பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 9, 2012

"சோளகர் தொட்டி" - நூல் விமர்சனம்!"சோளகர் தொட்டி" - இந்த நூலை வாங்கியதும் அத்தனை ஒரு ஈர்ப்பு இல்லை அதன் மேல். அதன் அட்டைப்படத்தில் இருக்கும் ஒரு அழுக்கு கிழவன், கையிலே ஒரு கொம்பு, காதிலே ஒரு வளையம், மழிக்கப்படாத வெள்ளை முள் தாடி, என எல்லாமே உவ்வே ரகம். பெயரும் என்னை அத்தனை கவரவில்லை. அது என்ன சோளகர் தொட்டி, சோலைக்கொல்லை பொம்மை என வாங்கியதை தூக்கி தூர வைத்து விட்டு எப்போதும் போல எதிரே வந்த லாரி டமார், மோட்டாரில் சென்றவன் படார் என்னும் வக்கிர எழுத்துகளை மேயும் போது வந்த எரிச்சலில் தூக்கிப்போட்ட "சோளகர் தொட்டி"யை எடுத்து மேலோட்டமாக மேய்ந்தேன். அதுவும் ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போகவே அதை படித்த ஒரு நண்பனிடம் கருத்து கேட்க "அதுவா இந்த வீரப்பன் வேட்டைல பாதிக்கப்பட்டாங்கல்ல மலைஜாதி மக்கள், அதை பத்தி இருக்குதுன்னு சொன்னாங்க, நான் படிக்கலை" என சொல்ல மீண்டும் அதை தூக்கி தூர வைத்து விட்டேன்.

ஒரு வாரம் பின்னர் படிக்க எதுவுமில்லாமல், மின்சாரம் இல்லா தூக்கம் தொலைத்த இரவினில் கைவிளக்கு உதவியில் எப்படியும் இரண்டு பக்கம் படித்துத்தான் தொலைப்போமே என வாசிக்க ஆரம்பித்த போது இரவு மணி ஒன்று இருக்கும். அந்த புத்தகத்தை நான் கீழே வைத்த போது அடுத்த நாள் பகல் ஒன்று ஆனது. நடுவே சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, எதுவும் இல்லை. படிக்க எடுத்து கொண்ட நேரம் என்னவோ பன்னிரண்டு மணி நேரம் மட்டுமே. அதன் தாக்கம் எனக்கு குறைய கிட்ட தட்ட பன்னிரண்டு நாட்கள் ஆனது.

"ஒரு ஊரில் ஒருத்தன் இருந்தான் அவன் செத்துப்போனான்" என்றோ "ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணை கொன்னுட்டாங்க" என கேள்விப்படும் போதோ "அய்யோ பாவம்" என்கிறதோடு அது முடிந்து விடும். ஆனால் அதே கதை சொல்லி " ஒரு ஊரில் ஒருத்தன் இருந்தான், அவனை கொன்னுட்டாங்க, அவனை இப்படி இப்படில்லாம் சித்ரவதை செஞ்சு கொன்னாங்க, அவன் ரொம்ப நல்லவனா இருந்தான். அவன் அந்த ஊருக்கு ராஜா, நல்லது எல்லாம் செஞ்சான் அவன், அவன் குலம் இது, கோத்திரம் இது, அவன் செத்ததால இன்ன இன்ன கஷ்டம், முக்கியமா அவன் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் வாழ்ந்தான்" என அதைப்பற்றி விலாவாரியாக சொல்லும் போது செத்தவன் மேலே முதலில் ஒற்றை வரியில் வந்த அனுதாபம் வந்தது போல இல்லாமல் அவன் மேல் ஒரு பாசம், பரிவு, அவனை கொன்றவர்கள் மீதான வெறுப்பு என படிப்படியாக நம் மனோநிலை மாறி மாறி செத்தவன் மீது ஒரு மதிப்பு வருமே அதான் கதை சொல்லியின் வெற்றி. அந்த வெற்றியை நூலாசிரியர் ச.பாலமுருகன் பெற்றிருக்கிறார் இந்த நூலில்.

கொஞ்சமும் ஒரு புத்தகத்தை படிக்காமல் ""அதுவா இந்த வீரப்பன் வேட்டைல பாதிக்கப்பட்டாங்கல்ல மலைஜாதி மக்கள், அதை பத்தி இருக்குதுன்னு சொன்னாங்க, நான் படிக்கலை" என்ற விமர்சனம் ஏனனில் அவன் கதை கேட்ட விதம் அப்படி. ஆனால் இதை எழுதிய பாலமுருகன் எடுத்துக்கொண்ட விஷயம் வீரப்பன் வேட்டையில் பாதிக்கப்பட்ட அப்பாவி மலைவாழ் மக்கள் பற்றியது.அதை மட்டும் அவர் சொல்லியிருந்தால் நாமும் இதை இப்படித்தான் எடுத்துக்கொண்டு இருப்போம். ஆனால் இரண்டு பாகமாக எழுதிய ஒரு நூலில் முதல் பாகம் முழுமையும் அவர் அழைத்து கொண்டு போனது ஒரு மலைக்கு. மலை என்றால் அப்படி ஒரு மலை. பசுமையும், இயற்கை வளமும், காட்டு விலங்குகளும் மலை மீதான அடர்ந்த காட்டுக்கு முன்னம் இருக்கும் ஒரு சிறிய பகுதி சமவெளி பகுதிக்கும், அதில் வாழும் ஒரு சுமார் நாற்பது மலைவாழ் குடிசைகள் இருக்கும் பகுதிக்கும், அந்த மக்களின் பழக்க வழக்கம், உணவு, உடை, வாழ்வாதாரம் என எல்லா இடத்துக்கும் கை பிடித்து அழைத்துப்போய் அறிமுகம் செய்து வைக்கிறார். இன்னும் சொல்லப்போனால் முதல் பாகம் முழுமையும் அது மட்டுமே. நாம் அந்த மலைக்கிராமத்தில் அவர்களோடு அவர்களாக ஓரத்தில் ஒரு குடிசை போட்டு மனதளவில் குடிவந்த பின்னர் இந்த பாழாய் போன நாகரீக உலகான மலைக்கு கீழே இனிமேல் போகவே வேண்டாம் என முடிவெடுத்த பின்னர் மெதுவாக இரண்டாம் பாகத்தில் இருந்து வில்லன்கள் மலைகிராமத்தில் நுழையும் போது நாமும் மிரண்டு போகிறோம். அய்யோ இந்த மக்களுக்கு ஏன் இந்த நிலை என அழுகின்றோம்.

அதுவரை நாம் அந்த மலைவாழ் கிராமத்தில் ஒருவனாக ஆகும் போது ஒற்றை கொம்பன் யானை வந்து சேர்த்து வைத்த ராகியை துவம்சம் செய்ய வரும் போது வெடி கொளுத்தி போடுகிறோம், தூக்கம் கலைந்தால் பீனாச்சி என்னும் சின்ன அளவிலான நாதஸ்வரம் போன்ற கருவி கொண்டு வாசிக்கிறோம், தப்பு எடுத்து முழங்குகிறோம், குளிரில் நடு குடிசையில் பள்ளம் தோண்டி நெருப்பு கங்கு உண்டாக்கி ஒற்றை கோவணம் உடுத்தி படுக்கிறோம், தேன் எடுக்க மலை உச்சிக்கு போகிறோம், பங்கி ஜம்ப் போல தலைகீழாக தொங்கி உயிரை பனயம் வைத்து முகத்தை மூடி, தீப்பந்தம் காட்டி தேன் எடுக்கிறோம், எடுத்த தேனை இரண்டு சொட்டு மலை மாதாவுக்கு தரையில் தெளிக்கிறோம், சுரை குடுகையில் அருவி தண்ணீர் எடுக்கும் போது சல சல சப்தத்தை ரசிக்கிறோம், ராகி களி உருண்டையும் தொட்டுக்கொள்ள அவரை போட்டு அவித்து அதன் தலையில் மிளகாய் கிள்ளி போட்டு சாப்பிடுகிறோம், நான்கு மான்கள் கிடைத்தாலும் ஒரு மானை மட்டும் வேட்டைக்காக அடிக்கிறோம், ஊருக்கே பங்கு வைக்கிறோம், மலையில் பறித்த கஞ்சாவை பக்குவம் செய்து பீடி சுற்றி புகைக்கிறோம், சிவோகம் சொல்கிறோம், அந்த சமவெளியில் இருக்கும் காட்டில் ராகி விதைக்கிறோம், கைகொத்தால் கொத்தி களை எடுக்கிறோம், குலதெய்வம் கோவிலுக்கு போகிறோம், படையல் வைக்கிறோம், குறி கேட்கிறோம், கரடி விரட்டுகிறோம், யானை செத்து போனதுக்கு 'சத்திய வாக்கு செத்து போச்சு'ன்னு வருந்துகிறோம், அங்கே நம்மை விட கொஞ்சம் உசந்த ஜாதியான நெஞ்சில் லிங்கம் கட்டிய லிங்காயத்துகள் என்னும் சைவ உணவு உண்ணும் ஆட்களை பழங்கதை பேசி நமக்கு அவங்க பங்காளிகள் என்று பெருமைப்படுகிறோம், குழந்தை பிறப்பதை வாழைப்பழம் தோல் பிதுக்குவது போல சுலபமாக எடுத்துக்கொள்கிறோம், மருத்துவச்சி பிரசவம் பார்க்கும் போது ஆண்களோடு ஆண்களாக வெளியே உட்காந்து 'சிவோகம்' சொல்கிறோம், யாராவது செத்தால் அழுகிறோம், ஒரு வருஷம் பின்னர் குலதெய்வம் கோவிலில் படையல் போட்டு புதைத்த எலும்பு எடுத்து வேறு குழியில் போட்டு சாம்பிரானி போட்டு பூசாரியிடம் குறி கேட்கிறோம், செத்தாலும் பீனாச்சியுடன் தப்பு வாசிப்பு, பிறந்தாலும் பீனாச்சி, தப்பு வாசிப்பு என சங்கீதம் செய்கிறோம், "பல்லவில ஸ்ருதி கொஞ்சம் பிசகுது, ச்சரணத்தில் வார்த்தைக்கு பதில் காத்து தான் வருது' என்ற விமர்சனங்கள் இல்லாமல் "உணர்வை" வாசிக்கிறோம், மானாட மயிலாட எல்லாம் நிச மான்களும் மயிலும் ஆட, ஆனால் அது போன்ற ஆட்டத்தை இந்த கிராம பெண்கள் கையை நீச்சல் அடிப்பது போல பாவித்தும், புட்டத்தை , மார்பை முன்பின் ஆட்டி நிசமான உணர்வுகளையும் சந்தோசத்தையும் காட்டி ஆடுவதை பார்த்து ரசிக்கிறோம், ஊர் பெண்கள் மழை வேண்டி குலதெய்வம் கோவிலுக்கு போய் ஆடை அவிழ்த்து நடனம் ஆடுவதையும் கூட ஊருக்குள் சிலாகித்து பேசி பேசியே மழையை வரவழைத்து விடுகிறோம், தானியங்கள் சேமிக்க தரையில் குழி தோண்டி பக்குவம் செய்து அதை நகரத்து தானிய களஞ்சியங்களைவிட மேம்பட்டதாக ஆக்கி விடுகிறோம், பக்கத்து பக்கத்து மலைகிராமங்களுக்கோ, மலை கோவில்களுக்கோ போக "கால்களை" மட்டுமே நம்புகிறோம், நடக்கும் போது மூலிகை சுவாசம் அனுபவிக்கிறோம்..... இப்படியாக இப்படியாக நாமே அங்கே ஒரு பாகம் முழுக்க ஒரு மலைவாசியாகிவிட்ட பின்னர் தான் இதை எழுதிய பாலமுருகன் கதைக்குள் வருகின்றார். எனவே நானும் இனிமேல் தான் கதைக்குள் வரப்போகிறேன்.. கதையை இரண்டு பாகம் எழுதிய எழுத்தாளரே முதல் பாகம் முழுக்க நம்மை கதைக்குள் ஐக்கியப்படுத்தும் நிலைப்பாட்டையே கொண்டிருந்த போது நான் என்ன சாதாரன விமர்சகன் தானே... தயை கூர்ந்து தொடர்ந்து படியுங்கள்.

முதலில் நாம் கதைக்களத்தை பார்த்து விட வேண்டும். பின்னர் அதில் வரும் கதாபாத்திரங்கள்.. பின்னர் கதைக்கு உள்ளே போகலாம். கதை என்றால் நீங்கள் மிகப்பெரியதாக நினைத்துக்கொண்டு வந்தால் ஏமாந்து போவீர்கள். இது ஒரு வாழ்வியல் பற்றிய குறிப்புகள். ஆனால் சொல்லியவிதம் உங்களை அதனுள் கட்டிப்போடும் அளவு அமைந்து விட்டது. முதலில் கதையின் களம். இது ஒரு மேற்கு தொடர்சி மலையின் மேலே இருக்கும் ஒரு கிராமம். ஒரு சுமாராக நாற்பது குடும்பங்கள் இருக்கும் அதாவது குடிசை கட்டி வாழும் குடும்பங்கள். மலையின் மீது அமைந்த கொஞ்சம் சமவெளியான இடம் அது. அதன் பக்கத்தில் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் "சீர்காடு" என்னும் ராகி விளையும் ஒரு வயல்வெளி. இந்த கிராமத்து மக்கள் "சோளகர்" என்னும் பெயருடைய மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். இந்த இடத்தை அவர்கள் "சோளகர் தொட்டி" என அழைக்கின்றனர். அந்த சமவெளிக்கும் சீர்காட்டுக்கும் கொஞ்சம் தொலைவிலேயே அடர் காடு ஆரம்பித்து விடும். வெகு அரிதாக காட்டு யானைகள் தண்ணீர் குடிக்கவோ அல்லது எப்படியோ இந்த இடத்துக்கு வந்து ராகி காட்டை அழிக்கவோ அல்லது இந்த குடிசைகளின் வாசலில் இருக்கும் குதிர்களில் இருக்கும் தானியங்களை சாப்பிடவோ வந்து விடும். அதை வெடி வெடித்தும், தகரங்களை ஒரு விதமான பொறியியல் தன்மையோடு உட்காந்த இடத்தில் இருந்தே ஒலி எழுப்ப செய்து விரட்டவும் தொட்டி மக்கள் இரவு பகல் எந்த நேரமாயினும் ஒற்றுமையாக கூடிவிடுவர். பெண்கள் காட்டுக்குள் விறகு சுள்ளி பொருக்கி வரும் வேலை முதல் மரவல்லிகிழங்கு சேகரிக்கவும் சர்வ சாதாரணமாக சென்று வருவர். ஆண்கள் உணவுக்காக சின்ன சின்ன வேட்டை செய்தல், ராகி , அவரை, மஞ்சள் எல்லாம் பயிரிட்டும் வயிறு வளர்கிறார்கள். எவனோ "நகரத்தான்கள்" அதாவது "கீழ் நாட்டு காரங்க" சந்தன மரம் வெட்டிப்போனாலும் அதிலிருந்து வரும் செதில்களை இழைத்துக்கூட பொட்டு வைத்துக்கொள்ளவோ அல்லது ஒரு குண்டுமணி தங்கம் பூட்டிக்கொள்ளவோ ஆசைப்படாதவர்கள். இவர்களுக்கு நகரத்தில் ராமன் ஆண்டாலும் கவலை இல்லை, ராவணன் ஆண்டாலும் கவலை கிஞ்சித்தும் இல்லை. இவர்கள் நகரத்தார்களை சார்ந்து இருப்பதில்லை.

அந்த காலத்தில் வெள்ளைக்கார துரைகள் வேட்டைக்கு காட்டுக்கு வரும் போது இவர்கள் துணையுடன் தான் காட்டுக்குள் போவார்கள் என்னும் பெருமை இவர்களுக்கு இப்போதும் இருக்கின்றது. பெருநரி என்றால் புலி, சத்தியவாக்கு என்றால் யானை, விதைக்கு ராகி வேண்டும் என ஒரு வீடு ஏறி வந்து கேட்டால் 'நான் உன் வீட்டில் பெண் கேட்டு வந்திருக்கேன்' , சிவபானம் என்றால் கஞ்சா என்பன போன்ற "கோட்"வேர்ட் உபயோகம் செய்கிறார்கள். பெண்கள் குழந்தை பெற்றால் அல்லது வயதுக்கு வந்தால் தீட்டு கழித்து ஐந்து நாட்கள் கழித்து தலைக்கு ஊற்றி குடிசைக்குள் அழைக்கிறார்கள். கழுத்தளவு செய்யப்பட்ட மணிராசன் என்னும் குலதெய்வ கோவில் குடியிருப்புகளுக்கு சற்று தள்ளி காட்டில் இருக்கின்றது. கிராமத்தோடு சென்று வழிபடுகின்றார்கள். இதான் கதைக்களம். ஓரளவு நீங்களும் கதைக்குள் நுழைந்து விட்டீங்கள். இனி கதாபாத்திரங்கள் கூட பழகி விட்டால் போதுமானது.

கதாபாத்திரங்களின் பெயர்கள் நமக்கு பழக்கம் இல்லாத பெயர்கள் தான். கொஞ்சம் சிரமம் இருந்தாலும் நாம் நூலாசிரியரை இதில் எதும் சொல்ல இயலாது. வெங்கட்டாமன் என்னும் நாட்டாமை இருந்தாரு, அங்கே சிவலிங்கம் என்னும் பூசாரி இருந்தாருன்னு சொன்னா அந்த கதை அனேகமா மலைகளே இல்லாத தஞ்சை மாவட்ட கதையாகி போகும்:-) அதனால் சிரமம் பார்க்காமல் அந்த பெயர்களை பழகுவோம். முதலில் ஊர் பெரியவர் கொத்தல்லி. கொத்தல்லி என்பது பெயர் இல்லை. அவரது பதவியின் பெயர், அதாவது அந்த கிராமத்து நாட்டாமைன்னு வச்சுப்போம். வச்சுப்போம் இல்லை நாட்டாமை தான். அந்த கொத்தல்லி கிழவன் ஒரு தனிமரம். அவனது மனைவி வேறு ஒரு தொட்டியை சேர்ந்தவள், மிக அழகி. இவரு இங்க வாலிபமா இருந்த போது இவரோட அப்பாரு கொத்தல்லியா இருந்த போது இவர் வேட்டையிலே பெரிய அப்பாடக்கர். அதிலே தான் அந்த அழகி மயங்குச்சு. உடனே இவரு அதை காட்டுக்குள் தள்ளிகிட்டு போய் ஐந்து நாட்கள் குடும்பம் நடத்திடுராரு. பின்ன அந்த தொட்டிக்காரங்க எல்லாம் தேடிகிட்டு வந்து பின்ன பஞ்சாயத்து ஆகி பின்ன அது கண்ணாலத்துல முடிஞ்சது எல்லாம் பழம்கதை. அந்தம்மா வரிசையா பிள்ளை பெத்து போட்டுகிட்டே இருக்கு. இதிலே ஒரு கூத்து என்னான்னா ஒரு தபா காட்டுக்குள்ள வெறகு எடுக்க போகும் போது நிறைமாச கர்பினியா போனது வரும் போது புள்ளய்க்கி பால் குடுத்துகிட்டே வருது. அப்படி ஒரு சுலபம் குழந்தை பெத்துப்பது. ஒரு தடவை பிரசவத்திலே செத்தும் போகுது. அத்தனை ஒரு கஷ்டம் பிரசவம். என்னடா இவன் பிரசவம் சுலபம்னு சொன்ன அடுத்த வரியிலேயே பிரசவம் கஷ்டம்னு சொல்ரானேன்னு பார்க்கும் உங்களுக்கு நான் சொல்வது இதான். அவர்களுக்கு சுலபமும் சிரமமும் எல்லாம் ஒன்னு போலத்தான். பின்னர் அந்த குழந்தைகள் வளர்ந்து பெரிய ஆளாகி வேட்டையில் செத்து போவதும், பெண் குழந்தைகள் வேறு தொட்டிக்கு போய்விடுவதும் ... ஆக மொத்தம் கொத்தல்லி இப்போ தனிமரம். ஊர் நாட்டாமை.

அடுத்து .. நாட்டாமைன்னு ஒரு ஊர்ல இருந்தா பூசாரி இருந்தாகனுமே.. அதான் கோள்காரன். கோள்காரன் என்றால் பூசாரி. அவர் கையிலே அவங்க மூதாதையர் வைத்து குறி சொன்ன கோள் இருக்கும் மணிராசன் என்னும் குலதெய்வ கோவில் பூசையின் போது. இவர்கள் பீனாச்சி, தப்பு சத்தத்தின் உச்சத்தில் குறி சொல்வார்கள். இறந்து போனவர்களின் ஆவி இவங்க ரூபத்திலே வந்து அந்தந்த குடும்பத்து ஆட்களுக்கு குறி சொல்வது நடக்கும் ஊர் திருவிழாவிலே. இந்த கதையின் கோள்காரன் பெயர் சென்நெஞ்சா, சென்நெஞ்சாவுக்கு இரண்டு பையன், முதல் பையன் பெயர் சிக்குமாதா அவன் மனைவி பெயர் கெம்பம்மா, அவர்களுக்கு ஒரு பையன் தம்மையா. இந்த சிக்குமாதாவும் அவன் மனைவி கெம்பம்ம்மாவும் தங்கள் மகனுடன் தனிக்குடிசை.. தனிக்குடித்தனம். அடுத்த கோல்காரனாகும் தகுதியும் உரிமையும் சிக்குமாதாவுக்கு உரியது.

கோள்காரன் சென்நெஞ்சாவுக்கு இன்னும் ஒரு மகன். அவன் பெயர் கரியன். அதாவது சிக்குமாதாவுக்கு தம்பி. ரொம்ப சின்னவன், இன்னும் சொல்லப்போனால் சிக்குமாதாவின் மனைவி கெம்பம்மாவை விட ஒன்பது வயது சிறியவன். அவன் தன் தந்தையுடன் ஒரு குடிசையில் இருக்கிறான். இது தான் கோள்காரன் குடும்பம்.

அடுத்து பேதன் குடும்பம். பேதன் அந்த சீர்காடு என்று முன்னமே சொன்னோமே அந்த சீர்காட்டுக்கு சொந்தக்காரன். வேட்டையை விட விவசாயத்தில் நாட்டம் கொண்டவன். அவனது அந்த சீர்காட்டுக்கு பக்கத்திலேயே கோள்காரன் சென்நேஞ்சாவுக்கு கொஞ்சமாக சீர்காடு இருக்கின்றது. இந்த பேதனுன் மனைவி பெயர் ஜோகம்மாள். இரண்டு மகன்கள். பெயர் சிவண்ணா, அடுத்தவன் பெயர் ஜடையன், இதில் சிவண்ணாவுக்கு கல்யாணமாகி ஒரு ரேசன் என்ற பையன், சிவண்ணாவின் மனைவி பெயர் சின்னத்தாயி. இவர்கள் மூவரும் தனி குடிசை தனிக்குடித்தனம். பேகன், ஜோகம்மாள், அவர்களின் சின்ன மகன் ஜடையன், மகள் ரதி ஆகியோர் தனி குடிசை. இது ஒரு குடும்பம்.

அடுத்து மணியக்காரன் மாதப்பன். இவன் கீழ்நாட்டை சேர்ந்தவன். இவன் "நகரத்தான்". கிட்டத்தட்ட வில்லன் என வைத்து கொள்வோம். மேலே காட்டில் இருக்கும் நிலம் எல்லாம் பட்டா போட வேண்டும் என்றால் அல்லது வனத்துறை அதிகாரிகள் காட்டுக்கு போக வர தவிர போலீஸ் பழக்கம் எல்லாம் இவனுக்கு உண்டு. அவனுக்கு ஒரு அல்லக்கை. பெயர் துரையன். இந்த துரையன் "மனைவியை" மணியக்காரனுக்கு பட்டா எழுதி கொடுத்துவிட்டு தனக்கு சாதகமாக எல்லா இரண்டாம் நம்பர் வேலையும் செய்து பணம் சம்பாதித்து வருபவன்.இந்த துரையனுக்கு மேல்காட்டில் இருக்கும் இந்த சோளகர் தொட்டியின் சீர்காட்டின் மீது ஒரு கண். இவனும் நகரத்தான் தான்.

பக்கத்தில் பாலப்படுகை என்னும் தொட்டி சில மைல்கள் அப்பால் இருக்கின்றது.அங்கே புட்டன் என்பவன் இங்கே இருக்கும் பேதனின் மகன் சிவண்ணாவுக்கு நண்பன் தவிர இந்த சோளகர் தொட்டியில் இருக்கும் ஒரு பெண்ணை தான் அவன் திருமணம் செய்து இருக்கிறான். அதனால் அடிக்கடி வந்து போவான் இந்த சோளகர் தொட்டிக்கு.

இதிலே பேதன் - ஜோகம்மாள் தம்பதியினரின் கடைக்குட்டி மகள் ரதி ஒரு உண்டு உறைவிட பள்ளியில் படிக்கிறாள் மலை கிராமத்தில். அங்கே அவளுக்கு மல்லிகா என்னும் பெண் நண்பி. அந்த மல்லிகா ஒரு லிங்காயத்து பெண். அதாவ்து சைவம் சாப்பிடும் ஆனால் இவர்கள் தெய்வங்களில் ஒன்றான மாதேஸ்வரன் சாமியை கும்பிடும் ஆட்கள். அவர்கள் கொஞ்சம் உயர்ந்த சாதி என்றாலும் இவர்களை போல வயல்வேலை, காட்டு வேலை செய்பவர்கள் தான்.

இவர்கள் தான் கதாபாத்திரங்கள். மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தாலே எளிதில் புரிந்து கொள்ளலாம். இவர்கள் வாழ்க்கை நான் மேலே சொன்னது போல எல்லாம் சுகமாகவும் அமைதியாகவும் போய் கொண்டு இருக்கும் போது தன் கதை தொடங்குகின்றது.

இப்படியாக இவர்கள் வாழ்ந்து வரும் போது ஒரு நாள் கோள்காரன் சென்நெஞ்சாவின் மூத்த மகன் சிக்குமாதா காட்டில் வேட்டைக்கு போகும் போது எதிர்பாராத விதமாக ஒரு கரடியால் தாக்கப்பட இருக்கும் போது அதை தடுக்க வேண்டி அதை கொல்ல நேரிட அந்த கரடியை தூக்கி வந்து தொட்டியில் கூறு போட்டு எப்போதும் போல தொட்டி வழக்கப்படி தொட்டியின் முதல் பங்கை தொட்டியின் மூத்த விதவைக்கும், பின்னர் கொத்தல்லிக்கும் என எல்லோருக்கும் பங்கிட்டு கொடுத்து விட்டு சமைத்து உண்ண அடுத்த இரண்டு நாட்களில் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் போய் அவர்கள் வந்து கோள்காரன் சென்நெஞ்சா மற்றும் சிக்குமாதாவை கீழ்நாட்டில் கொண்டு போய் நிர்வாணமாக லாக்கப் கொடுமை செய்ய பதறிப்போன தொட்டியினர் அவரகளுக்கு தெரிந்த பெரிய மனிதனான மணியக்காரன் மாதப்பாவை சந்தித்து முறையிட அவன் தன் அல்லக்கை துரையனை போலீசிடம் அனுப்பி பேச வைக்க அங்கே துரையன் போலீசார் ஆயிரம் ரூபாய் பணம் கேட்பதாக சொல்ல மொத்த தொட்டியும் அதிர்கின்றது. அவர்கள் அத்தனை பணத்தை பார்தவர்கள் இல்லை. உடனே துரையன் தானே அந்த பணத்தை தருகிறேன், பின்னர் ராகி விளைச்சலில் இருந்து தர வேண்டும் என சொல்லி மீட்டு வந்து பின்னர் தொட்டியினர் குறிப்பிட்ட காலத்தில் கொடுக்க முடியாமல் போக துரையன் மணியக்காரன் உதவியுடன் அந்த சீர்காட்டில் இருக்கும் கோள்காரன் சென்நெஞ்சாவின் நிலத்தை கையகப்படுத்த சிக்குமாதா தன்னால் தான் இப்படி ஆகிப்போனதே என பித்து பிடித்தது போல ஆகி பின்னர் துரையனுடன் சேர்ந்து இரண்டாம் நம்பர் தொழிலில் இறங்கிவிடுகிறான். பின்னர் மீதி இருக்கும் பேதனின் நிலம் அதாவது சிவண்ணா, அவன் தம்பி ஜடையன் ஆகியோருக்கும் சொந்தமான நிலத்தையும் அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டு கொண்டு துரையன் அபகரித்து அந்த மேல்காட்டு சீர்காட்டில் கான்கிரீட் வீடு, மின்சார போர்செட், மின் வேலி என போட்டு அங்கே காட்டையே அதன் பாரம்பரிய குணத்தில் இருந்து மாற்றி வருகிறான். இடையிடையே சந்தன மர துண்டுகளும் கடத்துகிறான். அவனது பிடியில் இருந்த சிக்குமாதாவும் ஒரு வேட்டையின் போது மரித்து போக சிக்குமாதாவின் மனைவி கெம்பம்மா தன் மகனுடன் தனிமரம் ஆகின்றாள்.

ஆக அமைதியாக போய் கொண்டிருந்த தொட்டியினர் வாழ்க்கை சீர்காடு இல்லாமல் சாப்பிட எதும் இல்லாமல் மரவல்லி கிழங்குகள் சாப்பிடும் அளவுக்கு ஆகி தடம் புரண்டு போக ஆரம்பித்து விடுகின்றது. கோள்காரனின் மூத்த மகன் சிக்குமாதா மறைவுக்கு பின்னர் கெம்பம்மா அவளை விட ஒன்பது வயது குறைந்த தன் கொழுந்தனை கல்யாணம் செய்து கொள்கின்றாள்.

அதன் பின்னர் பேதனின் மகன் சிவண்னாவுக்கு வனத்துறையால் "தீ கங்காணி" வேலை கிடைக்கிறது. பின்னர் அவன் தனக்கு காட்டை கண்காணிக்கும் வேலை கிடைத்த பெருமையில் பக்கத்து பக்கத்து தொட்டிகள் இருக்கும் இடத்துக்கு எல்லாம் சர்வ சாதாரணமாக "அரசாங்க ஆள்" என்னும் பெருமையுடன் போய் வர அது போலவே தன் நண்பனும் சோளகர் தொட்டியில் பெண் எடுத்தவனுமாகிய புட்டன் இருக்கும் பாலப்படுகைக்கும் போய் வருகிறான். புட்டன் குடிசைக்கு நான்கு குடிசை தள்ளி தன் தாய் வழி உறவு பெண் மாதி இருப்பதை பார்க்கிறான். மாதிக்கு வயதுக்கு வரும் நிலையில் ஒரு பெண். அவள் கணவன் சதா நேரமும் கஞ்சா புகைத்து விட்டு அங்கிருக்கும் மரத்தடியில் கிடக்கும் ஆசாமி. இப்படி இருக்கையில் மாதிக்கும் சிவண்ணாவுக்கும் காதல் ஆக, பின்னர் மாதி தன் கணவனை அங்கிருக்கும் தொட்டியில் விவாகரத்து செய்துவிட்டு தன் மகளுடன் சிவண்ணா கைய பிடித்து கொண்டு சோளகர் தொட்டிக்கு வந்து விடுகின்றாள்.

இது அறிந்து சிவண்ணாவின் மனைவி சின்னத்தாயி தன் மகன் ரேசணை அழைத்து கொண்டு தன் தாய் வீடு இருக்கும் அவளது வேறு தொட்டிக்கு போய்விட, இங்கு மாதியுடன் மற்றும் மாதிக்கு அவள் முதல் கணவனுக்கும் பிறந்த பெண் குழந்தையுடன் சிவண்ணா வாழ்க்கை நடத்துகிறான். அதன் பின்னர் கூட அவன் தாய் ஜோகம்மாள் அவனையும் அவன் புது மனைவி மாதியையும் சேர்த்துக்கொள்ளவில்லை. இப்படி இருக்க மணிராசன் கோவில் நிகழ்வில் கூட தன் மகனை கூப்பிடாமல் ஜோகம்மாள் போக பின்னர் எப்படியோ குடும்பம் ஒன்று சேர்ந்து விடுகின்றது. இதற்கிடையில் மாதியின் பெண்ணும் வயதுக்கு வந்து விடுகிறாள். இவளுக்கு முதலில் கல்யாணம் செய்து வைத்து வடுவதா அல்லது கணவனின் தங்கை ரதிக்கு கல்யாணம் செய்து வைப்பதா என்னும் குழப்பம் குடும்பத்தில் நிகழும் போதே ரதி துரையனின் சீர்காட்டுக்கு டிராக்டர் ஓட்ட வரும் ஒருவனுடன் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவன் ஒரு நகரத்தான். மலைவாழ் ஆள் இல்லை. இதனிடையில் மாதி தன் அண்ணன் ஒருவன் இருக்கும் தொட்டிக்கு சென்று அவன் பையனுக்கு தன் பெண்ணை பேசி முடிக்கிறாள்.

அப்போது ஒரு நாள் தீக்கங்காணியாக இருக்கும் சிவண்னா உதவியுடன் காட்டுக்குள் போகும் வனத்துறையினர் சிலர் தூரத்தில் சந்தன மரம் வெட்டுவதை பார்த்து அது வீரப்பன் ஆட்கள் என உறுதி செய்கின்றனர். பின்னர் சிவண்ணாவின் தற்காலிக தீக்கங்காணி வேலையும் போய்விடுகின்றது. கிட்ட தட்ட சோளகர் தொட்டி ஆட்கள் காட்டில் வெளி ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை ஒரு வித பயத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இதனிடையே சிவண்ணாவின் நண்பன் பாலப்படுகை தொட்டியின் புட்டன் கையில் காசு அதிகம் புழங்குவதை சிவண்ணா கண்டிக்க அவனும் தான் சந்தன மரம் வெட்டுவதில்லை எனவும் வெட்டிப்போட்ட மரத்தினை பத்து மைல் தூரம் தூக்கி சுமந்து போய் கொடுப்பதாகவும் அதில் பணம் வருவ்தாகவும் இனி திருந்தி விடுவதாகவும் தெரிவித்து செல்கிறான்.

அப்போது அந்த காலகட்டத்தில் வீரப்பன் வேட்டை என்னும் பெயரில் கர்நாடகா மற்றும் தமிழக போலீசார் அதிக அளவில் ஈடு பட்டுக்கொண்டு இருக்க, ஒஸியூரப்பா என்னும் கர்நாகட போலீஸ் இண்ஸ்பெக்டர் இந்த சோளகர் தொட்டி அருகில் ஒரு கேம்ப் அமைத்து கொண்டு சோளகர்களை காட்டுக்குள் போக தடை விதிக்கிறான். சோளகர் ஆண்களி அனைவரையும் இரவினில் தன் முகாமை சுற்றி சுற்றி வந்து தங்கள் கைத்தடியால் தரையில் தட்டி கொண்டே வர வேண்டும் என உத்தரவிட கோள்காரன் சென்நேஞ்சாவுக்கு பின்னர் கோள்காரனாகிய கரியன் முதல் நாள் அப்படி சுற்றி வந்து பின்னர் அடுத்த நாள் உடல் நிலை சரியில்லாமல் போகவே ஒஸியூரப்பாவால் இழுத்து வரப்பட்டு வயிற்றில் உதைபட்டு மரண படுக்கையில் விழுகிறான். அவனுக்கு அவன் அண்ணனுக்கும் தன் மணைவி கெம்பம்மாவுக்கும் பிறந்த மகன் தம்மையா மூலிகை தேடி அலைந்து சிகிச்சை செய்து வருகிறான்.

அதன் பின்னர் தமிழக் போலீசாரின் கொடுமை தொடங்குகின்றது. அங்கே பன்னாரி அம்மன் கோவில் அருகே இருக்கும் ஒர்க் ஷாப் என்னும் சித்ரவதை கூடத்துக்கு சோளகர் தொட்டி ஆண்கள் அனைவரும் அழைக்கப்பட்டு அரிசி சோறும் ஆட்டுக்கறி விருந்தும் கொடுக்கப்பட அங்கே சித்ரவதை கூடத்தில் விசாரணையில் புட்டன் இருப்பதை சிவண்ணா பார்க்கிறான். ஆனால் புட்டன் இவனை தெரியாது என சொல்லிவிட ஆனால் சிவண்ணா மனம் நொந்து போகிறான். பின்னர் புட்டன் போலீசாரால் கொல்லப்படுகிறான். பின்னர் சிவண்ணா கைது செய்யப்படுகிறான், அது போல கரியனின் மகன் தம்மையா என்னும் சிறுவனும் மூலிகை பறிக்க போன போது கைது செய்யப்பட்டு சித்ரவைதை செய்யப்பட ஒரே தொட்டியை சேர்ந்த இருவரும் ஒரு நாள் தப்பிக்க வாகாக இருந்த நேரத்தில் தப்பி காட்டுக்கு ஓடிவிட அவர்கள் கண்டிப்பாக வீரப்பன் ஆட்கள் தான் என போலீஸ் நினைத்து சோளகர் தொட்டிக்கு போய் சிவண்ணா மனைவி மாதியையும் அவள் மகள் (அவள் பெயர் சித்தி) சித்தியையும் பிடிக்க போகின்றது. ஆனால் காட்டுக்குள் ஓடிய சிவண்ணாவும், தம்மையாவும் எதிர்பாராத விதமாக வீரப்பன் ஆட்களையும் வீரப்பனையும் சந்திக்க நேரிட வேறு வழி இல்லாமல் அவர்கள் வீரப்பன் கூட இணைந்து விடுகின்றனர்.

இதனிடையே சிவண்ணாவின் தங்கை ரதி ஒரு உண்டு உறைவிட பள்ளியில் படித்த போது லிங்காயத்து ஜாதி (சில மைல்களுக்கு அப்பால் இருக்கும் மலைகிராமத்து மக்கள்) மல்லிகா என்னும் பெண் நண்பி என மேலே சொல்லியிருந்தோமே அந்த மல்லிகா வுக்கும் அதே ஜாதியை சேர்ந்த மாதேஸ்வரன் கோவில் பூசை செய்யும் ஒரு பையனுக்கும் திருமணம் முடிந்து நல்ல படியாக வாழ்க்கை ஆரம்பிக்க இருக்கும் நேரம். அந்த லிங்காயத்துகாரன் முன்னர் ஒரு கல்குவாரியில் வேலை செய்தவர் என்பதால் வீரப்பன் கும்பலுக்கு வெடிமருந்து சப்ளை செய்திருப்பாரோ என எண்ணி அந்த லிங்காயத்து காரரை தேடி போலீஸ் போன போது அவர் அங்கே இல்லாமையால் புதுமணம் முடித்த அவரது மகளையும் மருமகனையும் போலீஸ் பிடித்து வேனில் கொண்டு போகின்றது. போகும் வழியில் ஒரு காட்டில் வைத்து அவள் போலீசாரால் கற்பழிக்கப்படும் அவலமும் அதை தொடர்ந்து அந்த புது மாப்பிள்ளை போலீஸ் வேனுக்குள் இருக்கும் போதே ஒதுக்க நினைக்கும் கொடுமையும் நடக்கிறது. அந்த மல்லிகாவை சித்ரவதை முகாமில் கொண்டு அடைத்த இடத்தில் சில ஆண்களும் நிர்வாணமாக ஆனால் நிறைமாத கர்ப்பினியாக ஒரு பெண்ணும் இருக்கின்றனர். நமக்கு ரத்தம் உறையும் பகுதிகள் அவைகள். அந்த பெண்ணுக்கு இரவில் பிரசவ வேதனை. இந்த மல்லிகாவே உதிரும் உதிரம் துடைப்பது முதல் நஞ்சுக்கொடி அறுப்பது வரை செய்ய , இதல்லாம் கொடுமை இல்லை, இத்தனைக்கும் அந்த பெண்ணுக்கு தூமை துடைக்க கூட துணி கொடுக்காத போலீசார், ஒரு புது மனைவி பிரசவம் பார்ப்பது, கூட இருப்பது சில வேற்று ஆண்கள். அவர்களும் சித்ரவதைக்கு வந்தவர்கள் என்பதால் முகம் திருப்பி கண்ணியமாக நடந்து கொள்கின்றனர். அடுத்த நாள் காலையே அந்த பிரசவித்த பெண்ணின் கணவன் கொல்லப்படுகிறான். இதை அவளிடம் தெரிவிக்கின்றனர் போலீசார். நம்புங்கள் மக்களே நான் தமிழீழ கதை சொல்லவில்லை. இந்தியாவின் வேறு மாநில கொடுமை கதை சொல்லவில்லை. தமிழக கதை தான். ஆனால் இது கதை அல்ல நிஜம்:-(

இதிலிருந்து தான் போலீஸ் சித்ரவதைகள் தொடர்கின்றன இக்கதையில். அங்கே சோளகர் தொட்டிக்கு சிவண்ணாவை தேடிப்போன போலீஸ் அங்கே மாதியையும் அவள் மகள் சித்தியையும் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து இதே ஒர்க் ஷாப்ல்லில் அடைத்து வைக்க வரும் வழியிலேயே மகள் சித்தியை வன்புணர ஆரம்பிக்க மாதி "என்னை எது வேண்டுமானாலும் செய்து கொண்டு என் மகளை விட்டுடுங்க" என கெஞ்சிய பாவத்துக்காக மாதியையும் வன்புணர பின்னர் தாயின் முன்னிலையில் மகளும், மகளின் முன்னிலையில் தாயும் அந்த சித்ரவதை கூடத்தில் பல போலீசாரால் புணரப்பட இத்தனைக்கும் தொட்டிகளை சேர்ந்த ஆண்கள் முன்னிலையில் தான் இத்தனை கொடுமைகளும் நடக்க... மாதவிடாய் ஆன பெண்கள் சுத்தம் செய்து கொள்ள துணிகள் கூட கொடுக்காமல், ஒரு கட்டத்தில் ஆண்கள் பெண்கள் எல்லோரும் மார்பு காம்புகள், பெண்குறிகள் என எல்லா இடத்திலும் கிளிப் மாட்டப்பட்டு மின்சாரம் பாய்ச்சப்பட்டு, ஆண்கள் தலைகீழாக தொங்க விடப்பட்டு.... என்னால் இதற்கு மேல் விவரிக்க இயலவில்லை நண்பர்களே! எப்படிப்பட்ட அழகிய மலை கிராமம் அது. பெண்களுக்கு அங்கே எத்தனை மரியாதை கொடுத்தார்கள் என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்! அங்கே வேட்டையாடப்படும் உணவுகள் முதல் பங்கு விதவைகளுக்கு, ஒரு பெண்ணை திருமணம் முடிக்க ஆண்கள் வரதட்சினை கொடுத்து பெண் எடுக்க வேண்டும். என்ன அதிகபட்சமாக அரைப்படி ராகியும் பன்னிரண்டு ரூபாய் பணம் தான் என்றாலும் ஆண்கள் தான் வரதட்சினை கொடுக்க வேண்டும், அது போல பெண்ணுக்கு பிடிக்கவில்லை எனில் அவளுக்கு கொத்தல்லி முன்னிலையில் விவாகரத்து மிக சுலபம். அதே போல மறுமணம் மிகவும் எளிது. இப்படி இருந்தவர்கள். நகர நாகரீக மனிதர்கள் போல பெண் கொடுமை இல்லை. இவர்களுக்கா நாகரீகம் தெரியாது? இவர்கள் நாகரீகத்தின் பரிணாமம் என சொல்லப்படும் எதையும் பயன் படுத்துவது இல்லை, அதிக பட்சமாக துப்பாக்கி வெடி கந்தகம் மற்றும் யானை விரட்ட வெடிகள்... இவர்கள் அதிக பட்சமாக பயன் படுத்தும் நாகரீக பொருட்கள் மற்றும் இரசாயண பொருட்கள் இத்தனையே, ஒரு பீடி பற்ற வைக்க வேண்டும் என்றால் கூட ஞெழிக்கற்கள் போட்டு கடைந்து நெருப்பு வரும் போது பஞ்சுகள் காட்டி நெருப்பு எடுத்து தீக்கங்குகள் எடுக்கும் மக்கள். ஆனால் பெண்களை கொடுமை செய்யும் நாகரீக வித்தை எதும் தெரியாத உத்தமர்களுக்கு இங்கே மின்சார அதிர்வு கொடுக்கும் உச்சபட்ச கொடுமையை எங்கே சொல்லி அழ? இன்னும் ஒரு கொடுமை பேன் கொடுமை. புணர்வது பத்து நிமிட தண்டனை, மின்சாரம் பத்து நிமிட தண்டனை. ஆனால் பல நாட்களாக குளிக்காமல் தலைக்கு எண்ணை எதும் இல்லாமல் பேன் வழியும் பெண்கள் அங்கிருக்கும் போலீசாரிடம் "என்னை வேண்டுமானால் புணர்ந்து கொள். ஒரு ஐந்து நிமிடம் பேன் சீப்பு கொடு" என கேட்கும் கொடுமை. வழித்து எடுத்த சீப்பினில் வரும் பேன்களை விரல் நகத்தால் குத்தாமல் கல் கொண்டு நசுக்கும் அளவுக்கு பேன்கள். இது போல பல மகா கொடுமைகள்!

இத்தனை சித்ரவதைகளுக்கு மத்தியில் அந்த விசாரணை கைதிகளுக்கு தீபாவளி பொங்கல் போல புது சட்டை அளவு எடுக்க ஒரு டைலர் வருகின்றார். அவர் வரும் போதெல்லாம் ஆண்கள் வெளிறிப்போகின்றனர். ஏன்? அந்த டைலர் எடுக்கும் அளவுகள் அந்த ஆட்களுக்கன "வீரப்பன் கும்பல் சீருடை"க்கான அளவு. அளவு எடுத்து தைத்த ஆட்கள் அடுத்த நாள் "வீரப்பன் ஆட்கள் காட்டில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர்" என அடுத்த நாள் பேப்பரில் வரும்! இதற்கு மேல் என்ன விவரிக்க முடியும் சொல்லுங்கள்?

இப்படியாக மாதியும் அவள் பெண்ணும் பலமுறை புணரப்பட்ட பின்னர் ஒரு கட்டத்தில் சாகும் நிலையில் மாதியின் வீட்டில் கொண்டு வந்து விடப்படுகின்றனர். மாதியின் அண்ணன் மகன் பரவாயில்லை என சித்தி என்னும் மாதியின் பெண்ணை கட்டிக்கொள்கிறான். மாதி தன் மாமியார் ஜோகம்மாள் இருக்கும் சோளகர் தொட்டிக்கு வருகின்றாள். இருக்கும் நிலத்தில் பயிர்செய்கின்றாள். சிவண்ணா நீதிமன்றத்தில் சரண் அடைகின்றான். என்பது போல கொஞ்சம் வெளிச்சம் காட்டி கதை முடிகின்றது.

ஆனால் வீரப்பன் பிடிபட்டானா? அவனால் பாதிக்கப்பட்ட இந்த மலைகிராம மக்கள் வாழ்வு என்ன ஆனது? எதாவது நிவாரணம் கிடைத்ததா? சதாசிவம் கமிஷன் என்ன ஆனது? செயல்பாட்டுக்கு வந்ததா? இன்னும் எத்தனை மலைகிராம மக்கள் கர்நாடக சிறையில் மற்றும் தமிழக சிறையில் இருக்கின்றனர்? எதுவும் தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அந்த மலைவாழ் மக்களால் வனவிலங்குகளுக்கோ அங்கிருக்கும் மரங்களுக்கோ எப்போதும் தீங்கு வராது. ஏனனில் அவர்கள் காட்டை காடாக பார்ப்பதில்லை. கடவுளாக பார்க்கும் மனிதர்கள். ஒரு புலி மானை வேட்டை ஆடினால் புலியை பிடித்து சிறையில் போடுவது எப்படி அபத்தமோ அதே போலத்தான் மலைவாழ் மக்களும் . அவர்கள் பொழுது போக்குக்காக வேட்டை ஆடுவதில்லை. தங்கள் உணவுக்காக, அதுவும் தேவைக்கு அதிகமாக எப்போதும் சேமித்தும் வைப்பதும் இல்லை. இவர்கள் வனதேவதையின் மைந்தர்கள். அவர்களை விட்டுவிடுங்கள் அரசாங்கமே! உங்கள் அதிகாரிகளை விட அவர்கள் ஆபத்தானவர்கள் இல்லை. இப்புத்தகத்தை பரவலாக்குங்கள் நண்பர்களே! நூற்றுக்கணக்கான போலீசார் வீட்டு மனை பரிசாக பெற்றார்களே, அவர்களிடம் இப்புத்தகத்தை பரிசாக கொடுத்து படிக்க சொல்லுங்கள். அதில் யாராவாது ஒரு போலீஸ் மனம் திருந்தி அந்த வீட்டு மனையை விற்று அந்த மக்களுக்கு நிவாரணம் கொடுத்தால் அது காட்டை காப்பதற்கு சமானம். இந்த விமர்சனத்தின் முதல் பாராவை படியுங்கள். அந்த கிழவன் அழுக்கா? இந்த கொடுமை எல்லாம் நம் நாட்டில் நடக்க விட்ட நாம் எல்லாம் அழுக்கா? என்னும் கேள்வியோடு இந்த விமர்சனத்தை முடிக்கிறேன்:-(

நூலின் பெயர் : சோளகர் தொட்டி

நூலாசிரியர் : ச. பாலமுருகன் (இவர் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர். மனித உரிமைச் செயல்பாடுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். வழக்கறிஞரான இவர் கடந்த பத்து ஆண்டுகளாக பழங்குடி இன மக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாட்டு இயக்கத்தில் இருப்பவர்)

வெளியீடு : எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி. பின்: 642 002
தொலைபேசி: 04259 - 226012, செல்: 9865005084
மின்னஞ்சல் : ethirveliyedu@gmail.com , www.ethirveliyedu.com

நன்றி! வணக்கம்!
குறிப்பு: நண்பர் செ.சரவணகுமார் அவர்கள் எழுதிய விமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும். நான் புத்தகம் படித்து முடித்த பின்னர் இந்த நூலை சிலாகித்து நண்பர் மணிஜி அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்த போது சரவணக்குமார் எழுதிய விமர்சனம் பற்றி கூறினார். பின்னர் அதையும் படித்தேன். நல்ல விமர்சனம் அது!புகைப்படம் அந்த விமர்சனத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி சரவணகுமார்!

20 comments:

 1. நல்ல விமர்சனம் அபி அப்பா.

  இதையும் ஒரு பார்வை பாருங்க: http://penathal.blogspot.com/2005/10/24oct05.html

  ReplyDelete
 2. உண்மைத் தமிழன்April 10, 2012 at 12:05 AM

  அப்படியே பதிவில் என்னை நான் பார்க்கிறேன்

  ReplyDelete
 3. படிக்க தூண்டும் விமர்சனம்…வீரப்பனை மட்டும் வைத்து பார்த்து தூர வைத்தவர்களுக்கு உங்களின் புத்தக விமர்சனம் மூலம் மலையையும் மலைவாழ் மக்களையும் அதன் பின்னனியில் நாவல் செல்லும் விதத்தையும் அறியும் போது இது ஒரு ஆவணப்படைப்பு என்பது புரிய வரும். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ஒரு நூல் விமர்சனத்தை சிறுகதை போல வாசிக்க முடிந்தது

  ReplyDelete
 5. இந்த புத்தகத்தை பற்றி நான் எழுத நினைத்தேன். நீங்க மற்றும் சரவணாகுமார் எழுதியதை விட என்னால் சிறப்பா எழுத முடியுமான்னு தெரியல. அருமையான விமர்சனம் என்பதை தாண்டி ஒரே ஒரு குறை புத்தகத்தை பற்றி ரொம்ப டீடைலா சொல்லிடீங்க.

  ReplyDelete
 6. இந்த புத்தகத்தை பற்றி நான் எழுத நினைத்தேன். நீங்க மற்றும் சரவணாகுமார் எழுதியதை விட என்னால் சிறப்பா எழுத முடியுமான்னு தெரியல. அருமையான விமர்சனம் என்பதை தாண்டி ஒரே ஒரு குறை புத்தகத்தை பற்றி ரொம்ப டீடைலா சொல்லிடீங்க.

  ReplyDelete
 7. நல்ல அழகான புரியும் படியான விமர்சணம்

  ReplyDelete
 8. U TOO LATE,

  N.SENTHILKUMAR,TUTICORIN

  ReplyDelete
 9. சூப்பர் அபிஅப்பா. நல்லா எழுதியிருக்கீங்க.

  ReplyDelete
 10. ஒரு நல்ல பதிவ எழுதி வச்சிட்டு மாதக்கணக்கில் போஸ்ட் போடாமலே இருந்த உங்களை மென்மையாக கண்டிக்கிறேன் அபிஅப்பா. :)

  ReplyDelete
 11. புனித ​வெள்ளியன்று இரவு ​சோனி பிக்சில் "The Passion of the Christ" படத்​தை என் து​னைவியாருடன் பார்த்துக் ​கொண்டிருந்​தேன், இ​யேசுவிற்கு ​கொடுக்கப்பட்ட சித்திரவ​தைக​ளை அத்த​னை விரிவாக பார்ப்பவர்க​ளை கதறியழ ​வைக்கும் அளவிற்கு காட்டும் ​மெல்கிப்சனின் படம், பார்த்துக் ​கொண்டிருக்கும் ​பொழு​தே ​பெருக்​கெடுத்து ஓடும் கண்ணீ​ரைத் து​டைக்கவும் முடியாமல் என் ம​னைவி என்னிடம் ​கேட்டார், "இப்படியும் உலகில் ​கொடூரமான மனிதரிகள் இருந்திருக்கிறார்களா?" "இருந்திருக்கிறார்களாவது, இன்​றைக்கும் இந்த நூற்றாண்டிலும் அப்படிப்பட்ட மனிதர்கள் முன்​னெப்​போ​தையும் காட்டிலும் ​கொடூரமாக இருக்கிறார்கள், நீ ஈழத்தின் ​கொடு​மைக​ளை பார்த்தி​யே!" என்​றேன்,

  நம் காலத்தின் உண்​மையான முகத்​தை புரிந்து ​கொள்ள ​வேண்டுமானால், நம் சந்ததிகள் இக்காலத்தின் ​போலி முகங்க​ளைக் கண்டு ஏமாந்துவிடாதிருக்க ​வேண்டுமானால். கண்டிப்பாக படிக்க ​வைக்க ​வேண்டிய நாவல்கள்.

  மீண்டும் எனக்கு அன்​றைய இரவு தான் ஞாபகம் வந்தது, நல்ல​வே​ளை நம் மகள் தூங்கிவிட்டாள் இ​தை​யெல்லாம் பார்த்தால் அவள் தாங்க மாட்டாள் என்றாள், "இல்​லைப்பா. அவர்கள் இவற்​றை​யெல்லாம் பார்க்க ​வேண்டும்" என்​றேன்,

  ReplyDelete
 12. கலக்கல் அபிஅப்பா

  யே தில் மாங்கே மோர்

  ReplyDelete
 13. சோளகர் தொட்டி - திரு அபி அப்பாவின் விமர்சனம் - மனசு கலங்கி விட்டது. புத்தகத்தை படித்துப் பாருங்கள்.
  நாம் நாகரீக நாட்டில் தான் இருக்கிறோமா?

  உங்கள் பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். மனது வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete
 14. அருமையான நாவல். படித்திருந்தேன்.
  அந்த மலை வாழ் மக்களின் வாழ்வும். வளமும்,
  படும்பாடுகளும் .....கட்டாயம் படிக்க வேண்டிய படைப்பு.

  ReplyDelete
 15. மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

  மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

  கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

  பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

  மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

  மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

  இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

  ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

  இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

  சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

  இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

  இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

  தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  for readmore www.fcrights.in

  ReplyDelete
 16. நீங்கள் என் உங்கள் பதிவின் மூலம் பணம் சம்பாதிக்கலா?

  கூகுள் அட்சென்ஸ் ரிஜேஸ்டர் பன்னுங்க பா... அது துல் தான்..

  ReplyDelete
 17. நீங்க கண்டிப்பா அட்சென்ஸ் அபுலே பன்னுங்க ஒரு கிளிக்கு ரூ 150 முதல் 300 வரை கிடைக்கும்

  ReplyDelete
 18. அருமையான - காவிய விமர்சனம். நன்றி. ஒடுக்கபட்டமக்களுக்காக ஓங்கி உரைக்கும் குரல் ...............

  ReplyDelete
 19. அருமையான - காவிய விமர்சனம். நன்றி. ஒடுக்கபட்டமக்களுக்காக ஓங்கி உரைக்கும் குரல் ...............

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))