பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 21, 2012

உடன்பிறப்புகளுக்கு தலைவர் எழுதிய கடிதம் இல்லை இது, ஒரு உடன்பிறப்பு தலைவருக்கு எழுதிய கடிதம்!!!



பொதுவாக 'முரசொலி' யில் உடன்பிறப்புகளுக்கு தலைவர் எழுதும் கடிதம் வரும். பார்த்தும் இருப்பீர்கள். ஆனால் முதன் முதலாக ஒரு உடன்பிறப்பு தன் தலைவருக்கு எழுதிய கடிதம் பார்த்தது உண்டா?


என் தலைவரை பற்றி சிந்தித்தால் சந்தோஷம், என் தலைவரை பற்றி பேசினால் சந்தோஷம், என் தலைவரை பற்றி எழுதினால் மிக்க சந்தோஷம். இது ஒரு கடிதம். மிக மிக சாதாரண கடிதம்.ஆனால் இது ஒரு உணர்சிக்குவியல்.  இரண்டு நாட்கள் முன்னதாக "முரசொலி"யில் வந்த கடிதம். ஆனால் அந்த கடிதம் 'எடிட்' செய்யப்பட்ட கடிதம். என் தலைவன் கிட்ட இருந்து அவரை கவனிப்பவர்களுக்கு தெரியும். அவருக்கு 90 வயதா? டீன் ஏஜ் வயதா என்பது? அவருக்கு ஈடாகுமா இப்போ இருக்கும் டம்ளர் குரூப்ஸ்? முதலில் கிட்ட வாங்கடா, அவருக்கு சரிசமமா கபடி ஆடுங்கடா என சொல்ல தோன்றும்.

விரைவில் இன்னும் பத்தே வருடம் என் தலைவனின் நூற்றாண்டு வரும். அதில் கூட என் தலைவன் எங்களை ட்ரில் வாங்க போகின்றார். "வாழ்க வசவாளர்கள்" என சொல்லிவிட்டு நாங்கள் எங்கள் அடுத்த கட்ட பயணம் செய்ய தயாராகிவிட்டோம். எங்களுக்கு அவருக்கு சமமாககூட இல்லை. அவரின் ஓரளவுக்காவது சுறு சுறுப்பு வேண்டும். இதோ தோழர் அசன் முகமது ஜின்னா அவர்கள் எங்கள் தலைவருக்கு எழுதிய 'எடிட்' செய்யப்படாத கடிதம். அவரது அனுமதி கேட்டா கொடுக்க மாட்டார் என எனக்கு தெரியும். இருந்தாலும் சிறிய மனஸ்தாபத்துடன் இதை அனுமதிப்பார் என்று தெரிந்தே இதை இங்கே பெருமையுடன் வெளியிடுகிறேன்! இதோ அவரது கடிதத்தை படியுங்கள்

!
*************************************


உயிரினும் இனிய தலைவர் அவர்களுக்கு, வணக்கம்.


உலகத்தின் பார்வை உங்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. உண்மைத் தமிழினம் உங்கள் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கிறது. ஏசுவோர்-ஏளனம் செய்வோர்-எதற்கும் உதவாதோர் எத்தனை விமர்சனங்களை வைத்தாலும், எதிர்ப்புகளையும் தடைகளையும் ஏற்படுத்தினாலும் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் தங்களின் மனஉறுதிக்குக் கிடைத்த வெற்றிதான் டெசோ மாநாடு. தங்கள் பொதுவாழ்வுப் பயணத்தின் நெடுகிலும் எந்தத் தமிழினத்திற்காகக் குரல் கொடுத்து வருகிறீர்களோ, அந்தத் தமிழினத்தின் நிலையை உலக நாடுகளின் கவனத்திற்கும் ஐ.நா. அவையின் பார்வைக்கும் கொண்டு சென்று, நிரந்தரத் தீர்வு காண்பதற்கான பெரும்பணியை மேற்கொண்டுள்ள டெசோ அமைப்பின் மாநாட்டில் தங்களுடனும் தளபதியுடனும் அருகிலிருந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை என் வாழ்நாளின் சிறந்த தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

இமயத்தைத் தோளில் சுமப்பது போன்ற கடினமானப் பணியை, குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாயின் கவனத்துடன் தாங்கள் செயலாற்றியதை எண்ணி எண்ணி வியக்கிறேன். ஜூலை 4ஆம் நாள் கழகத்தின் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம். தமிழகச் சிறையின் கொள்ளளவைவிட 4 மடங்கிற்கு கழகத்தினர் தமிழகம் முழுவதும் போராட்டக் களம் கண்டதால், ஆட்சியாளர்கள் அஞ்சி நடுங்கி, அனைவரையும் மாலையிலேயே விடுவித்தனர். அந்தப் போராட்டத்தில் பங்கேற்று விடுவிக்கப்ட்ட நான், தங்களைக் காண வருகிறேன். தமிழகம் முழுவதுமிருந்தும் போராட்ட வெற்றிச் செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வெற்றியில் இரண்டொரு நாட்களாகவது திளைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் யாருக்குமே ஏற்படும். ஆனால், தலைவரோ, அந்த வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியளித்துவிட்டு, வழக்கம்போல் கழகப்பணியில் ஈடுபட்டதுடன், என்னைப் போன்றவர்களிடம் டெசோ மாநாட்டுப் பணிகள் எந்தளவில் இருக்கிறது என்று கேட்டீர்கள். அடுத்த களம் எது, அதில் வெற்றி காண்பது எப்படி என்று சிந்திக்கின்ற தங்களின் போர்க்குணம் என்னைக் கூனிக் குறுகச் செய்தது.

டெசோ மாநாட்டிற்கும் ஆய்வரங்கற்கும் வருவதற்கு ஒப்புதல் தெரிவித்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பட்டியலைக் கேட்டு, அவர்களின் வருகை குறித்த விவரங்களை என்னிடம் விசாரித்தீர்கள். இலங்கைத்தமிழ்ப் பிரதிநிதிகளை அழைத்து வரும் பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் அது பற்றிய விவரங்களைக் கேட்டறிகிறீர்கள். மாநாடு தொடர்பான மற்ற பணிகள் குறித்து கழக நிரவாகிகளிடம் உத்தரவிடுகிறீர்கள். ஓய்வு என்ற ஒரு சொல்லே உங்கள் அகராதியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதோ என்று ஆச்சரியப்பட்டு நின்றேன்.

ஜூலை 20ஆம் நாள் மாலை 6 மணிக்கு அறிவாலயத்திற்குத் தலைவர் வந்துவிடுவார் என்று முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. நாங்களும் அங்கு வந்து காத்திருக்கிறோம். 6 மணி என்றால் எப்படியும் 7 மணியாவது ஆகும் நம் தலைவர் வருவதற்கு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மிகச்சரியாக 5.59க்கு அறிவாலயம் வாசலில் உங்கள் கார் வந்து நிற்கிறது. வழக்கமாக வரும் பாதுகாப்புக்கான பூனைப்படையினரைக் காணவில்லை. அவர்கள் தங்கள் இல்லத்திற்கு வந்து சேராத நிலையிலும், மாநாட்டுப் பணிகள் பற்றி ஆலோசிக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்றதும் பாதுகாப்பு பற்றிக்கூடக் கவலைப்படாமல் அறிவாலயத்திற்கு வந்துவிட்டீர்கள். எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கழக நிர்வாகிகள் வரத் தாமதமானாலும் குறித்த நேரத்தில் தளபதி வந்துவிடுவது வழக்கம். அந்த வழக்கம், எங்கிருந்து அவருக்குப் பழக்கமானது என்பதை அன்று புரிந்துகொள்ளள முடிந்தது.

தங்களிடம் ஒவ்வொரு நாளும் பாடம் கற்றுக்கொள்ள எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகவே டெசோ மாநாட்டுப் பணிகள் அமைந்தன. ஜூலை 24ந் தேதியன்று ஆலோசனைகள் முடித்து தாங்கள் புறப்படும்போது, என்னையும் தங்கள் காரில் ஏறிக்கொள்ளச் சொன்னீர்கள். எனக்கு இன்ப அதிர்ச்சி. தயங்கி நிற்கிறேன். அப்போது நீங்கள், “பாதியில் இறக்கிவிட்டுவிடுவேன்னு பார்க்குறியா?” என்று கேட்கிறீர்கள். “நீங்கள் எங்களை ஒருபோதும் பாதியில் இறக்கிவிடமாட்டீங்கய்யா” என்று என் நெஞ்சத்து வார்த்தைகள் உதட்டின் வழியே வெளிப்பட்டன. என் தந்தை அசன் முகமது அவர்கள் தங்களோடு காரில் பயணித்திருக்கிறார். கழகத்துடனான எங்கள் குடும்பத்தின் பயணம் இன்றும் என்றும் தொடரும். தாங்களோ தளபதியோ ஒரு போதும் பாதியில் இறக்கிவிட்டுவிட மாட்டீர்கள் என்பதைத்தானே எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக இந்த இயக்கத்தில் பயணிப்பது காட்டுகிறது.

கார் பயணத்தின்போது நான் தயக்கத்துடனும் அமைதியுடனும் உட்கார்ந்திருக்கிறேன். ஆனால், தலைவர் நீங்களோ தங்கள் அனுபவத்தில் சிறு துணுக்கு அளவுகூட இல்லாத என்னிடம் கருத்தகளைக் கேட்கிறீர்கள். இந்திய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி அவர்கள் வெற்றி பெற்ற செய்தி பற்றி பேச்சு வருகிறது. சுதந்திர இந்தியாவில் குடியரசுத் தலைவர்களாக பதவியேற்வர்களில் 7 பேர் தலைவரின் முயற்சியாலும் ஆதரவாலும்தான் குடியரசுத் தலைவர் ஆனார்கள் என்று நான் சொன்னதும், அவ்வளவு இருக்காதே? என்கிறீர்கள். நான் வரிசையாக ஒவ்வொரு பெயரைச் சொல்ல, தாங்கள் விரல் விட்டு எண்ணியதும், அதன்பிறகு அந்தத் தேர்வுகள் குறித்த தங்களின் விளக்கங்களும், தாங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் எத்தனை கவனத்துடன் இருக்கிறீர்கள் என்பதை எனக்கு உணர்த்தியது.

ஒரு நாள் கேபாலபுரத்தில், டெசோ மாநாட்டில் ஒலிபரப்புவதற்கான ஈழத்தமிழர் துயர் துடைப்புப்பாடலின் ஒலிப்பேழையைத் தலைவர் அவர்களோடு நாங்களும் கேட்கிறோம். தாங்கள் சொல்லியிருந்த திருத்தத்தை செய்துமுடித்து பேராசிரியர் சுப.வீ அவர்கள் அந்த ஒலிப்பேழையைக் கொண்டு வந்து போட்டுக் காட்டுகிறார். இருட்டறையில் உள்ளதடா ஈழம் என்று தொடங்கும் தலைவரின் பாடலைக் கேட்கும்போது நெஞ்சம் விம்மி, கண்கள் கலங்குகிறது அனைவருக்கும். அதில் ரத்தம் கொதிக்கிறதே என்பதற்குப் பதில் ரத்தம் துடிக்கிறதே என்று இருக்கிறது. தாங்கள்தான் அதை சுட்டிக்காட்டுகிறீர்கள். ஆனால், அங்கே தங்களோடு அந்தப் பாடலைக் கேட்ட அண்ணன் எ.வ.வேலு, அண்ணன் க.பொன்முடி, அமைப்புச்செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம் உள்ளிட்ட எல்லோருமே ‘ரத்தம் கொதிக்கிறதே’ என்றுதான் இருக்கிறது என்கிறார்கள். தங்கள் உதவியாளர் நித்யாவை அழைத்து, ரீவைண்ட் செய்து போடச் சொல்கிறீர்கள். அப்போதுதான் எல்லோரும் கவனமாகக் கேட்கிறார்கள். தாங்கள் சொன்னதுபோல, ‘ரத்தம் துடிக்கிறதே’ என்றுதான் அதில் இடம்பெற்றிருந்தது. செய்யப்பட்ட திருத்தம் பதிவாகவில்லை என்பதை சுப.வீ உள்ளிட்ட எல்லோரும் உணர்கிறார்கள். ஒற்றை வார்த்தைகூட தப்பிப்போய்விடாதபடி தாங்கள் எவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள் என்பதைக் கண்டு வியந்தேன்.

உடல்நலன் பற்றி கவலைப்பட்டுக்கொண்டோ, இந்த வேலையையெல்லாம் நாம் கவனிப்பதா என்று அலட்சியம் காட்டுவதோ இல்லாமல் மாநாட்டின் ஒவ்வொரு பணியையும் உங்கள் மேற்பார்வையில்தான் நிறைவேற்றினீர்கள். மாநாட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் போதுமானதாக இருக்காது என்று சொல்லப்பட்டவுடன், தளபதியிடம் தொண்டர் படையை உருவாக்கும்படி கூறினீர்கள். தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி பாயுமே! தளபதி உருவாக்கிய தொண்டர் படைதான், போலீஸ் பாதுகாப்பே இல்லாத டெசோ மாநாட்டில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாதபடி பாதுகாத்து, போக்குவரத்து நெருக்கடியில்லாமலும் தவிர்த்தது.

எனது நண்பர் திருவண்ணாமலை நேரு நட்பு முறையில் சில ஆலோசனைகளை எனக்குச் சொல்வார். “எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். உங்கள் இலக்கிலிருந்து கவனம் சிதறிவிடும். விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அதைப் புறக்கணித்து நம் செயல்களைத் தொடரவேண்டும் விமர்சனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் செயல் தேங்கிவிடும். தேங்கி நிற்கின்ற எதுவுமே தீங்குதான். ஆறுபோல ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் அனைவருக்கும் பயன் தரும்” என்று சொல்வார். தலைவரிடம் அதை அனுபவரீதியாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

காலி டப்பாக்களில் கல்லைப் போட்டு உருட்டியதுபோல வாய்ப்பேச்சு வீரர்கள் எப்படியெல்லாம் விமர்சித்தார்கள். அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, டெசோ மாநாடு வெற்றிபெற்றிருக்கிறது என்றால் அதற்குத் தலைவரின் ஓய்வறியா செயலாற்றலே காரணம். நிச்சயமாக வெற்றி பெறமுடியும் என்கிற போர்க்களத்தில் யாரும் இறங்கலாம். இந்தக் களம் கடினமானது என்றும் இது பெருஞ்சோதனை என்றும் சொல்லப்படும் நேரத்தில் அந்தக் களத்தில் இறங்கி, வெற்றியை உறுதி செய்வதற்குப் பெயர்தான் பேராற்றல். இன்று அந்தப் பேராற்றலைக் கொண்ட ஒரே தலைவர் நீங்கள் மட்டும்தான்.

என் தந்தை அசன் முகமது அவர்கள் முரசொலியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவங்களைப் பல முறை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். தலைவர் அவர்களிடமிருந்து போன் வந்தால், யார் அதை எடுத்துப் பேசுவது என்று தயங்குவார்களாம். காரணம், தலைவர் என்ன மனநிலையில் இருக்கிறார்? எப்படிப் பேசுவார்? திட்டினால் என்ன செய்வது? என்பதுதான் தயக்கத்திற்குக் காரணமாக இருக்குமாம். எந்தளவுக்கு நியாயமான கோபம் இருக்கிறதோ, அதைவிட அதிகமான அளவுக்கு உயர்ந்த குணமும் நகைச்சுவை மனமும் தலைவரிடம் உண்டு என்பதை என் அப்பா சொல்லியிருக்கிறார். டெசோ மாநாட்டுப் பணிகளின் போது தங்கள் அருகிலிருந்து அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

தாமதமாகும் பணிகளைப் பற்றி அறிந்ததும் தங்களிடமிருந்து சீற்றமான வார்த்தை வெளிப்படும். அடுத்த சில நிமிடங்களில், வேறொரு பணி சிறப்பாக நிறைவேறியதற்காகப் பாராட்டான வார்த்தைகள் இயல்பாக வரும். டெசோ லெட்டர் பேடில் மாநாட்டின் மைய நோக்கம் குறித்து சுருக்கமாக எழுதவேண்டும். எப்படி எழுவதும் என்று எல்லோரும் குழம்பிக்கொண்டிருந்தபோது, தலைவர் வந்தீர்கள். அந்த லெட்டர் பேடை வாங்கினீர்கள். அடுத்த 5 நிமிடத்தில் தெளிவான-விரிவான நோக்கத்தை வெளிப்படுத்தும் வார்த்தைககளால் குறிப்பை எழுதிக் கொடுத்தீர்கள். மாநாட்டின் தீர்மானங்கள், விளக்கவுரைகள் இவை தொடர்பாக இரவு 3 மணியளவில் கூட குறிப்புகளை எடுத்தவர் நீங்கள் என்பதை அறிவேன். அந்தக் குறிப்புகளைப் பதிவு செய்யும்படி உதவியாளர் நித்யாவிடம் தாங்கள் கூறியபோது, அந்த நேரத்தில் பேப்பர் இல்லை என்கிற நிலவரத்தை அவர் சொல்ல, ”பேப்பர் இல்லையா, உனக்குத் தூக்கம் வருகிறதா?” என்று கேட்டு, விழிப்பை உண்டாக்கியவர் நீங்கள்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு பற்றி தங்களிடம் சொல்லப்பட்டதும், அதன் செயல்பாடு பற்றிக் கேட்டீர்கள். போர்க்களத்தில் சிக்கியவர்கள்-சிறைப்பட்டவர்கள் ஆகியோருக்குத் துணை நிற்பது என்று தங்களிடம் சொன்னார்கள். உடனே தாங்கள், “இதைத்தானே பெருஞ்சோறளித்த சேரலாதன் என்று இலக்கியம் சொல்கிறது. அவன் போர்க்களத்தில் சிக்கியவர்களுக்கு சோறும் நீரும் அளித்தவனாயிற்றே!“ என்று சொல்லி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழினம் எத்தகைய சிந்தையும் செயல்பாடும் கொண்டிருக்கிறது என்பதை என்னைப் போன்ற இளையவர்களுக்கு உணர்த்தினீர்கள். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் என்ற அய்யன் வள்ளுவரின் வரிகளுக்கேற்ப, டெசோ மாநாட்டுப் பணிகளில் எதனை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்து ஒப்படைத்து, அனைத்தையும் ஒருங்கிணைத்து வெற்றிகாணச் செய்ததது தாங்கள்தானே!

மாநாட்டில் பங்கேற்ற உலகநாடுகளின் தலைவர்கள் அனைவரும், இத்தனை வயதில் இப்படி உழைக்கும் ஆற்றல்மிக்க ஒரு தலைவரை நாங்கள் கண்டதில்லை என ஆச்சரியத்தோடு சொன்னார்கள். மலேசியாவிலிருந்து வந்திருந்த அந்நாட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த யுஸ்மாடி யூசுஃப், அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்குதத் தேர்தல் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அவர் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியபோது, தமிழக காவல்துறையினர் தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். மாநாடு ரத்தாகிவிட்டது. நீங்கள் திரும்பிப்போகவேண்டும் என்று சொல்ல, “நான் திரும்பிச் சென்றால் இரண்டு நாடுகளிடையே பிரச்சினை ஏற்படும். ஏன் நான் திரும்ப வேண்டும் என்பதை எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். அதன்பிறகுதான் காவல்துறையினர் அவரை அனுமதித்திருக்கிறார்கள்.

தலைவரின் உழைப்பாலும் சிந்தனையாலும் உருவான வள்ளுவர் கோட்டத்தையும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருவூலத்தையும் பார்த்துவிட்டு, இதுவரை உலகளவில் எந்தத் தலைவரோடும் நான் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டதில்லை. ஆனால், உங்கள் தலைவரோடு  ஒரு படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று மனம் விட்டுச் சொன்னார்.

மலேசியாவின் எதிர்க்கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள அவரிடம், மாறிவந்தால் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி தருவதாக அந்நாட்டு ஆளுந்தரப்பு சொன்னபோதும் கட்சி தாவதா மனஉறுதி கொண்டவர் யுஸ்மாடி  யூசுஃ.ப். அவர் தங்கள் கட்சித் தலைவர் அந்நாட்டில் எதிர்கொண்ட அரசியல் அடக்குமுறைகள் பற்றி விளக்கினார். நாமும் நமது மாநிலத்தில் உள்ள அடக்குமுறைகளைச் சொன்னதுடன், கருவூலத்தில் உள்ள மிசா காலக் கொடுமைகள் பற்றிய பதிவுகளைக் காட்டி, தளபதி அவர்கள் ஓராண்டுகாலம் கடும் சித்ரவதைகளுடன் சிறைவாசத்தை எதிர்கொண்டதையும் விளக்கினோம். அதனால்தான் உங்கள் தலைவரும் தளபதியும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள என்றார் யூசுஃப்.

எமர்ஜென்சி காலத்தில் தளபதி எதிர்கொண்ட சித்ரவதைகளைப் பற்றி அறிந்த மொராக்கோ நாட்டைச் சேர்ந்த உண்மை மற்றும் நீதி ஆணையத்தின் தேசியத் தலைவர் அஃபெகோ முபாரக் மிகவும் வேதனையடைந்தார். காரணம், அவர் மொராக்கோ நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டபோது royal house எனப்படும் அரண்மனையில் இருந்த அஃபெகோ முபாரக்கும் அவரது குடும்பத்தினரும் மொத்தமாகக் கைது செய்யப்பட்டனர். அஃபெகோவின் தந்தைக்கு ராணுவ ஆட்சி 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அஃபெகோவும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் 4 ஆண்டுகாலம் சிறையில் அடைபட்டிருந்தனர். பிறகு, ராணுவ ஆட்சி நீங்கி unitral parliamentary constitutional monarchy என்கிற நாடாளுமன்ற ஆட்சி முறை மொராக்கோவில் அமைந்தபிறகே அஃபெகோவின் தந்தை, 11 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின் விடுதலையானார். ஆட்சியாளர்களின் பழிவாங்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அஃபெகோவுக்கு எமர்ஜென்சிக் காலக் கொடுமைகளும் அப்போது தலைவரும் குடும்பத்தினரும் பட்ட துன்பங்களும், தளபதி சிறைப்பட்டதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தலைவர் மீதும் தளபதி மீதும் அவருக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டதுடன், தளபதிக்கு கென்டகி கர்னல் விருது கிடைத்தது பற்றி மாநாட்டு மேடையில் பெருமையுடன் பேசினார்.

சுவீடன் சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்தவரான நசீம் மாலிக், நமது  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்து இங்கே வந்து தரையிறங்கினார். உலக நடப்புகள் பற்றியெல்லாம் விவாதித்தபடி வந்திருக்கிறார்கள. நசீம் மாலிக்கிடம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் எங்கள் கட்சி உள்ளது. பலநாடுகளில் ஆட்சியில் இருக்கிறது. எங்கள் கட்சி சார்பில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறதென்றால் யாரையும் வேலை வாங்கமாட்டோம். அந்த ஊரில் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் யார் இருக்கிறார்களோ அவர்கள் பிரதமராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்கள் டிராக் பேண்ட் போட்டுக்கொண்டு, தங்கள் மனைவி மற்றும் நிர்வாகிகளோடு வந்து, அந்த கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வார்கள் என்றார்.

நாங்கள் அவரிடம், கழகம் எப்படி ஒரு குடும்பம் போல செயல்படுகிறது என்பதையும், கழக ஏடான முரசொலியைத் தலைவர் தன் தலையிலும் தோளிலும் சுமந்து சென்றதையும், தளபதியும் ஒவ்வொரு ஊராகச் சென்று கழகத்தை வளர்ப்பதையும் எடுத்துச் சொன்னோம். நசீம் மாலிக் மிகுந்த ஆச்சரியமடைந்தார். தலைவரைப் பாராட்டி பரிசளித்ததுடன், வளர்ந்து வருகிற தலைவர் என்று தளபதியை மாநாட்டு மேடையில் அவர் பேசியதற்கு காரணம், தங்கள் இருவர் மீதும் ஏற்பட்ட மதிப்புதான்.

துருக்கி நாட்டைச் சேர்ந்தரான ஐ.நா. பன்னாட்டு ஆணையத் தூதர் கெமால் இல்திரிம்ஸ், பல்வேறு நாட்டு அதிபர்களை சந்தித்து விவாதிக்கக் கூடியவர். உலக அரசியல் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளவர். அவரும் கருவூலத்தைப் பார்த்து, தலைவரின் பொதுவாழ்வு செயல்பாடுகளைப் பார்த்து வியந்து, டெசோவின் வளர்ச்சியில் தன்னையும் ஒருவராக இணைத்துக்கொண்டு, அடுத்த டெசோ மீட்டிங்கை  அர்ஜென்டினாவில் நடத்துவோம் என்றார்.

ஈழப்பிரச்சினை தொடர்பாக ஐ.நா மனித உரிமை அவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த நாடான நைஜீரியாவிலிருந்து வந்திருந்த மேமோவும் தலைவரின் செயல்பாடுகளை அறிந்து வியந்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைத்து நாட்டினருமே தமிழகத்தில் இப்படியொரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காத்து இந்த இனத்தின் நலனுக்காகவே பாடுபட்டு வரும் தலைவரையும் அவருக்குத் துணை நிற்கும் தளபதியையும் மனதாரப் பாராட்டினர்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு, போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசின் மீது நிறைய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. அதற்கு இலங்கை அரசு பதில் தர வேண்டும் என்றும் நிர்பந்தித்துள்ளது. அத்தகைய அமைப்பின் தேசிய இயக்குநர் ஆனந்த் குருசாமி, டெசோ மாநாட்டிற்கு வருகிறார் என்றதும், அதை எப்படியாவது கெடுத்துவிடவேண்டும் என இங்கே ஈழப் பிரச்சினையைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் வியாபாரிகள் கடும் முயற்சிக் செய்தனர். ஆனால், அம்மெனஸ்டி இன்டர்நேஷனல் அமைப்போ, “எங்களுக்கு நோக்கம்தான் முக்கியம். எங்கள் கருத்தை எடுத்துச் சொல்ல ஒரு ப்ளாட்பார்ம் தேவை. எனவே நாங்கள் டெசோ மாநாட்டில் பங்கேற்பதை யாரும் தடுக்க முடியாது என உறுதியாகக் கூறிவட்டது.

ஈழத்தமிழர் நலனுக்காக யார் குரல் கொடுத்தாலும் ஆதரிக்கும் இயக்கம்தான் தலைவரின் தலைமையிலான தி.மு.கழகம். ஜெயலலிதா இதற்கு முன் என்னவெல்லாம் பேசியிருக்கிறார் என்பது தெரியும். ஆனாலும், அவர் ஆட்சியில் ஈழத்தமிழர் நலனுக்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த இயக்கம் தி.மு.க. ஆனால், தி.மு.கவை எதிர்க்கும் அமைப்புகளோ, ஈழத்தமிழர் நலனைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு, கழகத்திற்கு எதிராகவே செயல்படுகின்றன. ஈழத்தை வைத்து இங்கே பிழைப்பு நடத்தும் அவர்களால் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த பலன் என்று ஏதாவது ஒன்றைச் சொல்லமுடியுமா? வெறும் வாயை மெல்லுகிறார்கள். வெறுங்கையால் முழம் போடுகிறார்கள்.

தலைவரே உங்களின் உழைப்பின் பயனை மாநாடு தொடங்குவதற்க முன்பே உணர முடிந்தது. தாங்கள் எடுத்த நடவடிக்கை பல நாட்டு ஆதரவினைப் பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு, ஐ.நா. மனித உரிமை அவையின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடு. ஆனால், அந்நாட்டு அதிபரின் அரசியல் ஆலோசகர் அனுப்பிய வாழ்த்துச்செய்தியில், ‘டெசோவில் எங்களையும் இணைத்துக் கொள்கிறோம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதுதான் உங்கள் மாபெரும் முயற்சிக்கான முதற்கட்ட வெற்றி.

இப்படிப்பட்ட சிறப்புமிக்க மாநாட்டில் நானும் பணியாற்ற வாய்ப்பளிக்கும் வகையில், தளபதி தலைமையிலான வரவேற்புக் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராக நியமித்து, தங்கள கடிதத்தில் என் பெயரையும் குறிப்பிட்டு, மாநாட்டு மேடையில் மூன்று தீர்மானங்களைப் படிக்கும் வாய்ப்பையும் அளித்ததைக் காலம் உள்ளவரை நெஞ்சில் நன்றியுடன் நிலைநிறுத்தியிருப்பேன்.

துருக்கி நாட்டைச் சேர்ந்தரான இல்திரிம்ஸ் சென்னையிலிருந்து விமானம் ஏறும்போது, என் வீட்டை விட்டுப் போவது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என்று சொன்னார். அதுதான் நம் தமிழ் மண்ணின் பெருமை. அத்தகைய பெருமைமிக்க இனத்தின் உரிமைகளும் அடையாளங்களும் பறிபோய்விடக்கூடாது என்பதற்காகத்தான் தலைவர் அவர்கள் அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இனமானப் பேராசிரியரும் தளபதியும் தங்களுக்குத் துணைநிற்க, கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் உங்கள் பின்னே அணிவகுத்து நிற்கிறார்கள். அந்த உடன்பிறப்புகளில் ஒருவனான நான் பெற்ற வாய்ப்பையும் அனுபவத்தையும் நன்றியுணர்ச்சியுடன் பதிவு செய்யவேண்டும் என்பதாலேயே இந்த நீண்ட கடிதத்தை எழுதியுள்ளேன்.

என்றும் அன்புடன்

அசன்முகமது ஜின்னா
மாநில இளைஞர் அணி துணை செயலர்
திராவிட முன்னேற்ற கழகம் - தலைமை நிலையம்


8 comments:

  1. //காலி டப்பாக்களில் கல்லைப் போட்டு உருட்டியதுபோல வாய்ப்பேச்சு வீரர்கள் எப்படியெல்லாம் விமர்சித்தார்கள். அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, டெசோ மாநாடு வெற்றிபெற்றிருக்கிறது
    //

    மாநாட்டு தீர்மானத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என மத்திய அரசு சொல்லிவிட்டது .. எப்படி வெற்றி என சொல்கிறிர்கள் ? உங்கள் மாநாட்டில் தனி ஈழம் தான் தீர்வு என ஏதாவது தீர்மானம் உள்ளதா ? தனி ஈழத்தை ஆதரிக்கிர்ன்றிகளா ?இல்லையா ?

    இப்படிக்கு
    அரசியல் பற்றி கற்று கொள்ள துவங்கும் மாணவன்

    ReplyDelete
  2. //துருக்கி நாட்டைச் சேர்ந்தரான இல்திரிம்ஸ் சென்னையிலிருந்து விமானம் ஏறும்போது, என் வீட்டை விட்டுப் போவது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என்று சொன்னார். அதுதான் நம் தமிழ் மண்ணின் பெருமை.
    //

    ஆனால் பிரபாகரன் தாய் இங்கு வரவிடாமல் திருப்பி அனுப்பினோமே ?

    ReplyDelete
  3. //ஈழத்தை வைத்து இங்கே பிழைப்பு நடத்தும் அவர்களால் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த பலன் என்று ஏதாவது ஒன்றைச் சொல்லமுடியுமா?
    //

    சத்தியமான வார்த்தை .. இங்கு அனைத்து கட்சிகளும் ஒரே குட்டையில் தான்

    ReplyDelete
  4. krishnamoorthy thirunavukkarasuAugust 21, 2012 at 6:45 PM

    இனிமேல் முத்தமிழ் அறிஞர் , தமிழின தலைவரை பாராட்ட வேண்டும் என்றால் தமிழில் எதாவுது புது சொற்களை கண்டு பிடிக்க வேண்டும்..... அவ்வுளவு பெருமைக்கு உரியவர்... அவர் வாழ்கின்ற காலத்தில் நாம் வாழ்வது என்பதே நமக்கு பெருமை...

    ReplyDelete
  5. என்னடா இன்னும் நீ அடங்கலயா?

    ReplyDelete
  6. ஏய் அனானி பொட்டை தி மு க காரன் அடக்கத்தான் செய்வானே தவிர அடங்க மாட்டான்

    ReplyDelete
  7. தலைவரை பாக்கணும். சில விஷயம் பேசணும். முடியுமா முடியாதா?

    ReplyDelete
  8. நீயெல்லாம் ஏன் பொறந்த ?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))