பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 4, 2013

என் தலைவன் தமிழின தலைவர் கலைஞர் ஒரு நவரசத்தலைவர்!!!

இது முரசொலியில் வந்த என் எழுத்துகள்!



என் தலைவன் தமிழின தலைவர் கலைஞர் ஒரு நவரசத்தலைவர், ஆமாம் இது வார்த்தை ஜாலம் இல்லை. நவரசம் என்றால் காதல்,இன்பம்,துன்பம்,கோபம்,கருணை,அருவருப்பு,பயம்,வீரம்,ஆச்சர்யம் என சேர்ந்த ஒன்பது வகை .

காதல்: அவருக்கு தமிழ்மேல் காதல்,  அதனால் பிறந்தது பல கவிதைகள், பல புதினங்கள், பல இலக்கியங்கள், பல நாடகங்கள், அவருக்கு தன் மனைவியர் மீது காதல், அதனால் பிறந்தது ஆறு சொத்துக்கள், அவருக்கு தன் பிள்ளைகள் மீது காதல் அதனால் பிறந்தது தமிழக அரசியலில் அடுத்த 50 ஆண்டுகாலம் வழி நடத்த வலிமையுள்ள தளபதி மற்றும் அவர் உடன்பிறந்தோர். அவருக்கு அரசியல் மீது காதல், அதனால் விளைந்தது அவரது தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்க்கும் மேலாக திராவிட ஆட்சிகள், அவருக்கு போர்களத்தின் மீது காதல், அதனால் பிறந்தது இது வரை 12 முறை சட்ட மன்ற உறுப்பினர், ஐந்து முறை முதல்வர், எதிர்கட்சி தலைவர் என பல பதவிகள், அவருக்கு தமிழர்கள் மீது காதல் அதனால் பிறந்தது நல்ல பல திட்டங்கள், தமிழர்களுக்கான சுய மரியாதை இன்னும் பல,

இன்பம்: அவருக்கு எப்போதும் இன்பம் என்பது இருக்கின்றதோ இல்லியோ அவரை காணும் தமிழர்களுக்கு அவர் முகத்தை காணும் தமிழர்களுக்கு இன்பம். ஏழைகளுக்கு இவரைக்கண்டால் சிரிப்பு. ஏழைகள் இவரால் பயன் பெற்றார்கள், ஏழைகள் இவரால் படித்தார்கள், ஏழைகள் இவரால் பணியில் அமர்த்தப்பட்டார்கள். அண்ணா சொன்னது போல இவர் ஏழையின் சிரிப்பினிலே இறைவனை கண்டார். அதனால் ஏழைகளின் சந்தோஷம், மகிழ்ச்சி, இன்பம் அவர்களை காணும் போதெல்லாம் இவருக்கும் தொற்றிக்கொள்ளும். ஆகவே இன்பம் கொண்டார் எப்போதும் இவர்.

துன்பம்: யாரோ எப்போதோ எப்படியோ செய்து விட்ட சில பல தவறுகளால் ஒட்டு மொத்த தமிழினம் அழிக்கப்பட்ட போதும் கையறுநிலையிலே பக்கத்தில் இருக்கும் நாம் இருக்கும் நிலை போல சில பல சமயங்களில் வரும் போதேல்லாம் துன்பம் அவரை தீயாய் சுடும். அதே போல தமிழன் உலகினில் எங்கெல்லாம் அவமானப்படுகின்றானோ அப்போதெல்லாம்  என் தலைவன் அணலில் விழுந்த அன்னமாய் துடிப்பதை நாங்கள் பார்த்து கொண்டு தானிருக்கின்றோம். துன்பம் இல்லா உலகினில் ஒரு துளி இடம் இருந்தால் சொல்லுங்கள். எம் தலைவனை அங்கே அமரவைத்து அழகு பார்க்கின்றோம்.

கோபம்: நவரசத்திலும் தலைவருக்கு பங்குண்டு என்றாலும் அவரின் கோவம் என்னும் குணம் கொஞ்சம் குறைவாகவே இருப்பதாக உணர்கின்றோம். யார் கண்டது தொண்டர்களிடம் அப்படி ஒரு தோற்றம் இருந்தாலும் ஒன்னரை கோடி உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவனாக இருக்கும் போது, ஏழு கோடி தமிழர்களை ஆட்சி செய்த தலைமை பொறுப்பில் இருந்த போதும், குடும்பம், குழந்தை என தன் சொந்த விஷயங்களிலும் அவரது கோவம் எத்தனை வலியது என தொண்டர்கள் அறிய முடிவதில்லை. ஆனால் தொண்டர்களை, மக்களிடம் அவரது கோவம் என்பது யாரும் பார்த்தறியா குணம். "கலைஞர் கோபப்பட்டார்" என புனைவெழுதி புளகாங்கிதம் அடையும் புலன்விசாரணை பத்திரிக்கைகளை நாங்கள் சிரித்து விட்டு புறம்தள்ளி விடுவதே நடைமுறை!

கருணை: தன்னை வசைபாடுபவர்களை, ஊடகங்களை இவர் ஆட்சியில் இருந்த நேரத்திலும் இல்லாத நேரத்திலும் மன்னித்து அருள்வாரே அது தான் கருணை

அருவருப்பு: ஆம், நிறைய உண்டு. தலைவரிடம் அது நிறைய உண்டு. தன் பதினான்கு வயதில் தமிழ்க்கொடி ஏந்தி புறப்பட்ட அந்த புயல் சந்திக்காத இந்திய தலைவர்களே இல்லை என்னும் நிலையில் கால ஓட்டத்தில் நேருவோடு, லால்பகதூரோடு, இந்திரா, ஜெயப்ரகாஷ்நாராயணன், சஞ்சீவரெட்டி, வி வி கிரி, பஃக்ருதீன் அலிஅகமது, ஜெயில்சிங், நாராயணன், மொரார்ஜி, ஜகஜீவன்ராம், வாஜ்பாய், அத்வானி, பிஜுபட்நாயக் என அகில இந்திய அளவிலும் பின்னர் இங்கே ஜஸ்டிஸ்கட்சி, நீதிக்கட்சி தலைவர்கள் அதன் பரிணாமம் திராவிடர்கழக தலைவர்கள், பெரியார், அண்ணா, காமராசர், ராசாசி  என எல்லாம் அரசியல் செய்து அவர்களை ஆட்டிவித்து, அரவணைத்து, அழகுற பழகி அருமையான அரசியல் செய்த நம் தலைவர் இன்றோ கால ஓட்டத்தில் ஜெயா, விசயகாந்து , தா.பாண்டியன், சமீபத்தில் கூட யாரோ ஒரு வர்.. என்னவோ பெயர் ... சேகுவாரா பனியன் எல்லாம் போட்ட ஒருவர் சினிமா எல்லாம் கூட எடுப்பாரோ, நடிப்பாரோ தெரியலை அவர்கள் எல்லாம் "கருணாநிதியே உன்னை கேட்கிறேன்" என மேடையில் முயங்கும் போது (ஆமாம் எழுத்து பிழை இல்லை முயங்கும் தலைவர்கள் தான்) என் தலைவனுக்கு மட்டும் அல்ல தொண்டர்கள் எங்களுக்கும் அருவருப்பு தான் வருகின்றது. என்ன செய்யட்டும்? நவரசத்தில் இந்த ரசம் ஒரு துளி விஷம் தான்:-(

பயம்: பல சமயம் தலைவர் பயப்படுவது உண்டு. தமிழன் எப்போதும் மனசு இரக்கம் கொண்டவன். அதை பயன் படுத்தியே பெரியாரும், அண்ணாவும் ,அதன் பின்னே தலைவரும், ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களும் ஊட்டி வளர்த்த பகுத்தறிவு பாதை ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழன் மனதில் வந்து குடிபுகும் போதெல்லாம் கொஞ்சம் பயம் வரும் தலைவருக்கு. அதற்காக கலங்கியது இல்லை. உடனே களை எடுத்து விடும் பணியினை செய்து கொண்டே தான் இருப்பார்.

வீரம்: அன்னை அஞ்சுகம் தாய் பெற்றது ஒற்றை ஆண் மகவு அல்ல. அது ரெட்டை குழந்தை. ஒன்றின் பெயர் கருணாநிதி, மற்றும் ஒரு குழந்தைக்கு பெயர் வீரம். ஆமாம். கலைஞரின் கருவில் இருந்தே கூட வளரும் உடன்பிறப்பு தான் வீரம். தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் போதும், பாளையங்கோட்டையில் பாம்புகள், பல்லிகள் நடுவினில் தனிமை சிறையினில் கிடக்கும் போதும் அவருக்கு உற்ற தோழனாக, கூடப்பிறந்த பிறப்பாக உடன் இருப்பது இந்த வீரம் தான். இந்த என்பத்தி ஒன்பது வயது கிழ சிங்கம் சமீபத்தில் கர்ஜித்தது எப்போது தெரியுமா? "உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும்".. வீரமான அந்த கர்ஜனை இன்று என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தி விட்டது தெரியுமா? தமிழக அரசியலை புரட்டி போட்டு விட்டது. அதன் தாக்கங்கள் சில. 1. 40 சதம் சீட் வேண்டும் என அஞ்சாமல் கேட்ட காங்கிரஸ் இன்று நிலைகுலைந்து போனது. அதன் முதல் நாள் வரை வாயை காதுவரை இழுத்து பேசிய இளங்கோவன்கள், யுவராசாக்கள் எங்கே போயினர் என தெரியவில்லை. இது வரை வேட்பாளர் யார் என தெரியவில்லை. சத்தியமூர்த்தி பவன் சண்டைமூர்த்தி பவன் ஆகியது.எல்லோரும் தனியாக தேர்தலை சந்திக்கும் போது அவர்கள் தனித்தனியாக சந்திக்கின்றனர். ஆமாம் எல்லா கோஷ்டியும் பிரிந்து போய் கிடக்கின்றன. ஆக இத்தனை நாள் அவர்கள் கட்சியின் ஒற்றுமை கூட என் தலைவனால் தான் சாத்தியம் என டெல்லிக்கு புரிந்து இருக்கும் இப்போது. 2. அதிமுக வலுவான கூட்டனியாக இருந்ததை ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி பிரிக்கவோ, சேர்க்கவோ செய்ய முடியாத கூட்டணிகளை என் தலைவ்னின் ஒற்றை வார்த்தை கிழித்து போட்டு விட்டது. ஆமாம் அங்கே தேமுதிக தனியாக... எல்லாமே தனித்தனியாக ...புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது வந்து கட்டிக்கொள்ளுங்கள் என விசயகாந்து கூவியும் ராமகிருஷ்ணய்யர் மட்டுமே ஓடி வந்து ஒட்டி கொண்டார் அந்த நடிகர் மேல். நாம் தமிழர் எனும் லேபிள்காரர்கள் அதிமுகவின் "ரெண்டல்" கட்சியாகிப்போனது. தா.பாண்டியன் கட்சி "மெண்டல்" கட்சியாகிப்போனது. வைக்கோ கட்சி சைக்கோதனமாக புலம்பிக்கொண்டு இருக்கின்றது. மருத்துவர் அய்யாவோ வைத்தியம் தேவைப்படும் அளவு ஆகிவிட்டார்.
என் தலைவனின் வீரம் அந்த ஒற்றை அறிக்கை. அதிலே தமிழக அரசியலையே அசைக்க முடியும் என்கிற போது அந்த வீரத்தின் வீரியத்தை புரிந்துகொள்ளுங்கள்!

ஆச்சர்யம்: என் தலைவனுக்கு ஆச்சர்யமான சில விஷயங்கள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். சமீபத்திய உதாரணம், நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் முடிவுகள். ஏன் வெற்றிவாய்ப்பை இழந்தோம் என இன்னமும் காரணம் கண்டுபிடிக்க முடியா கேள்வி அவரிடம் ஒரு ஆச்சர்யம். அதை விடுங்கள். எங்களுக்கு அவர் மேல் ஒரு ஆச்சர்யம் உண்டு. அவருக்கு ஒரு குணம் உண்டு. அவர் இராமாயணகால வாலி போல. அவருக்கு எதிரே நின்று அவரை ஜெயிக்க முடியாது. எதிராளியின் பாதி பலம் இவருக்கு வந்துவிடும். இது எங்களுக்கு அவரைப்பற்றிய ஒரு ஆச்சர்யம். அதனால் தானோ என்னவோ ஆதிக்க சக்திகள் பலமுறை இவரை முதுகில் குத்தியே ஆரிய ராமன் போல வீழ்த்துகின்றன. ஆனாலும் இவர் ஒரு பீனிக்ஸ்போல. சாம்பலில் இருந்தும் வெளியே முழுமையாக வருவார். அதான் என் தலைவர்.இது மிகப்பெரிய ஆச்சர்யம் இவரைப்பற்றி!
இப்போது சொல்லுங்கள்! என் தலைவர் நவரசத்தலைவன் தானே?
அதே போல என் தலைவன் போல பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் என் தலைவன் போல உலகத்தில் ஒரு தலைவனை காண இயலுமா?

ஒருவன் வாழ்வில் பெறவேண்டிய பதினாறு செல்வங்கள் எவையென்பதை,

// "துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே" //

என்ற காளமேகப்புலவரின் பாடல் நமக்குப் புலப்படுத்துகிறது.
அதாவது புகழ், கல்வி, வெற்றி, மக்கட்பேறு, துணிவு, செல்வம், மிகுந்த தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய சிறப்புக்கள், அறவுணர்வுடைய குடிப்பிறப்பு, நோயற்ற வாழ்வு, நீண்ட வயது ஆகியவைகளே பதினாறு பேறுகள் ஆகும். இருந்தாலும் இவற்றினுள் சிறந்த பேறாகக் கருதப்படுவது மக்கட்பேறாகும்.

ஆமாம் என் தலைவன் எங்களுக்கு கொடுத்த பெரிய பாக்கியம் எங்கள் தளபதி. கருணாநிதி பெற்றெடுத்த "சுழல்நிதி" எங்கள் ஒய்வறியா சூரியன் எங்கள் தலைவர் தளபதி அவர்களை என் தலைவன் பெற்ற பதினாறு செல்வத்தில் பெரிய செல்வம் அல்லவா?

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற" என வள்ளுவன் சொன்னதைப்போல என் தளபதியை எங்களுக்கு கொடுத்த தலைவா நீ வாழ்க வாழ்க!!!!!

என் தலைவன் சமீபத்திய சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்துக்காக மயிலாடுதுறை வழியாக திருவாரூர் சென்ற போது ஒரு சாதாரண தொண்டனின் பார்வையில்  அவரது வருகையை சிலாகித்து நான் என் வலைப்பூவில் எழுதியதன் கடைசி பாரா. இது.


\ //  மதியம் 3.30க்கு 2728 என்கிற எண்ணுடைய ஒரு காரில் தலைவர் வந்தார். முன்பக்க சீட்டில் அமைச்சர் பொன்முடி இருக்க பின்பக்க சீட்டில் தலைவரும், கனிமொழியும் இருக்க கூட்டத்தை பார்த்து நிற்க குண்டாமணியும், லிங்கராஜனும் வந்து பொன்னாடை கொடுக்க அதை கனிமொழி வாங்கி பாதுகாப்பு போலீசாரிடம் கொடுக்க, அந்த இடமே கஜாமுஜான்னு ஆக தலைவர் வாழ்க என குரல் கொடுக்க தலைவர் கலைஞர் அதி அற்புதமான சிரித்த முகத்துடன் கையை காட்ட ஒட்டுமொத்த கூட்டமும் மெய்சிலிர்த்தது. சிலர் வாய்விட்டு அழுதனர் உணர்ச்சி மேலீட்டால். சிலர் தான் எப்படி வாழ்த்து சொல்கின்றோம் என்று தனக்கே தெரியாத அளவு இஷ்ட்டத்துக்கு வாழ்க வாழ்க என உணர்சி குவியலாய் கத்த தொடங்க தலைவரின் கான்வாய் மயிலாடுதுறையை கடந்து சென்றது.

"அப்பாடா சாவதுக்குள்ள தலைவரை கிட்டத்துல பார்க்கனும்னு இருந்தேன். பார்த்துட்டேன்" என சொன்ன ஒருவருக்கு வயது 50 இருக்கும். அவரை பக்கத்தில் இருந்தவர் முறைக்க "நான் என்னை சொன்னேன். நான் சாவறத்துக்குள்ள " என அவர் திருத்தி சொன்னார். ஒட்டு மொத்த கூட்டமும் கலைந்து சென்றது. ஒருவன் சத்தமாக பேசிக்கொண்டே போனான். தலைவரு இந்த பீரியட் முதல்வரா முடிக்கும் போது 92 வயசு ஆகியிருக்கும். 7 வது முறை முதல்வரா இருந்து முடிக்கும் போது 97 ஆகியிருக்கும். அப்படின்னா அவரது நூற்றாண்டு விழாவுல அவரு எட்டாவது முறையா முதல்வராக இருப்பாரு. சூப்பர்டா.." என சொல்லிக்கொண்டே போனான். இதான் திமுக தொண்டன். தலைவர் சாவிற்க்கு அப்பாற்பட்டவர் என்ற எண்ணம் வலுவாக இருக்கின்றது. ஆச்சர்யப்பட எதும் இல்லை. இருப்பார். அவரது நூற்றாண்டை முதல்வராக தானே இருந்து நடத்துவார். வாழ்க கலைஞர்.வாழ்க கலைஞர். வாழ்க வாழ்கவே!!!\\\\\\\\\\\\\\\

 இது தான் அந்த கடைசி பத்தி அந்த பதிவினில். அதன் லிங் இதோ இது தான் http://abiappa.blogspot.com/2011/03/blog-post_24.html
என் தலைவனைப்பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதுமா? இணையத்தின் ஒட்டு மொத்த இடமும் கொடுத்தாலும் எழுதித்தீர்க்க முடியுமா?

9 comments:

  1. வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  2. அருமையான பதிவு..

    ReplyDelete
  3. அருமை அபி அப்பா..

    ReplyDelete
  4. தமிழின தலைவர்!!!! - ha ha ha..

    ReplyDelete
  5. நெருக்கடி கால இந்தியாவில் திமூ கா தொண்டன் அடி உதை வாங்கி செத்தபின்னும் பதவிக்காக இந்திராவின் காலில் வீழ்ந்து வணங்கி நேருவின் மகளே வருக ,நிலையான ஆட்சி தருக என்று முழங்கிய தலைவனின் வீரத்தை சொல்லவும் முடியுமோ.

    ReplyDelete
  6. //என் தலைவனைப்பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதுமா? இணையத்தின் ஒட்டு மொத்த இடமும் கொடுத்தாலும் எழுதித்தீர்க்க முடியுமா?//

    படித்த, மற்றபடி குறை சொல்லமுடியாத, நல்லவர்கள் கூட எப்படி இந்த அளவுக்கு அரசியல்வாதிகளுக்கு ஜால்ராவாகி போகிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம் தான்! இந்த விதத்தில் கேரளா எவ்வளவோ பரவாயில்லை.

    ReplyDelete
  7. அபி அப்பா, இது போன்ற பதிவுகள் எழுதும் முன் மகான் ரமணரின் வார்த்தைகளை தயவு செய்து உங்கள் பதிவிலிருந்து எடுத்து விடுங்கள். மனம் வருத்தப்படுகிறது. நன்றி.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))