பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 9, 2011

பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும் !!!


இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் திமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளரும் , தளபதி அவர்களின் உற்ற தோழருமான தோழர் திரு ஹசன் முகமது ஜின்னா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் கூறிய அந்த வார்தைகளை நான் கேட்க கேட்க மகிழ்வின் உச்சத்துகே சென்றேன். அவர் சொன்னது இது தான். "நேற்று தலைவர் கலைஞர் அவர்களை அறிவலயத்தில் சந்தித்த போது முகநூலில் நீங்கள் எல்லோரும் எழுதியதை நகல் எடுத்து கொடுத்தேன். உங்கள் பதிவுகளை எல்லாம் தலைவர் படித்தார்.... என மேலும் மேலும் சொல்ல எனக்கு அதற்கு மேல் காதில் எதும் விழவில்லை. உடனே என் அம்மாவிடம் போனை கொடுத்தேன். அம்மாவிடமும் திரு.ஜின்னா அவர்கள் விஷயத்தை சொன்ன போது 'அந்த மவராசன் என் பையன் எழுதியதை படிச்சாராப்பா" என நா தழுதழுக்க நான் உணர்சிக்குவியலாய் இருந்தேன்.

பின்னர் ஒரு அரைமணி நேரம் கழித்து அவரே எனக்கு தொலைபேசி "நான் நடந்ததை அப்படியே என் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கேன். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அங்கே இட்டுள்ளேன்" என கூறினார். அவரது முகநுலில் எழுதியதை இங்கே தருகின்றேன்.

=================================================

நேற்று இரவு தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்தேன், தினத்தோறும் தலைவர் கலைஞர் அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தாலும் அவரை புதிதாக பார்க்கின்ற அனுபவத்தையே தலைவர் கலைஞர் ஒவ்வொருமுறையும் ஏற்படுத்துவார். என்னை குழந்தையாய் கையில் எடுத்து கொஞ்சியிருக்கிறார். சிறு வயது முதல் அவரை நான் பார்த்துவந்தாலும் என்றும் எனக்கு அவர் பிரமிப்புதான்.
தலைவர் கலைஞர் அவர்கள் அறைக்கு உள்ளெ சென்றவுடன் “என்ன? என்று பாசத்துடன் ஒரு வார்த்தை கேட்டார். ஃபேஸ்புக்கில் தலைவர் அவர்களை பற்றி இணையத்தினர் எழுதியுள்ள கருத்துகளை கொண்டுவந்திருக்கிறேன் எனச் சொல்லி கையிலிருந்த ப்ரிண்ட் அவுட்களை தலைவர் கையில் கொடுத்தேன்.
அறிவாலயத்திலிருந்து கிளம்புகின்ற அலர்ட் பி,எஸ்.ஓ கொடுத்துவிட்டதால் தலைவர் கையில் வாங்கி வீட்டில் போய் படிப்பார் என்று நினைத்தேன். கார் தயாராக நிற்கிறது. எல்லோரும் தயார் நிலையில் இருக்கிறார்கள். தலைவர் கையில் வாங்கியதை அப்படியே வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்றில்லாமல் அங்கேயே பிரித்து படிக்கத்தொடங்கினார். அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும் அருகிலிருந்து விளக்கினார். டி.கே.எஸ் அவர்களிடம் தலைவர் படிப்பதை அப்படியே வீடியோ எடுங்கள் ஃபேஸ்புக்கில் போடுவோம் , நண்பர்கள் மகிழ்வார்கள் என்று சொன்னவுடன் அவருடன் அதனை உடனே படம்பிடித்தார்.
இரண்டுபக்கம் தாண்டியவுடன் தலைவர் நிமிர்ந்து இனாமுல் யார் என்று கேட்டார். கழகத் தோழர் , தொடர்ந்து கழகத்திற்காக எழுதிக்கொண்டிருப்பவர் என்று சொன்னேன். தொல்காப்பியன் பக்கம் வந்தவுடன் மீண்டும் இன்னொரு முறை படிக்கத் தொடங்கினார். நான் உடனே சொன்னேன் மயிலாடுதுறையை சேர்ந்தவர், இணையத்தில் எங்கெல்லாம் கழகத்தை விமர்சிக்கிறார்களோ அங்கு இவர் , அப்துல்லா, யுவகிருஷ்ணா உள்ளிட்ட பல நண்பர்கள் பலர் பதிலடி கொடுக்கக்கூடியவர்கள் என்றேன். காதில் கேட்டுக்கொண்டே படிப்பதை தொடர்ந்தார். திடீரென்று வைரமுத்து தி.மு.க என்று ஒருவர் எழுதியிருக்கிறாரே என்றார், ஆம், இவரும் மதுரைக்கரார்தான் என்றேன். எல்லோருடைய பதிவுகளையும் நிதானமாக படித்தார். பலரும் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி கலைஞ்சரிடம் கர்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று புத்தகம் எழுதிய கோவி.லெனின் கூட தன்னுடை பார்வையை பதிந்திருக்கிறார் என்றேன், ம்! பார்த்தேன் என்றார் தலைவர். அத்தனை குறுகிய நேரத்தில் எல்லாவற்றையும் படித்துமுடித்துவிட்டு எழுதிய பெயர்களை நினைவும் வைத்துக்கொண்டு பார்த்தேன் என்று சொல்கிறாரே என்பதை வழக்கம்போல் வியந்தேன்.
படித்துமுடித்துவிட்டு பேப்பரை நீட்டினார் நான் அதை வாங்க, என்னிடம் கொடுக்க மறுத்து தலைவருடய உதவியாளர் நண்பர் நித்யாவிடம் கொடுத்தார். காரனம் ஒருவேளை வீட்டிலும் போய் இன்னும் நிதானமாக படிக்கலாம் என்று நினைத்திருப்பார்.
நான் என் கையில் இருந்த என் ஐபோனை தலைவரிடம் நீட்டி ஃபேஸ்புக் பக்கத்தை காட்டி இதில் வந்திருப்பதைத்தான் தலைவர் படித்தீர்கள் என்றேன், ஐபோனையும் கையில் வாங்கி அதிலும் படித்தபோது என்ஃபீல்டர் பதிவு இருந்தது, நான் என்ஃபீல்டர் யார் என்பதை சொன்னவுடன் அப்படியா என்று வியந்து கேட்டார்.
ஃபேஸ்புக்கில் இணையதள தி.மு.க, இனமான இணைய தி.மு.க இப்படி பல க்ரூப்களை இளைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னேன். மேலும் இணைய நண்பர்களை ஒருங்கினைத்து சமீபத்தில் பெரியார் திடலில் மெல்வின் என்கிற நண்பர் கூட்டம் நடத்தினார், தலைமை கழக பேச்சாளர்கள் ஒப்பிலாமணி, இளம்பரிதி போன்றவர்கள் கலந்து கொண்டு அவர்கள் பேச்சுக்கு இந்த பக்கங்களிலிருந்து பலவற்றை பயன்படுத்திகொள்கிறோம் என்று சொன்னார்கள் என்பதை சொல்லி 2011 தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு நண்பர் ”விக்கல் நிற்க விஷம் குடித்த தமிழக மக்கள்” என்று பதிவு செய்திருந்தார் என்பதை கேட்டவுடன் என்னது? என்று மீண்டும் கேட்டு நன் சொன்னதற்கு வாய் விட்டு சிரித்தார். கலைஞர் ஆட்சியில் நடந்த திருமணங்கள் ரத்து கணவன்கள் கொண்டாட்டம், மனைவிகள் திண்டாட்டம் என்ற பதிவையும் சொன்னவுடன் மிகவும் ரசித்தார் தலைவர் கலைஞர். நம் நண்பர்களின் அனைத்து பதிவுகளையும் தலைவர் படித்தார் என்ற திருப்தியுடன் தலைவரிடம் சொல்லிவிட்டு வெளிவந்தேன். அதன்பிறகு தலைவர் அந்த அறையைவிட்டு காருக்கு செல்ல நண்பர் வினோத் அழைத்துக்கொண்டு வந்தார். தலைவர் காரில் ஏறுகிற நேரத்தில் என்னை பார்த்து வருகிறேன் என்று சொல்லி மெதுவாய் சிரித்தார். அந்த சிரிப்பில் என் உழைப்பை இன்றைய இளையதலைமுறையும் அறிந்திருக்கிறார்கள், என் உழைப்பு வீன்போகவில்லை என்கிற பெருமிதம் தெரிந்தது
===================================================

மேலே இருக்கும் வரிகள் தான் அவரது முகநூலில் எழுதிய வாசங்கள். அவரது முகநூல் ஐடி http://www.facebook.com/profile.php?id=100000241241891 அதிலே வீடியோவும் காணக்கிடைக்கும்.

இந்த ஒரு சின்ன அங்கீகாரம் போதும். நாங்கள் திராவிடமுன்னேற்ற கழகம் என்பது ஒரு பேரியக்கம். ஒன்னரை கோடி உறுப்பினர்கள். நான் கடைசி தொண்டன். என் எழுத்தை படிக்கும் என் தலைவன். இதை உலகில் எந்த ஜனநாயக கட்சியில் காணமுடியும்? சொல்லுங்கள் தோழர்களே!

ஒரு தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள நெருக்கம் , பாசம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் திமுகவை விட்டால் வேறு ஏது கட்சி இருக்கின்றது இந்த உலகில்?

இரண்டு வருடம் முன்னே ஒரு ஜூன் மாதம் இரண்டாம் தேதி, மயிலாடுதுறையின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் மிசா. அ. செங்குட்டுவன் மரணப்படுக்கையில் இருக்கின்றார். வாழ் நாள்வரை பெரியார் வழியில், அண்ணா வழியில், கலைஞர் வழியில் வாழ்ந்த அக்மார்க் நாத்திகன். எல்லா கட்சி உறுப்பினர்களும் போய் பார்கின்றனர். அவர் கண்களில் இருந்து கண்ணீர். "அண்ணே ரொம்ப வலிக்குதா" எனக்கேட்ட ஒருவரிடம் "இல்லை நான் மிசாவை பார்த்தவன். எனக்கு உடல் உபாதை வலிக்கும் போதெல்லாம் என் தம்பி ஸ்டாலின் மிசாவில் பூட்ஸ்காலால் மிதிபட்ட போது இது போல வலித்து இருக்குமா, அல்லது இதை விட அதிகமாக வலித்து இருக்குமா என எனக்கு நானே பட்டிமன்றம் நடத்திப்பேன்" என சொல்கிறார். கேட்டவர்கள் கலங்கி போனார்கள். ஒரு கட்டத்தில் அவர் கண்களில் கண்ணீர். "அண்ணே, ஏன் அழுற?" என கேட்டோம். "இல்லடா தம்பிங்களா, நான் கடவுள் இல்லைன்னு கடைசி வரை இருந்துட்டேன். இப்ப இருந்தா நல்ல இருக்கும்னு தோணுது" ( மக்களே தசாவதாரத்தில் மட்டும் கமல் குழப்பியது போல) . அதுக்கு ஒரு உடன்பிறப்பு " அண்ணே, சரி சரி வா வா எதுனா கோவிலுக்கு" என கூப்பிட்ட போது " போடா போட பொறம் போக்கு, நான் உசிரோட இன்னும் ஒரு நாள் இருக்கனும்னு நினைச்சது வேற காரணம். நான் இன்னிக்கு செத்தா திமுக கொடி எல்லாம் மாயவரத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும், அது கூடாது. ஏன்னா விடிஞ்சா என் தலைவன் பிறந்த நாள். ஜூன் 3. அன்னிக்கு நான் பார்த்து பார்த்து ஏத்துன கொடி எல்லாம் அரைக்கம்பத்தில் இருக்க எனக்கு மனசு வரலை. அதனால தான் சொன்னேன். கடவுள்ன்னு எவனாவது இருந்த சொல்லி அனுப்பு. நான் ஜூன் 3 அன்னிக்கு வர்ரேன்ன்னு" என சொன்னார்.

ஆனால் அவர் உயிர் பிரிந்தது. மயிலாடுதுறை நகரகழகம் தலைவர் பிறந்த நாள் காரணமாக சென்னை செல்வதா அல்லது என்ன செய்வது என தெரியவில்லை. தளபதியிடம் இருந்து செய்தி வருகின்றது. "அண்ணன் மிசா. அ. செங்குட்டுவன் உடல் அடக்கம் நடக்கும் வரை அங்கிருந்து யாரும் இங்கே வரக்கூடாது. நான் என்னால் இயன்ற வரை வருகிறேன்" என. பின்னர் பேராசிரியர் அன்பழகனார் முரசொலியில் கட்டம் போட்டுட்டார். அதாவது மயிலாடுதுறையில் திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என!

இது தான் திமுக! ஒரு தலைவனுக்கும் ஒரு தொண்டனுக்கும் இடையேயான ஒரு பாசப்பிணைப்பு!

வாழ்க திமுக! வாழ்க கலைஞர்! வாழ்க தளபதி!
8 comments:

 1. மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு இது ஆச்சரியமல்ல. பத்ரிக்கையாளர் முத்து முருகேசனை உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்பது எனக்குத் தெரியாது. கலைஞரின் வலதுகரம் போல (ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேல்) இருந்தவர். அப்துல்லாவிடம் கேட்டுப் பாருங்க. இதை விட கலைஞர் 1985 வாக்கில் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில் நடந்த இது போன்ற தொண்டர் சார்ந்த நெகிழ்ச்சி சம்பவங்களை அவர் மூலம் கேட்டு இருக்கின்றேன்.

  ReplyDelete
 2. நல்ல தகவல் நண்பா

  ReplyDelete
 3. இந்த கழகத்தாலும், இல்லை அதன் தலைவர் கலைஞராலும், ஒரு ரூபாய் வருமானமோ அல்லது மிகச்சிறியதான ஏதோவொரு பதவியோ கூட இதுவரை அனுபவித்திராமலும், இனிமேலும் அதை எதிர்பார்த்து இல்லாமலும்... கழகத்தின் மீதும் கலைஞர் மீதும் இவ்வளவு அளவு கடந்த பற்றும், பிடிப்பும், பாசமும் வைத்திருக்கும் உன்னைப் போன்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கின்ற வரை... இதேப்போன்ற தொண்டர்கள் புதிது புதிதாக இன்னமும் கழகத்தில் இணைந்து கொண்டிருக்கும் வரையில், சில கோட்டான் கத்து கத்தென்று கத்தி இந்த கழகத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது!!!

  இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்?! வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 4. ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட ஒரு கட்சி தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள அந்த பாசப் பிணைப்பினை படம்பிடுத்து காட்டி இருக்கிறீர்கள்.

  கடைசி தொண்டனையும் கனிவுடன் கவனிக்கிறார் கலைஞர் என்பதை இதனைப் படிக்கின்ற அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

  கண்களில் கண்ணீரை வரவளைத்து விட்டீர்கள்.
  படிக்கும் போதே உடலெல்லாம் சிலிர்த்துக் கொள்கிறது.
  ஒரு தொண்டனுக்கு இதை விட வேற என்ன வேண்டும். மனநிறைவான் பதிவு.

  ReplyDelete
 5. நீங்கள் தொண்டரில்லை. பக்தர். I wish i could understand a rational behind such a devotion! Happy to not being a 'baktha' of any one other than the God..

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))