பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 15, 2011

லேவாதேவியும் ரமாதேவியும்!!!

அப்பா அந்த முன்னூத்தி சொச்சம் பணம் தீபவளி போனசாக வாங்கி கொண்டு வீட்டில் நுழைந்ததும் எங்களுக்கு உற்சாகம் தாங்கலை. ஏன்னா அதன் பின்னே தான் ட்ரஸ் எல்லாம் வாங்கனும். பலகாரம், வெடி எல்லாமே அதன் பின்னர் தான். அப்போது நாங்கள் அதாவது அக்கா ரெண்டு பேர் நான் என் தம்பி எல்லாருமே குழந்தைகள். அப்போ முன்னூறு ரூபாய் எதேஷ்டம் ஒரு தீபாவளியை நல்ல படியா அனுப்பி வைக்க. அதை கொண்டு வந்து சாமி படம் முன்னே வைத்து விட்டு அப்பா கொஞ்சம் ஆசுவாசமாய் உட்காந்து இருக்கும் போது தான் அந்த எலிக்குட்டி மாமா வந்தார். அப்பாவோடு ஆபீசில் வேலை பார்ப்பவர். ஜெகஜ்ஜால கில்லாடி. தான் எதும் செய்யாமல் தன் வியாபார அபிலாஷை எல்லாம் மத்தவங்களை தூண்டி விட்டு அது சரியானால் தான் அவர் இறங்குவார் அதிலே.

எலிக்குட்டிமாமா அப்பாவிடம் "என்ன வைத்தா முள்ளங்கி பத்தை மாதிரி பணத்தை யாரோ நரகாசுரன் செத்ததுக்கா வேஸ்ட் பண்ணனும். இதை 3 வட்டிக்கு விட்டா மாசம் 9 ரூவா வட்டி வரும். மாசத்துக்கு விறகு கடை அக்கவுண்ட் சரிபண்ணிடலாமே. இல்லாட்டி அதை சேர்த்து வச்சா அதையும் கொஞ்சம் கொஞ்சமா வட்டிக்கு விட்டு ஒரு பெரிய பைனான்ஸ் ஆரம்பிக்கலாமே" என ஆசை காட்ட ஆரம்பத்தில் ஒத்துக்காத அப்பா "பைனான்ஸ் தொழிலதிபர்" ஆகும் ஆசையில் எங்களை கூப்பிட்டு 'நீங்க எல்லாம் ஒத்துழைச்சா அதாவது தீபாவளிக்கு ட்ரஸ் எதும் எடுத்துக்காம இருந்தா ஒரு ரெண்டரை வருஷத்துல இந்த பணம் அப்படியே இருக்கும். போட்ட காசு வட்டியாவே வந்துடும். பின்னே அதையும் விட்டா நாம ஓகோன்னு எங்கயோ போய்டலாம்" என சொல்ல எங்கம்மாவும் எழுத்தாளர் பைரவன் தங்கவேலு பொண்டாட்டி மாதிரி "ஆமாங்க எனக்கும் தொழிலதிபர் பொண்டாட்டின்னு சொல்லிக்க ஆசை தானே" என தாளம் போட சரின்னு நாங்களும் தொழிலதிபர் வாரிசாக ஆக ஆசைப்பட்டு ஒத்து கொண்டோம்.

அதல்லாம் சரி தான். தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்கூல் போகும் போது புது ட்ரஸ் எங்கேன்னு கேட்பாங்களே என்கிற மாபெரும் கவலை மட்டுமே எனக்கு இருந்தது. அதற்கு என் சின்ன அக்கா "டேய் கவலையை விடுடா. சின்ன தாத்தா செத்துட்டாங்க. அதனால தீவாளி இல்லைன்னு சொல்லிடலாம்" என சொல்ல எனக்கு தாத்தாவை தனியே சாகடிக்க மனம் இல்லாததால் பாட்டியும் உடன்கட்டை ஏறிட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம் என நினைத்து அப்பா தொழிலதிபர் ஆக ஓட்டு போட்டுவிட்டோம்.

வாய்வழி செய்தியாக அப்பா வட்டிக்கு பணம் கொடுக்க இருக்கும் செய்தி எலிக்குட்டி மாமாவால் பரப்பப்பட்டது. ஆனாலும் ஒருத்தன் கூட பணம் கேட்டு வரலை. அதுக்குள்ள வீட்டில் பைனான்ஸ்க்கு என்ன பெயர் வைப்பது என்கிற சர்ச்சை ஆரம்பம் ஆகிடுச்சு. அதுக்குள்ள என் பாட்டி "குடுத்து வாங்குற தொழில் தானே. அதுக்கு எதுக்கு பேர் எல்லாம் வைக்கனும்" என எக்குதப்பாய் கேட்க ஒட்டு மொத்த குடும்பமும் பாட்டியிடம் சண்டை. பைனான்ஸ்ன்னு அழகா டீசண்டா இங்கிலிசுல சொல்றத விட்டுட்டு குடுத்து வாங்குறதாம்ல குடுத்து வாங்குறது. ஒரு வழியா நம்ம மாயூரநாதர் பெயரிலே வச்சுடுவோம். வட்டி வாங்கின பாவம் எதுனா வந்துச்சுன்னா அந்த பாவம் அவருக்கே போகட்டும் என நினைத்து மாயூரம் பைனான்ஸ் என வைத்த போது தான் எலிக்குட்டி மாமா ஏற்கனவே ஒரு மாயூரம் பைனான்ஸ் பிரபல்யமாக இருக்குதுன்னும் சட்ட சிக்கல் வரும் என சொல்ல உடனே அவயாம்பாள் பைனான்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு கஸ்டமருக்காக காத்திருக்க தொடங்கினோம்.

வீட்டுக்கு எவன் வந்தாலும் அவன் வட்டிக்கு பணம் வாங்க தான் வந்திருக்கான் என காபி உபச்சாரம் எல்லாம் முடிந்து அவன் கிளம்பும் போது அப்பா "வேற எதுனா கேட்கனும்னு வந்தீங்க போல" என ஞாபகப்படுத்தியும் எவனும் பணம் கேட்பதாக இல்லை. ஒரு வழியாக எலிக்குட்டி மாமாவே ஒரு கஷ்டமரோடு வந்தாரு. அவரு கஷ்ட்டமர் இல்லை கஷ்டம் மட்டுமே என எங்களுக்கு அப்போ புரியவே இல்லை. வந்தவரு பக்தி பழமா இருந்தாரு. எலிக்குட்டி மாமா " வைத்தா இவரு பேரு முருகேசன். நம்ம தெற்கு வீதி தான். இவரு வீட்டு பத்திரம் எடுத்து வந்திருக்காரு அடமானமா" என சொல்லிய போது அப்பாவுக்கு படபடன்னு ஆகிடுச்சு. "என்னது வீட்டு பத்திரமெல்லாம் வேண்டாம்" என படபடக்க எலிக்குட்டி மாமா விட்டாலும் முருகேசன் விடுவதாக இல்லை. "இல்லீங்க நீங்க இதை கண்டிப்பா வச்சுகிட்டு தான் பணம் தரனும். ஆனா எனக்கு அவசர மொடை. ஒரு 500 ரூபா குடுத்தா வாங்கிப்பேன். இல்லாட்டி நான் நவநீதம் நாயுடு கிட்டே போய் பத்திரம் குடுத்துட்டு வாங்கிக்கறேன்" என சொல்ல அப்பா "அட அப்படில்லாம் சொல்ல கூடாது கொஞ்சம் இருங்க" என சொல்லி அம்மா வளையலை கழட்டி வாங்கிகிட்டு சைக்கிள் எடுத்துகிட்டு அதே நவநீத நாயுடு கிட்டே போய் இருநூறு வாங்கி வந்து முருகேசனிடம் ஐநூறு கொடுத்து விட்டு " மாசா மாசம் நான் பசங்க கிட்டே நோட்டு குடுத்து விடுறேன். நீங்க 15 ரூவா குடுத்துட்டு அதுல வரவு வச்சி குடுங்க" என கம்பேனி ரூல்ஸ் எல்லாம் சொல்லி அனுப்பி வச்சோம்.

ஆச்சு. முருகேசன் பணம் வாங்கிகிட்டு போயாச்சு. நாங்களும் தீபாவளியை தாத்தாவும் பாட்டியும் செத்ததா கணக்கு காட்டி சமாளிச்சாச்சு. அப்பா அந்த முருகேசனை எந்த கல்யாண வீட்டில் பார்த்தாலும் திரும்பிப்பதும், கூடுமான வரையில் அவர் இருக்கும் தெரு பக்கம் போகாமலும் இருந்தாங்க. பின்னே அவர் எதுனா கல்யாண வீட்டில் கல்ந்துகிட்டா அவரு சைக்கிளை எடுத்துட்டு போன பின்னே தான் அப்பா போவாங்க. அதாவது கலைஞரும்,எம் ஜி ஆரும் பொதுவான மபொசி வீட்டு கல்யாணத்துக்கு போவது போல. ஏன் இப்படின்னு அப்பா கிட்டே கேட்டப்ப அவங்க சொன்ன வியாக்யானம் அவங்க லேவாதேவிக்கு லாயக்கு இல்லை என்பதற்கான அறிகுறிகள் என்பது எங்க யாருக்கும் அப்ப புரியவில்லை. அதாவது இவங்களை பார்த்துட்டா "அய்யோ கடன் காரன் வந்துட்டானே" என அந்த முருகேசன் மனசு படாத பாடு படுமாம். பாவம் அதை தவிர்க்க தான் அப்பா முருகேசனை கண்டு ஒழிவதன் அர்த்தம். வெளங்கிடும்:-)

முதல் மாசம் பெரியக்காவும் சின்னக்காவும் ஒரு சின்ன நோட்டு எடுத்துகிட்டு வட்டி வசூலுக்கு போய் நோட்டை மாத்திரம் ஜாக்கிரதையா எடுத்து வந்தாங்க. இப்படியாக மாசா மாசம் போய் வெறும் கையோட வந்தாங்க. பின்னே பெரிய அக்கா ஸ்கர்ட்ல இருந்து பாவாடைக்கு மாறினதும் சின்ன அக்காவுக்கு என்னை ஜோடி சேர்த்து அனுப்பினாங்க. பின்னே சின்ன அக்கா ஸ்கர்டில் இருந்து பாவாடைக்கு மாறினதும் அது வரை தவழ்து கிட்டு இருந்த என் தம்பியை எனக்கு ஜோடியாக ஆக்கி நோட்டை குடுத்து அனுப்பினாங்க. இப்படியாக சுட்டி குழந்தையாக இருந்த நாங்க வளர்ந்து கிட்டே இருந்தோமே தவிர வட்டி குழந்தை எட்டி கூட பார்கலை. அந்த நோட்டு மாத்திரம் வாசனை மாறாம புதுசாவே இருந்துச்சு. ஒரு மாசம் கூட எண்ட்ரி போடலை அந்த முருகேசன்.

நானும் என் தம்பியும் நோட்டு எடுத்துகிட்டு போனா அந்த முருகேசனுக்கு பத்திகிட்டு வரும். அப்ப தான் அவரு பொண்ணு ரமாதேவிக்கு கணக்கு பாடம் சொல்லி குடுப்பாரு எங்களை நிக்க வச்சுகிட்டே. " ஒருத்தன் 500 ரூவா மூணு வட்டிக்கு வாங்கினா மாசம் எவ்வளவு வட்டி"ன்னு கேட்பாரு. அது திரு திருன்னு முழிக்கும். நான் மட்டும் மனசிலே "எண்ட்ரி போடாத வெறும் நோட்டு தான்" என நினைச்சுப்பேன். பின்னே எங்களை பார்த்து "போ போ " என அதட்டுவாரு. நான் அவரிடம் "அப்பா நோட்டிலே எண்ட்ரி போட்டு வாங்கியார சொன்னாங்க" என்பேன். அதை வாங்கி கிறுக்கி குடுப்பாரு. ஆசையாய் பிரித்து பார்ப்பேன். பாமாவிஜயம் நாகேஷ் மாதிரி "இல்லை மன்னிக்கவும்"ன்னு எழுதுவாரு. பின்னர் அந்த மன்னிக்கவும் எல்லாம் போய் "இல்லை" என எழுத ஆரம்பிச்சாரு.

பின்னே நான் ரமாதேவி மேல இருந்த கரிசனத்தால் அவங்க வீட்டுக்கு நோட்டு எடுத்து கிட்டு போகாமலே அவர் சொல்லும் அதே பதிலை அப்பா கிட்டே சொல்ல ஆரம்பிச்சேன். நாட்கள் ஓடிடுச்சுன்னு சொல்வதை விட வருஷங்கள் ஓடிடுச்சு. ஒரு நாள் எலிக்குட்டி மாமா வந்து " வைத்தா வட்டி எல்லாம் ஒழுங்கா வருதா?" என கேட்க வரலைன்னு சொன்னா அசிங்கமா போயிடுமேன்னு அப்பா "பின்னே பிரமாதமா வருது. முருகேசன் ஒன்னாம் நம்பர் யோக்கியன்" என "அ"வை ம்யூட் செஞ்சு குடுக்காத காசுக்கும் மேலே கூவ எலிக்குட்டி மாமா தலையை ஆட்டிகிட்டே போனாரு. ஒரு கட்டத்துக்கு மேலே அப்பாவுக்கு பயம் வந்துடுச்சு. ஊரான் வீட்டு பத்திரத்தை நாம வச்சுகிட்டு இருக்கோமேன்னு. பத்திரத்தை ஒரு மஞ்ச பையிலே போட்டு கிட்டு முருகேசனை தேடி போனாங்க. எப்படி சுத்தியும் முருகேசன் அப்பா கண்ணுல மாட்டலை. கிட்ட தட்ட ஆறுமாசம் அப்பா மஞ்சள் பை சகிதமா அலைய ஆரம்பிச்சாங்க. எல்லா நேரமும் கையில மஞ்ச பையோடவே இருந்தாங்க. எப்படி காந்தி சிலை அடையாளம் தெரிய கையிலே ஒரு கம்பு இருக்குமோ அப்படி அப்பாவுக்கு சிலை செஞ்சா ஒரு மஞ்சள் பை வச்சு செஞ்சா தான் அடையாளம் தெரியும் என்கிற அளவுக்கு அப்பா மஞ்சபை மைனராகிவிட்டாங்க:-)

ஒரு நாள் விடாம துரத்தி முருகேசனை ஒரு முட்டு சந்திலே மடக்கி "அய்யா ராசா இந்தா உன் வீட்டு பத்திரம். எனக்கு வட்டியும் வேணாம். அசலும் வேண்டாம்" என சொல்ல முருகேசன் "அட இதுக்கு தானே என்னை துரத்தி கிட்டு இருந்தீங்க. சரியான வீணா போன ஆளுங்க நீங்க. நான் கூட நீங்க காசு கேட்டு தான் துரத்துறீங்களோன்னு நினைச்சுட்டேன் என சொல்ல அப்பாவுக்கு என்ன சொல்வதுன்னே தெரியலை. "ஏன் உன் வீட்டு பத்திரம் உனக்கு முக்கியம் இல்லியா?" என கேட்க அதுக்கு முருகேசன் "அடடா நான் இந்த பத்திரம் காணாம போய்டுச்சுன்னு சொல்லி தாய் பத்திரம் காமிச்சு டூப்ளிகேட் வாங்கிட்டனே" என சொன்னாரு. அப்பா அப்பாவியாக "அது எப்போ?" என கேட்க "உங்க கிட்டே இதை வச்சு பணம் வாங்கினதுக்கும் அடுத்த நாளே" என சொல்ல அப்பா அமைதியாக "சரி போனது போவட்டும். நான் ஏமாந்தது ஏமாந்ததா இருக்கட்டும் இந்த டீலிங் நமக்குள்ள தான். நீ மாசா மாசம் வட்டி எல்லாம் தந்துகிட்டு இருக்கேன்னு எலிக்குட்டி கிட்டே எல்லாம் சொல்லிட்டேன். அதனால நீ அவன் கிட்டே இதை சொல்லிடாதே" என சொல்லிட்டு வந்துட்டாங்க.

வந்து வீட்டிலே உட்காந்து இருக்கும் போது எலிக்குட்டி மாமா சிரிச்சுகிட்டே வந்தாரு. "வைத்தா! ஒரு குட் நியூஸ். குருவி மாதிரி ஒரு 2000 ரூபா சேர்த்து வச்சிருந்தேன். இப்ப தான் முருகேசன் வந்தான். உன் கிட்டே இருந்து பத்திரம் மீட்டிட்டானாம். மாசா மாசம் வட்டி எல்லாம் ஒழுங்கா தந்தானாம். அது போலவே அசலையும் ஒழுங்கா தந்தாதானாம்.நீ கூட ஏற்கனவே அவன் மாசா மாசம் வட்டி எல்லாம் குடுத்தான்னு சொன்னேல்ல. என் கிட்டே அதே பத்திரம் எடுத்து வந்து அவசரமா 2000 கேட்டான். பத்திரம் வாங்கிட்டு என் பொண்டாட்டிக்கு தெரியாம குடுத்திட்டேன். நீ என்ன பன்ற இந்த பத்திரத்தை எடுத்து உன் வீட்டு பீரோவிலே வச்சுக்கோ. மாசா மாசம் உன் பையனை அனுப்பி நோட்டுல எண்ட்ரி போட்டு வட்டிய கலக்ட் பண்ணிடு. நான் வந்து வாங்கிக்கறேன்" என சொல்லி பத்திரத்தை கொடுக்க என் அப்பாவுக்கு மட்டும் அல்ல எனக்கும் மயக்கம் வந்துடுச்சு.


16 comments:

  1. எனக்கு ஒரு பெரிய சி வேணும் கிடைக்குமா அபிஅப்பா, வீட்டு பத்திரம் வேணா தரேன்

    ReplyDelete
  2. வாங்க டாக்டர்! எங்க அப்பா கிட்டே தான் கேட்கனும் நீங்க. ரொம்ப நல்லவங்க:-)))))

    ReplyDelete
  3. வளையலுக்கு கொடுத்த வட்டி எவ்வளவு? :)))

    ReplyDelete
  4. வாங்க சுல்தான் பாய்! வட்டிகட்டுனது விட அம்மா கிட்டே இருந்து வாங்கிகட்டிகிட்டது எவ்வளவுன்னு கேளுங்க சரியா இருக்கும்:-))

    ReplyDelete
  5. இதெல்லாம் சொந்தக் கத - சோகக்கத - மறந்து ரொம்ப நாளாச்சு - நல்லாவேஎ இருக்கு - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. அண்ணே... அது ஏன்ணே லேவாதேவின்னு பேர் வச்சாங்க..?! :)

    ReplyDelete
  7. i need 1Lakhs rendu veettu patthiram tharen

    ReplyDelete
  8. கலக்கல் அபிஅப்பா. இன்னும் பார்ட் டூ வரல்லை

    ReplyDelete
  9. :) நல்ல பகிர்வு.. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்பது உண்மை...

    ReplyDelete
  10. அட இதுதெரியாம போச்சே ...! இப்போவே ரெண்டு பத்திரம் ரெடி பண்ண சொல்லிடறேன் ;-)

    ReplyDelete
  11. இது உங்கள் வீட்டு வரலாறாக இருக்கலாம், ஆனால் எலிக்குட்டி மாமா சிக்கிக்கொண்ட திருப்பத்தைக் கொண்டுவந்து சொன்ன நேர்த்தியால் இதை ஒரு சிறுகதை ஆக்கிவிட்டீர்கள். சிக்கலில் இழுத்துவிட்டவரைச் சிக்கல் தானாக இழுத்துக்கொள்ளும் என்னும் அறவழியையும் காட்டி இருக்கிறீர்கள். நல்ல எழுத்து! வாழ்க!

    ReplyDelete
  12. எலிக்குட்டி மாமா என்ன ஆனார்?
    அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  13. பதிவு நல்லா இருந்தது..! உங்களோடு எழுத்து நடை வித்தியாசமா இருக்கு.! வாத்துக்கள்.. சார்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))