பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 28, 2014

மகேந்திரன் என்னும் திமுக தொண்டன்!

அது 1997. அப்போது நான் வெளிநாட்டில் சம்பாதிச்சது போதும் என முடிவெடுத்து இந்தியா வந்து பெரிய தொழிலதிபர்(???!) ஆகனும்னு நினைச்ச நேரம்! வெளிநாடு போய் பொண்டாட்டி புள்ளைகளை பார்க்காமல் இரவு பகல் என உழைத்து கையில் கொஞ்சம் காசு வந்த பின்னே வருமே ஒரு ஆசை. அது தான் எனக்கும் வந்தது!

வந்து ஆரம்பிச்ச பிஸினஸ் என்பது ஒரு மெத்தை கடை! duroflex, kurlon, fibroflex, sleep வெல், என எல்லாத்துக்கும் மாவட்ட டீலர்! ஓஹோன்னு போச்சுது. அப்போது என் கடைக்கு ஒரு ஆள் தேவைப்பட்ட போது என் நண்பன் அப்சரா கார்த்தி கிட்டே கேட்டேன். அவன் சொன்னான்... “ஒழுங்கா உழைக்கும் வர்க்கம் எனில்... சும்மா ஓப்பி அடிக்காம உழைக்கும் வர்க்கம் எனில் தாழ்த்தப்பட்ட வர்க்கம் தான். அவர்கள் தான் உண்மையான உழைப்பாளிகள்” என சொல்லி தன் கடையில் வேலை செய்த பகலவன் தம்பி மகேந்திரனை அனுப்பினான்.

கடை என்பதோ ஒரு மயிலாடுதுறையின் பிரபல மருத்துவமனை இருக்கும் கட்டிடம். அது முதல் மாடி! கீழே கடை . இரண்டாவது மாடியில் 12 வீடுகள். கிட்டதட்ட பத்து வீடுகள் டாக்டர்கள் வீடுகள். அதிலே என் வீடு 12ம் வீடு.

இவன் மகேந்திரன் காலை 9 மணிக்கு வருவான். இரவு 9 மணிக்கு போவான். அப்போது அபிபாப்பா அவங்க அம்மா வயிற்றில் 6 மாத குழந்தை!

இந்த மகேந்திரன் மற்றும் நான், என் மனைவி .... இது தான் குடும்பம். மதிய சாப்பாடு எங்கள் இருவருக்கும் (அல்ல மூவருக்கும்) என் மனைவி பிள்ளைதாச்சி எடுத்து இரண்டு மாடி இறங்கி எடுத்து வரும்.

கடையை பாதி ஷட்டர் எடுத்து விட்டு நாங்கள் சாப்பிடுவோம்.

பின்னர் என் மனைவி பிரசவத்துக்கு அவங்க வீட்டுக்கு போன பின்னே நானும் மகேந்திரன் மட்டுமே! மதிய சாப்பாடு அய்யப்பன்ல ஏதோ புரோட்டா வாங்கி வருவான். சாப்பிடுவோம். ஒரு நாள் என் மனைவிக்கு பிரசவ வலி என போன் வந்ததும் நான் ஓடினேன். அடுத்த நாள் காலை அவனும் வந்து விட்டான். வரும் போதே குழந்தைகளுக்கான ஒரு சின்ன Bet set வாங்கி வந்தான். வாங்கி வந்தான் என சொல்லக்கூடாது. எடுத்து வந்தான். ஏனனில் அது என் கடையில் இருக்கு. கொடுக்கும் போதே “அண்ணே, இது நான் எடுத்து வரலை, வாங்கிகிட்டு வந்திருக்கேன். என் சம்பளத்தில் கழிச்சுகுங்க” என சொன்ன போது சிரித்துக்கொண்டேன்.


பின்னர் அபி பிறந்து 3 மாதம் ஆன போது அவளுக்கு தாய் தந்தை முகம் தவிர மகேந்திரன் முகம் கூட தெரிந்தது. அவள் வளர வளர “அண்ணே, அண்ணே”ன்னு அவன் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு போகும் போது அழ ஆரம்பித்தாள்.

இப்படியாக இருக்கும் போது ஒரு நாள்... விடுதலை சிறுத்தைகள் ஒரு ஊர்வலம். என் கடையின் எதிரே தான் ஊராட்சி மன்ற அலுவலகம மற்றும் ஆர். டி ஓ ஆபீஸ். அதை நோக்கி ஊர்வலம். மிக கோபமாக சிறுத்தைகள் வர வர அங்கே கடைத்தெருவில் பல கடைகள் கண்ணாடிகள் உடைந்து விட்டது. விஷயம் போனில் வந்தது.

இங்கே போஸ்ட் ஆபீஸ் வழியே கூட்டம் நுழைந்ததும் மகேந்திரன் என் கடையின் முன்னே நின்று கண்ணாடி சைன் போர்ட் முன்னே நின்று கொண்டு ஊர்வலம் பார்த்து “உம் போங்க போங்க”ன்னு கத்தினான். அதனால் என் கடை போர்டு தப்பியது! அப்போது ஆர். டி ஓ ஆபீஸ் முன்பாக இருந்த போலீஸ் படை முன்னேறி சுட ஆரம்பித்தது. சுட என்றால்... தோசை சுட இல்லை... நிஜ துப்பாக்கி சூடு. அதிலே நடுவே மாட்டிக்கொண்டது என் தம்பி கொக்கரக்கோ சௌம்யனின் மனைவியின் தோழியும் தான். அவங்க ஒரு காலேஜ்ல வேலை செஞ்சு கிட்டு இருந்தாங்க. அவங்க எக்கு தப்பா நடுவே மாட்டிகிட்டாங்க.

நான் மகேந்திரனிடம் சொன்னேன். “டேய் போய் காப்பாத்துடா”ன்னு கத்தினேன். அதுக்குள்ள ரெண்டு ரவுண்டு சுட்டு முடிஞ்சுது. நாலு பேர் சுருண்டு கிடக்காங்க. ஓடிப்போய் அவங்களை இழுத்துட்டு வந்தான். அவங்க ரெண்டு மாடி ஓடி என் வீட்டில் மேலே ஒடுங்கிட்டாங்க.

துப்பாக்கி சூடு நடக்கும் போதே ஒரு வண்டில இருந்து போலீஸ் வீடியோ எடுத்து கிட்டு இருந்துச்சு.

பின்னே தான் தெரிந்தது “துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு” என!

அடுத்து அடுத்து.... அரசு தன் வேலையை செய்ய தொடங்கியது! துப்பாக்கி சூடு நடந்த என் கடை முன்னே தன் கடை சைன் போர்டு காப்பாத்த நின்ன மகேந்திரன் கைது செய்யப்பட்டான். அது போல பலரும். ஆனால் மகேந்திரன் சின்ன வயசு. 18 கூட ஆகலை என்பதால் அவன் மயிலாடுதுறை கிளை சிறைச்சாலையில் வைக்கப்பட்டான். வைக்கும் படி செய்தேன் என கூட சொல்லலாம். ஏனனில் அப்போது திருச்சி ஜெயில் சூப்பரிண்டெண்ட் என் மைத்துனர் திரு தாஸ் அவர்கள். தாஸ் அத்தான் கிட்டே விஷயம் சொன்ன போது “ சரிடா மாப்ள! பையன் சின்ன பையன். செஞ்ச குத்தாமோ பெரிசு. என்ன செய்யலாம் சொல்லு” என்றே ஆரம்பித்தார். அத்தானிடம் விபரம் சொல்லி அவன் வயதை காரணம் காட்டி மயிலாடுதுறை கிளை சிறையில் வைத்தோம்!

அதற்கு அடுத்த நாள் அபிக்கு ஒரு வயது பூர்த்தியாகி மொட்டை போட்டு காது குத்தனும். அதும் முடிஞ்சுது!

இங்கே நான் போய் சிறையில் “எலேய் தம்பி பாப்பாக்கு மொட்டை போட்டு காது குத்தியாச்சு” என்றேன். அழுதான்.

“ஏண்டா அழுவுற?”

“போங்கண்ணே, அது பச்ச புள்ள... வலிக்கும்ல”

சந்தானம் மாதிரி “அட கிருக்குபயபுள்ள”ன்னு சொல்லிட்டு வந்தேன்.

அடுத்த நாள் அபிஅம்மா கோழி குழம்பு வச்சி “ஏங்க மகேந்திரனுக்கு இது” என கொடுக்க கொண்டு போய் கொடுத்தேன்! அங்கே எனக்கு கெடுபிடிகள் கிடையாது! மொட்டை தலையுடன் காதில் தோடு தொங்கட்டான் கூட அபியை தூக்கி கிட்டு ஜெயிலுக்கு போனேன். தூக்கி கொஞ்சினான். அவனுக்கு யாரோ கொடுத்த பிரட் கொடுத்தான்.ஊட்டி விட்டான். சாப்பிட்டது குழந்தை! நாங்க கொடுத்தா எதும் சாப்பிடாத குழந்தை சாப்பிட்டது! கண் கலங்கினேன்!

இப்படியாக எங்கள் குடும்ப உறுப்பினர் மகேந்திரன்!

பின்னர் வழக்கம போல ஃபாரின் போனவன் வாழ்க்கை ஃபாரின்ல தான் போய் முடியும் என்னும் சாபத்தின் படி நான் மீண்டும் துபாய் போனேன். ஆச்சு அதன் பின்னர் பல வருஷம்....


கவனிக்க இந்த கதை எல்லாம் 1997-98 , 99 ல் இப்போ வருஷம் 2014.



-------------------------------------------

இரு நாட்கள் முன்பாக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை சீர்கேடு போராட்டம்!

அப்போது ஒருத்தன் என் கிட்டே வந்தான். பளீர் வெள்ளை  கருப்பு சிவப்பு கரை வேட்டி! ஆலயா சட்டை.! குண்டாண உருவம்!

“என்னை தெரியுதா அண்ணே”

“தெரியலையே”

“திரும்ப பாருங்க... என்னை இன்னுமா தெரியலை?”

“தெரியலைங்க...”

“என்னாண்ணே,  இங்க போட்டு பேசுறீங்க? நான் தான் உங்க மகேந்திரன்”

எனக்கு அப்போதும் நியாபகம் வரலை.....

“ நீங்க பேஸ்புக்ல இருக்கீங்கலா?”

“அப்டீன்னா?”

“எனக்கு தெரிஞ்சு S.P. மகேந்திரன்ன்னு ஒருத்தரு பேஸ்புக்ல இருக்காரு.. சாரி அதான் கேட்டேன்”

“அண்ணே, அண்ணி நல்லா இருக்காங்கலா? அபிபாப்பா எப்டி இருக்கு? இப்ப என்ன படிக்குது? என்னை அதுக்கு தெரியுமா?”

“புரியலைப்பா... நீங்க யாருன்னு?”


இடி இடிச்சது போல சிரிச்சான்.

“அண்ணே, சொல்வீங்களே! அப்போ சொல்வீங்களே!  திமுக என்பது தான் உண்மையான இயக்கம். அங்கே சாதி மத பேதம் ஏதுமில்லை. கட்சிக்கு வரனும். வாடா வான்னு சொல்லுவீங்களே, நான் அப்போ எந்த கட்சியும் இல்லை. இப்போ திமுக! தவிர நத்தம் வைஸ் பிரசிடண்ட் அண்ணே! வைஸ் பிரசிடண்ட். ஒன்றியத்தில் நான் பெரிய ஆளு அண்ணே. எனக்கு இப்பவே என் பாப்பாவை பார்க்கனும் போல இருக்கு. அண்ணிய பார்க்கனும் போல இருக்கு. எல்லாரும்  நல்லா இருக்காங்கலா அண்ணே....”

மகேந்திரன் பேச பேச என் மண்டையில் திமுக ரத்தம் இன்னும் பீறிட்டு பாய்ந்தது!

அங்கே மைக்கில் எங்கள் மாவட்டம் “ நாம எல்லாம் ஒரே ரத்தம்தான்யா.... “ன்னு ஏதோ பேசிக்கிட்டு இருந்தது காதில் வந்து விழுந்தது!

அப்போது ரோட்டரி மிட் டவுன் இளங்கோ எனும் திமுக நண்பர் வந்து “வாங்க அபிஅப்பா உங்க வண்டி அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் தானே இருக்கு. அங்க கொண்டு விடுகிறேன்” என சொல்லி அழைத்து போனார்.


அடடே! எனக்கே தெரியாமல் ஒரு கட்சி காரனை உண்டாக்கி இருக்கேன் என்னும் பெருமிதத்தில் வீடு வந்து சேர்தேன்!

February 19, 2014

மூவர் உள்ளிட்ட எழுவர் விடுதலையும் ஜெயா ஆடப்போகும் நாடகமும்!

இங்கே தமிழ் நாட்டில் இரண்டு கட்சிகள் தான் உள்ளன. ஒன்னு திமுக. அடுத்து அதிமுக. திமுகவுக்கும் அதிமுக மீது எவ்வித காழ்ப்புணர்வும் இல்லை. ஆனால் அதிமுக தலைவிக்கும் எங்கள் திமுகவுக்கும் ஏதோ தனிப்பட்ட காழ்”புணர்வு” இருப்பதாகவே நினைக்கிறேன்!

முருகன், சாந்தன், பேறறிவாளன் ஆகியோர் தூக்கு ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அது போல ரத்து செய்யப்படின் உடனே விடுதலை செய்யபட வேண்டும் எனவும் 25 லட்சம் பேர் ஒப்புதலுடன் ஒரு தீர்மானம் போட்டது திமுக.

இது போல அதிமுக எதாவது செய்ததா எனில் இல்லை என்பதே பதில். அது போல “போர் எனில் பொது மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்ற பொன் மொழியை உதிர்த்தவர் இன்றைய முதல்வர்.

அப்போது தலைவர் கலைஞர் பதில் சொன்னார்.... “காலம் பதில் சொல்லும் இவர்களுக்கு”

என்ன அஒரு தீர்க்கதரிசி அவர். இது தேர்தல் காலம். இன்றைக்கு சாமான், நெடுமரம், சைக்கோ போன்றவார்கள் ஜெயா முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பினும் கூட அந்த ஜே சி பி இயந்திரத்தை கைது செய்ய வேண்டும் என்று “முழக்கமிடும்” அளவு காயடிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில்... தேர்தல் “காலம்” என இப்போது வந்து விட்ட இந்த “காலத்தில்”... அங்கே உச்ச நீதிமனறத்தில் ஒரு சிறப்பான தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

காலம் தாழ்ந்து விட்டது கிட்ட தட்ட 24 ஆண்டுகள் தினம் தினம் ஒருவர் தூக்கு கயிறு வாசனையில் இருக்கும் போது காலம் தாழ்த்தியமை என்பது பெரும் கொடுமை! ஒன்று .... என்று தீர்ப்பு சொல்லப்பட்டதோ அன்று அதை ஜனாதிபதி ஆம், இல்லை என சொல்லி நிறை வேற்றி இருக்க வேண்டும். இல்லாவிடில் ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் காலம் தாழ்த்தி உச்ச நீதி மன்ற தீர்ப்பையே கேலிக்குரியதாக செய்து விட்டனர். அதாவது தீர்ப்பில் “ஒரு இருபத்தி நான்கு ஆண்டுகள் சிறை... பின்னர் தூக்கு” என நீதி வழங்கி இருப்பின் அதில் ஒரு கந்தாயம் இருக்கும். ஆனால் இது போல ஜனாதிபதிகள் காலம் தாழ்த்தியது அவர்களுக்கு கொடுத்த தண்டனையை மேலும் நீட்டிப்பதாகவே பொருள் கொள்ளப்படுகின்றது. எனவே இந்த உச்ச நீதி மன்றம் அவர்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்கின்றது. அது போல் அவர்களுக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகின்றது. அது போல இவர்கள் 24 ஆண்டுகாலம் சிறையில் இருந்து விட்ட படியால் இவர்களை விடுதலை செய்வது என்பது மாநில அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. அவர்கள் விரும்பின் விடுதலை “கூட” செய்யாலாம். இதில் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாது!” என சொல்லிவிட்டது!

சபாஷ்! சபாஷ்! சபாஷ்! இங்கே தான் கலைஞர் உள்ளே புகுந்தார். (இதற்கு முன் 48 மணி நேரம் முன்பே தனக்கு முன்னர் ஒரு 25 லட்சம் பேர் இருக்கும் தைரியத்தில் சொல்லிவிட்டார். தூக்கு தண்டனை என்பதே கூடாது. அதிலும் இந்த மூவர் தண்டனை ஏற்புடையது அல்ல என சொல்லி விட்டார். அது போலவே அப்பாடி ரத்து செய்யப்படும் பட்சத்தில் தமிழக அரசு “விடுதலை” செய்ய வேண்டும் என அழுத்தம திருத்தமாக சொல்லி விட்டார்.

இப்போது நான் இங்க கட் பண்ணி அங்க போகிறேன்! ஏதோ இவர்களை “விடுதலை” செய்தது என்பது தமிழினம் மீது இருக்கும் பற்று காரணமாகவா? அல்லது செத்துப்போன “ஈழத்தாய்” பட்டம் ரினிவலுக்காகவா? அல்லது இன்று வாய் மூடி கிடக்கும் சாமான், நெடுமரம், சைக்கோ கும்பல் உன்னை புழக வேண்டும் என்பதற்காகவா???? இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை

இதே ஒரு வாரம் முன்பாக தன் 90 வயது தகப்பன் சாகும் நிலையில் கூட இருக்க வேண்டும் என பரோல் கேட்ட இதே நளினிக்கு இதே தமிழக அரசு நீதிமன்றத்தில் “இவரை வெளியே விட்டால் (அதாவது பரேலில் விட்டால் கூட) தமிழக சட்டம் ஒழுங்கு பாதித்து விடும்” என காரசாரமாக வாதிட்டது. ஆனால் இன்று நீதியரசர் சதாசிவம் கொடுத்த குட்டு தலையில் வலி உண்டாக்கியதா அல்லது ஓட்டுக்காக விடுதலையே செய்தாரா என நடுனிலையாளர்கள் மற்றும் சாமான், நெடுமரம் , சைக்கோ போன்ற ஈழ வியாபாரிகள் நினைத்து பார்க்க வேண்டும். ஆக ஒரு வாரம் முன்பாக நளினியை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் எனில் இந்த ஒரு வாரத்தில் எல்லாம் சரி செய்யப்பட்டு தமிழகம் சட்டம் ஒழுங்கில் சீராகிவிட்டதா எனில் இல்லை.... இல்லை... இதே சென்னையில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கூட ஊரப்பாக்கத்தில் படுகொலை ... போன்ற சங்கதிகள் தினம் தோறும் நடந்து கொண்டு தான் உள்ளது!

எனவே! இது ஜெயாவின் தமிழர் பாசம் இல்லை.... இது சதாசிவம் அய்யா போட்ட கிடுக்கிப்பிடி தான்!
அன்று கலைஞர் சொன்னாரே “காலம் பதில் சொல்லும்” என்று... இது தான் அந்த காலம்! “தேர்தல் காலம்” உனக்கு ஓட்டு விழ எது வேண்டுமானாலும் செய்வாய்!

ஆனாலும் அதற்கும் “கலைஞர்” அவர்களே காரணம் என்பதை சாமான், நெடுமரம், சைக்கோ குரூப்ஸ் உணரட்டும்!

இந்த மூவர் மட்டும் இல்லை. நளினி உள்ளிட்ட அந்த ஏழு பேரின் விடுதலைக்கு கலைஞரே காரணம்!

அரசியல் சதுரங்கத்தில் உனக்கு செக் வைத்த ராஜா “கலைஞர்” மற்றும் தமிழின “யானை” சதாசிவம்” அய்யாவே காரணம்! இன்று நீ தோற்று போனது தான் உண்மை! தமிழர்கள் தான் வெற்றி பெற்றனர்! நீ தோற்று விட்டாய்! உன்னை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்த அவர்களுக்கு என் நன்றிகள்!

February 12, 2014

இணையமும் திமுகவும்!

இணையத்தில் திமுக வளர்ந்த கதையும் கலைஞரின் வேகமும்!!!

ஒரு இயக்கம் வெற்றி பெற வேண்டுமாயின் அதன் கொள்கைகள், கருத்துகள், தாம்
செய்யப்போகும் திட்டங்கள், செய்த திட்டங்கள் என எல்லாம் மக்களிடம் போய்
சேர வேண்டும். அதற்கு மக்கள் புழக்கம் எங்கு அதிகமோ, மக்கள் ரசனை எதில்
நாட்டம் அதிகமோ அந்த வழியே இயக்கமும் சென்று தன் கருத்துகளை அவர்களிடம்
சென்று சேர்ப்பிக்க வேண்டும். அதன் பெயர் தான் "பிரச்சாரம்". இதைத்தான்
திராவிட இயக்கங்கள் ஆரம்பம் முதல் சரியாக செய்து வெற்றிக்கனி பறித்தன.

 1950 களில் ஓரளவு படித்த மக்கள் பத்திரிக்கைகள் படித்தனர். பாமரர்கள்
நாடகம், தெருக்கூத்து பார்த்தனர். இதை புரிந்து கொண்ட திராவிட இயக்கங்கள்
அவர்கள் விரும்பும் அந்த ஊடகங்கள் வழியே தன் கொள்கையை பரப்பியது. படித்த
மக்களை சென்றடைய பத்திரிக்கைகள் நடத்தின. குடியரசு, விடுதலை, திராவிடன்,
திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு,
குயில், இனமுழக்கம், தென்றல், தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு,
மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம்,
முல்லை, நீட்டோலை, புதுவாழ்வு, தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை,
முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி,
திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு, திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு,
பூம்புகார், வெள்ளி வீதி, கனவு, அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு,
முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம், திருவிடம், பூமாலை, சங்கநாதம்,
எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு இப்படியாக தமிழகமெங்கும்
பத்திரிக்கைகள் திராவிடர்களுக்கு இருந்தன. திராவிட கருத்துகளை அமுதம் போல
அள்ளி வழங்கின. படித்தவர்கள் திராவிட இயக்கம் பக்கம் வந்தனர். தம்
மக்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவது முதல் அனைத்தும் மொழி, இனம் சார்ந்து
செயல்படும் வகையில் தங்களை மாற்றிக்கொண்டனர்.

பாமரர்கள் பார்க்கும் தெருக்கூத்து, நாடகங்கள் இவைகளையும் திராவிட
இயங்கங்கள் விட்டு வைக்கவில்லை. அண்ணா, கலைஞர் என இயக்கத்தின் மேல்தட்டு
தலைவர்களே நாடகங்களில் தோன்றி நடித்தனர். மக்களிடம் தங்கள் கொள்கையினை
கொண்டு சேர்த்தனர்.

அதன் பின்னர் அதன் பரிமாண வளர்ச்சியான திரைப்படம்... இதிலே திராவிட இயக்க
முதல் கட்ட தலைவர்கள் தங்கள் எழுத்துகளால் உயிரூட்டினர். அதன் இரண்டாம்
கட்ட தலைவர்கள் அதில் நடித்து மக்களை ஈர்த்தனர்.
"கோவில் கூடாதென்பது அல்ல என் நோக்கம், கோயில் கொடியவர்களின்
கூடாரமாகிவிடக்கூடாது என்பதே என் நோக்கம்" என திராவிட கருத்துகள்
கொப்பளித்தன கலைஞர் வசனத்தில். "அத்தி மரத்தில் கிளையில் காய்க்கும்
காய், வேரில் காய்க்கும் காய் இரண்டுக்கும்  ஒரே சுவை எனில் பிரம்மனுக்கு
தலையில் பிறந்தவன் என சொல்லப்படுபவனுக்கும் காலில் பிறந்தவன் என
சொல்லப்படுபவனுக்கும் வேறு வேறு குணமா இருக்க முடியும்?" என பகுத்தறிவு
வினா திரைப்படம் வாயிலாக வினாத்தொடுத்தார் கலைஞர். மக்கள் உணர்ந்தனர்.
அது போல ஊருக்கு ஊர் , தெருவுக்கு தெரு மேடை போட்டு தங்கள் திராவிட இயக்க
கருத்துகளை கொண்டு சேர்த்தனர். மக்கள் கூட்டம் திரவிட மேடை நோக்கி
நகர்ந்தது.

தமிழகத்தின் சுவர் விளம்பரங்கள் முழுவதும் " இராகுகாலம் பார்ப்போருக்கும்
சாகும் காலம் உண்டு" என பகுத்தறிவு வாங்கியங்கள் பொங்கி பிரவாகமாக
பளிச்சிட்டது. திராவிட இயக்கம் ஆட்சியை பிடித்தது. காலங்கள் மாறின.
பிரச்சாரயுக்தி பரிமாண வளர்ச்சி அடைந்தது. மக்கள் பத்திரிக்கை படிப்பதை
விட, அரங்குகள் சென்று பார்ப்பதை விட தன் வீட்டு கூடத்தில் அமர்ந்து
வசதியாய் உலக நடப்புகளை தெரிந்து கொள்ளும் "தொலைக்காட்சி" வந்தது.

அந்த தொலைக்காட்சியையும் முதலில் பிடித்தது திராவிட இயக்கத்தின் முதல்
தரமான கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் தான். 1991 முதல் 1996 வரையிலான
தமிழகத்தின் இருண்ட ஆட்சியின் அவலங்களை மக்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்து
கொண்டே பார்த்து ஒரு முடிவுக்கு வந்து அதன் பின்னர் திமுகவுக்கு 1996ல்
மீண்டும் ஆட்சியை கொடுத்தது.

ஆக தமிழகத்தின் கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் மாறி வரும் பிரச்சார
உத்திக்கு ஏற்றபடி திமுகவும் தன்னை மாற்றிக்கொண்டு அந்த நவீன
பிரச்சாரத்தில் முதன்மையே பெற்றது. ஆரியர்கள் ஆடிப்போயினர். இந்த கால
கட்டத்தில் தான் "இணையம்" என்ற புதிய நவீன பிரச்சார வடிவம் 2000 ஆண்டு
முதல் பிரபல்யம் ஆனது. அதுவரை அனைத்து பிரச்சார முனைகளிலும் முதன்மை
பெற்ற திமுக இந்த ஒரு விஷயத்தில் அத்தனை ஆர்வம் காட்டவில்லையா அல்லது
என்ன காரணம் என தெரியவில்லை, கொஞ்சம் சுனக்கம் காட்டியது என்பதே உண்மை.
கிடைத்த இடைவெளியில் உள்ளே புகுந்தது ஆரியப்பாம்பு. இணையம் வழியே 2000ம்
ஆண்டுகளில் அமேரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து கொத்த தொடங்கியது.
2001ல் அதன் தாக்கம் மிகப்பெரியதாக வெளியே தெரியவில்லை. புற்று நோய்
கட்டி போல மெல்ல மெல்ல வளரத்தொடங்கியது.

ஆனாலும் திமுகவினர் விடவில்லை. தாமதம் ஆனாலும் விழித்துக்கொண்டு இன்று
ஓடத்தொடங்கி இன்று பல்லாயிரக்கணக்கானோர் இணைய வழி பிரச்சாரத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். 2000ம் ஆண்டுகளில் இணையத்தில் பிரச்சாரம்
மேற்கொண்டவர்கள் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். வளைகுடா
நாடுகளில் பணியாற்றிய "அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்", அமேரிக்கா
வாஷிங்டனில் இருந்து மயிலாடுதுறை சிவா, சிங்கப்பூரில் இருந்து செயல்பட்ட
"உடன்பிறப்பு" என்னும் பெயரில் எழுதிய சம்சுதீன், "கிழுமத்தூர்
எக்ஸ்பிரஸ்" என்னும் பெயரில் எழுதிய பெ.மகேந்திரன், மற்றும் தமிழகத்தில்
இருந்து இயங்கிய லக்கிலூக் என்னும் யுவகிருஷ்ணா, எம்.எம்.அப்துல்லா, டான்
அசோக் என்னும் இளவரசன், கொக்கரக்கோ சௌம்யன், சூர்யா பார்ன் டு
வின்,மெல்வின் பாக்கியநாதன்,  வைரமுத்து, இவர்களுடன் எஸ்.எஸ்.சிவசங்கர்
(இப்போதைய அரியலூர் மாவட்ட செயலர் மற்றும் குன்னம் சட்ட மன்ற தொகுதி
உறுப்பினர் மற்றும் புதுகை மாவட்ட செயலர் பெரியண்ணன் அரசு,
தாமைரைச்செல்வன் எம்.பி,  ஆகிய  அனைவரும் தங்கள் சொந்த வலைப்பூ வைத்து
கொண்டு அந்த ஆரிய பாம்பு கூட்டங்களுக்கு சரிசமமாக போரிட்டனர். ஒரு
மாபெரும் படையை நம் திமுகவின் மேற்கண்ட சிறிய குழு தன்னால் இயன்றவரை
போராடி அடக்கப்பார்த்தது.

குறிப்பாக 2006ல் ஆட்சிக்கு வந்த திமுக கழகத்தை அதன் இலவச வண்ண
தொலைக்காட்சி திட்டத்தை  "அய்யோ தமிழக வருவாய் முழுக்க கருணாநிதி இலவசம்
என்னும் பெயரால் அழித்து வருகின்றார்" என இணையம் முழுக்க கூக்குரலிட்ட
போது அபிஅப்பா என்கிற தொல்காப்பியனின் கட்டுரையில் " புதிதாய் ஒரு வீடு
கட்டினால் வீட்டுக்கு வாசலில் ரோசா செடியும், மல்லிகை செடியும் வைப்பது
போல வண்ணத்தொலைக்கட்சி கொடுக்கும் திட்டம். அதே வீட்டில் பின் பக்க
கொல்லையில் புளிய விதை நடுகின்றானே வீட்டு சொந்தக்காரன், அது அவன் சந்ததி
அந்த வீட்டை பயன் படுத்தும் போது பயன் பட வேண்டி நடப்பட்டது. அது போல
கொள்ளையில் நடும் புளிய விதை  போன்றது தான் சேது சமுத்திர திட்டம். இதை
திமுக  போராடி பெற்றது. வீட்டை அழகு படுத்த ரம்மியமாக்கவே வாசலில் நடும்
பூச்செடி போல வண்ணத்தொலைக்காட்சி திட்டம்" என விளக்கம் கொடுத்தது இணையம்
முழுக்க பிரசித்தமானது.

இப்படியாக ஒரு பெரிய ஆரியப்படைகள்  முன்னதாக இந்த திமுகவின் சிறிய குழு
தன் முழு பலப்பிரயோகமும் காட்டியது. ஆனாலும் திராவிட இயக்கத்தினால் பலன்
பெற்று கணிணி பயின்ற திராவிட இயக்க வழிவந்த புதுவாக்காளர்களே அந்த
ஆரியப்படையின் சூழ்ச்சியல் அவர்கள் செய்த பொய்ப்பிரச்சாரத்தால்
அவர்களுக்கு  கூறிய மந்திர வார்த்தையான "மாற்றம் வேண்டும்" என்பதை நம்பி
ஆரிய ஆட்சியை 2011ல் ஆட்சியில் அமர்த்த வழி வகுக்கும் வகையில் தங்கள் 25
லட்சம் புது வாக்குகளை அள்ளி வழங்கினர்.  பின்னர் தான் திமுக சிந்தனை
கொண்ட இணையம் புழக்கத்தில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டனர்.

இதோ இன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் இணையம் வழி திமுக கொள்கைகளை பரப்பி
வருகின்றனர். ஆரியப்படை திக்குமுக்காடி போய் செய்வதறியாது நிற்கின்றது.
இந்த பத்தாயிரம் பேரில் அபிஅப்பா என்கிற தொல்காப்பியன், டான் அசோக்,
சூர்யா, கொக்கரக்கோ சௌம்யன், பால்ராஜ், ஜே பி பிரகாஷ், திராவிடப்புரட்சி
போன்ற சிலர் கட்டுரையாளர்கள், ஹாங்காங் அன்சாரி, நாகூர் ஜலால் போன்ற
சிலர் (கார்டூனிஸ்ட் போல) போட்டோனிஸ்ட்கள்,  கோகுல், சித்தன்,
ரா.அசோக்,சம்பத்குமார், சரவணகுமார், அருள்பிரகாசம் போன்ற  சிலர்
அண்ணாவைப்போல, கலைஞரைப்போல "பன்ச் டயலாக்" வித்தகர்கள், மரியா அல்போன்ஸ்
பாண்டியன் போன்ற சிலர் நம்மை எதிர்த்து எழுதும் வெகுஜன பத்திரிக்கைகளின்
இணைய தளத்தில் அவர்களுக்கு பதில் சொல்வதையே முழு நேரப்பணியாக செய்து
வருபவர்கள். சிலர் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை ஆராய்ந்து திமுக மீது தவறு
இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வகையில்  செயல்படுபவர்கள்.
இந்த கட்டுரை எழுதும் என்னைப்போல சிலர் திமுகவின் அனைத்து
நிகழ்வுகளுக்கும் சென்று புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு
செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள். நான் இது வரை எடுத்து
வெளியிட்ட புகைப்பட எண்ணிக்கை 50,000 தாண்டி விட்டது.

5 வருடம் முன்பகவே தளபதி இணையம் பக்கம் வந்து கழக செய்திகள், கொள்கைகள்
என வெளியிட்டு நேரிடையாக மக்கள் முன் வந்து விட்டார். இதோ ஒரு வருடம்
முன்பாக கலைஞர் அவர்களும் இணையம் பக்கம் வந்து விட்டார். தன் பேச்சுகள்,
தன் அறிக்கைகள், தன் நேர்காணல்கள் என அனைத்து அதிலே வந்து நேரிடையாக
மக்களை சென்று அடைந்து வருகின்றது. நம் "முரசொலி"கூட யூனிக்கோட் வழி
வந்து இன்று உலகம் முழுக்க "முரசொலி" பட்டொளி வீசிப்பறக்கின்றது.
உலகிலேயே 90 வயது அரசியல்வாதி ஒருவர் ஒரு நவீன உலகின் வெளிப்பாடான
"இணையம்" வழி மக்களை சந்திக்கிறார் எனில் அது நம் தலைவர் கலைஞர் ஒருவர்
மட்டுமே. ஒரே ஒருவர் மட்டுமே. நாம் கொடுத்த இலவச வண்ணத்தொலைக்காட்சி
பெட்டி வழியே "பொய்ப்பிரச்சாரம்" செய்து மக்களை 'மாற்றம் வேண்டும்' என
சொல்லி ஆட்சிக்கு வந்து  ஏமாற்றம் கொடுத்து கொண்டிருக்கும் ஆரிய
ஆட்சிக்கு இன்று அவர்கள் கொடுக்கும் இலவச லேப்டாப் மூலமாக நாம் "இணைய
வழி" உண்மை பிரச்சாரம் செய்து பதிலடி கொடுத்து மீண்டும் திமுகவை
ஆட்சியில் அமர்த்துவோம்.

இன்று 90 வது பிறந்த நாள் நம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு. "மாணவ நேசன்"
என்று தன் கைப்பட எழுதி கையெழுத்து பிரதியாக தன் 13 வயதில் தொடங்கிய
அவரது திராவிடப்பிரச்சாரம் பின்னர் அச்சு பிரதியாகி, நாடக நடிகராகி,
திரைப்பட எழுத்தாளர் ஆகி, மேடைப்பிரச்சரம் என வளர்ந்து, பின்னர் ரேடியோ,
தொலைக்காட்சி என விரிவடைந்து இன்று அவருடைய 90 வது வயதில்
"இணையப்பிரச்சாரம்" என்னும் நிலைக்கு வந்துள்ளது. எதிர்காலத்தில் ஒருவர்
கண் மூடி படுத்து இருந்தால் கூட ஒரு பட்டனை தட்டினால் கண்ணுக்கு முன்னதாக
எழுத்துகள் வரி வடிவிலும் , திரைப்பட வடிவிலும் (விஷூவல்) தெரிவது மாதிரி
ஏதாவது புது அறிவியல் கண்டுபிடிப்பு வரலாம். அது இப்போது இணையத்தில்
இருக்கும் எங்களுக்கு புதிகாக இருக்கலாம். ஆனால் கலைஞருக்கு அதுவும்
பழகும். கண்மூடி படுத்தாலும் கலைஞர் தாக்கம் இருக்கும். அப்போது அனேகமாக
நாங்கள் பேசிக்கொள்வோம் " இது என்ன கலைஞர் பயன்படுத்துவது புதுவித
டெக்னிக்காக இருக்கே, இதை நாம் எப்படி பயன்படுத்துவது" என எங்களுக்குள்
பேசிப்பேசி குழம்பி நாங்கள் அதனுள் செல்லும் போது கலைஞர் அனேகமாக இந்த
நவீன யுகத்தின் அதற்கடுத்த  டெக்னாலஜிக்கு தன் பிரச்சாரத்தை
மாற்றிக்கொண்டு போயிருப்பார். அவரது வேகத்துக்கு நாம் ஈடுகொடுக்க இயலுமா?
அது நடக்கும் விஷயமா? வாழ்க கலைஞர்!வெல்க திமுக!