ஜே பி சி இறுதி அறிக்கையும், காங்கிரஸ் 29.10.2013 முதல் அரசியலில் மீண்டும் "உத்தம பத்தினி" ஆன கதையும்!
2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை விசாரிக்கிறேன் பேர்வழி என ஆளும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒன்றை அமைத்து அதற்கு தலைவராக கேரள எம் பி யான பி.சி சாக்கோ அவர்களை நியமித்து விசாரித்து இன்று அந்த குழு தன் இறுதி அறிக்கையை பாராளுமன்ற சபாநாயகர் திருமதி மீரா குமார் அவர்களிடம் சமர்பித்தது. அதில் "பிரதமரை ஆ.ராசா அவர்கள் தவறாக வழி நடத்தி விட்டார்" எனவும் "இந்த பிரச்சனைக்கும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை" என சொல்லிவிட்டார்.
எனக்கு திரு.ஜெயகாந்தன் கதை தான் நியாபகம் வந்து தொலைக்கின்றது. கற்பிழந்து போனவளை ஒரு குடம் ஜலம் தலையில் ஊற்றி "ச் சூ... ஓடிப்போ"ன்னு சாத்தானை விரட்டி "இன்று முதல் நீ மீண்டும் கற்புக்கரசி" என செய்வது போல நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அவசர அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங், நிதி ப.சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பி.சி சாக்கோவால் "ஜே பி சி விசாரனை இறுதி அறிக்கை" என்னும் ஒரு குடம் ஜலம் கொண்டு அவர்கள் தலையில் ஊற்றி இன்று முதல் "மீண்டும் கற்புக்கரசி" பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது!
2010ல் இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சனை ஆரம்பித்த போது என்ன செய்திருக்க வேண்டும் காங்கிரஸ்? உடனே பிரதமர் அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். என்னவென்று? "ஒன்னே முக்கால் லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என சி ஏ ஜி சொன்னது உண்மை அல்லது பொய் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஏனனில் அரசு என்பது கார்பரேட் கம்பனி இல்லை. இது மக்களுக்காக நடத்தப்படும் ஒரு அரசாங்கம். தவிர தொலை தொடர்பு என்பதே ஒரு "சேவை" நிறுவனம் தான். அரசுக்கு இழப்பு என்பது எங்களுக்கும் தெரியும். இது அரசு கொள்கை. சி ஏ ஜி சொல்வது போல அரசுக்கு இழப்பு ஏற்படாமல் இந்த தொலை தொடர்பு சேவை நிறுவனத்தை லாபகரமாக ஆக்கி காட்டவும் அரசுக்கு முடியும். ஆனால் அப்படி செய்யப்படின் எப்படி பத்து பைசாவுக்கு போன் செய்ய முடியும்? ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 950 ரூபாய் என இருக்கும் போது அரசு ஒரு சிலிண்டருக்கு 500 ரூபாய் வரை மானியம் கொடுக்கின்றதே... அது கூட அரசுக்கு இழப்பு தான். அது போல பொது வினியோக அரிசி விலைக்கும் அரிசியின் அடக்க விலைக்கும் கூடத்தான் ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய் வரை இழப்பு அரசுக்கு. அதனால் சி ஏ ஜி தன் வேலை... கணக்கு பார்த்து சொல்வது. அத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அது போல அது ஒன்னே முக்கால் லட்சம் கோடி இழப்பா என்பதை எல்லாம் நாங்கள் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரித்துக்கொள்வோம்" என கூறிவிட்டு அப்போதே அனைத்து கட்சிகள் உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து இதை விசாரித்து இருந்தால் காங்கிரஸ் ஒரு உத்தம கட்சி. அதன் பிரதமர் யோக்கிய சிகாமனி என நம்பி இருக்கலாம்.
ஆனால் நடந்தது என்ன? அப்போது இந்த பிரச்சனை பூதாகரம் ஆன போது அதிலே எதிர்கட்சிகள் பூச்சாண்டி காட்ட எவ்வித முகாந்திரமும் இல்லை என காங்கிரசுக்கு நன்கு தெரிந்தும் கூட்டணி கட்சியாக இருக்கும் திமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்க இதுவே சரியான சந்தர்ப்பம் என ஏதோ கத்துக்குட்டி காங்கிரஸ் தலைவர்கள் செய்த துர்போதனையின் காரணமாக காங்கிரஸ் தலைமையும் திமுகவிடம் "ஆ.ராசாவை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்" என கேட்டு அதன் பின்னர் ஒட்டுமொத்த பழியையும் திமுக மீதும், ராசா மீதும் மட்டும் சுமத்தி விட்டால் அவர்கள் வழிக்கு வந்து தன் கட்சியை காங்கிரசிடம் அடமானம் வைத்து விடுவர் என தப்பு கணக்கு போட்டது காங்கிரஸ்.
ஆனால் திமுக தலைமையோ ஆ.ராசா அவர்களையும் கைவிடவில்லை. அது போல காங்கிரசுக்கும் பணிந்து போகவில்லை. அதிக பட்சமாக காங்கிரஸ் சாதித்துக்கொண்டது 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் 63 சீட்டுகள் பெற்றது தான். அதிலே ஐந்து மட்டுமே வெற்றி கண்டது என்பது தனிக்கதை. இந்த 63 சீட்டு தானம் என்பதை தவிர திமுகவும் எதற்கும் பணியவில்லை. காரணம் அதற்கு முன்னரே விஷயம் உச்சநீதிமன்றத்துக்கு பொதுநல புலிகள் வழியாக போய் சேர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி என்றதும் வாயடைத்துப்போய் சி பி ஐ கிட்டே "உடனே என்ன ஏதுன்னு விசாரிக்கவும். விசாரித்து கைது நடவடிக்கை எனில் அதையும் செய்து முதல் தகவல் அறிக்கையின் படி வழக்கை தொடுக்கவும். இதற்காக தனி சிறப்பு நீதிமன்றம் கூட அமைத்து தருகிறோம். தினம் தினம் வழக்கு நடக்க வேண்டும்" என்றெல்லாம் பொங்கி வெடிக்க அதுவே திமுகவுக்கு சாதகமாகவும் காங்கிரசுக்கு பாதகமாகவும் ஆகித்தொலைந்தது. ஏனனில் இந்த ட்விஸ்டை காங்கிரஸ் கூட எதிர்பார்க்கவில்லை. திமுகவை மிரட்டுவோம். ராசாவை ராஜினாமா செய்ய வைப்போம். வரும் 2011 தமிழக சட்ட மன்ற தேர்தலில் 117 சீட் சரிக்கு சமமா இந்திரா காலத்தில் செய்தது போல செய்வோம். அதன் பின்னே வெற்றி பெற்றால் கூட்டனி மந்திரி சபை, அல்லது ஒருவேளை காங்கிரஸ் அதிக சீட் வாங்கினால் காங்கிரஸ் முதல்வர் என கனவு கண்டது காங்கிரஸ். அறிஞர் அண்ணா கருவறுத்த காங்கிரசை மீண்டும் தமிழகத்தில் முதல்வர் நாற்காலியில் பக்தவத்சலத்துக்கு பின்னர் அதாவது 1966க்கு பின்னர் 45 வருடங்களுக்கு பின்னர் அமர்த்திப்பார்த்து அழகு பார்க்கலாம் என நினைத்தது காங்கிரஸ்.
அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் ராசாவின் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்ட உடனேயே பொதுநல புலிகள் பிரஷாந்த் பூஷன், சுனாசுவாமி ஆகியோர் உச்சநீதிமன்றம் சென்று அங்கே களேபரம் ஆகி ராசா தனக்கு தானே வாதிடவும், ஜாமீன் கூட கேட்காமல் சி பி ஐ யே திணறும் அளவுக்கு வாதங்கள் முன் வைத்த நிலையில் .... இது என்ன கூத்து என இதை படிக்கும் நீங்கள் கேட்கலாம்... சொல்கிறேன்... ஒன்னே முக்கால் லட்சம் கோடி இழப்பு என சொன்ன போது "ஆஆஆஆ... அப்படியா?" என வாய்பிளந்த உச்சநீதிமன்றம் சி பி ஐ வழக்கு தொடுக்கும் போது ஆரம்பமே சறுக்கல்.. சி பி ஐ வழக்கு தொடுத்ததே சுமார் 40000 கோடி இழப்பு ஆகிவிட்டது ராசாவால் என சொன்ன போதே முதல் சறுக்கல். பின்னர் அந்த தொகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பின்னர் காணாமல் போய்விட்டது. ஒரு கட்டத்தில் ராசாவின் மனைவிக்கு மொரீஷியஸ் நாட்டில் பல்லாயிரம் கோடி இருக்கின்றது என்றது. அதை டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல பத்திரிக்கைகள் அப்போது தலைப்பு செய்தியாக வெளியிட்டன. ராசா அப்போது நீதிமன்றத்தில் நீதிபதி ஓ பி சைனியிடம் எதுவும் பேசவில்லை. "அப்படியா? அப்படி எனில் அதை கைப்பற்றி இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள்" என்றார். சி பி ஐ கூட நாங்கள் ஒரு குழுவை அங்கே அனுப்பி விசாரிக்க சொல்கிறோம் என்றது. பின்னர் பல மாதங்கள் கடந்த நிலையில் ராசா அதே நீதிபதி ஓ பி ஷைனியிடம் "அந்த மொரீஷியஸ் பணம் வந்து விட்டதா?" என கேட்க சி பி ஐ அதிகாரிகள் வெலவெலத்துப்போனது இங்கே எத்தனை பேருக்கு தெரியும். ஓ பி ஷைனி சி பி ஐ வசம் "என்ன ஆனது அந்த விசாரணை" என கேட்ட போது பதில் எதும் இல்லை சி பி ஐ வசம் இருந்து. அது போல மாத்தூர் என்னும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி அடித்த பல்டி, இப்போது அட்டர்னி ஜெனரல் ஆக இருக்கும் வாகன்வது வியர்த்து விறுவிறுத்து போனது எல்லாம் அங்கே தினம் தினம் சி பி ஐ க்கு பெரிய இடியாக இருக்கின்றது . இப்டியாக அங்கே வழக்கு அருமையான கோணத்தில் போய் கொண்டு இருந்த போது அப்போதும் காங்கிரசுக்கு எரிச்சல் திமுக மீது.
உடனே கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கடனாக கைமாறியது என காரணம் காட்டி கனிமொழியை சிறை வைத்தனர் தன் கைவசம் இருந்த தலையாட்டி பொம்மைகளான சி பி ஐ கொண்டு. ஆனது... அதற்கும் திமுக சட்டப்படி அந்த சவாலையும் சமாளித்து இன்று கனிமொழி ஜாமீனில் வெளிவந்து அந்த வழக்கில் இருந்தே தன்னை விடுவிக்க வேண்டும் என கனிமொழி அவர்கள் தனியே ஒரு ரிட் மனு தாக்கல் செய்யும் அளவு அந்த சி பி ஐ தொடுத்த வழக்கில் ஓசோன் படலம் போல பெரிய பெரிய ஓட்டைகள்.
இந்த நேரத்தில் தான் ராசா அவர்கள் தன் அடுத்த அடுத்த அஸ்திரம் பாய்ச்சத் தொடங்கினார் நீதிமன்றத்தில். தான் செய்த எல்லாமே அமைச்சரவை ஒப்புதல் பேரில் தான், அமைச்சரவை ஒப்புதலில் பேரில் தான் என்று. (அதிலே பிரதமர் மன்மோகன் சிங் கையெழுத்து இட்டதும், அதற்கு முன்பாக பிரதமர் அலுவலகம் முழுக்க முழுக்க அதிலே "நோட்" எழுதியதையும் அப்பட்டமாக பின்னி பினைந்து கிடப்பதையும் சமீபத்தில் மிக சமீபத்தில் "The Hindu" கூட வெளியிட்டது.)
இதற்கு முன்னரே வழக்கை சந்திக்க திமுகவும் ஆ.ராசாவும் தயாராகிவிட்டனர் என்ற நிலையில் காங்கிரஸ் உடனே அவசர அவசரமாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கும் என்றது. இதே கட்டுரையில் நான் ஆரம்பத்தில் சொன்னது போல சி ஏ ஜி அறிக்கை வந்தவுடனேயே இதை செய்திருக்க வேண்டும். ஆனால் கத்துக்குட்டி தலைவர்களின் துர்போதனை... மீண்டும் நான் பகிரங்கமாக சொல்கிறேன்.... திமுகவை அடக்கி அடமானமாக அந்த கட்சியை வாங்க வேண்டும் என்ற நினைப்பில் அந்த கத்துக்குட்டி தலைவர் செய்த காரணத்தால் எல்லாம் சொதப்பலாகிப்போனது காங்கிரசுக்கு.
நீதிமன்றத்தில் வழக்கு நல்ல படி நடந்து கொண்டு இருப்பதும்,இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சனை காரணமாக திமுக கொஞ்சம் சுனக்கமாக இருந்த நிலை மாறி சிலிர்ப்பி கொண்டு எழுந்து நின்றதையும் கண்ட காங்கிரஸ்... இனியும் நீதிமன்ற போக்கில் விட்டால் 2014 பாராளுமன்ற தேர்தலில் பல் இளிக்க வேண்டிய நிலை வந்து விடும் என நினைத்து உலக உத்தமர் பி.சி சாக்கோ என்னும் தலையாட்டி பொம்மையை தேர்ந்தெடுத்து அவரை தலைவராக்கி ஒரு அனைத்து கட்சி குழுவை அமைத்து அதிலே மிக ஜாக்கிரதையாக மெஜாரிட்டி உறுப்பினர்கள் காங்கிரஸ் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் பார்த்து பார்த்து உறுப்பினர் ஆக்கியது. குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அவர்களுக்கு சாதகமாக இருக்கும் படி பார்த்துக்கொண்டது.
பி.சி சாக்கோ விசாரித்த லட்சனம் நாடே அறிந்தது. ஒரு மனிதன் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. இப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக இருக்கும் வாகன்வதி இதே ஜே பி சி க்கு முன்னர் வந்து ஆ.ராசா மீது பொய்யான ஒரு குற்றச்சாட்டை சொல்கிறார். (இதே வாகன்வதி தான் அப்படி பொய் தகவல் சொல்லும் ஒரு சில நாட்கள் முன்பாக சி பி ஐ சிறப்பு நீதி மன்றத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசி ராசா அவர்களால் குறுக்கு விசாரணையின் போது பேந்த பேந்த விழித்தார்.) உடனே ராசா அவர்கள் ஜே பி சி தன்னையும் இது விஷயமாக நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரை விசாரிக்க மாட்டார்களாம். இது உலக வரலாற்றில் எங்காவது பார்த்தது உண்டா? இந்த அநீதியை எங்காவது கேள்விப்பட்டது உண்டா? சட்ட விரோதமாக நடக்கும் கட்டப்பஞ்சாயத்தில் கூட இரு தரப்பையும் அழைத்து தான் ஒரு பக்கமாக நீதி சொல்லி பார்த்தும் கேட்டும் இருக்கின்றோம். ஆனால் இதிலே உலகமே உற்று நோக்கும் ஒரு விஷயத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர் விசாரிக்கப்படவில்லை. அதை விட கொடுமை... அந்த குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா அவர்களே தானே வலிய வந்து "என்னை விசாரிக்கவும்" என யார் அந்த விசாரிப்பு குழுவை அமைத்தாரோ அந்த நாடாளுமன்ற சபாநாயகருக்கு 3 பக்க கடிதம் எழுதுகிறார். ஆதன் காப்பியை ஜே பி சி தலைவர் பி சி சாக்கோவுக்கும் அனுப்புகிறார். அதன் பிரதிகள் எப்படியோ பத்திரிக்கையில் வெளியாகின்றது.அந்த விசாரனை குழுவில் இருக்கும் ஒரு உறுப்பினர் திமுகவின் டி ஆர் பாலு, இன்னும் ஒரு உறுப்பினர் திருச்சி சிவா. இருவரும் பி சி சாக்கோவிடம் மன்றாடி பார்த்தும் அந்த கடிதங்களை குப்பையில் தூக்கி போட்டு விட்டு "ராசாவின் கடிதம் நிராகரிக்கப்பட்டது" என மார்தட்டுகின்றார் இந்த உலக உத்தமர் பி சி சாக்கோ. அப்போதே தெரியும் நீதி எப்படி வரும் என்று.
இதன் நடுவே பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் "ராசாவை விசாரணைக்கு அழைக்க வேண்டும் " என குரல் கொடுக்க வேறு வழி இல்லாமல் "ராசா எழுத்து மூலமாக பதில் அளிக்கலாம்" என சொல்லப்படுகின்றது. ராசாவும் சளைக்காமல் 17 பக்கத்துக்கு விளக்கம் அனுப்புகின்றார்.அதில் தொலை தொடர்பு துறை எடுத்த முடிவுகள் இந்த ராசா எடுத்த தனிப்பட்ட முடிவு இல்லை. பிரதமரும், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும். அப்போதைய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு குழு தலைவராக இருந்த அப்போதைய வெளிவிவகார துறை அமைச்சர் பிரணாப்பும் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என தெரிவித்து இருந்தார்.
அந்த விளக்கத்தின் படி மன்மோகன்சிங், ப.சிதம்பரம் இருவரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு முன்னர் தன்னை விசாரனைக்கு உட்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் அவர்கள் உத்தமர்களாக இருக்கும் பட்சத்தில். இல்லை. அது நடக்கவில்லை. அது போல பி சி சாக்கோ அவர்கள் திட்டவட்டமாக "பிரதமரும் , ப.சிதம்பரமும் விசாரணைக்கு வர தேவை இல்லை" என சொல்கிறார். இது தான் நாடாளுமன்ற கூட்டு விசாரனை கமிஷன் செயல்படும் விதமா? இது தான் நியாயமா?
பின்னர் ராசா அவர்களை விசாரிக்காமலேயே ஏப்ரல் 22ம் தேதி,2013 என நினைக்கிறேன். ஜே பி சி தலைவர் பி சி சாக்கோ ஒரு வரைவு அறிக்கை தயாரிக்கின்றார். சாக்கோ தன் வரைவு அறிக்கையை தன் தலைமையில் இயக்கும் விசாரணை குழுவினருக்கு கூட கொடுக்கும் முன்னரே பத்திரிக்கைக்கு கொடுத்து நாடாளுமன்ற உரிமை மீறல் செய்து தன் ராகுல் விசுவாசத்தை காட்டிக்கொண்டார்.ஆனாலும் ஜே பி சி வரைவு தீர்ப்பில் இதல்லாம் மன்மோகனுக்கு தெரியாது, ப.சிதம்பரத்துக்கு தெரியாது. பிரணாப்க்கு தெரியது ...ராசாவுக்கு மட்டுமே தெரியும். ராசா எடுத்த முடிவு தான் எல்லாம் என்னும் பாணியில் சொல்லப்பட உடனே அதாவது வரைவு அறிக்கை வெளியான 24 மணி நேரத்திற்குள் ஆ.ராசா அவர்களின் தன்னிலை விளக்கம் ஜே பி சி க்கு அனுப்பப்பட்டது.
இதோ இந்த பதிவில் இணைக்கட்ட "லிங்"ல் சென்று ஆ.ராசா அவர்களின் 112 பக்க தன்னிலை விளக்க கடித்தம் படித்து பாருங்கள். அதிலும் குறிப்பாக 72ம் பக்கம் எல்லாம் கொஞ்சம் ஆழ்ந்து படியுங்கள். பிரதமரை எத்தனை முறை ராசா அவர்கள் இந்த விஷயத்துக்கக நேரிடையாக அவரது அலுவலகத்திலும், அவரது வீட்டிலும், அவர் கூட்டிய அமைச்சரவை கூட்டத்திலும் சந்தித்தார், எத்தனை முறை கடிதம் மூலமாக தொடர்பு கொண்டு ஆலோசித்தார், அதில் எத்தனை முறை பிரதமர் அலுவலக அதிகாரிகள் குறிப்புகள் எழுதி பிரதமருக்கு அனுப்பி அதை முழுவதும் படித்து விட்டு பிரதமரும் குறிப்பு எழுதி இருக்கின்றர் என்றெல்லாம் விளக்கி எழுதியுள்ளார் ஆ.ராசா அவர்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக ஊதி பெரிதாக்கப்பட்ட பின்னர் ஒரு வாரம் கழித்து கூட பிரதமரிடம் தான் ஆலோசித்ததை சொல்லி இருக்கின்றார்.
இந்த 112 பக்க கடிதம் ஒரு புத்தகம் போல முதல் பக்கத்தில் "INDEX CONTENT" எல்லாம் போட்டு எந்த பக்கத்தில் என்ன தலைப்பில் விஷயம் இருக்கின்றது என ஒரு வரலாற்று சிறப்பு மிக்க புத்தகம் போல அமைந்துள்ளது. இதையும் ஆனால் சாக்கோ அவர்கள் அதை தன் நாற்காலிக்கு முட்டு கொடுத்து விட்டு இப்போது இந்த இறுதி அறிக்கையில் "ஒரு கேவலமான தீர்ப்பை" எழுதி முடித்துள்ளார். படித்து உண்மை அறியுங்கள். இதோ இந்த சுட்டியில் சென்று அந்த 112 பக்க ராசாவின் விளக்கத்தை ஆழ்ந்து படியுங்கள் நடுநிலையாளர்களே! படித்து பாருங்கள்!
http://www.scribd.com/doc/137506637/JPC-Written-Statement-of-A-Raja-Date-22-04-2013
அதை வாங்கி புட்டத்துக்கு முட்டுக்கொடுத்து விட்டு தன் முதலாளிகள் மன்மோகன் சிங்கையும், சோனியா அம்மையாரையும், காங்கிரசை வரும் காலத்தில் கைதாங்கலாக இமயமலை உச்சிக்கு அழைத்து செல்ல இருக்கும் தேவதூதன் பிரபல "லெக்தாதா" ராகுல்ஜி அவர்களையும் இவர்களுக்கு சற்றும் சளைக்காத குணங்கள் கொண்ட கோமான், சிவகங்கை பெற்றெடுத்த சின்ன பையன், பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்யாசத்தில் "வெற்றி" (????) பெற்ற சிங்கம் ப.சி அவர்களையும் காப்பாற்ற வேண்டியும் வரிந்து கட்டிக்கொண்டு "வரைவு அறிக்கை" யை "விரைவு அறிக்கையாக" கொல்லைப்புற வழியாக ஊடகங்களுக்கு கொடுத்து விட்டு நீதியை நிலைநாட்டி விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டு விட்டார் பி.சி சாக்கோ அவர்கள். இதற்கு "மூச்சை விட்டிருந்தால்" கூட நீதி தேவன் மன்னித்திருப்பான்.
வரைவு அறிகையை தாக்கல் செய்த அன்று பாராளுமன்றம் தொடங்கியதும் உ.புத்திரன் பி.சி சாக்கோ மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தது திமுக. "இது எப்படி ஜே பி சி யில் இருக்கும் எனக்கே அந்த "வ(வி)ரைவு அறிக்கை" வந்து சேராத போது இந்தியாவின் கடைக்கோடி கன்யாகுமரி டீக்கடை காரருக்கு கூட விரைவா போச்சுதுன்னு திருச்சி சிவாஅவர்கள் கொசின் கேட்க அன்றைக்கு பாராளுமன்றமே ரசாபாசமாகிடுச்சு. அப்டி என்னத்தான் அந்த "வ(வி)ரைவு அறிக்கை"ல இருக்குன்னு திருச்சி சிவா கேட்டாரு.
அதுக்கு முன்ன காங்கிரஸ் கைக்கூலி பி.சி சாக்கோ அந்த விரைவு அறிக்கைல என்னா சொல்லியிருக்காருன்னு ஒரு தபா நாமும் பார்த்துடனும்ல. இதாங்க அந்த அறிக்கை. "அதாவாது மன்மோகன் நல்லவரு, வல்லவரு, நாலும் தெரியாதவரு, வாயிலே விரலை வைத்தால் கூட ஒரு தபா சப்பிட்டு 'எச்சிவுட்டேன்'ன்னு சொல்லும் நல்ல பிள்ளை, அவரை ராசா என்னும் பெரம்பலூர் பூச்சாண்டி மயக்க சாக்லெட் கொடுத்து கூட்டிட்டு போய் "நான் கடவுள்" படத்தில் வருவது போல கண்ணை நோண்டி பிச்சை எடுக்க விட்டாரு. திருட்டு மாங்காய் அடிக்க சொல்லி அதிலே உப்பு தொட்டு துன்னுட்டு சப்பு கொட்டி கித்தாப்பா சிரிச்சாரு. மத்தபடி மன்மோகன் சிங்கு நெம்ப நல்லவரு. அதுமாரியே தான் சிதம்பரம் பையனும். குஞ்சி பிடிச்சு உச்சா போவக்கூட தெரியாம படுக்கைல உச்சா போவாருன்னு தர்காவுல மந்திரிச்சு கயித்த கட்டிகிட்டவரு, முனியசாமி கோயில்ல குனிய வச்சு நேத்திகடன் செஞ்ச பின்னாலக்க தான் வாயில ஒழுவுன வாணி கூட நின்னுச்சு, அத்தினி பச்ச மண்ணு ரெண்டும். ராசா பையன் தான் ரெண்டு பேரையும் கெடுக்க பாத்தான்" - இதான் நம்ம உத்தம புத்திரன் பி சி சாக்கோவின் "விரைவு அறிக்கை". கலைஞர் கூட "எங்கூட்டு பையன் ராசா, ஒசரத்திலும் அண்ணா தான் ..வெவரத்திலும் அண்ணாதான். எப்பத்திக்கும் பஷ்ட் மார்க்கு தான். அந்த ரெண்டும் தான் தத்தாரிங்க. அதுங்களை எங்கூட்டு பையன் கெடுத்தான்னு சொன்னா எந்த மடப்பயமொவன் நம்புவான். கேப்பைல கெரசின் வடியுதுன்னா கேக்குறவன் சைதை நுரைசாமியா தான் இருப்பான்"ன்னு ஒரே போடா போட்டாரு.
மக்களவை, மாநிலங்களவை ரெண்டிலும் 22,ஏப்ரல் 2013 வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அன்று திமுக எம் பிக்கள் இந்த பிரச்சனை எழுப்பி அந்த சாக்கோ ஒரு சைக்கோ, அந்த ஆளை டவுசர் கழட்டாம உட மாட்டோம்னு தாண்டி தோண்டில குதிக்க ...கூடவே பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்தும் சேர்ந்து குதிக்க மீராகுமார் சிரிச்சுகிட்டே கழுத்தை அறுத்துட்டாங்க. "சபை ஒத்தி வைக்கப்பட்டது"ன்னு. அது போல மாநிலங்களவை அமீத் அன்சாரியும் "அ யம் சாரி"ன்னு சொல்லிட்டு ஒத்தி வச்சுட்டாரு. அன்னிக்கு இதான்ப்பா நடந்துச்சு பாராளுமன்றத்திலே.
பின்னர் அந்த கூட்டுக்குழு உறுப்பினரில் ஒருவரான திருச்சி சிவா அவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவருக்கு பதிலாக வேறு ஒரு திமுக உறுப்பினர் அங்கே நியமிக்கப்பட வேண்டும். அந்த சின்ன இடையூறு கூட வேண்டாம் என நினைத்த காங்கிரஸ் அந்த ஒரு உறுப்பினர் பதவியை கூட திமுகவுக்கு கொடுக்கவில்லை. அப்படி கொடுப்பின் எங்கே அந்த குழுவில் தனது மெஜாரிட்டி பறிபோய்விடுமோ என்கிற பயம்.
இந்த நிலையில் தான் இன்று விசாரனை அறிக்கை - இறுதி அறிக்கை வெளியானது. அதே வரைவு அறிக்கையே "இறுதி அறிக்கையாக"!அது உத்தமபுத்திரன் பி.சி சாக்கோவால் இன்று(29.10.2013) பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரிடம் இன்று வழங்கப்பட்டது. "பிரதமரை ஆ.ராசா தவறாக வழி நடத்தினார்". இது தான் சாராம்சம் அந்த இறுதி அறிக்கையில். மேலும் "பிரதமரும், நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இதில் எவ்வித சம்மந்தமும் இல்லாதவர்கள்" . பிரமாதம். நான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல இதோ எதிர்வரும் டிசம்பர் 4 தேதி நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் வரும் மே மாதம் 2014 ல் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் இரண்டுக்கும் முன்பாக மன்மோகன், சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலையில் புனித நீர் ஊற்றியாகிவிட்டது. இனி அவர்கள் "அரசியல் உத்தமர்கள்". இதை உலகம் நம்பும்? இந்திய மக்கள் நம்புவார்கள்? ஹூம்... கேவலமாக ஆனது காங்கிரஸ் அந்த கத்துகுட்டி தலைவரால் என்பது மட்டுமே உண்மை. இந்த கத்துகுட்டியின் கையில் இனி இந்தியா கிடைத்தால் இந்தியா வெளங்கிடும்!
ஆனால் இந்த ஜே சி பி இறுதி அறிக்கை ஒன்றும் இங்கே முக்கியமானது இல்லை. நீதிமன்றம் இருக்கின்றது. அதிலே வழக்கு நடந்து கொண்டு இருக்கின்றது. இதிலே இனிமேல் உச்சநீதிமன்றம் பெரிதா? நாடாளுமன்றம் பெரிதா? என்னும் கூக்குரல்கள் ஒலித்து முடிக்க வேண்டும். எது பெரியது என முடிவுக்கு வரவேண்டும். இதல்லாம் நடக்கட்டும். பின்னர் அதை எல்லாம் பார்த்து கொள்வோம்.
இன்னும் நடக்க வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது. காங்கிரசுக்கு சாவுமணி அடிக்கும் பிரச்சனை இனி இதான். எப்படியும் பாராளுமன்றத்தில் அறிக்கையை சாக்கோ தாக்கல் செய்யனும். அதுக்கு முன்ன ஜே பி சி கூட்டத்தில் அதை தாக்கல் செஞ்சு ஒப்புதல் வாங்கனும்.அதை செஞ்சாங்கலான்னு தெரியவில்லை. பாராளுமன்றத்துக்கு அந்த அறிக்கை வந்தா அங்க விவாதம் இருக்கு. அதிலே ஆ.ராசா அவர்களே தனது வாதத்தை எடுத்து வைப்பாரு. அது ஒன்னும் தமிழக சட்ட சபை இல்லை. எல்லாம் லைவ் ரிலே. மக்கள் கவனிப்பாங்க. காங்கிரஸ் அரசே ,காங்கிரஸ் அரசே இதிலே இருந்து நீங்க தப்பிக்க ஒரே வழி தான் இருக்கு. கொஞ்ச நாள் ரெண்டல் பேசிஸ்ல தனபாலை அங்க கொண்டு போங்க. லைவ் டெலிகாஸ்ட் செய்ய செயா டி விக்கு மட்டும் உரிமை கொடுங்க. மேசை தட்ட த கு செமிழரசன், கொரத்து சமாரு, அணிசரசு, ரைக்கேல் மாயப்பன்ன்னு மேசை தட்டும் கூட்டத்தையும் கொண்டு போங்க. எவன் பேச்சும் எவன் காதிலும் விழாம பார்த்துப்பானுங்க. போங்கடா போக்கத்த பயலுவலா....
இனி பி சி சாக்கோ அய்யா அவர்கள் வெட்டியாய் பொழுதை கழிப்பார். விடாதீங்க காங்கிரஸார்களே, உடனே நாளை முதல் "நிலக்கரி சுரங்க ஊழல் ரெண்டு லட்சம் கோடியாம். அதை ஒரு பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து அய்யாவை தலைவராக்கி டிசம்பர் 4ம் தேதிக்கு முன்னதாக ஒரு நல்ல தீர்ப்பை சொல்லும் படி பணிக்கவும். அது முடிந்ததும் .... உங்களுக்கு என்ன குறைச்சல். அதான் ஏகப்பட்ட ஊழல்கள் உங்கள் அக்கவுண்டில் இருக்குதே. இனி சாக்கோவை பிஸியாகவே வைத்திருக்கலாம். ஓடுற ஓட்டம் மே மாதம் 2014 வந்துடும். பின்னே உங்களுக்கு இந்த கவலை எதும் இருக்காது.
இதில் இன்னும் ஒரு விஷயம்... ஆ.ராசா என்னும் தன் சக கேபினட் அமைச்சரின் வழிகாட்டுதலால் பிரதமர் நடக்கின்றார் எனில் இவர் என்ன மண்ணா? களிமண்ணா? பி சி சாக்கோ இதை பிரதமருக்கு செய்யும் விசுவாசமாக நினைத்துக்கொண்டு இபப்டி ஒரு அறிக்கை கொடுத்து அசிங்கம் செய்த நிலையில் இனியும் சொல்வார் பேச்சை கேட்கும் கேடு கெட்ட பிரதமர் இந்தியாவுக்கு தேவையா என்பதையும் அந்த பிரதமர் சார்ந்து இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு தேவையா என்பதையும் மக்கள் உணர வேண்டும். அதற்காக மோடி என்னும் கொலைகார கும்பலும் வேண்டாம். மூன்றாவது உருப்படியான அணி அமையட்டும். அது என்ன செய்கிறது இந்தியாவை எனவும் முயன்று பார்ப்போம்! மீண்டும் சொல்கிறேன். அந்த மூன்றாவது அணியும் உருப்படியான அணியாக இருக்கும் பட்சத்தில் இருந்தால் மட்டுமே இந்தியா உருப்பரும். இனி மக்கள் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும்!
FANTASTIC ARTICLE
ReplyDeleteதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,
ReplyDeleteதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.
appo inime thimuka congress kooda koottani vakkaathungareenga
ReplyDelete