம ஆளு, நம்ம பார்வதி குருக்களோட சொந்தம். அவருக்கு நான்னா உசுரு"ன்னு பீலாவை தொடர்ந்தேன். அப்ப தங்கமணி "ஏங்க வள்ளி தெய்வானை காணுமே"ன்னு கேட்ட போது தான் பார்த்தேன். திக்குன்னு ஆகிடுச்சு.

"தோ பார் சும்மா பேசாம சாமி கும்பிடு"ன்னு சொல்லிகிட்டே பாப்பா செயின் எல்லாம் இருக்கான்னு பார்க்க ஆரம்பிச்சேன். எங்களுக்கு ஜமக்காளம் போடப்பட்டது. எல்லா குருக்கள், ஓதுவார்கள், நாதஸ்வரகாரங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா வந்து "எப்படிம்மா இருக்கிங்க"ன்னு குசலம் விசாரிக்க, பாப்பாவை தூக்கி கொஞ்ச, நான் சீந்துவார் இல்லாம இருந்தேன். ஒரு ஃபார்மாலிட்டிக்கு என்னிடம் ஒரு வார்த்தை மட்டும் பேசினாங்க. என் இந்த நிலமையை பார்த்து ஒருத்தர் மட்டும் என்கிட்ட பேசினார். "அம்மா தேவஸ்தானத்திலே ஜேயீயா இருக்கும் போது தான் எங்க குவார்ட்டர்ஸ் கட்ட ஆரம்பிச்சாங்க. சும்மா பம்பரமா வேலை பார்ப்பாங்க, அது முடிஞ்ச பின்னவும் குவார்ட்டர்ஸ் மெயின்டணன்ஸ் பார்த்தாங்க. எங்க எல்லார் மேலயும் பாசமா இருப்பாங்க, தினமும் காலையில 6 மணிக்கு கோவிலுக்கு வந்து தண்டபாணிய பார்க்காம இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு ராஜ அலங்காரம்ன்னா ரொம்ப பிடிக்கும்"ன்னு ஏதோதோ சொல்லிகிட்டே போனாரு. எனக்கு கிர்ன்னு மயக்கமா வந்துச்சு. இதல்லாம் யோசிக்காம நான் ரொம்ப பீலா விட்டுட்டனோ!!

தரிசனம் எல்லாம் முடிஞ்சு பஸ் ஏற வரும் போது வரை நான் பேசவே இல்லை. "ஏங்க அந்த கடைகாரர் கிட்ட சொல்லிட்டு வந்திடுங்க இல்லாட்டி அடுத்த தடவை வரும் போதும் காலையில கோவிச்சுகிட்ட மாதிரி கோவிச்சுக்க போறாரு"ன்னு சொன்னாங்க. எனக்கு அப்படியே பத்திகிட்டு வந்துச்சு.

இப்பவும் நான் பேசும் போது பீலா விட்டன்னா "என்னங்க நாம பழனி போனோமே"ன்னு ஆரம்பிச்சா நான் எஸ்கேப் ஆகிடுவேன்!