ஆச்சி அத்தை எப்போ எங்க வீட்டுக்கு வேலைக்கு வந்துச்சுன்னு தெரியாது. ஆனா நான் சின்ன குழந்தையா இருக்கும் போதே வந்துடுச்சு. அத்தை எங்க வீட்டிலே மட்டும் வேலை செய்யலை. பல பேர் வீட்டிலே. பாவம் அத்தை கையை பார்த்தா அத்தனை ஒரு சொர சொரப்பு. அத்தையை பற்றி எழுதும் போதே அழுகையா வருது.
என் பெரியக்கா, சின்னக்கா, நான், என் தம்பி எல்லார் வாழ்க்கையிலும் அத்தை கலந்துவிட்டது. அக்காக்கள் பெரிய மனுஷியா ஆனது முதல் பெரியக்காவின் 3 பசங்க பிறக்கும் போதும், சின்ன அக்காவின் 1 பையன் பிறக்கும் போதும், என் அபி, நட்டு பிறக்கும் போதும், என் தம்பி பையன் பிறக்கும் போதும் ஆச்சி அத்தை தான் பிரதான ஹீரோயின்.
எங்க வீட்டு பெண்கள் பிரசவத்துக்கு ரெடியான பின்னே " அண்ணி, உன் பழைய புடவை கொடு, நான் ரெடியாகனும்" அப்படின்னு ஆரம்பிச்சிடும் அத்தை. ஒரு நாலு புடவை பின்னே கஷாயத்துக்கு தேவையான மஞ்சள், மல்லி விதை அப்படின்னு அத்தை ரெடியாகும் அழகே தனி.
வலி எடுத்த வுடன் நான் முதலில் போய் (எல்லாம் ராத்திரி தான் ) அத்தை வீட்டு வாசலில் வண்டியை நிப்பாட்டின பின்ன "தம்பி வந்துட்டேன்! நெனச்சுகிட்டே படுத்தேன் பாவம் புள்ளைக்கு சாயந்திரமே முகம் மாறி போச்சு, நீ ஓடி ராஜேந்திரன் ஆட்டோ கிட்ட சொல்லிடு"
"இல்லை அத்தை அத்தை ஆட்டோ வந்தாச்சு! நீதான் அத்தே வரனும்"
"அண்ணி பயப்படும் தம்பி! நீ வண்டி எடு நான் வரேன்! இந்த மஞ்ச பைய முன்னாடி மாட்டிக்க"
"என்ன அத்தை அதிலே இருக்கு"
"பழைய புடவை இருக்கு அதல்லாம் உனக்கு எதுக்கு நான் முதல்ல அண்ணிய பார்க்கனும், ஓட்டு"
"அத்தை பாலுத்தேவன் கிட்ட சொல்லலையா"
"அவன் கிடக்கான் காலை சாப்பாடு அவனுக்கு அண்ணி அனுப்பிடும் பாரு நீ வண்டி ஓட்டு"
வண்டி ஓடிகிட்டெ இருக்கு!
"அத்தே பாலு அவரு பேரு தேவர் அவர் படிச்சு வாங்கின பட்டமா"
"அய்யோ உனக்கு சிரிப்புக்கு இதான் நேரமா? வண்டிய ஓட்டு"
"சரி அத்தே"
"தம்பி உனக்கு பயமே இல்லியா அங்க கிருஷ்ணா கத்திகிட்டு இருக்குமே!"
"அத்தே நீ இருக்கும் போது எனக்கு என்ன பயம்"
""அதல்லாம் சரி! சில்லர காசு இருக்கா?"
"இல்லியேத்தே"
"இந்த பாரு என் கிட்ட ஒன்னேகாருவா இருக்கு வீரன் கிட்ட விட்டரிஞ்சுகிட்டு வா"
\
"சரித்தே"
அத்தே கண்கலங்கி இருந்துச்சு!
"ஏன் அத்தே"
"இல்ல தம்பி! என்னவோ அழுவ வருது! அநேகமா உன் மொவன் தான் நான் பிரசவம் பார்க்கும் கடேசி புள்ளயா?"
"அட என்ன அத்தை! கண்ணை தொடச்சிக்கோ!நான் பத்து புள்ளை பெக்குறேன்! ஏன் அழுவற?"'
குழந்தை பிறந்தது! சில பல காரணத்தால் என் அம்மாவும் நானும் பேச்சு வார்த்தை இல்லாமல் போச்சு!
ஆனால் ஆச்சி அத்தை தான் நட்டுவை குளிப்பாட்டும் முக்கிய வேலை.
அம்மாவுக்கு அதிலே உடன்பாடு இல்லை.
ஆச்சி அத்தை அம்மாவின் கட்டுபாடுக்கு மட்டுமே இருக்க வேண்டும். என் அம்மாவின் பேத்தியாச்சே அபி! "அத்தை பாட்டி நீங்க நட்டுவை குளிப்பாட்ட வேண்டும்" அப்படின்னு சொல்லிட்டா!
அம்மாவுக்கும் அத்தைக்கும் இடைவெளி அதிகமாச்சு.
முடிவுக்கு வரேன்.
அத்தை நேத்து செத்து போச்சு. காலை தம்பி நட்டுவை குளிப்பாட்ட்டுசாம். அவன் அவன் "ஆச்சி"னு கூப்பிட்டப்ப "எலேய் உன் அப்பன் கூட ஆச்சின்னு கூப்பிட்டது இல்ல" அப்படின்னு சொன்னுச்சாம்.
போய் தூங்குச்சு. நிம்மதியா செத்து போச்சுங்க!
அம்மா வந்து அழுதுதுச்சுங்க! அம்மாவை நான் எப்படி சமாதானப்படுத்துவேன்!
இதுக்குமேல என்னால எழுத முடியலை!