
வணக்கம் மக்கா! விட்டேனும் விட்டேன் ஒரு மாத லீவ் தமிழ்மணத்துக்கு! அப்படியே லீவ் எக்ஸ்டன் பண்னி பண்ணி நாள் ஓடி போயிடுச்சு. நடுவே காலை ஆட்டி கொண்டிருப்பதை காட்டி கொள்ள ஒரு பதிவு போட்டேன்.
ஒரு வழியா லீவ் கிடைத்து இந்தியா வந்து டிங்கரிங், புட்டி பார்த்து புது பெயிண்ட் அடிச்சு புத்தம் புதிய காப்பியா ஆகி இதோ இப்போது வெள்ளோட்டம் விட்டு கொண்டிருக்கிறேன். இன்று முதல் புதியதாக பிறந்து இருக்கிறேன் "அபிஅப்பா".
இந்த ஒரு மண்டல விடுப்பில் என்னை காணுமேன்னு சந்தோஷ பட்டவங்க எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கறேன். ‘என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது!”
மற்றபடி இந்த மயிலாடுதுறை காற்று இருக்கே அது எங்களுக்கு உயிர் மாதிரி! ஊர் போய் சேர்ந்த உடனேயே ஒரு வித புத்துணர்சி வந்துடுச்சு மனசுக்கும் உடம்புக்கும். ஊரில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. நகராட்சி காண்டிராக்ட்காரர்களுக்கு உடனடி பணம் பட்டுவாடா செய்ய படுகின்றது. காரணம் எங்கள் நகராட்சி தலைவர் ஏற்கனவே ஒரு கண்டிராக்ட்காரராக இருந்த காரணத்தால் என நினைக்கிறேன். பண பட்டுவாடா விஷயத்தில் அவர் ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு இருந்திருப்பார் போல இருக்கு. அடுத்த தடவையாவது கொசுக்கடியில் கஷ்டப்படும் ஒருவரை தலைவர் ஆக்க வேண்டும்.
பஸ்ஸ்டாண்டு எங்கே அமைப்பது என்கிற பட்டிமன்றம் இன்னும் முடியவில்லை. பெரிய ராஜன் தோட்டம் தன் பழைய பொலிவை இழந்து விட்டது. முன்பெல்லாம் வெற்று கிரவுண்டாக இருந்து இரவில் கஞ்சா அடிக்கும் கனவான்களுக்கும், குடிகார குசும்பன்களுக்கும் பொக்கிஷமாகவும், காலையில் கார் ஓட்ட பழகும் பணக்கார அம்மனிகளுக்கும், திருட்டு தம் அடிக்கும் கத்துகுட்டிகளுக்கும், செட்டிதெருவில் இருந்து வழியும் சாக்கடையில் ஸ்னானம் செய்யவரும் நமீதாக்களுக்கும், ஞானாம்பிகை மகளிர் கல்லூரி மாணவிகளின் பாதுகாவலர்களுக்கும் அப்படி ஒரு வசதியாக இருந்தது. ஆனால் இப்போதோ அதிலே சுத்தியும் காம்ப்பவுண்ட் போட்டு வி.ஐ.பி கேட் போட்டு செக்யூரிட்டி போட்டு பெரிய பெரிய வாயில் நுழையாத பெயர் உள்ள விளையாட்டுகளுக்கான இண்டோர் ஸ்டேடியங்களும், உவ்வே அசிங்கமான அவுட்டோர் ஸ்டேரியங்களும் கேலரிகளும், காலை நேரத்தில் வாக்கிங் போகும் எல்லாவயது ஜோடிகளின் அலப்பரைகளும், சோடியும் பல்புகளும் பார்க்கவே கஷ்டமாக இருக்கின்றன. மணிசங்கர் அய்யர் டவுன் டவுன்.
வழக்கத்துக்கு மாறாக காவிரியில் தண்ணீர் பொங்கி வழிந்து போகின்றது. வழக்கம் போல 300 பொடியன்களை சர்வே செய்ததில் 299 பேருக்கு “அந்த” இடத்தில் மாத்திரம் டவுசர் ஓட்டையாக இருக்கின்றது. மீதி ஒருத்தனுக்கு டவுசரே இல்லை.சர்வேயில் நட்டுவும் உண்டு.
ஒரு அமதியான பெண், ஒரு துடிப்பான பெண், ஒரு கடலை போடும் பையன் ஆகியோர் பஸ்ஸ்டாண்டு கடைவாசலில் நின்று அந்த கடலை பையனுக்கு அந்த துடிப்பான பெண் பதில் சொல்லி கொண்டு இருந்தால் அந்த கடலைக்கும், அமைதிக்கும் இடையே தான் காதல் என்னும் காந்தி காலத்து பார்முலா இன்னும் மாறவே இல்லை.
சுந்தரம் தியேட்டர் இடிக்கப்பட்டு அந்த பக்கம் போகவே மனசு “வருஷம் 16” படத்தை ஞாபகப்”படுத்துகின்றது”. அந்த இடத்தில் சாரதாஸ் வர போகுதாம். கூறைநாட்டில் கே.எஸ் பட்டு செண்ட்டர் வந்துவிட்டது. சாரதாஸ் மட்டும் வரட்டும் சீமாட்டி அவுட்டுடான்னு ஜோசியம் சொல்லி கொண்டு போகிறார்கள் அந்த இடத்தை கடப்பவர்கள்.
தாசில்தார்கள் இன்னமும் பேண்ட்டை இன் செய்யாமல், செறுப்பு போட்டு கொண்டு அதிலும் சிலர் வெற்றிலை போட்டு கொண்டு “இதுக்கு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ் இருக்குப்பா”ன்னு சொல்லி கொண்டுதான் இருக்கின்றனர். முனிசிபாலிட்டியில் நாமம் போட்ட நாராயனன் எல்லோரையும் “ந்தா ஓரமா நில்லு”ன்னு ஒருமையில் சொல்லி குலப்பெருமை காக்கின்றார்.
பி.எஸ்.என்.எல் கஸ்ட்டமர் சர்வீஸ் அருமையாக இருக்கின்றது. “சார் இந்த பேக்கேஜ் எடுத்தா உங்களுக்கு இத்தனை நஷ்ட்டம் வரும். நான் சொல்றதை சொல்லிட்டேன் அதுக்கு மேல உங்க இஷ்ட்டம்”
பஸ்ஸில் இருந்து பொலிச்சுன்னு வெற்றிலை துப்புபவர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை. பேருந்து நிலைய கட்டண கழிப்பிடம் மற்ற எல்லா ஊர்களை காட்டிலும் அருமையோ அருமை.
எல்லா ஹாஸ்பிட்டல்களிளும் கூட்டம் வழிகின்றது. டாக்டர்கள் ஒரு ஹாஸ்பிட்டலில் இருந்து அடுத்த ஹாஸ்பிட்டலுக்கு அடுத்த அடுத்த ஆப்ரேஷன்களுக்கு ஜெட் வேகத்தில் பறக்கின்றனர்.
“அடுத்த கெட் டு கெதர் எங்க வச்சுக்கலாம்” என யூனியன் கிளப்பில் எல்லா ரோட்டரி, ஜேசீஸ், லைன்ஸ் என ஒத்துமையாக ஒரே டயலாக்கை பேசுகின்றனர்.
இது எதுக்குமே சம்மந்தம் இல்லாமல் மாயூரநாதரும், அவயாம்பிகையும் கோவிலுக்கும் லாகடம் காவிரிகரைக்கும் காலை போய் இரவு திரும்பி இந்த ஐப்பசி மாதத்தை சந்தோஷமாக கழிக்கின்றனர். நேற்று திருகல்யானம். நாளை அடுத்தநாள் தேர் திருவிழா. 14ம் தேதி கடை முழுக்கு திருவிழா! மகாதானதெருவில் இரு பக்கமும் கடைவிரித்தாகி விட்டது. நான் கூட ஒரு பலூன் வாங்கினேன். இன்னும் பஞ்சுமிட்டாய் வாங்கவில்லை.
அதல்லாம் போஒகட்டும் டோண்டு சார் பாணியில் சொல்ல போனால் சமீபத்தில் 39 வருஷத்துக்கு முன்பு இதே நாளில் எடுக்கப்பட்ட என் போட்டோ எதேர்சையாக இன்று பழைய குப்பையை கிளறும் போது கிடைத்தது. எப்படி களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி இருக்கேனா?
நாளை முதல் வழ்க்கம் போல கிறுக்க போகிறேன்! முதல் கிறுக்கல் ஒரு சின்ன தொடர் எழுத உத்தேசம். பெயர் “வீரசேகரவிலாசும், மாமாவும்,சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்” பெயர் எப்படி இருக்கு?
நாளை சந்திப்போமா!
