November 7, 2014
கமல் - அற்புதமான அறுபது! வாழ்க பல்லாண்டு!!
கமல் அவர்களை எனக்கு எப்போது இருந்து பிடிக்கும்??? யோசித்து பார்க்கின்றேன். திடீரென அவர் கதாநாயகனாக ஆனதில் இருந்து..... அல்லது திடீரென ஒரு நாள் குணா படம் பார்த்தேன், நடிப்பு பிடிச்சுது அதிலிருந்து பிடித்தது ... புன்னகை மன்னன் படத்திலே அருவில குதிக்கும் அந்த ஷணம் எனக்கு கமலை பிடித்து போனது... அன்பே சிவம் படத்தில் நொண்டி நொண்டி வரும் அழகை பார்த்து பிடித்தது... 16 வயதினிலே படத்தில் ஆத்தா ஆடு வளர்த்த நொடியில் இருந்து பிடித்தது... சிப்பிக்குள் முத்து வில் அப்புராணியா நடிச்சது முதல்... அப்புவாக அரை மனிதனாக ஆக்ட் குடுத்தது முதல்... அவ்வை சண்முகியில் கனல் கண்ணன் கையை முறுக்கும் போதிலிருந்து.... தசாவதாரத்தில் கொக்கியில் தொங்கிகிட்டே உச்சஸ்தாயில் ஓம் நமோ நாராயணாய.... மும்பை எக்ஸ்பிரசில் டவர் கிரேனில் தொங்கும் போது.... மூன்றாம் பிறையில் கடைசி காட்சியில் ஆடுடா ராமா ஆடுடா ராமா.... விஸ்வரூபத்தில் பத்து நொடியில் எதிரிகளை துவம்சம் செய்யும் போது.... இல்லை ... இதல்லாம் இல்லவே இல்லை...
குறத்தி மகன் என்ற ஒரு படம். நான் ரொம்ப சின்ன பையன் அப்போது. மயிலாடுதுறை சுந்தரம் தியேட்டர்... ஐந்து பெரிய வேப்பமரங்கள் இருக்கும் லேடீஸ் கவுண்டர் முன்பாக.. அந்த நிழலில் கார்த்தியாயினி பெரியம்மா இடுப்பில் (டிக்கெட் வாங்காமல் ... இது குழந்தைங்க.. பாருங்க இடுப்பிலே வச்சிருக்கேன்) அமர முடியாமல் அமர்ந்து (உள்ளே போனதும் இறங்கிடலாம்) படம் பார்த்த அன்றே எனக்கு கமல் அவர்களை பிடித்து போனது. கத்தி மாதிரி தைத்த டைட் பேண்ட் போட்ட ஒரு சிறு வேடம் அதில் அவருக்கு. இன்னும் சொல்ல போனால் மாஸ்டர் சேகரோ யாரோ தான் குறத்தியின் ( கே ஆர் விஜயா) மகன். மெயின் ரோல். இவருக்கு வி எஸ் ராகவன் பையன் ரோல் தான். சின்ன ரோல். நடிக்க சந்தர்ப்பமே இல்லாத ஒரு கேரக்டர். ஆனால் அதில் கூட அழகாய் தன் "கடமை"யை செய்திருப்பார். ஏனோ அந்த கண்கள் பிடித்து போனது. நியாயமாக இடுப்பில் அமர்ந்து டிக்கெட் கவுண்டரில் போய் படம் பார்க்கும் சிறுவனுக்கு அந்த குறத்தியின் மகனை தான் பிடித்து இருக்க வேண்டும். ஆனாலும் தனக்கு விதிக்கப்பட்டது இது தான் என தெரிந்தும் அதை செவ்வனே செய்யும் அந்த "தொழில் பக்தி" "தொழில் நேசிப்பு" தான் எனக்கு கமலிடம் பிடித்த விஷயம். ஒரு முறை பாரத்ரத்னா சச்சின் கிட்டே ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கிரிக்கெட் விளையாட வராவிட்டால் என்ன செஞ்சு இருப்பீங்க? என்கிற அதிமுக்கிய டீஃபால்ட் கேள்வி கேட்கப்பட்ட போது அவர் "டாக்டராகி இருப்பேன்" என்றெல்லாம் கதை விட வில்லை. அவர் சொன்ன பதில் "பந்து பொறுக்கி போடும் பையனாக இருந்திருப்பேன். ஆனாலும் அந்த வேலையில் கூட "மிகச்சிறந்த பந்து பொறுக்கி போடும் பையனாகவே இருந்திருப்பேன்".... இது தான் அவரை "பாரத்ரத்னா" வரை கொண்டு வந்து விட்டது. அதே போல கமல் அவர்களிடம் ஒரு முறை இதே கேள்வி வேறு விதத்தில் கேட்கப்பட்ட போது அதாவது "நடிக்க வராட்டி என்ன செஞ்சு கிட்டு இருந்திருப்பீங்க?" என்றதற்கு கமல் "நடிக்க முயன்று கொண்டு இருந்திருப்பேன்" ஒற்றை வரி பதில்.
ஆக தங்கள் துறையில் வெற்றிக்கொடி நாட்டிய இவர்கள் இருவருமே தங்கள் இலக்கு என்ன என்பதை தீர்மானித்து விட்டார்கள். அதை அடைய தீவிர உழைப்பில் இருந்திருக்கின்றனர். அதே போல தங்களுக்கு கிடைத்த இடத்தில் தன் பங்கை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் திடமாக இருந்துள்ளனர். அதுவே இவர்களை வெற்றியின் உச்சம் பார்க்க வைத்தது. இதுவே கமலை எனக்கு பிடிக்க காரணமாகியது.
அதே போல கமல் அவர்கள் மூளை எதையோ அல்லது எதையாவது எப்போதுமே தேடிக்கொண்டே இருந்து கொண்டிருந்தது..கொண்டிருக்கின்றது... திடீரென கவிதை எழுதுவதும், பாடல் பாடுவதும், இலக்கியம் பேசுவதும், கம்யூனிசம், நாத்திகம், பார்ப்பனீயம், தீவிரவாதம், சமூகம் என்பன போன்ற கடினமான விஷயங்களில் தன் வெளிப்பாடுகளை குழப்பமில்லாமல் ஆனால் புரிந்து கொள்ள தெளிவற்றதாக சொல்லி வருவதும் பிடிக்கும். "கடவுள் இல்லைன்னு சொல்லலை. இருந்தா நல்லா இருக்கும்" போன்ற வசனங்கள் ஒரு ஆராய்ச்சிக்குண்டான அளவிலான குழப்பமான தெளிவு. (அய்யோ ...கமல் மாதிரியே வந்துடுச்சே இந்த பத்தி)
அதே போல மூன்றாம் பிறை என்னும் படத்துக்கு கமல் அவர்களுக்கு தேசிய விருது தரப்பட்ட போது ... ஸ்ரீதேவி படம் முழுக்க பின்னி பெடல் எடுத்து நடித்தும் ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கொடுக்காமல் கடைசி காட்சியில் கமல் நடித்த ஒரு காட்சிக்காக கமலுக்கு தேசிய விருது கொடுத்து விட்டார்கள் என அங்கலாய்த்த பத்திரிக்கைகள் இந்த ஆதங்கத்தை கமல் அவர்களிடமே நேரிடையாக கேட்க மிகவும் இயல்பான ஒரு உண்மையை அவர் சொன்னார் " முடியாது... ஸ்ரீதேவிக்கு இந்த விருதை தந்திருந்தால் அவரே இதை ஒத்துக்கொள்ள மாட்டார். ஏனனில் இந்த விருது "சிறந்த நடிகருக்கான" ஆண்பால் விருது. இந்த விருது எனக்கும் ஸ்ரீதேவிக்குமான போட்டி அல்ல. இப்போது சிறந்த நடிகை விருது வாங்கியவருக்கும் ஸ்ரீதேவிக்குமிடையேயான போட்டி. எனவே எனக்கு கொடுத்த விருதை ஸ்ரீதேவிக்கு கொடுத்திருக்கலாம் என சொல்வது ஸ்ரீதேவியின் பெண்மை தன்மையை பரிகசிக்கும் விஷயமாகும்" என சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். இந்த பதிலில் இருக்கும் புத்திசாலித்தனமான உண்மையை பாருங்கள். இதை விட சிறந்த காரணம் எனக்கு ஏதும் இருக்க முடியுமா கமலை பிடித்துப்போவதற்கு?
ஒருகாலகட்டம் வரை தன் நடிப்பு திறமையை வெளிக்காட்ட வேண்டும் வேண்டும் என்கிற தீவிர வெறியில் இருந்த கமல் பின்னர் ஸோலோ பர்மார்மன்ஸ் என்பதை "டீம் ஒர்க்" ஆக ஆக்கிக்கொண்டார். ஏனனில் மக்கள் இவரை சிறந்த நடிகர் என ஒத்து கொண்டு விட்டதை பல விருதுகள் இவருக்கு தெரிவித்து விட்டன. எனவே "டீம் ஒர்க்" என்பதற்கு தயார் ஆனார்.
நன்றாக நடிக்க வந்தவர்களை இனம் கண்டு கொண்டார். சோபிக்காத பலரை இவர் சோபிக்க வைத்தார். அது போல மிகப்பழைய நடிகர்கள் "நடிக்க" தெரிந்த நடிக நடிகையர்களை, பாடகர்களை இவர் தன் டீமுக்கு உள்ளிழுத்து வந்தார்
.
எஸ். வரலெஷ்மி ..... மிகப்பெரிய பாடகியும் நடிகையும்... இவர் குரலில் அடிக்கும் பிருகாக்கள் கிட்ட தட்ட அந்த கால டி ஆர் மகாலிங்கம் அவர்களை போட்டி போட அழைக்கும். அவரை தன் குணா படத்தில் தாசியாக நடிக்க வைத்து "உன்னை நானறிந்தால்" என்னும் பாடலில் ஒரு பல்லவி பாட வைத்து இருப்பார். அந்த பல்லவி முடிவில் ஒரு பிருகா அடிப்பார் அந்த பாட்டி பாருக்கள்... யப்பா... பிரம்மாண்டம்... அதே படத்தில் அந்த காலத்தில் மனோகரா படத்தில் நடித்த காகா ராதாகிருஷ்ணன் என்னும் தாத்தாவை அழைத்து வந்து டாக்டராக நடிக்க வைத்து இருப்பார். அடடே அடடே.... கமல் மட்டுமே இதை செய்ய இயலும்....
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்... ஒரு பிரபல நடிகையை ஒரு நகைச்சுவை நடிகர் தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க அழைத்த போது அந்த நடிகை "நோ" சொல்லி விட்டாராம். அதாவது அந்த நடிகைக்கு தன் நடிப்பின் மீதும் அந்த கதையின் மீதும் நம்பிக்கை இல்லை. தன் சதையின் மீது இருக்கும் நம்பிக்கை அந்த கதையின் மீது இல்லா சினிமா உலகத்தில் இவர் ஒரு கதைக்கு கோவை தமிழ் பேச வேண்டும் என்பதற்காக நகைச்சுவை நடிகை கோவை சரளாவை தனக்கு கதாநாயகியாக ஆக்கி கொண்டு ஒரு டூயட் பாடல் கூட பாடி நடித்து அந்த நடிகைக்கும் மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்தார்... அப்படி கூட சொல்லக்கூடாது... நடிப்பு என்னும் அந்த கலைக்கு மரியாதை கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.
அது போல நாசர், வடிவேலு, வையாபுரி, பசுபதி, டெல்லி கணேஷ், மணி வண்ணன், ஜெமினிகணேசன், சந்தானபாரதி, ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த், ஜெயராம், பசி சத்யா, சண்முகசுந்தரத்தம்மாள், எஸ்.என்.பார்வதி பாட்டி, யூகிசேது , ஊர்வசி, ரேவதி, கள்ளபார்ட் நடராசன், ரோகினி அத்தனை ஏன் பேராசிரியர் ஞானசம்பந்தம் வரை திறமை இருக்கும் யாரையுமே இவர் விட்டு வைத்தது இல்லை. அதே போல கமலின் சிங்காரவேலன் படத்தில் வடிவேலு இசைக்கருவிகளை துடைக்கும் மைக்கேல் ஜாக்சன் தங்கை என்னும் கதாபாத்திரத்தில் வருவார். (அதில் வடிவேலு அடிக்கும் லூட்டிகளை இப்போது பாருங்கள் .... கிட்ட தட்ட குறத்திமகன் படத்தில் கமல் நடித்தது போல தன் வேலையை அழகாய் செய்தமை புரியும்)அவர்கள் கூட நடிக்கும் போது இவர் அடக்கி வாசித்து அவர்கள் நடிக்க வழி விடும் அழகிய "டீம் ஒர்க்" வேலையினை கச்சிதமாக செய்வார்.
இப்போ பாருங்க ஒரு உதாரணத்துக்கு ஒரு நாதஸ்வர கச்சேரி இருக்குதுன்னா அதிலே நாதஸ்வரம், தவில், தாளம், சுருதி எல்லாம் இருக்கும். எல்லாம் அதது அததன் வேலையை ஒழுங்கா செஞ்சா மட்டுமே கச்சேரி முழுமை அடையும். கேட்கவும் நன்றாக இருக்கும். தவில் என்பது யம பேரிகை என சொல்வார்கள். சத்தம் பெரிதாக இருக்கும். இதே வளையப்பட்டி அவர்கள் அந்த தவில் இசையில் தனித்துவமான ஆள் என்பதால் ஒரு கச்சேரியில் அவர் தன் திறமை மட்டும் காண்பித்து தடால் மொடால் என வாசித்து கொண்டிருந்தால் அது சுமமான கச்சேரியாக இருக்காது. அடக்கி வாசிக்க வேண்டிய நேரத்தில் அடக்கி வாசித்து தனி ஆவர்த்தனத்தில் பிளந்து கட்ட வேண்டும். அதைத்தான் கமல் செய்து கொண்டு இருக்கின்றார்.
அவ்வை சண்முகி படத்தில் ஒரு காட்சி. நாசர், டெல்லி கணேஷ், ஜெமினிகணேசன், இவர்களுடன் கமல் அவ்வை சண்முகியாக நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி. அதிலே நாசர் ஒரு பாய். அவர் அய்யர் வேஷமிட்டு அந்த வீட்டில் சமைக்க வந்திருப்பார்.அதுவும் ஊமையாக. டெல்லி கணேஷ், ஜெமினி ஆகியோர் அய்யர் கதாபாத்திரம். இதிலே டெல்லி கணேஷ் அவர்கள் ஜெமினி எது சொன்னாலும் ஆமாம் ஆமாம் என சொல்லும் ஜால்ரா வேடம். இந்த ஊமை அய்யர் நாசரை "மந்திரம் தெரியுமா உனக்கு? எங்கே காயத்ரி மந்திரம் சொல்லு" என சொல்ல பாய் ஆன நாசரோ ஊமை பாஷையில் பள்ளிவாசலில் ஓதும் பாங்கு சொல்ல ஆரம்பிக்க ஜெமினி, டெல்லிகணேஷை இடைமரித்து "இவன் சமைக்க தானே வந்திருக்கான். புரோகிதமா பண்ண வந்திருக்கான். அதல்லாம் வேண்டாம்" என சொல்ல டெல்லி கணேஷ் தன் முதலாளிக்கு ஜால்ரா போடும் விதமாக அதாவது நாசரை வேலைக்கு சேர்த்து கொள்ளும் விதமாக அந்த ஊமை பாஷை பாங்கு சொல்வதையே "ஆகா அண்ணா என்னா பிரமாதமா காயத்ரி மந்த்ரம் சொல்றான் பாருங்கோ... அப்படித்தான் ஓம் பூர் புவஸ்ஸூவ ஹூம் சொல்லு சொல்லு தத் சவிதுர்வரேண்யம் ம்.. அப்படித்தான் பர்கோ தேவஸ்ய தீமஹி சபாஷ் ..சொல்லு தியோ யோ ந: ப்ரசோதயாத்... அண்ணா என்னா ஸ்பஷ்டமா காயத்ரி மந்த்ரம் சொல்றான் பாருங்கோ... போதும் டா போதும்... இன்னிக்கு என்ன ஆவணி அவிட்டமா சொல்லிண்டே இருக்காய்.. போதும்டா" .... இந்த காட்சியில் நடிப்பு என்பது டெல்லிகணேஷ், நாசர், ஜெமினி ஆகியோர் மட்டுமே. அவ்வை சண்முகியாகிய கமல் அமைதியாக தவித்து கொண்டு நிற்க மட்டும் தான் வேண்டும். தவிக்கிறேன் பேர்வழின்னு கொடுத்த காசுக்கு மேலே கூவி அதிகமா தவிச்சா எல்லார் பார்வையும் கமல் மேல் தான் இருந்திருக்குமே தவிர்த்து அந்த நகைச்சுவை எடுபட்டிருக்காது. இது தான் கமல் அவர்களின் "டீம் ஒர்க்" .மற்றவர்களை நடிக்க வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பது. ஒட்டு மொத்த சினிமாவையும் "நல்லா இருக்கு" என பார்வையாளரை சொல்ல வைப்பது.
அதே போல அதே படத்தில் ஒரு காட்சி. உச்சபட்சமாக ஜெமினி மீது பார்வையாளர்களுக்கு கோவம் வர வேண்டும். ஜெமினியில் சாதித்திமிர் தெரிய வேண்டும் என ஒரு காட்சி. ஒரு கண்ணாடி அறைக்குள் ஜெமினியிடம் கமல் பெண் கேட்க வேண்டும். பெண் மீனா கண்ணாடி அறையின் வெளியே நின்று அதை கவனிக்க வேண்டும். ஜெமினி பேசும் வசனம். "தோ பாருங்கோ... (மேலே மூன்று படங்கள் மாட்டி இருக்கும்) முதல் படத்தில் இருப்பது ராமச்சந்திரய்யர் என் தோப்பனாரின் தோப்பனாரின் தோப்பனார். அடுத்து வெங்கட்ராமய்யர் என் தோப்பனாரின் தோப்பனார், அடுத்து கிருஷ்ணமூர்த்தி அய்யர் என் தோப்பனார்... இந்த வரிசையில் பாண்டி ... நன்னாவா இருக்கும்... சிரிச்சுண்டே பாருங்கோ ..வெளில என் பொண்ணு நம்மை கவனிச்சுண்டே இருக்கா" - இங்கே கமல் அந்த பழம்பெரும் நடிகர் ஜெமினிக்கு நடிக்க வாய்ப்பை விட்டு கொடுப்பது அழகியலின் உச்சம். அஃப்கோர்ஸ் இதல்லாம் கமல் செய்யவில்லை டைரக்டர் தான் செய்தார் என்பன போன்ற வாதங்கள் எல்லாம் கமல் விஷயத்தில் எடுபடாது. கமல் தான் அடக்கி வாசிச்சார் என்பதே உண்மை.
இப்படியாக கமல் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். இவர் இந்த 50 வருட திரையுலக அவரது காலத்தில் அவர் அடைந்த உச்சமும் இல்லை. அதே போல அவர் அடைந்த அவமானங்களும் இல்லை. "சினிமா 100" என்னும் விழாவில் சில சில்லுண்டிகள் அமர்ந்திருக்க கமல், ரஜினி, இளையராஜா போன்ற தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் அவர்கள் பின்னால் தங்கள் சப்தநாடிகளும் அடங்கிப்போய் அவமானத்தால் கூசிக்குறுகி நின்றதும், அதே போல விஸ்வரூபம் பட பிரச்சனையில் தன் சொத்துகள் எல்லாம் கைவிட்டு போகும் நிலைக்கு ஆனதும், இந்த நாட்டை விட்டே போகிறேன் என மனம் வெதுப்பும் அளவுக்கு போனதும் கூட நடந்தது. அதையும் தாண்டி கமல் நிற்கின்றார். அவரை சினிமா 100 விழாவில் அவமானம் செய்த அம்மையார் அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பாகி பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த போது அவருக்கு பூமாரி பொழிந்து வரவேற்பு கொடுக்கப்பட்டதை கமல் அவர்களும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பார். அவருக்கு அவர் நடித்த மகாநதி திரைப்படத்தில் அவர் பேசிய ஒரு வசனம் நியாபகம் வந்திருக்கும். "ஒரு நல்லவனுக்கு கிடைக்கும் அத்தனை மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைக்குதே"... அவருக்கு மட்டுமா நியாபகம் வந்திருக்கும் ... நமக்கும் தான். ....
இன்றைக்கு கமல் அவர்களுக்கு 60 ஆண்டு மணிவிழா பிறந்தநாள். இந்த இனிய நாளில் அவரை வாழ்த்துகின்றேன். இன்னும் அவர் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும். செய்வார்.
October 17, 2014
அம்மா - தீபாவளி ரிலீஸ்!
இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அளித்தது சட்டப்படியாகன்னு ஒரேயடியாகன்னு சொல்ல முடியாவிட்டாலும் சட்டத்துக்கு உட்பட்டு மனிதாபிமானத்துடன் கூடிய ஒரு விவேகமான தீர்ப்பு. இதில் அதிமுகவினர் கொண்டாட எதுவுமில்லை. இன்று நீதியரசர் தத்து அவர்கள் அங்கே கேட்ட கேள்விகள் அதிமுகவினர் நாக்கை பிடிங்கி கொள்ளும் அளவுக்கானது.
இன்னும் சொல்லப்போனால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் யாருமே வாதிடவில்லை. ஒப்புக்கு சப்பானியாக ரெட்டை நாக்கு பவானிசிங் கூட கலந்து கொள்ளவில்லை. சட்டப்படி தேவையும் இல்லை என்றே நினைக்கிறேன். 10 வருடத்துக்கு மேல் தண்டனை எனில் உச்சநீதிமன்றத்திலும் அரசு தரப்பு வக்கீல் தேவை. அரசு தரப்பு வழக்கறிஞர் தான் சொல்ல வேண்டியதை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டாரே! தேவைப்பட்டால் அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு விட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் உண்டு/ இல்லை என்று சொல்லி விடலாம். ஆனால் தண்டனை நிறுத்தி வைக்கும் அவசியம் ஏன் வந்தது என ஒரு கேள்வி எழலாம்.
ரொம்ப சிம்பிள்... நான் இதற்கு முன்பு எழுதிய பதிவில் சொன்னது போல விசாரணை குற்றவாளிக்கு தான் ஜாமீன் கொடுக்க முடியும். இவரோ குற்றவாளி என தீர்ப்பு சொல்லப்பட்டு நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் என முழுமை பெற்ற குற்றவாளி. ஆக குற்றவாளிக்கு பரோல் தான் கொடுக்க முடியும். ஆனால் இவர்கள் அப்பீல் செய்து விட்டிருந்தால் அதாவது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தால் அதன் பின்னர் ஜாமீன் கேட்டிருந்தால் ஜாமீன் கொடுக்கலாம். ஆனால் மேல் முறையீடு செய்வோம் என ஃபாலி நாரிமன் உறுதிமொழி அளித்ததால் "தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து" கவனிக்கவும் ரத்து செய்து அல்ல... நிறுத்தி வைத்து "ஜாமீன்" வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். ஆனால் தீர்ப்பில் கை வைக்கவில்லை. அதாவது "ஜெயலலிதா குற்றவாளி" என்கிற தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கைவைக்கவில்லை. இதுவே அதிமுகவுக்கும் ஜெயாவுக்கும் மிகப்பெரிய அடி.
வாதிட ஆரம்பிக்கும் முன்பே ஃபாலிநாரிமன் அவர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் திரு.ராம்ஜெத்மலானி போல நீதிபதி குன்ஹா தீர்ப்பை விமர்சிக்கவில்லை. முன்னுதாரணங்களை அடுக்கவில்லை. தனக்கு என்ன தேவையோ அதை மட்டும் கேட்டார். அதற்கான காரணம் சொன்னார். அதாவது..."நான் நீதியில் குறுக்கிடவில்லை. அதை எல்லாம் மேல் முறையீட்டில் வாதமாக வைத்து கொள்வோம். ஆனால் 17 விதமான நோய்கள் என் கட்சிகாரருக்கு இருக்கின்றது. உடல் எடை 4 கிலோ குறைந்து விட்டது. உயர்சிகிச்சை அவசரமாக தேவைப்படுகின்றது..." என்றே ஆரம்பித்து வாதத்தை வைத்தார். ஒரு கட்டத்தில் "லட்சக்கணக்கான தொண்டர்கள்..." என சொல்ல ஆரம்பிக்கும் போது நீதிபதிகள் "எங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் பற்றி கவலை இல்லை. அதல்லாம் இங்கே தேவையும் இல்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு உங்கள் வாதத்தை வைக்கவும்" என நெற்றிப்பொட்டில் அடித்தால் போல சொல்லிவிட்டனர். அதே போல திரு.ஃபாலி நாரிமென் அவர்களும் அதன் பின்னர் அது பற்றி வாயை திறக்கவில்லை.
ஒரு கட்டத்தில் நீதிபதிகள் "நாங்கள் ஜாமீன் கொடுத்தால் நீங்கள் வழக்கை தாமதம் செய்வீர்கள், நாங்கள் ஜாமீன் கொடுத்தால் அப்படி செய்வீர்கள், நாங்கள் ஜாமீன் கொடுத்தால் இப்படி செய்வீர்கள்" என வரிசைக்கிரமமாக ஜெயா முந்தைய காலகட்டங்களில் செய்த மாய்மாலங்களை அடுக்கி கொண்டே வர வர திரு.ஃபாலிநாரிமென் அவர்கள் அந்த ஒவ்வொறு மாய்மாலங்களுக்கும் "இந்த முறை அப்படி செய்ய மாட்டோம் , இந்த முறை அப்படி நடக்காது" என்று வாய் மொழி உறுதி கொடுத்து கொண்டே வந்தார். இறுதியாக "நான் இதற்கான உத்தரவாதத்தினை எழுத்து பூர்வமாக வேண்டுமாகின் தருகின்றேன்" என சொல்ல நீதிபதிகள் "வேண்டாம். நீங்கள் ஒரு சீனியர் வக்கீல்.. வாய்மொழி உத்தரவாதமே போதுமானது. அதுவும் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நேரிடையாகவே வாய்மொழி உத்தரவாதம் கொடுத்துள்ளீர்கள். போதுமானது" என சொல்லி "கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அத்தனை ஆவணங்களையும் ... அது எத்தனை பக்கம் வரும்... " என கேட்க அதற்கு ஃபாலி நாரிமன் அவர்கள் "அது சுமார் 35,000 பக்கங்கள் வரும் கனம் கோர்ட்டார் அவர்களே" என சொல்லிவிட்டு "எனக்கு 3 வாரம் அவகாசம் தாருங்கள் அதற்குள் அந்த 35,000 பக்க ஆவணங்களை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சமர்பித்து மேல்முறையீடு செய்து விடுகின்றேன். அதே போல மேல் முறையீடு செய்த பின்னரும் கூட இத்தனை மாதத்தில் முடிக்க வேண்டும் என நீங்கள் உத்தரவிட்டாலும் அதையும் ஏற்கிறேன். ஆனால் இன்றைக்கு இடைக்கால ஜாமீனாவது வழங்குங்கள்" என கேட்க அதற்கு நீதிபதிகள் "முன்று வாரம் என்ன மூன்று வாரம் நாங்கள் நான்கு வாரம் தருகின்றோம். டிசம்பர் 18, 2014க்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த 35,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை புத்தகமாக ஸ்பைரல் பெண்டிங் போட்டு சமர்பித்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 18ல் விசாரணைக்கு இங்கே வரும் போது அந்த தகவலை உறுதி செய்ய வேண்டும். மேல் முறையீடு செய்த பின்னர் அன்றிலிருந்து மூன்று மாதங்களில் வழக்கை முடிக்க தேவையான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். இதற்கு ஒத்து கொண்டால் இடைக்கால ஜாமீன் வழங்குகின்றோம். டிசம்பர் 18,2014 குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் இந்த இடைக்கால ஜாமீன் டிசம்பர் 18,2014 அன்று தானாகவே ரத்து ஆகி விடும். (மீண்டும் விசாரித்து ரத்து என்பது இல்லை. இன்றைய தீர்ப்பின் படியே ரத்து ஆகும்) அதே போல மேல் முறையீடு செய்தது முதல் 3 மாதத்தில் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே நேரிடையாக மேல் முறையீட்டை முன்வந்து விசாரிக்கும்" என தீர்ப்பு கொடுத்து விட்டனர்.
இன்னும் ஒரு படி மேலே போய் ஃபாலி நாரிமன் அவர்களிடம் இந்த தீர்ப்புக்கு பின்னர் நீதிபதிகளை வசைபாடுவது அல்லது பாராட்டுவது எல்லாம் கண்டிப்பாக கூடாது. குன்ஹா, சந்திரசேகரா ஆகியோர் கன்னடியன் என சொல்லி வசைபாடுவது எல்லாம் கண்டிப்பாக கூடாது. நானும் கூட கன்னடியன் தான். இப்போது ஜாமீன் கொடுக்கின்றேன். நானும் கூட கன்னடியன் தான். அதே போல சுப்ரமணியசாமி போன்றவர்களை தொல்லை செய்ய கூடாது. ஏற்கனவே நீதிபதிகளை அவமதித்ததுக்காக இந்த உச்சநீதிமன்றம் கடுமையாக வருத்தம் தெரிவித்தது என நீங்கள் நேரிடையாக ஜெயலலிதாவிடம் தெரிவிக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தனர்.
இதிலே இன்னும் ஒரு விசேஷம் என்னவெனில் 100 கோடி ரூபாய் அபராதம் என்பதாலும், நான்கு வருடம் சிறை என்பதாலும் ஷ்யூரிட்டி எல்லாம் என்ன என்பதை கர்நாடக உயர்நீதிமன்றம் தான் இரு நபர் சால்வன்சி டாக்குமெண்ட் எல்லாம் கொடுத்து குறைந்த பட்சம் ஒரு வட்டாட்சியர் அளவிலான அதிகாரி கொடுத்த சால்வன்சி டாக்குமெண்ட் வேண்டும்... சொத்து ஜாமீன்) ... இதல்லாம் கர்நாடக உயர்நீதிமன்றம் செய்ய போகின்றதா அல்லது அது மீண்டும் திரு. குன்ஹா அவர்களை கைகாட்டி விடப்போகின்றதா என இனிமேல் தான் தெரியும். இன்னும் என்ன என்ன கண்டிஷன்கள் என இன்னும் படித்து முடிக்கவில்லை. அவர்கள் தங்கி இருக்கும் வீட்டில் தற்போதைய முதல்வர் போய் தினமும் ஆலோசனை செய்யலாமா என்றெல்லாம் கண்டிஷன்களை இனி படித்தால் மட்டுமே புரியும். கிட்ட தட்ட வீட்டுச்சிறை என்பது போலத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் கண்டிப்பாக கொடநாடு பங்களாவுக்கோ, வழக்கில் இருக்கும் பையனூர், சிறுதாவூருக்கோ போக முடியாது. ரேஷன் கார்டு இருக்கும் வேதா நிலையம் தான் கதி என்றும் நினைக்கிறேன். இனிமேல் முழுவதும் படித்தால் தான் தெரியவரும். ஆனால் நாளை சனிக்கிழமையும் பரப்பன அக்கிரஹார நீதிமன்றம் உண்டு என நினைக்கிறேன். என்ன நடக்க போகின்றது என பார்ப்போம்.
மீண்டும் சொல்கிறேன். திமுகவுக்கு ஜெயா போல காழ்ப்புணர்வு என்பதெல்லாம் எப்போதும் கிடையாது. நள்ளிரவில் கைது செய்வது, ஒரு கட்சி தலைவரை கைது செய்து வெயில் வாட்டி எடுக்கும் திருச்சி சிறையில் அடைத்து ஜாமீனில் வெளியே வரும் போது மீண்டும் கைது செய்வது, நீதிமன்றம் நீதிமன்றமாக போலீஸ் கூண்டு வண்டியில் வைத்து அலைக்கழிப்பது என எதுவும் காழ்ப்புணர்வு என்பது எப்போதும் கிடையாது. மேலும் முக்கியமான பண்டிகை காலத்தில் ஜெயேந்திரர் என்னும் ஒரு மதத்தலைவரை சிறையில் வைத்து பழி வாங்கியது போல இப்போதும் தங்களை மூச்சுக்கு மூச்சு தீயசக்தி மண்ணாங்கட்டி தெருப்புழுதி என தூற்றும் அவர்களை சிறையில் வைத்து பார்க்க வேண்டும் என நினைக்கும் வக்கிர புத்தி திமுகவுக்கு கிஞ்சித்தும் இல்லை. சட்டத்தை ஏமாற்றி சொத்து குவித்த ஜெயா மீது வழக்கு தொடரவும் அந்த வழக்கு நியாயமாக நடக்கவும் திமுக தன் ஜனநாயக கடமையை செய்தது. அவ்வளவே. தீர்ப்பு வந்த போது அதை கொண்டாடவும் இல்லை. நமட்டு சிரிப்பு சிரிக்கவும் இல்லை. அதே போல தீர்ப்பு வந்த பின்னர் மற்ற கட்சிகள் பவானிசிங் வேண்டாம், ஜாமீன் கொடுக்காதே என்றெல்லாம் ஆர்ப்பரித்த போது கூட அமைதிகாத்தது. சொல்லுவாங்களே ஒரு பழமொழி... "புள்ளய பெத்தவ பொத்திகிட்டு படுத்து கிடக்கா, பார்க்க வந்த பங்காளி செறுக்கி பொங்க வச்சுகிட்டு இருக்கா" என்பது போலத்தான் திமுக அமைதியாக இருந்தது. பாமக, தேமுதிக ஆகியவை பொங்கி தீர்த்தன.
இனி அதன் ஜனநாயக கடமையை மேல் முறையீட்டில் சட்டப்படி, ஜனநாயகக்கடமையை செய்யும். அது வரை மக்கள் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகைகளை நிம்மதியாக கொண்டாட வேண்டி இந்த தீர்ப்பையும் அமைதியான முறையில் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் என்றே நினைக்கிறேன்! ஒரு காலத்தில் ஜெயலலிதா நடித்த படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் ஏங்கிய காலத்தில் இருந்து இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவார்களா என தொண்டர்கள் ஏங்கும் நிலை என்பது ஒரு அபரிமிதமான பரிணாம வளர்ச்சி. வாழ்க தமிழ்நாடு! மார்ச் 18,2015க்குள் நீதி கண்டிப்பாக நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.
Labels:
உச்சநீதிமன்றம்,
சொத்து குவிப்பு வழக்கு,
ஜாமீன்,
ஜெயா
October 16, 2014
முகநூல் என்பது மு.க நூலாகவும், மு.க.ஸ்டாலின் நூலாகவும் ஆனது!
![]() |
தளபதியின் தமிழ் முகநூல் பக்கம் |
அது மார்ச் மாதம் 31ம் தேதி, 2011ம் தேதி... தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்திருந்த நேரம். தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராகவும், நம் பாசமிகு தளபதி அவர்கள் துணை முதல்வராகவும் கொலுவீற்றிருந்து நல்லாட்சி நல்கிய காலம் அது. அன்று தான் நம் துணை முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள் இணையத்தில் முகநூல் பக்கம் முதன் முதலாக நுழைகின்றார். அதற்கு முன்பே டாட்.காம் வழியே இணையத்தில் அவர் கோலேச்சிக்கொண்டிருந்தாலும் Facebook என்னும் சமூகவலைதளமான "முகநூலில்" அப்போது தான் நுழைகின்றார். அதன் பின்னர் ஏப்ரல் 3ம் தேதி 2011 அன்று ஒரு சோதனை பதிவிடுகின்றார். என்னவென்று தெரியுமா?
"ஆதரிப்பீர் உதயசூரியன்"
. இது தான் அந்த ஒற்றை வரி. தன் நாடி நரம்புகளில் திமுக மீதும், அதன் இரு வண்ண கொடி மீதும், அதன் உதயசூரியன் சின்னத்தின் மீதும், அதன் கொள்கைகள் மீதும் அதி தீவிர வெறி கொண்ட ஒருவரால் மட்டுமே இது சாத்தியம். ஆத்திகர்கள் புதிதாய் ஒரு பேனா வாங்கினால் எழுத ஆரம்பிக்கும் போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பர். சுயநலமிகள் தன் பெயரை எழுதிப்பார்ப்பர். ஆனால் தளபதி அவர்கள் விழிப்பிலும், உறக்கத்திலும் உதயசூரியனை மனதில் சுமப்பவர் என்பதால் முதல் பதிவே "ஆதரிப்பீர் உதயசூரியன்".
இன்னும் சொல்லப்போனால் அப்போது முகநூல் வழி பிரச்சாரம் செய்தது என்பது தளபதி அவர்களை தவிர்த்து விரல் விட்டு எண்ணும் அளவுக்கே திமுகவின் சார்பாய் இருந்தனர். இன்னும் மிகக்குறிப்பாக சொல்லப்போனால் 2011ல் மே மாதம் சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்த பின்னர் தான் "இணையதள திமுக" என்னும் முகநூல் குழுவை மெல்வின் பாக்கியநாதன், டான் அசோக் உள்ளிட்ட சிலர் சேர்ந்து ஆரம்பித்தனர். இன்று பலநூறு திமுக முகநூல் குழுக்கள் இருப்பதற்கு முன்னோடியான முதல் குழு "இணையதள திமுக" ஆகும். ஆனால் அதற்கும் முன்பாகவே திமுக சார்பாக முழு நேர முகநூல் பிரச்சார பீரங்கியாக இருந்தது தளபதி அவர்களின் முகநூல் பக்கமே ஆகும். போர் என்றால் முன் வரிசையில் வழிநடத்தி போகும் வீரனே "தளபதி". திமுகவின் பிரச்சார போரில் கூட நவீன அறிவியல் பிரச்சாரத்தை திமுகவில் முதன் முதலில் முன்னின்று வழிகாட்டியது கழக பொருளாளர் திரு.மு.க.ஸ்டாலின் என்பதால் தான் "தளபதி" என அன்பாக திமுகவினர் அவரை அழைக்கின்றனர் என்பதை இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.
அந்த காலகட்டத்தில் சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் பல லட்ச "விருப்ப"ங்களோடு முகநூலில் உலாவந்த காலகட்டம் அது. அப்போதெல்லம் சுப்ரமணியசுவாமி போன்றவர்கள் முகநூல் கணக்கு துவங்கி பல வருடங்கள் ஓடிவிட்ட நிலை. அதே போல கிரிக்கெட் உலகின் கடவுள் எனப்படும் சச்சின் போன்றவர்களும் அதே நிலையில் இருந்தனர். ஆனால் ஒரு பிராந்திய கட்சியின் தலைவர்களில் ஒருவரான துணை முதல்வர் முகநூல் பக்கம் வந்தது அப்போது தான். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் தன் முகநூல் பக்கத்தை துவங்கினார். எத்தனை பேர் தன் முகநூல் பக்கத்தில் விருப்ப சொடுக்கிட்டு வருகின்றனர் என்பது பற்றியெல்லாம் அவர் கவலை கொண்டதாக தெரியவில்லை. அதே போல விருப்ப சொடுக்கு வாங்க வேண்டும் என்பதற்காக சுப்ரமணிய சுவாமி போல ஹேஷ்யங்கள் எழுதுவதும், அவதூறுகள் எழுதுவதும், மற்றவர்களை அவதூறு பேசுவதுமெல்லாம் இல்லை.
தன் கருத்துகள், திமுகவின் கொள்கைகள், திமுகவின் வளர்ச்சிகள், திமுக சந்திக்க வேண்டிய சவால்கள், திமுக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், திமுக தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள், தன் திமுக இளைஞரணி செயல்பட வேண்டிய வழிகள், தன் சுற்றுப்பயணங்கள் இப்படியாக தினம் தினம் தன் இயக்கத்துக்கான போர்வாளாக தன் "முகநூல்"பக்கத்தை நாள் தோறும் மிளிர வைத்தார்.
கடமையை செய் - பலனை எதிர்பாராதே என இவர் தன் பிரச்சாரத்துக்காக மட்டுமே முகநூலை பயன்படுத்தி வருவதால் இன்று முகநூலின் அதிகாரபூர்வ அங்கீகாரமான வெரிபைடு அந்தஸ்தையும் பெற்று விட்டது. ஆமாம் தமிழகத்தின் மட்டுமல்ல இந்திய அரசியல் தலைவர்களில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது தமிழ் முகநூல் பக்கம் இன்றைய நிலையில் (இன்றைய தேதி 16.10.2014 ) 2,90,475 விருப்பங்களுடன் முன்னிலையில் உள்ளது. (இரண்டு லட்சத்தி 90 ஆயிரத்து நானூற்று எழுபத்தி ஐந்து) இந்த கட்டுரை உங்கள் கண்ணில் படும் நேரத்தில் அனேகமாக அது 3 லட்சத்தை தாண்டி போகக்கூடும். அதே போல தளபதி அவர்களின் ஆங்கில முகநூல் பக்கம் 1,15,919 (ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 919) விருப்பங்களுடன் உள்ளது. அதில் குறிப்பாக 18 முதல் 25 வயது கொண்டவர்களே அதிகமானோர் என்பது இன்னும் ஒரு வியப்பான செய்தியாகும்.
![]() |
தளபதியின் ஆங்கில முகநூல் பக்கம் |
இதற்கடுத்தபடியாக நம் தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கம் இன்றைய நிலையில் 2,69,481 (இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 481) விருப்பங்களுடன் அடுத்த நிலையில் உள்ளது. இத்தனைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் முகநூல் கணக்கை தொடங்கிய தேதி 13.08.2012 அன்று தான். அதாவது கிட்ட தட்ட தளபதி அவர்கள் ஆரம்பித்த பின்னர் 17 மாதங்களுக்கு பின்னரே துவங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைவர் கலைஞர் அவர்களது இந்த சாதனையை பாராட்டி தி இந்து தமிழ் நாளிதழ் கூட நான்கு நாட்கள் முன்பாக தலைவர் கலைஞர் அவர்கள் முகநூல் விருப்ப கணக்கில் முதலிடம் வகிப்பதை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டது. அப்போதே தளபதி அவர்கள் முகநூல் விருப்ப கணக்கு அதை விட தாண்டி இருந்தது என்றாலும் திமுக தொண்டர்கள் எவருமே இதை ஒரு போட்டியாக கருத வில்லை என்பதால் "தி இந்து" நாளிதழின் செய்தியை குறை கூறாமல், தவறை சுட்டிக்காட்டாமல் கொண்டாடியே மகிழ்ந்தனர். வேருக்கு கொடுக்கும் மரியாதையை உணர்ந்தவர்கள் திமுக தொண்டர்கள் என்பதுக்கு இதுவே ஒரு சாட்சியாகும். இதைத்தான் தளபதி அவர்களும் விரும்புவார்கள்.
![]() |
தலைவரின் முகநூல் பக்கம் |
விரைவில் தலைவர் அவர்களும், தளபதி அவர்களும் இந்திய அரசியல்வாதிகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி என சொல்லப்படும் இணைய வழி பிரச்சாரங்களில் வேறு எந்த அரசியல்வாதிகளும் தொட முடியாத தூரத்தில் இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். (இப்போதே அப்படித்தால் உள்ளது நிலமை)எதிர்கால இளைஞர் கூட்டத்தை இணைய வழி பிரச்சாரம் மட்டுமே ஈர்க்கும் என்பதை உணர்ந்த அரசியல் இளைஞர்கள் திமுகவின் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழகத்தின் எதிர்காலம் தளபதி அவர்களும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த இரு கண்களுக்கும் திமுக தொண்டர்கள் சார்பாக வாழ்த்துக்கள்!
![]() |
தலைவர் கலைஞர் முகநூல் வெற்றியை பற்றி "தி இந்து" நாளிதழ் |
தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கம் https://www.facebook.com/Kalaignar89
தளபதியின் தமிழ் முகநூல் பக்கம் https://www.facebook.com/MKStalin
தளபதியின் ஆங்கில முகநூல் பக்கம் https://www.facebook.com/MKStalin.Official.English?fref=ts
தளபதியின் ட்வீட்டர் பக்கம் https://twitter.com/mkstalin
தளபதியின் இணைய பக்கம் http://mkstalin.in/
August 31, 2014
ஜெயலலிதா அம்மையாரின் சொத்து குவிப்பு வழக்கு - 18 வருடம் கடந்து வந்த பாதை!!!
செப்டம்பர் 20, 2014 - சரித்திரத்தில் இடம் பெறப்போகும் நாள். ஜெயா அம்மையார் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாள். கடந்த 28.08.2014 அன்று வாத, பிரதிவாதங்களை எல்லாம் முடித்து விட்டு நீதிபதி டி குன்ஹா அவர்கள் எதிர்வரும் 20.09.2014 அன்று தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
![]() |
நல்ல தீர்ப்பு நல்க இருக்கும் நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா அவர்கள் |
ஆக இடையே 23 முழு நாட்கள் உள்ளன. அந்த நீதிபதி சரியான தீர்ப்பை எழுத வசதியாக திமுகவினர் நாம் ஒவ்வொறுவரும் தலைவர் எழுதிய "சொத்து குவிப்பு வழக்கு - ஒரு தொடர்கதை" என்னும் அந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பை அனுப்பி வைத்தால் அவருக்கும் இந்த வழக்கில் அம்மையார் இந்த 18.09.1996 அன்று எஃப் ஐ ஆர் போட்டதில் இருந்து தீர்ப்பு வர இருக்கும் 20.09.2014 வரை இந்த 18 ஆண்டுகளில் எத்தனை நீதிபதிகள், எத்தனை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அழுது விட்டனர், எரிச்சல் அடைந்தனர், கண்டித்தனர் என்ற சரித்திரம் முழுமையும் அந்த நீதிபதிக்கும் புரியவரும். அந்த சொத்து குவிப்பு வழக்கின் இந்த 18 ஆண்டு சரித்திரத்தை என்னால் முடிந்த அளவு இங்கே சுருக்கமாக பதிகின்றேன். தலைவர் எழுதிய புத்தகத்தின் சாறு தான் இந்த பதிவு. அல்லது அந்த புத்தகத்தின் சுருக்கம் என்றோ அல்லது "புத்தக விமர்சனம்" என்றோ கூட வைத்துக்கொள்ளுங்கள் தோழர்களே!
தலைவர் கலைஞர் எழுதிய புத்தகத்தை சுமார் 81 தனித்தனி செய்திகளாக வரிசைக்கிரமமாக வடிகட்டி கொடுத்துள்ளேன் இங்கே. சொத்து குவிப்பு வழக்கு சொத்து குவிப்பு வழக்கு என்றெல்லாம் பேசும் பலருக்கு கூட அதன் முழுபரிமாணம் தெரியவில்லை. ஏனனில் இது ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். இந்த சொத்து குவிப்பு நடந்த போது பிறந்த குழந்தைகள் இன்று திருமணம் ஆகி பிள்ளைகுட்டிகளுடன் இரண்டு முறை தேர்தலில் ஓட்டும் போட்டு விட்டவர்கள். ஆகவே நம் இந்திய திருநாட்டின் மூத்த அரசியல்வாதியான மிகப்பழுத்த அரசியல் ஞானமும், அரசியல் அறிவும், ஞாபக சக்தியும் கொண்டு இந்த 91 வயதிலும் இதோ தன் தொகுதிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் குறித்துக்கொண்டு களமாட கிளம்பிவிட்ட வீர சிங்கம் டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய அந்த புத்தகத்தை சிலர் படித்து இருக்கலாம். பலர் படிக்காமல் கூட இருக்கலாம் என்பதால் நான் இங்கே அதை பிழிந்து சாறு எடுத்து கொடுத்துள்ளேன்.
இதிலே நான், விசாரணையின் போது ஜெயா தரப்பினர் செய்த மாய்மாலங்கள், நாடகங்கள், பொய்கள், புரட்டுகள் இவைகளை பற்றி எல்லாம் சொல்லவில்லை. ஆனால் எப்படி இந்த 18 வருடம் இழுத்தடிக்கப்பட்டது என்பதை மட்டும் சொல்லி இருக்கின்றேன். எத்தனை நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஜெயா தரப்புக்கு சாதகமாக இருந்து வந்தனர், அதை எல்லாம் மீறி எப்படி நம் திமுகவின் பொது செயலாளர் பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்கள் இந்த வழக்கை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்பதை மட்டுமே இந்த பதிவில் சொல்லி இருக்கின்றேன். இப்போது படியுங்கள். இதை படிக்க கொஞ்சம் பொறுமை அவசியம். ஆனால் படித்து பாருங்கள். எத்தனை விதமாக நீதியை தங்களுக்கு சாதகமாக ஆக்க முயன்றனர் ஜெயா தரப்பினர் என்பது புரியும். இதோ இப்போது படியுங்கள்......
1. 1991 முதல் 1996 மே மாதம் வரை ஜெயா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தார். அவர் முதல்வராக ஆவதற்கு முன்னர் 01.07.1991 அன்று அவரே தாக்கல் செய்த அபிடவிட் டின் படி அவரது சொத்து மதிப்பு என்பது 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய்.
2. ஐந்து ஆண்டுகள் அவர் முதல்வராக பதவி வகித்த பின்னர் 30.04.1996ல் அவரது சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாய். இத்தனைக்கும் அவர் அந்த 5 வருடத்தில் வாங்கிய சம்பளம் என்பது மாதத்துக்கு 1 ரூபாய் மட்டுமே. ஆக 5 வருடத்துக்கு சேர்த்து அவர் வாங்கிய சம்பளம் என்பது வெறும் 60 ரூபாய் மட்டுமே.
3. அவர் ஆட்சியில் இருந்த போதே, ஜெயா அவர்கள் ஊழல் செய்து சொத்து குவித்து வருவதாக அப்போதைய ஆளுனர் டாக்டர் சென்னா ரெட்டியிடம் திமுக சார்பாக 28 ஊழல்களை பட்டியலிட்டு (539 பக்கம்) கொடுத்தது. அதில் 25 வது ஊழல் தான் இந்த வழக்கு.
4. 15.04. 1995ல் இந்தியா டுடே பத்திரிக்கை ஜெயாவின் சொத்து குவிப்பு பற்றி நீண்ட கட்டுரை வெளியிட்டது.
5. சுப்ரமணிய சுவாமியும் ஆளுனரிடம் ஜெயா சொத்து குவித்து வருவதாகவும் அதனால் வழக்கு தொடர அனுமதி கொடுக்கும் படியும் ஆளுனர் டாக்டர் சென்னா ரெட்டியிடம் அனுமதி கேட்டார். அதன் காரணமாக சுப்ரமணிய சுவாமி மற்றும் சந்திரலேகா ஆகியோர் மீது அதிமுகவினர் 06.04.1995 அன்று ஜனதா கட்சி கூட்டத்தில் புகுந்து கற்கள் மற்றும் செருப்பால் அடித்து அராஜகம் செய்தனர்.
![]() |
அப்போதைய தமிழக ஆளுனர் டாக்டர் சென்னா ரெட்டி அவர்கள் |
6. ஆளுனர் சென்னாரெட்டி அவர்கள், வழக்கு தொடுக்க சுப்ரமணிய ஸ்வாமிக்கு அனுமதி கொடுத்தார். அதன் காரணமாக ஆளுனர் சென்னா ரெட்டியை திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஜெயா அவர்கள் 27.04.1995 அன்று தீர்மானமே போட்டார்.
7. சுப்ரமணிய ஸ்வாமி ஜூன் 14,1996ம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை சுட்டி காட்டி மனு தாக்கல் செய்தார்.
போலீஸ் அதிகாரி லத்திகாசரண் அவர்கள் |
8. நீதிமன்றம், அப்போது போலீஸ் அதிகாரியாக இருந்த லத்திகாசரண், மற்றும் வி.சி பெருமாள் ஆகியோரை விசாரிக்கும் படி 26.06. 1996 அன்று உத்தரவிட்டது.
9. அந்த விராசணையை தடுக்க வேண்டும் என ஜெயா தமிழக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனால் சிறிது காலம் வழக்கு விசாரிக்கப்படவில்லை. பின்னர் உயர் நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது. உடனே ஜெயா தனக்கு முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் "முடியாது. இதில் ஊழலுக்கான முகாந்திரம் உள்ளது" என அதை தள்ளுபடி செய்தது.
10. பின்னர் போலீஸ் அதிகாரி வி.சி பெருமாள் தன் விசாரணையை நடத்தி இந்த வழக்கில் ஊழல் செய்தமைக்கான ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து திரு.நல்லம்ம நாயுடு அவர்களையும் அவர்களுக்கு துணையாக 16 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்தார். அந்த குழுவை அமைத்த தேதி 07.09.1996.
11. திரு.நல்லம்ம நாயுடு அவர்கள் எஃப் ஐ ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்த தேதி 18.09.1996 ஆகும்.
12 ஜெயாவின் வீட்டையும் , ஐதராபாத் திராட்சை தோட்டத்தையும் நேரில் சென்று சோதனை செய்ய திரு.நல்லம்ம நாயுடு அவர்கள் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட தேதி 16.10.1996.
13. அனுமதி கிடைத்த தேதி 06.12.1996. ஆனால் அன்றைய தேதியில் அம்மையார் ஜெயா அவர்கள் வேறு ஒரு வழக்கில் கைதாகி சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தார்.
14. ஆகவே அங்கு சென்று திரு.நல்லம்ம நாயுடு அவர்கள் ஜெயாவிடம் வீட்டை சோதனை செய்ய அனுமதி கொடுத்த நீதிமன்ற ஆணையை காட்டி அதன் படி ஜெயாவும் தன் பிரதிநிதிகளாக (ரெப்ரசெண்டிடிவ் ஆக ) ஜெயராமன், விஜயன் ஆகியோரை நியமித்தார்.
![]() |
ஜெயலலிதா மற்றும் சசிகலா (நகைகளுடன்) |
15. அதன் பின்னர் 07.12.1996 முதல் 12.12.1996 வரை ஜெயாவின் வீடும், ஐதராபாத் தோட்டமும் சோதனை செய்யப்பட்டு அங்கே இருந்த தங்க, வைர நகைகள், வெள்ளி பாத்திரங்கள், ரொக்க பணம் எல்லாம் கைப்பற்றப்பட்டு அதிலே வெள்ளி பாத்திரங்கள் தவிர மற்றவை எல்லாம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அவைகள் சென்னை ரிசர்வ் பேங்கில் வைக்கப்பட்டன.வெள்ளி பாத்திரங்கள் ஜெயாவின் பிரதிநிதியாக (ரெப்ரசெண்டேடிவாக )ஜெயாவால் நியமிக்கப்பட்ட ஜெயராமன் மற்றும் விஜயன் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டன. அவைகள் போயஸ் தோட்டத்துக்கு மீண்டும் எடுத்து செல்லப்பட்டன. (இது நடந்தது 12.12.1996, இதனால் வந்த சிக்கல் அதாவது வழக்கு இழுத்தடிக்கும் செயல் 17 வருஷம் கழித்து 2013ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வரும் பாருங்கள். அது இந்த பதிவின் பாயிண்ட் # 57)
16. பின்னர் இதற்காக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஜூன் 4, 1997ம் தேதி அன்று சென்னை தனி நீதிமன்றத்தில் ஜெயா அம்மையார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
![]() |
இரண்டு மற்றும் நான்காம் குற்றவாளிகள் சசிகலாவும் இளவரசியும் |
![]() |
மூன்றாம் குற்றவாளி சுதாகரன் அவர்கள் |
17. ஜூன் 5,1997ல் ஜெயா,சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது.
18. வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றம் சென்றனர். அது தள்ளுபடி ஆன தேதி அக்டோபர் 21, 1997. பின்னர் வழக்கில் அவர்களும் சேர்க்கப்பட்டு 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர்.
19. தனிநீதிமன்றம் அமைக்கப்பட்டது செல்லாது என ஜெயா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அது அங்கே தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அதே வழக்கை உச்சநீதிமன்றம் எடுத்து சென்றார். அங்கும் 14.05.1999 அன்று நீதிபதிகள் ஜி டி நானாவதி, எஸ்.பி.குர்துக்கர் ஆகியோர் அதை தள்ளுபடி செய்து தனி நீதிமன்றம் அமைத்தது சரி தான் என தீர்ப்பு அளித்தனர்.
***************************
கிட்ட தட்ட இது வரை 5 வருடங்கள் முடிந்து விட்டன. இந்த ஐந்து வருடமும் அதாவது 1996 மே மாதம் முதல் 2001 மே மாதம் வரை திமுக ஆட்சி தான் நடந்து வந்தது. ஆயினும் ஜெயா தரப்பில் மிக சுலபமாக இந்த ஐந்து ஆண்டுகளும் வழக்கை செஷன்ஸ் கோர்ட், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தனி சிறப்பு நீதிமன்றம் என எல்லாவற்றிலும் மாற்றி மாற்றி தடை கேட்டு கேட்டு வழக்கை இழுக்கடிக்க முடிந்தது. ஆனால் மே மாதம் 2001ல் திமுக ஆட்சி போய் ஜெயா தலைமையிலான அதிமுக ஆட்சி வந்து விட்டது. பின்னர் அம்மையார் அந்த அரசு வழக்கை எப்படி இழுக்கடிப்பார் என்பதை இப்போது பார்ப்போம்....
**************************
![]() |
ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் |
20. மே மாதம் 2001ல் பதவி ஏற்ற ஜெயா அவர்கள் பதவி ஏற்றதே செல்லாது என 21.09.2001ல் உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. அதன் காரணமாக ஜெயா முதல்வர் பதவியில் இருந்து விலகி ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார்.
21. மீண்டும் 02.03.2002ல் இடைத்தேர்தலில் வென்று ஜெயா முதல்வர் ஆனார். அதுவரை வழக்கு ஆமை வேகத்தில் தான் சென்றது. மீண்டும் இந்த தனி நீதிமன்ற வழக்கு நவம்பர் மாதம் 2002ல் தான் தொடங்கியது. அப்போது தனி நீதிமன்ற நீதிபதியாக ஆர்.ராஜமாணிக்கம் இருந்தார்.
22. ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேரிடம் மீண்டும் விசாரணை என நீதிமன்றம் அறிவித்தது. அதன் படி அந்த விசாரணை பிப்ரவரி 2003 வரை நடந்தது. அந்த சாட்சிகள் இப்போது அதிமுக ஆட்சி நடந்தமையால் பல்டி சாட்சிகள் ஆயினர். உயிர் பயம் இருக்கத்தானே செய்யும் அவர்களுக்கும்..
23. அப்போது குற்றவியல் சட்டம் 313ன் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் வராமல் அவர்கள் இருப்பிடம் சென்று வாக்குமூலம் வாங்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக நடந்த இந்த அநியாயத்தை அரசு வழக்கறிஞர் கொஞ்சம் கூட ஆட்சேபிக்கவில்லை. ஏனனில் அவர் ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்.
![]() |
வழக்கின் சூத்திரதாரியில் ஒருவரும் கழக பொது செயலாளருமாகிய பேராசிரியர் க.அன்பழகன் |
24. இதனால் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் விசாரணை அதிகாரிகளும் அரசு வழக்கறிஞரும் ஜெயாவுக்கே சாதகமாக செயல்படுவார்கள் எனவே வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
25. சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 28, 2003ல் இந்த வழக்கு விசரணைக்கு தடை விதித்தது. அதன் பின்னர் உச்சநீதிமன்றம் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் வழக்கை விசாரித்து இந்த வழக்கை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் மாற்றியது . அப்படி மாற்றிய தேதி நவம்பர் 18, 2003.
26. அப்படி பேராசிரியர் அன்பழன் அவர்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எஸ்.எஸ்.ஜவகர் ஐ ஏ எஸ், என்.வி பாலாஜி என்னும் ஆடிட்டர் ஆகியோர் சாட்சிகள் பல்டி சாட்சிகள் ஆனதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ் .என். வரியவா, எச்.கே.சீமா ஆகியோர் குறிப்பிட்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றினர்.
27. அந்த தீர்ப்பில் நீதிபதிகள் ஜெயாவை "இவர்கள் நீதியில் குறுக்கிடுகின்றார்" என கடுமையாக எச்சரிக்கின்றனர்.
28. அந்த தீர்ப்பிலே நீதிபதிகள் "கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் கர்நாடக அரசோடு கலந்து பேசி இந்த வழக்குக்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதுவும் ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும், அது போல குற்றவியல் சட்டத்தில் மிக மிக அனுபவம் கொண்ட ஒரு மூத்த வழக்கரிஞரை அரசு வழக்கறிஞராக நியமித்து அவருக்கு ஒரு ஜூனியர் வக்கீலும் கொடுக்க வேண்டும். வழக்கை தினம் தினம் விடாமல் நடத்த வேண்டும். பல்டி சாட்சி சொன்னவர்களை விசாரித்து பல்டி அடித்தது உண்மை எனில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சாட்சிகளுக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையான உத்தரவு பிறப்பித்தனர்.
29. மேற்படி தீர்ப்பை வழங்கிய தேதி 18.11.2003. ஆனால் பெங்களூரில் நீதி மன்றம் அமைத்தாலும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விடுவிப்பு செய்தால் தான் அங்கே வழக்கு தொடர முடியும். ஆனால் அம்மையார் ஆட்சி தமிழகத்தில் நடந்ததால் அந்த வழக்கை பத்து மாதங்கள் கழித்து தான் விடுவிப்பு செய்து பெங்களூருக்கு மாற்றியது. அப்படி மாற்றிய தேதி 10.09.2004. அதாவது இதற்கே எட்டு வருடங்கள் ஓடிவிட்டன. (அதன் பின்னர் பெங்களூரில் இந்த வழக்கு பத்து வருடங்கள் நடந்து வருகின்றது)
30. 28.03.2005ல் பெங்களூரு கோர்டில் வழக்கின் எல்லா ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தவிர தமிழக அரசுக்கும் கொடுக்கப்பட்டது.
31. அப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பப்புசாரே என்பவர். அவரிடம் ஜெயா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு செய்யப்பட்டது. பின்னர் 1 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது.
32. 18.04.2005 அன்று வரை நீதிபதி பப்புசாரே வழக்கை ஒத்தி வைத்தார். அன்றும் ஜெயா, சசி என குற்றம் சாட்டப்பட்டவர்கள் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஜெயா தரப்பு சீனியர் வக்கீல் கூட வரவில்லை.ஏன் என்று அவர் ஜூனியரிடம் நீதிபதி கேட்ட போது "சீனியர் வக்கீலுக்கு ஜுரம்" என காரணம் சொல்லப்பட்டது. அதற்கு நீதிபதி அவர்கள் "சரி அவர் வராமல் போகட்டும், ஆனால் ஜெயா, சசி , இளவரசி, சுதாகரன் எங்கே? இனியும் அவர்கள் வராவிட்டால் நான் இதை வராமையை காரணம் காட்டியே நீதிமன்ற தீர்ப்பை சொல்ல நேரிடும் என கடுமையாக எச்சரித்தார். பின்னர் மே மாதம் 9ம் தேதி 2005க்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
33. மே மாதம் 9ம் தேதியும் ஜெயா வரவில்லை. ஆனால் அவர் வழக்கறிஞர் நீண்ட அவகாசம் கேட்டார். எரிச்சல் அடைந்த நீதிபதி பப்புசாரே அவர்கள் "அதல்லாம் முடியாது. 16.05.2005 அன்று வழக்கை ஒத்தி வைக்கிறேன். அன்று ஜெயா, சசி உள்ளிட்ட எல்லோரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். கடந்த ஆறு மாதமாக நான் தினம் தினம் வந்து உட்காந்து விட்டு போகிறேன். எனக்கு தனிமை சிறையில் இருப்பது போல இருக்கின்றது என கோபமாக உத்தரவிட்டார். ஒரு நீதிபதியே தான் தனிமை சிறையில் இருப்பது போல இருக்கின்றேன் என கூறியது அகில இந்திய அளவில் நீதிமன்றங்களை அதிர வைத்தது. ஆனால் 16.05.2005 அன்றும் ஜெயா , சசி, உள்ளிட்ட யாரும் நீதிமன்றத்துக்கு வரவில்லை.அதன் பின்னர் நீதிபதி பப்புசாரே ஓய்வு பெற்றுவிட்டார். பிறகு நீதிபதி பி.ஏ.மல்லிகார்ஜுனையா பதவிக்கு வந்தார்.
34. 16.05.2005 அன்று ஜெயாவின் வழக்கறிஞர் தங்களுக்கு லண்டன் சொத்து குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கை தங்களுக்கு வேண்டும் என (இந்த வழக்குக்கு சம்பப்ந்தம் இல்லா வேறு வழக்கு அது) கேட்க அதற்கு நீதிபதி பி.ஏ.மலிகார்ஜுனையா அவர்கள் " இது வழக்கை இழுத்தடிக்கும் செயல்" என கடும் கோபத்துடன் எச்சரித்தார்.
35.மேலும் நீதிபதி அவர்கள் "சரி நான் தருகிறேன். அதை கொடுத்த பின் நாளை முதலாவது நீங்கள் வாதாட முடியுமா?" என கேட்டு விட்டு 1800 பக்க அந்த லண்டன் சொத்து குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிக்கையை கொடுத்தார். உடனே ஜெயாவின் வக்கீல் "இதை படித்து பார்த்து முடிக்க எனக்கு 3 வார கால அவகாசம் வேண்டும் என்றார். பின்னர் வழக்கு 25.05.2005 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
36. ஜெயாவின் லண்டன் சொத்து குவிப்பு வழக்கு தனியே சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தூங்கி கொண்டு இருந்தது. அதை இந்த வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடுத்தார். அது வரை இந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த முடியவில்லை. சில பல நாட்கள் விசாரணைக்கு பின்னர் பெங்களூரு உயர் நீதிமன்றம் அதற்கு அனுமதி கொடுத்தது.
37. பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கோடு லண்டன் சொத்து குவிப்பு வழக்கை சேர்த்து நடத்தினால் தேவை இல்லாமல் இழுத்தடிக்கும் செயல் இது என்று பேராசிரியர் அன்பழகன் அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று இந்த வழக்கை தனியாக நடத்த வேண்டும் என வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. பின்னர் பேராசிரியர் கோரிக்கையை ஏற்று பெங்களூரு சிறப்பு நீதி மன்றம் சொத்து குவிப்பு வழக்கை மட்டும் தொடர்ந்து விசாரணை செய்யலாம் என தீர்ப்பளித்தது.
38. இப்படியாக நான்கு ஆண்டுகள் பல வித வாய்தாக்கள் வாய்தாக்கள் என இழுக்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் 3.3.2010 அன்று 42 அரசு தரப்பு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை மாற்றம் செய்ய வேண்டிஅதே சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா தரப்பு ஒரு புதிய வழக்கு தாக்கல் செய்தது. அது 5.3.2010 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
39. இதற்கிடையே சென்னை சிறப்பு நீதிமன்றம் லண்டன் சொத்து குவிப்பு வழக்கில் 5.6.1997ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய வழக்கு தொடுத்தார் ஜெயா. அதுவும் 10.3.2010ல் கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
40. உடனே கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த அந்த வழக்கை ஜெயா தரப்பு உச்சநீதிமன்றம் எடுத்து சென்றனர். ஒரு வழியாக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி இந்த சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணையை தொடரலாம் 3.5.2010 என நாள் குறித்தது சிறப்பு நீதிமன்றம்.
41. உடனே அதே சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா தரப்பினர் "இந்த விசாரணை முழுவதும் சட்ட விரோதம். எனவே இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்" என 18.04.2010ல் புதிய மனு தாக்கல் செய்தனர். அதை 27.04.2010ல் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே இதை எதிர்த்து ஜெயா தரப்பு உச்சநீதிமன்றம் சென்று புதிய மனு தாக்கல் செய்தனர்.
42. உச்சநீதிமன்றம் "இந்த மனுவை நீங்கள் எஸ்.எல்.பி மனுவாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வர தேவையில்லை. அதனால் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு சென்று அங்கே மனு தாக்கல் செய்யவும்" என சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர்.
43. மீண்டும் 07. 5.2010 அன்று விசாரணை நீதிமன்றத்தில் "இந்த வழக்கு பற்றி உச்சநீதிமன்றத்தில் 11.5.2010 அன்று விசாரணைக்கு வருவதாகவும், அதனால் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்து அது சிறப்பு நீதிமன்றத்தில் ஒத்துகொள்ளப்பட்டு விசாரனை ஒத்தி வைக்கப்பட்டது.
44. அதே மே மாதம் 2010ல் 70,000 பக்கங்கள் கொண்ட அந்த சொத்து குவிப்பு ஆவணங்கள் மூன்று காப்பிகள் வேண்டும் என ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு அதுவும் 26.6.2010ல் கொடுக்கப்பட்டது. அதுவரை விசாரணை இல்லாமல் ஆகியது.
45. உடனே 15.7.2010 அன்று இதே சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா சார்பில் அந்த 70,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை ஆங்கிலத்தில் வேண்டாம் என புதிய மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 21.7.2010ல் சுதாகரன் தரப்பிலும் அதே போன்று ஆங்கிலத்தில் வேண்டாம், தமிழில் தான் வேண்டும் என புதிய மனு கொடுக்கப்பட்டது. இவை இரண்டையும் 22.7.2010ல் சிறப்பு நீதிமன்றம் சில வழிகாட்டுதல்கள் கூறி நிராகரித்தார்.
46. உடனே சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயா தரப்பு கர்நாடக உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால் சாட்சிகள் வந்திருந்தும் சிறப்பு நீதிமன்றம் அவர்களிடம் விசாரிக்க முடியவில்லை. ஏனனில் குற்றவாளிகள் தரப்பு தான் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு போய் விட்டதே. அதனால் மீண்டும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
47. மீண்டும் ஒரு வழியாக கர்நாடக உயர்நீதிமன்றம் அவர்களை சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தது. மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் 19.10.2010ல் விசாரணைக்கு தடை கேட்டனர். பின்னர் ஒத்தி வைப்பு... பின்னர் 16.11.2010, 18.11.2010 என ஒத்தி வைப்பு மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றம் செல்லுதல் பின்னர் 25.11.2010, பின்னர் அங்கேயும் நிராகரிப்பு பின்னர் 30.11.2010க்கு ஒத்தி வைப்பு, பின்னர் ஜெயா தரப்பு இதை எடுத்து கொண்டு உச்சநீதிமன்றம் சென்று புதிய மனு தாக்கல், அதன் பின்னர் வழக்கு 15.12.2010க்கு ஒத்தி வைத்தல்...பின்னர் நான்கு நாட்கள் விசாரணை, பின்னர் 18.1.2011க்கு ஒத்தி வைத்தல், பின்னர் வழக்கறிஞரின் தந்தையார் இறந்து விட்டதாக மீண்டும் ஒத்திவைத்தல், இப்படியாக பல முறை வாய்தாவும் மனு போட்டு தடுத்தலும் இடையிடையே சாட்சிகள் விசாரணை மற்றும் குற்றவாளிகள் விசாரணை ... இப்படியாக போய் கொண்டு இருந்த போது இங்கே தமிழகத்தில் திமுக ஆட்சி மாறி மே மாதம் 2011ல் ஜெயா தரப்பு அதிமுக ஆட்சிக்கும் வந்து விட்டது.
48. 2011ல் மத்தியில் இங்கே தமிழகத்தில் திமுக ஆட்சி மாறி அதிமுக ஆட்சி அமைந்து குற்றவாளி ஜெயா தமிழக முதல்வர் ஆனார். அதனால் வழக்கை சட்டமன்ற நாள், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம், என்றெல்லாம் காரணம் காட்டி மிக சுலபமாக இரண்டு வருடம் வாய்தா மேல் வாய்தா வாங்கி கடத்தினர்.
![]() |
மனம் கொந்தளித்து பதவி விலகிய அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அவர்கள்.. |
49. அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த திரு. ஆச்சார்யா அவர்கள் மிகுந்த திறமை உள்ளவர் குற்றவியல் வழக்குகளில்.... அவரும் அதிமுக மற்றும் முதல்வராக ஆகிவிட்ட ஜெயா அரசு கொடுத்த தொல்லைகள் காரணமாக வழக்கில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார். திரு.ஆச்சார்யா அவர்கள் பதவி விலகிய நாள் 17.01.2013. மே மாதம், 2011ல் ஜெயா தமிழக முதல்வராக வந்த பின்னர் திரு. ஆச்சார்யாவுக்கு கொடுத்த தொல்லைகளை அவரே தனது ராஜினாமாவை கொடுத்து விட்டு மனம் நொந்து புலம்பிவிட்டு தான் விலகினார். அவர் தன் ராஜினாமா கடிதத்தை கர்நாடக உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி திரு. விக்ரமஜீத் சென் அவர்களுக்கு அனுப்பிய போது அவர் அதை ஏற்கவில்லை. பின்னர் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்ற பின்னர் வந்த கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ஸ்ரீதர் ராவ் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டார். இதற்கெல்லாம் முன்பாகவே பெங்களூரு சிறப்பு நீதிபதி மல்லிகார்ஜுனா ஓய்வு பெற்று சென்று அங்கே புதிய நீதிபதியாக பாலகிருஷ்ணா அவர்கள் வந்து விட்டார். அதே போல ஆச்சார்யாவுக்கு பதிலாக பவானிசிங் என்பவர் அரசு வழக்கறிஞராக ஆனார். அதனால் காட்சிகள் மாறின. வழக்கு வேறு வித போக்கோடு போனது. பவானிசிங் கிட்ட தட்ட ஜெயா தரப்பு வக்கீல் போலவே செயல்பட்டார். அதே போல நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களும் ஒரு மாதிரியாக நடந்து கொண்டார். நல்லவேளை அவர் ஓய்வு பெறும் நிலைக்கு வந்தார்.
![]() |
திமுகவின் பேராசிரியர் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி (தர்மபுரி) திரு. தாமரைச்செலவன் அவர்கள் |
50. வழக்கை உன்னிப்பாக கவனித்து வரும் திமுக தரப்பு, பவானிசிங் அவர்கள் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதை கண்டுபிடித்தது. இதே போன்று தான் 2003ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் இதே வழக்கு நடந்த போது அரசு வழக்கறிஞர் அவர்கள் முதல்வராக இருந்த ஜெயாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் திமுகவின் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் வழக்கு தொடுத்து கர்நாடகாவுக்கு மாற்றினார். அதே போல பத்து ஆண்டுகளுக்கு பின்னர் 2013ல் தமிழகத்தில் ஜெயா ஆட்சி வந்ததும் கர்நாடகாவின் அரசு வழக்கறிஞரே இப்படி ஜெயா தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதால் திமுகவின் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் மீண்டும் பவானிசிங் அவர்களை நீக்கி வேறு நல்ல வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு தொடுத்த தேதி 2.2.2013.
![]() |
37 எம் பிக்கள் தங்கள் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டிய அரசு வழக்கறிஞர் உயர்திரு.பவானிசிங் அவர்கள் |
51. இதில் தான் மிக மிக அதிசயமான இந்திய நீதிமன்றம் மற்றும் உலக நீதிமன்ற வரலாற்றில் ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது ஜெயா தரப்பில் " எங்களுக்கு அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் தான் வேண்டும், அதே போல எங்களுக்கு நீதிபதியாக ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணா தான் வேண்டும் என பேராசிரியர் அன்பழகன் அவர்கள் மனுவில் (உச்சநீதிமன்றத்தில் இது நடந்தது) வாதிட்டனர். ஆனால் உச்சநீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்றம் தான் பவானிசிங்கை நியமித்தது என்பதால் அவரை மாற்ற வேண்டும் எனில் கர்நாடக உயர்நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் அது போல ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணா மீண்டும் இதில் தேவை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியது.
52. அதே நேரம் கர்நாடக உயர்நீதிமன்றம் பேராசிரியரின் மனுவை விசாரித்து பவனிசிங்கை நீக்கி உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஜெயா தரப்பு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றது. அங்கே சென்று "எங்களுக்கு எதிராக வாதாட அரசு தரப்பில் திரு.பவானி சிங் தான் வேண்டும்" என்கிற விசித்திர வாதத்தை வைத்தது. மகா..ஸ்ரீ..ஸ்ரீ நீதிபதி சவுகான் அவர்கள் (உச்சநீதிமன்றம்) "அப்படியே ஆகட்டும்.. பவானி சிங் அவர்களே உங்களுக்கு எதிராக வாதாடட்டும்" என ஒப்புதல் கொடுத்தார் என்பது தான் விசித்திரம்.
*******************
இந்த வழக்குக்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒரு விஷயம் இங்கே இடையிலே சொல்ல வேண்டும். ஜெயாவுக்கு இப்போது சொந்தமாக இருக்கும் கொடநாடு எஸ்டேட் விஷயமாக (அதுவும் ஒரு ஆங்கிலேயரிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்டது தான்) அங்கே இருந்த பொது பாதையை ஜெயா தரப்பினர் ஆக்கிரமித்து பாதையை மூடிவிட அது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காகியது. அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் சில காரணங்களால் மாற்றப்பட்டு வேறு நீதிபதி வந்தார். அதை எதிர்த்து ஜெயா தரப்பினர் "எங்களுக்கு பழைய நீதிபதி தான் வேண்டும் என அங்கேயே மனு தாக்கல் செய்தனர். உடனே உயர் நீதிமன் தலைமை நீதிபதி அவர்கள் "நீதிபதிகளை மாற்றும் அதிகாரம் எங்களுக்கு உண்டு" என கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டனர்.
ஆனால் ஜெயா தரப்பு விடாப்பிடியாக இந்த பிரச்சனையை உச்சநீதிமன்றம் எடுத்து சென்று மனு செய்தனர். அங்கே அதை விசாரித்த உச்சநீதிமன்றம் மிக மிக கோபமாக இந்த தீர்ப்பை வழங்கியது.
\\ The chief justice of India asked : "what do you want? Ypu are bench hunting. The chief justice of chennai high court knows many things which you may not know. You have absolutely no right to say that your matter should be heard by a particular judge \\
அதாவது \\ உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு நீங்கள் சொல்லும் நீதிபதி தான் வேண்டும் என வேட்டையாடுகின்றீர்களா? உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தெரியும். குறிப்பிட்ட நீதிபதி தான் வேண்டும் என கேட்க உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை\\
இப்படி தீர்ப்பு சொன்னவர் இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள். இதல்லாம் நடந்தது 04.04.2008 அன்று... டெல்லி உச்ச நீதிமன்றத்தில். இப்படி கடுமையாக குட்டு வாங்கியும் திருந்தாத ஜெயா அவர்கள் மீண்டும் 2013லிலும் அதே போல தனக்கு நீதிபதி பாலகிருஷ்ணாதான் வேண்டும், தனக்கு எதிராக வாதாட அரசு வக்கீலாக பவானிசிங் தான் வேண்டும் என கேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றார் என்பதை இங்கே மீண்டும் நியாபகப்படுத்துகின்றேன். இப்போது மீண்டும் நாம் பாயிண்ட் நம்பர் #53ல் இருந்து இந்த பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கின் சரித்திரத்தின் உள்ளே போவோம் வாருங்கள்!
***********************
53. இந்த பவானி சிங் எப்படி அரசு வழக்கறிஞர் ஆனார்? என நாம் பார்க்க வேண்டும். ஆச்சார்யா அவர்கள் பதவி விலகிய போது அவருக்கு பதில் வேறு ஒரு மூத்த குற்றவியல் வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய கட்டாயம் கர்நாடக அரசுக்கு இருந்தது. உடனே கர்நாடக அரசு நான்கு திறமையான மூத்த குற்றவியல் வழக்கறிஞர்கள் பட்டியலை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியது. அந்த பட்டியலில் இருந்த ஒருவரை கூட நியமிக்காமல் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக (தற்காலிக) இருந்தவர் தன்னிச்சையாக இந்த பவானிசிங்கை நியமித்தார். இதை நாம் சொல்லவில்லை. அரசு அட்டர்னி ஜெனரல் வாகன்வதி அவர்கள் தான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்த நீதிபதி யார் தெரியுமா? கொஞ்சம் மேலே சென்று பாயிண்ட் # 49 ஐ படியுங்கள். ஆச்சார்யாவின் ராஜினாமாவை ஏற்காமல் இருந்து பின்னர் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதியாக சென்று விட்ட நீதிபதி திரு. விக்ரமஜீத் சென் அவர்களுக்கு பின்னர் கர்நாடக உயர்நீதிமன்ற தற்காலிக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர்ராவ்... அவசர அவசரமாக ஆச்சார்யா வின் ராஜினாமாவை ஏற்று கொண்டாரே அவர்தான் அரசு கொடுத்த பட்டியலில் இல்லாத பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தார். அம்மையார் ஜெயா அவர்கள் திரு. ஸ்ரீதர்ராவ் அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளார். ஹூம்... சட்டம் ஒரு இருட்டறை என அண்ணா சொன்னது தான் நியாபகத்தில் வருகின்றது.
54. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி திரு.நல்லம்ம நாயுடு அவர்கள். அவர் ஓய்வு பெற்ற பின் அந்த இடத்தில் அதிமுக அரசு டி.எஸ்.பி. திரு. சம்பந்தம் அவர்களை நியமித்தது. இவர் இந்த வழக்கில் 99 வது சாட்சியாவார். இவரை நீதிமன்றம் சம்மன் செய்து அழைத்து சாட்சியை பதிவு செய்ய வேண்டிய நிலையில் அவர் ரகசியமாக கொண்டு வரப்பட்டு குற்றவாளிகளுக்கு சாதகமாக சாட்சி அளிக்க செய்தார்கள். இதை கடுமையாக எதிர்க்க வேண்டிய பவானி சிங் கொஞ்சம் கூட எதிர்க்காமல் சும்மாவே இருந்தார்.
55. இந்த டி எஸ் பி சம்பந்தம் முன்னர் அரசு வக்கீலாக இருந்த ஆச்சார்யா காலத்திலேயே அவருக்கு தெரியாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.பாலகிருஷ்ணாவுக்கு "இந்த வழக்கை மீண்டும் ஆரம்பம் முதல் விசாரணை செய்ய வேண்டும்" என கடிதம் எழுதினார். உடனே திமுக இதில் தலையிட்டு விஷயத்தை கர்நாடக உயர்நீதி மன்றத்துக்கு சென்று அங்கே இந்த டி.எஸ்.பி சம்பந்தம் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். அப்படிப்பட்ட அந்த டி எஸ் பி சம்பந்தம் இப்போது எப்படி சாட்சி சொல்லி இருப்பார்????
56.இதுவரை ஜெயா தரப்பு வக்கீல்கள் வாய்தா வாங்கியதையும் , நீதிமன்ற தடை வாங்கியதையும் தான் பார்த்திருப்பிர்கள் இந்த சொத்து குவிப்பு வழக்கில். இனிமேல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் வாய்தா வாங்கும் விந்தை எல்லாம் பார்க்க போகின்றீர்கள். பவானி சிங் 28.2.2013 அன்று 259 சாட்சிகளின் சாட்சிய விபரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களை படித்து பார்க்க இரண்டு மாதம் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என வாய்தா கேட்டார். ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா கொடுக்கவில்லை. ஆனால் பவானிசிங் இதற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் கூட செல்லவில்லை. ஆனால் நீதிமன்றம் பக்கம் வரவில்லை.இவரின் இது போன்ற செயல்களை கண்ட திமுக,சிறப்பு நீதிமன்றத்தில் தங்களையும் அரசு தரப்போடு சேர்ந்து இந்த வழக்கில் வாதாட அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா அவர்கள் "வாதாட அனுமதி இல்லை என்றும் ஆனால் சொல்ல வேண்டியதை எழுத்து பூர்வமாக அவ்வப்போது கொடுக்கலாம்" என்றும் தீர்ப்பளித்தார். அதன் பின்னர் தான் திமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (அப்போது பாராளுமன்ற உறுப்பினர்) திரு. தாமரைசெல்வன் உள்ளிட்ட மூவர் அந்த வழக்கில் ஆஜராகி கவனித்து அவ்வப்போது எழுத்துபூர்வ பதில்களை தாக்கல் செய்தனர். பவானிசிங் வாங்கிய முதல் வாய்தா இது. பின்னர் தொடர்ந்து அவர் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வாங்கியதை விட அதிக அளவில் வாய்தா வாங்கி சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்ப்போம்....
57. நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு ஓய்வு பெற இன்னும் ஒரு மாதகாலமே இருந்த நிலையில் ஜெயாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டு சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்த வைர, வைடூரிய, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் (இந்த வெள்ளி பாத்திரங்கள் மட்டும் ரிசர்வ் வங்கியில் இல்லாமல் ஜெயாவின் பிரதிநிதிகளிடம் இருந்தது. அதை கொஞ்சம் மேலே போய் அதாவது 12.12.1996 , 17 வருஷம் முன்பாக.... இதே பதிவில் பாயிண்ட் # 15ல் பார்க்கவும்) ஆகிய வற்றை சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு அதை நீதிபதி பாலகிருஷ்ணா பார்வையிட்ட பின்னர் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் தான் ஓய்வு பெறும் முன்பாகவே இதை எல்லாம் பார்வையிடாமல் தீர்ப்பு சொல்லிவிட வேண்டும் என நீதிபதி பாலகிருஷ்ணா அவசரம் காட்டினார். ஏனனில் மிக விரைவில் ஒரு வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர இருந்தது. அதற்கு முன்பாக ஜெயா தன்னை குற்றமற்றவர் என வெளியே வந்து விட வேண்டும் என துடித்தார். அதற்கு நீதிபதி பாலகிருஷ்ணாவும் உடன்பட்டார் என்பதால் தானே இதே நீதிபதியும் இதே அரசு வழக்கறிஞரும் தான் எனக்கு வேண்டும் என ஜெயா உச்சநீதிமன்றம் வரை சென்றார் என்பது இதை படிக்கும் உங்களுக்கு புரிகின்றதா?
58. ஒருவழியாக சில பல தடைகளுக்கு பின்னர் கர்நாடக அரசு, கர்நாடக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எல்லாரும் அங்கே இங்கே என இழுக்கடித்து (அதுவரை விசாரணை தடை) பின்னர் நீதிபதி பாலகிருஷ்ணா மீது நீதிமன்ற வட்டாரத்தில் மதிப்பு குறைந்து விடும் நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணா "என் சொந்த காரணங்களால் பதவி நீட்டிப்பு வேண்டாம்" என சொல்லிவிட செப்டம்பர் 30, 2011 அன்றே விடுவிக்கப்பட்டார். பின்னர் தற்காலிகமாக நீதிபதி முடிகவுடர் என்பவரை அக்டோபர் 3,2013ல் கர்நாடக உயர்நீதிமன்றம் நியமித்தது. அதன் பின்னர் அக்டோபர் 29 , 2013 அன்று கர்நாடக உயர்நீதிமன்ற குழு கூட்டம் கூடி நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா என்பவரை தனி நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது. அவர் நவம்பர் 7, 2013ல் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் நவம்பர் 7,2013 முதல் 28.08.2014 வரை இந்த வழக்கை தீர விசாரித்தார். இந்த பத்து மாதத்தில் இவரது விசாரணை காலத்தில் கூட பலவித தடைகள், வாய்தாக்கள் என மிகவும் சிரமப்பட்டு கடைசியில் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தொகுத்து வழங்கும் கடைசி கட்டத்தில் கூட இழுத்தடிப்பு செய்யப்பட்டு கடந்த 28.08.2014 அன்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அவர்கள் தனது முடிவுரையாக " இத்துடன் இந்த வழக்கு விசாரணை முடிந்தது. 14 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் நான் மேலும் சில ஆவணங்களை படித்து பார்க்க வேண்டும். எனவே எனக்கு முழுமையாக 3 வாரங்கள் தேவைப்படுகின்றது. எனவே எதிர்வரும் செப்டம்பர் 20, 2014 அன்று தீர்ப்பு வழங்கப்படும். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார். இப்போது மைக்கேல் டி குன்ஹா அவர்கள் விசாரணை காலத்தில் அந்த பத்து மாதத்தில் ஜெயா தரப்பால் மற்றும் அரசு வழக்கறிஞர் தரப்பால் செய்யப்பட்ட தடைகளை இனி பார்ப்போம்...
59. மைக்கேல் டி குன்ஹா நீதிபதியாக வந்த பின்னர் 27.1.2014 அன்று ஜெயா தமிழக முதல்வராக இருப்பதால் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், சசிக்கு கண் வலி என்றும், இளவரசிக்கு சர்க்கரை நோய் என்றும் சுதாகரனுக்கு மூட்டு வலி என்பதாலும் அவர்களும் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் என குற்றவாளிகள் தரப்பு மனு செய்தது. இதை எதிர்க்க வேண்டிய பவானிசிங் அமைதியாக இருந்தார். எனவே நீதிபதி குன்ஹாவுக்கு வேறு வழி இல்லாமல் வாய்தா கொடுக்க நேர்ந்தது. ஆனாலும் அவர் "மருத்துவ சான்றிதழ் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் இந்த ஒரு முறை மட்டும் வாய்தா தருகின்றேன்" என்றார்.
60. அடுத்து ஜெயாவின் வக்கீல் "கைப்பற்ற பொருட்களை திரும்ப தர வேண்டும்" என புதிய மனு தாக்கல் செய்தார். நீதிபதி அவர்கள் "இத்தனை நாள் கேட்காமல் இப்போது கேட்பது வழக்கை இழுத்தடிக்கும் செயல்" என்றார். அப்போது நீதிபதி பவானி சிங் அவர்களை பார்த்து "உங்கள் பதில் என்ன இதற்கு? என கேட்ட போது பவானிசிங் "இதற்கு பதில் சொல்ல எனக்கு 2 வாரம் வாய்தா வேண்டும்" என்றார். இந்த அதிசயமும் நடந்தது. குற்றவாளிக்கு சாதகமாக அரசு வழக்கறிஞர் வாய்தா கேட்டமை. இதற்கு தான் உச்சநீதிமன்றம் வரை சென்று ஜெயா தரப்பு பவானிசிங் சார்பாக வாதாடி பெற்றது போலும்.
61. மீண்டும் மீண்டும் பவானிசிங் வாய்தா கேட்ட போது நீதிபதி அவர்கள் "இது நீதிமன்றமா? வாய்தா மன்றமா?" என கோபமாக கேட்டார். பின்னர் ஜனவரி 20, 2014 அன்று ஜெயா தரப்பு கைப்பற்ற பொருட்கள் பட்டியல் வேண்டும் என கேட்டு ஒரு மனு செய்தது. அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
62. பின்னர் வழக்கறிஞர்களின் இறுதி வாதம் பிப்ரவரி 3ம் தேதி முதல் நடைபெறும் எனவும், முதலில் அரசு தரப்பு பவானிசிங் அதன் பின்னர் ஜெயா தரப்பு வாதம் என்றும் இது தினம் தோறும் நடக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவு என்றும் கண்டிப்பாக சொன்னார் நீதிபதி அவர்கள்.
63. பிப்ரவரி 3ம் தேதி இறுதி வாதம் தொடங்கினால் மே மாதம் 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தீர்ப்பு வெளியாகிவிடும் என்பதால் பயந்து போனது ஜெயா தரப்பு. உடனே தங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு வழக்கறிஞர் பவானிசிங் மூலமாகவே அதே பிப்ரவரி 2014ல் ஒரு புதிய மனு தாக்கல் செய்ய வைத்தது. அந்த புதியமனுவில் பவானிசிங் "17 வருடம் முன்பாக ஜெயாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க, வைர, வைடூரிய நகைகளை நீதிபதி முன்பாக சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து கொண்டு வந்து பார்வையிட செய்ய வேண்டும் என முன்பு பேராசிரியர் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார் அல்லவா? அந்த பட்டியலில் இருந்த வெள்ளி பொருட்களையும் 1,116 கிலோ அதாவது ஒரு டன்னுக்கும் மேலாக இருந்த வெள்ளி பொருட்களையும் இங்கே கொண்டு வர வேண்டும் என மனு தாக்கல் செய்தார். கொஞ்சம் மேலே சென்று (17 வருஷம் மேலே போக வேண்டாம். பாயிண்ட் # 15க்கு போகவும்) படியுங்கள். அந்த வெள்ளி பொருட்களை அரசு கைப்பற்றவே இல்லை. ஜெயாவின் பிரதிநிதிகளான ஜெயராமன், விஜயன் ஆகியோரிடம் ஒப்படைத்தாகி அவைகள் போயஸ்கார்டனுக்கு போய் விட்டாகியது. அதை த்தான் மீண்டும் இங்கே கொண்டு வர வேண்டும் என பவானிசிங் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த பிரதிநிதி பாஸ்கரன் என்பவர் இறந்தும் விட்டார்.
64. இத்தனைக்கும் பாஸ்கரன் இறந்து விட்டமைக்கான சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டும் அதை ஏற்காமல் பவானி சிங் பாஸ்கரன் தான் அந்த வெள்ளி பொருட்களை திரும்ப கொடுக்க வேண்டும் என கேட்டு காலம் தாழ்த்திக்கொண்டு இருந்தார். இதை விசாரித்து முடித்து அந்த மனுவை தள்ளுபடி செய்ய மைக்கேல் டி குன்ஹாவுக்கு ஒரு மாதம் பிடித்தது. ஆகவே இறுதி வாதம் என்பது பிப்ரவரி 3ல் ஆரம்பிக்க வேண்டியது மார்ச் 7,2014க்கு தள்ளி போனது. அந்த ஒரு மாத காலம் இழுத்தடிக்காமல் இருந்தால் வழக்கின் தீர்ப்பு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வந்து இன்றைக்கு 37 எம் பிக்களும் அதிமுகவில் வெற்றி பெற்றிருக்க முடியாது. எனவே இந்த 37 அதிமுக எம்பிக்களும் தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து கும்பிட வேண்டிய தெய்வம் திரு.பவானிசிங் அவர்களே!
65. மீண்டும் மார்ச் 7,2014 அன்று இறுதி வாதம் செய்ய வேண்டிய பவானி சிங் நீதிமன்றத்துக்கு வரவே இல்லை. மீண்டும்10ம் தேதி ஒத்திவைப்பு, அப்போதும் பவானி சிங் வரவில்லை. மீண்டும் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு. பின்னர் 14ம் தேதி வந்த பவானிசிங் தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் 10 நாட்கள் வாய்தா வேண்டும் என கேட்க நீதிபதி மிகவும் எரிச்சலடைந்து பவானிசிங்கின் ஒரு நாள் ஊதியமான 65,000 ரூபாயை அபராதமாக விதித்தார். மீண்டும் 15ம் தேதியும் பவானிசிங் ஆஜராகவில்லை. அதனால் அன்றைக்கும் 65,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டது.
66. சரி என்று நீதிபதி ஜெயா தரப்பு வக்கீலை இறுதி வாதத்துக்கு அழைக்க அவர்களோ "முதலில் அரசு வழக்கறிஞர், பின்னர் தான் நாங்கள் வாதிடுவோம்" என மறுத்து விட்டனர். பின்னர் மீண்டும் ஒத்திவைப்பு.
67. அதன் பின்னர் சிறப்பு நீதிமன்றம் தனக்கு விதித்த அபராதம் 1 லட்சத்தி 30 ஆயிரம் ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டும் என பவானிசிங் கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றார். அங்கே வேலைக்கு ஆகவில்லை என உச்சநீதிமன்றம் சென்றார். அங்கே தனக்காக வாதாட நாகேந்திர ராவ் என்ற ஒரு "சிட்டிங்" வாதாட பல லட்சம் வாங்கும் மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதாடினார். அந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி பி. எஸ்.சவுகான். இவர்தான் ஜெயா தரப்பு "எங்களுக்கு எதிராக பவானிசிங் தான் வாதாட வேண்டும்" என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது அந்த விசித்திர வழக்கை விசாரித்து "சரி பவானிசிங்கே நடத்தட்டும். பாவம் குற்றவாளிகள் ஆசைபடுகின்றார்கள். அதனால் பவானிசிங்கே நடத்தட்டும்" என்கிற ரீதியில் தீர்ப்பு அளித்தவர் ஆவார். பவானிசிங் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மூன்று வாரங்கள் (21 நாட்கள்) வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.வழக்கோ அபராதம் நீக்கப்பட வேண்டும் என்று. ஆனால் தீர்ப்போ "பவானிசிங் உடல் நிலை சரியில்லை எனவே மூன்று வாரம் ஒத்தி வைப்பு என்று. இந்த கொடுமை எங்காவது நடக்குமா? இங்கே நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலையில் அடித்து கொள்ளாத குறை தான். எந்த உச்சநீதிமன்றம் இவருக்கு "தினமும் இந்த வழக்கை நடத்தி விரைவில் தீர்ப்பு சொல்ல வேண்டும் என சொன்னதோ அதே உச்சநீதிமன்ற பென்ச் 3 வாரம் தடை விதித்து ஜெயாவை நாடாளுமன்ற தேர்தல் வரை காப்பாற்ற நினைக்கின்றது.
68. பின்னர் உச்ச நீதிமன்றத்திலேயே விசாரணை. இருவர் பென்ச். யார் தெரியுமா நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் ஜே.செல்லமேஸ்வரன் அடங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயையும் குறைத்து 20 ஆயிரம் மட்டும் அபராதம் எனவும் தீர்ப்பு வழங்கினர். தவிர "அம்மா செத்துட்டாங்க, ஆயா செத்துட்டாங்கன்னு ஆஜராகாமல் இருக்க கூடாது" என தீப்பளித்து உத்தரவிட்டனர்.
69. 21.3.2014 முதல் பவானிசிங் தன் இறுதி வாதத்தை வேறு வழி இல்லாமல் தொடங்கினார். கிட்ட தட்ட 65 கோடி அளவுக்கு இருந்த இந்த சொத்து குவிப்பு வழக்கு என்பது இந்த 18 வருடத்தில் 5000 கோடிக்கு உயந்து விட்டது. அதை நீதிமன்றம் மட்டுமல்ல இந்திய தேசமே ஒரு வித பயத்துடன் பார்த்தது. இதையே தன் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் சுட்டி காட்டி விளக்கி பேசினார்.
70. ஜெயா வாங்கி குவித்துள்ள சொத்துகள் பட்டியல் என்பது மிக மிக மிக அதிகம். அதில் சில்வற்றை மட்டும் இங்கே தருகின்றேன். (இது நான் சொன்னது இல்லை. பவானிசிங் - அரசு வழக்கறிஞர் கொடுத்த பட்டியலில் சில மட்டும்) சென்னை- வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கர் பரப்பளவில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர் பங்களா, கொடநாட்டில் (ஊட்டி)800 ஏக்கர் மற்றும் அதன் உள்ளே பங்களாக்கல்,காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்யாகுமரியில் மீர்குளம்,சிவரங்குளம்,வெள்ளங்குளம் பகுதியில் 1,190 ஏக்கர்கள், தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர், ரிவர்வே அக்ரோ ஃபார்ம் பெயரில் 100 ஏக்கர், 30 கலர்களில் கார்கள் மற்றும் ட்ராக்டர்கள், ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், 32 புதிய கம்பனிகள், அந்த கம்பனிகள் பெயரில் பல சொத்துகள்,தவிர தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி, கைக்கடிகாரங்கள், பட்டு புடவைகள் (இவைகள் பல கோடி மதிப்பு) இப்படியாக 306 இடங்களில் அசையா சொத்துகள் தமிழகம் மற்றும் ஆந்திராவில்......... ஆக மொத்தம் சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதை நீதிமன்றத்தில் தக்க ஆதாரங்களுடன் அரசு வழக்கறிஞர் பட்டியலிட்டார்.
71. இப்படியாக மார்ச் மாதம் 2014ல் வழக்கு போய்கொண்டு இருந்த போதே லெக்ஸ் ப்ராபர்டி என்னும் ஜெயாவின் கம்பனி சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு புதிய வழக்கு தொடுத்தது. (அடுத்த தடை?) "எங்கள் கம்பனி சொத்துகளை ஜெயாவின் சொத்தாக காட்டப்பட்டுள்ளது. எனவே அதை விடுவிக்க வேண்டும். அந்த விசாரணை முடியும் வரை மூல வழக்கை விசாரிக்காமல் தடை விதிக்க வேண்டும்" (அதான பார்த்தேன்) என புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
72. நீதிபதி குன்ஹா உங்கள் வழக்கையும் விசாரிக்கிறேன். ஆனால் மூல வழக்குக்கு தடை என்பதை ஏற்க முடியாது. அந்த விசாரணை கண்டிப்பாக தனியே நடக்கும் என கூறி அதை தள்ளுபடி செய்தார்.மேலும் நீதிமன்றத்தில் வழக்கை இழுத்தடிக்க முயன்ற காரணத்தால் லெக்ஸ் ப்ராபர்டி கம்பனிக்கு 10,000 அபராதம் விதித்தார். இது நடந்தது மார்ச் 14, 2014 அன்று.
73. உடனே லெக்ஸ்ப்ராபர்டி கம்பனி இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது. அங்கே நீதிபதி சத்யநாராயணா ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கினார். "சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதம் மிகவும் குறைவு. எனவே அதை பத்து மடங்கு உயர்த்தி ஒரு லட்சம் ஆக 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றார். (எத்தனை செருப்படிகள்???)
74. ஆனால் லெக்ஸ் ப்ராபர்டி கம்பனி இதை தூக்கி கொண்டு உச்சநீதிமன்றம் சென்றது. அங்கே நம் செல்ல நீதிபதி அதாவது பவானிசிங் இருக்கட்டும் என ஜெயாவுக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்ன சவுகான் இருந்தார். அவரும் லெக்ஸ்ப்ராபர்டிக்கு (அந்த பென்சில் செல்லமேஷ்வரன், இக்பால் ஆகியோரும் இருந்தனர்) எச்சரிக்கை செய்து தள்ளுபடி செய்தனர்.
75. இதே போல மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ ஃபார்ம் ஆகிய கம்பனிகளும் தனி தனியாக மூல வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு பரிசாக "அபராதம்" பெற்றனர்.
76. அடுத்த அஸ்திரமாக சசி, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்கள் சொத்து முடக்கி வைத்ததை எதிர்த்து (இந்த 18 ஆண்டுக்கு பின்னர் வழக்கு முடியும் தருவாயில்) புதிய மனு செய்து வழக்கை இழுக்க பார்த்தனர். இப்போது நீதிபதி டி குன்ஹாவே கிட்ட தட்ட வக்கீல் போல சில பல கேள்விகளை கேட்க எல்லோரும் வாயடைத்து போயினர். பின்னர் 2500 பக்கங்கள் கொண்ட தொகுப்பை பவானி சிங் தன் இறுதி வாதமாக வைத்து ஒரு வழியாக முடித்தார்.
77.பின்னர் உச்சநீதிமன்றமும் லெக்ஸ் ப்ராபர்டி சொத்துகள் ஜெயாவின் சொத்துகளே என தீர்ப்பளித்தது. இது நடந்தது 13.05.2014.
78. பின்னர் டி எஸ் பி சம்பந்தம் சாட்சியில் மறைத்த விவகாரங்கள் பின்னர் டி.குன்ஹா, பின்னர் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எல்.நாராயணசாமி, பின்னர் விடுமுறை கால நீதிபதி ஆனந்த பையா ரெட்டி ஆகியோர்கள் மிக மிக கடுமையாக அதிமுக அரசின் டி எஸ் பி சம்பந்தம் மற்றும் அவரது குழுவினரை (ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு) கண்டித்து "உங்களின் இது போன்ற செயல்கள் உங்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் போது பாதிப்பை உங்களுக்கு உண்டாக்கும்" என எச்சரித்தனர்.
79. 25.05.2014 அன்று ஜெயா வக்கீலில் தாயார் இறந்து விட்டதால் அன்றைக்கு சசி வக்கீலை பார்த்து வாதம் செய்யுங்கள் என நீதிபதி அழைக்க அவர்கள் "ஜெயா வக்கீல் முடித்த பின்னர் தான் நாங்கள் ஆரம்பிபோம்" என அடம் பிடிக்க நீதிபதி 3000 ரூபாய் அபராதம் விதித்தார்.
80. இப்படியாக ஆகஸ்ட் மாதம் 10 தேதி வரை வரை எல்லா குற்றவாளி தரப்பும் வாதம் முடிந்த பின்னர் அரசு தரப்பு தொகுப்பு வாதம் 5 நாட்கள் பவானிசிங் நடத்தினார். அதன் பின்னர் ஜெயா தரப்பு தொகுப்பு வாதம் முடிந்தது. அப்போது கூட அடுத்த குற்றவாளிகள் தொகுப்பு வாதம் செய்ய இழுக்கடித்தனர். ஒரு வழியாக நீதிபதி நீங்கள் தொகுத்து வழங்காவிட்டால் நான் அதை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு தேதியை அறிவிப்பேன் என எச்சரித்தார்.
81. அதன் பின்னர் ஆகஸ்ட் 28, 2014 அன்று எல்லாம் முடிந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. மைக்கேல் டி குன்ஹா அவர்கள் எதிர்வரும் "இந்த வழக்கின் வாத பிரதிவாதம் , பின்னர் தொகுப்பு வாதம் எல்லாம் முடிந்தது. பொதுவாக 2 வாரத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் நான் இன்னும் சில ஆவணங்களை படிக்க வேண்டி இருப்பதால் எனக்கு முழுமையாக 3 வாரங்கள் தேவைப்படுகின்றது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பை நான் எதிர்வரும் 20ம் தேதி, செப்டம்பர் மாதம் 2014 அன்று வழங்க இருக்கின்றேன். எனவே வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளியான ஜெ.ஜெயலலிதா, இரண்டாம் குற்றவாளியான சசிகலா, மூன்றாம் குற்றவாளி வி.என்.சுதாகரன் மற்றும் நான்காம் குற்றவாளியான இளவரசி ஆகியோர் கண்டிப்பாக அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என முடித்துள்ளார்.
********************************
ஆக ஜூன் 14, 1996ல் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கானது அங்கிருந்து பயணப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் சென்று அங்கிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்து அங்கிருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சென்று அங்கிருந்து கர்நாடக உயர்நீதிமன்றம், பின்னர் உச்சநீதிமன்றம் மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றம், மீண்டும் பெங்களூரு பரப்பன அக்கிரஹாரம் சிறப்பு நீதிமன்றம்... என ஒரு பெரிய சுற்று சுற்றி வந்துள்ளது இந்த வழக்கு. பல நீதிபதிகள் இந்த வழக்கை பார்த்து விட்டனர். பல அரசு வழக்கறிஞர்கள் இதில் உள்ளே நுழைந்து வெளியே வந்து விட்டனர். வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் இறந்தும் விட்டனர். இன்னும் சொல்லப்போனால் முதன் முதலாக இந்த சொத்து குவிப்பு விஷயத்தை ஆளுனரிடம் போய் புகாராக கொடுத்த திமுக பெரும் தலைகளில் அய்யா முரசொலி மாறன், நாஞ்சிலார் ...அத்தனை ஏன் ஆளுனராக இருந்த டாக்டர் .சென்னா ரெட்டி ஆகியோர் கூட மறைந்து விட்டனர். 66 கோடியாக இருந்த சொத்து குவிப்பு வழக்கு என்பது இப்போது 5000 கோடியாக மாபெரும் வளர்ச்சி பெற்று விட்டது. 1991-1996 ல் நடந்த இந்த குற்றம் காரணமாக போடப்பட்ட இந்த வழக்கு இடையே இரண்டு முறை திமுக ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகளை கடந்து விட்டது. அதே போல குற்றவாளி தரப்பும் இரண்டு முறை எட்டாண்டுகாலம் ஆட்சிக்கு வந்து விட்டது. நடுவே பத்தாண்டுகாலம் வழக்கு தொடுத்த திமுக மத்தியில் கூட ஆட்சி அதிகாரத்தில் இருந்து விட்டது. இத்தனை மாற்றங்கள் இருப்பினும் "வாய்தா" என்பது மட்டுமே மாறாத ஒன்றாக இருந்தது இந்த வழக்கில்.
கலைஞரின் இந்த புத்தகம் "சொத்து குவிப்பு வழக்கு - ஒரு தொடர்கதை" என்னும் இந்த புத்தகம் சுமார் எட்டு நாட்கள் (2014 பாராளுமன்ற தேர்தலுக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில் ) முரசொலியில் கலைஞர் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதங்களே ஆகும். அதையே திராவிட முன்னேற்ற கழகம் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகத்தை இந்திய தண்டனை சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு (B.L., M.L.,) பாடமாக வைக்கக்கூடிய அனைத்து தகுதிகளையும் கொண்டது. ஒரு வழக்கில் எந்த எந்த விதத்தில் வாய்தா வாங்க சட்டத்தில் இடம் உண்டு என்பதையும், அதே நேரத்தில் எப்படி எல்லாம் சில நீதிபதிகள் சட்ட விரோதமாக நடந்து கொள்ள கூடாது என்பது பற்றியும் போதிக்கின்றன. அதே போல 18 ஆண்டுகள் ஒரு வழக்கை குற்றவாளிகள் எப்படி எல்லாம் சட்டத்தின் ஓட்டையில் புகுந்து தப்பிக்கின்றனர் என்பதையும் சுட்டி காட்டுகின்றது. எனவே இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சட்டத்தின் ஓட்டைகளை சரி செய்யும் நிபுணர்கள் கொண்டு இனி இப்படி ஒரு தவறு இந்திய சட்ட விதிகளில் இருக்க கூடாது என நினைத்து அதை சரி செய்யவும் கூட இந்த புத்தகம் பயன் படும்..பயன்பட வேண்டும். 91 வயதில் ஒருவர் ஒரே ஒரு வழக்கை மையமாக கொண்டு ஒரு ஆராய்ச்சியே செய்து முடித்து ஆய்வு கட்டுரை (தீசிஸ் சப்மிட்) சமர்பித்துள்ளது போல இருக்கின்றது இந்த புத்தகம். இந்த ஒரு காரணத்துக்காகவே நம் தமிழக அம்பேத்கார் சட்ட பல்கலைகழகம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு "டாக்டர்" பட்டம் வழங்க வேண்டும்.
இந்த 18 வருடங்களில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் இந்த ஒரே வழக்கில் நடந்துள்ளன என்பதை விட இந்த வழக்கின் தீர்ப்புக்கு இன்னும் முழுமையாக 20 நாட்கள் இருக்கும் நிலையில் இந்த வழக்கு இன்னும் எத்தனை தடைகளை தாண்ட வேண்டி இருக்குமோ என அஞ்சவும் தோன்றுகின்றது. இதை எல்லாம் மீறி செப்டம்பர் 20, 2014 அன்று தீர்ப்பு வெளிவர வேண்டும். அதுவும் நல்ல தீர்ப்பாக,நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்ப்பாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என நேற்று 30.08.2014ல் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதும் நியாபகம் வருகின்றது. அதே போல இந்த வழக்கு ஒரு தாய் வழக்கு தான். இதன் தீர்ப்புக்கு பின்னர் இந்த வழக்கு போடபோகும் குட்டி வழக்குகள் எத்தனை எத்தனை வரும் தெரியுமா? இன்னும் சொல்லப்போனால் இப்போது திமுகவினர் மீது "சொத்து அபகரிப்பு, நில அபகரிப்பு" வழக்குகள் பொய்யாக போடப்படுகின்றதே... அப்படி இல்லாமல் உண்மையான நில அபகரிப்பு, சொத்து அபகரிப்பு வழக்குகள் கொடநாடு எஸ்டேட்டை அடிமாட்டு விலைக்கு விற்ற(மிரட்டி பிடுங்கிய) ஆங்கிலேயர் முதல் இசை அமைப்பாளர் கங்கை அமரன் வரை வரிசை கட்டி நிற்கப்போகின்றனர். அதே போல ஆள் கடத்தல், மிரட்டுதல் என வரிசை கட்டி வரப்போகின்றன இப்போது உள்துறையை தன்னிடம் வைத்து கொண்டு இருக்கும் முதல்வர் மீது. சட்டம் என்ன செய்ய போகின்றது என பார்ப்போம்!
நீதி வெல்லட்டும்! நியாயம் பிறக்கட்டும்!!
புத்தகத்தின் பெயர்: "சொத்து குவிப்பு வழக்கு - ஒரு தொடர்கதை"
ஆசிரியர்: டாக்டர் கலைஞர். மு.கருணாநிதி
வெளியீடு: திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா அறிவாலயம், 367&369, அண்ணா சாலை, சென்னை - 600 018
விலை: 50 ரூபாய்
![]() |
நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கும் நல்ல தலைவர்கள்! |
June 19, 2014
கேபிள் சங்கரின் "தொட்டால் தொடரும்" படத்தின் "பாஸு பாஸு" பாடல் விமர்சனம்!!!
இது எங்கள் இனிய நண்பர் கேபிள் சங்கர் அவர்கள் இப்போது இயக்கி வரும் "தொட்டால் தொடரும்" சினிமாவின் பாடல் ப்ரமோ வீடியோவின் சின்ன விமர்சனம். நண்பர்களே தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பாருங்கள். இப்போது இந்த பட்டை கேளுங்கள். உங்கள் அன்பான ஆதரவை தாருங்கள் இந்த படத்துக்கு!
*****************
பாட்டை கேட்டேன் கேபிள்ஜி! பாட்டு மட்டும் ஓடிகிட்டு இருக்கு. ஆனால் மனசு மட்டும் எங்கோ பறந்து கிட்டு இருக்கு. இந்த சினிமா உலகில் ஜெயிக்க நீங்க நடத்திய போராட்டம், உழைப்பு, அர்ப்பணிப்புகள், இழப்புகள், வேதனைகள், உங்களை சினிமாவுக்கு நேர்ந்து விட்டு ஒத்துழைப்பு கொடுத்த உங்கள் குடும்பம், நீங்க சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்கிற உங்க அப்பாவின் ஆசைகள், இன்று இதை பார்க்க அப்பா இல்லியே என்னும் வருத்தம் இன்னும் எத்தனையோ எத்தனையோ மனசுல ஓடுது கேபிள்ஜி! உங்களின் இந்த முதல் இயக்குனர் ஆகும் இந்த தருணம் என்னால் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டது என்றே நினைக்கிறேன். ஏனனில் "பிடிக்குது... நல்லா இருக்கு... ஆஹா... ஓஹோ... சூப்பர்" என மனதில் முன்முடிவோடுத்தான் பாட்டை பார்த்தேன்.... அதனால் மட்டுமல்ல .... உண்மையாகவே பாட்டு பிடிச்சிருக்கு.... பாடல்களும் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தியேட்டரில் அதன் 100வது நாளில் நாங்கள் தியேட்டர் டிக்கெட் கிழிப்பவரிடம் "கேபிள்ஜி எங்க நண்பர் தான் தெரியுமா" என பெருமை அடித்துக்கொள்ள வேண்டும். அதைக்கேட்ட அந்த டிக்கெட் கிழிப்பவர் "எனக்கு கூடத்தான் சிவாஜி கணேசன் நண்பர்... பேசாம போய்யா படம் பார்க்க உள்ளே"ன்னு சலிச்சுக்கனும்.... நடக்கும் கேபிள்ஜி... இப்படி நடக்க வேண்டும்! என் அன்பான வாழ்த்துக்கள்!
Labels:
கேபிள்சங்கர்,
தொட்டால் தொடரும்,
பாஸு பாஸு பாடல்,
விமர்சனம்
June 1, 2014
அரை மணி நேரத்தில் "உலக கோப்பை கால்பந்து வெறியன்" ஆவது எப்படி?
தேர்தலும் முடிந்து விட்டது. ஐ பி எல் இன்றோடு முடிந்து விட்டது. இனி இணையத்தில் மொக்கை போடுவோர் சங்கம் என்ன ஆவது? அய்யகோ.. அப்படி ஒரு நிலையினை எப்படி இணையம் எதிர்கொள்ள போகின்றது என்ற மாபெரும் கவலையில் கன்னத்தில் கை வைத்து உட்காந்து இருக்கும் இணைய பொங்கல் வைப்போர்களுக்கான பிரத்யேகமான பயிற்சி வகுப்பு இது. இதோ இன்னும் பத்து நாளில் உலக கால்பந்து போட்டி நடக்க இருக்கின்றது. வாருங்கள்.. அங்கே போவோம். என்னது கால்பந்து பத்தி எதுவும் தெரியாதா?? அப்படியானால் உங்களுக்காகவே இந்த ஸ்பெஷல் கிளாஸ். கிரிக்கெட் தெரிந்த அளவு நமக்கு கால்பந்து தெரியாவிட்டாலும் நாமும் ஜோதியில் ஐக்கியம் ஆக வேண்டாமா? வாங்க வகுப்புக்கு போவோம்!
முதலில் உங்களுக்கு என்று ஒரு கால்பந்து கடவுளை தெர்ந்தெடுத்துக்கொள்ள வெண்டும். கிரிக்கெட் எனில் "சச்சின்" கடவுள் என்பது போல கால்பந்துக்கு "பீலே" தான் கடவுள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். உடனே நீங்களும் "பீலெ" வை கொண்டாடிவிடாதீர்கள். பின்னர் நீங்கள் பத்தோடு பதினொன்று ஆகிவிடும் அபாயம் உள்ளது. பீலே விளையாடிய காலத்தில் விளையாடிய வேறு ஏதாவது பெயர் தெரிவு செய்து கொள்ளவும். உடனெ கார்த்திகை நிலவன், சரவண குமார் போன்ற பெயர்கள் வேண்டாம். ஃபாரின் பெயராய் இருப்பது உத்தமம். உதாரணத்துக்கு "புரூனோ மார்க்கஸிண்டஸ்"... இது எப்படி அக்மார்க் ஃபாரின் பெயராய் இருக்குதா... ஓக்கே.... அதுக்காக ராயபுரம் பீட்டர் வேண்டாம். பின்னே கோர்டுக்கு எல்லாம் அலைய வேண்டி இருக்கும். சரி.... புரூனோ மார்க்கஸிண்டஸ் அடிச்ச கோல் சுமார் 400 என பீலா விடுங்கள். அதுவும் ஒரே கேம்ல அடிச்சார்ன்னு சொல்லுங்க.கிரிக்கெட் லாரா ரசிகர்கள் கூட வாயடைச்சு போவான்... முதல் அடியே மரண அடியாக இருக்க வேண்டும்.
அடுத்து ஒரு முக்கியமான "தியரம்" இருக்கு. அந்த தியரத்துக்கு என்ன பெயர் என பின்னர் சொல்கிறென். முதலில் தியரம் என்னவென்று பார்போம். இப்போ உலக கோப்பை கால்பந்துன்னு எடுத்து கிட்டா உடனெ அர்ஜண்டைனா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேசில்,இத்தாலி இவைகள் தான் ஜெயிச்சுகிட்டு வருது.... இந்த முறையும் அவைகளே ஜெயிக்கும் என பல பேர் இணையத்தில் எழுதுவாங்க. நீங்க அங்க தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரும் எதிர்பார்க்காத ஒரு நாட்டை சொல்லி அது தான் ஜெயிக்கும்ன்னு ஒரே பிடிவாதமாக விவாதம் செய்யவும். உடனே இந்தியா, இலங்கை, பங்களாதேன், நேப்பால்ன்னு உளற கூடாது. இன்னும் எட்டி ...இன்னும் எட்டி ....தூரதேசமா உங்க சிந்தனை போகனும். நம்ம ஊர்ல ஓட்டை போட்டா மெக்சிகோவுக்கு போகுமே அத்ததண்டி தூரமா மெக்ஸிகோ, உருகுவேன்னு எதுனா ஒரு நாட்டை எடுத்துக்கனும். உருகுவே தான் ஜெயிக்கும் என பந்தயம் கட்டுங்க. பந்தயப்பணம் கூட இந்திய ரூபாயில் கட்ட கூடாது. படீர்ன்னு 1000 இத்தாலியன் லிராஸ்ன்னு கட்டுங்க. எதிராளி பேதியாகிடுவான். (நீங்க பேதி ஆகிடாதீங்க. 1000 இத்தாலிய லிராஸ் என்பது இந்திய ரூபாய்க்கு சுமார் 200 , 300 ரூபாய் தான் ஆகும்... இல்லாட்டி ஈரான் கரன்சில கட்டுங்க, அது இன்னும் நல்லது - பாக்கெட்டுக்கு)
உடனே நீங்கள் கேட்கலாம். அது ஏன் உருகுவேயை தேர்ந்தெடுத்தீங்கன்னு. காரணம் இருக்கு. இந்த தியரம் பேரே "தமிழருவி மணியன் தியரம்" தான். வெளங்காத எதுனா கட்சியை எல்லாம் கூட்டணி சேர்த்து இதான் ஆச்சியை பிடிக்கும், அத்தாச்சியை பிடிக்கும்னு சொன்னா நானூறு பேர் கழுவி ஊத்தினாலும் நாலு பேரு டிவி விவாதத்துக்கு கூப்பிடுவான். எக்குதப்பா ஜெய்ச்சுதுன்னா "நேக்கு கவர்னர் போஸ்ட்ன்னா ரொம்ப அலர்ஜியாக்கும்"ன்னு பேட்டி குடுக்கலாம். எனவே தான் இந்த தியரத்துக்கு பெயர் "தமிழருவி மணியன் தியரம்". இப்ப புரியுதா? சரி உருகுவே தான் ஜெயிக்கும் என முடிவு செஞ்ச பின்னே அந்த நாட்டிலே விளையாடும் எதுனா ஒரு ப்ளேயரை தேர்ந்தெடுத்துக்கனும். சரி இருங்க தேடி எடுப்போம்......
எடுத்தாச்சு. பயபுள்ள பேரு லூயி சுவாரேஸ். ரொம்ப தேடவில்லை நான். கேப்டனையே எடுத்துகிட்டேன். கேப்டனாக இருப்பவன் எப்படியும் நல்லா ஆடித்தான் தொலைப்பான். முதல் வேலையா ஜூன் 12ம் தேதி முதல் நடக்க இருக்கும் போட்டிகளுக்கான டைம் டேபிள் பேப்பர் கட்டிங் எடுத்து அதை A3 சைஸ்ஸ்ல போட்டோ காப்பி எடுத்து உங்க ரூம்ல ஒட்டு வையுங்க. அதிலெ உருகுவே விளையாடும் போட்டி மெலெ எல்லோ ஹைலைட்டர் வச்சு பளிச் பண்ணுங்க. அது எந்த இந்திய நேரத்தில் வருதுன்னு சைடுல குறிச்சு வச்சுகுங்க. அதே போல லூயிசுவாரேன் படம் எதுனா கிடைச்சுதுன்னா பாருங்க. அந்த ப்ளோ-அப் பெருசா ரூம்ல, கதவிலே எல்லாம் ஒட்டுங்க. அதன் பக்கத்திலே நின்னு ஒரு போட்டோ எடுத்த் வாட்ஸ் அப்ல ஒரு 50 பேருக்கு தட்டி விடுங்க.
அதிலே மிக முக்கியம் என்னான்னா "நான் கோவிலுக்கு போனேன், கக்கூஸ்க்கு போனேன்"ன்னு உயரிய பதிவுகள் போடும் அன்பர்களுக்கா பார்த்து அனுப்புங்க. மேட்டர் இல்லாம தவிக்கும் அவங்க உடனே நீங்க லூயி சுவாரேஸ் ப்ளோ-அப் பக்கத்தில் இருக்கும் போட்டோவை ஃபேஸ்புக்ல போடுவானுங்க. இது போதும்... பத்திக்கும். அப்படியும் பத்திக்கலையா உடனெ உங்க டைம்லைன்ல " சிரிச்சா கோணவாயாய்மாதிரி இருக்கும் ஒரு நண்பர் நான் என் ஆதர்சன கால்பந்து தெய்வம் லூயி சுவாரேஸ் கூட இருக்கும் புகைப்படத்தை தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். பதிவிடும் முன்னர் என்னிடம் பர்மிஷன் வாங்கனும் என்னும் அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை"ன்னு ஜாடையிலே போட்டு கிழிங்க. மறக்காம அந்த பதிவின் லிங் கொடுங்க. அப்புறம் என்ன சரவெடிதான்.... பை தி பை எப்போதும் உங்கள் லூயி சுவாரெஸை முழுப்பெயர் சொல்லி எழுதாதீங்க. செல்லமா லூ என்றோ லூயி என்றோ அல்லது சுவாரெஸ் என்றோ எழுதுங்க. நிச்சயம் அவரு பெயரில் எதுனா ஃபேஸ்புக், ட்விட்டர் பேஜ் இருக்கும். அதிலே அவரோட படம் இருக்கும். அதை காபி பேஸ்ட் அடிங்க. உங்க ப்ரொஃபைல் படமா அதை தினம் தினம் டிசைன் டிசைனா மாத்திகுங்க. "இதுவரை வெளிவராத லூயியின் படம்" என சொல்லி எதுனா படத்தை போடுங்க. அவ்ளோவ் தான்
அடுத்த போட்டோ வெறும் ரெண்டு கால்கள் பந்தை உதைக்கும் மாதிரி கட் பண்ணி எடுத்துகுங்க ... பெரிசா லைவ் சைஸ்ல ... அந்த பந்து இருக்கும் இடத்தில் உங்க தலையை (அதே பந்து சைஸ்ல வெட்டி எடுத்துகுங்க. (உங்க போட்டோ தலை..நிஜ தலை இல்லை) அதை பந்துக்கு பதிலா ஒட்டி கீழே தத்து பித்துன்னு ஒரு கவிதை எழுதுங்க.
"லூயி சுவாரேஸ்! என் மூச்சே நீதான்
அடுத்த ஜென்மம் உன் கால் படும் பந்தாய் என் தலை ஆகட்டும்
ராமர் பாதம் பட்ட அகலிகைக்கும்
சரித்திரத்தில் இடம் உண்டு தானே"
- இப்படிக்கு உன் வெறியன் என போட்டு உங்க பெயரை போடுங்க. அதை எடுத்து இணையத்தில் போட்டு லைக் அள்ளுங்க.
இப்ப இந்த சிலபஸ் கொஞ்சம் கஷ்டம். ஆனா இதையும் படிச்சுட்டா நீங்க தான் இந்த உலக கோப்பை முடியும் வரை இணையத்தில் ஹிரோ.
அதாவது சுமார் ஒரு ஏழு அல்லது எட்டு நாடு... எது எதெல்லாம் கிட்ட தட்ட உலக கோப்பை வெல்லும்னு பேப்பர் எல்லாம் எழுதுதோ அந்த நாடுகளை எடுத்து அழகிய தமிழில் எழுதி வச்சுகிட்டு, அந்தந்த நாட்டில் எவன் நல்லா விளையாடுறானோ அவன் பெயர்களையும் எழுதி வச்சுகிட்டு மனப்பாடம் பண்ணிகுங்க.
போர்சுகல் - கிருஸ்டியானோ ரொனால்டோ
அர்ஜண்டைனா - லியோனஸ் மெஸ்ஸி
இங்கிலாந்து - வெயின் ரூனி
பெல்ஜியம் - ஈடன் ஹசார்ட்
ஸ்பெயின் - ஆண்ட்ரே இனியஸ்டா
இத்தாலி - மரியோ பலோடோலி
பிரேசில் - நெய்மார்
ஆச்சுதா... மேலே இருப்பதை மனப்பாடம் செய்வது மட்டுமே இந்த கோர்ஸ்ல கொஞ்சம் கஷ்டமான பாடம். இதை மட்டும் தயவு செஞ்சு படிச்சுடுங்க. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சுரை தும்பியை விட இது சுலபம் தான். சும்மா வருவாளா சுந்தரி!
தட்ஸ் ஆல்...சிலபஸ் இத்தனையே. நீங்க பாஸ் செஞ்சாச்சு கால்பந்து வெறியன் கோர்ஸ்ல். இனி சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாம் நீங்க அதிலே டிஸ்டிங்ஷன் வாங்குவதற்கான டிப்ஸ் தான்.
போர்ச்சுகல் கிருஸ்டியானோ ரொனால்டோவுக்கு வயசு ஆகிடுச்சு. போன தயாவே கிழவன். முக்கி முக்கி தான் கோல் அடிச்சான். இவனை செலக்ட் செஞ்ச கேப்மாரி கைல கிடைச்சா கைமா போட்டுடுவேன்னு ஒரு நாள் ஒரு ஸ்டேடஸ்போடுங்க.
ஒரு நாள் பெல்ஜியம் நாட்டு ஈடன் ஹசார்ட் கொடும்பாவியை கொளுத்துவேன்னு பயம் காட்டி ஒரு ஸ்டேடஸ் அடிச்சு விடுங்க.
மரியா பலோடோலிக்கும் இங்கிலாந்து கவர்ச்சி நடிகைக்கும் கெட்ட சகவாசம்னு கிழிச்சு போடுங்க.
உருகுவே மேட்ச் நடக்கும் அன்று அந்த நேரத்தை குறிப்பிட்டு உங்க ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாத்திலயும் "நண்பர்கள் தயவு செய்து இன்று நள்ளிரவு 1.45 முதல் 2.45 வரை தொலைபேசி மற்றும் ச்சேட்டிங்ல வர வேண்டாம்"ன்னு பதிவு போடுங்க. (ஊக்கூம் பகல்லயே கூப்பிட ஆள் இல்லை... இந்த லெட்சனத்துல இரவு ஒன்னே முக்காலுக்கு எவன் கூப்பிடப் போறான்). உணர்ச்சி வசப்பட்டு அந்த நேரத்தில் எவனுக்காவது போன் செஞ்சு "நான் பிசியா இருக்கேன்"ன்னு சொல்லி போனை வச்சிடாதீங்க. செம கடுப்பாகிவானுங்க.
இங்கிலாந்தின் வெயின் ரூனிக்கு துபாய் நாட்டிலே பால்ம் ஐலேண்ட்ல 200 கோடி ரூவாய்க்கு வில்லா இருக்கு, இது எவன் அப்பன் வீட்டு சொத்து? அது சம்பாதிச்சு வாங்கினதா அல்லது சேம் சைடு கோல் அடிக்க வாங்கிய கையூட்டான்னு ஒரு நாள் விடிகாலையிலேயே பரபரப்பா ஒரு பதிவு போட்டு கலக்குங்க. படிக்கிறவன் பைத்தியமா அலையனும்!
பிரேசிலின் நெய்மாரே முடிஞ்சா என் தலைவன் லூயி சுவாரேஸ்க்கு எதிரா ஒரு கோல் போடுடா. நான் மவுண்ட் ரோட்டிலே முண்டமா ஓடுறேன்னு சவால் விடுங்க. (அந்த கொடுமைக்கு பயந்தே கூட நெய்மார் உங்க ஆளுக்கு எதிரா கோல் என்ன உச்சா கூட அடிக்க மாட்டான்)
ஆச்சுது... ஒரு மாசம் இப்படியாக உலககோப்பை கால்பந்து முடிஞ்சதும் ஒரு வேளை உருகுவே ஜெயிச்சுதுன்னா "நான் அப்பவே சொன்னேன். நான் சொன்னப்ப ஒரு பயலும் ஒத்துக்கலை. மழை பெய்யுது மழை பெய்யுதுன்னு சொன்னா சொன்னவனை பைத்தியக்காரன்னு சொன்னீங்க. இப்ப என்னாச்சு? விளையாட்டை ரசிக்கனும்... அதிலே என் தலைவன் கால் அசைவு ஒவ்வொன்னுத்தையும் அனு அனுவா பார்க்கனும். அப்ப தெரியும் அதன் லாவகம். சும்மாங்காட்டியும் பேப்பர்காரன் எழுதினதை வச்சுகிட்டு பெனாத்த கூடாதுக்கு.இந்த வெற்றியை என் ஃபுட்பால் கடவுள் புரூனோ மார்கண்டீஸ் அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்" என்கிற ரீதியில் பதிவு போடனும்.
ஒரு வேளை உருகுவே தோத்து போச்சுதுன்னா உங்க கிட்டே எவனும் கேட்க மாட்டான். அப்படியே "உருகுவே ஏன் தோத்துச்சு"ன்னு கேட்டா தலைவர் கலைஞர் பாணியில் "கோல் அடிக்கலை. அதனால் வெற்றி வாய்பை இழந்தது" ன்னு சிம்பிளா சொல்லிகிட்டு போய்கிட்டே இருங்க. இல்லாட்டி கிரவுண்ட் சப்போர்ட் எங்களுக்கு இல்லை. கிரவுண்டில் இருந்த எல்லாருக்கும் தலா 200 டாலர் கொடுத்து கத்த சொல்லி ஜெர்மனி ஆரியர்கள் ஜெயிச்சாங்கன்னு ஒரு பிட்டை போட்டு எஸ்கேப் ஆகிடலாம். அதுவும் இல்லாட்டி போட்டி நடத்தின நடுவர்கள் அவங்களுக்கு ஆதரவா இருந்தாங்க. நாங்க கிரவுண்டுக்கு வரும் போது ரோட்டிலே சிக்னல் போட்டு நிப்பாட்டி வச்சாங்க. அவங்க போகும் போது மஞ்சள் லைட் போட்டு அவங்களுக்கு ஆதரவா இருந்தாங்கன்னு சொல்லுங்க.
ஆனால் இணைய உலக வரலாற்றில் நீங்கள் ஒரு "தீவிர கால்பந்து வெறியன்" என்பது மட்டும் நிலைத்து இருக்கும்! இதானே நமக்கு வேண்டும்!
உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!
Labels:
உலக கோப்பை கால்பந்து,
கால்பந்து,
நகைச்சுவை மாதிரி
Subscribe to:
Posts (Atom)