பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 17, 2013

சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்னே சமதர்மம் !!!

சமீபத்தில் வெளிவந்துள்ள சிவகார்த்தி நடித்த 'எதிர்நீச்சல்' படத்தில் 'குஞ்சிதபாதம்' என்னும் பெயரினால் வரும் அவமானங்கள் தான் கதையே என ஒட்டுமொத்தமாக எல்லோரும் தங்கள் 'சினிமா விமர்சனத்தில்' குறிப்பிட்டு வருகின்றனர். அதிலே என்ன அசிங்கம்?? எனக்கு புரியவில்லை. சிதம்பரம் நடராஜர் சிலைக்கு அலங்காரம் செய்யும் போது அவரது உடல் முழுக்க நகைகள் அலங்காரம் மட்டுமே இருக்கும். அவரது திருவாச்சியில் மட்டுமே பூ அலங்காரம் இருக்கும். மத்தபடி அவரது உடலில் பூ மாலை சூட்டும் இடமே அவரது தூக்கி நிறுத்திய இடது கால் பாதங்களில் அதாவது கனுக்காலில் சின்னதாய் நம் உள்ளங்கை அளவிலான குஞ்சம் வைத்த பூ மாலை சாற்றியிருப்பர். அதற்கு தான் குஞ்சித' பாதம் என்னும் பெயர். அது போகட்டும். இந்த பெயரை விடுங்கள். என் பெயர் "தொல்காப்பியன்" என்ன பாடு பட்டிருக்கு தெரியுமா என் பள்ளி பருவத்தில்???


நானே எலும்பும் தோலுமாய் இருப்பேன் அப்போது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை, தோலும் எலும்புமாய் இருக்கிறேன். அதை குறிக்கும் விதமாய் தோலு' காப்பியன், காப்பி, என பலவாறு கிண்டலடிக்கப்பட்டுள்ளேன். பள்ளிக்கு தடுப்பூசி போட வரும் போது பசங்க ஊசிக்கு அழுதுகிட்டு இருக்காங்களோ இல்லியோ வரும் ஊசிக்காரர் ஊசியை போட்டு விட்டு என் பெயரை தோல் காப்பியன் என மிகச்சரியாக தப்பாய் எழுத போவதை நினைத்து அழுவேன். ஊசி வலியை விட அது அதிகம். அது என்ன எழவோ தெரியலை... இப்போதும் கூட என் வாக்காளர் அடையாள அட்டையில் தோல் காப்பியனாகவே இருந்து தொலைக்கிறேன். அப்படி என் பெயரால் நான் ரொம்ப மனமொடிந்து போன நேரத்தில் அபி பிறந்து அபிஅப்பாவாக ஆன பின்னே தான் ஓரளவு நிம்மதி. அதையும் கூட சிலர் அபிஅப்பா என்பதை சில சமயம் அபிபாப்பா என எழுதி விடுகின்றனர்.


இப்படியாக என் பெயர் எனக்கு பல தொல்லைகளை கொடுத்த காலத்தில் அதாவது நான் ஏழாம் வகுப்பு படித்த காலத்தில் (ஏழாம் வகுப்பெல்லாம் படிச்சிருக்கேன் மை லார்ட்) ஒரு நான்கு மாதம் மயிலாடுதுறையில் இருந்து மேல்படிப்புக்காக மங்கைநல்லூர் கிராமத்துக்கு கொண்டு சேர்த்தார்கள். அங்கே பெயர் எல்லாம் வித்யாசமாய் இருக்கும். அதிலே ஒருத்தன் பெயர் "சமாதானம்". நம்புங்க. அவன் பெயரே சமாதானம் தான். அவன் அண்ணன் பெயர் "சமரசம்" தம்பி பெயர் "சமதர்மம்" .. இப்படியாக அந்த பள்ளியில் சமாதானம், சமரசம், சமதர்மம் ஆகிய சகோதர்கள் வந்து சேர்ந்தனர் அந்த பள்ளிக்கு. அவனுங்க பெயரை மற்ற மாணவர்கள் கிண்டலடிக்கும் போது நானும் சேர்ந்துப்பேன். பின்ன என்ன ... ஒரே அடிதடி, சண்டை, சச்சரவு தான். ஹய்... நல்லா இருக்குல்ல... சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்ன சமதர்மம் ஆகா ... இந்த குழப்பத்தில் என் தொல்காப்பியன் பெயர் கிண்டலில் இருந்து தப்பித்து கொண்டது. பின்னர் நான் அந்த பள்ளியில் முதல் ரேங் வாக்கியமையால் அப்பாவுக்கு அந்த பள்ளி மீது இருந்த நம்பிக்கை போயே போயுந்தி. நம்ம பையனே பஷ்ட் ரேங் வந்தா அதல்லாம் ஒரு பள்ளிக்கூடமான்னு பள்ளி மீது கோவிச்சுகிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்து பழைய பள்ளியிலேயே சேர்த்துட்டாங்க. மீண்டும் தொல்காப்பியன் என்பது தோலாய் ஆனது... அவ்வ்வ்


பின்னர் விபரம் தெரிந்த காலத்தில் தான் அந்த பெயர் எத்தனை தொன்மையான அழகிய தமிழ் பெயர் என்பது புரிந்தது. அது போலவே சமாதானம், சமரசம், சமதர்மம் என உயரிய நோக்கில் தன் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டிய அந்த அப்பனை நினைத்து மானசீகமாய் வணங்கினேன்.


பின்னர் என் இருபத்தி எட்டாம் வயதிலெல்லாம் நான் ஃபாரின் ரிட்டர்ன் ஆகி கண்ணாலம் காட்சின்னு ஆன பின்னர் ஒரு நாள் நான் லீவுக்கு வந்திருந்த போது ஒரு பத்திரிக்கை வந்திருந்தது. ஆமாம்! என் பால்ய காலத்தில் பழகிய அந்த சமாதானத்துக்கு திருமணம். எடுத்து பிரித்து பார்த்தேன். மணமகள் பெயரை பார்த்தததும் குபீர் என சிரித்து விட்டேன். நான் ஏற்கனவே என் மனவியிடம் இந்த "சமாதானம்" என்னும் பெயரை கேலி செய்த கதையை சொல்லி இனி அந்த பெயரை கேட்டால் சிரிக்க மாட்டேன் என சொல்லி இருந்தேன். ஆனாலும் சிரித்து விட்டேன். என் மனைவி அந்த அழைப்பிதழை வாங்கி பார்த்து விட்டு என்னை முறைத்த போது நான் அந்த "சமாதானம்" பெயருக்காக சிரிக்கவில்லை என சொல்லவில்லை. 


இரு நாட்கள் பின்னர் அந்த திருமணத்துக்கு போனேன். எல்லோரும் வாழ்த்திய பின்னர் நான் மேடைக்கு சென்று "சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என வாழ்த்தினேன். அவனுக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது. "போடா தோலு" என்றான். சிரித்து கொண்டே வந்து விட்டேன்.

அந்த மணமகள் பெயர்  "சாந்தி":-))

May 8, 2013

"முதல் மரியாதை! " - கொஞ்சம் தாமதமான விமர்சனம்!



தமிழகத்தின் தென்மாவட்டத்தில்   இருக்கும் ஒரு ஊர்ல ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருத்தர் இருந்தாரு. அவரு பெரும் பணக்காரரு. அவருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு பொண்ணு. பேரு பொன்னத்தா.  அந்த பொண்ணு தன் பருவ வயசை அடைஞ்சதும் ஒரு ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், தொப்புள் அளவுக்கான  டைட் சட்டைல்லாம் போட்டுக்காத அந்த காலத்தில் இருந்த மாடர்ன் டிரஸ்ஸான பட்டாப்பட்டி டவுசர், நலுமுழம் வேட்டி, பெரிய மீசை சகிதம் இருந்த ஒரு வேத்து சாதி பையனை லவ்ஸ் பண்ணுது. ஒரு கட்டத்திலே தப்பு தண்டா நடந்து வவுத்துல புள்ளய வாங்கிடுச்சு. இது தெரிஞ்ச அந்த லவ்பாய் அதை கூட்டிகிட்டு பக்கத்து ஊர்ல இருக்கும் ஒரு வைத்தியர் வூட்டுக்கு அழைச்சுகிட்டு போறாரு. அந்த வைத்தியனோ அந்த பொன்னாத்தாவின் அப்பனுக்கு வத்தி வச்சுடறார். இது தெரிஞ்ச அந்த லவ்ஸ்பாய் பக்கத்தில் கிடந்த ஒரு அருவாளை எடுத்து வைத்தியரை  ஒரே போடா போட்டுட்டு ஜெயிலுக்கு போய்டுறான்.


"வேத்து சாதிலயா லவ்ஸ் அடிச்சு வவுத்துல புள்ளய வாங்கிட்டு வந்துட்ட சிறுக்கி மொவளே, இப்ப ஒன்னய என்ன பண்றேன் பாரு"ன்னு அந்த ஆதிக்க சாதி அய்யா குதி குதின்னு குதிச்சுட்டு தன் சாதில மாப்ள பார்க்குறாரு. இந்த லெவல்ல வயித்து புள்ள வளர ஆரம்பிச்சு வயிறு காட்டி கொடுக்குது பொன்னாத்தாவுக்கு. அந்த ஆதிக்க சாதில வயித்த தள்ளிகிட்டு போனா மாப்ள புடிக்க முடியுமா? யோசிச்சாரு அந்த அய்யா. ஒடனே தன் அக்கா மொவன் ஒருத்தன் வெட்டியா ஒரு துறுபிடிச்ச தொரட்டு குச்சி வச்சுகிட்டு 20 வெள்ளாடு மேய்ச்சிகிட்டு இருந்தான். அவனை கூட்டி வந்து "மாப்ள மாப்ள, எனக்கு பொன்னாத்தாவோட காதலை விட என் சாதி மேல இருக்கும் காதல் தான் அதிகம். அவளை வேத்து சாதில கட்டி கொடுத்தா என் மானம் மருவாதி எல்லாம் புட்டுகிட்டு போய்டும். நாள பின்னக்கி நான் மந்தைல ஒக்காந்து சொம்பிலே தண்ணி குடிச்சு கிட்டு ஜட்ஜ்மெண்ட் எல்லாம் சொல்ல முடியாம போய்டும். நீ என் பொன்னாத்தாவ கட்டிக்க. அதுக்கு பர்த்தியா நான் என் சொத்து பத்து எல்லாம் ஒன் பேருக்கு எழுதி வச்சிடுறேன். அவ வயித்துல வளர்ர புள்ளய ஒம் புள்ளன்னு இனிசியல் வச்சிக்க மாப்ள, அத்தோட என் ஜட்ஜ் போஸ்டை எனக்கு பொறவு நீயே வச்சிக்க. ஆக மொத்தம் ஒரு 'மிச்சர்' மாப்ளயா இரு மாப்ள"ன்னு சொல்ல அந்த டீலிங் பிடிச்சு இருந்துச்சு அந்த மாப்ளக்கி. இந்த டீலிங் பேசுனப்ப செங்கோடன்னு ஒரு செருப்பு தைக்கும் ஆளு பார்த்துடறான். இந்த மிச்சர் மாப்ள தன்னோட மாமன் தன் கால்ல மேல போட்டிருந்த செருப்பு படும் படி கால்ல விழுந்து கேட்டதால இனி இந்த மானம்கெட்ட செருப்பை போட மேட்டேண்டா போ"ன்னு வீரசபதம் எடுக்க செருப்பு தைக்கும் செங்கோடனுக்கு ஒரு கஸ்டமர் போயிட்டாரேன்னு கெதக்குன்னு ஆகிப்போச்சுது. அப்பப்ப அதனால செங்கோடன் வந்து "அய்யா ஒங்க காலுக்கு நான் ஒரு செருப்பு தைச்சு போடனும்" ன்னு சொல்லும் போது அந்த மிச்சர் மாப்ளக்கி பயத்துல ஒன்னுக்கு வந்துடும். "இந்த ஆளுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுதே"ன்னு பயந்து வரும்.


இப்படியா அந்த மிச்சர் மாப்ள தன் மாமா கிட்டே "நான் ஒன் சொத்து பத்தும், ஒன் பொண்ணு பொன்னாத்தாவையும் வச்சுக்கறேன். நீ ஜட்சு போஸ்ட்டை வச்சுக்கோ" ன்னு மானத்தோட வாழ்ந்து கிட்டு இருக்கும்போது அந்த மாமாவும் மண்டைய போட அந்த ஜட்ஜ் போஸ்டும் மிச்சர் மாப்ளக்கி வந்துடுச்சு. இது நடுவே அந்த மிச்சருக்கு ஒரு ஒன்னுவிட்ட அக்கா மொவன் ...அவன் ஒரு ரெண்டுங்கெட்டான். ஆடு மேய்க்கத்தான் லாயக்கு. அவனையும் தன் கூடவே வளர்த்து வராரு மிச்சர் மாப்ள.


ஆனா பொன்னாத்தா இருக்காளே பொன்னாத்தா... அவளுக்கு சம காண்டு இந்த மிச்சர் மாப்ள மேல. தன்னோட காதலே இந்த ஆளால கெட்டுப்போச்சுதேன்னு நினைச்சாளோ, இல்லாட்டி ஒருத்தன் கூட படுத்துட்டு இன்னுமொருத்தன் கூட வாழனுமான்னு நினைச்சாளான்னு தெர்ல. ஆனா மிச்சர் மாப்ள கூட படுக்குறதில்லை. மனுசனா கூட மதிக்கிறது இல்லை. தான் காதலிச்ச மவராசனை மனசிலே வச்சிகிட்டு ஒரு துறவி மேரி வாழ்ந்து கிட்டு கிடக்கா.


மிச்சர் மாப்ள, தான் இனிசியல் கொடுத்த பொன்னாத்தாவுக்கு பொறந்த அந்த பொண்ணுக்கு ஏனோ தானோன்னு ஒரு கேடுகெட்டவனுக்கு தன் சாதிலயே பார்த்து கட்டி கொடுக்குறாரு. தனக்கு பொறந்த பொண்ணா இருந்தா இப்படி நடந்துப்பாரா மிச்சர் மாப்ள. இதையும் நாம கவனிக்கனும். கட்டிக்கொடுத்தவன் ஒரு களவாணிப்பயபுள்ள. இந்த நிலமையிலே அந்த ஊருக்கு வேற சாதிய சேந்த ஒரு நாடோடி பொண்ணு தன் அப்பனோட பரிசல் ஓட்ட வருது. இந்த மிச்சர் மாப்ளக்கு 50+ வயசு ஆனாலும் கன்னிகழியாம கெடக்குல்ல... இதும் அந்த பொண்ணை... அதுக்கு பேர் குயிலு... அதை லைட்டா சீண்டி கிட்டு இருக்காரு. ஊர்ல சும்மா இருப்பானுங்கலா??? கண்ணு மூக்கு வச்சு பேச ஆரம்பிச்சானுங்க.


அங்க விட்டுட்டு இங்க வாங்க... அந்த மிச்சர் மாப்ளக்கி ஒரு மருமொவன் தெண்டம் இருந்தானே ஆடு மேய்க்கும் அறிவாளி...அவனுக்கு லவ்ஸ் வருது. யார் கூட வேத்து சாதி செருப்பு தைக்கும் செங்கோடன் மொவ கூட. மிச்சர் மாப்ளக்கி என்னா செய்றதுன்னு தெரியலை. கட்டி கொடுக்காட்டா செங்கோடன் சொம்மா இருக்க மாட்டான். மாப்ள எப்படி மிச்சர் மாப்ள ஆனாரு என்பதை ஊருக்குள்ள சொல்லிடுவான்னு பயந்து போன மிச்சர் ... ஆடு மேய்ச்ச மாரியும் ஆச்சுது, அண்ணனுக்கு பொண்ணு பார்த்தது மாரியும் ஆச்சுது"ன்னு கணக்கா "எனக்கு, வேத்து சாதில என் மருமொவனுக்கு கண்ணாலம் கட்ட இஷ்டம் தான். நான் அந்த சாதிக்கு பாதுகாவலன்" ரேஞ்சில டயலாக்கை வுட்டுட்டு கண்ணாலம் கட்டி வைக்கிறரு. இது பொன்னாத்தாவுக்கு புடிக்குமா? "அட நாறப்பயலே,இதைத்தானடா நானும் அந்த காலத்திலே சொன்னேன்,  நானு அந்த காலத்திலேவேத்து சாதி  ஒருத்தன் கிட்ட லவ்ஸ்ம் பண்ணி, படுத்தும் எந்திரிச்சு ஒரு புள்ளய வவுத்துல வாங்கிட்டு வந்த பொறவும் கூட சாதி..கூ ன்னு பேசிட்டு இப்ப ஒன் மருமொவனுக்கு மட்டும் டயலாக்கவுட்டுட்டு திரியிறயே ன்னு பொன்னாத்தாவுக்கு செம கடுப்பாகிடுச்சு.


பொன்னத்தாவின் மருமகப்பய தான் ஒரு களவாணிப்பயன்னு ஏற்கனவே சொன்னோமில்ல. அவன் அந்த செங்கோடன் மொவளை கொண்டு போட்டு காதுல மூக்குல இருந்ததை களவாண்டு போலீஸ்ல மாட்டிகிறான். அது கெடக்கட்டும்... அது இப்போ முக்கியமில்லே...


இந்த நெலமையிலே தான் மிச்சர் மாப்ள, பரிசல்கார பொண்ணு கூட கும்மாளம் அடிக்கும் சேதி வந்து பொன்னாத்தாவோட தண்டட்டி போட்ட காதிலே விழுந்துச்சு. வுடுமா பொன்னாத்தா? தன் சாதி சனம் எல்லாத்தையும் கூட்டி கெடா வெட்டி சாராயம் குடுத்து மிச்சர் மாப்ளயோட அட்டகாசத்தை கேக்க சொல்லுது. அவனுங்களும் அந்த பரிசல்கார குயிலு குடிசைய கொளுத்துறேன்னு போக அதுக்கு மின்னாடியே மிச்சர் மாப்ள அந்த பொண்ணை நான் வச்சிருக்கேன் ன்னு பானையை போட்டு ஒடைக்கிறமாரி சொல்லிட்டு குடிசைக்கு காவலுக்கு போவசொல்ல... அங்கிட்டு அந்த குயிலு ஊரை விட்டே போலாம் போ.. இந்த மிச்சரை நம்பி என்ன பிரயோசனம்னு கெளம்புது. பரிசலை ஓட்ட ரெடியா இருக்கும் போது தான் பொன்னாத்தாவின் பழைய லவ்வர் செயில் வாழ்க்கை முடிஞ்சு பொன்னாத்தாவையும் தனக்கு பொறந்த பொண்ணையும் பார்க்க வரான்.


வர்ரவன் பரிசல்ல வரும் போது குயிலு கிட்டே நடந்த பழைய கதை எல்லாம் சொல்றான். இந்த குயிலுக்கு தேவையில்லாத வேலையை பார்த்துபுடுது அந்த புள்ள. அந்த அப்பாவி காதலனை ஒரே போடா போட்டு தள்ளிட்டு செயிலுக்கு போவுது. பின்ன என்ன ஆச்சுது? மிச்சர் மாப்ள என்ன ஆனாரு? என்பதுல்லாம் வெள்ளி திரையிலே பார்த்துகுங்க.


 கதாநாயகனாக "காதலன்" வேடத்தில் சத்தியராஜும், கதாநாயகி பொன்னாத்தாவாக "வடிவுக்கரசி"யும், மிச்சர் மாப்ளயாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், பரிசல் கார குயிலாக ராதாவும் நடிச்சு இருக்காங்க.


கதாநாயகனாக சத்தியராஜ் இருப்பினும் அவரை விட மிச்சர் மாப்ள கேரக்டரில் நடிச்ச நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு தான் எல்லார் நடிப்பை விட தூள். அது போல பரிசல்கார குயிலும் தன் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கின்றார். பொன்னாத்தாவாக வரும் வடிவுக்கரசி அய்யா சிவாஜி கணேசனுக்கு போட்டி போட்டு பிய்த்து உதறி இருக்கார். ஆக மொத்தம் சாதி வெறி ஏத்தும் சூப்பர் படம் இது. கண்டிப்பாக தென் மாவட்டங்களில் சூப்பராக ஓடும். அனால் ஒட்டப்பிடாரம் போன்ற ஊர்களில் படத்தை வெளியிடாமல் இருந்தால் முதல்வர் சட்டம் ஒழுங்கை காப்பத்தலாம். இந்த படத்தை ஒரு சில வசனங்கள் மாற்றி ஆதிக்க சாதி பெயர்களை கொஞ்சம் லைட்டா பட்டி டிங்கரிங் பார்த்து வட மாவட்டங்களில் வெளியிடலாம். ஒரே தமிழ் படத்தை தமிழகத்தின் வேறு வேறு பகுதிகளில் ரீமேக் செய்த முதல் படம் என்னும் பெருமையை பெறலாம். அப்படி வெளியிடும் போது மரக்காணம் போன்ற ஊர்களில் மறக்காம தடை செஞ்சுடனும்.


ஆக மொத்தம் படம் இப்போதைய சூழலில் வெளிவந்தா அது பல அப்பாவிகளுக்கு "இறுதி மரியாதை" ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!


குறிப்பு 1: இது சத்தியமாக ஒரு காமடிப்பதிவு மட்டுமே. நானும் ஒரு தீவிர சிவாஜி ரசிகர் என்பதை கூறிக்கொள்கிறேன். அதில் பெருமையும் கொள்கிறேன். கோவம் வந்தால் தனி மடலில் திட்டவும். பொதுவெளியில் வேண்டாம். அஜக்........ ஒஜக்...........நஜக்.......... அஜக்....ஒஜக்.... நஜக்..... அஜக். ஒஜக்.நஜக். அஜக் ஒஜக் நஜக் அஜகொசநஜக்....... போதும்... நெக்ஸ்ட் ரெஸ்ட்....


குறிப்பு 2: இப்படி கேணைத்தனமாக மாத்தி யோசிப்பதுக்கு... ஒண்ணுமில்லை... வேண்டம் வுட்டுடுங்க..

April 15, 2013

ஈழப் போராட்டம் - "லயோலா மாணவர்கள்" முதல் "திமுக மாணவரணி" வரை !!!

லயோலா கல்லூரி - சென்னை

"லயோலா கல்லூரி" - தமிழகத்தில் லயோலா கல்லூரியை அறிந்திராதவர்கள் அனேகமாக  படிப்பு வாசனை கிஞ்சித்தும் இல்லாதவர்கள் எனலாம். "அண்ணாமலை பல்கலை கழகம்" எப்படி மாணவர்களை அங்கிருந்து வெளியே வரும் போது உலகத்தில் எந்த நிலையிலும் "சர்வைவ்" செய்யவும், தன்னை அந்தந்த  சூழலுக்கு ஏற்ப பொருத்திக்கொள்ளவும் பாடம் கற்றுக்கொடுக்கின்றதோ அதே போல லயோலாவும் தன் மாணவர்களை பாடத்தை மட்டும் படித்து விட்டு தேர்வில் விடைத்தாளில் பேனா வழியே வாந்தி எடுக்க வைக்கும் வேலையை செய்வதில்லை. மாணவர்களை உலகத்தை பார்க்க விடும் பேராசிரியர்கள் அங்கே உண்டு. சமூகத்தின் மீதான அக்கரை செலுத்த மாணவர்களுக்கு பயிற்சி அங்கே உண்டு. தன்னை ஆளும் அரசை, அந்த அரசை நடத்தும் அரசியல்வாதிகளை, அந்த அரசியலை இவர்கள் சில நடுநிலை நாயகங்கள் போல "சாக்கடை" என சொல்வதில்லை. அசுத்தமாக இருப்பின் இறங்கி சுத்தம் செய்யவும் தவறுவதில்லை. தேர்தல் நேரத்தில் லயோலா கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் இணைந்து மாதிரி வாக்கெடுப்பு நடத்தி களம் காணும் காளையர்கள் இவர்கள். தூர நின்று அரசியலை பார்த்து "ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்" என போவதில்லை இவர்கள்.கிட்டே வந்து பழத்தை பறித்து பார்த்து மக்களிடம் இது நல்ல பழம், இது சொத்தை பழம் என தரம் பிரித்து காட்டும் வல்லமை கொண்டவர்கள். இப்படித்தான் அங்கே பாடம் சொல்லி கொடுக்கப்படுகின்றது.  அதனால் தான் லயோலா பிரசவித்த மாணவர்கள் இன்று உலகில் பல துறைகளில் புடம் போட்ட தங்கமாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். இந்த லயோலா கல்லூரி அப்படியே இருக்கட்டும். நாம் இப்போது வேறு இடத்துக்கு போகலாம். .......

சென்ற வருடம் இதே தினம் கலைஞர் மீண்டும் டெஸோ இயக்கம் உயிரூட்டப்படும் என அறிவித்தார். அதற்கு முன்பாக ஆரம்பித்த டெஸோ இயக்கம் என்ன ஆனது? என கேலி பேசினர். உண்மை தான். இன்றைக்கு கேலி பேசுபவர்கள் பலர் அப்போது பிறந்து இருக்கவில்லை. ஆமாம்.. அது தான் உண்மை. இலங்கையில்  ஈழப்போரட்டம் உச்சநிலையில் இருந்த போது போராட்ட குழுக்கள் இரு பிரிவாக அதாவது அகிம்சை முறை மற்றும் ஆயுத போராட்ட முறை என இரு பிரிவுகளாகவும் அதிலும் ஆயுத பிரிவில் பல குழுக்களாகவும் இப்படியாக ...ஆனால் எல்லோருக்குமே தனி தமிழ் ஈழம் என்னும் ஒரே இலக்கு மட்டும் இருந்தது. அது போலவே இங்கே தாய் தமிழகத்தில் இருக்கும் அனைவருக்குமே "தனித்தமிழ் ஈழம்" என்பதில் மாற்று கருத்து இல்லை. அனால் அரசியல் ரீதியாக இங்கு செயல்பட்ட கட்சிகள் ஓவ்வொன்றின் பாலும் ஒவ்வொறு குழுக்களும் தங்களை கட்டிப்போட்டுக்கொண்டு இருந்தன. குறிப்பாக எல் டி டி ஏ அமைப்பினர் எம் ஜி அரின் அதிமுகவுடன் ஒரு பினைப்பை கொண்டு இருந்தனர். அது போல டெலோ அமைப்பின் சீறி சபாரத்தினம் கலைஞர் மீதும் திமுக மீதும் ஒரு இனைப்பை கொண்டு செயல்பட்டு கொண்டு இருந்தனர். அனால் எல்லா குழுக்களுமே மத்தியில் ஆட்சி செய்த இந்திராவின் தலைமை மீது நம்பிக்கை கொண்டும், இந்திய ராணுவம் மூலம் பயிற்சியும் கூட பெற்று வந்த நிலையில் தான்  1985ம் ஆண்டு டெஸோ அமைப்பு அதாவது Tamil Elam Suppoorters Organization என்னும் அமைப்பினை கலைஞர் அவர்கள் தொடங்கினார். அது சாதித்தவை அதிகம். அது பற்றி இப்போது இங்கே வேண்டாம்.

அனால் ஒரு கட்டத்தில் ஆயுத போரட்ட குழுக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி அழித்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதிலே டெலோ அமைப்பின் சீறிசபா ரத்தினம் கொல்லப்பட்டார். அதன் பின்னர் இங்கு தமிழகத்தில் இருந்து செயல்பட்ட டெஸோ அமைப்பு கலைக்கப்பட்டது. இது தான் வரலாறு!

ஆனால் 2009 மே மாதத்தின் பின்னர் எஞ்சி இருந்த விடுதலை போராட்ட குழுவான விடுதலைப்புலிகள் தலைமையும் இல்லை என ஆன பின்னர் தமிழீழத்தில்அடுத்த நிலை என்ன  என்ற கேள்வி எழுத்த போது அதாவது தமிழீழமா? அல்லது எஞ்சி இருக்கும் தமிழர்கள் நலவாழ்வா? தமிழீழம் எனில் அதை அடையும் வழி மீண்டும் ஆயுத போராட்டமா? அதற்கான சாத்தியம் உண்டா இப்போதைக்கு? இல்லை...அகிம்சா வழியா? அப்படி எனில் எப்படி போராடலாம் என்பதை எல்லாம் சிந்தித்து பார்த்து தான் மீண்டும் டெஸோ அமைப்பு சென்ற வருடம் ஏப்ரல் மாதம் (2012) மீண்டும் உயிரூட்டப்பட்டது.

அந்த டெஸோ அமைப்பு ஏற்படும் முன்னரே 2009க்கு பின்னர் தமிழகத்தில் சீமான், நெடுமாறன், வைக்கோ போன்றோர் சிறு சிறு குழுக்களை வைத்து கொண்டு ஈழம் பற்றி மட்டும் பேசிக்கொண்டு ....கவனிக்க பேசிக்கொண்டு மட்டும் இருந்தனரே தவிர்த்து அவர்கள் ஈழத்தை ஒரு போர்வையாக மட்டுமே  பயன்படுத்திக்கொண்டு தீவிர கலைஞர் எதிர்ப்பு வேலையை மட்டும் செய்து வந்தனர் என்பதே உண்மை. அவர்களால் இலங்கை  அரசுக்கோ அல்லது ராஜபக்ஷேவுக்கோ எவ்வித சின்ன சிராய்ப்பும் இல்லை என்பதால் ராஜபக்ஷே கும்பல்கள் இவர்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இவர்களும் அது பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தங்கள் அரசியலை இங்கு செய்து வந்தனர். இந்த நிலையில் தான் திமுகவின் தலைவர் கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் மீண்டும் டெஸோ வை உயிரூட்டினார். உடனே கோத்தபய போன்றவர்கள் துள்ளி குதித்தனர் எனில் இலங்கையின் நாசகார கும்பல், சீமான், நெடுமாறன், வைக்கோ போன்ற பபூன்கள் பற்றி கவலைப்பாடாதவர்கள் கருணநிதி அவர்களின் தலைமையில் உண்டான டெஸோ அமைப்பு பற்றி கவலைப்பட்டனர் என்பின் அதில் இருக்கும் உட்பொருளை நடுநிலையாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

டெஸோ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதத்திலேயே 12, ஆகஸ்ட் 2012 அன்று அதன் முதல் மாநாட்டை கூட்டி உலக தலைவர்களை அழைத்து வந்து ஈழப்பிரச்சனையை தீவிரமாக்கியது. அடுத்தடுத்து டெஸோ வின் செயல்பாடுகள் தொடர்ந்தன. டெஸோ மாநாட்டு தீர்மானங்கள் திமுகவின் பொருளாளர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களால் ஐநா சபைக்கு  கொண்டு சேர்ப்பிக்கப்பட்டது. திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று மூன்று பேராக தனித்தனி குழுக்களாக அமைத்துக்கொண்டு மாநாட்டு தீர்மானங்கள் மற்றும் ஜெனீவாவில் கொண்டு வரப்படும் அமரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு கோருதல் என அனைத்து வெளிநாட்டு தூதர்களுக்கும் நேரிடையாக சந்தித்து செயல்பட்டனர் டெஸோ சார்பாக.

இங்கே ஒரு விஷயம் நன்கு கவனிக்க வேண்டும். டெஸோ என்பது திமுகவின் இயக்கம் இல்லை. டெஸோவில் திமுகவும் உண்டு அத்தனையே. தனிப்பட்ட திமுகவுக்கு போராட பல விஷயங்கள் இங்கே உண்டு தமிழகத்தில். முக்கியமாக தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை காவிரி நீர் பிரச்சனை... குறுவை சுத்தமாய் அத்து போய் விட்டது. சம்பாவும் அப்படியே நாசமாய் போய்விட்டது. விவசாய கூலித்தொழிலாளிகள் பட்டினி சாவின் விளிம்பில் இருக்கின்றனர். விவசாயிகள் தற்கொலை தொடர்கின்றது. பால் கட்டணம், பஸ் கட்டணம், மின்சார கட்டணம் , மக்களின் வழ்வாதார பிரச்சனையான மின்சாரம் 18 மணி நேரம் இல்லை. இட ஒதுக்கீடு மறைமுகமாக அழிக்கப்பட்டு வருகின்றது. சட்டம் ஒழுங்கு சுத்தமாய்  பாதாளம் நோக்கி பயணித்து கொண்டு இருக்கின்றது... இதற்காக போராடவே திமுகவுக்கு முழுநேரம் போதவில்லை. இதனிடையே ஈழப்பிரச்சனைக்கு போராட திமுக தன் கட்சியை மட்டுமே என இல்லாமல் வேறு கட்சிகளையும் சேர்த்து தான் டெஸோ அமைப்பினை உண்டாக்கி போராடி வருகின்றது. ஆனால் உள்நாட்டு பிரச்சனை எதிலும் கண்டு கொள்ளாத சீமான், நெடுமாறன் போன்ற சிறிய குழுக்கள் தங்கள் செய்யும் பிழைப்புவாத அரசியலான ஈழம் என்னும் போராட்டத்தில் பங்கு போட திமுகவும் வந்து விட்டதாக நினைத்து கருணநிதி மேல் பாய்ந்து பிராண்ட ஆரம்பித்தனர். ஈழ பிரச்சனையை அவர்கள் அரசியலாக பிழைப்பு நடத்துவதே அவர்களின் பாய்ச்சலுக்கு காரணம். டெஸோ வுக்கு அது பிழைப்பு இல்லை. அவர்களுக்கு வருவது போல டெசோ அமைப்புக்கு வெளிநாட்டு பணம் வருவதில்லை. இவர்கள் கைக்காசு போட்டு தான் போராட வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் தான் பிரபாகரனின் மகன் 12 வயது பாலகன் பாலசந்திரன் மரணித்த புகைப்படம் வெளியானது. காண்போர் நெஞ்சை கலங்க வைக்கும் அந்த புகைப்படம் பிரபாகாரன் செய்த புரட்சியை விட அதிகப்படியன புரட்சியை மக்களிடம் உண்டு பண்ணியது. என்ன இருந்தாலும் புலி பெற்ற புலிக்குட்டி அல்லவா அது! அதனால் தான் மரணித்த பின்னும் அந்த பிஞ்சு புரட்சி வெடிக்க வைத்தது எனலாம்!

தமிழகமே கொந்தளித்தது. நடுநிலைவாதிகள், மாணவர்கள், பெண்கள் என எல்லா பிரிவினர்களும் பாலசந்திரன் புகைப்படம் பார்த்து கொதித்தனர்.மார்ச் 5ம் தேதி 2013ல்  டெசோ இயக்கம் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு 12000 பேர் கைதாகினர். நாகை, ரமேஸ்வரம் என டெஸோ அமைப்பு போராட்டங்களை நடத்திக்கொண்டே வந்தது. பாராளுமன்றத்தில் பாலசந்திரன்  மரணத்தை திமுக எம் பி திருச்சி சிவா அவர்கள் "எங்கள் உணர்வை கொட்ட விடுங்கள். அடக்கி வைத்தால் வெடித்து விடும் அபாயமும் விபரீதம் உள்ளது. எனவே இந்த உணர்வை இந்த நாடாளுமன்றத்தில் பதியுங்கள். போரில் புறமுதுகு காட்டி ஓடும் கோழை அல்ல வீரத் தமிழன். பாலச் சந்திரனை துளைத்த குண்டுகள் அவன் முதுகில் பாயவில்லை. மாறாக விழுப்புண்களை, வீரத் தழும்புகளை, துப்பாக்கி ரவைகளை நெஞ்சில் சுமந்தான் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன். இது தமிழர்களுக்கே பெருமை . புறநானூறு கூறும் வீரானாகவே சிறுவன் மடிந்தான். பாலச்சந்திரன் வீரத் தமிழர்களின் அடையாளம் " என முழங்கினார். டெல்லியில் ஒரு கருத்தரங்கம் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அதன் பின்னர் டெஸோ சார்பாக தமிழகம் முழுமைக்கும் போராட்டம் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 54000 பேர் சிறை சென்றனர். ஒரே நாளில் 54,000 பேர் சிறை சென்றமை குறித்து இந்தியாவின் பார்வை டெஸோ மீதும் ஈழம் மீதும் படிந்தன. பின்னர் திமுக தன் மத்திய அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கி கொண்டு வெளியே வந்து விட்டது.

இப்போது இக்கட்டுரையின் முதல் பத்தியை படித்து விட்டு மீண்டும் இங்கே வாருங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த லயோலா கல்லூரி மாணவர்கள் மார்ச் 8ம் தேதி உண்ணவிரத போராட்டம்  தொடங்கினர். சீமான், நெடுமாறன் கும்பல்கள் முதலில் அவர்களை சீண்டவில்லை. பொதுவாக சீமான், நெடுமாறன், வைக்கோ போன்றவர்களின் கும்பல்கள் தங்கள் மட்டுமே ஈழ போராட்ட காப்புரிமை பெற்றவார்களாக கருதிக்கொண்டு டெஸோ போன்ற அமைப்புகள் ஈழத்துக்காக ஏதாவாது  போராட்டம் நடத்தினால் தங்கள் வியாபாரத்தில், அடிமடியில் கைவைத்தது போல அலறித்துடிப்பர். ஆனால் லயோலா கல்லூரி மாணவர்கள்  சாகும் வரை உண்ணாவிரதம் என அறிவித்து பந்தலில் அமர்ந்த போது அவர்களை எதிர்க்க முடியாமல் தவித்து போயினர்.  சரி இவர்கள் ஒரு நாள், இரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து விட்டு போய்விடுவர் தங்கள் ஈழ வியாபாரத்துக்கு பின்னடைவு வராது என நினைத்தவர்களுக்கு பேரதிர்வாக லயோலா மாணவர்கள் பற்ற வைத்த போரட்ட தீ தமிழகம் முழுமைக்கும் பரவ தொடங்கியது.

அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் மாணவர்களை சென்று சந்தித்து வாழ்த்தி விட்டு வந்தனர். இதிலே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தங்கபாலு அவர்கள் சென்று சந்தித்து வந்தது தான் நகைச்சுவை நிகழ்ச்சி. மற்றபடி அந்த தங்கபாலு சந்திப்பை தவிர்த்து பார்ப்பின் மற்ற எல்லா விஷயமும் ஒரு சீராக போய்க்கொண்டு இருந்தது.ஒட்டு மொத்த தமிழக மாணவர்களும் உண்ணாவிரதம் மேற்கொள்ள "மாணவர் போராட்டம்" என்னும் கப்பல் ஒரு தெளிவான திசை நோக்கி நன்றாக பயணிக்க தொடங்கியது எனலாம்.

அப்படி சீராக போன பயணத்தில் தடை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 11ம் தேதி நள்ளிரவில் தமிழக அரசின் காவல்துறை புகுந்து மாணவர்களை கைது செய்தும் உண்ணாவிரத பந்தலை மூடி பூட்டு போட்டும் கலைத்தது. முத்துக்குமார் தீக்குளித்து இறந்த போது சவ ஊர்வலம் எடுத்து போகவும் அப்படி ஊர்வலம் போகும் பாதை நெடுக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களை இதே சீமான், வைக்கோ, நெடுமாறன் வாகையறாக்கள் கொச்சையாக வசை பாடிக்கொண்டே சென்றதையும் கூட பொருட்படுத்தாமல் பின்னர் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததை வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து கருணாநிதி போரட்டத்தை நசுக்கி விட்டார். விடுமுறை விட்டால் மாணவர்கள் சினிமாவுக்கு போய்விடுவர், தங்கள் வீட்டுக்குள் முடங்கி விடுவர். அதனால் ஈழமே கிடைக்காமல் போய்விடும், அதற்கு காரணம் கருணாநிதி தான் என்றனர். ஆனால் இரவோடு இரவாக மாணவர்களை கைது செய்து பந்தலை பூட்டி விட்ட ஜெயலலிதாவை இந்த வாய்ச்சொல் வீரர்கள் ஒரு குண்டுமணி அளவுக்கேனும் கூட கண்டிக்கவில்லை. மாறாக "காவல்துறை"யை கண்டித்து வைக்கோ தன் வீரத்தை காட்டி விட்டு அமைதியடைந்தார்.

உடனே தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம் வெடித்தது. தங்கள் அரசியல் வியாபரம் படுத்து விடும் அபாயத்தை உணர்ந்த சீமான், நெடுமாறன், வைக்கோ வகையறாக்கள் அந்த மாணவர்களிடம் சென்று புகைப்படம் எடுத்து சுவரொட்டி அடித்து தங்கள் வழிகாட்டுதல் பேரில் மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டு இருப்பதாக காட்டிக்கொண்டனர். மாணவர்கள் போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் போது அது பெரும் வரவேற்பை பெற்ற போது அதன் பயன் தங்கள் "அம்மா"வுக்கும் கிடைக்கட்டுமே என்கிற இன உணர்வோடு ஜூனியர் விகடன் அம்மையாரிடம்  ஆலோசிக்காமலேயே "மாணவர் போராட்டமே அம்மையார் ஆசியோடு தான் நடக்கின்றது" என பொய் மூட்டையை அவிழ்த்து விட ஜெயலலிதாவோ கொதித்து போனார். ஜெயா அம்மையாரிடம் இருக்கும் ஒரு குணம் வித்யாசமானது. தான் எதிரி என நினைத்து விட்டால் அந்த எதிரியை சாகும் வரை அடித்து துவைக்கும் ஆங்கார குணம். ஜெயாவுக்கோ புலிகள், ஈழம் என்பது எல்லாம் கொஞ்சமும் பிடிக்காது. அப்படி பிடிக்காத அந்த ஈழத்துக்காக போராடும் மாணவார்களையே காவல்துறையை வைத்து அடித்து கைது செய்து கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர் போராட்டமே தான் சொல்லித்தான் நடப்பதாக அப்படி சொன்னால் அதனால் ஓட்டு விழும் என நினைத்து தன் இன ப்பாசம் காண்பித்த ஜூவி மீதே அவதூறு வழக்கை தொடர்ந்து தன் ஈழ எதிர்ப்பை பதிவு செய்தார்.

இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் வீரமணி அவார்கள் "மாணவர் போராட்டம் என்னும் கப்பல் அழகாக இலக்கை நோக்கி பயணம் செய்கின்றது. கப்பலை இலக்கை நோக்கி செலுத்தும் சுக்கான் "கண்டவர்கள் கையில்" போகமல் இருப்பின் வெற்றி நிச்சயம்" என அறிவித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மாணவர்களில் சிலர் தங்களுக்கு ஆலோசகர் என்னும் பெயரில் நெடுமாறனை அழைத்து  சுக்கானை நெடுமாறன் கைக்கு கொண்டு சேர்த்தனர். 

அதன் பின்னர் நடந்தது எல்லாமே தவறுகள் தான். என்ன இலக்கு என மாணவர்கள் குழம்பி போயினர். சிலர் தனி ஈழம் என்றனர். சிலர் ராஜபக்ஷேவை தூக்கிலிட வேண்டும் என்றனர், சிலர் சம உரிமை என்றனர். சிலர் மீதி இருக்கும் தமிழர்கள் மறுவாழ்வு தான் இப்போதைக்கு முக்கியம் என்றனர். இப்படியாக  மாணவர் போரட்ட சக்தி விழலுக்கு இறைத்த நீராக வீணாக போனது.

தவிர அதுவரை தங்களை வருத்தி கொண்டு உண்ணவிரதம் இருந்த மாணவர்கள் திருச்சியில் காங்கிரசார் நடத்திய உள்ளரங்கு கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனர்களை அடித்தும் உடைத்தும் என அராஜகம் செய்து பொது மக்களிடம் அசிங்கப்பட்டனர். மாணவர்களை அந்த ரவுடியிசத்துக்கு கொண்டு தள்ளிய ஆலோசகர் யார்???? இப்போது புரிகின்றதா? நெடுமாறன் கும்பல்கள் ஒரு சில மாணவர்களை வைத்துக்கொண்டு அவர்களின் உண்மையான போரட்டத்தை திசை திருப்பி தங்கள் அரசியல் வாழ்வுக்கும், வெளிநாட்டு பணத்துக்கும் ஆசைப்பட்டு மாணவர்கள் அது வரை  போராடி கொண்டு வந்த வெற்றியை சிதைத்தனர். இதன் நடுவே கல்லூரிகளுக்கும் கால வரையறை இல்லா விடுமுறையும் அளிக்கப்பட்டது அதிமுகவின் மெஜாரிட்டி அரசால். மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் தேர்வு நடக்குமா, தேர்வுக்கு முன்னர் பாடம் பாழாய் போனதே என்றெல்லாம் நினைத்து போராட்டத்துக்கு எதிராக திரும்பினர்.

போராட்டம் பிசிபிசுத்தது. தன் இலக்கில் வெற்றியை காணாமலே நெடுமாறன் கும்பல் செய்த சுயநல அரசியலால் ஒரு முடிவுக்கே வந்து விட்டது. அதற்கு கூட "கருணாநிதி தான் காரணம்" என வரதராசனின் குமுதம் ரிப்போர்டர் கூவி தீர்த்தது. போராட்டம் சிதந்தமைக்கு கருணாநிதிக்கு கொண்டாட்டம் என தலைப்பிட்டு தன் நடுநிலை காத்தது.

இந்த மாதிரி சிலரை சில சமயம் ஏமாற்றலாம் ரிப்போர்டர் வகையறாக்கள். அனால் எல்லா நிகழ்வுகளையும் பார்த்து கொண்டும் படித்து கொண்டும் இருக்கும் மாணவர்களை இந்த "பொய் மூட்டை" கும்பல்கள் எதும் செய்ய முடியவில்லை என்பதே உண்மையாகிப்போனது.

இந்த மாணவர்கள் போராட்டத்தின் "விதை" எந்த லயோலா கல்லூரியில் விதைக்கப்பட்டதோ அதே கல்லூரி மாணவர்கள் சிந்திக்க தொடங்கினர். தங்கள் போராட்டம் திசை திருப்பி ரவுடித்தனமாக மாறியதை அவர்கள் ரசிக்கவில்லை. அதிமுகவின் மெஜாரிட்டி அரசு செய்த துரோகத்தையும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டனர். உண்மையாக ஈழத்தமிழர் விஷயத்தில் போராட இருக்கும் ஒரே அமைப்பு இப்போதைக்கு "டெஸோ" என்பதை உணர்ந்தனர். அதன் காரணமாகவே கடந்த 11.4.2013 அன்று அதே லயோலா கல்லூரியை சேர்ந்த 250 மாணவர்களும் விவேகானந்தா கல்லூரியை சேர்ந்த 50 மாணவர்களும் திமுக மாணவர் அணி செயலாளர் திரு. கடலூர் புகழேந்தி அவர்களை சந்தித்து  மாணவர் திமுக அணியில் தங்களை இணைத்துக்கொண்டு ஈழப்போராட்டாத்தை மீண்டும் தொடங்குவதாக கூறினர். அதிஷ்டவசமாக அன்று சென்னையில் திரு கடலூர் புகழேந்தி அவ்ர்கள் இருந்தமையால் உடனே அறிவாலயத்தில் இருந்த திமுக பொருளாளர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு செய்தியை சொல்ல அவரும் "உடனே அறிவாலயத்துக்கு அழைத்து வாருங்கள்" என சொல்ல மாணவர்கள் அறிவாலயம் வந்தனர்.

முதலில் கலைஞர் அரங்கத்தில்....


கூட்டம் அதிகமாக இருக்கின்றதே என ஆலோசனை மாநில செயலரும் - துணை செயலரும்


வந்த கூட்டம் அதிகமாக இருந்ததை கண்ட அறிவாலய ஊழியர்கள் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சொல்ல அவரோ "அப்படியெனில் மாணவர்களை கலைஞர் திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லுங்கள். நான் வந்து விடுகிறேன்" என திரு.புகழேந்தி அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க திரு. புகழேந்தி அவர்கள் மாநில மாணவர் அணி துணை செயலர் திரு பூவை ஜெரால்டு அவர்களை அழைத்து கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்யும் பணியினை கொடுக்க திரு பூவை ஜெரால்டு அந்த மாணவர்களை கலைஞர் திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்ல.... மேலும் மேலும் மாணவர்கள் கூட்டம் மிகுந்த எழுச்சியுடன் வர தொடங்க  விஷயத்தை திரு.பூவை ஜெரல்டு அவர்கள் மற்றும் தென்சென்னை திமுக மாணவர் அணி அமைப்பாளர் திரு.மு.சீனிவாசன் மற்றும் சைதை பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் திரு.கு.கார்த்திகேயன் ஆகியோர் கூட்டம் அதிகமாக இருப்பதால்  என்ன செய்வது என மாநில அமைப்பாளர் திரு.புகழேந்தி அவர்களிடம் கேட்க அவர் மீண்டும் கழக பொருளாளரிடம் சென்று விஷயத்தை சொல்லி "அன்பகத்தில் அண்ணா மன்றத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து அதிலே நீங்கள் உரையாற்றி அவர்கள் இணைந்தால் சரியென என் மனதிற்கு படுகின்றது" என சொன்னார்.

அறிவாலயம் - கலைஞர் திருமண மண்டபத்தில் இருந்து அன்பகம் நோக்கி ...


திமுக பொருளாளர் தான் கட்சியின் கடைக்கோடி தொண்டனின் உணர்வுக்கு கூட மதிப்பளித்து செயல்படுபவர் ஆயிற்றே. ஒரு மாநில மாணவர் அணி  செயலர் பேச்சுக்கு மறுதளிக்கவா போகின்றார். அவர் உடனே சம்மதம் தெரிவிக்க அந்த அத்தனை மாணவர்களும் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அறிவாலயத்துக்கு எதிர்பக்கம் சிறிது தூரத்தில் இருக்கும் திமுக இளைஞர் அணி அமைப்பின் சொந்த கட்டிடமான "அன்பகம்" நோக்கி கடலூர் இள.புகழேந்தி அவர்கள் தலைமையில் , துணை செயலர் திரு.பூவை ஜெரால்டு மற்றும் தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு.மு.சீனிவாசன் ஆகியோர் மற்றும் லயோலா மாணவர் திரு.லெஷ்மணன் ஆகியோர் முன்னிலையில் பேரணியாக புறப்பட்டு அண்ணா சாலையில் அறிவிக்கப்படாத பேரணியாக புறப்பட்டனர்.
அண்ணா சாலையில் அறிவிக்கப்படாத பேரணியாக மாணவர் அணி செயலர் தலைமையில்


அண்ணா சாலை நடுவே பேரணியாக மாணவர் அணியினர்...


அன்பகம் கண்ணகி சிலை தாண்டி உள்ளே வருகை!

கடும் வெய்யிலில் பேரணி முடிவில் அன்பகம் வந்தடையும் மாணவரணி


அன்பகத்தில் அவ்ர்கள் சென்று சேர்ந்த பின்னர் அங்கே திமுகவின் பொருளாளர் மற்றும் திமுக இளைஞர் அணி அமைப்பாளருமகிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் இளைஞர் அணி மாநில துணை அமைப்பாளர், முன்னாள் மேயர் திரு. மா. சுப்ரமணியன் ஆகியோர்  திமுக மாணவர் அணியின் சீருடையான வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் சகிதம் வந்தனர்.

மாநில மாணவர் அணி செயலரின் முழக்கம்


திமுகவில் இளைஞர் அணியும் மாணவர் அணியும் ஒன்றே தான் , வேறு வேறு அல்ல என சொல்லாமல் சொல்வது போல இருந்தது அந்த காட்சி. அதன் பின்னர் திரு.இள. புகழேந்தி மற்றும் திரு. முக.ஸ்டலின் ஆகியோர் சிறப்புரை வழங்க பின்னர் லயோலா மாணவர்கள் சார்பாக திரு லெஷ்மணன் அவர்கள் பேசினார்கள்.
மாணவர்களிடம் எழுச்சி பேருரையாற்றும் தளபதி அவர்கள்


திமுக பொருளாளர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 28 நிமிடம் பேசினார்கள். அவர்கள் பேச்சில் மாணவர்கள் போராட்டம் அந்த காலத்தில் இந்தி திணிப்பின் போது எப்படி செயல்பட்டது, அதை ஒருங்கினைத்த திமுக தலைவ்ர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் வெளியே இருந்த மாணவர்கள் எப்படி போரட்டத்தை "உள்ளே" இருந்தவர்கள் வழிகாட்டுதலில் நகர்த்தி கொண்டு சென்றனர். எப்படி வெற்றி பெற்றனர் என்பதை எல்லாம் சொல்லி இப்போது எப்படி செயல்பட வேண்டும் என அழகாய் சொல்லி முடித்தார். அதைப்போல மாணவர் திமுகவின் செயலர் அவர்களும் போரட்ட வியூகங்கள் எப்படி அமைய வேண்டும் என பாடம் எடுத்தார். மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய நிம்மதி. தங்கள் போராட்ட சக்தி இது வரை வீணாக விழலுக்கு செலுத்திய நீராக போனது பற்றி கவலை அவர்கள் முகத்தில் தெரிந்தாலும் இனி தங்கள் சக்தி முழுவதும் இலக்கை நோக்கி போகும் என்ற பெருமை அவர்கள் முகத்தில் தெரிந்தது.

போராட்ட வியூகம் கற்றுத்தரும் மாணவர் அணி செயலர் திரு. இள.புகழேந்தி


லயோலா கல்லூரி வரலாற்றில் இதுவரை நடந்த மாணவர் பேரவை தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற பேரவை செயலர், துணை செயலர் ஆகியோரும் வந்திருந்து "மாணவர் திமுக" வில் தங்களை இணைத்துக்கொண்டமை மிகச்சிறப்பான ஒரு தொடக்கம். மாணவர் திரு. லெஷ்மண் பேசி முடித்த பின்னர் அங்கிருந்த மாணவர்களிடம் நிதி வசூலித்து உடனடியாக ரூபாய் 25,000 நிதியை திமுக பொருளாளர் வசம் தங்கள் கல்லூரி மாணவர்கள் சார்பாக குறிப்பாக "லயோலா கல்லூரி மாணவர் திமுக" சார்பாக வழங்கினார்.
தேர்தல் நிதி வழங்கும் லயோலா மாணவர் லெஷ்மணன் - தளபதி மற்றும் இள.புகழேந்தி அவர்களுடன்...


இந்த நிகழ்வானது திமுகவின் வரலாற்றில் குறிப்பாக சார்பு அணி "மாணவர் திமுக" வுக்கும் அதன் துடிப்பு மிக்க மாநில செயலர்  இன உணர்வாளர் திரு.கடலூர் இள. புகழேந்தி அவர்களின் மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என்றால் மிகையில்லை. அவர் மனதை அறிந்து அதை செயல்படுத்தும் மாணவர் திமுகவின் மாநில துணைசெயலர் திரு.பூவை ஜெரால்டு அவர்கள் மற்றும் அன்று அந்த நிகழ்சி செவ்வனே நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிய தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு.மு. சீனிவாசன் மற்றும் சைதை துணை அமைப்பாளர் திரு.கு.கார்த்திகேயன் உள்ளிட்ட அனைவரும் திமுக பொருளாளரால் பாராட்டப்பட்டனர்.
மாணவர்களோடு மாணவர்களாக சீருடையில் தளபதியும் மாநில மாணவர் அணி செயலரும்


இந்த நிகழ்சியின் வெற்றி என்பது அன்று எவருக்கும்தெரியவில்லை. அதற்கு அடுத்த நாள் எந்த ஒரு அச்சு ஊடகத்திலும், தொலைக்காட்சி ஊடகத்திலும் இந்த செய்தி வரவில்லை என்கிற போது தான் இந்த நிகழ்வு மாபெரும் வெற்றி என்பது நடுநிலையாளர்களுக்கு புரிந்தது. ஏனனில் இப்போது ஊடகங்கள் தான் அதிமுக மெஜாரிட்டி அரசின் "விளம்பரங்களுக்கு" மயங்கி கிடக்கும் நிலையில் தன்னிலை மறந்து கிடக்கின்றதே:-( இல்லாவிடில் குண்டர்கள் தாக்குவர், அதுவும் இல்லாவிடில் பல ஊடகங்கள் அதிமுக மெஜாரிட்டி அரசின் மீதான இனப்பாசம் கொண்டவை. ஆகவே திமுக சம்மந்தமாக எவ்வித நல்ல செய்திகளும் வெளிவராமல் மிகவும் எச்சரிக்கையாக இருப்பர்.எனவே இச்செய்தி வெளிவரவில்லை என்பதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணரலாம்.

ஆனால் "தட்ஸ் தமிழ்" என்னும் இணைய ஊடகம் மட்டும் ஜான் பிரிட்டோ என்னும் லயோலா மாணவரை பேட்டி கண்டு தன் "நடுநிலை"யை நிலைநாட்டிக்கொண்டது. அதாவது 7000 பேர் படிக்கும் லயோலவில் 300 பேர் டெசோ வை ஆதரித்து மாணவர் திமுகவில் சேர்ந்தமை ஒரு பெரிய விஷயம் இல்லியாம். அவர்கள் இருக்கும் பத்து பேர் கொண்ட கும்பலே பெரியதாம். அதை படித்தவர்கள் சிரித்தனர். ஒரு நகைச்சுவை காட்சியில் செந்திலும்,கவுண்டமணியும் பேசும் வசனம் போல "அண்ணே நான் எட்டாவது பாஸ் அண்ணே, நீங்க பத்தாவது பெயிலு அண்ணே, பாஸ் பெரிசா , பெயிலு பெரிசா" என கேட்ப்து போல இருக்கின்றது.

மாநில மாணவர் அணி  துணை செயலர் திரு. பூவை ஜெரால்டு அவர்களிடம் இது பற்றி கேட்ட போது "போகட்டும் அவர்கள் உணர்வையும் மதிக்கிறோம். நாங்கள் எங்கள் வழியில் டெஸோ அமைப்பு மற்றும் தலைவர் கலைஞர்  காட்டும் வழிகாட்டுதலில், தளபதி அவர்கள் உத்தரவுப்படி,கடலூர் திரு.புகழேந்தி அண்ணன் அவர்கள் தலைமையில் ஒரு சரியான இலக்கை நோக்கி போராடுவோம். இன்று 300 பேர் அந்த கல்லூரியில் இருந்து. நாளை 3000 பேராகும். தமிழகம் முழுமைக்கும் மாணவர் திமுக இது போல ஒருங்கிணைப்பு பணியில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. மாணவர்களின் படிப்புக்கும் பங்கம் வராமல், பொதுமக்களுக்கும் தொல்லை வராமல், பெற்றோர்களுக்கும் கோபம் வராமல் ஆனால் அதே நேரம் மாணவர்கள் சக்தியை ஒரே நேர்கோட்டில் சிந்தாமல் சிதறாமல் செலுத்தி போராட்டத்தில் வெற்றி அடைவோம். 7000 பேர் படிக்கும் கல்லூரியில் 300 பேர் சேர்ந்தனர் என்பது எத்தனை சதவீத கணக்கு என்றும் அதே 7000 பேரில் பத்து மாணவர்கள் என்பது எத்தனை சதம் என்பதும் படித்தவர்களுக்கு புரியும். எங்கள் இலக்கு அதை எல்லாம் விளக்கி கொண்டு இருப்பது இல்லை. எங்கள் இலக்கு ஈழ போரட்ட்த்தில் வெற்றி என்பதே. டெசோ வின் போராட்டங்களில் இனி மாணவர் திமுகவின் பங்கு மிக முக்கியமாக இருக்கும் வரும் காலகட்டங்களில். தவிர லயோலாவில் 7000 பேர் என்பதே கூட தவரான கருத்தென நினைக்கிறேன். அதிக பட்சம் அங்கே 2500 மாணவர்கள் என்றே நினைக்கிறேன். நல்ல வேளை, 250 பேர் லயோலாவில் இருந்தும் மற்றும் விவேகனந்தா கல்லூரியில் இருந்து 50 பேர் என ஒத்துக்கொண்டமைக்கு ஜன்பிரிட்டோவுக்கு நன்றி.. மாணவர் திமுக சேர்க்கை விதிப்படி அன்று அவர்களிடம் வாங்கிய கல்லூரி அட்டை என்னிடம் உள்ளது. வேண்டுமாயின் அந்த புகைப்படம் அனுப்புகிறேன்" என்று முடித்துக்கொண்டார்.
300 மாணவர்களில் 10 பேரில் கல்லூரி அடையாள அட்டை புகைப்படம்


வெல்க மாணவர் திமுக போராட்டம்!

புகைப்படங்கள் தந்து உதவிய , திமுக நிகழ்ச்சிகளை இணையவழியே இது வரை 50000 புகைப்படங்கள் பகிர்ந்த சாதனையாளர் திரு. ஜெயின்கூபீ அவர்களுக்கு நன்றிகள்!

April 5, 2013

என்றும் இந்த ஆனந்தம் நிலைக்கட்டும்!!!


நேற்று மாலை கடைத்தெருவுக்கு போய்விட்டு மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பும் போது எங்கள் தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப்பள்ளி வாசலில் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. கே.ராஜேந்திரன் சாரும், கூடவே குலசேகரன் சாரும் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்ததும் நானும் வண்டியை ஓரம்கட்டிவிட்டு அவர்களோடு பேச்சில் நுழைந்து கொண்டேன். அப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு சுமார் 65 வயதுடைய  அம்மையார் நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் பள்ளி அருகே வரும் போது தன் செருப்பை கழட்டி விட்டு பள்ளியை நோக்கி ஆத்மார்த்தமாக கும்பிட நான் "சார் அங்க பாருங்க. நம்ம ஸ்கூலை கும்பிட்டு கிட்டு இருக்காங்க. அவங்களை பார்த்தா நம்ம ஸ்கூல் கஸ்தூரி டீச்சருக்கு வயசான மாதிரியே இருக்குல்ல சார்" என்றேன். அதைப்பார்த்த கே ஆர் சார் "அடப்பாவி, அவங்க நம்ம கஸ்தூரி டீச்சரே தான், கூப்பிடு கூப்பிடு அவங்கலை" என சொன்னதும் நான் ஓடிப்போய் கூப்பிட்டேன்.

என்னைப்பொருத்த வரை கஸ்தூரி டீச்சர் என்பவர் முகத்தில் மனோரமா மாதிரி ஒரு கருப்பு பருவுடன், கையில் பிரம்புடன், கருத்த தலை முடியுடன், கண்டிப்பான முகத்துடன் இருக்கும் பி.ஈ.டி டீச்சர். மாணவிகளுக்கான ரிங் பால், கோகோ எல்லாம் சொல்லிகொடுக்கும் டீச்சர். என் மனதில் அது மட்டுமே பதிந்து இருந்தது. இப்போது இத்தனை வயதானவங்கலா அவங்களை நினைத்து பார்க்க கூட இல்லை. காலம் எத்தனை வேகமாக ஓடுது!

நான் அழைத்ததும் கிட்டே வந்தாங்க. அங்கே கே ஆர் சாரையும் பார்த்ததில் அவங்களுக்கு இன்னும் மகிழ்வு. சென்னையில் பொண்ணு வீட்டில் செட்டில் ஆகிட்டாங்க. அவங்க கணவர் (அவரும் ஆசிரியர் தான் ..ஆனால் முனிசிபல் பள்ளியில்) 3 வருடங்கள் முன்பாக இறந்து விட்டார்கள் என்பதால் சென்னையில் தன் மகளுடன் போய் தங்கிவிட்டாங்க கஸ்தூரி டீச்சர்.
கே ஆர் சாரும் நானும் அவங்க கிட்ட ஷேமலாபங்கள் எல்லாம் விசாரித்து பின்னர் "எங்க டீச்சர் நடந்து போறீங்க" என கேட்க "வடக்கு மடவிளாகத்திலே ராமூர்த்தி சார் வீட்டுக்கு போறேன். வருஷம் ஒரு தபா ட்ரஷரிக்கு வந்து எங்கள் 'இருப்பை' உறுதி செஞ்சா தானே பென்ஷன் வரும். அதனால வந்தேன். ஆனந்த வல்லி டீச்சரும் இன்னிக்கு வந்திருக்காங்க. அவங்களும் நானும் இன்னிக்கு ராமூர்த்தி சார் வீட்டிலே தங்கிட்டு நாளை ட்ரஷரி போய்விட்டு சென்னைக்கு போகனும்" என்றார்கள். தனக்கு அரை மணி முன்பாக ஆனந்த வல்லி டீச்சர் மாயவரம் வந்து விட்டதாகவும், அனேகமா ராமூர்த்தி சார் வீட்டுக்கு நடந்து போய் கொண்டு இருக்கலாம் எனவும் சொன்னாங்க.

இங்கே ஆனந்த வல்லி டீச்சர் பத்தி சொல்லனும். அந்த காலத்து "அன்பேவா" சரோஜாதேவி மாதிரி இருப்பாங்க. சின்னதா கோஸ் மூக்குத்தி, பன் கொண்டை, பட்டுப்புடவை நீண்ட கை வைத்த புடவைக்கு மேட்சிங் ஜாக்கெட், அதே சரோஜாதேவி பாணியிலே "ஷெர்ஷா ஆப்கானிஸ்தால ஆரம்பிச்சு ஆண்டிப்பட்டி வரை ரோடு போட்டான் தெரியுமோ" என சொல்லி அந்த கதையை சொல்லும் போது நமக்கே காலில் தார் ஒட்டின மாதிரி ஒரு ஃபீலிங் வரும். வரலாற்று பாடத்தின் உள்ளே அழைத்து போய்விடுவார்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்டும் பள்ளி வாசலுக்கே  வந்து, பின்னர் நான் கஸ்தூரி டீச்சரிடம் "வாங்க டீச்சர் என் வண்டில போகலாம், நானும் சார் வீட்டு வழியாத்தான் போறேன்" என சொல்லி டீச்சரை அழைத்து கொண்டு கே ஆர் சாரிடம் விடைபெற்று வந்தோம்.

வண்டியில் வரும் போது "கொழந்தே எப்படி இருக்காய்?" என் கேட்டாங்க மீண்டும். ஒரு 45 வயசு தடிமாட்டை கொழந்தே என கூப்பிடும் நபர்கள் அம்மா அப்பா வாக இருக்கலாம். அல்லது ஆசிரியர்கள் மட்டுமே. என்ன ஒரு கொடுப்பினை! "சார் தவறின பின்னே நேக்கு மாயவரம் அத்தனை பிடித்தமா இல்லை. அதான் பொண்ணு ஆத்துல போய் ஐக்கியமாகிட்டேன். அங்க போனா மாயவரம் ரங்கநாதரும், அவயாம்பாவும் 'இங்க வா இங்க வா"ன்னு கூப்பிடுற மாரியே இருக்கு. என்னால சதர்ன் ரயில்வேகாரன் தான் செழிக்கறான்" என பேசிக்கொண்டே வந்தார்கள்.

ராமூர்த்தி சார் வீட்டுக்கு சற்று முன்னரே ஆனந்தவல்லி டீச்சர் நடந்து போய்க்கொண்டு இருந்ததை பார்த்து விட்டு வண்டியை நிறுத்தினேன். நான் அவங்களை பார்த்து எத்தனை வருடம் இருக்கும் என கணக்கு மனதில் ஓடியது. என் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு வரலாறு புவியியல் தேர்வு எழுதிவிட்டு வெளியே முதல் ஆளாக வந்த என்னை ஓடிவந்து "கொஸ்டின் பேப்பரை கொடுடா, ஏன் முன்னக்கவே வந்துட்ட, ரொம்ப கஷ்டமோ, நல்லா எழுதினாயோ, எத்தினி வரும், பாலிடெக்னிக் கிடைச்சுடுமோ" என ஏகப்பட்ட கேள்விகளோடு பார்த்தது தான் கடைசியாக அவர்களை பார்த்தது. அந்த சம்பவம் நடந்தது 1980. அதவது 33 வருடம் முன்பாக!

டீச்சர் இப்போதும் அதே மாதிரி ஆனாக்க  வயசானவங்கலா இருந்தாங்க. என்னை பார்த்ததும் "அடடே கஸ்தூரி... படீர்ன்னு நான் தொல்காப்பியனின் அப்பா தான் உன்னை அழைச்சிண்டு வராரோன்னு நினைச்சுட்டேன். நான் பார்த்த இக்கினூண்டு வாண்டு  இப்ப இத்தன வளர்த்தி. என்னடா கொழந்த காதோரம் எல்லாம் நரை விழுந்துடுச்சு. ஆகா என்னா குறும்பு அப்போ. இப்போவும் அப்படித்தானா? ஆம்படையாள் உன் குறும்பை எல்லாம் சகிச்சுக்கறாளா? ஆமா கல்யாணம் ஆகிடுத்தோல்யோ? குழந்தைகள் எத்தனை? என்ன பண்றா அவா? ....ஆனந்த வல்லி டீச்சரின் குணமே அதான். அவங்க தான் தொடர்ந்து கேள்வி கேட்பாங்க.. நம்ம பதிலை எப்போதும் எதிர்பார்ப்பதே இல்லை. "நேரு மாமா ஒரு அஞ்சு கொள்கை கொண்டு வந்தாரே அது பேர் என்னான்னு சொல்லுங்கோ... தொல்காப்பியா நீ சொல்லு...(நான் எழுந்திருக்கும் போதே ..பதில் சொல்ல அல்ல...தெரியாதுன்னு சொல்ல) அதாவது அதுக்கு பஞ்சசீல கொள்கைன்னு பேர். இத நீங்க எப்படி ஈசியா மனசிலே வச்சுப்பேள்??? நம்ம க்ளஸ் பதஞ்சலி தியாகராஜன் இருக்கானோனோ அவன் பேரை ஓர்ம வச்சுண்டா போறும்... பஞ்சசீலக்கொள்கை மனசிலே வந்துடும். இது முக்கிய கொஸ்டின், எழுதி வச்சுகோங்கோ வர்லைன்னா "ஏண்டி ஆனந்த வல்லி வர்லைன்னு முச்சந்தில வச்சு கேளுங்கோ என்னை, ஒக்காருடா கொழந்தே... அடுத்த கேள்வி ஆஸ்ட்ரியா நாடு இருக்கோல்யோ அது செர்பியா மேல போர் தொடுத்தா...தொடுக்கலை அதுக்கும் முன்ன போர்பிரகடனம் செஞ்சா, அது எந்த வருஷம் நடந்துச்சு, அதுக்கு பதில் நீ சொல்லுடா கொழந்தே என ராதாவை எழுப்பி நிக்க வச்சுட்டு டீச்சரே "அது ஜுன் 28  ம் தேதி 1914ம் ஆண்டு நடந்துச்சு. இதை எப்படி ஞாபகம் வச்சுப்பேள்??? அதாவது நம்ம க்ளஸ்ல எல்லாரும் என்ன டேட் ஆஃப் பர்த்... ஜூன் 27 தானே. அதுக்கும் அடுத்த நாள் தான் இது நடந்துச்சு. ராமன் எத்தனை வருஷம் காட்டுக்கு போனான் 14 வருஷம்... அதையும் இதையும் முடிச்சு போட்டுகோங்கோ, உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி உங்க கொழந்தேல்லாம் பப்ளிக் எழுதும் காலம் வரைக்கும் மறக்காது கேட்டேளா" . இதான் ஆனந்தவல்லி டீச்சர். அவங்க மட்டுமே கேள்வி கேட்பாங்க. பதிலும் அவங்களே சொல்லிடுவாங்க.

நான் டீச்சரிடம் "ஆமா டீச்சர், வயசாயிடுச்சுல்ல... நான் கடைசியா உங்களை என் வரலாறு புவியியல் பப்ளிக் எக்சாம் அன்னிக்கு பார்த்தது தான். இப்போ என் பொண்ணுக்கு அதே பப்ளிக் எக்சாம் நடக்குது. ஆனந்தவல்லி டீச்சர்  உடனே  "ஓ மை காட்! ஒன் பொண்ணு டென்த்தா? இங்லீஷ் மீடியம் தானே. அப்படின்னா ஒரு கேள்வி... ரொம்ப முக்கியம். வர்லைன்னா ஏண்டி வர்லை ஆனந்தவல்லின்னு என்னை முச்சந்தில வச்சு கேளு" என சொன்னாங்க.  டீச்சர் கொஞ்சம்  மாறலை. இந்த கேள்வி வந்துச்சா வரலையான்னு என் பொண்ணை முதலில் கேட்கவே பயமாய் இருக்கும் எனக்கு. ஒரு வேளை அது வரலைன்னா நான் ஆனந்த வல்லி டீச்சரை எங்க தேடிகிட்டு போய் பின்ன முச்சந்தி தேடி அழைச்சுட்டு வந்து நிக்க வச்சு கேட்கனும்.. இதல்லாம் நடக்கும் காரியமா?
அடுத்து டீச்சர் "during the great revolt of 1857 the governor general of india was ... " என கேட்டுவிட்டு என்னைப்பார்த்து "who??? சொல்லு நீனு " என சொல்ல நான் "டீச்சர் இது ஹிஸ்ட்ரியா, ஜியாகரபியா?" என்றேன்....அதுக்கு டீச்சர் "ஓ மை மாயூரநாதா, ஒனக்கு பேசிக்ல இருந்து ஆரம்பிக்கனும் போலிருக்கே... ஓக்கே நான் ஒன் பொண்ணு கிட்டே இந்த கேள்வியை சொன்னேன், முக்கிய கொஸ்டின்னு சொன்னேன்னு சொல்லு என சொல்ல நான் அதற்கு "டீச்சர், அப்படியே அந்த கேள்விக்கான பதிலையும் சொல்லிடுங்க டீச்சர்" என்றேன். உடனே டீச்சர் " lord canning" ன்னு சொன்னாங்க. நான் உடனே "அதில்லை டீச்சர். வரலாறு புவியியல் எல்லாம் பெயர் மாறி சோசியல் சயின்ஸ்னு ஆகிப்போச்சு... அதான் எனக்கு டக்குன்னு பதில் தெரியலை.எல்லாம் மாறிப்போச்சுல்ல " என வழிந்தேன் வழக்கம் போல!

உடனே டீச்சர் "ஆ மா எல்லாம் மாறிப்போச்சுது. எல்லாருக்கும் வயசாகிப்போச்சுது. இராமபத்ரன் சாரை அரங்கன் கூட்டிண்டான், எம் கே சார் போயாச்சு, இத்தோ ஒரு வாரம் முன்ன எல் கே கணேசன் சார் போயாச்சு, ஒரே குடும்பமா ஒரே பள்ளிக்கூடத்திலே எத்தினி வருஷம் எத்தினி வருஷம் இருந்தோம்... அந்த காலம் வருமா? எங்க கிட்டே படிச்ச குழந்தைகளை எப்பவாவது நல்ல நிலையிலே பார்க்கும் போது ... வாங்கின காசுக்கு நல்லா வளர்த்தோமடா மயூரநாதான்னு கன்னத்திலே போட்டுக்க தோணும். நல்லா இருக்கனும் கொழந்தேகளா நீங்கல்லாம்" என சொல்லி தன் முந்தானையால் கண்ணை துடைக்க நான் நிலமையின் இறுக்கம் தவிர்க்க "டீச்சர் நான் முன்ன சொல்லுவனே உங்களை சரோஜாதேவி மாதிரின்னு இப்பவும் நீங்க சரோஜாதேவி மாதிரி தான் இருக்கீங்க. ஆனா என்னா ஒன்னு ஆதவன் படத்திலே வரும் சரோஜாதேவி மாதிரி இருக்கீங்க" என சொல்ல அந்த இடமே நடுரோடு என்று கூட பார்க்காம சிரித்தோம் மூவரும்.

அடடே! இந்த சிரிப்பு, ஆனந்தம் என் ஆசிரியர்களுக்கு என்றைக்கும் நிலைக்க வேண்டும் என்ற நினைப்புடன் வீட்டுக்கு வந்தேன்.

March 23, 2013

எஸ். எஸ். சிவசங்கர் .B.E.,M.B.A., M.L.A., (அரியலூர் மாவட்ட செயலர், திமுக)

(அன்பகம் இணைய நண்பர்கள் கூட்டத்தில்)


எஸ். எஸ். சிவசங்கர்............. இந்த பதிவை எப்படி எழுதப்போகிறேன் என தெரியவில்லை. விஷயம் நிறைய இருக்கு மனசிலே. அதை கோர்வையாக சொல்ல முடியுமா என்றால் .... தெரியல... அனேகமா பதிவு அடிக்கும் போது சொதப்பிடுவேன் என்றே நினைக்கிறேன்... இருப்பினும் சொல்கிறேன்..

அவரை நான் முதன் முதலாக சந்தித்ததே அன்பகத்தில் தான். திமுக இளைஞரணி அலுவலகம். அங்கே இணையத்தில் புழங்கும் திமுக நண்பர்கள் சந்திப்பு. முதல் வரிசையில் லக்கி யுவகிருஷ்ணா, நான், அப்துல்லா உட்பட எல்லோரும் பேண்ட், சட்டை சகிதம் அமர்ந்திருக்க அடுத்தடுத்து பெரியண்ணன் அரசு (புதுகை மாவட்ட செயலர்... அவர் என் தம்பி செட் பூண்டி புஷ்பம் காலேஜ்ல பி ஜி படிக்கும் காலத்தில், என் தம்பி கெமிஸ்ட்ரி, அவரு பிசிக்ஸ்) அடுத்து எஸ். எஸ். சிவசங்கர். எனக்கு இருவரையுமே தெரியாது. ஆனா இருவரும் அருமையான பேண்ட் சர்ட்ல் வந்திருந்தாங்க. அதே போல புரபசர் சுப.வீரபாண்டியன் அய்யாவும் பேண்ட் சர்ட். அதே போல மின்னும் மன்னை ச.ம.உ டி ஆர் பி ராஜாவும் பேண்ட் சட்டை. பாவம் டி கே எஸ் இளங்கோவன் அண்ணன் மாத்திரம்  வேட்டி சட்டை. வந்ததும் சிவசங்கர் சாரை பார்த்து கடிந்து கொண்டார். "என்ன சிவா, ஒரு போன் போட்டு சொல்லக்கூடாதா? என் கிட்ட பேண்ட் சட்டை இல்லியா? நீங்கல்லாம் மாத்திரம் காலேஜ் பசங்க மாதிரி இருக்கீங்க. நான் மட்டும் "பெரிசு" மாதிரி வேட்டி சட்டையிலே வந்திருக்கேன்" என சொல்ல ஒரே சிரிப்பு.

நான் பக்கத்தில் இருந்த யுவாவிடம் கேட்டேன் "யுவா யாரு அது?" . யுவா சொன்னாரு "அண்ணே அவரு தான் அரியலூர் மாவட்டம்" எனக்கு தூக்கிவாரிப்போட்டது. பின்னர் அவரிடம் பேசினேன். பின்னர் அவர் மேடைக்கு போய்விட்டார். அதற்கு முன்னர் முனைவர் ஞானமணி என்னும் தோழர் ..அவர் அரியலூர் சேர்ந்தவர். பேசும் போது அண்ணன் ராசா அவர்களை பற்றி பேசினார். உணர்சி மேலீட்டால் அழுதே விட்டார். பின்னர் எஸ். எஸ். சிவசங்கர் சார் பேசும் போது அந்த ஞானமணி அவர்கள் பேச்சுக்கு வரிக்கு வரி பதில் சொல்லி நாமெல்லாம் பெரம்பலூர் அரியலூர் என்றால் பெருமைப்பட வேண்டும் என அழுத்தம் திருத்தமாக பேசினார். நான் பல மாவட்ட செயலர்களை பார்த்து இருக்கேன். சிலர் கேஷுவலாக பேசுவாங்க. சிலர் சீரியசாக பேசுவாங்க. சிலர் டிபிக்கல் மேடைப்பேச்சாளர்களாக பேசுவாங்க. ஆனா இவர் பேச்சு அன்னிக்கு அப்படி ஒரு பேச்சு. ஒரு தேர்ந்த மேடைப்பேச்சாளர் பேச்சு போல, ஒரு கேஷுவல் பேச்சாளர் போல, ஒரு நண்பன் சக நண்பனிடம் பேசுவது போல ... இன்னும் எப்படி எப்படியோ.... பின்னர் நான்  அவரை சந்தித்ததும் அதே அன்பகத்தில் தான். அதாவது பெரம்பலூர், அரியலூர் மாவட்ட இளைஞரணி "இண்டர்வியூ"வுக்கு வந்த போது. அவர் கூடவே அவர் மாவட்ட இளைஞர்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். அத்தனை பேரையும் கட்டி போட்டு இருந்தார். அத்தனை கூட்டத்திலும் அவரது பார்வைக்கு கட்டுப்பட்டனர்.

அன்பகத்துக்கு எதிரே இருக்கும் டீக்கடையில் டீ குடிக்க போகலாம் என நினைத்து அவர் போகும் போது "பசங்கலா" என அவர் அழைத்த அழைப்புக்கு அங்கே 50 இளைஞர்கள் "அண்ணே" என்றார்கள். சாலையை கடந்து டீக்கடை  போகும் போதும் அதே ஒழுங்கு. அடடே... அன்பால் கட்டுப்படுத்த முடியும் என புரிந்து கொண்டேன். கலைஞருக்கு ஒரு சண்முகநாதன் போல இவருக்கு லூயிகதிரவன். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். டீக்கடையில் காசு கொடுப்பது முதல் பசங்க யார் யார் இன்னும் சாப்பிடலை என்பது வரை இவர் கண் அசைப்பு எல்லாம் லூயிக்கு தெரியும். உடனே சரி செய்வார்.

அப்படித்தான் ஒரு நாள் அக்டோபர் 11ம் தேதி 2012 என நினைக்கிறேன், நான் சென்னையில் திருவான்மியூரில் இருந்தேன். போன் செய்தார். "நான் வீட்டை விட்டு கிளம்பிட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க வீட்டுக்கு வருவேன்"..... எனகு கையும் ஓடலை, காலும் ஓடலை... அட ஒரு மாவட்ட செயலர்... நான் "வீட்டுக்கு வாங்க சார்"என சொன்னதுக்காக வருகின்றார்.... அரக்க பரக்க ஓடி குளித்தேன். "நான் வந்து விட்டேன்" என சொன்னார். ஓடிப்போய் வரவேற்றேன். சத்யா எனும் கமல் படம் பார்த்து இருப்பீங்க. அதிலே அமலா கமல் வீட்டுக்கு வரும் போது ஜட்டி எல்லாம் நாத்காலியில் கிடக்குமே.. அப்படி இருந்தது வீடு. நானும் கிட்டத்தட்ட அந்த கமல் நிலையில் தான் இருந்தேன். ஒரு நீண்ட அரசியல் பேச்சு. அப்பாடா... திகட்ட திகட்ட அரசியல் பேசினோம். அன்று தான் திமுக மாநில இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பு வெளிவந்தது முரசொலியில். அப்போது சொன்னார் சிவசங்கர் சார் " நான் என் மாவட்டத்தை விட அதிகம் எதிர்பார்த்தது தஞ்சை மாவட்டம் தான். ஏன்னா தம்பி வி. எஸ். கே . செந்திலுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் கும்பகோணம் குட்டி என்கிற தெட்சினாமூர்த்திக்கு கிடைத்துவிட்டது. செந்தில் தம்பிக்கு போன் செய்யனும்" என சொல்ல நான் உடனே செந்திலுக்கு போன் செய்தேன். சாரே பேசினார். "செந்தில்! உங்க உழைப்பு கட்சிக்கு என்னான்னு தலைமை வரை தெரியும். சோர்ந்து விட வேண்டாம். நிச்சயம் உங்களுக்கான மரியாதை கட்சியில் கிடைக்கும்" என சொன்ன போது செந்தில் உணர்சி வசப்பட்டார். ஒரு அண்டை மாவட்ட செயலர் தனக்கு ஆறுதலாக சொல்லும் போது ஒரு கட்சிக்காரன் , உழைத்தவன் மன நிலை எப்படி சந்தோஷத்தில் குதிக்கும்! இது தான் சிவசங்கர் சார்!

நிற்க! இப்படியாக இருக்கும் போது கடந்த பிப்ரவரி முதல் தேதி என் பெரிய அக்காவின் 3 வது பையனுக்கு ஹைதராபாத்தில் கல்யாணம். ஜனவரி 30 மாலையே கிளம்பியாச்சு. நானும் என் தம்பி கொக்கரக்கோ சௌமியனும் "டேய் நாளை அங்க போனதும் மொதல்ல நம்ம சிவசங்கர் சார் அப்பாவை பார்க்க போகனும்" என பேசிக்கொண்டோம். ஏனனில் அவங்க அப்பா முன்னாள் ச.ம.உ, முன்னாள் மாவட்ட செயலர், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர், இன்னாள் திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் அய்யா சிவசுப்ரமணியம் அவர்கள் ஒரு அறுவை சிகிச்சைக்காக ஹைதை நிம்ஸ் மருத்துவமணையில் இருந்தார். 31ம் தேதி நானும் என் தம்பியும் தவிர என் அக்கா பசங்க (கல்யாண மாப்பிள்ளை உட்பட) இருவரும் போனோம்.
(ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் )


அய்யா சிவசும்ரமணியம் அவர்களை பார்த்தோம். அறுவை சிகிச்சை முடிந்து இரு நாட்கள் ஆகி இருந்தன. கைலி உடை. அதில் கறை கருப்பு சிவப்பு. அட கைலியில் கூட கருப்பு சிவப்பா என ஆச்சர்யப்பட்டோம். அதை கேட்கவும் செய்தோம். "மனசு வச்சா கருப்பு சிவப்பு நிறம் எங்கும் வரும்" என சொன்னார்.

பின்னர் பேசிக்கொண்டு இருந்தோம். பொதுவாய் எங்கள் வீட்டு திருமணத்துக்கு எல்லாம் கலைஞர் வீட்டில் இருந்து எல்லோரும் வருவார்கள் எனினும் நாங்கள் இப்போது இருப்பதோ ஹைதராபாத். அக்கா பையன் ஐ டி யில் வேலை செய்வதால் கூட ஒர்க் பண்ணும் ரெட்டி பொண்ணை உசார் பண்ணிட்டான். ரெட்டிய தாக்குறொம், பொண்ணை தூக்குறோம் என்றில்லாமல் ரெட்டி சகல மரியாதையுடன் கல்யாணம் செஞ்சு கொடுக்க முன்வந்தார். அதுக்கு கட்சிகாரங்க இல்லாம கல்யாணமா என்னும் மன சஞ்சலம் இருந்து கொண்டே இருந்தது.

மெதுவாய் நானும் என் தம்பியும் விஷயத்தை சிவசங்கர் சாரிடம் சொல்ல "அட அதுக்கென்ன, நாளை கல்யாணத்துக்கு வரேன்" என சொன்னார். நன்றாக நினைத்து பாருங்கள்! ஒரு மாவட்ட செயலர்.... அவரை கேட்டு தான் அவங்க மாவட்டத்தில் திருமண தேதி வைப்பார்கள். ஆனா எங்க அதிஷ்டம்... நாங்க அடுத்த நாள் திருமணத்துக்கு முதல் நாள் கூப்பிடுகிறோம். வரேனு சொல்லிட்டாரு...

அடுத்த நாள் வந்து விட்டார் திருமணத்துக்கு. ரெட்டிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பரபரப்பு. ரெட்டி மெதுவா வந்து கேட்கிறார் நம் சிவசங்கர் சார் கிட்டே ...

'நிஜங்கானே நீரு எம் எல் ஏ னா'

"அவுனு நேனு எம் எல் ஏ னே"

"நீக்கு கன்மேன் எவரு லேதா"

"அட்லாண்டி தப்பு நேனு செய்யலேதுண்டி"
(அப்பா, நான், சௌமி, சௌமியன் பையன் சர்வோதயன், நட்ராஜ் ஆகியோருடன் மாவட்டம்)


நான் தாலிய எடுத்து கன்ணில் ஒத்திக்காத குறை தான். எங்க மாவட்டம் தெலுகு எல்லாம் பேசுதுன்னு. பின்ன தான் நியாபகம் வந்தது அவரின் முகநூலில் அவருக்கு தெரிந்த மொழிகள்னு பார்த்தா தமிழ், ஆங்கிலம், தெலுகு, கன்னடம் இப்படியாக திராவிட மொழிகள் எல்லாம் தெரியும் என்பது. பின்னர் தான் யோசித்தேன். சார் B.E., M.B.A முடித்து விட்டு பெங்களூருவில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேலை செய்தவர் என்பது!

எங்களுக்கு ஒரே பெருமை தான் அன்று முழுமைக்கும். ஒரு திமுக மாவட்டம் எங்கள் வீட்டு திருமணத்துக்கு வந்தமை குறித்து. ஆனால் அந்த செய்தியை நான் அன்று வெளியிட வில்லை. காரணம் அன்று சட்டசபை கூட்டம் இருந்தது. அதற்கு நான்கு நாட்கள் முன்பாகத்தான் ராசா அண்ணன் நேரிடையாக ஹைதை வந்து அப்பாவை பார்த்து விட்டு சென்றார். அதற்கு இரு நாட்கள் முன்பாகத்தான் தளபதி அவரிடம் தொலைபேசியில் அவங்க அப்பா உடல் நிலை குறித்து கேட்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் கல்யாணத்துக்கு வரும் போது தான் திருமதி கனிமொழி அவர்கள் அப்பாவின் உடல் நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்து இருந்தார். ஆனால் அன்றைக்கு தான் பேஸ்மேக்கர் ட்யூனிங் என்பதால் இவரால் சட்டமன்ற கூட்டம் போக இயலவில்லை.
(திருமணத்தின் போது மணமக்களுடன்)


நான் கேட்டேன் .... "தளபதிக்கு சொல்லியாச்சா, நீங்க வரலைன்னு" ... அவர் சொன்னார்... "இல்லை... இதுக்கு தளபதிகிட்டே லீவ் சொல்லக்கூடாது, கட்சி கொறடாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். அவர் தான் எங்களுக்கு க்ளாஸ் லீடர்" அட, இதான் கட்சி... இதான் உண்மையான ப்ரோட்டோகால்.... தன் அப்பாவுக்கு அன்று முக்கியமான ட்ரீட்மெண்ட் இருப்பினும் எங்கள் வீட்டு திருமணத்துக்கு வந்தமை குறித்து எங்களுக்கு பெருமையோ பெருமை!
"ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... இன்னும் 50 ஆண்டுகாலத்துக்கு பெரம்பலூர் , அரியலூர் மாவட்டம் இவரது உள்ளங்கையின் உள்ளே மட்டும் என்பது நிச்சயம்" சார் திருமணத்துக்கு வந்து போன பின்னே ஒரு 78 வயது பழம்பெரும் திமுக தொண்டரான என் அப்பா உதிர்த்த வார்த்தைகள் இது!

சமீபத்தில் கூட நான் சென்னையில் அருள் பிரகாசம் சார் வீட்டில் இருந்த போது எப்போதும் போல "வீட்டுக்கு வாங்க சார்" என சொன்னமைக்காக வந்தார். பின்னர் ஒரு இணைய நண்பர் மனைவி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து தானும் வந்தார். மிகுந்த சந்தோஷமாக இருந்தது. வெளியில் வந்து "அவங்களுக்கு என்ன விதமான மருத்துவ உதவி வேண்டுமோ அதை தயங்காமல் கேளுங்க. செய்வோம்" என ஆறுதல் கொடுத்தார்.

அப்பாடா.... என்னவோ மனசில் பட்டதை எல்லாம் அடிச்சுட்டேன்... இன்று அவருக்கு பிறந்த நாள். அவருக்கு உங்களின் வாழ்த்தை சொல்லுங்களேன் நண்பர்களே!

March 15, 2013

காங்கிரசை "கை"கழுவ திமுகவுக்கு சரியான தருணம் இது!



எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் Vs பி ஜே பி என்பது சர்வநிச்சயம். இதிலே மூன்றாவது அணி அமைந்தால் அதிலே  யார் யார் கூட்டு என்பது பற்றி எல்லாம் நாம் அதிகமாக  யோசிக்க வேண்டியதில்லை.அது நம் வேலையும் இல்லை இப்போதைக்கு.

இப்போதைக்கு என் பிரச்சனை.. நாம் காங்கிரசுடன் கூட்டணி தொடர்கிறோம்  என்றால் நம் கூட்டணியின் பலம் என்ன?  பலவீனம் என்ன? என யோசித்து  பார்ப்பின்  பலம் என்பது பூஜ்ஜியம். பலவீனம் என்பது 200 சதம் என்பதே உண்மை. காங்கிரசை எதிர்த்து மேடையில் முழங்க இந்திய அளவில் அதாவது அரசியல் கட்சிகள் நிலையில்  பார்த்தால் ஸ்பெக்ட்ரம் விஷயம் , நிலக்கரி சுரங்க ஊழல், சமீபத்திய ஹெலிகாப்டர் ஊழல் என பெரிய பெரிய விஷயங்கள் , மற்றும் இலங்கை மீதான வெளியுறவு கொள்கையில் இருக்கும் வழவழா கொழகொழா நிலை என பேச பெரியதாக இருக்கும் நிலையில், பொதுமக்களை பொறுத்தவரை ரயில் கட்டணம் உயர்வு,கேஸ் மானியம் நிறுத்தம், குறைந்த அளவினால கேஸ் சிலிண்டர் ஒதுக்கீடு ஆகியவையும் இப்போது மேலும் ரயில் கட்டண உயர்வு வரப்போகின்றது என்பதும், அடுத்து மிகப்பெரிய பாதிப்பாக டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வும், அதனால் பொது மக்கள் நேரிடை பாதிப்புக்கு உள்ளாவதும் காங்கிரசை ஒரு "கை" பார்த்து விட துடிக்கின்றன.

சரி அதே காங்கிரசுக்கு மாநிலத்துக்கு மாநிலம் என்ன பிரச்சனைகள் என பார்த்தோமானால் ... இப்போதைக்கு நாம் இக்கட்டுரையில் தமிழகத்தை பற்றி மட்டுமே பார்ப்போம். தமிழகத்தை பொறுத்த மட்டில் இப்போது மிக முக்கியமாக ராகுல் மீது எந்த திராவிட கட்சிகளுக்கும் ஒரு ஈர்ப்பும் இல்லை. முதல் காரணம் அவர் எடுக்கும் முடிவுகள் எல்லாமே சிறுபிள்ளை தனமாகவே இருந்து தொலைக்கின்றன துரதிஷ்டவசமாக. தவிர தமிழகத்தை பொறுத்த மட்டில் கொஞ்சம் மரியாதை எதிர்பார்க்கும் ஒரு வித கலாச்சாரம் விரவிக்கிடக்கும் மாநிலம். இதுவரை கலைஞரை வந்து ஒரு மூத்த கூட்டணி கட்சி  தலைவர் என்னும் முறையில் கூட  மரியாதை நிமித்தம் சந்திக்காமை  போன்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அடுத்து மிக மிக முக்கியமாக இலங்கை பிரச்சனை.

இது ஒட்டு மொத்த தமிழக தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடிய பெரிய சக்தியாக திகழும் என்னும் நிலை தான். ஏனனில் மாணவர்கள் அதாவது கல்லூரி மாணவர்கள் ஓட்டுகள் என்பது ஈழ விஷயத்தில் நிச்சயம் காங்கிரசுக்கு எதிராக மட்டுமே அமையும். 2009 தேர்தல் நேரத்தில் ஈழத்தில் உச்சகட்ட போர் நிகழ்ந்தது. மே 13 தேர்தல் எனில் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் பிரபாகரன் படுகொலை... இதற்கே தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு சில பல தொகுதிகள் இழக்க வேண்டியும் சிதம்பரம் போன்றவர்கள் நொண்டி அடிக்கும் நிலையிலும் மணிசங்கர் எல்லாம் மண் கவ்வும் நிலைக்கும் ஆளானது. இதனாலேயே அதிமுகவுக்கு கனிசமாக தொகுதிகள் கிடைத்தன. இது தான் உண்மை. இத்தனைக்கும் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்தது. ஆனால் மக்கள் அப்போதைக்கு எது உக்கிரமான பிரச்சனையோ அதை தான் வைத்து தேர்தல் ஓட்டு போடுகின்றனர். போதாத குறைக்கு சீமான், வைக்கோ, நெடுமாறன் ஆகிய ஓட்டு வங்கி இல்லாதவர்களும் கூட அதிமுகவுக்கு ஆதரவாக அதாவது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என சொன்னால் தானாக அடுத்த கூட்டணி என பார்த்தால் அதிமுக கூட்டணி தானே? அங்கே போய்விட்டனர் நடுநிலையாளர்கள்.

அதன் பின்னர் இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மிகப்பெரிய நலத்திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டன. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், நவீன சாலைகள், மிகப்பெரிய பெரிய பாலங்கள், தேர்தல் வாக்குறுதிப்படி கோடி குடும்பங்களுக்கு வண்ண தொலைக்காட்சி, ஒரு ரூபாய் அரிசி திட்டம், மகளிர் திட்டங்கள், சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு முடிந்த வரை இருந்த வரைசீர் செய்யப்பட்ட விளை நிலம் வழங்குதல், கடைசி கட்டமாக தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நூறு சதம் முடிந்து விட்ட நிலையில் புதியதாக தமிழகம் முழுமையாக குடிசை வீடுகளே இல்லை  எனும் நிலையாக 25 லட்சம் கான்கிரீட் வீடுகள் என ஒரு திட்டம் தீட்டி அதில் ஒன்னரை லட்சம் பயனாளிகளுக்கு வழங்கியும் மீதமுள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்ட சான்றிதழும் வழங்கி தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை செய்வோம் என சொல்லியும் ...இப்படியாக என ஒரு நல்லாட்சி நடைபெற்றும் சட்டசபையில் பிராதன எதிர்கட்சி கூட இல்லை என்னும் நிலை வந்தது.

அதற்கு காரணம் தமிழக மக்கள் மனதில் உள்ளே  "கடலுக்கு அடியில் சுனாமி" என்பது போல மேலே அமைதி உள்ளே சுனாமி என ஈழமக்கள் நிலை அவர்களை அழ வைத்த பெரும்பங்கு அப்போது செய்யப்பட்ட பிரச்சாரமேயாகும். அதை திமுக தவிர்த்திருக்க நல்ல வாய்ப்பும் அமைந்தது. திமுகவினர் தங்கள் மரியாதைக்குரிய ராஜமாதாவாக நினைக்கும் தயாளு அம்மையாரை அறிவாலய முதல் தளத்தில் சி பி ஐ விசாரிக்க அந்த சி பி ஐ ன் உச்சகட்ட தலைவர் என சொல்லப்படும் மத்திய உள்துறை அமைச்சர் கீழ் தளத்தில் "சீட்டு பேரம்" செய்தமையை எந்த திமுகவினரும் ரசிக்கவில்லை. மேலும் திமுகவின் அவசர உயர்நிலை செயல்திட்ட கூட்டம் கூடி காங்கிரசுடன் இனி உறவு இல்லை என அறிவித்த போது திமுகவினர் அதிகபட்சமாக  தங்கள் மகிழ்வை நாடெங்கும் வெளிப்படுத்தியமை யாரும் மறுக்க இயலாது. (அப்போது அன்றைய தினத்தில் எழுதப்பட்ட "பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத்தூளை காறித்துப்பினோம்" என எழுதப்பட்ட கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்)

அப்போது திமுகவினருக்கு எழுந்த ஒரு உணர்சி வெள்ளத்தை அப்படியே தேர்தல் வேலைக்கு பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு காங்கிரசால் ஏற்பட்ட களங்கத்தை போக்கியிருக்கலாம். ஆனால் உயர்நிலை செயல்திட்டத்தின் படி ராஜினாமா செய்ய டெல்லி சென்ற மத்திய அமைச்சர் பெருமக்கள் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் என கட்சியை அடமானம் வைத்து விட்டதாக அப்போது சோலை போன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் அழுது எழுதினர். திமுகவினர் சோர்ந்து போயினர். அப்போது வெற்றி பெற்ற 24 திமுக உறுப்பினர்கள் காங்கிரஸ் உறவு இல்லாவிட்டாலும் வெற்றியடைந்து இருப்பர் என்பது நிச்சயம். தவிர மாவட்டத்துக்கு ஒரு மூன்று தொகுதிகள் இன்னும் அதிகமாக கிடைத்து இருக்கும். ஆக ஆளும்கட்சி என்னும் நிலை இல்லாவிடினும் கூட கண்டிப்பாக வலுவான எதிர்கட்சியாக இருந்திருக்கும். அதே நேரம் அதிமுகவோ மைனாரிட்டி அதிமுக அரசாக ஆகியிருக்கும். அந்த பொன்னான வாய்ப்பை கூட திமுக நழுவ விட்டது காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே என்பது உண்மை. ஆக ஈழப்பிரச்சனை அத்தோடு முடிந்ததா இந்த இரு வருடங்களில் அதாவது இன்னும் சொல்லப்போனால் 2009 மே 17 க்கு பின்னர் கூட காங்கிரசுக்கு ஈழத்தின் மீதான வெறி தணிந்ததா எனில் இல்லை இல்லை இல்லவே இல்லை என்பதை சமீபத்தில் சுஷீல்குமார் ஷிண்டே "இலங்கை நட்பு நாடு" என சிலாகித்து சொன்னது கொம்பேரி மூக்கன் பாம்பின் நிலையில் தான் காங்கிரஸ் இன்னமும் ஈழமக்கள் மீது கொண்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

சரி! காங்கிரஸ் இப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தோல்வி அடைய இந்த ஈழம் மட்டுமே காரணமா என நினைத்து பார்ப்பின் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மீது நடுநிலையாளர்கள் கொண்டிருந்த வெறுப்பு இப்போது வழக்கு நடைந்து கொண்டு இருக்கும் போது பலவித பரிணாம வளர்சியுடன் காங்கிரஸ் பக்கம் முழுவதுமாக திரும்பி விட்டது.  திமுகவை பொறுத்த மட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் இருந்து முழுமையாக அல்ல 90 சதம் விலகி வந்து விட்டது . அதனால் இதில் இனிமேல் திமுகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஜே பி சி க்கு பகிரங்கமாக கேட்டாகிவிட்டது..."என்னை விசாரிக்கவும்" என திமுக தரப்பில் இருந்து. இப்போது ஒட்டு மொத்த இந்திய மனநிலை "ராசாவே  தன்னை விசாரிக்க சொல்லி கெஞ்சிகிட்டு இருக்காரு, அவங்க ஒத்துக்கலைன்னா என்னா அர்த்தம்? மன்மோகன் சிங், சிதம்பரம் இவங்களை காப்பாத்த காங்கிரஸ் நினைக்குது'' இதான் இப்போதைய நடுநிலயளர்கள்  மனநிலை. தவிர வழக்கு விரைவாக முடிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா அவர்கள் தனது முழு ஒத்துழைப்பும் நீதிமன்றத்துக்கு தருவதோடு மட்டுமல்லாமல் தினம் தினம் வழக்கு நடைபெற்று ராசாவே தனக்காக வாதாடுவதும், சாட்சிகள் பொய்சாட்சிகள் என நிரூபிக்கப்பட்டு கொண்டு இருப்பதும் அப்போது ஊடகங்களால் பரப்பப்பட்ட ஒன்னேமுக்கால் லட்சம் கோடி என்பது ஒரு கற்பனை எண் என்றும், ராசா ஏலம் விடாமை இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டது, ஏலம் விட்டால் இந்தியாவில் பாலாறும் தேனாரும் ஓடும் என சொல்லி பொய்பரப்புரை எல்லாம் இப்போது ஏலம் விட்டதால் என்ன ஆனது என்பதை நடுநிலைவாதிகள் புரிந்து கொண்டு விட்டனர்.

தவிர ராசா அவர்கள் தமிழகத்துக்கு நீதிமன்ற வார விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தனது கட்சியின் கொள்கை பரப்பு பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் போது மக்களிடை ஏற்படும் ஆரவாரம், தவிர அவரது தொகுதிக்கு போகும் போது கிடைக்கும் வரவேற்புகள் எல்லாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் 90 சதம் திமுக விலகி வந்து விட்டதையே உணர்த்துகின்றன. அது என்ன மீதி பத்து சதம் எனில் அது காங்கிரஸ் கூட்டு தான். அதையும் விட்டு விலகி விட்டால் முழுமையாக 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனை என்பது காங்கிரஸ் பிரச்சனையாகிப்போகும். திமுக தன் தரப்பு நியாயத்தை நீதிமன்றம் மூலம் வெகுசுலபமாக பெற்றுவிடும். ஆகையால் காங்கிரசுக்கும் இப்போது தமிழகத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு தலைமேல் தொங்கும் கத்தி தான்.

அடுத்து காங்கிரசுக்கு தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேறு என்ன பிரச்சனை? காவிரி... ஆமாம்.. தமிழக வாழ்வாதாரம் காவிரி நீர். இன்று காவிரி நடுவர்மன்ற  தீர்ப்பு வெளியாகி அது அரசிதழில் வந்தமைக்காக அதிமுக அதில் சொந்தம் கொண்டாடி பாராட்டு விழா நடத்தி "பொன்னியின் செல்வி"யாகிவிட்டது. இதில் திமுக வரிந்து கட்டிக்கொண்டு சொந்தம்  கொண்டாட  முழு உரிமையும் உள்ளது. நீங்கள்   கடைசியாக நடந்த கிரிக்கெட் உலக கோப்பை போட்டி பார்த்தது உண்டா. அதில் ஸ்ரீசாந்த் என்னும் ஒரு பந்து வீச்சாளர்  வெற்றிக்கோப்பையை தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவார். அவருக்கு பின்னால் அமைதியாக டோணி வருவார். அஃப்கோர்ஸ்  ஸ்ரீ சாந்த் ஓரிரு விக்கெட் கூட எடுத்தார். ஆனால் அவரால் அந்த தொடரில் பல சோதனைகள் இந்திய அணிக்கு. ஆனாலும் கடைசி போட்டியில் அணி வெற்றி பெற்ற போது அவரும் ஒரு அணி உறுப்பினர் தானே அதனால் கோப்பையை தலையில் வைத்து கொண்டு ஆட உரிமை உள்ளது தானே என்னும் நினைப்பில் கேப்டன் டோணி அவர்கள் அமைதியாக பின்னால் வருவார். ஆனால் மக்களுக்கு தெரியும் . இந்த வெற்றி டோணியால்  என்று. ஆனால் அந்த வெற்றி ஊர்வலத்தில் ஆஸ்திரேலிய பவுலர் ஒருவர் ஆனந்த கூத்தாட முடியுமா? "நான் தான் ரன்கள் வாரி வழங்கினேன். நான் தான் சரியாக பந்து வீசவில்லை. அதனால் தான் இந்தியா வெற்றி பெற்றது. ஆக இந்தியா வெற்றிக்கு நான் தான் காரணம்" என கூவினால் எந்த அளவு அபத்தமோ அப்படித்தான் காங்கிரஸ் தமிழக காவிரி வெற்றிக்கு எவ்வித சொந்தமும் கொண்டாட இயலாது. ஏனனில்  அந்த காவிரி நடுவர் மன்றம் அமைத்தது திமுக ஆட்சியில் 1989ல் மத்தியில் வி.பி சிங் ஆட்சி. அரசிதழில் வெளியிட்டது இப்போது காங்கிரஸ் ஆட்சியில் தான் எனினும் உச்சநீதிமன்ற குட்டுக்கு பின்னர் அது பிப்ரவரி 20குள் வெளியிட்டே ஆக வேண்டும் என பெரிய குட்டாக காங்கிரஸ் அரசின் தலையில் போட்ட பின்னர் தான் அது நடந்தது... நடுவே வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சில நன்மைகள் நடந்தன. ஆனால் காங்கிரஸ் எங்கும் தலைகாட்டவில்லை. காரணம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வந்து போகும் வாய்ப்பு இருந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதால் காவிரி பிரச்சனை பற்றி காங்கிரசுக்கு எப்போதும் கவலை இருந்தது இல்லை. எனவே காவிரி பிரச்சனையிலும் காங்கிரஸ் அவுட்.

அடுத்து தமிழகத்தில் இருந்து சமீபமாக ஐ ஏ எஸ் போன்ற சிவில் தேர்வுகளில் தேர்வாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழக கிராமப்புற மாணவர்கள். வழக்கம் போல காங்கிரஸ் அரசு இதிலும் மண் அள்ளி போட்டது இரு நாட்கள் முன்பாக. இனி தமிழ் வழி எழுத முடியாது. அப்படி எழுத வேண்டும் எனில்... என்று சொல்லி சில குளறுபடி சட்டங்களை போட்டு அத்தோடு விடாமல் அதாவது குதிரை கீழே தள்ளியது மட்டும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்னும் கதையாக இந்திக்கு வாடா, தமிழுக்கு தடா என சொல்லாமல் சொல்லி இந்தி திணிப்புக்கு மீண்டும் அச்சாரம் போட்டுவிட்டது. இங்கே ஏற்கனவே இரு நாட்கள் முன்னதாக தமிழக அரசு தேர்வானைய தேர்வுகளுக்கு கூட தமிழ் இனி கிடையாது என அறிவித்த மாநில அதிமுக அரசுக்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என சொல்லும் படியாக காங்கிரஸ் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது.

அடுத்து தமிழக மீனவர்கள் இதுவரை 500 பேர் வரை சுட்டு கொல்லப்பட்ட போது வாய்மூடி நிலைமையை மத்திய அரசு உற்று நோக்குகின்றது என்ற புளித்து போன வசனத்தையே பேசிக்கொண்டு இருந்த காங்கிரசின் மத்திய அரசு இன்றைக்கு இரு கேரள மீனவர்கள் மன்னிக்கவும் இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட போது சுட்டுக்கொன்ற இத்தாலிய மாலுமிகளை சிறை வைத்து ஜாமீனில் நாட்டுக்கு அனுப்பி இப்போது அவர்கள் அங்கே உட்காந்து கொண்டு இந்தியாவுக்கு பெப்பே காட்டிய பின்னர் விழித்துக்கொண்டு பதிலடியாக இத்தாலிய தூதரை நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என சொல்கின்றதே, இதையே 500 தமிழக மீனவர்கள் செத்து போனபோது ஏன் இலங்கை தூதரை நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என சொல்லவில்லை என நாம் கேட்கவில்லை. நடுநிலையாளர்கள் கேட்கின்றனர்.

ஆக காங்கிரசுக்கு தமிழகத்தில் ஈழம், தமிழக மீனவர்கள், காவிரி, இந்தி ,ஸ்பெக்ட்ரம் ஆகிய பெரிய பிரச்சனைகள் தமிழகத்தில் பாராளுமன்ற  தேர்தலில் விழுங்க காத்து கிடக்கின்றன. அதை தவிர அதற்கு கொசுறாக ரயில்வே கட்டணம், கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு, மானியம் நிறுத்தம், பெட்ரோல் , டீசல் என ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன.

ஆகவே திமுக இனியும் காங்கிரசை தூக்கி சுமக்க வேண்டுமா? அதும் தேர்தல் சீட்டு பேரத்தின் போது அவர்கள் அடிக்கும் கூத்துகள், தவிர கூட்டணி கட்சிக்கு மானசீகமாக உழைக்காமை போன்ற இன்ன பிற காரணங்களால் திமுக இனியும் தாமதிக்காமல் காங்கிரசை கை கழுவ வேண்டிய நேரம் இது என நடுநிலையாளர்கள் மட்டுமல்ல திமுகவினரும் விரும்புகின்றனர்.

இதனிடையே எப்போதும் போல ஒரு கோஷமும் இப்போது கிளம்பி உள்ளது அல்லது கிளப்பி விடப்பட்டுள்ளது. திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இது போன்ற கோரிக்கைகள் 2009 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கூட எழுந்தது. 2009ல் திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இங்கே தமிழகத்தில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வாங்கி இருக்கும். அதிமுக தன்னிடம் இருந்த சில்லரை எம் பிக்களை வைத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு முட்டு கொடுத்து விட்டு இங்கே காங்கிரஸ் தயவுடன் மைனாரிட்டி ஆட்சி அமைத்து இருப்பார்.

திமுக ஆரம்பித்த நலட்திட்டங்கள் எல்லாம் அப்போது 25 முதல் 40 சதம் வரை மட்டுமே முடிவடைந்த நிலை. என்ன ஆகியிருக்கும்? 2011ல் திமுக ஆட்சியில் விட்டு போன போது 95 சதம் முதல் 99 சதம் வரை முடிந்த நலத்திட்டங்கள் கூட அதிமுக ஆட்சி வந்த பின்னர் கிடப்பில் போடப்பட்டு அதில் நெம்மேலி கடல்நீரை குடிநீராக ஆக்கும் திட்டம் மட்டும் இப்போது தென்சென்னை வாசிகள் முழுமையாக பயன்படுத்தும் அளவுக்கு இப்போது இரண்டரை ஆண்டுக்கு பின்னர் தான் வேறு வழி இல்லாமல் கொண்டு வரப்பட்டது. மற்ற திட்டங்கள் எல்லாம் என்ன ஆயிற்று? மின் திட்டங்கள் எல்லாம் 80 சதம் பணி முடிந்த திட்டங்கள் கூட அதிமுக அரசு செயல்படுத்தாமல் விட்டு விட்டு தமிழகம் இருளில் மூழ்கிவிட்டது. இந்த நிலை 2011 முதல் தானே. இந்த குபீர் தமிழுணர்வாளர்கள் சொன்னதை கேட்டு அப்போதே 2009ல் நாம் ஆட்சியை இழந்திருந்தால் தமிழகம் இன்னும் ஒரு இரண்டரை ஆண்டுக்கு முன்பே சுடுகாடு ஆகும் பணி ஆரம்பித்து இருக்கும் அத்தனையே! ஆனால் அப்போது 2009ல் ஆட்சி இழந்திருந்தால் ஜெயா டிவி "மைனாரிட்டி திமுக ஆட்சி" என சொல்வது நின்று போயிருக்கும். ஆனால் கலைஞர் டி வியோ "அதிமுக மைனாரிட்டி அரசு" என சொல்லியிருக்காது நாகரீகம் கருதி. இது மட்டுமே நடந்திருக்கும்.

இந்த குபீர்கள் பற்றி ஒரு சில வரிகள் சொல்லியாக வேண்டும். சீமான், நெடுமாறன் போன்ற சிறு கும்பல் குபீர்கள் 2009 முதலே திமுகவுக்கு எதிராக மிக பயங்கரமாக விமர்சித்து வந்தனர். இவர்கள் சொன்ன வாதம், திமுக மத்திய அரசில் இருந்து வாபஸ் வாங்க வேண்டும் அப்படி வாங்கினால் நாங்கள் திமுகவை கொண்டு போய் உச்சாணிக்கொம்பில் வைத்து விடுவோம். அட! என்னே ஒரு சக்தி அவர்களுக்கு! 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட போது  சந்திரசேகர் பிரதமர், கலைத்தவர் ஆர்.வெங்கட்ராமன். என்ன காரணம்? விடுதலைப்புலிகள் நடமாட்டம் தமிழகத்தில். சரி போகட்டும் அதன் பின்னர் வந்த தேர்தலில் இந்த குபீர் பெருமக்கள் திமுகவை உச்சாணிகொம்பில் கொண்டு வந்து வைத்தனரா? இல்லையே. அவர்கள் அப்போது பிறக்கவே இல்லையா? அல்லது ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லையா? சரி அதல்லாம் போகட்டும். 2011 திமுக ஆட்சி போகும் வரை இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என திருவாய் மலர்ந்த அதிமுக தலைமைக்கு ஆதரவாக பேசி வந்த சீமான், நெடுமாறன் கோஷ்டியினர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களிடம் போய் "என்ன ஆயிற்று உங்கள் கோஷம் இலை - ஈழம் என கேட்டார்களா எனில் இல்லை.

 அவர்கள் தங்கள் போராட்ட வியூகத்தை (??) மாற்றிக்கொண்டனர். ஆமாம் மாபெரும் கோலப்போட்டி போராட்டம். என்ன கொடும இதல்லாம்? மக்கள் இப்போது அவர்களை புரிந்து கொண்டுவிட்டனர். ஆகா இவர்கள் பி.டி உஷா போல வேகம் காட்டுபவர்கள் இல்லை. பிடி கத்தரிக்காய் போல "இனப்பெருக்கத்துக்கு" உதவாத பிண்டங்கள் என்று! அம்மையார் ஆட்சியில் வாய்மூடி மௌனசாமியாராய் இருந்த அவர்கள் இன்று கலைஞர் தலைமையில் "டெஸோ" மீண்டும் புத்துயிர் பெற்றவுடன் மீண்டும் தலையை தூக்கி எட்டிப்பார்த்து திமுக எம் பிக்கள் வாபஸ் வாங்க வேண்டும் என கோஷம் கிளப்பி விட்டுள்ளனர். ஆனால் மறந்தும் கூட அந்த குபீர்கள் அதிமுக எம்பிக்கள் பற்றி வாயை மட்டுமல்ல எதையுமே திறப்பது இல்லை. திறந்தால் என்ன ஆகும் என அவர்களுக்கு தெரியும். இப்போது கூட மாணவர்கள் ஈழப்பிரச்சனை காரணமாக உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உண்ணாவிரத பந்தலை இழுத்து மூடிய அதிமுக அரசை கண்டிக்காமல் அப்படி செய்த "ஏட்டய்யா" மீது தனது கண்டனத்தை பதியவைத்து தங்கள் வீரத்தை நிலைநாட்டிக்கொண்டுள்ளனர். இதே குபீர்கள் தான் முத்துமுகார் தீக்குளித்த போது கல்லூரிக்கு விடுமுறை விட்டு ஈழப்புரட்சியை மழுங்கடிக்க செய்தார் கலைஞர் என வாயும் ,ஆசனவாயும் கிழிய கிழிய பேசினர். இதே 1964-65ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது மாணவர்கள் 5 மாதம் விடுமுறையில் தான் இன்னும் நல்ல முறையில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர் என அப்போராட்டத்தின் போது மாணவராக இருந்து கொண்டு கலந்து கொண்ட வைக்கோவுக்கு ஏன் மறந்து போனது. லீவ் விட்டால் சினிமாவுக்கு அல்லது வீட்டுக்கு ஓடிவிட வேண்டும் போராட்டம் புஸ் ஆகிவிடும் என சொல்லி மாணவர்களை கொச்சை படுத்தும் இந்த குபீர்களை என்ன சொல்வது?

சரி! 2009ல் இருந்த நிலை இப்போது இல்லை திமுகவுக்கு. காங்கிரசை கை கழுவி விட்டால் இங்கே உடனே அதிமுக ஆட்சி கவிழாது. திமுக ஆட்சிக்கு உடனடியாக வர இயலாது. திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அதிமுக ஆட்சியில் நின்று போன மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த இயலாது உடனடியாக. சரி மத்தியில் திமுக ஆட்சியில் பங்கெடுப்பதால் மீதி இருக்கும் ஒரு வருடத்தில் புதிதாய் எதும் கிழித்து விட இயலாது. இதுவரை ரயில்வே நிலைக்குழு தலைவர் பதவி மட்டுமே வகித்து வந்த டி.ஆர் பாலு அவர்கள்  சமீபத்திய ரயில்வே பட்ஜெட்டில்  கூட கிட்டத்தட்ட 15 புதிய ரயில் திட்டம் இன்னும் பல பல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார். பொது பட்ஜெட்ம் போட்டாகி விட்டது. இனி அடுத்த மத்திய பட்ஜட் புதிதாய் பதவி ஏற்கும் மத்திய அரசு மட்டுமே போட இயலும். ஆக மத்தியில் பதவியில் இருந்தால் தமிழகத்துக்கு நன்மை செய்ய  இயலும் என சொல்ல இனி எதுவும் இல்லை. 2ஜிஸ்பெக்ட்ரம் போன்ற திமுகவுக்கு அவப்பெயர்  கொடுத்த வழக்குகளில் கூட திமுகவை பலி கொடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே காங்கிரஸ் இந்தநிமிடம் வரை நினைத்துக்கொண்டு காய் நகர்த்திக்கொண்டு உள்ளது. அதே ஸ்பெக்ட்ரம் வழக்கை விட பெரிய மாஜிக் நம்பர் கொண்ட நிலக்கரி ஊழல் என்ன ஆனது என தெரியவில்லை. அதே ஸ்பெக்ட்ரம் ராணுவத்துக்கு ஒதுக்கியதில் ஐ எஸ் ஆர் ஓ வுக்கு ஒதுக்கியதில் மன்மோகன் நேரடி சம்மந்தம் உள்ள நிலையில் அந்த பிரச்சனை என்ன ஆனது என  தெரியவில்லை. ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் பி ஜே பியிடம் "பாராளுமன்ற விவாதம் மட்டுமே, அதற்கு மேல ஜே பி சி விசாரணை மட்டுமே" என கண்டித்து கூறிவிட்டது போல 2ஜி  வழக்கில் ஏன் சொல்லவில்லை?

ஆக காங்கிரசை நம்பி இனியும் திமுகவுக்கு பலன் இல்லை. மேலும் அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். உடனே இப்போது சிலர்  "காங்கிரசை விட்டு திமுக வெளி வராது. ஏனனில் மத்திய அமைச்சராக அழகிரி இருக்கும் வரை மட்டுமே அந்த அம்மா கைது செய்யாது. ராஜினாமா செய்தால் உடனே பிடித்து உள்ளே போட்டுவிடும்" என புதிதாக சொல்லிவருகின்றனர். இதல்லாம் சும்மா கதை. அந்த அம்மையாருக்கு ஒருவரை கைது செய்ய வேண்டும் எனில் அது சசிகலா வீட்டு ராவணன் ஆக இருந்தாலும் சரி கைது செய்யும். ஆளானப்பட்ட இந்தியாவின் மூத்த தலைவராக இருந்தவரையே நடு இரவில் கொடூரமாக கைது செய்த அந்த அம்மையாருக்கு அழகிரி கைது என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை. தவிர கலைஞர் ரத்த அழகிரி கைதுக்கு பயந்தவரும் இல்லை என்பதை நிரூபிக்கவாவது திமுக தனது எம் பிக்களை ராஜினாமா செய்து விட்டு தன் மீது இருக்கும் காங்கிரஸ் கரையை நீக்கிக்கொள்ள வேண்டும். வீரபாண்டி ஆறுமுகம், கே என் நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன் என அதிமுக அரசு வழக்கு போட்டு கைது செய்யாத ஆட்களே திமுகவில் இல்லை. சிறைவாசம், அலைக்கழித்தல் என செய்யவில்லையா? இதே வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை கிடைத்து விட்டதே. லைவ் ரிலே அனால் கொஞ்சம் டிலே என்பது போல அவரது லைஃப் முடிந்த பின் விடுதலை என்பது மட்டும் வருத்தமான நிகழ்வு. மற்றபடி எந்த திமுகவினரும் சிறைக்கு அஞ்சுபவர்கள் கிடையாது. அப்படி அஞ்சினால் அவர்கள் திமுகவினர் கிடையாது. இது தான் திமுக வரலாறு. இன்றைக்கும் பார்க்கலாமே மு.க.ஸ்டாலின் வீட்டில் இல்லாத போது கூட ஏதோ வழக்குக்காக போலீஸ் தேடி வந்தால் அடுத்த நாள் இவர் போலீஸ் வீட்டுக்கு போய் என்ன விஷயம் என கேட்கும் அளவு நெஞ்சுரம் கொண்டவர்கள் தானே திமுகவினர். இதில் அழகிரி அவர்களின் பெயரை கெடுக்கும் விதத்தில் ஏன் ஊடகங்கள் செயல்படுகின்றனர் என்பது புரியவில்லை.

இப்படி வைத்துக்கொள்வோம். ஒரு வேளை அதிமுக தனது ஒன்பது மக்களவை உறுப்பினர்களை இன்றே ராஜினாமா செய்ய சொல்லிவிட்டால் என்ன ஆகும். அதிமுகவுக்கு இழக்க எதும் இல்லை அதனால். இங்கே ஆட்சி கலையாது. ஆனால் அந்த 9 எம் பிக்களால் தமிழகத்துக்கும் பெரிதாக எதும் நன்மையும் மத்திய அரசால் கிடைக்கவும் இல்லை. இவர்களும் கேட்டதும் இல்லை எனும் போது  இன்னும் ஒரு வருஷம் தானே இருக்கு என நினைத்து ராஜினாமா செய்ய சொல்லிவிட்டால் சரித்திரம் என்ன ஆகும்? உடனே இந்த குபீர்கள் சும்மா விடுவார்களா? அதன் பின்னர் வரும் பாராளுமன்ற தேர்தலில் என்ன ஆகும்? இதை திமுக சிந்தித்து பார்க்க வேண்டுமல்லவா?


ஆக உடனடி முடிவாக திமுக காங்கிரசை "கை" கழுவினால் மட்டுமே இந்த குபீர்களால் திமுகமீது பூசப்பட்ட கறை நீங்கும். இது எல்லாம் ஒரு சாதரண திமுக தொண்டனுக்கே தெரியும் என்கிறதெனில் திமுக  தலைமைக்கும் நன்றாக புரியும். ஆனால் இதை எல்லாம் மீறியும் "கறை" நல்லது என திமுக நினைக்குமானால் அந்த "கறை"யை நீக்க எந்த சர்ஃப் போட்டாலும் முடியாது.திமுகவின் கறை போக்க சிறந்த சர்ஃப் என்பதே தொண்டர்கள் தாம். அந்த தொண்டர்களை சோர்வடைய செய்து விட்டு அதாவது எக்ஸ்பயரி டேட் கொண்ட சஃர்ப் போட்டு எந்த கறையையும் எடுக்க இயலாது.

திமுக தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு அதன் படி நடக்கும் ஒரு சாதாரண திமுக தொண்டனின் குரல் இது.

March 10, 2013

அபிஅப்பாவும், ஆரூர் மூனா செந்திலும்! கொஞ்சம் டோண்டு சாரும் உண்டு!

ஆகா! எனக்கு இந்த தமிழ்மணம் அதிலே ஓட்டு, சூடான இடுகை, வாசகர் பரிந்துரை எதிலும் நம்பிக்கை போயே போச்சு. எப்போ டாட்காமா இருந்த என்னை டாட் இன்னா "பேண்ட்" போடவிட்டாங்களோ அன்னிக்கு நளதமயந்தி மாதவன் மாதிரி விசுக்கு விசுக்குன்னு வலது காலை தூக்கி இல்லாத வேட்டியை அனிச்சையா மடக்கி கட்டினவன் தான். நேத்து வரை கட்டி கிட்டு கிடந்தவனை ஆரூர் மூனா செந்தில்தான் கூட்டிட்டு போய் உனக்கு பேண்டு சட்டை வாங்கியாறேன்னு சொல்லி அழகு பார்த்தாரு. சரி ஒரு நன்றி சொல்லுவோமேன்னு ஒரு ட்ராஃப்ட் அடிச்சு அதை "சேவ்" செய்கிறேன் பேர்வழின்னு  சேவ் செய்ய போனா "ஆரூர் மூனா செந்தில் already exists''...சரின்னு செந்தில் திருவாரூர், செந்தில்,எல்லாம் அடிச்சு பார்த்தா அதே போல வருது. சரின்னு ஒரு முடிவோட அதை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு ஆரூர் மூனா பூனா செந்தில்னு கூட அடிச்சு பார்த்தேன்... அட தக்காளி ... அதும் அல்ரெடி எக்சிஸ்ட்... ஆக இந்த செந்திலை நான் இரவு முழுக்க கடிச்சு கடிச்சு தின்னுருக்கேன்.அந்த மகாபாவிக்கு தான் இப்ப நன்றி சொல்லனும். என் சைஸ்க்கு இருந்தா சாதா  பாவி. கொஞ்சம் நார்மலா இருந்தா கூட ஸ்பெஷல் சாதா பாவின்னு வச்சுக்கலாம். ஆனா இவரு என் தம்பிக்கு போட்டியா இருப்பாரே... அதனால மகாபாவி... (அய்யோ ..முடியல..என்னால சப்ப கட்டு கட்ட முடியல...)

அந்த மகாபாவி என்னான்னா என்னை ஆகாஓகோங்குது.என்னை இதுவரை எழுத்துக்காக புகழ்ந்தது ரெண்டு பேர் தான். ஒரு நாள் காலைல ஆரூர் மூனா செந்தில். அவர் தான் இரவும் புகழ்ந்தார். ஆக ரெண்டு பேர். சமீபமா நான்  மதுவும் அருந்துவதில்லையா... உடனே ஓடிப்போய் அந்த ட்ராஃப்டை எல்லாம் படிச்சு செத்துட்டேன். அட, என்ன ஒரு கேவலமான விஷயத்துக்கு எல்லாம் ஆரூர் மூனா செந்திலை திட்டி இருக்கேன்...  அப்படின்னு நினைச்சு கிட்டு இருக்கும் போதே திடீர்ன்னு செந்தில் கிட்ட இருந்து ஒரு பின்னூட்டம் வருது. நீங்க உங்க பதிவை டாட் காம்ல மாத்தினா நீங்க தான் மகுடம்... இப்படியாக... மேலும்  ஒரு கோப்பையில் காசி ஆறுமுகம்,பில்கேட்ஸ், குழலி, பொன்ஸ்,  மயிலாடுதுறை சிவா, பெயரிலி எல்லாரையும் சம அளவில் போட்டு கலக்கவும் என செய்முறை வேறு....

செஞ்சேன்... அட ஆமாம் டபார்ன்னு டெஸ்ட் ட்யுப்ல அடில இருந்து ஒரு இண்ச் மேல கரு வளையம். சுரேகா ,ஷ்ரேயா ன்னு கத்திகிட்டேன் .நானும் நளதமயந்தி கிளைமாக்ஸ் மாதவன் மாதிரி கோட்டு சூட்டு ஆளாகிட்டேன். இன்னிக்கு நானும் மகுடமாம். இதல்லாம் எனக்கு அதிகம் கேட்டோ.....

ஆனா ஒன்னு என் அன்பான செல்ல எதிரி என் அன்பான ஆரூர் மூனா செந்திலுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

இதையே சொல்லிகிட்டு இருந்தா... அனேகமா செந்திலே கடுப்பாகிடலாம்...  நெக்ஸ்ட்....

இந்த செந்தில் இருக்காரே செந்தில்... (அய்யோ... இன்னிக்கு செந்தில் ப்ராணமாவே ஆகிடுச்சு. (அட தேவுடா ..அந்த ஆளு ஒரு 'ஆம்பளை ஆளு பிரா போட்ட' படத்தின் விளைவு...புராணம் 'ப்ரா'னம் ஆகிடுச்சு)..இந்த ஆள் குடிச்சா நல்லா எழுதுவாரு. ஆனா சிலர் குடிச்சா குழப்பம் ஆகிடுவாங்க.

இப்படித்தான்... ஒரு நாள் டோண்டு சார் இறந்துட்டாரு. உடனே ஒரு பதிவு போட்டேன் பேஸ்புக்ல. இதான் என்னால் செய்ய முடிஞ்ச அஞ்சலி. அதை விடுங்க. பகல்ல பதிவு போட்டாச்சு. சும்மா இருக்குமா மனசு, அதும் ராத்திரில.... போனை போட்டேன் டோண்டு சாருக்கு.

"சார்"
"நான் சார் இல்லை சாரி"

"அதன்ன சார் செத்து போனா பெண்பாலா ஆகிடுவாங்கலா. சாரின்னு சொல்றீங்க"

"அந்த சாரி இல்லை, இது இங்கிலீஷ் சாரி அதாவது sorry"

"மன்னிக்கனும்... ஐ நீட் டு ஸ்பீக் வித் டோண்டு சார்"


அடுத்து ஆம்பளை குரல்.... டோண்டுவே தான்...

சித்தப்பா என்னா எப்டி இருக்கீங்க?

"அட போங்க டோண்டு சார்... மொதல்ல பொம்பளை கொரல் இப்ப ஆம்பளை கொரலா"

"சரி சித்தப்பா, உங்களுக்கு ஓவர் ஆகிடுச்சு"

"யோவ் அது இல்லய்யா. நீர் செத்ததுக்கு அஞ்சலி சொல்ல வந்தேன்"

"ரைட்டோ... நடத்துங்க"

"யோவ் நான் என்ன உன் வூட்டு வாத்தியாரா? உம்ம காரியம் நடத்துவதுக்கு?... நான் ஒரு ஓரமா ஒக்காந்துட்டு போய்டுவேன்"

"சரி போங்க"

"ஆனா ஒன்னுய்யா ... செத்த பின்னயும் பேசுற பாரு... நீர் மனுசன்"

"ஆமாம்... "

"என்ன ஓமாம்"

"நான் இன்னும் சாகலை'

"இந்த உம்ம ...பீக் .....தன்னம்பிக்கை...பீக்... தான்யா ...பீக் பீக்...எனக்கு புடிச்சது.....க்"

"ங்கொய்யால வச்சுட்டியா... ஆனா காலைல திரும்பவும் பேசுவேன்"

குப்புற அடிச்சு படுத்துட்டேன்.

காலைல என் மனைவி எழுப்பினாங்க. பார்த்தா பத்ரகாளி மாதிரி நிக்கிறாங்க.

"என்னாங்க"

"சொல்லுங்க"

"ஏன் தண்டபாணிக்கு போன் செஞ்சீங்க? என்ன பேசுனீங்க? அவன் எங்க அக்காவுக்கு ஒத்தை பையன். அவன் செத்துட்டதா அவனையே கேட்டிருக்கீங்க... இதல்லாம் நல்லா இருக்கா? "

"இல்லையே, என் போன் காணாம போச்சு நேத்திக்கு கடைத்தெரு போகும் போது" என சொல்லிக்கொண்டே எடுத்து அடியில் வச்சுகிட்டேன். அந்த நேரம் எவனோ போன் செய்ய அது கிர்ர்ர்ர்ர் என நான் உடம்பை தூக்கி தூக்கி போட்டேன்.

பின்ன தான் தெரிஞ்சுது அந்த தண்டபாணியை "dandu" எனவும் நம்ம டோண்டு சாரை "dondu" எனவும் வச்சி தொலைஞ்சி இருக்கேன்.. நல்ல வேளை தண்டபாணி வீட்டுக்கு எழவு கேட்க போகலை!

இந்த குடியால் வரும் குழப்பங்கள் பத்தி இன்னும் ஒரு நாள் விலாவாரியா பேசுவோம்! இன்னும் ஒரு நாள் ......என்ன நாளையே கூட பேசலாம்! நீங்க எல்லாம் விரும்பினாக்க....

குறிப்பு: இது டோண்டு சாரை அவமதிக்கும் பதிவு இல்லை. இறந்தாலும் நம்ம கூட இருக்கார் என சொல்லும் ஒரு சின்ன நினைவூட்டல். அத்தனையே!