பெயரை கேட்டாலே ஒரு வித பயம் வந்து அடிவயிற்றில் பிசைகின்றதா? ஆமாம். அது ஒரு சின்ன நூல் தான். மொத்தம் 46 பக்கங்கள் தான் அந்த நூல். பொதுவாக 46 பக்கங்கள் கொண்ட ஒரு அச்சு பிரதியை “கையேடு” என சொல்வதே வழமை. ஆனாலும் நான் அதை “நூல்” என சொல்கின்றேனெனில் அதன் உள்ளீடு அத்தகையது. எழுதியவர் மீது “தேச துரோக குற்றம்” சுமத்தி வழக்கு பதியவைக்கும் அளவுக்கு அந்த 46 பக்கங்களில் விஷயம் இருக்கின்றது எனில் அது “நூல்” வகையறாக்களை சார்ந்தது என்பதே என் கருத்து!
பொதுவாக எல்லோரும் ஆறுகள், தண்ணீர் வராமை, வறட்சி, வட நாட்டில் வெள்ளம் போன்ற செய்திகள் வரும் போதெல்லாம் முனுமுனுக்கும் வார்த்தைகள் “கங்கையும் காவிரியையும் இணைக்க வேண்டும். அக்கே தண்ணீர் வெள்ளமாக போகின்றது, இங்கே காவிரி உள்ளிட்ட தென்னக ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன, ஆகையால் அவைகளை இணைக்க வேண்டும்” என்பதாகவே இருக்கும். போதாக்குறைக்கு பாரதியார் வேறு பாட்டெல்லாம் பாடி விட்டு போய்விட்டார் எனும்போது இந்தியாவின் வடக்கில் ஓடும் ஆறுகளை தெற்கில் இருக்கும் ஆறுகளோடு இணைக்க வேண்டும் என்னும் எண்ணம் நம் மனதில் பசுமரத்து ஆணியாக பதிந்து விட்டது என்பதே உண்மை. நிலைமை இப்படி இருக்க திடீரென்று ஒரு கலகக்குரல் “நதிகளை இணைக்க வேண்டாம்” என எழுந்தால் நாம் முதலில் அதை புறந்தள்ளுவோம். பின்னர் பரிகசிப்போம், ஏளனம் செய்வோம், கோபப்படுவோம் உச்சகட்டமாக “அந்த கலகக்காரனை புடிச்சு உள்ள போடுங்க போலீஸ்கார்” என வீரவசனம் பேசுவோம். யாராவது ஒருவராவது “அந்த கலகக்காரர் நதிகளை இணைப்பதை ஏன் எதிர்க்கின்றார்” என்பது பற்றி அவருடைய கருத்தை கேட்டோமா எனில் இல்லை என்பதே உண்மை.
ஜப்பான் வாட்டர் ட்ரீட்மெண்ட் என்கிற ஒரு விஷயம் உண்டு. காலை வழக்கமாக ஒருவர் எழுந்திருக்கும் நேரத்தின் ஒரு மணி நேரம் முன்பாக அலாரம் வைத்து எழுந்து 3 லிட்டர் குளிர்நீர் குடிக்க வேண்டும். அதற்கு முன்னர் பல்துலக்குவது என்பது கூடாது. இது ஒரு ட்ரீட்மெண்ட். அத்தனையே. முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிடில் புறந்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருங்கள். அவ்வளவு தான் விஷயம்! அதே போலத்தான் இந்த புத்தகமும். அதன் உள்ளே இருக்கும் விஷயம் என்ன என்றே தெரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ள முயலவும் இல்லாமல் அதை பரிகசிப்பதும், எதிர்பதும் அத்தனை ஒரு உத்தமமான செயல் அல்ல!அது போலவே எந்த கருத்தாக இருந்தாலும் முதலில் கேளுங்கள்! சாத்தியமா, சாத்தியப்பட்டால் பலன் கொடுக்குமா என்பதை பகுத்தறிந்து பின்னர் பரிகசிக்கவோ அல்லது எதிர்கவோ செய்யுங்கள் என்பதே என் வாதம்!
நதிகளை இணைக்க வேண்டும் என்னும் விஷயம் நம் குழந்தை பருவத்தில் இருந்து மந்திர சொல் போல மனதில் பதிந்து விட்டது. அதை இந்த 30 ரூபாய் நூல் கொண்டு அத்தனை சுலபமாக அழித்து விட இயலுமா எனில்.... இயலும் தான் போலிருக்கின்றது. காரணம் அதற்கான முகாந்திரம் இருப்பதால் தான் அரசு எழுதிய நூலாசிரியர் மீது “தேச துரோக வழக்கு” தொடுத்துள்ளது. இதே திராவிட முன்னேற்ற கழகம் சார்ந்த மாநில செய்தி தொடர்பு செயலர் திரு. கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் நதிகளை இணைக்க வேண்டி பல சட்ட வழி போராட்டங்களை தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றார் பல ஆண்டுகளாக! உச்சநீதி மன்றம் வரை நடையாய் நடந்து ஒரு சில தீர்ப்புகளையும் பெற்று விட்டார். அவரது இலக்கு என்பதும் தமிழக விவசாய நலன் தான் முடிவுப்புள்ளி. அதே போல இந்த நூலின் ஆசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களின் இலக்கும் அதே தமிழக விவசாய நலன் தான். வழிகள் தேன் வேறு வேறு. ஆனால் இலக்கு என்பது ஒன்றே ஒன்று “விவசாய நலன்”. ஆக பேராசிரியர் ஜெயராமன் இந்த நூல் வழியாக எந்த விதமான தேச துரோகத்தை செய்து விட்டார் என்பது தான் புரியவில்லை. அனேகமாக வழக்கை தொடர்ந்த அரசுக்கும் புரியாது என்றே நினைக்கின்றேன். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அது பற்றி பேசிக்கொள்வோம். இப்போது நூலின் கருத்துக்கு வரலாம்!
நதிகள் இணைப்பு எனில் நம் மனதில் ஓடும் பிம்பம் என்பது கங்கை முதல் காவிரி வரை வாய்க்கால் வெட்டி அதன் வழியே தண்ணீரை கொண்டு வருவது. அது பாய்ந்து அடித்து நுரை பொங்க உத்தபிரதேசத்தில் இருந்து மத்திய பிரதேசம் வந்து அந்த மாநிலத்தை வளம் பெற செய்து, அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா என வரும் வழி முழுமையும் வளமாக்கி பின்னர் தமிழகம் வந்து தமிழக அனைத்து மாவட்டம் வழியாக பாய்ந்து ஓடி வளமாக்கி... இத்யாதி... இத்யாதி... இப்படித்தானே கற்பனையில் இருக்கின்றோம்... ஆனால் இந்த நூலில் ஆசிரியர் அவர்கள் அதில் தான் தன் முதல் சந்தேகத்தை தெளிவாக தெளிக்கின்றார்.
இந்திய நதிகளை இணைக்க ஆகும் செலவு, அதற்கான கால அவகாசம், அந்த கால அவகாசம் முடியும் போது குறிப்பிட்ட அந்த செலவு எத்தனை அதிகமாகும் என்பதில் ஆரம்பித்து தொடர்கின்றார். அரசு மதிப்பில் 20 லட்சம் கோடி ஆகும். அது கால்வாய் வெட்டி முடிக்கும் போது 30 லட்சம் கோடியை தொடும் என அரசு சொன்னதை எடுத்து இயம்புகின்றார். இந்த பணத்துக்கு அரசு எங்கே போகும் என வினா எழுப்புகின்றார். அங்கே தான் முதல் இடி விழுகின்றது அவருக்கும் நமக்கும்! அதாவது அரசு அந்த பணத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பனிகள் மற்றும் உலக வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள் வழியாக மூலதனமாக பெறும். சும்மா வருவாளா சுந்தரி?
சுமார் இருபது வருடங்கள் முன்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன. தங்க நாற்கர சாலைகள் இந்தியா முழுமையும் நான்கு வழி சாலைகளாக போடப்பட்டுள்ளதே? அது போது மாநில நெடுஞ்சாலைகள் கூட போடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வந்தது? இவற்றில் பல கிலோமீட்டர் சாலைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சாலை போட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுத்து விட்டு சுங்க வரி வசூலித்து அதை எடுத்துக் கொள்கின்றனர். சாலை போடுவதற்கும், அதை பராமரிக்கவும் சாலையில் செல்லும் இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் எல்லாமே சாலை வரி கட்டுகின்றோம். ஆனாலும் இந்த தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட சாலைகளுக்கு தனியாக ஒவ்வொறு பயணத்தின் போதும் சுங்க வரி (டோல்கேட்) கட்டுகின்றோம். அதே போல இந்திய கார்ப்பரேட் கம்பனிகள், வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பனிகள் எல்லோரும் நதிகளை இணைக்க முன்வரும் போது அந்த நதிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? சாலை போட்டால் அதில் பயணிக்கும் வாகனங்களில் இருந்து சுங்க வரி வசூலிக்கலாம். அதுவே நதி எனில் என்ன செய்வார்கள்? யார் யாருக்கு தண்ணீர் தருகின்றார்களோ அவர்களிடம் மீட்டர் போட்டு காசு வசூலிப்பார்கள். ஆனால் இப்போது காவிரியில் தண்ணீர் வருகின்றது எனில் விவசாயிகளுக்கு இலவசமாக தண்ணீர் வரும். தண்ணீர் இலவசம் என்பதால் அந்த விவசாயி தான் விதைக்காகவும், உரம், பூச்சி மருந்துகள், விவசாய கூலி போன்ற செலவுகள் போக தனக்கான லாபம் வைத்து ஒரு குறிப்பிட்ட விலைக்கு அந்த விளைச்சலை விற்க இயலும். அதுவே கார்ப்பரேட் கம்பனிகளிடம் இருந்து முக்கிய மூலதனமான தண்ணீரை விலை கொடுத்து வாங்கினால் என்ன ஆகும்? விற்பனை செலவு பன்மடங்காக உயரும். கொள்முதல் இடத்திலேயே விலை உயர்வு எனில் கடைசியாக அது தரகர்கள் வழி பயணித்து பயனாளிக்கு வரும் போது அந்த விளைச்சலின் விலை என்பது இப்போது இருப்பதை விட மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதை தான் நூலாசிரியர் தன் சந்தேகமாக சொல்கின்றார். அவர் தெளிவாக இப்போதைக்கு 30 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசோ அல்லது அந்த நதி பாய்ந்து வரும் மாநில அரசுகளோ இந்த செலவை செய்ய முடியாது அதனால் வேறு வழியில்லாமல் உலக மற்றும் இந்திய கார்ப்பரேட் கம்பனிகளுக்கு ஆறுகளை விற்பதை தவிர வேறு வழி இல்லை என்கிறார்.
மேலும் அந்த கார்ப்பரேட் கம்பனிகள் விவசாயத்துக்கு கொடுப்பதை விட தொழிற்சாலைகளுக்கு அதுவும் கார்ப்பரேட் கம்பனிகளுக்கு தான் முன்னுரிமை தருவார்கள் என்றும் ஐயுறுகின்றார். அவரது அச்சத்திலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கின்றது. மறுப்பதற்கில்லையே! இதோ தாமிரபரணியை உறிஞ்சி எடுத்து பெப்சி தயாரிப்பதை நாம் கண் முன் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம். இப்படி நதிகள் இணைப்பால், காசு கொடுத்தால் கார்ப்பரேட் கம்பனிகளில் இருந்து தண்ணீர் கிடைக்கும் என அறிந்தால் அகில உலகுக்கும் இந்த செயற்கை குளிர்பான கம்பனிகள் ஒட்டு மொத்த உற்பத்தி இடமாக இந்தியாவைத்தானே தேர்வு செய்யும். அப்படி செய்யும் போது “ஆகா நமக்கு ஏற்றுமதி வரி கிடைக்கின்றது. நாம் வல்லரசு ஆகலாம்” என அரசியல்வாதிகள் சப்பை கட்டு கட்டுவார்கள். அந்த நதிகளின் புதிய கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயி தண்ணீருக்கு கொடுக்கும் காசை விட கொஞ்சம் தூக்கலாக கொடுக்கும் தொழிற்சாலை முதலாளிகளுக்கு தானே முன்னுரிமை கொடுப்பார்கள். ஆக விவசாயம் படுத்து விடும். இந்தியா முழுமையும் நதிகள் இணைந்தாலும் விவசாய நிலம் தரிசாக கிடக்கும். அதை ஏன் தரிசாக போட்டுக்கொண்டு என்று அந்த நிலத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்வான் அந்த ஏழை விவசாயி என அச்சப்படுகின்றார் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன்.
நதிகள் இணைப்பினால் நடக்கும் முதல் கோணல் இது! அடுத்தது “சாத்தியமின்மை” பற்றி அந்த நூலில் விரிவாக சொல்கின்றார். உலகில் எங்கெங்கு நதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் எத்தனை சாத்தியமானது. அப்படி சாத்தியமானதற்கு காரணம் என்ன? அப்படியே இணைத்த பின்னர் அந்த திட்டம் தோல்வியில் முடிந்த வரலாறுகள் எல்லாம் விரிவாக அந்த நூலில் குறிப்பிடுகின்றார். உதாரணத்துக்கு “சீனாவில் வடக்கு - தெற்கு நீர் மாற்றும் திட்டம்”. இதில் திட்டம் சாத்தியமானதற்கு காரணம் சீனா முழுமையும் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்பதால் இணைப்பு சாத்தியம் ஆனது. ஆனால் மிகப்பெரிய பலனை தரவில்லை என்கிறார் ஆசிரியர். 80 பில்லியன் டாலர் செலவில் 2002ல் தொடங்கி அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. 3,30,000 மக்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்தனர். 45 பில்லியன் கனமீட்டர் நீர் தெற்கில் இருந்து வடக்கே மஞ்சள் ஆறுக்கு கொண்டு செல்லப்பட்டும் முழுமையான பலன் தரவில்லை என்கிறார் ஆசிரியர். (பலன் தரவில்லை என்று ஒரு வரியில் முடித்து விட்டார் தவிர எப்படி பலன் தரவில்லை என விளக்கவில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். 45 பில்லியன் கன மீட்டர் மடைமாற்றம் செய்யப்பட்டும் பலன் இல்லை என்பது என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை) ஆனால் அதே நேரம் 3,30,000 குடியிருப்புகள் இழப்பு என்பது ஒரு வரலாற்று சோகம் என்பதை மறுப்பதற்கில்லை.
அடுத்து ஸ்பெயின் நாட்டில் டாகுஸ் - சேகுரா நீர் மாற்றம் திட்டம்! இது 1978ல் நிறைவேறிய திட்டம் இது. இதில் நான்கு ஆறுகள் இணைக்கப்பட்டன. டாகுஸ், ஜூகார்,சேகுரா, குவாடியானா ஆகிய ஆறுகள் இணைக்கப்பட்டதால் 1.7 லட்சம் ஹெக்டேர் நில பாசனம், தவிர 78 நகராட்சிகளுக்கு குடிநீர் என கோலாகலமாக நடந்தது. ஆனால் நாள்பட நாள்பட டாகுஸ் ஆற்றில் நீர் வற்றி அங்கிருந்த மீன் வகைகள் அழிந்து மேலும் நிலையான தண்ணீர் இல்லாமல் அத்திட்டம் தோல்வி என்கிறார் ஆசிரியர்.ஆனால் அது ஒற்றை கலாச்சாரம், மொழி என்பதால் இணைப்பு என்பது சாத்தியம் ஆனது என தெளிவு படுத்துகின்றார். இதே போல தென் ஆப்பிரிக்காவில் லெசோதா பீடபூமி நீர்த்திட்டம் 1950ல் ஆரம்பிக்கப்பட்டு 36 வருடங்கள் கழித்து அந்த திட்டம் முடிந்தது. அதுவும் ஒரே தேசிய இனத்தின் உள்ளேயே நடந்த இணைப்பு என்பதால் சாத்தியம் ஆனதாக சொல்கின்றார் ஆசிரியர். ஆனால் பல தேசிய இனங்கள் கொண்ட இந்தியாவில் நதிகள் இணைப்பு என்பது சாத்தியம் இல்லை என்பதில் நூலாசிரியர் உறுதியாக இருக்கின்றார். காரணம் அவர் ஏற்கனவே இங்கு பார்த்து கொண்டிருக்கும் சண்டைகள்!
ஆனால் நூலாசிரியர் ஒத்துக்கொண்ட ஒரு நதிநீர் இணைப்பு என்பது இந்தியாவின் உள்ளே கிருஷ்ணா - கோதாவரி இணைப்பு என்றே நினைக்கின்றேன். இந்த ஆறுகள் விஜயவாடா அருகே இணைக்கப்பட்டது. அந்த ஆறுகள் ஒரே தேசிய இனமான தெலுங்கு பேசும் மக்கள், ஒரே கலாச்சார மக்கள் போன்ற காரணங்களால் சாத்தியம் ஆனது என்பதை ஆசிரியர் விளக்குகின்றார். அதனால் 1 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுவதையும் ஆசிரியர் சொல்லி விட்டு இதை கருத்தில் கொண்டு அனைத்து ஆறுகளையும் இணைத்து விடலாம் என நினைக்கக்கூடாது என்கிறார்... அதற்கான காரணத்தையும் சொல்கின்றார். இதோ அவர் சொல்லும் உதாரணம் தெலுங்கு கங்கா திட்டம். கிருஷ்ணா நிதியை சென்னை ஸ்ரீசைலம் அணையில் இருந்து 406 கிமீ தூரம் கால்வாய் அமைத்து பூண்டி நீர்த்தேக்கம் கொண்டு வந்து சென்னை மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்வது என்பது திட்டம். ஆந்திரா என்பது வேறு மொழி, தமிழ் வேறு தேசிய இனம் என்கிறார் ஆசிரியர். இதில் எனக்கு உடன்பாடில்லை. இருவருமே திராவிடம் என்னும் ஒரே இனம் தான். மொழி தான் வேறு என்பது என் கருத்து. ஆனால் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் அடிப்படையில் ஒரு தமிழ்தேசியவாதி என்பதால் எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை என்பினும் அவர் சொல்ல வந்த கருத்தை சொல்கிறேன். அதாவது இந்த திட்டம் 1977ல் தமிழ்நாட்டுக்கும், கிருஷ்ணா நதி நீர் பயன்பாட்டாளர்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலம் சேர்ந்து கையெழுத்தானது. அதன் படி மற்ற மூன்று மாநிலமும் மாநிலத்துக்கு 5 டி எம் சி தண்ணீர் என சேர்த்து 15 டி எம் சி தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும். ஒரு வழியாக திட்டம் 1996ல் தான் நிறைவேறியது. அதற்கு எம் ஜி ஆர் அரசும் (அன்னை இந்திரா, என் டி ஆர் முன்னிலையில் அப்போது எம் ஜி ஆர் 30 கோடி ரூபாய் காசோலையை ஒரு சந்தன பேழையில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் முன்பணமாக கொடுத்தார்) கலைஞர் அரசும், பின்னர் ஜெயலலிதா அரசும் மாறி மாறி வகை தொகையில்லாமல் பணம் கொடுத்து கொடுத்து அந்த கால்வாய் 1991- 1995ல் மிக தாமதமாக கிடப்பில் போடப்பட்டும், மெதுவாக நடந்தும் ஒரு வழியாக திமுகவின் ஆட்சி காலத்தில் 1996ல் செப்டம்பர் 26ல் கலைஞர் ஒரு பொதுமேடையில் சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து ஒரு குடம் தண்ணீர் பெற்றார். மொத்தம் சுமார் 700 கோடியில் முடிய வேண்டிய திட்டம் 2013 வரை சுமார் 4000 கோடியை தாண்டி விழுங்கி விட்டது.
இதோ இப்போது சமீபத்தில் ஜெயலலிதா மறைந்த உடன் ஓ.பன்னீர்செல்வம் குறுகிய காலம் முதல்வராக இருந்த போது அவர் ஓடிச்சென்று ஆந்திர முதல்வரிடம் கேட்டாராம். அவரும் தண்ணீர் கொடுத்தாராம் என எல்லா பத்திரிக்கையிலும் மாய்ந்து மாய்ந்து எழுதினார்களே... அதன் பின்புலத்தை விளக்குகின்றார் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள். அங்கே தண்ணீர் கேட்க சென்ற தமிழக முதல்வரிடம் ஆந்திர முதல்வர் கேட்ட தொகை 443 கோடி. உடனே ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு பகுதி பணத்தை கொடுப்பதாக ஒத்துக் கொண்டு தண்ணீர் பெற்றார். மேலும் சந்திரபாபு நாயுடு அவர்கள் தமிழக பள்ளிகளில் தெலுங்கு மொழி தொடர வேண்டும் என கேட்டமைக்கும் தமிழக முதல்வர் தலையை ஆட்டிக்கொண்டு வந்தார். அப்படி இருந்தும் ஒப்பந்தப்படி 15 டி எம் சி தண்ணீர் இது வரை வந்தது இல்லை. ஓ.பன்னீர் செல்வம் 2 டி எம் சி வேண்டும் என கேட்க அதற்கு சந்திரபாபு நாயுடு தான் ஏற்கனவே 1 டி எம் சி தந்து விட்டதாகவும் மீதியை தருவதாகவும் சொன்னார். (2007ல் திமுக ஆட்சியில் அதிகபட்சமாக 4 டி எம் சி வந்தது. 2013ல் 2 டி எம் சி வந்தது. மற்ற படி அதிமுக ஆட்சியில் நீர் வரவே இல்லை. இது தான் நடந்தது.
ஆக வேறு வேறு மொழிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் வழியாக நதி நீர் இணைப்பு என்பது எப்படி சாத்தியமில்லை என்பதற்கு மேற்படி உதாரணத்தை தருகின்றார் ஆசிரியர். ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் அவர் சொல்வதை! ஆக ஒரு மாநிலத்துக்கும் அடுத்த மாநிலத்துக்குமே நதி நீர் இணைப்பில் நீர் பெறும் மாநிலம் இத்தனை கோடி கொடுத்து தான் போராடி நீர் வாங்கும் நிலை. இதிலே கார்ப்பரேட் கம்பனிகளுக்கு நதிகளை தாரை வார்த்து விட்டு அவர்களிடம் காசு கொடுத்து விவசாயிகள் வாங்க வேண்டிய நிலை வந்தால் என்ன ஆகும் என்பது தான் நூலாசிரியரின் ஆதங்கம்!
அடுத்து ஆசிரியர் நதிநீர் இணைப்பால் நிகழும் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றி அதிகமாக கோபப்படுவதை இந்த நூலில் நாம் எங்கும் பார்க்க நேரிடுகின்றது. ஆறுகள் வீணாக கடலில் கலக்கின்றது என்பதை ஆசிரியர் சரி தான் என்பது தான் எனக்கு ஒத்துக்கொள்ள இயலவில்லை. அவர் அதாவது அவர் எனில் அவரில்லை... பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நதிகள் கடலில் கலக்காமல் போவதால் கடலின் உப்புத்தன்மை அதிகரிக்கும். அதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும் என ஒரு வாதம் வைக்கின்றார்கள். கடலில் கலக்கும் ஆறுகள் என்னைப்பொறுத்தவரை கடலில் கரைக்கும் பெருங்காயம் போலத்தான். ஆறுகள் வழியே கலக்கும் நன்னீர் கடலின் உப்புத்தன்மையை மிதமாக்கும் என்கிற வாதத்தை என்னால் ஏற்க இயலவில்லை. அது போல ஒரு படுகையில் இருந்து புதிதாக ஒரு கால்வாய் வெட்டி அதன் வழியாக வரும் மீன்கள் புதிய படுகையில் வாழாது அழிந்து விடும் என சொல்வதையும் என்னால் ஏற்க இயலவில்லை. ஏனனில் ஒரு வரை உயிரினம் தான் வாழ தகுதி இல்லை தான் போகும் இடம் என அறிந்தால் அங்கு போகாது. உதாரணத்துக்கு காவிரி ஆறு பூம்புகாரில் கடலில் கலக்கின்றது. காவிரியில் விரால், ஆத்து கெண்டை, குறவை போன்ற ஆற்று மீன்கள் வாழும். அவைகள் தவறிக்கூட காவிரி கலக்கும் பூம்புகாரில் அப்படியே கடலுக்கு உப்பு தண்ணீரில் சென்று விடாது. தன் இருப்பிடம் எது என தெரியும் அவைகளுக்கு. அது போல கொள்ளிடம், ராஜா வாய்க்கால் பகுதிகளில் முதலைகள் உண்டு. அந்த ஆறுகள் கடலில் தான் கலக்கின்றன. என்றாவது ஒரு நாள் ஒரு முதலையாவது உப்பு நீருக்கு தவறிப்போய் சேர்ந்து இறந்து மிதந்தது உண்டா? கிடையாது. இயற்கை அந்த சக்தியை அந்த உயிரினங்களுக்கு வழங்கி இருக்கின்றது. அது போல அந்த முகத்துவார பகுதிகளில் மடவாய் மீன் என்று ஒன்று இருக்கும். அந்த மீன்கள் கடலின் உப்பு நீர், ஆற்றின் நன்னீர் ஆகியவை கலக்கும் இடத்தில் இருக்கும். அவைகள் சுத்த உப்பு நீரான ஆழ் கடலுக்கும் செல்லாது. அது போல சுத்தமான நன்னீரான ஆற்றின் மற்ற பகுதிகளுக்கும் வராது. அவைக்ள் நன்னீர்+உப்புநீர் கலக்கும் இடத்தில் மட்டுமே வாழும். இது தான் இயற்கை! அதனால் நூலாசிரியரின் அந்த வாதத்தை நான் ஒத்துக்கொள்ள போவதில்லை.
அதே போல கால்வாய் வெட்டுவதால் அங்கு வாழும் மனிதர்கள் இடம் பெயர வேண்டும் என அவர்களுக்காக பச்சாதாபம் அடைகின்றார் பேராசிரியர் ஜெயராமன். உண்மை தான். ஆனால் தவிர்க்க இயலாதது. அவர் இது விஷயமாக ஆதங்கப்படும் போது “தஞ்சாவூரில் வைரமுத்து பேசும் போது நதிகளை இணைக்க வேண்டும் என புரியாமல் பேசுகின்றார்” என்கிறார். நியாயமாக பார்த்தால் பேராசிரியரின் இந்த விஷயத்துக்காக அதாவது பல லட்சம் மக்கள் குடிபெயர வேண்டும் என்கிற காரணத்துக்காக வேண்டியாவது நதிகள் இணைப்புக்கு திரு. வைரமுத்து அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஏனனில் வைகை அணை கட்டப்பட்ட போது தன் கிராமம் அழிந்ததை அழுது அழுது பேயத்தேவர் என்னும் கதாபாத்திரத்தை கதாநாயகனாக கொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதியவர் தான் திரு. வைரமுத்து அவர்கள். இப்படி நதிகள் இணைக்கும் போது பல கள்ளிக்காட்டு இதிகாசங்கள் பிறக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்!
மேலும் இந்த நதிகள் இணைப்பு ஏன் சாத்தியமில்லை என்பதற்கு நூலாசிரியர் சொல்லும் இன்னும் ஒரு காரணம்..... சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் பன்னாட்டு நதிகள். அவைகள் சீனா, வங்காள தேசம், பாகிஸ்தான், நேப்பாளம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஆறுகள். நாம் நம் வசதிக்கு கங்கையை, பிரம்மபுத்திராவை, சிந்து நதியை கால்வாய் வெட்டி தெற்கே கொண்டு வந்து விட முடியாது. அதற்கு மற்ற நாடுகள் அனுமதி வேண்டும். அப்படி அவைகள் அனுமதித்தால் சீனாவும் நாங்களும் எங்கள் பகுதியில் வரும் அந்த ஆறுகளை வெட்டி உள்ளே இழுத்துக் கொள்கிறோம் என உரிமை கோரும். அது போல பாகிஸ்தான், வங்காள தேசம், நேப்பாள் ஆகியவைகள் போர்க்கொடி தூக்கும் அபாயம் இருக்கின்றது என்கிறார் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள். ஆக இதுவும் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம் தான்!
சரி வேறு என்ன தான் வழி? ஒரு திட்டம் கொண்டு வ்ந்தால் அதற்கு குறை சொல்லும் கலகக்காரர்கள் தான் இருப்பார்கள். தீர்வு சொல்ல மாட்டார்கள் என சொல்வார்கள். அதாவது ஒரு பழமொழி “கட்டுன வீட்டுக்கு நொட்டை சொல்ல வந்துட்டான்” என்பார்கள். ஆனால் பேராசிரியர் அவர்கள் தீர்வாக ஒரு விஷயம் சொல்லி இருக்கின்றார். தமிழகத்தை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அது மட்டுமே காவிரிக்கு உரிய நீரை பெற்றுத்தரும்.உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்தாலே போதும் தமிழகத்துக்கு தேவையான நீர் கிடைத்து விடும் என்கிறார் பேராசிரியர். இப்போது தமிழகத்தில் 84 அணைகள் இருப்பதை ஆசிரியர் குறிப்பிட்டு அதில் நீர் தான் இல்லை என்பதையும் கோடிட்டு காட்டுகின்றார். காவிரி தீர்ப்பாயம் தனது இறுதி தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டி எம் சி நீர் தர வேண்டும் என்றது. அது இயற்கைக்கு மாறானது. ஆனால் தமிழக அரசு 250 டி எம் சி வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றது. ஆனால் (ஜெயலலிதா ஆட்சியில்) தமிழக வழக்கறிஞர் வாயையே திறக்கவில்லை. ஆக இது போன்ற குளறுபடிகள் தீர்க்கப்பட்டாலே போதும் தமிழகத்துக்கு தேவையான நீர் கிடைக்கும். இயற்கை வளம் அழியாது. யாரும் குடிபெயர வேண்டாம். இது மட்டுமே ஒரே தீர்வு என்கிறார் நூலாசிரியர்.
மேலே நான் சொன்னது எல்லாம் அந்த நூலில் இருந்து மேலோட்டமாக சொன்ன விஷயங்கள் மட்டுமே. அந்த நூலில் இயற்கை ஆர்வலர்கள், பொறியாளர்கள், இந்திய நதிகளை இணைக்க வேண்டி செயல்பட்ட திட்ட பொறியாளர்களின் கூற்றுகள், அப்துல் கலாம் அவர்களின் திட்டம், அது போல இந்தியா முழுமைக்கும் ஆறுகள் வழியே கிடைக்கும் நீர் எவ்வளவு? அதில் வீனாக போவது, ஆவியாதல் போன்றவைகள் போக மீதம் நாம் பயன்படுத்தும் நீரின் அளவு போன்ற பல விஷயங்களை ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார்!
இப்போது நதிநீர் இணைப்பை ஆதரிப்போர் நாளையே நதிகள் இணைக்கப்பட்டு, பின்னர் கார்ப்பரேட் ஆசாமிகள் காசுக்கு நீரை விவசாயிக்கு விற்கும் நிலை வந்தால் இப்போது ஆதரிப்பவர்கள் தங்கள் சொத்தை விற்று விவசாயிகளுக்கு பதில் அந்த நீருக்கான காசை கொடுப்பார்களா என கோபமுடன் கேட்கின்றார் நூலாசிரியர்! பதில் தான் இன்னும் வரவில்லை! என்னைக்கேட்பின், இப்படி ஒரு வராத பதிலை நதிகள் இணைப்புக்கு முட்டு கொடுக்கும் பலரை கேட்பதை விட ஒற்றை சாளர முறையில் அரசாங்கத்திடமே “நதிகளை இணைத்தால் எங்களுக்கு இலவச நதி நீர் எப்போதும் போல வேண்டும். அதில் மாநில உரிமை மறுக்கப்படக்கூடாது, விளை நிலங்களை கார்ப்பரேட் கம்பனிகள் தொழிற்சாலை அமைக்க விற்பனை செய்ய தடை சட்டம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஆறுகளை இணைக்க ஒப்பந்தம் போட வேண்டும்” என்கிற விஷயங்களை கேட்டு போராடலாமே என்பது தான்!
தவிர கார்ப்பரேட் சாமியார்களின் ஆட்டம் நதிகள் இணைப்பு விஷயத்தில் ஜக்கி வாசுதேவ் போன்ற காட்டை அழித்தவர்கள் திடீரென நதிகளை பாதுகாக்கவும், இணைக்கவும் குபீரென புறப்பட்டு மிஸ்டு கால் கொடுக்க சொல்வது எல்லோருக்குமே கொஞ்சம் பயத்தை தான் கூட்டுகின்றது. எலி ஏன் அம்மனமாக ஓடுகின்றது என நினைக்க தோன்றுகின்றது.
நான் மேலே சொன்ன விஷயங்கள் தான் “ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா” என்கிற பேராசிரியர் ஜெயராமன் அவர்களின் நூல் பற்றிய என் கருத்துகள்!
நிற்க..... இந்த நூலின் ஆசிரியர் அவர்கள் இந்த நூலை எழுதி வெளியிட்டு மூன்று நாட்களில் அவர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்து விட்டது! அப்படியெனில் எங்கோ இடிக்கின்றதே! ஆக பேராசிரியர் நதிகள் இணைப்பினால் வரப்போகும் தீமைகளை பட்டியலிட்டாரே... அதன் படி தான் நடக்க போகின்றதா? இந்திய அரசு ஆறுகளை கார்ப்பரேட் கம்பனிகளுக்கு விற்கப்போவது உண்மையா?
இந்த நதிகள் இணைப்பு என்பது என்னளவில் சாத்தியப்படக்கூடியது என்பதும், காசு கொடுத்து கார்ப்பரேட் கம்பனிகளிடம் இருந்து வாங்க தேவை இருக்காது என்றும் நினைக்கின்றேன். ஆனால் பேராசிரியரின் கருத்துகளை புறந்தள்ளவும் இயலாது!
*****************************************
நூலின் பெயர் : நதிகள் இணைப்புத் திட்டம் - “ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா”
நூலாசிரியர் : முனைவர், பேராசிரியர் த.ஜெயராமன் M.A., M.Phil., P.hd.,
நூல்களை பெற: புத்தகச்சோலை (பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர்)
பெரியார் மாளிகை,
44, மகாதானத்தெரு,
மயிலாடுதுறை - பின் கோடு 609 001
போன்: 04364 228634
செல்: 9842007371,9443395550
விலை: ரூபாய் 30/=
நூலாசிரியர் பற்றிய மேலதிக விபரங்களை இத்துடன் இணைத்துள்ள இன்று வெளியான ஜூனியர் விகடன் கட்டுரையை புகைப்படமாக வெளியிட்டுள்ளேன். அதில் பார்க்கவும்!
நன்றி! வணக்கம்!
நதிநீர் இணைப்பு என்பது சாத்தியம் அற்றதே, அதன் பின்னணியில் இருக்கும் இவ்வளவு பெரிய பூதம் - பயங்கரம்!
ReplyDelete