பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 7, 2013

விடா முயற்சி "விஸ்வரூப வெற்றி" !!! விமர்சனம்...



இந்த இட்லி இருக்கே இட்லி அதை ஸ்பூனால் விண்டு வாயில் போட்டுகிட்டு பின்னர் அதே ஸ்பூனால் சாம்பாரை மொண்டு உள்ளே  தள்ளி   மிக்சிங் போடுவதில் எனக்கு எப்போதுமே சுகம் இருந்ததில்லை. வாழை இலையில்  சூடான இட்லி தலையில் சாம்பாரை ஊத்தி லைட்டா ஊறினதும் விரலால் பாகம் பிரித்து சிதம்பரம் கொத்சு  மற்றும் கெட்டி சட்னி கலவையை இலையிலேயே நடத்தி வாயில் விரலோடு சேர்த்து போட்டுப்பதில் தான் சொர்க்கம் கிடைத்த திருப்தி நேக்கு. ஹைதரபாத்தில் தெலுகு வர்சன் 'விஸ்வரூப்' வில் கிடைக்காத திருப்தி இன்று மாயவரம் மக்களின் விசில் சப்தத்தின் நடுவே "தமிழில்" பார்த்த போது ... அப்பா என்ன ஒரு பரம(க்குடி) சுகம்!

ஒரு ஊரில் கமல் கமல்னு ஒருத்தர் இருந்தாராம். அவர் ஒரு இந்தியாவில் பிறந்த அதாவது வடகோடி உச்சந்தலை காஷ்மீரிய அப்பனுக்கும் தென்கோடி தமிழக அம்மாவுக்கும் பிறந்த (ஒட்டு மொத்த இந்திய பிரஜைன்னு சிம்பாலிக்கா சொல்றாராமாம்) இந்திய தயாரிப்பில் செய்யப்பட்ட அக்மார்க் ISI முத்திரை குத்தப்பட்ட இஸ்லாமியர்(பாகிஸ்தான் ISI இல்லையாக்கும்). (நல்ல வேளை அவரின் சித்தி கல்கத்தா என்றும் சித்தப்பா மும்பை என்றும் இன்னும் விரிவாக ரெக்கை விரித்த இந்தியாவுக்கே ஒட்டுமொத்த இஸ்லாமிய ரெப்ரசண்டேடிவ் என சொல்லவில்லை)அவர் படம் ஆரம்பிக்கும் போது நியூயார்க் நகரில் "விஸ்வநாதன்" என்னும் பெயரில் கதக் நாட்டியம் கத்துக்கொடுக்கும் ஒரு கலைஞர். பெண்மையான உடல்மொழி கொண்டவர். அவர் மனைவி பூஜாகுமார் இவரை வயசு வித்யாசம் பார்க்காமல் கட்டிகிட்ட காரணம் அவரது வறுமையும், அமேரிக்காவில்  அணு விஞ்ஞானியாகி பாண்டிச்சேரி நாரயணசாமி மாதிரி 'இன்னும் 15 நாளில் அது  வந்துடும்'ன்னு வசனம் பேச ஆசைப்படும் ஒரு நார்மல் பெண். அவருக்கு கமல் மேல் அத்தனை ஈர்ப்பு இல்லை. ஏனனில் அவரது பெண்மைத்தன்மை, மற்றும் என்னன்னவோ.. அதல்லாம் நமக்கு தேவையில்லை. கமலை பிடிக்கலை . அவ்ளோவ்தான். வேற வழி? தன் பாஸ் கூட மனதளவில் காதல் ... "லைட்டா". அதனால் அவரை கெட்டவர் என சொல்லிடாதீங்க. ஏன்னா பூஜாவே தான் இந்த அற்ப காரணத்தால்(?) தான் கெட்டவள் இல்லை என படத்தில் சொல்லிவிடுவதால் மேற்கொண்டு நாம் அதில் ஆராயாமல் கதைக்கு உள்ளே போவோம்.

கமல் வீட்டில் கதக் படிக்க வரும் மாணவிகளில் ஒருத்தியாக ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவின் சினிமா கேரியரில் நல்ல முன்னேற்றம் நம் கண் முன்னே தெரிகின்றது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அறிமுகம் ஆனபோது கதாநாயகனுக்கு ஊசி போட்டார். இந்த படத்தில் கதாநாயகனுக்கு தையல் போடும் அளவு நல்ல முன்னேற்றம். அனேகமாக விஸ்வரூபம் பார்ட் 2 வில் நாயகனுக்கு ஆபரேஷன் பண்ணும் அளவு இன்னும் நாம் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ரியா கமலுடன் சேர்ந்து கதக் ஆடிவரத்தான் லாயக்கு என நீங்கள் நினைத்தால்... அது தப்பு. ஏன்னா படம் முழுக்க கமலுடன் வேகமாக ஓடியும் வருகின்றார். அதும் அவர் தன்னை "மாயவரத்து பெண்" என்கிற போது என் பக்கத்து இருக்கை பெண்ணுக்கு கண்ணில் தாரை தாரையாக நீர் வடிந்தது. தியேட்டரில் விசில் பறந்தது. இதை தவிர்த்து ஆண்ட்ரியாவுக்கு வேறு எதும் "ஸ்பெஷலாக" தென்படவில்லை படத்தில். ஒரு மாயவரத்து மங்கை தாலிபான் தீவிரவாதிகளை எல்லாம் ஒழிக்க பாடுபடுவது குறித்தும் எனக்கும் பெருமையே.

இப்படியாக இருக்கும் போது பூஜாகுமார் எப்படியாவது கமலை கழட்டி விட்டுட்டு அவர் பாஸ் கூட செட்டில் ஆகனும் என நினைக்க அதுக்கு அமேரிக்காவில் விவாகரத்து தான் கடைக்கு கடை ஒரு டாலருக்கு நாலு கூறு என போட்டு விற்பனையாகுமாமே , அந்த விவாகரத்தை வாங்கிடனும்னு ஆசைப்படுறார். அதுக்கு கடைக்காரன் காரணம் கேட்டா "கமலுக்கும் அவர் ஸ்டூடண்ட் ஆண்ட்ரியாவுக்கும் தொடுப்பு இருக்கு"ன்னு சொல்லனும், அதும் ஆதாரப்பூர்வமா சொல்லனும், அதுக்காக குண்டா ஒரு ஆளை அனுப்பி கமலை கையும் ஆண்ட்ரியாவுமாய் பிடிக்க சொல்ல அந்த குண்டு துரத்தி கிட்டே போகுது கமலை. அப்ப தான் தெரியுது அந்த விஸ்வநாதன் கமல் யாருக்கும் தெரியாம தொப்பி போட்டுகிட்டு தொழுகை நடத்த போவதும், கமல் ஒரு இஸ்லாமியர் என்றும். அதை அந்த குண்டு ஆசாமி பூஜாவுக்கு போட்டுக்கொடுக்குது. அதன் பின்னே அந்த குண்டை முஸ்லீம் தீவிரவாத கும்பல் போட்டு தள்ளுது. இதனிடையே பூஜா வேலை செய்யும்  அணு ஆராய்சி கழகமே ஒரு தீவிரவாத தொடர்புடையது என்பதும், பூஜாவின் பாஸ் ஒரு வில்லன் கோஷ்டி ஆள் என்பதும்.... உஷ் அப்பாடா.... ஜோடா ப்ளீஸ்..

உடனே என்ன ஆச்சு? கமலையும், அவர் மனைவி பூஜா குமாரையும் கையை கட்டி, வாயை ஒட்டி  முஸ்லீம் தீவிரவாதிகள் தூக்கிட்டு வந்துடுறாங்க அவங்க இடத்துத்து. அங்க பக்கத்து பஞ்சாயத்து யூனியன்ல தான் முல்லா ஒமர் எங்கிட்டோ இருந்து கிட்டு எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்காரு. கமலை போட்டு தள்ள சொல்லிடுறாரு குல்லா போட்ட முல்லா.

சாகும் முன்ன நான் தொழுகை நடத்திக்கிறேன் என சொல்லும் கமலுக்கு ஒப்புதல் தரப்படுகின்றது. அப்பாடா இது வரை தான் தமிழ்ப்படம். இதல்லாம் ஒரு அரை மணி நேரம் தான் நடக்கும்.

அதன் பின்னே கமல் எடுப்பது தான் "விஸ்வரூபம்". பிரார்தனை செய்ய கொடுக்கப்பட்ட அந்த சில நொடிகளில் மிகச்சில நொடிகளில் கமல் ஆடும் அந்த விஸ்வரூபம் தியேட்டர் விசில் சத்தம் மற்றும் காட்சி அமைப்புகள், காமிரா கோணங்கள், சண்டைக்காட்சி பிரம்மிப்பு... யப்பா பயங்கரம். கொரூரம். இப்படி ஒரு சண்டைக்காட்சி பிரம்மாண்ட சவுண்ட் எஃபக்டோடு கூடிய சண்டைக்காட்சி தமிழுக்கு ரொம்ப புதுசு. நாம் நம்மை மறந்து சீட் முனைக்கு வந்து விடுவது அப்பட்டமான நிஜம். நாம் சுதாரிக்கும் முன்னே அந்த சண்டைக்காட்சி முடிந்து விடும். நாம் அதை அசை போட வசதியாய் அதே சண்டைக்காட்சி "ஸ்லோ"வாக காட்ட்டப்படும். அப்போது தான் கமல் செய்த சண்டையின் உக்கிரம் நமக்கு நம் மூளைக்கு சென்று சேரும். தியேட்டரில் இருக்கும் நம் ஒட்டு மொத்த வியப்பையும் பூஜாகுமார் தன் அகண்ட விழிகளால் காட்டுவது அழகோ அழகு. 'இவனைப்போயா நாம் பெண்மைக்குரிய உடல்மொழி கொண்டவன் என நினைத்து பாஸ் கூட டீல் போட நினைத்தோம்... போனது போகட்டும் இனிமே கமலே கண்கண்ட தெய்வம்" என்பதை வசனமாக காட்டாமல் கண்கள் மூலம் காட்டுவது அருமையோ அருமை.

அந்த காட்சியில் இருந்து ஆரம்பிக்கும் ஓட்டம் படம் முடியும் வரை தொடர்கின்றது. நடுவே பாட்டு கிடையாது. ரொமான்ஸ் கிடையாது... இன்ன பிற சமாச்சாரங்கள் கிடையாது. ஆனாலும் படம் தொய்வே இல்லாமல் செம வேகத்தில் ஓடுகின்றது. படம் ஜெயிக்க தேவையான பார்முலா அது தான். படம் ஜெயித்தே விட்டது.

பின்னர் தான் கமல் ஒரு இந்திய உளவு ஆசாமி என்பதும், பின்னர் முல்லா ஒமர் புறாவின் காலில் சிசிலியம் என் ஏ டூ ஹெச் டூ ஓ சோடியம் பைகார்பனேட்... அய்யோ அப்படில்லாம் வேண்டாமே... நம்ம பாஷைல சொல்லனும்னா புறா காலில் விஷம் வச்சு அதை நியூயார்க் நகரம் முழுக்க தூவ சொல்வது, அதை கமல் மற்றும் அமரிக்க உளதுத்துறை எல்லாம் சேர்ந்து முறியடிப்பது என எல்லாம். திடீர்ன்னு பார்த்தா தியேட்டரில் ஃபேன் எல்லாம் நின்னு போச்சுது. தியேட்டர் காரன் வந்து படம் முடிஞ்சு போச்சுது எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலின்னு சொல்ல நாம் இல்லியே இன்னும் கிளைமாக்ஸ் ஃபைட் வரலியே என அப்பாவியாய் கேட்க அதற்கு தியேட்டர் காரன் நம்மிடம் "நீங்க விசயாகாந்து படம் பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டீங்க. என்னை நம்பாட்டி இதோ கமலே சொல்லுவாரு பாருங்க. பார்த்துட்டு எந்திரிங்க" என சொல்லிக்கொண்டு இருக்கும் போது பூஜாகுமாரிடம் கமல் சொல்லுவார்  "என் வேலை இத்தோடு முடியலை. அந்த முல்லா ஒமர் சாகனும் இல்லாட்டி நான் சாகனும், இல்லாட்டி நீங்க சாகனும் அதுவரை இது தொடரும்" என  சொல்ல நாமும் ஏக்கத்துடன் வெளியே வந்து தியேட்டர் பைக் ஸ்டாண்டில் "விஸ்வரூபம் பார்ட் டூ எப்பங்க வரும்" என கேட்க அவன் "ம்...இதுக்கு ஆன 100 கோடி மொதோல்ல வசூல் ஆகட்டும், பின்ன பார்ப்போம்" என கமலின் மேனேஜர் கணக்கா சொல்ல ஒரு வித ஏக்கத்துடன் நாம் வெளியே வருகிறோம்.

இப்போது சில துளிகள்:

* கமல் ... கமல்.. கமல்... இது மட்டும் தான் ஒட்டுமொத்த படமும்.

* தாலிபான்கள் வாழும் அல்லது சாகும் நாடான ஆப்கானிஸ்தான் (அது ஆப்கானிஸ்தானோ அல்லது செட் போட்டு எடுத்தாங்களோ தெரியலை) அருமையோ அருமை.அப்படியே கண் முன் கொண்டு வந்து கொட்டி இருக்கும் அந்த 100 கோடிகளில் சில கோடிகளுக்கு என் நன்றிகள். (பணம் பத்தும் செய்யும்... ஒழுங்கான முறையில் செலவு செய்தால்)

* அந்த தாலிபான் காட்சிகளில் முல்லா ஒமரின் மனைவி ஒரு ஆங்கிலம் தெரிந்த பெண்மணி. அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் ஜிகாதி. சின்னவன் இன்னும் ஜிகாதி ஆகாதவன். சின்னவன் ஆங்கிலத்தில் பேசுகிறான், அவன் அம்மா சொல்லிக்கொடுத்து. கொஞ்சம் விஷய ஞானம் உள்ளவனாக காட்டுகின்றனர். பெரிய பையன் உடம்பிலே குண்டு கட்டிகிட்டு நேட்டோ படை பீரங்கியில் குதிக்கும் முன்னர்  முதல் நாள் இரவில் கமல் அந்த சின்ன பையனை ஒரு ஊஞ்சலில் வைத்து ஆட்ட அந்த சின்ன பையன் "நான் என்ன குழந்தையா? என்னை ஏன் இதிலே வைத்து ஆட்டுறாய்?" என சொல்லிவிட்டு போவதும், ஆனால் அடுத்த நாள் சாக தயாராக இருக்கும் அந்த ஜிகாதி பையன் கமலிடம் வந்து தன்னை அந்த ஊஞ்சலில் வைத்து ஆட்ட சொல்லிவிட்டு குழந்தைத்தனமாக உலக காற்றை எல்லாம் உறிஞ்சு ஒரு மூச்சு விடுவான் பாருங்க.... கண்ணில் நீர் வரவழைக்கும் காட்சிகள் இவைகள்.

* அபின் வைத்திருக்கும் ஒரு தாலிபான் ஏழை விவசாயி அனியாயமாக தூக்கிலிட்டு கொல்லப்படும் காட்சி ... அவன்  தாய் தந்தையர் கதறும் காட்சி, அதற்கு காரணகர்த்தாவான கமல் மனம் நொந்து போவது... ஏ கிளாஸ் காட்சி அமைப்புகள்

* பெண்மை கலந்த கமலும், பூஜாகுமாரும் பின் கையில் கட்டப்பட்டு தீவிரவாதிகளால் தாக்கப்படும் காட்சியில் முதல் முறை கமல் கவட்டி இடுக்கில் உதை வாங்கும் போது நமக்கும் லைட்டா வலிக்குது. அப்படிப்பட்ட சவுண்ட் எஃபக்ட். அடுத்த முறை அதே இடத்தில் கமல் அடிவாங்கும் போது " பட்ட இடத்திலே படும், கெட்ட குடியே கெடும்னு சொல்லுவாளே, அதே போல நீங்க செய்யறேள். இப்டில்லாம் பண்ணா நான் எப்படி குடும்பம் நடத்தி குழந்தை குட்டி பெத்துப்பது? என அப்பாவியாய் தீவிரவாதிகளிடம் கேட்பதும், அதற்கு பூஜாகுமார் "யார் கூட?" என கேட்பதும், வாயில் வழியும் ரத்தத்தை துடைக்க "கொஞ்சம் டிஷ்யூ தர்றேளா?"என கேட்பதும்... வழக்கமான கமல் முத்திரைகள்.

* பெண்மைத்தன்மை கமல், வீர தீர கமல் ஆனதும் முடியெல்லாம் வெட்டி கோட் சூட் சகிதம் கீழே இறங்கி வரும் போது பூஜாகுமார் "அட இவனை மிஸ் பண்ண தெரிஞ்சோமே" என தன் பாவனையால் ஆதங்கப்படுவது அபாரம்.

* யாரும் படத்தில் மிஸ் பண்ணக்கூடாத காட்சி என பார்த்தால் கமல் நவரசங்களைக்காட்டி ஆடும் அந்த அபாரமான கதக் பாடல் மற்றும் நடன அமைப்புகள். மனுஷன் சும்மாவே சிக்சர் அடிப்பார். அதிலே வாகாய் பந்து போட்டா கேட்கவே வேண்டாம்.

*ஒரு கட்டத்தில் பூஜாகுமாரை விசாரிக்கும் அமரிக்க நீக்ரோ எஃப் பி ஐ பெண் அதிகாரி பேச்சினூடே பூஜா தன் கடவுளுக்கு நான்கு கைகள் என பெருமைப்படும் போது அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே "அப்படின்னா எப்படி சிலுவைல அடிப்பீங்க" என கேட்கும் போது பூஜா கொஞ்சம் யோசிச்சு பின்ன சுதாரிச்சு "நாங்க கடல்லன்னா தூக்கி போடுவோம்" என்பது எல்லாம் கமலின் கடைந்தெடுத்த நையாண்டிகள்.

* இசை அமைப்பு யாரோ தெரியலை.என்னவோ சங்கர்ன்னு ஆரம்பிச்சுது பெயர். எங்கிட்டும் உறுத்தல் இல்லை. செமத்தையா உழைச்சிருக்கார்.

* ஆர்ட் டைரக்டர், ஒளிப்பதிவாளர், சண்டைக்காட்சி இயக்குனர் என எல்லாருமே அசத்தல். குறிப்பாக ஒப்பனை கலைஞர்கள் சிம்ப்ளி சூபர்ப்.தாலிபானியர், பாகிஸ்தானியர் உடைகள் அப்படியே அச்சு அசல்.

*இந்த படம் தமிழுக்கு மிகவும் அசத்தலான ஒரு அதிரடிப்படம் என்பதும், ஹாலிவுட் படங்கள் அளவு இருக்கின்றன என்பதும் உண்மை. படம் பார்த்து முடிந்த இந்த நிமிடம் வரை பிரம்மாண்டம் மனதை விட்டு போகலை. படத்தை தொலைக்காட்சியில் பார்த்தால் அல்லது திருட்டு விசிடி, தரவிரக்கம் செய்து எல்லாம் பார்த்தால் தியேட்டரில் பார்க்கும் இன்பம் இருக்குமா என்பது சந்தேகமே. ஆகவே தியேட்டரில் பாருங்கள்.

* ஹாலிவுட் பாலா சொல்லியிருந்தார். "கமல் 100 கோடி செலவு செய்து ஹாலிவுட் உள்ளே நுழைய தனக்கான  விசிட்டிங் கார்ட் அடித்துள்ளார்" என. அது 100 சதம் உண்மை!


* படம் நிச்சயமாக ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்படலாம். படும். அங்கே அருமையான அமரிக்க லாபி செய்தால் 100 சதம் இரு ஆஸ்கார் உறுதி. பாதி லாபியை இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் செய்துவிட்டபடியால் அதாவது அமரிக்காவை சொறிச்சு விட்டு விட்டமையால் மீதியை மட்டும் கமல் செய்தால் போதுமானது. செய்வார். கிடைக்கும். கிடைக்கும் பட்சத்தில் முன்பு சொன்னது போல கமல் பிரியாணி செய்து போட்டு நன்றிக்கடன் செலுத்தியே ஆக வேண்டும்.

மொத்தத்தில் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி, கமலுக்கும் தமிழக சினிமாவுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும்!

15 comments:

  1. அருமையான விமர்சனம்

    ReplyDelete
  2. இதுவரை வந்த விமர்சனங்களில் சிறந்த விமர்சனம்.படம் பார்க்க மேலும் ஆவலை தூண்டுகிறது உங்கள் நகைச்சுவை நடை.

    ReplyDelete
  3. படித்து விட்டு கமென்ட் எழுத கீழே வரும் இடத்தில் நீங்கள் எழுதிய ஒரு பதிவு கண்ணில் பட்டது தொல்ஸ்.ஆம் பறக்க தெரியும் என்பதற்காக சூரியனுக்குல் குதிக்க கூடாது தான்
    கமல் மிகப்பெரிய நடிகன் .நாம் மயிலாடுதுறையில் அந்த அளவிற்கு அவரை ரசித்து இருக்கிறோம் .ஆனால் அவர் ஆஸ்கார் போதைக்கு நாங்கள் ஊறுகாய் ஆகி இருக்கிறோம் என்பதை நீங்களும் விளங்காமல் சொரிந்து விட்டு இருக்கிறோம் என்று சொல்லி இருக்குறீர்கள் .இதை நான் உங்களிடம் எதிர்பார்க்க வில்லை

    ReplyDelete
  4. Naresh அருமையான படம் என்று அருமையான விமர்சனம் சொல்கிறது. இதை படித்த மாத்திரத்தில் இருக்கிற அத்தனை அவார்டையும் கமலுக்கு கொடுத்திடலாம் . உங்க விமர்சனத்தில் முசிம் தீவிரவாதின்னு உண்மைய சொல்லிபுட்டீங்க. .. மாற்றிக்கோங்க .. இல்லைனா மீண்டும் ஒரு வெட்டு விழ வாய்ப்பிருக்கும் .

    இதை publish பண்ணுவதற்காக அனுப்ப வில்லை உங்கள் எழுத்திலேயே ஒரு சமூகத்தை தீவிரவாதி என்று சொல்ல வைத்து விட்டீர்கள் .அதை விஷுவலாக கமல் செய்யும் போது எந்த அளவிற்கு அதன் வலி இருக்கும் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை

    ReplyDelete
  5. Naresh அருமையான படம் என்று அருமையான விமர்சனம் சொல்கிறது. இதை படித்த மாத்திரத்தில் இருக்கிற அத்தனை அவார்டையும் கமலுக்கு கொடுத்திடலாம் . உங்க விமர்சனத்தில் முசிம் தீவிரவாதின்னு உண்மைய சொல்லிபுட்டீங்க. .. மாற்றிக்கோங்க .. இல்லைனா மீண்டும் ஒரு வெட்டு விழ வாய்ப்பிருக்கும் .

    இதை publish பண்ணுவதற்காக அனுப்ப வில்லை உங்கள் எழுத்திலேயே ஒரு சமூகத்தை தீவிரவாதி என்று சொல்ல வைத்து விட்டீர்கள் .அதை விஷுவலாக கமல் செய்யும் போது எந்த அளவிற்கு அதன் வலி இருக்கும் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை

    ReplyDelete
  6. தாலிபான்கள் அபின் வியாபாரம் செய்தார்களா அதை வெட்டி வீசினார்களா ? என்பது எல்லாம் இங்கு எனக்கு தேவை இல்லாத விஷயம் .அதில் கஞ்சா விற்பவனாக வரும் அரபி ஒருவன் நான் அமெரிக்காவிற்கு காட்டிக் கொடுக்க வில்லை நான் தவறு செய்ய வில்லை என்று துடிப்பானே அந்த துடிப்பை இங்குள்ள ஒவ்வொரு முஸ்லீமும் துடித்து சொல்லும்போது சுற்றி நின்று தூக்கில் போடும் அந்த தவறை இங்கு எனது தொப்புள் கொடி உறவுகள் செய்யும்போது அதற்க்கு காரணமான கமல் மவுனமாக பார்த்து கொண்டு ஆஸ்கார் கனவில் மிதப்பது உங்களுக்கு தெரிய வில்லையா ?

    ReplyDelete
  7. விமர்சனம் அருமை... இசையமைப்பாளர்கள் மூவர்... ஷங்கர், இஹ்சான், லாய்...

    ReplyDelete
  8. கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை

    அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

    ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
    ‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை

    தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்

    அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்

    ReplyDelete
  9. "ஒரு விருது பெறுவதற்கான அத்தனை தகுதியுடன் கூடிய விமரிசனத்தை, ஒருத்தர் மாங்கு மாங்கு என்றெழுதி அதை தன் ப்ளாகில் போடுகிறார்.அதற்கு ஒரே ஒரு அனானி "அருமையான விமரிசனம்" என்று ரத்ன சுருக்கமாக பின்னூட்டம் இடுகிறார்.என்ன கொடுமை இது சரவணன் !! ப்ளாகில் எழுதுவதற்கு பதில் சஹாராவில் சங்கராபரணம் ஆலாபனை செய்யலாம்..BTW இதை பகிர்ந்து கொண்டதிற்கு மிக நன்றி JG"
    மேற்கண்ட கமென்ட் நான் "அவசரப்பட்டு" FB யில் பதிவு செய்தது..என் மூக்கை உடைத்த மீதி ஐந்து பேருக்கும் நன்றி.
    Ranganathan Ganesh

    ReplyDelete
  10. அருமையான விமர்சனம். படம் பார்க்க மேலும் ஆவலை தூண்டுகிறது.

    ReplyDelete
  11. ***படம் நிச்சயமாக ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்படலாம். படும். ***

    ரெண்டு வருசத்துக்கு முன்னாலே இதே மாரித்தான் தி மு க ஆட்சி அமைக்கும் சொன்னீக.

    திருந்தவே மாட்டீங்களா?

    ஆனால் நாங்க திருந்திட்டோம். நீங்க சொல்றதை எல்லாம் உடனுக்குடனா குப்பைத் தொட்டியில் போடுவதென்று!

    ReplyDelete
  12. மிக அருமையான விமர்சனம்.. Well Done....

    ReplyDelete
  13. மிக அருமையான விமர்சனம்.
    அந்த மூன்று பேரின் இசையும் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  14. விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரசியல் கரணங்கள் தவிர்த்து கதை சொல்லும் முறைமை பற்றிய பார்வை ஒன்று. பூஜா குமார் + கமல் கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருக்கும் கட்டட உச்சியில் ஓர்

    விஸ்வரூபம் கார் விபத்து

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))