பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 30, 2008

வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டு கச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்!!! பாகம் # 4

இந்த பதிவின் 3ம் பாகத்தை இங்க போய் படிச்சுட்டு பின்ன இங்க வாங்க!
இதோ எல்லோரும் பெருமாள் கோவில் போயாச்சு. சமையல் ஆட்களும், சில்லரை சில்லரையாக சில ஆட்களும் மண்டபத்தில் ஆங்காங்கே இருக்க எல்லார் சூட்கேசையும் பார்த்துக்கும் சித்தியும், சித்திக்கு துணையாக 3 பாட்டிகளும், பாட்டிக்கு துணையாக மணி அண்ணனும் சத்திரத்தின் மூன்றாம் கட்டில் இருக்க, முதல் கட்டில் அதாவது திண்ணையில் மாமாவின் கச்சேரி யார் தொல்லையும் இல்லாமல் களைகட்டியது. அத்தை மாத்திரம் பெருமாள் கோவில் போகாமல் அடுத்த நாள் இரவுக்கு மாப்பிள்ளைக்கு திரட்டிப்பால் எப்படி செய்வது என பெண்ணின் அத்தைக்கு டியூஷன் எடுத்துகிட்டு இருந்தாங்க.

"மூணு லிட்டர் நல்ல பசும்பாலா தண்ணி ஊத்தாம நல்லத்துகுடி கார்காத்தாரு புள்ள வீட்டுல இருந்து கொண்டு வர சொல்லியிருக்கேன். அதை நீ என்ன பண்ற சாயந்திரம் ஆறு மணிக்கு எல்லாம் குமட்டி அடுப்பிலே வெங்கல பால் சட்டியிலே வச்சிடனும்...."

அப்போது சத்திரத்து வாசல்ல சர்ர்ர்ர்ன்னு வந்து சைக்கிளை ஸ்டாண்டு கூட போடாமல் படியில் சாத்தி வச்சுட்டு ஓடி வந்து "அத்தே அத்தே"ன்னு கூவிகிட்டு மேலே வருவது ஒரு அண்ணன். பேர் சிவாஜி. மாமாவை தாண்டும் போதே மாமா "என்னடா மழை தூரல் போடுதா, அதுக்கு அத்தையை கூப்பிட வந்தியா? ஆகா ஜாம் பஜார் ஜக்கு நீ சைதாப்பேட்டை கொக்கு, எனக்கு ராணி இஸ்பேர்டு வேணும்ன்னு எப்புடிய்யா தெரியும், டேய் அத்தை மூணாம் கட்டிலே மாப்ளக்கி தெரட்டி பாலு செய்ய டிவிசன் எடுத்துகிட்டு இருக்கும் பாரு" மாமா இப்படித்தான் உக்காந்த இடத்திலே இருந்தே பெருமாள் கோவில் வாசல்ல என்ன நடக்கும், அத்தை இந்நேரம் என்ன செய்வாங்க, பரபரப்போடு வந்தவனின் செய்தி என்னவா இருக்கும் இத்தனைக்கும் நடுவே ராணி இஸ்பேர்டை போட்டுவிட்ட ஜக்கய்யருக்கு கவுண்ட்டர் கொடுத்துகிட்டு எனக்கு கொஞ்சம் பிரமிப்பா தான் இருக்கும் அது போன்ற நேரத்திலே எல்லாம்.

சிவாஜி அண்ணன் நேரே போய் "அத்தே, தூரல் போடுதாம், அம்மா உங்களை உடனே கூப்பிட்டு வர சொல்லுச்சு" என்றதும் அத்தை "அட அத்தை இருக்கும் போது பேய வுட்டுடுவனா களம்புடா ராசா நா இருக்கேன், மணி சீக்கிரம் ஓடியா அஞ்சு தேங்காய எடுத்துட்டு வா, அப்புடியே மஞ்ச தூளை எடுத்துட்டு வா, ஒரு பித்தளை தாம்பாளம் எடு, அந்த இட்லி துணியிலே கொஞ்சம் கிழிச்சு அதை மஞ்ச கரச்சு நனச்சு குடு. ஒரு ரெண்டு ரூவா துட்டும் ஒரு நாலணா துட்டும் குடு" பரபரன்னு அத்தையின் கட்டளைகள் நிறைவேற்றப்பட்டு விடும் மணி அண்ணனால்.

அத்தை தேங்காயில் மஞ்சள் தடவி தாம்பாளத்தில் வைத்து சாமி படத்துக்கு கீழே வைத்துவிட்டு, பின்னே மஞ்சள் துணியில் ஒண்ணேகால் ரூபாய் துட்டு வைத்து முடிச்சு போட்டு "டேய் தம்பி சைக்கிள்ல தான வந்த ஓடி போய் காளியம்மன் கோவில்ல வீரன் கிட்ட அத்தை படி கட்டினேன்னு சத்தமா சொல்லி அது கால்ல வச்சிட்டு ஓடியா, நான் அரக்காஸ் அம்மாவுக்கு ஒரு ரூவாயை போட்டுட்டு பெருமாள் கோவிலுக்கு போறேன்"ன்னு சொல்லிட்டு முதல் கட்டிலே இருக்கும் மாமா கோஷ்டியிடம் "தம்பி வசந்தி உள்ள தனியா இருக்கா, ஒரு கண்ணு வச்சுக்க, தோ வந்துட்டேன்"ன்னு சொல்லிட்டு முதல் படியிலே நின்னு கச்சேரி பிள்ளையாரை பார்த்து தன் வலது புறங்கையை அடிமுதுகிலும், இடது கை விரல்களை சோடாபுட்டி கண்ணாடிக்கு ஷேட்(shade) மாதிரி வைத்தும் மழை வருதா என பார்த்துவிட்டு கீழே இறங்கிய போது மழை நின்னு போயிருந்தது.

அத்தை போகும் போதே அருணாசல அய்யர் கடையிலே நின்னு ஒரு லுக் விட அய்யர் "வாங்க அத்தே பொண் அழப்புக்கா" என கூற
"ஆமா அய்யா, பூக்கடை வரதனுக்கு ஒரு போனை போட்டு ராத்திரி பத்துக்கு மேல முகூர்த்த மாலை அனுப்பினா போதும்னு சொல்லிடுங்க. மாலை கழுத்திலே மூங்கி சிம்பு கம்மியா வக்க சொல்லுங்க, செண்டு சுத்த எலுமிச்சங்காய் போதும், ஆப்பிளு கீப்பிளு வேணாம்ன்னு சொல்லுங்க, பொண்ணுக்கு சோத்தை போட்டு வளக்கல, காமிச்சு தான் வளத்துருக்காங்க, ஆப்பிள் செண்டு தூக்க ஆளு வைப்பா போல இருக்கு அவ அம்மாகாரி" என சொல்ல அதற்கு அய்யர்
"இருங்க அத்தே சுத்தி தாரேன் நீங்களே சொல்லிடுங்க என சொல்லி 0ஐ சுத்த (அப்போ 0 சுத்தனும்,எக்ஸ்சேஞ்சிலே இருந்து என்ன நம்பர் வேணும்ன்னு கேப்பாங்க, வெறும் 3 டிஜிட் தான் நம்பர் ) அத்தையோ
"அய்யோ எனக்கு காதுல வக்கிறது எதுன்னு நீங்க பாடம் படிக்கிறதுக்குள்ள மாலை வந்து சேந்துடும். நீங்களே சொல்லிடுங்க, மணி நாலனா கொண்டு வந்து குடுப்பான் போனுக்கு" என சொல்ல அதற்கு அய்யர்
"அத்தே மணி அஞ்சு கிலோ ரவை வாங்கிட்டு போனான்" என்றார். அதற்கு அத்தை
"சரிய்யா, ரோக்காவுல சேத்துடுங்க அதையும்"ன்னு சொல்லி அரக்காஸ் அம்மா தர்காவுக்கு நடையை கட்டினாங்க. அது யார் அரகாசுஅம்மா? "ஹஜ்ரத் கன்ஷா வாஈ வலியுல்லாஹ் " என அங்கே போட்டிருக்கும். அந்த தர்கா முனிசிபாலிட்டி வாசலில் இருக்கு. அங்கே அடக்கம் ஆகியிருப்பது ஆணா, பெண்ணா என யாருக்கும் சரியா தெரியாவிட்டாலும் அது என்னவோ இந்துக்களை பொருத்தவரை "அரகாசு அம்மா" தான். வியாழன் இரவு அந்த வழியா வந்தா வத்திசாய்பு சாம்பிரானி போட்டு கொஞ்சம் நாட்டு சர்கரை தருவார். (பத்தி வியாபாரம் செய்ததால் அவர் வத்திசாயுபு ஆகிட்டார்)
இங்கே பெருமாள் கோவில் வாசல்ல இதோ வந்து நிக்குதே சிகப்பு பிளைமுத் கார். அதன் ஓட்டுனர்(கம்)ஓனர் மணி முதலியார் ஏதோ போய் நாயனகாரர் கிட்டே என்னவோ பேசறார் பாருங்க. கிட்ட போய் என்னான்னு கேப்போம்.

"என்ன திருகோடிகாவலாரே, எனக்கு ஒரு உபகாரம் பண்ணனுமே"

"மொதலியாரே நீர் என்ன கேக்க போறன்னு தெரியும்ய்யா, நானு நேத்து சீனிவாசா சத்தரத்தில இருந்து லோல் படுறேன். சட்டுபுட்டுன்னு இழுத்துட்டு போய் சேர்க்க சொல்ல வர்ர அதானே"

"ஆமா புள்ள எனக்கு அடுத்து கொரநாட்டுல ஒரு அழைப்பு இருக்கு, எதுனா செய்யனுமே"

இப்படியாக அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அத்தை அங்கு ஆஜர். ஒத்தபைசா சாக்லெட் தட்டை ஒரு சித்தி எடுத்துகொள்ள நான் எனக்கு கண்டிப்பாக ஜானவாச காரில் இடம் கிடைக்காது என பட்ஷி சொன்னதால் சாக்லெட் சித்தி கையை பிடித்து கொண்டேன். மெதுவா பொண்ணு காரில் ஏறியதும் நாதஸ்வரகாரர் தன்னை ராஜரத்தினம் பிள்ளை மாதிரி மனசிலே நினத்து கொண்டு தோடியை லயிச்சு வாசிச்சு, ராகத்தை ஆலாபனை செய்யும் போதல்லாம் தவில் "ஆமாம் ஆமாம்" என்பது போல ஒரு சின்ன சின்ன தட்டு கிட்டதட்ட அது ஷொட்டு மாதிரி, பின்னே ரெட்டை நாயனம் ஆலாபனை பண்ணி பின்பு கீர்த்தனைக்கு தாவி சுருள் விடும் போது விரலடி ஸ்பீடு பத்தாமல் பிசிறு தட்டியது. (பிருகா தான் தஞ்சை பாஷையில் சுருள்விடுவது என செல்லமாக அழைக்கப்படும்)

இப்போ தெர்மாஸ் விளக்கு குரூப் பத்தி சொல்ல வேண்டும். அதிலே ஒரு சின்ன பெண் என்றேனே அது வைத்திருந்த லைட் எறியவில்லை. ஒரு கணக்குக்காக அந்த பெண் போலிருக்கு. அத்தை அதை கவனிச்சாச்சு. கண்டிப்பா ஒன்பது லைட்டுக்கு தான் காசு தர போறாங்க.

அந்த பக்கிரிசாமி பக்கத்திலே ஒரே பழரச நாத்தம். அழுக்கு வேட்டியை மடிச்சு கட்டிகிட்டு, ஒரு துண்டை இடுப்பிலே கட்டிகிட்டு வெற்று உடம்போடு,வெற்றிலையை வாயில் அடக்கி கொண்டு ஒரு சும்மாடு தலையில் வைத்து அதன் மேல் அழகாக அந்த பெட்ரோமாஸ் "உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என ஒரு வித சுருதியோடு அந்த சுருதி நூறு சதம் நாதஸ்வர கோஷ்டியின் சுருதி பெட்டியின் சுருதியோடு ஒத்து போனது. கொஞ்சம் சுருதி பிசகினால் பக்கிரிசாமி தன் கையை உயர்தி அந்த விளக்கின் பித்தளை வயிற்றை தடவி காற்றை கொஞ்சமாக பிடுங்கி விட்டோ அல்லது கீழே இறக்கி காற்றை அடித்து கொண்டோ சுருதி சேர்த்து கொண்டிருந்தது எனக்கு ஆச்சர்யமாக பட்டது. அதற்கான விடை ராத்திரி 11 மணிக்கு எனக்கு தெரிந்தது. பக்கிரிசாமி தன் ஒரு காலை கொஞ்சமா மடக்கி கொண்டு இரண்டு கைகளையும் முதுகில் கட்டி கொண்டு தலை விளக்கை பிடிக்காமல் கண்ணை மூடி கொண்டு தோடியில் லயிச்சு போய் நிற்கிறாரா அல்லது பழரச போதையா என எனக்கு தெரியவில்லை. ஆனால் சுருள் விடும் போது பிசிறு தட்டும் போது கொஞ்சம் முகம் சுளித்தார். கொசு கடித்திருக்கும் என நினைத்து கொண்டேன்.

இப்போது வரிசை தட்டை தூக்கி கொண்டு வரும் பெண்கள் கூட்டத்துகுள் நுழைவோம்.

"சுலோச்சனா அங்க பாரு பொண்ணோட சித்தியாம் அது, பெங்களூருல கட்டி கொடுத்து இருக்காங்கலாம், வேற பாசையில பேசுறா அவ பசங்க கிட்ட"
"ஆமா அத்தான் கூட ஒரு தடவ அந்த ஊரு போயிருக்காங்க, அவ ஜரிகைய பாத்தியா குன்னக்குடி துன்னூரு மாதிரி"

"மீனாச்சியத்தே, நீங்க இந்த தட்டை தூக்கிகுங்க, அந்த நாலாம் நம்பர் பஸ்ல உக்காந்து இருக்கிறவன் எல்லாம் இங்கயே பாக்குறானுங்க, எனக்கு மானமே போவுது, என் காலேஜ்ல படிக்கிரவ எவலாவது பார்த்துட போறா" ஒரு பியூசி அக்கா இது!
"பஸ்ஸிலே உக்காந்திருக்கிறவன் பாக்குறது உனக்கு எப்படி தெரியும்"-இது ஒருஅத்தை!

"அக்கா மணி இப்பவே எட்டு ஆச்சு, சத்தரத்துக்கு போவ மணி ஒம்போது ஆவும். சீக்கிரமா ராஜேந்திரங்கிட்ட காச குடுத்து பேர்லஸ்ல ஊட்டி வர ஒரவுக்கு டிக்கெட் வாங்க சொல்லு, சும்மா கூட்டத்த சேக்காத நீ, நா, கல்லங்குடி, திருகண்டீஸ்வரம்,தொனைக்கு அய்யம்பேட்டை சரோஜா மட்டும் போதும்"

"நல்லா இருக்குமான்னு தெரியலையே"

"அட போக்கா கேயார்விசயா ஒரு பாட்டுக்கு சிவாஜிக்கு தெரியாம தகதகன்னு பொடவைல விலுக்கு விலுக்குன்னு ஆடுதாம். ஆனா சிவாஜி சிசர் குடிச்சிகிட்டு பாத்துகிட்டே இருப்பாராம்,தந்தியாபீசரு மருமவ சொன்னுச்சு"

"மாமி வழுக்கிவுழுந்தப்ப எனக்கு சிரிப்பு வந்துடுச்சு, அடக்கிகிட்டு நல்லா வேணும்னு நெனச்சுகிட்டேன்"-இது ஒரு மருமகள்.

"அங்க பாருடீ அந்த பிடி டீச்சர் போவுது, லீவு போட்டதுக்கு வேப்பல ஆட்ட போவுது நாலன்னக்கி"-இது ஒன்பதாவது படிக்கும் அத்தை பொண்ணு!

"அங்க பாரு கணவனே கண்கண்ட தெய்வம் வருது, இந்தா டக்குன்னு திரும்பாத மெதுவா திரும்பி பாரு"-கிண்டல் புடிச்ச மாமி!

"பாலகுரு புள்ள கடையில இன்னிக்கு பெசல் அடையும் அவியலுமாம், வாடி உள்ள போயி ஒரு கட்டு கட்டுவோம்"(சொல்லிட்டு கெக்கேபிக்கேன்னு ஒரு சிரிப்பு)-யாரோ தெரியலை!

"பொண்ணுக்கு இப்பவே வேர்க்குது நாளக்கி இந்நேரம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்"
"ந்தா ச்சீ வெவஸ்தயே இல்லாம பேசாத, நடுமாமி திரும்புது பாரு அதுக்கு எலி காது"-மருமகள்கள்
"நா அப்பவே சொன்னேங் கேட்டியா இந்த கும்மோணத்துகாரி மத்தவளையும் கெடுத்துபுடுவான்னு நீ தான் ஒலகத்துல இல்லாத அழகியா எம்புள்ளைக்கு வேணும்ன்னு கட்டிகிட்டு வந்த, குடும்பஸ்தி மாதிரியா பேசுறா, காதுகிட்ட மசுர சுருள் விட்டுருக்கா பாத்தியா, இழுத்து வச்சி அறுக்காம விட்டிருக்க நீ"-இது முன் வரிசை பாட்டி!"

"அத்தாச்சி இந்த தட்டையும் கொஞ்சம் பிடிச்சுகுங்க தோ கமலாகாபி வந்துடுச்சு, நா போயி நூறு பீபரி வாங்க்யாறேன், நாளக்கி கல்யாணம் முடிஞ்ச கையோட வீட்டுக்கு தான் வரும் கூட்டம் எல்லாமே"இது அம்மா!

இதோ சத்திரம் வந்தாச்சு! பெட்ரோமாஸ் விளக்கு எல்லாம் இறக்கி வச்சாச்சு. ஆரத்தி எடுக்கப்பட்டு எல்லாரும் வரிசையா உள்ளே போக எப்போதும் போல வழுவூர் சம்முகம் நியூ கொழும்பு பையை இடுப்பிலே இருந்து உருவுரார் செருப்பை அதில் போட்டுகிட்டு பந்திக்கு போக.
தொடரும்.....................

19 comments:

  1. இன்னும் ஒரு வருசத்துல கல்யாணம் ஆகிருமா?

    ReplyDelete
  2. கல்கியின் வாஷிங்டனில் திருமணத்தை மிஞ்சி விட்டது!

    ReplyDelete
  3. என்ன கொடுமை வால்பையா, "கல்கி" எழுதின வாஷிங்டனில் திருமணம் நான் படிச்சதில்லையேப்பா:-))

    ReplyDelete
  4. //வியாழன் இரவு அந்த வழியா வந்தா வத்திசாய்பு சாம்பிரானி போட்டு கொஞ்சம் நாட்டு சர்கரை தருவார். (பத்தி வியாபாரம் செய்ததால் அவர் வத்திசாயுபு ஆகிட்டார்)

    அந்த தர்கா பத்தி ஒரு விவரமே தெரியலைன்னாலும் அது மேல ஒரு ஈர்ப்பு வியாழன் மாலை புள்ளையார கும்பிட்டுட்டு தர்காவினையும் கும்பிட்டு வந்த பய நானு :))))

    ReplyDelete
  5. //மூணு லிட்டர் நல்ல பசும்பாலா தண்ணி ஊத்தாம நல்லத்துகுடி கார்காத்தாரு புள்ள வீட்டுல இருந்து கொண்டு வர சொல்லியிருக்கேன். அதை நீ என்ன பண்ற சாயந்திரம் ஆறு மணிக்கு எல்லாம் குமட்டி அடுப்பிலே வெங்கல பால் சட்டியிலே வச்சிடனும்...."///

    இதெல்லாம் இப்ப ஒரு முறையாவே மாறிப்போச்சு !

    நல்ல திக் பசும்பால்
    வெங்கல பாத்திரம்
    சுண்ட சுண்ட காச்சுணும் :))))

    ReplyDelete
  6. //சோத்தை போட்டு வளக்கல, காமிச்சு தான் வளத்துருக்காங்க, ஆப்பிள் செண்டு தூக்க ஆளு வைப்பா போல இருக்கு அவ அம்மாகாரி" என //

    :)))))))))))))

    இதே வசனம் நானும் ஒரு கல்யாண பங்ஷன்ல்ல கேட்ட்டிருக்கேணே :)

    சூப்பர்!

    ReplyDelete
  7. //இப்போ தெர்மாஸ் விளக்கு குரூப் பத்தி சொல்ல வேண்டும். அதிலே ஒரு சின்ன பெண் என்றேனே அது வைத்திருந்த லைட் எறியவில்லை. ஒரு கணக்குக்காக அந்த பெண் போலிருக்கு. அத்தை அதை கவனிச்சாச்சு. கண்டிப்பா ஒன்பது லைட்டுக்கு தான் காசு தர போறாங்க.
    //


    தக தகக்கும் ஒளி வெள்ளம்

    மெல்லிய புகை வீசும் அந்த வாசம்

    அழகாய் லைன் கட்டி நிக்கிறது!

    அந்த டோட்டல் குரூப்புக்கும் வெளிச்சம் கொடுக்கும் சூரியனாய் மிகுந்த பெருமிதத்துதன் நிற்கும் மக்கள்

    நான் இப்படியெல்லாம் ஃபீல் பண்ணியிருக்கேனே அண்ணே! :)))

    (பழரச வாசம் வீசாத ஆளுங்க உண்டா பெட்ரூமாஸ் குரூப்ல ?!)

    ReplyDelete
  8. வழக்கம்போல கலக்கல் காமெடி காக்டெயில்

    ReplyDelete
  9. //கல்கியின் வாஷிங்டனில் திருமணத்தை மிஞ்சி விட்டது!//

    யோவ் வாலு! உங்க காமெடிக்கு அளவேயில்லைய்யா :-)

    அது சாவி எழுதினது ஐயா!

    அபி அப்பா!

    நல்லா சூப்பரா போகுதுக். கலக்குங்க :-)

    ReplyDelete
  10. வாப்பா ஆயில்யா!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    \\இதெல்லாம் இப்ப ஒரு முறையாவே மாறிப்போச்சு !

    நல்ல திக் பசும்பால்
    வெங்கல பாத்திரம்
    சுண்ட சுண்ட காச்சுணும் :))))\\

    தம்பி நீ கல்யாணம் ஆகாத சின்ன பையன்ப்பா! தெரட்டி பால் பத்தியெல்லாம் பேசப்படாது:-)

    \\தக தகக்கும் ஒளி வெள்ளம்

    மெல்லிய புகை வீசும் அந்த வாசம்

    அழகாய் லைன் கட்டி நிக்கிறது!

    அந்த டோட்டல் குரூப்புக்கும் வெளிச்சம் கொடுக்கும் சூரியனாய் மிகுந்த பெருமிதத்துதன் நிற்கும் மக்கள்

    நான் இப்படியெல்லாம் ஃபீல் பண்ணியிருக்கேனே அண்ணே! :)))\\

    நல்லா நான் சொல்ல நினைச்சது எல்லாமே சொல்லிட்டப்பா!!

    ReplyDelete
  11. \\ செந்தழல் ரவி said...
    வழக்கம்போல கலக்கல் காமெடி காக்டெயில்\\\

    மிக்க நன்றி ரவி! மீதி பாகம் எல்லாம் படிச்சியலா?

    ReplyDelete
  12. வாங்க ஸ்ரீதர், ரொம்ப நாள் ஆச்சு நம்ம பதிவு பக்கம் வந்து! வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  13. ராஜா,
    பின்னிப் பெடலெடுத்துட்டே போ!!.. என்ன ஒரு விவரணை.. என்ன் ஒரு ஆப்சர்வேஷன் பவர் !!

    கலக்கல்..

    படிச்சா.. சித்திக் கையைப் புடிச்சிக்கிட்டுப் போன ச்சின்னப் பையன் பார்த்த மாதிரியா சொல்றே... என்னவோ மேலேயிருந்து பார்த்த ஆண்டவன் கணக்கா இல்ல வெவரமா சொல்றே..

    என்ன ஒரு ஃபோட்டோகிராபிக் மெமரி போ..

    வாழ்த்துக்கள் ராஜா...

    ReplyDelete
  14. அபி அப்பா செம ஃபார்ம்ல இருக்காருங்க.:)

    அத்தை திரட்டிப் பால் செய்தாங்களா இல்லையா. உங்க சீட்டுக் கச்செரியை நடூல விட்டுட்டீங்க.
    அப்பவே பொண்ணு பார்த்து வச்சிட்டீங்களா:)

    ஆப்பிளை வைக்காம எலுமிச்ச வச்ச செண்டை மணப்பெண் விழாம பிட்சிச்சிக்கிட்டாளா.

    இது கல்கி ஸ்டைலும் இல்லை. சாஅவி ஸ்டைலும் இல்லை.
    கொத்தம்னக்கலம் சுப்பு சார் ஸ்டைல். அற்புதம் அபி அப்பா.
    மனசு லேசாயிடுச்சு. நல்லா இருக்கணும் நீங்க. எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. //கல்கியின் வாஷிங்டனில் திருமணத்தை மிஞ்சி விட்டது!//

    ஹா ஹா, வால், யார் எழுதினதுனு சொல்லலாம்னு பார்த்தா யாரோ மு.கொ. எழுதிட்டாங்க, போகட்டும், உங்க முதல் பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீஈஈஈஈஈட்டேஏஏஏஏஏஏ போட்டுடறேன்.

    புத்தாண்டு வாழ்த்துகள் அபி அப்பா, உடம்பும் கவனம்.

    ReplyDelete
  16. \\ Seemachu said...
    ராஜா,
    பின்னிப் பெடலெடுத்துட்டே போ!!.. என்ன ஒரு விவரணை.. என்ன் ஒரு ஆப்சர்வேஷன் பவர் !!

    கலக்கல்..

    படிச்சா.. சித்திக் கையைப் புடிச்சிக்கிட்டுப் போன ச்சின்னப் பையன் பார்த்த மாதிரியா சொல்றே... என்னவோ மேலேயிருந்து பார்த்த ஆண்டவன் கணக்கா இல்ல வெவரமா சொல்றே..

    என்ன ஒரு ஃபோட்டோகிராபிக் மெமரி போ..

    வாழ்த்துக்கள் ராஜா...\\

    என்ன பதில் சொல்லுவதுன்னு தெரியலை அண்ணா! கொஞ்சம் ஞாபகப்படுத்தி எழுதினேன்!

    இந்த ஞாபகம் எல்லாம் பாட புத்தகத்திலே இருந்தா அடுத்த மயில்சாமி அண்னாதுரையா ஆகியிருக்கலாம்:-))

    (எத்தனை நாளைக்கு தான் கலாமை சொல்வது:-))

    ReplyDelete
  17. \\ வல்லிசிம்ஹன் said...
    அபி அப்பா செம ஃபார்ம்ல இருக்காருங்க.:)

    அத்தை திரட்டிப் பால் செய்தாங்களா இல்லையா. உங்க சீட்டுக் கச்செரியை நடூல விட்டுட்டீங்க.
    அப்பவே பொண்ணு பார்த்து வச்சிட்டீங்களா:)

    ஆப்பிளை வைக்காம எலுமிச்ச வச்ச செண்டை மணப்பெண் விழாம பிட்சிச்சிக்கிட்டாளா.

    இது கல்கி ஸ்டைலும் இல்லை. சாஅவி ஸ்டைலும் இல்லை.
    கொத்தம்னக்கலம் சுப்பு சார் ஸ்டைல். அற்புதம் அபி அப்பா.
    மனசு லேசாயிடுச்சு. நல்லா இருக்கணும் நீங்க. எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
    \\

    வல்லிம்மா நான் அந்த சீட்டு கச்சேரியிலே பார்வையாளர் தானே!

    ஆஹா எனக்கு அப்போ வயசு என்ன? எனக்கு எப்படி பொண்ணு பார்ப்பாங்க:-))

    திரட்டி பால் அந்த காலத்திலே எனக்கு கிடைத்ததே இல்லை, கடைசி சட்டியை சுரண்டி சாப்பிடும் பாக்கியம் மட்டுமே கிடைத்தது.

    அது கிடைத்தது எனக்கு 1995, ஜூன், 2ல் தான்:-))

    ReplyDelete
  18. \\ கீதா சாம்பசிவம் said...
    //கல்கியின் வாஷிங்டனில் திருமணத்தை மிஞ்சி விட்டது!//

    ஹா ஹா, வால், யார் எழுதினதுனு சொல்லலாம்னு பார்த்தா யாரோ மு.கொ. எழுதிட்டாங்க, போகட்டும், உங்க முதல் பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீஈஈஈஈஈட்டேஏஏஏஏஏஏ போட்டுடறேன்.

    புத்தாண்டு வாழ்த்துகள் அபி அப்பா, உடம்பும் கவனம்.\\\

    ஆஹ நீங்களும் அது எழுதினது கல்கின்னு தான் நெனச்சுகிட்டு இருக்கியலா கீதாம்மா:-))

    உடல் நலம் சூப்பர்! நல்லா இருக்கேன். நன்றி!

    ReplyDelete
  19. \\இது கல்கி ஸ்டைலும் இல்லை. சாஅவி ஸ்டைலும் இல்லை.
    கொத்தம்னக்கலம் சுப்பு சார் ஸ்டைல். அற்புதம் அபி அப்பா.
    மனசு லேசாயிடுச்சு. நல்லா இருக்கணும் நீங்க. எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
    \\

    வல்லிம்மா இதிலே நாதஸ்வர கோஷ்டி அலப்பரை கொஞ்சம் தூக்கலா இருப்பதால் தில்லானாமோகனாம்பாள் ஸ்டை இருந்திருக்க வாய்ய்பு இருக்கு. அதனால உங்களுக்கு கொத்தமங்கலம் வாசனைவந்திருக்கு.

    தஞ்சை மண் கல்யாணத்திலே இது தவிர்க்க முடியாது!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))