*************************************************************************************
எனக்கு அப்போதான் அந்த டவுட் வந்துச்சு. பாப்பாதான் 1 வாரத்திலே கு.வ கத்துகிட்டாளே, பிறகு ஏன் 1 மாசமா அதையே செய்றா, டீச்சர் வேற எதுவும் இன்னுமா சொல்லிதரலை??
சரி, இன்னைக்கு ஜன்னல் வழியா பாத்துட வேண்டியதுதான்னு முடிவு செஞ்சு டீச்சர் வருகைக்காக காத்திருந்தேன்.
டீச்சர் வந்தாங்க. இப்போல்லாம் அவங்க முன்ன மாதிரி கல கலன்னு இருப்பதில்லை. அவங்க வீட்டுல என்ன பிரச்சினையோன்னு நெனச்சுகிட்டேன்.
பாப்பா பர பரன்னு தங்கமணி கிட்டே காபி, பிஸ்கட் எல்லாம் வாங்கி ரூம் உள்ளே கொண்டு வச்சுட்டு சிரத்தையா கதவ சாத்திகிட்டா. அவங்க காபி குடிச்சு முடிக்கட்டும்ன்னு 15 நிமிஷம் காத்திருந்து மெதுவா ஜன்னல் திறந்து பார்தேன். பாப்பா குரு வணக்கம் செஞ்சா.
"சரி..போதும் இன்னைக்காவது அடுத்த பாடம் போகலாம்"ன்னாங்க. அவங்க இன்னைக்காவதுன்னு கொஞ்சம் அழுத்தி சொன்னதுல ஏதோ உள்குத்து இருக்கும் போலயிருக்கேன்னு எனக்கு டவுட்.
நா சந்தேகப்பட்டது சரியா போச்சு. அவங்க கதற கதற பாப்பா காதுலயே வாங்கிக்காம ஒன்லி கு.வ தான். "இங்க பாரும்மா. என் பேர் கெட்டுடும். வேற எதுவும் சொல்லிகுடுக்கலைன்னு, அதனால இன்னைக்காவது அடுத்த பாடம் போகலாம்"னு கெஞ்சுனாங்க.
பாப்பாவும் கொஞ்சம் மனசு இறங்கி "சரி"ன்னுச்சு. உடனே டீச்சர் சந்தோஷமா "சரிடா செல்லம், நீ ரொம்ப நேரம் கு.வ செஞ்சதால கால் வலிக்கும், அதனால அந்த சோஃபால உக்காந்துக்கோ, இப்பொ நா ஆடுவதை பாத்துக்கோ"ன்னாங்க.
பாப்பா சோஃபா வில சாஞ்சு உக்காந்துகிட்டு அட்டானிகால் போட்டுகிட்டு " டீச்சர் முதல்ல குருவணக்கம் அப்புறம்தான் அடுத்த பாடம்" அப்டீன்னுச்சு. "இல்லம்மா, அதான் உனக்கு அது நல்லா வருதே, நேரா அடுத்த பாடம் போகலாம்"ன்னாங்க.
"ஊகூம். முதல்ல கு.வ" ன்னு சொல்லீட்டு வாயில விரல் போட்டுகிச்சு. சரி ஆடி தொலச்சுட்டா அடுத்த பாடத்துக்கு போகலாமேன்னு அவங்களும் பாப்பாவுக்கு முன்னாடி குருவணக்கம் செஞ்சாங்க. பாப்பா என்னவோ குருநாதர் மாதிரி உக்காந்து அவங்க வணக்கத்தை ஏத்துக்காம "டீச்சர் இது மாதிரியில்ல, நேத்திக்கு வச்ச மாதிரி"ங்குது.
"நேத்திகும் இப்டீதானே செஞ்சேன்"ன்னாங்க. "இல்ல வேற மாதிரி"ன்னுச்சு பாப்பா. சரின்னு அவங்களும் இன்னுமொரு தடவை வச்சாங்க. பாப்பாவுக்கு திருப்தியேயில்லை 4,5 தடவை அவங்க செய்துகாட்டியும்! அதுக்குள்ள 1 மணி நேரம் முடிஞ்சுது. "சரி இன்னைக்கு இது போதும்" அப்டீன்னு டீச்சர் சொல்லலை..பாப்பா சொல்லுது!!
என்னவோ பாப்பா பென்ட நிமுத்தறேன்னு முதநாள் சொல்லிட்டு உள்ளே போன டீச்சர் பென்டு கழண்டு வெளியே வந்தாங்க.
பாப்பாவும் டைகரோட விளையாட போயிட்டா. நா மெதுவா டீச்சர்கிட்ட கேட்டேன் "டீச்சர் தினமும் இந்த கூத்துதான் நடக்குதா"ன்னு.
அதுக்கு அவங்க "ஆமா அபிஅப்பா, எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை. ஒரு 6 மாசம் கழிச்சு கிளாஸ் எடுக்கலாமா"ன்னு கேட்டாங்க. உங்க பொண்ணுக்கு என்னால மட்டுமல்ல அந்த பத்மா சுப்ரமணியம் வந்தாகூட கத்துகுடுக்க முடியாது என்பதை எவ்வளவு டீசண்டா சொல்றாங்க!!
சரின்னேன். பிறகு பாப்பாகிட்ட கேட்டேன். "என்னடா பரத நாட்டியம் பிடிக்கலயா?"ன்னு. அதுக்கு பாப்பா "என்னய கேட்டா சேத்திங்க"ன்னுது. அந்த கால குழந்தைகளுக்கும் இந்த கால விசுக்கட்டான்களுக்கும் எவ்வளவு வித்யாசம். இங்க பாருங்க உஷா மேடம் பட்ட கஷ்டத்த.
மறுநாள் டீச்சரை கோவிலில் பார்த்தேன். "அபிஅப்பா! பாப்பாவுக்கு நல்ல குரல் வளம் இருக்கு. என் வீட்டுக்கு பக்கத்துல ஒரு பாட்டு சார் இருக்காரு, அவர்கிட்ட வேணா சேத்துவிடுங்க" அப்டீன்னாங்க.
"ஏன் டீச்சர் அவர்கிட்ட சேக்கனும்"ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க "அவர் வீட்டுக் குப்பையெல்லாம் என் வீட்டு வாசல்ல வந்து கொட்டிட்டு போறார்"
அப்டீன்னாங்க. எனக்கு ஒன்னும் புரியலை. அதுக்கும் அவர்கிட்ட பாப்பா பாட்டு கத்துகறத்துக்கும் என்ன சம்பந்தம்?
நான் தங்கமணிகிட்ட வந்து விஷயத்த சொன்னேன். அதுக்கு தங்கமணி " ஏன், பாட்டு வாத்தியார் ஸா...பா...ஸா..பா ன்னே சாவறத்துக்கா"ன்னாங்க.
முற்றும்