பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 8, 2012

புதுகை இடைத்தேர்தல்... டண்டனக்கா ஏ டணக்கனக்கா.... டி ராஜேந்தர் பொது வேட்பாளர் ஆகலாமா?\\ புதுக்கோட்டை தேர்தல் பொது வேட்பாளராக போட்டியிட டி.ராஜேந்தர் முடிவு - செய்தி \\

புதுகை இடைத்தேர்தலில் டி ராஜேந்தரின் லட்சிய திமுக போட்டியிடுகின்றது என்ற முடிவை வேண்டுமானால் டி ராஜேந்தர் எடுக்கலாமே தவிர பொது வேட்பாளராக அவரே அவரை முடிவு செய்து கொள்ள முடியாது என்கிற விஷயம் எல்லாம் விடுங்கள். அதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.  ஆனால் இப்போதைய சூழலில் புதுகையின் நிலை என்ன? அங்கே  சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் தோழர் மறைவின் அடுத்த அடுத்த நாட்களில் அதிமுக அங்கே தனது "மெஜாரிட்டி" அரசின் புஜபல பராக்கிரமங்களை எல்லாம் கட்டவிழ்த்து அரசு இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் முடிந்த பின்னர் அவர்களின் கூட்டணி கமிஷன் தேர்தல் தேதியை அறிவிக்கட்டுமா என ஒரு முறைக்கு நான்கு முறை அம்மையாரை கேட்டுக்கொண்டு அறிவித்தது. நல்லவேளை, அவசரத்தில் அம்மையார் தேர்தல் தேதியையும், கமிஷன் அதிமுக வேட்பாளரையும் அறிவிக்கவில்லை:-))
இந்த நிலையில் அங்கே தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் என திமுக  தலைமைக்கும் தெரியும். அதனால் இந்திய ஜனநாயகத்தை நோக்கி கேள்வி கேட்கும் விதமாக திமுக இந்த இடைத்தேர்தலில் பங்கு பெறாமல் புறக்கணிப்பு முடிவை எடுத்தது. இத்தனைக்கும் புதுகை மாவட்ட செயளாலர் திரு.பெரியண்ணன் அரசு அவர்கள் வெறும் 3000 ஓட்டுகள் வித்யாசத்தில் தான் வெற்றி வாய்ப்பினை கடந்த சட்ட மன்ற தேர்தலில் இழந்தார்கள். அப்படி இருப்பினும் திமுக தேர்தல் புறக்கணிப்பு செய்த காரணம் ஜெயாவின் ஹிட்லர் பாணி ஆட்சியும், அதற்கு ஒத்துப்போகும் கமிஷனும் தான்.

இப்படியான நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தது.  அதில் பெரிய ஆச்சர்யமான விஷயம் எதுவும் இல்லை. தா.பாண்டியன் எப்போதுமே அதிமுகவின் துணை அமைப்பாகத்தான்  தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வைத்துள்ளார் என்பது அவர்களது தேசிய தலைமைக்கே தெரிந்தும் எதுவும் செய்ய இயலாத நிலை அவர்களுக்கு. அதை விட்டுவிடலாம். ஆனால் இப்போது அதிமுகவின் ஆசியால் எதிர்கட்சியாக சட்டசபையில் அமர்ந்திருக்கும் தேமுதிக தலைமையோ  தனக்கு ஒரு கோடி கொடுத்தால் போட்டி என அதன் பங்கிற்கு மேலும் ஜனநாயகத்தை கேலியாக்கியது. மாக்சிஸ்ட் தோழர்கள் இன்னும் முடிவை அறிவிக்காத நிலையில் டி. ராஜேந்தரின் லட்சிய திமுக  மேற்படி அறிவிப்பை  சூசகமாக பத்திரிக்கைகளுக்கு கசிய விட்டுள்ளது.பர்கூர் சட்டசபை தேர்தலில் ஜெயாவை எதிர்த்து பெற்ற வாக்குகளும் , பழனி நாடாளுமன்ற தேர்தலில் டி. ஆரின் கட்சி பெற்ற வாக்குகள் எல்லாம் கிட்டத்தட்ட திமுகவின் வாக்குகள் தான் எனினும்..... இப்போதைய புதுகை சூழலில்  லட்சிய திமுக என்னும் கட்சி நடத்திவரும் டி ஆர்,   திமுக பங்கெடுக்காத இந்த தேர்தலை  மிகச்சரியாக பயன் படுத்திக்கொள்ள நினைப்பது அருமையான முடிவு தான்.

 அதிமுகவுக்கு எதிராக பணம் செலவு செய்வதாகட்டும், அருமையான தேர்தல் பிரச்சாரமாகட்டும், டி ஆர் கலக்குவார் என்பதில் எள் முனை அளவு சந்தேகமும் இல்லை. அதே போல திமுக வாக்குகளும், அதிமுகவால் பழிவாங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்குகளும் நிச்சயமாக டி ஆர் கட்சிக்கு விழ 100 சதம் வாய்ப்புகள் உள்ளன. இதில் காங்கிரஸ் (அதாவது இப்போது திருநாவுக்கரசர் காங்கிரசில் இருப்பதால்) குறுக்கே புகுந்து குட்டையை குழப்பாவிடில், தேமுதிகவுக்கு யாரும் ஒரு கோடி கொடுத்து நீயும் ஆணிபுடுங்கு என சொல்லாவிடில் டி ஆர் புதுகையில் அதிமுகவுக்கு பெரும் சவால் தான்.

சரி, டி ஆர் அவர்களின் லட்சிய திமுக இந்த இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை நிறுத்தினால் ஒன்று அவரே வேட்பாளர் அல்லது அவரது மனைவி உஷா ராஜேந்தர்  தான் வேட்பாளர் என்பது ஊர் அறிந்த ரகசியம். அப்படி இருக்க அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய இன்று தமிழக சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வைத்து இருக்கும், இப்போது எஸ்.டி.ஆர் என புதுநாமகரணம் சூட்டப்பட்ட சிம்புவும் கூட பிரச்சாரத்துக்கு வருவார். ஆக புதுகையில் தேர்தல் களம் சூடாக்க இதுவும் ஒரு காரணமாக அமையும். தேமுதிக ஒரு கோடி கொடுத்தால் தேர்தலில் நிற்பேன் என சூசகமாக சிக்னல் கொடுத்து இருப்பதால் ஒரு கோடிக்கு பதில் இரண்டு கோடி வேண்டுமானால் தருகிறேன், நிற்கவே வேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் பேரம் பேசி கொடுக்கக்கூடிய தெம்பும் திராணியும் பணபலமும் கூட டி.ஆர் அவர்களுக்கு உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. புதுகையில் கனிசமாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கூட "பொது வேட்பாளரை" ஆதரிப்போம் என அறிவிப்பு செய்து விட்டது.

மீதம் இருப்பது காங்கிரஸ் மற்றும் மாக்சிஸ்ட்  கட்சி மட்டுமே. ஆனால் திமுக இப்போது திடீரென டி ஆரை ஆதரிப்பதாக சொன்னால் காங்கிரஸ் அங்கே நின்று டெபாசிட் போகும் நிலைக்கு தன்னை ஆக்கிக்கொள்ளாது. ஆகையால் டி ஆரின் லட்சிய திமுக அங்கே பொதுவேட்பாளர் ஆக வாய்ப்பு அதிகம். (அதாவது திமுக தலைமை லட்சிய திமுகவை ஆதரிப்பதாக சொன்னால்) அதில் இப்போதைக்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவது மாக்சிஸ்ட் கட்சி மட்டுமே.

மாக்சிஸ்ட் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில்  திமுக அல்லது அதிமுக என்னும் ஏதாவது ஒரு கட்சியில் கூட்டணி வைத்தால் மட்டுமே இரண்டு எம் பிக்களையாவது மத்திக்கு அனுப்ப இயலும். அப்படி அனுப்பினால் மட்டுமே தமிழக மாக்சிஸ்ட் கட்சிக்கு கொஞ்சமாவது மதிப்பு இருக்கும் அதன் தேசிய தலைமையில். மாக்சிஸ்ட் ஒன்றும் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய தலைமை போல தா.பாண்டியனிடம் கட்சியை கொடுத்து அதிமுகவின் கிளைக்கழகாம இருக்க சொல்லி வேடிக்கைப்பார்க்க! ஆக திமுகவின் ஆதரவோ அல்லது கூட்டணியோ நாடாளுமன்ற தேர்தலில் வேண்டுமானால் மாக்சிஸ்ட் "பொதுவேட்பாளருக்கு" ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். திமுக கூட்டணி என்பது ஒரு நம்பகமான கூட்டணி என்பது மாக்சிஸ்ட் தோழர்களுக்கு நன்கு தெரியும். ஏனனில்  2006ல் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்த போது நடந்த ஒரு ஒப்பந்தப்படி ஒரு ராஜ்யசபா எம் பி தருகிறேன் என சொல்லி அதையும் கொடுத்த கட்சி திமுக. ஆனால் அதிமுக என்பது  அதன் பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.மகவுக்கு அது போல ஒப்பந்தம் போட்டும் பின்னர் அன்புமணிக்கு கொடுக்கவில்லை என்பதும், பாமகவினரோ "ஒப்பந்தப்படி ராஜ்யசபா சீட் எங்கே?" என போய் கேட்கவும் திராணியற்று கூட இருந்தனர் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம்.ஆக மாக்சிஸ்ட் தோழர்கள் என்ன முடிவு செய்யப்போகின்றனர் என்பது இதை எல்லாம் வைத்தே இருக்கும். ஆனால் அதே நேரம் வரக்கூடிய ராஜ்யசபா தேர்தலில் கனிமொழி அவர்களின் பதவிக்காலம் முடியும் நேரம். அவர் மீண்டும் எம் பி ஆக வேண்டும் எனில் இப்போது திமுகவில் இருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை போதாது. அதற்கு மாக்சிஸ்ட் தோழர்களின் உதவியும் வேண்டும் என்கிற பகடைக்காய் மாக்சிஸ்ட் கையில் உள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது கூட்டி கழித்து மாக்சிஸ்ட் தோழர்கள் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

டி .ஆர் அவர்களின் லட்சிய திமுகவுக்கு , திராவிட முன்னேற்ற கழகம் பொது வேட்பாளர் ஆக ஆதரவு கொடுத்தால் அதிமுகவின் பண பலத்தை டி ஆர் கட்சி சுலபமாக எதிர்கொள்ளும். ஆனால் மாக்சிஸ்ட் தோழர்கள் தேர்தலில் பொது வேட்பாளராகவோ அல்லது தனித்தோ நின்றால் அந்த அளவு பணம் செலவழிக்க முடியாது என்பதுதான் உண்மை.

ஒரு வேளை திமுக, டி ஆரின் லட்சிய திமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் திமுகவினர் டி ஆருக்கு தேர்தல் வேலை செய்யவோ, பூத் கமிட்டியில் உதவுவதோ எவ்வித சுனக்கமும் இருக்காது. ஏனனில் டி ஆர் இதே திமுகவில் எம் ஜி ஆர் உயிருடன் இருந்த போது சந்தித்த பெரிய தோல்வியான உள்ளாட்சி தேர்தல், மயிலாடுதுறை, அண்ணாநகர் இடைத்தேர்தல் ஆகியவற்றில் திமுகவுக்காக பணியாற்றியவர். திமுகவின் பூங்காநகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனி கட்சி கண்ட பின்னரும் கூட 2006 சட்ட மன்ற தேர்தலில் திமுகவுக்காக வாக்கு சேகரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்தவர். இந்திரா அம்மையார் கலைஞரை "இவர் ஆதரித்தாலும் தீவிரமாக ஆதரிப்பவர், எதிர்த்தாலும் தீவிரமாக எதிர்ப்பவர்" என சொன்னது  போல டி ஆர் அதே போன்ற குணம் கொண்டவர். இவரது  லட்சிய திமுகவுக்கு இப்போது திமுக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவரது திமுக சார்பு பிரச்சாரம் அதாவாது இப்போது பாக்கியராஜ் கூட திமுகவுக்காக இல்லாத நிலையில் உபகாரமாக இருக்கும். இவர் அடித்தட்டு மக்களிடம் அவர்கள் மொழியில் ஜெயா அரசின் அக்கிரமங்களை பேசும் போது அது சரியாக போய் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதே போல இப்போது இருக்கும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு இதில் எல்லாம் மக்கள் உண்மையிலேயே துவண்டு போய் ஒரு "மாற்றம்" வேண்டும் என நினைத்து வாக்களித்தால் டி ஆர் வெற்றி பெறக்கூட வாய்ப்பு உண்டு. அப்படி நடந்தால் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்பது இன்னும் பிரமாதமாக வெளி உலகுக்கு தெரியவரும். அதிமுகவின் வேட்பாளர் வெற்றி பெற்றால் "அம்மா" புகழ் பாட இன்னும் ஒரு கன்னுக்குட்டி. டி.ஆர் வெற்றி பெற்றால் அடங்கா மாட்டுக்கு ஒரு  நல்ல "கடிவாளம்".

என்ன நடக்க போகின்றது என பார்ப்போம். ஆனால் டி ஆர் என்பவர்  அரசியலில் கிண்டலுக்கும் கேலிக்கும் மட்டும் உரியவர் இல்லை ... அதையும் தாண்டி திமுகவுக்கு  பயன் படுபவர்.... ஆனால் அதே நேரத்தில் அவரை அளவுக்கு அதிகமாக உயர்தியும் விடக்கூடாது என்பதிலும் திமுக கவனமாக இருக்க வேண்டும். இருக்கும்!

3 comments:

 1. புதுகை தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட டி.ராஜேந்தர் திட்டம்# இடைத்தேர்தல்னா வழக்கமா டென்சனா இருக்கும்..இப்ப காமெடியா இருக்கும்போல....( என் ட்வீட்டரிலிருந்து)

  ReplyDelete
 2. இவரை பத்தி இவ்வளோ யோசிச்சு எழுத வேண்டியதில்லைனு நினைக்கிறேன்... ஏன்னா இவர் ஒரு சந்தர்ப்பவாதி தான் ... முன்னேற்றம் என்பது இவருக்கும் இல்லை ... இவரை ஆதரிப்பவர்க்கும் இல்லை என்பது என் ஆழ்மனக்கருத்து


  - பா. வெற்றி கொண்டான்

  ReplyDelete
 3. என்னண்ணே ஊர் பாசமா
  நம்ம ஊரு பயலுவலுக்கு பாசம் எப்பவும் அதிகம் தான்

  நடத்துங்க, நடத்துங்க
  :-))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))