தம்பி எல்கே ஆகிய கார்த்தி என்னை இந்த தொடர் பதிவுக்கு எழுத அழைத்தமைக்காக நன்றியோடு இதை பதிகின்றேன்.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?அபிஅப்பா2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?இது ஒரு செல்லபெயர். என் மனைவி வைத்த பெயர். எனக்கு கல்யாணமான பின்னே ஒரு நாள் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்த போது அவனவன் "உன்னை உன் மனைவி எப்படி கூப்பிடுவாங்க?" என்கிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி எழுந்த போது (அப்போது என் நண்பனில் ஒருத்தன் தன் அக்கா பெண்ணை கல்யாணம் செஞ்சு இருந்தான். அந்த பெண் இவனை மாமா என கூப்பிடும்) அப்போது தான் எனக்கு சுரணை வந்தது. அய்யோ இத்தனை நாள் இதை தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு. வீட்டுக்கு ஓடிப்போய் "நீ என்னை எப்படி கூப்பிடுவாய்?" என வெள்ளேந்தியாக கேட்க எல்லோருக்கும் முன்னே என் மனைவி "நான் உங்களை கூப்பிட்டதே இல்லியே" என சொல்ல எல்லோரும் சிரிக்க எனக்கு வெட்கமாய் போய் விட்டது. பொதுவா எங்க வீட்டிலே மனைவி கணவனை அத்தான் என அழைக்கும் பழக்கம் தான். ஆனா நேரே கூப்பிடும் போது அம்மா அப்பாவை அப்படி கூப்பிட்டதில்லை. மத்தவங்க கிட்ட பேசும் போது "அத்தான் இப்படி சொன்னாங்க அப்படி சொன்னாங்க" என சொல்வது உண்டு. பின்னர் தான் தெரிந்தது அப்படி அத்தான் என கூப்பிடுவது என் மனைவிக்கு கூச்சமாக இருந்திருக்கலாம் என.
எதாவது கூப்பிடும் சந்தர்ப்பம் வந்தால்"என்னங்க, இந்த பாருங்க, ஏங்க..'இப்படியாக போய்கொண்டிருந்தது. பின்னர் ஒரு மே 3ம் தேதி அபி பிறந்த பின்னர் என் மனைவிக்கு அந்த குழப்பம் போயே போச். "அபிஅப்பா" என என்னை முதலில் கூப்பிட்டது என் மனைவி தான். அதன் பிறகு பக்கத்து வீடு எதிர் வீடு எல்லாம் அபிஅப்பா என கூப்பிட்டு கூப்பிட்டு ஒருநாள் பிளாக் ஆரம்பிக்கும் போது ஏதோ புனைப்பெயர் வைத்துக்க ஆசைப்பட்டு எல்லாம் இதை வைக்கலை. தானாகவே அந்த பெயரை அடித்து விட்டேன். அதுவே இப்போது என் சொந்த பெயரை விட அதிகமாக கூப்பிடப்படுது. இன்னும் சொல்ல போனா என் கம்பனில இருக்கும் தமிழ் பசங்க எல்லாம் கூட அபிஅப்பா என்றே கூப்பிடும் அளவு ஆகிவிட்டது. இதில் கொஞ்சம் கர்வமும் கூட எனக்கு.
எனது உண்மை பெயர் தொல்காப்பியன். அந்த பெயர் காரணம் சொன்னா தனி பதிவு தான் போடனும்:-) அதையே பள்ளி காலத்தில் தொல்ஸ் என்று சின்னதா ஆக்கிட்டாங்க. வலையுலகில் என்னை தொல்ஸ் என அழக்கும் சிலர் நாகைசிவா மற்றும் வேலன் அண்ணாச்சி.
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.2006 வரை நானும் பல டீம்ல வேலை செஞ்சாலும் எனக்கு கீழே சிலரை கொடுத்து நானும் ஒரு டீம் லீடரா வேலை செய்ய ஆரம்பிக்கும் போது முழுநேரமும் வலையில் உலவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது ஆ.வி, நக்கீரம், குமுதம் எதையும் விடாமல் மேயும் போது வெட்டிபயல் பற்றி ஆவியிலோ, குமுதத்திலோ வந்ததை பார்த்து அங்கே போன பின்னே "அட" என ஆச்சர்யமாகி அங்க இருந்து வ.வா.சங்கம் போய், அங்க இருந்து கைப்புள்ள எல்லாம் படித்து, பின்ன லக்கி, மயிலாடுதுறை சிவா எல்லாம் படித்து மத்தவங்க பின்னூட்டத்தை காபி பேஸ்ட் செஞ்சு பின்னே கோபியின் "ரிப்பீட்டேய்" வார்த்தையை காபி பேஸ்ட் செஞ்சு அதுக்கு கீழே போட்டு ஒரு வழியா அபிஅப்பா என்கிற பெயரை அவங்க பப்ளிஷ் செஞ்ச பின்னே பார்த்துகிட்டே (கிட்ட தட்ட ஒருமணிநேரம் கூட பார்த்து கொண்டே இருந்திருக்கேன் என் பெயரை) பின்ன கைப்புள்ள, கீதாம்மா, துளசிடீச்சர் எல்லாம் என் பெயரை குறிப்பிட்டு நன்றி என சொன்னபோது ஆஸ்கார் அவார்டு வாங்கினமாதிரி குதிச்சு... பின்னே நாகை சிவா சூடானில் இருந்து துபாய் வந்த கதை படிச்சு பின்னே துபாய்ல தம்பி, முத்துகுமரன் கிட்ட போன்ல பேசி (அந்த பதிவிலே இருந்தது நம்பர்) பின்னர் தம்பியை கராமா என்னும் இடத்துக்கு போய் நேரில் பார்த்து (அதுக்கு முன்னமே பிளாக் ஆரம்பிச்சு சும்மா வணக்கம் போட்டு வச்சேன். அது தான் முதல் பதிவு) என் பிளாக்கை சரி பண்ண பார்க்கும் போது இம்சை அரசியின் பின்னூட்டம் வந்திருந்தது. உடனே ஆன்லைன்ல பதிவர் கப்பியை பிடித்து தம்பி தமிழ்மணத்தில் இனைக்க வச்சு அனுப்பினார். பின்னர் அங்கயே எதுனா 2 வது பதிவு போடுங்கன்னு சொன்ன போது ஈகலப்பை வழியாக அபிராமி என அடித்தேன். இது தான் நான் முதன் முதலில் தமிழில் அடித்த வார்த்தை. அதுவரை காபி பேஸ்ட் தான். அதையே 3 தடவை எண்டர் தட்டி அடித்தேன்.
உடனே தம்பி இதுக்கு என்ன லேபிள் பெயர் வைக்க போறீங்க?ன்னு கேட்க அப்பதான் அது பத்தி தெரிஞ்சுகிட்டு உடனே கவிதைன்னு பெயர் வைத்தேன். அஃப்கோர்ஸ் நான் எழுதிய கவிதை தானே அபிராமி.
பின்னர் வீடு வந்து சேர்ந்து (அதுக்கும் முன்னமே "போஸ்டர் ஒட்டுவது எப்படி"ன்னு ஏற்கனவே அடிச்சு வச்சிருந்ததை போட்டேன். அந்த பதிவுக்கு எனக்கு ஒரு முழுவெள்ளிகிழமை தேவைப்பட்டது. அதிலே என்ன ஒரு விஷேஷம்னா அது நான் டைப் அடிக்கவேயில்லை. நான் எழுத நினைத்ததை ஒரு பேப்பரில் எழுதி வைத்து பல பதிவை ஓப்பன் செய்து நான் எழுதிய வார்த்தையை காபி பேஸ்ட்(சில எழுத்துகளை கூட காபி பேஸ்ட் செய்து) தயாரிக்கப்பட்ட பதிவு அது:-)) அதனால் கிட்ட தட்ட ஒருநாள் ஆனது எனக்கு. அதிலே கூட எழுத்துபிழை என சிலர் சொன்ன போது "அவங்க ஒழுங்கா எழுதினா எனக்கு ஏன் எழுத்து பிழை வருது"ன்னு கூட நினைச்சுகிட்டேன்.
அப்படியாக ஆரம்பித்து இப்போது இந்த அபிஅப்பா பிளாக்ல இப்ப 300 வது பதிவை தொட போகின்றேன்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?"அபிஅப்பா" என்னும் பெயர் மந்திரம் தான். அப்போ, (அப்போ மட்டுமல்ல இப்பவும் தான்.,. ) தான் ஒரு பெண்ணீய காவலர் முற்போக்குவாதி என காமிச்சுக்க எல்லா ஆண்\பெண் பதிவரும் நினைத்த காலம். உண்மை நிலவரம் என்னன்னு அவனவனை சுரண்டி பார்த்தா தான் தெரியும் என்பது வேற விஷயம்.(நான் என்ன சொல்லிகிட்டேன்) கிட்ட தட்ட தன் குழந்தையை முன்னிலைப்படுத்தி பெயர் வைத்து கொண்ட முதல் பதிவர் நான் என நினைக்கிறேன். அதுகூட அந்த வலைப்பூ பிரபலம் ஆனதற்கு காரணம் என நினைக்கிறேன். (பிரபலம் தானே?)
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?ஒன் அண்ட் ஒன்லி சொந்தவிஷயம் தான். நான் எனக்கு என்ன தெரியுமோ, எதை பார்த்தனோ, எதை கேட்டனோ அதை தான் எழுதுவேன். புனைவாக எழுத வரவில்லை. அது பற்றி கவலைப்பட்டதும் இல்லை. ஏனனில் நான் எனக்காக எழுதுகிறேன். கமிட்மெண்ட் இருந்தா தானே கம்ப்ரமைஸ் பண்ணிக்கனும்.ஒரு பத்திரிக்கைல எழுத கூப்பிட்டு அவங்க அதை வெட்டி இதை வெட்டி...ஊகூம் அதல்லாம் இல்லாமல் சுதந்திரமாக எழுதுகிறேன். (பத்திரிக்கைல கூப்பிட்டு நான் மறுத்து விட்ட மாதிரி இந்த சொல்லாடல் இருந்தா ஸாரி அப்படி யாரும் கூப்பிடவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்). நான் இதை தான் எழுதுவேன். முடிஞ்சா படி. பிடிச்சா பின்னூட்டம் போடு.முடிஞ்சா ஓட்டு போடு என்கிற மாதிரியான மனோபாவம் வந்துவிட்டது.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?பொழுது போகாமல் இல்லை. ஆரம்பத்தில் எழுத வந்தது ஒரு அரிப்பு. அச்சில் தன் பெயர் கருமாதி பத்திரிக்கையிலே வந்தா கூட ஒரு போதை அரிப்பு வருமே அது போன்ற அரிப்புக்காக எழுத ஆரம்பித்தது. அத்தனை ஏன் "தொல்காப்பியர்" "தொல்காப்பியம்" என பாட புத்தகத்தில் வந்தா கூட அதை பிளேடால் நறுக்கி பாதுகாத்து வைத்து ரகசியமாய் பார்த்த ஒரு சைக்கோ தனம் போல மானிட்டரில் மத்தவங்க ஆகா ஓகோ சூப்பர் என சொல்லும் போது கிடைக்கும் ஒரு போதை அரிப்பு தான் எழுத வைத்தது. இது தான் உண்மை. இன்னும் சொல்ல போனால் என் பொழுதை இந்த எழுத்து விழுங்கியிருக்கு. என் முன்னேற்றத்தை சாப்பிட்டிருக்கு. என் மற்ற செயல்பாடுகளை கொன்று போட்டது. இதை சொல்ல கூச்சம் இல்லை. கிட்ட தட்ட பலருக்கும் இந்த நிலை இருந்திருக்கலாம் சொல்ல கூச்சப்பட்டிருக்கலாம். இதுவே தொழிலாக இருந்து அதனால் வருமானம் கிடைத்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டேன் என்பதும் உண்மை.
\\பதிவுகளின் மூலம் சம்பாதிக்கவா\\\ நல்லவேளை என் மனைவி இதை பார்க்கவில்லை. பார்த்திருந்தா நான் கல்யாணபரிசு தங்கவேல் மாதிரி தினமும் காசு கொடுத்து மாலை வாங்க வேண்டியிருந்திருக்கும்:-))
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?அபிஅப்பா, அபிஅப்பாவின் நூலகம், ஆகியவை என் சொந்த பிளாக், கும்மி(வேடந்தாங்கல்), தாயின் புன்னகை(இது எங்கள் பள்ளிக்காக) சமீபத்தில் சுவரொட்டி(ஒரே பதிவு தான்) பேரண்ட்ஸ் கிளப்( 3 பதிவு) இவைகளில் எழுதுகின்றேன். தவிர எங்கள் பள்ளிக்காக ஒரு தனி சொந்த வலைப்பூ வைத்திருக்கேன். தவிர இரண்டு வலைப்பூ சொந்தமாக இருக்கு.(நண்பர்களுக்காக) வ.வா.சங்கத்தில் ஒரு மாதம் எழுதினேன் அட்லாஸ் வாலிபராக, வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுதினேன்.
சொல்ல போனால் நானே பதிவு போட்டு நானே வாசகர் பரிந்துரையில் வரும் அளவு ஓட்டு போட்டு வரும் அளவு வலைப்பூக்கள் இருந்தாலும் சமீபமாக மட்டுமே ஓட்டு போடுகின்றேன் எனக்கே.(இரண்டு மாதமாக) அதும் ஒரே ஒரு அபிஅப்பா ஓட்டு மட்டுமே. அதனால் ஒரே ஒரு தடவை வாசகர் பரிந்துரையில் 5 மணி நேரம் மட்டும் இருந்தது. ஆனால் முன்பு சூடான இடுகையில் நிரந்தரமாக இருந்தேன் என்பது பழையகதை.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?பொதுவாகவே பதிவை படிக்காமல் பின்னூடம் போடுகிறேன் என்கிற குற்றச்சாட்டு என் மீது உண்டு. அது உண்மையும் கூட. ஆனால் பதிவை முழுமையாக படித்தால் அது பற்றி தனி மடலில் விவரமாக கூட விவாதித்தது உண்டு. விமர்சனம் செய்தமை உண்டு.
ஆனால் சிலரது பதிவுகளை முழுமையாக படித்து விடுவேன்.பொறாமை??? உம் வந்ததுண்டு.
ராமலெஷ்மி கவிதை படிக்கும் போது எப்படி நாம் 3 பக்கம் மாங்கு மாங்குன்னு அடிப்பதை சின்னதா எதுகை மோனையோட பத்து வரியில் புரியும் படி சொல்ல தெரியுது கவிதையிலே என நினைத்து பொறாமை வரும்.
வெண்பூவின் டைமிங் காமடி ரொம்ப ரசிப்பேன். சில சமயம் நான் நினைத்து அடிக்கும் முன்பே அதை நான் நினைத்ததை விட அழகா சொல்லி சிரிக்க வைக்கும் அவரது எழுத்தின் மீது பொறாமை வரும். அதனால் வெண்பூவையே கூட எரிச்சலாக பார்க்கும் ஒரு மனோபாவம் கூட வந்ததுண்டு.(மன்னிக்கவும் வெண்பூ)
டுபுக்கு எழுதும் காமடி பதிவு(எல்லாமே காமடி பதிவு தான் 'பிரசவம்" தவிர்த்து) படிக்கும் போது ஒரு வித பொறாமையோடு தான் படிப்பேன்.
பிரியாகதிரவன் என்கிற பதிவர் எழுத்து நடை. அவங்க கிட்ட தட்ட இன்னும் ஒரு துளசிடீச்சர் ஆகும் பதிவர் என நினைத்து பொறாமை படுவேன்.(அவங்க தமிழ்மணத்தில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல்)(இது கூட பொறாமை தான்)
அரசியல் கட்டுரையில் மா.சிவக்குமார் பொறாமைப்பட வைக்கும் ஒரு எழுத்துக்கு சொந்தக்காரர். (அஃப்கோர்ஸ் எனக்கு பிடிக்காத கருத்தாக தான் இருக்கும் ஆனாலும் அது பொறாமைப்பட வைக்கும்)
கல்வெட்டு என்கிற பலூன்மாமாவின் பின்னூட்டம் பிரம்மிக்க வைக்கும். ஆனால் பொறாமை இருந்ததில்லை. மனுஷன் எத்தனை விஷயம் படித்திருக்கார் என நினைத்து கொள்வேன்.
லக்கியின் (என்)ஆரம்பகாலத்தில் இருந்தே வாசகன் என்கிற வகையில் எனக்கு ஆர்வம் இருக்கும் பொறாமை இருக்காது.
எல்லேராம் பதிவுகள் பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்.
சமீபமாக நேசமித்ரன் கவிதை பிடிச்சிருக்கு. இன்னும் பொறாமை வரவில்லை. கூடிய சீக்கிரம் வரும்.
உண்மை தமிழன் பதிவு ரொம்ப பிடிக்கும். 'உள்ளது உள்ளபடி" விலாவாரியா அவர் எழுதுவதை பார்க்கும் போதும் பின்னூட்டத்துக்கு சளைக்காமல் பதில் சொல்வதும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கீதாம்மாவின் சிதம்பர ரகசியத்துக்கு நான் அடிமை.
கண்மனி டீச்சரின் காமடி பதிவு இப்போது இல்லை என்பது வருத்தம் தான், ஆனா அவங்க போடும் பிளாக்கர் டிப்ஸ் அருமை.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..இம்சை அரசி ஜெயந்தி. எனக்கு பிடித்த தங்கை. கிட்ட தட்ட அந்த முதல் பின்னூட்டம் நான் பலதடவை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருந்திருக்கேன். முதன் முதலாக என் வீட்டில் ஜெயந்தியை பார்த்த போது நானும் பேசவில்லை. ஜெயந்தியும் பேசவில்லை. கிட்ட தட்ட எப்படி இருந்தது தெரியுமா அந்த நிகழ்வு.
நான் எப்போதும் துபாயில் இருந்து ஊருக்கு வரும் போது ஏர்போர்டில் அபி அவங்க அம்மா பின்னாடி ஒழிச்சுப்பா. எனக்கும் பார்க்க ஆவலாக இருக்கும். அந்த கூட்டத்தில் கஸ்டம்ஸ் முடியும் முன்னமே பக்கேஜ் கலக்ஷன் பெல்ட்டில் போய் நிற்காமல் கூட்டம் பக்கம் வந்து பார்ப்பேன்.
பின்பு வெளியே வந்தவுடன் பார்க்க ஆர்வமாக இருந்தாலும் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாது. அப்படி ஒரு மனோநிலை இருக்கும். உணர்சிகளின் மொத்த குவியலாக இருக்கும் அந்த பொழுதுகள். காரில் ஏறி உட்காந்த பின்னே கூட அவங்க அம்மா கிட்டயே இருப்பா. வீடு வந்ததும் கொஞ்சம் கிட்ட வருவா.
"சரி சரி அவளுக்கு இதல்லாம் வாங்கி வந்தேன். அவளுக்கு வேண்டாமாம். பக்கத்து வீட்டிலே கொடுத்திடு" என சொல்லும் போது லைட்டா கண்ணை கசக்கிகிட்டே வருவா.
கிட்ட தட்ட அப்படித்தான் ஜெயந்தியும் நானும் அன்றைக்கு இருந்தோம். அன்றைக்கு பெங்களூர் பஸ் ஏறும் போது தான் அய்யோ நம்ம ஜெயந்தி ஊருக்கு போறா அப்படீன்னு ஒரு கலக்கம் அடிவயிற்றில் வந்தது. இதான் ஜெயந்தி. போன பின்னே ஒரு மெயில் வந்தது ஜெயந்தியிடம் இருந்து. "அண்ணா ஏன் என் கிட்ட சரியா பேசலை. நான் தான் சரியா பேசலை. நீங்கலாவது பேசியிருக்கலாமே". கிட்ட தட்ட அப்போது தான் நான் ஒரு மெயில் அனுப்பினேன். அதே வாசங்கங்களோடு.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...என் எல்லா பதிவிலயும் என் சுயபுராணம் தான் அதிகமா இருக்கும் என்பதால் அத்தனை சுட்டியையும் கொடுக்க வேண்டும். அதல்லாம் சாத்தியம் இல்லை. நான் ரொம்ப சாதாரணமானவன். சராசரி மனிதன். பெரியலாடுலபக்கு தாஸ் எல்லாம் இல்லை.
தெருவில் நடந்து போகும் போது உங்க கண்ணுக்கு தெரியும் பத்து பேரில் நானும் ஒருத்தன்.
நான் இந்த தொடருக்கு அழைக்கும் பதிவர்கள்...........என் புத்திக்கி எட்டியவரை எல்லோரும் எழுதியாச்சு, அதனால யார் வேண்டுமானாலும் எழுதுங்க. அதுக்காக எதுனா சன்மானம் தர ஆசைப்பட்டா டபில்யூ டபில்யூ டபில்யூ டாட் அபிஅப்பா டாட் காம்ல தொடர்பு கொள்ளவும்.