பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 16, 2008

"பிசிறு" - ஒரு போலி இல்லாத மனிதன்!!

பிசிறு! அவன் பெயரே அது தான். யார் வைத்த பெயர் என்றெல்லாம் தெரியாது. அவன் பிறந்து ரொம்ப காலம் புதிய பாதை பார்த்திபன் போல பெயர் இல்லாமல் தான் இருந்திருக்கிறான். "டேய் இங்க வா" "ந்தா இத தின்னு" அப்படியாக டேய், ந்தா, எலேய் இப்படி பல பெயர்கள் தனக்கு இருந்ததாகத்தான் அவனுக்கு நினைப்பு.இது அவனுக்கு சுலபமாக இருந்தாலும் அவனை பயன் படுத்தும் மற்றவர்களுக்கு கொஞ்சம் சிரமமாக இருந்ததால் "பிசிறு" என நாமகரணம் சூட்டப்பெற்றான். பட்டு தூளியிலே போட்டு வாயிலே தாய் மாமன் சர்க்கரை தண்ணீர் ஊற்றி மூன்று முறை "பிசிறு" "பிசுறு" 'பிசிறு" என்றெல்லாம் பெயர் சூட்டப்படும் வயதிலோ அல்லது வசதியிலோ அல்லது அம்மா அப்பாவோடோ இல்லை. பத்து வயது பிராயத்தில் தான் அவனுக்கு அந்த பெயர் ஏறிக்கொண்டதாக பலரும் சொல்வர். அவன் யார்???

அவன் இவன் என்று சொல்வதால் என்னைவிட சின்ன பையன் என நினைக்க வேண்டாம். இப்போது வயது 50க்கு மேல் இருக்கும். எனக்கு மனதில் இருக்கும் பிசிறு எப்படி இருப்பான் எனில் அப்போது வந்த இளமை ஊஞ்சலாடுகிறது கமல் ரஜினி கூட டென்னிஸ் விளையாடுவாரே அப்படித்தான் இருக்கிறான் இப்போதும். அவன் இவன் என கூப்பிடுவதே அவனுக்கும் பிடிக்கும், அதை தவிற அப்படியே எங்கள் எல்லோருக்கும் பழகிவிட்டது. அதனால் அப்படியே தொடர்கிறேன். மன்னிக்கவும்.

எங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானமே பிசிறுவுக்கு தாய்வீடு. பிறந்ததே அந்த மைதானத்தில்தான் என கதைவிடுபவர்களும் உண்டு. ராதா பிசிறை பற்றி கதை விடும் அழகே தனி. "அவங்க அம்மாவுக்கு காவிரிக்கு அந்த பக்கம் வீடு. ஒருத்தன் அவங்களை ஏமாத்திட்டு ஓடிட்டான். அவங்க பிரசவ நேரத்திலே ச்சோன்னு மழை பெய்யுது. தள்ளாடி தள்ளாடி நடந்து வர்ராங்க. அப்ப ஒரு மரம் குறுக்கே விழுது. அதையும் தாண்டி வர்ராங்க. நம்ம கிரவுண்டு வழியா வந்தா சுருக்க வந்திடலாம்ன்னு வந்தா தோ கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஆஸ்பத்திரி தெரியுது. வலி அதிகமா ஆகிடுச்சு. அப்படியே சேத்துல விழுந்துட்டாங்க. உடனே பிசிறு பிறந்திட்டான். அவனை அப்படியே பார்க்கிறாங்க. அப்ப ரெண்டாம் ஆட்டம் முடிஞ்சு போன நம்ம கிரவுண்டு மார்க்கர் சேப்பு சுப்பையா கையிலே அவனை தூக்கி கொடுத்துட்டு செத்து போயிட்டாங்க" ( அடங்கொய்யால பிதாமகன் டைட்டில் சாங் தவிர அவன் அப்பவே அந்த கதையை எழுத்திட்டானே!!!) எங்கள் பள்ளி எல்லா விளையாட்டிலும் மாவட்ட அளவில் நல்ல இடத்தை பிடித்தமைக்கு பிசிறுவும் ஒரு காரணம் என்பது உண்மை. அவன் பிறப்பை பற்றி கேலியாகவும், ஜாலியாகவும், பரிதாபப்பட்டும் பேசும் யாரை பற்றியும் பிசிறு கவலைப்பட்டதே இல்லை.

அவனைப்பற்றி எங்க விளையாட்டு மைதான மார்க்கர் சேப்பு சுப்பையா சொல்லுவார். "அவனுக்கு நடக்க தெரிந்த போதே இங்க கிரவுண்டுக்கு வந்துட்டான். என் கூடவே ஒத்தாசையா மார்க்பண்ற வேலை எல்லாம் செய்வான். டீ வாங்கி குடுத்தா குடிப்பான். பந்து எடுத்து போடுவான். பேட் எல்லாம் துடச்சி வைப்பான். இப்படியா எல்லாரும் வெளயாடும் போது பாத்து பாத்து எல்லா வெளையாட்டையும் கத்துகிட்டான். நம்ம பிடி சிவனேசன் சார் தான் இவன் கிட்ட இருக்கும் தெறமைய மதிச்சு எல்லா வெளையாட்டும் சொல்லி குடுத்தாரு. பின்ன இந்த பய புள்ள இந்த கிரவுண்ட விட்டு வெளியே போறதே இல்ல. எஸ்.வி.கே சார் ரிட்டையர்டு ஆகும் வருஷத்திலே மாட்டாஸ்பத்திரி ஓரமா பிரசவ ஆஸ்பத்திரி பக்கமா ஒவ்வையார் ஸ்கூல் பின்பக்கமா ஒரு காடுமாதிரி பொதரு கிடந்துச்சு. அதிலே ஒரு பேஸ்கட்பால் கிரவுண்டு கட்ட ஆசைப்பட்டாரு. இரும்புகடை கண்ணப்பன் சாரும் இன்னும் சில பேரும் பணம் கொடுத்தாங்க. அப்ப கட்டின அந்த பேஸ்கட்பால் கிரவுண்டு சிமெண்ட் தரை தான் அவனுக்கு மெத்தை. ராத்திரி அங்க தான் கெடப்பான். அவனுக்கு அப்பன் யாருன்னு அவனுக்கும் தெரியாது. அம்மா அவனை இந்த பிரசவ ஆஸ்பத்திரியிலே பெத்து போட்டுட்டு ஓடி போயிடுச்சு. அப்ப சட்டகாரச்சி ரோட்ரிஸ் டாக்டரம்மா "சரி இவன் இங்கயே இருக்கட்டும்"ன்னு சொல்லி அவன் அந்த பாலு பன்னுலயே வளந்துட்டான். இது தானப்பா அவங்கதை"

என் வீட்டு திண்ணையில் நான் படுத்து இருக்கும் போது காலை 4.30க்கு பேஸ்கட்பால் கிரவுண்டிலே மாட்டு ஆஸ்பத்திரி வெளிச்சத்திலே அவன் பிராக்டிஸ் பண்ணுவது என் தலையில் சம்மட்டி அடிப்பதுபோல டொங் டொங்ன்னு கேக்கும். அப்படி ஒரு வெறி விளையாட்டின்மீது அவனுக்கு. அவனுக்கு என்னதான் வேலை என்றால் சின்னகடை தெருவின் ஆரம்பம் முதலாக எங்கள் சியாமளாதேவி கோவில் வரையிலான எல்லா கடையிலும் குறிப்பாக எல்லா டீக்கடையிலும் கிளாஸ்,பாத்திரம் கழுவுவது முதல் டேபிள் துடைப்பதுவரை செய்வான். கூலியாக சாப்பாடு சாப்பிடுவான். அதுபோல எங்கள் கோவிலிலும், பெரிய கோவிலிலும் சாமி தூக்குவது முதல் பந்தம் பிடிப்பதுவரை செய்வான். கூலியாக உண்டகட்டி போதும். வயிறு பசிக்க கூடாது அவ்வளவே. அதுக்கு என்ன வேலை செய்வது என்றாலும் செய்வான். பள்ளி பக்கம் ஒதுங்கியது கிடையாது. பிசிறு என கையெழுத்து போட கூட தெரியாது. ஆனால் "ஃபைன் லெக்க்கிலே அட்ரா மயிறு"...."அப்டமன் அப்படியே ஷிங் ஆகனும் அப்படி எழுந்திரு, நான் உன் ஷோல்டரை பிடிச்சுக்கறேன்"....." நாயி நாயி நாயி இப்ப அதே பால் போடறேன்...அப்படியே ஸ்கொயர் கட் பண்ணு, ஃபோர்க்கு போகலைன்னா மொட்டை அடிச்சுக்கறேன்"..... "போல்வால்ட்ன்னா அந்த கம்பு மேல ஒரு லவ் வரணும்டா.....அதை தூக்கி கிட்டு ஓடி வரும் போதே மனசு தாவியிருக்கனும்டா"...இப்படியா விளையாட்டின் அத்தனை ஆங்கில வார்த்தையும் அத்துப்படி.

தனக்கு ஒரு நிலையான டீக்கடையில் வேலை தேடிகொள்ளாமைக்கும், சின்ன கடை தெருவை விட்டு வேறு எங்கும் போகாமைக்கும் காரணம் ஒன்றே ஒன்று தான். மதியும் மணி 3.00 ஆனால் எங்கள் பள்ளி மைதானத்துக்கு ஓடி வந்துவிட வேண்டும்.மதியம் 3.00 மணிக்கு வந்தா சிவநேசன் சார், பிடி பாலு சார் எல்லாருமே ஆர்வமா காத்துகிட்டு இருப்பாங்க பிசிறுக்காக. அப்போது முதல் எங்க எல்லாரையும் எங்க சார்களோடு சேர்ந்து டிரில் வாங்கிடுவான்.

அவ்வப்போது சில போலீகாரங்க வருவாங்க. "எலேய் பிசிறு, நாளைக்கு போலீஸ் கிரவுண்டுக்கு வந்துடு. உன் நம்பர் 247, பேரு தங்கவேலு. நம்ம சரகத்துக்கும் திருச்சி சரகத்துக்கும் கபடி இருக்கு. வரும் போது மயித்த ஒட்ட சரச்சிகிட்டு வா. ஹிப்பியோட வராத. இந்த 10 ரூவா புடி. ராத்திரி ஸ்டேஷனுக்கு வா, முட்ட பிரியாணி சாப்பிடலாம்" என்று சொல்லிவிட்டு போவார்கள். அதுக்கு அவன் " சார் திருச்சியா, அந்த செபாஸ்டின் பிசி நகத்த வெட்ட சொல்லுங்க சார் இந்த தடவயாவது. இங்க பத்திங்களா தழும்ப போன தடவ ஃபைனல்ல போட்டது" என சொல்லி தொடையை காட்டுவான். அந்த 1 வாரத்துக்கு அவனுக்கு சோத்துக்கும் முட்டைக்கும் கவலை இல்லை. ஆனால் எப்போதுமே ஜெயிச்ச கப்புக்கு பின்னாலேதான் முகத்தை மறைத்து கொண்டு பிசிறு போஸ் கொடுக்க வேண்டும்.

இப்படியாக மின்சாரவாரியம், போக்குவரத்து கழகம், என எல்லா கழகத்துக்கும் போய் எல்லா விளையாட்டிலும் தழும்பும் பிரியாணி, முட்டையும் வாங்கி வருவான். சில சமயம் சில பள்ளிகூடத்துக்கு போய் கோச்சிங் குடுத்துவிட்டு அந்த 2 நாள் சாப்பாட்டை சம்பளமாக வாங்கி வருவான். அவனிடம் பயிற்சி எடுத்த எல்லோருமே இன்று நல்ல நிலையில் ஆனால் அவன் நிலை???

நான் இந்த முறை சென்ற போது எங்க கோவில்ல கரகம் எடுத்த யாரோ போட்ட சாப்பாடு பந்தி முடிந்து பின் இவன் பெரிய அண்டாவை பிள்ளையார் கோவில் வாசல் பைப்பில் கழுவிகொண்டு இருந்தான். என்னை பார்த்ததும் "எப்படா வந்த, எப்புடி இருக்க இதான் ஒம் மவளா" என கேட்ட போது அபி முதற் கொண்டு அங்கே நின்று கொண்டிருந்த எல்லோருமே என்னை ஒரு மாதிரி பார்க்க எனக்கு மட்டும் ஒரு நல்ல போலியில்லாத மனிதனை பார்த்த சந்தோஷம். ஏனனில் என்னை சின்ன வயதில் வாடா போடா என கூப்பிட்டவர்கள் இன்று "வாங்க தம்பி, போங்க தம்பி" என விளித்து "துபாய்ல இருந்து அடுத்த தபா வரும் போது மொதல மார்க் பச்சை பெல்ட் வாங்கி வாங்க தம்பி" என பேசுபவர்கள் மத்தியில் பிசிறு அப்படி கூப்பிட்டு "அங்க நீ நல்லா இருக்கியாடா" என என் நலம் விசாரித்தது மிக்க சந்தோஷமாக இருந்தது.

நான் கிட்ட போய் "எப்படிடா இருக்க" என கேட்க "நல்லா இருக்கேண்டா, நம்ம ஸ்கூல் பசங்க இப்ப தூள் கிளப்பறாங்க தெரியுமாடா, இந்த வருஷமும் வீரப்பாபிள்ளை கப்பு நமக்குதாண்டா எழுதி வச்சிக்க" என்றான். அண்டா கழுவும் போதும் இதே நினைப்புதானா?? சரியென்று நான் பையில் கைவிட்டு ஒரு 200 ரூபாய் எடுத்து கொடுத்து "வச்சிக்கடா" என சொன்னதுக்கு "எனக்கு எதுக்கு பணம்?, வேணும்ன்னா சாமிகடையிலே எனக்கு 1 மாசத்துக்கு காலையில காலையில 2 முட்டை கொடுக்க சொல்லிட்டு போ அடுத்த மாசம் ஒரு தோர்ணமெண்ட் இருக்கு" என சொல்லிவிட்டு பர பரன்னு அண்டாவை தேய்க்க ஆரம்பித்துவிட்டான். அட பைத்தியகாரா 200 ரூவாய் வாங்கிகிட்டா 45 நாட்களுக்கு முட்டை சாப்பிடலாமேன்னு நெனச்சுகிட்டேன்.இப்படியும் சில விந்தை மனிதர்கள்.

21 comments:

 1. 10 நாள் தமிழ்மணம் பக்கம் சரியா வரமுடியலை. காலை ஆட்டிகிட்டே இல்லாட்டி தூக்கி போட்டுடுவாங்கப்பான்னு யாரோ சொன்னதுக்காக இந்த பதிவு. எழுதி முடித்த பின் பார்த்தேன். இன்னும் நல்லா எழுதியிருக்கலாமோன்னு தோணுச்சு. தொங்கல் தொங்கலா இருக்கு. பரவாயில்லைன்னு விட்டுட்டேன்.

  ReplyDelete
 2. இப்படியும் சில விந்தை மனிதர்கள்.

  ரொம்ப டச்சிங்கா இருந்தது. கிராமத்தில் இதுபோல இன்னும் சில வெள்ளந்தி மனிதர்களை பார்க்க முடியும்.

  நகரத்தில் ஏமாந்தால் நம் தலையில் மிளகாய் அரைத்துவிடும் ஆட்கள் மட்டும்தான்.

  ReplyDelete
 3. i am also planning to write in tamil but i dont know how to do from english typing. could you please help me.
  nice blog

  ReplyDelete
 4. இல்ல, அபி அப்பா, இப்பவும் பதிவு நல்லாத்தான் கோர்வையா வந்ருக்கு. :)

  கடைசி லைன் தான் இடிக்குது. பிசிறு விவரமா 2 மாசம் முட்டைக்கு சொல்லி இருக்கார். 200 ரூவாக்கு 45 நாள் முட்டை...?

  2 மாசத்துக்கு 60 நாள் தானே? நெல்லை காரவுகளுக்கு 60 நாள் தான். தஞ்சைகாரவுகளுக்கு எப்படியோ? :p

  ஒரு வேளை அது முட்டை பிரியாணின்னு இருந்ருக்கனுமோ? :))

  ReplyDelete
 5. போலி இல்லாத மனிதர் தான்..
  நல்ல நல்ல மனிதர்கள் உங்களைச் சுற்றி இருந்திருக்கிறார்கள்..

  எல்லாம் நினைவும் வச்சிருக்கீங்க!

  ReplyDelete
 6. பிசிறு அப்படியே மனசைக் கவர்ந்துட்டார்.

  நடை நல்லாருக்குங்க.

  ReplyDelete
 7. அபி அப்பா அனேகமா என் கண்ணிலும் பட்ட அதிகம் நேரம் அந்த பேஸ்கட் பால் கிரவுண்டில் இருந்த நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு வலம் வந்த அந்த நபரா??????

  ReplyDelete
 8. //பிதாமகன் டைட்டில் சாங் தவிர அவன் அப்பவே அந்த கதையை எழுத்திட்டானே!!!//

  அவர் தான் கதை எழுதினாருனு இல்லை இத்தனை நாள் நினைச்சுட்டு இருந்தேன்!! :P

  //10 நாள் தமிழ்மணம் பக்கம் சரியா வரமுடியலை. காலை ஆட்டிகிட்டே இல்லாட்டி தூக்கி போட்டுடுவாங்கப்பான்னு யாரோ சொன்னதுக்காக இந்த பதிவு.//

  அப்படிங்கறீங்க?? அதானா நம்ம வலைப்பக்கம் யாருமே எட்டிக் கூடப் பார்க்கிறதில்லை??? :P :P :P :P

  //கடைசி லைன் தான் இடிக்குது. பிசிறு விவரமா 2 மாசம் முட்டைக்கு சொல்லி இருக்கார். 200 ரூவாக்கு 45 நாள் முட்டை...? //

  முட்டை விக்கிற விலை அபி அப்பாவுக்குத் தெரிஞ்சதாலே தான் 200ரூக்கு 45 நாளுக்குத் தான் முட்டை வாங்கலாம்னு சொல்லி இருக்கார், அம்பிக்குத் தான் கணக்கே வராதே? :P :P :P

  ReplyDelete
 9. மத்தவங்களுக்கு முதல்ல கீதாம்மாவுக்கு பதில் சொல்லிடறேன்! இல்லாட்டி திரும்பவும் கல்யாண பாயசமா ஆகிடும்!

  ராதா கதைவிடும் அழகு இருக்கே, நீங்க மாயவரம் பக்கம் வரும் போது கண்டிப்பா பார்க்கலாம்!

  //அப்படிங்கறீங்க?? அதானா நம்ம வலைப்பக்கம் யாருமே எட்டிக் கூடப் பார்க்கிறதில்லை??? :P :P :P :P//

  யார் சொன்னது அப்படி!உங்க பதிவை படிச்சாச்சு! நேத்து கூட குசும்பன் பதிவை படிச்சுட்டு அருமையா விமர்சனம் செய்தேன், குசும்பா வந்து பதில் சொல் கீதாம்மாவுக்கு!

  அம்பிக்கு கணக்கும் வராதுன்னு சொல்லியிருக்கனும், ஹய்யோ ஹய்யோ உங்களுக்கும் ஸ்பெல்லிங் மிஸ்ட்டேக்!!:-)))))

  இப்படிக்கு
  அபிஅப்பா

  நாந்தான்

  ReplyDelete
 10. மத்தவங்களுக்கு முதல்ல கீதாம்மாவுக்கு பதில் சொல்லிடறேன்! இல்லாட்டி திரும்பவும் கல்யாண பாயசமா ஆகிடும்!

  ராதா கதைவிடும் அழகு இருக்கே, நீங்க மாயவரம் பக்கம் வரும் போது கண்டிப்பா பார்க்கலாம்!

  //அப்படிங்கறீங்க?? அதானா நம்ம வலைப்பக்கம் யாருமே எட்டிக் கூடப் பார்க்கிறதில்லை??? :P :P :P :P//

  யார் சொன்னது அப்படி!உங்க பதிவை படிச்சாச்சு! நேத்து கூட குசும்பன் பதிவை படிச்சுட்டு அருமையா விமர்சனம் செய்தேன், குசும்பா வந்து பதில் சொல் கீதாம்மாவுக்கு!

  அம்பிக்கு கணக்கும் வராதுன்னு சொல்லியிருக்கனும், ஹய்யோ ஹய்யோ உங்களுக்கும் ஸ்பெல்லிங் மிஸ்ட்டேக்!!:-)))))

  இப்படிக்கு
  அபிஅப்பா

  நாந்தான்

  ReplyDelete
 11. //ராதா பிசிறை பற்றி கதை விடும் அழகே தனி//

  யாரு கொரங்கு ராதாவா? :-))))
  (இந்த பதிவ அவரு படிப்பார் தான)

  ReplyDelete
 12. அப்படியே வாழ்ந்து, அப்படியே...
  வாழ்க்கையே வயிறும் விளையாட்டும்தான். இதிலென்ன போலி, போலி இல்லாத.
  நன்றாகவே எழுதியுள்ளீர்கள் நண்பரே.

  ReplyDelete
 13. அபி அப்பா,
  பிசிறு போன்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாததால்தான் இந்தியா இன்னும் ஒலிம்பிக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது ( கடைசியில் இருந்து).

  நாம பதிவு மட்டும் போட்டா போதுமா அபி அப்பா? ஏன் இப்படி ஒரு திறமைசாலிய எல்லாம் நல்ல படியா உபயோகிக்க முயற்சிக்கக் கூடாது?

  ReplyDelete
 14. //"sharevivek said...
  i am also planning to write in tamil but i dont know how to do from english typing. could you please help me.
  nice blog "//.
  விவேக், கீழே கொடுத்திருக்க இணைப்புக்கு சென்று அந்த வலைதளத்தில எளிய முறையில தமிழ்ல தட்டச்சு செய்யுங்க, அதை வெட்டி, உங்க வலைப்பூவுல ஒட்டுங்க.
  http://tamileditor.org

  ReplyDelete
 15. அபி அப்பா, யாரு இந்த அனானி??? கண்டிப்பா நீங்க இல்லை! :P

  ReplyDelete
 16. //அம்பிக்கு கணக்கும் வராதுன்னு சொல்லியிருக்கனும், ஹய்யோ ஹய்யோ//

  அனானி அபி அப்பா, மிஸ்டேக்கெல்லாம் இல்லை, அம்பிக்கு பூரிக்கட்டை அடி வாங்கறதிலே எதுவும் வராதுனு தான் வலை உலகு அறிஞ்ச விஷயம் ஆச்சே? அடுத்து உண்மையான அபி அப்பா வாங்கிட்டு இருக்கார், வெளியே சொல்றதில்லை! அனானி அபி அப்பா, வேணும்னா அவர் கிட்டேயே கேட்டுக்குங்க, திடீர்னு ஆன்லைனிலே இருப்பார், திடீர்னு இருக்க மாட்டார், மாயாஜாலமெல்லாம் காட்டிட்டு இருப்பார், எல்லாம் டாமேஜரால் வந்த வினையாத் தான் இருக்குமோ???? :)))))))))

  ReplyDelete
 17. ஆயிரந்தான் இருந்தாலும் நீங்க 200rs நீட்டிருக்கக் கூடாது, பிசிரு வெறெதும் (போடா ..சிரு) சொல்லிருவானோன்னு பயந்துட்டே read பண்ணினேன்.

  ReplyDelete
 18. கள்ளம் இல்லா மனிதருடன் நட்பு கொண்டிருக்கீர்கள்.. இக்காலத்தில் இப்படி ஒரு வெகுளியா? ஆச்சர்யமாக இருக்கிறது.. பிசிறு நலம் விசாரித்த பிறகு 200ரூ எடுத்தது தான் நெருடலாக இருக்கிறது. முதலிலேயே கொடுத்திருக்கலாமோ?

  ReplyDelete
 19. பிசிறு (பெயர் சரியாக ஞாபகமில்லை அனேகமாய் குமாருன்னு நினைக்கிறேன்!) பற்றி நான் நேரில் பார்த்து தெரிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்! எத்தனையோ விளையாட்டு வீரர்கள் (மாவட்ட அளவில் வைச்சுப்போம்!) உருவாக்கியவர் என்பது 100% உண்மை!

  எனது நண்பனும் கூட அவரால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவன் தான்!

  சில பின்னூட்டங்களில் பார்க்கையில் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது! :(

  ReplyDelete
 20. ஸ்கூல்ல படிக்கும் போது ஓரிருமுறை "பிசிறு" அவர்களைப் பார்த்திருக்கிறேன்..

  அவரது வரலாறு எனக்கு அப்போ தெரீயாது.. யாரோ ஒரு கறிகாய்காரரின் மகன்.. படித்ததில்லை என்ற விவரம் தான் அப்பொழுது தெரியும்.

  எனக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வமே இல்லையாதலால்.. அவரைத் தெரிந்து கொள்ள இயலவில்லை..

  அடுத்த முறை மயிலாடுதுறை செல்ல நேரும்போது...சந்திக்க வேண்டிய இன்னொரு வி.ஐ.பி.. பிசிறு தான்..

  ReplyDelete
 21. //வீட்டுக்கு முன்பாக வாசனையான மல்லிகையும் கவர்ச்சியான ரோஜாவையும் வைப்பது போல த்தான் இலவச தொலைகாட்சி பெட்டி! ஆனால் அதே வீட்டின் கொல்லையில் வைக்கும் புளிய விதை போன்றவை தான் சேதுராம் திட்டம் போன்றவை. அவைகள் நம் சந்ததிக்கு பலன் தரும். மல்லிகையும் ரோஜாவும் நமக்கு சந்தோஷம் கொடுக்கும். அவ்வளவே! அதிகம் குழப்பிக்காதீங்க யாரும்!!!//

  நாங்கள் இளமை பருவத்தில் பேசிய பேச்சுக்கள் தான் நினைவுக்கு வருகிறது. இதை படித்தவுடன் அதில் ஒன்று .... "நூத்தில ஒரு வார்த்தை *#^* அடித்த மாதிரி "

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))