பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 10, 2009

"உடையார்” - பாலகுமாரன் காவியத்தின் விமர்சனம் பாகம் # 1

பொன்னியின் செல்வன் நான் பல முறை படித்து படித்து திகட்டாமல் திரும்பவும் படித்து கொண்டிருக்கும் ஒரு சரித்திர நாவல். அதன் தொடர்ச்சி தான் இந்த உடையார் என்கிற நாவல், எழுதியது எழுத்து சித்தர் பாலகுமாரன் என்று எனக்கு சொல்லப்பட்ட போது அய்யோ சரித்திர நாவலா என அலுத்து கொண்டேன். பிறகு எதிர்பாராத விதமாக எனக்கு உடையாரின் 6 பாகங்களும் கிடைத்த போது அதன் புது வாசனை மட்டுமே பிடித்து இருந்தது. பின்பு வாழ்க்கையே ஒரு மாதிரி தொய்வு ஏற்பட்ட போது ஏன் இதை படித்து தொலைத்தால் தான் என்ன என்கிற எண்ணம் வந்தது. முதலில் அதன் முன்னுரைகள் படித்தேன். எல்லோருமே ஆஹா ஓஹோ என புகழ்ந்து இருந்தது கண்டு கொஞ்சம் எரிச்சல் வந்தது. இப்போது புரிகின்றது அவர்கள் மிகவும் குறைவாகத்தான் புகழ்ந்திருக்கின்றனர் என்று

.

முதல் பாகத்தில் கிருஷ்ணன் தேவன் பிரம்மராயர் என்கிற மந்திரி(பொன்னியின் செல்வனில் தலைமை அமைச்சர் - இதிலே சேனாதிபதி, போருக்கு எல்லாம் போகின்றார். அவரை வைத்து தான் கதை தொடங்குகின்றது. அதன் பிறகு அந்த முதல் பாகத்தை மின்னல் வேகத்தில் செலுத்துவது ராஜராஜி என்கிற ஒரு தேவரடியார் பெண். இந்த உடையார் நாவல் முழுமையுமே நன்றாக உற்று நோக்கினால் மூன்று தேவரடியார் பெண்கள் தான் பிரதான கதை சொல்லிகள். முதல் பெண்- இராஜராஜர் உடையாரின் நான்காம் மனைவி பஞ்சமான் தேவி! இவர் ஒரு தேவரடியார் வகுப்பை சேர்ந்தவர். பொன்னியின் செலவன் கடைசி பாகத்தில் உத்தமசோழருக்கு முடிசூட்டி விட்ட இராஜராஜர் ஒரு பதினேழு வருடங்கள் எந்த ஒரு இராஜ்ஜிய மதிப்பும் அற்று சோழதேசம் முழுமையும் சுற்றி வருகின்றார். மக்கள் மதிப்பை கூட்டி கொள்கின்றார். அந்த கால கட்டத்தில் சிதம்பரம் நடராஜர் சன்னிதியில் திருஞானசம்மந்தரின் பதிகம் படிய பெண் பஞ்மான் தேவியை பார்த்து அந்த பதிகத்தில், தேவியின் குரலில், அவள் புத்திசாலித்தனத்தில் ஆசைப்பட்டு (மயங்கி என சொல்ல முடியாது) அவளை தன்னுடனேயே தஞ்சை அழைத்து சென்று சென்ற பின் ஆட்சியை பிடித்து சக்கரவர்த்தியாக்கி இவளை நான்காம் மனைவியாக ஆக்கி கொள்கின்றார். இவரை இந்த பஞ்சமான் தேவியை சுற்றித்தான் கதை சொல்லப்படுகின்றது.


அடுத்து முதல் பாகம் முழுக்க கோலேச்சுவது இராஜராஜி என்னும் காஞ்சீபுரத்தை சேர்ந்த தேவரடியார் தலைக்கோலி பெண். தலைக்கோலி பட்டம் என்றால் பரதம் சொல்லி கொடுக்கவும் தகுதி படைத்தவள் என அர்த்தம் ( B.Ed.,????)


அடுத்து திருவாரூர் தியாகராஜருக்கு பொட்டு கட்டி தன்னை அர்பணித்து கொண்ட தேவரடியார் 16 வயதினெலேயே தலைக்கோலி பட்டம் வாங்கியவள். இவள் அந்த சிற்பங்களுக்கு மாதிரியாக இருப்பவள்.


காஞ்சியில் இருந்து இராஜராஜரால் கட்ட பட இருக்கும் தஞ்சை பெரிய கோவிலின் வரை படங்கள் வண்டி கட்டி கொண்டு எடுத்து வருகின்றாள்.வண்டி ஆற்றோடு காவிரி வெள்ளத்தோடு போகின்றது. அப்போது பிரம்மராயர் தன் சீடன் மற்றும் அந்த கிராம மக்கள் உதவியோடு காப்பாற்றப்படுகின்றாள். அந்த இடத்துக்கு இராஜராஜரும் வந்து சேர கதை சூடு பிடித்தாலும் நாமும் அந்த வெள்ளத்தில் சிக்கி சுழன்று உயிருக்கு அல்லாடியது போல ஒரு சோர்வு. சரித்திர நாவல்களில் இது தவிர்க்க முடியாத ஒரு சோகம். நாம் ஒன்றி போவதும் அதறுகு ஒரு காரணம்.


அந்த நேரத்தில் எதேற்சையாக சீமாச்சு அண்ணா தொலை பேசினார். நான் சொன்னேன். உடையார் படிக்க ஆரம்பித்து இருக்கின்றேன் என்று. அப்போது அவர் " முழுவதும் படி. ஒரு M.B.A கோர்ஸ் படித்து முடித்ததுக்கு சமம். னேஜ்மெண்ட் விஷயங்கள் அதில் இருக்கும். இதை நீ படித்து முடித்த பின் உன் பார்வையில் விமர்சனம் எழுது" என்றார். எனக்கு அப்போது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. என்னா இது பாலகுமாரன் தேவரடியார், பால்கிண்னம், வாசனை தைலம் என்று தானே இது வரை போய் கொண்டிருக்கிறார் என்கிற எண்ணமே மேலோக்கி இருந்தது. பின்னே படிக்க படிக்க கதை வெறி பிடித்த ஆண் குதிரை மாதிரி பறக்க ஆரம்பித்தது. பின்பு என்ன நான் போகும் இடமெல்லாம் நீயும் வருவாய் என உடையார் புத்தகம் என் கூடவே ஒட்டி கொண்டது. என்ன ஒரு வருத்தம் என் ஆதர்ஷன புருஷர்கள் எல்லோருக்கும் வயதாகி விட்டது. ஐம்பது பிளஸ் ஆகிவிட்டனர். பொன்னியின் செல்வன் நான் 6 வகுப்பு படிக்கும் போது முதன் முறையாக படித்தேன். புரிந்தது. ஆனால் இதே உடையார் அதே கால கட்டத்தில் வந்திருந்தால் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் புரிந்திருக்கும். சுற்றுளி என்றால் கருங்கல் கோவில் என தாமதமாகத்தான் புரிகின்றது. ஆனால் சிற்றன்னை என்பதற்கு பதில் சித்தி என சொல்கின்றார் ஆசிரியர்.


விடுங்க அதை எல்லாம் ஒரு பெரிய குறையாக பார்க்க முடியாது. கதை என்ன? இராஜராஜர் தஞ்சையிலே ஒரு மிக பிரம்மாண்டமான கோவில் கட்டுகின்றார். பல்வேறு தடங்கள், மனஸ்தாபங்கள் இடையே அவர் அந்த கோவில் கட்ட காரணம் அத்தனை தெளிவாக சொல்லப்படவில்லை. இராஜராஜர் குழம்பிய மனநிலையில் இருந்தாரா அல்லது ஆசிரியர் அப்படி இருந்தாரா என தெரியவில்லை. காந்தளூர் கடிகை போரில் அந்தணர்களை கொன்ற பாவம் கழுவ என ஒரு இடத்தில் சொல்கின்றார். ஆனால் வேறு ஒரு இடத்தில் "நான் உத்தமசோழர் ஆட்சிகாலத்தில் 17 வருடங்கள் எந்த விதமான ராஜ்ஜிய உரிமையும் இல்லாமல் வெறும் இளவரசு பட்டம் மாத்திரம் சூட்டி கொண்டு சோழ தேசத்தை சுற்றி வந்த போது உத்தம சோழர் என்னை அழைத்து 'இராஜராஜா நான் ஒரு பிரம்மாண்டமான கோய்வில் எழுப்பி இருக்கின்றேன். அது தான் மகாலிங்கம். அதை விட பெரிய லிங்கம் என்பது தென்னாட்டில் இல்லை வந்து பார்' என சொல்ல இவர் திருவிடைமருதூர் சென்று பார்த்து 'ஹே இதுவா மகாலிங்கம் நான் கட்டுகிறேன் பார் இதை விட மகாலிங்கமாக பெரிய விமானமாக' என மனதில் நினைத்து கொள்கின்றார். அந்த ஈகோ தான் அந்த கோவில் எழும்ப காரணமா? எது எப்படியா இருந்தால் என்ன நம் தமிழர்களின் கட்டட கலைக்கு ஒரு மாபெரும் மதிப்பு அந்த கோவிலால் என்பதால் மனம் மகிழ்கின்றது.


வருகின்ற பத்தி நிறைய ஆங்கில வார்த்தைகள் இருக்கும் மன்னிக்கவும்.


என் அனுபவத்தில் ஒரு என்பது அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவது என்றால் யார் முடிவு செய்வார்கள். காசு உள்ளவன், அப்படி ஒரு கட்டிடம் கட்ட மனதில் வெறியுடன் கூடிய ஆசை உடையவன். அவன் தான் client. அவ் அவனுக்கு ஆசையும் பணமும் மட்டுமே இருக்கின்றது. ஆனால் அதை இருந்து கட்ட நேரம் இல்லை அல்லது அதற்கான அடிப்படை அறிவு இல்லை என வைத்துக்குக்கொண்டால் அந்த கிளையண்ட் அந்த பொறுப்பை வேறு ஒரு நிறுவனத்துக்கு கொடுத்து விடும். அவங்க consultant. அதாவது மேஸ்த்திரி மாதிரி. ஆனால் கையில் சாட்டை வைத்து கொண்டிருக்கும் பெரிய அளவினால மேஸ்த்திரி. அவன் வைப்பது தான் சட்டம். பின்பு இருவரும் சேர்ந்து யார் கட்ட போகின்றார்கள் என்பதை டெண்டர் விட்டு முடிவு செய்வார்கள். ஒரே கம்பெனிக்கும் கொடுக்கலாம் அல்லது இரண்டு மூன்று கம்பனிக்கு சேர்த்தும் கொடுக்கலாம். அடுத்து Drawing அதாவது வரைபடம். அதற்கு ஒரு செக்ஷன் அது Document control secton அது அந்த வரை படத்தை கிளையண்ட் கிட்டே காட்டி சம்மதம் வாங்குவது முதல் அரசாங்க சம்மதம் வாங்குவது முதல் கன்சல்டண்ட் சம்மதம் வரை பின்பு அதை பாதுகாப்பது பிரதி எடுத்து பொறியாளர்களுக்கு, பிராஜக்ட் மேனேஜர், கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜர் என கேட்ட போது எந்த பகுதி எப்போ வேண்டுமோ அப்போ தருவது அப்படியாக . இந்த நாவலில் அது யார்?


அடுத்து soil test மண் பரிசோதனை. பாறை எத்தனை அடியில் வரும். எத்தனை அடிக்கு அஸ்த்திவாரம் போடனும், நடுவே வரும் தன்ணீர் ஊற்று எப்படி சமாளிப்பது. அதற்கு dewatering section அது தனி பிரிவு. அடுத்து survey. இப்போது auto level machine, lazer point machine எல்லாம் வந்தாச்சு ஆனால் அப்போது தூக்கு குண்டு தான். அந்த சர்வே டிபார்ட்மெண்ட் தனி பிரிவு. அடுத்து man power. பாடாவதி வேலை. HR department தலையை பிச்சுப்பாங்க. இன்றைக்கு 10000 பேர் வேண்டும் என்றால் வேண்டும். தரவில்லை என்றால் HR மேனேஜரின் டவுசர் உருவப்படும். கம்பனியிலோ அத்தனை ஆட்கள் இருக்காது. என்ன செய்வது Man power Supply companyயில் இருந்து தருவிக்க வேண்டும். அது இந்த நாவலில் யார் வேலை???


வந்தாச்சு ஆட்கள். அவர்களுக்கு திங்க, தூங்க வசதிகள் யார் செய்வார்கள்? அது Administration Department. அது இந்த கதையில் யார்??? அடுத்து தொழிலாளர் பாதுகாப்பு அதாவது safety department. அது இந்த நாவலில் யார்? அடுத்து procurement அதாவது மூல பொருட்கள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதிலே Local purchase இருக்கு abrod purchase இருக்கு. அது யார் இங்கே இந்த நாவலில். அடுத்து Storekeeper, Accountant அடேங்கப்பா இந்த நாவலில் முக்கிய பிரச்சனையே இது தான். இந்த இரண்டு வேலைக்கும் தஞ்சை அந்தனர்களை கூப்பிட போய் அவர்கள் மறுத்துவிட பின்பு தொண்டை மண்டலத்தில் இருந்து 500 அந்தனர்களை கொண்டு வந்து இறக்கி பெரிய பிரச்சனையாகி அடேங்கப்பா. பிரம்மிக்க வைக்கின்றது.


அடுத்து planing depart ment. அடுத்து என்ன வேலை செய்வது எப்படி செய்வது எத்தனை ஆட்கள் அதற்கு தேவை என திட்டம் வகுக்கும் துறை. அதை யார் செய்வது. அடுத்து logistic department. மூலப்பொருட்களை கொண்டு வந்து சேர்ப்பது. அதற்கான சாலை வழிகள், வாகன வசதிகள் அது ஒரு பாடாவதி துறை. அதை இங்கே யார் செய்வது???


நடுவே நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற சண்டை வரும். சர்வேகாரன் "நான் பாயிண்ட் கொடுக்காவிட்டால் நீ எப்படி வேலை செய்வாய்?" என கேட்டு விட்டு போய் விடுவான். இங்கே அடித்து கொள்வார்கள். வேலை நின்று போய் விடும். அதை சமாளிக்கனும். மழை பெய்து தோண்டிய பள்ளத்தில் குளம் மாதிரி நீர் சேர்ந்து விடும். 10 நாட்கள் வேலை நிற்க்கும். அதை எப்படி சரி கட்டுவது? அதை இந்த நாவலில் செய்பவர் யார்?


அடுத்து Plant Division தேவையான உபகரணம் வாங்கி கொடுப்பது முதல் ரிப்பேர் வரை அனைத்தும். இந்த நாவலில் கருமார்கள் என்கிற பிரிவினர் அந்த plant division. அவர்களுக்கு என்ன பிரச்சனை. அதை எப்படி இராஜராஜர் சமாளிப்பார்.


அடுத்து ஒற்றர் படை. கிட்ட தட்ட Time Office இந்த வேலை தான் செய்யும். அதாவது போட்டு கொடுக்கும் வேலை. எவன் யாருக்கு கையாள் என்பதே தெரியாது. அடுத்து Entertainment section. பார்ட்டி பார்ட்டி பார்ட்டி தான். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மானாட மயிலாட தான் மதுவுடன். அது இந்த நாவலில் உண்டா என்றால் ஆம் அதுவே பிரதானமாக இருக்கின்றது.


மிக மிக முக்கியமாக Scaffolding Division தான் அதாவது சாரம் போடுவது. இப்போது Steel tubes, props எல்லாம் வந்து விட்டது. Full Safety Harness போட்டு கொண்டு அருமையாக போடலாம். 400 டன் எடையுள்ள cooling chiller 500 டன் கெப்பாசிட்டி கிரேன் வைத்து அரை நாளில் 80 வது மாடிக்கு ஏற்றலாம். ஆனால் அப்போது எப்படி அது சாத்தியமாகிற்று. அதுவும் 2400 டன் எடையுள்ள ஒற்றை கல் மேலே ஆசிரியர் மொழியில் சொல்ல வேண்டுமானால் 7 பனை உயரம் ஏற்ற வேண்டும். அதற்கு சாரம் போடுவது எப்படி? ஒரு சிறிய கல் அத்தனை உயரத்தில் இருந்து விழுந்தால் கீழே நிற்கும் யானை இறந்து விடும். அப்படி இருக்கையில் 2400 டன் எடையுள்ள கல் மேலே போக வேண்டும். யார் அதற்கு பொறியாளர். யார் டெக்னிக்கல் மேனேஜர்? யார் commissioning department?


படிக்க படிக்க பிரம்மிப்பு தான் எஞ்சுகின்றது. ஒரு பிரச்சனை வந்தால் எப்படி சமாளிப்பது? பிரச்சனை வராமல் முன்னேற்பாடாக இருப்பது எப்படி? திட்டமிடுதல் எப்படி? அதை செயல்படுத்துதல் எப்படி? பலி விழும். விழுந்தால் மற்றவர்களை எப்படி தேற்றுவது. பலி எண்ணிக்கையை குறைக்க என்ன வழி? ஒரு பிராஜட் என்றால் 3 கல்யாணம், 8 காதல் அதிலே 2 ஓக்கே 6 முறிவு, கள்ள காதல், நல்ல காதல், காமக்காதல், எல்லாம் சர்வ நிச்சயம். இந்த நாவலில் அது உண்டா? ஆம் பிராஜக்ட் மேனேஜர் பெண்ணே ஓடி போகின்றது. அப்போது அவர் மனநிலையை எப்படி ஒரு கிளையண்ட் வந்து சரி செய்ய வேண்டும்? அடேயப்பா. ஆசிரியர் ஒரு விஷயத்தையும் தொடாமல் விடவில்லை. தற்போதைய முதல்வர், துனைமுதல்வர் பிரச்சனை வரை அவர் தொடாமல் விடவில்லை.


நாவலை படித்து முடித்த பின் நிச்சயம் தஞ்சை போக ஆசை வருவது இயல்பு. இது வரை பிரகதீஸ்வரரை தரிசித்ததற்கும் இனி இந்த நாவலுக்கு பிறகு தரிசிப்பதற்கும் ஆயிரம் வேறுபாடுகள் நிச்சயம்.


இனி அடுத்த பாகத்தில் இருந்து இன்னும் விரிவான விமர்சனம் செய்கின்றேன். இதை முன்னோட்டமாக வைத்து கொள்ளுங்கள். என் வழக்கமான பதிவுகள் மாதிரி உடையார் விமர்சனம் இருக்க மாட்டாது. அதனால் பின்னூட்டம் வராது என்பதும் தெரியும். குறைந்த பட்சம் வடுவூர் குமார் அண்ணா ரசிக்க 25 சத வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.


சோழம்! சோழம்!! சோழம்!!!\


October 4, 2009

சூடான இட்லி+ நெய்+ ஜீனி (04/10/2009)




கடந்த மாதம் 28 மதியம் வரை இந்தியா வர உத்தேசம் இல்லை. ஒரு வழியா போனஸ் வாங்கிகிட்டு வரலாம் என இருந்தேன். அதற்கு முன் 15 நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமலே இருந்தது. சமாளித்து கொண்டிருந்தேன். 28 காலை மிகவும் சரியில்லாமல் போகவே பெட்டியில் போவதை விட பெட்டியோடு போவதே உசிதம் என ஸ்வாமி மனசாட்சியானந்தா மண்டி போட்டு கேட்டுகிட்டதுக்கு இணங்க அதிஷ்ட்டவசமாக அன்று மாலைக்கே டிக்கெட் கிடைக்க மஞ்ச பையை தூக்கி கக்கத்திலே வச்சுகிட்டு துண்டை உதறி தோளில் போட்டுகிட்டு வேஷ்ட்டியை மடிச்சு கட்டிகிட்டு கிளம்பிட்டேன். இரவு 12 மணிக்கு திருச்சி வந்து ஒரு பஸ் பிடிச்சு மாயவரம் காலை 5.30கு வந்து கோலங்கள் போட்டு கிட்டு இருந்த அபிஅம்மாவுக்கு தொல்ஸ் என்கிற தொல்காப்பியனின் தரிசனம். வந்தது முதல் இப்போது வரை ஹவுஸ் அரஸ்ட் உடல் நிலை காரணமாக. ஆனால் கோவில், காவிரி அனுமதி உண்டு.


காவிரி கரை புரண்டு ஓடுது. பார்க்க பார்க்க ஆசையாக இருக்கின்றது. முறை வைத்து தண்ணீர் விடுகின்றார்கள். வீட்டின் பின்புறம் இருக்கும் பாசன கால்வாயில் இரவு சல சலன்னு ஓடும் தண்ணீர் இரவு தாலாட்டாக அருமையாக இருக்கின்றது. தவளை சத்தமும், அதை துரத்தும் பாம்பு சத்தமும் தவளையை முழுங்கிவிட்ட பாம்பு நகர முடியாமல் வீட்டில் கொல்லை புறத்தில் இருக்கும் (சனிமூலையில்) சரகொன்றை மரத்தின் அடியில் படுத்து கிடப்பது காண கிடைக்காத காட்சி. பசங்களும் பயப்படுவதில்லை. மனைவியும் பயப்படுவதில்லை. எனக்கு தான் அல்லு விட்டு போகுது. சர கொன்றை மரம் கேள்விபட்டது உண்டா? ஆஹா இரவில் பூக்கும். என் வீடு முழுக்க இரவு 12 மணி வாக்கில் அந்த வாசனை புகுந்து அப்படியே நம்மை ரம்மியமாக ஆக்குகின்றது. சர கொன்றை மரத்தின் அடியில் காம்பவுண்ட்க்கும் வாய்க்காலுக்கும் இடையே பாம்பு புற்று இருக்கின்றது. எல்லாம் அந்த வாசத்துக்கு சதந்திரமாக ஆடிப்பாடும். போகட்டும் நரி வலம் போனா என்ன இடம் போனா என்ன விழுந்து பிராண்டாமல் இருந்தா சரி தான்.


மாயவரத்தில் இந்த ஒன்பது மாதத்தில் பெரிய மாற்றம் எதும் இல்லை பஸ்ட்டாண்டு உட்பட. அது போல வழக்கம் போல பஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், பெரிய ஆஸ்பத்திரி போன்ற மக்கள் கூடும் இடங்களில் தலா இரண்டு பைத்தியங்கள் அழுக்கு கிழிந்த உடையுடன்(சில சமயம் அதுவும் இல்லாமல்) ஜடா முடியுடன் திரிகின்றனர்.ராதா போன்ற மாணவர்கள் இது பாகிஸ்தான் உளவாளி, இது நம்ம காலேஜ் கோல்டு மெடல் பார்ட்டி என்பன போன்ற கட்டு கதைகளை கட்டவிழ்த்து விடுவதும் என்னை போன்ற அப்பாவி(?) மாணவர்கள் வாய் பிளந்து கேட்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இன்னும் எங்க ஸ்கூல் பக்கம் போகவில்லை. சீமாச்சு அண்ணா 11ம் தேதி வந்த பின்னே பள்ளியே கதி என இருக்க போவதால் அதற்கு முன் உடம்பை சரி செஞ்சுக்க ஐடியா.

நட்ராஜ் லீலைகள் நம்ம நகரிலே ரொம்ப பிரசித்தமாய் இருக்கு. அனைத்து டி வி விளம்பரமும் அத்துப்படி. அப்சர்வேஷன் ரொம்ப அதிகமா இருக்கு. கிருத்துருவத்தில் அப்படியே என்னை கொண்டிருக்கான். எஸ்க்கியூஸ்மீ கந்தசாமி தான் இப்போதைய முனுமுனுப்பு அவனுக்கு. தன் கைக்கு எட்டிய தூரம் வரை சுவற்றில் கோடு போட்டு வைத்திருக்கான். மாடி படியில் பக்கவாட்டில் ஏறி நம்மை பதற வைக்கிறான். இறங்கும் போது இம்சை அரசன் 23ம் புலிகேசி மாதிரி இறங்குகிறான். ஆட்டோகாரர், காய்கறி அம்மனி, பால்காரர், சலவைகாரர், பெரியகோவில் சிப்பந்திகள் உட்பட எல்லோர் மாதிரியும் இமிட்டேட் செய்து மோனோ ஆக்டிங் செய்கிறான். வீட்டில் எந்த ஒரு எலக்டானிக்ஸ் பொருளுக்கும் ரிமோட் என்பதே இல்லாமல் செய்து விட்டான். அடுத்த முறை இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம் நான். அதாவது அந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களே இருக்காது என நினைக்கிறேன். மதர் ஃபீடிங் நிப்பாட்டியாச்சு. கொலுசு, கை காப்புகள், செயின், கடுக்கன் எல்லாம் கழட்டி போட்டு விட்டான். கொஞ்சம் விட்டா மீசை வரைந்து கொண்டு பெண் பார்க்க சொல்லுவான் போலிருக்கு. அபிக்கு கொஞ்சம் அடங்குகிறான். அவன் அம்மாவை எல்லாம் கண்ணை கட்டி விடுவான்.

மாயவரத்தில் கிட்ட தட்ட எல்லோரும் அடை மொழி பட்டம் தனக்கு தானே கொடுத்து தானே போஸ்ட்டர் அடித்து ஒட்டியிருக்கானுங்க. (என்ன கொடுமை சரவணா) "எங்கள் தங்க ராஜா" " உங்க வீட்டு செல்லம்" போன்ற பட்டங்கள் சில உதாரணம். உடனே அந்த பட்டத்தை காரில் / ஜீப்பில் பின் பக்கம், முன் பக்கம், வலப்பக்கம், இடப்பக்கம் எல்லாம் ஒட்டி சும்மாவே சுத்தி சுத்தி வரானுங்க கடை தெருவை. பாவம் இவனுங்க தொல்லையால் தீபாவளி பர்ச்சேஸ் மக்கள் தவிச்சு போகுது. நம்பினால் நம்புங்கள் ஒரு இரு சக்கர மோட்டார் மெக்கானிக் ஏற்கனவே "அன்னை" என்னும் பட்ட பெயர் இருந்தும் அடிஷனலாக தேவைப்பட "டாக்டர்" பட்டம் போட்டு கோட் ஷூட் போட்டு போட்டோ எடுத்து”வருக வருக” போஸ்ட்டர் அடிச்சு இருக்கான்.வீட்டிலிருந்து கடைக்கு வர வருக போஸ்ட்டர். அட தேவுடா! கேட்டா சிரிக்கிறான். அந்த போஸ்டர் போட்டோ வேண்டுபவர்கள் தனி மடல் இடவும்.சீமாச்சு அண்ணா தலைமையில் ஒரு தனி படை அமைத்து இந்த பட்டகாரர்களை எல்லாம் ஒரு கூண்டு வண்டியில் பிடித்து போட்டு ஒரு பள்ளி கூடத்தில் அடைத்து வைத்து பாடம் நடத்தி பரிட்சை வைத்து படிக்க வைத்தால் சந்தோஷப்படுவேன்.

இன்னும் ஒரு தடவை மயிலாடுதுறை பஸ்ஸ்டாண்டு பிரச்சனை பத்தி பேசினா ஜோட்டால அடிங்க அப்படின்னு ரோசமுள்ள மனிதர்கள் விலகி விட்டனர். எனக்கும் ரோசம் இருக்கு என்பதால் அந்த பிரச்சனையிலிருந்து எஸ்கேப்.

கடைதெருவில் எள்ளு போட்டு எள்ளு எடுக்க முடியலை. அத்தனை கூட்டம். கடந்த ஒரு மாதமாகவே இப்படித்தானாம். காரணம் ரம்ஜான், நவராத்திரி....அது முடிந்த கையோடு இதோ தீபாவளி வியாபாரம், தீபாவளி முடிந்த அடுத்த நாள் முதல் ஐப்பசி மாதம் வருகின்றது. ஐப்பசி மாதம் என்றாலே மாயவரத்துக்கு கொண்டாட்டம் தான். ஐப்பசி கடைசியில் தேர், கடைமுழுக்கு, முடவன் முழுக்கு வரை இதே கூட்டம் தான் கடை தெருவில்.

இங்கே அண்ணா பொது தெய்வமாகிவிட்டார். ஏனனில் அவருக்கு மட்டுமே சிலை இருக்கு. அதனால் எல்லா கட்சியும் அவருக்கு தான் மாலை போட்டு போஸ் கொடுத்து போட்டோ எடுத்து கொள்கின்றனர். போகிற போக்கை பார்த்தா பி.ஜெ.பி யும் மாலை போடும் போலிருக்கு. காந்தி சிலை ஒன்று இருக்கு சுந்தரம் தியேட்டர் அருகே. ஆனால் காந்தியை அடிமைப்பெண் எம் ஜி ஆர் மாதிரி கூண்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றனர். முனிசிபாலிட்டியில் இருக்கும் காந்தி சிலையை யாரோ ஒரு குல்லா போட்ட புண்ணியவான் 4 நாள் முன்னே கழுவிகிட்டு இருந்தார். அதை பார்த்த ஒரு குடிமகன் ஏன் என்று கேட்டு அவசர அவசரமாக டாஸ்மாக் ஓடினார் சரக்கு ஸ்டாக் பண்ணி வைக்க. வாழ்க காந்தி. வளர்க மைனர் குஞ்சுமணி ஸாரி டாக்டர் அன்புமணி!.

மயிலாடுதுறை பெரிய ராஜன்தோட்டம் மணிசங்கர் அய்யர் புண்ணியத்தால் "ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா"(மத்திய அரசு)வுக்கு தாரை வார்க்கப்பட்டு பிரம்மாண்டமாய் ஆகிவிட்டது. அனைத்து விளையாட்டுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. ஆனா மாயவரத்தான் எவனும் உள்ளே நுழைய முடியாது. நாயை விட்டு கடிக்க சொல்லுவாங்க. காலை வாக்கிங் மாத்திரம் போக அனுமதி உண்டு.

திருச்சி, தஞ்சை, குடந்தை, மாயவரம் அகல ரயில் பாதை முடிந்து ரயில் ஓடி கொண்டு இருக்கின்றது. அது போல் மாயவரம்- கடலூர் அகல ரயில் பாதையில் மாயவரம்- சீர்காழி ஓக்கே. அது போல கடலூர் - சிதம்பரம் ஓக்கே. நடுவே கொள்ளிடம் பாலம் வேலை முடிந்தால் சுபம். ஹாட்ஸ் ஆஃப் டூ முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் வேலு அவர்களுக்கு.

90 சத ஓட்டு வீடுகள் கான்கிரீட் வீடுகளாகி விட்டன. இன்னும் பத்து வருஷத்தில் ஓட்டு வீடுகளை எதாவது பழைய கல்யாண கேசட்டில் பார்த்தால் தான் உண்டு என்கிற அளவு மயிலாடுதுறையில் கட்டுமானப்பணி அதிகம் நடை பெறுகின்றது. கொத்தனார்களும், ஆசாரிகளும் குடியும் குடித்தனுமாக அமோகமாக இருக்கின்றனர். எப்போதும் போல A.R.C குரூப்ஸ், நாராயணன் ஜூவல்லரி எல்லாம் நிரம்பி வழிகின்றன. பவும் 15000 ஆனா எங்களுக்கு என்ன என்பது போல அடித்து பிடித்து நகை வாங்குகின்றனர்.

விலைவாசி கொடிகட்டி பறக்குது. ஒரு கிலோ ஒட்டு மாங்காய் 60 ரூபாய். ஆட்டோ லோக்கல் 20 ரூபாயாக இருந்தது இப்போது 40 ரூபாய் உள்ளூர் வாசிகளுக்கு. வெளியூர்வாசி என்றால் தனி சார்ஜ். அப்போது வாயில் என்ன வருகின்றதோ அதான் ரேட்.நான் போய் இறங்கியதும் ஆட்டோ பிடித்தேன். 80 ரூபாய் என்றான். நான் உள்ளூர் தான் என அவன் மேலேயே சத்தியம் செய்ய வேண்டியதாகி விட்டது.

கொடுமை என்னான்னா போஸ்ட் ஆபீஸில் இருந்து கூறை நாடு வரை ரோட்டின் நடுவே பிரித்து நடுவே வரிசையாக சோடியம் வேப்பர் லேம்ப்க்கு கம்பம் நட்டிருக்காங்க. நகரை அழகு படுத்துராங்களாமாம். இனி அந்த ரோட்டில் ஒரு மாட்டு வண்டி போனா எல்லா பஸ்ஸும் லாரியும் அதற்க்கு பின்னாலேதான் போக வேண்டும். கும்பகோணம், தஞ்சை எல்லா ஊர்லயும் அழகா பை பாஸ் ரோடு போட்டாச்சு. ஆனா அதற்கான முயற்சி கூட இங்கே இல்லை.

செருப்பு கடைகளில் ஏ.சி போட்டிருக்காங்க. நல்ல குளுமையா இருக்கு. அதை விட்டு வெளியே வந்தா கடை வாசலில் பஜ்ஜி சுட்டு விற்க்கிறாங்க. காய் கறி ரோட்டில் போட்டு விற்கிறாங்க. மண் புழுதி பறக்க மக்கள் சாப்பிடுறாங்க. ஹூம் காலில் போடும் செறுப்புக்கு ஏ சி கேக்குது. உணவு பொருட்கள் புழுதியில் இருக்கு. Ohhhhh My God!!!

September 27, 2009

அதிஷாவின் KFC பதிவும் அபிஅப்பாவின் கெண்டக்கி அனுபவமும்!!!!


நேற்றைக்கு அதிஷா ஒரு பதிவு போட்டிருந்தார். உடனே நானும் ஆமை சுத்த ஆரம்பிச்சுட்டேன். நான் மட்டும் சுத்தினா போதுமா பத்து பேர் கிட்டயாவது அதை பொலம்பி தீர்க்கலைன்னா தூக்கம் வருமா? அதான் அதான் சிரிச்ச மூஞ்சி பதிவர்கள் இருக்காங்களே. அதான் எழுதிட்டேன்.நெட் கூட ஒரு வாரமா சொதப்பிடுச்சு வீட்டிலே.
MSc Wild Life Biology என்னும் படிப்பு இந்தியாவிலே ரெண்டு காலேஜ்ல தான் இருக்கு. ஒன்னு எங்க காலேஜ் அடுத்து பூனாவிலே ஒரு காலேஜ். அதனால அந்த கோர்ஸ்ல மட்டும் இந்தியா, வெளிநாட்டில் இருந்து எல்லாம் வந்து பீட்டர் விட்டுகிட்டு இருப்பாங்க. அப்படித்தான் விவேகானந்தன்னு ஒரு பீட்டர் பார்ட்டி. அவங்க அப்பா அம்மா எல்லாம் லண்டன்ல இருந்தாங்க. இவனும் அங்க படிச்சவன் தான். இங்க வந்து அந்த கோர்ஸ்ல சேர்ந்தான். அவனை பார்த்தாலே எங்களுக்கு வேப்பங்காய். பின்னே எங்க கிட்ட வந்து பீட்டர் விட்டா கடுப்பு வராதா. அதிலும் ராதாவுக்கு கோவம் கோவமா வரும். "இந்த இங்கிலீஷ் கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையிலே மாட்டினா செத்தாண்டா மொவன்"ன்னு கதறுவான்.

ஒரு நாள் எங்க கிட்ட வந்து "இந்த ஊர்ல KFC எங்க கிடைக்கும்"ன்னு கேட்டான்.அது என்ன வஸ்துன்னே தெரியாது எங்களுக்கு. உடனே கிரிக்கெட் வீரர்லாம் இப்ப விக்கெட் எடுத்தா வட்டமா தோள் மேல கைபோட்டுகிட்டு நிக்கிறாங்களே அது போல நின்னு கிட்டு அது என்ன கந்தாயம்ன்னு டிஸ்கஸ் செஞ்சோம். நான் சொன்னேன் "டேய் அது ஒரு வகை ஸ்வீட்டுடா". அதுக்கு கந்தசாமி "அட போடா அவன் லண்டன்ல படிச்சவன். அநேகமா அது எதுனா புத்தமமா இருக்கும்"ன்னு சொல்ல, அதுக்கு சங்கரோ " டேய் இது ஸ்போர்ட்ஸ் சம்மந்தப்பட்ட பேட் மாதிரிடா என சொல்ல நம்ம ராதா "போங்கடா லூசுங்கலா இவன் பாரின்காரன். எல்லா கெட்ட பழக்கமும் இருக்கும். அனேகமா அது எதுனா காண்டம் வகையறாவா இருக்கும்" அப்படின்னு சொல்ல எல்லோருக்கும் அது சரின்னு பட்டுது.வட்ட சங்கிலி மாநாட்டை பிரிச்சுட்டு ராதா தான் அவன் கிட்ட பேசினான்.

"நீ கேக்குற பிராண்ட் இருக்காது. வேற பிராண்டு தான் இருக்கும். எல்லா பெட்டிகடையிலும் இருக்கும். பெரியாஸ்பத்திரி போனா ப்ஃரீயாவே கிடைக்கும்"ன்னு சொன்னான். பீட்டர் பார்ட்டிக்கு புரிஞ்சு போச்சு நாங்க எல்லாம் வெத்துவேட்டு கேஸுன்னு. "மேன் அது புஃட் அயிட்டம்யா"னு சொல்லிட்டு எகத்தாளமா பார்த்தான். அதுக்கு ராதா "அப்படின்னா காளியாகுடில கேட்டு பாரு"ன்னு சொல்ல அவன் தலையில அடிச்சுகிட்டு போனான். அதன் பிறகு நாங்க KFC ன்னா என்னான்னு தெரிஞ்சுக்க ஏறாத மலை இல்லை, சுத்தாத அரசமரம் இல்லை. விடை கிடைத்தபாடில்லை. சரி ச்சீ சீ இந்த அயிட்டம் புளிக்கும்ன்னு அதை மறந்துட்டோம். இதல்லாம் நடந்தது 1986ல்.நிற்க.

பின்னே 1990ல் அபுதாபி வந்துவிட்டேன். என் ஆபீஸ்க்கு எதிரே KFC கடை நல்ல சிவந்தமண்னா இருந்துச்சு. என் கூட வேலை பார்த்த ஹாஜா கிட்ட கேட்டேன் அது என்ன கடைடான்னு. அது ஒரு ஹோட்டல்ன்னு சொன்னான். கடையின் ஜம்பத்தை பார்த்தா நிச்சயமா பில் 200 அல்லது 300 திர்காம் வரும் போல அதனால ஒரு சம்பளம் வாங்கி மொத்தமா எடுத்துகிட்டு போய் என்னன்னு பார்த்துடலாம்ன்னு ஒரு சபலம் எனக்கு. ஹாஜாவுக்கும் அதே.

சம்பள நாள் வந்தது. ஹாஜா என் கிட்ட "அந்த கடை பார்த்தாலே ரொம்ப டீசண்ட்டா இருக்கு. அதனால நாம நம்ம கெட்டப்பையே மாத்திகிட்டு போவோம்டா"ன்னு சொன்னான். உடனே புது ஷூ, புது பேண்ட், சட்டை, ஒரு தொப்பி ,10 திர்காம் ஸ்டிக்கர் ஒட்டின டியூப்ளிகேட் ரேபாண்ஸ் சன் கிளாஸ் எல்லாம் வாங்கிட்டோம். இந்த லெட்சனத்துல ஹாஜா ஆபரேஷன் செய்யும் டாக்டர் மாதிரி கையுறை, நம்புங்க ஜட்டி பனியன் கூட புதுசு.
சம்பளத்துக்கு முதல் நாள் இரவு தூக்கமே வரலை. இரவு 11 மணிக்கு ஹாஜா சோகமா வந்தான் என் ரூம்க்கு. என்னடான்னு கேட்டதுக்கு "நம்ம அக்கவுண்டண்ட் ரொம்ப சிடு மூஞ்சிடா"ன்னு சொன்னான். ஏன்னு கேட்டதுக்கு "நாளை சம்பளம் கண்டிப்பா போடுவீங்கதானே சார்"ன்னு போன்ல இப்ப கேட்டதுக்கு கன்னா பின்னான்னு திட்டிட்டு போனை வச்சுட்டார்டான்னு சொன்னான். நான் அதுக்கு "நீ எத்தனை தடவை போன் செஞ்சே"ன்னு கேட்டேன். ஒரு தடவை தான்னு சொன்னான். ஹாஜாவுக்கு தெரியாது நான் அதுக்கு முன்னமே 4 தடவை போன் செஞ்சு இதே கேள்வியை கேட்டு 4 வது தடவை "அடுத்த தடவை எவனாவுது போன் செஞ்சா போலீசை கூப்பிடுவேன்"ன்னு திட்டியதும்.

ஒரு விழியா தூங்காத இரவா கழித்துவிட்டு காலை ஆபீஸ் போயாச்சு. காலை முதல் வேலையே ஓடலை. எப்போதும் 10 மணிக்கு சம்பள கவர் கொடுத்துதிடுவாங்க. அன்றைக்குன்னு பார்த்து மதியம் 1 மணிக்கு கூட பெட்டியை திறக்கலை அக்கவுண்டண்ட். போச்சு 1-2 லன்ச் KFC சாப்பிட முடியாம போச்சு. அதை நம்பி சாப்பாடு கூட எடுத்து வரலை. பசியோட கிடந்தோம். 5 மணிக்கு ஆபீஸ் முடியும். 4.45க்கு கொடுத்தாங்க. ஆபீஸ்லயே தலைசீவி , முகத்துக்கு கிரீம் தடவி, பவுடர் போட்டு மேக்கப் எல்லாம் முடிஞ்சு வெளியே இருட்டி விட்டது கிட்டதட்ட. பகீர்ன்னு ஆகி போச்சு. இருக்காதா பின்ன சன்கிளாஸ் போட முடியாதே. பரவாயில்லைன்னு போட்டுகிட்டு தான் போனோம்.

அந்த இருட்டிலே சன்கிளாஸ், கையுறை சகிதமா எங்களை பார்த்தவுடன் என்ன நினைச்சு இருப்பாங்க. ஏதோ பார்வையற்றவர்கள் போலன்னு பரிதாபப்பட்டு ஒடனே ஒடிவந்தான் ஒரு பிலிப்பைனோ சிவப்பு சட்டை, சிவப்பு தொப்பி சர்வர். ஆனா எங்களுக்கு எல்லாமே கருப்பா தான் தெரிஞ்சுது. அவன் பேசின இங்கிலீஷ் என்னன்னு புரியலை. ஹாஜா உடனே "ஒன் KFC" ன்னு சொல்ல அவன் அதுக்கு என்னவோ சொல்ல நாங்க ஓக்கே ஓக்கேன்னு சொல்லிட்டு சுத்தியும் பார்த்தா எல்லா பிலிப்பைனி கஸ்டமரும் டவுசர் பாண்டியாவும், கிழிச்சிவுட்ட ஜீன்சுமா இருக்கானுங்க.

கொடுத்த ஆர்டர் வந்தது வட்ட வட்ட பன்னும், முட்டைகோஸ்(தயிரில் ஊறவச்சது), தக்காளி சாஸ், பிஃங்கர் சிப்ஸ். "என்னடா ஹாஜா பன்னு கொண்டாந்து வைக்கிறான் சரி சரி கண்டுக்காம சாப்பிடு"ன்னு மதிய பசி வேற. ஆளுக்கு 12 பன், முட்டை கோஸ் சாப்பிட்டோம். ஹாஜா உடனே "டேய் எப்படியா இருந்தாலும் பில் தீட்ட போறான் அதனால இன்னும் கொஞ்சம் பன் சாப்பிடலாம்ன்னு சொல்லிட்டு சர்வரை கூப்பிட்டு இன்னும் பன் கேட்க அவன் ஒரு மாதிரியா பார்த்தான். எனக்கு அப்பவே என்னவோ நடக்குது மர்மமா இருக்குதுன்னு பயம் வந்துடுச்சு. அவன் மட்டுமா அப்படி பார்த்தான் அங்க சாப்பிட்டவன் எல்லாரும் அப்படி பார்த்தானுங்க.
நான் நடுவே எழுந்து கடை வாசலில் இருக்கும் காயின் பூத்ல காசு போட்டு இந்தியாவில் இருந்த ராதாவுக்கு போன் செஞ்சேன். அவன் அப்பா தாசில்தார் ஆச்சா அதனால வீட்டிலே போன் இருந்துச்சு. ராதா அம்மா தான் எடுத்தாங்க. "என்னடா அம்பி எதுனா சொல்லனுமா ராதாகிட்ட"ன்னு கேட்டாங்க. "ஒண்ணுமில்லைம்மா KFCன்னா பன்னு தான்னு சொல்லுங்க"ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "என்னவோ போங்கடா கோட் வேர்டுல பேசிக்கறேள்ன்னு மாத்திரம் புரியர்து"ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டாங்க.

அதுக்குள்ளா அடுத்த 12 பன் வந்து இருந்துச்சு. அதையும் வயிறு முட்ட சாப்பிட்டு அத்தனை பெரிய பெப்சியையும் புல்லா குடிச்சுட்டு எழுந்திருக்க முடியலை. சர்வரை கூப்பிட்டு "சர்வர் பில்"ன்னு கேட்டோம். சர்வர் ஒரு மாதிரியா பார்த்துட்டு ஒரு பக்கெட் முழுக்க லெக் பீஸ், செண்டர் பீஸ்ன்னு சொறிமுத்து அய்யனார் மாதிரி எங்களை பார்த்து கண் அடிக்குது எல்லா கோழியும். கூடவே 85 திர்காம் பில். நானும் ஹாஜாவும் பேசிக்கவே இல்லை. ரெண்டு பேர் முகத்திலும் ஈயாடலை. அதை சாப்பிடவும் ஒரு செண்டிமீட்டர் கூட இடம் இல்லை.. சரி அதை பார்சலா ரூம்க்கு எடுத்துட்டு போகலாமான்னு தெரியலை. வெட்கம் வேற. அங்க இருந்த மொத்த கூட்டத்தின் கண்களும் எங்க மேலத்தான். 100 ரூபாய் பில் கொடுத்துட்டு அவன் மீதி 15 கொடுத்த போது அவசரப்பட்டு ஹாஜா "டிப்ஸா வச்சிக்கோ"ன்னு சொல்ல எனக்கு அழுகையே வந்துடுச்சு.

சர்வர் அந்த நன்றிக்காக "சார் சாப்பிடலையா"ன்னு கேட்க நாங்க ஒரே குரலில் "we dont like this item'' ன்னு சொல்ல அந்த மொத்த கூட்டமும் தலையிலே அணுகுண்டு போட்ட மாதிரி எழுந்துட்டாங்க. கேஷ்ல உட்க்காந்து இருந்தவன் கீழே விழுந்துட்டான்.

வெளியே வந்தோம். "எதுனா பேசுடா ஹாஜா"ன்னு நான் தான் மௌனம் கலைத்தேன். அதுக்கு அவன் " 85 திர்காம் கொடுத்து பன்னு தின்னது பத்தி எந்த காலத்திலயும் யார்கிட்டயும் சொல்லிடாதே. அதுவும் ஜட்டி முதல் புதுசா போட்டதை கண்டிப்பா சொல்லிடாதே"ன்னு சொன்னான். நானும் இதுவரை யார் கிட்டயும் மூச்சு விடலை.

September 11, 2009

இன்னும் 24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போவுது!!!!!


எங்க வீட்டிலே ஒரு பழக்கம். 5 வயது ஆன பின்னே தான் நான்வெஜ் கொடுப்பாங்க. எனக்கோ கோழி கறி சாப்பிட நாலு வயது முதலே ஆசை வந்து விட்டது. சரியா ஐந்து வயதாகும் போது பக்கத்து வீட்டு டாமி கடித்துவிட்டது. அதுக்கு யார் மேல கோவமோ என்னை கடிச்சிடுச்சு.
நாய் கடிச்சா தொப்பிலை சுத்தி 64 ஊசி போடனும் என வள்ளியம்மை அத்தை ஆரம்பிச்சு பேரம் எல்லாம் முடிந்து கடைசியா 30 ஊசிக்கு வந்தாங்க. அத்தனை ஊசிக்கு என் தொப்புல் ஒர்த் இல்லைன்னு சொன்னா கூட யாரும் கேட்கலை. என் பாட்டி நம்புத்தாய் அம்மாள் தான் டாக்டர் ஏஜண்ட் எங்க எல்லார் குடும்பத்துக்கும்.

என்னை தூக்கிகிட்டு ராமூர்த்தி டாக்டர் கிட்ட போய் "டாக்டர் ஒரு 32 ஊசி போடுங்க"ன்னு சொன்னாங்க. அப்ப டாக்டர் கௌரவ டாக்டரா மயிலாடுதுறை பெரிய ஆஸ்பத்திரியிலே வாரம் இரு முறை வருவார். அதுக்கு டாக்டர் "இவனுக்கு வயிறே தொப்புல் சைஸ் தான் இருக்கு 32 எல்லாம் அதிகம். தவிர இப்ப எல்லாம் 32 ஊசி கிடையாது 16 தான். இவனுக்கு 15 வயசுல நாய் கடிக்கும் போது அனேகமா 1 ஊசி தான் போட வேண்டி இருக்கும்"ன்னு சொன்னார். என்னா ஒரு தீர்க்க தரிசனம்.



ஆனா 6 மாசத்துக்கு கோழிகறி , முட்டை எதுவும் கொடுக்க கூடாதுன்னு சொல்லிட்டார். அதிலிருந்து எவ்வரி 6 மாதம் முடியும் போதும் எதுனா ஒரு நாய் என்னை கவ்வி கொண்டு ராமூர்த்தி டாக்டர் கூட மருத்துவ வளர்சி காரணமாய் தொப்பிள் விளையாட்டு எல்லாம் நிப்பாட்டி இடுப்பு ஊசிக்கு வந்துட்டார். ஆனாலும் இந்த நாய்கள் என்னை விடுவதா இல்லை. "கொஞ்சமாவது சதை இருந்தாதானே மனிதன் என நினைக்கும். ஒரு எலும்புகூடு கண்டா நாய் கடிக்க தான் செய்யும் என கந்தசாமியால் கிண்டலடிக்கப்பட்டேன்.



ஆச்சு எல்லா ஆறு மாதத்துக்கும் தவறாம ஏதோ ஒரு டைகரோ, பிங்குவோ கடித்து வைத்தது. கோழி கறியும் முட்டையும் நான் மறந்தே போனேன். ராதா ஒரு ஐடியா சொன்னான். "டேய் நீ நாய் வெறுப்பவன் என நாய் சங்கத்திலே முடிவு செஞ்சுடுச்சு. அதனால நீயே ஒரு நாய் வளர்த்து பார்க்கலாமே". நான் உடனே "ராதா சரிடா அதுக்கு ஒரு சடை நாய் வளர்த்தா தாண்டா நல்லா இருக்கும்"ன்னு சொன்னதுக்கு "டேய் ஒரு 75 ரூவா கொடுத்தா கைப்புள்ள கிட்ட நான் சடை நாய் வாங்கி தரேன்"ன்னு சொன்னான்.


நான் 10 வது படிக்கும் போது இது நடந்தது. என் பாட்டி என்னை கூப்பிட்டு "எலேய் தம்பி நானோ படுத்த படுக்கையா ஆகிட்டேன். இனி உன்னை ராமூர்த்தி டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போக தெம்பில்லை. நாயெல்லாம் நமக்கு வேண்டாம்" என சொல்லியும் கேட்காமல் அதை வளர்த்தேன். ஆனா அதுக்கு தான் முடி வளரவே இல்லை. அப்போ என்ன என்னவோ போட்டு குளிப்பாட்டினேன். எனக்கு தான் மீசை வளர்ந்ததே தவிர நாட்டு நாய்க்கு எப்படி வளரும்.


ஒரு சுபயோக சுபதினத்தில் மே 1 - 1980 என் பாட்டி காலை என்னை கூப்பிட்டு "இன்னிக்கு எங்கயும் போகாதே, நாயை கொல்லைல கட்டி போடு"ன்னு சொல்ல "ஆத்தா இன்னிக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு ஜெயிச்ச டீமை தோத்த டீம் சகலகலாவல்லவன் கமல் படம் அழைத்து போகனும் ஆமா இதுக்கும் டைகரை ஏன் கட்டி போடனும்" அதுக்கு பாட்டி ஆளுங்க அதிகமா வருவாங்கய்யா அதனால குழந்தையம்மா வீட்டிலே (டி. ராஜேந்தர் வீடு)கட்டி போடு"

சரின்னு கட்டி போட்டேன். அந்த கொல்லையும் எங்க வீட்டு கொல்லையும் சின்ன மதில் தான். கட்டி போட்டு விட்டு வந்தா ஆத்தா செத்து போச்சு. அழுக முயற்சித்தும் அழுகை வரலை. வயசு அப்படி. எல்லாரும் என்னை பார்த்து தலைக்கு வைகோல் தலயனை தான் வைக்கனும் குழந்தையம்மா வீட்டிலே இருந்து எடுத்து வா என சொல்லிய போது பாய்ந்து குதித்தேன்.



குதித்தது என் நாயின் மேலே!!! தொடையை கவ்வி இழுத்தது. ஆஹா வள்ர்த்த கடா தொடைல பாஞ்சிசிடுச்சு. போச்சு ஆத்தா 40க்கு கூட கோழி திங்க முடியாது.
இன்னும் சில நாட்களில் சில நாய்கள் வீட்டு வாசல்க்கு வந்து லொல் லொல் என்று குறைக்கும் போது என் காதில் தொல்ஸ் தொல்ஸ் என விழும். ஓடிப்போய் பார்த்து கடி வாங்கிட்டு வருவேன். ங்கொய்யால டைம் பாஸ்க்காக பல்லை கூர் தீட்டிப்பதுக்காக என்னை கடிக்கிதுக்துங்க.


அபி பிறந்தவுடன் எனக்கு பயம். எங்கே நம்மள மாதிரியே அபிக்கும் நாய்கடி ராசி அமைஞ்சிட போவுதுன்னு. நல்ல வேலையா அதுக்கு நேர் எதிரே நல்ல விலங்கு ராசியா கிட்ட தட்ட தேவர் பிலிம்ஸ் தேவர் மாதிரி நாய், பூனை, மாடுன்னு எல்லாம் நல்ல ராசி அபிக்கு. யானையை தான் இன்னும் டெஸ்ட் பண்ணலை. அவ எல்.கே.ஜி படிக்கும் போது சிதம்பரம் அண்ணாமலை நகர்ல வீடு. பக்கத்து வெங்கடாசலம் என்கிற யுனிவர்சிட்டி இஞினியர் வீடு. அவர் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு வச்சிருந்தார். ஆனா கட்டி எல்லாம் போடுவதில்லை. நாட்டு நாய் மாதிரி தான் ட்ரீட்மெண்ட் அதுக்கு. இஷ்டத்துக்கு தெருவிலே சுத்தி சுத்தி கடிச்சுது. ஒரு தடவை நான் லீவ்க்கு போனப்ப என்னையும் போட்டு தாக்கிச்சு.


வெங்கசாசலம் சாருக்கு மட்டுமே பயப்படும். ஆனா அது அபி மேல என்னை விட பாசம் வச்சது தான் ஆச்சர்யம். அதன் வாயீலே எல்லாம் கைவிடுவா. ஆன்னு காட்டிகிட்டு இருக்கும். காலை அபி ஸ்கூல் ஆட்டோ வந்ததும் எங்க இருந்தாலும் வந்துடும். யுனிவர்சிட்டில இருந்து ராஜேந்திரன் சிலை வரை ஆட்டோ வேகத்துக்கு ஈடு கொடுத்து ஆட்டோவின் முன்பாக வலதும் இடதுமா ஓடும். அது போலவே மதியம் ஆட்டோ நேரத்துக்கு ராஜேந்திரன் சிலைக்கு போய்விடும். அங்க இருந்து வீடு வரை அப்படியே வரும்.
என் மனைவி கூட "அந்த நாயை பாருங்க எத்தன ஆசை வச்சிருக்கு அபி மேல, நீங்களும் தான் இருக்கீங்கலே"ன்னு சொன்னாங்க. என் பாசத்தை காட்ட நானும் ராஜேந்திரன் சிலை வரை ஆட்டோ முன்னாடி வலதும் இடதுமா ஓடியா நிரூபிக்க முடியும்?


பின்னே மாயவரம் வந்ததும் அபி தீவிரமா நாய் வளர்க்க ஆரம்பித்து என் மனைவின் அக்கா வீட்டு பமரேனியன் குட்டி போட்டதும் ஒரு குட்டி கொண்டு வந்துட்டா. நாய்ன்னா ஆய் எல்லாம் போகும் வேண்டாம்ன்னு சொல்லி பார்த்தும் அவ கேட்கலை. அதுவும் ஒரு ஒரு சுக்லபட்ச தினத்தில் என்னை கடித்தது. சந்தோஷம் மகிழ்ச்சி.

எந்த வீட்டுக்கு போனாலும் முதலில் நாய் இருக்குதான்னு கேட்டுகிட்டுதான் கேட்டையே தொடுவேன். அது போலத்தான் சுந்தரேசன் என்ற நண்பர் வீட்டுக்கு போய் வாசல்ல இருந்து "சுந்தரேசன் நாய் இருக்கா"ன்னு கத்த அவர் மனைவிக்கு கோவம் வந்துடுச்சு. சுந்தரேசனுக்கும் நாய்க்கும் இடையே ஸ்பேஸ் விடாம கத்திட்டேன் போலருக்கு. எல்லாம் விதி. இதிலே சில பேர் வீட்டிலே "சும்மா பயப்படாதீங்க சார். இது கடிக்காது. இதுவரை யாரையும்ம் கடிச்சது இல்லை. நான் கட்டி போட்டிருக்கேன் வாங்கன்னு கெஞ்சுவாங்க. சரின்னு நம்பி போனா விழுந்து புடுங்கும். நாய்க்காரர் சந்தோஷமா " நீங்க தான் பஸ்ட் சார்ன்னு பெருமை பொங்க சொல்லுவார். நானும் பதிவுல போய் மீ த பஸ்ட் போட்ட சந்தோஷத்திலே வருவேன்.

இதல்லாம் எதுக்கு சொல்றேன்னா கடந்த மார்ச் 10 அன்று சைட்ல கிடந்த ஒரு நாய் விழுந்து புடுங்குச்சு. ஆக நாளையோட ஆறு மாதம் ஆகின்றது. அதனால இன்னும் 24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போவுது அப்படின்னு தீர்மானமாக நம்பினேன். அதனால ரூமை விட்டு வெளியே போவதில்லை என முடிவெடுத்து நேற்று மாலை முதல் ரூம் உள்ளயே தான் இருந்தேன். இன்று லீவ் ஆகையால் விடிய காலை வரை கேரம் ஆடினோம். இரவு 3 மணிக்கு எல்லோருக்கும் டீ போட்டு எடுத்து வருவோமே என்று கிச்சன் போனேன். லைட்டை போட போகும் போது ஒரு பூனையை மிதித்து அது கடித்து தொலைத்துவிட்டது. விதி வலியது!!!!

September 6, 2009

சஞ்சய் மை ஸ்வீட் ராஸ்கல்!!!!!


சஞ்சய்! என் மனதுக்கு பிடித்த தம்பி! 2008ல் குசும்பன் கல்யாணத்துக்கு வரும் போது மாயவரம் ரயில்வே ஸ்டேஷனனில் அவரை நந்துவாகவே தான் நினைத்தேன். ஏனனில் இளையகவி கனேஷ் குமார், இம்சை வெங்கி எல்லாரும் அப்படித்தான் அறிமுகப்படுத்தினாங்க.
ஆனால் வீட்டுக்கு வந்த பின் ஆட்டோமேட்டிக்காக என் மனைவியிடம் தான் தான் சஞ்சய்ன்னு சொன்னார். பின்னே நட்ராஜ் அவர் கிட்ட தான். மாலை மாயவரத்தில் இருந்து கிளம்பி திருவாரூர் போனோம். குசும்பன் கல்யாணத்துக்கு.
காலைக்குள் சுரேகா, காயத்ரி, பாலைதினை காயத்ரி, நாகை சிவா, மாநக்கல் சிபி எல்லாரும் வர கல்யாணம் களை கட்டியது.
கல்யாணம் முடிந்த பின்னே எல்லோரையும் காரில் அனுப்பி விட்டு நான், சுரேகா, சஞ்சய் பஸ்ஸில் போனோம் மாயவரம். அப்போ நான் செஞ்ச அலப்பறை இங்க சொல்வதுக்கு இல்லை.
யார்கிட்டயும் ஒரு சண்டை சச்சரவு இல்லாத மனிதனாக பார்த்தேன் சஞ்சயை. இப்படி ஒரு கேரக்டர் இருக்க முடியுமா என வியந்தேன்.
தம்பிக்கு சீக்கிரம் ஒரு நல்ல பெண் கிடைத்து நல்ல படியா கல்யாணம் நடக்கனும். நாங்க எல்லாரும் போகனும் குசும்பன் கல்யாணத்துக்கு போன மாதிரியே!
தம்பிக்கு இன்று பிறந்தநாள்! இந்த நாளில் நான் அன்புடன் வாழ்த்துகிறேன்! இங்கே இரவு 10.30. ஊரில் 12 ஆச்சு! வாங்க எல்லாரும் வந்து வாழ்த்துங்க!!!!!
அன்புடன்
அபிஅப்பா

August 15, 2009

வெள்ளயனை வெளியேற்றிய அபிஅப்பா!!!! சுதந்திர தின பெசல் மீள் பதிவு!!!

எதிர்காலத்தில் ஒரு கவுன்சிலர் ஜெயிக்கனும்ன்னா கூட நம்ம வாரிசுகள் கிட்டே தான் கை கட்டி நிற்க வேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையோடு என் தாத்தாக்கள் உழைத்த காலம் அது. ஏதாவது ஒரு பாட்டியின் பிரசவம் தினந்தோறும் வீட்டில் நடந்து கொண்டிருந்த படியால் தாத்தாக்கள் அதற்காகவே ஒரு வீட்டை பிரசவ ஆஸ்பத்திரியாக்கி வைத்திருந்த போது ஏதோ ஒரு தாத்தாவுக்கு ஞானம் பிறக்க தருமை ஆதீனத்திலே கோரிக்கை வைக்கப்பட்டு ஆதீனமும் அதற்காக நகரின் மைய பகுதியான எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு இலவச பிரசவ ஆஸ்பத்திரி கட்டி கொடுத்துட்டார்.

ஆஸ்பத்திரின்னா அப்படி இப்படி இருக்காது. சும்மா பத்து கிரவுண்டு நிலத்திலே பிரம்மாண்டமாய் இருக்கும். இரண்டு மகா பெரிய நுழை வாயில். அதன் வழியா மாயூரநாதர் தேரே உள்ளே போய் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வெளியே வரலாம். அப்படி ஒரு நுழை வாயில். உள்ளே நுழைந்தவுடன் ஒரு மாந்தோப்பு. மாந்தோப்பின் நடுவே ஒரு மிகப்பெரிய தாமரை வடிவிலான பூச்செண்டு வடிவத்தில் ஒரு செயற்கை நீரூற்று. அதன் பின் 60 அடி அகலத்தில் 18 படியுடன் கூடிய அரண்மனை மாதிரியான ஆஸ்பத்திரி. அதனை சுற்றியும் மிகப்பெரிய வேப்ப மரங்கள்.படியில் ஏறி உள்ளே போனால் இடப்பக்கம் டாக்டரின் ரூம். டாக்டர் ஜன்னலை திறந்தால் வேப்பம் பூ வாசமும் வேப்பம் காற்றும் அப்படி ஒரு அருமையாக இருக்கும். உள்ளே பிரசவ அறை நடு நாயகமாக, பின்னே நல்ல காற்று வரும்படியான நல்ல படுக்கை வசதிகள்.

அப்படியாக தருமை ஆதீனம் கட்டி கொடுத்த தோடு ஒரு நல்ல ஆங்கிலோ இந்திய பெண் டாக்டரையும் வேலைக்கு அமர்த்தி அது தவிர அத்தனை மருந்து மாத்திரைகளும், பழம், பால், நல்ல ஆரோக்கியமான பிரட் மற்றய அனைத்து வசதிகளோடும் அந்த ஆஸ்பத்திரி ஒரு ஆஸ்பத்திரியின் வாசமின்றி அப்படி ஒரு ரம்மியமாக இருந்தது. எங்க ஊர் மக்கள் "வெளியே" என்று போட்டிருக்கும் வழியாக உள்ளே போய் குழந்தை பெற்று கொண்டு "உள்ளே" வாசல் வழியாக வெளியே வந்து கொண்டு சந்தோஷமாக இன விருத்தி செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த டாக்டர் மட்டும் தன் பியட் காரிலே "உள்ளே" வழியாக உள்ளே போய் "வெளியே" வழியாக வெளியே வந்து ஊழியம் செய்து கொண்டிருந்தர். இப்படி ஒரு நல்ல ஆஸ்பத்திரியை ஆதீனம் தங்கள் வீட்டுக்கு எதிரேயே கட்டி கொடுத்ததால் எங்கள் பாட்டிகள் ஆளுக்கு ஒரு பிள்ளை பெற்று கொண்டு முதல் போணி செய்து தங்கள் நன்றியை தெரிவித்தார்கள். இப்போது அந்த டாக்டரை பற்றி சொல்ல வேண்டும். பெயர் "ரோட்ரிஸ்". கவுன் போட்டு கிட்டு புது புது அர்த்தங்கள் சவுகார்ஜானகி மாதிரி டுக் டுக்ன்னு நடந்து வருவாங்க. எங்க ஊரிலே பியட் கார் வச்சிருந்த இரண்டு பேரில் அவங்க ஒருத்தவங்க. அவங்க வீட்டு காரர் பெயர் "சுருட்டு தொரை" அது தான் பெயரான்னு தெரியாது நாங்கள் அப்படித்தான் கூப்பிடுவோம். அவர் ஆங்கிலேயர் என்பதால் கோட் சூட் போட்டுகிட்டு H.வசந்தகுமார் மாதிரி இருப்பார்ன்னு நீங்க நெனச்சா அது தப்பு. ஒரு காக்கி கலர்ல தொள தொள டவுசர் போட்டுகிட்டு சிக்கன் பிராங் மாதிரியான சுருட்டை வாயிலே கவ்விகிட்டு 24 மணி நேரமும் அவர் வீட்டு தோட்டத்தில் ஏதாவது ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றி கொண்டே இருப்பார். சுருக்கமாக சொல்ல போனால் ரயில்வேயில் கரி இஞ்ஜினில் கரி அள்ளி கொட்டுபவர் போல இருப்பார். அவர் இந்திய ரயில்வேயில் இஞினியராக வேலை பார்த்து ரிட்டையர்டு ஆகிவிட்டதாக சொல்வார்கள்.

அந்த தம்பதிக்கு குழந்தைகள் உண்டா இல்லியான்னு எல்லாம் தெரியாது. லண்டனில் இருப்பதாக சொல்லுவார்கள். அவர்களுக்கு தருமை ஆதீனம் சார்பிலே டவுன்ஸ்டேஷன் (ரயில்வே ஸ்டேஷன்) எதிரே அமைதியான வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. அப்போதெல்லாம் யாரும் ஆஸ்பத்திரி போய் குழந்தை பெற்று கொள்ள பயந்த காலம். ஆனால் என் குடும்பம் மட்டும் எங்க ஊர் மக்களுக்கு ஒரு அவேர்னஸ் உண்டாக்கும் பொருட்டு அந்த ஆஸ்பத்திரியை எங்கேஜ்டாகவே வைத்திருந்தது

.சும்மா மாலை 7 மணி வரை சாதாரணமாக பேசி கொண்டு இருக்கும் ஏதாவது ஒரு பெரியம்மா " இருங்க ஒரு எட்டு எதிர்க்க ஆஸ்பத்திரி வரை போய் விட்டு வாரேன்"ன்னு போய் அடுத்த நாள் ஒரு தம்பிய கூட்டிகிட்டு வீட்டுக்கு வருவாங்க. கூட துணைக்கு போன ஏதாவது ஒரு சின்ன பாட்டியும் வரும் போது ஒரு குட்டி சித்தப்பாவை கூட்டிகிட்டு வருவாங்க. ஏதோ கடைமுழுக்கு கடைக்கு போய் காதோல கருகமணி வாங்கி வரும் மாதிரி அத்தனை ஒரு சுலபமாக இருந்தது அப்போது.

இப்படி யாராவது குழந்தை பெத்துக்க போனா நாங்களும் பட்டாளமாக போய்விடுவோம். அந்த ராஜாஜி ஹால் மாதிரியான படிகளுக்கு மேலே இருக்கும் திண்னையில் படுத்தால் அப்படி ஒரு வழுவழுப்பு, ஒரு சுகந்தமான காத்து வரும். அண்ணன் தம்பிகள் அத்தனை பேரும் அடுத்த புது வரவான குட்டி சித்தப்பாவுக்கோ, குட்டி தம்பிக்கோ ரொம்ப ஆர்வமா காத்து கிடப்பதாக மற்றவர்கள் நினைத்தாலும் உண்மை அதுவல்ல.

அங்கே கிடைக்கும் பிரட் வகையறாக்களுக்காகவே எங்கள் வம்சம் விருத்தியாக நாங்கள் ஆண்டவனை வேண்டிக்கொண்டது கொஞ்சம் அதிகப்படி. அப்படியாக ஒரு நாள் வார் வச்ச டவுசர் போட்ட நான் உக்காந்து 'பன்'னை பாலில் முக்கி முக்கி கபளீகரம் பண்ணிகிட்டு இருந்த போது நம்ம சவுகார் ஜானகி டாக்டர் ரவுண்ட்ஸ் வந்துட்டாங்க. குழந்தை பெத்த புண்ணியவதி பெரியம்மா மாத்திரம் படுத்திருக்க, சுத்தி உக்காந்து சவாலே சமாளி ஜெயலலிதா என்ன இருந்தாலும் அப்படி அடமண்டா இருக்க கூடாதுன்னு வருத்தபட்டுகிட்டு இருந்த மத்த பெரியம்மாக்களும், சித்திகளும், சில பாட்டிகளும் ( அதான் எல்லோருக்குமே வீடு எதிர் வரிசை தானே, ஆஸ்பத்திரியே கிட்ட தட்ட எங்க சொந்த ஆஸ்பத்திரி மாதிரிதானே... எல்லோருமே பொழுது போக்க வந்திருந்தாங்க) எழுந்து நிற்க ரோட்ரிஸ் டாக்டர் என்னை பார்த்து என்னவோ கேட்டாங்க ஆங்கிலத்தில்.

நானா சும்மா இருப்பேன். எழுந்து நின்னு " மை நேம் ஈஸ் தொல்காப்பியன், ஐ யம் ஸ்டடியிங் இன் நேஷனல் பிரைமரி ஸ்கூல் ஃபோர்த் ஸ்டேண்டர்டு ஏ செக்ஷன், மை சார் நேம் ஈஸ் துண்டு முறுக்கி சார்" ன்னு சொல்ல டாக்டர் முகம் கொஞ்சம் கடுகடுப்பானது. அவங்க வேற "நீ ஏண்டா நாதாறி இங்க உக்காந்து இருக்கே"ன்னு ஏதோ கேட்டிருப்பாங்க போல இருக்கு. அவங்க இந்த தடவை 37 செண்டி மீட்டருக்கு கொஞ்சம் நீட்டா ஏதோ கேட்கவே நானும் 38 செண்டிக்கு ஹம்புலி ரெக்குவஸ்ட் யூ ன்னு லீவ் வெட்டரை ஒப்பிக்க சுத்தி இருந்த தாய்குலங்கள் அத்தனையும் படக்கு படக்குன்னு தாலிய எடுத்து கண்ணுல ஒத்திகாத குறை தான். அத்தன ஒரு பெருமிதம்.

கடைசியா "காளைமாட்டு சாணி"ன்னு சந்தோஷமா சொல்லிட்டு போயிட்டாங்க. அன்றைக்கு முதலே எனக்கும் அவங்களுக்கும் ஒரு பனிப்போர் தொடங்கிடுச்சு. எப்பவும் அங்கே மாங்காய் அடிச்சுகிட்டு ஜாலியா இருக்கும் என்னை பார்த்தாலே அவங்களுக்கு கோவம் கோவமா வந்துச்சு. அவங்க டிரைவர் பேர் பாரூக்ன்னு பேர். மீசை வச்சுகிட்டு இருப்பார். அவர்கிட்டே சொல்லி என்னை இனிமே இந்த ஆஸ்பத்திரி பக்கம் பார்க்க கூடாதுன்னு சொல்லி விட்டாங்க. விடுவனா நான். ஆஸ்பத்திரி எல்லைக்கோட்டுக்கு அப்பால் நின்று மாங்காய் அடிக்க ஆரம்பித்தேன். அது தவிர அவங்க டூட்டிக்கு வரும் போதல்லாம் போய் நின்னு "குட்மார்னிங்" சொல்லி அவங்க குருதி அழுத்தத்தை அதிகரிக்க செய்தேன்.

இது போதாதுன்னு எங்க தெருவிலே வாங்கின காத்து பத்தாதுன்னு ரயில்வே ஸ்டேஷனுக்கு காத்து வாங்க போவோம். அப்ப அவங்க வீடு எதிரே தானே இருக்கு அங்கயும் போய் என் ஆங்கில புலமை எல்லாம் காட்ட ஆரம்பிச்சேன். அப்பதான் அவங்க ஒரு நாள் என்னை கூப்பிட்டு "உனக்கு என்னத்தான் பிரச்சனை"ன்னு கேக்க நான் "எனக்கு இங்கிலீஷ் சொல்லி தாங்க டாக்டர்"ன்னு கேட்டேன். சரி இவன் கிட்டே சமாதானமா போயிடலாம்ன்னு நெனச்சு ஒத்து கிட்டாங்க. கொஞ்ச நாள் போச்சு. நல்ல இம்புரூவ்மெண்ட் தெரிஞ்சுது. "போடா கம்மனாட்டி"ன்னு என்னை திட்டும் அளவு தமிழ் கத்துகிட்டங்க டாக்டர். எனக்கு ஆங்கிலம் சொல்லி கொடுக்கும் போதேல்லாம் "நான் என்ன பாவம் செஞ்சேன்" ன்னு சில சமயம் தலையிலே அடிச்சு பாங்க. சில சமயம் ஜீசஸை திட்டுவாங்க தன்னை படைத்தமைக்கு. ஒரு நாள் child க்கு பண்மை என்னன்னு கேட்டதுக்கு நான் childs ன்னு பட்டுன்னு சொன்ன போது தான் அவங்க அந்த முடிவை எடுத்தாங்க.

வடிவேலு மாதிரி "முடியல என்னால முடியல... லண்டன் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து 100 கிமீ தூரத்திலே ''நாட்ராம்பள்ளி"ன்னு எங்க சொந்த கிராமம் இருக்கு நான் அங்க போய் விறகு சுள்ளி பொறுக்கி வரட்டி தட்டி பொழச்சுக்கறேன். என் ஹஸ்பெண்ட் எதுனா கருப்பன் கோவில்ல குறி சொல்லி எனக்கு கஞ்சி ஊத்துவார்"ன்னு லண்டனுக்கே கிளம்பிட்டாங்க. காந்திஜி மாதிரி பல்லாயிரக்கணக்கான ஆங்கிலேயனை விரட்ட முடியாட்டியும் என்னால முடிஞ்ச அளவு ஒரு ஆங்கிலேய குடும்பத்தை கத்தி இன்றி ரத்தமின்றி அகிம்சா முறையிலே நாட்டை விட்டு வெளியேற்றினேன். ஏதோ என்னால முடிஞ்சது இந்த நாட்டுக்காக இவ்வளவு தான்.

குறிப்பு: இது சுதந்திர தின பெசல் மீள் பதிவுங்கோ!

August 8, 2009

உரையாடல்- சிறுகதை போட்டியின் தீர்ப்பு - ஆலோசனையும் சில தனிபட்ட கருத்துகளும்!!

இருபது நபர்களுக்கு 1500 வீதம் என இமாலய பரிசு தொகையை வலையுலகில் அறிவித்து 250 படைப்புகளை படைக்க வைத்த சூத்திரதாரிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்.

சில ஆலோசனைகள்:
1. கடைசி கட்ட தேர்வுக்கு முன்னதாக 37 கதைகள் தேர்ந்தெடுக்க பட்டதாக எழுதியிருந்தீர்கள். அந்த மீதி 17 கதைகளின் பெயரையும் அறிவீத்து விட்டால் அவர்களும் காலரை தூக்கி விட்டுக்க ஒரு நல்ல வாய்ப்பு மேலும் அவர்களுக்கு அடுத்தடுத்து தனது சின்ன சின்ன தவறை திருத்தி கொண்டு கதை எழுத ஊக்கம் கொடுத்த மாதிரியும் இருந்திருக்கும்.

2 பின்னூட்டத்ட்தில் ஒரு சகோதரி சொன்ன மாதிரி அத்தனை கதைகளையும் ஈ புத்தகமாக கொண்டு வந்தால் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் படிக்க வாய்ப்பாகவும் அமையும்.

3.கிழக்கு பத்ரி அவர்கள் மீதி இருக்கும் 230ல் சிறந்ததை எடுத்து அச்சு ஊடகத்தில் அடுத்த புத்தகமாக கொண்டு வரலாம்.

அடுத்து கோபி போட்ட பின்னூட்டத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

\\

கோபிநாத் said:
முதலில் இப்படி ஒரு போட்டியை நடத்தி பல பதிவர்களின் திறமை வெளிப்படுத்திய உங்கள் இருவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்...வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற்ற அந்த 20 நண்பர்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் போட்டியில் பங்கு கொண்ட மற்ற அனைத்து நண்பர்களும் அருமையான கதைகளை எழுதியிருந்தார்கள்...அவர்களின் மூலமாகவும் பல கதைகள் கிடைத்தது..அதனால் அவர்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்

என் மனதில் தோன்றிய ஒன்று போட்டிய நடத்திய இரண்டு தலைகளுக்கும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். போட்டியில் வெற்றி பட்டியலில் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் ஏற்கனவே பல வெற்றிகளை கண்டவர்கள் புதிய பதிவர்கள் பெரும்பாலும் இல்லை என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.\\இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியின்றி நாங்களே (பைத்தியக்காரன் - ஜ்யோவ்ராம் சுந்தர்) நடுவர்களாக இருந்துவிட்டோம்\\தொடக்கம் முதல் போன பதிவு வரை நடுவர்கள் வேறுயாரேன்னு என்று நினைக்க வைத்து இப்போது வேற வழியில்லை நாங்கள் தான் என்று சொல்லியிருப்பருப்பது பல கேள்விகளை கொண்டு வரும். ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் உங்கள் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள் & வாழ்த்துக்கள்\\

அடுத்து (இதுஎன் தனிப்பட்ட கருத்து)

நர்சிம் அவர்கள் கதையும், ரசனைக்காரி அவர்கள் கதையும், அமித் அம்மாவின் நாலனா கதையும், ராமலெஷ்மியின் பொட்டலம் கதையும் நான் மிகவும் எதிர்பார்த்தேன்.
நாலனா கதையில் ஓடி போன புருஷன், ஒரே பிள்ளை, வறுமை தாய் என இன்னனும் மனதில் ஒட்டி கொண்டிருக்கும் கதை கரு. அவங்க முடிச்ச விதமும் அருமை.

பொட்டலம் கதையில் சமூக அவலம், பையனிம் முடி டிபன் பாக்சில் இருப்பது குப்பையில் வீசிய பேப்பரிலிருக்கும் செய்தி அப்படியே ஏழ்மைக்கு நீதி இல்லை என்பதை காட்டி இருக்கும்.

இருபது வருட வாசிப்பு அனுபவன் உள்ள தங்களுக்கு நான் சொல்ல வேண்டாம். என் ஆசையை தான் சொன்னேன்.

நான் இந்த 4 கதைகளுக்கும் விமர்சனமே எழுத நினைத்தேன். அதை தான் இங்கே கொட்டி தீர்த்துகறேன் அத்தனையே.

அந்த இருபதும் முத்துக்கள். மற்றபடி வலையுலக சம்பிரதாயத்தின்படி லக்கிக்கு "ஸ்பெசல் பரிசு" "ஸ்பெசல் சாதா பரிசு" " ஆனியன் பரிசு" "ரவா பரிசு"ன்னு எதுனா கொடுத்து இருக்கலாம். அவருக்கு பரிசு கொடுத்தால் எங்கே "நண்பர்களுக்கே கொடுத்து கொண்டார்கள்" என்று உங்கள் நேர்மையை சந்தேகபடுவார்களோ என் எண்ணியே ஒதுக்கி விட்டீர்களோ என நான் நினைக்கிறேன்.

அவர் தான் 250 கதைகளில் முதல் கதை எழுதி துவக்கி வைத்தார். அருமையான கதை. அவருக்கு என் பாராட்டுகள்..

உங்களுடைய நேரம் எத்தனை செலவாகி இருகும் என நினைக்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் குருஜி சுந்தர்ஜி அவர்களுக்கும், சிவராமன் அவர்களுக்கும். உங்கள் இலக்கிய பணி தொடரட்டும்.

குறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.

அபிஅப்பா,
4 வது குறுக்கு சந்து,
விவேகானந்தர் தெரு,
(பஸ்டாண்டு அருகே)
துபாய்!