பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 16, 2011

கெனால் பேங் ரோடு - சென்னை -28

ஒரு வழியாக கோடை விடுமுறை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து "பள்ளி உண்டு பாடம் இல்லை" என்னும் கோஷத்துடன் நேற்று ஆரம்பம் ஆகிவிட்டது. நட்ராஜ் தான் ரகளை செய்வானோ என்கிற மாதிரியாக பயம் இருந் தாலும் அவன் முதள் நாளே ஸ்கூல் போகும் பேக் எல்லாம் முதுகிலே மாட்டிக்கொண்டு படுத்து தூங்கும் அளவு தயார் நிலையில் தான் இருந்தான். எனக்கு தான் அழுகை அழுகையாக வந்தது. பின்னே என்ன நான் காலேஜ் போன காலத்திலேயே அம்மா காலை கட்டிக்கொண்டு தாரை தாரையாக கண்ணீர் விட்டவனாச்சே. அத்தனை ஏன்? ஞாயிறு லீவ் விட்டு திங்கள் அன்று போகும் போது கூட ஒரு டோஸ் அழுதுவிட்டு தான் போவேனாக்கும். அத்தனை ஒரு ஈடுபாடு படிப்பு மீது :-)

காலை எழுந்ததும் எனக்கு முன்னரே அவன் குளித்து முடித்து தயாராகி பைக் எல்லாம் துடைத்து உம்மாச்சி எல்லாம் கும்பிட்டு சந்தன கோபி எல்லாம் நெற்றியில் பிரமாதமாக வைத்து கொண்டு பள்ளிக்கு போன உடனே அவன் நண்பர்கள் சூர்யா, ஷிபாயா, கல்யாணி என எல்லோரிடமும் குசலம் விசாரித்து கொண்டிருந்தான்.
"நீ லீவுக்கு எங்க போனே? என்ன சினிமா பார்த்தே? என்ன ஸ்வீட் சாப்பிட்ட என்பன போன்ற அதிமுக்கிய விசாரணைகள் நடந்தன. நீ லீவுக்கு எங்க போனே என்ற கேள்விக்கு மாத்திரம் அவன் வாய் கும்பகோணம் என சொல்ல வந்தும் அவன் ஜீன் சும்மா விடுமா? படார்ன்னு கைனடிக்டெக்ட்ன்னு சொன்னான். நானே இது வரை கேள்விப்பட்டது இல்லை அந்த பெயரை. எப்போதோ யோகேஸ்வரன் ஃபெட்னா நடந்த இடம் அது, அது வட அமரிக்காவிலே இருக்குன்னு சொன்னது மாத்திரம் லைட்டா ஞாபகம் வந்தது. அவன் இந்த பெயரை அப்போது மனதில் வைத்துக்கொண்டு இப்போது அவிழ்த்து விட்டுவிட்டான். யாரோ ஒரு வாண்டு 'அது எங்க இருக்கு?" என கேட்க இவன் கொஞ்சமும் சளைக்காமல் "அமேரிகாவிலே இருக்கு. அமேரிக்கா ரொம்ப பெரிசா இருக்கும்" என அமேரிக்கா புராணம் அவிழ்த்து விட ஆரம்பிக்க நான் என் பள்ளிக்கூட நாட்களுக்கு மனது போக ஆரம்பித்துவிட்டது.

எனக்கு என்னவோ உலகில் அப்போதைக்கு பெரிய இடமே "மெட்ராஸ்" தான். என் ஒரு அத்தை மெட்ராஸ்ல இருப்பது மட்டும் தான் தெரியும். அங்கே போனது எல்லாம் கிடையாது. தீபாவளி, பொங்கல் வரிசைப்பணம் அப்பா மணியார்டர் அனுப்பும் போது 35, கெனால் பேங் ரோடு என அட்ரஸ் எழுதும் போதே ஒரு வித சிலிர்ப்பு வரும். அப்படித்தான் ஒரு முறை பஞ்சாபி என்கிற பஞ்சாபகேசன் என்னிடம் " மெட்ராஸ்ல எங்க போனே?" என கிராஸ் கொஸ்டின் கேட்க லைட்டாக அதிர்ந்தாலும் 35, கெனால் பேங் ரோடு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28 என மனப்பாடமாக சொன்னேன். போதா குறைக்கு இன்னும் டீப்பாக " அந்த பிள்ளையார் கோவில் பக்கத்துல" என பிள்ளையாரின் மேல் இருந்த அதீத நம்பிக்கையால் அளந்துவிட்டேன். கண்டிப்பாக பிள்ளையார் கோவில் இல்லாமலா போகும்.

ஒரு பொருளை வியாபாரம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதை விட ஆஃப்டர் சர்வீஸ் என்பது ரொம்ப முக்கியம் என்கிற வியாபார தந்திரம் எனக்கு அப்பவே நல்லா தெரியும். பொய் சொல்வது என்னவோ ஒரு செகண்ட் வேலை தான். அதை மெயிண்டய்ன் பண்ணுவது என்பது ஆஃப்டர் சர்வீஸ் மாதிரி. ரொம்ப கஷ்டம். அவன் ஒரு படி மேலே போய்" அப்படியா உங்க மாமா என்ன வேலை பண்றார்?"ன்னு அடுத்த கேள்வி கேட்க நான் கொஞ்சமும் தயங்காமல் "அதே பேங்ல தான்" என சொல்ல அவன் என்னிடம் "அதாவது கெனால் பேங்ல தானே" ன்னு கேட்டான். அகராதி புடிச்சவன். நான் ஆமாம் என சொன்னதும் ஒரு வித நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு போய்விட்டான்.

ஆக கெனால் பேங் சாலையில் அத்தை வீடு இருக்கு, கெனால் பேங்ல மாமா வேலை செய்கிறார் என்னும் அழகிய பொய்யை அடுத்த அடுத்த வருட லீவ் முடிந்ததும் அதே பஞ்சாபியை கூப்பிட்டு உரம் போட்டு வளர்த்தேன். மாமா அந்த பேங்ல பீல்டு ஆப்பீசராக, மேனேஜராக இப்படி வருடா வருடம் பிரமோஷனும் கொடுத்து வந்தேன். பின்ன என்ன? இல்லாத வேலையில் சேர்த்தாச்சு கற்பனையில். அதுக்காக சும்மா விட்டுட முடியுமா என்ன? பிரமோஷன் யாரு கொடுப்பா? வேலை வாங்கி கொடுத்த நான் தானே எல்லாம் செய்யனும். என் கடமை இல்லியா அதல்லாம்? அத்தனை ஏன்? ஒரு லீவ் முடிந்து போன போது அந்த மாமா அந்த கெனால் பேங்ல ஒரு பிரச்சினையில் சஸ்பென்ஷன்ல இருக்காருன்னு கூட சொன்னேன். அத்தனை ஒரு தொழில் சுத்தம் நம்ம கிட்ட:-)

ஒரு வருஷ ரெண்டு வருஷமாவா நான் பெத்த அந்த பொய்யை காப்பாத்தினேன். ரொம்ப வருஷம் கழிச்சு அதே பஞ்சாபி ஏதோ நொய்டாவோ என்னவோ ஒரு பிராஞ்ச்ல பஞ்சாப் நேஷனல் பேங்குல ஆப்பீசராம். மாயவரம் பக்கம் பொண்டாட்டி பிள்ளையோட கடைத்தெருவில் போனான். என்னை பார்த்ததும் கூப்பிட்டு "இப்ப கெனால் பேங் மாமா என்ன பண்றார்?" என கேட்க அவரு ரிட்டையர்டு ஆகிட்டாருன்னு சொல்லிட்டு வந்தேன். அப்போதும் அதே நமட்டு சிரிப்பு தான் அவன் கிட்டே. அதன் பின்னே ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்தது. கெனால் பேங் என்றால் கூவம். கெனால்ன்னு சொன்னா சாக்கடைன்னு. கெனால்க்கு அர்த்தம் தெரிஞ்சதும் நான் பணால் ஆகிப்போனேன். எனக்கு அதல்லாம் கூட கவலையாக தெரியவில்லை. ஆனா அந்த பஞ்சாபி நான் 3வது படிக்கும் போதே ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தானே. அப்படின்னா அப்பவே அவனுக்கு தெரிஞ்சிருக்கும் தனே. அப்போதே தனியா கூப்பிட்டு என்கிட்ட சொன்னால் என்ன என்கிட்ட?. இப்போது நான் போன பின்னே பொண்டாட்டி கிட்டே சொல்லி சிரிச்சு என் மானத்தை வாங்கியிருப்பான். கிராதகன்.

நான் சகஜ நிலைக்கு வந்தேன். நட்ராஜிடம் கூப்பிட்டு சொன்னேன். "தம்பி நிஜமாகவே கைனடிக்டெக்ட்ன்னு ஒரு ஊர் இருக்குதான்னு ஒரு கூகிள் பஸ் விட்டு விசாரிச்சுப்போம்டா. நாளை மருநாள் அவன் பொண்டாட்டி பிள்ளை கிட்டே உன் மானம் போய்ட கூடாதுல்ல. அது எதுனா பெரிய சாக்கடைன்னு அர்த்தம் எதுனா வந்துட போகுது" என சொன்னேன். ஏங்க வட அமரிக்கா வலைப்பதிவர்களே! அப்படி ஒரு ஊர் இருக்குதா?

June 6, 2011

சப் காண்டிராக்டர் சல்மான்கான்!!!

ஒரு எட்டு வருஷம் அபுதாபி - ஷார்ஜா என ஆட்சி செய்து விட்டு துபாய் நகரை கைப்பற்றும் நோக்கோடு துபாய் வந்த புதிது. என் நண்பன் அதிரை தாஜுதீனின் தம்பி ஜமீல், எனக்கும் தம்பி தான். துபாய் வரணும் சொல்லி போன் செய்தால்" ய்" சொல்லி முடிக்கும் போதே விசிட் விசாவை வீட்டு கதவை தட்ட வைக்கும் வித்தகன். ஒரு மஞ்ச பையிலே மாத்து துணியும் அடுத்த வேளை பல் விளக்க கொஞ்சம் பயோரியா 1431 ஒரு தரத்துக்கு தேவையானது ஒரு தின காலண்டர்ல கிழிச்ச பேப்பரில் மடித்து கொண்டும் துபாய் போய் இறங்கி விட்டால் ஜமீல் பிளாட் ரெண்டு கையையும் அகலமா நீட்டிகிட்டு வா வான்னு கூப்பிட்டுக்கும். ஜமீல் பிளாட் இருந்த இடம் இருக்கே அது துபாய்ல ஒரு முக்கியமான இடம். அந்த இடத்தை பத்தி அழகா தெரிஞ்சுக்கனும்னா என்னோட இந்த பதிவிலே போய் பாருங்க.

அங்கே போய் இறங்கிய பின்னே தான் ரெஸ்யூம் எல்லாம் அப்டேட் செய்தேன். பின்னே அதை வசதியாக ஜமீல் கிட்டே கொடுத்து விட்டால் போதும். நான் சொல்லும் நம்பருக்கு பேக்ஸ், மெயில்ன்னு மீதி எல்லாம் ஜமீல் பொறுப்பு தான். காலை 5.30க்கு எழுந்து குளித்து விட்டு பொடி நடையாக பின்னால் இருக்கும் சப்கா ரோட்டில் நடந்தால் முடிவினில் அப்ரா (படகு துறை ) வரும். ஒரு 50 பைசா கொடுத்து படகில் டேராதுபாயில் இருந்து பர்துபாய் கரையில் இறங்கினால் உடனே சிவன்கோவில் வந்துவிடும். காலை ஆறு மணிக்கு ஆராதனை. எவனோ வாங்கி அண்டாவில் ஊத்தி வச்ச பாலை எடுத்து "இதை நான் வாங்கினதா நினைச்சுக்கோ" என சொல்லி சிவனுக்கு அபிஷேகம் செஞ்சுட்டு வந்தால் கைமேல் பலன் சுட சுட இருக்கும். ஆமாம் 4 பிரட் ஸ்லைஸ்ம் போதுமான அளவுக்கு சென்னாவும் ஒரு துப்பட்டா போடாத சுடிதார் அணிந்த பஞ்சாப் பாட்டி கையிலே வைக்கும். பின்னே குருத்வாராவுக்கும் நாலு படி ஏறி அங்க கொடுக்கும் திருவாதிரை களி பின்னே சூடான டீ, அதன் மேலேயே எவனோ கொடுக்கும் கொஞ்சம் பெப்சி பிரசாதம், எல்லாம் கலந்து கட்டி அடிச்சுட்டு கிருஷ்ணன் கோவில் வந்தா லஜ்ஜையே இல்லாம அந்த காலை நேரத்திலும் சேட்டு மாமிகள் ஸ்வீட் கொடுப்பாங்க. அதையும் வாங்கி தின்னுட்டு எவனோ அங்கே வாங்கி போட்ட கல்ஃப் நியூஸ், கலீஸ் டைம்ஸ் எல்லாம் பார்த்து ஜமீலுக்கு இந்த இந்த நம்பருக்கு பேக்ஸ் அனுப்புன்னு போன்ல சொல்லிட்டு அதே பேப்பரை விரித்து கிருஷ்ணன் சன்னதியிலேயே தியானம்னு பேர்ல ஒரு தூக்கம் போட்டா வரிசையா பேக்ஸ் பார்த்துட்டு போன் பண்ணுவனுங்க கம்பனிகாரனுங்க

பின்னே அந்த கம்பனியின் சொத்து மதிப்பு இன்ன பிற ஜாதகம் எல்லாம் பார்த்து கேட்டு தெரிஞ்சுகிட்டு இஷ்டம் இருந்தா அங்க இருந்து கோல்டு சூக் பஸ்டாண்டு போய் 3 திர்காம் கொடுத்து அல்கூஸ் ஏரியா பக்கம் இண்டர்வியூ போவேன். நான் கேட்கும் சம்பளம் கொடுத்தா ஓக்கே. இல்லாட்டி உன் சகவாசம் வேண்டாம் போ என திரும்பவும் பிளாட் பக்கம் வந்து விடுவேன். ஒரு கோடி சம்பளம் கொடுக்குறேன்னு சொன்னாலும் அதன் பின்னே பிளாட் விட்டு நகர மாட்டேன்.

அந்த பிளாட் என்னவோ சிங்கிள் பெட் ரூம் பிளாட் தான். எட்டு பேர் அதிலே நிரந்தர மெம்பர்ஸ். ஆனா புளோட்டிங் பாப்புலேஷன் அதிகம். கிச்சன்ல எப்போதும் எதுவாவது தயாராகும். யாராவது ஹால்ல உட்காந்து சாப்பிடுவாங்க, புத்தம் புதிய படம் எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும். இப்போ நீங்க அங்க போனா கூட "ராணா"படம் எடுத்த வரை பார்ப்போம் என யாராவது பார்த்து கொண்டிருப்பாங்க. அங்கே இருக்கும் கம்பியூட்டர் உபரி பாகங்கள் ஹாலில் இருக்குமே அதை தோண்டி தூர் வாறி போட்டால் அதன் உள்ளே ஜமீலை பார்க்கலாம். ஜமீலுக்கு ஒரு நல்ல பழக்கம். 24 மணி நேரமும் போன் ஆஃப் பண்ணாத பழக்கம். காலை 7 மணிக்கு ஆபீஸ். மேனேஜர் (கம்) ஓனர் ஒரு பத்து மணிக்கு போன் செய்யும் போது அந்த கம்பியூட்டர் குவியலில் இருந்து போன், கை, வாய் மட்டும் வெளியே வரும். "எஸ் சார் எஸ் சார் நியூட்ரலைசேஷன் ஆபீல்ல இருக்கேன். செம கூட்டம். எஸ் எஸ் வர்ரதுக்கு ஒரு மணியாகிடும்" என சொல்லிவிட்டு தலை, கை, போன் மீண்டும் உள்ளே கம்பியூட்டர் குவியல் உள்ளே போய்விடும்.

அது ஜமீல் பிளாட் என்பதால் நான் அதிலே ஒரு நிரந்தர மெம்பர். ஜமீல் மூலமாக விசிட்ல வந்து வேலை தேடும் அதிரை மக்கள் எல்லாம் பகல் நேரத்தில் அங்கே தான் கூடும். சில நாள் வேலை தேட அலுப்பாக இருந்தால் காலை நிரந்தர மெம்பர்ஸ் எல்லாம் காலை 7 மணிக்கு வேலைக்கு போன பின்னே அரட்டை கச்சேரி ஆரம்பம் ஆகிவிடும். அருமையான சமையல் எல்லாம் செஞ்சு அசத்துவோம்.

அப்படித்தான் ஒரு நாள் காலையில் வேலைக்கு போன மஜீது திரும்பி ஓடி வந்தான். மஜீது வேலை பார்ப்பது பக்கத்து சப்கா ரோட்டில் தான். சப்கா ரோடு என்பது நம்ம சென்னை ரங்கநாதன் தெரு மாதிரி. அத்தனை ஒரு ஜன நெரிசல். எங்க திரும்பினாலும் "என்ன காகா எப்ப வந்தீய"ன்னு அதிரை, முத்துப்பேட்டை குரல் மட்டுமே கேட்கும். அதிலே ஒரு சைனா காரியின் கடையிலே தான் மஜீது தற்காலிக வேலை பார்த்து கொண்டிருந்தான். வேலை பிரமாதம் இல்லை. அந்த சைனாக்காரி சைனாவிலிருந்து லேடீஸ் ஹேண்ட் பேக், கூலிங் கண்ணாடிகள் போன்ற பொருட்களை மலிவு விலைக்கு வரவழைத்து மொத்த வியாபாரம் செய்து வந்தாள். கடை பத்துக்கு பத்து அளவு தான். அதன் உள்ளேயே ஒரு சுழல் மாடிப்படி சின்னதாக மிக சின்னதாக இருக்கும். அதன் வழியே போனால் மாடியில் ஒரு 30க்கு பத்து சைஸ்ல குடோன்.

மஜீது வந்ததும் "சைனாகாரிக்கு கொஞ்சம் ஹேண்ட் பேக் லோடு வருது. அதை மாடில குடோன்ல ஏத்தனும். 100 திர்காம் தருவா. என்னை தனியா அண்லோட் பண்ண சொன்னா. நான் தான் நீங்க சும்மா தானே இருக்கீங்க. வந்து லைட்டா ஹெல்ப் பண்ணினா ஒரு பத்து நிமிஷம் 100 திர்காம்.. எனக்கு கூட எதும் வேண்டாம், நீங்களே பிரிச்சு எடுத்துகுங்க" என சொன்னான். அட பத்து நிமிஷத்துல 100 திர்காம். அப்படின்னா ஒரு மணி நேரத்துல 600 திர்காம். அப்படின்னா ஒரு நாளைக்கு 4800. அதை 13 ஆல பெறுக்கினா? அய்யோ சொக்கா ..ஷேக் முகமதுக்கு கூட இத்தன சம்பளம் வராதே.. எவன் மூட்டை தூக்குவதை பார்த்துட போறான். சரி போய் அதை எடுத்து வச்சுட்டு வந்துடுவோம் என கேணத்தனமா நான் தான் முதலில் நினைத்தேன்.

முனாஃப் காகா தலைமையில் நாங்க ஒரு 3 பேர் போனோம். முதலில் நான் போனதும் ஒரு ஹேண்ட் பேக்கை தூக்கி பார்த்தேன். "முனாஃப் காகா, இது சப்ப மேட்டரு. சட்டுபுட்டுன்னு தூக்கி கெடாசிட்டு "அப்பா கடை"யிலே லெக் பீஸ் வச்சு ஒரு பிரியானி அடிச்சுட்டு போவும்" என சொன்ன போது அவரும் சரின்னு சொன்னார். பின்னர் தான் தெரிந்தது. அந்த கடைக்கு பக்கத்தில் ஒரு பூட்டிய கடையின் வாசலில் ஒரு 20 ஃபீட் கண்டய்னர் நின்னுச்சு. அதிலே இருக்கும் சரக்கு எல்லாம் தான் மேலே அந்த சுழல் படி வழியா நாங்க தூக்கிட்டு போகனும்னு.

அந்த சைனாகாரி கிட்டே முனாஃப் காகா தான் பேரம் பேசினார். பேரம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சு 100 திர்காம்க்கு காண்டிராக்ட் ஓக்கே ஆச்சு. "அப்பா கடை"யிலே போய் ஒரு டீ குடித்து விட்டு வந்து கண்டெய்னர் ஒப்பன் செய்யும் போது அந்த சைனாகாரி கிட்டே ஒரு 3 பட்டான் வந்து நின்னான். அது வரை அந்த கண்டெய்னர் யாருதுன்னு தெரியாம அதன் எதிர்பக்க சாலையில் குரங்காட்டி மாதிரி குத்துகாலிட்டு உட்காந்து இருந்த அந்த 3 பேரும் அங்க வந்தானுங்க. பட்டான்னா எப்படிப்பட்ட பட்டான். நம்ம ஊர்ல தெருவிலே ஒரு கோவிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு போச்சுன்னா வருமே ஒரு மொச்சை வாடை அது போல வாடையுடன் அழுக்கு பட்டானின் அக்மார்க் (உள்ளாடை போடாத) குர்த்தா ஜிப்பாவிலே, பல் விளக்காத வாயிலே பச்சையான ஹெர்பல் உருண்டை நஸ்வாக் போட்டு அடக்கிகிட்டு சுத்தமான தார் ரோட்டிலே "புளிச்"ன்னு துப்பிகிட்டு இருக்கும் அக் மார்க் பட்டான். பாகிஸ்தான்லயே இவனுங்க கராச்சி, இஸ்லாமாபாத், பஞ்சாப், ஹைதராபாத் எல்லாம் இல்லை. சுத்தமான பெஷாவர். நஸ்வாக் போட்ட எச்சிலை இவன் வீட்டில் இருந்து டைட்டானிக் கேம் ஆடினா ஆப்கானிஸ்தான்ல இருக்கும் ஹமீத்கர்சாய் வீட்டு கக்கூஸ்ல விழும் அளவுக்கு பார்டர் பட்டான். உருது கூட ரொம்ப பேச தெரியாத புஷ்டாக் மட்டுமே பேசும் பட்டான். ஆறு அடிக்கு மேலே உயரம். முகத்திலே சுருள் சுருளான தாடிக்கு நடுவே தெரியும் ரோஸ்கலர் கன்ன மேடு, புறங்கையிலே கூட புசு புசுன்னு முடின்னு அந்த காலத்திலே இந்தியா மேல படை எடுத்த ஷெர்ஷாவுக்கு பேரன் மாதிரியான ஒரு தோற்றமுள்ள பட்டான்.

நம்ம ஆளுங்க அவன் ஆகிருதியை பார்த்து மனசுக்குள்ள பயந்தாலும் பயப்படாத மாதிரியே திட்டுவாங்க. யானைக்கு அதன் பலம் எப்படி தெரியாதோ அது போல அவனுங்களும் பயப்படுவானுங்க. அவனுங்க வந்ததும் "நாங்க இறக்கி தர்ரேம் 500 திர்காம் போதும். எங்களுக்கு இதை விட்டா பிழைப்பு எதும் இல்லை" என எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அந்த சைனாக்காரி 100 திர்காமுக்கு நாங்க ஒத்துகிட்ட காரணத்தால் அவனுங்களை உதாசீனப்படுத்தி அனுப்பி விட்டாள். அவனுங்க எங்களை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்து விட்டு திரும்பவும் பழைய படி எதிரே போய் குத்துகாலிட்டு பாம்பாட்டி மாதிரி உட்காந்து உருட்டிகிட்டு இருந்தானுங்க.
சரின்னு வேலையை ஆரம்பிக்கவேண்டி கண்டெய்னரை திறந்தா எல்லாம் கார்ட்டூன்ல இருந்துச்சு. முதல் காட்டூன் எடுக்கும் போதே நகர்த்த முடியலை. அத்தனை ஒரு கனம். நான் பொதுவாக செல் போனை கூட வெயிட் அதிகம்னு நினைப்பவன். மெதுவா இழுத்து தலையிலே வச்சா எங்க ஊர்ப்பக்கம் கரகம் (ஆடும் கரகம் இல்லை, அம்பாள் கரகம் செம வெயிட்டா இருக்கும்) தூக்கி தலையிலே வச்ச மாதிரி கழுத் து நரம்பு எல்லாம் புடைச்சுகிட்டு கண்ணு சிவந்து போயிடுச்சு. அந்த நேரம் பார்த்து எவனோ தெரிந்தவன் வந்ததால் மானமே போச்சேன்னு நினைச்சுகிட்டு அதை கடை வாசலில் தொப்புன்னு கீழே போட்டேன். அவன் கிட்டக்க வந்து "என்ன அண்ணே இதல்லாம்"ன்னு கேட்க "இந்த ஹோல்சேல் பிசினஸ்" ஆரம்பிச்சு இருக்கேன்"னு சொல்லவும் நான் கைகாட்டின இடத்திலே சீனாக்காரி வந்து நிற்கவும் சரியாக இருந்து தொலைத்தது. அவன் ஒரு மாதிரி பார்த்து கிட்டே போனான். என்ன என்ன புரளி கிளப்பி விடப்போறானோ என நினைத்து கொண்டே நிற்கையில் அடுத்த தெரிஞ்சவன் வந்தான்.

அடப்பாவிகளா எல்லா தெரிஞ்சவனும் இன்னிக்குன்னு பார்த்து இந்த பக்கம் தானா வரனும்? அவன் கிட்டே வந்ததும் நான் ரொம்ப ஜாக்கிரதையாக என் கையை காட்டும் திசையில் அந்த சீனாக்காரி இல்லாம பார்த்து " ஹோல் சேல் கடை ஆரம்பிச்சு இருக்கேன்" என சொல்ல அவன் "அப்படின்னா இந்த சீனாக்காரி யாரு?"ன்னு ரொம்ப ஆர்வமா கேட்க " சீனாக்காரியை வேலைக்கு வச்சிருக்கேன்" என சொன்னேன். சப்கா ரோட்டின் இந்த முனையில் " சீனாக்காரியை வேலைக்கு வச்சிருக்கீங்களா?" என சரியாக கேட்டவன் ரோட்டின் அந்த முனைக்கு போகும் போது கொஞ்சம் வார்த்தைகளை சிக்கனமாக்கி "அபிஅப்பா ஒரு சீனாக்கரிய வச்சிருக்காராம்"ன்னு சொல்லிகிட்டு போனான். அட தேவுடா! எல்லாம் என் நேரம்!

ஆச்சு ஒரு மணி நேரம். நாங்க 3 பேர் மற்றும் கடையிலே வேலை செய்யும் மஜீத் எல்லாம் சேர்த்து முக்கி முக்கி ஒரு 5 சதம் கூட அந்த கண்டய்னரில் காலி பண்ணவில்லை. அதுக்குள்ள எங்களுக்கு மயக்கம் கண்ணை இருட்டிகிட்டு வந்துச்சு. அப்பவும் எதிரே அந்த பட்டான்கள் குத்துகாலிட்டு எங்களையே பார்த்து கொண்டே இருக்க கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. நடு நடுவே டீ வேறு குடித்து பார்த்தோம். நான் மெதுவாக முனாஃப் காகாவிடம் போய் " காண்டிராக்ட் கட்டுபடி ஆகாது போலிருக்கு காகா, கொஞ்சம் ரைஸ் பண்ணுங்க" என சொன்னதும் சீனாக்காரியிடம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடந்துச்சு. அவ கன்னா பின்னான்னு சீன மொழியிலே திட்ட ஆரம்பிச்சா. அனேகமா எங்க அப்பத்தாவிலே ஆரம்பிச்சி எங்க வருங்கால பேத்தி பேரன் வரை திட்டியிருப்பா போலிருக்கு. ஒரு கட்டத்திலே அவ பேச்சின் அசிங்கம் அவ காதுக்கே பொறுக்காம தன் காதையே பொத்திகிட்டு திட்ட ஆரம்பிச்சான்னா பார்த்துகுங்க. ஆனா அவ குரல் வளம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அவ மட்டும் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாட்டை பாடினா வாணி ஜெயராம் தோத்தாங்க போங்க.

திரும்பவும் தூக்க ஆரம்பிச்சோம். முடியலை. சரி இனி கார்டூன் சரியா வராது. அதை ரோட்டிலேயே பிரிச்சு ஒரு பத்து பத்து பீஸாக கையிலே எடுத்து போவும்னு முடிவு பண்ணி அப்படி செஞ்சா அந்த சின்ன சுழல் மாடிப்படியிலே ஒரு 100 தடவை ஏறி இறங்கியதும் குருதி அழுத்தம் சும்மா கிர்ர்ர்ர்ன்னு ஏறுது. முனாஃப் காகா என்னிடம் கவலைப்படாதே. ஹேப்பி அவர்ஸ்ல ஆளுக்கு ரெண்டு பீர் வுட்டுகிட்டு போனா உடம்பு வலிக்காது என சொன்னார். அதாவது அங்க சுத்தி சுத்தி பார்கள் தான். பார் அழகிகள் இரவு 8 மணிக்கு வந்து ஆடும் முன்னதாக இருக்கும் நேரம் தான் ஹேப்பி அவர்ஸ். அப்ப போனா ஒரு பீர் அப்போ 8 திர்காம் தான். ஒரு கட்டத்தில் அந்த சுழல் மாடிப்படியில் வரிசையாக நாங்க நால்வரும் எஸ் வடிவில் மயங்கி விழ அந்த சீனாக்காரி வண்டி மாட்டுக்கு பின்னால நெருப்பு வைக்காத குறை தான். ஒரு வழியா மயக்கம் தீர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம். "சப் காண்டிராக்ட்" அதான் ஒரே வழி. எதிரே உட்காந்து இருக்கும் பட்டானிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அது வரை ஒரு கால்வாசிகூட காலியாகவில்லை. பட்டான்கள் வந்து ஒரு முறை பார்த்து விட்டு "ஓக்கே ஒரு 475 திர்காம் கொடுங்க" என கேட்ட போது அடப்பாவிங்களா 100 திர்காமுக்கு காண்டிராக்ட் எடுத்து 3 மணி நேரம் உழைத்து முடித்து 475க்கு சப்காண்டிராக்ட் தேவையா என நினைத்து மீண்டும் மயக்கம் ஆனோம்.

இனி சீனாக்காரி கால்ல விழ வேண்டியது தான் பாக்கி. விழுந்தோம். எங்களால முடியலை என கதறாத குறை தான். "வேலை செஞ்ச வரை காசு கொடு" என கேட்க அவ கொடுத்த அமவுண்ட் என்ன என்பதை இங்கே சொன்னா என்னை அடிங்க வருவீங்க. அதை வேண்டாம் என சொல்லிவிட்டு அங்கயே நின்னோம். அப்போது அந்த பட்டான்கள் மீண்டும் வந்தாங்க. சீனாக்காரி பேரம் பேசினா அவங்க கிட்டே. அவங்க இந்த தடவை 600 திர்காம் கேட்டாங்க. அவளுக்கு அவங்க மேல ஒரே கோவம். காச்சு மூச்சுன்னு கத்தினா. பின்னே ஒத்துகிட்டா. அவங்க முதல்ல கையிலே காசு குடுத்தா தான் ஏத்துவோம்ன்னு சொல்ல அதையும் குடுத்தா. நாங்க இப்ப ரோட்டுக்கு அந்த பக்கம் போய் பட்டான்கள் உட்காந்து வேடிக்கை பார்த்த இடத்தில் குத்துகாலிட்டு உட்காந்தோம். உலகம் உருண்டைன்னு அப்ப தான் புரிஞ்சுது.

ஒரு அரை மணி நேரம் தான். அந்த 3 பேரும் சும்மா பம்பரமா தலையிலே ஒரு கார்டூன், கையிலே ஒரு கார்டூன்னு குழந்தைகள் பொம்மையை தூக்கிகிட்டு போவது போல போய் எடுத்து வச்சாங்க. வேலை முடிஞ்சுது. எங்க கிட்டே வந்தாங்க. முனாஃப் காகா கையிலே 100 திர்காம் திணிச்சானுங்க. என்னவோ புஷ்டோ பாஷையிலே சொன்னாங்க. சிரிச்சுகிட்டே போயிட்டாங்க. அவங்க பேர் என்னன்னு கூட கேட்க தோன்றவில்லை. அனேகமா எதுனா பேருக்கு பின்னால கான் என்று முடியலாம். வாழ்க கான்! நாங்க ரொம்ப நேரம் அந்த பணத்தை பார்த்துகிட்டே நின்னோம். பக்கத்திலே ஒரு கடைக்கு அழைச்சுட்டு போனாரு முனாஃப் காகா. "சார் ஒரு அட்டை புரூபின் 400 பவர் குடுங்க" என கேட்டாரு!


May 25, 2011

பீஸ் சால் க்கே பைலே!!!


இந்த முதல் காதல் முதல் முத்தம் எல்லாம் கவிதை எழுதுபவர்களுக்கு எப்படி ஒரு கருப்பொருளோ அதே போல எனக்கு அந்த முதல் விமானப்பயணமும் அப்படியே. அது ஆச்சு இருபது வருஷம். மும்பை - செம்பூர் கமலா லாட்ஜில் கூட்டத்தோடு கூட்டமாக படுத்திருந்த என்னை உசுப்பி விட்டு "அனேகமா காலை 4 மணிக்கு ஏர்போர்ட் போகனும். ரெடியா இருங்க" என சொன்னபோது இரவு 11 இருக்கும். நான் அது முதலே தூங்கவில்லை. ஏரோப்பிளேன் கனவு என்ன ஒரு வருஷ இரு வருஷ கனவா . எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலான கனவு. அதில் பறக்க வேண்டும் என்று பேராசை எல்லாம் கூட இல்லை. அதை கிட்டத்தில் பார்க்க வேண்டும். இன்னும் கொஞ்சம் அதிஷ்டம் இருந்தால் அந்த படிகளில் ஏறி மேலே இருந்து அன்பேவா எம் ஜி ஆர் போல ஒரு கூலிங் கண்ணாடி போட்டுகிட்டு மத்தவங்களுக்கு டாடா காட்டிவிட்டு இறங்கி விட்டால் கூட போதுமான அளவிலேயே இருந்தன என் கனவுகள்.

இதோ காலை 4 மணிக்கு ஏஜண்ட் வந்து விடுவார். விமானத்தை அருகே பார்ப்பது என்ன, அதன் படியில் ஏறி கூட்டத்தினரை பார்த்து டாடா காட்டுவது என்ன, பறக்கவே செய்ய போகிறேன் என்ற அந்த நினைப்பே தூக்கத்தை விரட்டி விட்டது. இதோ என் கூட வரும் முபாரக், இன்னும் ஒரு பையன் இப்ராகிம் அவனை வழியனுப்ப வந்த அவனது அண்ணன் இப்படியாக நாங்கள் எல்லோருமே விடியல் காலை ஒரு 3 மணிக்கு எல்லாம் மும்பை சாந்தாகுரூஸ் விமானநிலையம் போயாகிவிட்டது. அந்த இப்ராகிமின் அண்ணன் "பசங்கலா அரபில 'தாள்'ன்னு சொன்னா உடனே ஒரு பேப்பரை எடுக்க கூடாது. 'தாள்'ன்னா இங்க வான்னு அர்த்தம் என சொல்லிக்கொடுக்க நான் கர்மசிரத்தையாக அதை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டேன். அரபியில் என் முதல் வார்த்தை பரிட்சியம் அப்போது தான். வாழ்க அந்த வாத்தியார். கடைசி வரை தாள் என்றால் இங்க வா என்பதை தவிர என் அரபிக் புலமை எகிறவே இல்லை. அந்த முதல் வார்தையே எனக்கு அரபிக்ல தெரிஞ்ச கடைசி வார்தையாகவும் ஆகிப்போனது.

ஏஜண்ட் வருவார் வருவார் என நினைத்து மணி நான்கு, ஐந்து என ஓடிக்கொண்டு இருந்ததே தவிர ஆளைக்காணவில்லை. ஒரு வழியாக என் விமான கனவு தகர்ந்து போன நேரத்தில் சாவகாசமாக ஒரு ஆறு மணிக்கு வந்தார். வந்ததுமே "என்னப்பா உங்க பிளைட் 9 மணிக்கு தான். ஆறு மணிக்கு உள்ளே போனா போதும். சிரியன் ஏர்வேஸ், காலை 9 மணிக்கு இங்க எடுத்தா நேரா அபுதாபி தான். நடுப்புற நிக்காது எங்கியும். இங்க பாருப்பா உனக்கு இமிக்ரேஷன் கிளியரன்ஸ் நாட் ரெக்கொயர்டு. ஆனா முபாரக்கும், இப்புராகிமுக்கும் அங்க ஆள் சொல்லிட்டேன். புஷ்ஷிங்ல உள்ள போகனும். சூதனமா நடந்துகுங்க. சரி சரி உள்ள போங்க" என சொல்லி விட்டு டிக்கெட் எங்க பாஸ்போட், விசா காப்பி எல்லாம் கையிலே கொடுத்து விட்டு போயே போயிட்டாரு.

என் கவலை எல்லாம், அடடே ஏர்போர்ட் கிட்டக்க வந்தும் ஒரு ஏரோப்ளேன் கூட கண்ணுல படலையே என்பதிலேயே இருந்தது. இமிக்ரேஷன் எல்லாம் முடிந்தது. பின்னே கஸ்டம்ஸ் செக்கிங். எல்லாம் முடிந்து ஒரு இடத்தில் உட்கார வச்சு பூட்டியவுடன் தான் கண்ணாடிக்கு அந்த பக்கமா ஏரோப்பிளேன் கிட்டக்க பார்த்தேன். பார்த்தேன் என்றால் அப்படி ஒரு பரவசமாக பார்த்தேன். பக்கத்திலே இருந்த ஒருவரிடம் "சிரியன் ஏர்வேஸ்" என்ன கலர்ன்னு கேட்டேன். அவர் தமிழ் தான் என எழுதி ஓட்டியிருந்ததுமுகத்திலேயே. "ஏன் வாங்க போறியா அதை?" என பதில் வந்த போது தமிழன் தான் என கன்பர்ம் ஆனது. இனி அவனிடம் பேசுவதாக உத்தேசம் இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து வேறு இடத்தில் போய் உட்காந்து கண்டிப்பாக அவன் தமிழனாக இருக்க கூடாது என நினைத்து கொண்டே " சார் திஸ் சிரியன் ஏர்வேஸ் இன்ஜின் குட் கண்டிசன், குட் ரன்னிங்" என "தேர்ந்தெடுத்த நேர்தியான" ஆங்கில வார்த்தைகள் போட்டு பேச்சு கொடுத்தேன். இந்த முறை "இனி இவனிடம் பேசுவதாக உத்தேசம் இல்லை" என இந்தியில் மனதில் நினைத்து கொண்டு அவன் வேறு இடம் பார்த்து போய்விட்டான்.

முபாரக், இப்ராகிம் ஆகியோர் என் சந்தேகம் தெளிவிக்க போதும் என நினைத்து அவர்களிடம் திரும்ப வந்து "சிரியன் பிளைட் இன்ஜின் எல்லாம் நல்லா தானே இருக்கும்? என கேட்டேன். அதற்கு இப்ராகிம் "ஆமாண்ணே கண்டிப்பா நல்லா இருக்கும். ஏன்னா அதான் பாரின் பிளைட் ஆச்சே". எனக்கும் அந்த பதில் திருப்தியாக இருந்து தொலைத்தது. பாரின் மோகம்!

8.30க்கு எல்லாம் அந்த அடைக்கப்பட்ட கதவை திறந்த போது "ஒய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்க்க்க்க்க்க்"ன்னு ஏதோ ஒரு விமானம் மூச்சு வாங்கி கொண்டு நின்றது. சுத்தமாக சத்தமே இல்லாத இடத்தில் கண்ணாடி சிறையில் இருந்து வெளி வந்ததும் அந்த வெட்ட வெளியில் அத்தனை ஒரு சத்தம். ஆனால் காதில் ஹார்லிக்ஸ் ஊற்றியது போல இருந்தது.(எனக்கு தேன் பிடிக்காது) ஏனனில் நான் இத்தனை நள் கண்ட கனவு தேவதைகள் அங்கே ரீங்காரமிட்டு கொண்டு ஒன்று வாலை காட்டியும், ஒன்று வயிற்றை காட்டியும், சிலது வயிற்றின் வழியே மனிதர்களை பிரசவித்து கொண்டும், சில விமான பறவைகள் தன் அடி வயிறு வழியே மூட்டை மூட்டையாக எதையோ ஏற்றிக்கொண்டு வயிற்றை நிரப்பிக்கொண்டும் இருந்தன. அழகாய் சத்தமே இல்லாமல் ஒரு நீண்ண்ண்ட பஸ் வந்து நிற்க நான், முபாரக், இப்ராகிம் ஆகியோர் ஓடி ஏறிக்கொண்டோம். உட்கார சீட் எல்லாம் இல்லை. எல்லாமே ஸ்டாண்டிங் தான். அது என் கனவு தேவதை அருகே கொண்டு செல்லும் வாகனம். மெதுவாக ஊர்ந்து போய் அந்த சிரியன் ஏர்வேஸ் வயிற்று பகுதியின் அருகே நிற்க நான் இறங்கி கூட்டத்தோடு கூட்டமாக பிரம்மித்து போய் அருகே பார்த்தேன். அப்ப்ப்ப்ப்பாடாஆஆ எம்மாம் பெருசு. அதன் இறக்கை அடியில் ஒரு ராட்சத இன் ஜினின் ஃபேன் சுற்றி கொண்டு சத்தம் போட்டுக்கொண்டு இருக்க எல்லோரும் அந்த படி வழியே ஏற நான் மட்டும் அதன் அருகே நின்று கொண்டு பார்த்து கொண்டே அசையாமல் நின்றேன். விமானம் அருகே கீழே தொப்பி போட்ட பைலட்டுகள், விமான பணிப்பெண்கள் சிலர் ஒரு தள்ளு வண்டி போல தன் லக்கேஜ் வைத்து கொண்டு ஏதோ பேசிக்கொண்டு நிற்க ஒரு ஏ கே 47 வைத்திருந்த ஒரு பாதுகாப்பு போலீசின் அந்த துப்பாக்கியை கூட ஆர்வமாக விழுங்குவது போல பார்த்து கொண்டு நின்றேன். அய்யோ இங்கயே ஒரு கூட்டுற வேலை கிடைச்சா கூட போதும். வாழ்நாள் முழுக்க விமானம் பார்த்து கொண்டே இருந்து விடலாம் என நினைத்து கொண்டேன்.

ஏரோப்பிளேன் ஏற படி ஏறும் போது துபாய் பார்ல பெண்கள் ஆட வரும் முன்னே மேடையை தொட்டு கும்பிடுவது போல தொட்டு கும்பிட்டேன் . மேலே உள்ளே நுழையும் முன்னர் திரும்பி அன்பே வா எம் ஜி ஆரை போல கைகாட்ட வேண்டும் பின்னர் பிள்ளையார் மந்திரம் சொல்லனும் என நினைத்து கொண்டேன். அந்த தகர படிகள் என் கால் பதிய பதிய எங்கள் வீட்டு தகர மாட்டு கொட்டகையின் மேலே நின்று ஆணி அடிக்கும் போது சத்தம் வருமே அப்படி வந்தது. மேல் படி வந்ததும் ஒரு அழகான பெண் அத்தனை ஒரு அழகில்லை என்றாலும் விமானப்பணிப்பெண் என்றாலே உலக அழகியாக நான் கற்பனை செய்து கொண்டிருந்த படியால் அந்த பெண் மிகவும் அழகாய் தெரிந்தாள். இருகரம் கூப்பி செயற்கையாக வணக்கம் சொன்ன போது அவள் எனக்கே எனக்காக பிரத்யோகமாக சொல்வதாய் நினைத்து கொண்டு அன்பேவா எம் ஜி ஆர், பிள்ளையார் மந்திரம் போன்றவைகளை மறந்து போனேன். பதிலுக்கு நானும் என் பெட்டியை கீழே வைத்து விட்டு இருகரம் கூப்பி வணக்கம் சொன்ன போது அசூசையாக அவள் பார்த்த பார்வை கூட அப்போது எனக்கு புரியவில்லை. ஒரு வித மோன நிலையில் இருந்தேன். பின்னர் அவள் என்னை தவிர்த்து என் பின்னே வந்த ஒரு அழகில்லா கிழவனுக்கு அதே போல வணக்கம் வந்த போது அந்த கிழவன் மேல் ஆத்திரம் வந்தது.இவனெல்லாம் எதுக்கு பிளைட்ல வர்ரானுங்க என மனதின் உள்ளே மிகவும் கடிந்து கொண்டேன்.

உள்ளே போனதும் அடுத்த அப்சரஸ் என்னை நோக்கி "போர்டிங் கார்ட் ப்ளீஸ்" என கேட்ட போது "அய்யோ இப்பவே சாப்பாடு கொடுத்துடுவாங்க போலிருக்கே" என நினைத்து நீட்டினேன். அவள் " 45 ஏ... கோ டு தட் சீட்" என சொல்லி விமானத்தின் நடுப்பாகம் கிட்ட தட்ட இறக்கைக்கு மேலே நான் உட்காந்து இருப்பது போல ஜன்னல் ஓர சீட் காண்பித்தாள். பின்னர் ஒரு தலைப்பா கட்டின பஞ்சாபி தாத்தா, அடுத்து முபாரக், அடுத்து இப்ராகிம் என நால்வரும் அமர எனக்கு ஏக சந்தோஷம். ஜன்னல் ஓட சீட். எல்லாவற்றையும் கவனிக்கலாம். அப்போது மணி கிட்ட தட்ட 9 நெருங்கியது. சீட் எல்லாம் தடவி பார்த்தேன். ஏதோ என் சொந்த விமானம் போல ஜன்னல் எல்லாம் ஆசையாக தடவிக்கொடுத்தேன். தேவையே இல்லாமல் எங்க வீட்டில் பாத்திரம் தேய்க்கும் இருளாயி கிழவி ஞாபகம் வந்தது. இருளாயி எல்லாம் பிளைட்டில் போகவே முடியாது. நான் தானே பிளைட்டிலே எல்லாம் போனேன் என அதுகிட்டே போய் சொல்லனும் என நினைத்து கொண்டேன். (கருமம்) அப்போது தான் ஞாபகம் வந்தது. ஆகா பிள்ளையார் மந்திரம் சொல்லவே இல்லியே என.

கஷ்ட்கர்த்தே திவ்தேஹாய பக்தேஷ்ட ஜெயதர்மனே .... அட அந்த பொண்ணு ஏன் இத்தனை குட்டை பாவாடை போட்டிருக்கு... ஹய்யோ அந்த சமஸ்க்ரதம் இப்படித்தான் ஸ்டார்டிங் ட்ரபிள் இருககாது, ஆனா பாதில வண்டி நின்னுடும்... அய்யய்யோ இந்த் பிளைட்டுக்கு பெட்ரோல் எல்லாம் போட்டுருப்பாங்க தானே... சமஸ்க்ரதம் வேண்டாம்.. தமிழ்ல முருகன் ஸ்லோகம் இருக்கே... அப்பாடா என்னா ஒரு வாசனை இந்த ஏர்ஹோஸ்டஸ் கிட்டே.. சிலோன் லக்ஸ் போட்டு குளிப்பாளோ?... வால வேல விகாரவா.. என்னது தட்டிலே என்னவோ எடுத்து கிட்டு வர்ரா.. ஒ சாக்லெட்... (பிரித்து வாயில் போட்டேன்) அட புளிப்பு மிட்டாய்.. ஒரு காட்பரீஸ் தரக்கூடாதா... வாரகாமனை நாடிவா... ஹய்யோ ஏன் என் இடுப்புகிட்டே கையை கொண்டு வர்ரா ஆண்டாவா ஆண்டவா... வாடி நாடிடுமோ சிவா... ஓ பெல்ட் போட சொல்றா, ஓக்கே ஓக்கே... எங்கவுட்டேன்...ம் வாடிநாடிடுமோ சிவா... என்னவோ சொல்றாங்க. ம் வாடிநாடிடுமோ சிவா.. வாசிமோகன வேலவா...

பக்கத்தில் பார்த்தேன். இப்ராகிம் என்னவோ முணு முணுத்து கொண்டு இருந்தான். என்னன்னு கேட்டேன். யாசின் ஓதுவதா சொன்னான். அவனும் குட்டை பாவாடை பார்த்திருப்பான் என நினைத்து கொண்டேன். மெல்ல விமானம் ஓடத்துவங்கியது. மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் வேகம் எடுத்து அது அதிகமான போது விமானமே குலுங்கியது மெல்ல பயம் வந்தது எனக்கு. ஷஷ்டி கவசம் சொல்லலாமா என நினைத்த போது குபீரென மேலே எழும்பியது. பக்கத்தில் இருந்த பாஜி வலது உள்ளங்கையை நெஞ்சில் வைத்து கொண்டார். ஏற்கனவே அவர் காது டர்பனால் மூடி இருந்தது. மும்பையின் கட்டிடங்கள் எல்லாம் கோணலாக தெரிந்தது எனக்கு. கொஞ்சம் கொஞ்சமாக சின்னதாகி எறும்பாக ஆனது. பின்னர் பச்சையாக கடல் தெரிந்தது. விமானம் இப்போது சமநிலைக்கு வந்து விட்டது. இதற்காகவே காத்திருந்தது போல சீட் பெல்ட் கழட்டும் சத்தம் சிலம்பொலி போல கேட்டது. நான் முடிச்சு போட்டிருந்த படியால அழகாக சத்தமில்லாமல் அவிழ்து வைத்தேன். அந்த விமான பணிப்பெண் தேவதைஸ் எல்லாரும் குறுக்கும் நெடுக்குமாக எதற்கோ அலைந்தனர்.

எனக்கு மேலே இருந்த பட்டனை தொட்டு பார்க்க ஆசையாக இருந்தமையால் தொட்டேன். ஒரு பெண் வந்தது." ஆர் யூ கால் மீ" என கேட்க நான் "இல்லியே" என தமிழில் செப்பினேன். அவசரத்துக்கு ஆங்கிலம் அடம் பிடிக்கும் எனக்கு. உடனே மேலே இருந்த பட்டனை ஒரு முறை அந்த பெண் அமுக்கி விட்டு என்னவோ சொல்லி விட்டு போனது. நான் பாஜியிடம் " மீ டென் டைம்ஸ் பிளைட். யூ? " என கேட்க அவரு "க்யா"ன்னு கத்த நான் சர்வமும் அடங்கி போனேன். சத்தியமா அவனுக்கு பஞ்சாபி மொழியில் கூட நான் பத்து முறை விமானத்திலே பறந்தேன் என சொன்னால் நம்பவே போவதில்லை. நான் சீட் பெல்ட் முடிச்சி போட்ட அழகை தான் பார்த்து தொலைந்துவிட்டானே!

இப்ராகிம் என்னிடம் "தண்ணி எப்போ தருவாங்க?" என கேட்க மேலே இருக்கும் பட்டனை அமுக்கு. வருவாங்க. அப்ப கேளு அப்படியே பக்கத்து இலைக்கும் பாயாசம் கேளு" என சொன்னேன். ஒருவழியா வந்தது. டின் பீர் ஒன்னே ஒன்னு தான் குடுப்பாங்களாம். பின்னே சாப்பாடுன்னு ஒன்னு கொடுத்தாங்க. எனக்கு பிடிக்காத வஸ்துகளாக இருந்தும் என் கனவு விமானமாச்சே. தேவாமிர்தமா இருந்தது. ஜன்னல் பக்கம் பார்த்தேன். இறக்கையில் சில பிளேட்டுகள் விமானம் திரும்பும் போதெல்லாம் வாய் பிளந்தது. அய்யய்யோ நான் மட்டுமே தான் அதை கவனிக்கிறேன். போய் பைலட் கிட்டே சொல்லலாமா என நினைத்து சொல்லாமல் விட்டுட்டேன்.

சில சமயம் "டும் டும் டுட் டுர்ர்ர்ர்ர்" என காற்று வெற்றிடத்தில் போகும் போது பயங்கர சப்தம் கேட்ட போதெல்லாம் கடலில் குதிக்க தயார் நிலையில் இருக்க வேண்டி காலுக்கடியில் இருந்த உபகரணங்கள் சரியாக உள்ளதா என தொட்டு பார்த்துக்கொண்டேன். ஏனோ தெரியவில்லை. நான் வாடகை சைக்கிள் எடுத்தால் கூட கொஞ்ச நேரத்தில் காற்று இறங்கி விடும் வீக்கான ராசி என் ராசி. என் சீட் முன்பாக இருந்த "வாந்தி எடுக்கும்" பையை கையிலே எடுத்து வாந்திக்கு முயன்றேன். பயத்தில் எச்சில் கூட வரவில்லை. ஒயின் ஷாப்பில் பீரை கொடுக்கும் காதித பை மாதிரியே இருக்குதே என நினைத்து கொண்டேன். கக்கூஸ் எங்கே இருக்கின்றது என தேடிப்பிடித்து போனேன். உபயோகப்படுத்த இல்லை. அதன் "உள்கட்டமைப்பு"கள் எப்படி என பார்க்கவே. கெமிக்கல் டாய்லட் அனியாயத்துக்கு சத்தம் போட்டு உள்ளிழுத்தது. மூல வியாதிக்காரர்கள் ஜாக்கிரதை என போர்டு வைக்க வேண்டும். அந்த நேரத்தில் விமானம் வெடிக்க கூடாது என சாமியை வேண்டிக்கொண்டேன். அப்படி நேரிடின் நான் ஆபாசமாக போட்டோப்படுத்தப்பட்டு எதாவது அரபிக் பேப்பரில் வந்து விடுவேனோ என்கிற அச்சம். உள்ளே இருந்த ஏதேதோ வாசனை ஆஃப்டர் ஷேவிங் திரவியத்தை எல்லாம் கையில் காலில் பூசிக்கொண்டு நாறிப்போய் வெளியே வந்தேன்.

என் பக்கத்து சீட் பாஜி போல கண்ணுக்கு கருப்பு துணி கேட்க வேண்டி மேலே பொத்தானை அமுக்கினேன். வந்த பணிப்பெண்ணிடம் "இங்கிலீஸ் மேகசீன் பிளீஸ். அப்படியே வரும் போது ஒரு பிளாக் துணியும் ப்ளீஸ் ப்ளீஸ்" என சொன்னேன். அந்தம்மாவுக்கு என் ஆங்கிலம் சென்றடைய வில்லை போலிருக்கிறது. ஒரு படமே இல்லாத அரபிக் புத்தகம் கொடுத்த போது அதிலிருந்ததை இடமிருந்து வலமாக முழுவதும் படித்து முடித்தேன்:-) எனக்கு கொடுக்கப்பட்ட புத்தகம் அரபிக் மொழி என புரிய சிலகாலம் ஆனாது என்பது தனி விஷயம்.

விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என தனி மதம் தனி ஜாதி உண்டாக்க வேண்டிடும் என நினைத்து கொண்டேன். இனி நானும் அந்த உயர்சாதியில் ஒருவனாக ஆனதால் பக்கிங்காம் அரண்மனையில் அம்மாவை விட்டு பெண் பார்க்க சொல்லலாம், ஆனால் அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அலகாபாத் ஆனந்தபவன்ல பொண்ணு எடுக்கலாம் என்றால் அம்மாவுக்கு அந்த குடும்பமே பிடிக்காது. தினமும் சம்மந்தி சண்டை வரும். அதையும் நிராகரித்தேன். சரி ஒரு செட்டிநாட்டு அரச குடும்பமோ, ஒரு ஊத்துக்குளி ஜமீனோ பார்த்துக்க வேண்டியது தான். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை.

கீழே சின்னதாக கப்பல் எல்லாம் போனது. உவ்வே.. போயும் போயும் கப்பலில் போகிறானே.. பரம ஏழை போலிருக்கு என முகத்தை திருப்பிக்கொண்டேன். எம்பர்கேஷன் கார்டு கொடுத்து நிரப்ப சொன்ன போது பக்கத்தில் எட்டிப்பார்தேன். முபாரக் ஆக்குபேஷன் இடத்தில் டாக்டர் என எழுதினான். திட்டினேன். ஏன் அப்படி எழுதினாய் என கேட்டேன். இதை பார்த்து விட்டு இன்னும் ஒரு பீர் கொடுத்தாலும் கொடுக்கும் என சொன்னான். அதிர்ந்து விட்டேன். "சரி யாருக்காவது உடம்பு சரியில்லைன்னு சொல்லி உன்னை கூப்பிட்டு வைத்தியம் பார்க்க சொன்னா என்ன செய்வாய்? அந்த ஒரு உயிரே போய்விடுமே" என கேட்ட போது அவன் " அது பரவாயில்லை. ஆனா நீ பைலட்ன்னு எழுதினியே. ஒருவேளை இந்த பைலட்டுக்கு நெஞ்சுவலி வந்து உன்னை கூப்பிட்டி ஓட்ட சொன்னா என்ன ஆகும்.ஒட்டுமொத்தமா எல்லா உயிரும் போய்விடுமே" என சொன்னான். அகராதி பிடித்த தமிழன். அடுத்தவன் வீட்டை எட்டிப்பார்பதை எப்போது விட்டொழிக்க போறார்களோ?

ஒரு வழியாக கீழே இறங்கும் நேரம் வந்தது. சீட் பெல்ட் முடிச்சு போட்டுக்கொண்டேன். "மீண்டும் வருகிறேன் என் காதலியே. இனி அடிக்கடி வருகிறேன்" என மனதில் நினைத்து கொண்டே என் இருக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டேன். நின்றதும் கீழே இறங்கி ஒரு வாஞ்சையுடன் அதை பார்த்து கொண்டே ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தேன். அபுதாபி என்னை அன்புடன் அரபி மொழியில் வரவேற்றது. ஆச்சு அதல்லாம் இருபது வருஷம். இன்றைக்கு நடந்தது போல இருக்கின்றது!


May 15, 2011

பழம் பெரும் திமுக தொண்டரிடம் ஒரு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!!!

திமுக வெற்றி வாய்பை இழந்து விட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தாகிவிட்டது. இனி அதிமுக விமர்சன வலையத்துக்குள். கட்சியினர் போட்ட கணக்குகள் தவிடு பொடி ஆகிவிட்டன. பத்திரிக்கையாளர்கள் தாங்கள் போட்ட கணக்குகளை தூசி தட்டி ஆராய்சி செய்து கொண்டிருக்கின்றனர். எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம் இருந்தது என்பது உண்மை தான் எனினும் கொஞ்சமும் தளர்ந்தோ ஒடிந்தோ விடவில்லை. நேற்றே எங்கள் ஊர் மயிலாடுதுறையில் உள்ள அண்ணா பகுத்தறிவு மன்றம் சென்று பார்த்த போது கட்சி பெரிசுகள் எதுவுமே நடக்காதது போல பேப்பர் படித்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பழுத்த 78 வயது பெருசு கிட்டே ஒரு பேசிப்பார்ப்போமே என பேசினேன். அவர் பெயர் ரங்கன்.


அபிஅப்பா: என்ன மாமா கட்சி தோத்துடுச்சு. எப்படி இருக்கு உங்க மனசு?


ரங்கன்: ரொம்ப திருப்தியா இருக்கு மாப்ள. இன்னும் சொல்ல போனா தமிழக வாக்காளர்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கு திமுகன்னு தான் சொல்லனும்.


அபிஅப்பா: என்ன மாமா புது சிந்தனையா இருக்குதே நீங்க பேசுறது?


ரங்கன்: இல்ல மாப்ள! சிந்தனை என்னவோ ஒன்னு தான். ஆனா இதை புது கோணம்ன்னு வேணா சொல்லு. விஜய்காந்து ஒரு பிரச்சாரத்திலே சொன்னாரு. அண்ணா ஆவி அவர் கனவிலே வந்து அதிமுகவுடன் கூட்டு சேர்ன்னு சொன்னதா. எனக்கு ஆவி, சாமில எல்லாம் நம்பிக்கை இல்லாட்டியும் ஒருவேளை அதல்லாம் உண்மையா இருக்கும் பட்சத்தில் அண்ணாவின் ஆவி அப்படி சொன்னாலும் சொல்லியிருக்கும். ஏன்னா விஜய்காந்து தனிச்சி நின்னு இருந்தா இன்றைக்கு கதையே மாறிப்போயிருக்கும். திமுக சென்ற முறை போல 80- 90 சீட் வாங்கியிருக்கும். காங்கிரஸ் தயவிலே ஆட்சி அமைந்திருக்கும். ஆக காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் வாங்கி இருக்கும். தமிழக இலட்சினை முத்திரை காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்தும் நிலை வந்திருக்கும். பின்னர் முக்கிய இலாக்கா கேட்டு அங்கே இருந்து மிரட்டல் அதிகரித்து இருக்கும். இவரும் பணிவார். பின்னர் அடுத்த அடுத்த தேர்தலில் 110 -110 என பங்கீடு கேட்பர். பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பின்னர் நீ 80 நான் 140 என்பர். இப்படியாக போனால் அண்ணா அமைத்து தந்த அந்த பேஸ்மெண்ட் போயே போயிருக்கும். ஆனால் இப்போது அண்ணா திமுக தான் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்து இருக்கு. இந்த ஆட்சியை அகற்றுவது திமுகவுக்கு மிகவும் எளிது. அடுத்த முறை திமுக வரும். ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது தடுக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே அண்ணாவின் ஆவி விஜய்காந்தின் கனவில் வந்து சொல்லியிருக்குமோ என நினைக்கவும் தோன்றுகிறது.

அபிஅப்பா: என்ன மாமா அண்ணாவின் மன்றத்தில் உட்காந்துகிட்டு மூடநம்பிக்கை கருத்து பேசுறீங்களே?

ரங்கன்: இல்ல மாப்ள, நான் மூடநம்பிக்கை பேசவில்லை. அந்த விஜய்காந்து பேச்சில் இருந்த எனக்கு சாதகமான ஒரு விஷயத்தை எடுத்து கொண்டு பேசினேன். அத்தனையே!

அபிஅப்பா: அப்படின்னா காங்கிரஸ்க்கு ஆட்சியில் பங்கு கூடாதுன்னு சொல்லும் நாம எதுக்கு காங்கிரஸ் கூட கூட்டணி வச்சுக்கனும்?

ரங்கன்: காங்கிரஸ் கூட நாம கூட்டணி வச்சுப்பது நமக்கு சாதகமாக அதிக இடங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்று தான் இருக்க வேண்டும். தவிர ஆட்சியில் பங்கு என்பதை தமிழக மக்கள் ஒத்துக்கவில்லை என்பதை எண்பதுகளில் கலைஞரும் நாமும் புரிந்து கொண்ட பின்னரும் அதே தவறை 31 ஆண்டுகள் கழித்தும் கலைஞர் செய்வார் என நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. வெறும் 119 சீட் தான் நிற்கிறோம் என்ற போதே கண்டிப்பாக இந்த கட்சி ஜெயிச்சா கூட்டணி ஆட்சி வரும் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது. அதற்கு மக்கள் ஒத்துக்கவில்லை. அதனால் தான் மிக முக்கியமாக திமுக தோற்றது.

அபிஅப்பா: திமுக தோல்விக்கு அது மட்டும் தான் காரணம் என உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க?

ரங்கன்: இல்லை அதுவும் ஒரு காரணம்னு தான் சொல்ல வந்தேன். முக்கியமாக இந்த ஒரு காரணத்தை சரி செஞ்சு இருந்தாலே மத்த காரணங்கள் அடிபட்டு கூட போயிருக்கலாம்.

அபிஅப்பா: அப்படின்னா?

ரங்கன்: அப்படின்னா அப்படித்தான்.அதாவது கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே 35 சீட்டுகள் மட்டுமே. அதுவும் நாங்கள் ஒதுக்கும் சீட்டுகள் மட்டுமே என சொல்லியிருக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் பாமகவுக்கு 18 இடமும், விசிக்கு 4 இடமும், காங்கிரசுக்கு 31 இடமும் மட்டும் கொடுத்து மீதி இடங்கள் திமுக நின்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அட்லீஸ்ட் காங்கிரசுக்கு 35 க்கு மேல் தந்திருக்க கூடாது. குறைந்தது திமுக 150 சீட்ல நின்னு இருக்கனும்.

அபிஅப்பா: காங்கிரஸ் தான் ஒரு 90 தொகுதிகள் இனம் கண்டு வைத்திருப்பதாகவும் அதில் 30 இடங்கள் காங்கிரஸ் தனித்து நின்றால் கூட வெற்றி என்றும் அடுத்த 30 தொகுதிகள் கூட்டணி அமைத்தால் வெற்றி எனவும் மீதி 30 தொகுதிகள் ஒரு 1000 முதல் 2000 ஓட்டு வித்யாசத்திலாவது ஜெயித்து விடும் என கையிலே லிஸ்ட் வச்சுகிட்டு நின்னாங்களே மாமா?

ரங்கன்: ஆமாம். அதிலே வரும் முதல் 30 தொகுதியில் தான் மாயவரமும் வைத்து இருந்தனர். அதாவது தனித்து நின்றால் கூட வெற்றி என்று.ஆனால் எதை வைத்து அந்த லிஸ்ட் எடுக்கப்பட்டது என புரியவில்லை. ஏனனில் இரண்டு வருடம் முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கூடமயிலாடுதுறை தொகுதியில் குறிப்பாக மயிலாடுதுறை சட்டமன்ற பகுதியில் மணிசங்கர் 4000 வாக்குகள் குறைவாகத்தானே பெற்றார்? பின்னர் எப்படி யாரால் எப்படி அந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டு ராகுல்காந்திக்கு தரப்பட்டது என திமுக தலைமை கேட்டிருக்க வேண்டும்.

அபிஅப்பா: காங்கிரசார் தான் எதற்கும் ஒத்து வரவில்லையே. 63 சீட் வேண்டும் அதும் தான் நினைத்த தொகுதி வேண்டும் என கேட்டு வாங்கினார்களே? பின்பு என்ன செய்வது?

ரங்கன்: அதான் சொன்னேன். அதற்கு இடம் கொடுக்காமல் உனக்கு 35 சீட் மட்டும் தான். ஒத்து கொண்டால் கையெழுத்து போடு. இல்லாட்டி என் குடும்பத்தை ஒட்டு மொத்தமாக தூக்கி முடிஞ்சா உள்ளே போடு என சொல்லியிருக்கனும். திமுக 185 இடங்கள் நின்றிருக்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு பின்னே தொகுதி பங்கீடு இழுபறியில் திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்ட முடிவில் அன்றைக்கு காங்கிரஸ் உறவு முறிவு என சொன்ன போது ஒட்டுமொத்த திமுக தொண்டர்களிடம் ஒரு எழுச்சி வந்ததே அதை பயன்படுத்தி கொண்டிருக்க வேண்டும்.

அபிஅப்பா: சரி மாமா அப்படி 185 இடம் நின்று திமுக தோற்றால்?

ரங்கன்: அப்படி 185 இடங்கள் திமுக நின்றால்.... மூன்று விஷயம் தானே நடக்கும். 1.திமுக வாஷவுட். 2. திமுக 50 இடம் பெற்று பிரதான எதிர்கட்சி அல்லது 3. திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இது மூன்று தானே நடந்து இருக்கும். திமுக வாஷ்அவுட் அல்லது 50 சீட் வெற்றி என்னும் நிலை வந்திருந்தால் " எங்களுக்கு மானம் பெரிது என நினைத்து காங்கிரசுடன் கூட்டு சேரவில்லை. அதனாலே தோற்றோம்" என சொல்லிக்கலாம். ஜெயித்தால் இன்னேரம் ரயில்வேயை எங்களுக்கு கொடு என டெல்லியை வற்புறுத்தி கேட்கலாம் (தமிழக நலன் கருதி). இப்போது எதற்குமே வழியில்லாமல் போனது.

அபிஅப்பா: ஆக திமுக தோல்விக்கு காங்கிரஸ் மட்டுமா காரணம்??

ரங்கன்: அப்படி இல்லை.மற்ற பல காரணங்களும் நாம் 185 சீட்டில் நின்றிருந்தால் அடிபட்டு போயிருக்கும் என்றே சொன்னேன்.

அபிஅப்பா: அப்படியென்றால் வேறு என்ன காரணங்கள் திமுகவின் தோல்விக்கு இருந்தன?

ரங்கன்: சினிமா. சினிமா. சினிமா.

அபிஅப்பா: புரியலை மாமா.

ரங்கன்: தமிழன் எப்பாதுமே கலாரசிகன். பொழுதுபோக்கில் ரசனையோடு ஈடுபடுபவன். அதனால் தான் தன்னை ஆள்பவனை கூட அந்த துறையில் இருந்து கூட தேர்ந்தெடுத்தான் எடுத்து கொண்டும் இருக்கின்றான். அந்த சினிமா தொழிலை திமுக தலைமை நசித்து விட்டதாக பரப்புரை செய்யப்பட்டது எதிர்கட்சியினரால். அதற்கு பத்திரிக்கையாளர் சோலை கூட எழுதியிருந்தார். எடுப்பது 3 படம். அதற்கு 300 விளம்பரம் அவர்கள் தொலைக்காட்சியில். அவர்களை தவிர வேறு யாரும் படம் எடுக்க முடியவில்லை என பரப்புரை செய்தது மக்களிடம் சென்று சேர்ந்தது. அப்போது எழுபதுகளில் ரிக்ஷாகாரன் சினிமாவை அலைக்கழித்தது போல இப்போது காவலன் படம் அலைக்கழிக்கப்பட்டதாக பரப்புரை செய்யப்பட்டது. அதை சீண்டாமல் இரூந்திருந்தால் தானாகவே மக்கள் விஜய் படங்களை அதற்கு முன்னர் 6 படங்களை தோற்கடித்தது போல தோற்கடித்து இருப்பர். தேவை இல்லாமல் அதை சீண்டியது தவறு.


இவர் வரிவிலக்கு போன்ற எத்தனையோ செய்திருக்கலாம் சிவிமாவுக்கு. அது பற்றி சந்தோஷம் அந்த படத்தயாரிப்பாளருக்கு மட்டுமே. அது சினிமா ரசிகனை சந்தோஷப்படுட்தவில்லை. இவர் சினிமாவுக்கு செய்த நன்மைகள் விழலுக்கு இறைத்த நீராகி போனது. கலைஞரின் பேரன்கள் உதயநிதியும், துரை தயாநிதியும் சினிமா தொழிலுக்கு வந்திருக்க கூடாது. வேறு எத்தனையோ தொழிகள் இருக்கும் போது அவர்கள் சினிமா தொழிலுக்கு வந்திருக்க கூடாது. ஒரு தொழிற்சாலை அமைத்து பத்தாயிரம் குடும்பத்துக்கு சோறு போட்டிருந்தால் கூட ஜெயித்து இருக்கலாம். எந்த சினிமா ரசிகனும் ஒரு பத்து வருஷம் கழிச்சு "ஆகா "கோ"ன்னு ஒரு படம் எடுத்தான்யா ஒரு தயாரிப்பாளர். அவன் நல்லா இருக்கனும்" என பாராட்ட மாட்டான். அவனுக்கு அன்று இரவோடு அந்த சந்தோஷம் முடிந்துவிடும். ஆனால் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து தன் மகனை மகளை படிக்க வைக்கும் ஒரு தொழிலாளி அந்த சாப்பாட்டை சாப்பிடும் நேரத்திலாவது தன் முதலாளியை நினைத்து பார்ப்பான். நன்றி சொல்லுவான் மனதின் உள்ளேயாவது. இனியாவது ரெட்ஜெயண்ட், க்ளவுட் நைன் எல்லாம் மூடுவிழா நடத்தினால் சந்தோஷம்.

அபிஅப்பா: ஆக சினிமா மட்டும் தான் காரணமா இன்னும் இருக்கின்றதா காரணங்கள் திமுக தோல்விக்கு?

ரங்கன்: அதே குடும்பம் தான். ஆனால் இது வேறு கோணம். கலைஞரும், ஸ்டாலினும், அழகிரியும் முதல்வர், அமைச்சர்கள். அதனால் கிடைக்கும் சம்பளம் இத்யாதி வசதிகள் அவர்களின் வாரிசுகளுக்கு போகும் போது எப்படி ஆசையாக அனுபவிக்கின்றனரோ அது போல இவர்கள் தேர்தலில் நிற்கும் அந்த ஒரு மாதகாலத்துக்கு கூட உதயநிதியோ, துரைதயாநிதியோ பிரச்சாரத்துக்கு வராமல் இருந்தது உழைக்கும் திமுக தொண்டனுக்கு ஒரு வித வருத்தட்தை கொடுத்தது. ஆனால் அதே நேரம் கலைஞரின் மகள் செல்வியும் ஸ்டாலினின் மனைவி துர்காவும், அழகிரியின் பெண்ணும் கூட களத்தில் நின்ற போது அவரது வீட்டு ஆண் வாரிசுகள் சினிமாவை கொண்டாடிக்கொண்டு இருந்தது வருத்தத்தின் உச்சகட்டம்.

அபிஅப்பா: கனிமொழி கூட எல்லா ஊர்களுக்கும் பிரச்சாரத்துக்கு வந்தாரே?

ரங்கன்: ஆனைக்கு அர்ரம் - குதிரைக்கு குர்ரம் ஹாஹ்ஹா! திமுகவின் பெரிய பின்னடைவு ஸ்பெக்ட்ரம் பிரச்சனை. இந்த நேரத்தில் கனிமொழியை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்திருக்கவே கூடாது. கனிமொழியை அறிவாலயத்தில் அமர்த்தி அங்கிருந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வேலையை கொடுத்து மட்டும் இருக்க வேண்டும். கனிமொழி வராமல் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் கனிமொழிக்கு ஆட்சிஅதிகாரத்தில் முக்கியத்துவம் இருக்காது என நினைத்த கலைஞர் கனிமொழியை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்தார். கனிமொழி பிரச்சாரத்துக்கு வரும் முன்னர் அந்த அந்த பகுதி எதிர்கட்சியினர் "இதோ பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் செய்த கனிமொழி உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றார். அவர்களுக்கா உங்கள் ஓட்டு என எதிர் பிரச்சாரம் செய்தனர். இது தேவை இல்லாத வேலை திமுகவுக்கு. கொளத்தூருக்கு பிரச்சாரத்துக்கு கனிமொழி வர வேண்டாம் என ஸ்டாலினே கூட கேட்டுக்கொண்டதாக பத்திரிக்கைகள் எழுதின. அப்படி எனில் அதன் தாக்கம் ஸ்டாலினுக்கு தெரிந்த அளவுக்கு கலைஞருக்கு தெரியாத அளவு ஆகிவிட்டது.

அபிஅப்பா: மின்சார தட்டுப்பாடு காரணம் இல்லையா தோல்விக்கு?

மின்சார தட்டுப்பாடு என்பதை விட மின்சார விரயம் அதிகம் ஆனது என்பதே உண்மை. விரயம் செய்தது மக்கள். ஆனால் எப்போதும் போல முள் குத்திவிட்டது என்று தானே சொல்கிறோம். நான் சென்று முள்ளை குத்தி கொண்டதை ஏற்றுக்கொள்வதே இல்லை நாம். ஒரு கோடி இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக எல்லோர் வீட்டிலும் இரண்டு டிவிக்கள். மாமியாருக்கு ஒரு டிவி, மருமகளுக்கு ஒரு டிவி. கிரிக்கெட் பார்க்க ஒரு டிவி, சீரியல் பார்க்க ஒரு டிவி என எப்போதுமே இரண்டு டிவியும் ஓடிக்கொண்டு இருக்கும். ஒரு டிவிக்கு ஒரு நாலைக்கு கால் யூனிட் என்றாலும் ஒரு நாளைக்கு 25 லட்சம் யூனிட். ஆக மின்சார பற்றாகுறைக்கு கலைஞர் வழங்கிய இலவச வண்ண தொலைக்காட்சியும் காரணமாக போய்விட்டது. ஆனாலும் சில மானியங்கள் நிப்பாட்டப்பட்டு ஒரு யூனிட் 13 ரூபாய்க்கு தனியாரிடம் இருந்து வாங்கி இங்கே வழங்கி நிலமையை சீர் செய்து இருகலாமோ என கூட நினைக்கிறேன். நான் நினைத்து என்ன ஆக போகின்றது?

அபிஅப்பா: காரணங்கள் அவ்வளவு தானா? இன்னும் இருக்கின்றதா?

ரங்கன்: இன்னும் இருக்கின்றது. நானும் நீயும் இதை எல்லாம் பேசி பயன் இல்லை. பொதுக்குழுவில் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. மிக முக்கியமான சிலவற்றில் கட்சியின் உள்ளடி வேலைகள் பற்றி ஆராய வேண்டும். தைரியமாக சில மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட வேண்டும். உதாரணமாக நாகை மாவட்டத்தில் மாவட்ட செயலாளரின் நிலைப்பாடு . இருப்பது மொத்தம் ஆறு தொகுதிகள். 1.நாகை 2. வேதாரண்யம் 3. கீழ்வேளூர் (தனி) 4. மாயவரம் 5. பூம்புகார் 6. சீர்காழி. இதில் கீழ்வேளூர் மட்டுமே திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதுவும் திருவாரூர் மாவட்டம் சேர்ந்த மதிவானனுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு வேளை மதிவாணன் வெற்றி பெற்று அமைச்சராக ஆகும் பட்சத்தில் நாகை மாவட்டத்தில் தனிப்பெரும் செல்வாக்கோடு மாவட்ட செயலராக இருக்கும் தனக்கு பாதிப்பு வருமோ என எண்ணி மதிவாணனுக்கு விஜயன் வேலை செய்ய வில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. 700 ஓட்டுகள் வித்யாசத்தில் அவர் தோல்வி. வேதாரண்யம் தொகுதியை பா.ம.க பெறுகின்றது. அங்கே சிட்டிங் எம் எல் ஏ வேதரத்தினம் எளிமையானவர். இன்று சுயேச்சையாக நின்று இரண்டாமிடம். பத்தாயிரம் ஓட்டு வித்யாசம். தோல்வி. மாயவரம் 3000 ஓட்டில் காங்கிரஸ் தோல்வி. சீர்காழி சிட்டிங் எம் எல் ஏ பன்னீர் செல்வம் சிறந்த வக்கீல். அவருக்கு சீட் இல்லை. வி சி அங்கே தோல்வி. இப்படியாக பல உள்ளடி வேலைகள் திமுகவில். பல மாவட்டங்களில் இப்படியாக. உடனடியாக கட்சி களை எடுப்பு நடக்க வேண்டும். இதை எல்லாம் முரசொலி மாறன் இருந்தால் பொதுக்குழுவில் தைரியமக பேசுவார். அவர் இல்லை. அது போல வீரபாண்டியார் பேசுவார். ஆனால் அவரும் இப்போது பேச இயலாது. என்ன நடக்கின்றது என பார்ப்போம்.

அபிஅப்பா: அப்படின்னா திமுக வின் எதிர்காலம்?

ரங்கன்: திமுக இதை விட பெரிய தோல்வி எல்லாம் பார்த்த கட்சி. இந்த தோல்வி தான் உங்களுக்கான பூஸ்ட். இனியாவது மமதை ஒழிந்து கட்சி வேலை பாருங்க. இந்த தோல்வி கலைஞர் உங்களுக்கு கட்சியை வளர்க்க கொடுத்த பரிசு என நினைத்து கொள்ளுங்கள்.

அபிஅப்பா: ஒ அப்படின்னா தெனாலி மாதிரி "இதுவும் ட்ரீட்மெண்ட்டோ தங்க மச்சான்":-)) சரி காங்கிரசின் நிலை என்ன மாமா?

ரங்கன்: காங்கிரஸ் தமிழக தலைவர் தங்கபாலு தோல்விக்கு பொறுப்பேற்று தன் ராஜினாமாவை சமர்பிப்பார்.

அபிஅப்பா: பின்னே என்ன நடக்கும்?

ரங்கன்: இடது கையால் ராஜினாமா கடிதம் கொடுப்பார். வலது கையால் "எதிர் வரும் தமிழக காங்கிரஸ் தலைவரின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. தலைமையை மாற்ற வேண்டும்" என புகார் கொடுப்பார்.

(நான் ரங்கன் மாமாவிடம் பேசியது 14.05.2011 காலை 7 மணிக்கு. அதன் பின்னர் தான் தங்கபாலு ராஜினாமா விஷயம் வெளியானது)

அபிஅப்பா: அதிமுக செயல்பாடுகள் தெரிய ஆறு மாதம் பிடிக்குமா?

ரங்கன்: தேவை இல்லை. ஆறுமணி நேரம் போதும். 500 கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டிடம் பழைய இடத்துக்கு போகும். அப்படி போனால்...

அபிஅப்பா: போனால்?

ரங்கன்: அடுத்து திமுக ஆட்சி தான் என்பது தெளிவாகும். ஏனனில் ஜெயலலிதா திருந்தவில்லை என பொருள் கொள்ளப்படும். அது தான் தொடரும். அப்படியெனில் திமுக அமைதியாக இருந்து கவனித்து வர வேண்டும். கட்சி பணிகள் மாத்திரம் செய்து வந்தால் போதுமாகும். திமுக வெற்றி தான் அடுத்தடுத்த தேர்தல்களில்.

அபிஅப்பா: அப்படியெனில் புதிய தலைமை செயலகம் என்ன ஆகும்?

ரங்கன்: பொதுக்கழிப்பிடமாக மாறும் (சிரிக்கிறார்) கலைஞர் காப்பீடு திட்டம் அழிக்கப்பட்டு அதற்கு பதிலாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆரம்பிக்கப்படும் என அறிவித்து அந்த இடம் மருத்துவமணை ஆகும். முதல்வர் அறை பிணவறையாக மாற்றம் பெரும்.

அபிஅப்பா: அதிமுக காங்கிரஸ் உறவு எப்படி இருக்கும்?

ரங்கன்: அமோகமாக இருக்கும். அனேகமாக அதிமுக காங்கிரஸ் கூட்டணி கூட உண்டாகலாம் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு! மாற்றம் ஒன்றே மாறாதது என்பது முதலில் ஆட்சி அரசியலுக்கு தான்.

அபிஅப்பா: பத்திரிக்கைகள் நிலை?

ரங்கன்: நக்கீரன் கூடிய சீக்கிரம் "சேலஞ்ச் " அடுத்த பாகம் எழுத ஒரு வாய்ப்பு. மற்ற பத்திரிக்கைகள் வழக்கம் போல இருக்கும்.வடிவேலு வீட்டில் கல் அடிப்பப்படும். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவ்து தான் முதல் வேலை என ஜெயலலிதாவின் பேட்டியை எல்லா பத்திரிக்கையும் ஆசையுடன் வெளியிடும்!


=========================================================



குறிப்பு: நான் பேசிக்கொண்டு இருந்த விஷயங்கள் அதிகம் எனினும் சிலவற்றை மட்டுமே இங்கே கொடுத்துள்ளேன். பதிவின் நீளம் காரணமாக மீதியை கொடுக்க முடியவில்லை. திமுக தோற்பதால் என்னவோ எனக்கு தனிப்பட்ட வகையில் எவ்வித முன்னேற்ற தடையும் இல்லை என்பதை பலரும் அறியாமல் அசிங்கமாக போடும் பின்னூட்டம் மனதுக்கு எரிச்சலையே தருகின்றது. எப்போதும் போல இந்த கட்டை சாகும் வரை திமுகதான் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன். நானோ என் குடும்பதின் எந்த ஒரு நபரோ அரசாங்க உத்யோகத்திலோ, அரசு சார்பு உத்யோகத்திலோ, திமுக சார்பு அல்லது திமுக நிறுவனங்களிலோ உத்யோகத்தில் இல்லை. அது போல அரசாங்க காண்டிராக்ட் போன்ற எதிலும் சம்மந்தப்படவில்லை. நான் 21 வருடங்கலாக அயல்நாட்டில் பணிபுரிந்தவன் என்பதும் பலருக்கும் தெரியும். இதை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகின்றேன்! திமுக தோற்றுவிட்டதே நீ ஏன் இன்னும் தூக்குபோட்டு சாகவில்லை என கேட்ட அனானிகளுக்கு: திமுகவுக்காக நான் உயிர் கொடுக்க தயார். ஆனால் உங்களைப்போல அனானிகள் சொன்னதுக்காக உயிர் கொடுப்பது என்பது முட்டாள் தனம் என்பதால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கபடுகின்றது.


May 3, 2011

இட்லி நெய் ஜீனி -- மே 3ம் தேதி 2011

காலை முதலே கொஞ்சம் பரபரப்பா இருந்துச்சு. என் அபி , என் அக்கா வீட்டிற்கு குடந்தைக்கு போனவ இன்னும் வரலை என்னும் கோவம். அம்மா கூட நேத்து திட்டியாச்சு. "புள்ளய பிறந்த நாளுக்கு வீட்டிலே வச்சிக்காம என்னடா இது. அதான் கிராமத்திலே சொல்லுவாங்க " வேண்டா வெறுப்பா புள்ளய பெத்தவன் காண்டா மிருகம்னு பேர் வச்சானாம்"

ஹே! அம்மா நான் அப்படியா பெத்தேன். உன் டார்ச்சர் அளவே இல்லாம போகிடுச்சுன்னு நினைச்சுகிட்டேன். காலை அபி வந்தாள்.

"அப்பா"

"எ ன் கிட்டே பேசாதே"

"சரிப்பா"

"என்ன சரிப்பா? ஏன்னு கேட்க மாட்டியா?"

அமைதி. அப்பா கோவமா இருக்கனாம். பின்னே அமைதியா அபி கிட்டே வந்தேன்.

"அப்பாவுக்கு என்ன வாங்கி வந்தே?"

"அடச்சே!"

இது கண்டிப்பாக அபிஅம்மாதான்னு எல்லாருக்கும் தெரியும்.

இப்படியாக இன்றைய பொழுது போனது. போனது அப்படியே போயிருக்கலாம். நடுவே கவிதா அதாங்க அணில் கவிதாவின் போன். நான் பேசவில்லை. அபி தான் பேசினா. எல்லாம் நல்லா தான் முடிஞ்சுது.

பின்னே நான் கவிதாவுக்கு நன்றி சொன்னேன். அப்போது டாக்டர் ரோகினி இரவு 12 மணிக்கு போன் செஞ்சதையும் அதுக்கு முன்னே என் தங்கை ஜெ சொன்ன வாழ்த்தையும் சொன்னேன். "இதுக்கு எதுக்குங்க நன்றி"ன்னு சொன்னாங்க.

நானெல்லாம் ஏங்கி இருக்கேன். எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட யாரும் சொன்னதில்லை. அஃப்கோர்ஸ் அதல்லாம் எனக்கு தெரியவும் தெரியாது என சொன்ன போது கவிதாவுக்கு ஆச்சர்யம் கூட வந்திருக்கலாம்.

"அட என்னங்க அபிஅப்பா அது கூடவா தெரியாது?" என கேட்ட போது சொன்னேன் " இல்லீங்க நாங்க எங்க நண்பர்கள் எல்லாருமே 27.06.1966 ன்னு ஒரே நாள் தான் பிறந்தோம். என சொல்ல அந்த விபரீதத்தின் காரணம் என்ன என கேட்க நினைத்து "அதுக்கு காரணம் யாரு?"ன்னு கேட்க, அதுக்கு துண்டு முறுக்கிசார் தான் காரணம் என நான் சொன்னா அது எக்கு தப்பா ஆகிவிடும் என்பதால் "அதுக்கு காரணம் சாதாரண காது தான்" என சொல்ல, பின்னர் தான் வலது கையால் இடது காதை சுத்தி மூக்கை தொட்டா ஐந்து வயது என்கிற சூப்பர் பார்முலாவை கவிதாவுக்கு சொல்ல கவிதா அதை ட்ரை பண்ண பின்னே " என்ன அபிஅப்பா எனக்கு இன்னமும் தொட முடியலை"ன்னு சொல்ல அதை கேட்ட அபி தொட முயற்சிக்க, நானும் முயற்சிக்க, நட்ராஜும் ட்ரை பண்ண, இதை எல்லாம் பார்த்த அபிஅம்மா " என்ன இது கவிதா தான் விளையாட்டுக்கு சொல்றாங்கன்னா நீங்க எல்லாருமா ட்ரை பண்ணுவீங்க, போங்க போங்க போய் அடுத்த வேலை பாருங்க" என சொல்லிவிட்டு கொல்லை பக்கம் போய் காதை சுத்தி மூக்கை தொட்ட போது தான் புரிந்தது. ஆக ஓட்டு மொத்த குடும்பமே அணில் கவிதாவால் பல்பு வாங்கியது! நல்லா இருங்க கவிதா!

*******************************

பின் லேடனை சாகடிச்சாச்சு. அடுத்து?? எனக்கு என்னமோ இதிலே கலைஞர் பார்முலா சரிதானோன்னு படுது. ஒருத்தன் சரியில்லைன்னா அதுக்கான காரணம் பார்க்கணும். திரும்பவும் பழமொழிக்கு வர்ரேன். "எரியுறதை இழுத்தா கொதிப்பது தானா அடங்கும்" . இதை தான் செய்தார் கலைஞர். சிதம்பரத்தில் ஒரு காலத்தில் (சமீபமாக) இரவு எட்டு மணிக்கு எல்லாம் பஸ் நிறுத்தப்படும். ஊரே சவக்கிடங்கு மாதிரி இருக்கும். காரணம் பிரேம்குமார் வாண்டையார். பின்னெ அவர்களை பிடிக்க திமுக ஆட்சியில் 1996- 2001ல் பெரும் முயற்சிக்கு பின்னே இப்போது கோவையில் இருக்கும் சைலேந்திரபாபு தலைமையில் டீம் போட்டு "பிடி ஆனா பிடிக்காதே" என சொல்லி அப்பொதைய எல்லா தினசரியிலும் " வாண்டையார் குரூப் தன்னை காப்பாத்திக்க ஒரு நாளைக்கு செலவிடும் தொகை பத்து லட்சம்" அப்படின்னு வந்தது. அப்படியே விட்டார். ஆக மொத்த அத்தனை சொத்தும் போயே போச்சு. பின்னே அரஸ்ட். இப்போ கதை வேற. கெட்டவங்க திருந்தனும் அத்தனையே என நான் சொன்னால் அதை அரசியலா பார்ப்பீங்க, அதை விடுங்க!இப்போ தேர்தலை சந்தித்த அந்த கட்சி பாவம் ஓட்டுக்கு வெறும் 50 ரு மட்டுமே கொடுத்ததாக கமிஷன் வரை புகார். கமிஷன் மீதி பணத்தை வாங்கி கொடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு! அந்த ஏழை ஜெயிக்க வேண்டும் அதான் ஜனநாயகத்துக்கு நல்லது:-))

அது போல அல்கொய்த்தாவின் அத்தனை சொத்தும் போகும் அளவு அமரிக்கா செய்து விட்டு அவன் ரேஷனில் 35 கிலோ ஓ ஏ பி அரிசி வாங்கும் அளவு கொண்டு வந்து பின்னர் அவன் சுகரில் செத்த பின்னே அவன் சவத்தில் மீது நின்னுகிட்டு போஸ் கொடுத்து இருக்கலாமோ... என்னவோ போங்க நான் சொன்னா யார் கேட்பாங்க!

******************************

தேர்தல் ரிசல்ட் வரும் மே 13! எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எம் ஜிஆர் ஜெயித்தார். கலைஞர் ஜெயிக்கும் காலத்தில் நான் அப்பா காசில் இருந்து என் காசுக்கு வந்து விட்டேன். அதனால் வெடிக்கு செலவழிக்க மனசு இல்லை. ஆனாலும் இந்த முறை ரிசல்ட் நாளன்று ஒரு இடம் பிடித்து இருக்கின்றேன். மாயவரம் தள்ளி ஒரு பத்து கிமீ தூரத்தில். நல்ல பெரிய டீவி. சன் டைரக்ட், ஜெனரேட்டர், குடிக்க பல கேஸ் பெப்சிகள், சில பல கோழிகள், வான் கோழிகள், சமையல் காரர், லைட்டா வெடிகள் இத்யாதிகள் என. ஒத்த அலைவரிசை இருப்பவர்கள் கூட இருந்தா ஒரு சந்தோசம். இல்லாவிடினும் சந்தோசம். கலந்துக்க ஆசைப்பட்டவங்க கலந்துக்கலாம்! பை தி பை.. இரண்டு லேப்டாப்ப்புகள் அதற்கான கனக்ஷன் கூட ரெடி:-))

_______________________________________________-பதிவுலகம்:- 1. வினவு சமீபத்தில் எழுதிய ஒசாமா பதிவு நன்றாக இருந்தது. 2. விருச்சிககாந்த் என்னும் பெயரில் எழுதும் திமுக நண்பர் எழுதுவதும் பிடித்து இருக்கு. ஆனாலும் சில பல சமயம் மன முதிர்வின்றி சக பதிவர்களை குறி வைத்து தாக்குவது பிடிக்கவில்லை. 3. பதிவர் அப்துல்லா பஸ் மட்டும் ஓட்டுகின்றார். சமீபத்தில் அவர் தான் எம் பி ஏ சத்யபாமா கல்லூரியில் படித்ததை எழுதினார். பிடித்தது. ஆனால் சிகப்பா, குண்டா இருப்பவங்க எல்லாம் ஐ ஐ எம்ல எம் பி ஏ படிச்சவங்க என்று யாராவது சொன்னா நம்மமாட்டாத அளவுக்கு அந்த பிம்பத்தை உடைத்து விட்டார் எனவும் பொருள் கொள்ளலாம். இனி யாரும் ஒருஜினல் ஐஐஎம்மை கூட நம்ப மாட்டாங்க! 4. கட் பேஸ்ட் அதிகமாக இருப்பதால் இனி தமிழ்மணம் திரைமணம் என தனியாக பிரிப்பது போல கட் பேஸ்ட் என தனி பிரிவு கொண்டு வரலாம்.. இது யோசனை மட்டுமே. நிராகரிக்க தமிழ்மணத்துக்கு சர்வ சுதந்திரமும் என் பொதுக்குழுவில் முடிவெடுத்து குடுத்து விட்டேன்.

April 29, 2011

துளசி டீச்சர் பதிவை திருடிட்டாங்க!





(படம் நன்றி: பித்தனின் வாக்கு சர்வம் சிவமயம் வலைப்பூ)

துளசி டீச்சர் கூடவா இப்படி செய்வாங்க? என ஆச்சர்யத்துடன் வந்து படிக்கும் கனவான்களே முழுசா படிங்க. பின்ன தான் புரியும் துளசி டீச்சரின் பதிவை யாரோ திருடிட்டாங்கன்னு:-))

நான் கிட்டத்தட்ட இந்தியாவில் எல்லா இடமும் போயிருக்கேன். அது போல முழு வளைகுடாவும் சுற்றி இருக்கேன். ஆனால் எங்கே எங்கே போனேன். எப்படிப்போனேன் யார் என் கூட வந்தாங்க. அதன் நினைவுகள் என்ன? போன இடத்தின் சிறப்பு என்ன? என எதுவுமே தெரியாது. ஏனனில் எதையுமே ஆவணப்படுத்த ஒரு டைரி கூட எழுதி வைத்துக்கொண்டது கிடையாது.

ஆனால் நம்ம துளசி டீச்சர் தன் வீடு கட்டுவது முதல் தான் சென்று வந்த இடங்கள் வரை புகைப்படங்களோடு அந்த இடத்தின் சிறப்புகள், அங்கே வசிக்கும் தமிழர்கள், தமிழ்சங்கம், போன்ற அனைத்து விபரங்களோடும் நகைச்சுவையோடு படிக்க சுவாரஸ்யமாக நமக்கு தரும் பாங்கே தனி அழகு தான். அதே இடங்களுக்கு நாம் சென்று வந்திருந்தால் 'அட டே அந்த இடம் இப்போ இப்படியா மாறிப்போச்சு?" என மனதில் நினைத்து கொண்டு அன்றைய துளசி டீச்சரின் பதிவை வைத்து அதில் இருக்கும் புகைப்படங்கள் வைத்து 'அப்டேட்" செய்து கொள்கின்றோம். போகாத் இடமாக இருந்தால் அந்த இடங்கள் பற்றி ஏற்கனவே இருந்த ஒரு மாயை கற்பனையை அழித்து விட்டு அந்த உண்மையான நிலையை பதிந்து கொள்கின்றோம். (நான் கூட பல வருடங்கள் சென்னை என்றாலே வடிவேலு நடித்த சொர்க்கலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் வருவது போல சொர்கம் மாதிரியாகத்தான் நினைத்து கொண்டிருந்தேன் என்பது பதிவோடு சம்மந்தப்படாத விஷயம்)

விஷயம் அதுவல்ல. ரொம்ப சிம்பிள். ஆயிரம் பதிவு கண்ட அந்த அபூர்வ துளசி டீச்சர் தன் பயண அனுபவங்கள் குறித்து புத்தங்கள் கூட எழுதி பிரபலம் ஆனவர். அந்த பிரபல பதிவரின் பதிவையே பித்தன் என்பவர் அப்பட்டமாக காபி அடித்து அவர் பதிவு போலவே வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயலாகும். இதோ அந்த பதிவின் சுட்டி.

இப்படி செய்யும் போது சம்மந்தப்பட்ட பதிவரிடம் அதற்கான அனுமதியை பெறவில்லை என்பது அந்த பதிவில் டீச்சரின் பின்னூட்டம் வாயிலாக அறிய முடிகின்றது. அந்த பின்னூட்டத்திலே அவரது மன வலியும் உணரப்படுகின்றது. திருடியவருக்கு அன்றைக்கான சந்தோஷம். சும்மா கிடைத்தது தானே என அந்த திருடப்பட்ட பொருளின் அருமையை கூட தெரியாமல் பயன் படுத்துவர். ஆனால் உழைத்து உழைத்து அதை உண்டாக்கியவனின் வலி இருக்கின்றதே, அந்த வலி உணர்ந்தால் மட்டுமே புரியும். எனக்கு தெரிந்து ஒரு திருடன் கதை பாட்டி சொன்ன கதை, ஒரு திருடன் எங்கேயோ ஒரு வைரக்கல்லை திருடி வந்து விட்டான். அவன் வீட்டில் மின்சாரம் கிடையாது. அது ஒரு விலை மதிப்பு இல்லா வைரம் என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. அவன் வீட்டில் ஒரு கழிவறை உண்டு கொல்லை கடைசியில். இருட்டில் அங்கே செல்லும் போது கால் தடுக்கி விழாமல் இருக்க அந்த வைரத்தை அங்கே கழிவறையில் கால் வைக்கும் இடத்தில் புதைத்து வைத்தான். அதன் வெளிச்சத்தில் தடுக்கி விழாமல் இருந்தான். அவனுக்கு என்ன? எவன் வீட்டு வைரமோ. சும்மா கிடைச்சுது. அதை கழிவறையில் வைத்தால் அவனுக்கு என்ன? ஆனால் உழைத்து சம்பாதித்தவன் அதே அந்த வைரத்தை அங்கேயா வைப்பான்? அதே கதை தான் இங்கேயும். தான் கஷ்டப்பட்டு உழைத்த அந்த பதிவு நாம் சிலாகித்து படித்த அந்த பதிவு இப்போது அந்த பித்தன் என்பவரின் வலைப்பூவில். இதை எல்லாம் கண்டிக்க வேண்டும்.

ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த மாதிரி பதிவு திருட்டுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? புதிதாக பதிவு எழுத வருபவர்கள், முதலில் வலைப்பூ, அதை எப்படி எழுதுவது என்றெல்லாம் தெரிந்து வைத்து கொண்டவுடன் "தன்னை தவிர இந்த உலகில் இப்படி ஒரு விஷயம் யாருக்கும் தெரியாது" என நினைத்து கொள்வது தான் முதல் தவறு. நீங்கள் சத்தமாக வாயுபிரித்தால் கூட சக பதிவருக்கு தெரிந்து இணையத்தில் செய்தியாக வந்து விடும் அளவு உலகம் மிகச்சிறியது என அவர்களுக்கு புரிவதே இல்லை. அந்த பித்தனின் பதிவில் சென்று உங்கள் "அட்வைசை" இலவசமாக பொழியுங்கள். நீங்க கொடுக்கும் இலவச அட்வைஸால " இனி நான் பதிவு திருட்டு செய்யவே மாட்டேன் போ" என கோவிச்சுகிட்டு அந்த ஆள் போகனும். நம் துளசி டீச்சருக்கு : டீச்சர் கூல்... கூல்.. இப்பவாவது புரிஞ்சுகுங்க. நீங்க ஒரு தலை சிறந்த சூப்பர் ஸ்பெஷல் பதிவர் என. எங்களை எல்லாம் திருட கூட யாரும் வர மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க. என்ன ஒரு அழிச்சாடியம் அந்த திருடர்களுக்கு? எங்க பதிவுகள் அத்தனை ஒரு கேவலமா போச்சா?

April 22, 2011

கழுத்து வலிக்கும் அளவுக்கு திரும்பிப் பார்க்கிறேன்!!!

மேட்டரே இல்லாட்டி இப்படித்தான். பையன் எல் கே ஜி படித்து முடித்தமைக்கு எல்லாம் திரும்பிப்பார்க்கிறேன் என நெஞ்சுக்கு நீதி தான் எழுதிகிட்டு இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையோடு ஆரம்பிக்கிறேன்:-)) நட்ராஜ் ஸ்கூல் போக ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஓடினதே தெரியவில்லை. போன வருஷம் ஸ்கூல் ஆரம்பித்த தினத்தில் சம, பேத, தான எல்லாம் நான் பயன்படுத்தியும் அவன் தண்டத்தை எதிர் பிரயோகம் செய்தும் ஒரு வழியாக ஒரு வாரத்தில் "இது தனக்கான விதி. அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். இதுவும் கடந்து போகும்" என அவனே அவனை சமாதானப்படுத்திக்கொண்டு இரு தரப்பும் ஒரு விதமாக ஒத்துப்போய் பின்னர் அவன் வகுப்பில் இருந்த கல்யாணி முதல் ஷிபாயா வரையிலான நண்பர்களோடு நட்பாகி பின்னர் ஞாயிற்று கிழமை கூட ஸ்கூல் போக வேண்டும் என்கிற அளவுக்கு அந்த நட்புகள் வளர்ந்து... ஸ்கூல் இருக்காது என நான் அங்கே கொண்டு போய் காட்ட வேண்டிய நிலைக்கு வந்த பின்னரும் "இத்தனை தூரம் வந்துட்டோம் அப்படியே ஒரு எட்டு ஷிபாயா வீட்டுக்கு போய் வந்துடலாமே" என அவன் கேட்க எனக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.நானெல்லாம் அந்த வயதில் அத்தனை உக்கிரமாய் இல்லை.

முதல் மிட் டேர்ம் டெஸ்டில் மார்க் கம்மியாகவும் ரேங் அதிகமாகவும் எடுத்த அவன் இப்போது முமுப்பரிட்சையில் மார்க் அதிகமாகவும் ரேங் கம்மியாகவும் எடுக்கும் அளவு தலைகீழ் முன்னேற்றம் ஏற்பட்டாலும் இடைப்பட்ட இந்த பத்து மாத காலத்தில் சில பல சண்டைகள், ஓரிடண்டு தடவை ரத்தகளரி, ஹெட்மிசஸ் பஞ்சாயத்து என போனாலும் எந்த ஆட்டத்திலும் என்னை அவர்கள் சேர்த்துக்கொண்டதே இல்லை. ஒரு முறை ஒரு பையனை சிலேட்டால் மண்டையை கொத்தி லைட்டா அரைச்சேர் ரத்தம் வந்து விட அது ஹெட்மிசஸ் வரை பஞ்சாயத்துக்கு போய் நான் மதியம் அவனை அழைக்க வரும் போது அவனை ஹெட்மிசஸ் ருமில் நடுவே வைத்து "என்ன கைய பிடிச்சு இழுத்தியா" வடிவேலு கணக்கா நிற்க வைத்திருக்க நான் போன போது ஒரு பி டி வாத்தியார் கிட்டே நான் போய் மெதுவா என்னா சார் மேட்டரு என விசாரிக்க அவர் காதோடு வந்து "லேடீஸ் மேட்டர் சார். கல்யாணி கிட்டே இந்த சுரேஷ் பேசிட்டான் போலிருக்கு. அதனால இவன் சிலேட்டால கொத்திட்டான்" என காதோரம் சொல்ல எனக்கு பகீர்ன்னு இருந்துச்சு.

என் பையன் மேல பழிபோடும் இந்த வாத்திக்கு முட்டை மந்திரம் வைக்கலாமா, எதுனா நாயர், நம்பூதிரின்னு கான்சல்ட் பண்ணி பொம்மையில் ஊசி குத்தலாமா எனவெல்லாம் யோசித்து அதல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என நினைத்து நம்ம ரேஞ்சுக்கு அக்னிநட்சத்திரம் கார்திக் பிரபு மாதிரி தினமும் காலை சாப்பாட்டுக்கு முன்பு ஒரு தடவையும் மதிய சாப்பாட்டுக்கு பின்பு ஒரு தடவையும் தோள்பட்டையால் மோதுவது என தீர்மானத்துக்கு வந்து அடுத்த நாள் அதை செயல்படுத்திய வேகத்தில் என் சட்டை பேண்ட் எல்லாம் சேரும் சகதியுமான காரணத்தால் அதையும் விடுத்து தூரக்க இருந்தே கண்ணால் முறைத்துக் கொண்டு இந்த வருஷ கடைசியில் என் கண் என் வாய் சைசுக்கு பெரியதாக ஆனது தான் இந்த வருஷம் கண்ட அதிகபட்ச பலன்.

வருஷ கடைசியில் ஒரு நாள் என்னிடம் வந்து " அப்பா ஒரு 500 ரூபா சேஞ்சா இருந்தா குடேன்" என அவன் கேட்க அதிர்ந்தேன் .லைட்டா. சேஞ்சே 500 ரூவாயா என நினைத்து கொண்டே எதற்கு என கேட்க "ஸ்போர்ட்ஸ் டே"யில் ஒரு ஈவண்ட்ல கலந்து இருக்கேன். அதுக்கு வெள்ளை கலர் டிராயர், சட்டை, ஷூ , சாக்ஸ் எல்லாம் தருவாங்க. அதுக்குத்தான்" என சொன்னான். எனக்கு தெரிந்து வெள்ளை யூனிஃபாம்ல விளையாடும் விளையாட்டு அரசியல் மட்டும் தான். சரி நம்ம பையன் டென்னிஸ்ல கலக்க போறான் போலிருக்கு. போகட்டும். இப்பவே டென்னிஸ் எல்லாம் விளையாடினா பிற்காலத்தில் மகேஷ்பூபதி போல ஆடினா ஒன்னுக்கு ஐந்து மருமகளா கிடைக்கும். வீட்டுல குத்து விளக்கில் ஆளுக்கு ஒரு முகமா ஏத்தலாமே என சந்தோஷமாக கொடுத்தேன்.

ஸ்போர்ட்ஸ் டே அன்று காலை ஆறு மணிக்கே எழுந்து அவன் அம்மாவோடு போய்விட்டான். பிராக்டிஸ் எல்லாம் இருக்குதுன்னு. நாம் மெதுவாக எழுந்து ஒரு ஒன்பது மணிக்கு ஸ்கூல் பக்கம் போனேன். வாசலில் நின்னு வாங்க வாங்க வெல்கம் வெல்கம் என கூப்பிட்டு கொண்டே பன்னீர் தெளித்தான். வலது பக்கம் ஐந்து பையன்கள் எல்லாரும் இவன் சைஸ்ல. இடது பக்கம் ஐந்து பெண் குழந்தைகள். எல்லாருமே பாரதிராஜா குரூப் டான்சர் மாதிரி வெள்ளை கலரில். அடப்பாவமே என்னிடம் 500 வாங்கிட்டு இங்க வந்து "வாங்கோ மாமி" வேலை பார்க்கிறானே. இதுக்கு பள்ளிக்கு எதிரே இருக்கும் அனுக்ரஹா மண்டபத்துக்கு போய் "வாங்கோ மாமி, காபி சாப்டேளா? டிபன் சாப்டேளா?"ன்னு கேட்டாலாவது திரும்பி வரும் போது அவங்க பாக்கெட்ல 500 வச்சு அனுப்பியிருப்பாங்க.500 ரூபாய் கொடுத்துட்டு குத்து விளக்கில் ஐந்து முகத்துக்கும் முகத்துக்கு ஒன்றாக ஐந்து மருமகள் எதிர்பார்த்தது எல்லாம் கொஞ்சம் ஓவர் தானோ? கடவுள் கபால் கபால்ன்னு மண்டையிலே அடிக்கிறான் இப்பல்லாம்.பரிசு கூட கொடுத்தாங்க. ஒரு எவர்சில்வர் சோப்பு டப்பா. ஆக 500 ரூபாய்க்கு ஒரு சோப்பு டப்பா. ஹும்...

நான் அந்த அக்னிநட்சத்திர பிரபு பி டி சாரை கேட்டேன். "என்ன சார் எதுனா ஓட்ட பந்தயத்துல இவனை ஓட வச்சு கலந்துக்க வச்சிருக்க கூடாதா'ன்னு. அதக்கு அவர் " சார் அவன் செலக்ஷன்ல டார்கெட்டை ரீச் பண்னலை சார். ஐந்தாவதா வந்தான்" என சொன்னார். அதுக்கு நான் "இல்லியே நல்லா ஓடுவானே சார். நீங்க எதுக்கும் க்ளாஸ் ரூம்ல இருந்து ஸ்கூல் கேட் தான் டார்கெட்ன்னு சொல்லிப்பாருங்க" என்றேன். இன்றைக்கு அவர் முறைத்தார். அப்பாடி இந்த ஒரு வருஷமா நான் முறைத்ததுக்கு அன்றைக்கு தான் அவரும் முறைத்தார். சந்தோஷம்.

மொத்தத்தில் இந்த வருஷ நட்ராஜ் படிப்பினாலே நான் தெரிந்து கொண்டது ஒரு ஆங்கில ரைம்ஸ் தான். எனக்கெல்லாம் 3ம்பு படிக்கும் போது தான் ரைம்ஸ். மொத்தமே நாலுதான். பாபா பிளாக் ஷீப் எல்லாம் பெருசா(?) இருந்ததால் எனக்கு அந்த "ஆக்ராஸ் பன்னு ஆக்ராஸ் பன்னு ஒன்னே பெண்ணே டூயே பெண்ணே ஆக்ராஸ் பன்னு" என குருட்டாம் போக்கில் படித்த முதல் ஆங்கில ரைம்ஸ் தப்பு என இப்போது தான் தெரிந்து கொண்டேன். அது அப்படி இல்லையாம். hot cross buns, hot cross buns, one a penny, two a penny, hot cross buns, if you have no daughters, give them to your sons. one a penny two a penny hot cross buns" இப்படியாக இருக்கு அந்த ரைம்ஸ். ரொம்ப தப்பு தப்பா படிச்சுட்டனோ?

அது போல அவன் தமிழ் ரைம்ஸ்ல
"நான் தான் குழந்தை வேலன்
நாய் தான் எனக்கு தோழன்
என்னை விட்டு நீங்காது
எப்போதுமே தூங்காது
முரடன் வந்தால் கடிக்கும்
திருடன் வந்தால் பிடிக்கும்"

என்ற ரைம்ஸ் படிச்சுட்டு என்னிடம் அவன் "அப்பா வேலன்னா நம்ம அண்ணாச்சியா?"ன்னு கேட்க அவன் ரைம்ஸ் எதையும் கவனிக்காத நான் "ஆமாம்டா வேலன் அண்ணாச்சி தான். நான் தான் அவருக்கு தோழன் தெரியுமா?" என கேட்க அபி இடி இடி என சிரிக்க என்னவோ உள்குத்து இருக்கு போலிருக்கே என நினைத்து பின்னர் தான் அந்த பாடலை படிக்க சொல்லி கேட்டேன். ச்சே... இப்படித்தான் எப்போதும் நானே வாயை குடுத்து வாங்கிகட்டிக்கிறேன். இனி ஜாக்கிரதையா இருக்கனும்:-))

ஆக இப்படியாக ஒரு வருஷம் முடிந்தது. பள்ளி முடிந்த நாள் அழைத்து வரும் போது "தம்பி இப்ப எல் கே ஜி - சி படிச்சு முடிச்சுட்ட. அடுத்த வருஷம் என்ன படிக்க போறே"ன்னு கேட்டேன். படார்ன்னு பதில் சொன்னான். எல் கே ஜி - டி... ரைட்டு....