பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 28, 2008

அபிஅப்பாவின் தசாவதாரம்!!!

1.ஜெயந்தி! நான் ஷார்ப்பா மார்ச் 27 இரவு கிளம்பி 28 காலை பெங்களூர் வந்திடுவேன். பாப்பாவை நீதான் பார்த்துக்கனும், தம்பிய 3 நாளைக்கு ஜீவ்ஸ் தங்கமணிகிட்ட தத்து கொடுத்திடலாம். மங்களூர் சிவாவுக்கும், பொடியன் சஞ்சய்க்கும் எனக்கும் ஓர சீட் தான். நம்ம வாத்தி இளவஞ்சியும் நானும் ஹம்பி போன பின்ன தனியா கிளம்பிடுவோம் நீதான் உன் அண்ணிய என் பக்கம் திரும்பாம பார்த்துக்கனும். ஆஹ நாம மார்ச் 30 தூள் கிளப்பறோம். அப்பாகுரங்கு நாமக்கல் சிபி கூட வர்ரார்.(அப்பாகுரங்குன்னா என்னான்னு குட்டி குரங்கு துர்க்காகிட்ட கேட்டுக்கலாம்)


2.குசும்பா! நீ எப்படின்னு எனக்கு தெரியலை! ஆனா நான் சொன்ன சொல் தவற மாட்டேன் என உனக்கு நல்லாவே தெரியும். ஷார்ப்பா மார்ச் 30 காந்தி காக்காய் ஓட்டும் இடத்துக்கு மாலை 5க்கு வந்திடுவேன். தல பாலபாரதி அரேஞ் பண்ணின மீட்டிங்க்கு வந்திடுவேன். நாம உன் கல்யாண பத்திரிக்கை குடுத்துடுவோம். தூள் கிளப்பிடலாம்.

3.எக்ஸ்: என்னப்பா, உன் அப்பாவுக்கும் வயசாச்சு, இனிமே நீதான் நம்ம சியாமளா கோவில் டிரஸ்ட்டியா இருக்கனும் என்ன சொல்றே!

நான்: என்னங்க நான் துபாய்ல இருக்கேன், கோவில் பொருப்பு எல்லாம் எனக்கு எதுக்கு!

எக்ஸ்: அதனால என்ன நீங்க அங்க இருந்தா என்ன ரப்ரிதேவி ஆட்சி பண்னுங்க!

நான்:மனதுக்குள் (பூலாந்தேவிய போய் ரப்ரிதேவின்னு சொல்றாங்களே) சரி மார்ச் 30க்கு மீட்டிங் போட்டுடுங்க நான் ஷார்ப்பா மாலை 5க்கு வந்திடுவேன்!!

4.ஸ்கூல் HM: தொல்ஸ், நம்ம சீமாச்சு 20 நாள் முன்ன வந்த போது ஏதோ ஏர்கலப்பை பத்தி சொன்னார். நம்ம ஸ்கூல் ஸ்டாப்ஸ் எல்லாருக்கும் சொல்லி குடுத்துட்டு போப்பா!

நான்: அதுக்கு என்ன சார் சொல்லி குடுத்தா போச்சு! நம்மா ஸ்டாப்ஸ் எல்லாரையும் ஷார்ப்பா மார்ச் 30 க்கு காந்தி காக்காய் ஓர்ரும் இடத்துக்கு வர சொல்லிடுங்க!

ஸ்கூல் HM: ஓ நம்ம மீட்டிங் ஹாலா! வர சொல்லிட்டா போச்சு!

5.வீட்டுக்கு எதிர்ல உள்ள கிரவுண்டு பசங்க: அங்கிள், நாங்க நம்ம திருவள்ளுவர் நகர் கிரிக்கெட் டீம் vs ராஜேஸ்வரி நகர் டீம் மேட்ச் நடக்குது அங்கிள்,

நான்: சரி, யார் கேப்டன்!

பசங்க: நம்ம ராமசாமி தான்! அங்கிள், நீங்க தான் மேட்சுக்கு தலைமை தாங்கி நம்ம டீமுக்கு ஸ்டெம்ப், பேட், கிளவ்ஸ் எல்லாம் வாங்கி தரணும்ன்னு நாங்க முடிவு செஞ்சுட்டோம்!

நான்: அதல்லாம் வாங்கி தர்ரேன் ஆனா நம்ம நட்டுதான் கேப்டன் ஓக்கேவா!

பசங்க: அது எப்படி முடியும் அங்கிள்!

நான்: முடியும் பசங்களா! முடியும்!(படத்தை பார்க்கவும்)


சரி எப்போ மேட்ச்!

பசங்க: ஷார்ப்பா மார்ச் 30 மாலை 5க்கு நீங்க பரிசு தர்ரீங்க!

6.அம்மா: தம்பி! உன் கிட்ட கொஞ்சம் பேசனும்டா! நீ எப்போ ஃப்ரீ;

நான்: மார்ச் 30 மாலை 5க்கு நான் ரொம்ப ஃப்ரீமா உன் மடில படுத்துகிட்டே பேசலாம்!

7.நான்: சார் எப்படியிருக்கீங்க நான் அபிஅப்பா!

முத்துலெஷ்மிஅப்பா: தம்பி! எப்படி இருக்கீங்க! எப்போ வந்தீங்க, எப்போ வீட்டுக்கு வர்ரீங்க, ஆதிரையான் எப்படி இருக்கார்!(ஆதிரையான் முத்துலெஷ்மி அம்மா வச்ச பேர்)

நான்: நல்லா இருக்கேன்! பாப்பா, தம்பி, கூட்டிகிட்டு ஷார்ப்பா மார்ச் 30 மாலை 5க்கு வந்திடுவேன் சார்!

8.தங்கமணி: என்னங்க என் அக்கா பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க வர்ராங்க எந்த தேதில வந்தா உங்களுக்கு சவுகரியமா இருக்கும்?

நான்: மார்ச் 30 மாலை 5 மணிக்கு நான் ஃப்ரீ

9.அபிபாப்பா: அப்பா என் பிரண்ட் மொஃபீனா வீட்டுக்கு போகனும் எப்போ போகலாம்! எங்க அப்பாதான் உலகத்திலேயே அழகு அப்பான்னு சொல்லிட்டேன்!

நான்: அதுக்கு என்னடா கண்ணு நான் மார்ச் 30 மாலை 5க்கு ரொம்ப ஃப்ரீ வந்துடலாம்!

10.திருவள்ளுவர் நகர் வாசிகள்: அபிஅப்பா! உங்களுக்காகத்தான் வெயிடிங்! நாம நெனச்ச மாதிரி இல்ல நம்ம கவுன்சிலர் மாங்கா மண்டி கிரவனன்! அநியாயத்துக்கு குடிச்சுட்டு அலப்பறை பண்றான். நாம நமக்கு நாமே திட்டத்துல சேர்ந்து ரோடு போடுவோம்!

நான்: ங்கொய்யால அவன் குடிக்கிறானா, நான் கேக்குறேன் அவனை! அவன் இப்ப எங்க இருக்கான்! சரி மார்ச் 30 மாலை 5க்கு மீட்டிங் போடுங்க, ஷார்ப்பா வந்திடுவேன்!
******************************************************
சந்திரசேகர்(அட்வகேட்): அபிஅப்பா, எப்ப வந்தீங்க! நம்ம பசங்க எல்லாம் உங்களை பார்க்க ஆசையா இருக்காங்க! எப்ப வர்ரீங்க!

நான்: சார் நான் வந்து……

சந்திரசேகர்: இல்ல சார்! நீங்க மார்ச் 30 ரொம்ப பிசி! போகட்டும்! நீங்க எப்போதும் போல உங்க நண்பர்கள் திருமணத்துக்கு செய்வது போல் இப்பவும் செய்யுங்க அபிஅப்பா! புண்ணியத்தை பரிசா கொடுப்பது நீங்க மட்டும் இல்லைன்னு இப்போ புரிஞ்சுகிகிட்டேன் உங்க சீனியர் உங்க சீமாச்சு அண்ணன் பதிவுகளை பார்த்து!

நான்: சார்! அய்யனார் கல்யாணத்துக்கு ஏப்ரல் 14 சாப்பாடு பின்ன என் பெரிய கூட்டத்தோட வந்து ஏப்ரல் 15 செம சாப்பாடு குசும்பன் என்கிற சரவணன் கல்யாணத்துக்கு!!! சார் நான் உங்களுக்கு கொடுத்த வாக்கை எப்பவாவது மீறி இருக்கேனா????????????????


டிஸ்கி:”அன்பகம்” செவிடு ஊமை குழந்தைகளும் நம் குழந்தைகளே!!!

March 27, 2008

Naan Romba Busy!!!!

பாப்பா ஷூக்கு பாலிஷ் போட்டாச்சு வேற என்ன செய்யனும்!

தம்பி உச்சா போயிட்டான், நானே அவன் டவுசரை மாத்திட்டேன்….

நைலக்ஸ் புடவைக்கு அஞ்சு நிமிஷம் சுத்த விட்டா போதுமா?

வாட்டர் டேங்கை என்னமா சுத்தம் பண்ணியிருக்கேன் பாரு!

ஹல்லோ அவத்திகீரை கிடைக்கலை அதுக்கு பதிலா வேற எதுனா கீரை வாங்கியாரவா?

குக்கர் இதுவரை அஞ்சு விசில் அடிச்சுடுச்சு ஸ்டவ்வை ஆஃப் பண்ணிடலாமா?

துணி எல்லாம் காய்ஞ்சுடுச்சு எடுத்து வந்துடவா

அதனால என்ன எனக்கும் மானாட மயிலாட பிடிக்காது நாம ஜோடி நம்பர் 1 பார்க்கலாமே ஒன்னும் பிரச்சனை இல்லை!

ஃபேனை துடைச்ச பின்ன பாத்ரூம் கழுவலாமா இல்ல முதல்ல பாத்ரூம் கழுவிடவா?

பாப்பா ஹோம் ஒர்க்கை முடிச்சுட்டேன்!

ஹய்யோ நீ எதுக்கு வெங்காயம் எல்லாம் உரிச்சுகிட்டு, நான் இருக்கேனே பார்த்துக்க மாட்டேனா?

என்னது டெபாசிட்ன்னா உன் பேர்லயும் இன்சூரன்ஸ்ன்னா என் பேரிலுமா ஓக்கே டன்!

வண்டி ரெடி, இன்னிக்கு எந்த கோவிலுக்கு?

என் ஹெல்த் மேல என்ன ஒரு கரிசனம் உனக்கு, காபில சர்க்கரையே இல்லியே!

உனக்கு பிடிச்சு இருந்தாலும் சரி நான் ஒத்துக்க மாட்டேன், இந்த சீரியலை மாத்து, அவ மூக்கை பார்த்தாலே வெண்டைக்காய் மாதிரி இருக்கு, காதை பாரு எத்தினி தோடு…சே இவளெல்லாம் எதுக்கு நடிக்க வர்ரா! உவ்வே!

பேங்க்குக்கு போயிட்டு, எலக்ரிக் பில் கட்டிட்டு, அரிசி மூட்டை எடுத்துகிட்டு வரும் போது கேஸ்க்கு பதிய வச்சுட்டு, மங்கையர்மலர் வாங்கிட்டு சுருக்க அஞ்சு நிமிஷத்துல வரனுமா, வந்துட்டா போச்சு!

என்னது வாசல்ல சங்கர், கார்த்தி வந்திருக்காங்கலா, நான் இல்லைன்னு சொல்லிடு!

எட்டு புள்ளி எட்டு வரிசை எல்லாம் டூ மச் தான் இருந்தாலும் ட்ரை பண்றேன்!

என்னது குசும்பன் கல்யாணத்துக்கு பட்டு புடவையா? ஓக்கே டன்(காசு வசூல் பண்ணிக்கலாம் குசும்பன் கிட்ட இருந்து)

டேனி&டேடி மாதிரி நான் டேன்ஸ் ஆடனுமா, அப்பதான் தம்பி சிரிப்பானா, கஷ்டம் தான் முயற்சி பண்றேன்!

வாசல்ல எவனோ தம் அடிக்கிறான் போல இருக்கு, போய் விரட்டி விடு! எனக்கு அந்த புகை நாத்தம் அலர்ஜின்னு உனக்கு தெரியாதா?

தம்பி மீதி வச்ச செரிலாக்கை வீனாக்காம சாப்பிடனுமா, அய்யோ வாந்தி வருமே வந்தாலும் பரவாயில்லை நீ சொன்னா அப்பீல் ஏது?

தமிழ்மணமா அப்படீன்னா????

March 9, 2008

மண்டபத்து சரக்கு!(சும்மா சோம்பல் முறிச்சுக்க இந்த பதிவு)

நம்ம பசங்களுக்கு ஒரு கெட்ட பழக்கம். நமக்கு ஏதாவது நல்ல காமடியோ, நல்ல படமோ உதாரணத்துக்கு ஒரு நமீதா படம்ன்னு வச்சுகோங்களேன் மெயில்ல வந்தா, சரி நாம் பெற்ற இன்பம் நம்ம பசங்களும் பெறட்டும் என்கிற நல்ல எண்ணத்தில் அனுப்பினா உடனே பதில் வரும் மெயிலை திறந்து பார்க்காமலே"அண்ணே இது நான் சின்ன பையனா இருக்கும் போது எனக்கு வந்துடுச்சு, நீங்க வர வர மொழி பாஸ்கர் மாதிரி ஆயிட்டீங்க"ன்னு ஸ்டேண்டர்டு டெம்பிளேட் பதில் வரும். இதனாலத்தான் நான் ஏதும் சொல்வதே இல்லை. பாருங்களேன் இந்த பதிவுக்கு கூட இதே மாதிரி பின்னூட்டம் தான் வரும்:-))

ஒரு பாட்டி தன் அழகான பேத்திகூட ஒரு ஊர்ல இருந்து அடுத்த ஊருக்கு போக ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நிக்கிறாங்க. அப்போ ஒரு ஸாஃப்ட்வேர் இஞ்சினியர் (நம்ம ராம் மாதிரின்னு வச்சுகோங்க)தன் பிராஜக்ட் மேனேஜர் கூட பாட்டி போகும் அதே ஊருக்கு போக வந்தார். ரயிலுக்காக காத்துகிட்டு இருக்கும் நேரத்திலே நம்ம இஞ்சினியர் அந்த பொண்ணை டாவடிக்க ஆரம்பிச்சுட்டான். அந்த பொண்ணும் கம்பெனி குடுக்க ஆரம்பிச்சுடுச்சு. மேனேஜருக்கும் பாட்டிக்கும் செம கடிப்பாகிடுச்சு. ஆனாலும் ராம் தன் சேவையை தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கார்.

அந்த நேரம் பார்த்து ரயில் வந்துடுச்சு. 4 பேரும் ரயில்ல ஒரே பெட்டியிலே ஏறிகிட்டாங்க. டாவு தொடருது. அப்ப ரயில் ஒரு டணலுள்ளே போகுது. அதனால ரயில் முழுக்க இருட்டாகிடுச்சு. அப்ப சக்குன்னு ஒரு முத்த சத்தமும் அதை தொடர்ந்து பளார்ன்னு ஒரு அரை விழும் சத்தமும் கேக்குது. பின்ன ரயில் டணலை விட்டு வெளியே வந்துடுச்சு.

மேனேஜர் நினைச்சுகிட்டார். "அடப்பாவி நம்ம ராம் கிஸ்ஸடிச்சுட்டான் போல இருக்கு அந்த பொண்ணை. அது நாமதான்னு தப்பா நினைச்சுகிட்டு நம்மை அடிச்சிடுச்சே"

அந்த பாட்டி நினைச்சுகிட்டாங்க "சபாஷ் நம்ம பேத்தின்னா பேத்திதான். அந்த இஞ்சினியருக்கு நல்லா வேணும். பேத்திக்கு முத்தம் குடுத்தான், அதான் அவ சரியா அடிச்சிட்டா"

பேத்தி நினைச்சுகிட்டா "என்னா சூப்பரா கிஸ் பண்ணினார் நம்ம இஞ்சினியர். பாவம் நம்ம பாட்டி கொஞ்சமும் இங்கிதம் இல்லாம அடிச்சிடுச்சே, பாவம் நம்ம ஆளு"

நம்ம ராம் நெனச்சிகிட்டார் "இந்த மேனேஜர் தொல்லை தாங்கலை, நிம்மதியா சேட் பண்ண விடுறதில்ல ஆபீஸ்ல, அதனாலத்தான் அவளுக்கு கிஸ் அடிச்ச அடுத்த நிமிஷம் மேனேஜருக்கு வுட்டேன் ஒரு அடி"

February 28, 2008

எழுத்தாசான் "சுஜாதா"!!!




மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனந்த விகடனில் ஒரு முறை அவரின் மெலிந்த போட்டோ வந்த போது பின்னர் அவர் தெளிந்து வந்த போது சொன்னார்" தயவு செய்து அந்த போட்டோவை குழி தோண்டி புதைத்து விடுங்கள், சின்ன பசங்க பார்த்து பயப்படப்போகுது"ன்னு. அப்போதே பதறிப்போனோம். என்ன சார் நெசமாவே இறந்து போயிட்டீங்களா??? ஊடகங்கள் பொய்யாய் இருக்க கூடாதா!!
இதற்ககு மேல் என்ன எழுத எதுவும் இல்லை!!

February 20, 2008

விடுடா, வேற ஒரு சூப்பர் பிஸினஸ் இருக்கு!!!”

ஏழாவது படிக்கும் போதே “தொழிலதிபர்” ஆசை வந்ததுக்கு காரணம் நம்ம ஐடியா சுரங்கம் குரங்கு ராதா தாங்க. படிக்கும் போதே சம்பாதிக்கனும்டா அப்படின்னு ராதாகிட்ட யோசனை கேட்டப்ப தான் அவன் சொன்னான் “பேசாம தினத்தந்தியில சிரிப்பு எழுதி சம்பாதிக்கலாம்டா”.

எனக்கும் அது நல்ல யோசனையாத்தான் பட்டுச்சு. ரொம்ப பெரிய முதலீடு எல்லாம் இல்லை. அப்ப தினத்தந்தியிலே இரண்டு சிரிப்பு இருக்கும் கவர்ச்சி படத்துக்கு கீழே. 5 ரூபாய் பரிசு பெரும் வாசகர்ன்னு குனியமுத்தூர் குப்புசாமின்னு ஏதோ பேர் போட்டிருக்கும். அந்த இரண்டு சிரிப்பிலே ஒரு சிரிப்புக்கு சிரிப்பை அனுப்பும் நபர் தான் படம் வரையனும். அதுவும் போஸ்ட் கார்டிலே இண்டியன் இங்க்காலே வரைந்து அனுப்பனும். இங்க் ஓக்கே, 15 பைசா கார்டு ஓக்கே. சிரிப்புக்கு எங்கே போறது. சிரிப்பை நான் சொல்லனும் படத்தை ராதா வரையனும். கார்டு வாங்கும் காசிலே ஆளுக்கு பாதி போடனும், 5 ரூவாய் வந்துச்சுன்னா ஆளுக்கு 2.50 எடுத்துக்கனும் என பிஸினஸ் அக்ரிமெண்ட் எல்லாம் பக்காவா ரெடியாகிடுச்சு.

எல்லாம் ரெடியான பின்ன இங்க். கார்டு வச்சிகிட்டு ராதா என் மொகரகட்டையை பார்த்துகிட்டே இருக்க எனக்கு வேர்த்து வேர்த்து கொட்டுதே தவிர சிரிப்பு கொட்ட மாட்டங்குது. இந்த லெட்சணத்துல என் தம்பி வேற தானும் பார்ட்னர் ஆகனும்ன்னு அடம். போடா போடா போய் புட்டி பால் குடிடான்னா அழுதுகிட்டே அம்மா கிட்ட போய் “அம்மா என்னய சேர்த்துக்க மாட்டன்றாங்க”ன்னு அழுது அம்மாவை அடியாள் கணக்கா கூட்டிகிட்டு வந்துட்டான். அம்மா வந்து “டேய் ஒழுங்கு மரியாதையா இவனையும் விளையாட்டுக்கு சேர்த்துக்கல தொடப்ப கட்ட பிஞ்சு போகும்”ன்னு செல்லமா கெஞ்சினாங்க. எனக்கு செம கடுப்பு. முதல் முதல்ல ஒரு பிஸினஸ் பண்ண ஆரம்பிக்கும் போது அதை “விளையாட்டு”ன்னு கூலா சொல்றாங்களேன்னு. வேற வழியில்லாம அவனையும் சேர்த்துகிட்டாச்சு. ராதா மெதுவா என் காதிலே “டேய் பணம் மணியார்டர் வரும் போது இவன்கிட்ட சொல்லாம நாம ஸ்கூல் கிட்டயே போஸ்ட் மேனை அமுக்கிடுவோம்டா, அதனால இப்ப சேர்த்துப்பதா சொல்லி வைடா”ன்னு சொன்னது எனக்கும் ஓக்கேவா இருந்துச்சு.

ஏகப்பட்ட தடங்கலுக்கு பின்ன நாங்க மூணு பேரும் ரவுண்ட் கட்டி உக்காந்து யோசிக்க யோசிக்க எனக்கு ஒன்னுமே தோண மாட்டங்குது. ராதாவாவது பரவாயில்ல பாதி பைனான்ஸ் பண்ணின பார்ட்னர். அவனுக்கு கோவம் வருவது நியாயம். என் தம்பிக்கு வந்துச்சு பாருங்க கோவம் அது அநியாயம். “டேய் சீக்கிரமா ஜோக்கு சொல்லுடா இல்லாட்டி அம்மாகிட்ட போயி நீ என்னை அடிச்சேன்னு சொல்லி கூட்டிகிட்டு வந்துடுவேன்”ன்னு மிரட்டுறான். “போடா இவனே, நீயும் தானே பார்ட்னர் நீ சொல்ல வேண்டியது தானே”ன்னு நானும் பதிலுக்கு கத்த ராதா தான் சமாதானம் செஞ்சான். பின்ன என் தம்பியும் மோட்டுவளையை பார்த்துகிட்டு ஜோக்குக்கு தயார் பண்ண ஆரம்பிச்சான். எனக்கு சிரிப்பு தோணுவதுக்கு பதிலா தாத்தா செத்தது, மாடு முட்டுவது போன்ற சோக நிகழ்ச்சிகளாவே ஞாபகம் வருது. ஒரு கட்டத்துல ஜோக்கு தோண மாட்டங்குதேன்னு ஆத்திரமும் அழுகையும் வர இருந்துச்சு. இத்தனைக்கும் ராதா கொஞ்சம் கூட யோசனை பண்ணாம ஜாலியா படம் வரைய ரெடியா இருந்தான். அவனுக்கு என்ன அக்ரிமெண்ட் படி படம் வரைவது தானே அவன் வேலை அப்படீன்னு நினைப்பு.

அப்ப திடீர்ன்னு என் தம்பி “டேய் வந்துடுச்சுடா சிரிப்பு”ன்னு கத்த ரொம்ப ஆர்வமா “சொல்லுடா சொல்லுடா”ன்னு நாங்க கத்த மெதுவா தொண்டையை கணைச்சுகிட்டு “ராதா அண்ணே, அன்னிக்கு என்னா நடந்துச்சுன்னா என்னைய காவலுக்கு வச்சுட்டு அம்மா அரிசி பீப்பாயிலே மறைச்சு வச்சிருந்த ஹார்லிக்சை எங்க அண்ணன் திருடி திங்கும் போது நான் அவனை அம்மா கிட்ட மாட்டி வச்சு அம்மா இவனை வெளுத்தாங்க.”ன்னு சொன்னான். அதுக்கு ராதா “இதுல என்னாடா சிரிப்பு இருக்கு”ன்னு கேக்க என் தம்பி “இல்லண்ணே இதுக்கு பின்ன தான் சிரிப்பே, அப்புடி அடி வாங்கி கிட்டு இருக்கும் போது அவன் டவுசர் கழண்டு வுழுந்துடுச்சு”ன்னு சொல்லிட்டு அவன் சிரிக்க அதை கேட்டு ராதா சிரிக்க எனக்கு பத்திகிட்டு வந்துச்சு. உடனே ராதா கிடு கிடுன்னு படம் வரைய ஆரம்பிச்சான்.

“டேய் டேய் நிறுத்துங்கடா என் மானத்தை வித்து இந்த 5 ரூவா சம்பாதிக்கனுமா, போங்கடா இவனுங்களா, அதிலயும் அதை இவர் படமா வரைஞ்சு தமிழ்நாடே பார்க்கனுமா, வேற யோசிங்கடா”ன்னு கத்திட்டு ஒரு வழியா ஏதோ சிரிப்பு எழுதினோம். அந்த கார்டை சியாமளாதேவி கோவில்ல வச்சு கும்பிட்டு போஸ்ட் பண்ணியாச்சு.

பின்ன 1 வாரம் தான் டயம் கொடுத்தோம் தினதந்திக்கு. அதன் பின்னே என் தம்பிக்கு பொறுமை இல்லை. என் கிட்ட “டேய் 1 வாரம் ஆச்சு, பணம் வரும் போது நீயே எடுத்துக்க ஆனா என் பார்ட்னர்ஷிப்பை பிரிச்சு குடு இல்லாட்டி அம்மா கிட்ட போக வேண்டி வரும்” ன்னு மிரட்ட ஆரம்பிக்க எப்படியாவது அவனை கழட்டி விட்டுடலாம்ன்னு ஒண்ணேகால் ரூபாயை கொடுத்து கழட்டி விட்டேன்.

பின்ன நானும் ராதாவும் சேர்ந்து தினத்தந்திக்கு கார்டில் கடிதம் எழுதினோம். “அய்யா 1 வாரம் முன்பு நாங்க “சிரிப்பு” எழுதி அனுப்பினோம். அதற்க்கான பணம் 5 ரூபாய் இன்னும் வரவில்லை. கடிதம் கண்டவுடன் தாமதிக்காமல் அனுப்பி வைக்கவும்” என எழுதினோம். அதன் பின்பும் 1 வாரம் ஒரு சேதியும் தெரியாமல் கிணத்தில் போட்ட கல் மாதிரி இருந்ததால் நான் ராதாவிடம் “டேய் தினத்தந்தி எத்தனை பெருசு. நாம அப்படி எழுதியிருக்க க்கூடாது. இப்படி எழுதனும்டா”ன்னு சொல்லி இப்படி எழுதினோம். “அய்யா, தாங்கள் கண்டிப்பாக 5 ரூபாய் அனுப்பி இருப்பீர்கள். ஆனால் போஸ்ட்மேன் தரவில்லை. அதனால் மீண்டும் ஒரு முறை அனுப்பவும். அடுத்த அடுத்த சிரிப்புகளில் கழித்து கொள்ளலாம்” என எழுதி போட்டோம்.

ஒரு முன்னேற்றமும் இல்லை. அப்பப்ப என் தம்பி வேற “என்னடா பிஸினஸ் ஊத்திகிச்சா, எனக்கு தெரியும்டா அதை படிச்சுட்டு நானே கக்கூஸ்ல போய் அழுதேண்டா ,அதனாலத்தான் என் பார்ட்னர்ஷிப்பை பிரிச்சு வாங்கினேன்”ன்னு சொல்ல எனக்கு சரியான ஆத்திரம்.

இதற்கிடையில் நாங்க அந்த போஸ்ட்மேனை ஒரு நாளும் விடவில்லை. ஸ்கூல் கிட்டயே அமுக்கி “சார் எங்களுக்கு மணியார்டர் வந்துச்சா”ன்னு அரிச்சு எடுத்தோம். எங்க தொல்லை தாங்காம அவர் எங்களை பார்த்தா ஈட்டிகாரனை பார்ப்பது போல தலை மறைவாக ஆரம்பிச்சார். சரி அவர் சரியா வர மாட்டார்ன்னு அவர் வீட்டுக்கே போக ஆரம்பிச்சோம். கடைசியா அவர் “டேய் இன்னும் ஒரு தடவ என் கிட்ட கேட்டீங்கன்னா நேரா உங்க அப்பா கிட்ட வந்துடுவேன்”ன்னு மிரட்ட ஓடி வந்துட்டோம். வந்தும் பேசாம இருக்காம போஸ்ட் மாஸ்டருக்கு ஒரு கார்டு போட்டோம். “அய்யா எங்க தெரு காமராஜ் அப்பா என்கிற போஸ்ட்மேன் எங்களுக்கு வந்த 5 ரூபாயை தரவில்லை, வாங்கி கொடுக்கவும்” . பின்ன என்ன விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சு. ராதா அப்பாவுக்கு தெரிஞ்சு……….. கொஞ்ச நாள் எங்க தொழிலதிபர் ஆகும் ஆசையை ஒத்தி வைக்க வேண்டியதா போச்சு.

கொஞ்ச நாள் கழிச்சு ராதா சொன்னான் “விடுடா, வேற ஒரு சூப்பர் பிஸினஸ் இருக்கு!!!”.

February 11, 2008

அடங்கொய்யால!!!!

ஒரு கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்(!) என படிப்பினை ஊட்டும் நிகழ்ச்சி ஒன்றை நேற்றைக்கு பார்த்தேன். “மானாட மயிலாட” நிகழ்ச்சியை தவற விடக்கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக ஓடி வந்து டிவியை போட்டா ஒரு அம்மா அழுதுகிட்டு இருக்காங்க. ராஜ்குமார் என்கிற டான்சரின் அம்மா. அவுங்க அழுக பின்ன பையன் அழுக, நமீதா அழுக நானும் அழுக அய்யோடா அப்படி ஒரு சோகம் போங்க!

பின்ன ஸ்வேதா என்னும் டான்சர். அவங்க புருஷன் கிட்ட பேட்டி எடுத்தாங்க நமீதாவும் கலா மாஸ்ட்டரும்.

“உங்க மனைவி ரத்தீஸ் கூட டான்ஸ் ஆடினாங்களே அது பத்தி என்ன நினைக்கறீங்க”
நா தழுதழுக்க மாப்பிள்ளை சொன்னார் பாருங்க பதில் அப்படியே ஆடிபூட்டேன்!

“நான் குடுத்து வச்சவன்ங்க ஸ்வேதாவை மனைவியா அடைய, இத்தனை நாள் எல்லோரும் அவ கிட்ட வந்து ஆட்டோகிராப் வாங்குவாங்க வாங்கின பின்ன உங்க பேர் என்னான்னு கேப்பாங்க(J) ஆனா இப்போ இந்த நிகழ்ச்சிக்கு பின்ன ஸ்வேதா ஸ்வேதா ன்னு பேர் சொல்லி கூப்பிடும் போது போது ……உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்”

மாப்பிள்ளை பேட்டி குடுத்து கிட்டே இருக்கும் போதே ஸ்வேதா பக்கத்திலே இருக்கும் மத்த டான்ஸர்ஸ் ஸ்வேதா கண்ணை துடைச்சு விட்டு வராத அழுகையை வர வழைக்க இவர் கிட்ட பேட்டி எடுத்தாங்க நீதியரசி நமீதா!
“ஸ்வேதா, உங்க புருசன் நல்லா புருஷா நல்லா சொல்லுது நீங்க என்னா சொல்லுது” இது நமீதா!

மைக்கை வாங்கி கிட்டு ஸ்வேதா “நான் நெம்ப குடுத்து வச்சவ, அவர் எனக்கு புருசன் மாத்திரம் இல்ல”ன்னு சொல்லி கொஞ்சம் கேப் விட்டப்ப என் நண்பர்கள் கத்தியது எல்லாம் இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாத விஷயங்கள்! தொடர்ந்து ஸ்வேதா “ அவர் எனக்கு தாய் மாதிரி, காரணம் அரையிறுதிக்கு வரும் போது என் குழந்தைக்கு பயங்கரமா டைபாய்டு காய்ச்சல், ஷிவரிங்ல தூக்கி தூக்கி போடுது. அப்போ கூட என் புருசன் சொன்னார் ‘நீ போம்மா (நமக்கு கலைய வளர்க்கனும் அது தான் முக்கியம்) இந்த டென்சனை மனசுல வச்சுக்காம இதை மறந்துட்டு ஆடு’ன்னு சொல்லி என்னை அனுப்பி வச்சார்”ன்னு சொல்லிட்டு அழுகையோ அழுகை.

அதை பார்த்து கண் மை கலையாமல் கலா மாஸ்ட்டர் அழுக பின்ன என்ன என் நண்பர்கள் கூட நானும் மூக்கு சிந்தினேன்.
அதை விட அருமை மேடையிலே மழை பெய்யவிட்டு எல்லாரும் என்னமா டான்ஸ் ஆடினாங்கப்பா. அது முடிந்த பின்ன “பாடித்திரிந்த பறவைகளே” “முஸ்தப்பா முஸ்தப்பா டோண்ட் வொர்ரி முஸ்தப்பா”ன்னு மெழுகு வத்தி ஏத்திகிட்டு பாட்டு பாடினாங்க. அவங்க என்னதான் டோண்ட் ஒர்ரி முஸ்தப்பான்னு பாடினாலும் என்னால வொர்ரி பண்ணாம இருக்க முடியலை.

ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி டிவியை ஜட்டி காயப்போடும் உபகரணமாக மட்டுமே பயன் படுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. சரி இதன் தாக்கம் தமிழ்நாட்டிலே எப்படி இருக்குதுன்னு பார்ப்போம்ன்னு வீட்டுக்கு போன் செய்தேன். அபிபாப்பா தான் போன் எடுத்தா. “மானாட மயிலாட பாத்திங்களாடா”ன்னு கேட்டேன். அங்கிருந்து பதில் வந்தது “பாவம்ப்பா அந்த டைபாய்டு வந்த குழந்தை”
எனக்கு நச்சுன்னு நடு மண்டையில் அடிவாங்கின மாதிரி இருந்துச்சு!

February 9, 2008

எங்க வாத்தியார் NV சார்!!!




சில விஷயங்கள் எதேச்சையாக நடக்கும். அப்படித்தான் நேற்று இரவு என் பள்ளிக் கூடத்தின் என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு.N.வெங்கட்ராமன் என்கிற NV சாரை பற்றி கனவு கண்டேன். காலை எழுந்து தமிழ்மணம் திறந்து பார்த்தா மயிலாடுதுறை சிவா ஒரு பதிவு போட்டிருந்தார். ரொம்ப நாளா ஆச்சே அவர் பதிவு போட்டு, ஊருக்கு போனாரே திரும்பி வந்துட்டாரா என்கிற நினைவுடனேயே திறந்து பார்த்தா NV சாரை பத்தி பதிவு போட்டிருக்கார். போட்டோவும் போட்டு. எனக்கு ஆச்சர்யமாக போய் விட்டது.


மற்ற ஆசிரியர்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அவர் பாடம் மட்டும் கற்று கொடுப்பதில்லை. கூடவே வாழ்க்கையும் கற்று கொடுப்பார். அவரின் அந்த அணுகுமுறை அவரின் சில சக ஆசிரியர்களுக்கும் சில நூறு சதவிகித நல்ல மாணவர்களுக்கும் கூட பிடிக்காமல் இருந்திருக்கும். ஆனால் எனக்கு அவருடைய அந்த அணுகுமுறை சரி என்றே தோன்றுகிறது. காரணம் பத்தாம் வகுப்பு வந்து விட்ட மாணவர்கள் ஓரளவு தன் வாழ்க்கையின் திசையை முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்கள். அதனால் கொஞ்சம் சுயமாக சிந்திக்க வேண்டும் என்கிற நோக்கோடு கொஞ்சம் விட்டு பிடிக்க வேண்டும் என நினைத்து மாணவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே சுதந்திரம் கொடுப்பார்.


அவர் வகுப்பு மாணவர்கள் மற்ற வகுப்பு மாணவர்களை விட கொஞ்சம் வித்தியாசமாகவே இருப்பர். பாடம் எடுத்து கொண்டிருக்கும் போது தூரத்தில் வராண்டாவில் தலைமை ஆசிரியர் வந்துவிட்டால் இவர் "பசங்களா இப்போ நாம் PR என்கிற கோடு வரைந்து அதில் SK என்கிற புள்ளியை குறிக்க போகிறோம்" என்பார். வகுப்பில் சத்தம் காதை கிழித்து கொண்டு போகும். காரணம் PR என்பது அந்த தலைமை ஆசிரியர் பெயர். SK என்பது உதவி தலைமை ஆசிரியர் பெயர். அந்த இருவருமே எங்க NV சார் படிக்கும் போது அவருக்கே ஆசிரியர்கள் என்பது வேறு விஷயம். மாணவர்களின் சத்தம் கேட்டு வகுப்பில் நுழையும் தலைமை ஆசிரியர், "மிஸ்டர். NV என்ன சத்தம் என்ன பாடம் நடத்தறேள்" என்று கேட்டு விட்டு கரும் பலகையை பார்ப்பார். அவருக்கு விஷயம் புரிந்து விடும். செல்லமாக "நாப்பத்தஞ்சு வயசாகறது, இன்னும் பழைய குறும்பு போகலை"என்று செல்லமாக சொல்லிவிட்டு போய் விடுவார். அப்போது இந்த மாதிரி விஷயங்கள் எங்கள் பள்ளியின் புரட்சி என்று கூட சொல்லலாம்.


ஒரு மாணவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே ஆசிரியர் வந்துவிட்டால் சைக்கிளை விட்டு இறங்க வேண்டும். அதுதான் நாம் ஆசிரியருக்கு தரும் மரியாதை என தவறாக யாராலோ ஒரு பழக்கம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது. அது பற்றி வகுப்பிலே NV சார் ஒரு முறை "எதுக்கு இறங்கனும், அதிலே என்ன மரியாதை! சரி அதுதான் மரியாதை என்றே வைத்துகொண்டாலும் எவனாவது முழுசா இறங்குவானான்னு பார்த்தா அதுவும் இல்லை. இறங்குவது போல பாவ்லா பண்ணுவான். சைக்கிள் சீட்டிலிருந்து * *தை தூக்கிட்டு திரும்பவும் வச்சிட்டு போயிடுவான். கையை தூக்கி வணக்கம் வைத்து மரியாதை செய்யலாம். ஆனா **தை தூக்கி மரியாதையா, இதுக்கு பேசாம வாத்தியாரை பார்க்காத மாதிரி திரும்பிகிட்டு போறது பெட்டர்" என்று சொன்னார். இப்படி ஒரு வாத்தியார் அப்போதெல்லாம் "கெட்ட" வார்த்தை பேசுவது சரியா என மனசு கேட்டாலும் சிந்திச்சு பார்க்கும் போது "ஆமாம் அவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்குதே" என தோன்றியது.


அவரின் திறமை இருக்கிறதே, வாவ், ஒரு மாதிரியான அசாத்திய திறமை அவருக்கு. ஆங்கில புலமையும் கணித புலமையும் வியப்படைய வைக்கும். அவரின் நகைச்சுவை அவருடைய மிக பெரிய சொத்து. பள்ளியின் அனைத்து விழாக்களையும் இவர் ஒரு ஆளாக நின்று நடத்திக்காட்டுவார்.


வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இப்பவும் பள்ளியின் பழைய மாணவர் சங்கத்திலே இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். வாழ்க்கைப் பாடத்தை நடத்தினார் என சொன்னேனே! அப்படிப்பட்ட அவரே ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் மிக பெரிய சறுக்கலை சந்திக்க நேர்ந்தது. ஏதோ பைனான்ஸ் கம்பனியால் தன் வீடு முதற்கொண்டு எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தது. "இனி NV அவ்வளவுதான்" என சொல்லியவர்கள் மத்தியில் மீண்டு எழுந்து வெற்றிக் கொடி நாட்டினார். அப்போது அவர் மட்டும் மனம் சோர்ந்திருந்தால் இன்று அவர் நம்மிடம் இருந்திருக்க மாட்டார். அவரிடம் படித்த எங்கள் அனைவருக்கும் அவர் நடத்திக்காட்டிய பிராக்டிகல் பாடம் அது என்றே நான் நினைக்கிறேன்.


சிறந்த ஆஞ்சனேய பக்தர். அவர் நடக்கும் வேகம் இன்றைக்கும் குறையவில்லை. எப்போதும் பிஸி தான். ஆணதாண்டவபுரத்திலே கோபால கிருஷ்ண பாரதிக்கு விழா எடுக்கறேன், நம்ம பள்ளி இலக்கிய மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு பண்றேன், "வீரப்பா பிள்ளை" கோப்பை வாங்க பசங்களை தயார் பண்றேன், "NV கோப்பை" மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான வேலை பண்றேன் என இப்பவும் எப்பவும் அவர் சுறுசுறுப்புதான். அவரிடம் படித்தேன் என்பதில் எப்பவுமே பெருமைப்பட்டு கொண்டிருக்கும் மாணவர்களில் நானும் ஒருவன்.