பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label அதிமுக அராஜகம். Show all posts
Showing posts with label அதிமுக அராஜகம். Show all posts

October 9, 2012

"பிள்ளையார் "பிடிக்க அது "பெரியார்" ஆனது!




அக்டோபர் முதல் தேதி 2012 அன்று  அதிமுக "மெஜாரிட்டி" அரசின் அடக்குமுறைகளை , அரசின் மக்கள் நலம் கவனிக்கப்படாத நிலைகள்... இவைகள் எல்லாம் குறித்து விவாதிக்க  திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞரால் கூட்டப்பட்டது. கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்திக்கின்றார் கலைஞர். அதிமுக அரசின் செயல்பாடுகளை மற்றும் செயல்படாத ....அதனால் மக்கள் படும் பாடுகளை எல்லாம் கண்டித்து தமிழக மாவட்ட தலைநகரங்களில் கருப்பு உடை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறும், சென்னையில்  ஆட்சியர் அலுவலகம் முதல் கலங்கரை விளக்கம் வரை தன் தலைமையிலேயே மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் "அய்யா நீங்கள்  சென்னையில்  மனித சங்கிலி நடத்த இருக்கும் சாலையில் உங்கள் பெயர் தாங்கிய கல்வெட்டை அகற்றி விட்டு அங்கே ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதே? அதனால் அந்த சாலையில் நீங்கள் மனித சங்கிலி நடத்தினால் உங்கள் தொண்டர்கள் அதை பார்த்து உணர்சி வசப்பட்டு அதனால் அசம்பாவிதம் நடக்கும் என நினைத்து போலீசார் அனுமதி தருவார்களா? என கேட்கின்றார். மைக் பிரச்சனையால் அவர் என்ன கேட்கின்றார் என தலைவருக்கு சரியாக காதில் விழாமல் மீண்டும் கேட்கிறார். பத்திரிக்கையாளர் மீண்டும் இதை சொல்ல கலைஞர் அதற்கு "இதல்லாம் ஒரு பிரச்சனை இல்லை" என ஒற்றை வரியில் பதிலளித்து விட்டு அடுத்த கேள்விக்கு போகின்றார்.

நன்றாக கவனித்து பாருங்கள். இந்த பேட்டி ஒரு நேரலை நிகழ்சி. இதிலே ஒரு முறைக்கு இரு முறை அந்த பத்திரிக்கையாளர் இப்படி ஒரு கேள்வி கேட்கின்றார். அவர் கேள்வியில் திமுக தொண்டர்களை இந்த சாதா கல்வெட்டு பிரச்சனையால் அசம்பாவிதம் நடக்க வேண்டும் என தொண்டர்களை "தூண்டி" விடுகின்றாரா? அல்லது காவல் துறைக்கும் அரசுக்கும் மனித சங்கிலி நடைபெறாமல் தடுக்க வேண்டி காரணம் சொல்லி கொடுக்கின்றாரா என புரியவில்லை. இது தான் இப்போதைய "நான்காவது தூணின்" நிலைமை தமிழகத்தில். உணருங்கள் தோழர்களே!

எது எப்படியோ அந்த பத்திரிக்கையாளரின் ஆசை நிறைவேறுகின்றது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கும் மனித சங்கிலி நடத்தக்கூடாது என காவல்துறை அனுமதி மறுக்கின்றது. தமிழகத்தில் ஜெயா ஆட்சி அமைந்த மே 13 - 2011 முதல் திமுகவும் சளைக்காமல் நீதிமன்றம் செல்வதும் பின்னர் நீதிமன்றங்கள் அரசின் தலையில் சுத்தியால் அடிப்பதும் வழக்கம் தான் எனினும் இந்த முறை தலைவர் கலைஞர் எடுத்த முடிவு அசாதாரமான ராஜதந்திர முடிவு. மூன்றாம் தேதி இரவு வரை காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை.

நான்காம் தேதி காலை கலைஞர் பத்து மணிக்கு அறிவாலயம் வரும் போது அரசின் தலையில் இப்படி ஒரு இடி இறங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. வரும் போதே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சீருடை பளபளக்க வருகின்றார். கருப்பு சட்டை, அதன் மேல் தன்மான வெள்ளை துண்டு அணிந்து வருகின்றார். பார்ப்பவர்கள் பதைபதைத்து போகின்றனர். "என்ன இது கோலம் அய்யா?" என அழவில்லை. "ஆகாஇதுதானய்யா நாங்கள் எதிர்பார்த்த  உங்கள் உருவம்" என ஆனந்த கூத்தாடுகின்றனர். அறிவாலயத்தில் கலைஞரை வரவேற்ற தளபதி மற்றும் தளபதியின் தளபதிகள் மேயர் மா.சு, தோழர் ஜின்னா, மாவட்ட செயலர் ஜெ. அன்பழகன் அண்ணன் ஆகியோர் அரக்க பரக்க ஓடுகின்றனர். எங்கிருந்தோ கிடைத்த கடையில் இருந்து எத்தனை கருப்பு சட்டைகள் கிடைக்கின்றனதோ அத்தனையும் வாங்கி வந்து நான் முந்தி நீ முந்தி என உடுத்துகின்றனர்.

தமிழகம் முழுக்க தகவல் சொல்கின்றனர். எஸ். எம் எஸ் பறக்கின்றது. ஆண்களும் பெண்களும் கருப்பு உடை நோக்கி விரைகின்றனர். அறிவாலயம் முழுக்க கூட்டம் வழிந்து நிரம்புகின்றது. அறிவாலய மாடியில் இயங்கும் "கலைஞர் தொலைக்காட்சி" நிலைய செய்திப்பிரிவினர் ஓடிவருகின்றனர். பி டி ஐ, யு என் ஐ செய்தி நிறுவனத்தினருக்கு செய்தி போகின்றது. அத்தனை இந்திய தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் அலுவலகங்களின் பேக்ஸ் மற்றும் தொலை பேசிகள் இந்த செய்தியை அலறுகின்றன. அனைத்து ஊடகங்களும் அறிவாலயத்தில் முற்றுகை இட தொடங்கின. அவசர கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்படுகின்றது. நாளை மனித சங்கிலியை அனுமதி கொடுக்காவிடினும் நடத்தி சிறை செல்லலாமா என தலைமைக்கு கேட்டுக்கொண்டு இருந்த அரியலூர் மாவட்டம், புதுகை மாவட்டம், காஞ்சி மாவட்ட செயலர்கள் தலைமையை தொடர்பு கொண்டு "இன்றே நாங்களும்கருப்பு உடை அணிந்து விட்டோம், அடுத்து என்ன?" என கேள்வியால் துளைக்க தலைமை நிலைய செயலர் சதாசிவம் அவர்கள் "இருங்க மாவட்டம்...தலைவர் இதோ ப்ரஸ் மீட்க்கு ஏற்பாடு செய்ய சொல்லிட்டார்... எங்களுக்கும் எதும் புரியலை" என சொல்லிக்கொண்டே இருந்தார்.

ப்ரஸ்மீட் ஆரம்பம் ஆனது. "மனித சங்கிலி நாளை நடக்காது. ஆனால் அதற்கு பதிலாக திமுகவினர் கருப்பு உடை அணிந்து அதிமுக அரசின் அராஜக போக்கினை துண்டு பிரசுரம் மூலமாக மாவட்டத்துக்கு மாவட்டம், நகரத்துக்கு நகரம், ஒன்றியத்துக்கு ஒன்றியம், பேரூருக்கு பேரூர், வார்டுக்கு வார்டு ,தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப்பர்" என சொல்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் கேட்கின்றார்... "அய்யா இதற்கு முன்னர் கருப்பு சட்டை போட்ட நிகழ்வு தமிழகத்தில் எப்போது என நியாபகம் உள்ளதா?" ... அதாவது ஒரு கட்டத்தில் எம் ஜி ஆர் அவர்கள் தன் மந்திரிசகாக்களுடன் கருப்பு சட்டை சிலநாட்கள் அணிந்தார். அதைத்தான் அந்த பத்திரிக்கையாலர் கேட்கின்றார். அதற்கு தலைவர் அவர்கள் " தமிழகத்தில் நீங்கள் நினைக்கும் அந்த நிகழ்வுக்கு முன்பே கருப்பு சட்டை போட்டவன் இந்த கருணாநிதி" என்கிறார். கேட்டவர் வாயடைத்து போனார். அவரிடமேவா? கருப்பு சட்டை பகுத்தறிவு பல்கலைகழக முதல் பேட்ஜ் மற்றும் முதல் மாணவரிடமேவாஅந்த கேள்வி?

கருப்பு உடையில் தலைவர் கலைஞர் அய்யா பெரியார் போல இருக்கிறார், கருப்பு உடையில் தலைவர் ஆசிரியருக்கு ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல இருக்கிறார் என்றெல்லாம் அறிவாலய கூட்டம் சிலாகிக்கின்றது.

பெரியார் திடல் தோழர்கள் ஆனந்த கூத்தாடுகின்றனர். மகிழ்வின் உச்சத்தில் அமிழ்கிறார் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள். சுபவீ அய்யா கருப்பு உடை அணிந்து அறிவாலயம் வருகின்றார். எங்கு திரும்பினும் கருப்பு உடைகள். நான் மயிலாடுதுறை திரும்ப வேண்டி பேருந்தில் வரும் சமயம் ஏகப்பட்ட எஸ். எம். எஸ்கள் என என் இன்பாக்ஸ் நிரம்பி வழிகின்றது.தலைவர் கலைஞரின் பேஸ்புக்ல் பார்த்தேன். "நான் இன்றைக்கே கருப்பு உடை அணிந்து விட்டேனே" என சொல்லி சிரிக்கின்றார். கடலூர்  வந்த போது எடுத்து பார்த்தேன். அதன் பின்னர் என் வெள்ளை சட்டை எனக்கு உறுத்தியது. ஓடிப்போய் ஒரு கடையில் கருப்பு சட்டை கேட்டேன். "இல்லீங்க போங்க" என கோவப்பட்ட கடைக்காரரிடம் ஏனய்யா கோவம் என கேட்டமைக்கு " பல வருஷமா விற்காம இருந்த கருப்பு சட்டை எல்லாம் இன்றைக்கு  காலை முதல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து விட்டேன். கருப்பு துணி கூட ஒரு பண்டல் இல்லாம விற்பனை ஆகிப்போச்சு. இப்ப வந்து கேக்குறீக்களே" என அங்கலாய்த்தார்.

மயிலாடுதுறை வரும் முன்னர் என் அக்கா பையன் போன் செய்தான். "மாமா நான் மகாபலிபுரம் வந்தேன். இங்க ஒரே கருப்பு சட்டையா இருக்கு. என்ன எதுனா பிரச்சனையா?" என கேட்டான். "ஆமாம் தமிழகம் முழுக்க பிரச்சனை தான். மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை... அதனால் தமிழகம் முழுக்க இனி இருண்ட காலம் என்பதை காட்டத்தான் இந்த கருப்பு சட்டை" என்றேன். சிறிது நேரம் கழித்து அவனே போன் செய்தான். "மாமா இங்க ஏன் இத்தனை கருப்பு சட்டை என கேட்ட ஒரு ஆங்கிலேயரிடம் ஒரு கருப்பு சட்டைக்காரர் 'ஹியர் இன் தமிழ்நாடு.. நோ எலக்ட்ரிசிட்டி, நோ வாட்டர், நோ அக்ரிகல்சர், நோ லா அண்டு ஆர்டர், ஃபுல் ஆஃப் தெஃப்ட் அண்டு ராபரி பட் ஒன்லி ,அரஸ்ட் ஆஃப் ஆப்போசிட் பார்டீஸ்.. ஸோ ஒன்லி ப்ளாக் ட்ரஸ்" என சொன்னாரு. அவங்களும் அதை கேட்டு கிட்டு அதையே போன்ல யார் கிட்டயோ சொன்னாங்க" என சொன்னான்.

மயிலாடுதுறைக்கு வந்தேன். கடைகளில் "இங்கே கருப்பு சட்டை மற்றும் கருப்பு துணி இருப்பு இல்லை" என்னும் அறிவிப்பு பலகைகள் துணிக்கடைகள் வாசல் தோரும் தொங்கக்கண்டேன்.

ஆக ஒரு நாள் கூத்தாக முடிந்து இருக்க வேண்டிய மனிதசங்கிலியை இப்படியாக உலகம் முழுக்க தெரியவைத்தது ஜெயாவின் ஆலோசகர்கள் என்னும் கும்பல்கள் தான். மூளைக்காரர்களாம் இவர்கள்:-))

இந்த மூளைக்காரர்கள்  செய்த லீலைகளின் பயன்கள்,

 1. மஞ்சள் துண்டு மகான் என  இனி  கலைஞரை கேலியும் கிண்டலும் செய்ய இயலாவண்ணம் பகுத்தறிவு சீருடைக்கு கொண்டு வந்து ஒரு இனத்தையே தட்டி எழுப்பியது.

2. திமுகவினர் அனைவரும் கருப்பு உடை அணிவதால் ஒரு ரயில் பெட்டியிலோ, ஒரு பேருந்திலோ அனைவரும் இவன் நம்ம இனத்தான் என எளிதில் அடையாளம் காண்பது.அதன் காரணமாய் ஒற்றுமை ஓங்குவது .


3.சுனக்கமாய் போனதாய் சொன்ன பெரியாரியல் கொள்கைகள் ஒரே நாளில் வீறு கொண்டு எழுந்தது.

 4. ஒரே நாளில் முடியக்கூடிய மனித சங்கிலி போராட்டத்தை விட பல மடங்கு பெரிதாக்கி சாதாரண நடுநிலையாளர்களும் ஏன் இத்தனை மக்கள் கருப்பு சட்டை போடுகின்றனர் என கேள்வி கேட்டு அதற்கு கருப்பு சட்டைகாரர்கள் பதிலுக்கு துண்டு பிரசுரம் செய்வதால் கடைக்கோடி வாக்காளனுக்கும் அரசின் அவலட்சனம் தெரிவது.

பொதுவாக "பிள்ளையார் பிடிக்க குரங்கானது" என சொல்வார்கள். ஆனால் அந்த மூளைக்காரர்கள் (???) "பிள்ளையார் "பிடிக்க அது "பெரியார்" ஆனது!சூரியனே கருப்பு சட்டை போட்டபின் சுட்டெரிக்கும் நெருப்பென்ன, சுழண்டு அடிக்கும் காற்றென்ன... கருப்பு சட்டை அணிந்திடுவோம். இனமானம் காத்திடுவோம்!

January 7, 2012

இவ்விடம் மாட்டுக்கறி பிரியாணி கிடைக்கும்!!!


இன்று காலை வெளிவந்த நக்கீரனில் (எங்கே வெளிவந்தது, அதான் காலை ஆறு மணிக்கு எல்லாம் எல்லா ஊர் அதிமுகவினருக்கும் மேலிடத்தில் இருந்து போன் வந்து அவர்கள் கத்தை கத்தையாக பிடுங்கி எரித்து விட்டனரே) ஜெயா மாட்டுகறி சாப்பிடுவார் என்னும் விஷயம் பற்றி அவர்கள் எழுதப்போக இப்போது பிரச்சனை நக்கீரனை அடித்தது சரியா தவறா என்பது போய் மாட்டுக்கறி சாப்பிடுவது சரியா தவறா என்னும் "கொள்கை" பிரச்சனைக்கு தாவி விட்டு நக்கீரனை அடித்தது மறைந்து போய்விட்டது. சபாஷ்! நம்ம மக்கள் பலவீனமே அது தானே! சில சமயம் பிரச்சனை திசை திருப்பப்படும். சில சமயம் பிரச்சனைகள் தானாகவே ட்ராக் மாறி போய் வேகமெடுக்கும். இப்பவும் இப்படித்தான் நக்கீரனை அடித்தது அதிமுக அரசின் அராஜகம் என்பதை மக்கள் மறந்து போய் மாட்டுக்கறி பிரியாணிக்கு வந்து கெக்கேபிக்கேன்னு சிரிக்க ஆரம்பித்து விட்டது.

ஒரு பத்திரிக்கை தவறாக எழுதுகின்றது என நினைக்கும் பட்சத்தில் அதை கூண்டில் ஏற்றுங்கள். அதைவிடுத்து அராஜகம் கையில் எடுப்பது தவறு என பொதுவான குரல் எழும்பிய போது அப்படி குரல் எழுப்பியவன் நடுநிலைவாதியாக இருந்தாலும் கூட அவன் திமுககாரனாக சித்தரித்து "நீங்க மட்டும் தினகரனை தாக்கவில்லையா" என அரைவேக்காடு கும்பல் பிதற்ற ஆரம்பித்தது. தம்பி அப்துல்லா அதற்கு அழகாய் "நக்கீரன் அலுவலக தாக்குதலுக்கு கண்டனம் சொன்னா உடனே ஏன் நீங்க மட்டும் தினகரனைத் தாக்கலையோன்னு பதிலுக்கு கூவுறானுங்க. அடகூமுட்டைகளா, தினகரன் திமுக பத்திரிக்கை, தாக்கினவனும் திமுககாரன். ஆட்சியை விமர்சிச்சு செய்தி வந்ததுக்காகவும் தாக்கலை. அது உட்கட்சி பூசல்தொடர்புடையது. ஒரு வீட்டுக்குள்ள இருந்துகிட்டே கிர்மினல் பண்றானேன்னு அண்ணங்காரன் தம்பியை ரெண்டு அறை அறையிறதில்லையா அது மாதிரி விசயம் திமுககாரன் தினகரனை எரிச்சது. ஏன்டா நீ அடுத்த வீட்டுக்காரனை அடிச்சன்னு கேட்டா நீ ஏன்டா உன் வீட்டுக்குள்ளயே அடுச்சிகிறனு கேக்குறானுங்க அறிவாளிங்க!'' என அழகாய் பதில் சொல்லியும் கேட்பார் இல்லை.

சில நடுநிலைவாதிகள் என்னும் போர்வை போத்தியவர்கள் 'அவா செஞ்சதும் தப்பு, இவா செஞ்சதும் தப்பு" என அருமையான விளக்கம் கொடுத்து விட்டு கடையை கல்லா கட்டிவிட்டு கிளம்பிவிட்டனர். ஒரிஜினல் அக்மார்க் அதிமுகவினரோ "அம்மாவைப்போய் மாட்டுக்கறி சாப்பிடுவாங்கன்னு சொல்லும் அந்த அயோக்கியன் கோபாலை கொன்னு போடனும்" என திருவாய் மலர்ந்துள்ளனர். அதற்கு தம்பி அப்துல்லாவோ "ஜெயலலிதா மாட்டுக்கறி உண்பர் என்று எழுதியது பெரிய தவறாம். அதனால் தாக்குதல் நடத்துவது சரியாம். அதிலும் இன்னும் சிலர் எழுதிய ஆளைச் சரியாக கண்டுபிடித்து உதைக்க வேண்டும் என்று கூப்பாடு வேறு. ஆமாம் மாட்டுக்கறி உண்பது என்பது என்ன அவ்வளவு கேவலமா? மலத்தை உண்பதுதான் நான் அறிந்தவரையில் கேவலம். மற்ற எதுவும் அவரவர் சுயவிருப்பம். அதில் எந்தப் பெருமையும் இல்லை சிறுமையும் இல்லை. இந்த நாட்டின் கோடான கோடி தாழ்தப்பட்ட மக்களின் புலால் ஆசைக்கு ஒரே தீர்வாக இருப்பது இன்றும் மாட்டுக்கறி உணவுதான். நான் அறிந்தவரையில் செல்வி.ஜெயலலிதா அவர்கள் திரைப்படங்க்களில் நடித்த காலத்தில் எந்த ஒளிவுமறைவுமின்றி ஷூட்டிங்களில் புலால் உணவை உண்டவர். அதைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் இன்றும் ஆயிரம்பேர் உண்டு. அந்த அம்மாவே சும்மா இருக்க அல்லக்கை அடிவருடிகளின் ஆட்டம் ஓவர்'' என காட்டமாக பதில் சொல்லி இருக்கின்றார். நல்ல பதில் தான்.

அதிமுகவினர் மற்றும் நடுநிலைவாதிகள் போர்வை போத்திய சிலர் "அம்மா மாட்டுக்கறி சாப்பிட்டாங்கன்னு அவதூறு கிளப்பிய நக்கீரன் செயல் மன்னிக்க முடியாத குற்றம்" என வாதிட அதற்கு தோழர் ஜே பி பிரகாஷ் அருமையாக ஒரு "டங் புல்லிங்" கேள்வி கேட்கிறார். "மாட்டுக்கறி தின்னும் மாமி என்று எழுதிய நக்கீரனை தாக்கியது சரி என்றால், கருணாநிதி குடும்பத்தை பற்றியும் , கனிமொழி , ராசா போன்றவர்களை குறித்து
இல்லாததை பொல்லாததை , ஆபாசமாக, விரசமாக தொடர்ந்து எழுத்தும் பூணுல் பத்திரிகைகளுக்கு என்ன தண்டனை...." .... சரியாகத்தான் இருக்கு இதும். நல்ல கேள்வி தான். ஆனால் பதில் வந்தபாடில்லை.

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் அதிமுகவை சேர்ந்த பொன்னையன் ஒரு அதிரடி அறிக்கை வெளியிடுகின்றார். அது என்னான்னா "ஜெயலலிதா, அவரது வீட்டிலேயே கொள்கை ரீதியாக ஒருகாலத்திலும் இதை (Beef) அனுமதிப்பதே இல்லை'' அடடே அருமையான அறிக்கையாக இருக்கே, மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது அதிமுகவின் கொள்கையா அல்லது ஜெயா அம்மையாரின் வீட்டு கொள்கையா என புரியவில்லை. ஆனால் அதற்கு தோழர் ஜே பி பிரகாஷ் ஒரு சூடான பதில் கொடுக்கின்றார். அது என்னான்னா "இதுல என்ன கொள்கை சம்மந்தபட்டது ????

நேரு பிரதமராய் இருந்தபோது நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை கொண்டுவர கோரி பார்பன சனாதனிகள் போராட்டம் நடத்தினர்...காமராஜர் இருந்த டெல்லி வீட்டையும் கொளுத்தினர்..அப்போது இந்த போராட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் இருந்து மட்டும்தான் எதிர்ப்பு குரல் எழுந்தது....அந்த குரல் திராவிட இயக்க பிதாமகன் தந்தை பெரியாருடையது....அப்போது அவர் அறிவித்த போராட்டம் தான் "மாட்டு கறி உண்ணும்" போராட்டம்....அனைத்து இடங்களிலும் மாட்டுக்கறி பிரியாணியும், மாட்டுக்கறி சூப்பும், பொது இடங்களில் சமைத்து வேண்டுவோர்க்கு அளிக்கப்பட்டது...அந்த போராட்டத்தின் எதிரொலியாக, வட நாட்டு சனாதனிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது....அனால் பொன்னையன் போன்றோர் இப்போது "வேறு" ஒரு கொள்கையை பேசுகின்றனர்"" இப்படியாக தோழர் பிரகாஷ் போட்டு கிழிச்சு எடுக்கின்றார். பொன்னையன் வாயை மூடிகிட்டு பேசாம இருந்து தொலைச்சு இருக்கலாமோ?

இதன் நடுவே நக்கீரனை தாக்கிய விஷயத்தை அம்போன்னு விட்டு விட்டு பிரச்சனை முழுவதுமாக மாட்டுக்கறிக்கு வந்து விடுகின்றது. விந்தைமனிதன் ராஜாராமன் என்னும் தோழர் மாட்டுக்கறியின் ஜாதகம் எல்லாம் தூசி தட்டி கட்டம் எல்லாம் போட்டு சோழி உருட்டி விளையாடிவிட்டார். அது என்னான்னா \\ பிராமணர்கள் மாட்டுக்கறி உண்பது இழிவான செயல் என்ற கருத்துருவாக்கம் எப்போதிருந்து வந்தது தெரியுமா?வேதகாலத்தில் மாட்டுக்கறி உண்பது இயல்பாகவும், மதிக்கத் தக்க ஒன்றாகவுமே இருந்து வந்திருக்கின்றது. சமைக்க உகந்த மாடு எத்தனை பற்கள், எத்தனை சுழிகளோடு இருக்க வேண்டும்.. மாட்டை எப்படி அறுத்துப் பங்கு வைக்கவேண்டும், அக்னிதேவன் உள்ளிட்ட அதிதேவதைகளுக்கு எந்தப் பாகத்தில் இருந்து கறியெடுத்து அவிர்ப்பாகம் கொடுக்கப்படவேண்டும், அவிர்ப்பாகம் கொடுக்கும்போது எந்தெந்த மந்திரங்களையெல்லாம் உச்சாடனம் செய்யவேண்டும் என்றெல்லாம் மிகத்தெளிவாக எழுதிவைத்து, மாட்டுக்கறி உண்பதை சனாதனத்தினர் கொண்டாட்டமாகவே செய்திருக்கின்றனர். பின்னர் உயிர்க்கொல்லாமையை வலியுறுத்தி வளர்ந்த சமண, பௌத்த மதங்களின் போட்டியைச் சமாளித்துத் தாக்குப்பிடிக்கவே சனாதன இந்து மதமும் உயிர்க்கொல்லாமைத் தத்துவத்தினைக் கடைப்பிடிக்கத் துவங்கியது \\ சபாஷ்!

அப்போது தான் தோழர் வினி ஷர்பனா ஒரு புது கோணத்தில் இந்த பிரச்சனையை அனுகுகின்றார். அது என்னான்னா ஜெயா அசைவம் சாப்பிடுபவர் என நக்கீரன் சொல்லியிருந்தா கோவிச்சுகிட்டு இருக்க மாட்டார், ஆனா பொதுவாக விலை குறைவு என்னும் காரணத்தால் ஏழ்மை நிலையில் இருக்கும் தாழத்தப்பட்டவர்கள் சாப்பிடும் ஒரு உணவை தான் உண்டதாக சொல்லி தன்னை அவமானம் செய்ததாக ஜெயா நினைத்து இப்படி காண்டு ஆகி நக்கீரனை அடிச்சு துவைக்க சொல்லிட்டார்" என அதிரடியாய் போட்டு தாக்க...

ப்யூர் இந்துத்வாவாதிகள் "அது ஒரு தெய்வம் அதை கொல்லலாமா"என கேட்க "அப்படின்னா முருகன் தமிழ்கடவுள் கையில் இருக்கும் சேவல் கோழியை கொல்லலாமா? என மடக்க ஒரே அதகளம் இன்றைக்கு நம் இணையம் பக்கம் முழுக்க முழுக்க.

நிற்க..... ஒரு விஷயம் மட்டும் தெளிவு. அம்மையார் நக்கீரனை அடிச்சது என்பது போய் பிரச்சனை மாட்டுக்கறிக்கு வந்து நிற்கின்றது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அதிமுகவினரோ, ஆதிக்க சக்திகளோ பத்திரிக்கை தணிக்கை வேண்டும் என்ற குரல் மட்டும் எழுப்பவே இல்லை. ஏன்னா திமுக, ஸ்பெக்ர்டம், 2ஜி, கனிமொழி, ராசா என அவர்கள் இஷ்டத்துக்கு ஆட்டம் போட முடியாமல் போய்விடும் அபாயம் அவர்களுக்கு இதனால் ஏற்படுமே என்கிற பயம் தான். அப்படி அவர்கள் போட்ட ஆட்டத்தினால் தான் இன்று அதிமுக ஆட்சிகட்டிலில் பப்பரக்கான்னு படுத்து கிடக்கு. அதை இழக்க விரும்ப மாட்டார்கள் அவர்கள். அதே போல மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு என கோஷமிடும் இந்துத்வாக்கள் "மனித கறி" சாப்பிட்ட மோடிகளை மறந்தும் கூட இந்த விவாதத்துக்கு கொண்டு வரவில்லை. ஏன்னா மட்டுக்கறி மட்டும் கூடாது ஆனால், சிறுபான்மையினர் கறி என்பது அவர்கள் உயிர் வாழ தேவையான உணவு. அப்படித்தானே? என்ன நடக்குது இந்த நாட்டில்?

ஆனால் இந்த விவாதங்களில் எல்லோருமே ஒன்றை மட்டும் மறைக்க விரும்பவில்லை. அதிமுக தான் இந்த அராஜகத்தை நடத்தியது. அதும் தலைமை சொல்லித்தான் இது நடந்தது என்பதை எல்லோரும் ஒத்துகொள்கின்றனர். இதற்கு உண்மையான நடுநிலைவாதிகள் பதில் என்ன? நிலை என்ன? எப்போதும் போல வாய் மூடி மௌனகுருவாக இருக்க போகின்றார்களா? எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு பட்டனை அழுத்தி பதில் சொல்ல போகின்றார்களா?