March 9, 2014
சில்வேனியா குண்டலகேசி என்னும் அழகி!
அவள் பெயர் சில்வேனியா குண்டலகேசி! என் வீட்டுக்கு பின்பக்கம் தான் எங்கியோ அவள் இருப்பிடம். என் வீட்டு வழியே தான் காலை ஐந்து மணி முதல் ஆறுக்குள் போவாள். பின்னர் மாலை அதே போல ஐந்துக்கு மேல் ஆறுக்குள் திரும்புவா. சரி வீட்டு வாசல் வழி போவான்னா... அதுவும் இல்லை. என் வீட்டில் கொல்லை பக்க மதில் வழியே நுழைந்து பின்னர் முன் வாசல் கேட் வழியே சாலையை தொட்டு கடந்து தான் போவாள்.ஷார்ட் கட்?? அவள் அழகுன்னா அழகு அத்தனை ஒரு அழகு. கருப்பும், ப்ரவுனும் சேர்ந்த இந்திய அழகிகள் கலர். சும்மா வழ வழன்னு வாழைத்தண்டு..... வெயிட்.. வெயிட்... ஜொள்ளர்ஸ் அஸோசியேஷன் தோழர்ஸ்... இது வேற கதை.
அந்த சில்வேனியா குண்டலகேசி என்பது ஒரு பாம்பு தான்.(அந்த பெயரை நாங்கள் வைத்தமைக்கு விருமாண்டி என்ன கேஸ் போடாபோகிறாரா என்ன? அவர் மீது யாரும் கேஸ் போடாமல் இருந்தா சரி தான்) சுமார் ஒரு ட்யூப்லைட்டை விட கொஞ்சம நீளம் அதிகம். அதே போல மொத்தம் எனில் நல்ல முத்தின புடலங்காய் சைஸ். லேடி பாம்பு. (யார்ரா அது லேடின்னாலே பாம்பு தானேன்னு கொரல் கொடுக்குறது.... அதும் நேத்தி தான் வுமன்ஸ்டே வேற..கீப் கொய்ட்).. சரி விஷயத்துக்கு வருவோம். அந்த சில்வேனியா அப்படியாக என் வீட்டு வழியே காலை போய் மாலை திரும்புவதை என் வீட்டில் ஆரம்பத்தில் ஒரு வித அதிசயமாகவும், அவள் சின்சியாரிட்டி கண்டு ஆச்சர்யமாகவும், நிரம்ப பீதியுடனும் சிலாகித்து கொண்டிருந்தது போக இப்போதேல்லாம் ஒரு நாள் வரவில்லை எனில் “என்னாச்சி சில்வேனியாவுக்கு?” என்று ஒருவரை ஒருவர் “ நீ பாத்தியா அவளை” “ நீ பாத்தியா அவளை”ன்னு கேட்டுக்கொண்டும்... “ என்னங்க! இது ஆடிமாசம்ல... ஒரு வேளை அவள் ஆஃபீசில் ஆடி’ட்டிங் எதுனா இருக்கும்.இருட்டுக்கு மின்னாடியே போயிட்டு இருட்டினதும் வர்ரா” போலிருக்கு என சுயவிளக்கம் சொல்லிக்கொண்டும்... ஆக சில்வேனியா இல்லாத நாட்கள் எங்களுக்கு வெறுமை சூழ்ந்த நாட்கள் ஆகிவிடும் நிலைக்கு ஆகிவிட்டிருந்தோம்.
இப்படி சுமூகமாக போய்க்கொண்டு இருந்த போது தான் ஒரு நாள் மாலை கவனித்தேன். சில்வேனியாவுக்கு முகம் வாடிப்போய் மெதுவாய் களைப்பாய் ஊர்ந்து வந்தது.வயிற்று பக்கம் கொஞ்சம் பெரிதாய் இருந்தது. அடடே என்னாச்சின்னு தெரியலையே என என் மனைவியை அழைத்து “ நாடி” பார்த்து எதுனா “விஷேஷமாக” இருக்குமோ என பார்க்க சொல்லலாம் என நினைத்த போதே என் மனைவியும் வர “அடடே சில்வேனியா மாசமா இருக்குது போலிருக்குங்க. கொஞ்சம் பால் எடுத்து வந்து ஊத்துங்க” என்றார் என் மனைவி. “ஏன் எதுக்கு? அது கிட்டத்துல போய் அதுக்கு பால் ஊத்தினா, அடுத்த நாள் எனக்கு பால் ஊத்திடலாம்னு ஆசையா? என்றேன். என் பயம் எனக்கு!
அய்யய்யோ! சின்னமாரியம்மன் கோவில் பக்கம் தான் அது ஆஃபீஸ் போகும். அங்க நிறைய நல்ல பாம்பு (ஆண்) கிடக்கு. ஒன்னு கெடக்கு ஒன்னு ஆகியிருக்குமோ? அடடே விஷயம் வெளியே தெரிஞ்சா நாலு பாம்பு நாலு விதமா பேசுமே என்னும் கவலை எனக்கு. இதை பத்தி எல்லாம் சில்வேனியா கவலைப்படவில்லை. அடுத்த அடுத்த நாளும் சின்ன மாரியம்மன் கோவில் பக்கம் ஆஃபீஸ் போவதை தவிர்க்கவில்லை. சரி எதுனா “லிவிங் டு கெதர்”ஆக இருக்கும்... நமக்கென்ன என விட்டு விட்டேன்.
ஒரு வாரம் முன்பாக மிகவும் மெதுவாக ஆஃபீஸில் இருந்து மிகவும் களைத்துப்போய் வந்தது. இப்போது கழுத்து முதல் கிட்ட தட்ட வால் வரையிலும் பருத்து போய் இருந்தது. அடடே... ஸ்கேன் எதும் எடுத்துச்சா? தெரியலையே? என்னிக்கு டேட் இருக்கும்? அந்த பாழாய் போன ஆஃபீஸில் மெட்டர்னிட்டி லீவ் எதும் கிடையாதா? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இந்த நேரத்திலும் சில்வேனியாவை வேலைக்கு அனுப்பும் அதன் குடும்பத்தின் மீது கடுப்பாய் வந்தது. ஒருவேளை சில்வேனியா வீட்டில் ஒரு கிழவி மட்டும் தான் துணைக்கு இருக்கனும். அப்பா அம்மா இல்லாத பெண் போலிருக்கு. இவள் சம்பாதிச்சு தான் கிழவிக்கும் பால், முட்டை ஊத்தனும் போல. இப்படித்தான் ஒரு பாலகுமாரன் கதையில் ஒரு பொண்ணு. சிவில் இஞினியரிங் படிச்சு வேலைக்கு போவா. அவ வீட்டில் ஒரு கிழவி. அந்த பெண் ஆஃபீசில் ஒரு கிழவனோடு லவ்ஸ் ஆகிடும். ஒரு நாள் வேலைக்கு போகும் போது அந்த கிழவி இவளை பார்த்து “ஆண்டவன் உன் பக்கம் எப்பதான் கண் திறப்பானோ?” என்று சொல்லும் போது அந்த பெண் நினைத்துக்கொள்வாள்...”ஏற்கனவே நாலைஞ்சு தடவை தொறந்துட்டார்”ன்னு. அது போல சில்வேனியா வீட்டிலும் நடக்குமோ? என்றேல்லாம் மனதில் கற்பனை செய்து கொண்டேன்.
பின்னர் ஒரு வாரம் சில்வேனியாவை என் வீட்டு பக்கம் காணவில்லை. மனசு கிடந்து அடித்துக்கொண்டது. என்ன ஆச்சுதோ தெரியலையே! வாயும் வயிறுமா இருந்த புள்ளயாச்சேன்னு கவலையோடு இருந்தேன். இன்று காலை விடிந்தும் விடியாத நேரம்.வாசல் பக்கம் வந்தேன். அடடே... மிக வேகமாக சில்வேனியா மீண்டும் தன் சிம்ரன் உடலோடு வந்தது. எப்போதும் ஒரே நீளமாக செல்லும் அது இன்று என்னை பார்த்ததும் ஒரு வித வெட்கத்துடன zig zag ஆக ஒரு நெளி நெளிந்து போனது. ஆகா டெலிவரி ஆகிடுச்சி போலிருக்கு. ஓடிப்போய் காலண்டரில் என்ன நட்சத்திரம் என பார்க்க தோனுச்சு. அப்படி தோணும் போதே ஆச்சர்யம். சில்வேனியா வந்த வழியில் ஒரு முழத்துக்கு ஒரு குட்டி சில்வேனியா. தன் அம்மா வழியில் போனது. அடடே அடுத்து ஒன்னு.... அடடே... இன்னும் ஒன்னு. மொத்தம் மூன்று குழந்தைகள். எல்லாம் அம்மா வழியில் போனது. அனேகமாக சில்வேனியா தன் ஆஃபீஸ்க்கு அழைத்துப்போய் தன் வீட்டுக்காரர் கிட்டே காமிக்கும் போலிருக்கு. “என்னங்க, பையன் என்னை போல இருக்கான். பொண்ணு உங்களைப்போல இருக்கால்ல” என கேட்கலாம். அப்பாடி... எது எப்படியோ சிசேரியன் இல்லாம சுக பிரசவம் ஆனது வரை எனக்கு சந்தோஷம். புள்ள பெத்த பச்ச மண்ணு சில்வேனியா இத்தனை வெரசாவா ஆஃபீஸ் வரனும் என மனசு தவித்தது!
ஆச்சு! மாலை சில்வேனியா இப்போது தான் வீடு திரும்பியது. அதன் பின்னால் மூத்த மகள், அடுத்து ரெண்டாவது மகள். அடுத்து கடைக்குட்டி பயல். அவனுக்கு தான் கொஞ்சம் வால் ஜாஸ்தி. (வால் கொஞ்சம் நீளமாக இருந்ததால் நானே அதை ஆண் குழந்தை என முடிவு செய்து கொண்டேன்). இன்றைக்கு அது தான் பிரச்சனையே. பெண் குழந்தைகள் அழகாய் சில்வேனியா போல என் வாசல் கேட்டில் புகுந்து மண் வழியே சந்தில் புகுந்து கொள்ளைப்பக்கம் வழியே மதிலில் கீழே சில்வேனியா போட்டு வச்சிருந்த ஓட்டை வழியே போல இந்த வால்பையன் மாத்திரம் என் வீட்டு சிமெண்ட் போட்ட இடம் வழியே வந்து என் வண்டி மேல் ஏறி சந்து பக்கம் இறங்கி சில்வேனியாவுக்கு முன்னாடி போய் அந்த மதில் ஓட்டைக்கு ஓடினான். இதை சில்வேனியாவும் கண்டிப்பது போல தெரியவில்லை. மாறாக வீட்டுக்குப்போய் “அப்பனைப்போலவே ரொம்ப சுட்டி” என சொல்லி திருஷ்டி கழிப்பாள் போலிருக்கு! எனக்கு தான் அல்லுவிட்டு போச்சுது. கேட் வழி போவது எல்லாம் ஓக்கே தான். என் வண்டி நிறுத்தும் இடம் வழியே வந்தால்....?
{ இது போலத்தான் மூன்று வருடம முன்பாக என் வீட்டுக்குள் வந்த ஒரு பாம்பு பற்றி நான் எழுதி நீங்கள் படித்திருப்பீர்கள். (அப்படி படிக்காதவர்கள் இந்த சுட்டிக்கு போய் படிக்கவும் http://abiappa.blogspot.com/2010/08/blog-post_25.html ) }
இந்த வால்பையன் அது போல எதுனா துடுக்குத்தனமா இருந்தா என்ன செய்வது? இதுக்காகவே எங்கள் நகரில் இருக்கும் “ நாகம்மா” கிழவி கிட்டே போய் கன்சல்ட் செய்ய போனேன்!
“ஆத்தா, வீட்டுல வண்டி வைக்கும் இடம் வழியே பாம்பு குட்டி ஒன்னு வருது”
“ஒரு மூணு வருசம் மின்னாடி கூட வந்துச்சுல்லா.. அப்ப நான் சொன்ன மேரி நீனு பெரியமாரியம்மன் கோவில் பின்னாக்க இருக்கும் புத்துல முட்டை வச்சியா?”
“ம்.. வச்சனே, நாட்டு கோழி முட்டை வைக்கனுமா, ஒயிட்லகான் வைக்கலாமா? பால்வாடி டீச்சர் கிட்டே கம்மி காசுக்கு வாங்கின தானா அனா முட்டை போதுமான்னு கூட நான் கேட்டேன். நீ தான் எதுனா வையி. பாம்பு என்ன ஏ வி சிலயா போய் படிச்சுட்டு வந்திருக்கு கேட்டியே”
“இது நடந்து மூணு வருஷம் இருக்கும்லா... ஒன் வூட்டு பாலு கூப்பன் கூட மாசா மாசம் மாத்துறீல்ல. (ரினீவல்). இது சாமி விசயம். மூணு வருசத்துக்கு ஒரு முட்டைன்னா கட்டுபடியாவுமா? எப்பாவோ ஒன் இக்கிரிமெண்டு காலாவதியாயிருக்கும். மாசா மாசம் வக்கினும். அதான் ஒனக்கு காட்டாப்பு காட்டிருக்கு நாவம்மா... இன்னிக்கே அங்கிட்டு போயி ஒரு முட்டை வச்சிட்டு வா”
வீட்டுக்கு வந்தேன்.... ஃப்ரிட்ஜ் திறந்து பார்த்தேன். முட்டை எதும் இல்லை. ஆனால் சாப்பாட்டுக்கு தொட்டுக்க முட்டை மசாலா கறி இருந்தது. அதை ஒரு சின்ன டப்பாவில் கொட்டிக்கொண்டு புத்து பக்கம் போக வெளியே வந்தேன்.
என் மனைவியும் மகளும், மகனும் என்னிடம் “ ‘சினேக்’ கா,அமலா ‘பால்”, இதல்லாம் பெண் குட்டிகளுக்கு, ஆண் குட்டிக்கு நட்ராஜ் ஆசைப்படி சோட்டா பீம் ... உங்களுக்கு ஆட்சேபனை இல்லியே”
“ஊகூம் இல்லை” என சொல்லிவிட்டு முட்டை மசாலாவுடன் வெளியே நடந்தேன். அவரவர் கவலை அவரவர்களுக்கு! ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம்! உலகத்திலேயே பாம்பு புத்துக்கு மசாலா முட்டை வைக்கப்போகும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்பது மட்டும் உண்மை!
Subscribe to:
Post Comments (Atom)
தம்பி ஆரூர் மூனா செந்திலுக்காக இந்த பதிவு! மீண்டும் நகைச்சுவை பதிவுகள் யதார்த்தமாக எழுத பழகும் ஒரு சின்ன முயற்சி இது!
ReplyDeletesuper narration :-)...2
ReplyDeletesuper narration bro :-)...
ReplyDeleteஅண்ணே நீங்கள் என்றும் சிங்கம் தான்ணே. மற்றவர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் எனக்கு நீங்க துரோணர்ணே
ReplyDeleteகொஞ்சம் சிரமப்பட்டு உங்களை மெருகேத்தீங்கங்க, என்னைப் பொருத்த வரைக்கும் எனக்கான அடுத்த ஆதர்ச எழுத்தாளர் நீங்க தான்ணே. இதற்கு முந்தைய பின்னுட்டமும் என்னதே. இன்னும் சொல்லனும்னா அடுத்த சுஜாதா, யுவாவுக்கோ, அதிஷாவுக்கோ, வா.மணிகண்டனுக்கோ அதற்கான தகுதியில்லை
ReplyDeleteநீங்கள் இப்படி மட்டும் எழுதிக் கொண்டு இருந்தால் உங்கள் பதிவுகளை உங்கள நகைச்சுவை கட்டுரைகளை என் செலவில் புத்தகமாக போட ஆசை, நடக்கும். நடத்தி காட்டுவேன். நானும் படித்து மகிழ்வேன். அண்ணே இது போன்ற பதிவுகளையும் இன்னும் நான் படித்து சிரிக்கும் படியான பதிவுகளையும் எழுதித் தள்ளுங்க. இந்த வருட இறுதிக்குள் நான் நடத்த முயற்சிக்கிறேன்.
ReplyDeleteசிங்கம் சிங்கம் தான்
ReplyDeleteசெம..... முதல் பாரா படித்தவுடனே பலருக்கும் தோன்றும் எண்ணத்தினை அதே பாராவில் தடுத்துவிட்டது நன்று! :)
ReplyDeleteரசித்துப் படித்தேன் நண்பரே.....