பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 6, 2012

கலைஞரின் பிறந்த நாள் 5.12.2012 !!!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்த தருணம்

நேற்று நான் மயிலாடுதுறையில் இருந்தேன். நேற்றைக்கே இந்த பதிவு எழுதியிருப்பேன். எழுதும் மனோநிலை இல்லை. இன்று கொஞ்சம் மனம் ஆசுவாசம் அடைந்த பின்னர் எழுதுகிறேன். காரணம் கலைஞரை பற்றிய வதந்தி தான்:-(

நேற்று டிசம்பர் ஐந்து விடிகாலை 4 மணிக்கு தான் மன்னார்குடி எக்ஸ்பிரசில் வந்து சேர்ந்தேன். வந்ததும்  ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு குளித்து முடித்து மாயவரம் காற்றை சுகமாய் சுவாசிக்க வேண்டி காலை ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து கிளம்ப வண்டி எடுத்த போது தான் எங்கள் நகர் சந்திரனை பார்த்தேன். தீபாவளிக்கு பின்னர் அவரை பார்க்காமையால் "என்னங்க தீபாவளி எப்படி போச்சு" என குசலம் விசாரிக்க "நமக்கென்னங்க தீபாவளி எல்லாம். நமக்கு ஒன்லி பொங்கல் தான். பசங்க தான் வெடி வெடிக்கு காசை காரியாக்கினாங்க, சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம்" என சொன்னார். அதற்கு நான் "விடுங்க பசங்க ஆசைக்கு நாம ஏன் தடா போடனும். வாங்கி கொடுங்க. பின்னாளில் அவங்களே புரிஞ்சுகிட்டு திருந்திடுவாங்க, பாருங்களேன் எப்போதும் ஸ்வீட் வாங்கி வருவேன். இன்னிக்கு கடை திறக்கலைன்னு வாங்கி வரலை, என் பையன் ஏன் ஸ்வீட் வாங்கி வரலைன்னு என் கிட்ட கோவிச்சுகிட்டே ஸ்கூல் போயிருக்கான்" என சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

இப்படித்தான் ரொம்ப இயல்பான பொழுதாய் அந்த நாள் ஆரம்பித்தது.  வண்டியை எடுத்து  சின்ன மாரியம்மன் கோவில் அருகே வரும் போது அந்த போன் வந்தது. என் நண்பன் ஒருவன் தான். சென்னையில் இருந்து போன் வந்தது.

"நீ எங்க இருக்க?" - அவன்

"மாயவரம் வந்தேன். என்ன விஷயம்"

"ஒண்ணும் இல்லை. சும்மா தான். எதுனா விஷயம் இருக்கா?"

"இல்லியே. ஏன்? நீ தானே போன் செஞ்சே. நீதான் விஷயம் சொல்லனும்"

"ஒண்ணுமில்லை. வச்சிடவா"

"ம் வச்சிடு"

"டேய்.. வந்து"

"சொல்லுடா"

"ஒண்ணுமில்லை. போனை வச்சிடு"

வைத்து விட்டான். எனக்கு குழப்பம் அதிகமாகியது. மீண்டும் வண்டிய எடுத்தேன். மீண்டும் போன். பக்கத்தில் சியாமளாதேவி ஆலயம் வந்துவிட்டது. அங்கே வண்டிய நிறுத்தி போனை எடுத்தேன்.

"அபிஅப்பா எங்க இருக்கீங்க?" இது அடுத்த ஒரு  இணைய உடன்பிறப்பு.

"நீங்க எங்க இருக்கீங்க? நான் மாயவரம்"

"நான் மகாபலிபுரம். சரி இங்க ஒரு ரூமர் ஓடிகிட்டு இருக்கு"

"என்ன ரூமர்?" குரலில் கொஞ்சம் பதட்டம் எனக்கு. மனசு திக் திக் என அடித்து கொண்டது.

"நம்ம கலைஞர்க்கு உடம்பு சரியில்லயாம்"

"என்னப்பா சொல்ற.." எனக்கு அடி வயிற்றில் லேசான பயம் உருள தொடங்கியது.

"இல்ல... இல்ல.. இறந்துட்டதா சொல்றாங்க" என சொல்லிவிட்டு விசும்ப தொடங்கினார் அந்த உடன்பிறப்பு.

எனக்கு போனை கையில் பிடிக்கும் தைரியமோ தெம்போ சட்டென காணாமல் போனது. அதற்குள் மனது ஒரு வினாடியில் ஏகப்பட்ட விசயங்கள் யோசித்தது. கலைஞர் இது போல பலமுறை வதந்திகளால் சாகடிக்கப்பட்டவர். அவருக்கு எதும் ஆகாது.

சில தினங்கள் முன்பாக ஒரு போலீஸ் அதிகாரியின் மகனுக்கும் கலைஞரின்  கொள்ளு பேத்திக்கும் காதலாகி அந்த போலீஸ் அதிகாரி கலைஞரிடம் வந்து சொன்ன போது "கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லுய்யா இருவரையும். இன்னும் மூன்றரை வருஷத்தில் நான் சி. எம் ஆகியதும்நானே கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். என்ன யோசிக்கிறே? நான் இருப்பேன். பவர் புஃல் சி எம் ஆக இருப்பேன்" என சொன்னதை நக்கீரனில் படித்த நியாபகம் வந்தது. என் தலைவனின் தன்னம்பிக்கை, தன் உடல் நிலை மீது மட்டுமல்ல தன் அரசியல் மீதும் என்ன ஒரு தன்னம்பிக்கை இந்த 89 வயதில் என நினைத்து சிலிர்த்து கொண்டேன் அதை படிக்கும் போது. என்பதை தொட்ட தாத்தா பாட்டிகள் எல்லாம் திண்ணையில் படுத்து கொண்டு "என்னை எப்போது கொண்டு போவ ஆண்டவா" என தன்னம்பிக்கை இல்லாமல் புலம்பும் இந்த உலகில் இப்படி ஒரு பதிலை சொல்ல எத்தனை ஒரு மன வலிமை வேண்டும். என் தலைவனை தவிர உலகில் யாருக்கும் இல்லாத ஒரு வரப்பிரசாதம் இது.

இதல்லாம் அந்த ஒரு நொடியில் என் மனதில் வந்து போனது. யாருக்கு போன் செய்வது? என்னவென்று கேட்பது? "ஏதோ ரூமராமே?" என கேட்கலாம். அவங்க பதிலுக்கு " என்ன ரூமர்?" என கேட்டால் என்ன சொல்வது? "கலைஞரை பற்றி" என சொல்ல என் மனதுக்கு எப்படி தைரியம் வரும்? அந்த சியமளாதேவி கோவில் படியில் அப்படியே உட்காந்தேன். மயக்கமாக உணர்ந்தேன். பக்கத்தில் தான் டீ கடை . போய் ஒரு டீ குடித்தால் தேவலை. போக தெம்பில்லை கால்களுக்கு. யாராவது ஒரு சோடா வாங்கி கொடுத்தால் கூட குலுக்கி முகத்தில் அடித்து கொள்ளலாம். சரி கொஞ்சம் அமைதியாக எதையும் சிந்திக்காமல் உட்காருவோம். எதற்கும் மனைவிக்கு ஒரு போன் செய்து நான் இங்கே கோவில் வாசலில் இருக்கிறேன் என சொல்லிவிடலாமா என நினைத்தேன். நாலாம் நம்பர் பஸ் ரோட்டில் வடகரை நோக்கி போனது. மிக வேகமாக ஹார்ன் அழுத்தி கொண்டு போனார் ஓட்டுனர். ஆனால் என் காதுகளுக்கு அந்த சத்தம் மிக குறைவாகவே கேட்டது. கண்களின் முன்பாக கூட பலப்பல வண்ண புழுக்கள் நீந்துவது போல அதாவது ஆழ்நிலை தியானத்தில் நெற்றிப்பொட்டில் எண்ண அலைகளை குவிக்கும் போது வருமே அது போன்ற அழகிய வண்ண வண்ண புழுக்கள் நீந்தி கொண்டு இருந்தன. தொல்காப்பியா பயப்படாதே பயப்படாதே என மனசு சொன்னது. இதயத்துக்கு பக்கத்தில் வைப்ரேஷனில் இருந்த போன் மீண்டும் கிர்ர்ர்ர்ரியது. அது இன்னும் இடைஞ்சலாக இருந்தது மனதுக்கும் இதயத்துக்கும். எடுத்தேன்.

"கலைஞர் நம்மை விட்டு போயிட்டாராமே" என்ற அழுகை குரல் இன்னும் ஒரு உடன்பிறப்பினுடையது. போன ஆஃப் செய்தேனா இல்லையா என தெரியவில்லை. இருக்காது. இருக்காது. இருக்க வாய்ப்பே இல்லை. இன்னும் அவர் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளது. அவர் போக மாட்டார் என வலுக்கட்டாயமாக என்னை நானே திடப்படுத்திக்கொண்டேன். என் முழு சக்தியையும் பிரயோகித்து சியாமளாதேவி கோவில் இரும்பு கேட்டை பிடித்து கொண்டு எழுந்தேன். கால்கள் மரத்துப்போய் இருந்தன. உதறிக்கொண்டேன். மெல்ல பிரகாரம் வந்தேன். பிள்ளையார் சன்னதிக்கு பக்கத்தில் இருந்த குடிநீர் குழாயை திறந்தேன். அப்படியே குத்துக்காலிட்டு தண்ணீரில் முகத்தை காட்டினேன். தலை, சட்டை, பேண்ட் எல்லாம் நனைந்த பிரங்ஞை கூட இல்லை. காலையில் தானே அயன் செய்து போட்டு கொண்டு வந்தோம் என்ற உறுத்தல் கூட இல்லை. இப்போதைக்கு பிழைக்க வேண்டும். அவர் கண்டிப்பாக நன்றாக இருப்பார் என மீண்டும் மீண்டும் எண்ணத்துக்கு வலு ஏற்றினேன்.

ஏதோ பஸ் ரோட்டில் மிகுந்த சப்தமாக ஹார்ன் அடித்து போனது. ஆகா என் காதுகளுக்கு கேட்கும் திறன் வந்து விட்டது .அந்த சப்தம் நான் மீண்டும் சகஜ நிலைக்கு வந்துவிட்டதை உணர்த்தியது. போனை எடுத்தேன். யாருக்கு போன் செய்து என்ன கேட்பது என புரியவில்லை. அகர வரிசைப்படி அப்துல்லா நம்பர் வந்தது . போன் செய்தேன். நம்பர் எங்கேஜ்ட். அடுத்தது அரியலூர் மாவட்ட செயலர் நம்பரை அரியலூர் என வைத்து இருப்பேன். அவருக்கு போன் செய்யலாமா? ஒரு மாவட்ட செயலரிடம் இதை எப்படி கேட்பது என்கிற தயக்கம் எதும் இல்லை. ஆசை வெட்கமறியாது என்பது போல பயமும் வெட்கமறியாது போலிருக்கு. உடனே அவருக்கு போன் செய்தேன். அதே போல போன் எங்கேஜ்ட். என் தம்பி கொக்கரக்கோ சௌமியனுக்கு போன் செய்தேன். "நான் பேங்ல ஒரு மீட்டிங்ல இருக்கேன். எதுனா அவசரமா?" என கேட்டான். எதும் சொல்லாமல் போனை வைத்து விட்டேன்.

கடந்த சட்ட மன்ற தேர்தல் நேரம். மார்ச்  23 , 2011 அன்று பிரச்சாரத்துக்காக கலைஞர் திருவாரூர் போகும் போது மயிலாடுதுறை வழியாக வந்தார். அவர் எங்கள் மயிலாடுதுறை உடன்பிறப்புகளை கடந்து போன அந்த இரண்டு நிமிடங்களை பற்றி என் வலைப்பூவில் ஒரு பதிவு "மயிலாடுதுறைக்கு தலைவர் கலைஞர் வந்தார்" என்ற தலைப்பில் எழுதினேன். அதில் கடைசி பத்தியில் கீழ் கண்டவாறு எழுதியிருந்தேன்.(http://abiappa.blogspot.in/2011/03/blog-post_24.html )

\\ தலைவரு இந்த பீரியட் முதல்வரா முடிக்கும் போது 92 வயசு ஆகியிருக்கும். 7 வது முறை முதல்வரா இருந்து முடிக்கும் போது 97 ஆகியிருக்கும். அப்படின்னா அவரது நூற்றாண்டு விழாவுல அவரு எட்டாவது முறையா முதல்வராக இருப்பாரு. சூப்பர்டா.." என சொல்லிக்கொண்டே போனான். இதான் திமுக தொண்டன். தலைவர் சாவிற்க்கு அப்பாற்பட்டவர் என்ற எண்ணம் வலுவாக இருக்கின்றது. ஆச்சர்யப்பட எதும் இல்லை. இருப்பார். அவரது நூற்றாண்டை முதல்வராக தானே இருந்து நடத்துவார்.\\

இப்படி ஒரு தொண்டர் பேசிக்கொண்டு போவதை எழுதியிருந்தேன். அந்த தொண்டன் மட்டுமல்ல, நான் மட்டுமல்ல கிட்ட தட்ட எல்லா திமுக தொண்டர்களுமே எங்கள் தலைவர் மரணத்துக்கு அப்பாற்பட்டவர் என்றே நினைத்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அப்படிப்பட்ட எங்களுக்கு இந்த வதந்தி எப்படிப்பட்ட பாதிப்பை உண்டு செய்யும்:-(

இப்படியாக பலவித எண்ணங்கள் என்னை சூழ்ந்து இம்சிக்கவே , சரி அண்ணா பகுத்தறிவு மன்றம் போகலாம் என மெதுவாக வண்டிய எடுத்தேன். அதை ஸ்டார்ட் செய்யும் முன்னரே போன் மீண்டும் அடித்தது. அரியலூர் மாவட்டம் தான். "சார்" என்றேன். எதிர் முனையில் இருந்து "தலைவர் சூப்பரா இருக்காரு. இதோ வீட்டில் இருந்து அறிவாலயத்துக்கு காரில் போய் கிட்டு இருக்காரு. அங்க போய் டிவிக்கு பேட்டி கொடுப்பாரு. கவலை வேண்டாம்" என நான் எதும் கேட்கும் முன்பே அரியலூர் மாவட்ட செயலர் போனில் சொல்ல எனக்கு உலகமே மீண்டும் என் கைக்கு வந்தது போன்ற உணர்வு. ஆயிரம் யானை பலம் மனதுக்கு வந்தது. என் தலைவனுக்கு சாவே கிடையாது என மனம் குதூகலித்தது. இதே மனம் தான் சிறிது நேரம் முன்பாக என்னை பயம் காட்டி என்னை குப்புற தள்ளியது. அதே மனம் இப்போது "கலைஞருக்கு தான் மரணம் என்பதே கிடையாதே" என என்னை பார்த்து சொல்லி கண் சிமிட்டுகின்றது. மனம் ஒரு குரங்கு. என்ன தான் தலைவர் நன்றாக இருக்கின்றார் என ஒரு மாவட்ட செயலரே சொன்னாலும் கலைஞரே டி வியில் சொன்னால் தான் மனம் இன்னும் அமைதியடையும். இந்த பாழாய் போன ஆட்சியில் தான் எங்கள் பகுதியில் 18 மணி நேர மின்வெட்டு ஆயிற்றே.

நேராக அண்ணா பகுத்தறிவு மன்றம் சென்றேன். அப்போதே கிட்டதட்ட 200 உடன்பிறப்புகள் அங்கே கூடியிருந்தனர். யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. எல்லாம் முகத்திலும் குழப்பமும், பயமும், அதிர்வும் அப்பி இருந்தன. தேர்தலில் அப்பட்டமாக தோற்ற நேரத்திலும் கூட அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் கூடும் போது கேலியும் கிண்டலும் கரைபுரண்டு ஓடும். ஆனால் நேற்று அப்படி இல்லை. இன்வர்டர் உதவியால் கலைஞர் செய்திகள் ஓடிக்கொண்டு இருந்தது. "இது வதந்தி" என ஸ்க்ரோலிங் ஓடாதா என அத்தனை கண்களும் கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டு இருந்தன. அவரவர்கள் தங்களுக்கு தெரிந்த மேலிடத்துக்கு போன் செய்து ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகி மன்றம் நிரம்பி சாலைக்கு வந்து விட்டது. சாலையில் எதிர்பக்கம் வரை கூட்டம். எங்கும் திமுக கரை வேட்டி உடன்பிறப்புகள். எல்லோரும் வேலைக்கு சென்றவர்கள். வதந்தியை கேள்விப்பட்டவுடன் அந்த நாளின் சம்பளத்தை துச்சமென வேலையை உதறிவிட்டு இங்கே ஓடி வந்தவர்கள்.

ஸ்க்ரோலிங் ஓடியது. "கலைஞர் நலமுடன் உள்ளார்" . கூட்டம் ஆரவரித்தது. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டனர். சிலர் ஆனந்தமாக அழுதனர். ஒட்டு மொத்தமாக எல்லார் வாயில் இருந்தும் தலைவர் கலைஞர் வாழ்க எங்கள் தானைத்தலைவர் வாழ்க என்ற கோஷம் வெளிப்பட்டது. சிறிது நேரத்தில் கலைஞர் அறிவாலயத்தில் வந்து இறங்கிய செய்தியும், பின்னர் அவரது பேட்டியும் வெளியாகின. "என்னைப்பற்றிய வதந்தியை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்" என கலைஞர் பேசியதை கூட யாரும் காதால் கேட்கவில்லை. கலைஞரை பார்த்த சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். நான் ஓடிப்போய் எதிர் கடையில் ஸ்வீட் வாங்கினேன். முதலில் நானே ஒரு வாய் சாப்பிட்டேன். என் மனக்குரங்கிடம் கெக்கலித்து சிரித்து கொண்டேன். எங்கிருந்தோ ஒரு பெரிய ஆயிரம் வாலா சரம் எடுத்து கொண்டு ஓடிவந்த என் நகர் சந்திரன் அதை பற்ற வைக்க  அந்த அண்ணா பகுத்தறிவு மன்ற வாசல் கொண்டாட்ட பூமியாகியது. சிலர் ஓடிச்சென்று மாலை வாங்கி பேருந்து நிலைய அண்ணா சிலைக்கு அணிவித்தனர். ஒருவர் ஓடிவந்து புதிய திமுக கொடி ஏற்றினார். அடுத்த அரை மணிக்கு ஒரே வெடி சத்தம் மட்டுமே அங்கே கேட்டுக்கொண்டு இருந்தது.

வெடி வெடித்து முடித்து என் அருகே வந்த சந்திரனை நான் அர்த்த புஷ்டியோடு பார்த்தேன். தன் பசங்க வெடி வெடிக்க ஆசைப்பட்ட போது "காசை கரியாக்காதே" என அறிவுரை சொன்ன அப்பனா அது? அதே போல அவரும் என் கையில் இருந்த ஸ்வீட் பாக்சை பார்த்து சிரித்தார். தான் பெற்ற பையனுக்கு ஸ்வீட் வாங்கி வராத அப்பனா இது? பேருந்துகளை நிறுத்தி ஜன்னல் வழியே ஸ்வீட் கொடுத்துகொண்டு இருந்தது ஒரு கூட்டம்.

பொதுவாக அண்ணா பகுத்தறிவு மன்ற வாசலில் இப்படி ஸ்வீட் கொடுத்தால் தலைவர் பிறந்த நாள் அல்லது தளபதி பிறந்த நாள் என்றே மக்கள் நினைப்பது வழக்கம்.  ஒரு பாட்டி ஸ்வீட் எடுத்துக்கொண்டு "ஏம்ப்பா இன்னிக்கு கலைஞர் பிறந்த நாளா?" என்றது. நான் "ஆமாம் பாட்டி" என்றேன் அழுத்தமாக!

வதந்தி பரப்பிய கொரூர மனநோயாளிகளே! நீங்க போங்காட்டம் ஆடுகின்றீர்கள். 89 கோட்டையும் அழிங்க. நாங்க முதல்ல இருந்து கலைஞர் பிறந்த நாளை கொண்டாட ரெடி. 5.12.2012 கலைஞர் பிறந்த நாள் என மீண்டும் ஆட்டம் ஆரம்பிப்போம்! எங்க தலைவர் ரெடி, நீங்க ரெடியா?

17 comments:

  1. Are you mentally OK?
    Nothing will happens to Tamil Nadu if he dies. take care dear.

    ReplyDelete
  2. அனானி நாய்களுக்கு தான் முதலில் மூக்கில் வியர்குது!

    ReplyDelete
  3. நிறைய (அனானி) நாய்களுக்கு இரங்கற்பா எழுத இருக்கிறார் தலைவர்

    ReplyDelete
  4. அவருக்கு இன்னும் நிறைய வேலைகள் பாக்கி இருக்கிறது. பலருக்கு மலர்வளையம் வைக்கும் வேலையும், சிலருக்கு நினைவகம் அமைக்கும் வேலையும் பாக்கி இருக்கிறது. கலைஞர் இருப்பார். பணிகள் முடிப்பார்.

    ReplyDelete
  5. அவருக்கு இன்னும் பல வேலைகள் பாக்கி இருக்கிறது. பலருக்கு மலர்வளையம் வைக்கும் வேலையும், சிலருக்கு நினைவகம் அமைக்கும் பணியும் பாக்கி இருக்கிறது. கலைஞர் இருப்பார், பணிகள் முடிப்பார்.

    ReplyDelete
  6. கலைஞருக்கு சாவே கிடையாது......

    கலைஞர் ஆட்சியே நல்லாட்சி.....

    அது மீண்டும் மலரும்....

    ReplyDelete
  7. //எங்க தலைவர் ரெடி, நீங்க ரெடியா?//

    நாங்க ரெடி இல்லீங்ணா.... ஒரு பத்து வருஷம் கழிச்சி சந்திப்போம். இருக்குற ஒரு சென்டிமீட்டர் நிலத்துல ஒத்த கால் விரல்ல நின்னு கொஞ்ச காலம் வாழ்ந்துட்டு போறமே....ப்ளீஸ்!!

    ReplyDelete
  8. அய்யா மெட்ராஸ் மின்னல் என்னும் சிவகுமார்! நான் சவாலுக்கு அழைத்தது வதந்தி பரப்பிய நாய்களை தான். நீங்க ஏன் அவசர அவசரமா மூக்கை நுழைக்கிறீங்க? நீங்க சென்னையிலே 2 மணி நேர மின்வெட்டுக்கே ஒரு செண்டி மீட்டர் நிலத்திலே கட்டை விரலால் நிக்குறீங்க. நாங்க சென்னை தவிர மீதி இடங்களில் 18 மணி நேர மின் வெட்டால் அந்தரத்தில் பறந்துகிட்டு பதிவு போட்டுகிட்டு இருக்கோம். உங்க வேலையை பார்த்து கிட்டு போங்களேன்!

    ReplyDelete
  9. தலைவர் நீடுழி வாழவேண்டும்
    பதிவை பார்ததும்
    கண்கள் மங்கியது
    கண்ணீர் .. கண்ணீர்...<

    ReplyDelete
  10. உணர்ச்சி பூர்வமான கலைஞர் வழிபாடு!
    தியான அனுபவ வருணனை!

    திராவிட இயக்க பரிணாம வளர்ச்சி பிரமிப்பை தருது! சுயமரியாதை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு!

    ReplyDelete
  11. வழமை போல் அசத்தீட்டீங்க அபிஅப்பா

    ReplyDelete
  12. இந்த மகா பாவி, படு பாவி செத்தா தமிழர்கள் அனைவரும் வீட்டில் பால் பாயசம் சாப்பிட்டு ஆனந்தமாக கொண்டாடுவோம்.


    ஆனா மகா மகா பாவிகளுக்கு சாவு சீக்கிரம் வருவதில்லை என்பது உலக உண்மை. நடக்கறப்போ நடக்கட்டும்.

    ReplyDelete
  13. வதந்தியெல்லாம் இருக்கட்டும். கருணாநிதிக்கென்ன சாவே வராதா என்று நினைப்பா...? தமிழர்களுக்காகவே போராடி தன் குடும்பத்தினரையும் இழந்தது மட்டுமில்லாமல் தானும் கடசிவரை போராடி உயிர் துறந்துவிட்டான் நம் தலைவன். தன் மக்களுக்கு சொத்திற்கும் பதவிக்கும் போராடும் கருணாநிதிக்கஎன்ன சாவே வராதா>>...?

    ReplyDelete
  14. பகுத்தறிவாளர்கள் .. ம் ம்ம்..
    100 வயசுக்கு மேல தலைவர் போகும்போது இப்படி பதட்டப்படாதிங்க.. உடம்ப பத்திரமா பாத்துக்கங்க..

    ReplyDelete
  15. அபி அப்பா. நான் வாழும் அதே நகரில்தான் உங்கள் தலைவரும் வாழ்கிறார். 2 மணிநேர பவர் கட் கூட இல்லாமல். நீங்கள் எழுதிய கடைசி வரிக்குதான் பதில் சொன்னேனே தவிர வேறெந்த எண்ணத்திலும் இல்லை.

    சகிப்புத்தன்மையும் கலைஞரிடம் இருக்கும் முக்கிய குணங்களில் ஒன்று என்பதை அறிவீர்கள் என 99% நம்புகிறேன். :)))

    ReplyDelete
  16. உருக்கமா இருந்தது அபிஅப்பா

    ReplyDelete
  17. கருத்து சொல்ல சொல்லிட்ட சொல்லிருவோம்... கொலைஞ்கர் மாதிரி கதை வசனம் எழுத ஆசைப்படுற.... ஊர்ல ஒரு பழமொழி ஒன்னு இருக்கு -கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும் கிழவிய தூக்கி மடியில வைய்யுன்னு... சிவக்குமார் சொன்னது உங்க கரை வேட்டிங்க ஏப்பம் விட்ட நிலங்களை...

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))