பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 21, 2010

இன்று பார்த்த அபியும் நானும் திரைப்படம்!!!

நல்ல மழை! சுற்றியும் நல்ல குளிர் காத்து. ஊரே அமைதியா இருக்கு. எல்லோரும் காலி பன்ணிட்டு எங்கயோ போயிட்டாங்க மாதிரி அப்படி ஒரு அமைதி. ஒரு சோபா இழுத்து டிவி கிட்டே போட்டு கிட்டு காலை டிவி இருக்கும் மேசையில் உதைந்து கொண்டு அபி.

"என்னம்மா படிக்கலையா?"

"இல்லை"

"நான் படிக்கும் காலத்திலே எங்க அப்பா இப்படி கேட்டா நாங்க பயந்து போய் படிக்க ஆரம்பிப்போம். ஈவன் கணிதம் போட்டு பார்க்கனும்னா கூட பார்முலாவை சத்தம் போட்டு படிப்போம்"

"ரொம்ப போலியா இருந்திருக்கீங்க. அஃப்கோர்ஸ் தாத்தாவும் அதை எதிர்பார்த்திருக்காங்க"

"ம் இருக்கலாம். ஆனா உனக்கு படிக்கலையான்னு கேட்டப்ப பயமா இல்லியா?"

"ஒய் எதுக்கு பயம். நான் தான் படிச்சுட்டனே படிக்க வேண்டியதை. தவிர ஹோம் ஒர்க் கூட முடிச்சுட்டேனே"

"ஒரு வேளை படிச்சிருக்காம இருந்தா அப்ப இப்படி டிவி பார்க்க உட்காரும் போது நான் அப்படி கேட்டிருந்தா நீ பயப்பட்டு இருப்பியா?"

"நோ நோ மாட்டேன். எனக்கு இன்னிக்கு இந்த படம் இப்படி பார்க்க ஆசையா இருந்துச்சு. மழை, குளிர், சோபா, கிட்டக்க டிவி, பக்கத்திலே அப்பா, போத்திக்க போர்வை, திங்க சீடை எல்லாத்துக்கும் மேல கலைஞர் டிவில "அபியும் நானும்'படம்"

"ஓ காட். இன்னிக்கு அபியும் நானும் படமா? நான் கூட அந்த படம் உன்னோட பார்க்க ஆசைப்பட்டேன். தேங் காட்"

இப்படியாக நாங்க பார்க்க ஆரம்பிச்ச படம்....இதோ மழை கொட்டி தீர்க்குது. ஒரே போர்வையில் நாங்க குடும்பத்தோட (அதிலே மடியிலே நட்டுவின் தூக்கம்)....ரொம்ப நல்லா இருக்கு படம்....

இதோ அபி தேயிலை தோட்டத்திலே விழுந்துட்டா. ஜோகிகிட்ட(யோகி இல்லை ஜோகி ஜோகி) பிரகாஷ்ராஜ் கோவிச்சுக்கறார்......

இதோ விளம்பரம் ஓடுது. எங்க கிட்ட ஒருவித அமைதி.....

படம் நல்லா இருக்குதேன்னு நினைச்சுகிட்டே விளம்பரம் பார்க்க அதில் மனது ஒட்டவேயில்லை. படத்தின் ஆரம்பம் முதலே நினைத்து பார்த்து கொண்டேன்.

அதில் வருவது போல நான் அபி பள்ளி செல்ல அத்தனை பிரயத்தனப்பட்டேனா என்றால் இல்லை தான். ஆனா அபிஅம்மா பட்டது ரொம்ப கஷ்டம். சிதம்பரம் அண்ணாமலை நகரில் பஸ் பிடிச்சு அபியை தூக்கிகிட்டே பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து நிர்மலா பள்ளிக்கு விட்டு விட்டு அங்கிருந்து நடந்து நடராஜர் கோவில், பின்ன அங்க இருந்து நடந்து நிர்மலா பள்ளி சர்ச் வாசலில் பின்னர் அபியை தூக்கிகிட்டு பேருந்துநிலையம் பின்னர் அண்ணாமலைநகர்...இப்படியாக ஒரு நாள் என்னை செய்ய சொல்லியிருந்தா அதல்லாம் முடியாது அபியை பத்தி பத்து பதிவு எழுத சொன்னால் ஜஸ்ட் லைக் தட் பாசம் சொட்ட சொட்ட எழுதி "சபாஷ்" வேண்டுமானா வாங்குவேன் ஆனா இப்படி கஷ்ட்டபட மாட்டேன் என சொல்லியிருப்பேனோ என்னவோ.

குழந்தை கையிலே வென்னீர் ஊத்திப்பது....அதல்லாம் நடந்தது. அது போல பலவிஷயங்கள் நடந்தது. ஆனால் என்னை அந்த படத்தின் அபிஅப்பாவை ஒப்பிட்டு பார்த்த போது தான் கிட்ட தட்ட அந்த அபிஅப்பாவும் ஒருவிதமான அதாவது தான் பாசமாக இருப்பதை விட "இவன் எத்தனை பாசம் வைத்திருக்கான் பாருன்னு இந்த உலகம் தன்னை பார்த்து சொல்ல வேண்டும் அல்லது அபி தன்னை தவிர யாரிடமும் பாசம் காட்டிவிட கூடாது என்கிற ஒரு மாதிரியான பொசசிவ்நெஸ்தனம் தான் புரிந்தது.இது ஒரு வித மனோவியாதியோ எனக்கூட நினைத்து கொண்டேன்.

மழை இன்னும் பெய்கிறது. மெல்ல அபி என்னிடம் திரும்பி "அப்பா இந்த விளம்பர நேரத்தில் சாப்பிட்டுறீங்களா? என கேட்டாள்.

"ஆக்சுவலி அபி இந்த படம் பார்க்கும் போதாவது நான் உன்னை பார்த்து சாப்பிடுறியாப்பான்னு கேட்டிருக்கனும் இல்லம்மா. உனக்கு தான் என் மேல இத்தனை பாசம் எனக்கு அத்தனை இல்லியோ"

"அதான் சொன்னனப்பா நீங்க ஆரம்பத்திலே இருந்தே ஒரு வித போலியாவே வாழ பழகிட்டீங்க இல்லாட்டி தாத்தா, பாட்டிகிட்ட பயந்த மாதிரி நடிச்சு நடிச்சே இருந்துட்டீங்க.அதுவே உங்க குணமாகிடுச்சு. இப்ப கூட உங்களை சாப்பிட சொன்னது பின்னே படம் போட்டவுடன் நீங்க சாப்பாடு கொடுன்னு டிஸ்டர்ப் செய்ய கூடாதுன்னு தான்"


எனது மனைவியிடம் இருந்து மெல்லிய புன்னகை வந்தது. அத்தனை குளிரிலும் எனக்கு நெற்றி வியர்த்தது. என் மனைவி பக்கம் திரும்பி "இவ என் சின்ன அக்கா மாதிரி. மனசிலே வச்சுக்க தெரியாது. பட்டு பட்டுன்னு உடைச்சிடுவா" என ஏதோ உளறி வைத்தேன்.

கொஞ்ச நேரம் படம் ஓடிய போது அபியை திரும்பி பார்த்தேன்.பிரதமரிடம் போனில் பேசும் காட்சி. அபி ஏதோ சிந்தனை. 'என்னப்பா சிந்தனை?"ன்னு கேட்டப்ப "அப்பா சிவில் சர்வீஸஸ் பிரில்லிமினரி ரிசல்ட் வந்தாச்சு. அக்டோபர் மெயின் எக்ஸாம்.ஆண்டி இப்ப பிரில்லிமினரி மாதிரி அதிலயும் பாஸ் பண்ணனும். அதுக்கு ரொம்ப ஹார்ட் வர்க் பண்ணனும்"....

"ஓ அபி, படம் பிடிக்கலையா?"

"நோ நோ படம் பிடிச்சு இருக்கு.ஐ ஏ எஸ் ஆகிட்டா இது மாதிரி ப்ரைமினிஸ்டர் கிட்ட எல்லாம் பேசலாம்"

அவள் மனசு படத்தில் அத்தனை ஒட்டலை என புரிந்தது. ஏதோ ஒரு போலித்தனம் படத்தில் இருப்பதை நானும் உணர்ந்தேன். ஆனா எடுக்கப்பட்ட விதம் நல்லா இருந்துச்சு.

படம் கிட்டதட்ட முடியும் தருவாய். ஏர்போர்டில் தன் மகளை பிரியும் அந்த காட்சியில் ஒரு மாதிரி எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது. என் மனைவி எழுந்து ரூம் பக்கம் போய்விட அந்த காட்சி நன்றாக இருந்தது. பக்கத்தில் பார்த்தேன். அபி என் மடியில் தூங்கிவிட்டிருந்தாள். தலையை நகர்த்தி விட்டு ரூம் பக்கம் போனேன். என் மனைவி கண்ணில் ஈரம். எனக்கு தான் எந்த வித உணர்வும் இல்லை. கொஞ்சம் புரிந்தது. உண்மையான பாசம் என்றால் அந்த படத்தில் வரும் அபிஅம்மா மாதிரி பெண்ணின் மனசு புரிஞ்சுக்கனும், பிரியும் போது அப்போது தான் கண்ணில் தண்ணீர் வரும். இன்னும் என்னென்னவோ புரிந்து தொலைத்தது.

மழை விட்டிருந்தது. படத்தின் பெயரை "அபியும் அபிஅம்மாவும்"ன்னு வச்சிருக்கலாமோன்னு நினைச்சுகிட்டேன்.

August 18, 2010

அன்பு தருமி அய்யாவுக்கு,திரு. உமாசங்கர் I.A.S., விஷயமாக ஒரு கடிதம்!!!

ன்புள்ள தருமி அய்யா!

"உமாசங்கருக்காக ஒரு விண்ணப்பம்" பதிவு பார்த்தேன். அதை போல எல்லா வலைப்பதிவரும் உமாசங்கருக்காக ஆதரவு தெரிவித்து தங்கள் தங்கள் பதிவில் அந்த டிராஃப்டை போட்டு அவருக்கு மனரீதியாக பலம் உண்டாக்கும் பொருட்டு ஆதரவு தர சொல்லி சொல்லியிருக்கின்றீர்கள்.

முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். உமாசங்கர் என்கிற ..எஸ் அதிகாரியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய தொலைநோக்கு பார்வையும் செயல் திட்டங்களும் பிடிக்கும். முதன் முதலாக அனைத்து துறையும் கணினி மயமாக்க வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அவர் உழைத்ததும், (முதல் போஸ்டிங் 1990ல் மயிலாடுதுறை சப் கலக்டர் தான்), எல்லா தரப்பு மக்களையும் அவர் அனுசரித்து போனதும், மழை வெள்ள காலத்தில் சாலையில் கிடந்த மரங்களை தானே முன்னின்று வெட்டி அப்புறப்படுத்தியதும் நேரில் கண்டவன்.

அதனால் மக்களிடம் அவர் தனி பெரும் செல்வாக்கோடு இருந்தார் என்பதும் அப்போதே ஆளும் கட்சியான அதிமுக (1991- 96) 1995ம் ஆண்டு அவரது காரில் குளிர்சாதன வசதி செய்து கொடுத்த நிறுவனத்துக்கு சலுகை செய்தார் எனவும், அரசின் அனுமதி இன்றி வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக இல்லாமல், தனி ஒருவரை பணியமர்தினார் என்றும், 20 கோடி அரசு நிதியை தன் சகோதரர் பணிபுரிந்த வங்கி கிளையிலே டெபாசிட் செய்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டு மெமோ கொடுக்கப்பட்டது. இது தான் உமாசங்கர் அரசின் மூலமாக சுமந்த முதல் சிலுவை. இது ஜெயலலிதா ஆட்சியில் அவரது தலைமையில் அமைந்த ஆட்சியில்.

பின்னர் 2001- 2006 திரும்பவும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா ஆட்சியில் அதாவது 2005ல் கர்நாடக அரசின் கொள்கை முடிவுகளை உமாசங்கர் விமர்சித்து அது பற்றி கர்நாடக அரசு தமிழக அரசில் புகார் செய்து இவர் மீது மீண்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இது இவர் சுமந்த இரண்டாவது சிலுவை.

1995ல் சுமத்திய குற்றச்சாட்டை 1996ல் அமைந்த கலைஞர் தலைமையிலான அரசு விசாரித்து ஒழுங்கு நடவடிக்கையை களைந்தது. பின்னர் இரண்டாவது முறை 2006ல் திமுக ஆட்சி அமைந்த போது இரண்டாவது குற்றச்சாட்டை விசாரித்து அந்த குற்றச்சாட்டையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.

1996, 2006 ஆகிய வருடங்களில் அப்படி விசாரிப்புக்கு பின்னர் ஒழுங்கு நடவடிக்கையை டிஸ்மிஸ் செய்த திமுக அரசு இப்போது ஒரு புகாரின் பெயரில் கொடுத்த மெமோவை விசாரிப்புக்கு பின்னர் அவர் பக்கம் நியாயம் இருப்பின் தள்ளுபடி செய்யாதா?

இது ஒரு அரசின் சாதாரண நடவடிக்கை. ஒரு நாளைக்கு எத்தனை போக்குவரத்து பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அதிகாரிகள் போன்ற பலர் மெமோ கொடுக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் குற்றம் இல்லையெனில் விடுவிக்கப்படுகின்றனர் என்பது உங்களுக்கு தெரியாதா?

ஏன் இதற்கு முன்னர் எஸ் அதிகாரிகள் மெமோ கொடுக்கப்பட்டது இல்லையா? ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இந்த பதிவின் காரணமாக உமாசங்கர் மீது பாசம் மற்றும் அன்பு காட்டுபவர்களை விட அரசியல் ரீதியாக திமுக அரசு மீது அவதூறு நோக்கில் மட்டுமே உமாசங்கருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது தான் மேலோங்கி இருப்பதாகவே எனக்கு படுகின்றது. ஏனனில் அந்த பதிவில் நீங்கள் கொடுத்திருக்கும் கையெழுத்து போடும் சுட்டியில் இருக்கும் கருத்து பகுதியில் "கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்" மற்றும் வழக்கமான குடும்ப வசவு வாசகங்களே பிரதானப்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும் அந்த பதிவில் இருக்கும் பின்னூடங்களும் அதே வாசகங்கள் கொண்டவையாகவே இருக்கின்றது..

இதே உமாசங்கர் அதே குற்றச்சாட்டை முன்பு எதிர்கொண்டது போல எதிர் கொண்டு நிரூபித்து வெளியே வருவதில் என்ன சிக்கல் இருகின்றது என்பதே என் கேள்வி. நீங்கள் சொல்வதை பார்த்தால் என்னவோ திமுக அரசு இந்திய குடியரசில் முதன் முதலாக ஒரு எஸ் அதிகாரியை அதுவும் தலித் என்பதால் பழிவாங்கி விட்டது போல ஒரு தோற்றத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், திமுக அரசுக்கு எதிரலையை உண்டு செய்யும் அரசியல் பிரச்சாரம் போல மட்டுமே தோற்றம் அளிக்கின்றது. உணர்சி வசப்படும் பல பதிவர்கள் உமாசங்கருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி தனக்கு அறியாமலே கூட தங்கள் அரசியல் விளையாட்டுக்கு பலியாக நேரிடுகின்றது என்றே நான் நினைகின்றேன்.

அப்படி பார்த்தால் அதிமுக அரசு முத்துகருப்பன் என்கிற தலித் பி எஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? ரவீந்திரநாத் பி எஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? உஜாகர் சிங், கே.என்.சுப்ரமணியம் போன்ற எஸ் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகினரே? அத்தனை ஏன்? சந்திரலேகா என்னும் பெண் எஸ் அதிகாரி முகத்தில் ஆசிட் வீசப்பட்டதே . இதல்லாம் செய்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை விட மெமோ கொடுத்த திமுக அரசு அராஜகத்தின் உச்சமா? அதை எல்லாம் சரி என சொல்ல போகின்றனரா இப்போது இந்த உங்கள் பதிவை போடும் வலைப்பதிவர்கள்? இந்த மெமோ கொடுத்த விஷயம் விசாரணை முடிந்து முன்பு எப்படி தான்னை நிரூபித்து வெளியே வந்தாரோ அப்படியே வரப்போகின்றார்.

இப்போதும் சொல்கிறேன் எனக்கு உமாசங்கர் என்கிற ஆட்சியரின் ஆளுமை பிடிக்கும், அவரது ஆட்சி திறன் பிடிக்கும். அவரது திறமை பிடிக்கும். ஆனால் அவருக்கு ஆதரவு என்கிற போர்வைக்குள் புகுந்து கொண்டு திமுக எதிர்பு பிரச்சாரம் தான் பிடிக்கவில்லை என்கிறேன் என்பதை தயவு செய்து புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்

அபிஅப்பா


August 9, 2010

பதிவுலகில் அபிஅப்பாவாகிய நான்!!!!

தம்பி எல்கே ஆகிய கார்த்தி என்னை இந்த தொடர் பதிவுக்கு எழுத அழைத்தமைக்காக நன்றியோடு இதை பதிகின்றேன்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அபிஅப்பா

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இது ஒரு செல்லபெயர். என் மனைவி வைத்த பெயர். எனக்கு கல்யாணமான பின்னே ஒரு நாள் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்த போது அவனவன் "உன்னை உன் மனைவி எப்படி கூப்பிடுவாங்க?" என்கிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி எழுந்த போது (அப்போது என் நண்பனில் ஒருத்தன் தன் அக்கா பெண்ணை கல்யாணம் செஞ்சு இருந்தான். அந்த பெண் இவனை மாமா என கூப்பிடும்) அப்போது தான் எனக்கு சுரணை வந்தது. அய்யோ இத்தனை நாள் இதை தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு. வீட்டுக்கு ஓடிப்போய் "நீ என்னை எப்படி கூப்பிடுவாய்?" என வெள்ளேந்தியாக கேட்க எல்லோருக்கும் முன்னே என் மனைவி "நான் உங்களை கூப்பிட்டதே இல்லியே" என சொல்ல எல்லோரும் சிரிக்க எனக்கு வெட்கமாய் போய் விட்டது. பொதுவா எங்க வீட்டிலே மனைவி கணவனை அத்தான் என அழைக்கும் பழக்கம் தான். ஆனா நேரே கூப்பிடும் போது அம்மா அப்பாவை அப்படி கூப்பிட்டதில்லை. மத்தவங்க கிட்ட பேசும் போது "அத்தான் இப்படி சொன்னாங்க அப்படி சொன்னாங்க" என சொல்வது உண்டு. பின்னர் தான் தெரிந்தது அப்படி அத்தான் என கூப்பிடுவது என் மனைவிக்கு கூச்சமாக இருந்திருக்கலாம் என.

எதாவது கூப்பிடும் சந்தர்ப்பம் வந்தால்"என்னங்க, இந்த பாருங்க, ஏங்க..'இப்படியாக போய்கொண்டிருந்தது. பின்னர் ஒரு மே 3ம் தேதி அபி பிறந்த பின்னர் என் மனைவிக்கு அந்த குழப்பம் போயே போச். "அபிஅப்பா" என என்னை முதலில் கூப்பிட்டது என் மனைவி தான். அதன் பிறகு பக்கத்து வீடு எதிர் வீடு எல்லாம் அபிஅப்பா என கூப்பிட்டு கூப்பிட்டு ஒருநாள் பிளாக் ஆரம்பிக்கும் போது ஏதோ புனைப்பெயர் வைத்துக்க ஆசைப்பட்டு எல்லாம் இதை வைக்கலை. தானாகவே அந்த பெயரை அடித்து விட்டேன். அதுவே இப்போது என் சொந்த பெயரை விட அதிகமாக கூப்பிடப்படுது. இன்னும் சொல்ல போனா என் கம்பனில இருக்கும் தமிழ் பசங்க எல்லாம் கூட அபிஅப்பா என்றே கூப்பிடும் அளவு ஆகிவிட்டது. இதில் கொஞ்சம் கர்வமும் கூட எனக்கு.

எனது உண்மை பெயர் தொல்காப்பியன். அந்த பெயர் காரணம் சொன்னா தனி பதிவு தான் போடனும்:-) அதையே பள்ளி காலத்தில் தொல்ஸ் என்று சின்னதா ஆக்கிட்டாங்க. வலையுலகில் என்னை தொல்ஸ் என அழக்கும் சிலர் நாகைசிவா மற்றும் வேலன் அண்ணாச்சி.


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

2006 வரை நானும் பல டீம்ல வேலை செஞ்சாலும் எனக்கு கீழே சிலரை கொடுத்து நானும் ஒரு டீம் லீடரா வேலை செய்ய ஆரம்பிக்கும் போது முழுநேரமும் வலையில் உலவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது ஆ.வி, நக்கீரம், குமுதம் எதையும் விடாமல் மேயும் போது வெட்டிபயல் பற்றி ஆவியிலோ, குமுதத்திலோ வந்ததை பார்த்து அங்கே போன பின்னே "அட" என ஆச்சர்யமாகி அங்க இருந்து வ.வா.சங்கம் போய், அங்க இருந்து கைப்புள்ள எல்லாம் படித்து, பின்ன லக்கி, மயிலாடுதுறை சிவா எல்லாம் படித்து மத்தவங்க பின்னூட்டத்தை காபி பேஸ்ட் செஞ்சு பின்னே கோபியின் "ரிப்பீட்டேய்" வார்த்தையை காபி பேஸ்ட் செஞ்சு அதுக்கு கீழே போட்டு ஒரு வழியா அபிஅப்பா என்கிற பெயரை அவங்க பப்ளிஷ் செஞ்ச பின்னே பார்த்துகிட்டே (கிட்ட தட்ட ஒருமணிநேரம் கூட பார்த்து கொண்டே இருந்திருக்கேன் என் பெயரை) பின்ன கைப்புள்ள, கீதாம்மா, துளசிடீச்சர் எல்லாம் என் பெயரை குறிப்பிட்டு நன்றி என சொன்னபோது ஆஸ்கார் அவார்டு வாங்கினமாதிரி குதிச்சு... பின்னே நாகை சிவா சூடானில் இருந்து துபாய் வந்த கதை படிச்சு பின்னே துபாய்ல தம்பி, முத்துகுமரன் கிட்ட போன்ல பேசி (அந்த பதிவிலே இருந்தது நம்பர்) பின்னர் தம்பியை கராமா என்னும் இடத்துக்கு போய் நேரில் பார்த்து (அதுக்கு முன்னமே பிளாக் ஆரம்பிச்சு சும்மா வணக்கம் போட்டு வச்சேன். அது தான் முதல் பதிவு) என் பிளாக்கை சரி பண்ண பார்க்கும் போது இம்சை அரசியின் பின்னூட்டம் வந்திருந்தது. உடனே ஆன்லைன்ல பதிவர் கப்பியை பிடித்து தம்பி தமிழ்மணத்தில் இனைக்க வச்சு அனுப்பினார். பின்னர் அங்கயே எதுனா 2 வது பதிவு போடுங்கன்னு சொன்ன போது ஈகலப்பை வழியாக அபிராமி என அடித்தேன். இது தான் நான் முதன் முதலில் தமிழில் அடித்த வார்த்தை. அதுவரை காபி பேஸ்ட் தான். அதையே 3 தடவை எண்டர் தட்டி அடித்தேன்.

உடனே தம்பி இதுக்கு என்ன லேபிள் பெயர் வைக்க போறீங்க?ன்னு கேட்க அப்பதான் அது பத்தி தெரிஞ்சுகிட்டு உடனே கவிதைன்னு பெயர் வைத்தேன். அஃப்கோர்ஸ் நான் எழுதிய கவிதை தானே அபிராமி.

பின்னர் வீடு வந்து சேர்ந்து (அதுக்கும் முன்னமே "போஸ்டர் ஒட்டுவது எப்படி"ன்னு ஏற்கனவே அடிச்சு வச்சிருந்ததை போட்டேன். அந்த பதிவுக்கு எனக்கு ஒரு முழுவெள்ளிகிழமை தேவைப்பட்டது. அதிலே என்ன ஒரு விஷேஷம்னா அது நான் டைப் அடிக்கவேயில்லை. நான் எழுத நினைத்ததை ஒரு பேப்பரில் எழுதி வைத்து பல பதிவை ஓப்பன் செய்து நான் எழுதிய வார்த்தையை காபி பேஸ்ட்(சில எழுத்துகளை கூட காபி பேஸ்ட் செய்து) தயாரிக்கப்பட்ட பதிவு அது:-)) அதனால் கிட்ட தட்ட ஒருநாள் ஆனது எனக்கு. அதிலே கூட எழுத்துபிழை என சிலர் சொன்ன போது "அவங்க ஒழுங்கா எழுதினா எனக்கு ஏன் எழுத்து பிழை வருது"ன்னு கூட நினைச்சுகிட்டேன்.

அப்படியாக ஆரம்பித்து இப்போது இந்த அபிஅப்பா பிளாக்ல இப்ப 300 வது பதிவை தொட போகின்றேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

"அபிஅப்பா" என்னும் பெயர் மந்திரம் தான். அப்போ, (அப்போ மட்டுமல்ல இப்பவும் தான்.,. ) தான் ஒரு பெண்ணீய காவலர் முற்போக்குவாதி என காமிச்சுக்க எல்லா ஆண்\பெண் பதிவரும் நினைத்த காலம். உண்மை நிலவரம் என்னன்னு அவனவனை சுரண்டி பார்த்தா தான் தெரியும் என்பது வேற விஷயம்.(நான் என்ன சொல்லிகிட்டேன்) கிட்ட தட்ட தன் குழந்தையை முன்னிலைப்படுத்தி பெயர் வைத்து கொண்ட முதல் பதிவர் நான் என நினைக்கிறேன். அதுகூட அந்த வலைப்பூ பிரபலம் ஆனதற்கு காரணம் என நினைக்கிறேன். (பிரபலம் தானே?)


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஒன் அண்ட் ஒன்லி சொந்தவிஷயம் தான். நான் எனக்கு என்ன தெரியுமோ, எதை பார்த்தனோ, எதை கேட்டனோ அதை தான் எழுதுவேன். புனைவாக எழுத வரவில்லை. அது பற்றி கவலைப்பட்டதும் இல்லை. ஏனனில் நான் எனக்காக எழுதுகிறேன். கமிட்மெண்ட் இருந்தா தானே கம்ப்ரமைஸ் பண்ணிக்கனும்.ஒரு பத்திரிக்கைல எழுத கூப்பிட்டு அவங்க அதை வெட்டி இதை வெட்டி...ஊகூம் அதல்லாம் இல்லாமல் சுதந்திரமாக எழுதுகிறேன். (பத்திரிக்கைல கூப்பிட்டு நான் மறுத்து விட்ட மாதிரி இந்த சொல்லாடல் இருந்தா ஸாரி அப்படி யாரும் கூப்பிடவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்). நான் இதை தான் எழுதுவேன். முடிஞ்சா படி. பிடிச்சா பின்னூட்டம் போடு.முடிஞ்சா ஓட்டு போடு என்கிற மாதிரியான மனோபாவம் வந்துவிட்டது.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போகாமல் இல்லை. ஆரம்பத்தில் எழுத வந்தது ஒரு அரிப்பு. அச்சில் தன் பெயர் கருமாதி பத்திரிக்கையிலே வந்தா கூட ஒரு போதை அரிப்பு வருமே அது போன்ற அரிப்புக்காக எழுத ஆரம்பித்தது. அத்தனை ஏன் "தொல்காப்பியர்" "தொல்காப்பியம்" என பாட புத்தகத்தில் வந்தா கூட அதை பிளேடால் நறுக்கி பாதுகாத்து வைத்து ரகசியமாய் பார்த்த ஒரு சைக்கோ தனம் போல மானிட்டரில் மத்தவங்க ஆகா ஓகோ சூப்பர் என சொல்லும் போது கிடைக்கும் ஒரு போதை அரிப்பு தான் எழுத வைத்தது. இது தான் உண்மை. இன்னும் சொல்ல போனால் என் பொழுதை இந்த எழுத்து விழுங்கியிருக்கு. என் முன்னேற்றத்தை சாப்பிட்டிருக்கு. என் மற்ற செயல்பாடுகளை கொன்று போட்டது. இதை சொல்ல கூச்சம் இல்லை. கிட்ட தட்ட பலருக்கும் இந்த நிலை இருந்திருக்கலாம் சொல்ல கூச்சப்பட்டிருக்கலாம். இதுவே தொழிலாக இருந்து அதனால் வருமானம் கிடைத்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டேன் என்பதும் உண்மை.

\\பதிவுகளின் மூலம் சம்பாதிக்கவா\\\ நல்லவேளை என் மனைவி இதை பார்க்கவில்லை. பார்த்திருந்தா நான் கல்யாணபரிசு தங்கவேல் மாதிரி தினமும் காசு கொடுத்து மாலை வாங்க வேண்டியிருந்திருக்கும்:-))

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

அபிஅப்பா, அபிஅப்பாவின் நூலகம், ஆகியவை என் சொந்த பிளாக், கும்மி(வேடந்தாங்கல்), தாயின் புன்னகை(இது எங்கள் பள்ளிக்காக) சமீபத்தில் சுவரொட்டி(ஒரே பதிவு தான்) பேரண்ட்ஸ் கிளப்( 3 பதிவு) இவைகளில் எழுதுகின்றேன். தவிர எங்கள் பள்ளிக்காக ஒரு தனி சொந்த வலைப்பூ வைத்திருக்கேன். தவிர இரண்டு வலைப்பூ சொந்தமாக இருக்கு.(நண்பர்களுக்காக) வ.வா.சங்கத்தில் ஒரு மாதம் எழுதினேன் அட்லாஸ் வாலிபராக, வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுதினேன்.

சொல்ல போனால் நானே பதிவு போட்டு நானே வாசகர் பரிந்துரையில் வரும் அளவு ஓட்டு போட்டு வரும் அளவு வலைப்பூக்கள் இருந்தாலும் சமீபமாக மட்டுமே ஓட்டு போடுகின்றேன் எனக்கே.(இரண்டு மாதமாக) அதும் ஒரே ஒரு அபிஅப்பா ஓட்டு மட்டுமே. அதனால் ஒரே ஒரு தடவை வாசகர் பரிந்துரையில் 5 மணி நேரம் மட்டும் இருந்தது. ஆனால் முன்பு சூடான இடுகையில் நிரந்தரமாக இருந்தேன் என்பது பழையகதை.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொதுவாகவே பதிவை படிக்காமல் பின்னூடம் போடுகிறேன் என்கிற குற்றச்சாட்டு என் மீது உண்டு. அது உண்மையும் கூட. ஆனால் பதிவை முழுமையாக படித்தால் அது பற்றி தனி மடலில் விவரமாக கூட விவாதித்தது உண்டு. விமர்சனம் செய்தமை உண்டு.
ஆனால் சிலரது பதிவுகளை முழுமையாக படித்து விடுவேன்.பொறாமை??? உம் வந்ததுண்டு.

ராமலெஷ்மி கவிதை படிக்கும் போது எப்படி நாம் 3 பக்கம் மாங்கு மாங்குன்னு அடிப்பதை சின்னதா எதுகை மோனையோட பத்து வரியில் புரியும் படி சொல்ல தெரியுது கவிதையிலே என நினைத்து பொறாமை வரும்.

வெண்பூவின் டைமிங் காமடி ரொம்ப ரசிப்பேன். சில சமயம் நான் நினைத்து அடிக்கும் முன்பே அதை நான் நினைத்ததை விட அழகா சொல்லி சிரிக்க வைக்கும் அவரது எழுத்தின் மீது பொறாமை வரும். அதனால் வெண்பூவையே கூட எரிச்சலாக பார்க்கும் ஒரு மனோபாவம் கூட வந்ததுண்டு.(மன்னிக்கவும் வெண்பூ)

டுபுக்கு எழுதும் காமடி பதிவு(எல்லாமே காமடி பதிவு தான் 'பிரசவம்" தவிர்த்து) படிக்கும் போது ஒரு வித பொறாமையோடு தான் படிப்பேன்.

பிரியாகதிரவன் என்கிற பதிவர் எழுத்து நடை. அவங்க கிட்ட தட்ட இன்னும் ஒரு துளசிடீச்சர் ஆகும் பதிவர் என நினைத்து பொறாமை படுவேன்.(அவங்க தமிழ்மணத்தில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல்)(இது கூட பொறாமை தான்)

அரசியல் கட்டுரையில் மா.சிவக்குமார் பொறாமைப்பட வைக்கும் ஒரு எழுத்துக்கு சொந்தக்காரர். (அஃப்கோர்ஸ் எனக்கு பிடிக்காத கருத்தாக தான் இருக்கும் ஆனாலும் அது பொறாமைப்பட வைக்கும்)

கல்வெட்டு என்கிற பலூன்மாமாவின் பின்னூட்டம் பிரம்மிக்க வைக்கும். ஆனால் பொறாமை இருந்ததில்லை. மனுஷன் எத்தனை விஷயம் படித்திருக்கார் என நினைத்து கொள்வேன்.

லக்கியின் (என்)ஆரம்பகாலத்தில் இருந்தே வாசகன் என்கிற வகையில் எனக்கு ஆர்வம் இருக்கும் பொறாமை இருக்காது.

எல்லேராம் பதிவுகள் பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்.

சமீபமாக நேசமித்ரன் கவிதை பிடிச்சிருக்கு. இன்னும் பொறாமை வரவில்லை. கூடிய சீக்கிரம் வரும்.

உண்மை தமிழன் பதிவு ரொம்ப பிடிக்கும். 'உள்ளது உள்ளபடி" விலாவாரியா அவர் எழுதுவதை பார்க்கும் போதும் பின்னூட்டத்துக்கு சளைக்காமல் பதில் சொல்வதும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கீதாம்மாவின் சிதம்பர ரகசியத்துக்கு நான் அடிமை.

கண்மனி டீச்சரின் காமடி பதிவு இப்போது இல்லை என்பது வருத்தம் தான், ஆனா அவங்க போடும் பிளாக்கர் டிப்ஸ் அருமை.



9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

இம்சை அரசி ஜெயந்தி. எனக்கு பிடித்த தங்கை. கிட்ட தட்ட அந்த முதல் பின்னூட்டம் நான் பலதடவை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருந்திருக்கேன். முதன் முதலாக என் வீட்டில் ஜெயந்தியை பார்த்த போது நானும் பேசவில்லை. ஜெயந்தியும் பேசவில்லை. கிட்ட தட்ட எப்படி இருந்தது தெரியுமா அந்த நிகழ்வு.

நான் எப்போதும் துபாயில் இருந்து ஊருக்கு வரும் போது ஏர்போர்டில் அபி அவங்க அம்மா பின்னாடி ஒழிச்சுப்பா. எனக்கும் பார்க்க ஆவலாக இருக்கும். அந்த கூட்டத்தில் கஸ்டம்ஸ் முடியும் முன்னமே பக்கேஜ் கலக்ஷன் பெல்ட்டில் போய் நிற்காமல் கூட்டம் பக்கம் வந்து பார்ப்பேன்.

பின்பு வெளியே வந்தவுடன் பார்க்க ஆர்வமாக இருந்தாலும் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாது. அப்படி ஒரு மனோநிலை இருக்கும். உணர்சிகளின் மொத்த குவியலாக இருக்கும் அந்த பொழுதுகள். காரில் ஏறி உட்காந்த பின்னே கூட அவங்க அம்மா கிட்டயே இருப்பா. வீடு வந்ததும் கொஞ்சம் கிட்ட வருவா.
"சரி சரி அவளுக்கு இதல்லாம் வாங்கி வந்தேன். அவளுக்கு வேண்டாமாம். பக்கத்து வீட்டிலே கொடுத்திடு" என சொல்லும் போது லைட்டா கண்ணை கசக்கிகிட்டே வருவா.

கிட்ட தட்ட அப்படித்தான் ஜெயந்தியும் நானும் அன்றைக்கு இருந்தோம். அன்றைக்கு பெங்களூர் பஸ் ஏறும் போது தான் அய்யோ நம்ம ஜெயந்தி ஊருக்கு போறா அப்படீன்னு ஒரு கலக்கம் அடிவயிற்றில் வந்தது. இதான் ஜெயந்தி. போன பின்னே ஒரு மெயில் வந்தது ஜெயந்தியிடம் இருந்து. "அண்ணா ஏன் என் கிட்ட சரியா பேசலை. நான் தான் சரியா பேசலை. நீங்கலாவது பேசியிருக்கலாமே". கிட்ட தட்ட அப்போது தான் நான் ஒரு மெயில் அனுப்பினேன். அதே வாசங்கங்களோடு.


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என் எல்லா பதிவிலயும் என் சுயபுராணம் தான் அதிகமா இருக்கும் என்பதால் அத்தனை சுட்டியையும் கொடுக்க வேண்டும். அதல்லாம் சாத்தியம் இல்லை. நான் ரொம்ப சாதாரணமானவன். சராசரி மனிதன். பெரியலாடுலபக்கு தாஸ் எல்லாம் இல்லை.

தெருவில் நடந்து போகும் போது உங்க கண்ணுக்கு தெரியும் பத்து பேரில் நானும் ஒருத்தன்.

நான் இந்த தொடருக்கு அழைக்கும் பதிவர்கள்...........என் புத்திக்கி எட்டியவரை எல்லோரும் எழுதியாச்சு, அதனால யார் வேண்டுமானாலும் எழுதுங்க. அதுக்காக எதுனா சன்மானம் தர ஆசைப்பட்டா டபில்யூ டபில்யூ டபில்யூ டாட் அபிஅப்பா டாட் காம்ல தொடர்பு கொள்ளவும்.

August 8, 2010

மூன்று இஃகி இஃகி!!!!

"
எனக்கு நல்லா தெரியும் இராகவன் அண்ணா திட்டினா வண்டை வண்டையா வரும்னு. அனா அதே சீமாச்சு அண்ணா கொஞ்சம் ரகசியமா திட்டுவாரு. இவரு பப்ளிக்ல போட்டு தாக்குவாரு. ரொம்ப பெரிசா வித்யாசம் இல்லை. ங்கொய்யால நானா மாட்டுவேன்.

அதும் 'வாய் தா ராணி" ன்னு கோஷம் போட போகும் போது. அண்ணாத்த என்னை திட்டும் போது அவரு தக்கச்சிக்கிட்ட மாட்டீடாரு. "ங்கொய்யால என்னடா நினைச்சுகிட்டு இருக்கே, சிங்கப்பூரு வரை நாறுது?"ன்னு கேட்க போக "அண்ணா, இன்னிக்கு என்ன புது சண்டை"ன்னு என் வீட்டிலே கேட்க போக அவரு "இஃகி இஃகி"

'நாங்க 1937 முதலே இப்படித்தான்"ன்னு சமத்தா இருந்துட்டாரு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடுத்து......

நான் முதல்லயே சொன்னனே மாயவரம் புதுபாலம் கட்ட பழைய பாலம் இடிச்சாச்சுன்னு. அது பிராஜக்ட் நேரம் ஒரு வருஷம். வழக்கம் போல துணை முதல்வர் முன்னாடியே முடிச்சா ஆளுக்கு 2 பவுன் செய்வார்ன்னு நினைச்சு அரக்க பரக்க செய்ய ,ஆனா QA\QC போட்டு தாக்க ஒரு வழியா குறித்த காலத்துக்கு 6 மாசம் முன்ன முடிஞ்சுது.

ஆனா பாருங்க அதிலே ஒரு சிக்கல். அந்த பாலம் திறந்தா தான் மாயவரத்துக்கு காவிரி தண்ணீர் வரும். இன்னும் இரண்டு நாளில் துணை முதல்வரின் மனைவியின் அப்பாவுக்கு 80ம் வருஷம். கழக கண்மணி எல்லாம் AVC ல விழாவை வச்சாச்சு. துணை முதல்வர் அதுக்கு வரும் போது திறக்க உத்தேசம

அதுக்கு முன்ன காவிரில ஒரு தற்காலிக பாலம் மண் ரோடு மாதிரி அதுக்கு பக்கத்துல போட்டாங்க. அதை எப்ப இடிக்கனும்? இந்த பாலத்தை ஓப்பன் பின்ன தானே?

திடீர்ன்னு அதை தூக்கிட்டாங்க. அந்த பக்கம் 2 பெரிய பள்ளிகூடம் இருக்கு. திடீர்ன்னு இடிச்ச பின்ன நாங்க என்ன செய்வோம்?

பாலத்தை நாங்களே தெறந்தாச்சு. வழக்கம் போல மாயவரம்னா ரெண்டு.ரெண்டு திறப்பு விழா!! இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க? எல்லா போலீஸ், பொதுபணித்துறை எல்லாம் வந்த போது பாலத்தை திறந்த மக்கள் சொன்னது இஃகி, இஃகி, இஃகி..........................

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

"என்னங்க பழமைபேசி புத்தக வெளியீட்டுக்கு போகலாம்ன்னு சொன்னீங்க?"

"ஆமாம் சொன்னேன்"

"ஏன் அழைச்சுட்டு போகலை"

" சும்மா இரு அவரு 27 ரேப்பு , 32 கொலை செஞ்சவரு தெரியுமா? அதனால நாம கோவை போகலை"

"நீங்க கூடத்தான் 294 ரேப்+ கொலை செஞ்சிருக்கீங்க"

ஓ 300 வது பதிவை நெருங்கிட்டனா நானும்!

'இஃகி இஃகி இஃகி இஃகி"

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சீமாச்சு அண்ணா வீட்டில் .................

"ஷண்முகாம்மா!இவரு என்னை !@#$%^&&*()_++++ இந்த மாதிரில்லாம் சொல்றாரு"

"டோண்ட் ஓர்ரிய்யா, எனக்கு தெரிஞ்சு நல்ல நல்ல டாக்டரெல்லாம் இருக்காங்க, நீ எதுக்கும் கவலைப்படாதே"



@@@@@@@@@@@@@@@@

"ஹாய் அண்ணி!"

"ஹாய் வாங்க!"

"அதல்லாம் இருக்கட்டும். வந்த வேளை முடிஞ்சாச்சு. வத்தி வச்சாச்சு. உங்க கூட வந்த முகுந் அம்மா அங்க போய் பதிவும் போட்டாச்சு. கிளம்புங்க காத்து வரட்டும்"


இஃகி இஃகி இஃகி இஃகி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

August 1, 2010

பதிவர்களின் ஒற்றுமைக்காக தமிழ்மணம் பகீரத முயற்சி!!!

இரண்டு மூன்று வருடம் முன்பாக பதிவர் ஷார்ஜா சிங்கம் பெனாத்தலார் ஒரு பதிவு போட்டிருந்தார். "கனவில் வந்த தமிழ்மணம்" என்கிற பதிவு. பின்பு ஒரு வருடம் பின்னர் "கனவில் வரக்கூடாத தமிழ்மணம்" அப்படீன்னு பதிவு போட்டாரு. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். இனி அதுக்கு எல்லாம் தேவையே இல்லை பெனாத்தலாரே. உங்க வேலையை தமிழ்மணமே செஞ்சாச்சு.


அக்னி நட்சத்திரம் படத்திலே அப்பா விஜயகுமார் தன் இரண்டு மகன்கள் பெயரை கௌதம், அஷோக் இருவரையும் பெயரை மாற்றி மாற்றி கூப்பிடுவார். பின்ன கிளைமாக்ஸ்ல அதுக்கு விளக்கம் வேற சொல்லுவார். அப்படியாவது அவங்க ஒத்துமையா இருக்கட்டுமேன்னு தான் அப்படி சொன்னாராம். (இப்படியெல்லாம் சிந்திக்க மணிரத்னம் மட்டுமே இந்தியாவிலே இருக்கார்

கிட்ட தட்ட நம்ம தமிழ்மணம் அதே பாணியிலே நேத்து முதல் அதிரடியாக செயல்பட்டு பதிவர்களை ஒத்துமையாக்க பகீரத முயற்சி எடுத்து வருகின்றது.


ஒரு பதிவு தலைப்பு படுக்கை அறை, வீடியோ என பார்த்ததும் உடனே எதுனா சாமியார் படம் போடனும் என நினைத்து அவசரத்துல நம்ம ஆன்மீக பதிவர் ஸ்வாமி ஓம்கார் படத்தை போட்டுட்டாங்க:-))) நேத்து அப்படித்தான் ஒரு ஆன்மீக பதிவுக்கு டாக்டர்.ருத்ரன் படத்தை போட்டு இருந்தாங்க. தாடி மீசையோட அவரை ஆன்மீக சாமியார்ன்னு நினைச்சுட்டங்க போலிருக்கு.

இனி தமிழ்மண ஜூன் கலவர பதிவர்கள் படத்தை மாத்தி மாத்தி போட வேண்டியது தான் பாக்கி. தவிர 'எனக்கு ஓட்டு விழவில்லை" என்கிற குறையும் இனி இல்லை போலிருக்கு. என் போன பதிவிலே நானே எனக்கு இரண்டு ஓட்டு போட்டிருக்கேன். பாருங்க. இனி மகுடம், வாசகர் பரிந்துரை எல்லாம் நம்ம கையிலேயே தான் இருக்கு போலிருக்கு. ஹும் பதிவு போட பத்து நிமிஷம். ஒரு அரை மணி செலவழிச்சா நாமளே நம்மை மகுடத்துல ஏத்தி உட்கார வச்சுட்டு அடுத்த வேளையை பார்கலாம்.

@@@@@@@@

ஜோக்ஸ் அபார்ட்! தமிழ்மணம் ஏதோ டிங்கரிங் பட்டிபார்த்து கிட்டு இருக்காங்க. அது முடியும் வரை இப்படித்தான் இருக்கும் போலிருக்கு. அதுவரை கொஞ்சம் அமைதியா இருங்க.

@ தமிழ்மணம்: சும்மா இதை விளையாட்டா எடுத்துகிட்டு சரி பண்ணுங்க. இதுக்காக எனக்கு தூக்கு தண்டனை கொடுத்தா நான் மேல்முறையீட்டுக்கு போவேன் ஆமா!