முதல்ல இதை படியுங்க மக்கா! http://ultoo.com/login.php?refererCode=2892467E&flag=hide
===================================================================
நல்ல அக்னி நட்சத்திர மதிய மூன்று மணி வெய்யில். காற்றுக்காக வாசல் கதவில் ஒரு கதவும், கொல்லை கதவில் இரு கதவுகளையும் திறந்து விட்டு ஒரு பலகைக்கட்டையை ஹாலின் நடுவே போடும் மனைவியை என் கம்பியூட்டரில் இருந்து கண் அகலாமல் கவனித்து கொண்டு தான் இருந்தேன். அனேகமாக மதிய தூக்கத்துக்கான முஸ்தீபுகள். பாவம்! விடிகாலை மூன்று மணிக்கு எழுந்து வீட்டை சுத்தம் செய்து பூஜை எல்லாம் முடித்து அன்றைய பொழுதில் பாதிக்கு மேல் வேலை வேலை என கழித்து விட்டு கண் அசந்து போகும் நேரம்.
என் மனைவி என் நான்கு வயது மகனை கூப்பிட்டு "தம்பி, தோ பாரு. அம்மாவுக்கு கண் எல்லாம் எரியுது. கொஞ்ச நேரம் தூங்கப்போறேன். அம்மாவை டிஸ்டப் பண்ணக்கூடாது" என சொல்லி ஒருக்களித்து படுத்து கண் அசரும் வரை பவ்யம் காட்டினான்.கண் அசரும் நேரம்....
"அம்மா, அம்மா, அம்மாவ், அம்மாவ்வ் "
கொஞ்சம் திடுக்கிட்டு விழித்து "என்னப்பா செல்லம்"
"தூங்கிட்டியான்னு பார்த்தேன்"
"ம்" மீண்டும் தூக்கம் வரவழைக்கும் முயற்சியில் கண் மூட...
"ம் ன்னு பதில் சொல்றே. அப்டீன்னா தூங்கலையா. அம்மாவ் அம்மாவ்.."
பதிலே சொல்லாமல் கொஞ்சம் அமைதி. அவன் தன் அம்மாவின் கிட்டே போய் இடுப்பின் மீதமர்ந்து முகம் கிட்டே உற்று பார்க்கிறான். அவன் அம்மாவிடம் இருந்து சின்னதாய் குரல் "பரவாயில்ல. அப்டியே படுத்துக்கோ. நீயும் தூங்கு"
மெதுவாய் கண்கள் இமையை புட்டு பார்க்கிறான். திடீரென உணர்ந்த அசூசையான வலியால் அவனை உதறிவிட்டு "தம்பி, இங்க பாரு... அம்மா காலைல மூணு மணிக்கு எந்திருச்சனா... ரொம்ப தூக்கம் வருது. அம்மாவை டிஸ்டப் பண்ணக்கூடாது என்ன சரியா? நான் உன் பர்த் டேக்கு புது ட்ரஸ் எல்லாம் வாங்கி தருவனாம்". அம்மா மெல்ல தன்னையறியாமல் தள்ளிவிட்டதில் அவள் மேலேயே சரிந்த அவன் கொஞ்சம் தள்ளி வந்து...
"அம்மா அம்மா அம்மாவ்... இங்க பாரேன்"
"என்னப்பா?" கண்ணை மூடிக்கொண்டே கேட்க,
"எனக்கு ஜூன் மாசம் தான பர்த் டே"
"ஆமா"
"சவண்டீன் தான"
"ஆமா"
"இப்ப என்ன மாசம்?
"மே"
"அம்மாவ் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மேதான? அப்பன்னா மேக்கு அடுத்ததா ஜூன் மாசம் தான"
"ம்"
"அப்படின்னா நாளைக்கு எனக்கு பர்த் டேவா"
"இல்ல. ஜூன் மாசம்" தூங்க நினைத்து மூடிய கண்களில் மட்டுமல்ல குரலிலும் கொஞ்சம் எரிச்சல் இருந்தது.
"அம்மாவ் அம்மாவ்... இப்ப மே மாசம், நீதான மேக்கு அடுத்தது ஜூன்னு சொன்ன, அப்பன்னா நாளைக்கு தான எனக்கு ஆப்பி பர்த் டே"
"இல்ல அதுக்கு நாள் இருக்கு. பேசாம தூங்கு. இல்லாட்டி எதுனா வெள்ளாடு. அம்மா தூங்கிட்டு வந்துடுறேன்"
"அம்மா, அம்மாவ் அம்மாவ்"
"ம் சொல்லு..."
"உச்சா வருது"
"வருதுன்னா போயேன்"
"நீயும் வா... "
"போப்பா, அம்மா ஒரு பத்து நிமிஷமாவது தூங்கிடுறேன்"
"நெசமா வருதும்மா"
" அப்படின்னா டாய்லெட் கதவை திறந்துட்டு போயேன்"
"அம்மாவ் அம்மாவ் அங்க பல்லி இருக்கு. பயமா இருக்கு"
"அப்பன்னா கொல்லை பக்கம் போ"
"அங்க கருப்பு பூனை நிக்கும்"
"தெரு பக்கம் போ"
"அங்க மிளகாய் செடி இருக்கு. அங்க போக்கூடாதுன்னு அன்னிக்கு சொன்னீல்ல"
தினம் தினம் தெருபக்கம் போக கூடாது என சொன்னாலும் வீம்புக்காக போகும் பையன், இன்றைக்குன்னு பார்த்து திடீர் ஒழுக்கசீலனாக மாறியது நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது.
"அம்மாவ்... எனக்கு அவசரமா வருது.சீக்கிரம் வா"
வாரி சுருட்டி எழுந்து அவிழ்ந்த தலைமுடியை கொண்டை போட்டுக்கொண்டு ஒரு கையால் அவன் கையை தோள்பட்டை பக்கம் கொத்தாக பிடித்து அடுத்த கையால் அவன் பிடறியில் வைத்து கொண்டு தள்ளிக்கொண்டு போகாத குறையாக டாய்லெட் பக்கம் போய் பின்னர் திரும்பி வந்து "தம்பி இப்ப நிம்மதியா? நான் இனிமே தூங்கலாமா? இனிமே டிஸ்டப் பண்ணக்கூடாது" என சொல்லி மீண்டும் பலகைக்கட்டையில் தலை வைத்து படுக்க...
"அம்மாவ், அம்மா தூங்கிட்டியா"
"ஆமாம். பேசாம இரு"
"நான் படம் வரையனும். எனக்கு அக்காவோட ஸ்கெட்ச் பென் வேணும்"
"ஊகூம். நீ செவுத்திலே எழுதுவ. தரமாட்டேன். வேற வெள்ளாட்டு வெள்ளாடு"
"அம்மாவ்... ஆய் வருது"
"டேய் இப்ப தான டாய்லெட் போய் உச்சா போன? அப்ப சொல்ல வேண்டியது தானே?"
"அப்ப வர்ல"
"பொய் சொல்லாத. நான் தூங்கனும்னா உனக்கு பிடிக்காது. அதான?"
"நெசமா படிப்பு மேல சத்தியமா வருது"
"சத்தியம்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. கொஞ்ச நேரம் அடக்கிட்டு இரு. அம்மா தூங்கிட்டு வர்ரேன்"
"அம்மா, அவசரமா வருதும்மா"
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதெப்படி அம்மாக்கள் சாப்பிடும் போதும், தூங்கும் போதும் மாத்திரம் மிகச்சரியாக பசங்களுக்கு கக்கா வருது என்று.
மீண்டும் எழுந்து அதே போல கையை கொத்தாக பிடித்து அழைத்துப்போய் பின்னர் டாய்லெட் கதவு சாத்தப்பட்டது. உள்ளே என்னவோ சம்பாஷனைகள். எனக்கு அத்தனை தெளிவாக காதில் விழவில்லை. மீண்டும் வந்தார்கள். அம்மாக்காரி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. "எனக்கு தெரியும்டா... என்னை தூங்க விடாம செய்யத்தான் நீ இப்டி பொய் சொல்லியிருப்பேன்னு. இனி என்னை எழுப்பினா, உனக்கு சாயந்திரம் எதுனா செஞ்சு தரலாம்னு இருந்தேன். அது கட் தான். ஒரு பத்தே நிமிஷம். அம்மா தூங்கிட்டு வந்துடுறேன். ஓக்கே." என சொல்லிக்கொண்டே மீண்டும் படுக்கை.
"இல்லம்மா. அப்ப வந்துச்சு. ஆனா டாய்லெட் உள்ள போனதும் தான் வர்லை"
எனக்கே கொஞ்சம் பாவமாய் இருந்தது. மெல்ல லேப்டாப்பில் இருந்து தலையை தூக்கி பார்த்தேன். அதற்கு முன்ன நான் தலை தூக்கி இருந்தா "என்னங்க கொஞ்சம் அவனை பார்த்துக்கோங்களேன்" என்றோ அவன் "அம்மாவ்"க்கு பதிலா "அப்பாவ்"ன்னோ கதை மாறியிருக்கும் அபாயம் இருந்ததால் அப்போதெல்லாம் பேசாமல் தலையை லேப்டாப்பின் உள்ளே இருந்து வெளியே எடுக்கவே இல்லை.
"தம்பி இங்க வா, இந்தா ஸ்கெட்ச் பென். உள்ள ரூம்க்கு போய் இஷ்டமான சுவத்துல எதுவேணா எழுது" பையன் ஆர்வமா ஓடிவிட்டான். சுவற்றில் கிறுக்க அவன் அம்மா விடுவதில்லை. அம்மா முழிச்சுகிட்டா இந்த நல்ல சந்தர்ப்பம் அவனுக்கு கிட்டாமல் போய்விடுமே என அவன் சத்தம் போடாமல் ஓடிவிட... ஒரு இரண்டு நிமிடம் கூட ஆகியிருக்காது. பலகையில் தலை வைத்து படுத்திருந்த அம்மாக்காரி விருட்டென எழுந்து "தம்பி தம்பி... எங்க இருக்க? தம்பி... என்னங்க தம்பிய பார்தீங்களா? அய்யோ கொல்லை கதவும் திறந்து கிடக்கு. தெருகதவும் சாத்தலை. நீங்க இருக்கீங்கன்னு நம்பி தானே செத்த கண்ணசந்தேன். அய்யோ தம்பீ தம்பீ...."
"இரு இரு... அவன் இருக்கான். நீ ரெண்டு நிமிஷம் கூட தூங்கலை. அதுக்குள்ள ஏன் பதறிகிட்டு இருக்கே... அவன் இங்க தான் இருக்கான்" என நான் சொல்லிகிட்டே இருக்கும் போது தன் கையில் இருந்த ஸ்கெட்ச் பென்னை தூக்கி போட்டுவிட்டு எதுவுமே கிறுக்காதது போல "அம்மா ... நான் இங்க தான் இருக்கேன்" என சொல்லி அவன் நல்ல பிள்ளையாய் வர அவனை தூக்கி மடியில் வச்சுகிட்டு..."எங்க போயிட்ட. அம்மா கூப்பிடும் போது எங்க இருந்தாலும் "தோ இங்க தான் இருக்கேன் வந்துடுறேன்"ன்னு சொல்லிகிட்டே வந்துட வேண்டாமா? என்ன பிள்ளை போ நீ" என தூக்கம் தொலைத்த தன் சிவந்த கண்களுடன் இழுக்க வாசலில் கேட் திறக்கும் சத்தம் கேட்டது. என் அம்மா தான் வந்தாங்க. மணி அப்போது மாலை நான்கு ஆகியிருந்தது.
"என்ன ஒரே சத்தம்? மணி நாலு ஆச்சுதே. இவன் (என்னை தான்) நாலு மணிக்கு காபி குடிப்பானே? போடலையா? என்ன பிள்ளையை மடில வச்சுகிட்டு கொஞ்சிகிட்டு இருக்கே. கண்ணு வேற நல்லா சிவந்து கிடக்கு. நல்ல தூக்கம் போலிருக்கே. ஹூம் நீங்கல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்கப்பா. நாங்கல்லாம் அந்த காலத்திலே மதியம் ஒரு ரெண்டு மணி நேரம் அக்கடான்னு தூங்க முடியாது. அப்ப தான் மாமனாரோ, மாமியாரோ தண்ணி கொண்டுவா, காபி கொண்டுவான்னு ரொம்ப படித்தி எடுப்பாங்க. சரி சரி தூங்கினவரை போதும். போய் காபி போட்டு இவனுக்கு குடு. இவனுக்கு நேரத்துக்கு காபி குடிக்கலைன்னா தலைவலி வந்துடும்" என "என் அம்மா " வரிசையாக பேசிக்கொண்டே வீட்டுக்குள் வந்தாங்க.
மனைவியின் மடியில் இருந்த என் மகன் "அம்மா உன்னை டிஸ்டப் பண்ணாம தூங்கவிட்டா எதுனா செஞ்சு தரேன்னு சொன்னியே... எனக்கு எள்ளடை செஞ்சு தர்ரியா?" என கேட்க "ம் தர்ரேண்டா" என வாஞ்சையாக வந்தது வார்தைகள் அந்த "அம்மா"விடம் இருந்து!
அன்பான "அன்னையர் தின" வாழ்த்துக்கள்!
நீண்ட நாட்களாக உங்க்கள் பதிவுகளை வசித்தாலும் பின்னுடம் இடுவது முதல் முறை மிக நெகிழ்ச்சியான பதிவு அந்த அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteசிலநேரம் குழந்தைகளின் சேஷ்டைகள் எரிச்சலத்தரும் என்றாலும் ஏனோ அது அம்மாக்களுக்கு வருவதில்லை. அதனால்தான் அவங்க அம்மா... நாமெல்லாம் சும்மா. ஆனாலும் உங்கள் மகனுக்கு ரொம்ப குறும்பு.
ReplyDeleteஅருமையான பதிவு சார்.
ReplyDeleteநெகிழ்ந்து விட்டேன்.
வாழ்த்துகள்.
வாழ்க அம்மாவின் பொறுமை. அபி அப்பா இதைவிட யாராவது நெகிழ்ச்சியாக எழுத முடியுமா.
ReplyDeleteஅபி அம்மா வுக்கும் உங்க அம்மாவுக்கும் அன்னையர்தின வாழ்த்துகள்.
Aha! Kadaisile Krishna paavam. Thoongave illae.
ReplyDeleteRomba help seythutteenga!
Anbudan
Nalina Akka
சார், உங்களுடைய எழுத்துக்கள் அனைத்தும் அருமை( அரசியல் நீங்கலாக), உங்களுடைய 'வீரசேகர விலாஸ்' புத்தகமாக வெளிவர தகுதி உள்ளது! அடிக்கடி எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புடன்
babuhariharan@hotmail.com
பொறுமையின் சின்னம் என சொல்லிவைத்துவிட்டார்களே.
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துகள்.
நல்ல பதிவு.
ReplyDeleteயதார்த்தமான பதிவு.
ReplyDeleteஇது எப்போதும் எல்லார் வீட்டிலும் நடக்கும் கூத்து .. எத்தனை எரிச்சல் வந்தாலும் , என்ன தூக்கம் இருந்தாலும் , இரு நிமிடங்கள் பிள்ளையின் சத்தம் இல்லையென்றால் . அவ்ளோ தான் அம்மாக்களின் பாடு ... அது தான் அம்மா
ReplyDelete///மணி நாலு ஆச்சுதே. இவன் (என்னை தான்) நாலு மணிக்கு காபி குடிப்பானே? போடலையா? என்ன பிள்ளையை மடில வச்சுகிட்டு கொஞ்சிகிட்டு.....///
ReplyDeleteஇங்கேயும் அம்மாவோட பாசம் பொங்கி வழியுதே....பிரச்சனையை கிளப்பும் பாசம் !!!:))
அழகான சொற்சித்திரம். நன்றி