பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 23, 2012

தளபதியின் வருகை - ஒரு மாவட்ட செயலரின் பார்வையில்!!!

பல அரசியல் தலைவர்களை உருவாக்கிய அண்ணாமலை பல்கலைகழகம் உருவாக்கிய, குன்னம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், அரியலூர் மாவட்டத்தின் திமுக மாவட்ட செயலாளருமாகிய திரு. சிவசங்கர் அவர்கள் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். சமீபத்தில் உலக தர வரிசைப் பட்டியலில் 20வது இடத்திலும், இந்தியாவில் முதல் இடத்திலும் இருக்கின்ற, ஹைதராபாத்தில் உள்ள ISB ( Indian School of Business ) என்ற மேலாண்மை கல்வி நிறுவன வளாகத்தில் , PRS Legislative Research என்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொள்கின்ற அமைப்பும், ISB நிறுவனமும் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்காக , " India Leadership Workshop " என்ற தலைமைப் பண்புக்கான பயிற்சி பட்டறை நடத்தினர். அது பிப்ரவரி 06 லிருந்து 08 வரை மூன்று நாட்கள் நடந்தேறியது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் Dr.கிருஷ்ணசாமி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆகியோருடன் திரு.சிவசங்கரன் ஆகியோரும் இந்த பயிற்சியில் பங்கேற்றார். அரசால் அனுப்பப் படவில்லை. சொந்த விருப்பத்தில் பயிற்சி பெற்று வந்தனர்.


இணையத்தை முழுமையாக பயன் படுத்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினர். இணையத்தில் தன் தொகுதி நலத்திட்டங்கள் பற்றியும், அங்குள்ள மக்களுக்கு என்ன விதமான உடனடி தேவைகள் என்பன பற்றியும் அவர் தொகுதி மக்களிடம் நேரிடையாக ஆலோசனை பெறுகின்றார். இது சம்மந்தமாக ஆனந்த விகடன் பத்திரிக்கை கூட சமீபத்தில் இவரைப்பற்றி "இவர் ஒரு ட்ரண்டியான சட்டமன்ற உறுப்பினர்" என பாராட்டியது நினைவிருக்கலாம். வெகு ஜன ஊடகமாக தற்போது மாறிவரும் இணையத்தில் ஒரு மாபெரும் கட்சியின் மாவட்ட செயலர் நிலையில் உள்ளவர்கள் பயன்படுத்தி வருவது அகில இந்திய அளவில் திமுக முன்னிலை வகிக்கின்றது.

உதாரணம் இவரைப் போலவே இணையத்தை தமது பிரச்சார ஊடகமாக பயன்படுத்தும் புதுகை மாவட்ட செயலர் திரு. பெரியண்ணன் அரசு, அண்ணன் டி கே எஸ் இளங்கோவன், அண்ணன் திருச்சி சிவா எம்.பி, தாமரைச்செல்வன் எம் பி, முன்னாள் சென்னை மேயர் அண்ணன் மா.சுப்ரமணியன்,ச.ம.உ.டி ஆர் பி ராஜா, தோழர் அசன் முகமது ஜின்னா , மற்றும் பல செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் இவர்களில் எல்லாம் மேலாக ,முன்னோடியாக முன்னாள் துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர்.

திரு.சிவசங்கர் அவார்கள் ஒரு தலைசிறந்த திராவிட சிந்தனையாளர் என்பதோடு மட்டுமல்லாமல் திராவிட கொள்கைகளில் இருந்து கிஞ்சித்தும் வழுவாமல் வாழ்ந்து வருபவர்.

அப்படிப்பட்ட திரு .சிவசங்கர் அவர்கள் கடந்த பிப்ரவரி 20 ம் தேதி "தளபதி" அவர்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு இளைஞரணி நேர்காணல் செய்ய சுற்றுப்பயணம் செய்த போது அந்த ஒரு நாள் நிகழ்வுகளை தன் "முகநூல்" பக்கம் வழியாக அழகாக வர்ணிக்கின்றார். ஒரு பார்வையாளராக, ஒரு நிருபராக, ஒரு ரசிகராக, ஒரு கட்சித்தொண்டராக ஒரு தலைவன் வருகையை சிலாகித்து எழுதுபவர்களுக்கும், அந்த தலைவர் கூடவே பயணித்து அதில் ஒன்றிப்போய் எழுதுபவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவருடைய இந்த கட்டுரையில் அதை நீங்கள் உணரலாம். ஒரு தலைவர் ஒரு மாவட்டத்துக்கு வரும் போது அவருடைய அந்த ஒரு நாள் முழுமைக்கும் மாவட்ட எல்லையில் இருந்து , மாவட்டத்தை விட்டு வெளியே அனுப்பிவைக்கும் வரை அவர்களுடைய பாதுகாப்புக்கும், நிகழ்சி ஏற்பாடுகளுக்கும், தங்குவதற்கும் என எல்லா வித சகல பொறுப்புகளையும் சுமக்கும் ஒரு மாவட்ட செயலரின் பார்வையில் இந்த கட்டுரை வடிக்கப்பட்டுள்ளது. இப்போது கட்டுரையை படிக்கவும்.


----------------------------------------------------------------------------------


தளபதி பிப்ரவரி 20ம் தேதி காலை 8.30 மணிக்கு தஞ்சையில் இருந்து எங்கள் மாவட்டத்துக்கு கிளம்புவதாக முடிவு.முதல் நாள் இரவு 12.00 வரை மாவட்டம் முழுதும் ஏற்பாடுகளை பார்வையிட்டு விட்டு, காலை எழுந்து எல்லோருக்கும் அலைபேசிவிட்டு, மாவட்ட எல்லையான திருமானுரில் வரவேற்பு ஏற்பாடுகளை சீர்செய்துவிட்டு, தஞ்சையை நோக்கி விரைந்தேன். பாலம் வேலை நடைபெற்றதால் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. தடைப்பட்டு, தடைப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது எங்கள் வாகனம். நேரம் 8.20, தஞ்சையுள் நுழைந்து விட்டோம். நேரம் 8.28, இளைஞர் அணி மாநிலத்துணைசெயலாளர் சுபா.சந்திரசேகரிடமிருந்து அலைபேசி அழைப்பு, " தளபதி கிளம்பிவிட்டார்கள் ". நேரம் 8.29, சங்கம் ஹோட்டலுக்குள் நுழைந்துவிட்டோம். காரிலிருந்து இறங்கி ஓடுகிறோம், நானும், ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரனும். தளபதி அவர்களுடைய வாகனம் 10 மீட்டர் நகர்ந்துவிட்டது. எங்களை பார்த்து வாகனத்தை நிறுத்த சொல்கிறார் தளபதி அவர்கள். நேரம் 8.30. அது தான் தளபதி. நேரமென்றால் குறித்த நேரம் தான். நூலாடையை வாங்கிக்கொண்டு , அவரது வாகனத்தில் ஏறச்சொல்கிறார்.


என்னதான் மாவட்ட செயலாளர் என்றாலும் , தளபதி அவர்களோடு பயணமென்பது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ?
தளபதி அவர்களின் வாகனம் தஞ்சை நகரத்தை ஊர்வலமாக கடக்கிறது. அறிவிக்கப்பட்ட பயணமல்ல. எதிர்ப்பார்க்காமல் தளபதியை பார்த்த மகிழ்ச்சியில் மக்கள் கையசைக்கிறார்கள். கரந்தையை கடக்கும் போது , எதிரில் கல்லூரி வாகனங்கள் வரிசையாக, மாணவிகள் உற்சாகத்தோடு கையாட்டுகிறார்கள். புறவழிச்சாலையில் நுழைந்து வாகனம் வேகமெடுக்கிறது. எதிரில் வரும் லாரி, கார் ஓட்டுனர்கள் வணங்குகிறார்கள்.


அம்மன் பேட்டையில் 50 பேர் கொண்ட குழு மறிக்கிறது. வாகனத்தை நிறுத்த சொல்லி அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார். ஒரு பாட்டி குரலெழுப்புகிறார், " கரண்ட் இல்ல, மூனு நாளா தண்ணியில்ல...". தளபதி விடைபெறுகிறார்.


திருவையாறில் முன்னாள் ச.ம.உ துரை.சந்திரசேகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு.
அரியலூர் மாவட்ட எல்லையான திருமானுரில் மாவட்டக் கழகத்தின் சார்பாக , அதிர்வேட்டு முழங்க, மேளம் ஒலிக்க ,பிரம்மாண்ட வரவேற்பு. தளபதி கேட்கிறார் , " திருமானூர் வேட்டா ? ". எங்கள் பகுதியில் புகழ் பெற்ற வெடி குறித்து குறிப்பாக கேட்கிறார்.


வழியில் இரண்டு இடங்களில் வரவேற்பு, வாகனம் கீழப்பழூர் பேருந்து நிலையத்தைக் கடக்கிறது. தூரத்தில் இரண்டடி உயர சிலை கண்ணில் படுகிறது. தளபதி கேட்கிறார் , " தியாகி சின்னசாமி சிலைதானே ?".
ஒவ்வொரு பகுதியை கடக்கும் போதும், அந்த பகுதியின் சிறப்பை நினைவுகூர்ந்து கேட்கிறார் என்றால் , எந்த அளவிற்கு நினைவு கூர்மை.
வழியில் பள்ளிமாணவர்கள் கையசைப்பு, நூறு நாள் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் மகிழ்ச்சி ஆரவாரம் என பயணம் தொடர்கிறது. ஆங்காங்கே வரவேற்புகள், அறிவிப்பில்லாமல்.


சரியாக 10.00 மணி, தளபதி அவர்களது வாகனம், தா.பழூரில் நுழைகிறது. உற்சாக வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. மேடையேறுகிறார். பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார், அறிவுலக பேராசான் அறிஞர் அண்ணா, மு.ச.ம.உறுப்பினர் க.சொ.கணேசன் சிலைகளை திறந்து வைக்கிறார். பெரியார் , அண்ணா பெருமைகளை கூறிவிட்டு, மறைந்த க.சொ.க சிறப்புகளை எடுத்துரைத்தார்.அப்போது ," தலைவர் கலைஞர் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பாக திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட உத்தரவிட்டார்கள், இன்றைக்கு பெரியார், அண்ணா சிலைகளை திறந்து வைப்பதின் மூலம், முதல் நிகழ்ச்சியை நடத்திய பெருமை, அரியலூர் மாவட்டத்திற்கும், தா.பழூர் ஒன்றியத்திற்கும் கிடைத்திருக்கிறது " என பன்ச் வைக்க , கைத்தட்டல் அடங்க நேரமானது.


பேசி முடித்தப்பின், தொண்டர்களிடமிருந்து குரல், மதனத்தூர் பாலம் குறித்து பேசுங்கள் என்று.
தளபதி கூர்ந்து கவனித்து விட்டு சொன்னார், " அண்ணன் க.சொ.க அவர்கள் நீண்ட நாட்களாக கேட்ட பாலம், 2010ல் நானே அடிக்கல் நாட்டினேன். விரைவில் திறக்கப் படவில்லையென்றால் , போராட்டம் அறிவிக்கப்படும் "
தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, நாம் எழுப்பிய குரலுக்கு தளபதி மதிப்பளித்து பதிலளித்தார் என்று. தளபதி அவர்களுக்கும் மகிழ்ச்சி. பத்திரிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சி, சூடான செய்தி கிடைத்ததென.
திருமண நிகழ்ச்சிக்காக ஜெயங்கொண்டம் நகர் நோக்கி வாகனம் விரைகிறது.
இன்றைக்கு கண்ட வித்தியாசமான காட்சி, வழியெங்கும் காவல் துறையினர் காட்டிய மரியாதை. ஆய்வாளரோ, துணை ஆய்வாளரோ," ராயல் சல்யூட் தான் ".

காற்று திசைமாறுகிறது..................

தளபதி அவர்களது வாகனம் ஜெயங்கொண்டத்தை அடைகிறது, எல்லையில் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில் மலர் தூவி வரவேற்பு. திருமணக் கூட வாசலில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், என்.செல்வராஜ் காத்திருக்கின்றனர். மேடையில் தஞ்சை மண்டலத்தின் தளகர்த்தர் கோ.சி.மணி. எனது வரவேற்புரை . அடுத்து மங்கல நாணை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறார் தளபதி அவர்கள்.
வாழ்த்துரை , தஞ்சை மாவட்ட தலைமை செயற்க்குழு உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், ச.ம.உ கோ.வி.செழியன், ச.ம.உ சாக்கோட்டை அன்பழகன், ஒ.செ தனசேகர், விருத்தாசலம் மு.ச.ம.உ குழந்தை. தமிழரசன், பெரம்பலூர் மா.செ துரைசாமி, மாவட்ட அவைத்தலைவர் அரியலூர் ஆறுமுகம், சட்டதிருத்தக்குழு உறுப்பினர் எஸ்.சிவசுப்ரமணியன், மு. அமைச்சர் என்.செல்வராஜ், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கோ.சி.மணி என நீண்டாலும் தளபதி அமைதியாகக் காத்திருந்தார். மணமகன் சகோதரர் க.சொ.க.கண்ணன் நன்றியுரைக்குப் பிறகு, வாழ்த்துரை வழங்கினார் தளபதி.

க.சொ.கணேசன் திருமணத்தையும்,அவரது மகன் கண்ணன் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையேற்றதையும் , அவரது மகள் திருமணத்தையும், தற்போது அவரது இளைய மகன் திருமணத்தையும் தான் தலைமையேற்று நடத்துவதையும் எடுத்துரைத்தார். க.சொ.க அவர்கள் மறைவுற்ற போது தான் வந்து அஞ்சலி செலுத்தியதையும் நினைவு கூர்ந்தார்.


அரசியலை தொட்டவர், திராவிட இயக்கத்தின் மீது சிலருக்கு திடீரென கசப்பு ஏற்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வால் அவதிப் படும் மக்கள் ,மின் கட்டண உயர்வு குறித்து கவலைப்படவில்லை என நிறுத்தினார். எல்லோரும் புருவம் உயர்த்த , " மின்சாரம் இருந்தால் தானே , கட்டண உயர்வு பாதிக்கும் " என பன்ச் வைத்தார்.
மதிய உணவுக்கு, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் இல்லம் நோக்கி செல்லும் போதே , மாலை நிகழ்ச்சிகளுக்கான நேரத்தை சொல்லிவிட்டார் .


இளைஞரணியில் மாவட்ட துணை அமைப்பாளராக தனது பணியை துவங்கிய சுபா.சந்திரசேகர் அவர்கள் , மாவட்ட அமைப்பாளராக, இன்று மாநில துணைச் செயலாளர் ஆக தளபதியோடு உறுதுணையாக இருப்பவர். அவரது புதிய இல்லத்தில் தான் உணவு. உணவு முடிந்து , கழகத்தில் இணைந்த நகர்மன்ற உறுப்பினர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆசைப் பட்ட கழகத் தோழர்களோடு,சலிக்காமல் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கிளம்பும் போது நின்றவர், " என்ன சுபா , குடும்பப் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையா ? " எனக் கேட்க, அவரது குடும்பத்தினருக்கு அளவற்ற மகிழ்ச்சி. புகைப்படம் முடிந்து கிளம்பினார்.

ஓய்வறைக்கு செல்லும் போதே மணி 02.00. அப்போதே சொல்லிவிட்டார் 03.00 மணிக்கு கிளம்ப வேண்டுமென்று. நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அனைவரும் அலைபேசிவிட்டு பார்த்தால் மணி 02.40 . நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் சுகவனம் அவர்களோடு டீ அருந்திவிட்டு கிளம்பினோம். அண்ணன் எம்.ஆர்.கே கிளம்பிக் கொண்டிருந்தார். மணி 02.58 , தளபதி அறையை விட்டு வெளிவந்து விட்டார்.

பெரம்பலூர் மாவட்ட எல்லையில் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, குன்னத்தை கடக்கிறோம். "இதுதான் தொகுதியின் தலைநகர் குன்னம் " என்கிறேன்." ஓ , சின்ன ஊராக இருக்கிறதே, பேரூராட்சி இல்லையா " என்கிறார். "குன்னம் ஊராட்சி தான் , முழுவதும் கிராம ஊராட்சிகள் தான், ஒரேயொரு பேரூராட்சி, அதுவும் கிராமம் போலத்தான் " என்றேன். ஆர்வத்தோடு கேட்டுக்கொள்கிறார்.
பெரம்பலூரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ,கழக கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் ராசா அலுவலகத்தை வாகனம் அடைகிறது. டீ கூட அருந்தாமல், மேடையேறுகிறார் தளபதி. அரங்கு நிறைந்த இளைஞர் கூட்டம். ஆராவாரம், மகிழ்ச்சி கலந்த வாழ்த்தொலி. இரண்டு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களும் வரவேற்புரை வழங்க வாய்ப்பு. மாவட்ட செயலாளர்கள் இருவருக்கும் தலைமையுரையாற்ற வாய்ப்பு. " வந்திருக்கின்ற இளைய தோழர்களே, தளபதி அவர்களை வாழ்க்கையின் வழிகாட்டியாக கொள்ளுங்கள். பெரியாருக்கு பிறகு, தலைவர் கலைஞருக்கு பிறகு , தமிழகத்தை அதிகம் சுற்றி வந்து பணியாற்றுபவர் தளபதி தான். அவரை போல் உழைபோம் ", என்று வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டேன்.

திராவிட இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேச்சை துவங்கிய தளபதி அவர்கள், மொழிப்போர் இளைஞர்களை இயக்கத்தின் பால் கொண்டு வந்ததை குறிப்பிட்டார். இளைஞர்களுக்கு ஏற்றவாறு தனது பேச்சை நகைச்சுவையாக கொண்டு சென்றார். தலைவர் கலைஞரை சந்திக்க வந்த இளைஞரணி நிர்வாகியை , எத்தனை வயது எனக் கேட்க , அவர் 55 என சொல்ல, தலைவர் தளபதியை கிண்டலாக பார்க்க, தான் தவித்ததை தளபதி அவர்கள் சொல்ல, ஒரே சிரிப்பு.


இலக்கிய அணி நிர்வாகியை பார்த்து தலைவர்," கம்ப ராமாயணம் எழுதியது யார் " எனக் கேட்க ,அவர் நீங்கள் தான் என சொன்னார். இதனால் தான் வயதுக் கட்டுபாடு கொண்டு வந்து நேர்காணல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என தளபதி அவர்கள் விளக்கினார்கள்.


இதில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தளராதீர்கள், மற்ற அணிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என உற்சாகப்படுத்திவிட்டு , நேர்காணலுக்கு அலுவலகம் விரைந்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் மா.சுப்ரமணியன், பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், ஜின்னா என புடை சூழ நேர்காணல் துவங்கியது. மேயர் மாசு அவர்கள் கேள்வியை கடகடவென கேட்கத் துவங்கினார். பிறந்த வருடம், தொழில், படிப்பு , கழகத்தில் உறுப்பினரா எனக் கேள்விகள். நிறைய பேர் புதியவர்கள். கல்லூரி மாணவர்கள், தொழில் செய்கிறவர்கள், விவசாயம் செய்கிறவர்கள், ஆட்டோ டிரைவர், வழக்கறிஞர்கள், ஆசிரியர் என பலத்தரப்பினரும் வந்திருந்தனர்.
ஒவ்வொருவரையும் பார்த்து தளபதி குறிப்பெழுதிக் கொண்டிருந்தார். சிலரை தளபதியும் கேள்வி கேட்டார். தொழில் செய்கிறவர்களை அரசியலால் பாதிப்பு வராதே என்று கேட்டுக் கொண்டார். வழக்கறிஞர்களை எந்த நீதிமன்றம் எனக் கேட்டார். சிலரது பெயர் சிரிப்பை ஏற்படுத்தியது, கவர்னர், எஸ்ஸை, ஹானஸ்ட் அம்பிகாபதி என்று.

இரண்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களையும் நேர்காணல் முடிந்தது. ஒரு கழக நிர்வாகி, சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். "இதற்கு சென்னையிலிருந்து நான் வந்திருக்க வேண்டியதில்லையே " என மறுத்து விட்டார் தளபதி.
புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக் கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டார். குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். பா.ம.க-விலிருந்து இணைந்தவர்களுக்கு துண்டு அணிவித்து வரவேற்றார்.


இதுவரையில் 200 கி.மீ பயணம், பல நிகழ்ச்சிகள், காலை 8 மணி துவங்கி. ஆனாலும் இப்போதும் புத்துணர்வோடு இருந்தார், அப்போது தான் மலர்ந்த மலர் போன்ற புன்னகையோடு, இரவு 7 மணிக்கு.
எல்லோரிடமும் விடைபெற்று வாகனத்தில் ஏறுகிறார், கதவை திறந்து படியில் கால் வைத்து ஏறி நின்று கழகத் தோழர்களை பார்த்து கையசைக்கிறார். உற்சாகக் குரல் அதிர்வேட்டாய் எழுகிறது......


தளபதி இன்னும் 200 கி.மீ செல்ல வேண்டும், சென்னைக்கு.
ஆனால் காரில் தளபதிக்கு செய்தி காத்திருக்கிறது, முன்னாள் அமைச்சர் நேருவை போலீஸ் தேடுகிறது. காலையில் தான் அண்ணன் நேருவை தொடர்பு கொண்டு , திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருக்கிற மு. ச.ம.உறுப்பினர் அண்ணன் குத்தாலம் கல்யாணத்தை பார்க்க சொன்னார் தளபதி. போன இடத்தில் அவரை மறித்த காவல் துறை, பொய் வழக்கு தொடுத்து தேடுகிறது. இனி அது குறித்த ஆலோசனை வழங்க வேண்டும். காரிலேயே இளைஞரணி நிர்வாகிகளோடு மீதமிருக்கிற மாவட்டங்களுக்கு பயணத்திட்டத்தை வகுக்க வேண்டும்.


நிர்வாகிகள் திருவிழா முடித்த கலைப்போடு ஓய்வுக்கு வீடு திரும்புகிறார்கள்.
நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் , புதிய நம்பிக்கையோடு பயணம் துவங்குகிறார்கள்.


அவர் மட்டும் அடுத்த பணியோடு பயணத்தை தொடர்கின்றார்......
ஓய்வில்லா உழைப்பாளி......

-----------------------------------------------------------------------


இக்கட்டுரை பற்றிய எனது பார்வை அல்லது ஒரு சிறிய விமர்சனம்:

என்ன எழுதுவது? எதை எழுதுவது? தஞ்சை நோக்கி நானே ஓடுகிறேன். நானே சங்கம் ஹோட்டல் அருகே போகிறேன். என்னையே தளபதி காரை நிறுத்தி ஏற சொல்கிறார். நானே கரந்தை வழியே தளபதி கூட பயணிக்கிறேன். திருமானூர் வேட்டு சத்தம் என் காதை கிழிக்கிறது. எல்லாம் நானே நானே என்று ஆகிவிட்டேன். மிக அருமையான பகிர்வு என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?


\\ வழியெங்கும் காவல் துறையினர் காட்டிய மரியாதை. ஆய்வாளரோ, துணை ஆய்வாளரோ," ராயல் சல்யூட் தான் ".
காற்று திசைமாறுகிறது....................\\\

இந்த இரண்டு வரிகளில் ஏராளமான பொருள் பதிந்து கிடக்கின்றது. இதை நான் முழுமையாக உணர்கிறேன். புரிந்துகொள்கிறேன். என்னால் இந்த வரிகளின் முழு அர்த்தமும் புரிந்து கொள்ள முடிகின்றது...


அண்ணன் க.சொ.கணேசன் அவர்கள் ....தந்தை பெரியார் மற்றும் நமது அண்ணா ஆகியோர் சிலை வைக்க ஆசைப்பட்டார். சிலையும் செய்தாகிவிட்டது. சிலை திறக்க அனுமதிக்காக இருக்கும் நிலையில் அவரின் மறைவு நடந்து விட்டது. ஆனாலும் அவரது சிலையையும் சேர்த்து திறந்து வைத்து மிகச்சிறந்த நன்றியாளனாய் நீங்கள் உயர்ந்து நிற்பது பெருமையோ பெருமை. ஒரு திமுக காரனாய் இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.


ஒரு திருமணம் - வந்தோமா - மங்கல நாண் எடுத்துக்கொடுத்தோமா என்கிற மாதிரி கடமைக்காக அதை நடத்தாமல் ,மணமகன் தந்தையார் திருமணத்தையும், அவரது பெரிய மகன் திருமணத்தையும் தலைவர் நடத்தியதை நினைவுகூர்ந்து, மணமகன் சகோதரி மற்றும் தற்போது நடைபெறும் திருமணத்தையும் தான் நடத்துவது, அதே போல் மணமகன் தந்தை மறைவுக்கு தான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதை எல்லாம் நம் தளபதி குறிப்பிட்டு பேசியது கேட்பவர்களுக்கு ஒரு பங்கு மகிழ்வென்றால் அந்த திருமண குடும்பத்துக்கு எத்தனை மடங்கு அதிகம் மகிழ்வை கொடுத்து இருக்கும் என்பதை உணர்கிறேன். இவ்விஷயம் ஒரு தலைவனுக்கு உரிய பண்பு. நம் தலைவரிடமிருந்து நம் தளபதி கற்றுத் தேர்ந்த சிறந்த பண்பு இது.


மின்சாரக்கட்டண உயர்வு மக்களை பாதிக்கவில்லை என சொல்லி அவர் அதன் பிறகு அடித்த பன்ச்- ஒரு குபீர் சிரிப்பு - தலைவரைப்போலவே டைமிங் நகைச்சுவை. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வசிய மருந்து அது!


மதிய உணவை சபா.சந்திரசேகர் வீட்டில் உண்டது விஷயம் இல்லை. ஆனால் அதன் பிறகு அங்கே நடந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் முடிவில் சபா.சந்திரசேகர் குடும்பத்தினரை பார்த்து "குடும்பப்புகைப்படம் எடுத்துக்கவில்லையா?" எனக்கேட்டு அவர்களை திக்குமுக்காட செய்தாரே.... இது தான் தளபதியின் டச். இதிலே அவர் கழக உறுப்பினர்களின் குடும்பத்தினர் மேல் கொண்ட பாசம் தெரிந்தது.


இளைஞர் அணி தேர்வுக்கு சிபாரிசுக்கு வந்த கழக உறுப்பினரிடம் "நான் இதற்கு இத்தனை தூரம் வந்திருக்க வேண்டாமே" என சொல்லி நிராகரித்தது.... ஒரு தலைவனுக்கான கண்டிப்பும் கம்பீரமும் தளபதிக்கு உள்ளதென்பதை காட்டியது. Law makers should not break the law என்ற பொன்மொழிக்கு உதாரணமாக தளபதி இருப்பதை காட்டியது அந்த நிகழ்வு.

அதன் பின்னர், மதியம் ஒரு மணி நேரம் ஓய்வு என சொல்லிவிட்டு மிகச்சரியாக சொன்ன நேரத்தில் தன் அடுத்தடுத்த நிகழ்சிகளில் கலந்து கொள்ள கிளம்பிய போது "இவர் வேகத்துக்கு நம்மால் ஈடுகொடுக்க இயலுமா?" என இளைஞர்களை பயம் கொள்ள வைத்தது. உண்மைதான்... தளப்தி எடுத்த முடிவு சரிதான் போல. முப்பது வயதுக்குள்ளே இருந்தால் மட்டுமே தளபதிக்கு இனி ஈடுகொடுக்க இயலும் போலிருக்கு என எண்ண வைத்தது:-)


இளைஞரணி நேர்காணலில் தொழில் செய்யும் இளைஞர்களிடம் "இந்த கழக பொறுப்புக்கு வந்தால் தொழிலுக்கு இடைஞ்சல் வராதே" என கேட்ட போது கழகத்தினர் பால் இருக்கும் அக்கரை தெரிந்தது.


எல்லா நிகழ்வும் முடித்து கிளம்பும் போது காரில் ஏறி உட்கார்ந்த பின்னே இன்னும் 200 கிமீ அவர் பயணிக்க வேண்டுமே என்ற கவலை நமக்கு இருந்தாலும்... அவர் அண்ணன் நேரு அவர்களை கைது செய்ய தேடுவது பற்றியும், அடுத்தடுத்த இளைஞர் அணி நேர்காணல் ஆலோசனைகளை நம் சென்னை நிஜ மேயரிடமும், தோழர் ஜின்னா அவர்களிடமும் மேற்கொண்டு தன் பயணத்தை தொடர்ந்த போது மொத்தத்தில் தளபதி மீது பிரமிப்பு மட்டுமே இருந்தது.

இத்தனை நிகழ்வுகளையும் மிக அழகாய் தொகுத்து அளித்து பலபேர் மகிழ்வுறச்செய்த அரியலூர் மாவட்ட கழக செயலர் திரு சிவசங்கர் அவர்கள் மீது மதிப்பு வருகின்றது.

8 comments:

 1. அருமை அபி அப்பா அவர்களே! சென்னையில் மின்சாரம் கொஞ்சம் தாக்கு பிடித்து வருவதால் நான் இணையத்தில் நிறைய நேரம் உலா வர முடிகிறது! நம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் திரு. சிவசங்கர் அவர்களின் சீரிய பணிகள் யாவும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் நாங்கள் இணையம் மூலம் அறிந்து வருகிறோம் உடனுக்கு உடன்! நீங்கள் தொகுத்து வழங்கிய விதம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இரவு எட்டு மணிக்கு பார்க்கும் "ஒரு மணியில் ஒரு நாள்" போன்று விரிவாக சுவையாக உள்ளது!

  ReplyDelete
 2. இப்பொழுது இருப்பவர்களை விட்டால் அனைத்து தகுதிகளையும் கொண்ட மிகச் சிறந்த ஒரு அரசுத் தலைமை நமக்கு எப்பொழுது கிட்டும். அல்லது அது நமக்கு எட்டாக்கனி தானா? என்று களங்கி நிற்கும் உண்மையான நடுநிலை தமிழக தமிழர்களுக்கும், இளைய சமுதாயத்தினருக்கும், “தனது ஒவ்வொரு நாளின் அத்துணை செயல்பாடுகளையும்” ஒளிவு மறைவில்லாமல் வாழ்ந்து கொண்டு, தொண்டர்களோடு தொண்டராய், மக்களோடு மக்களாய், தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று கொண்டு.... மக்களையும், மண்ணையும் பற்றி வெறும் வாசிப்பனுபவம் மட்டுமே பெற்று, ஆளத்துடித்துக் கொண்டிருப்போர் போலல்லாமல், அவற்றோடு அவைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனுபவம் மட்டுமல்லாது அன்னியோன்னியத்தோடு தேனீயாய் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் தளபதி அவர்களைப் பார்க்கும் போது..............

  இனி வருங்கால தமிழகம் தளபதியின் வழிகாட்டலோடு வளமையாகத் திகழும் என்ற நிம்மதியைத் தருகிறது.

  மிக்க நன்றி: திரு. சிவசங்கர் எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட செயலாளர் அவர்களே. தளபதியின் ஒரு நாளை இப்படி தெள்ளத் தெளிவாக பொதுமக்களுக்கு படம்பிடித்துக் காட்டியமைக்கு!! இது தான் கடமை, இது தான் பொறுப்பை பொருப்பாகச் செய்யும் பேராண்மை!!

  ReplyDelete
 3. பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்குப் போகாம இங்கே என்ன செய்யறீங்க?

  ReplyDelete
 4. அருமை. வாழ்த்துக்கள் சிவசங்கர் அவர்களுக்கும் நன்றிகள் உங்களுக்கும்

  ReplyDelete
 5. டீச்சர், இந்த பதிவை நான் எழுதிய போது இரவு ஒரு மணி:-)) அப்போ எங்க ஸ்கூல்ல விழா எல்லாம் முடிஞ்சு போச்சே:-)

  ReplyDelete
 6. அபிஅப்பா, ஆண்டுவிழாவுக்கு வந்திருங்க.. இன்னும் முடியல.. இன்னிக்குத்தான் மாலை 3 மணிக்கு.. அவசியம் வந்திருங்க.. உங்களுக்கெல்லாம் துளசியக்கா நினைவூட்ட வேண்டியிருக்கே.. என்ன மாணவர் நீங்க???

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))