பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 21, 2011

அழகாய் ஒரு கௌரவக்கொலை:-(

பொதுவாகவே நான் "இளம் பெண் மர்ம சாவு" "பரிட்சையில் தோல்வி மாணவன் தற்கொலை" போன்ற செய்திகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் என்னையும் மீறி அந்த செய்தி கண்ணில் பட்ட போது ஒரு வித அதிர்ச்சி. "பூட்டிய வீட்டுக்குள் பெண் மர்ம சாவு. கொலையா என போலீஸ் விசாரனை" என்ற செய்தி என்னை அறியாமல் அங்கே இழுத்து சென்ற காரணம் தலைப்பில் "மாயிலாடுதுறை" என எழுதியிருந்ததே.

"மயிலாடுதுறை வடக்கு வீதியில் வசித்து வந்தவர் கலா என்கிற மேகலா.(வயது 59) இவர் தமிழக பள்ளி கல்வித்துறையில் கடந்த 37 வருடமாக வேலை செய்து சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார். திருமணம் ஆகவில்லை. தனியாகவே தனது வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக இவரது வீடு பூட்டியே கிடந்ததாலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும் தெருவாசிகள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசார் முன்னிலையில் வீட்டின் கதவு திறக்கப்பட்டு பார்த்த போது அவரது உடல் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தது. பின்னர் நகராட்சி பணியாளர்கள் கொண்டு பிணத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் அது கொலையாக இருக்குமோ என்கிற ரீதியில் போலீசார் தீவிர விசாரனை செய்து.... " படித்து கொண்டிருந்த நான் பேப்பரை மடக்கி வைத்து விட்டு எதிர் வீட்டை பார்த்தேன். பூட்டி இருந்தது.

நான் அந்த செய்தியை படித்து கொண்டிருந்த இடம் சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட வீட்டின் எதிரே இருக்கும் பொது நூலகம். சம்பவம் நடந்த வீடு நான் சின்ன வயதில் இருந்தே பிறந்து வளர்ந்த வீட்டின் நான்காம் வீடு. அந்த அக்காவிடம் ஏதோ ஒரு காலகட்டத்தில் டியூஷன் கூட படித்து இருக்கின்றேன். அந்த அக்கா எங்கள் ஊரில் பெண்கள் கல்லூரி வந்த ஆண்டு முதல் முதலாக டிகிரி படித்த புரட்சி பெண். படித்த உடனேயே பள்ளி கல்வித்துறையில் எழுத்தராக வேலை கிடைத்து அந்த காலத்திலேயே வேலைக்கு போன புரட்சி பெண். இப்படி ஏகப்பட்ட புரட்சிகளை கொண்ட அந்த அக்கா அப்போதே ஒரு பையனை காதலித்தும் புரட்சி செய்தது தான் அவங்க வீட்டுக்கு பிடிக்காமல் போனது. அந்த அக்காவுக்கு குடும்பம் என பார்த்தால் ஒரு அம்மா, ஒரு நடக்க முடியாத பாட்டி, ஒரு தம்பி, ஒரு அண்ணன். அண்ணன் என்பவர் அப்போதே குடும்பம் விட்டு பிரிந்து சென்னையில் போய் செட்டில் ஆகிவிட்டதாகவும் அவர் யாரோ ஒரு பெண்ணை காதலித்ததல் அவங்க அம்மா வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் தெருவில் பேசிக்கொள்வர். தம்பிக்காரன் பெயர் நெப்போலியன். பெய்ருக்கு ஏற்ற மாதிரி நெப்போலியன் மீது மிகுந்த பிரியம் கொண்டவன். அதல்லாம் கூட சகிச்சுப்பாங்க. ஆனா அவன் காதலிக்க மட்டும் கூடாது தான் பார்த்து வைக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அவன் அம்மா பிடிவாதமாக இருந்த காரணத்தாலும், நெப்போலியன் மீது நாட்டம் அதிகம் இருந்த நெப்போலியனை எந்த பெண்ணும் விரும்பாததாலும் அவன் அம்மா பார்த்த பெண்ணையே கட்டிகிட்டு அதன் வாழ்கையை சீரழித்தான்.

ஆனாலும் அந்த அம்மாவுக்கும் அந்த வீட்டை புட்டத்தாலேயே நகர்ந்து பரிபாலனம் செய்த அந்த பாட்டிக்கும் பையன் சொன்ன பேச்சை கேட்டு குடும்ப கௌரவத்தை காப்பாற்றியது பற்றி ரொம்ப பெருமை. அவன் குடித்து விட்டு வந்து அந்த இரண்டு கிழவியையும் தன் மனைவியையும் அடித்தாலும் கூட "அவன் காதலிக்காமல் குடும்ப கௌரவம் காப்பாத்தினவன்" என்கிற குடும்ப பெருமை முகம் முழுவதும் இருக்கும் அந்த இரண்டு கிழவிகளுக்கும்.

வேலைக்கு போன அந்த அக்காவின் சம்பாதியத்தில் தான் அந்த குடும்பம் சாப்பிட்டது என்றாலும் அந்த அக்காவின் காதல் திருமணத்துக்கு அந்த குடும்பம் கடைசி வரை அனுமதி கொடுக்காமலே இருந்து தொலைக்க அந்த பெரிய கிழவி செத்து போன போது அந்த அக்காவுக்கு நாற்பது வயதும் ஆகிவிட்டது. காதலித்தவன் கூட வேறு பெண்ணை கட்டிகிட்டு குழந்தைகளை கூப்பிட்டு வந்து ஆசிவாங்கி போய்விட்டான்.

அம்மா கிழவி சாகும் முன்னமே தம்பிகாரன் மனைவியும் தான் பெற்ற மூன்று பெண் குழந்தைகளுடன் இனி இவன் கூட குடும்பம் நடத்த முடியாது என தன் தகப்பன் வீட்டுக்கு போய் விட அப்போது கூட தன் குடும்ப கௌரவம் போகவில்லை ஆனால் காதலித்தால் மட்டும் தான் குடும்ப கௌரவம் போய்விடும் என அந்த கிழவி பிடிவாதமாக இருக்க அந்த அக்காவும் "அனுமதி கொடுத்தால் மட்டுமே திருமணம்" என வீராப்பாக இருந்து தொலைக்க தம்பிகாரனும் நெப்போலியன் ஓவர் டோஸ் ஆகிப்போக பரலோகம் போய் சேர்ந்தான்.

அத்தோடு அந்த அக்காவும் அந்த அம்மா கிழவியும் தான் வீட்டில். சொந்த வீடு. செலவுகளும் அத்தனை இல்லை. வேலையோ பக்கத்த்திலே கிளியனூர் என்கிற கிராமம். எட்டாம் நம்பர் பஸ்ஸில் போய்விட்டு வந்து விடலாம். நகைகள், முக்கியமான வீதியில் சொந்த வீடு, அரசாங்க சம்பளம், கௌரவமான குடும்பம் என அந்த அம்மாவுக்கு ஏகப்பட்ட பெருமைகள். யாராவது காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த கிழவிக்கு வாய்கிழியும். "பொண்ணு வளர்க்க தெரியாம வளர்த்தா இப்படித்தான். இதோ நானும் தான் வளர்த்திருக்கேன் பாரு. நான் கோடு போட்டா தாண்ட மாட்டா" என வந்து மெனக்கெட்டு தன் பெருமையை பீற்றிக்கொண்டு போகும். இதிலே பெண் பெற்றவர்களை கண்டால் பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும் என இலவச கோச்சிங் கிளாஸ் கூட நடக்கும் தன் வீட்டு வாசல்படியில் உட்காந்து கொண்டு.

அந்த கிழவியும் ஒருநாள் செத்து போச்சு. இந்த அக்கா தெருகாரங்க, சொந்தபந்தங்கள் எல்லாரையும் கூப்பிட்டு சொல்லி பெரிய பாடை எல்லாம் கட்டி அதோடு அந்த அக்காவே சுடுகாட்டுக்கு போய் கொள்ளியும் வைத்து புரட்சி செய்தது. ஆக அந்த அக்கா செய்த புரட்சி எண்ணிக்கை மேலும் ஒன்று கூடியது.பாவம் அப்போது அந்த அக்காவுக்கு வயது ஐம்பதை தொட்டுவிட்டது.

பின்னர் வயது ஆக ஆக வழக்கமாக எல்லோருக்கும் வரும் பிரஷர், சுகர் என எல்லாவித நோயும் வந்து தாக்க அந்த அக்கா கோவில் குளம் என போய் வந்தது. சென்ற தீபாவளி அன்று கூட கேதாரகௌரி நோம்பு சாமான் வாங்க நானும் என் மனைவியும் கடைத்தெருவுக்கு போன போது அதும் வாங்கி கொண்டிருந்தது. பேசிக்கொண்டு இருந்தது. அது தான் நான் கடைசியாக பார்த்தது பேசியது.

நான் இதே நினைவுகளுடன் பேப்பரை மூடிவிட்டு அந்த வீட்டு வாசலுக்கு வந்தேன். பக்கத்து வீட்டு பையனை கூப்பிட்டு என்ன நடந்தது என கேட்டேன். "ரெண்டு மாசமா கலாக்கா எங்க போனாங்கன்னு தெரியலைண்ணே. வீட்டுக்குள்ள ஏதோ பூனை செத்து போச்சுன்னு நினைச்சோம். ஒரே நாத்தம் தாங்கலை. அதான் அந்த அக்கா எங்க போயிருக்காங்கன்னு தெரியாம சென்னைல அவங்க அண்ணன் வீட்டுக்கு போன் போட்டு உள்ளே பூனையோ எலியோ செத்து போச்சு போல. அக்கா எங்க இருக்காங்க"ன்னு கேட்டோம். அவங்க "அது சரஸ்வதி பூஜை முடிஞ்ச பின்னே காசிக்கு போவதா போன்ல சொன்னுச்சு. ஒரு வேளை காசிக்கு போயிருக்கும்"ன்னு சொன்னாங்க. பின்ன நாங்க விட்டுட்டோம். அதுக்கு பின்னே ஒரு மாசம் கழிச்சு சென்னையிலே இருந்து போன் வந்துச்சு. 'கலா காசியிலே இருந்து வந்துடுச்சா"ன்னு பாருன்னு சொன்னாங்க. போய் பார்த்தா கதவு பூட்டியே இருந்துச்சு. அதை சொன்னோம். அப்பவும் நாத்தம் போகலை. உடனே அவரு மொவன் வந்தாரு. பின்னே அவரு தான் போலீஸ்ல சொன்னாரு.பின்னே எல்லாரும் உள்ளே போய் பார்த்தோம். உள்ளே போகவே முடியாம அத்தனை நாத்தம். உடனே இன்ஸ்பெக்டரு முனிசிபாலிட்டி ஆளுங்களுக்கு சொல்லிட்டு மெதுவா உள்ள போய் பார்த்தா அந்த அக்கா கூடத்துல படுத்த படுக்கையா எலும்புகூடா கிடந்துச்சு. அங்க ஒரே எலியும் பூனையும் கரையானும் தின்னது போல போத்தியிருந்த போர்வை அதுக்குள்ள எலும்புகூடு. கண்ணு எல்லாம் தின்னுடுச்சு பெருச்சாளி கூட்டம். சட்டை, புடவை எல்லாம் கரையான் அரிச்சு வச்சிடுச்சு. ....

அவன் சொல்லிகொண்டே போகப்போக எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ச்சே என்ன வாழ்க்கை...

"அண்ணே பேங்ல மத்திரம் இருவது லட்சம் இருக்குதாம். இந்த ஓட்டு வீடு ஒரு 30 லட்சம் போவும். நகைநட்டு எல்லாம் பேங்குல தனியாவும் இருக்குதாம். ஆனா அக்கா கழுத்துல போட்டிருந்த ரெட்டை வட சங்கிலி, கையிலே போட்டிருந்த வளையல் மோதிரம் எதையும் கரையான் திங்கலை....

பையன் மேலும் மேலும் தொடர எனக்கு மனதிலே ஏதோ ஏதோ தத்துவம் தான் பொங்கி பொங்கி வந்தது. கரையான் தங்கம் விலை உயர்வதை சன்நியூஸ்லயா கேட்க போவுது. அதுக்கு தேவையானதை தின்னு தொலைச்சுது. இதே அக்கா தன் அம்மா கிழவி செத்து போன போது அவங்க சிரித்து கொண்டிருப்பதை போல ஒரு பெரிய போட்டோ எடுத்து கூடத்தில் மாட்டி 15ம் நாள் காரியம் செய்தது. அந்த போட்டோவுக்கு கீழே தான் இது செத்து போனது. பெருச்சாளியும், பூனையும் தின்ன தன் மகள் உடலை அந்த கிழவியின் ஆத்மா பார்த்து கொண்டு தானே இருந்திருக்கும்.காதலித்தவனுக்கே கட்டி கொடுத்து தொலைத்து இருக்கலாமோ என நினைத்து இருக்குமா? பாவம் சாகும் போது தண்ணீர் தாகம் எடுத்திருக்குமோ? எடுத்து கொடுக்க ஆள் இல்லாமல் அதனால செத்து போயிருக்குமோ? பாடை எடுக்க சொந்த பந்தம் இல்லாமல் நகராட்சி வந்து எடுக்க என்னாத்துக்கு இத்தனை நாள் சம்பாதிச்சு லட்சம் லட்சமா சேர்த்து வைக்க வேண்டும்? இது மாத்திரம் தன் பாட்டி, அம்மா, தம்பி எல்லாரையும் நல்லபடியாக அடக்கம் செய்ததே, இதுக்கு ஏன் அந்த நிலை வர வேண்டும்?


ஏகப்பட்ட கேள்விகளோடு அமைதியாக நடந்து வந்தேன்.அப்படி என்ன காதலை கொன்று குடும்ப கௌரவத்தை காப்பாற்றி வேண்டி தொலைக்க வேண்டிகிடக்கு???இதுவும் கௌரவக்கொலை பட்டியலில் தானே வரும்?

குறிப்பு: பதிவில் வந்த பெயர்களும் சம்பவங்களும்..... உண்மையே...

25 comments:

  1. :-( மனதை பிசைந்த ஒரு சம்பவம்......

    காதலை எதிர்க்கும் பெண்மணிகள் அனைவரும் படிக்க வேண்டியது...

    ReplyDelete
  2. :(
    பூட்டிய வீடுன்னா வெளியே வா ? உள்ளேவா?

    தனிமை கொடுமைதான்.. இதுபோன்ற இறப்புகள் நகரங்களில் தான் என்று நினைத்திருந்தேன்..:(

    ReplyDelete
  3. மனதை என்னவோ செய்கிறது இந்தச் சம்பவம். :( வருத்தம்தான் மிஞ்சுகிறது.

    ReplyDelete
  4. வாங்க பொன்சந்தர்! காதலை எதிர்ப்பது இந்த சம்பவத்தில் வேண்டுமானால் பெண்ணாக இருந்திருக்கலாம். இருபாலாரிலும் இன்னும் அந்த வீராப்பு என்பது மாறவில்லை தான்.

    =================

    முத்து லெஷ்மி! அது நடந்தது பூட்டிய வீட்டின் உள்ளே தான். அவங்க சரஸ்வதி பூஜைக்கு படைத்து விட்டு இரவு கூடத்தில் படுத்து தூக்கும் போது இறந்து போயிட்டாங்க. காலண்டர்ல அன்னிக்கு தேதி வ்ரை கிழித்து இருந்தது. தவிர பூஜைக்கு படைத்தது எல்லாம் இருந்ததாம். நம்ம பக்கம் எல்லாம் மெயின் கதவு நிலைப்படிக்கு பின்னே இருக்கும் மர கேட்ல சங்கிலி போட்டு பூட்டி உள் பக்கம் பூட்டை இழுத்து தொங்க போட்டுவிட்டு போவது தானே வழக்கம். அதனால வெளியே இருக்கும் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை!

    ReplyDelete
  5. அதிர வைக்கிற சோகம்:(!

    ReplyDelete
  6. மிகவும் கவலைக்குரியது :(

    ReplyDelete
  7. மனதை ரொம்பவும் சங்கடப் படுத்தி விட்டது,
    இந்தப் பதிவு!

    ReplyDelete
  8. மனதை பிசைந்த ஒரு பதிவு. குடும்பக் கவுரவ‌த்திற்காக தன்னையே இழந்த அந்த மங்கையர் குல திலகத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இனி இதுப்போன்ற ஒரு துர் மரணம் வேறொரு பெண்ணுக்கு நிகழாமல் இருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  9. சென்ற தீபாவளி நீங்க பார்த்தீங்கன்னா 2009 தீபாவளியா? அவங்க இறந்தது சரஸ்வதி பூஜை தாண்டின்னு எழுதியிருக்கீங்க‌...

    இந்த மாதிரி - 6,7 பெண் பெற்ற குடும்பத்தில் பிறந்து காதலை எதிர்க்கும் பெற்றோரால் (நீ காதலிச்சதால் அனுமதி இல்லை; உங்க அக்கா காதல் திருமணம் அதுனால் உனக்கு என் ஆசி கிடையாது) திருமணம் செய்யாத பேரிளம் பெண்கள் நிறைய பார்த்திருக்கேன் வளர்கிற வயசில்..... கொடுமை:-(

    ReplyDelete
  10. பயங்கரம், அபிஅப்பா!

    வயதாக, ஆக மனிதர்களே மனிதர்களுக்கு தேவையில்லாமல் போய் விடுகிறார்கள்...

    ஏன் பக்கத்து வீட்டுக்காரங்க கூட சரியாக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லையா?? மயிலை கூட அந்தளவிற்கு மனிதர்களை அந்நியப்படுத்தி வைத்திருக்கிறதா... நகரங்களைப் போலவே!!??

    ReplyDelete
  11. வெங்கட், ராமலெஷ்மி, மாதேவி,சுல்தான்பாய், துளசி டீச்சர், நிசாமுதீன், ராஜி அந்த ஆன்மா அமைதியடைய வேண்டியதற்கு நன்றி.

    கெக்கேபிக்குனி, அது போன தீபாவளி என்றால் 2009 தான்.

    தெகா! நீங்கள் பார்த்து இருக்கும் தெருதான். மாட்டாஸ்பத்திரி எதிர் பக்க வீடு தான். நம் காலேஜ் போகும் வழிதான். அந்த தெரு இப்போது பெரிய படி வைத்த வீடுகள் பாதிக்கும் மேலாக வணிக நிறுவனமாக மாறிவிட்ட நிலையில் அந்த வீடு மாத்திரம் அப்படியே இருந்தது. தவிர அவங்க அம்மா இறந்த பின்னர் அவங்க அடிக்கடி கேவிள்கலுக்கு வீட்டை பூட்டி விட்டு போய்விடுவதால் யாரும் அத்தனை நெருக்கம் காட்டுவதும் இல்லை. இது தான் காரணம்.

    ஆனால் மயிலாடுதுறை இப்போதும் அதே பழைய மாதிரி தான் இருக்கின்றது. தெருவில் புதிதாக யார் வந்தாலும் "யார் நீங்க?" என கேட்கும் அதே கிராமத்து பாணி மாறவில்லை தான்!

    ReplyDelete
  12. உண்மையிலேயே பாவமாக இருக்கிறது. அக்கம் பக்கத்தில் இரண்டு மாதங்கள் வரை தெரியாமல் இருப்பது மயிலாடுதுறை நகர(ரக)த்திற்கு மாறி விட்டதையே காட்டுகிறது! இது போல் அருகில் எல்லோரும் இருந்தும் யாருமில்லாமல் இருப்பது கொடுமை!

    ReplyDelete
  13. ம்ம்ம்... வருத்தமான செய்தி.

    ReplyDelete
  14. அப்படி என்ன காதலை கொன்று குடும்ப கௌரவத்தை காப்பாற்றி வேண்டி தொலைக்க வேண்டிகிடக்கு???


    நியாயமான கேள்வி?

    ReplyDelete
  15. கெளரவமாம் my foot ..
    இது படிச்சு யாருக்காவது உறைச்சா சரி

    ReplyDelete
  16. மனதை பிசைகிறது. என்றாவது ஒருநாள் மாறுவார்களா இவர்கள்.

    ReplyDelete
  17. அப்படி என்ன காதலை கொன்று குடும்ப கௌரவத்தை காப்பாற்றி வேண்டி தொலைக்க வேண்டிகிடக்கு???


    நியாயமான கேள்வி?.

    ReplyDelete
  18. யாருமே அவரின் அம்மாவுக்கு எடுத்துச் சொல்லலியா? கிராமத்தில் சட்டென்று உள்ளதைச் சொல்லிவிடுவார்களே, அப்புறமும் ஏன் இப்படி?

    ReplyDelete
  19. அபி அப்பா, நெஞ்சை உறைய வைக்கும் பதிவு, வாழ்கையின் அநித்தியத்தை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது. இதில் நாம் செய்யும் கணக்கு வழக்கற்ற சில்லரைத்தனங்களும், சூதுவாதுகளும், விரோதங்களும் கோபங்களும், ஒரு நொடியில் வாழ்க்கையால் தலைகீழாக மாற்றிவிட முடியும் என்பதை சுட்டுகிறது. மேகலா அவர்களின் வாழ்வுக்கு இது சகித்துக் கொள்ள முடியாத முடிவு, மேலும் அவர்களின் ஆத்மா சாந்தியடைய என் மனதார இயற்கையை வேண்டுகிறேன்.{இல்லாத இறைவனை வேண்டுவது கூட மேகலாவுக்கு நாம் செய்யக் கூடிய அவமானம்தானே }
    அனைவரும் காதலை அனுமதிக்காத பெற்றோரைப் பற்றி பேசுகிறீர்கள். சரிதான். ஆனால் மன்னிக்கவும், என் சில மாற்றுக் கருத்துகளை, பதிவு செய்ய விரும்புகிறேன். இதில் நாம் சிந்திக்கவேண்டிய விசயங்கள் என நான் நினைப்பது,
    1. சினிமா போல் ஒரு காதல் தோற்று விட்டதால் கல்யாணமே செய்துகொள்ளக் கூடாது என்ற செவ்வியல் முட்டாள்தனம்.
    2. குறைந்த பட்சமாக அவருடைய காதலனுக்கு திருமணம் நடந்த பிறகாவது மேகலா வேறு திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
    அல்லது பெற்றோர் இறந்த பிறகாவது தான் காதலனுக்கு அடுத்தபடியாக தனக்கு பிடித்த இன்னொருவரைத் திருமணம் செய்திருக்க வேண்டும்.
    3. ஏதேனும் உறவினர்களின் குழந்தையையோ, அனாதைக் குழந்தைகளையோ தத்தெடுத்து வளர்த்தியிருக்க வேண்டும்.
    4. ஒரு நம்பிக்கையான வேலைக் காரர்களையாவது வீட்டில் வைத்திருக்க வேண்டும்

    படித்த மேகலா இவ்வளவு தனிமையில் இருந்தும், இறந்தும் போனது மிகவும் வருத்தமளிக்கிறது,

    ReplyDelete
  20. இந்த வார குட் ப்ளாக்ஸ்..!

    VIkatanla unga blog potu irukanga SIr,

    Congradulations

    Ranjani

    ReplyDelete
  21. கலங்கிவிட்டேன்!!!

    சரியானது, பொருத்தமானது என நினைத்து ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதில் விடாப்பிடியாக இருந்து நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  22. அந்த கரையான் மனதையும் அரிக்கின்றது .......,

    ReplyDelete
  23. kaadhal tholviyil mudindhal veror kalyanum kalyanam seiyum ethanaiyo perai parthirukirom......aanal unmaiyileye avargal santhoshamaga irukirargala theriyadhu.....indha naatla kolai kooda seiyalam...kaadhalika koodadhu...arranged marriage endra peyaral mun pin theriyadhavanodu poha sollum nagariga samoogam ayitrey....petrorai punpadutha virumbamal kanneerodu vera kalyanam seidhukondu kanavanai thoda kooda kai koosi vivagarathu vaangina pennai theriyum......yarukago vaazhkaiyai adagu vaithalo andha petrorum kadhalanum avalai yetru kollamal pogalam....andha pennu ku indha kalakka nilamai varamal iruka vendugirein.....

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))