பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 17, 2011

Ms./ M.S.ராமூர்த்தி அய்யர் இரும்பு கடை!!!


மன்னிக்கவும்! திரு. நேசமித்ரன் ஒரு எழுத்துப்பிழை சுட்டிகாட்டி இருந்தார். அதை சரி செய்யும் போது தவறுதலாக இந்த பதிவை அழித்து விட்டேன். அதிலே 22 பின்னூட்டங்களும் சேர்ந்து போய்விட்டது. அதனால் மீண்டும் பதிகின்றேன். மன்னிகவும்!

***********************************




என் நான்கு வயதில் என் குறும்புக்கார மாமா ஒருவர் "உனக்கு பனந்தோப்பில் ஒரு அடக்கமான பெண் பார்திருக்கேன். அவங்க உனக்கு ராமூர்த்தி அய்யர் ஜூவல்லரியிலே மொத்தமான சங்கிலி போடுவதா சொல்லியிருக்காங்க. வரும் அமாவாசையிலே திம்மநாயக்கன் படித்துறை மண்டபத்திலே கல்யாணம்" என சொல்லுவது வழக்கம். நானும் ஏதோ எனக்கு பெரிய அளவில் கல்யாணம் நடக்க போவதாக நினைத்து சந்தோஷப்படுவேன்.

பின்னர் காலம் போகப்போகத்தான் தெரிந்தது. பனந்தோப்பு பகுதி என்பது சுடுகாடு என்பதும் அவர் சொன்னது "அடக்கமான" பெண் என்பதும், திம்மநாயகன் படித்துறை மண்டபம் என்பது இறந்தபின்னர் காரியம் செய்யும் இடம் என்றும். ராமூர்த்தி அய்யர் ஜுவல்லரி என்பது ராமூர்த்தி அய்யர் இரும்புகடை என்றும் அங்கே இரும்பு சங்கிலி தான் கிடைக்கும் என்பதும் தெரிந்து சிரித்து கொண்டேன். அப்படித்தான் ராமூர்த்தி அய்யர் இரும்புகடை எனக்கு அறிமுகம் ஆனது. ஆமாம் இந்த பதிவின் கதாநாயன் அந்த "M.S.ராமூர்த்தி அய்யர் ஹார்டுவேர்ஸ்" தான். மயிலாடுதுறையின் மைந்தர்கள் என்றால் அந்த கடைக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்க முடியவே முடியாது. கடை என்று சொன்னா ஏதோ அப்படி இப்படி கடை இல்லை. அது ஆச்சு அதை தொடங்கி ஒரு எண்பது வருடங்கள். அந்த ராமூர்த்தி அய்யர், அதன் பின்னே அவரது மகன் M.R. கண்ணப்பன், பின்னர் அவரது இரு மகன்கள் அதிலே தற்போது உரிமையாளராக இருக்கும் அவரது இளைய மகன் M.R.K.கீர்த்திவாசன் அண்ணன். எனக்கு நினைவு தெரிந்து நான் ராமூர்த்தி அய்யரை பார்த்தது இல்லை. ஆனால் M.R. கண்ணப்பன் அவர்கள் தான் அதன் முதலாளி நான் சிறு வயதாக இருக்கும் முதலே. தவிர அவர் எங்கள் பள்ளி தி.ப.தி.அர.தேசிய மேல்நிலைப்பள்ளியின் ஆட்சிமன்ற குழுவின் முக்கிய உறுப்பினரும் கூட.

அந்த கடையில் கட்டுமான பொருட்கள் சிமெண்ட், கம்பிகள்,பெயிண்ட் வகையறாக்கள் உட்பட எல்லாமே கிடைக்கும். இப்போதும் அந்த நிறுவனத்தை நான் கடை கடை என்று சொல்வதால் அதன் விஸ்தீரனம் என்ன என்பது உங்களுக்கு புரியவில்லை தானே? இருங்கள். அந்த கடையில் ஒரு நாளைக்கு விற்பனை ஆகும் சிமெண்ட் மூட்டை மட்டும் சுமார் 5000 முதல் 8000 வரை. கம்பிகள் நூற்றுக்கணக்கான டன்கள். இருக்கும் இடமோ மயிலாடுதுறையின் மைய பகுதியான மணிக்கூண்டு க்கு பக்கத்தில். அகலம் ஒரு என்பது அடியும் நீளம் ஒரு 250 அடியும் இருக்கும் சுமாராக. குடோன் என்பது காவிரி கரையில் இருக்கின்றது. அந்த கடையின் உள்ளே ஒரு லாரி போய் வருவது பெரியகோவில் உள்ளே ஒருவன் சைக்கிளில் போய் வரும் போது எப்படி இருக்கும், அது போல லாரி அந்த கடையின் உள்ளெ போய் ஒரு ரவுண்டு அடித்து திரும்பும் என்றால் மயிலாடுதுறையின் இதய பகுதி கடைத்தெருவில் அந்த இடம் எவ்வளவு பெரியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இத்தனைக்கும் குடோன் தனி இடம்.

சரி அப்படி என்ன அந்த கடையின் விஷேஷம்? ஏன் அப்படி அங்கே மட்டும் அத்தனை பரந்துபட்ட வியாபாரம்? விலை அங்கே குறைவா? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டால் அதல்லாம் எதும் இல்லை. ஒன்றே ஒன்று தான். நேர்மை. அவர்களின் நேர்மை. பில் இல்லாத வியாபாரம் கிடையாது. நிங்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக அரசு விதிக்கும் வரிகள் கண்டிப்பாக நம்மிடம் வசூல் செய்யப்படும். அது மிகச்சரியாக அரசுக்கு செலுத்தப்படும். தரமான பொருட்கள் மட்டுமே வியாபாரம் செய்யப்படும். எடை சரியாக இருக்கும். அங்கு இருக்கும் விற்பனையாளர்களுக்கு நான் டிப்ஸ் எதும் கொடுக்க தேவையும் இல்லை கொடுத்தாலும் அதை மறுதளிக்கும் அளவுக்கான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதே போல நாம் சிமெண்ட் வாங்கினாலும் சரி கம்பிகள் வாங்கினாலும் சரி கொத்தனார், இஞினியர் ஆகியோருக்கு எந்த கமிஷனும் அவர்களுக்கு அந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கவும் மாட்டார்கள். அது போல கடன் கிடையாது. கையிலே காசு வாயிலே சிமெண்ட் பாலிசி தான்.

ஒரு வீடு கட்ட ஆரம்பித்ததும் மேஸ்திரியோ இஞினியரோ "ராமூர்த்தி அய்யர் கடை வேண்டாம். அதை விட சூப்பரா ஒரு மூட்டைக்கு 20 ரூபா கம்மியா நான் வேற கடையிலே வாங்கி தருகின்றேன் என்பது தான் முதல் டீலிங் ஆக இருக்கும். அதை எல்லாம் மீறி மக்கள் ராமூர்த்தி அய்யர் கடைக்கு தான் படையெடுப்பார்கள். அந்த கண்ணப்பன் அய்யரோ, கீர்த்திவாசன் அண்ணனோ மிகப்பெரிய ஆன்மீக பற்றாளர்கள் என்றேல்லாம் சொல்ல இயலாது. கடையில் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாமி படங்களுக்கு பைனான்ஸ் கம்பனியில் போடுவது போல சரம் சரமாக மல்லிகைப்பூவும், வாசனை பத்திகளும் படைக்கப்பெறாது. அவர்களுக்கு செய்யும் தொழிலே முதல் தெய்வம்.

எனக்கு தெரிந்து அந்த கடை ஒரு மிகப்பெரிய ஓட்டு வீடு போன்ற கட்டிடம் தான். அந்த கடைத்தெருவின் அனைத்து கடைகளும் (எதிரே இருக்கும் ஏ ஆர் சி ஜுவல்லரிகள்) கண்ணாடி மாளிகையாக ஆன பின்னரும் இது ஒரு ஓடு வேய்ந்த கடை தான். முதலாளிக்கும், அவரது மகன்கள் இருவர், பின்னே ஒரு கணக்கர் ஆகியோருக்கு வரிசையாக நான்கு குழி அதாவது பள்ளம் இருக்கும் அதன் முன்பக்கம் ஒரு பெரிய மர டெஸ்க், இவர்கள் சென்று அந்த குழியில் காலை தொங்கவிட்டு அமர்ந்து டெஸ்கில் பெரிய பெரிய தோல் பைண்டிங் செய்த லெட்ஜர் பிரித்து வைத்து கொண்டு தலைக்கு மேலே ஒரு அந்த கால ஜி ஈ சி மண்டை சீலிங் ஃபேன் போட்டுக்கொண்டு உட்காந்து கொண்டு முதலாளிக்கு மாத்திரம் எக்ஸ்ட்ரா காற்றுக்காக ஒரு இங்கிலாந்து ராலி பேன் சத்தமில்லாமல் ஓடும் அதை வைத்து கொண்டு கருமமே கண்ணாய்இருப்பர். கண்ணப்பன் அய்யர் கடைக்கு வந்ததும் சட்டையை கழட்டி பின்னால் இருக்கும் ஆணியில் மாட்டிவிட்டு மல் துணியில் தைக்கப்பட்ட ஒரு கை வைத்த பனியனோடு பில் போடுவார். ஒரு கருப்பு கலர் அந்த கால கிரகாம்பெல் காலத்து விரல் வைத்து நம்பர் சுற்றும் போன் ஒரு கொலாப்ஸ் ஸ்டாண்ட் ல் இருக்கும். முதலாளி, அவரது மகன்கள், கணக்கர் இதிலே யார் பேச வேண்டுமோ அவர்களுக்கு அந்த போன் நகர்த்தி வைக்கப்படும்.

இப்படியாக பழமை மாறாமல் இருந்த அந்த வணிக வளாகம் இன்னும் சொல்ல போனால் இந்த ஊரில் இருந்த மாட மாளிகை எல்லாம் அவர்கள் விற்ற சிமெண்ட், கம்பிகளால் உயர்ந்து நிற்க அந்த கடை மட்டும் அப்படியே இருந்தது. அவர்களின் சிமெண்ட் குடோனில் ஒரு நாளைக்கு கீழே சிந்தி கிடக்கும் சிமெண்டை ஒரு வாரத்துக்கு திரட்டினால் கூட இவர்கள் மாயவரத்தில் மணிக்கூண்டுக்கு நிகரான உயரத்தில் ஒரு கட்டிடம் எழுப்ப முடியும் என கேலி பேசியவர்கள் உண்டு. அதே போல கண்ணப்பன் அய்யர் சைக்கிளில் தன் வீடு முதல் கடைக்கு வந்து போவதை கூட கேலியும் கிண்டலும் செய்தவர்களை நான் பார்த்தது உண்டு. ஆனால் அதல்லாம் அவர்கள் கவனத்துக்கே போகாது. ஏனனில் அவர்களது கவனம் வியாபாரம். அது நல்ல விதமா நடந்தா சரி என்கிற போக்கில் தான் இருந்தார்கள்.

ஒருமுறை திரு. கண்ணப்பன் அவர்கள் எங்கள் பள்ளி விழாவில் பேசிய போது " பெருசா நான் எதும் செஞ்சுடலை. நான் ஒரு போஸ்ட்மேன். போஸ்ட்மேன் வியாபாரி. நான் ஒரு பொருளை வாங்கி அவா "நீ இத்தன தான் லாபம் வச்சு விக்கலாம்"ன்னு சொல்லும் அதே லாபத்தை தான் வச்சி விக்கிறேன். அதுல கவர்மெண்ட் "நீ இத்தன சம்பாரிச்ச, அதுக்கு நேக்கு இத்தன பர்சண்டேஜ் டேக்ஸ் பே பண்ணிடு"ன்னு சொல்றா, அதை டான்னு கொடுத்துடுறேன். அதே போல அந்த கமாடிட்டீஸ்க்கு இத்தன டேக்ஸ் உன்னாண்ட அதாவது வாங்குறவா கிட்டேர்ந்து வசூலிச்சு கட்டிடு"ன்னும் சொல்றா. அதையும் உங்களான்ட இருந்து வாங்கி டான்னு கட்டிடுறேன். தான் சூட்சுமம். நாம வரி கொடுக்கலைன்னா அரசாங்கம் எப்படி நடத்துவா? என் தோப்பனார் இங்லீஷ் காரன் காலத்திலே இருந்து அவா சொன்ன வரியை கட்டிண்டு வந்தா. நேக்கு அந்த மன உறுத்தல் இல்லை. நம்ம நாட்டுக்கு கட்டிண்டு வர்ரேன். அவா ரோடு போடுறா, பெரிய ஆஸ்பத்திரிலே ஏழகளுக்கு ஃப்ரீயா மருந்து கொடுக்கறா, குடிதண்ணீர் தர்ரா,எல்லாமே எல்லாமே செய்யறா, நான் போய் இதல்லாம் செஞ்சுண்டு இருக்க முடியுமா? நீங்க போய் தனித்தனியா இதல்லாம் செஞ்சுண்டு இருக்க முடியுமா? முடியாதோன்னோ, நாம வரி கொடுக்கலைன்னா அவ பணத்துக்கு எங்க போவா? அவா கிட்டே தான் நாசிக்ல பிரஸ் இருக்குன்னு பிரிண்ட் பண்ணிக்க முடியுமா? டபார்ன்னு அதல்லாம் செஞ்சுட முடியாது. நாம கொடுக்கும் வரியை வச்சுண்டு தான் செய்ய முடியும். நாம ஒழுங்கா கொடுத்தா அவா செய்வா. "நேக்கு பத்தலை. நீ இன்னும் கொஞ்சம் வசதி செஞ்சு கொடு"ன்னு கேளுங்கோ அதுக்கு எல்லா உரிமையும் உங்களுக்கு எந்தளவுக்கு இருக்கோ அந்த அளவு அவாளுக்கு நாம செலுத்த வேண்டிய வரியையும் செலுத்திடனும் கேட்டேளா" என கலோக்கியலா பேசியது அன்றைக்கு எல்லார் மனதிலும் பட்டது.

இரவு கடையில் கணக்கு எல்லாம் முடிந்து கண்ணப்பன் சார் ஒரு தோல் பையில் தான் எல்லா பணத்தையும் எடுத்து கொண்டு தன் வீட்டுக்கு சைக்கிளில் போவார். பட்டமங்கல தெருவில் இருந்து அரசாங்க மகளிர் பள்ளிகூடம் தாண்டி இருக்கும் சந்து வழியே நூர்காலனி வழியே (கோ ஆபரேடிவ் பேங் வழியே) எங்கள் பள்ளிக்கூடம் பக்கத்தில் இருக்கும் அவர் வீட்டுக்கு போவார். இதை கவனித்து கொண்டு இருந்த ஒரு திருடன் ஒரு நாள் அந்த பேங் சந்தில் வைத்து இவரை கத்தியால் குத்தி பணத்தை பிடுங்கிட்டான். அடுத்த நாள் காலை செய்தி தெரிந்ததும் நான் வழக்கம் போல என் நண்பன் ராதாவிடம் விஷயத்தை சொல்ல "அய்யோ என்ன ஆச்சு .... அந்த திருடனுக்கு?" என கேட்டான். அவன் அப்படி கேட்டதற்கு காரணம் உண்டு. ஏனனில் திரு.கண்ணப்பன் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். கெட்ட பழக்கம் எதும் கிடையாது. உடல் திடகாத்திரமானது. பாவம் திருடன். இவரை கத்தியால் குத்தினாலும் இவர் விடாப்பிடியாக அவனை பிடித்து அவன் யாரிடமோ திருடி வச்சிருந்த ஆயிரம் ரூபாய் சொச்சத்தையும் சேர்த்து பிடுங்கி விட்டார். அவனை போலீசிலும் பிடித்து கொடுத்துவிட்டார். பாவம் திருடனுக்கு ஆயிரத்து சொச்சம் நஷ்டம்:-)) அப்படி எதற்கும் அசையாத திட மனது கண்ணப்பன் சாரைக்கூட விதி விட்டு வைக்கவில்லை. அவரது பெரிய மகன் ஆன்மீக சுற்றுப்பயணம் வடநாட்டுக்கு போன போது ஹரித்வாரில் மரணம் அடைந்து விட அந் நிகழ்சி இவரை ரொம்ப ஆட்டிவிட்டது.

பின்னர் அவரது இளைய மகன் கீர்த்திவாசன் அண்ணன் அவர்கள் கடையின் எல்லா பொறுப்புகளையும் பார்த்து கொண்டார். கடை ஓட்டு கட்டடத்தில் இருந்து மிகப்பெரிய கட்டிடமாக மாறியது. குழியில் டெஸ்க் போட்டு உட்காந்த நிலை மாற்றப்பட்டு அதிநவீன பர்னிச்சர்கள், கம்பியூட்டர் என சமகாலத்துக்கு மாறிவிட்டது. பெரிய மகனின் மனைவி, குழந்தைகள் எல்லாரும் சென்னையில் செட்டில் ஆகிவிட சின்னவர் கீர்த்திவாசன் அண்ணனின் குழந்தைகளுக்கு மாயவாம் புழுதிகளும், வெய்யிலும், அழுக்கான காவிரியும் ஏனோ ஒரு ஒட்டுதல் இல்லாமல் சென்னை வாழ்க்கை பிடித்து போக பெரிய பையன் மரணத்தில் இருந்து மனது வெளியே வராமல் கண்ணப்பன் சாரும் போய் சேர்ந்துவிட்டார். ஆனாலும் சின்னவர் கீர்த்தி அண்ணன் அதே தாத்தா, தந்தையார், அண்ணன் காட்டிய அதே வழியில் கடையை திறம்பட நடத்தி வந்தார்.

நான் ஒரு பத்து நாட்கள் முன்னதாக அவர் கடைக்கு போன போது ஒருவர் சிமெண்ட் வாங்க வந்தார்.

கஸ்டமர்: சார் நான் பெரிய அளவிலே ஒரு கட்டிடம் கட்டனும்.கவலையே படாதீங்க. உங்க கடையிலே தான் எல்லாம் எடுக்க போகிறேன்.

கீர்த்தி அண்ணன்: சரி கவலைப்படலை. சொல்லுங்க.

கஸ்டமர்: அல்ட்ராடெக் ஒரு மூட்டை என்ன விலை?

கீர்த்தி அண்ணன்: 315

கஸ்டமர்: சரி, எனக்கு ஒரு ஆயிரம் மூட்டை வேண்டும். அடுத்து அடுத்து வரிசையா கட்ட போறேன். இன்னும் அதிக லெவல்ல தேவைப்படும். எனக்கு பில்லு கில்லு எல்லாம் வேண்டாம். உடனே கை மேலே கேஷ் சுடச்சுட தருவேன். என்கிட்டே லாரி இருக்கு. டோர் டெலிவரில்லாம் வேண்டாம். திரும்பவும் சொல்றேன். பில்லு கில்லு எல்லாம் வேண்டாம். இப்ப சொல்லுங்க என்ன விலை ஒரு மூட்டை?

கீர்த்தி அண்ணன்: 315
வந்தவர் பேயறைந்து போன மாதிரி ஆனார். எனக்கு விவேக் மற்றும் டாக்டர் மாத்ருபூதம் காமடி தான் ஞாபகம் வந்தது. "சார் ஊசி போட போறீங்களா? நான் வேண்டுமானா பேண்டை கழட்டிடட்டுமா? என விவேக் கேட்க அதற்கு டாக்டர் "அது உன் இஷ்டம், ஆனா நான் கையிலே தான் போடப்போறேன்" என்பார். நீ பில்லை வாங்கு வாங்காம போ, அல்லது வாங்கி கிழிச்சு போடு. அது பத்தி எனக்கென்ன கவலை என்கிற அதே கண்ணப்பன் சாரின் குணம். மயிலாடுதுறையில் அதிகபட்சம் விற்பனை வரி கட்டும் நிறுவனம் அது. இப்பவும் தான்.

சரி நான் ஏன் இத்தனை நீட்டி முழங்குகிறேன் அந்த ராமூர்த்தி அய்யர் இரும்புகடை பற்றி.

அந்த கடை விற்பனை ஆகிவிட்டது. ஆமாம், கீர்த்தி அண்ணனால் கவனிக்க முடியவில்லை. பசங்க சென்னையிலே செட்டில் ஆக விருப்பம். இவருக்கு வாரம் ஒரு முறை சென்னை சென்று வர முடியவில்லை. வீடும் மிகப்பெரிய பங்களா. தனி ஆளாக இவர் மாத்திரம் இருக்க வேண்டும். சொத்துபத்துக்கு எதும் குறைவில்லை. சென்னையில் அண்ணாசாலையில் கால்வாசி கிடக்கு, ஊட்டி கொடைக்கானலில் இருக்கு. இன்னும் சிமெண்ட் கம்பனிகளில் அதிக விற்பனைக்காக கொடுக்கப்படும் ஊக்கத்தொகை கூட இவங்க நிறுவனம் பல ஆண்டுகளாக வாங்காமல் இருப்பதே பல கோடிகள் தாண்டும். ஆனால் இவரால் கடையை சரியாக கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி திடீரென விற்றுவிட்டார். கடையில் இருந்த இடம் முதல் உள்ளே இருந்த சரக்குகள், லாரிகள், வேலையாட்கள் உட்பட. ஒரு ஆணி கூட தன் கூட எடுத்துக்கொள்ளவில்லை. விரைவில நூற்றாண்டு காணப்போகும் ஒரு நிறுவனம். விற்பப்பட்டுவிட்டது. இன்னும் மயிலாடுதுறையில் பலருக்கு இவ்விஷயம் சென்றடையவில்லை.

வாங்கியவர் திரு. ஏ.டி. தமிழ்செல்வன். அவரும் ஒரு சிறந்த தொழிலதிபர். உழைப்பால் முன்னுக்கு வந்தவர். அவரைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் உடனே "எனக்கு தெரிஞ்சு அவரு தாஜ்மகால் பீடியை கடைக்கு கடை கொண்டு சைக்கிளில் போட்டு வியாபாரம் செஞ்சவர் தானே" என வயிறு எரியும் வியாபாரிகள் பேசுவர். கருனாநிதி மஞ்சள் பையுடன் திருவாரூரில் இருந்து சென்னைக்கு வந்தார் என கண்ணதாசன் வனவாசம் புத்தகத்தில் சொன்ன மாதிரியான வயிறு புகைச்சல் தான். ஆனால் ஏ.டி எஸ் ஒரு சிறந்த உழைப்பாளி என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். அவர் இந்த நிறுவனத்துக்க்கு இத்தனை கோடி கொடுத்தார் என யூகங்களாக அடுத்த அடுத்த நாட்களில் பேசும் யாருமே 'அவரு ஒயிட்ல இத்தனை கோடி கொடுத்தார், பிளாக்ல இத்தனை கோடி கொடுத்தார்" என பல்லுமேல நாக்கு போட்டு பேச மாட்டார்கள். ஏனனில் எம். எஸ் ராமூர்த்தி அய்யர் நிறுவனம் என்பது கருப்பு பணத்துக்கு அப்பாற்பட்டது என்பது ஊருக்கே தெரியும். நேர்மைன்னா இப்படி தான் இருக்கனும்.

ஏ.டி. எஸ் கூட கடையின் பெயரை மாற்ற போவது இல்லியாம். ஆனாம் அந்த சிமெண்ட்ம், கம்பியும் அல்ல அதன் மதிப்பு. அவர் கொடுக்கும் பணம் எல்லாமே 'ராமூர்த்தி அய்யர் இரும்புகடை" என்னும் பிராண்ட்க்கு கொடுக்கும் பணம் தான் என்பதை ஒரு நல்ல வியாபாரியான திரு. ஏ டி எஸ். தமிழ்செல்வனும் நன்கு உணர்ந்தவர் தான்.

வாழ்க ராமூர்த்தி அய்யர் நிறுவனம், வாழ்க கீர்த்திவாசன் அண்ணன், வாழ்த்துக்கள் ஏ.டி.எஸ். தமிழ்செல்வன் சார்! கீர்த்தி அண்ணன், உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் நம் பள்ளியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர். நம் பள்ளி உங்கள் பள்ளி. எப்போதும் நீங்களும் உங்க பரம்பரையும் அதே பழைய நினைப்புடன் அதே பதவிகளை பள்ளியில் தொடர்ந்து இருந்து பள்ளியை மென் மேலும் வளரவைக்க வேண்டும்.

September 16, 2011

மயிலாடுதுறையில் சிறை சென்ற சிங்கங்கள்!!!

போராட்ட வீரர் திரு . வெற்றிச்செழியன் அவர்கள் "சமச்சீர்" வெற்றிச்செழியன் ஆகின்றார்
நகர்மன்ற தலைவர் லிங்கராஜனுக்கு சமச்சீர் விருது வழங்குபவர் மாவட்ட செயலர் ஏ கே எஸ் விஜயன்
நடுவே கைதட்டி கொண்டு இருப்பது தான் ரங்கன்மாமா

நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் சமச்சீர் விருது வாங்குகின்றார். அருகில் சீர்காழி மு.ச.ம.உ வக்கீல் பன்னீர்செல்வம்
வக்கீல் சேயோன் அவர்களுக்கு சமச்சீர் விருது
முன்னாள் ச.ம.உ ஜெகவீரபாண்டியனுக்கு சமச்சீர் விருது
தம்பி சத்யாவுக்கு (நகர் மன்ற து. தலைவர்) சமச்சீர் விருது
நா.முருகதாஸ் அவர்களுக்கு சமச்சீர் விருது
செந்தில் என்கிற சண்முகம் (33வது வார்டு பிரதிநிதி) சமச்சீர் விருது வாங்கிகுகின்றார்
நகர்மன்ற உறுப்பினர் ஆர். கே. சங்கர் அவர்கள் விருது வாங்கும் போது
சமீபத்தில் நடந்த சமச்சீர் கல்வி போராட்டத்தின் போது கிட்ட தட்ட எல்லா ஊர்களிலும் கைது செய்து ஒரு கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்து விட்டுட்டாங்க. ஆனால் எங்க மயிலாடுதுறையில் மாத்திரம் அங்கு போராடிய அத்தனை பேரையும் கைது செய்து அட்மாஸ் திருமண மண்டபத்தில் அடைத்த போது எண்ணிக்கை கிட்ட தட்ட ஆயிரத்தை தாண்டிவிட்டது. கிட்டதட்ட எல்லோருமே ஒரு மஞ்சள் பையில் மூன்று செட் வேட்டி சட்டை துண்டு, உள்ளாடைகள், ஒரு ரப்பர் ஸ்லிப்பர் (சிறையில் தண்ணீர் தொட்டிகள் புழங்க வேண்டுமே அதற்காக) ஒரு சைபால் டப்பா (இதும் முன்னெச்சரிக்கை தான். அங்கே கூட்டம் அதிகம் இருக்கும். இரவில் ஒரே செல்லில் நாற்பது பேர் வரை படுக்க வேண்டி இருக்கும், அங்கே ஒரு டாய்லெட் இருக்கும், அதை ஒரு மண் சட்டி கொண்டு மூடி இருப்பாங்க. இரவு இந்த நாற்பது பேரில் யாருக்காவது "அவசரம்" எனில் ஒரு அதிலே தான் போக வேண்டும். அதை மீதி 39 பேரும் வேடிக்கை பார்ப்பாங்க என்னும் நினைப்பிலேயே வெட்கத்திலேயே வந்ததும் உள்ளே போயிடும். அந்த தொல்லைக்காகவே ஒரு துண்டு எடுத்து தன் இரு கைகளாலும் மறைப்பு (விதை மறை காய் மறைவாங்க:-)) கட்டிக்கொண்டு போக வேண்டும். அந்த துர்நாற்றம் மீதி இருக்கும் 39 பேரின் தூக்கத்தையும் கெடுத்து விடும். அதனால் மாலை 5 மணிக்கு கொடுக்கப்படும் அச்சடித்த சோறு பட்டையையும் முள்ளங்கி சாம்பாரில் முள்ளங்கியை தூக்கி எறிந்துவிட்டும் சாப்பிட்டு தட்டை கழுவி நம் செலில் வைத்துவிட்டு உடனே பொதுக்கழிப்பிடம் போய் முக்கி முக்கி வந்தவரை ஏதோலாபம் என போய்விட்டு தான் "ரோல்கால்" பக்கம் ஓட வேண்டும். முள்ளங்கி சாப்பிட்டாம் இரவு ஒன்னுக்கு வந்து தொலையும். அதே போல மாலை 4 மணிக்கு கொடுக்கும் கடலை உருண்டை அல்லது வ்ந்த கடலை ஆகியவற்றை மடித்த்து வைத்து கொண்டால் இரவு பசிக்கும் போது சாப்பிடலாம், அல்லது அங்கே மிசா கதைகள் பேசுக்கொண்டே சாப்பிடலாம். ரோல்கால் முடிந்து மாலை ஆறு மணிக்கு செல்லின் உள்ளே போனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தான் அந்த கதவு திறக்கப்படும். இப்படியாக ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் அடக்கி வச்சு அடக்கி வச்சு கான்ஸ்டிபேஷன் வந்து அது எல்லாம் முற்றி மூலவியாதி வருபவர்களும் உண்டு. அதே போல கழிப்பிடம் சுத்தமின்மையால் படை சொறி போன்றவைகளும் நூறு சத உத்தரவாதம். அதனால் தான் சைபால் டப்பா.

மேற்படி விஷயம் எல்லாம் ரங்கன் மாமா போன்ற போராட்ட பழங்கள் எல்லாம் சொல்ல சொல்ல சின்ன வயது போராளிகள் குறித்து கொண்டனர். ஆனால் மதியம் இரண்டு மணி வாக்கில் "எல்லா ஊர்களிலும் வெளியே விட்டுகிட்டு இருக்காங்கப்பா" என தகவல் வர சிலர் அட்மாஸ் திருமண மண்டபத்தை விட்டு வெளியே வந்துவிட, மற்றவர்கள் " ஏய் மாப்ள கொஞ்சம் நில்லு. என் பையை வீட்டிலே கொடுத்துடு. அதான் நாங்க சாயந்திரம் வந்திடுவோம்ல" என சொல்லி பையை கொடுத்தனுப்பிவிட்டனர்.

ஆனால் மால ஆறு மணி ஏழு மணி எட்டு மணி ஆனதும் ஒரு சப் இண்பெக்டர் வந்து ஒரு 45 பெயர்களை படிச்சு, "நான் படிச்ச லிஸ்டுல இருக்குறவங்க மாத்திரம் இங்க இருங்க, மீதி எல்லாரும் ஓடுங்க" என சொல்ல ஒரே குழப்பம் அங்கே. இந்த 45 பேருக்கும் ஓரளவு புரிந்து போனது. "இங்க பாருங்கப்பா, இந்த 45 பேரும் உங்க செல் போனை எல்லாம் கொண்டு வந்து மேசை மேல வையுங்கப்பா என சொல்ல உடனே வக்கீல் சேயோன் அவரை நோக்கி " என்ன சார் விஷயம் என்னான்னு சொல்லுங்க" என கேட்க அவர் அதற்கு "உங்க 45 பேர் மேல வழக்கு போட்டிருக்கோம், அடிதடி, கொலைமுயற்சி, அரசாங்க ஊழியரை வேலை செய்யவிடாமல் தடுத்தல், அத்து மீறி கல்விக்கூடங்கள் மேல் நுழைந்ததும் இல்லாமல் மாணவர்களை தாக்கியும் பள்ளி சொத்தை சேதப்படுத்தியும்..." என அவர் அடுக்கி கொண்டே போக வக்கீல் சேயோன்... "சரி மொத்தம் எத்தனை செக்ஷன்? அதை சட்டுபுட்டுன்னு சொல்லுங்க. மாஜிஸ்ட்ரேட் கிட்டே எப்போ கொண்டு போகப்போறீங்க? அதுக்கு முன்ன நாங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு போன் செய்யனும்" என சொல்ல அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

எல்லார் வீட்டிலிருந்தும் அதே மஞ்சள் பை வந்தது. அதற்குள் திமுக சீனியர் வக்கீல் முருகு. மாணிக்கம் அண்ணனுக்கு தகவல் போய் அவரும் வந்தார். "யார் உங்களுக்கு புகார் கொடுத்தது? யாரை கொலை செய்ய இவங்க முயற்சி செஞ்சாங்க? என வரிசையாக கேட்க "அதிமுக நகர செயலர் செந்தமிழன் கொடுத்த புகார்" என சொல்லப்பட்டது. இரவு உணவு போலீஸ் கொடுக்க தயாராக இருந்ததா இல்லையா என தெரியாது, ஆனால் நகர திமுக சார்பாக 5 இட்லி கொண்ட பொட்டலம் கொடுக்கப்பட்டது. இரவு இரண்டு மணி வரை பேச்சும், குழப்பமுமாக இருக்க ஒரு பஸ் கொண்டு வந்து எல்லோரும் ஏற்றப்பட்டனர். எங்கே போகிறோம் எதற்காக போகிறோம் என யாருக்கும் எதும் புரியவில்லை. இரவு இரண்டு மணிக்கு அந்த வாகனம் புழுதி கிளப்பி போகும் போது அந்த 45 பேரில் பலர் 24 மணி நேரம் முன்பாக அதே சாலையில் திமுக கொடிகள் கட்டிக்கொண்டும் , சுவர் விளம்பரம் செய்து கொண்டும் அடுத்த நாள் நடக்க இருக்கும் போராட்டம் பற்றி அதை வென்றெடுக்க வேண்டும் என்கிற வெறியுடன் வேலை செய்து விட்டு "உன்னிடம் காசு இருக்கா? என் கிட்டே 20 ரூபா இருக்கு, பத்து டீ வாங்கியாயேன்" என பகிர்ந்து குடித்த டீ ஞாபகம் வர வைத்தா டீக்கடை கடந்து போனது இவர்கள் பேருந்து. இரவு முழுக்க அப்படி கண் விழித்து விட்டு காலை 5 மணிக்கு போய் படுத்து 8 மணிக்கு போராட்டத்துக்கு வந்து இதோ இந்த இரவு 2 மணிக்கு எங்கே போகிறோம், எத்தனை நாள் சிறைவாசம் என தெரியாமல் போய் கொண்டு இருந்த அந்த திமுக தொண்டனுக்கு முகம் தான் சோர்வாக இருந்ததே தவிர இதயம் சிரித்து கொண்டு இருந்தது. தலைவனின் கட்டளையை போராட்டத்தை வெற்றியாக்கிய மமதை மனதில் எக்காளமிட்டு கொண்டிருந்தது.

பேருந்து போய் நின்ற இடம் ஒரு பெண் நீதிபதி வீடு. அவங்க வரிசையாக பெயரை படித்து விட்டு நீங்க இன்னன்ன குற்றம் செஞ்சு இருக்கீங்கன்னு புகார். இது சம்மந்தமா எதும் சொல்றீங்களா? என கேட்க வக்கீல் சேயோன் "கேஸ் ஆடுறோம்மா. ஏன்னா நாங்க எந்த குத்தமும் செய்யலை" என சொல்ல அதற்கு நீதிபதி அம்மையார் "அப்படின்னா உங்க எல்லாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கிறேன்" என சொல்ல டப்பு டுப்புன்னு எழுதிய பழுப்பு அரசாங்க காகிதம் மதிப்பிற்குரிய காகிதமாக ஆகி, அரசாங்க முத்திரை, பச்சை கையெழுத்து என அரசாங்க ஆவணம் ஆகியது. அதற்கு ஐந்து நிமிடம் வரை சாதாரண காகிதம் இப்போது ஒரு 45 பேரை சிறையில் அடைக்கும் கொடிய வஸ்துவானது.

பேருந்து திருச்சி மத்திய சிறை நோக்கி போனது. காலை 6 மணிக்கு திருச்சி மத்திய சிறை. வரிசையாக பெயர்கள், அப்பா பெயர், அம்மா பெயர், சாதி, வீட்டு விலாசம், உட்பட சகல குறிப்பும் எடுக்கப்பட்டு கைரேகை உருட்டப்பட்டு, அரைஞான் கயிறு அறுக்கபட்டு, கையிலே போட்டிருந்த மோதிரம், கடிகாரம் கழட்டப்பட்டு, மூக்கு கண்ணாடி மட்டும் அணிந்த, வேட்டி சட்டை கட்டிய அம்மண மனிதனாக உள்ளே போயினர் அந்த 45 உடன்பிறப்புகளும்.

ஒரு வாரம் பின்னர் ஜாமீனில் வெளியே வந்து இப்போது வழக்கு நடக்கின்றது. கடந்த 07/09/2011 அன்று அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் மாவட்ட செயலர் ஏ கே எஸ் விஜயன் தலைமையில் சிறை சென்ற சமச்சீர் தொண்டர்களுக்கு பாராட்டு விழாவும் கேடயமும் வழங்கப்பட்டது.

நகரச்செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ், நகர்மன்ற தலைவர் லிங்கராஜன், துணைத்தலைவர் தம்பி சத்யா, முன்னாள் ச.ம.உ ஜெகவீரபாண்டியன், நா. முருகதாஸ். ஆர்.கே.சங்கர், செந்தில் என்கிற ப. சண்முகம், நகர அவைத்தலைவர் டி எஸ் கே , வக்கீல் சேயோன், செட்டியார் சீனுவாசன், தங்கபாண்டியன், செந்தில் என எல்லோர் முகத்திலும் சிறைக்கு சென்று வந்த கவலை எதும் இல்லை. இனி அவர்களின் பெயர் முன்னே "சமச்சீர்" என்னும் பட்டம் தானாக ஒட்டிக்கொண்டது. யாரும் கொடுக்கவில்லை. தானாக வந்து ஒட்டிக்கொண்டது அந்த "சமச்சீர்" பட்டம்! வாழ்க அந்த உடன்பிறப்புகள்!


September 13, 2011

திரும்பிப்பார்!!!




குடியரசுதலைவர் - ஜனாதிபதி தேர்தலுக்கு அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் கூட ஓட்டு போட வேண்டும் என்பது குப்பனுக்கும் சுப்பனுக்கும் தெரிந்திருக்கும் அளவுக்கு சில அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அப்பாடக்கர்களுக்கு ஏனோ தெரிவதில்லை, அல்லது தெரியாதது போல இருக்கின்றனர். ஏனனில் கலைஞரின் ஆதிக்கம் என்பது தமிழக மற்றும் இந்திய அரசியலில் தன் கணக்கை துவங்கிய வருடம் 1957. ஆம் 1957 முதலே சட்டமன்ற உறுப்பினர் இந்தியாவின் இந்த மூத்த பழுத்த அரசியல்வாதி. அதை சொன்னால் ஏனோ எட்டிக்காயாய் இருக்கின்றது சிலருக்கு. சமீப காலமாக கலைஞரை பற்றிய வசவுகள் இணைய ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் போது இப்போது கலைஞரின் பெருமைகள் அடங்கிய ஒரு எஸ் எம் எஸ் சுற்றி வருவது கலைஞர் எதிர்ப்பாளர்களுக்கு எரிச்சலை உண்டு செய்துள்ளது. சமகால அரசியல் நிகழ்வுகளையே அரைத்து கொண்டிருப்பவர்களிடம் நான் சொல்கிறேன், அதே கலைஞரின் வார்த்தைகளில் .... திரும்பிப்பார்...

1957ல் கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. குடியரசு தலைவர் தேர்தல் வருகின்றது. எப்போதும் போல வடநாட்டவர் போட்டி. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தெய்கின்றது என்கிற மனக்கிலேசம் தென்னகத்தில் பரவலாக இருந்த நேரம் அது. அண்ணாவின் தலைமையில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என முடிவெடுக்கின்றது. ஆனால் அப்போதைய மத்திய அரசுக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஒரு பொருட்டல்ல. அவர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் பிற்காலம் எப்படி ஆகும் என்று அவர்களுக்கு அப்போது கணிக்க தெரியவில்லை, கணிக்க வேண்டிய அவசியமும் நேருவுக்கு நேரவில்லை அப்போது.

ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீருசேன் மறைவையொட்டி நடக்க இருந்த குடியரசு தேர்தலில் திமுகவும் , கலைஞரும் அந்த தேர்தலில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முக்கிய ஆளுமையாக இருந்தனர் என்பதை தான் சொல்ல வருகின்றேன்.

மத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை. பாபுஜெகஜீவன்ராம் அதாவது இப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தந்தையார் தலித் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பது இந்திராகாந்தியின் சாய்ஸ். ஆனால் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தன் தென்னிந்தியாவை சேர்ந்த நீலம் சஞ்சீவரெட்டியை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என பிடிவாதம்.

பிரச்சனை என்று வந்தாகிவிட்டது. கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி யார் வேட்பாளர் என முடிவு செய்யலாம் என காங்கிரசின் ஆட்சிமன்ற கூட்டம் நடந்து ஓட்டெடுப்பும் நடந்து நிஜலிங்கப்பாவின் ஆதரவு பெற்ற நீலம்சஞ்சீவரெட்டி தேர்வானார். அது வரை எல்லாம் நல்லா தான் போய்கொண்டு இருந்தது. கலைஞர் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த ஆளுமை தெரியாதவர்களே! நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் ? கலைஞர்!

அப்போது துணை ஜனாதிபதி மற்றும் ஆக்டிங் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி தான் போட்டியிட போவதாக அறிவிக்கிறார். ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டிய பதவி இப்போது தேர்தல் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சிகள் ஒன்று கூடின. பலரும் பல கருத்துகளை சொல்ல கலைஞர் ஜெயப்ரகாஷ்நாராயணன் நிற்கட்டும் என்கிறார். இப்படியாக எல்லோரும் கூடிக்கூடி பேசுவது காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டிக்கு சாதகமாக அமையகூடிய சூழல். காலம் கடந்து போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலைஞர் ஒரு அறிவிப்பு செய்கின்றார். திராவிட முன்னேற்ற கழகம் ஜனாதிபதி தேர்தலில் வி. வி. கிரி அவர்களை ஆதரிக்கும் என்று.

ஆக தேர்தலில் மந்திய ஆளும் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவரெட்டியும் எதிர்கட்சிகள் சார்பாக வி.வி. கிரியும் வேட்பாளர்கள். அப்போதைய பாஷையில் சொல்லப்போனா அபேட்ஷகர்கள். இந்திரா ஒரு அறிவிப்பு செய்தார் புத்திசாலித்தனமாக. கொறடா உத்தரவு போட மாட்டார். தங்களுக்கு இஷ்டமானவர்களுக்கு ஓட்டு போடலாம் என தன் கட்சிகாரர்களுக்கு உத்தரவு போடப்படுகின்றது. தேர்தல் முடிந்தது. வி.வி.கிரி வெற்றி பெற்று குடியரசுதலைவர் ஆகின்றார். தமிழ் தெரிந்த ஒருவர் ஆகின்றார். முதல் நன்றியே கலைஞருக்கு தான் சொல்கின்றார்.

ஆக அந்த குடியரசு தலைவர் தேர்தலில் கலைஞரின் ஆளுமை இருந்ததா இல்லியா? முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா? ஆளும் மத்திய அரசின் வேட்பாளரை தோற்கடித்து எதிர்கட்சி வேட்பாளர் வி வி கிரி அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைத்தவர் கலைஞரா இல்லியா?

அதன் பின்னர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதியாக ஆனார். அதற்கு அவருக்கு கலைஞரின் உதவி தேவைப்பட்டது. கலைஞருக்கு கடிதம் எழுதினார். ஆதரவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதவி காலம் முடிவடையும் போது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது இந்திராவின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார் கலைஞர். அப்போது இந்திராவின் மனதில் இருந்த இருவர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் நரசிம்மராவ். நரசிம்மராவ் வேண்டாம் என கலைஞர் மறுத்த காரணம், ஏற்கனவே பதவில் இருந்து வருபவர் ஆந்திராவை சேர்ந்தவர், மீண்டும் ஆந்திராவை சேர்ந்தவர் வந்தால் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்பும் தேவையில்லாமல் தாங்க வேண்டும், அதே போல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கலைஞருக்கு ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இருக்காது. அதற்கான காரணம் 1980 சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமைன் பொறுப்பற்ற பேச்சுகள் என்று மனதில் நினைப்பு. ஆனால் அதை காரணமாக இந்திராவிடம் சொல்லாமல் பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர்சாதியாக இருப்பதால் மக்களிடம் ஒரு வித இறுக்கம் தென்படும் , எனவே பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்த கியானிஜெயில்சிங் ஒரு சிறுபான்மை மதத்தையும் சேர்ந்திருப்பதால் அவரையே குடியரசு தலைவர் ஆக்கலாம் என சொல்லி அதற்கு திமுக, அதிமுக என ஆதரவும் கொடுத்து ஜனாதிபதியாக்கினார். பின்னர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி ஆன பின்னே இந்தியாவுக்கு பிடித்த பீடையாக பல கெட்டகாரியங்கள் நடந்தன என்பதும் வரலாறு. கலைஞர் முன்பு ஆர்.வெங்கட்ராமனை ஜனாதிபதியாக ஆக்காமைக்காக தன் நன்றிக்கடனை கூட ஒரு ஹிண்டுவில் வந்த வாசகர் கடிதத்தை வைத்தே திமுக ஆட்சியை கலைத்து தன் மனக்காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் என்பதும் வரலாறு.

ஆக கலைஞரின் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்ததா இல்லையா என்பதை சும்மா சிரித்து வைப்போமே என சிரித்து வைப்பவர்களை விட சரித்திரம் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுக்காக எழுதி வைத்தோம் என்னும் மனதிருப்தியுடன் எழுதுகிறேன்.

இதோ இந்த பதிவிற்கு காரணமாக இருந்த எஸ் எம் எஸ் செய்தி!

\\கோடிக்கணக்கான ரசிகர்கள்
70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்
80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75 திரைப்படங்கள்
72 ஆண்டுகால பொது வாழ்க்கை
70 ஆண்டுகாலமாக பத்திரிகையாளர்
65 ஆண்டுகால கலைத்துறை பங்களிப்பு
60 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றி
50 ஆண்டுகாலமாக சட்டசபை பணிகள்
18 ஆண்டுகாலம் தமிழக முதல்வர்
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை
3 தமிழின் நாயகன்
என்றும் தமிழினத்தின் தலைவர்
ஒரே கலைஞர்

அப்போது ஆரம்பித்த கலைஞரின் ஆளுமை, குடியரசு தலைவர் தேர்தலில் இன்று வரை தொடர்கின்றதே, அது பற்றியும் இந்த பதிவிலே சொல்ல ஆசை தான். பதிவின் நீளம் கருதி அதை எல்லாம் தனிப்பதிவாக இட இருக்கின்றேன்!


நன்றி: திராவிட இயக்க வரலாறு - பாகம் 2 ஆசிரியர் ஆர். முத்துக்குமார் மற்றும் பழகிய பழைய திமுக பெரியவர்கள்

August 7, 2011

புதிய தலைமை செயலகத்தின் இருட்டு ஜெயாவின் அகங்காரத்துக்கு போடப்பட்டுக் கொள்ளப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்பு!!!

(நன்றி: தி ஹிண்டு, எஸ். ஆர். ரகுநந்தன், தி ஹிண்டு 7.8.2011)



இன்றைய "தி ஹிண்டு" நாளிதழில் ஒரு அருமையான போட்டோ இட்டு ஒரு கட்டுரை வந்துள்ளது. அதன் லிங் போக இங்கே அமுக்கவும். அதாவது திமுக அரசால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், சென்னை மத்தியில் ஒரு முக்கியமான இடத்தில் எபடி இப்போது சீரழிந்து வருகின்றது என்பதற்கு சாட்சியாக அந்த கட்டுரை.

நேற்று நம் சக பதிவரான சக்தி செல்வி அவர்கள் கூட இது சம்மந்தமான ஒரு விஷயம் கூகிள் பஸ்ல் பகிர்ந்து கொண்டார்கள். அதன் சுட்டிக்கு செல்ல இங்கே அழுத்தவும். அந்த புதிய தலைமை செயலகத்தின் சிறப்புகள் பற்றி முன்பே ஒரு சக பதிவர் திரு. கீதப்பிரியன் எழுதிய ஒரு லிங் போக இங்கே அழுத்தவும்.

புதிதாக அமைந்த அதிமுக அரசு மாணவர்கள் மீது அதன் பெற்றோர்கள் மீது தன் ஈகோவை செலுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும்.பரவலாக எல்லா நடுநிலைவாதிகளாலும் இது இப்போது இந்த சமச்சீர் கல்வி விஷயத்தில் தெரிந்து விட்டது. ஆனால் அதே போலவே தான் மற்ற எல்லா விஷயங்களிலும் நடந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

ஒரு சாதாரண வீடு கூட ஒரு வாரம் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்களேயானால் அங்கே வெளிச்சமோ, ஆள் நடமாட்டமோ இல்லையெனில் பெருச்சாளி புகுந்து நாசம் செய்யும். அதுவும் அந்த கட்டிடத்தின் உள்ளே இருக்கும் மீன் தொட்டி மீன்கள் எல்லாம் இன்னேரம் பூனை சாப்பிட்டிருக்கும். ரொம்ப மனசுக்கு கஷ்டமான ஒரு விஷயம். எது எதுக்கோ போராட்டம் நடத்தும் திமுக இதற்காக நடத்தாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அந்த கட்டிடம் இருட்டாக இருட்டாக அந்தம்மாவின் அகங்காரம் வெளிச்சம் போடப்படுது மக்கள் மனதிலே, அதனால அப்படியே போகட்டும்னு விட்டுட்டாங்க போலிருக்கு:-( ஒரு பொதுவான நடுநிலைவாதிகளும், அதிமுக ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும் கூட இந்த விஷயத்தில் இப்படி வேதனைப்படுவது என்றால் அந்த கட்டிடத்தின் நிலை என்ன இப்போது என நன்றாக உணர முடிகின்றது:-(

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஒரு தலைமைச்செயலக கட்டிடத்தை தன் சொந்த ஈகோவால் இப்படி பாழ் செய்யும் அந்த கட்டிடத்தை "வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் " என ஆலோசனை கேட்டு "தி ஹிண்டு" அறிவிக்கும் அளவு நம் வரிப்பணம் என்பது நாதியற்றுப்போனதை நினைத்து வேறு வழியில்லை... அமைதியாக அழத்தான் முடியும்.... தலைமைச்செயலக மீன் தொட்டியில் இருக்கும் மீன்களைப்போல. தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்??

நேற்று திருவாரூர் பொதுகூட்டத்திலே துரைமுருகன் பேசிய பேச்சு:

\\ அந்த புதிய தலைமை செயலகம் கட்டும் போது ஒரு நாள் கலைஞர் எங்களிடம் "தினம் தினம் என் ரூமையே கொண்டு வந்து காட்டுகின்றீர்களே, அந்தம்மா ஜெயலலிதா - எதிர்கட்சி தலைவர் ரூமை கொண்டு போய் காட்டுங்கய்யான்னு சொல்ல அந்த சர்க்கர நாற்காலி அங்கே திருப்பப்பட்டது. அந்த ரூமுக்கு வெளியே "கோ க மணி அறைக்கு போகும் வழி" என ஒரு அம்புக்குறி போடப்பட்டு அந்த அம்பு இந்த அம்மையார் ரூமை சுட்டிகாட்டுவது போல அம்புபாய்வது போல இருந்தது, உடனே இவர் "முதலில் அந்த அம்புக்குறியை அகற்றிவிட்டு ஜெ.ஜெயலலிதா என்ற போர்டை மாட்டுங்கப்பா என உத்தரவிட்டுவிட்டு உள்ளே போய் பார்த்து விட்டு "இது போதாது, இன்ன்னும் ரெண்டு ரூம் போடுங்க, என் அறை முதல்வர் அறை எப்படி இருக்கோ அதே போலத்தான் அந்தம்மா அறையும் இருக்க வேண்டும்" என உத்தரவிட்டார்...\\ ஊடகங்கள் நேற்று திருவாரூரில் அதே கூட்டத்தில் கலைஞர் சொன்னது போல "கோந்து" போட்டு வாயை மூடிக்கொண்டு இருக்கின்றன. ஹூம்... வாழ்க ஜனநாயகம்!


புதிய தலைமை செயலகத்தின் இருட்டு ஜெயாவின் அகங்காரத்துக்கு போடப்பட்டுக் கொள்ளப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்பு!!!

July 18, 2011

சுழல்நிதி (வருங்கால முதல்வர்) S/o கருணாநிதி (முன்னாள் முதல்வர்) - ரங்கன் மாமா அதிரடி பேட்டி!!!

தேர்தல் ரிசல்ட் வந்த பின்னே ரங்கன் மாமாவை பார்த்தது. நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே என நினைத்து கொண்டிருந்த போதே "என்ன மாப்ள? புது ஆட்சி எப்படி இருக்கு?" என கேட்டபடி வந்தாரு. "அடடே என்ன மாமா நானே உன் கிட்டே கேட்க இருந்தேன். அதை நீ என்கிட்டே கேக்குறியே. சரி திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கு? திமுகவின் தலைமைக்கு அடுத்தது யாரு? திமுக மேலே கேஸ் எல்லாம் எப்படி போகுது? சமச்சீர் கல்வி பத்தி உன் கருத்து என்ன மாமா? என கேட்டதும், "என்ன மாப்ள, என்னை கைரேகை பார்ப்பவன் ரேஞ்சுக்கு ஆக்கிட்ட. சரி உனக்கு என்ன என்ன கேட்கனுமே வரிசையா கேளு. தெரிஞ்சா சொல்றேன்" என சொல்ல வரிசையா கேட்க ஆரம்பிச்சேன்.

அபிஅப்பா: போன ஆட்சில கலைஞர் ஆட்சியிலே சிறந்த திட்டம் எது மாமா?

ரங்கன்: ஒரு ரூபாய் அரிசி திட்டம் தான் மாப்ள! இனி உலகில் யாராலும் ஒரு ரூபாய்க்கு அரிசி போட முடியாது. உலகிலேயே கலைஞர் மட்டுமே திரும்பவும் சொல்றேன் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் அரிசி இனி எவனாலும் வியாபாரம் செய்ய முடியாது.

அபிஅப்பா: ஹி ஹி மாமா முதல் கேள்வியிலேயே நீங்க அவுட் மாமா. அதான் இந்தம்மா அதை சும்மாவே போடுதே. பின்னே என்ன ரொம்ப பெருசா அலட்டிகிறீங்க?

ரங்கன்: மாப்ள! நான் சொல்றதை நல்லா கவனி. அந்தம்மா போடுவது இலவச அரிசி. அது ஏற்கனவே இருந்த ஒரு திட்டம். அனாதை அரிசி திட்டம். அனாதைகளுக்கு ஓ ஏ பி திட்ட அரிசி என மாதம் பத்து கிலோ இலவசம் உண்டு. இந்தம்மா செஞ்சது அந்த திட்டத்தின் விரிவாக்கம் மட்டுமே. இப்ப மதிய உணவு கொண்டு வந்தது யாரு? காமராசர். அதை இன்னும் விரிவா செயல்படுத்தியது பாரு? எம் ஜி ஆர். அதை முட்டை, வாழைப்பழம் என சத்துணவா ஆக்கினது கலைஞர். அதாவது காமராசர் கொண்டு வந்த ஒரு திட்டத்தின் விரிவாக்கம் தான் அது. அதே போல ஓ ஏ பி அனாதை அரிசி திட்டத்தின் விரிவாக்கம் தான் இது.ஆகவே அதன் கிரடிட் முன்னாள் முதல்வருக்கு மட்டுமே போகும். மத்தபடி நான் மேலே சொல்லியிருப்பதை கவனி. குறைந்த விலையில் ஒரு ரூபாய்க்கு அரிசி 'விற்பனை" செய்தது கலைஞர் மட்டுமே. இனி அந்தம்மா வந்து நான் 50 பைசாவுக்கு போடுகிறேன் என சொன்னாலும் செல்லாது. ஏன்னா 50 பைசாவே இனி செல்லாது என்கிற போது அந்த 50 பைசாவுக்கு ஒரு கிலோ என்று சட்டப்படி கொண்டு வர முடியாது:-))

ஒரு ரூபாய்க்கு அரிசி என்ற போது புழுத்து போன அரிசியை ஒரு ரூபாய்க்கு விற்று அதையும்வாங்கி தின்னும் அளவு மக்களை ஏழைகளாக வைத்திருப்பவர் கருணாநிதி என மேடையில் முழங்கிய சீமான்கள் இப்போது "அனாதைகளை அதிகமாக்கிய அம்மா வாழ்க" என முழங்கினாலும் ஆச்சர்யம் இல்லை.

அபிஅப்பா: இப்படில்லாமா எடக்கு மடக்கா சிந்திப்பீங்க? சரி விடுங்க. மாமா, திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? திமுகவின் அடுத்த தலைமை எப்படி அல்லது யார்? எதிர் வரும் பொதுக்குழுவிலே எதுனா காரசாரமா இருக்குமா?

ரங்கன்: திமுகவின் எதிர் காலம் எப்படி இருக்கும் என இப்ப நேத்து இல்ல. 1957 முதலே கேட்டுகிட்டு தான் இருக்காங்க. 1957 முதன் முதலாக திமுக தேர்தலை சந்தித்தது. அப்போ திமுக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை தெரியுமா? சொன்னா நம்ப மாட்ட. இதோ இப்ப போட்டியிட்டோமே 124 தொகுதிகள்... அதே நம்பர் தான். திமுக முதன் முதலாக போட்டியிட்ட தொகுதி 124. அதிலே ஜெயிச்சது 15, அப்போ பார்லிமெண்ட்க்கு 11 தொகுதில நின்னு 2 தொகுதில ஜெயிச்சோம். அப்போ காங்கிரஸ்காரன் எல்லாம் திமுகவின் எதிர்காலம் என்ன? என கேட்ட தொணிக்கும் இப்போ அதே போல 124 தொகுதில நின்னு 24 ஜெயிச்ச போது நீ திமுகவின் எதிர்காலம் என்ன என்று கேட்கும் தொணிக்கும் வித்யாசம் இருக்கு. அப்போ திமுகவின் அசுர வளர்ச்சியால் கேட்டாங்க மத்தவங்க. இப்ப திமுகவின் மீதான ஒரு சலிப்பினால் நீ கேட்கிறாய் திமுகவின் எதிர்காலம் என்ன என்று. நான் உறுதியா சொல்றேன் கேளு. திமுக தன் அடுத்த தலைவனை தானே தேர்ந்தெடுத்து கொண்டு விட்டது. அவன் தலைமையிலே பீடு நடை போடத்தொடங்கியாச்சு. திமுகவுக்கு அழிவு என்பதே இல்லை.

தேர்தல் போரில் "தளபதி"யாக இருந்த நம் ஸ்டாலின் இன்று படைக்கு தலைமை ஏற்கும் நிலைக்கு தானாகவே வந்தாகிவிட்டது. மலை குலைந்தாலும் நிலை குலையாத என் தலைவன் எந்த தேர்தல் தோல்வியிலேயும் அடுத்த நாள் புள்ளி விபரம் கொடுத்து தொண்டனை துவளச்செய்யாத தலைவன் அமைதி காக்கும் நேரம்... என்ன செய்வது என தொண்டன் குழம்பிய நேரம் தளபதி ஸ்டாலின் தன் தொகுதி மக்களை காண நன்றி சொல்ல எப்போ துண்டை முறுக்கி தோளிள் போட்டு கொண்டு கிளம்பினானோ அந்த நேரம் மிகச்சரியாக குறிப்பிட்டால் அந்த நேரம் அவன் எம் தலைவனாகிவிட்டான். "ராஜா வீட்டு கன்னுக்குட்டி எஜமான் ராஜாவாக இருக்கும் போது மட்டும் துள்ளும், ஆனால் நான் காயம் பட்ட தலைவனின் தளபதி.. இப்போது அதிகமாக என் கடமையை செய்வேன் என சீறிக்கிளம்பினானோ.. எம் கட்சிக்கு அடுத்த தலைவன் உண்டாகிவிட்டான்.

தனக்கு கட்சிப்பொறுப்பு கொடுக்கப்பட்ட போதும் சரி, ஆட்சிப்பொறுப்பு கொடுக்கப்பட்ட போதும் சரி தனக்கான பதவியை அலங்கார நாற்காலியாக பயன் படுத்தாமல் முள்கிரீடமாக அணிந்து சுற்றி சுழண்டு வந்தானே இதோ என் அடுத்த தலைவன் தயாராகிவிட்டான்.

மாப்ள! உனக்கு ஒரு சேதி தெரியுமா? தெஷ்ணாமூர்த்தி கருணாநிதி ஆனார். ஆனால் அவரை தவிர அவர் பெற்ற பிள்ளைகளுக்கு நிதி விகுதி இல்லை. முத்து,அழகிரி, ஸ்டாலின், தமிழரசு... இவைகள் தான் பெயர். ஆனால் தன் பேரப்பசங்க எல்லாருக்கும் நிதி விகுதி உண்டு. கலைஞரே தன் மகன்களுக்கு நிதி விகுதி கொடுக்காவிட்டால் என்ன, நாங்கள் தருகிறோம் நிதி விகுதி என நினைச்சாங்க .. யார் திமுக தொண்டர்களா? இல்லை... தமிழக பெண்கள். ஆமாம் எப்போ அவர் 385 மணி நேரம் நின்று கொண்டே தமிழக தாய்குலங்களுக்கு "சுழல் நிதி" கொடுத்தாரோ அன்றே அவர் நிதி விகுதிக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். ஆமாம் இனியும் அவர் நமக்கு தளபதி இல்லை. "தலைவன் சுழல்நிதி(எதிர்கால முதல்வர் ) S/o கருணாநிதி( முன்னாள் முதல்வர்)"

அபிஅப்பா: என்ன மாமா திடீர்ன்னு பட்டம் எல்லாம் குடுத்துட்டீங்க? சுழல்நிதி கொடுத்தாரு. அது ஒரு அரசு திட்டத்தின் ஒரு செயல்பாடு அத்தனையே. அதுக்கு ஏன் அத்தனை ஒரு முக்கியத்துவம்?

ரங்கன்: மாப்ள! பட்டம் என்பது ஒரு பேப்பரில் அச்சடித்து கண்ணாடி சட்டம் போட்டு சால்வை போர்த்தி கையிலே கொடுப்பது மட்டும் இல்லை. ஒரு ஸ்பார்க். ஒரு பொறி தான். அதுவே பட்டமாக ஆகும் வரலாறு திமுகவில் நிறையவே உண்டு. "நடமாடும் பல்கலைகழகம்" என அண்ணா ஒரு மேடையில் சொன்னார் எங்கள் நெஞ்செழியனை பார்த்து. அது பட்டமாகிப்போனது. அது போலவே "நாவலர்". அதே போல ஒரு முறை மனோகரனை " வாய்யா நாஞ்சிலாரே" என அழைத்த போது அன்று முதல் அவர் நாஞ்சிலார் ஆனார். இது போல இப்போது கூட கலைஞர் ஒரு மேடையில் பெரியசாமியை "இவர் என் முரட்டு பக்தர்" என சொன்னது பட்டமாகி போனது. இதே தளபதி ஒரு பொதுக்கூட்டத்தில் அய்யா பெரியார், அண்ணாதுரை ஆகிய பெயர்களை கலந்து எனக்கு அய்யாதுரை என முதலில் பெயர் சூட்டினார் தலைவர் என பேசப்போக அது கூட இப்போது தளபதிக்கு பட்டமாகிப்போனது. நான் இப்போது சொல்கிறேன். தலைவர் சுழல்நிதி, தலைவர் சுழல்நிதி, தலைவர் சுழல்நிதி வாழ்க வாழ்க வாழ்க!
மாப்ள! நீ சொல்வது போல சுழல்நிதி என்பது மகளிர் சுய உதவிக்குழுவின் ஒரு சாதாரண செயல்பாடு தான். ஆனால் அதையே அசாதாரணம் ஆக்கியது தலைவர் சுழல்நிதி அவர்கள்!நல்லா நினைச்சுப்பாரு. என் தலைவன் சுழல்நிதி 385 மணி நேரம் நின்று கொண்டே அந்த நிதி ஒரு ஒரு பெண்ணுக்கும் சுய உதவி குழு பெண்ணுக்கும் வழங்குகிறார். அப்படின்னா எத்தனை தொகை வழங்கி இருப்பாரு சொல்லு பார்ப்போம்.

அபிஅப்பா: தெரியலையே மாமா. எத்தனை கோடி இருக்கும்? அப்படி எத்தனை பெண்களுக்கு குடுத்து இருப்பாரு. ம்ம் டேட்டா கலக்ட் பண்ணிட்டு சொல்றேன்.

ரங்கன்: மாப்ள! நாம என்ன இந்தியாவோட பட்ஜெட்டா போடப்போறோம் நம்ம அப்பச்சி மாதிரி. பக்கத்துல இருக்கும் பி ஏவை கேட்கனுமா இதுக்கு? இப்படித்தான் பாரதியாரு ஒரு தெருக்கூத்து பார்த்துகிட்டு இருந்தாரு. அப்போ மகாராஜா மந்திரியை பார்த்து " மந்திரி மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என கேட்க கூட்டத்தில் இருந்த பாரதி " அந்த எழவு கூட தெரியாம நீ என்னத்துக்கு நாட்டை ஆண்டுகிட்டு இருக்கே"ன்னு சத்தம் போட்டு கத்திகிட்டே எந்திரிச்சு போயிட்டாரு. அது போல நாம திமுககாரன்! தானே கணக்கு போட்டுக்கனும். அப்பச்சி வாயால கணக்கு போடுறாருன்னா நாம கண்ணால கணக்கு போடனும் மாப்ள.

இப்ப தலைவர் சுழல்நிதி 385 மணி நேரம் நின்னுகிட்டே சுழல்நிதி தலா பத்தாயிரம் கொடுத்தாரு. இது மேட்டரு. 385 மணி நேரம்ன்னா 23000 நிமிஷம் ஆச்சு. அதாவது கிட்ட தட்ட 14 லட்சம் வினாடி ஆகுது. ஒரு துணை முதல்வர் ஒரு பெண்மணிக்கு நேரிடையா நிதி கொடுக்க 3 வினாடிக்கு மேல அதிகாரிங்க விட மாட்டாங்க தானே. அப்படின்னா நாலே முக்கால் லட்சம் பெண்களுக்கு கொடுத்திருக்காரு. அதாவது அதையும் தாண்டி பயனாளிகள் இருக்கலாம். ஆனா அவரு நேரிடையா கொடுத்த பெண்கள் 5 லட்சம் ஆகுது. ஒருத்தருக்கு பத்தாயிரம்னா 500 கோடி ரூபாய் வருது மாப்ள! அதாவது 5 லட்சம் குடும்ப பெண்கள் இது வரை 2 ரவுண்டு வாங்கி திருப்பி குடுத்தாச்சு. அப்படின்னா 1500 கோடி ரூபாய் சுத்தி வந்துடுச்சு. 1500 கோடி ரூபாய் பணப்புழக்கம் தமிழகத்துல இருந்துச்சுன்னா.. அதும் குடிக்காத அதாவது மதுஅருந்தாத பெண் இனத்து வசம் 1500 கோடி சுத்துச்சுன்னா..... இப்ப சொல்லு மாப்ள... நம்ம தலைவர் சுழல்நிதி தானே? மாசத்துக்கு 30 நாள். அவர் பொண்டாட்டி புள்ளய்ங்க கூட இருப்பது 4 நாள். மீதி நாள் எல்லாம் தமிழகத்தில் மூலை முடுக்கு எல்லாம் சுற்றி சுழண்ட சுழல்நிதி தானே அவரு? இப்ப சொல்லு.. தவிர எனக்கு தெரிஞ்சு எத்தனை பெண்கள் ஒயர் கூடை பின்றாங்க, முறுக்கு சுட்டு விக்கிறாங்க, கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் இடத்துக்கு போய் புளிசாதம் பொட்டலம் 10 ரூபாய்க்கு விற்கும் பெண்கள் எனக்கு தெரியும். அத்தனை ஏன்? யாரோ சொன்ன மாதிரி "வெறும் கை என்பது கோழைத்தனம்.. விரல்களே மூலதனம்"ன்னு சொன்ன மாதிரி ஒரு மாற்றுத்திறனாளி பொண்ணு இந்த போன் கார்டு எல்லாம் 5 மொபைல் போன் வாங்கி வச்சுகிட்டு அதுக்கு போன் செஞ்சா போதும் ராத்திரி ஆனாலும் சரி "ஈசி" பண்ணிட்டு (அடுத்த நாள் அதுவே வந்து காசு வாங்கிக்கும்) தினத்துக்கு 250 ரூவா சம்பாதிக்குது. அதுக்கு போன், விரல்... சுழல்நிதி இதான் மூலதனம்.. தான் வாழ எவனையும் நம்பலை அது!

அபிஅப்பா: வாவ்... மாமா ஒரு திட்டத்தின் மதிப்பீட்டு தொகையை இப்படிக்கூட மதிப்பீடு செய்யலாமா? அதல்லாம் சரி மாமா. சுழல்நிதி என்பது எல்லாம் சரி தான். இந்தம்மா நாளைக்கே சும்மா இருக்காது. எதுனா கேஸ் போடும் .உள்ள வைக்கும். அப்ப வலையுலகம் வலையுலகம்னு ஒன்னு இருக்கு. அதுல மணீஜி மணீஜின்னு ஒருத்தர் இருக்காரு. மாயவரத்தான்னு நம்ம ஊர்காரரு இருக்காரு. உடனே சுழல்நிதி இப்போ புழல்நிதி ன்னு ட்விட்டுவாங்க. உடனே அதை ஆனந்தவிகடன்ல போட்டு ஆனந்தப்படுவாங்களே மாமா!

ரங்கன்: படிச்சவன் பாட்டை கெடுத்தான். எழுதினவன் ஏட்டை கெடுத்தான். எனக்கு உங்க உலகம் எல்லாம் தெரியாது. ஆனா ஒன்னு! தப்பு செஞ்சா தண்ணி குடிக்கனும். வைக்கோவை சைக்கோன்னு சொன்னீங்கதானே! அப்ப சிரிச்சோம் தானே ரைமிங்கா இருக்கேன்னு. அப்படின்னா இதையும் எதிர்கொள்ளனும் தான். அதை விட நாங்க பாளையங்கோட்டை இருக்கும் திசை நாங்கள் வணங்கும் இடம் என பாசிட்டிவா ஆக்கினோம்ல. அது போல எதுனா போராட்டத்துலே தலைவன் புழலுக்கு போனா நீ முதல்ல போஸ்டர் அடிச்சு ஒட்டு "தாய்குலத்தின் சுழல்நிதியே, கருணாநிதி பெற்றெடுத்த புழல்நிதியே"ன்னு அடிச்சு ஒட்டு. அதை பாசிட்டிவா ஆக்கு! தேர்தலில் தோற்றோம் என என்றைக்காவது நாம சொல்லியிருக்கோமா? வெற்றி வாய்ப்பை இழந்தோம்னு தானே சொல்ல நமக்கு அண்ணா கத்து கொடுத்திருக்காரு!

அபிஅப்பா: சரி மாமா! இந்த சமச்சீர் கல்வி பத்தி...

ரங்கன்: மாப்ள! இந்த சமச்சீர் கல்வி இருக்கே. அது பத்தி நிறைய பேசலாம். யார் வேணா பேசலாம். ஏன்னா இப்போ கேஸ் கோர்ட்டிலே இருக்கு. கேஸ் கோர்டிலே இருக்கும் போது அதுசம்மந்தமா பேசக்கூடாது என சொல்ல நான் என்ன அப்பச்சியா?இல்லாட்டி அர்ஜூன் சம்பத்தா? இல்லை அப்படி பேசினா கண்டம்டு ஆஃப் கோர்டுன்னு ஜெயலலிதாவை பிடிச்சு உள்ள போட்டுச்சா கோர்ட்டு. இல்லாட்டி நித்யானந்தாவை பிடிச்சு உள்ள போட்டுச்சா கோர்ட்டு. அதானால பேசுவோம்.

முதல்ல சமச்சீர் கல்வின்னா என்னான்னு பார்க்கனும். ஒரு நாலு வருஷம் கல்வியாளர்கள் வச்சுகிட்டு இப்ப நம்ம ஸ்டேட் போர்டு பசங்க படிக்கும் படிப்பும், மெட்ரிக் பசங்க படிக்கும் படிப்பும் ஒன்னா இருக்குதா? அது போல சி பி எஸ் சி படிப்பு எப்படி இருக்கு? சரி சி பி எஸ் சி படிப்பு நமக்கு இப்போ கணக்கிலே எடுத்துக்க வேண்டாம். ஏன்னா ஏற்கனவே நாம நவோதயா பள்ளி எல்லாம் உள்ளே விடலை . அதை இப்போ விட்டுடுவோம்.அந்த கச்சேரி தனியா வச்சுப்போம். தனியார் மெட்ரிக் பள்ளியிலே படிக்கும் மாணவனும் நம்ம ஸ்டேட் போர்டு மாணவனும் ஒரே படிப்பை படிச்சுட்டு பொது தேர்வு +2 எழுதுறாங்களா? இதிலே கிராமத்தில் இருந்து படிச்சுட்டு வரும் நம்ம மாணவன் பின் தங்கி போறானா? என்பதை எல்லாம் விடு மாப்ள! ஆனா படிப்பின் தரம் என்ன என்பது தான் இந்த சமச்சீர் கல்வியிலே முதல் ஆய்வா எடுத்துகிட்டாங்கன்னு சொல்றாங்க. எல் கே ஜியிலேயே பத்து புத்தகம் 6 வது படிக்கும் மெட்ரிக் மாணவனுக்கு ஸ்டேட் போர்டிலே படிக்கும் 11 வது படிக்கும் மாணவனுக்கு இருக்கும் பாடம் எல்லாம் வருது என்பது முதல்ல பசங்களுக்கு படிப்பின் மீது ஒரு வித அயற்சியை தான் கொடுக்குதுன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க. அதனால அவனுக்கு குறைச்சிடு. இவனுக்கு கொஞ்சம் தூக்கிடு. எல்லாம் ஒரே பாடம் படிக்கட்டும். அப்போ நீ படிக்கும் போது 3வது படிக்கும் போது தான் ஏ, பி, சி, டி படிச்சே. இப்போ எல் கே ஜி யிலே படிக்க சொல்றாங்க. ஏன் அப்போ படிச்சவனுக்கு அறிவில்லாம போச்சா? இல்லை. நாங்க தமிழின் 247 எழுத்தும் எழுதுவோம். படிப்போம். ற, ர உச்சரிப்பு பயிற்சி பெற்றோம். முதல்ல நம்ம மொழி படிச்சோம். ஒரு குழந்தை தன் தாய்மொழியிலே 247 எழுத்தும் படிச்சு முடிக்கும் போது அதன் மூளை மடிப்பு ஆழம் அதிகமாச்சு. பின்னே நாங்க ஆங்கில எழுத்து 26 படிக்கும் போது அது சுலபமா இருந்துச்சு.

பாடத்திட்டம் அதிகப்படுத்துவதால மட்டும் மூளையின் மடிப்பு ஆழத்தை அதிகப்படுத்தி விட முடியாது. முடியவே முடியாது. மூளையின் மடிப்பின் ஆழம் அதிகமாக்க அதிக சுமை கொடுத்து அவனை அயற்சியாக்குவதை விட அவன் அந்த குழந்தையின் மூளை எத்தனை சக்தி தாங்கும் என அறிந்து அதை "விளையாட்டாக" சொல்லி கொடுக்கனும். தனியார் பள்ளியும் அரசாங்க பள்ளியும் ஒரே பாடமா படிக்கனும். அதே நேரம் கல்வியின் தரம் முன்பை விட அதிகமா இருக்கனும். இதல்லாம் கணக்கில் வச்சு தான் அந்த பாடத்திட்டம் தயாராச்சு. அதுக்கு மசோதா,சட்டம் போன்ற சடங்கு சம்பிரதாயம் எல்லாம் செஞ்சு பின்னே உயர்நீதி மன்றம் போய் பின்னே அது சரி என அவங்களும் சொல்லி எல்லாம் முடிஞ்சு 200 கோடிக்கு புத்தகமும் அடிச்சாச்சு.

இப்போ இந்த அரசாங்கம் வந்து எல்லாம் சரியில்லைன்னு ஒரு 24 மணி நேரத்தில் முடிவெடுத்து இப்போ உச்சநீதிமன்றம் போய் அவங்க தமிழக அரசை "ஒரு குழு அமைச்சு அந்த பாடதிட்டம் எல்லாம் சரியான்னு ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுக்க சொல்லுங்க.அதும் ரெண்டு வாரத்திலே. அதாவது நாலு வருஷம் செஞ்ச ஆராய்சியை 2 வாரத்தில்... பின்னே ஒரு வாரம் தினமும் இதை விசாரிச்சு 22 வது நாள் தீர்ப்பு சொல்லனும். அதும் இங்க வரக்கூடாது. எங்க இதன் ஆரம்ப சடங்கு சம்பிரதாயம் எல்லாம் நடந்துச்சோ அங்க தான் வச்சுக்கனும் கச்சேரியைன்னு சொல்லியிருக்கு. சரி ஒத்துக்கறோம்.

உடனே என்ன செஞ்சு இருக்கனும் தமிழக அரசு. கல்வியாளர் குழு அமைச்சுது. யாரை? திருமதி ஒய்.ஜி பி அம்மையாரையும் இன்னும் ஒரு தனியார் பள்ளி ஓனரையும். இவங்க கல்வியாளர் குழுவா? அவங்க பள்ளியில் படிச்சவங்க வேண்டுமானா கல்வியாளராக இருக்கலாம். அவங்க கல்வியாளரா? வாதி, பிரதிவாதி என இருவர் இருக்கும் போது பஞ்சாயத்துக்கு வாதி தரப்பை நியமிச்சது எப்படி ஒத்துப்பது? சரிய்யா... பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகி அவங்க. அவங்க பள்ளியிலே இத்தனை வருஷம் தனியாக ஒரு பாடத்திட்டம் வச்சு அதன் படி பசங்க படிச்சு பெரிய படிப்பு எல்லாம் படிச்சாங்களா? இல்லியே... அவங்களும் மத்த மெட்ரிக் ஸ்கூல் படிக்கும் புத்தகம் தானே அவங்க பள்ளியிலே வச்சிருந்தாங்க. சரி மீதி நான்குபேரும் ஐ ஏ எஸ் அதிகாரிங்க. அவங்க கள்வியாளர்களா என்று நான் கேட்க முடியாது. அது கூடவும் கூடாது. ஏன்னா இங்க கல்வியாளர் என்றால் அளவு கோலே அவங்க பல பட்டம் வாங்கினவங்களா என்பதில் தான் இருக்கு. இது தப்பு என்பது தான் என் கருத்து. இன்னும் சொல்ல போனா ஆரம்ப பள்ளி பாடங்களுக்கு குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா வே என்னை பொருத்தவரை கல்வியாளர். ஏன்னா அவருக்கு குழந்தை மொழி தெரியுது. நல்லா புரியுது. அவரை கூப்பிட்டு அந்த வயசு குழந்தைகளுக்கு எப்படி பாடம் அமைக்கலாம் என கூட கேட்டிருக்கலாம். இல்லாட்டி இது போன்ற குழுவில் இடம் கொடுத்து இருக்கலாம். அது போல சில ஐ ஏ எஸ் ஆபீசர்ஸ் இருக்காங்க. நம்ம தாய்மொழியிலே ஆர்வமும் அக்கரையும் கொண்டவங்க. உதாரணத்துக்கு இறையன்பு இருக்காரு. ஏன்? உமாசங்கர் காத்திருப்புல இருக்காரு. அவங்களை கூட நியமிச்சு இருக்கலாம். மாட்டாங்க, ஏன்னா அரசாங்கம் முன்முடிவோட இருக்கு. இந்த திட்டம் செயல்படுத்த கூடாதுன்னு. உமாசங்கர் ஏற்கனவே ஒரு ஜூவி பேட்டியிலே "திமுக அரசின் சாதனை சமச்சீர் கல்வி தான் என பேட்டி குடுத்துட்டாருல்ல.

அந்தம்மா அறிக்கையிலே பாடத்திட்டம் சிலபஸ் ரொம்ப கம்மியா இருக்கு. இது உலக அளவில் நம்ம கல்வித்தரத்தை கம்பேர் செய்யும் போது ரொம்ப கம்மின்னு சொல்லுது. சரி இதே இஞ்சினியரிங் படிக்கும் ஒரு பையனின் முதல் வருடம் பாடத்தை எடுத்து ஆறாம் வகுப்பு பையன் கிட்டே இன்னிக்கு முதல் இதாண்டா உன் பாடம்னு சொல்லிட்டு உலக லெவல்ல கொண்டு போய் காமிச்சா "ஆகா இந்தியாவிலே ஆறாம்பு படிக்கும் பையன் பாடம் இஞினியரிங் சிலபஸ்ப்பா. சூப்பர்"ன்னு சொல்லிட்டு போவான். ஆனா பையன் இங்க படிக்க முடியாம செத்துடுவான். இல்லாட்டி கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போவான். அவன் மூளை அளவு என்னவோ அதான் தரனும். சும்மா ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு சித்திரை வெய்யில்ல வெஸ்டர்ன் கல்ச்சர்ன்னு சொல்லிகிட்டு கேட்டு சூட்டு போட்டுப்பதுக்கும், பெண்கள் ஒரு முழ வெள்ளி ஜரிகை வச்ச பட்டுப்புடவை கட்டிக்கிட்டு போவதுக்கும் இதுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.

சரி பள்ளிக்கூடம் வச்சு நடத்தும் ஆட்கள் தான் கல்வியாளர் என நீங்க அளவுகோல் வச்சா சொன்னா சிரிக்க கூடாது... ஜேப்பியாரும் உங்க அளவுகோலின் படி கல்வியாளர் தானே. அவரை நியமிச்சா எப்படியோ அதே போலத்தான் திருமதி ஒய் ஜி பி அம்மையாரும். இதான் என் கருத்து...

அபிஅப்பா: அய்யோ மாமா.. அதை எல்லாம் விடுங்க.. கேஸ் என்ன ஆகும்? சமச்சீர் கல்வி புத்தகத்தில் திமுக பத்தி அதிகம் இருக்குதாம். கலைஞர் எழுதிய கவிதை இருக்குதாமே?

ரங்கன்: அதாவது மாப்ள! ஒரு கரும்பலகை இருக்கு. அதிலே ஒரு ஆப்பிள் படம் இருக்கு. அதுக்கு ஒரு பையனை கூப்பிட்டு கலர் அடிக்க சொல்றே. அவன் சிவப்பு கலர் அடிக்கிறான். பார்க்க அது திக கொடி மாதிரி இருக்குதாம். அதான் ஒரு புத்தகத்தில் ஒரு கருப்பு போர்டு அதிலே ஆப்பில் படம் அவுட்லைன் இருக்கு. அதிலே கலர் அடிக்க சொல்லி இருக்கு. அந்த பக்கம் இப்போ கிழிச்சு கிட்டு இருக்காங்க. தாடி வச்சவன் எல்லாம் பெரியார்ன்னு பயந்த காலம் ரிப்பீட்டு ஆகுது மாப்ளே ரிப்பீட்டு ஆகுது வேற ஒன்னும் இல்ல.

அபிஅப்பா: சரி மாமா! கலைஞர் கவிதை இருக்காமே? கனிமொழியின் சங்கமம் பத்தி இருக்காமே?

ரங்கன்: கலைஞர் கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைகழகம், தமிழ் பல்கலைகழகம் போன்ற தமிழ் பிரிவுகளிலேயே எம் ஜி ஆர் காலத்தில் இருந்தே பாடத்திட்டமாக இருக்குதே. அவர் கவிதை இப்போ சமச்சீர் கல்வி பாடட்ட்இல்லை. செம்மொழி மாநாட்டு பாடல் கலைஞரின் கவிதைன்னு கூட சொல்ல முடியாது. அது பழந் தமிழின் உயரிய வரிகளின் தொகுப்பு என்றே கொள்ள வேண்டும். அதில் செம்மொழி மாநாட்டு இலட்சினை வருது. அதிலே கலைஞரின் எழுத்தினால் ஆன பழந்தமிழ் வரி இரண்டு வார்த்தை இருக்கு. அது தவறு என்றால்... எடுக்கட்டும் என கலைஞரே சொல்லியாகிவிட்டது. அது போல கனிமொழி முன்னின்று நடத்திய சங்கமம் பற்றி வருவதை எடுக்கட்டும்.

அபிஅப்பா: கனிமொழி இப்போ திகார்ல இருக்காங்க. ஒரு ஊழல் குற்றச்சாட்டிலே.. அப்படி இருக்க எப்படி மாமா இதை ஏத்துக்க முடியும்?

ரங்கன்: மாப்ள! அப்படிப்பார்த்தா காந்தி மேலயே குற்றம் இருப்பதாக ஆர் எஸ் எஸ் காரங்க சொன்னாங்க. சொல்றாங்க. அவர் படம் ரூபாய் நோட்டில் இருக்கு. பாடத்திட்டத்தில் இருக்கு. ஏன் இந்திரா, ராஜீவ் இவங்க மேலயும் தான் ஊழல் குற்றச்சாட்டு இருக்கு. அத்தனை ஏன்? இதோ நம்மை ஆளும் ஜெயலலிதா ஒரு அக்யூஸ்ட் என கன்விக்ட் ஆகி இருக்கு. நல்லா புரிஞ்சுக்கனும். கன்விக்ட் ஆகியது டான்சி வழக்கில். தண்டனை மட்டுமே இல்லை. நல்லா புரிஞ்சுக்கனும். நீதிபதி "அரசாங்க சொத்து வாங்கியது தவறு" என சொன்னார். 'அப்படின்னா திருப்பி தர்ரோம்"ன்னு கொடுத்தாங்க. அதான் நடந்துச்சு. தவிர அப்போ நீதிபதி "தான் போட்ட கையெழுத்து தன்னுடையது அல்ல என சொன்னது தவறு"ன்னும் சுட்டி காட்டினாங்க. ஆனால் தண்டனை இல்லை. மன்னிப்பு கொடுக்கப்பட்டதே தவிர கன்விக்ட் தான் ஜெயலலிதா அம்மையார். அவங்க இதோ 27ம் தேதி ஆயிரம் கோடி அளவு சொத்து சேர்த்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும். அவங்க நம்மை ஆள நம்ம சட்டமும், மக்களின் பெருந்தன்மையும் அனுமதி அளிக்கும் போது கனிமொழி இன்னும் முழுமையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத வழக்கின் காரணமாக சிறையில் இருப்பது ஒன்றும் பஞ்சமா பாதகம் இல்லை.

அபிஅப்பா: மாமா! என்ன அளந்துகிட்டே போறீங்க? அது 66 கோடி ரூபாய் வழக்கு. போபார்சை விட ஜஸ்ட் ஆறு கோடி மட்டுமே அதிகம்.

ரங்கன்: மாப்ள! அது 15 வருஷம் முன்னே 66 கோடி ரூபாய். வச்ச இடத்திலே அப்படியே இருக்க அது என்ன பத்மனாபன் கோவில் பாதாள அறையா?அதன் பின்னே சம்பள கமிஷனே ரெண்டு தபா சம்பளம் ஏத்தியாச்சு. ரியல் எஸ்டேட் பலமடங்கு கூடிப்போச்சு. தங்கம் அப்போ பவுன் 2000 ரூபா. இப்போ 17000 ரூபாய். கூட்டி கழிச்சு பாரு மாப்ள எல்லாம் சரியா வரும்!

அபிஅப்பா: மாமா சமச்சீர் கல்வி பத்தி ஆரம்பிச்சி எங்கயோ போகுது பேச்சு. சரி திமுக பொதுக்குழு கூடுது கோவையிலே... அது பத்தி அதுல மாவட்ட செயலர்க்கு பவர் பிடுங்கும் பேச்சு பத்தி என்ன நினைக்குறீங்க?

ரங்கன்: மாப்ள என்னால இன்னிக்கு இவ்ளோவ் தான் முடியும். நான் துக்ளக் படிக்கனும் ஆளை விடு!


July 15, 2011

லேவாதேவியும் ரமாதேவியும்!!!

அப்பா அந்த முன்னூத்தி சொச்சம் பணம் தீபவளி போனசாக வாங்கி கொண்டு வீட்டில் நுழைந்ததும் எங்களுக்கு உற்சாகம் தாங்கலை. ஏன்னா அதன் பின்னே தான் ட்ரஸ் எல்லாம் வாங்கனும். பலகாரம், வெடி எல்லாமே அதன் பின்னர் தான். அப்போது நாங்கள் அதாவது அக்கா ரெண்டு பேர் நான் என் தம்பி எல்லாருமே குழந்தைகள். அப்போ முன்னூறு ரூபாய் எதேஷ்டம் ஒரு தீபாவளியை நல்ல படியா அனுப்பி வைக்க. அதை கொண்டு வந்து சாமி படம் முன்னே வைத்து விட்டு அப்பா கொஞ்சம் ஆசுவாசமாய் உட்காந்து இருக்கும் போது தான் அந்த எலிக்குட்டி மாமா வந்தார். அப்பாவோடு ஆபீசில் வேலை பார்ப்பவர். ஜெகஜ்ஜால கில்லாடி. தான் எதும் செய்யாமல் தன் வியாபார அபிலாஷை எல்லாம் மத்தவங்களை தூண்டி விட்டு அது சரியானால் தான் அவர் இறங்குவார் அதிலே.

எலிக்குட்டிமாமா அப்பாவிடம் "என்ன வைத்தா முள்ளங்கி பத்தை மாதிரி பணத்தை யாரோ நரகாசுரன் செத்ததுக்கா வேஸ்ட் பண்ணனும். இதை 3 வட்டிக்கு விட்டா மாசம் 9 ரூவா வட்டி வரும். மாசத்துக்கு விறகு கடை அக்கவுண்ட் சரிபண்ணிடலாமே. இல்லாட்டி அதை சேர்த்து வச்சா அதையும் கொஞ்சம் கொஞ்சமா வட்டிக்கு விட்டு ஒரு பெரிய பைனான்ஸ் ஆரம்பிக்கலாமே" என ஆசை காட்ட ஆரம்பத்தில் ஒத்துக்காத அப்பா "பைனான்ஸ் தொழிலதிபர்" ஆகும் ஆசையில் எங்களை கூப்பிட்டு 'நீங்க எல்லாம் ஒத்துழைச்சா அதாவது தீபாவளிக்கு ட்ரஸ் எதும் எடுத்துக்காம இருந்தா ஒரு ரெண்டரை வருஷத்துல இந்த பணம் அப்படியே இருக்கும். போட்ட காசு வட்டியாவே வந்துடும். பின்னே அதையும் விட்டா நாம ஓகோன்னு எங்கயோ போய்டலாம்" என சொல்ல எங்கம்மாவும் எழுத்தாளர் பைரவன் தங்கவேலு பொண்டாட்டி மாதிரி "ஆமாங்க எனக்கும் தொழிலதிபர் பொண்டாட்டின்னு சொல்லிக்க ஆசை தானே" என தாளம் போட சரின்னு நாங்களும் தொழிலதிபர் வாரிசாக ஆக ஆசைப்பட்டு ஒத்து கொண்டோம்.

அதல்லாம் சரி தான். தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்கூல் போகும் போது புது ட்ரஸ் எங்கேன்னு கேட்பாங்களே என்கிற மாபெரும் கவலை மட்டுமே எனக்கு இருந்தது. அதற்கு என் சின்ன அக்கா "டேய் கவலையை விடுடா. சின்ன தாத்தா செத்துட்டாங்க. அதனால தீவாளி இல்லைன்னு சொல்லிடலாம்" என சொல்ல எனக்கு தாத்தாவை தனியே சாகடிக்க மனம் இல்லாததால் பாட்டியும் உடன்கட்டை ஏறிட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம் என நினைத்து அப்பா தொழிலதிபர் ஆக ஓட்டு போட்டுவிட்டோம்.

வாய்வழி செய்தியாக அப்பா வட்டிக்கு பணம் கொடுக்க இருக்கும் செய்தி எலிக்குட்டி மாமாவால் பரப்பப்பட்டது. ஆனாலும் ஒருத்தன் கூட பணம் கேட்டு வரலை. அதுக்குள்ள வீட்டில் பைனான்ஸ்க்கு என்ன பெயர் வைப்பது என்கிற சர்ச்சை ஆரம்பம் ஆகிடுச்சு. அதுக்குள்ள என் பாட்டி "குடுத்து வாங்குற தொழில் தானே. அதுக்கு எதுக்கு பேர் எல்லாம் வைக்கனும்" என எக்குதப்பாய் கேட்க ஒட்டு மொத்த குடும்பமும் பாட்டியிடம் சண்டை. பைனான்ஸ்ன்னு அழகா டீசண்டா இங்கிலிசுல சொல்றத விட்டுட்டு குடுத்து வாங்குறதாம்ல குடுத்து வாங்குறது. ஒரு வழியா நம்ம மாயூரநாதர் பெயரிலே வச்சுடுவோம். வட்டி வாங்கின பாவம் எதுனா வந்துச்சுன்னா அந்த பாவம் அவருக்கே போகட்டும் என நினைத்து மாயூரம் பைனான்ஸ் என வைத்த போது தான் எலிக்குட்டி மாமா ஏற்கனவே ஒரு மாயூரம் பைனான்ஸ் பிரபல்யமாக இருக்குதுன்னும் சட்ட சிக்கல் வரும் என சொல்ல உடனே அவயாம்பாள் பைனான்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு கஸ்டமருக்காக காத்திருக்க தொடங்கினோம்.

வீட்டுக்கு எவன் வந்தாலும் அவன் வட்டிக்கு பணம் வாங்க தான் வந்திருக்கான் என காபி உபச்சாரம் எல்லாம் முடிந்து அவன் கிளம்பும் போது அப்பா "வேற எதுனா கேட்கனும்னு வந்தீங்க போல" என ஞாபகப்படுத்தியும் எவனும் பணம் கேட்பதாக இல்லை. ஒரு வழியாக எலிக்குட்டி மாமாவே ஒரு கஷ்டமரோடு வந்தாரு. அவரு கஷ்ட்டமர் இல்லை கஷ்டம் மட்டுமே என எங்களுக்கு அப்போ புரியவே இல்லை. வந்தவரு பக்தி பழமா இருந்தாரு. எலிக்குட்டி மாமா " வைத்தா இவரு பேரு முருகேசன். நம்ம தெற்கு வீதி தான். இவரு வீட்டு பத்திரம் எடுத்து வந்திருக்காரு அடமானமா" என சொல்லிய போது அப்பாவுக்கு படபடன்னு ஆகிடுச்சு. "என்னது வீட்டு பத்திரமெல்லாம் வேண்டாம்" என படபடக்க எலிக்குட்டி மாமா விட்டாலும் முருகேசன் விடுவதாக இல்லை. "இல்லீங்க நீங்க இதை கண்டிப்பா வச்சுகிட்டு தான் பணம் தரனும். ஆனா எனக்கு அவசர மொடை. ஒரு 500 ரூபா குடுத்தா வாங்கிப்பேன். இல்லாட்டி நான் நவநீதம் நாயுடு கிட்டே போய் பத்திரம் குடுத்துட்டு வாங்கிக்கறேன்" என சொல்ல அப்பா "அட அப்படில்லாம் சொல்ல கூடாது கொஞ்சம் இருங்க" என சொல்லி அம்மா வளையலை கழட்டி வாங்கிகிட்டு சைக்கிள் எடுத்துகிட்டு அதே நவநீத நாயுடு கிட்டே போய் இருநூறு வாங்கி வந்து முருகேசனிடம் ஐநூறு கொடுத்து விட்டு " மாசா மாசம் நான் பசங்க கிட்டே நோட்டு குடுத்து விடுறேன். நீங்க 15 ரூவா குடுத்துட்டு அதுல வரவு வச்சி குடுங்க" என கம்பேனி ரூல்ஸ் எல்லாம் சொல்லி அனுப்பி வச்சோம்.

ஆச்சு. முருகேசன் பணம் வாங்கிகிட்டு போயாச்சு. நாங்களும் தீபாவளியை தாத்தாவும் பாட்டியும் செத்ததா கணக்கு காட்டி சமாளிச்சாச்சு. அப்பா அந்த முருகேசனை எந்த கல்யாண வீட்டில் பார்த்தாலும் திரும்பிப்பதும், கூடுமான வரையில் அவர் இருக்கும் தெரு பக்கம் போகாமலும் இருந்தாங்க. பின்னே அவர் எதுனா கல்யாண வீட்டில் கல்ந்துகிட்டா அவரு சைக்கிளை எடுத்துட்டு போன பின்னே தான் அப்பா போவாங்க. அதாவது கலைஞரும்,எம் ஜி ஆரும் பொதுவான மபொசி வீட்டு கல்யாணத்துக்கு போவது போல. ஏன் இப்படின்னு அப்பா கிட்டே கேட்டப்ப அவங்க சொன்ன வியாக்யானம் அவங்க லேவாதேவிக்கு லாயக்கு இல்லை என்பதற்கான அறிகுறிகள் என்பது எங்க யாருக்கும் அப்ப புரியவில்லை. அதாவது இவங்களை பார்த்துட்டா "அய்யோ கடன் காரன் வந்துட்டானே" என அந்த முருகேசன் மனசு படாத பாடு படுமாம். பாவம் அதை தவிர்க்க தான் அப்பா முருகேசனை கண்டு ஒழிவதன் அர்த்தம். வெளங்கிடும்:-)

முதல் மாசம் பெரியக்காவும் சின்னக்காவும் ஒரு சின்ன நோட்டு எடுத்துகிட்டு வட்டி வசூலுக்கு போய் நோட்டை மாத்திரம் ஜாக்கிரதையா எடுத்து வந்தாங்க. இப்படியாக மாசா மாசம் போய் வெறும் கையோட வந்தாங்க. பின்னே பெரிய அக்கா ஸ்கர்ட்ல இருந்து பாவாடைக்கு மாறினதும் சின்ன அக்காவுக்கு என்னை ஜோடி சேர்த்து அனுப்பினாங்க. பின்னே சின்ன அக்கா ஸ்கர்டில் இருந்து பாவாடைக்கு மாறினதும் அது வரை தவழ்து கிட்டு இருந்த என் தம்பியை எனக்கு ஜோடியாக ஆக்கி நோட்டை குடுத்து அனுப்பினாங்க. இப்படியாக சுட்டி குழந்தையாக இருந்த நாங்க வளர்ந்து கிட்டே இருந்தோமே தவிர வட்டி குழந்தை எட்டி கூட பார்கலை. அந்த நோட்டு மாத்திரம் வாசனை மாறாம புதுசாவே இருந்துச்சு. ஒரு மாசம் கூட எண்ட்ரி போடலை அந்த முருகேசன்.

நானும் என் தம்பியும் நோட்டு எடுத்துகிட்டு போனா அந்த முருகேசனுக்கு பத்திகிட்டு வரும். அப்ப தான் அவரு பொண்ணு ரமாதேவிக்கு கணக்கு பாடம் சொல்லி குடுப்பாரு எங்களை நிக்க வச்சுகிட்டே. " ஒருத்தன் 500 ரூவா மூணு வட்டிக்கு வாங்கினா மாசம் எவ்வளவு வட்டி"ன்னு கேட்பாரு. அது திரு திருன்னு முழிக்கும். நான் மட்டும் மனசிலே "எண்ட்ரி போடாத வெறும் நோட்டு தான்" என நினைச்சுப்பேன். பின்னே எங்களை பார்த்து "போ போ " என அதட்டுவாரு. நான் அவரிடம் "அப்பா நோட்டிலே எண்ட்ரி போட்டு வாங்கியார சொன்னாங்க" என்பேன். அதை வாங்கி கிறுக்கி குடுப்பாரு. ஆசையாய் பிரித்து பார்ப்பேன். பாமாவிஜயம் நாகேஷ் மாதிரி "இல்லை மன்னிக்கவும்"ன்னு எழுதுவாரு. பின்னர் அந்த மன்னிக்கவும் எல்லாம் போய் "இல்லை" என எழுத ஆரம்பிச்சாரு.

பின்னே நான் ரமாதேவி மேல இருந்த கரிசனத்தால் அவங்க வீட்டுக்கு நோட்டு எடுத்து கிட்டு போகாமலே அவர் சொல்லும் அதே பதிலை அப்பா கிட்டே சொல்ல ஆரம்பிச்சேன். நாட்கள் ஓடிடுச்சுன்னு சொல்வதை விட வருஷங்கள் ஓடிடுச்சு. ஒரு நாள் எலிக்குட்டி மாமா வந்து " வைத்தா வட்டி எல்லாம் ஒழுங்கா வருதா?" என கேட்க வரலைன்னு சொன்னா அசிங்கமா போயிடுமேன்னு அப்பா "பின்னே பிரமாதமா வருது. முருகேசன் ஒன்னாம் நம்பர் யோக்கியன்" என "அ"வை ம்யூட் செஞ்சு குடுக்காத காசுக்கும் மேலே கூவ எலிக்குட்டி மாமா தலையை ஆட்டிகிட்டே போனாரு. ஒரு கட்டத்துக்கு மேலே அப்பாவுக்கு பயம் வந்துடுச்சு. ஊரான் வீட்டு பத்திரத்தை நாம வச்சுகிட்டு இருக்கோமேன்னு. பத்திரத்தை ஒரு மஞ்ச பையிலே போட்டு கிட்டு முருகேசனை தேடி போனாங்க. எப்படி சுத்தியும் முருகேசன் அப்பா கண்ணுல மாட்டலை. கிட்ட தட்ட ஆறுமாசம் அப்பா மஞ்சள் பை சகிதமா அலைய ஆரம்பிச்சாங்க. எல்லா நேரமும் கையில மஞ்ச பையோடவே இருந்தாங்க. எப்படி காந்தி சிலை அடையாளம் தெரிய கையிலே ஒரு கம்பு இருக்குமோ அப்படி அப்பாவுக்கு சிலை செஞ்சா ஒரு மஞ்சள் பை வச்சு செஞ்சா தான் அடையாளம் தெரியும் என்கிற அளவுக்கு அப்பா மஞ்சபை மைனராகிவிட்டாங்க:-)

ஒரு நாள் விடாம துரத்தி முருகேசனை ஒரு முட்டு சந்திலே மடக்கி "அய்யா ராசா இந்தா உன் வீட்டு பத்திரம். எனக்கு வட்டியும் வேணாம். அசலும் வேண்டாம்" என சொல்ல முருகேசன் "அட இதுக்கு தானே என்னை துரத்தி கிட்டு இருந்தீங்க. சரியான வீணா போன ஆளுங்க நீங்க. நான் கூட நீங்க காசு கேட்டு தான் துரத்துறீங்களோன்னு நினைச்சுட்டேன் என சொல்ல அப்பாவுக்கு என்ன சொல்வதுன்னே தெரியலை. "ஏன் உன் வீட்டு பத்திரம் உனக்கு முக்கியம் இல்லியா?" என கேட்க அதுக்கு முருகேசன் "அடடா நான் இந்த பத்திரம் காணாம போய்டுச்சுன்னு சொல்லி தாய் பத்திரம் காமிச்சு டூப்ளிகேட் வாங்கிட்டனே" என சொன்னாரு. அப்பா அப்பாவியாக "அது எப்போ?" என கேட்க "உங்க கிட்டே இதை வச்சு பணம் வாங்கினதுக்கும் அடுத்த நாளே" என சொல்ல அப்பா அமைதியாக "சரி போனது போவட்டும். நான் ஏமாந்தது ஏமாந்ததா இருக்கட்டும் இந்த டீலிங் நமக்குள்ள தான். நீ மாசா மாசம் வட்டி எல்லாம் தந்துகிட்டு இருக்கேன்னு எலிக்குட்டி கிட்டே எல்லாம் சொல்லிட்டேன். அதனால நீ அவன் கிட்டே இதை சொல்லிடாதே" என சொல்லிட்டு வந்துட்டாங்க.

வந்து வீட்டிலே உட்காந்து இருக்கும் போது எலிக்குட்டி மாமா சிரிச்சுகிட்டே வந்தாரு. "வைத்தா! ஒரு குட் நியூஸ். குருவி மாதிரி ஒரு 2000 ரூபா சேர்த்து வச்சிருந்தேன். இப்ப தான் முருகேசன் வந்தான். உன் கிட்டே இருந்து பத்திரம் மீட்டிட்டானாம். மாசா மாசம் வட்டி எல்லாம் ஒழுங்கா தந்தானாம். அது போலவே அசலையும் ஒழுங்கா தந்தாதானாம்.நீ கூட ஏற்கனவே அவன் மாசா மாசம் வட்டி எல்லாம் குடுத்தான்னு சொன்னேல்ல. என் கிட்டே அதே பத்திரம் எடுத்து வந்து அவசரமா 2000 கேட்டான். பத்திரம் வாங்கிட்டு என் பொண்டாட்டிக்கு தெரியாம குடுத்திட்டேன். நீ என்ன பன்ற இந்த பத்திரத்தை எடுத்து உன் வீட்டு பீரோவிலே வச்சுக்கோ. மாசா மாசம் உன் பையனை அனுப்பி நோட்டுல எண்ட்ரி போட்டு வட்டிய கலக்ட் பண்ணிடு. நான் வந்து வாங்கிக்கறேன்" என சொல்லி பத்திரத்தை கொடுக்க என் அப்பாவுக்கு மட்டும் அல்ல எனக்கும் மயக்கம் வந்துடுச்சு.


July 5, 2011

ஆயில்யன் கல்யாண வைபோகமே - பாகம் # 1


ஆயில்யன் கல்யாணம் எழுத போகிறேன் என கூகிள் பஸ்ல டீசர் எல்லாம் விட்டாச்சு. இனியும் எழுதாட்டி மாயவரத்தான் என் மானத்தை வாங்கும் அபாயம் அதிகம் இருப்பதால் எழுத ஆரம்பித்து விட்டேன்.

என்ன எழுதலாம் என்பதை விட எதிலிருந்து எழுதலாம் என்பது மிகப்பெரிய குழப்பமாக இருந்தது. இதோ கல்யாணம் முடிந்து இரண்டு நாள் ஆகிவிட்டது. இன்னும் அந்த பிரம்மிப்பில் அப்படி கூட சொல்லக்கூடாது பெரும்மப்பில் இருந்து விடுபட்டாகிவிடவில்லை. அத்தனை ஒரு அழகிய திருமணம்.

ஆயில்யன் தன் வலைப்பூவின் காப்ஷனில் போட்டது போல 'ஆயில்யன், கடகம் எல்லா இடத்திலும் நட்பாக". மகா பெரிய உண்மை. ஆமாம். இங்கே நாங்கள் பார்த்தது ஆரியம் - திராவிடம், திமுக - அதிமுக, ரஜினி - கமல், சிவாஜி- எம் ஜி ஆர், விஜய்- அஜீத், கிழக்கு - மேற்கு என எல்லாத்தரப்பும் ஒரு வித சந்தோஷமுடன் தனது வீட்டு திருமணத்துக்கு வந்தமை போன்ற ஒரு உணர்வு.

நான் இது வரை ஒரு 350 பதிவுகள் எழுதியாகி விட்டது. ஒரு திருமணத்தை அழகாக எழுத வேண்டும் என ஆசை இருந்தும் எழுத இயலாமைக்கு காரணம் எனக்கு அத்தனை ஒரு கோர்வையாக வரவில்லை. ஆன்லைனில் இருந்த துளசி டீச்சரிடம் கேட்டேன். எப்படி டீச்சர் எழுதுவது என்று. "நத்திங். பார்த்தது எல்லாம் விரலில் கொண்டு வா உண்மை தமிழன் போல... பக்கம் அதிகமானால் கவலையே இல்லை. எழுதி முடித்ததும் பாகம் 1, 2 என போடு.. எழுதிய திருப்தி தான் முக்கியம். (ஆமா படிப்பவன் பத்தி நாம ஏன் கவலைப்பட வேண்டும்:-)) என சொன்னாங்க. "அப்படி எழுதினா என்ன கிடைக்கும் டீச்சர் என கேட்டதுக்கு " நீ நல்லா எழுதினா உனக்கு பத்துமனாபபுரம் கோவிலை எழுதி தருவேன். என்ன !உனக்கு அதல்லாம் பத்துமா? இன்னும் முக்கால் லெட்சம் கோடி கேட்பாய்" என சொன்னாங்க. ஒ .. ஆக இந்த பதிவை ஒரு நக்கல் பதிவாக எழுத சொல்றாங்க டீச்சர் என நினைத்துக்கொண்டேன்.

பொதுவா ஒரு நல்ல கச்சேரிகாரங்க கச்சேரிக்கு போகும் முன்னே எனக்கு தெரிஞ்சு எதும் கச்சேரி சம்மந்தமா பேசிப்பது இல்லை. ஆனா "சபை" நல்ல சபைன்னு தெரிஞ்சா மனசுக்குள்ளே "சபையை அசத்த வேண்டும்" என்கிற டெலிபதி மாத்திரம் ஒருவருக்கு ஒருவர் ஓடிக்கொண்டு இருக்கும். உதாரணத்துக்கு கத்ரி கோபால்நாத் எங்கயாவது கர்நாடகா கத்ரில இருந்து பிளைட் பிடிச்சு வருவாரு. வயலின் கன்யாகுமரியம்மாள் நாகர்கோவில்ல இருந்து காரை பிடிச்சு வருவாங்க. விக்கு வினாயக்ராம் ஜெர்மன் கச்சேரி முடிச்சுட்டு வருவாரு. ஹரித்வாரமங்கலம் திருவையாறு போயிட்டு அவசரமா வருவாரு. மோர்சிங் ராஜசேகர் பெங்களுருவில் இருந்து வருவாரு. எல்லாரும் தங்கும் ஜாகையும் வேறு வேறு. ஆனா மேடையில் வந்து உட்காந்ததும் சபையை பார்த்ததும் ஒரு புது ரத்தம் நாடி நரம்பில் ஓடி அடிச்சு தூள் கிளப்பிடுவாங்க.

கிட்ட தட்ட ஆயில்யன் கல்யாணம் கூட அப்படித்தான். எனக்கு, மாயவரத்தானுக்கு, கொக்கரக்கோ சௌமிக்கு, ராம்கிக்கு தவிர அமரிக்காவிலே இருந்து சீமாச்சு அண்ணன், மயிலாடுதுறை சிவா , எல்லே ராம் எல்லோருக்குமே அப்படித்தான். கோவை பதிவர் சந்திப்பு, சென்னை வலைப்பதிவர் பட்டரை, ஈரோடு சங்கமம் எல்லாம் போல நம்ம மாயவரம் சந்திப்பு ஆயில்யன் திருமணம்... வரும் விருந்தினரை நல்லா கவனிச்சு நம்ம ஊர் பெயரை தக்க வச்சுக்கனும் என்கிற அதீத ஆர்வம் எங்க மனசுக்குள்ளே ஓடிகிட்டே இருந்துச்சு. அதை திறம்பட செய்யனும். மிக அழகாக செஞ்சாங்க நம்ம மாயவரம் பதிவர்கள் கொக்கரக்கோ சௌமியனும், மாயவரத்தானும்.

ஜூலை 3ம் தேதி 2011ல் திருவாரூரில் கல்யாணம், அதே நாள் மாயவரத்தில் ரிசப்ஷன். வரும் விருந்தினர்களை மாயவரத்தில் தங்க வைத்து உபசரித்து திருவாரூர் அழைத்து போய் திரும்பவும் மாயவரம் வந்து ரிசப்ஷனில் கலந்து கொண்டு ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். கான்செப்ட் இதான்.

ஜூலை 2ம் தேதி காலை முதலே பதிவர்கள் மாயவரம் வந்துடுவாங்க என தெரியும். சென்னையில் இருந்து அப்துல்லா, மருத்துவர் புரூனோ ஆகியோர் ஒரு காரிலும், மணீஜி, அகநாழிகை பொன் வாசுதேவன், உண்மை தமிழன் சரவணன், விந்தை மனிதன் ராஜாராம், கே ஆர் பி செந்தில் ஆகியோர் ஒரு காரிலும் வருவாங்க, பின்னே மாயவரத்தான் உட்பட சிலர் ஒரு காரிலும், சென்ஷி, கோபி ஆகியோர் தனியாகவும், சந்தன முல்லை, ஜி 3 ஆகியோர் தனியாகவும் வருவாங்க என நினைத்தோம். பின்னர் மாயவரத்தான் "எல்லா காரும் பல்லாவரத்தில் இருந்து வரிசையாக கிளம்பலாமே" என சொல்ல பின்னர் சஞ்சய், வேலன் அண்ணாச்சி ஆகியோர் கோவையில் இருந்தும், வெயிலான் ரமேஷ், முரளிகுமார் பத்மநாபன் ஆகியோர் திருப்பூரில் இருந்தும் அது போல பெங்களூரில் இருந்து சொக்கன், ஜீவ்ஸ் உட்பட பலரும் பின்னே மங்களூர் சிவாவும் வருவாங்க என கிட்ட தட்ட முடிவாகியது. கிழக்கில் இருந்து பா.ரா, பத்ரி, முத்துகுமார் ஆகியோர் வருவாங்க, மதுரையில் இருந்து சீனா சார் திருமதி சீனா கூட வருவாங்க எனவும் நினைத்தோம்.

நான் மேலே சொன்னதில் சிலர் மட்டும் சில அவசர வேலை காரணமாக வர முடியவில்லை.ஆனால் ஐகாரஷ் பிரகாஷ் உட்பட நாங்கள் எதிர்பாராத பலர் வந்து அசத்தி விட்டனர். 2ம் தேதி காலை வேலன் அண்ணாச்சி வந்ததும் நான் பேருந்து நிலையம் போய் அழைத்து வந்தேன். பின்னர் ஆயில்யன் வீட்டுக்கு போனோம். ஆயில்யன் பேசியல் செஞ்சுக்க போயிருந்ததால் ஆயில்யன் விட்டில் ஒரு காபி குடித்து விட்டு வந்தோம். ஆயில்யன் பேசியல் செஞ்சுக்க போனதை தனியாக பஸ் விட்டோ பதிவு போட்டோ கும்ம வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்து அடுத்த பாகத்துக்கு பயனிக்கிறேன்.