பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 12, 2010

வேர் ஈஸ் த பார்ட்டி! அட எங்கூட்டுல பார்ட்டி!!!

இது முழுக்க முழுக்க நட்ராஜ் அப்டேட்ஸ் தான்



சிம்பு பாட்டுன்னா ரொம்ப ஆசை. உடனே டான்ஸ் தான். அதிலும் வேர் ஈஸ் த பார்ட்டி, நலந்தானா எல்லாம் டி வியிலே போட்டா செம டான்ஸ் தான். அபிக்கு பத்தாம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பித்த அன்று வேர் ஈஸ் த பார்ட்டிக்கு அதே காஸ்ட்டியூம்ல கலக்கினான்.
****************


"அப்பா ஒரு கதை சொல்லு"

அவன் வழக்கம் போல என்னை கதை சொல்ல சொல்லி பின்னே அவன் சொல்லி அதிலேயே நான் தூங்கி போவதும் அவன் ஓடி போய் பாத்டப்பில் தண்ணீர் பிடித்து தொம் தொம்ன்னு விழுந்து அவன் அம்மாவிடம் தொம் தொம்ன்னு அடி வாங்கி தூங்குவதும் வழக்கம் தான்.

"அப்பா ஒரு கதை சொல்லு"

"ஒரு ஊர்ல நட்ராஜ்ன்னு ஒரு பையனாம்"

"மாயவரமா?"

"ஆமாம். அவன் யூனிபாஃர்ம் எல்லாம் போட்டு கிட்டு ஸ்கூல் போனானாம்"

"அய்யே ஆய் கதை. அது வேனாம்.நல்ல கதை சொல்லு"

"சரி ஒரு ஊர்ல ஒரு ஸ்கூலாம்"

"அப்பா அசிங்க அசிங்கமா பேசாதே. உனக்கு கதையே தெரியலை. நான் சொல்லட்டுமா?"

"சொல்லு"

"ஒரு ஊர்ல அவயாம்பான்னு ஒரு யானையாம்"

"மாயவரமா?"

"ஆமா. நம்ம அவயாம்பா யானை தான். அது நேத்து வீட்டுக்கு வந்துச்சுப்பா. நம்ம அப்பா எங்கன்னு கேட்டுச்சு"

அதுக்கும் நான் தான் அப்பாவா? அடராமா!

"நீ என்ன சொன்ன?"

"அப்பா தூங்குறாங்க அப்புறமா வான்னு சொன்னேன். அது கேக்கலை. கேட்டை திறந்து கிட்டு வந்துச்சு. நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி மாடிக்கு தூக்கிகிட்டு வந்து மாடில இருந்து கிரவுண்டுல தூக்கி போட்டேன். அது தொபக்கடீன்னு விழுந்துச்சு. அப்புறமா நின்னு அழுதுகிட்டே இருந்துச்சு. நான் போய் ஒரு உதை டமால்ன்னு. அது குடுத்தேன். அது அழுதுகிட்டே ஓடிடுச்சு"

அபிஅம்மாவுக்கு சரியான கோவம். "என்ன ஒரு கற்பனை. பிளாக் ஆரம்பிச்சு குடுங்க. அபிதம்பின்னு பேர்ல எழுதட்டும். தமிழ்மணம் தழைச்சு வளரும்"ன்னு கடுப்படிச்சுட்டு தூங்கினாங்க. பொறாமை!

*************

எல்லா அப்பா அம்மாவும் எல்லா பிள்ளைகளிடமும் கேட்கும் அந்த கேள்வியை நான் ஏண்டா நட்ராஜிடம் கேட்டோம் என ஆகிவிட்டது.

"தம்பி பின்னால எனக்கு சோறு போடுவியா?"

"மாட்டேன்"

"ஏண்டா?"

"வாயில தான் போடுவேன்"

எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

****************



என் வீட்டுக்கு எதிரே கிரவுண்ட். எல்லா பள்ளியும் கோடை விடுமுறை விட்டாச்சு. கிரவுண்டு முழுக்க வானரம் ஆயிரம். அதிலே நட்ராஜ் ஆயிரத்தில் ஒருவன். ஐந்து நிமிடம் கூட வெய்யிலை வேஸ்ட் பண்ணுவதில்லை. கிரிக்கெட் பிட்ச் மூணு போட்டுட்டானுங்க. காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் விளையாட்டு இரவு ஏழு வரை தொடர்ந்து ஆட்டம் தான்.

நேற்று மாலை 5 மணிக்கு ஒரே சத்தம். பசங்க அடிச்சிகிறாங்க போலருக்குன்னு ஓடி பார்த்தேன். திக்குன்னு ஆச்சு. ஒரு 5 அடி நீள பாம்பு. நல்ல பாம்பு. அதல்லாம் எப்போதும் அந்த கிரவுண்டுக்கு பின்புறம் உள்ள வயலிலிருந்து கிரவுண்டு வழியா வந்து என் வீட்டுக்கு பின் பக்கம் உள்ள அதன் அத்தை மாமா வீட்டுக்கு வந்து குசலம் விசாரிப்பதும், நம்ம பக்கம் உள்ள பாம்புகள் "பையா" படம் பார்த்தியா? தமண்ணா எப்படின்னு கேட்க அந்த பக்கம் போய் வருவதும் சகஜம் தான். ஆனா பசங்க விளையாடும் போதெல்லாம் வரமாட்டாங்க. இது ஏதோ விருந்தாளி பாம்பு போல இருக்கு. பழக்க வழக்கம் பத்தலை. பசங்க விளையாடும் போது தைரியமா பிட்ச் வழியா வர இந்த பசங்க அதை அடித்தும் கொல்லாமல் விரட்டியும் விடாம அதை பப்பூன் ரேஞ்சுக்கு வாலை பிடித்து சுழட்ட அது குவாட்டர் அடிச்ச கோயிந்தன் மாதிரி ஆகிடுச்சு.


அதல்லாம் எனக்கு பிரச்சனையே இல்லை. அந்த வானர கூட்டத்தில் நட்டு பண்ணின அடம் தான் எனக்கு வயித்தில் புளி கரைத்தது. அவனும் தூக்கி தட்டாமாலை சுத்தனும்ன்னு அடம். பாம்பு போடும் முன்னே அபிஅம்மா அவனை முதுகில் ரெண்டு போட்டு தூக்கி வந்தாங்க. எனக்கு தான் கால் நடுக்கம் நிற்க அரை மணி ஆகியது.


********************

வீட்டில் மர வேலை செய்யும் போது தம்பியை மிரட்ட ஒரு அழகான தேக்கு மர குச்சி நல்ல இழைத்து வாங்கி வைத்து கொண்டேன். அதை காட்டி மிரட்டலாமென நினைத்து. ஏண்டா அப்படி ஒரு குச்சி செய்தோம் என ஆகிவிட்டது எனக்கு.


அவன் எதுக்காவது அழுது அடம்பிடித்தால் "என்னங்க அந்த குச்சியை எடுத்து மிரட்டுங்க அப்ப தான் சிரிப்பான்" என அபிஅம்மா சொல்லும்போது எனக்கு தான் அழுகை வருகின்றது. "நீங்க அதை எடுத்து மிரட்டும் போது எனக்கே சிரிப்பு சிரிப்பா வருது"ன்னு அவங்க சொல்லும் போது எனக்கு பத்திகிட்டு வருது. நான் அந்த குச்சியை எடுத்தாலே ஒட்டுமொத்த குடும்பமும் கெக்கெபிக்கேங்குது. என்னை பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்குதாம். அடுத்த ஜென்மத்திலாவது விருமாண்டி மீசையோட பிறக்கனும்.

*********************

இப்போதெல்லாம் தமிழ் வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் தனி தனியாக ஸ்பெல்லிங் (தப்பாகத்தான்) சொல்லி தானே பழக்குகிறான். அம்மா என்றால் அ, மா அம்மா, அப்பா என்றால் அ, பா அப்பா, சாப்பாடு என்றால் சா, பா, டு என்று தானே சொல்லி பார்த்துப்பான். அதிலும் லேட்டஸ்ட் ட்ரண்ட் word jumping தான்.

உண்மை தமிழன்ன்னு சொல்லுன்னு சொன்னா தன்மை உமிழன்னு சொல்றான். குசும்பன் சரவணன்ன்னு சொல்ல சொன்னா சசும்பன் குரவணன் என்கிறான். தொல்காப்பியன் என சொல்ல சொன்னால் கால் தொப்பியன் என்கிறான். நல்ல வேளை இன்னும் ஆத்தி சூடி சொல்லி கொடுக்கவில்லை.
****************

April 6, 2010

என் உச்சி மண்டையிலே சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்குது!!!!

இன்று மதியம் எதேற்சையாக ரிமோட் மேலே உட்காந்து விடவே நடிகை லட்சுமியின் கதை அல்ல நிஜம் பார்த்து தொலைய நேரிட்டது. வழக்கம் போல அந்த அம்மா ஒரு பெரிய சோபாவில் உட்காந்து கட்ட பஞ்சாயத்து பண்ணிகிட்டு இருந்துச்சு. எதிரே ஒரு புருஷன் பொண்டாட்டி உட்காந்து இருந்தாங்க. அந்த பொண்டாட்டி சொல்லுச்சு. " மூணாவதா என்னை முருகன் கல்யாணம் பண்ணிகிட்டாருங்க" எனக்கு பக்குன்னு ஆச்சு. என்னடா இது இந்த லட்சுமிக்கு வந்த சோதனை. இந்தம்மா என்ன தீர்ப்பு சொல்ல போவுதுன்னு ஆர்வமா பார்த்தேன்.

லட்சுமி: முதல் இரண்டு மனவி யாரும்ம்மா?

பெண்மணி: முதல் மனைவி தெய்வானை, இரண்டாவது மனைவி வள்ளிங்க!

கேட்டுகிட்டு இருந்த என் உச்சி மண்டையிலே சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்குது.

லட்சுமி: என்னம்மா நீங்க சொல்றது எந்த முருகன்மா?

பெண்மணி: அதாங்க தமிழ் கடவுள் முருகன். நான் கோவையை சேர்ந்தவள். பக்கத்துல ஒரு மலை மேலத்தான் எங்க கல்யாணம் நடந்துச்சுங்க. கல்யாணத்துக்கு எங்க மானனார் மாமியார் எல்லாம் கூட வந்திருந்தாங்க.

லட்சுமி: யூ மீன்????

பெண்மணி: ஆமாங்க சிவனும், பார்வதியும் தான்.

லட்சுமி: உங்க பக்கத்துல இருப்பது யாருங்க?

பெண்மணி: என் முதல் புருஷன்ங்க. எங்களுக்கு இரண்டு பையன் கூட இருக்காங்க.

அந்த கணவனும் ஆமாம்ன்னு ஒத்துகறார். அவர் இரண்டாவது புருஷனாம்.

லட்சுமி: சரி முருகனே உங்களை வச்சிருக்காரு. அப்படின்னா வர்ர தேர்தல்ல மாநிலத்தில், மத்தியில் யார் ஜெயிப்பாங்க சொல்லுங்க.

பெண்மணி: இப்ப இருக்குற ஆட்சி நல்லா இருக்கு. அதனால கீழ இவங்க தான். மேல சோனியா தான்.

என்னால முடியலை. அதுக்குள்ள இரண்டு மூன்று போன் கால். உடனே "விஜய் டிவி பாருங்க சித்தப்பான்னு கிருஷ்ணாவின் அக்கா பொண்ணு, என் அக்கா எல்லாரும்."செம காமடியா இருக்கு பாருங்கன்னு கமெண்ட் வேற. என்ன கொடுமைடா. அந்த பெண்மணி என்ன அழகா அழுத்தம் திருத்தமா பேசிகிட்டு இருக்காங்க. பாவம் நடிகை தான் முகம் பேஸ்த் அடிச்ச மாதிரி ஆகிட்டாங்க. இது நடுவே தம்பிக்கு மதியம் சாதம் ஊட்டுவதற்காக அபிஅம்மா சுட்டி டிவி மாத்தி பூம்பா பார்க்க நான் ஓடி போய் மாடியில் விஜய் டிவியில் ஐக்கியமானேன். அதுக்குள்ள வேற ஒரு அம்மணி நல்ல கைரேகை பார்க்கும் அம்மணி மாதிரி பெரிய பொட்டு, பட்டு புடவைன்னு ஜகஜோதியா இருந்தாங்க.அவங்க ஊர் கரூர்ன்னு சொன்னாங்க.

லட்சுமி: உங்க பேர் என்னம்மா?

பெண்மணி: என் பேரும் லட்சுமி தான். நான் போகர்ன்னு ஒரு சித்தரோட வாரிசு.

லட்சுமி: அப்படியா? போகர்ன்னா அந்த பழனி கோவில் போகரா?

பெண்மணி: ஆமாம். நான் இப்போ போகர் தான் பேசுறேன். ஒன்பது நவபாஷானத்தால அந்த சிலை செஞ்சேன்.

லட்சுமி: நவ பாஷானம்ன்னாவே ஒன்பது பாஷானம் தான். அது என்ன ஒன்பது நவபாஷானம்?

பெண்மணி: நான் சீனாவெல்லாம் போயிருக்கேன்.

லட்சுமி: அப்படியா? அங்க உங்க பேர் என்ன?

பெண்மணி: அங்க என்னை போப் ஆண்டவர்ன்னு சொல்லுவாங்க. அங்க தான் நான் அக்குபஞ்சர் கண்டுபிடிச்சேன்.

கேட்டுகிட்டு இருந்த எனக்கு பஞ்சர் ஆகிடுச்சு.

தொடர்ந்து லட்சுமி நவபாஷானம் பெயர் எல்லாம் கேட்டு பரிட்சை வைக்க அந்த அம்மா(அதான் போகர்) செம கடுப்பாகி ஜாக்கெட் உள்ளே இருந்த மைக்கை கழட்டி வீசிட்டு செட்டை விட்டு வெளியே போய் லெட்சுமியை வண்டை வண்டையா திட்டிகிட்டு போய் காரில் ஏறி உட்காந்துகிட்டுச்சு. பின்னாலயே அந்த அம்மாவின் பக்த கம்மனாட்டிகள் ஸாரி பக்தகோடிகள். பாவம் சிவசந்திரன் கூட இப்படியெல்லாம் திட்டியிருக்க மாட்டாங்க லட்சுமியை. அத்தனை திட்டு.

ஹாட்ஸ் ஆஃப் டி விஜய் டிவி! அடிக்கடி இந்த மாதிரி ஒரு காமடி நிகழ்ச்சி காட்டியமைக்காக!

அதல்லாம் விடுங்க. இனி நம்ம விஷயத்துக்கு வாங்க. இன்னிக்கு டாக் ஆஃப் தமிழ்நாடு இந்த செய்தி தான்.அரசியல் வாதிங்க சும்மா இருப்பாங்களா? அறிக்கை இல்லாத அரசியல் ஒரு அரசியலா?

*********************

கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை:

நிருபர்: கோவையை சேர்ந்த ஒரு அம்மா முருகன் மூணாம் தாரமா ஒரு பெண்னை கல்யாணம் பண்ணிகிட்டதா சொல்றாங்களே?

கலைஞர்: முருகன் தமிழ்கடவுள் என்பதால் இப்படி எல்லாம் அவப்பெயர் உண்டாக்குகின்றனர். இதே சிவ பெருமான் இரண்டு கல்யாணம் செய்து கொண்ட போது இராமகோபாலன்கள் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டு முருகன் தமிழன் என்பதால் விஷயத்தை ஊதி பெரிதாக்குகின்றனர்.

நிருபர்: ஜெயலலிதா கூட இது பற்றி கண்டனம் தெரிவித்து இருக்கின்றாரே?

கலைஞர்: இதோ கோவையில் உலக செம்மொழி மாநாடு நடக்க இருக்கின்றது. தம்பி வைரமுத்து போன்ற உலக தமிழரிஞர் எல்லாம் கூட இருக்கின்றனர். அதை பொறுத்து கொள்ள முடியாத அந்த அம்மையார் இந்த கோவை பெண்மனியின் விஷயத்தை பெரிதாக்கி மாநாட்டுக்கு வரும் கூட்டத்தை தடுக்க செய்யும் சதியோ என நினைக்க தோன்றுகிறது.

நிருபர்: முடிவாக என்ன சொல்ல வருகின்றீர்கள்?

கலைஞர்: முடி இருக்கும் மகராசன் முருகன் வாரி முடிக்கின்றான். இவர்களுக்கு என்ன இது பற்றி!

**************************

ஜெயா டிவி மாலை செய்தி:

கோவையை சேர்ந்த ஒரு அபலை பெண்ணை மூண்றாம் முறையாக முருகன் திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும், அதற்கு மைனாரிட்டி திமுக அரசு பக்க பலமாக இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் கலாச்சாரம் இந்த மைனாரிட்டி திமுக அரசில் இப்படி காற்றில் பறந்து கொண்டிருக்கின்றது. கூறை ஏறி கோழி பிடிக்க முடியாத மைனாரிட்டி மைனர் கருனாநிதி வானம் ஏறி வைகுண்டம் போக போகிறாரா? (ஏதாவது ஒரு பழமொழி சொல்லியே ஆக வேண்டும்) இதே தானை தலைவி என்னுடைய ஆட்சியில் எந்த ஒரு பெண்ணுக்காவது திருமணம் ஆனதுண்டா? அந்த அளவு கட்டு பாட்டுடன் நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். இன்னும் சொல்ல போனால் கல்யாணம் ஆன பெண்களை கூட புருஷனிடம் அனுப்பாமல் தோழி போல் காப்பாற்றும் பொற்கால ஆட்சியல்லவா நடத்தினோம்.


*****************

சிவசங்கர் மேனன் அறிக்கை:

எண்டே குருவாயூரப்பா! இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு எந்த வித அச்சுருத்தலும் இல்லை. முருகனின் ஹெல்த் பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சகமே பொறுப்பு.

*************

மத்திய அரசின் நிருபமா ராவ்:

நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

*****************

மதிமுக வைக்கோ:

தேம்ஸ் நதிக்கரையில் டும்பாக்கோ டுபாக்கோ என்னும் கிரெக்க கடவுள் 36000 திருமணம் செய்து கொண்டதாக சிந்து சமவெளி நாகரீக வரலாற்று பதிவே மெஸபடோமியா கல்வெட்டில் இருக்கின்றது . இனி ஒரு மலையாளியும் பழனிக்கு வரக்கூடாது. வந்தால் பழனி எல்லையில் தடுப்போம். கொக்கரகோ கும்மாங்கோ.

***************

டாக்டர் அன்புமணி:

அவர் எத்தனை திருமணம் செய்து கிட்டாலும் கவலை இல்லை. ஆனால் அவர் கோவில்களில் அவர் மது அருந்துவதோ அல்லது தம் அடிப்பது போல சிலை வைத்தால் நாங்க கடுமையா எதிர்ப்போம். ஏன்னா அது உடல் நலத்துக்கு தீங்கு. தவிர முருகன் பிரபலமானவர். அவரை பார்த்து அவர் பக்தர்களும் தம் அடிப்பாங்க. அதுக்கு பதிலா அபினோ, கொக்கய்னோ வாயிலே சிக்லெட் மாதிரி போட்டு அடக்கி கிட்டா ஒன்னும் சொல்ல மாட்டோம். அதை மீறி நடந்தா நான் ஒன்னும் செய்ய மாட்டேன். எங்க தொண்டர்கள் முருகன் கோவில்ல நுழைந்து உண்டியல் பெட்டிய தூக்கிகிட்டு ஓடும் போராட்டம் நடத்துவாங்க!

பொதுமக்கள்:

நல்லவேளை அந்த பெண்மனி இப்படி சொன்னது முருகனுக்கு தெரியாது. அடுத்து கலைஞருக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துச்சுன்னு சொல்லாம இருந்துச்சே. சொல்லியிருந்தா என்ன ஆயிருக்கும். அந்த பெண்மனிக்கு வேற இரண்டு பையன் இருக்காங்கலாம்! தமிழகத்தை கடவுள் தான் காப்பாத்தினாரு!

குறிப்பு: மக்கா! இன்னும் கனிமொழி, திருமா, ராம் சேனா தலைவர், வீரமணி கருத்துகள் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் நீங்க பின்னூட்டத்திலே சொல்லிடுங்க எனக்கு நேரமில்லை!

March 23, 2010

விபரீத ராஜயோகம்!!!

போன மாசம் கீதாம்மா,சாம்பு சார் தம்பதி சமேதரமா வீட்டுக்கு வந்தாங்க. அது பத்தி கீதாம்மா பதிவே போட்டாச்சு.விஷயத்துக்கு வரேன். வந்தவங்க அபிஅம்மாவை பார்த்து "நீ பாடுவியாம்மா"ன்னு ஒரு கேள்வி கேட்டு வச்சாங்க. எனக்கு பக்குன்னு ஆகிபோச்சு.நல்லவேளை அபி சமாளிச்சு "அம்மாவுக்கு பாட்டுவுடத்தான் தெரியும் பாட்டு பாட வராது"ன்னு அவங்களை காப்பாத்திட்டா. உடனே எனக்கு நியாபகம் வந்தது என் கல்யாணத்தின் போது நடந்த பெண்பார்க்கும் கலாட்டா தான்.

அப்போ அவங்க எல்லாம் சிதம்பரத்தில் இருந்தாலும் அவங்க பூர்வீக வீடு என் வீட்டில் இருந்து பத்து வீடு தள்ளி பக்கத்து தெரு தான். அங்க வச்சு தான் பெண்பார்க்கும் படலம் என்பதால் போக்கு வரத்து செலவும் இல்லாமல் நடந்தே போய் விடலாம் என்பதாலும் என் வீட்டில் இருந்து பாட்டி முதல் செல்ல பிராணிகள் வரை எல்லாரும் ஒரு நாள் மாலை பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட கிளம்பியாச்சு. பாட்டி தான் முதலில் பேச்சை ஆரம்பிச்சாங்க. "பொண்ணுக்கு பாட தெரியுமா? ஏன்னா நாங்க பெரிய சங்கீத குடும்பமாக்கும். என் கல்யாணத்துக்கு செம்பை வைத்தியநாத பாகவதர் கச்சேரி, என் புள்ள கல்யாணத்துக்கு கே.பி.சுந்தராம்பா கச்சேரி தெருவ அடச்சி பந்தல் போட்டு..."ன்னு இழுத்து கிட்டே போனாங்க. பாட்டி இந்த விஷயங்களை நாலு பேர் கூடி இருக்கும் எல்லா இடத்திலும் சொல்லி விடுவது வழக்கம். அது கணபதி ஸ்லோகம் மாதிரி அவங்களுக்கு. அதுகுள்ள சுதாரகுநாதன் மாதிரி அமர்க்களமா அபிஅம்மா ஆரம்பிச்சாச்சு. அன்னிகுன்னு பார்த்து அவங்களுக்கு ஜலதோஷமாம். ஏற்கனவே குரல் அபியும் நானும் படத்தில் அபிஅம்மாவா நடிக்கும் ஐஸ்வர்யா குரல் மாதிரி இருக்கும். இதிலே ஜலதோஷம் வேற. அதல்லாம் பிரச்சனை இல்லை. பாட்டிக்கு எதுவுமே பத்து பர்செண்ட் தான் காதில் நுழையும். என்ன நடக்க போவுதோ!

அழகான ராஜாஜியின் கீர்த்தனை "குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா" பாடி சுரம் பாடி முடிச்சப்ப எனக்கு ஜுரம் அடிச்சுது லைட்டா. உடனே பாட்டி பக்கத்தில் இருந்த என் பெரிய அக்காவிடம் "யாரது மூர்த்தி அவனுக்கு என்ன குறையாம்? பொண்ணு என்னவோ பேசி கிட்டு இருந்தாளே"ன்னு கேட்க அக்காவுக்கு வேர்த்து விட்டது. உயிரை விட்டு சுரம் பாடி முடிச்ச பெண்ணை பார்த்து ஏதோ பேசினாளாமேன்னு பாட்டி கேட்டது மட்டும் தெரிஞ்சா இந்த கல்யாணம் பணால் ஆகிடுமேன்னு கவலை. போதா குறைக்கு இன்னும் ஒரு விஷயம் என்னன்னா என் மச்சினன் பேர் மூர்த்தி. உடனே சின்ன அக்கா பாட்டியிடம் "மூர்த்திக்கு என்ன குறை! கிளியை வளர்த்து ஓணான் கையிலே குடுக்கிறோம்ன்னு தான் குறைன்னு முனு முனுக்க எனக்கு செம கோவம் வந்துடுச்சு. ஒல்லியா இருந்தா ஓணானா? இரு வீட்டிலே வந்து உனக்கு கச்சேரி வச்சுக்கறேன்னு நினச்சுகிட்டேன். பாட்டி அப்பவும் "சரி சரி பேசினது போதும் குரல் நல்லா இருக்கு. இந்த காலத்து பிள்ளைகளுக்கு எங்கே கர்நாடக சங்கீதம் தெரிய போகுது. ஒரு சினிமா பாட்டு பாடும்மா"ன்னு சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் அதிர்ச்சியில் அப்படியே வாயடைச்சு போச்சு.

உடனே அபிஅம்மா அப்போ ரொம்ப பிரபலமா இருந்த கார்த்திக் ரேவதி நடிச்ச படத்துல இருந்து என்னவோ ஒரு பாட்டு ஆடியிலே சேதி சொல்லி ஆவணியிலே தேதி வச்ச மன்னவரு மன்னவரு தான்"ன்னு ஏதோ ஒரு பாட்டு. அவங்க இருந்த கோவத்திலே என்னை பார்த்து "மண்ணு அவரு மண்ணு அவரு" தான்னு பாட ஒரு வழியா பெண்பார்க்கும் படலம் முடிந்து கல்யாணம் முடிந்து எல்லாம் நல்லா தான் போய் கிட்டு இருந்துச்சு.

பாட்டி அடிக்கடி சொல்லிக்கும் வாசகம் 'நான் ஒரு ராஜயோக்காரி தெரியுமா"ன்னு தான். அதுக்காகவே நாங்கள் பாட்டியை ராஜயோகம் ராஜயோகம்ன்னு பேர் வச்சு கிண்டலடிப்போம். அப்படிப்பட்ட பாட்டி போய் சேர வேண்டிய காலமும் வந்தது. பாட்டிக்கு எல்லோரும் துளசி தண்ணி ஊத்தியும் இழுத்து கிட்டே இருந்தது. வேற ஒரு பாட்டி "என்னவோ அடி மனசுல ஆசை கிடந்து அடிச்சுகுது அதான் போக மாட்டங்குது"ன்னு அப்போ வந்த ஏதோ கரிசல் காட்டு பட டயலாக் விட எல்லாரும் ஆளுக்கு ஆள் ஒரு யோசனை சொல்ல கடைசியாக ராஜயோக பாட்டிக்கு சங்கீத ஆசை தான் காரணம்னு முடிவுக்கு வந்தாங்க. பாட்டி பரலோகம் அனுப்பனும் செத்த வந்து பாடிட்டு போங்கன்னா ஜேசுதாசை கூப்பிட முடியும். யார் வருவாங்க. சரி எதுனா தேங்கா மூடி பாடகரை கூப்பிட்டு பாடவைத்து சந்தோஷமா அனுப்பி வைக்கலாம் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க அடுப்படியில் சமைத்து கொண்டிருந்த என் ஆத்துக்காரி "குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா"ன்னு அபஸ்வரமாக பாடிகிட்டு இருக்க கூடத்தில் "நி நி நி"ன்னு பாட்டி ஈனஸ்வரத்தில் முனகி கொண்டே போய் சேர்ந்தாங்க்க.ராஜயோக பாட்டிக்கு வந்த விபரீதத்தை பார்த்தீங்களா? இது தான் விபரீத ராஜயோகமா? அதுவரை அமாவாசைக்கு மட்டுமே காக்கா பாட்டு பாடி காக்கை வரவழைத்து விரதம் இருந்த என் அப்பா அதன் பின் பவுர்ணமிகும் காக்கா பாட்டு பாடி விரதம் இருப்பது போல் ஆகிவிட்டது.

நான் மெதுவாக அபிஅம்மாவிடம் வந்து "பாட்டி உன் பாட்டை நிப்பாட்டு நிப்பாட்டுன்னு சொல்ல தான் "நி நி நி"ன்னு சொல்லிட்டு செத்து போனாங்க"ன்னு சொல்ல அதுக்கு அவங்க "இல்ல இல்ல நான்பாட்டுக்கு பாடிகிட்டு இருந்தேன். அவங்க அதுக்கு "நீ தானா அந்த குயில்"ன்னு எச பாட்டு பாட நினைச்சு அதுவே அவங்களுக்கு எம பாட்டாயிடுச்சு"ன்னு கூலா சொன்னாங்க.

அதிலே இருந்து அபிஅம்மா பாட்டு பாடுவதில்லை. ஆனா ஸ்வாமி கும்பிடும் போது மட்டும் பாடுவாங்க. அப்படித்தான் ஒரு நாள் வேப்ப மரத்திலே பால் வடியுதுன்னு ஒரு கூட்டம் தெருவிலே ஓடி கொண்டிருந்தது. அதை கேட்ட அபி "அட ராமா எங்க அம்மா ஸ்வாமி கும்பிட்டு பாடும் போது எல்லா ஸ்வாமி படத்தின் கண்ணிலும் ரத்தமே வருமேடா. டிக்கெட் போட்டா ஒன்பது தலைமுறைக்கு உட்காந்தே சாப்பிடலாமேடா"ன்னு சொல்ல அன்றிலிருந்து அபிஅம்மா மனசுக்குள்ளேயே பாட ஆரம்பிச்சிட்டாங்க.

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா? தம்பி பிறந்த பின் ஒரு தடவை நான் ஊருக்கு வந்தப்ப தம்பி வித்யாசமா தூங்கினான். அபியாவது விரலை வாயில் வைத்து சூப்புவாள். இவனோ வித்யாசமா இரண்டு கட்டை விரலையும் காதில் வைத்து கொண்டு தூங்கினான். ஏன் இப்படின்னு கேட்டதுகு அபி "அப்பா அவன் விரல் சூப்புறான்ப்பா"ன்னு சொன்னா. வாயில் தானே வச்சு சூப்புவாங்கன்னு கேட்டதுக்கு "அம்மா தாலாட்டு பாடுதுன்னு அவன் இப்படி செய்ய ஆரம்பிச்சுட்டான்ன்னு சொன்னா.

இப்படியாக செல்வராகவன் சோழனை ஏழு கண்டம் தாண்டி அடைச்சு வச்ச மாதிரி அபிஅம்மாவின் பாட்டு ஆசையை ஒட்டு மொத்த குடும்பமே அடைச்சு வச்சுட்டோம். இந்த நேரத்தில் தான் கீதாம்மா அந்த பாடகி ஆசையை அபிஅம்மாவிடம் இருந்து "நீ பாட்டு பாடுவியா"ன்னு கேட்டு கிளறி விட்டுட்டாங்க. அவங்க வந்துட்டு போனதில் இருந்து அபிஅம்மா வரும் டிசம்பரில் நான் எதுனா சபாவில் அட்லீஸ்ட் கடவுள் வாழ்த்தாவது பாடியே தீருவேன் என சபதம் எடுத்துட்டாங்க. மங்கம்மா சபதம்???

"கீதாம்மாவை பார்த்தீங்களா? ஷாட்சாத் பார்வதி தேவி மாதிரி என்ன ஒரு தேஜஸ் முகத்திலே. என்னை பார்த்ததும் நான் பாடுவேன்னு டக்குன்னு கண்டு பிடிச்சுட்டாங்க" ன்னு ஒரே கீதாம்மா பேச்சு தான் வீட்டிலே. நான் அதுக்கு "கீதாம்மாவுக்கு இப்படி ஒரு ரசிகை இருப்பது மட்டும் பெங்களூரு அம்பிக்கு தெரிஞ்சா ரொம்ப ரென்சன் ஆகிடுவாருன்னு சொன்னேன். அதுக்கு அபிஅம்மா "அம்பின்னு சொன்ன உடனே தான் நியாபகம் வருது. நீங்க அன்னியன் படத்துல சதா சபாவிலே பாட அம்பி என்னமா ட்ரை பண்ணினார். அது சரியா வரலைன்னு அன்னியனா மாறி எப்படி சான்ஸ் வாங்கினார். அந்த அன்னியன் மாதிரி எனக்கு சபாவிலே நீங்க சான்ஸ் வாங்கி தந்தா என்னவாம்?"ன்னு கேட்க எனக்கு சிரிப்பு தான் வந்தது. அன்னியன் மாதிரி முடி வளர்கலாம். ஆனா நான் சிக்ஸ் பேக்குக்கு எங்க போறது. எனக்கும் பேக்குக்கும் பல ஜென்மமாகவே ஸ்னானப்ராப்தி என்பதே கிஞ்சித்தும் இல்லை. இதிலே சிக்ஸ் பேக்குக்கு எங்க போறது.

அப்படியே நான் போய் யங்ஞ்யராமன்(கண்டிப்பா ஸ்பெல்லிங் மிஸ்டேக்) கிட்ட போய் நின்னானும் பூச்சாண்டி பூச்சாண்டின்னு அவர் பேரனுக்கு விளையாட்டு காட்ட கட்டி தூக்கிகிட்டு போனாலும் போவார். நான் பூச்சாண்டி இல்லைன்னு வெத்தலை மேலே சத்தியம் செஞ்சு நான் தான் அன்னியன்ன்னு சொன்னா கூட எந்த சனியனா இருந்தா எனக்கு என்ன என்பது போல பார்ப்பார். எதுனா மிராக்கிள் நடந்து அவர் நல்ல மூட்ல இருந்தா "என்ன வேண்டும்னு கேட்பார். நான் என் மனைவி சபாவிலே பாடனும் இல்லாட்டி நான் குத்து விளக்கு ஏத்துவேன்ன்னு சொன்னா உடனே "கச்சேரி சான்ஸ் இல்லை. வேண்டுமானா குத்து விளக்கு ஏத்து"ன்னு சொல்லுவார். புரியாத மனுஷன். "அய்யோ மாமா நான் குத்து விளக்கு ஏத்துவேன்ன்னு சொன்னது அந்த அர்த்தத்தில் இல்லை. உங்களை தூக்கி குத்து விளக்கில் ஏத்துவேன்"ன்னு சொல்லி புரிய வைக்க எனக்கு தாவு தீர்ந்துடும்.

அப்பவும் அவர் 'என் சாய்ஸ் குத்து விளக்கு தான். பலபேர் பரலோகம் போவதை விட நான் போய் சேர்ந்துடறேன்"ன்னு சொல்லிடுவார். இதை எல்லாம் அபிஅம்மாவிடம் விளக்கி சொல்லி நான் சான்ஸ் கேட்க இயலாதுன்னு சொன்ன பிறகு "நோ பிராப்ளம். நான் என் அப்பாகிட்டே சொல்லி முத்தமிழ் பேரவையிலே சான்ஸ் வாங்கிக்கறேன். கூட்டம் வர்த்துக்கு மட்டும் நீங்க ஏற்பாடு பண்ணிடுங்க. உங்களுக்கு தான் சென்னைல பிளாக்கர்ஸ் எல்லாம் தெரியுமே. நைசா இன்விடேஷன் கொடுத்து அசம்பிள் பண்ணிடுங்க, நான் போய் கச்சேரிக்கு இப்ப முதலே தயாராகிறேன்"ன்னு சொல்லிட்டு போனாங்க.

அய்யோ பாவம் சென்னை பதிவர்கள். வேண்டுமானா இப்படி செய்யலாம். இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாதவங்க லிஸ்ட் எடுத்து இன்விட்டேஷன் அனுப்பிடலாம்ன்னு முடிவு செஞ்சேன். சரி கச்சேரிக்கு தயாராக என்னன்ன கீர்த்தனை சாதகம் பண்ணலாம்ன்னு எழுதிகிட்டு இருக்காங்க. இருங்க என்னன்னு பார்ப்போம்.
1. நல்ல பாக்கு கலர்ல பச்சை ஷேட் அடிக்கிற உடலும் பாக்கு கலர் ஆறு இன்ச் வெள்ளி ஜரிகை பார்டர் (திருபுவனம் பட்டு)

2. புஷ்பராகம் இழைச்ச குண்டு குடை ஜிமிக்கியும், புஷ்பராகம் பன்னிரண்டு கல் இழைச்ச தோடு.

3. துளசி டீச்சருக்கு பிடிச்ச பெண்டண்ட் வித் நெக்லஸ்

அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ சாமீ எனக்கு தலை சுத்துது.

March 20, 2010

இட்லி + நெய் + ஜீனி 20/03/2010


நான் இன்றைக்கு இத்தனை பெரிய படிப்பாளியாக (??????!!!!!!!) இருக்க நான் படித்த ஔவையார் பள்ளியும் முக்கிய காரணம் என பதிவுலகம் நன்கு அறிந்ததே. என் பள்ளி வாழ்க்கையை அங்கு தான் ஆரம்பித்தேன். இதை கேள்விப்பட்டோ என்னவோ நகராட்சி அந்த பள்ளியை மூடிவிட முடிவு செய்து ஒரு நல்ல நாள் பார்த்து மூடுவிழா நடத்தி என் மீது உள்ள கோவத்தை தீர்த்து கொண்டது. அத்தோடு விட்டார்களா நகராட்சியினர். ஒரு வாரம் முன்பாக அங்கே இருந்த நூலகத்தில் சுவாரஸ்யமாக நித்யானந்தா லீலைகள் படிச்சு கிட்டு இருந்த போது ஔவையார் பள்ளியில் ஏதோ விஷேம் மாதிரி கொடி தோரணம் எல்லாம் கட்டி பிளக்ஸ் போர்டு எல்லாம் வைத்தனர். சரி பள்ளி கூடத்தை திரும்ப திறக்க போகின்றனர் என நினைத்தால் தெருநாய்களுக்கு லுல்லா ஆபரேஷன் செய்யும் விழாவாம். வண்டி வண்டியாக நாய்களை பிடித்து வந்து குடும்ப கட்டுப்பாடு செய்துகிட்டு இருந்தாங்க. சில பேர்வீட்டு நாய்களையும் கூட்டி வந்து நசுக்கி போனார்கள். இதல்லாம் விஷயமில்லை.

இது நடந்தது காலை ஒன்பது மணி இருக்கும். அப்போது ஒட்டன்காலனியில் "மூட்டை"அடித்து விட்டு பிரசவ ஆஸ்பத்திரி மரநிழலில் படுத்து கிடந்த ஒரு மூட்டை பார்ட்டி நாய்களின் சத்தம் தாங்காமல் எழுந்து வந்து என்ன எதுன்னு விசாரிச்சுட்டு போனது. கொஞ்ச நேரம் கழிச்சு தன் மேல் துண்டால் ஒரு தெரு நாயை கட்டி தரதரன்னு இழுத்து கிட்டு வந்தது. நகராட்சி ஊழியர் பேர் என்னன்னு கேட்டதுக்கு அது சொன்ன பதில் "நித்யானந்தா".அடுத்த வேளை மூட்டை அடிக்க காசு இல்லைன்னாலும் அக்குரும்பு பாருங்க.

அங்கு இருந்த எல்லாரும் ஒரு நிமிஷம் குபீர்ன்னு சிரிக்க நான் கேட்டேன் அவனிடம் "ஏன் நித்யானந்தா மேல இத்தனை கொலவெறி?"ன்னு. அதுக்கு அவன் "என் பொண்டாட்டி கோவிச்சுகிட்டு போயிட்டா. அந்த காலிபயலுக்கு நித்தம் ஒரு நடிகை கேக்குதா? அதான் கோவமாயிடுச்சு". ஆக பாருசவேதிதா முதல் இந்த பாமர குடிகாரன் வரை நித்யானந்தா மேல பொறாமை தானே தவிர வேற ஒரு புண்ணாக்கும் இல்லை என்பதே நிதர்சனம். வாழ்க கலாச்சாரம்.

*****************

மயிலாடுதுறை காவிரி பாலத்தை இடித்து புதிதாக கட்ட போகிறார்கள். நூறு வருடம் மேல் ஆகிவிட்டது அந்த பாலம் கட்டி. ரொம்ப சிரமமமாகிவிட்டது அதை இடிக்க. இத்தனைக்கும் அந்த பாலம் நடுவே ஒரு துண்டு இரும்பு கூட இல்லை. வெறும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவை தான். JCB வைத்து தட்டி விடலாம் என நினைத்த பொறியாளர்கள் ஏமாந்து போய் பின்னர் வெடி வைத்து தகர்க்கும்படி ஆனது. அந்த காலத்தில் அன்பநாதபுரம் வகையறா கார்காத்தார் பிள்ளைமார்கள் கடைத்தெருவுக்கு வண்டி கட்டி வருவதற்க்காக தங்கள் சொந்த செலவில் கட்டிய பாலம் என்று பேசிகொண்டார்கள். சரி இடிச்சாச்சு? எப்போ கட்டுவாங்க? இடிக்க மட்டும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இன்னும் கட்ட நிதி வரலைன்னு சொல்லாம இருந்தா சரிதான்.

*********************




நேபாலின் தலைநகரம் போபால், அமலாவை கண்டுபிடித்தவர் ராஜேந்தர் போன்ற எந்த G.K வும் படிக்காமல் நட்ராஜை அழைத்து கொண்டு அபி ஸ்கூல்க்கு போனேன். வரும் ஜூன் மாதம் திறக்க இருக்கும் பள்ளிக்கு இப்போதே அட்மிஷன். தம்பி கிட்ட சொன்னால் வீண் தகராறு வரும் எனக்கும் அவனுக்கும். அதனால் சொல்லாமல் அழைத்து போனேன். வண்டியை வெளியே நிப்பாட்டி விட்டு தம்பியை பார்த்தால் அவன் சீமாச்சு அண்ணா வீடு வரைக்கும் ஓடிகிட்டு இருந்தான்.அவனை துரத்திகிட்டு அபிஅம்மா ஓடிகிட்டு இருந்தாங்க. ரெண்டு பேரையும் நான் துரத்திகிட்டு ஓடி கடைசியாக நட்டுவை கோழி அமுக்குவது போல அமுக்கினா அவன் "அய்யோ அம்மா கொல்றாங்களே"ன்னு உச்சஸ்தாயில் கத்தி சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் இருந்த அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் பல் விளக்காமல் முரசொலி படித்து கொண்டு இருந்த உடன்பிறப்புகள் "என்னது கலைஞரை திரும்பவும் அரஸ்ட் பண்னிட்டாங்களான்னு அவசரமாக டீவி பக்கம் தலை திருப்பினார்கள்.

ஒரு வழியாக ஆளுக்கு ஒரு கையை பிடித்து இழுத்து (இழுத்து தான்) வந்தா கால் இரண்டும் மண்ணில் தேய்த்து கொண்டே வந்தான். பத்தாததுக்கு கொஞ்சம் மணலில் புரண்டும் வந்தான். பிரின்சிபால் மேடம் முன்னே அவனை நிறுத்தும் போது விசயகாந்து படத்தில் வரும் பாகிஸ்தானி வில்லன் கிளைமாக்ஸ்ல வருவது போல இருந்தான். ஒத்தை காலில் ஷூவை காணும். சிரிக்க சிரிக்க பேசி என்னை ஏமாத்தி இங்க கூட்டி வந்துட்டியேடா பாவி. நான் என்ன நீ திங்கிற சோத்தில் மண்ணா அள்ளி வச்சேன் என்றெல்லாம் அவன் பாஷையில் திட்டினான்.

பின்னே அந்த பிரின்சிபால் "அடடா என்னங்க உங்களுக்கு பசங்க சைக்காலஜியே தெரியலை. என் கிட்ட விட்டுட்டு போங்க போய் அபியை பார்த்துட்டு வாங்க. இப்படியா rough handle பண்ணுவாங்கன்னு சொன்னாங்க. நானா rough handle பண்ணினேன்.நடந்த கலவரத்தில் என் சட்டையில் கூடத்தான் நாலு பட்டன் போயிடுச்சு. சேதாரம் இரண்டு பக்கமும் தான்.

*************

நான் அபி வகுப்புக்கு போன உடனே அவங்க மேடத்துக்கு ஏக சந்தோஷம்.என்னை தான் எதிர் பார்த்துகிட்டு இருந்தாங்கலாம். அபி பிசிக்ஸ் வகுப்பில் அத்தனை சிரத்தை இல்லையாம். 89 மார்க் தான் வாங்கினாலாம். கவனம் பத்தாதாம்.(என்னை விட பத்து மடங்கு அதிகமாக மார்க் அபி வாங்கியதுக்காக அவளை நான் கண்டிக்க வேண்டும் என நினைத்து கொண்டேன்) அப்படியாக ஒரு பதினைந்து நிமிடம் அபியை பத்தி புகார் படலம் படிச்சாங்க. பின்ன நான் "ஆமாம் மேடம். ஸ்டீல் விலை தினமும் தங்கம் மாதிரி ஏறிகிட்டே போகுது. சிமெண்ட் சொல்லவே வேண்டாம். மரம் விஷம் மாதிரி எகிறுதுன்னு சொல்லிகிட்டே போக மேடம் ரொம்ப குழப்பமாக "நான் என்ன பேசிகிட்டு இருக்கேன் நீங்க சிமெண்ட், கம்பின்னு உளறிகிட்டு இருக்கீங்களே"ன்னு கேட்க நான் "ஆமாம் மேடம்.வேற வேற தொழில் பார்க்கும் இரண்டு பேர் சந்திக்கும் போது அவங்க அவங்க தொழில்ல இருக்கும் சிரமங்களை பேசி மனசை தேற்றிப்பது சகஜம் தானே. நீங்க உங்க தொழில்ல இருக்கும் பிரச்சனை சொன்னீங்க நான் என் தொழில்ல இருக்கும் பிரச்சனை சொன்னேன்"ன்னு சொல்ல மேடம் "ங்கே" ஆகிட்டாங்க.அனேகமாக அடுத்த தடவை அபிக்கு பிசிக்ஸ் மார்க் பிச்சிக்கும். ஹை ஜாலி.

*****************

கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பிரின்சி நட்ராஜை அழைத்து வந்தாங்க. பாவம் எந்திரன் படத்துக்கு கியூவிலே நின்னு டிக்கெட் எடுத்த மாதிரி அத்தனை ஒரு பாவமா இருந்தாங்க. என்னன்னு கேட்டதுக்கு "பாவம் இந்த வயசுல குழந்தையை ஸ்கூல்ல போடனுமா? ஒரு பத்து வருஷம் பின்ன போட கூடாதா"ன்னு கேட்டாங்க. அது என்ன கணக்கு பத்து வருஷம்? ஓ அவங்களுக்கு சர்வீஸ் இன்னும் பத்து வருஷம் இருக்கும் போலருக்கு.

**************

உலக கனிமொழி மாநாடு எல்லாம் நடக்க போவுது. என் பங்குக்கு எதுனா கொளுத்தி போட்டா நல்லா இருக்குமேன்னு நினச்சுகிட்டே இருந்தேன். தமிழ் தாத்தா உ.வெ சாமிநாதய்யருக்கு சொந்த வீடுன்னு ஒன்னு இருந்துச்சு மாயவரத்திலே. இப்போ மணிகூண்டு அருகே இருக்கும் வெரைட்டிஹால் ஜவுளி கடை தான் தாத்தாவோட வீடு. ஒரு சேட் அதை வாங்கி ஜவுளி கடை நடத்தி வர்ரார். அந்த வீட்டை மாநாட்டின் ஒரு அம்சமாக அரசு வாங்கி ஒரு மணி மண்டபம் கட்டி நாலுபேர் வந்து காதலிக்கும் இடமா (சென்னை காந்தி மண்டபம் மாதிரி) ஆக்கினா சந்தோஷம். இதை நான் சொன்னதா வெளியே சொல்லிடாதீங்கப்பூ. பின்ன எல்லா சேட்டும் என்னை குண்டுகட்டா ஔவையார் ஸ்கூலுக்கு கூட்டி போயிடுவாங்க! ( அப்பாடா பத்த வச்சாச்சு. இன்னிக்கு நிம்மதியா தூங்குவேன்:-))

************

February 18, 2010

புத்தக ஆசையும் புரட்டி எடுத்த சம்பவங்களும்!!!

எனக்கு புத்தகங்களோடு பரிட்சியம் என பார்த்தால் என் மூன்றாவதுவயதில் இருந்தே என சொல்லலாம். என் சின்ன அக்கா படிக்கும் ஒன்றாம் வகுப்பு புத்தகத்தை அவங்க படிக்க நான் கிழிக்க என தொடங்கியது புத்தகங்களோடு என் பழக்கம். ஐந்து வயதிலேயே பெரிய மகப்பேறு மருத்துவர் என்கிற நினைப்பு அக்காவுக்கு. புத்தகத்தை படிக்க பயன்படுத்துவதை விட மயிலிறகு டெலிவரிக்கான லேபர் ரூமாகத்தான் அந்த புத்தகத்தை பயன்படுத்துவாங்க. எனக்கு ஆயா வேலை கிடைத்தது அந்த (புத்தக)ஆஸ்பத்திரியில். அதாவது புதிதாய் பிறந்த மயிலிறகுக்கு அரிசி போடுவது, அதை கழுவி குளிப்பாட்டுவது இப்படியாக. ஆக என் முதல் வேலை ஆயா வேலை தான்:-))

பின்னே எனக்கும் டாக்டராக ஆசை வந்து அக்காவின் புத்தகத்தை பாகப்பிரிவினை செய்து இருந்த பதினைந்து மயிலிறகை ஏழரையாக பிரித்து தனி ஆஸ்பத்திரி தொடங்கியது தான் எனக்கு அன்றைக்கு ஏழரை ஆகியது. அக்காவின் புத்தகத்தை பாதியாக கிழித்த எனக்கு அப்பாவினால் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. அதாவது வீட்டில் இருக்கும் எல்லா கேமிராவும் என் பக்கம் திருப்பப்பட்டது. தப்பி தவறி எதுனா புத்தகத்தை தொட்டால் சின்ன அக்கா வீல் வீல்ன்னு அலாரம் அடிக்க அம்மா வந்து என்னை அடிக்க மேலும் மேலும் எனக்கு புத்தக ஆசை பீறிட்டு கிளம்பியது.

கிட்ட தட்ட எழுத்து கூட்டி படிக்கும் காலத்தில் தான் புத்தகம் படிப்பதற்கு என்பதும் அது ஒரு விளையாட்டு பொருள் இல்லைன்னும் தெரிஞ்சுது. அம்புலிமாமாவிலிருந்து மான்ரெக், லொதர்ன்னு காமிக்ஸ் என்னை முழுவதுமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. எதிரே இருந்த ரைஸ்மில்லில் தினதந்தி படிக்க ஆரம்பித்து ரோட்டில் போஸ்ட்டர், சினிமா பிட் நோட்டீஸ், கட்சி நோட்டீஸ் என எதையும் விட்டு வைக்காமல் படித்தேன். பின்னே மெல்ல மெல்ல பரண் மீதிருந்த பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து தேவன், கல்கி, சாவி என மேய்ந்து கொண்டிருந்தேன். கிட்ட தட்ட படித்த புத்தகம் எல்லாத்தையும் சேர்த்து வைக்க ஆரம்பித்து வைக்கும் பழக்கமும் வந்து விட்டது. இது வரை எல்லாம் நல்லா தான் போய் கிட்டு இருந்துச்சு.

ஒரு நாள் காலை ராதா வந்து திடீர்னு "உனக்கு இட்ச் காக் தெரியுமா?ன்னு கேட்க நான் அதுக்கு "எதுனா சைபால் மாதிரி கக்கூஸ்படை களிம்பாடான்னு தத்தக்கா பித்தக்கான்னு கேட்டு தொலைக்க வில்லன் வீரப்பா ரேஞ்சுல சிரிக்க ஆரம்பிச்சான். ராதா திடீர்ன்னு இப்படி பீட்டர் விட்டா பம்பாய்ல இருந்து அவன் சொந்த பந்தம் ரயிலை புடிச்சு என் வயித்தெரிச்சலை கொட்டிக்க வந்து இறங்கியிருக்குன்னு அர்த்தம். அதுக்கு பின்னே அவன் "டேய் பங்கஜம் மாமி வந்திருக்காடா ஜெய்பூரிலெ இருந்து. அவ பொண்ணு நம்ம செட்டு தான். ஆனா செம வளர்த்தி தெரியுமோ? நம்ம ஊர் மாதிரி இல்லை. பழைய சோத்துக்கு மாவடு காம்பினேஷன்ல தின்னுட்டு இல்லாம நல்ல கோதுமை சாப்பிட்டு அதே கலர்ல நல்ல குதிரை மாதிரி இருக்கா. அவ உத்தமன் படத்தில வர்ர மஞ்சுளா மாதிரி நைட் டிரஸ் போட்டுண்டு அந்த புத்தகத்தை படிச்சுண்டு இருந்தா. என்னையும் படிக்க சொன்னா. ரெண்டு பக்கம் தான் படிச்சேன். அத்தனை ஒரு இருட்டு அத்தனை ஒரு பயங்கரம்.வெதறி போயிட்டேன். உனக்கும் இது மாதிரி புத்தகம் பிடிக்குமான்னு கேட்டு ஸோ நைஸ் ஆஃப் யூன்னு என் நெஞ்சுல கை வச்சு சொன்னா.."

"ஏன் இருட்டுன்னா என்ன பயங்கரம். எங்க வீட்டு புழக்கடை எப்பவும் இருட்டு தான். எனக்கு பயமே இல்லியே"என பொறாமை பிடித்த அப்பாவியாய் கேட்க அவன் "அய்யோ உனக்கு இதல்லாம் புரியாது. அத்தனை ஒரு பயங்கரம் ஒன்லி டூ பேஜஸ் தான் ரீட் பண்ணினேன். ஸோ ஸ்வீட் ஸோ நைஸ்" என அவனுக்கு தெரிந்த அத்தனை ஆங்கில வார்த்தையையும் அந்த வாக்கியத்தில் நுழைத்தான்.

அவன் அதுக்கு மேல் விட்ட புரூடா எல்லாம் மனசில் ஏறலை. நான் அத்தனை ஆங்கில பயங்கரத்தையும் படிச்சுட்டு பங்கஜம் மாமியின் பொண்ணு கிட்டே பீட்டர் விடுவது போலவும் அவ என் ஆறு இன்ச் அகலமே இருந்த என் நெஞ்சாங்கூட்டில் கை வைத்து "ஸோ நைஸ் ஆஃப் யூ" என சொல்வது போலவும் ராதா காதில் புகை வருவது போலவும் மனதில் கற்பனை குதிரை தட்டிவிட்டு எழுந்து டவுசரை பின்பக்கம் தட்டி விட்டு போய் விட்டேன். கல்கி, தேவனை எல்லாம் மூட்டை கட்டி பரண் ஏத்திவிட்டேன். ஒன்லி இங்கிலீஷ் புக் தான் என முடிவு செய்தேன். தமிழ் மனப்பாட செய்யுளை கூட "ulagam yaavaiyum thaamula vakkalum" என படித்தேன். துரத்தி துரத்தி ஆங்கில நாவல் வாங்கி அட்டையை தனியே ரசித்து கிழித்து போட்டு விட்டு (ச்சே என்ன எல்லா பொண்ணுமே ஒரே மாதிரி அவசர ஆடையோட நிக்குது அட்டையிலே) வீட்டில் அடுக்கி வைத்தேன். ஆனால் படிக்க படிக்க ஒரு எழவும் புரியலை. ஆனாலும் நான் எல்லாத்தையும் படிச்சு முடிச்ச மாதிரி எதுனா ஒரு பக்கத்தை எடுத்து இரண்டு லைன் பென்சிலாம் அடிக்கோடிட்டு பக்கவாட்டில் சூப்பர் என என்னன்னவோ கமெண்ட் எழுதி வைத்தேன். அடுத்த லீவ்க்கு பங்கஜம் மாமி பொண்ணு வரும் போது என் அலமாரியில் 100 புத்தகமாவது இருக்க வேண்டும் என இலட்சியம் வைத்து கொண்டேன்.

எந்த புத்தகத்தை எடுத்தாலும் பென்சில் அடிக்கோடு இட்டு காக்கா கக்கா போன தலைவர் சிலை மாதிரி இருந்துச்சு. மாண்ரெக் காமிக்ஸ் இருக்கா என கேட்டு வந்த ராதாவிடம் "what???" என 220 வாட் கரண்ட் பாய கத்தினேன். ''I only english"ன்னு எல்லா புத்தகத்தையும் பாயில் பரப்பி அதன் மேல் படுத்து கொண்டு பந்தா காட்டினேன். சென்னை போகும் எல்லோரிடமும் எதாவது ஒரு ஆங்கில புத்தகம் பெயர் சொல்லி மூர் மார்கெட்ல வாங்கி வர சொன்னேன். "பம்பிலிக்கா, டும்பாடோலா" என வாய்க்கு வந்த பெயர் எல்லாம் சொல்லி இல்லாத புத்தகம் எல்லாம் வாங்கி வர சொல்லி சில பேக்குகள் அதையும் தேடி மூர் மார்கெட்ல அலைஞ்சு "அய்யோ அந்த புக் இப்ப தான் வித்துது சார். அதே ஆத்தர் எழுதியது தான் இந்த புக். அதை விட த்ரில்லா இருக்கும். கலைமாமணி அவார்டு எல்லாம் இந்த இங்கிலீஷ் புக் வாங்கியிருக்கு சார்" என மூர் மார்கெட் தலையில் கட்டிய புத்தகத்தோடு என் எதிரே நின்ற தூரத்து சொந்தகார மாமாவை வாஞ்சையுடன் பார்த்தேன்.என் தொல்லை தாங்காமல் மூர் மார்கேட்டே தனக்கு தானே கொள்ளி வைத்து கொண்டது. எரிந்து சாம்பலாகியது.

ஒரு நாள் மாட்டு பொங்கல் நேரத்தில் மாட்டுக்கு மாட்டியிருந்த நெட்டி மாலையை கையில் சுத்தி கிட்டு பெரிய கோவிலில் சுற்றி கொண்டிருந்த என்னிடம் ஒரு வெள்ளைகார தம்பதி அதை கேட்க பதிலுக்கு அவங்க கையிலே வச்சிருந்த புத்தகத்தை நான் கேட்க பண்ட மாற்றம் ஆகியது.மாடு மாதிரி அவங்க அதை கழுத்தில் மாட்டி கொண்டு போட்டோ எடுத்து கிட்டாங்க. அவசர அவசரமாக அந்த புத்தகத்தில் அடிக்கோடு எல்லாம் போட்டு அலமாரியில் அடுக்கினேன். அப்போது ராதா ஒரு நைனிட்டால் மாமா பையனோடு வீட்டுக்கு வந்தான். வரும் போதே அவனிடம் ராதா "டேய் ரகு நான் படிக்கும் இங்கிலீஷ் புக் எல்லாம் படிச்சுட்டு இவனண்ட தான் கொடுப்பேன்" என சொல்லி என் புத்தக அலமாரியை காட்டினான். கோபத்தை அடக்கி கொண்டேன். போனா போகுது ரகு ஆம்பளை பையன் தானே என்று.

"நீங்க லேட்டஸ்ட்டா என்ன புக் படிச்சேள்"ன்னு அவன் கேட்க நான் அந்த நெட்டிமாலை புக்கை எடுத்து கொடுத்தேன். படித்துவிட்டு தரேன்ன்னு சொல்லி வாங்கி போனான். ரெண்டு மணி நேரத்திலே ராதா அரக்க பரக்க வந்தான். "டேய் அந்த புக் பலான பிரஞ்ச் புத்தகமாம்டா. அவனுக்கு பிரஞ்ச் தெரியுமாம். அதிலும் நீ அடிக்கோடு போட்டு வச்சிருக்கும் வார்த்தை எல்லாம் ரொம்ப ரொம்ப மோசமான ...சொல்லவே நா கூசிடுச்சு அவனுக்கு" என்றான். "பின்ன என்ன ஆச்சு?"என நான் பதற்றமாக கேட்க ராதா "பின்ன என்ன அவனை பூம்புகார் கூட்டி போறேன்ன்னு தாஜா பண்ணி அதை எல்லாம் சப்ஜாடா தெரிஞ்சுகிட்டேன்"

அய்யோ அந்த வெள்ளைகாரன் கோவில்ல வச்சுதானே அந்த புக் கொடுத்தான். அதிலே எப்படி கெட்ட வார்த்தை வரும். ஓ அது தான் பிரஞ்ச்சா?எனக்கு பிரஞ்ச் தெரியாது என்பது விஷயமே இல்லை. அது பிரஞ்ச் என்பதே தெரியாது என்பது தான் சோகம். அதான் சில எழுத்துக்கு கொம்பு வச்சி சில எழுத்துக்கு பொட்டு வச்சு....அட தேவுடா ... சரி போகட்டும் பங்கஜம் மாமி பொண்ணுக்கு நாம பிரஞ்ச் படிப்பதும் தெரியட்டும்... ஸோ நைஸ் ஆஃப் யூ...என மனதை தேற்றி கொண்டேன். ஒரு வருஷம் அப்படியே போனது.

ஒரு நாள் ராதா வந்து "டேய் பங்கஜம் மாமி குடும்பத்தோட அடுத்த வாரம் வரா"ன்னு சொன்ன உடனே அந்த புத்தக அலமாரி எல்லாம் விஜயதசமி ரேஞ்ச்க்கு துடைச்சு வச்சு "அனுமதி பெற்று உள்ளே வரவும்" என சாக்பீசால் எழுதி வைத்து அனுமதி பெறாமல் வந்த சின்ன அக்காவிடம் கைகலப்பாகி அம்மா பஞ்சாயத்து நடத்தி இரண்டு பேரும் சேர்ந்து வீடு ஒட்டடை அடித்து வீடு கழுவி விட வேண்டும் என தீர்ப்பு சொல்லப்பட்டு(அம்மா பாரபட்சம் இல்லாம இப்படித்தான் சின்னதனமான கவுண்டராகிடுவாங்க) நான் விளக்குமாறும் கையுமா இருக்கும் போது ராதா அந்த அம்புஜாவோடு ஆஜர் ஆனான்.

என் புத்தகம் எல்லாம் பார்த்து விட்டு அம்புஜம் என்னை ஒரு புழு மாதிரி பார்த்து விட்டு 'ஹய்யோ நான் இதல்லாம் படிச்சுட்டேன். குப்பை. பொன்னியின் செல்வனில் இல்லாத த்ரில்லா? தேவன் கிட்ட இல்லாத சிரிப்பா? என சொல்ல கிட்ட தட்ட எனக்கு மயக்கமே வந்துடுச்சு. என் கிட்ட பிரன்ச் புக் எல்லாம் கூட இருக்குன்னு சொல்ல வந்ததை என் சோகத்தோட சேர்த்து முழுங்கினேன். அம்புஜா மேலும் "இப்போ நான் படிக்கிறது எல்லாம் சித்தர் புக்ஸ்தான். அதும் மெடிக்கல் சம்மந்தமா என்னமா எழுதியிருக்கா தெரியுமா?"ன்னு புதுசா கிளப்பி விட்டு ஜெய்ப்பூர் போய் விட நான் சித்தர் புத்தகம் தேடி அலைய தொடங்கினேன்.

இப்போது புத்தகங்களோடு கண்டங்கத்திரி, கடுக்காய் என அடிஷனலாவும் அலைந்தேன். நான் செய்த சூரணங்களை ராதாவின் பாட்டிக்கு முதலில் பரிசோதிக்க பின்னர் தான் தெரிந்தது, என்னால் வியாதியை ஒழிக்க முடியலை. ஜலதோஷத்துக்கு மருந்து கொடுக்க அது சரியாகிவிட்டது ஆனால் அதுக்கு பதிலா மலதோஷம் வந்துடுச்சு. பாட்டிக்கு பேதி நான் ஸ்டாப் கொண்டாட்டமாகிடுச்சு. ஆக ஒரு வியாதியின் ஸ்தலத்தை மாற்றும் சூட்சுமத்தை கத்துகிட்டேன். பின்னே ராதா வீட்டு தெருபக்கம் போனா கூட அந்த பாட்டி வடாம் காக்கை விரட்டும் குச்சியை வாசல் பக்கமா வச்சுகிட்டு என்னை எதிர் பார்த்து காத்து இருந்தது. விடுவனா நான். என் பாட்டிக்கு மருந்து கொடுக்க ஆரம்பித்தேன். நான் கொடுத்த லேகியம் அம்மா வைக்கும் கொத்தமல்லி துவையலை விட நல்லா இருப்பதாக சொல்லி இட்லிக்கு தொட்டுக்க ஆராம்பிச்சாங்க. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிச்சாங்க பாட்டி. மருமகள் வைத்த துவையல் சரியில்லை என அம்மா ஒரு மாங்காய். என் வைத்திய லேகியம் இட்லிக்கு தொட்டுக்க தான் லாயக்கு என நான் ஒரு மாங்காய்.பாட்டி வைத்தியம் செய்யலாம்.பாட்டிக்கே வைத்தியம் பார்த்தா இப்படித்தான் ஆகும்.

இனி என் வைத்தியத்துக்கு நானே எலி என முடிவெடுத்தேன். துரதிஷ்டவசமாக எனக்கு எந்த வியாதியும் இல்லை. தம்பி தான் சொன்னான் "எதுக்கும் மூளை வளர்ச்சிக்கு எதுனா லேகியம் கிண்டி பாரேன்". வீணாக சண்டை போட்டு அம்மாவின் பஞ்சாயத்தால் ஒரு வருஷத்துக்கு ரேஷன் கடைக்கு போகும் தண்டனை கிடைத்து விடுமோன்னு சும்மா இருந்து விட்டேன்.

எனக்கு பொதுவாகவே நான் ஒல்லியாக இருப்பது பத்தி ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. எல்லா சித்தரும் ஒன்னா உட்காந்து எழுதினது போல வேர்கடலை சாப்பிட்டால் உடனடி பலன் தரும் என இருந்ததால் அன்று முதல் வேர்கடலை சாப்பிட ஆரம்பித்தேன். அம்புஜாவுக்கு பிடிக்காத புத்தகம் எனக்கும் வேண்டாம் என்கிற ரீதியில் சின்னகடை தெரு கடலை கடையில் ஒரு புத்தகத்துக்கு ஒரு பொட்டலம் என புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு காலையும் மாலையும் சாப்பிட்டேன். நாற்பது கிலோ இருந்த நான் நூறு புத்தக முடிவில் நாற்பது கிலோவும் நாற்பது கிராமும் என எடை கூடினேன். எனக்கு கடலை வியாபாரம் ஆரம்பித்த பின்னே நோஞ்சானாக இருந்த கடைகாரர் கொஞ்சம் பூசினார் போல ஆகிவிட்டார். ஒரு கட்டத்தில் புத்தகம் எல்லாம் தீர்ந்து விட ராதாவின் ஐடியா படி பெந்தகொஸ்தே சபை, சைவசித்தாந்த மடங்கள், மாக்ஸ்முல்லர் பவன், இந்தி பிரசார சபா, பெரியார் கட்சி எல்லா இடத்துக்கும் பதினைந்து பைசா கார்டு போட்டோம். "ஐயா நான் உங்கள் மதத்தின்/இயக்கத்தின்/ மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். உடனடியாக உங்கள் பிரச்சார கொள்கை விளக்க புத்தகங்கள் அனுப்பி வைக்கவும் - குறிப்பு பெரிய மொத்த புத்தகமாக இருந்தால் உத்தமம்- இப்படிக்கு "உண்மையுள்ள" என கார்டு போட்டோம்.

மாக்ஸ்முல்லர் பவனில் இருந்து முதலில் ஐந்து மொத்த மொத்த புத்தகம் வந்தது. பத்து நாள் கடலைக்கு ஆனது. அது முடியும் தருவாயில் இந்தி பிரச்சார சபா, பெந்தகொஸ்தே புத்தகங்கள் வர வர ஒரு மாதம் கடலை போட்டாச்சு. பின்னே பெரியார் ட்ரஸ்டில் இருந்தும், தருமை ஆதீனத்தில் இருந்தும் கடிதம் வந்தது. என் (கடலை தின்னும்??) ஆர்வத்தை பாராட்டுவதாகவும் உடன் 100 ரூபாய் மணிஆர்டர் அனுப்பினால் புத்தகம் அனுப்பி வைக்க படும் எனவும் இருந்தது. பெரியார் ரொம்ப வெவரம் தான். ஒரு நாள் ராதா என்னிடம் வந்து "டேய் மதத்தை, மொழியை வித்து கடலை சாப்பிட்டா ரொம்ப தப்புடா. போப் ஆண்டவருக்கு இதல்லாம் தெரிய வந்தா அடியாள் வச்சு நம்மை அடிச்சா என்னடா பண்றது"ன்னு பெரிய குண்டை போட்டான். நான் குண்டாவதுக்காக இதல்லாம் தேவையா என திடீர்ன்னு நல்லவனாகி கடலை சாப்பிடுவதை விட்டேன்.நான் போப் ஆண்டவர் அளவு ஒர்த் இல்லை என்பது அப்போது தெரியலை.

இப்படியாக என் புத்தக ஆர்வம் பலராலும் தூண்டி விடப்பட்டும், அமுக்கி விடப்பட்டும் ஃஜிக் ஃசாக்காக போய் கொண்டிருக்கின்றது. உங்க கொள்கை விளக்க புத்தகம் இருந்தா என் பெயர் போட்டு c/o கடலை கடை, சின்ன கடை தெரு வுக்கு நேரிடையாக அனுப்பி வைக்கவும். திரும்பவும் கடலை ஆசை வந்தாலும் வரும்.

February 13, 2010

மயிலாடுதுறையும் சமீபத்திய நானும்!!!



எங்க ஊரின் சமீபத்திய ஃபீவர் ஷட்டில்கார்க் தான். பெரிய ராஜன் தோட்டத்தில் சுதந்திரமாக கிரிக்கெட் விளையாடிய அத்தனை பேருக்கும் கல்தாவை ஜிகினா பேப்பரில் சுத்தி மணிசங்கர் கொடுத்து விட்டு மாயமாகி விட்டார். ஊரின் ஒட்டு மொத்த தொழிலதிபர் கூட்டமும் ஷட்டில் கார்க் தான் கதியேன்னு கிடக்குது. பகல் பொழுதுகளில் இரண்டு லட்சம் மூணு லட்சம் பணத்தை தினதந்தி பேப்பரில் சுத்தி மயிலாடுதுறையின் ரங்கநாதன் தெரு என சொல்லப்படும் வண்டிகாரதெருவில் வர்த்தகம் செய்யும் அத்தனை பேரும் மாலை பொழுதுகளில்( மாலை என்பதே இரவு ஒன்பது மணிக்கு மேல் தான்) மற்றும் விடியல்காலை பொழுதுகளில் தவிர ஞாயிற்று கிழமைகளில் இனி ஒரு ஞாயிறு நமக்கு வரேவே வராது என்கிற மாதிரியான அவசரகதியில் விளையாடுகின்றனர்.

குறிப்பாக நகைகடை முதலாளிகளுக்கு கடைக்கு குடோன் இருப்பதை போல கட்டாயம் ஒரு ஷட்டில் கிரவுண்ட் இருந்தால் தான் நகைக்கடை வியாபாரிகள் சங்கத்தில் சேர்த்துப்பாங்க போலிருக்கு. மைதானம் எல்லாம் மிகத்தரமானதாக இருக்கின்றது. யூனியன் கிளப் மைதானம் வுட்டன் பேஸ் எல்லாம் போட்டு எபவ் எயிட்டி தாத்தாக்கள் கிரவுண்ட்க்கும் பந்துகும் நோகாமல் விளையாடுகின்றனர்.

விளையாடுவது என்னவோ அரை மணி நேரம் தான் எனினும் அதற்கான ஆயத்தங்கள் அதிக மணி நேரம் ஆகின்றது. அந்த பேட்டை வைத்து கொண்டு சல் சல்லென ஆளில்லாத விடிகாலையில் இரு சக்கர வாகனத்தில் பறந்து பறந்து பில்ட்டர் காபி குடிகின்றனர். சானியா மிர்சா அழகா சோனியா அகர்வால் அழகா என விவாதிக்கின்றனர்.(சானியா நிச்சயம் பணால் ஆனதுக்கு ஒருத்தர் 180 ml கண்ணீர் விட்டார்). ஆயிரத்தில் ஒருவனை கிழித்து மாலையா போட்டு கொள்கின்றனர். துபாயில் வெய்யில் ஜாஸ்த்தியாமே என கவலைப்படுகின்றனர். வாட்ச்மேன் தீர தீர பிளாஸ்கில் வைத்தா கடை டீ வாங்கி வருக்கிறார். இரண்டு மடக்கு டீயும் ஒரு கேம் விளையாட்டும் என்பது தான் மைதான விதியாக இருகின்றது. இதே விதி சனி இரவும், ஞாயிறும் மாறிவிடுகின்றது.

நகரின் அத்தனை பிரச்சனை பத்தியும் பேசி பேசி அலுக்காமல் திரும்பவும் பேசுகின்றனர். மயிலாடுதுறை - சென்னை ரயில் ஓடாதது பத்தி ரொம்ப கவலை படுகின்றனர். கவலை மட்டுமே படுகின்றனர். ஆனால் எல்லாருமே ECR சாலையில் மூன்று மணி நேரத்தில் ஸ்கார்பியோவில் சென்னைக்கு பறக்கும் பார்ட்டிகள். பின் ஏன் இத்தனை கவலை என கேட்டதுக்கு "எல்லாம் நம்ம மக்களுக்காகத்தான்" என சொல்லி எனக்கு டீ புறை ஏறியது தான் மிச்சம்.

தான் விளையாடும் மைதானத்திலிருந்து மற்ற மற்ற மைதானத்தில் யார் யார் இன்றைக்கு வரவில்லை என தெரிந்து கொள்ள மட்டுமே செல் போனை உபயோகப்படுத்துகின்றனர்.

மைதான உறுப்பினர்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் எல்லாமே மைதானத்தில் பார்ட்டி வைத்து பிறந்த நாள் வந்தவன் "நான் ஏன் பிறந்தேன்" என பாடி கொண்டே போகும் அளவு மஞ்சள் குளிக்கின்றனர்.

போஸ்ட்டர் ஃபீவர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. புதிதாய் கிளினிக் திறக்கும் டாக்டருக்கு வாழ்த்து சொல்லும் பொருட்டு " வரும் நோயாளிகளை இன்முகத்துடன் வரவேற்கும்" என்பது போன்ற சூப்பர் காமடிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. எதிர் வரும் டிசம்பரில் பிறந்த நாள் காண இருக்கும் என போஸ்ட்டர் அடிக்கலாமா என பிப்ரவரியில் யோசிக்கும் தொலைநோக்கு சிந்தனைவாதிகள் இங்கே அதிகம்.

ஆனால் இது எதுக்குமே கவலைப்படாத மயிலாடுதுறை சிவாக்கள் "ராஜன் தோட்டம் மைதானம்" எங்களுக்கே சாஸ்வதம் என்பது மாதிரி அமரிக்காவில் இருந்து அவசரமாய் பத்து நாள் லீவ் எடுத்து வந்து walking ம், ரிட்டையர்டு புரபசர் தாத்தாக்கள் doging ம் போய் கொண்டு இருக்கின்றார்கள்.

February 4, 2010

ஒரு பக்கா கதை!!!

எங்க நகரிலே இருக்கும் அந்த பெண் தான் இப்ப டாக் ஆஃப் தி நகர். பெரிசா ஒரு தப்பும் செய்திடலை. படித்து முடித்து விட்டு ஏதோ ஒரு கடையில் வேலை செய்யுது. காலை ஒன்பது மணிக்கு போய் மாலை ஆறு மணிக்கு வந்துடும். அதல்லாம் விஷயமில்லை. காலை ஆறு மணிக்கு குளித்து முடித்து தலையில் ஒரு துண்டு, நைட்டி சகிதமாக என் வீட்டு எதிரே இருக்கும் கிரவுண்டில் ஆஜராகிவிடும். ஆறு மணின்னா ஷார்ப்பா ஆறு மணி. மிக சரியாக 8.30 மணி வரை இடைவிடாம பேசும். பின்னே ஓடி போய் கிளம்பி வேலைக்கு போயிடும். மாலை ஆறு மணிக்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட். பின்னே ஏழு மணிக்கு நைட்டி, தோளில் துண்டு போட்டு கிட்டு செல் போன் சகிதம் வந்துடும். நகரில் யாரும் சமீபமாக விவித பாரதியை நாடுவதில்லை கடிகாரம் திருப்பி வைக்க. எல்லாம் அந்த பெண் உபயம்.

நகரின் அத்தனை குடும்பஇஸ்திரிகள் காதிலும் புகை. "இந்த அக்கிரமம் நடக்குமா?" "இது ஆண்டவனுக்கே அடுக்குமா?" "கலி முத்தி போச்சு" இப்படியாக அரத பழசான தமிழ் பட 'கும்பல்' வசனத்தையும் பேசி விட்டார்கள். அந்த பெண் 3 மணி நேரம் தான் பேசுது. ஆனா குடும்ப தலைவிகளும் இது பத்தி இருபத்தி நாளு மணி பத்தாம பேஜார் ஆகியிருக்காங்க. "என்னங்க இன்னிக்கு செகண்ட் ஷிப்ட்ல அது மூணு தடவை கண்ணை கசக்குச்சே...எதுனா பெரிய சண்டையா இருக்குமோ" என அசந்து படுத்திருக்கும் புருஷனை இரவு 3 மணிக்கு புரட்டி கேட்டார்கள்.

"நீங்க வேணா பாருங்க, இன்னிக்கு அந்த சிறுக்கி மஞ்சள் கலர் சுடிதார் தான் போட்டுட்டு போவா. பந்தயம் வச்சிப்போமா நீங்க தோத்துட்டா ஆயிரத்தில் ஒருவன் அழைச்சிட்டு போகனும் சரியா?" என ஆம்படயான்களுக்கு ஆப்பு வைத்தார்கள்.

கீரைக்காரம்மா வந்தா அதை நடுவே உட்காரவச்சு எல்லா வீட்டு அம்மனிகளும் "யக்கா அப்படி என்னதான் பேசிப்பாங்க இத்தனை நேரம். எனக்கும் தான் கல்யாணம் ஆச்சு. இந்த அநியாயம் நான் எங்கயும் பார்க்கலை. என் வலைகாப்பு அன்னிக்கு தான் என் மூஞ்சியையே அவரு முழுசா பார்த்தாரு" என சொல்ல அதுக்கு ரெண்டு கல்யாணம் செஞ்சு நாலு பிள்ளை பெத்த கண்ணாம்பாக்கா டைப்ப முடியாத அடல்ஸ் ஒன்லி பேச்சு பேச எதேர்ச்சையா அங்க வந்த என்னை பார்த்து எல்லாரும் வாரி சுருட்டி எழுந்திருக்க அதிலே ஒரு வாயாடி அக்கா என்னை பார்த்து "தம்பி, இந்த அநியாயத்தை தெரு ஆம்பளை யாரும் என்னன்னு கேட்க கூடாதா, நீங்களும் துபாய் கிபாய்ன்னு போயிட்டு போயிட்டு தான் வரீங்க" என்று உசுப்பேத்திவிட " அக்கா சத்தமா பேசினா நான் மட்டுமில்ல தெருவே கேட்கலாம். அது குசுகுசுன்னு தானே பேசுது"ன்னு சொன்னேன்.

தெருவிலே வீரனா இருந்தாலே இப்படிப்பட்ட கஷ்டம் வரத்தான் செய்யும் போலிருக்கு. "சரி சரி எல்லாரும் போயிட்டு வாங்க. ரேஷன்ல ஃப்ரீயா வாஷிங் மெஷின் கொடுக்குறாங்க. அதை போய் என்னான்னு பாருங்க"ன்னு சொல்லிட்டு அந்த பெண்ணை கேட்டுடலாம்ன்னு முடிவுக்கு வந்தேன்.

பெண்ணை பார்த்தா பீட்டர்ஹெயினுக்கு ஒன்னு விட்ட தங்கச்சி மாதிரி இருக்குது. எக்கு தப்பா எதும் கேட்டா நைட்டிய மடிச்சி கட்டி விசயகாந்து மாதிரி ரைட்டு காலை காத்திலே உந்திகிட்டு லெஃப்ட் காலால் என்... வேண்டாம். பயத்தை முகத்தில் காட்டிகிட்டா வீரனுக்கு அழகில்லை. ஒரு மூணு நாள் அந்த பொண்ணை வாட்ச் பண்ணிட்டு பின்ன கேட்போம்ன்னு வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன்.

பாவம் அந்த புள்ள சண்டேன்னா மூணு ஷிப்ட்ன்னு ரொம்ப பிஸியா இருக்குது. ஆமாம் சண்டேயிலே மதியம் 2-3.30 எக்ஸ்ட்ரா.சர்வதேச விதி போலிருக்கு. எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியலை. மனசிலே தைரியத்தை வரவழைச்சுகிட்டு நறுக்குன்னு மூணு கேள்வி கேட்க முடிவெடுத்து திங்கள் காலை அது பேசி முடிச்ச பின்னே "இந்தாம்மா இங்க வா"ன்னு கூப்பிட்டேன். கிட்ட தட்ட எல்லார் வீட்டு ஜன்னலும் எங்களையே பார்த்தது. கேட்க முயன்றது.

1. உன் சிம்கார்டு எந்த கம்பனி கார்டு?

2.எந்த 'பிளான்'ல வாங்கியிருக்க?

3. செல் பேட்டரி ஒரிஜினல் ஃபின்லேண்டா?


நீதி: அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு.

அநீதி: 14 வருஷம் முன்ன செல் போனெல்லாம் இல்லாம போயிடுச்சே!