மன்னிக்கவும்! திரு. நேசமித்ரன் ஒரு எழுத்துப்பிழை சுட்டிகாட்டி இருந்தார். அதை சரி செய்யும் போது தவறுதலாக இந்த பதிவை அழித்து விட்டேன். அதிலே 22 பின்னூட்டங்களும் சேர்ந்து போய்விட்டது. அதனால் மீண்டும் பதிகின்றேன். மன்னிகவும்!
***********************************
என் நான்கு வயதில் என் குறும்புக்கார மாமா ஒருவர் "உனக்கு பனந்தோப்பில் ஒரு அடக்கமான பெண் பார்திருக்கேன். அவங்க உனக்கு ராமூர்த்தி அய்யர் ஜூவல்லரியிலே மொத்தமான சங்கிலி போடுவதா சொல்லியிருக்காங்க. வரும் அமாவாசையிலே திம்மநாயக்கன் படித்துறை மண்டபத்திலே கல்யாணம்" என சொல்லுவது வழக்கம். நானும் ஏதோ எனக்கு பெரிய அளவில் கல்யாணம் நடக்க போவதாக நினைத்து சந்தோஷப்படுவேன்.
பின்னர் காலம் போகப்போகத்தான் தெரிந்தது. பனந்தோப்பு பகுதி என்பது சுடுகாடு என்பதும் அவர் சொன்னது "அடக்கமான" பெண் என்பதும், திம்மநாயகன் படித்துறை மண்டபம் என்பது இறந்தபின்னர் காரியம் செய்யும் இடம் என்றும். ராமூர்த்தி அய்யர் ஜுவல்லரி என்பது ராமூர்த்தி அய்யர் இரும்புகடை என்றும் அங்கே இரும்பு சங்கிலி தான் கிடைக்கும் என்பதும் தெரிந்து சிரித்து கொண்டேன். அப்படித்தான் ராமூர்த்தி அய்யர் இரும்புகடை எனக்கு அறிமுகம் ஆனது. ஆமாம் இந்த பதிவின் கதாநாயன் அந்த "M.S.ராமூர்த்தி அய்யர் ஹார்டுவேர்ஸ்" தான். மயிலாடுதுறையின் மைந்தர்கள் என்றால் அந்த கடைக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்க முடியவே முடியாது. கடை என்று சொன்னா ஏதோ அப்படி இப்படி கடை இல்லை. அது ஆச்சு அதை தொடங்கி ஒரு எண்பது வருடங்கள். அந்த ராமூர்த்தி அய்யர், அதன் பின்னே அவரது மகன் M.R. கண்ணப்பன், பின்னர் அவரது இரு மகன்கள் அதிலே தற்போது உரிமையாளராக இருக்கும் அவரது இளைய மகன் M.R.K.கீர்த்திவாசன் அண்ணன். எனக்கு நினைவு தெரிந்து நான் ராமூர்த்தி அய்யரை பார்த்தது இல்லை. ஆனால் M.R. கண்ணப்பன் அவர்கள் தான் அதன் முதலாளி நான் சிறு வயதாக இருக்கும் முதலே. தவிர அவர் எங்கள் பள்ளி தி.ப.தி.அர.தேசிய மேல்நிலைப்பள்ளியின் ஆட்சிமன்ற குழுவின் முக்கிய உறுப்பினரும் கூட.
அந்த கடையில் கட்டுமான பொருட்கள் சிமெண்ட், கம்பிகள்,பெயிண்ட் வகையறாக்கள் உட்பட எல்லாமே கிடைக்கும். இப்போதும் அந்த நிறுவனத்தை நான் கடை கடை என்று சொல்வதால் அதன் விஸ்தீரனம் என்ன என்பது உங்களுக்கு புரியவில்லை தானே? இருங்கள். அந்த கடையில் ஒரு நாளைக்கு விற்பனை ஆகும் சிமெண்ட் மூட்டை மட்டும் சுமார் 5000 முதல் 8000 வரை. கம்பிகள் நூற்றுக்கணக்கான டன்கள். இருக்கும் இடமோ மயிலாடுதுறையின் மைய பகுதியான மணிக்கூண்டு க்கு பக்கத்தில். அகலம் ஒரு என்பது அடியும் நீளம் ஒரு 250 அடியும் இருக்கும் சுமாராக. குடோன் என்பது காவிரி கரையில் இருக்கின்றது. அந்த கடையின் உள்ளே ஒரு லாரி போய் வருவது பெரியகோவில் உள்ளே ஒருவன் சைக்கிளில் போய் வரும் போது எப்படி இருக்கும், அது போல லாரி அந்த கடையின் உள்ளெ போய் ஒரு ரவுண்டு அடித்து திரும்பும் என்றால் மயிலாடுதுறையின் இதய பகுதி கடைத்தெருவில் அந்த இடம் எவ்வளவு பெரியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இத்தனைக்கும் குடோன் தனி இடம்.
சரி அப்படி என்ன அந்த கடையின் விஷேஷம்? ஏன் அப்படி அங்கே மட்டும் அத்தனை பரந்துபட்ட வியாபாரம்? விலை அங்கே குறைவா? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டால் அதல்லாம் எதும் இல்லை. ஒன்றே ஒன்று தான். நேர்மை. அவர்களின் நேர்மை. பில் இல்லாத வியாபாரம் கிடையாது. நிங்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக அரசு விதிக்கும் வரிகள் கண்டிப்பாக நம்மிடம் வசூல் செய்யப்படும். அது மிகச்சரியாக அரசுக்கு செலுத்தப்படும். தரமான பொருட்கள் மட்டுமே வியாபாரம் செய்யப்படும். எடை சரியாக இருக்கும். அங்கு இருக்கும் விற்பனையாளர்களுக்கு நான் டிப்ஸ் எதும் கொடுக்க தேவையும் இல்லை கொடுத்தாலும் அதை மறுதளிக்கும் அளவுக்கான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதே போல நாம் சிமெண்ட் வாங்கினாலும் சரி கம்பிகள் வாங்கினாலும் சரி கொத்தனார், இஞினியர் ஆகியோருக்கு எந்த கமிஷனும் அவர்களுக்கு அந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கவும் மாட்டார்கள். அது போல கடன் கிடையாது. கையிலே காசு வாயிலே சிமெண்ட் பாலிசி தான்.
ஒரு வீடு கட்ட ஆரம்பித்ததும் மேஸ்திரியோ இஞினியரோ "ராமூர்த்தி அய்யர் கடை வேண்டாம். அதை விட சூப்பரா ஒரு மூட்டைக்கு 20 ரூபா கம்மியா நான் வேற கடையிலே வாங்கி தருகின்றேன் என்பது தான் முதல் டீலிங் ஆக இருக்கும். அதை எல்லாம் மீறி மக்கள் ராமூர்த்தி அய்யர் கடைக்கு தான் படையெடுப்பார்கள். அந்த கண்ணப்பன் அய்யரோ, கீர்த்திவாசன் அண்ணனோ மிகப்பெரிய ஆன்மீக பற்றாளர்கள் என்றேல்லாம் சொல்ல இயலாது. கடையில் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாமி படங்களுக்கு பைனான்ஸ் கம்பனியில் போடுவது போல சரம் சரமாக மல்லிகைப்பூவும், வாசனை பத்திகளும் படைக்கப்பெறாது. அவர்களுக்கு செய்யும் தொழிலே முதல் தெய்வம்.
எனக்கு தெரிந்து அந்த கடை ஒரு மிகப்பெரிய ஓட்டு வீடு போன்ற கட்டிடம் தான். அந்த கடைத்தெருவின் அனைத்து கடைகளும் (எதிரே இருக்கும் ஏ ஆர் சி ஜுவல்லரிகள்) கண்ணாடி மாளிகையாக ஆன பின்னரும் இது ஒரு ஓடு வேய்ந்த கடை தான். முதலாளிக்கும், அவரது மகன்கள் இருவர், பின்னே ஒரு கணக்கர் ஆகியோருக்கு வரிசையாக நான்கு குழி அதாவது பள்ளம் இருக்கும் அதன் முன்பக்கம் ஒரு பெரிய மர டெஸ்க், இவர்கள் சென்று அந்த குழியில் காலை தொங்கவிட்டு அமர்ந்து டெஸ்கில் பெரிய பெரிய தோல் பைண்டிங் செய்த லெட்ஜர் பிரித்து வைத்து கொண்டு தலைக்கு மேலே ஒரு அந்த கால ஜி ஈ சி மண்டை சீலிங் ஃபேன் போட்டுக்கொண்டு உட்காந்து கொண்டு முதலாளிக்கு மாத்திரம் எக்ஸ்ட்ரா காற்றுக்காக ஒரு இங்கிலாந்து ராலி பேன் சத்தமில்லாமல் ஓடும் அதை வைத்து கொண்டு கருமமே கண்ணாய்இருப்பர். கண்ணப்பன் அய்யர் கடைக்கு வந்ததும் சட்டையை கழட்டி பின்னால் இருக்கும் ஆணியில் மாட்டிவிட்டு மல் துணியில் தைக்கப்பட்ட ஒரு கை வைத்த பனியனோடு பில் போடுவார். ஒரு கருப்பு கலர் அந்த கால கிரகாம்பெல் காலத்து விரல் வைத்து நம்பர் சுற்றும் போன் ஒரு கொலாப்ஸ் ஸ்டாண்ட் ல் இருக்கும். முதலாளி, அவரது மகன்கள், கணக்கர் இதிலே யார் பேச வேண்டுமோ அவர்களுக்கு அந்த போன் நகர்த்தி வைக்கப்படும்.
இப்படியாக பழமை மாறாமல் இருந்த அந்த வணிக வளாகம் இன்னும் சொல்ல போனால் இந்த ஊரில் இருந்த மாட மாளிகை எல்லாம் அவர்கள் விற்ற சிமெண்ட், கம்பிகளால் உயர்ந்து நிற்க அந்த கடை மட்டும் அப்படியே இருந்தது. அவர்களின் சிமெண்ட் குடோனில் ஒரு நாளைக்கு கீழே சிந்தி கிடக்கும் சிமெண்டை ஒரு வாரத்துக்கு திரட்டினால் கூட இவர்கள் மாயவரத்தில் மணிக்கூண்டுக்கு நிகரான உயரத்தில் ஒரு கட்டிடம் எழுப்ப முடியும் என கேலி பேசியவர்கள் உண்டு. அதே போல கண்ணப்பன் அய்யர் சைக்கிளில் தன் வீடு முதல் கடைக்கு வந்து போவதை கூட கேலியும் கிண்டலும் செய்தவர்களை நான் பார்த்தது உண்டு. ஆனால் அதல்லாம் அவர்கள் கவனத்துக்கே போகாது. ஏனனில் அவர்களது கவனம் வியாபாரம். அது நல்ல விதமா நடந்தா சரி என்கிற போக்கில் தான் இருந்தார்கள்.
ஒருமுறை திரு. கண்ணப்பன் அவர்கள் எங்கள் பள்ளி விழாவில் பேசிய போது " பெருசா நான் எதும் செஞ்சுடலை. நான் ஒரு போஸ்ட்மேன். போஸ்ட்மேன் வியாபாரி. நான் ஒரு பொருளை வாங்கி அவா "நீ இத்தன தான் லாபம் வச்சு விக்கலாம்"ன்னு சொல்லும் அதே லாபத்தை தான் வச்சி விக்கிறேன். அதுல கவர்மெண்ட் "நீ இத்தன சம்பாரிச்ச, அதுக்கு நேக்கு இத்தன பர்சண்டேஜ் டேக்ஸ் பே பண்ணிடு"ன்னு சொல்றா, அதை டான்னு கொடுத்துடுறேன். அதே போல அந்த கமாடிட்டீஸ்க்கு இத்தன டேக்ஸ் உன்னாண்ட அதாவது வாங்குறவா கிட்டேர்ந்து வசூலிச்சு கட்டிடு"ன்னும் சொல்றா. அதையும் உங்களான்ட இருந்து வாங்கி டான்னு கட்டிடுறேன். தான் சூட்சுமம். நாம வரி கொடுக்கலைன்னா அரசாங்கம் எப்படி நடத்துவா? என் தோப்பனார் இங்லீஷ் காரன் காலத்திலே இருந்து அவா சொன்ன வரியை கட்டிண்டு வந்தா. நேக்கு அந்த மன உறுத்தல் இல்லை. நம்ம நாட்டுக்கு கட்டிண்டு வர்ரேன். அவா ரோடு போடுறா, பெரிய ஆஸ்பத்திரிலே ஏழகளுக்கு ஃப்ரீயா மருந்து கொடுக்கறா, குடிதண்ணீர் தர்ரா,எல்லாமே எல்லாமே செய்யறா, நான் போய் இதல்லாம் செஞ்சுண்டு இருக்க முடியுமா? நீங்க போய் தனித்தனியா இதல்லாம் செஞ்சுண்டு இருக்க முடியுமா? முடியாதோன்னோ, நாம வரி கொடுக்கலைன்னா அவ பணத்துக்கு எங்க போவா? அவா கிட்டே தான் நாசிக்ல பிரஸ் இருக்குன்னு பிரிண்ட் பண்ணிக்க முடியுமா? டபார்ன்னு அதல்லாம் செஞ்சுட முடியாது. நாம கொடுக்கும் வரியை வச்சுண்டு தான் செய்ய முடியும். நாம ஒழுங்கா கொடுத்தா அவா செய்வா. "நேக்கு பத்தலை. நீ இன்னும் கொஞ்சம் வசதி செஞ்சு கொடு"ன்னு கேளுங்கோ அதுக்கு எல்லா உரிமையும் உங்களுக்கு எந்தளவுக்கு இருக்கோ அந்த அளவு அவாளுக்கு நாம செலுத்த வேண்டிய வரியையும் செலுத்திடனும் கேட்டேளா" என கலோக்கியலா பேசியது அன்றைக்கு எல்லார் மனதிலும் பட்டது.
இரவு கடையில் கணக்கு எல்லாம் முடிந்து கண்ணப்பன் சார் ஒரு தோல் பையில் தான் எல்லா பணத்தையும் எடுத்து கொண்டு தன் வீட்டுக்கு சைக்கிளில் போவார். பட்டமங்கல தெருவில் இருந்து அரசாங்க மகளிர் பள்ளிகூடம் தாண்டி இருக்கும் சந்து வழியே நூர்காலனி வழியே (கோ ஆபரேடிவ் பேங் வழியே) எங்கள் பள்ளிக்கூடம் பக்கத்தில் இருக்கும் அவர் வீட்டுக்கு போவார். இதை கவனித்து கொண்டு இருந்த ஒரு திருடன் ஒரு நாள் அந்த பேங் சந்தில் வைத்து இவரை கத்தியால் குத்தி பணத்தை பிடுங்கிட்டான். அடுத்த நாள் காலை செய்தி தெரிந்ததும் நான் வழக்கம் போல என் நண்பன் ராதாவிடம் விஷயத்தை சொல்ல "அய்யோ என்ன ஆச்சு .... அந்த திருடனுக்கு?" என கேட்டான். அவன் அப்படி கேட்டதற்கு காரணம் உண்டு. ஏனனில் திரு.கண்ணப்பன் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். கெட்ட பழக்கம் எதும் கிடையாது. உடல் திடகாத்திரமானது. பாவம் திருடன். இவரை கத்தியால் குத்தினாலும் இவர் விடாப்பிடியாக அவனை பிடித்து அவன் யாரிடமோ திருடி வச்சிருந்த ஆயிரம் ரூபாய் சொச்சத்தையும் சேர்த்து பிடுங்கி விட்டார். அவனை போலீசிலும் பிடித்து கொடுத்துவிட்டார். பாவம் திருடனுக்கு ஆயிரத்து சொச்சம் நஷ்டம்:-)) அப்படி எதற்கும் அசையாத திட மனது கண்ணப்பன் சாரைக்கூட விதி விட்டு வைக்கவில்லை. அவரது பெரிய மகன் ஆன்மீக சுற்றுப்பயணம் வடநாட்டுக்கு போன போது ஹரித்வாரில் மரணம் அடைந்து விட அந் நிகழ்சி இவரை ரொம்ப ஆட்டிவிட்டது.
பின்னர் அவரது இளைய மகன் கீர்த்திவாசன் அண்ணன் அவர்கள் கடையின் எல்லா பொறுப்புகளையும் பார்த்து கொண்டார். கடை ஓட்டு கட்டடத்தில் இருந்து மிகப்பெரிய கட்டிடமாக மாறியது. குழியில் டெஸ்க் போட்டு உட்காந்த நிலை மாற்றப்பட்டு அதிநவீன பர்னிச்சர்கள், கம்பியூட்டர் என சமகாலத்துக்கு மாறிவிட்டது. பெரிய மகனின் மனைவி, குழந்தைகள் எல்லாரும் சென்னையில் செட்டில் ஆகிவிட சின்னவர் கீர்த்திவாசன் அண்ணனின் குழந்தைகளுக்கு மாயவாம் புழுதிகளும், வெய்யிலும், அழுக்கான காவிரியும் ஏனோ ஒரு ஒட்டுதல் இல்லாமல் சென்னை வாழ்க்கை பிடித்து போக பெரிய பையன் மரணத்தில் இருந்து மனது வெளியே வராமல் கண்ணப்பன் சாரும் போய் சேர்ந்துவிட்டார். ஆனாலும் சின்னவர் கீர்த்தி அண்ணன் அதே தாத்தா, தந்தையார், அண்ணன் காட்டிய அதே வழியில் கடையை திறம்பட நடத்தி வந்தார்.
நான் ஒரு பத்து நாட்கள் முன்னதாக அவர் கடைக்கு போன போது ஒருவர் சிமெண்ட் வாங்க வந்தார்.
கஸ்டமர்: சார் நான் பெரிய அளவிலே ஒரு கட்டிடம் கட்டனும்.கவலையே படாதீங்க. உங்க கடையிலே தான் எல்லாம் எடுக்க போகிறேன்.
கீர்த்தி அண்ணன்: சரி கவலைப்படலை. சொல்லுங்க.
கஸ்டமர்: அல்ட்ராடெக் ஒரு மூட்டை என்ன விலை?
கீர்த்தி அண்ணன்: 315
கஸ்டமர்: சரி, எனக்கு ஒரு ஆயிரம் மூட்டை வேண்டும். அடுத்து அடுத்து வரிசையா கட்ட போறேன். இன்னும் அதிக லெவல்ல தேவைப்படும். எனக்கு பில்லு கில்லு எல்லாம் வேண்டாம். உடனே கை மேலே கேஷ் சுடச்சுட தருவேன். என்கிட்டே லாரி இருக்கு. டோர் டெலிவரில்லாம் வேண்டாம். திரும்பவும் சொல்றேன். பில்லு கில்லு எல்லாம் வேண்டாம். இப்ப சொல்லுங்க என்ன விலை ஒரு மூட்டை?
கீர்த்தி அண்ணன்: 315
வந்தவர் பேயறைந்து போன மாதிரி ஆனார். எனக்கு விவேக் மற்றும் டாக்டர் மாத்ருபூதம் காமடி தான் ஞாபகம் வந்தது. "சார் ஊசி போட போறீங்களா? நான் வேண்டுமானா பேண்டை கழட்டிடட்டுமா? என விவேக் கேட்க அதற்கு டாக்டர் "அது உன் இஷ்டம், ஆனா நான் கையிலே தான் போடப்போறேன்" என்பார். நீ பில்லை வாங்கு வாங்காம போ, அல்லது வாங்கி கிழிச்சு போடு. அது பத்தி எனக்கென்ன கவலை என்கிற அதே கண்ணப்பன் சாரின் குணம். மயிலாடுதுறையில் அதிகபட்சம் விற்பனை வரி கட்டும் நிறுவனம் அது. இப்பவும் தான்.
சரி நான் ஏன் இத்தனை நீட்டி முழங்குகிறேன் அந்த ராமூர்த்தி அய்யர் இரும்புகடை பற்றி.
அந்த கடை விற்பனை ஆகிவிட்டது. ஆமாம், கீர்த்தி அண்ணனால் கவனிக்க முடியவில்லை. பசங்க சென்னையிலே செட்டில் ஆக விருப்பம். இவருக்கு வாரம் ஒரு முறை சென்னை சென்று வர முடியவில்லை. வீடும் மிகப்பெரிய பங்களா. தனி ஆளாக இவர் மாத்திரம் இருக்க வேண்டும். சொத்துபத்துக்கு எதும் குறைவில்லை. சென்னையில் அண்ணாசாலையில் கால்வாசி கிடக்கு, ஊட்டி கொடைக்கானலில் இருக்கு. இன்னும் சிமெண்ட் கம்பனிகளில் அதிக விற்பனைக்காக கொடுக்கப்படும் ஊக்கத்தொகை கூட இவங்க நிறுவனம் பல ஆண்டுகளாக வாங்காமல் இருப்பதே பல கோடிகள் தாண்டும். ஆனால் இவரால் கடையை சரியாக கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி திடீரென விற்றுவிட்டார். கடையில் இருந்த இடம் முதல் உள்ளே இருந்த சரக்குகள், லாரிகள், வேலையாட்கள் உட்பட. ஒரு ஆணி கூட தன் கூட எடுத்துக்கொள்ளவில்லை. விரைவில நூற்றாண்டு காணப்போகும் ஒரு நிறுவனம். விற்பப்பட்டுவிட்டது. இன்னும் மயிலாடுதுறையில் பலருக்கு இவ்விஷயம் சென்றடையவில்லை.
வாங்கியவர் திரு. ஏ.டி. தமிழ்செல்வன். அவரும் ஒரு சிறந்த தொழிலதிபர். உழைப்பால் முன்னுக்கு வந்தவர். அவரைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் உடனே "எனக்கு தெரிஞ்சு அவரு தாஜ்மகால் பீடியை கடைக்கு கடை கொண்டு சைக்கிளில் போட்டு வியாபாரம் செஞ்சவர் தானே" என வயிறு எரியும் வியாபாரிகள் பேசுவர். கருனாநிதி மஞ்சள் பையுடன் திருவாரூரில் இருந்து சென்னைக்கு வந்தார் என கண்ணதாசன் வனவாசம் புத்தகத்தில் சொன்ன மாதிரியான வயிறு புகைச்சல் தான். ஆனால் ஏ.டி எஸ் ஒரு சிறந்த உழைப்பாளி என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். அவர் இந்த நிறுவனத்துக்க்கு இத்தனை கோடி கொடுத்தார் என யூகங்களாக அடுத்த அடுத்த நாட்களில் பேசும் யாருமே 'அவரு ஒயிட்ல இத்தனை கோடி கொடுத்தார், பிளாக்ல இத்தனை கோடி கொடுத்தார்" என பல்லுமேல நாக்கு போட்டு பேச மாட்டார்கள். ஏனனில் எம். எஸ் ராமூர்த்தி அய்யர் நிறுவனம் என்பது கருப்பு பணத்துக்கு அப்பாற்பட்டது என்பது ஊருக்கே தெரியும். நேர்மைன்னா இப்படி தான் இருக்கனும்.
ஏ.டி. எஸ் கூட கடையின் பெயரை மாற்ற போவது இல்லியாம். ஆனாம் அந்த சிமெண்ட்ம், கம்பியும் அல்ல அதன் மதிப்பு. அவர் கொடுக்கும் பணம் எல்லாமே 'ராமூர்த்தி அய்யர் இரும்புகடை" என்னும் பிராண்ட்க்கு கொடுக்கும் பணம் தான் என்பதை ஒரு நல்ல வியாபாரியான திரு. ஏ டி எஸ். தமிழ்செல்வனும் நன்கு உணர்ந்தவர் தான்.
வாழ்க ராமூர்த்தி அய்யர் நிறுவனம், வாழ்க கீர்த்திவாசன் அண்ணன், வாழ்த்துக்கள் ஏ.டி.எஸ். தமிழ்செல்வன் சார்! கீர்த்தி அண்ணன், உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் நம் பள்ளியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர். நம் பள்ளி உங்கள் பள்ளி. எப்போதும் நீங்களும் உங்க பரம்பரையும் அதே பழைய நினைப்புடன் அதே பதவிகளை பள்ளியில் தொடர்ந்து இருந்து பள்ளியை மென் மேலும் வளரவைக்க வேண்டும்.