பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 22, 2011

கழுத்து வலிக்கும் அளவுக்கு திரும்பிப் பார்க்கிறேன்!!!

மேட்டரே இல்லாட்டி இப்படித்தான். பையன் எல் கே ஜி படித்து முடித்தமைக்கு எல்லாம் திரும்பிப்பார்க்கிறேன் என நெஞ்சுக்கு நீதி தான் எழுதிகிட்டு இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையோடு ஆரம்பிக்கிறேன்:-)) நட்ராஜ் ஸ்கூல் போக ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஓடினதே தெரியவில்லை. போன வருஷம் ஸ்கூல் ஆரம்பித்த தினத்தில் சம, பேத, தான எல்லாம் நான் பயன்படுத்தியும் அவன் தண்டத்தை எதிர் பிரயோகம் செய்தும் ஒரு வழியாக ஒரு வாரத்தில் "இது தனக்கான விதி. அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். இதுவும் கடந்து போகும்" என அவனே அவனை சமாதானப்படுத்திக்கொண்டு இரு தரப்பும் ஒரு விதமாக ஒத்துப்போய் பின்னர் அவன் வகுப்பில் இருந்த கல்யாணி முதல் ஷிபாயா வரையிலான நண்பர்களோடு நட்பாகி பின்னர் ஞாயிற்று கிழமை கூட ஸ்கூல் போக வேண்டும் என்கிற அளவுக்கு அந்த நட்புகள் வளர்ந்து... ஸ்கூல் இருக்காது என நான் அங்கே கொண்டு போய் காட்ட வேண்டிய நிலைக்கு வந்த பின்னரும் "இத்தனை தூரம் வந்துட்டோம் அப்படியே ஒரு எட்டு ஷிபாயா வீட்டுக்கு போய் வந்துடலாமே" என அவன் கேட்க எனக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.நானெல்லாம் அந்த வயதில் அத்தனை உக்கிரமாய் இல்லை.

முதல் மிட் டேர்ம் டெஸ்டில் மார்க் கம்மியாகவும் ரேங் அதிகமாகவும் எடுத்த அவன் இப்போது முமுப்பரிட்சையில் மார்க் அதிகமாகவும் ரேங் கம்மியாகவும் எடுக்கும் அளவு தலைகீழ் முன்னேற்றம் ஏற்பட்டாலும் இடைப்பட்ட இந்த பத்து மாத காலத்தில் சில பல சண்டைகள், ஓரிடண்டு தடவை ரத்தகளரி, ஹெட்மிசஸ் பஞ்சாயத்து என போனாலும் எந்த ஆட்டத்திலும் என்னை அவர்கள் சேர்த்துக்கொண்டதே இல்லை. ஒரு முறை ஒரு பையனை சிலேட்டால் மண்டையை கொத்தி லைட்டா அரைச்சேர் ரத்தம் வந்து விட அது ஹெட்மிசஸ் வரை பஞ்சாயத்துக்கு போய் நான் மதியம் அவனை அழைக்க வரும் போது அவனை ஹெட்மிசஸ் ருமில் நடுவே வைத்து "என்ன கைய பிடிச்சு இழுத்தியா" வடிவேலு கணக்கா நிற்க வைத்திருக்க நான் போன போது ஒரு பி டி வாத்தியார் கிட்டே நான் போய் மெதுவா என்னா சார் மேட்டரு என விசாரிக்க அவர் காதோடு வந்து "லேடீஸ் மேட்டர் சார். கல்யாணி கிட்டே இந்த சுரேஷ் பேசிட்டான் போலிருக்கு. அதனால இவன் சிலேட்டால கொத்திட்டான்" என காதோரம் சொல்ல எனக்கு பகீர்ன்னு இருந்துச்சு.

என் பையன் மேல பழிபோடும் இந்த வாத்திக்கு முட்டை மந்திரம் வைக்கலாமா, எதுனா நாயர், நம்பூதிரின்னு கான்சல்ட் பண்ணி பொம்மையில் ஊசி குத்தலாமா எனவெல்லாம் யோசித்து அதல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என நினைத்து நம்ம ரேஞ்சுக்கு அக்னிநட்சத்திரம் கார்திக் பிரபு மாதிரி தினமும் காலை சாப்பாட்டுக்கு முன்பு ஒரு தடவையும் மதிய சாப்பாட்டுக்கு பின்பு ஒரு தடவையும் தோள்பட்டையால் மோதுவது என தீர்மானத்துக்கு வந்து அடுத்த நாள் அதை செயல்படுத்திய வேகத்தில் என் சட்டை பேண்ட் எல்லாம் சேரும் சகதியுமான காரணத்தால் அதையும் விடுத்து தூரக்க இருந்தே கண்ணால் முறைத்துக் கொண்டு இந்த வருஷ கடைசியில் என் கண் என் வாய் சைசுக்கு பெரியதாக ஆனது தான் இந்த வருஷம் கண்ட அதிகபட்ச பலன்.

வருஷ கடைசியில் ஒரு நாள் என்னிடம் வந்து " அப்பா ஒரு 500 ரூபா சேஞ்சா இருந்தா குடேன்" என அவன் கேட்க அதிர்ந்தேன் .லைட்டா. சேஞ்சே 500 ரூவாயா என நினைத்து கொண்டே எதற்கு என கேட்க "ஸ்போர்ட்ஸ் டே"யில் ஒரு ஈவண்ட்ல கலந்து இருக்கேன். அதுக்கு வெள்ளை கலர் டிராயர், சட்டை, ஷூ , சாக்ஸ் எல்லாம் தருவாங்க. அதுக்குத்தான்" என சொன்னான். எனக்கு தெரிந்து வெள்ளை யூனிஃபாம்ல விளையாடும் விளையாட்டு அரசியல் மட்டும் தான். சரி நம்ம பையன் டென்னிஸ்ல கலக்க போறான் போலிருக்கு. போகட்டும். இப்பவே டென்னிஸ் எல்லாம் விளையாடினா பிற்காலத்தில் மகேஷ்பூபதி போல ஆடினா ஒன்னுக்கு ஐந்து மருமகளா கிடைக்கும். வீட்டுல குத்து விளக்கில் ஆளுக்கு ஒரு முகமா ஏத்தலாமே என சந்தோஷமாக கொடுத்தேன்.

ஸ்போர்ட்ஸ் டே அன்று காலை ஆறு மணிக்கே எழுந்து அவன் அம்மாவோடு போய்விட்டான். பிராக்டிஸ் எல்லாம் இருக்குதுன்னு. நாம் மெதுவாக எழுந்து ஒரு ஒன்பது மணிக்கு ஸ்கூல் பக்கம் போனேன். வாசலில் நின்னு வாங்க வாங்க வெல்கம் வெல்கம் என கூப்பிட்டு கொண்டே பன்னீர் தெளித்தான். வலது பக்கம் ஐந்து பையன்கள் எல்லாரும் இவன் சைஸ்ல. இடது பக்கம் ஐந்து பெண் குழந்தைகள். எல்லாருமே பாரதிராஜா குரூப் டான்சர் மாதிரி வெள்ளை கலரில். அடப்பாவமே என்னிடம் 500 வாங்கிட்டு இங்க வந்து "வாங்கோ மாமி" வேலை பார்க்கிறானே. இதுக்கு பள்ளிக்கு எதிரே இருக்கும் அனுக்ரஹா மண்டபத்துக்கு போய் "வாங்கோ மாமி, காபி சாப்டேளா? டிபன் சாப்டேளா?"ன்னு கேட்டாலாவது திரும்பி வரும் போது அவங்க பாக்கெட்ல 500 வச்சு அனுப்பியிருப்பாங்க.500 ரூபாய் கொடுத்துட்டு குத்து விளக்கில் ஐந்து முகத்துக்கும் முகத்துக்கு ஒன்றாக ஐந்து மருமகள் எதிர்பார்த்தது எல்லாம் கொஞ்சம் ஓவர் தானோ? கடவுள் கபால் கபால்ன்னு மண்டையிலே அடிக்கிறான் இப்பல்லாம்.பரிசு கூட கொடுத்தாங்க. ஒரு எவர்சில்வர் சோப்பு டப்பா. ஆக 500 ரூபாய்க்கு ஒரு சோப்பு டப்பா. ஹும்...

நான் அந்த அக்னிநட்சத்திர பிரபு பி டி சாரை கேட்டேன். "என்ன சார் எதுனா ஓட்ட பந்தயத்துல இவனை ஓட வச்சு கலந்துக்க வச்சிருக்க கூடாதா'ன்னு. அதக்கு அவர் " சார் அவன் செலக்ஷன்ல டார்கெட்டை ரீச் பண்னலை சார். ஐந்தாவதா வந்தான்" என சொன்னார். அதுக்கு நான் "இல்லியே நல்லா ஓடுவானே சார். நீங்க எதுக்கும் க்ளாஸ் ரூம்ல இருந்து ஸ்கூல் கேட் தான் டார்கெட்ன்னு சொல்லிப்பாருங்க" என்றேன். இன்றைக்கு அவர் முறைத்தார். அப்பாடி இந்த ஒரு வருஷமா நான் முறைத்ததுக்கு அன்றைக்கு தான் அவரும் முறைத்தார். சந்தோஷம்.

மொத்தத்தில் இந்த வருஷ நட்ராஜ் படிப்பினாலே நான் தெரிந்து கொண்டது ஒரு ஆங்கில ரைம்ஸ் தான். எனக்கெல்லாம் 3ம்பு படிக்கும் போது தான் ரைம்ஸ். மொத்தமே நாலுதான். பாபா பிளாக் ஷீப் எல்லாம் பெருசா(?) இருந்ததால் எனக்கு அந்த "ஆக்ராஸ் பன்னு ஆக்ராஸ் பன்னு ஒன்னே பெண்ணே டூயே பெண்ணே ஆக்ராஸ் பன்னு" என குருட்டாம் போக்கில் படித்த முதல் ஆங்கில ரைம்ஸ் தப்பு என இப்போது தான் தெரிந்து கொண்டேன். அது அப்படி இல்லையாம். hot cross buns, hot cross buns, one a penny, two a penny, hot cross buns, if you have no daughters, give them to your sons. one a penny two a penny hot cross buns" இப்படியாக இருக்கு அந்த ரைம்ஸ். ரொம்ப தப்பு தப்பா படிச்சுட்டனோ?

அது போல அவன் தமிழ் ரைம்ஸ்ல
"நான் தான் குழந்தை வேலன்
நாய் தான் எனக்கு தோழன்
என்னை விட்டு நீங்காது
எப்போதுமே தூங்காது
முரடன் வந்தால் கடிக்கும்
திருடன் வந்தால் பிடிக்கும்"

என்ற ரைம்ஸ் படிச்சுட்டு என்னிடம் அவன் "அப்பா வேலன்னா நம்ம அண்ணாச்சியா?"ன்னு கேட்க அவன் ரைம்ஸ் எதையும் கவனிக்காத நான் "ஆமாம்டா வேலன் அண்ணாச்சி தான். நான் தான் அவருக்கு தோழன் தெரியுமா?" என கேட்க அபி இடி இடி என சிரிக்க என்னவோ உள்குத்து இருக்கு போலிருக்கே என நினைத்து பின்னர் தான் அந்த பாடலை படிக்க சொல்லி கேட்டேன். ச்சே... இப்படித்தான் எப்போதும் நானே வாயை குடுத்து வாங்கிகட்டிக்கிறேன். இனி ஜாக்கிரதையா இருக்கனும்:-))

ஆக இப்படியாக ஒரு வருஷம் முடிந்தது. பள்ளி முடிந்த நாள் அழைத்து வரும் போது "தம்பி இப்ப எல் கே ஜி - சி படிச்சு முடிச்சுட்ட. அடுத்த வருஷம் என்ன படிக்க போறே"ன்னு கேட்டேன். படார்ன்னு பதில் சொன்னான். எல் கே ஜி - டி... ரைட்டு....

10 comments:

  1. //"ஆமாம்டா வேலன் அண்ணாச்சி தான். நான் தான் அவருக்கு தோழன் தெரியுமா?" //
    aiyo abi appa, chanceless,sema ROFL

    ReplyDelete
  2. யோவ்,

    நீரு ஆப்பு வாங்க நான் தான் கிடைத்தேனா?

    ஆனா தொல்ஸுக்குத் தோழன்னு சொல்றதவிட நட்டுக்கு தோழன்னு சொன்னத்தான் எனக்குப் பெருமை.

    “தொல்காப்பியன் வீடு எது”ன்னா யாருக்கும் தெரியலை. ”அவருக்கு அபி, நடராஜ்னு ரெண்டு குழந்தைங்க”ன்னு சொன்னா, “அட நம்ம நட்டு வீடு
    ‘ன்னு அடையாளம் காட்டுறாங்க. அவ்வளவுதான் உங்க பவர் :-))))))))))

    ReplyDelete
  3. என்ன இருந்தாலும் நட்டு உங்களுக்கு தரும் inspirationukku நீங்க அவனுக்கு நன்றி சொல்லியே ஆகணும் .
    All the best Nattu.

    Shobha

    ReplyDelete
  4. அப்பா மாதிரியே இருக்கான் .. கடைசியில் hot cross buns, hot cross buns, one a penny, two a penny, hot cross buns, if you have no daughters, give them to your sons. one a penny two a penny hot cross buns" கத்துகிட்டீங்களா ? கண்ணப்பன் சார், புவனா டீச்சர், சசிகலா டீச்சர் எல்லோரும் சந்தோஷமாக இருப்பாங்க ( ஏன்னா அவங்கதான் மூணாவதுக்கு
    டீச்சர்) அக்னிநட்சத்திரம் லெவலுக்கு எல்லாம் நீங்க யோசிக்காதீங்க !!!!!!

    ReplyDelete
  5. "ஆமாம்டா வேலன் அண்ணாச்சி தான். நான் தான் அவருக்கு தோழன் தெரியுமா?" Lol:-) Therthal juram ellam kurainju, romba nalaiku appuram oru nalla pathivu :-)

    ReplyDelete
  6. :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  7. lkg d cute..all the best kuttipayanukku...
    nallaa irukku

    ReplyDelete
  8. "ஆமாம்டா வேலன் அண்ணாச்சி தான். நான் தான் அவருக்கு தோழன் தெரியுமா?" என கேட்க அபி இடி இடி என சிரிக்க .................,


    நானும் தான் .....,

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))