கூட்டம் கூடிக்கொண்டு இருக்கின்றது |
மின்சார பாடை வந்தாச்சு |
வக்கீல் சீனிவாசன் பாடையை சுற்றி வந்து அஞ்சலி செலுத்தும் காட்சி |
சுற்றி வந்து அழுது அஞ்சலி செலுத்துகின்றனர் மின்சாரத்துக்கு |
மின்சாரத்துக்கு அஞ்சலி செலுத்தும் நகர செயலர் குண்டாமணி அண்ணன் கூட நானும்! |
அரசை எதிர்த்து போராட்ட முழக்கம் |
காலை 7 மணி முதலே கூட்டம் கூடியது! ஒன்றியமும் நகரமும் ஒரே இடத்தில் என முடிவானது. இருவரும் சேர்ந்து நகராட்சி வாசல் மற்றும் தாலுக்கா ஆபீஸ் முன் ஆர்பாட்டம் என முடிவானது.
காலை ஆர் டி ஓ ஆபீஸ் முன்னர் கூடிய கூட்டம் இடம் பெயர்ந்தது. அண்ணன் குண்டாமணி அழுக்கான சட்டையுடன் மைக் செட் கட்டிக்கொண்டு இருக்க அவருக்கு துணையாக கவுன்சிலர் அசோக் மற்றும் முருகதாஸ் உதவி செய்ய நான் ஓடிப்போய் " அண்ணே எனக்கு என்ன வேலை?" என கேட்டேன்.
"நீ ஒன்னியும் பண்ண வேண்டாம், ஒனக்கு பெரிய நியூஸ் இருக்கு, அது சஸ்பென்ஸ்" என நகரம் சொன்னது.
யோசனையுடன் வந்தேன் வீட்டுக்கு. குளித்து முடித்து வீட்டுக்கு வரும் வழியில் நகரம் குண்டாமணி அண்ணன் எதிரே போனது. "தம்பி அங்க போய் நில்லு, நான் குளிச்சிட்டு வரேன்" என சொன்னது. என்னவோ புதிர் இருக்க போவுதுன்னு மாத்திரம் மனசுக்கு தெரிஞ்சுது. ஆனா என்னான்னு புரியலை.
காலை பத்துமணி. அண்ணன் முன்னாள் எம் எல் ஏ சத்தியசீலன் வந்தாச்சு. ஜெகவீரபாண்டியன் அண்ணன் வந்தாச்சு. எஸ். என் ஜி அன்பு அண்ணன் வந்தாச்சு. இதோ மூவலூர் மூர்த்தி அண்ணன் கூட வந்தாச்சு. இன்னும் குண்டாமணி அண்ணாச்சியை காணும்.
கூட்டம் கூடிகிட்டே இருந்துச்சு. என் கிட்ட கேமிரா கூட இல்லை. திடீரென வேற வழியா குண்டாமணி அண்ணன் வந்தாச்சு.
"அண்ணே, என் கிட்டே கேமிரா இல்லை"
"நோ ப்ராப்ளம், இன்ஸ்பெக்டர் நமக்கு தெரிஞ்சவரு தான், எடுக்க சொல்லியிருக்கேன். வீடியோவே கிடைக்கும். பேசாம இரு"
போலீஸ் கூட்டம் வந்தது. அண்ணன் எங்கயோ போயிட்டாரு. போலீஸ் என் பக்கம் வந்தாங்க. கையில் வீடியோ கேமிரா, ஸ்டில் கேமிரா சகிதம்!
எங்கயோ இருந்து நகரம் குரல் கேட்டது!
"தொல்காப்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ"
"என்னாண்ணேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ"
"நான் சொன்ன மேரி வந்தாங்களா"
"ஆமாண்ண்ணேஏஏஏஏஏஏஏஏஏஏஎ"
"கைல பொருள் எல்லாம் இருக்காகாஆஆஆ"
"இருக்கூஊஊஊஊ"
இன்ஸ்பெக்டர் கேட்டார்... "என்னப்பா உங்க நகரம் என்னா சொல்லுது?"
"சார் மேற்கால தான் ஒன்றிய ஆட்கள் வராங்களாம், அங்க கொஞ்சம் பாதுகாப்பு போடனும்னு நகரம் இப்ப பேசிகிட்டு இருந்த போது சொன்னுச்சு சார்"
"அதல்லாம் நாங்க பார்த்துப்போம்"
கூட்டம் அதிகமானது. சோழன் போக்குவரத்து கழகத்தில் இருந்து எப்பவோ ஓய்வான ராஜசேகர் கண்டக்டர் தலைமையில் தொ மு ச கொடி ஏந்திய தோழர்கள் வந்தார்கள். என்னை பார்த்து சினேக சிரிப்பை உதிர்த அவர்கள் புரோட்டாகால் படி அழகாக பிரிண்ட் செய்யப்பட்ட வாசகங்கள் அடங்கிய பிரசுரம் வினியோகித்தனர்.
வரிசையாக நகர் மன்ற தலைவி பவானி சீனிவாசன், வக்கீல் சீனிவாசன், அலக்சாண்டர், எஸ். என் ஜி அன்பு, தம்பி சத்யா (பலர் பேரை நான் விட்டிருப்பேன்) என எல்லாரும் வருகை தர அண்ணன் குண்டாமணியை காணும்!
எல்லாரும் எங்கே எங்கே என தேடிக்கொண்டு இருக்க பட்டமங்கல தெருவில் இருந்து சாவு மேள சத்தம்..... மிகப்பெரிய பாடை.... எங்கள் ஊர் பாணியில் மிகப்பெரிய பாடை... சுற்றியும் கருப்பு சட்டை போட்ட நம் இயக்க தோழர்கள். ஒப்பாரி வைத்து வரும் பெண்கள். பாடையில் ஒரு பிணம்! "நான் தான் மின்சாரம்" என எழுதப்பட்ட பிணம்! கொள்ளி சட்டியை தூக்கி வந்தவர் எங்கள் நகரம்! ஊதுபத்தி எடுத்து வந்தவர்கள் எங்கள் கவுன்சிலர்கள்!
பாடையை கிடத்திவிட்டு சுற்றி வந்து அழ வேண்டும் என்கிற போது இளைஞர்கள் கொஞ்சம் கூச்சப்பட 80 வயது ரங்கன் மாமா " எலேய் என்னாங்கடா, இன்னிக்கு 92 வயசு ஆச்சு பேராசிரியர்க்கு அவரு மாதவரத்திலே கத்திகிட்டு இருக்காரு பிறந்த நாள்னு கூட பார்க்காம, தலைவருக்கு இதோ 90 ஆச்சு, வள்ளுவர் கோட்டம் கிடுகிடுக்குது அந்த கிழவனால, அட்ரா குத்து, மின்சார பிணத்தை சுத்தி அழுங்கடா" என சொல்லி நெஞ்சில் அடித்து அழ ஆரம்பித்தார்.
இதில் ஒரு ஆச்சர்யம் என்னவெனில் நாகை மாவட்டத்தில் இறந்து போன விவசாயிகள் குடும்ப பெண்களை அழைத்து வந்து ஒப்பாரி வைக்க சொன்னது எங்கள் நகா செயலரின் ஹைலைட். அந்தம்மா பாடிய ஒப்பாரி அனைவரையும் அழச்செய்தது என்பது நூறு சதம் உண்மையோ உண்மை!
போலீசார் ஆடிப்போய்விட்டனர்! "உனக்கு ஒரு சஸ்பென்ஸ் இருக்கு" என எங்கள் நகரம் சொன்ன போது எனக்கு புதிராக இருந்தது. ஆனால் இப்போது புரிந்து விட்டது. உடனே எங்களுக்கு இந்த போட்டோவோ செய்தியோ பகிர முடியாத சூழலில் இன்று முழு நேர மின்வெட்டால் நான் சென்னை நண்பர்களுக்கு போன் செய்தேன். உடனே தோழர் சரவணகுமார் முழு செய்தியும் கேட்டுவிட்டு அழகாக அதை தன் அலுவலக நேரத்திலும் அப்டேட் செய்தார்.
ஆர்ப்பாட்டம் ஒரு மணி நேரம் நடந்தது. மிகப்பெரிய ஆர்ப்பாட்டம். சும்மா சொல்லக்கூடாது. மதியம் 12 வரை ஆர்ப்பாட்டம் நடந்தது. எழுதி வைத்த வாசங்களை முன்னாள் எம் எல் ஏ ஜெகவீரபாண்டியன் படிக்க மற்றவர்கள் சொல்ல களை கட்டியது ஆர்ப்பாட்டம். பின்னர் எல்லோரும் பேசினர். எங்கள் ஒன்றியம் மூவலூர் மூர்த்தி அண்ணன் மீடியா பேட்டி கொடுத்தார். அப்போது நகரம் வழக்கம் போல கூட்டம் ஒழுங்கு செய்ய பிசிக்கல் பிரயோகத்தில் இருந்தார் - செயல் வீரன் அல்லவா!
போராட்டம் என்னவோ வெற்றி தான்! ஆனால் காலை 12 மணிக்கு முடிந்த போராட்டத்தை பற்றிய பதிவு போட எனக்கு இப்போது தான் மின்சாரம் வந்தது! இந்த ஆட்சி போக வேண்டும்! இதற்கு மேல் சொல்ல எதும் இல்லை!
Arumai yaaa pathivu seithulleer . Neradi varunanai pol feel pannen
ReplyDeletesupper
ReplyDelete