January 3, 2009
வீரசேகர விலாஸ்!!! பாகம் # 5
*************************************
ஆரத்தி எடுத்து உள்ளே போகும் முன்னமே சத்திரத்தின் வாசல் வந்தவுடனேயே நாயனக்காரர் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சேதுரமன் - பொன்னுசாமி பிள்ளை வாசிப்பாரே அந்த நோட்டு ஸ்வரம் என்னும் மேற்கத்திய இசையை வாசித்து விட்டு சுற்றியும் பார்க்க "அய்யே படத்திலே கேட்ட அளவு இல்லியே" என கூட்டம் உதட்டை பிதுக்க, "அப்ப நீங்க ஆயிரம் ரூவா கொடுத்து அவங்களை தான் வைக்கனும்" என நாதஸ்வர கோஷ்டி சொல்வதாகவே பட்டது எனக்கு. உள்ளே வந்த பின்னே ஹாலின் மேல பகுதியில் கிழக்கு பார்த்து தனி மேடை மாதிரி உட்காந்து நாயனக்காரர் முன்னே சொன்ன மாதிரியே "குறை ஒன்றும் இல்லை"யை லயிச்சு வாசிக்க மாமா "அப்ப இந்த கச்சேரி தேங்காமூடி கச்சேரியாயிடும்னு சொல்லு" என தன் கச்சேரியில் திருவாய் மலர இரண்டு திண்ணையும் ரெண்டு பட்டது.
பந்திக்கு முந்துபவர்கள் முந்த, சினிமா கோஷ்டி பெண்கள் மிகவும் உற்சாகத்துடன் டிக்கெட் காசை எடுத்து கொண்டு சிவாஜி அண்ணன் & கோஷ்டியை தேடியது. கடைசியில் பந்தியில் "இந்த இலைக்கு பாயசம் போடுங்க"ன்னு சொல்லிக்கொண்டு இருந்த அந்த இள வட்டத்தை தாவங்கட்டையை பிடித்து "தம்பி, பாயசம் நான் எடுத்து வைக்க சொல்றண்டா மணிஅய்யர் கிட்ட, நீ ஓடி போயி பேர்லஸ்ல பூபதி கிட்டே சொல்லி டிக்கெட் வாங்குடா, இன்னிக்குன்னு பார்த்து நல்ல முகூர்த்த நாள்டா, எல்லா கல்யாண கூட்டமும் அங்க தாண்டா வந்திருக்கும்" என கெஞ்சி அனுப்பி வைத்தது. ஐந்து பேராக இருந்த அந்த சினிமா கோஷ்டி கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாகி வண்டு, சிண்டு என பத்து வயது பச்ங்க கூட டிக்கெட் காசு மிச்சம் செய்ய இடுப்பில் ஏறி கொள்ள நான் மட்டும் அந்த பிசாத்து ஒன்னரை ரூபாய்க்காக இடுப்பில் ஏற வெட்கப்பட்டு சீட்டு கச்சேரி பக்கம் வேடிக்கை பார்க்க ஒதுங்க அத்தை மட்டும் "யேய் ஒவ்வொருத்தியா தனி தனியா போங்க மண்டபத்தை விட்டு, இல்லாட்டி பொண்ணு வீட்டுல தப்பா நெனச்சுக்க போறாங்க, பின்ன தெரு மொனையிலே போய் ஒண்ணா சேர்ந்துகுங்க, எல்லாரும் கழுத்த இழுத்தி போத்திக்கனும்" என சொல்லிவிட்டு பொண்ணோட திரட்டி பால் அத்தையையும், மாப்பிளை பக்கம் இரண்டு அத்தையையும் கூட்டி ஏதோ மந்திராலோசனை செய்ய நான் என்னவாயிருக்கும் என யோசனை செய்து அந்த கூட்டத்தில் உள்ளே நுழைய "டேய் இவன் வேற முந்திரி கொட்டை மாதிரி, போடா அந்தண்ட"ன்னு விரட்டப்பட்டேன்.
"இந்தா பாருங்கப்பா, கும்மோணம் பெரிய தெரு பஞ்சு செட்டியார் கடையிலே தான் வாங்கனும், போன வாட்டி மாதிரி அஞ்சடிக்கு வாங்கிடாதீங்க, இவன் வாடஒசந்த பய, உங்க பொண்ணு மாதிரி மரப்பாச்சி இல்ல, அங்க தான் ஒரிசினலா கெடக்கும் எலவம்பஞ்சு, உள்ள கொட்டையும் இருக்காது, அப்புடித்தான் பெரியவன் கல்யாணத்துல மெத்த உள்ள எலவங்கொட்ட இருந்து அத எலி கடிச்சு நாசமாக்கிடுச்சு,அது பத்தாதுன்னு காஞ்சனா கால வேற கடிச்சுடுத்து. "ஏண்டி இத்தன ஆழமா கடிக்கிற அளவு என்னடீ பண்ணிகிட்டு இருந்த"ன்னு கேட்டதுக்கு "நான் அவருன்னு நெனச்சேன்னு சொன்னா பாரு"ன்னு சொல்லிட்டு இடி இடியென் சிரிச்சாங்க. "அதனாலத்தான் சொல்றேன் கும்மோணம் தாஞ் சரி, இப்ப பஸ்ஸ புடிச்சா பதினோரு மணிக்கு அங்க போலாம். செட்டியாரு முகூர்த்த நாள்ன்னா ஒரு மணிக்கு தான் அடப்பாரு. திண்ணையிலே பஞ்சாமய்யரு வூட்டு செயராமந்தம்பி இருக்கு, ஒரு கைலெட்டரு வாங்கி தாரேன், நூரு ரூவாய்க்கு ரெண்டு தலவாணியோட தருவாரு, மறந்து போயி ஒரை வாங்கிடாதீங்க அது சாத்திரம் இல்ல, திரும்ப ராத்திரி ஒண்ணரை ஆகிடும். கண்ணு படாம கொண்ணாந்து காம்ராவூட்டுல (சந்திரத்தின் ஒரு அறை) வச்சுடுங்க"
கிட்ட தட்ட சாப்பிட்டவர்கள் களைய, சினிமா கூட்டம் நைசா வெளியேற, நாதஸ்வர கோஷ்டி நாயனத்தை நாயன பையில் போட, தவில் சின்ராசு காவி துணி போட்டு தவிலை மூடிகிட்டு இருக்கும் போதே மணிஅய்யர் மாமாவின் கச்சேரியில் ஐக்கியமானார். அப்போ ஒழுகும் வெற்றிலை எச்சிலை தன் துண்டில் அவசரமாக துடைத்து கொண்டே அம்மாபாய் சத்திரத்தில் இருந்து தெட்ஷா ஓடிவர மாமா "வாடா தெட்ஷா ஆச்சாள்பொரம் பெரிய தம்பி இத்தன தம்மு க்ட்டி வாசிச்சா என்னை மாதிரி மூல களிம்பு வச்சிகிட்டு அலையனும்னு சொல்லி சுருக்க முடிச்சுகிட்டு வரவேண்டியது தான" என சொல்லி கொண்டே சீட்டை களைத்து போட்டார்.
"அண்ணே அம்பாபாய்க்கு நன்னிலம் எக்ஸ் சேர்மென் பேரளம் மொதலி வந்திருந்தாருண்ணே, நீ போடா முன்னாடி நான் கார்ல வந்துடறேன்னு சொன்னாரு,இன்னுமா வரல"
"எங்க, அவரு வடக்குவீதி பக்கமா போயி பல்லு வெளக்கிட்டு வருவாரு, (இதன் உள் அர்த்தம் எனக்கு ரொம்ப நாள் விளங்கவே இல்லை)எலேய் பெட்ரூமாஸ் பக்கிரிசாமி எங்கடா"
"அவனா ஏம்மாமா கேக்குறீங்க"
"இப்ப கரண்டு போயிடும்டா" மாமா சொல்லி முடிக்கும் போது சரியாக கரண்ட் போயிடுச்சு. எனக்கு அவரின் இந்த தீர்க்கதரிசன பேச்சு ஆச்சர்யத்தை கொடுத்தாலும் பின்னே தான் தெரிந்தது அது இரவு பத்து மணிக்கு இரண்டு பேஸ் மின்சாரட்தை மூன்று பேசாக மாற்றும் நேரம் என்று.
பக்கிரி சாமி பெட்ரோமாஸ் வெளிச்சத்தை கொடுக்க மாமாவும் களைத்து போட்ட சீட்டு கட்டை ஒன்றாக்கி "இருங்கடா, மொதலியார் வந்துடுவார், ரொம்ப நேரம் ஆகாது வயசாகிடுச்சுல்ல வந்த பின்னே வச்சுக்கலாம்" என சொல்ல திண்ணை குபீர்ன்னு சிரிக்க எனக்கோ மண்டையை பிச்சுக்கலாம் போல இருந்தது.
அப்போது எல்லார் கவனமும் பக்கிரிசாமி பக்கம் திரும்ப மாமா " பக்கிரிசாமி! இங்க வாடா"
"என்ன சாமீ கரண்டு போனா தான் பக்கிரி கண்ணுக்கு தெரியுறானா, சாயந்திரம் மொதல பச்ச தண்ணி பல்லுல படல சாமீ"
"இருடா,மொதலியாரும் வரட்டும், உங்கச்சேரிய வச்சுப்போம், ந்தா கரண்டு வந்துடுச்சு பாரு, அட மொதலியாரும் வந்துட்டாரு பாரு, வாங்க மொதலியாரே, மந்தியானம் கண்டக்டரு கிட்ட சொல்லிவுட்டேனே சொன்னானா"
"ஆமாபுள்ள, வந்து சொன்னான்"
"ஒரு மணி நேரமாச்சாமே அம்பாபாய விட்டு கெளம்பி"
"ஆமா காரு கெளம்பல"
"காருமா?"
திரும்பவும் சிரிப்பு! இந்த பெரிய மனுஷன்களே இப்படித்தான், புரியும் படி பேசிக்கவே மாட்டானுங்கன்னு நெனச்சுகிட்டேன்.
மாமா மாலை ஐந்து முதல் ஒரே இடத்திலே உட்காந்து முதுகு வலித்ததாலும், களிம்பு போட வேண்டிய நேரம் வந்துவிட்டதாலும் அவருக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைப்பட "பக்கிரி இங்க வா, இந்தா ரெண்டு ரூவா போயிட்டு வா, மணிஅய்யரே, மொதலியாரு வந்திருக்காருல்ல ஒங்க சிஷ்யகேடி எதுனா இருந்தா பில்டர் காபிய கொண்டு வர சொல்லு" என வரிசையா கட்டளை போட்டு கொண்டே திண்ணை முனையில் நிலைப்படி அருகே வந்து உட்காந்து "சொல்லுங்க மொதலியாரே, நான் சொன்னா சொன்னது தான் அடுத்த தபா நீங்க திரும்பவும் தோக்க போறீங்க பாருங்க"
"அட போமய்யா, தம்பண்ணா இந்த தபா ஒரு ஓட்டுலயாவது ஜெயிக்கலைன்னா பாரு, காங்கிரஸ் கட்சிய பத்தி தெரியலைய்யா ஒமக்கு"
"அதான் தெரியுதே அம்பத்து ஒம்போதுல இருந்து கழுதை தேஞ்சுகிட்டே இருக்குதே, ஒரு ஓட்டுலயாவது நீங்க தோக்குறீங்க, கொல்லுமாங்குடி வரதன்ன மொவன் கோபாலுகிட்டே "
"யோவ் புள்ள வரதம்புள்ளயே காங்கிரஸ் தான்யா, அத மனசுல வச்சுக்க"
"சரி சரி அரசியலு வேண்டாம், இந்தா பக்கிரி வந்துட்டான், ஒரு கச்சேரிய கேட்டுட்டு ஆரம்பிப்போம், எலேய் பக்கிரி என்ன பழரசம் வாசன பிச்சுகிட்டு போவுது இத்தன ஜல்தி வந்துட்ட"
ஒரு வித போலி மரியாதை காமிச்சுகிட்டு "ஆமாங்கய்யா" என சொல்ல மாமா "பக்கிரி டி.என்.ஆர் தோடி வாசிக்கிற மாதிரி இதோ இந்த திருகோடிகாவலும் வாசிச்சுதுடா புள்ளையார் வாசல்ட, ஆஹா என்னா ஒரு சுருள் பிரமாதம் போ, நீயும் கேட்டுகிட்டு இருந்தியா அத" மாமாவின் குரலில் ஒரு நக்கல் இருந்தது. திருக்கோடிகாவல் ஒதுங்கி போனது.
"ஆமாங்கய்யா, ஆனா அதுக்கு ஏங்கய்யா பெரியவரு பேர சொல்லுறீங்க" இப்போது பக்கிரியின் குரலில் மிதமிஞ்சிய நக்கலும், கண்ணில் மித மிஞ்சிய ஆனவமும் தெரிந்தது.
"சரி நீதான் நல்லா விசில் அடிப்பியே, கொஞ்சம் வாசிச்சு காமி"
இதுக்காகவே காத்திருந்த பக்கிரிசாமி அந்த தொட்டி முற்றத்துக்கு போய்(அங்கே தான் பெட்ரோமாஸ் இடிக்காது ஏனனில் அது திறந்த முற்றம்) தன் இடுப்பில் இருந்த காசி துண்டை சும்மாடு சுத்தி பெட்ரோமாசை தலையில் சும்மாட்டின் மேல உட்கார வச்சு வலது கால் முழங்காலை கொஞ்சம் முன்னுக்கு தள்ளி ஒரு மாதிரி நொடிச்சுகிட்டு நின்ன வாக்கில் தன் இரண்டு கைகளையும் புற முதுகு கட்டி கொண்டு பின்னால் திரும்பி வெற்றிலையை துப்பிவிட்டு தன் தோள் பட்டையில் துடைத்து கொண்ட போது லைட் ஆடிய போது மாமாவை தவிர அத்தனை பேரும் விளக்கு விழுந்துடுமோன்னு பயந்து போனார்கள்.
"அட பயப்படாதீங்க சாமீ,நேரு இந்த ஊருக்கு வந்த காலத்திலேயே நான் இத தூக்க பழகிட்டேன்" என தன் புகழை தானே பாட மாமா "சரிடா தோடிய இழுத்து வுடு, மொதலியாருக்கு புடிச்சு இருந்தா இன்னும் ரெண்டு ரூவா"
தன் உதட்டை குவிக்காமலே தட்டையாக ஆனால் கொஞ்சம் கோணலாக வைத்து கொண்டு மெல்லியதாக தோடியை இழுக்க முதல் ஒரு அரை நிமிடம் உதடு பிடிபடும் வரை கொஞ்சம் பிசிறு தட்டி பின் மெதுவாக தோடி ராகம் அப்படியே ராஜரத்தினம் பிள்ளை சாயலில் இழைந்து ஓட தெருவில் போகும் சிலரும், உள்ளே சமையல் கட்டு ஆட்களும் கூட்டமாக சேற, அந்த இடம் சொர்கலோகமாக மாறியது. பின்னே ராகத்தை ஆலாபனை செய்து பின் தோடியில் அமைந்த சீர்காழி மாரிமுத்தாபிள்ளை கீர்த்தனைக்கு வந்து சுருள் விட ஆரம்பித்த போது அப்படியே டி,என்,ஆர் வந்து நிற்பது போல இருந்தது. திருக்கோடிகாவலுக்கு வியர்த்து போனது. நடுவே கண்ணை முழித்து பார்த்த போது மாமாவின் சைகை பக்கிரிக்கு புரிந்தது. திருக்கோடிகாவல் தப்பு செய்த இடத்தில் அதே பிசிறு அடிச்சு அவரை பார்த்து சிரித்தது பக்கிரி!
கூட்டம் அப்படியே பிரம்மிச்சு போய் நின்ன போது மாமா படபடவென கைத்தட்ட கூட்டம் மொத்தமும் தட்டியது. பக்கிரி கச்சேரியை ஆரம்பித்த உடனேயே பாலய்யர் மகாதானத்தெரு முனையில் தான் வீடாகயாலும் விசில் சத்தம் அந்தமட்டும் கேட்டதாலும் தாலிக்கான மஞ்சள், நூல் எல்லாம் எடுத்து வந்து தம்பண்ணா முதலியார் பக்கத்தில் மனைகட்டை போட்டு உட்காந்து கொண்டு நூலில் மஞ்சள் தடவி தன் காலை வேலைகளை இரவே ஆரம்பித்துவிட்டார். மாமா கைதட்டி முடிந்து வலதுகையின் மூன்று விரலை மடக்கி ஆட்காட்டி விரலை கட்டை விரலால் சுண்டிய போது கம்பீரமாக ஆரம்பித்தது "ஆயிரம் கண் போதாது வண்ண நிலவே" சிதம்பரம் ஜெயராமன் பாட்டு.
எனக்கு அந்த பிராயத்திலே தோடியோ, மாரிமுத்தாபிள்ளையோ அத்தனை பரிட்சயம் இல்லாவிடினும் அந்த ஆயிரம் கண் போதாது வண்ண நிலவே ஒரு அசத்து அசத்தத்தான் செய்தது. ஒரு வழியாக கச்சேரி முடிந்து பக்கிரி பெட்ரோமாசை கீழே வைத்த போது பக்கிரிக்கு நாலு நாளுக்கு தேவையான பழரச காசு தேறியது.
"ஆமா புள்ள, இவனுக்கு எப்படி இத்தன ஒரு ஞானம்" இது முதலியார்.
"ஆமா மொதலியாரே, இவனுக்கு இருக்குறது கேள்வி ஞானம். இவனுக்கு சின்ன வயசுல இருந்தே வெளக்கு தூக்குறது தான் வேலையே. தருமோரம் (தர்மபுரம் மடம்) மடத்துல பண்டாரசன்னதிக்கு வருஷா வருஷம் பட்டனபிரவேசம் வருமே அப்ப பெரிய பெரிய செட்டு எல்லாம் வரும் மொதலியாரே. செம்னார்கோவில், திருவமழ,திருவாடுதொர எல்லா செட்டும் போட்டி போட்டுகிட்டு விடிய விடிய வாசிச்சுகிட்டு இருக்கும் போது இவன் பழரசத்த குடிச்சுட்டு தலையிலே வெளக்க வச்சுகிட்டு நின்னுகிட்டே தூங்கிடுவானா, அப்போ இவன் காதுல வந்து விழுந்து கிட்டே இருக்கும் செம்னார்கோவில் பெரிய செட்டோட பல்லவியும், திருவமழ பைரவியும், ராஜரத்தினம்புள்ள தோடியும். அது சின்ன வயசுல இருந்தே இவனுக்கு ஊறி போச்சு, அதான் இத்தன ஒரு கேள்வி ஞானம் மொதலியாரே அத விட இது வரை யாரும் செய்யாத செம்னார்கோவில் பல்லவில தாள கணக்கு வழக்கு இவனுக்கு நல்லா வரும். வலது கால்ல ஒரு தாளம், இடது கால்ல ஒரு தாளம்ன்னு இவனும் செய்வான், ஆனா கேட்டா ஒண்ணும் தெரியாது "
"அது சரி புள்ள, விசில் அடிக்க சொன்னா இவன் ஏந் தலையிலே லைட்ட வச்சுகிட்டு வாசிக்கிறான்?"
"அதுவா அவன் வித்தை கத்துகிட்டதே அப்புடித்தானே, இப்ப ஒங்கள செருப்பு போட்டுகிட்டு கார ஓட்ட சொன்ன முடியுமா, அப்புடித்தான்"
மாமாவின் விளக்கம் எனக்கும் திருப்தியாகவே இருந்தது. ஆச்சு மணி பதினொன்று. திரும்பவும் மாமாவின் கச்சேரி களை கட்ட தொடங்கியது.
தொடரும்..............
December 30, 2008
வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டு கச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்!!! பாகம் # 4
இதோ எல்லோரும் பெருமாள் கோவில் போயாச்சு. சமையல் ஆட்களும், சில்லரை சில்லரையாக சில ஆட்களும் மண்டபத்தில் ஆங்காங்கே இருக்க எல்லார் சூட்கேசையும் பார்த்துக்கும் சித்தியும், சித்திக்கு துணையாக 3 பாட்டிகளும், பாட்டிக்கு துணையாக மணி அண்ணனும் சத்திரத்தின் மூன்றாம் கட்டில் இருக்க, முதல் கட்டில் அதாவது திண்ணையில் மாமாவின் கச்சேரி யார் தொல்லையும் இல்லாமல் களைகட்டியது. அத்தை மாத்திரம் பெருமாள் கோவில் போகாமல் அடுத்த நாள் இரவுக்கு மாப்பிள்ளைக்கு திரட்டிப்பால் எப்படி செய்வது என பெண்ணின் அத்தைக்கு டியூஷன் எடுத்துகிட்டு இருந்தாங்க.
"மூணு லிட்டர் நல்ல பசும்பாலா தண்ணி ஊத்தாம நல்லத்துகுடி கார்காத்தாரு புள்ள வீட்டுல இருந்து கொண்டு வர சொல்லியிருக்கேன். அதை நீ என்ன பண்ற சாயந்திரம் ஆறு மணிக்கு எல்லாம் குமட்டி அடுப்பிலே வெங்கல பால் சட்டியிலே வச்சிடனும்...."
அப்போது சத்திரத்து வாசல்ல சர்ர்ர்ர்ன்னு வந்து சைக்கிளை ஸ்டாண்டு கூட போடாமல் படியில் சாத்தி வச்சுட்டு ஓடி வந்து "அத்தே அத்தே"ன்னு கூவிகிட்டு மேலே வருவது ஒரு அண்ணன். பேர் சிவாஜி. மாமாவை தாண்டும் போதே மாமா "என்னடா மழை தூரல் போடுதா, அதுக்கு அத்தையை கூப்பிட வந்தியா? ஆகா ஜாம் பஜார் ஜக்கு நீ சைதாப்பேட்டை கொக்கு, எனக்கு ராணி இஸ்பேர்டு வேணும்ன்னு எப்புடிய்யா தெரியும், டேய் அத்தை மூணாம் கட்டிலே மாப்ளக்கி தெரட்டி பாலு செய்ய டிவிசன் எடுத்துகிட்டு இருக்கும் பாரு" மாமா இப்படித்தான் உக்காந்த இடத்திலே இருந்தே பெருமாள் கோவில் வாசல்ல என்ன நடக்கும், அத்தை இந்நேரம் என்ன செய்வாங்க, பரபரப்போடு வந்தவனின் செய்தி என்னவா இருக்கும் இத்தனைக்கும் நடுவே ராணி இஸ்பேர்டை போட்டுவிட்ட ஜக்கய்யருக்கு கவுண்ட்டர் கொடுத்துகிட்டு எனக்கு கொஞ்சம் பிரமிப்பா தான் இருக்கும் அது போன்ற நேரத்திலே எல்லாம்.
சிவாஜி அண்ணன் நேரே போய் "அத்தே, தூரல் போடுதாம், அம்மா உங்களை உடனே கூப்பிட்டு வர சொல்லுச்சு" என்றதும் அத்தை "அட அத்தை இருக்கும் போது பேய வுட்டுடுவனா களம்புடா ராசா நா இருக்கேன், மணி சீக்கிரம் ஓடியா அஞ்சு தேங்காய எடுத்துட்டு வா, அப்புடியே மஞ்ச தூளை எடுத்துட்டு வா, ஒரு பித்தளை தாம்பாளம் எடு, அந்த இட்லி துணியிலே கொஞ்சம் கிழிச்சு அதை மஞ்ச கரச்சு நனச்சு குடு. ஒரு ரெண்டு ரூவா துட்டும் ஒரு நாலணா துட்டும் குடு" பரபரன்னு அத்தையின் கட்டளைகள் நிறைவேற்றப்பட்டு விடும் மணி அண்ணனால்.
அத்தை தேங்காயில் மஞ்சள் தடவி தாம்பாளத்தில் வைத்து சாமி படத்துக்கு கீழே வைத்துவிட்டு, பின்னே மஞ்சள் துணியில் ஒண்ணேகால் ரூபாய் துட்டு வைத்து முடிச்சு போட்டு "டேய் தம்பி சைக்கிள்ல தான வந்த ஓடி போய் காளியம்மன் கோவில்ல வீரன் கிட்ட அத்தை படி கட்டினேன்னு சத்தமா சொல்லி அது கால்ல வச்சிட்டு ஓடியா, நான் அரக்காஸ் அம்மாவுக்கு ஒரு ரூவாயை போட்டுட்டு பெருமாள் கோவிலுக்கு போறேன்"ன்னு சொல்லிட்டு முதல் கட்டிலே இருக்கும் மாமா கோஷ்டியிடம் "தம்பி வசந்தி உள்ள தனியா இருக்கா, ஒரு கண்ணு வச்சுக்க, தோ வந்துட்டேன்"ன்னு சொல்லிட்டு முதல் படியிலே நின்னு கச்சேரி பிள்ளையாரை பார்த்து தன் வலது புறங்கையை அடிமுதுகிலும், இடது கை விரல்களை சோடாபுட்டி கண்ணாடிக்கு ஷேட்(shade) மாதிரி வைத்தும் மழை வருதா என பார்த்துவிட்டு கீழே இறங்கிய போது மழை நின்னு போயிருந்தது.
அத்தை போகும் போதே அருணாசல அய்யர் கடையிலே நின்னு ஒரு லுக் விட அய்யர் "வாங்க அத்தே பொண் அழப்புக்கா" என கூற
"ஆமா அய்யா, பூக்கடை வரதனுக்கு ஒரு போனை போட்டு ராத்திரி பத்துக்கு மேல முகூர்த்த மாலை அனுப்பினா போதும்னு சொல்லிடுங்க. மாலை கழுத்திலே மூங்கி சிம்பு கம்மியா வக்க சொல்லுங்க, செண்டு சுத்த எலுமிச்சங்காய் போதும், ஆப்பிளு கீப்பிளு வேணாம்ன்னு சொல்லுங்க, பொண்ணுக்கு சோத்தை போட்டு வளக்கல, காமிச்சு தான் வளத்துருக்காங்க, ஆப்பிள் செண்டு தூக்க ஆளு வைப்பா போல இருக்கு அவ அம்மாகாரி" என சொல்ல அதற்கு அய்யர்
"இருங்க அத்தே சுத்தி தாரேன் நீங்களே சொல்லிடுங்க என சொல்லி 0ஐ சுத்த (அப்போ 0 சுத்தனும்,எக்ஸ்சேஞ்சிலே இருந்து என்ன நம்பர் வேணும்ன்னு கேப்பாங்க, வெறும் 3 டிஜிட் தான் நம்பர் ) அத்தையோ
"அய்யோ எனக்கு காதுல வக்கிறது எதுன்னு நீங்க பாடம் படிக்கிறதுக்குள்ள மாலை வந்து சேந்துடும். நீங்களே சொல்லிடுங்க, மணி நாலனா கொண்டு வந்து குடுப்பான் போனுக்கு" என சொல்ல அதற்கு அய்யர்
"அத்தே மணி அஞ்சு கிலோ ரவை வாங்கிட்டு போனான்" என்றார். அதற்கு அத்தை
"சரிய்யா, ரோக்காவுல சேத்துடுங்க அதையும்"ன்னு சொல்லி அரக்காஸ் அம்மா தர்காவுக்கு நடையை கட்டினாங்க. அது யார் அரகாசுஅம்மா? "ஹஜ்ரத் கன்ஷா வாஈ வலியுல்லாஹ் " என அங்கே போட்டிருக்கும். அந்த தர்கா முனிசிபாலிட்டி வாசலில் இருக்கு. அங்கே அடக்கம் ஆகியிருப்பது ஆணா, பெண்ணா என யாருக்கும் சரியா தெரியாவிட்டாலும் அது என்னவோ இந்துக்களை பொருத்தவரை "அரகாசு அம்மா" தான். வியாழன் இரவு அந்த வழியா வந்தா வத்திசாய்பு சாம்பிரானி போட்டு கொஞ்சம் நாட்டு சர்கரை தருவார். (பத்தி வியாபாரம் செய்ததால் அவர் வத்திசாயுபு ஆகிட்டார்)
இங்கே பெருமாள் கோவில் வாசல்ல இதோ வந்து நிக்குதே சிகப்பு பிளைமுத் கார். அதன் ஓட்டுனர்(கம்)ஓனர் மணி முதலியார் ஏதோ போய் நாயனகாரர் கிட்டே என்னவோ பேசறார் பாருங்க. கிட்ட போய் என்னான்னு கேப்போம்.
"என்ன திருகோடிகாவலாரே, எனக்கு ஒரு உபகாரம் பண்ணனுமே"
"மொதலியாரே நீர் என்ன கேக்க போறன்னு தெரியும்ய்யா, நானு நேத்து சீனிவாசா சத்தரத்தில இருந்து லோல் படுறேன். சட்டுபுட்டுன்னு இழுத்துட்டு போய் சேர்க்க சொல்ல வர்ர அதானே"
"ஆமா புள்ள எனக்கு அடுத்து கொரநாட்டுல ஒரு அழைப்பு இருக்கு, எதுனா செய்யனுமே"
இப்படியாக அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அத்தை அங்கு ஆஜர். ஒத்தபைசா சாக்லெட் தட்டை ஒரு சித்தி எடுத்துகொள்ள நான் எனக்கு கண்டிப்பாக ஜானவாச காரில் இடம் கிடைக்காது என பட்ஷி சொன்னதால் சாக்லெட் சித்தி கையை பிடித்து கொண்டேன். மெதுவா பொண்ணு காரில் ஏறியதும் நாதஸ்வரகாரர் தன்னை ராஜரத்தினம் பிள்ளை மாதிரி மனசிலே நினத்து கொண்டு தோடியை லயிச்சு வாசிச்சு, ராகத்தை ஆலாபனை செய்யும் போதல்லாம் தவில் "ஆமாம் ஆமாம்" என்பது போல ஒரு சின்ன சின்ன தட்டு கிட்டதட்ட அது ஷொட்டு மாதிரி, பின்னே ரெட்டை நாயனம் ஆலாபனை பண்ணி பின்பு கீர்த்தனைக்கு தாவி சுருள் விடும் போது விரலடி ஸ்பீடு பத்தாமல் பிசிறு தட்டியது. (பிருகா தான் தஞ்சை பாஷையில் சுருள்விடுவது என செல்லமாக அழைக்கப்படும்)
இப்போ தெர்மாஸ் விளக்கு குரூப் பத்தி சொல்ல வேண்டும். அதிலே ஒரு சின்ன பெண் என்றேனே அது வைத்திருந்த லைட் எறியவில்லை. ஒரு கணக்குக்காக அந்த பெண் போலிருக்கு. அத்தை அதை கவனிச்சாச்சு. கண்டிப்பா ஒன்பது லைட்டுக்கு தான் காசு தர போறாங்க.
அந்த பக்கிரிசாமி பக்கத்திலே ஒரே பழரச நாத்தம். அழுக்கு வேட்டியை மடிச்சு கட்டிகிட்டு, ஒரு துண்டை இடுப்பிலே கட்டிகிட்டு வெற்று உடம்போடு,வெற்றிலையை வாயில் அடக்கி கொண்டு ஒரு சும்மாடு தலையில் வைத்து அதன் மேல் அழகாக அந்த பெட்ரோமாஸ் "உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என ஒரு வித சுருதியோடு அந்த சுருதி நூறு சதம் நாதஸ்வர கோஷ்டியின் சுருதி பெட்டியின் சுருதியோடு ஒத்து போனது. கொஞ்சம் சுருதி பிசகினால் பக்கிரிசாமி தன் கையை உயர்தி அந்த விளக்கின் பித்தளை வயிற்றை தடவி காற்றை கொஞ்சமாக பிடுங்கி விட்டோ அல்லது கீழே இறக்கி காற்றை அடித்து கொண்டோ சுருதி சேர்த்து கொண்டிருந்தது எனக்கு ஆச்சர்யமாக பட்டது. அதற்கான விடை ராத்திரி 11 மணிக்கு எனக்கு தெரிந்தது. பக்கிரிசாமி தன் ஒரு காலை கொஞ்சமா மடக்கி கொண்டு இரண்டு கைகளையும் முதுகில் கட்டி கொண்டு தலை விளக்கை பிடிக்காமல் கண்ணை மூடி கொண்டு தோடியில் லயிச்சு போய் நிற்கிறாரா அல்லது பழரச போதையா என எனக்கு தெரியவில்லை. ஆனால் சுருள் விடும் போது பிசிறு தட்டும் போது கொஞ்சம் முகம் சுளித்தார். கொசு கடித்திருக்கும் என நினைத்து கொண்டேன்.
இப்போது வரிசை தட்டை தூக்கி கொண்டு வரும் பெண்கள் கூட்டத்துகுள் நுழைவோம்.
"சுலோச்சனா அங்க பாரு பொண்ணோட சித்தியாம் அது, பெங்களூருல கட்டி கொடுத்து இருக்காங்கலாம், வேற பாசையில பேசுறா அவ பசங்க கிட்ட"
"ஆமா அத்தான் கூட ஒரு தடவ அந்த ஊரு போயிருக்காங்க, அவ ஜரிகைய பாத்தியா குன்னக்குடி துன்னூரு மாதிரி"
"மீனாச்சியத்தே, நீங்க இந்த தட்டை தூக்கிகுங்க, அந்த நாலாம் நம்பர் பஸ்ல உக்காந்து இருக்கிறவன் எல்லாம் இங்கயே பாக்குறானுங்க, எனக்கு மானமே போவுது, என் காலேஜ்ல படிக்கிரவ எவலாவது பார்த்துட போறா" ஒரு பியூசி அக்கா இது!
"பஸ்ஸிலே உக்காந்திருக்கிறவன் பாக்குறது உனக்கு எப்படி தெரியும்"-இது ஒருஅத்தை!
"அக்கா மணி இப்பவே எட்டு ஆச்சு, சத்தரத்துக்கு போவ மணி ஒம்போது ஆவும். சீக்கிரமா ராஜேந்திரங்கிட்ட காச குடுத்து பேர்லஸ்ல ஊட்டி வர ஒரவுக்கு டிக்கெட் வாங்க சொல்லு, சும்மா கூட்டத்த சேக்காத நீ, நா, கல்லங்குடி, திருகண்டீஸ்வரம்,தொனைக்கு அய்யம்பேட்டை சரோஜா மட்டும் போதும்"
"நல்லா இருக்குமான்னு தெரியலையே"
"அட போக்கா கேயார்விசயா ஒரு பாட்டுக்கு சிவாஜிக்கு தெரியாம தகதகன்னு பொடவைல விலுக்கு விலுக்குன்னு ஆடுதாம். ஆனா சிவாஜி சிசர் குடிச்சிகிட்டு பாத்துகிட்டே இருப்பாராம்,தந்தியாபீசரு மருமவ சொன்னுச்சு"
"மாமி வழுக்கிவுழுந்தப்ப எனக்கு சிரிப்பு வந்துடுச்சு, அடக்கிகிட்டு நல்லா வேணும்னு நெனச்சுகிட்டேன்"-இது ஒரு மருமகள்.
"அங்க பாருடீ அந்த பிடி டீச்சர் போவுது, லீவு போட்டதுக்கு வேப்பல ஆட்ட போவுது நாலன்னக்கி"-இது ஒன்பதாவது படிக்கும் அத்தை பொண்ணு!
"அங்க பாரு கணவனே கண்கண்ட தெய்வம் வருது, இந்தா டக்குன்னு திரும்பாத மெதுவா திரும்பி பாரு"-கிண்டல் புடிச்ச மாமி!
"பாலகுரு புள்ள கடையில இன்னிக்கு பெசல் அடையும் அவியலுமாம், வாடி உள்ள போயி ஒரு கட்டு கட்டுவோம்"(சொல்லிட்டு கெக்கேபிக்கேன்னு ஒரு சிரிப்பு)-யாரோ தெரியலை!
"பொண்ணுக்கு இப்பவே வேர்க்குது நாளக்கி இந்நேரம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்"
"ந்தா ச்சீ வெவஸ்தயே இல்லாம பேசாத, நடுமாமி திரும்புது பாரு அதுக்கு எலி காது"-மருமகள்கள்
"நா அப்பவே சொன்னேங் கேட்டியா இந்த கும்மோணத்துகாரி மத்தவளையும் கெடுத்துபுடுவான்னு நீ தான் ஒலகத்துல இல்லாத அழகியா எம்புள்ளைக்கு வேணும்ன்னு கட்டிகிட்டு வந்த, குடும்பஸ்தி மாதிரியா பேசுறா, காதுகிட்ட மசுர சுருள் விட்டுருக்கா பாத்தியா, இழுத்து வச்சி அறுக்காம விட்டிருக்க நீ"-இது முன் வரிசை பாட்டி!"
"அத்தாச்சி இந்த தட்டையும் கொஞ்சம் பிடிச்சுகுங்க தோ கமலாகாபி வந்துடுச்சு, நா போயி நூறு பீபரி வாங்க்யாறேன், நாளக்கி கல்யாணம் முடிஞ்ச கையோட வீட்டுக்கு தான் வரும் கூட்டம் எல்லாமே"இது அம்மா!
இதோ சத்திரம் வந்தாச்சு! பெட்ரோமாஸ் விளக்கு எல்லாம் இறக்கி வச்சாச்சு. ஆரத்தி எடுக்கப்பட்டு எல்லாரும் வரிசையா உள்ளே போக எப்போதும் போல வழுவூர் சம்முகம் நியூ கொழும்பு பையை இடுப்பிலே இருந்து உருவுரார் செருப்பை அதில் போட்டுகிட்டு பந்திக்கு போக.
தொடரும்.....................
December 29, 2008
"வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்"- பாகம் # 3
"வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்"- பாகம் # 2 ஐ படித்துவிட்டு இந்த 3ம்பாகத்தை படிக்கவும்!
***********************************
மாமா சிதறு காய் விட்டுட்டு அந்த வீரசேகரவிலாஸ் கருங்கல் படி ஏறி மேல் படியில் நின்று கிழக்கே பார்த்து "காளியாயி"ன்னு கும்பிட்டு கிழக்கே பார்த்து கச்சேரி பிள்ளையாரை கும்பிட்டு உள்ளே போய் முதலில் இருக்கும் தொட்டி முற்றத்தில் இறங்கி தண்ணீர் குழாயில் காலை கழுவி கொண்டிருக்கும் போதே பெண்ணை அழைத்து கொண்டு எல்லோரும் உள்ளே போனார்கள். முதலில் அந்த திண்ணை வரை தானே சொல்லியிருந்தேன். இப்போது அந்த திண்ணையை தாண்டி அந்த மிக பெரிய படாக்கு மரத்தில் (ரோஸ் வுட்) செய்த வேலைப்பாடு அதிகம் கொண்ட நிலைப்படியை தாண்டி அத்தையின் தலைமையில் உள்ளே சென்றனர். நிலைப்படியை அடுத்து உள்ளே இருப்பது அந்த பெரிய சத்திரத்தின் ஹால். வலது திண்ணை இடது திண்ணை இரண்டின் நீளமும் சேர்த்த நீளம்தான். ஆனால் அகலம் திண்ணையின் அளவை விட கொஞ்சம் பெரியது. அதன் கிழக்கும் மேற்குமாக இரண்டு மர அலமாரிகள் சுவற்றில் புதைக்க பட்டிருக்கும். அலமாரியின் இரண்டு பக்கமும் தன் நீண்ட தோகையை கீழ் பக்கமாக தொங்கவிட்ட படியான, ஒன்றை ஒன்று பார்த்த மாதிரி சலவைக்கல்லால் செய்யப்பட்ட மயில் பதிக்கபட்டிருக்கும். அதை அந்த தோகையை தடவி பார்ப்பது என்னவோ எனக்கு அப்படி ஒரு சந்தோஷமாக இருக்கும். எனக்கு மட்டும் இல்லை கொஞ்சம் பிராயமானவர்களும் கூட தடவி பார்த்து விட்டு "என்ன ஒரு வேலைப்பாடு" என சொல்லிக்கொள்வர்.
அந்த ஹாலின் நடுநாயகமாக ஒரு செட்டியார்வீட்டு ஆச்சி ஒரு அழகிய வேலைப்பாடு அமைந்த நாற்காலியில் அட்டானிகால் போட்டு அமர்ந்து இருக்க ஆச்சியின் பின்னால் அவங்க வீட்டு செட்டியார் நாற்காலியில் கைவைத்து நின்று கொண்டிருக்கும் அழகிய கருப்பு வெள்ளை படம் வரைந்து படாக்கு மர பிரேம் போட்டு பிரம்மாண்டமாய் மாட்டப்பட்டிருக்கும். ஆச்சியின் கழுத்தில் குறைந்தது ஒரு கிலோ நகை இருக்கும். ஆச்சி அத்தனை ஒரு அழகுன்னு சொல்ல முடியாது. நிறமும் கருப்புதான். ஆனால் முகத்திலே லெஷ்மி குத்தவச்சி தாயம் ஆடி கொண்டிருக்கும். அந்த ஆச்சியின் நகையை பார்த்து கண்வைக்காத எம்குல பெண்டிரே இல்லை. ஆச்சியின் போட்டொவை பார்க்கும் என் பெரியம்மா, அத்தை வகையறாக்கள் அவங்க அவங்க வீட்டுகாரரை பார்க்கும் தொணி இருக்கே "என்னங்க நாம இப்படி ஒரு போட்டோ எடுத்துக்க கூடாதா" என கேட்பது போலவும், அதற்கு அந்த கனவன்மார்கள் "ஆச்சிக்கு ஆயிரம் சவரனும், ஆயிரம் ஜன்னல் வச்ச வீடும், சிவகங்கை சீமையிலே ஆயிரம் ஏக்கரா மல்லிகை தோட்டமும் சீதனமா எழுதி வச்சாரு அவங்க அப்பாரு அனா ரூனா லேனா செட்டியாரு. எனக்கும் அப்படி எழுதி வச்சா நான் காலடியில இல்ல குந்தி இருப்பேன்" என பதில் சொல்வது போலவுமே எனக்கு தோன்றும்.
அதே ஹாலில் ஒரு மரத்தால் ஆன மாடிப்படி,கைப்பிடியோடு இருக்கும். அதன் மேலே ஏறினால் அந்த ஹாலின் மேலே சுற்றியும் இருக்கும் கலர் கண்ணாடி பதிக்கப்பட்ட பதினாறு ஜன்னல்கள் இருக்கும். அதன் வழியே பார்த்தால் அந்த ஹாலில் நடைபெறும் விஷேஷத்தை பார்க்கலாம். ஆனால் கல்யாணம் அங்கே நடத்துவதுஇல்லை. கல்யாணம் அந்த ஹாலின் அடுத்து உள்ளே நுழைந்தால் வருமே ஒரு முற்றம்,அங்கே தான் நடக்கும்.
ஹாலை கடந்து போனால் நேரிடையாக வடக்கு தாழ்வாரம். அடுத்து முற்றம். அதிலே தான் கல்யாணம் நடக்கும். அந்த முற்றத்தை சுற்றியும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு தாழ்வாரம். மேற்கு தாழ்வாரத்தை அடுத்து ஒரு கல்யாண கூடம் இருக்கும். மேற்கு கூடத்தின் ஒரு முனையில் மணமகன் அறை. அது கொஞ்சம் பெரியது. கிழக்கு தாழ்வாரத்தின் ஒரு முனையில் மணமகள் அறை. அது அதை விட கொஞ்சம் சிறியது. (இங்கயும் ஆணியம் பாருங்கள்)
இதோ மணி அண்ணன் விரித்து வைத்த ஜமுக்காளம் எல்லா இடத்தையும் நிரப்ப மணமகள் அதன் ரூமுக்கு வந்தாச்சு.
மாமாவின் சீட்டு கச்சேரி குரூப் இருக்கே ரொம்ப வித்யாசமானது. திருக்கடையூர் முரளி(அப்போது மாமாவின் சீட்டு கச்சேரியில் வயது குறைந்தவர்), திருநாகேஸ்வரம் சுப்புனி, கும்மோணம் பஞ்சாமய்யர் ரெண்டாவது பையன் மீசைகாரர் ஜெயராமன், பரசலூர் ஜக்கய்யர், திருபுங்கூர் ராமசுப்பு இவர்கள் நிரந்தர பக்க வாத்தியம். இடையிடையே சில ஊர் பெரிய மனுஷங்க, சமையல் மணிஅய்யர், நாதஸ்வரம் சிவபுரி பத்மநாபன், வாயில் எச்சில் ஒழுகும் சு(ரு)தி பெட்டி தெட்ஷா இவங்க எல்லாம் கௌரவ ஆர்டிஸ்ட் வகையறா. இதிலே டிரான்சிட் பிளேயர்ஸ்ம் உண்டு.
மாமாவின் சீட்டு கச்சேரி குரூப் இருக்கே அது சாதி, மதம் கடந்தது. ஆரிய திராவிடம் கடந்தது, ஏழை, பணக்காரன் கடந்தது, உயர்ந்த, தாழ்ந்த வித்யாசம் கடந்தது, உயர் பதவி, தாழ்ந்த பதவி கடந்தது. பெரிய வித்வானும், அவரின் வெற்றிலை எச்சில் படிகம் தூக்குபவனும் இங்கே சமம், பெரிய சமையல் காரரும், பந்தி பரிமாறும் அவரின் வேலைக்காரனும் சமம், ஊர் பெரிய மனுஷனும் அவர்களுக்கு சமம். உண்மையான சோஷலிஷத்தை அங்கே தான் காணலாம். இத்தனை மணிக்கு சீட்டு கச்சேரி ஆரம்பம், இத்தனை மணிக்கு பிரேக், இத்தனை மணிக்கு முடியும், அடுத்த கச்சேரி இந்த இடத்தில் என எந்த ஒரு அஜண்ட்டாவும் கிடையாது.புதிது புதிதாக ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எழுதி வைத்து பின்பற்றுவது கிடையாது. நோட்டு புத்தகத்தில் பாயிண்ட் குறித்து வைத்துகொள்வதோ எதுவும் கிடையாது. எல்லாம் ஒரு கார்ப்பரேட் கம்பனி நேர்த்தியுடன் தானாக நடக்கும்.
இதோ மாமா கிழக்கு பக்கமாக இருக்கும் திண்ணையை(ரவிசாஸ்திரி பிட்சை பார்ப்பது போல) ஒரு நோட்டம் விடுகிறார். அப்போதே திருக்கடையூர் முரளி, சுப்புனி இருவரும் ஆஜர். ஆனால் ஒருவருக்கு ஒருவர் வாங்க. எப்படி இருக்கீங்க என்பன போன்ற சம்பாஷனையில் தொடங்காமல் ஏதோ ஒரு மணி நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு விட்ட இடத்தில் தொடருவது போல பேச்சை தொடங்குவார்கள். ஆனால் அவர்கள் காரியம் சீட்டு கச்சேரியை தொடங்க ஆயத்தப்படுத்தும் மும்முரத்தில் இருக்கும்.
"தெட்ஷாவுக்கு அம்பாபாயிலே தானே இன்னிக்கு கச்சேரி, யாரு நாயனம் அவனுக்கு"
கவனிக்கவும் தெட்ஷா ஒரு சுருதிபெட்டி ஆள். எந்த நாயனத்துக்கு தெட்ஷா சுதிபெட்டின்னு கேக்கலை. தெட்ஷாவுக்கு யாரு நாயனம் என கேட்டால் என்ன அர்த்தம். மாமாவுக்கு அப்போது முக்கியம் தெட்ஷா தான்.
முரளி அதுக்கு "அதுவா மாமா, மாப்பிள்ளை அழைப்புக்கு மழை வரனும்னு வேண்டிப்பாரே ஆச்சாள்புரம் பெரியதம்பியண்ணே அவருதான். மழை வருதோ இல்லியோ தெட்ஷா பத்து மணிக்கு வந்துடுவாரு"
மாமாவுக்கு அந்த கீழாண்ட திண்ணையிலே கடைசி தூண் தான் சரி படும். காலை தொங்கவிட்டுக்கலாம். தூணில் சாஞ்சுக்கலாம். வெற்றிலையை குறி பார்த்து தொட்டி முற்றத்தில் துப்பலாம். எழுந்து ஒண்ணுக்கு போகனும்ன்னா மத்த பிளேயர்சை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். மேலும் மாமாவுக்கு உருவமும் கொஞ்சம் பெரிசு.
மாமா தன் இடத்துக்கு போய் உக்காந்த உடனே "டேய் பசங்களா புருஷோத்தம்மன் டைலர் கடைக்கு போயி திருவமழை மாமா வந்திருக்கேன்னு சொல்லுங்கடா" என்பார்.
நானோ யாரோ ஒரு பொடியனோ ஓடி போய் சொன்னவுடன் "திருவமழை தம்பி வந்தாச்சா, இந்தா இந்தா தலவாணி, ஆனா நீதான் நாளைக்கு ஞாபகமா திருப்பி தரனும்"ன்னு சொல்லி தன் அடியில் இருக்கும் தலையனையை எடுத்து தருவார்.
மாமா அதை அழகாக தூணில் சாய்த்து தான் அதன் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் போதே மணி அண்ணன் மாமாவிடம் வருவார்.
"வா மணியண்ணே! மணியய்யர் வந்துட்டாரா"
"இல்ல தம்பி இப்ப வந்துடுவாரு. அவரு அடிபொடி எல்லாம் அடுப்ப பத்தவச்சிட்டானுங்க. பாலு வந்துடுச்சு சொர்ர தெர்தா . டிக்காஷன் ரெடியாயிடுச்சு. வெத்தலைய போடாத தம்பி, இப்ப காபி அனுப்பறேன். மணியய்யர உச்சிகாலத்துக்கு வரசொன்னா சாயரட்ஷைக்கு தான வருவாரு, சொர்ர தெர்தா"
"நல்ல வேள சாயரஷைக்கு வர சொல்லாம இருந்தீங்களே, பின்ன அர்த்தசாமத்துக்கு தான வருவாரு சொர்ர தெர்தா...தோ வந்துட்டாரு, வாங்க அய்யரே"
"அட அட அட திருவமழ புள்ள வந்தா தான் கல்யாண களை கட்டுது, சித்த இருங்கோ, உளுத்த மாவு போண்டாவும், கெட்டி சட்னியும் அனுப்பறேன், ஆமா புள்ள கும்மோணம் யானையடியில..."
"சுப்புனி, ஆதிதாளம் இருக்கே அது தொடையில தட்டி போட சொகமா இருக்கும் சும்மா வாணிஸ்ரீ மாதிரி, ஆனா கண்டசாபு தாளம் இருக்கே டி.ஆர்.ராஜகுமாரி மாதிரி திமிர் புடிச்சது"மாமா சம்மந்தமே இல்லாமல் சுப்புனிகிட்டே பேசறார் பாருங்க.
"புரிஞ்சுடுத்தூ நேக்கு புரிஞ்சுடுத்தூ மணி போய் போண்டாவை பாரும்யான்னு சொல்ல வர்ரேள், இன்னிக்கு நேத்தா பழகிண்டு இருக்கேன்" மணி அய்யரும் தஞ்சை மாவட்டமாகியதால் சுலபமா புரிஞ்சுகிட்டார். ஆனா எனக்கு அந்த வயசிலே அதல்லாம் புரியலை. ஆனா அதற்குள்ளாக மாமா டிரையல் கேம் விளையாடி முடிச்சு இருந்தார்.
இப்போ மணி ஐந்து ஆகிவிட்டிருந்தது. காவிரிகரை சீனிவாசா சத்திரத்தில் இருந்து நேராக வந்துவிட்ட நாதஸ்வர கோஷ்டி சீனிவாசா சத்திர கல்யாண வீட்டிலும் வண்டி சத்தம் வாங்கிகிட்டு இதோ நம்ம செட்டியார் சத்திர வாசலில் இறங்கியும் வண்டி சத்தம் கேட்டு கொண்டிருக்கு. மணி அண்ணன் உக்கிரான அறை நோக்கி ஓடுறார். மணி அய்யர் குரூப் நெய், திராட்சை வகையறாக்களை அதிகம் பயன்படுத்திவிடாமல் எண்ணி எண்ணி கொடுக்க. அத்தை அதற்குள் சீர்வரிசை சாமான் எல்லாவற்றையும் பித்தளை தாம்பாளத்தில் எடுத்து வைத்து யார் யார் எந்த எந்த தட்டை எடுத்துப்பது என பிரித்து கொடுக்க, மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என எல்லோரும் முதல் தொட்டி முற்ற திண்ணைக்கும், மாமா கச்சேரி நடத்தும் திண்ணைக்கும் நடுவே செருப்பை கழட்டி போட்டு விட்டு உள்ளே போகும் போது வழுவூர் சம்முகம் மாத்திரம் நியூ கொழும்பு மஞ்சள் பையில் போட்டு அதை சுருட்டி கக்கத்தில் வைத்து கொண்டு உள்ளே போக, வாசலில் ஒரு டேபிள் போட்டு அதன் மேல் ஒரு விரிப்பு விரித்து அதன் மேல் ஒரு தாம்பாளத்தில் ஜீனியும், ஒரு சந்தன பேழாவிலே பூக்கடையில் உருட்டி வைத்து அதன் மேலே கனேஷ்தர்பார் பத்தி கொளுத்தி வைத்திருப்பார்களே அந்த சந்தனத்தை கரைத்தும், பன்னீர் சொம்பிலே கொஞ்சம் தண்ணீர் ஊத்தியும் மணி அண்ணன் கொண்டு வந்து வைக்க பெண் வீட்டு மூணு பியூசி படிக்கும் பெண்கள், இரண்டு எட்டாம் கிளாஸ் பெண்கள் ,இரண்டு என் வயதை ஒத்த பொடிசுகள் தேமேன்னு வர்ரவங்க தலையிலே பன்னீர் சொம்பிலே இருந்து குழாய் தண்ணீரை தெளிக்க அதிலே ஒரு பி.யூ.சி மாத்திரம் கவரிங் செயின் கழுத்தை அரிக்காமல் இருக்க அதை தோளில் படாமல் லாவகமாக ஜாக்கெட் மேலேயே படர விட்டு கொண்டிருப்பதில் தம் முழுகவனத்தையும் செலுத்தியது.
மாமாவுக்கு தன்னை தாண்டி போகிறவர்கள் "என்ன புள்ள சவுக்கியமா" என்கிற கேள்வி தேவையே இல்லாததாக பட்டது. கேட்டவன் உள்ளே போவதுக்குள் மாமா ஏதோ சொல்ல ஜக்கய்யர் வெற்றிலை எச்சிலோடு பக்குன்னு சிரிக்க, ராமசுப்புவும், சுப்புனியும் "ஆமா மாமா ஆமா மாமா" என தாளம் போட அந்த இடம் தனி ராஜாங்கமாக தெரிந்தது.
கொஞ்சம்பொழுது சாய்ந்து கொண்டிருக்கும் போதே தூக்குதூக்கி பக்கிரிசாமி என்னும் எண்பது வயது கிழவர் தலைமையில் பத்துபேர் பத்து பெட்ரோமாஸ் விளக்குகளை அந்த தொட்டி முற்றத்தில் வைத்து காற்று அடித்து அதன் பித்தளை உடம்பை துடைத்தும், மேண்டிலை மாட்டி கொண்டும், மண்ணெண்னை ஊற்றி கொண்டும் இருந்தனர். இந்த மாப்பிள்ளை அழைப்பு பெட்ரோமாஸ் லைட் இருக்கே அது ஒரு வித்யாசமாய் இருக்கும். அதை ஒரு பெரிய பலகையில் அடித்து அதை தலையில் சும்மாடு வைத்து தூக்கி வைத்தால் அப்படியே நிற்கும் அந்த பக்கிரிசாமி அன் கோ வுக்கு. வந்த பத்து பேரில் ஆறு பேர் ஆண்கள், மூணு பேர் பெண்கள், தவிர ஒரு சின்ன பெண் ஆக பக்கிரிசாமி அன் கோ அப்பவே முப்பத்து மூணு சதவீதம் பெண்களுக்கு கொடுத்துவிட்டது. இந்த பக்கிரிசாமிக்கு என்பது வயசாச்சே தூக்குவாரா என நான் நினைத்தது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு அன்றைக்கு ராத்திரி பத்துமணிக்கு தான் தெரிந்தது.
உள்ளே ஹாலில் வலப்பக்கமாக நாதஸ்வர கோஷ்டி கிழக்கு பார்த்து உட்காந்து ஆயத்தமானார்கள். திருக்கோடிகாவல் கோவிந்தராஜ பிள்ளை தன் காது கடுக்கனை கழட்டி தன் விபூதி டப்பாவில் போட்டு துடைத்து மாட்டி கொள்ள அவரின் ஜோடி நாயனம் சுப்ரமணிய பிள்ளை வினிபா பவுடரை ஒரு கோட் முடிந்து திருப்தி இல்லாமையால் அடுத்த கோட்டுக்கு தயாராக, தவில் சின்ராசுவோ மேக்கப் முடிந்து சின்ன சில்வர் டப்பாவில் இருந்து புனுகு எடுத்து கருப்பாக நெற்றியில் பூசிகொண்டு சின்ன பஞ்சில் அத்தர் நனைத்து காதின் மடலில் திணித்துவிட்டு மீதியை தன் உடம்பில் பூசிக்கொண்டார்.
.
இங்கே மாமாவின் சீட்டு கச்சேரியில் கும்பகோணத்தில் இருந்து வந்த பஞ்சாமய்யர் ஹோட்டல் மீசைக்காரர் ஜெயராமனும் கலந்து கொள்ள மாமா தன் பையை நிரப்பி கொண்டே இருந்தார். நட்ட நடுநாயகமாக இருந்த தாம்பாளத்தில் வெற்றிலை, சீவல், அசோகாபாக்கு, ஏஆர்ஆர் வாசனை சுண்ணாம்பு, மைதீன் புகையிலை, சிவபுரி ரெங்கவிலாஸ் புகையிலை (இப்போது போல் பிளாஸ்டிக் சாஷே டைப் கிடையாது எல்லாம் பொட்டலம் தான்) என இருக்க ரம்மி கிடைக்காதவர்கள் கவுத்தி போட்டு ஒரு தரத்துக்கு வெற்றிலை போட்டு கொண்டு, விளையாட்டை தொடரும் அடுத்த ஆள் சீட்டை பார்த்து ஆலோசனை சொல்ல மாமா மாத்திரம் ஒரு கண் இங்கேயும் அடுத்த கண் உள்ளே போகும் ஆட்கள், செருப்பு திருடும் ஆட்கள், பெர்டோமாஸ் கோஷ்டி, நாதஸ்வர பார்ட்டி, சண்டை போடவே வரும் வகையறா என நோட்டம் விட்டு கொண்டே கமெண்ட் அடிக்க மற்றவர்கள் வெற்றிலை எச்சில் சிதறாமல் சிரித்து கொண்டே கருமமே கண்ணாயிருந்தனர்.
மணி அய்யர் அதற்குள் டிபன் செய்து முடித்துவிட்டார். என்ன எப்போதும் போல ஒரு வாழை ஏட்டுக்கு 2 இட்லி, சாம்பார், உளுந்து போண்டா, (அந்த போண்டாவிலே மிளகு முழுதாகவும், தேங்காய் சில்லி சில்லாகவும் இருந்தன)அதற்கு தேங்காய் சட்னி, ஒரு கரண்டி கேசரி, ஈயம் பூசின பித்தளை டபரா செட்டிலே கழனி தண்ணி மாதிரி காபியை தயார் செய்துவிட்டு இரவு சாப்பாட்டுக்கு வெண்டைக்காய் நறுக்கியும், நூல் கோல் நறுக்கியும், ஒரு வயதான பாட்டி சர சரன்னு தேங்காய் துருவியும் "டேய் கிச்சா ஜாரணிய இந்த பக்கம் கொண்டா", "உப்பு போடாதடா கடன்காரா நான் வந்துட்டேன்" ,"இட்லி துணிய தண்ணில நனச்சு புழிஞ்சு ராமன்ட குடுடா" "பஜ்சிக்கு வாழைக்காய் சீவுடா" " பெல்லாரிய ரவுண்டா சீவுடா" "ஆத்துல மாமி வேற தேங்கா எண்ணெய் கேட்டாடா கணேசா, ஓர்மையில வச்சுக்கோ" இப்படியாக அந்த அடுக்களையே ரகளையாக இருந்தது.
கொஞ்ச நேரத்திலேயே டிபன் முடிந்தது. மாப்பிள்ளை வீடு, பெண்வீடு என தனி தனியாக அந்த கல்யாண முற்றம் தாண்டிய அடுத்த ஹால் உள்ளே நுழைய அது அப்படியே முதலில் பார்த்தோமே பெரிய ஹால் அதை போலவே இருக்கின்றது. அதிலே மணி அண்ணன் சுருட்டி இருந்த பந்தி பாயை ஒரு முனையில் இருந்து உருட்ட அது பந்தி ஹாலின் அடுத்த முனைக்கு உருண்டு ஓட எதிரும் புதிருமாக மணமகன், மணமகள் வீட்டார் உட்காந்து இருக்க அமைதியாக முடிந்தது டிபன்.
பெண் அழைப்புதான் இந்த கல்யாணத்திலே. பெண்ணை பண்டரிநாதன் வண்டியிலே ஏத்தி இந்த தடவை விளநகர் பெரியம்மா மின் ஜாக்கிரதை மினியம்மாவாக முதலில் காரில் ஏறி கொள்ள பெண் இப்போது பட்டமங்கல தெரு பெருமாள் கோவிலுக்கு போயாச்சு. (இந்த பெருமாள் கோவில் தாலுக்கா ஆபிஸ் பக்கத்தில் ரொம்ப உள்ளடக்கமாக இருக்கின்றது. ரொம்ப பேருக்கு தெரியாது. மேள காரர்களுக்கும் சந்தோஷம். "கிட்டக்க தான் சுப்புனி, இழுத்துகிட்டு வந்து சீக்கிரம் விட்டுட்டு ரெண்டு கீர்த்தனை,மாடுமேய்க்கும் கண்ணாவும், ராஜாஜி கீர்த்தனை குறையொன்றும் இல்லைன்னு சிம்பிளா முடிச்சுகிட்டு ரெண்டு சில்லறை வாசிச்சு முடிச்சுப்போம்" ன்னு கோவிந்தராஜ பிள்ளை முனுமுனுக்க சின்ராசு புன்முறுவல் பூக்க நாதஸ்வர கோஷ்டியும் பெருமாள் கோவில் புறப்பட்டது.
அதுவரை வீட்டிலிருந்து நைலக்ஸ் சேலையில் இருந்த பெரியம்மா, அத்தை, சித்தி கூட்டம் கையோடு கொண்டு வந்த பட்டுபுடவை எல்லாம் கட்டிகிட்டு ஆகா அதுக்குள்ள அந்த இடமே அல்லோகல பட்டு போச்சு. கொண்டை ஊசி எங்கே, அக்கா ஊக்கு இருக்கா, அய்யோ உள்பாவாடை உயரம் ஜாஸ்தியா இருக்கே புடவைக்கு கீழே வருமே, ஆகா மேட்சிங் பிளவுஸ் காணுமே நீ எடுத்து வச்சியா அம்மா, கொண்டை வலை யார் கிட்டயாவது எக்ஸ்ட்ரா இருக்கா, எதுக்கும் இருக்கட்டுமேன்னு இந்த சிதம்பரம் செயினை எடுத்து வந்தது நல்லதா போச்சு நீ போட்டுக்க இதை, அய்யோ என் திருகாணிய காணுமே, யாருது இந்த முத்து, எந்த கொலுசுல இருந்து விழுந்துச்சு, ஏண்டி திருகாணி காணுமா பவுனு என்ன விலை தெரியுமா ஒரு பவுன் 368 ரூபாயாயிடுச்சு, யேய் நீ ஏண்டி கிளம்பற, ரெண்டாம் நாள் தான இன்னிக்கு, நாங்க கோவிலுக்குள்ள போறோம், நீ இங்க இருந்து எல்லார் பேக்கையும் பார்த்துக்கோ, சரோஜா ராத்திரி ஆட்டத்துக்கு "ஊட்டிவரை உறவு" போவுமா?, நைசா அத்தைய விட்டு அத்தான் கிட்ட எனக்கும் கேக்க சொல்லு" "இன்னிக்கு நாயனகாரரை நலந்தானா சில்லரை வாசிக்க சொல்லனும்"
ஒரு வழியா எல்லோரும் கிளம்பி பெருமாள் கோவிலுக்கு போயாச்சு.
மீதி அடுத்த அடுத்த பாகத்தில்!
குறிப்பு: இந்த தடவையும் பதிவு பெருசா ஆகிடுச்சு! அடுத்த பாகம் இரவு நடக்கும் கூத்துகள், அதுக்கு அடுத்த பதிவு கல்யாணம்!
December 26, 2008
அப்ப நானும் மூத்த பதிவரா? சொல்லுங்க!
டிசம்பர் 26 - 2006 லே ச்சும்மா விளையாட்டுக்கு "அபிஅப்பா"ன்னு எழுத ஆரம்பிச்சது. இதோ இப்ப "அபிஅப்பா"ன்னா ஒரு நாலு பேருக்கு தெரியும் அளவுக்கு வந்தாச்சு. மூணாவது வருஷத்துக்கு வந்தாச்சு.
இப்ப சொல்லுங்க நான் எந்த வகை பதிவர். சட்டுன்னு சொன்னீங்கன்னா நான் ராத்திரி சாப்பாடு சாப்பிடுவேன். (இல்லாட்டியும் சாப்பிடுவேன்)
இப்படிக்கு
அன்பு அபிஅப்பா
December 25, 2008
வீரசேகரவிலாஸும், மாமாவும்,சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்!!! பாகம் # 2
************************************
அத்தைக்கு அத்தனை வித்தையும் தெரியும். அத்தை வீட்டை விட்டு நேராக எங்கள் தெருவுக்கு கிளம்பியாச்சு. கல்யாண சத்திரத்துகும் எங்கள் தெருவுக்கும் ஹெலிகாப்டரில் போனால் அரை மணி நேரம் ஆகும். நடந்து போனால் 5 நிமிடம் ஆகும். ஆனால் அத்தை "பண்டரிநாதன்" டாக்சியில் பொண்ணை அழைச்சுகிட்டு போனாத்தான் மதிப்புன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க.என்ன காரணமோ!
இதோ அத்தை வந்தாச்சு! அத்தை கேட்கும் கேள்விகளுக்கு அதன் அதன் பதிலுக்கு சொந்தமானவர்கள் பதில் சொல்ல போகிறார்கள்.
"தம்பிகளா! இங்க வாங்க"
"அத்தே நாங்க இங்க தான இருக்கோம்" இது அப்பா!
"சரி சிங்காரம் வந்துட்டானா! வண்டிய கட்டிகிட்டு திருவமழைலயிலருந்து, பெரிய தம்பி கிட்ட இருந்து சொன்னனே?"
"ஆமா அத்தே அவன் வந்துட்டான். நீ சொன்னாதான் வடக்கு மாடவிளாகம் வழியா விறகு கொண்டு போவானாம்"
அது சரி! ஏன் தம்பி விறகா மொதல்ல எடுத்துட்டு போவாங்க! அவனுக்கு தெரிஞ்சு இருக்கு, ஆண்டவா அண்ணன் புள்ளயபெல்லாம் காப்பாத்து! அடியே மீனாச்சி, ஒரு படியிலே உப்பு, ஒரு மொரத்துல கொஞ்சம் மஞ்சள் பொடி ஆங் அதை அப்புடியே புள்ளையாரா புடிச்சுடு, கொஞ்சம் சூடம், ஒரு தேங்கா எடுத்து வைய்யி, ஆரத்தி கரைக்க போறவ முதல்ல நடந்து போவுட்டும் சத்தரத்துக்கு"
"வச்சுட்டேன் அத்தே"
"சரி மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு பெட்ரோமாஸ் லைட் சொல்லியாச்சா"
"வெத்தல பாக்கு மணி அண்ணன் ஒரு வரிசைக்கு அஞ்சுன்னு மொத்தம் பத்து சொல்லிட்டாரு, அதிலே ஒரு லைட்டு மாத்திரம் முழு ராத்திரிக்கும்"
"பாலய்யருக்கு சொல்லியாச்சா, அவரு லிஸ்ட் படி வாங்குங்கப்பா, போன தடவை மாதிரி புழுங்க அரிசி வாங்கிடாதீங்க, எந்த அய்யரு வூட்டுல புழுங்க அரிசி சமப்பாங்க, சரி சமையல் மணிஅய்யரு இட்லிக்கும் வடைக்கு ஊற வைக்க சொன்ன அரிசி, உளுந்து எல்லாம் யாருடீ ஊற வச்சது"
"நாந்தான் அத்தே! அவரு குருப்பு தவசுபுள்ள வந்து எடுத்துகிட்டும் போயாச்சு"
"தம்பி, வண்டிபேட்டை ரத்தினத்தை நாளு வாடகைக்கு சத்தரத்து வாசல்ல நிப்பாட்டிடு, மோள செட்டு கூப்பிட போறதில இருந்து சப்ஜாடா தேவப்படும்"
"சரி அத்தே"
"கல்யாண முத்தத்துக்கு(முற்றத்துக்கு) ஒதியங் கெள வெட்டிகிட்டு வந்தாச்சா, அதுல கட்ட சேப்பு ஜாக்கெட் பிட்டு எடுத்து வச்சாச்சா"
"அய்யய்யோ அத்தே அத மறந்தாச்சு, இரு அத்தே சிங்காரம் வரட்டும் சொல்லிடலாம்"
"தம்பி! வெத்தல பாக்கு மணி வந்துட்டானா?"- இது அத்தை!
நான் இந்த இடத்திலே வெத்தலை பாக்கு மணி அண்ணனை பத்தி சொல்லியே தீரனும். மாயூரநாதர் கோவில் ஈசானிமூலை சியாமளா தேவி கோவில் மூணு கடையிலே அவரும் ஒரு கடை. கடையில் சரக்குன்னு பார்த்தா 12 சோடா அடுக்கும் ட்ரேயில் மூனு சோடா இருக்கும். 2 கவுலி வெத்தலை, 100 கிராம் பாக்கு, அடுத்து ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோவிலே கொழும்பு வர்த்தக நிலைய பாட்டு இத்தனையே அந்த கடையின் சரக்குகள்.
வெத்தலைபாக்கு மணி அண்ணன் ஊருக்கே அண்ணன் தான். வயசு அப்பவே 50 இருக்கும். ஆனால் அவருக்கு அப்போது 10 வயது உடம்புக்கு சரியில்லாத கடைகுட்டி பையன் இருந்தான் என்பதும், மீதி எல்லாம் பெண் குழந்தைகள் என்பதும் பதிவுக்கு சம்பந்தம் இல்லா விஷயம். யாரை பற்றியும் கவலைப்படாமல் ...தன்னன்ன தரதன்னாஆஆஆஆஆஆஆஆஅ...ன்னு ஏதோ ராகத்தை முயன்று கொண்டே போவார் ரோட்டிலும், அவ்வளவு ஏன் ராஜன் தோட்டத்தில் காலை கடன் கழிக்கும் போது கூட. விக்கிரமாதித்தன் மாதிரி இப்பவும் அந்த ராகத்தை முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்.
அவருடைய காஸ்ட்டியூம் காந்தி காஸ்ட்டியூம். ஆனா காந்தி துவைத்து கட்டியிருப்பார். இவர் கட்டியதை துவைத்தாலும் கூட மத்தவன் கட்ட முடியாது. அவருக்கு கெட்ட பழக்கம் என பார்த்தால் பொடி போடுவார். அதுவும் TAS ரத்தினம் பட்டினம் பொடி மட்டும் தான் போடுவார். அதற்காகவே மணிகூண்டுக்கு போவார். 10 பைசா பொடியை சின்ன எவர்சில்வர் தராசில் நிறுத்து அதை வாழைமட்டையில் கட்டி வாங்க மாட்டார். அவரின் பொடி டப்பாவை தராசுக்குள் தலி கீழாய் அவரே கவிழ்த்து அனு அளவு கூட தராசில் ஒட்டாமல் அவர் அதை டப்பியில் நிறப்பும் அழகு ரசிக்க வைக்கும். ஒரு தரத்துக்கு கொசுறு பொடி ஒரு சிட்டிகை வாங்கி கண் இமைக்கும் நேரத்தில் மூக்கில் நுழைத்து கண்கள் சிவக்கும் முன்னமே தன் காசி துண்டால் முகம் துடைத்து துண்டின் உள்ளேயே எச்சிலோடு ஒரு தும்மல் போடுவார்.
அவர் வரும் முன்னமே அவரின் பொடிவாசம்ன் அந்த இடத்துக்கு வந்துவிடும் . இரண்டு நிமிடம் தொடர்ந்து பேசினால் "சொற்த்தெர்தா" என்பார். அதற்கு என்ன அர்த்தம் என நான் ரொம்ப நாள் யோசித்து கண்டு பிடிக்க முடியாமல் என் சித்தப்பாவிடம் கேட்டபோது தான் தெரிந்தது "நான் சொல்வது என்னான்னு தெரியுதா" என்பதன் சுருக்கம் அந்த வார்த்தை.
சொந்த பந்தம் யார்வீட்டில் கல்யாணம் என்றாலும், சாவு என்றாலும், காரியம் என்றாலும் முதலில் மணி அண்ணனுக்கு தான் செய்தி போகும். இது போன்ற காரியங்களை தனி ஆளாக நின்று கையமத்திவிடுவார்.
இதோ அத்தை தேடும் மணி அண்ணன் இப்போது நிற்பது கச்சேரி ரோட்டில் உள்ள "மாயூரம் பைனான்சியல் கார்ப்பரேஷன் - ஸ்தாபிதம் 1947" என்னும் எனாமல் கரும் நீல கலர் சைன் போர்டை கொண்ட கட்டிடத்தின் கீழே.
மாமா உள்ளே போனதும் அங்கே வேலை பார்க்கும் 68 வயது ரிட்டையர்டு தாசில்தார் சண்முக சுந்தரம் (அது என்ன எங்க ஊர் தாசில்தார் எல்லோர் பெயருமே சண்முக சுந்தரமாகவோ, சுப்ரமணியனாகவோ தான் இருக்கின்றது!) "வாங்க மணி புள்ள, எத்தனை ஜமுக்காளம், பந்திப்பாய் வேணும்" என்கிறார்.
என்னடா இது பைனாஸ் கம்பனிக்கும் பந்திப்பாய்கும் என்ன சம்மந்தம் என கேட்பவர்களுக்காக இந்த பத்தி. 1947ல் ஆரம்பித்து இன்று வரை நாணயத்தோடு செயல் படும் அகில இந்திய அளவில் இந்திய ரிசர்வ் வங்கியால் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிற அந்த "மாயூரம் பைனான்ஸ் கம்பனி" தன் ஊழியர்களாக ஓய்வு பெற்ற தாசில்தார்களையும், வங்கி மேளாளர்களையும் மட்டுமே நியமிக்கின்றது. (அது போல இன்னும் ஒரு இடம் தருமபுரம் மடம் என்பது உபரி செய்தி) ஆனால் தன் ஊர் மக்கள் நன்மைக்காக பெரிய பெரிய ஜமுக்காளங்கள், பந்தி பாய்கள் ஆகியவற்றை இலவசமாக ஒரு சேவையாக தருகின்றது. எனவே தான் மணி அண்ணன் அங்கே போய் நிற்கிறார் இந்த மதிய 3.30க்கு.
"ஆமா தாசில்தாரய்யா, ரெண்டு திண்ணைக்கும் ரெண்டு ஜமுக்காளம், ஹாலுக்கு நாலு, கல்யாண கூட நாலு தாவாரத்துக்கும் நாலு, கூடத்துக்கு ஒன்னு, பின்ன பந்திபாய் பெருசு நாலு குடுங்க". இப்போது தெரியுதா மணி அண்ணனுக்கு அந்த வீரசேகர விலாஸ் எப்படி அத்துப்படின்னு. இதே "அம்பாபாய்" கல்யாண மண்டபம்னா அதுக்கு தகுந்த மாதிரி கேட்டிருப்பார்.
இதோ மணிஅண்ணன் கொண்டு வந்திருந்த சின்னகடை தெரு வண்டிப்பேட்டை ரத்தினத்தின் ஒத்தைமாட்டு வண்டியிலே அத்தனை சமாச்சாரங்களையும் ஏத்திவிட்டு பின்னாலேயே நடந்து கிளம்ப வண்டிகார ரத்தினம் " என்னா அண்ணே வண்டியிலே குந்திகிட்டா என்னா" என்பதை காதிலேயே போட்டுக்க மாட்டார். அவர் மெதுவா சத்திரம் வந்து சேரட்டும், நம்ம அத்தை என்ன செய்றாங்கன்னு பார்ப்போம்.
பண்டரிநாதன் பிளஷர் கார் வந்து நின்னதுமே பந்தல் வாழைமரத்தில் ஏறும் முயற்ச்சியில் இருந்த நானும், மாக்கோலத்தை டவுசரில் அப்பி கொண்டிருந்த என் பங்காளிகளும்,கழட்டிய டவுசரை முன்பக்கமாக மறைத்து கொண்டு பாதி மதிய கடன்(!) பொருப்பில் இருந்து தனக்கும் காரில் இடம் கிடைக்குமா என ஓடி வந்த மாமா பையன் சோனி என்கிற விவேகானந்தனும் இதையெல்லாம் பார்த்து பயந்து போன பண்டரிநாதனும் "அய்யோ அத்தே பண்டரி அண்ணன் வந்தாச்சு" என் கூவிய சித்தியும் அந்த இடத்தை கொஞ்சம் பரபரப்பாக்கினார்கள்.
ஏதோ ஒரு பெரியம்மா மாத்திரம் "என்ன அத்தே எப்பவும் பண்டரிநாதன் காரு தானா, அவரே பாதி இடத்தை அடைச்சுப்பாரு" என சொல்ல அத்தை "அட போடி அவரு கிட்ட மட்டும் தான் வெள்ளை பிளசரு காரு இருக்கு. மத்தவன் கிட்ட இல்லாம் கருப்பும், மஞ்சளும் கலந்து அடிச்ச கலருதான். ஒரு நல்ல காரியத்துக்கு கருப்பு தேவையா"ன்னு அடக்கி விட்டு "சரி சரி பொண்ணு வீட்டிலே இருந்து நான் பொண்ணை அழைச்சுகிட்டு வாரேன், அடியே பெரிய மீனாட்சி,சின்ன மீனாச்சி, காத்தியாயினி, மூணு பேருமா எதிர்க்க வாங்க... நான் பொண்ணு கூட காருல ஏறின பின்ன தான் மத்தவங்க ஏறனும் தெரியுதா" என சர சரன்னு தன் வெற்றிலை பெட்டியை எடுத்து கொண்டு நாலு வீடு தள்ளி இருக்கும் பொண்ணு வீட்டுக்கு போக காரை சுற்றி வியூகம் அமைத்த நாங்களும் "ஓஓஓஓஓ"ன்னு சத்தம் போட்டு கொண்டே பின்னால் துரத்த ஒரு வழியா அத்தையும் பொண்ணும் பின் சீட்டில் ஏறிக்கொள்ள பின்பு அத்தையின் பர்மிஷன் இல்லாமலே கிடைத்த கேப்பில் நாங்கள் காரை கைப்பற்ற நான் மட்டும் பண்டரிநாதன் பக்கத்தில் சேஃபாக உட்காந்து கொண்டேன். அதிலே ஒரு சூட்சுமம் இருக்கு. எப்படியும் ஆண்கள் உட்கார போவதில்லை. பண்டரி நாதன் பக்கத்திலே நெருக்கியடிச்சு எந்த லேடீசும் உட்கார போவதுஇல்லை. அதனால் எப்போதும் ஒரு சின்ன பயலை தான் டிரைவருக்கும் எதுனா ஒரு பெரியம்மாவுக்கும் நடுவே உட்கார வைக்க போகிறார்கள் அது நானாக இருக்கட்டுமே என்கிற ஒரு நப்பாசை.
இந்த கூத்திலே டவுசரை முன் பக்கமாக மறைத்து கொண்டிருந்த சோனியை பார்த்து அத்தை "டேய் போடா போய் அம்மாவை தண்னி ஊத்த சொல்லி கழுவிகிட்டு வாடா" என சொல்ல அதற்கு அவன் "இல்ல அத்தே இன்னும் வரவேயில்லை, அதுக்குள்ள கார் வந்துடுச்சு"ன்னு சொல்ல காரில் இருந்த நாங்கள் உட்பட அத்தையும் சிரித்தார்கள். அதற்குள் கிட்ட தட்ட இருபத்திமூனரை சித்தி, அத்தை, பெரியம்மாக்களும் காரை சூழ்ந்து கொள்ள (ஒரு பெரியம்மா காளியாகுடி காபி பில்ட்டராக்கும்!) ஒவ்வொரு சின்ன பயலும் இழுத்து கீழே போடப்பட கிட்ட தட்ட இருபத்தி நாலுபேரும் பின் சீட்டிலும் முன் சீட்டிலும் அடைந்துவிட கடைசியாய் எனக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு அத்தையின் சின்ன பொண்ணு வர நானும் கீழே தள்ளப்பட்டேன்.
சரி விடுடா விடுடா சைக்கிள் டயர் ஓட்டிகிட்டே காருக்கு முன்னால நாம போயிடலாம்ன்னு நான் மனசை தேற்றி கொள்ள அந்த டவுசர் பார்ட்டி மாத்திரம் ஆத்திரம் அடங்காமல் ரோட்டில் புரண்டு அழ அவன் அம்மா அவன் அழுகையை கொஞ்சம் கூட கண்டுக்காம "அத்தே வண்டிய விட சொல்லுங்க, அவன் அவனோட அப்பனை கொண்டிருக்கான், நமக்கு முன்னால வந்து நிப்பான் பாருங்க" என சொல்ல வண்டி கிளம்பியது. அப்போது அவசர அவசரமாக விளநகர் பஸ்ஸில் இருந்து இறங்கி ஓடி வந்த ஒரு பெரியம்மா கைகாட்டி நிறுத்த புளி மூட்டைக்குள் இருந்த ஒரு சித்தி "வண்டிய விடுங்கப்பா மூச்சு முட்டுது"ன்னு சொல்ல அத்தை "ஆமாம்டி நீ நடந்து பசங்களை அழைச்சுகிட்டு வந்துடு, இங்க இடமே இல்லை"ன்னு சொல்ல அந்த பெரியம்மா முகம் சிவந்தது.
நீங்க வேணா குறிச்சு வச்சுகோங்க அந்த பெரியம்மா அடுத்த கல்யாணத்துக்கு வர மாட்டாங்க.(ஆனா அதுக்கு அடுத்த கல்யாணத்துக்கு காலையிலேயே வந்துடுவாங்க காரில் இடம் பிடிக்க)
அம்மாவுக்கு இப்படி காரில் பிதுங்கி போய் வந்து இறங்குவது பிடிக்காது என்பதும், கூப்பிடு தூரத்தில் இருக்கும் இடத்துக்கு ஹாயாக வருவதும், தவிர ஆரத்தி எடுக்கும் ஜெண்டில்வுமன் வேலையே உத்தமம் என நினைப்பதாலும் அம்மா முன்கூட்டியே ஒரு தாம்பாளம், சுண்னாம்பு, மஞ்சள், சின்ன வெற்றிலை, சூடம், சிதறு தேங்காய் என போய் விட்டிருந்தார்கள்.
கார் ஊர்ந்து போய் சேர்வதற்க்கு முன்னமே நாங்கள் டயர் வண்டி ஓட்டு கொண்டு போயாச்சு. அதற்குள் சிங்காரம் வண்டி வடக்கு மடவிளாகம் பின் வாசல் வழியே விறகு கொட்டி விட்டு நிற்க நாங்க எல்லோரும் எங்கள் சைக்கிள்டயர் வண்டியை அதிலே போட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டு அம்மா ஆரத்தி எடுக்கும் இடத்துக்கு வந்துவிட்டோம். கார் வந்து நின்னதும் முதலில் இறங்கியது பண்டரிநாதன் தான். ஏனனில் அவர் இறங்கினாலே முன் சீட்டில் உள்ள மற்றவர்கள் சுலபமாக இறங்க முடியும். அப்பாடா ஒருவழியாக எல்லோரும் இறங்கி முடித்தவுடன், பார்த்தா பொண்ணு என்னவோ சினிமாவிலே வில்லனால் துரத்தப்பட்டதை போல இன்னும் சொல்ல போனால் சந்திரமுகி மாதிரி சீவிய தலை முடி எல்லாம் கொத்து கொத்தாய் முன் பக்கம் விழுந்து பொண்ணு கசங்கின பன்னு மாதிரி ஆகிடுச்சு. அம்மாவுக்கு மட்டும் ஒரு நமட்டு சிரிப்பு.
சரி இதையே சொல்லி கொண்டு இருந்தா எப்படி? திருவீழிமிழலை மாமா என்ன ஆனார்ன்னு சொல்லனுமே இப்போது. மாமா கன்னார தெருவிலேயே பஸ்ஸில் இருந்து இறங்கினா 5 நிமிடத்திலே மண்டபம் வந்துவிடும். ஆனா அவர் எப்போதுமே பஸ்டாண்டிலே இறங்கி அப்படியே மணிகூண்டை தாண்டி காளியாகுடி வந்து ஒரு பில்டர் காபி சாப்பிட்டுவிட்டு அம்பி அய்யர் கூட கொஞ்சம் பேசிட்டு, எதிரே ராமூர்த்தி டாக்டரிடம் நலம் (!) விசாரித்துவிட்டு ஆடி அசைந்து முனுசிபாலிட்டி கிட்ட இதோ வந்து கொண்டிருக்கார் பாருங்க.
ஆரத்தி எல்லாம் முடியும் போது மாமா வந்து சேரவும் அம்மா "ஆகா அண்ணன் சரியான நேரத்திலே வந்தாச்சு. வாங்க இந்த செதறு காயவுடுங்க"ன்னு சொல்ல கக்கத்தில் பையை இடுக்கி கொண்டு மாமா சிதறு காய் விட அந்த நிமிடமே கல்யாண வைபோகம் ஆரம்பிச்சாச்சு!
குறிப்பு:
ரொம்ப பெருசா போயிடுச்சு இந்த பதிவு. அதனால ஜமுக்காளம் கொண்டு வந்து போட்டுவிட்டு மணிஅண்ணன் எங்கே போனார், நாதஸ்வரம் யார், கல்யாணம் செய்து வைக்கும் பாலய்யர் வந்துட்டாரா, மாப்பிள்ளை ஊர்வலம் எங்கிருந்து, மாலை டிபன் என்ன, இரவு சாப்பாடு என்ன, மணிஅய்யர் சரியான சமையத்தில் சமையலுக்கு வந்தாரா,இல்லாவிடில் எப்போதும் போல அப்ரசண்டிகளை அனுப்பிவிட்டாரா, இரவு சினிமா போன கோஷ்டிகள் எவை, மாமா எப்போ சீட்டு கச்சேரி ஆரம்பித்தார், அவர் இரவு 11 மனிக்கு சீட்டு கச்செரிக்கு எப்படி பிரேக் விட்டார், இரவு தலையணை பற்றாகுறை சண்டை எல்லாம் அடுத்த பாகத்தில் போடுகிறேன். அதன் பின் அடுத்த நாள் கல்யாண வைபோகம் பார்க்கலாம் மூன்றாம் பாகத்தில்!
December 22, 2008
அபியும் நானும்!!!- ஒரு சுய விமர்சனம்
பின்பு நான்கு நாட்கள் நல்ல படியாக போனது. பின்னே ஜாலியா அபி, நட்ராஜ் கூட விளையாடி கொண்டு இருக்கும் போது தம்பி அவன் தலையை சீவி முடிக்கும் வரை காத்திருந்து பின் முடியை இழுத்து முகத்தில் விட்டு ரஜினி ஸ்டைல் செய்யும் போது "அப்பா பொடியன் சஞ்சய் அங்கிள் கல்யாணம் இப்ப இருந்தா ஜாலியா நாம போயிட்டு வரலாம்ப்பா குசும்பன் அங்கிள் கல்யாணத்துக்கு போன மாதிரி" அப்படீன்னு சொன்ன போது ஏன் அபி சம்மந்தம் சம்மந்தமில்லால பேசறான்னு நினைச்சுகிட்டேன்.
அதன் பின் தம்பிக்கு குல தெய்வ கோவிலில் முடி இறக்கி, காது குத்தி ஜெக ஜோராய் வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்னே சுருட்டி வைத்த வாலை பிரிக்க தொடங்கியது "நிஷா" புயல். நவம்பர் 24 ம் தேதி மதியம் 3க்கு ஆரம்பித்த மழை டிசம்பர் 2 வரை தொடர்ந்து கொட்டியது. அன்று மாலை 5.30க்கு கரண்ட் போனது. பின்பு 6 நாள் கழித்தே வந்தது. முதல் நாள் மழை முடிந்த பின்னே தான் வெளியே வந்து பார்த்த போது அதன் உக்கிரம் புரிந்தது. வீட்டுக்கு பின் பக்கம் இருந்த கால்வாய் உடைத்து கொண்டு நகருக்குள் புகுந்து கொண்டிருந்தது. நகரில் என் வீடு கொஞ்சம் மேல் மட்டம் ஆகையால் வெளி கேட் வரை மட்டுமே தண்ணீர் இருந்தது. நகரின் உள்ளே இருந்த வீட்டின் உள்ளே எல்லாம் தண்ணீர் புகுந்து விட்டமைக்காக எல்லோரும் நீந்தாத குறையாக நகரை காலி செய்து கொண்டிருந்தனர்.
எனக்கும் கொஞ்சம் உதறல் எடுத்தது. ஆனால் என் “இதயம் தாங்கும் இதயத்து”க்கு வீடு நனைகிறதே, மோட்டார் மூழ்குகிறதே என்கிற கவலை ஒரு பக்கம் இருந்தாலும் “ என்னங்க கொஞ்சம் வெளியே நீந்தி போய் “பிரமிட்” எல்லாம் அழுக்கா இருந்துச்சே அந்த அழுக்கு எல்லாம் போய் பளிச்சுன்னு இருக்கான்னு பார்த்துட்டு வாங்களேன்” என்று சொன்ன போது பல்லை நற நறக்க தோன்றியது. ஆனால் பாப்பாவுக்கும் தம்பிக்கும் “ச்சோ”ன்னு கொட்டும் மழையும், மூட்டை முடிச்சுகளை தலையில் வைத்து கொண்டு போகும் மக்களையும், அந்த பரபரப்பான சூழ்நிலையும், விடிந்தும் விடியாதது போலவே இருக்கும் மேக மூட்டமும் ரொம்ப சந்தோஷ படித்தியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அத்தனை ஒரு குதூகலம். முதல் 8 மணி நேரம் இன்வர்ட்டர் இருந்ததால் ஒரு பிரச்சனையும் இல்லை. பின்புதான் எல்லா பிரச்சனையும் ஆரம்பித்தன. மாடி அந்தபுரத்தில் “நிஷா” தலைவிரித்து கோர தாண்டவம் ஆடியதால் 2ம் நாள் இரவுக்கு கீழே வந்துவிட்டோம் படுக்கைக்கு.
நகரில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வரும் தண்ணீர் அளவு அதிகமாகி போய் கொண்டே இருந்தது. 2ம் நாள் இரவுக்கு மட்டுமே தாங்கியது ஒரு எமர்ஜென்சி விளக்கு. அதிலும் பேட்டரி போய் விட்டது. காலை எழுந்து பார்க்கும் போது வீட்டின் வாசலில் கிரில் தாண்டி வாசம் மெயின் நிலை கதவுக்கும் 1 அடி கீழே வரை தண்ணீர் நின்று கொண்டிருந்தது. அபியின் சைக்கிள் “நான் எங்கே இருக்கேன் கண்டுபிடி” என சொல்லி கொண்டு சீட்டையும், பெல்லையும் மட்டும் காட்டி கொண்டு நின்றது. என் புதிய ஷூவில் ஒன்று மட்டும் மிதந்து கொண்டிருந்தது கிரில்லில் மாட்டி கொண்டு. மற்றைய எல்லா செறுப்பு வகையறாக்களும் பயணம் செய்து யார் வீட்டு கிச்சனுக்கோ போயிருக்கனும் என நினைக்கிறேன்.என் ஷூவுக்காகவே 2000 ரூபாய் தரனும் இந்த மைனாரிட்டி திமுக அரசு. நகரின் இளைஞர் அணி பசங்க எல்லோரும் ரொம்ப ஜாலியாக(!) நாகையில் இருந்து ஒரு ஃபைபர் போட் கொண்டு வந்து அதிலே பெண்கள், முதிய்வர்கள், குழந்தைகள் எல்லோரையும் ஏற்றி கொண்டிருந்தனர்.
"இந்தாங்க இந்தாங்க என் பிள்ளைகளையும் ஜாலியா போட்டிலே சுத்தி காமிங்க, நான் கேமிராவிலே புடிச்சுக்கறேன்"ன்னு சொல்லி அவங்க கிட்டே திட்டு வாங்குவதை விட பால்கனியில் இருந்து படம் பிடிப்பதே உத்தமம் என படம் பிடித்து கொண்டிருந்ததை பார்த்த, உயிரை படகில் பிடித்து கொண்டு உக்காந்திருந்த பாட்டி ரெட்டை விரலை காட்டிய போது எம்ஜியாரின் தாக்கத்தை நினைத்து அதிர்ந்தேன்.
வீட்டில் வாசலில் இத்தனை தண்ணீர் பார்த்த எனக்கு இந்தியன் கமல் போல என் பெண்ணுக்கும் 500 ரூபாய் நோட்டில் கப்பல் செய்து கொடுக்க ஆசை இருந்தாலும் இரண்டு காரணங்கலால் அதை தவிர்த்தேன். ஒன்று, ப.சிதம்பரம் கோவிச்சுப்பார், இரண்டு என்னிடம் 500 ரூபாய் நோட்டு இல்லை. ஆபத்பாந்தவனாக தம்பி நட்ராஜ் ஒரு நோட்டு புத்தகத்தை கொண்டு வந்து கொடுக்க நான் கப்பல் செஞ்சு கொடுக்க பாப்பாவும், தம்பியும் கப்பல் விட அந்த நோட் தீரும் போது தான் பாப்பாவுக்கு அது தன் நோட்டு என தெரிந்தது. அதற்கு அபராதமாக நான் 500 ரூபாய் கொடுக்க நேர்ந்தது பாப்பாவுக்கு.பாப்பாவின் ஹிஸ்டரி நோட்டை கிழித்ததுக்கு பதிலாக பேசாம ரூபாய் நோட்டிலே கப்பல் செஞ்சு விட்டிருந்தா ஹிஸ்டரியிலயாவது வந்திருக்கலாம் என நினைத்து கொண்டேன்.
நான்காம் நாள் ரொம்ப கொடுமைங்க. முதலில் இன்வர்ட்டர் போச்சா, அடுத்து எமர்ஜென்சி லைட் போச்சா, அடுத்து ஒரு சார்ஜர் லைட் போச்சு, அடுத்து என் செல் போன் பேட்டரி போச்சு, அடுத்து அபிஅம்மா செல் போன் போச்சு, மெழுகுவத்தி 1 பாக்கெட் அவுட், ரேடியோ இல்லை, கரண்ட் தான் 4 நாளா இல்லியே. 4ம் நாள் இரவு வரை சாமி விளக்கு எல்லாம் எண்ணெய் தீர்ந்து போச்சு. வந்திருப்பது புயலா? வந்திருந்தா கரையை கடந்துடுச்சா, இப்போ மணி என்ன, எப்போ விடியும், அல்லது உலகம் அழிய போகுதா, எதுவுமே தெரியாம இருட்டுக்குள் நானும் பசங்களும், அபிஅம்மாவும். பேசாம போட்டிலே போயிருக்கலாமோன்னு அப்ப தோனுச்சு. ஆனா நிலைமையின் விபரீதம் புரியாம பாப்பா தம்பிக்கு விளையாட்டு காமிக்கிறேன் பேர்வழின்னு "பூ" படத்தின் பாடலை "உச்சா உச்சா மாரி"ன்னு பாட அதுவரை சும்மா இருட்டுக்கு ப்யந்துகிட்டு என் மடியிலே உக்காந்து இருந்த தம்பி உச்சா போயி என் கைலிய நனைச்சுட்டான். ரொம்ப அவசியம் அப்போ அந்த பாட்டு. சரி டைம் பாசுக்கு அந்தாக்ஷரி பாடுவோம்ன்னு அபி சொல்ல நான் எப்போதும் போல பேமிலி பாட்டானா காக்கா பாட்டை பாட ஒரு மாதிரி நிசப்தம். ச்சே என்ன குடும்பம்டா சாமி பாட்டு நல்லா இருக்கு ,நல்லா இல்லை, சரி இந்த விளையாட்டு வேண்டாம், அல்லது யோவ் வாயை மூடுய்யா...இப்படி எதுனா சொல்லனுமா இல்லியா...என்கிட்ட சொல்லாமலேயே என்னை அந்த விளையாட்டில் இருந்து நீக்கிட்டாங்க.
இதல்லாம் போகட்டும். அப்போ இரவா, நடுஇரவா, விடியலா எதுவுமே தெரியாம இருந்த அந்த இரவில் "பாவி மனுசா, புதுவீட்டுக்கு வரும் போதே அம்மி, ஆட்டுக்கல், மண்ணென்னை விளக்கு, எதுவும் எடுத்துட்டு வரகூடாது, எல்லாமே கரண்ட் சமாச்சாரம் தான்னு சொல்லி தடுத்தப்ப எனக்கு எங்க போச்சு புத்தி, நானாவது எடுத்துகிட்டு வந்திருக்கலாமே......" இப்படியாக புலம்பி கொண்டிருந்தது எனக்கும், பசங்களுக்கும் அப்படி ஒரு சொர்க்கமாக தாலாட்டாக இருந்தது. தூங்கிவிட்டோம்.
அடுத்த நாள் கொஞ்சம் மழை நின்னு போயிருந்தது. தண்ணீர் குறைய வில்லை. அப்போதுதான் எங்களுக்கு உலகம் அழியவில்லை என்கிற உண்மை தெரிந்தது. ஆனால் பாவம் அபிக்குதான் ரொம்ப ஏமாற்றமாக இருந்துச்சு. "அப்பா அடுத்த புயல் எப்பப்பா வரும்?". ரமணனை கேட்டு சொல்றேன்ன்னு சொன்னேன்.
குறிப்பு: "நிஷாவும் நானும்"ன்னு தான் இந்த பதிவுக்கு பேர் வச்சிருக்கனும். ஆனா இப்போ டிரண்ட் "அபியும் நானும்"தான்னு தமிழ்மணத்தை பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.அதான் மக்கா. உண்மையான அபியும் நானும் பின்ன எழுதறேன்.
ரெண்டாவது குறிப்பு: வீரசேகர விலாஸ் சீக்கிரமா எழுதறேன். நேத்து தானே துபாய் வந்திருக்கேன். கொஞ்சம் வேலை பளு. அதான்.
November 15, 2008
வீரசேகர விலாஸும், மாமாவும், சீட்டு கச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்!!! பாகம் # 1
சாலையில் இருந்து திடீரன உயர்ந்து தோன்றும் அந்த 12கருங்கல் படிகள் வழியே மேலே ஏறினால் மேல் படியில் இருந்து பேருந்து ஓட்டுனரோடு ஒரு சின்ன கை குலுக்கல் நிகழ்த்திவிடலாம். அந்த சத்திரத்தின் மேல் படியில் ஏறி உள்ளே நுழைந்ததுமே வலதும் இடதுமாக மூன்று அடி ஆழ முற்றங்கள் இருக்கும். அதிலே இரு பக்கமும் தண்ணீர் குழாய்கள். அந்த முற்றங்களுக்கு மேல் கூறை ஏதும் கிடையாது. அந்த நடை பாதையை தாண்டினால் அந்த முற்றங்களுக்கு நேர் எதிர் பதமாக வலது இடது பக்கமாக உயர்ந்த திண்ணைகள். ஒவ்வொறு திண்ணையிலும் குறைந்தது ஐம்பது ஐம்பது பேர் படுத்து உறங்கலாம். அந்த திண்ணையை தாங்கும் 18 ரங்கூன் மத்தள தூண்களின் மேல் அந்த தாங்கு கட்டையில் கூட மர வேலைப்பாடு தொட்டு பார்க்க தூண்டும். திண்ணையில் சிமெண்ட் வண்ணம் வலது பக்கம் சிகப்பு, இடது பக்கம் நீலம் என சிமெண்ட் பாலில் மெழுகி குளுமையின் உச்சமாக இருக்கும். அதன் சுவர் அத்தனை வழவழப்பாக இருப்பதற்கு இதோ நாளை காலை நடை பெற போகும் கல்யாணத்திலே எத்தனை பேர் எத்தனை காரணங்கள் சொல்ல போகிறார்கள் என பார்ப்போம். தலை வைத்து படுக்க தலையனை மாதிரி கட்ட பட்டிருக்கும். இப்போது இந்த திண்ணை வரை போதும். ஒரேயடியாக வீர சேகர விலாஸ் பற்றி எழுதினால் இந்த தலைப்பு நம்மை பார்த்து சிரிக்கும்.
அந்த "வீரசேகர விலாஸ்" என்பது நாட்டுகோட்டை நகரத்தார் வீடு தான். ஆனால் அது கல்யாண சத்திரமாகி போனது தனி கதை. காரைக்குடி நகரத்தார், வைத்தீஸ்வரன் கோவில் தரிசனத்துக்கு போகும் போதும், தங்கள் மூதாதையரான பட்டினத்தார் வாழ்ந்த பூம்புகார் என்கிற காவிரி பூம் பட்டினத்துக்கும் போகிற வழியில் இளைப்பாற வேண்டி மயிலாடுதுறையில் கட்ட பட்ட வீடாகத்தான் இருக்க வேண்டும் அந்த சத்திரம்.
எங்கள் வீட்டு திருமணம் எல்லாமே அந்த சத்திரத்தில் தான் நடக்கும். கல்யாண பத்திரிக்கை தவிர வேறு எங்கும் "வீரசேகர விலாஸ்" என்னும் பெயரை நாங்கள் பயன் படுத்தியது கிடையாது. எங்களை பொறுத்த வரை அது செட்டியார் சத்திரம் தான். ஆடி, புரட்டாசி, மார்கழி தவிர எல்லா மாதத்திலும் எங்கள் வீட்டு திருமணம் அங்கே கண்டிப்பாக உண்டு. நாளை நடக்க போவது ஒரு அண்ணன் கல்யாணம்.
பெண் வீடு திருப்புகலூர் என்னும் சைவ ஸ்தலமாம். அந்த மணமகள் எங்களுக்கு மிகவும் நெருக்கமான் சொந்தம் தான் என இன்று மாலை வள்ளியம்மை அத்தை விலாவாரியாக "அரை மணி நேரம்' என் அம்மா, பெரியம்மா, சித்தி கூட்டத்துக்கு மத்தியில் உட்காந்து விளக்க போகிறார்கள். இருந்தும் அவர்களுக்கு அது புரிய போவதில்லை என்பது வேறு விஷயம்.
இங்கே வள்ளியம்மை அத்தையை பற்றி சொல்ல வேண்டியது கட்டாயமாக போய் விட்டது. அத்தை ரொம்ப ராசி என்று அத்தையே கூறி கொள்வதாலும் எங்கள் பெரிய தாத்தாவையே நேருக்கு நேர் நின்று "அண்ணா சாப்பிட வாங்க" என கேட்ட சரித்திரம்(?) அவர்களுக்கு இருந்ததாலும் வேறு வழியே இல்லாமல் எல்லோருமே மரியாதை கொடுப்பார்கள். அத்தை என்றால் எங்களுக்கு அத்தை இல்லை, எங்கள் அப்பா, பெரியப்பா, சித்தப்பாவுக்கு எல்லாம் தான் அத்தை. ஆனால் நாங்களும் அத்தை என்றே கூப்பிட்டு பழகி விட்டது.அதனால் கிட்ட தட்ட ஊருக்கே அத்தை. அத்தைக்கு அடையாளம் என பார்த்தால் சிகப்பு கல் 7 கல் வைத்த தோடு, வைர மூக்குத்தி, வெற்றிலை போட்டு சிவந்த உதடுகள், ராசிபுரம் பம்பர் பட்டு புடவை, காலில் முத்து வைத்த மெட்டி, ஆனால் செறுப்பு அணிவதில்லை. தலைமுடி தும்பை பூவாக அள்ளி செறுகப்பட்டு இருக்கும்.கோல்டு பிரேம் போட்ட கண்ணாடி, கிட்டே போனால் வெற்றிலை வாசனையை விட அதன் கூட சேர்த்து போட்ட கிராம்பும், கத்தைகாம்பும் ஒரு வித ரம்மிய வாசானையை கொடுக்கும். கையிலே ஒரு நெளி மோதிரம், சாதாரன வலையல், கழுத்திலே ஒரே ஒரு முறுக்கு சங்கிலி, இத்தனைக்கும் சிகரம் வைத்தது மாதிரி ஒரு சில்வர் வெற்றிலை பெட்டி. அதன் மூடியில் "M. வள்ளியம்மை" என பொறிக்க பட்டிருக்கும். அதன் மூடியை திறந்து பார்த்தால் அது இரண்டாக பிரிக்க பட்டு இருக்கும். அதன் உள்ளே வெள்ளியால் ஆன ஒரு சுண்னாம்பு கரண்டா, வெள்ளியால் ஆன பல்குத்தும் குச்சி, வெள்ளி காதுகுடைப்பான், சின்னதாக ஒரு சிக்கு எடுக்கும் ஒரு வெள்ளி குச்சி இருக்கும். அந்த செல்ல பெட்டியை அத்தையின் கையிலிருந்து பிடுங்கிவிட்டால் அத்தையை அடையாலம் காண்பது மிகவும் கடினம். அத்தைக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது காரனமாகத்தான். அத்தைக்கு என்ன தான் வேலை? ஒரு கல்யாணம் நடக்க போவது எனில் அ முதல் ஃ வரை அத்தையின் அதிகாரமே கொடிகட்டி பறக்கும். பெண்ணோ மாப்பிள்ளையோ சத்திரத்தின் உள்ளே நுழையும் முதல் சத்திரத்தை காலி செய்துவிட்டு வரும் போது வேலைக்காரி மடியை தடவி எவர்சிலவர் டம்ளரை வெளியே எடுத்து " என்கிட்ட யாரும் ஏமாத்த முடியாது" அப்படீன்னு சவடால் விட்டு விட்டு சத்திரத்தை காலி செய்யும் வரை அத்தையின் அட்டகாசங்கள் தான். ஆனால் அத்தையின் வெள்ளி சாமன்களிள் ஏதாவது ஒன்று வழக்கம் போல ஒவ்வொறு கல்யாணத்திலேயும் காணாமல் போவது தனி விஷயம்.
சத்திரத்தை பற்றி அறிமுகம் செய்தாகிவிட்டது. நாளை நடக்கும் திருமணம் பற்றியும், அத்தை பற்றியும் சொல்லியாகி விட்டது. மாமாவும் சீட்டு கச்சேரியும் பற்றி இப்போது பார்க்கலாம். இதோ திருவீழிமிழலை கிராமத்தில் இருந்து தென்பாதி மெயின் ரோட்டுக்கு ஆடி அசைந்து வருவது தான் மாமா. அவர் கையிலே பாருங்கள் ஒரு பை, அதிலே வெற்றிலை சமாச்சாரங்கள் அடங்கின ARC ஜுவல்லரியின் ரெக்சின் பேக், அதன் உள்ளே மூலவியாதிக்கான களிம்பு, வெள்ளி பொடிடப்பா, அதை தவிர குழந்தை மாதிரி சுற்றி வைத்திருக்கிறாரே அது நேற்று கும்பகோணத்தில் இருந்து "டவுன் கிளப்பில்" இருந்து வக்கீல் சோமசுந்தரத்திடம் சொல்லி வாங்கி வந்த சீட்டு கட்டு, சிங்கப்பூர் கட்டு. பிளாஸ்டிக் கட்டு. "சுத்து வட்டாரத்திலே ஒருத்தன்கிட்ட கிடயாதுல்ல" என மாமா சொடக்கு போட்டு சொலவது பார்க்க நன்றாக இருக்கும். மாமா ஆற்றை தாண்டி பாலத்தில் வரும் போதே "கோல்டன்" நின்று விடும். மாமாவின் தகவல் பரிமாற்றம் அத்தனை சுத்தம். நேற்று கும்மோணம் போய் வரும் போதே இன்று மதியம் 2 மணி வண்டிக்கு மாயவரம் வரும் விஷயத்தை சொல்லி விடுவார். ஓட்டுனரும் காத்திருப்பார். வந்து பேருந்தில் ஏறி உட்காந்ததுமே ஓட்டுனரிடம் கேட்பார் " ஒன் மொதலாளி ஊர்ல தானே இருக்காரு. சொல்லிடு நான் இன்னிக்கு செட்டியார் சத்திரத்திலே தான் இருப்பேன்ன்னு" இதோ இன்னும் 40 நிமிடத்தில் மாமாவும் வந்து நம் ஜோதியில் ஐக்கியமாக போகிறார்!