பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 24, 2011

மயிலாடுதுறைக்கு தலைவர் கலைஞர் வந்தார்!!!

"காலை 11 மணிக்கு கலைஞர் மயிலாடுதுறை வழியாக திருவாரூர்க்கு 2011 சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சாரத்துக்காகவும் வேட்புமனு தாக்கல் செய்யவும் செல்கின்றார் ஆகவே அணி திரண்டு வாரீர். மயிலாடுதுறை எல்லையான கால்டேக்ஸ் பெட்ரோல் பங் எதிரில் நகர திமுக சார்பில் வரவேற்பு கொடுக்கப்படும்" என ஆட்டோ அலறிக்கொண்டு போன போதே உடம்பில் ஒரு வித முறுக்கேறியது திமுக தொண்டர்களுக்கு. ரங்கன், ஜெய்லாபாய், சைக்கிள்கடை காசிநாதன் போன்ற கலைஞர் காலத்து திமுக தொண்டர்கள் முதல் ஜனதாபாலு, அலக்சாண்டர் போன்ற நடுத்தர காலத்து தொண்டர்கள் முதல் இப்போதையை ஆர்.கே,சங்கர், முருகதாஸ் போன்ற இளைஞர்கள் வரை மகளிர் அணியினர், முன்னாள், இன்னாள் நகராட்சி பதவியில் இருப்போர், இல்லாதோர், எதிர்பார்ப்போர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர் அணியினர், கான்வாய் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என கால்டேக்ஸ் இடமே காலை 11 மணி முதல் பரபரப்பாகியது.

"இப்ப தான் கலைஞர்டிவில பார்த்தேன். ஒரு டெம்போ டிராவலர் மாதிரி வேன், அதிலே கலைஞர் முன் பக்க சீட்டுல உட்காந்து இருக்காரு. தயாநிதி மாறன் கடேசில உட்காந்து இருக்காரு. கனிமொழி வேன்ல ஏறிகிட்டு இருக்கு, கார்த்தால 7 மணிக்கு கெளம்பிட்டாரு. வரும் போது பாண்டிச்சேரில பலாரம் சாப்டு பின்ன அங்க இருந்து கிளம்பி வைத்தீஸ்வரன்கோவில்ல வந்து ஒன்னுக்கு கின்னுக்கு போயிட்டு திரும்பவும் எதுனா சாப்புட்டு ஒரு மணி நேரம் காங்கிரஸ் லிஸ்டு எதுனா ரிலீஸ் ஆகிடுச்சான்னு பார்த்துட்டு அப்புடி வந்திருந்தா எதுனா கொடும்பாவி எரிப்பு சண்டை எல்லாம் பார்த்துட்டு இங்க வர்ரத்துக்கு மணி 12 ஆயிடும். அப்படியே திருவாரூர்ல போய் சட்ட வேட்டி மாத்திகிட்டு கூட்டத்துக்கு வந்தா சரியா இருக்கும். பத்து மணிக்கு டான்னு முடிக்கினும்ல"

இப்படியாக தலைவரின் மொத்த புரொக்ராமும் மனப்பாடமாக சொல்லப்பட்டு கொண்டு இருந்தது. அதற்காக அவரு ஒன்னுக்கு போவது பத்தி எல்லாம் கூடவா யோசிப்பாங்க? அங்கே நான் பார்த்தது கேட்டது எல்லாம் சொல்ல ஆசையாகத்தான் இருக்கின்றது.

"அந்த காலத்துல நடிப்பிசைபுலவர் கே ஆர் ராமசாமிகிட்டே கேட்டு காரை வாங்கிகிட்டு வருவாரு அண்ணாதுரை. ஆனா அப்பவே கலைஞர் ஒரு பியூக் வச்சிருந்தாரு. அந்த கார் கொள்ளிடத்தை தொட்டுடுச்சுன்னா மன்னை தான் கூட ஏறிப்பாரு. அப்படியே காத்தாட கொள்ளிட மணல்ல உட்காந்து பேசிகிட்டு இருந்துட்டு வருவாரு கூட்டத்துக்கு. மேடைக்கு எடது பக்கமா நின்னு மைக்க புடிச்சாருன்னா அவரு போட்டிருக்கும் அந்த கதர் துண்டு தான் பாவம். அத்தோட ஒரு முனையை ஒரு கையிலயும் இன்னுமொறு முனையை முதுகு பக்கமா கொண்டு வந்து பூணூல் கணக்கா சருக்கு புருக்குன்னு இழுத்து கிட்டே பேச ஆரம்பிச்சா அணலு தான். ஒரு ரெண்டு மணி நேரம் பஞ்சா பறக்கும்" இது ஒரு பெருசு.

"பெருசு, நீ ஆரம்பிச்சுடாத, தோ அந்த பாரு, தெஷ்ணாமூர்த்தி கோவிலோட தேர் நிக்குது பாரு. அது அடில கொஞ்சம் நெழலு இருக்கு அங்க போய் உட்காந்துக்கயேன்" ஒரு நடுத்தரம் அந்த பெருசை பார்த்து சொல்ல

"அய்யய்யோ அண்ணே, அதுகிட்ட தெஷ்ணாமூர்த்தி, தேருன்னு எல்லாம் சொல்லாத அண்ணே, உடனே அது தலைவரோட பூர்வாசிரம், புண்ணாக்கு ஆஸ்ரமம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சு அவரு திருவாரூரு தேரை ஓட்டுனது வரைக்கும் சொல்லி முடிப்பாரு" .. உடனே அத்தனை சிறுசுகளும் கொல்லென சிரிக்க அந்த நடுத்தரம் " விடுங்கடா, பெருசு ஆசைப்பட்டு வந்திருக்கு. இங்க பாரு தீவாளி நல்ல நாளு பெருநாளுக்கு கூட புதுசு கட்டாது. தலைவரு வந்தா மாத்திரம் பளிச்சுன்னு கரை வேட்டிகட்டிகிட்டு வந்திரும்" என சிலாகிக்க யாரோ ஒரு சிறுசு கையிலே ஒரு கொடியை வைத்து கொண்டு ஒரு அரை சுருதியோடு தொண்டை கிழிய "டாக்க்க்க்க்க்க்டர்ர்ர்ர்ர்ர் கலைஞர் வாழ்க.." என கத்திக்கொண்டே இருந்தது.

நேரம் ஆக ஆக அந்த பக்கம் போகும் வரும் போலீஸ் வண்டிகளில் தலைவர் எங்கே வந்து கொண்டிருக்கின்றார் என கேட்டுக்கொண்டு இருக்க அதிலே ஒரு நடுத்தரம் "அட சும்மா இருங்கப்பா என் பிரண்டு சிதம்பரம் தெக்கு வீதில சருபத்து கடை போட்டிருக்கான். அவன் கிட்டே கேட்குறேன்" என சொன்னதும் ஒரு பத்து ஜோடி காதுகள் அந்த நடுத்தரம் நோக்கி திரும்ப "ஆங் ஆங் இன்னும் வரலையா, நீ ஒன்னு பண்ணு. அவரு கிராஸ் பண்ணி இங்க வந்ததுக்கு பின்னே ஒரு எஸ்செம்மெஸு வுடு" என சொல்லிவிட்டு "இன்னும் வரலையாம்ப்பா கடலூர் கிட்ட ஏதோ கண்ணியாம்கோயிலாம் அதை தாண்டிபுட்டாராம். வழிமுச்சூடும் ஜனங்க தாங்கலையாம். வண்டி மாப்ள ஊர்வோலம் மாரி நவுருதாம். போங்கப்பா போங்க அங்க நகரம் குந்தி இருக்கு பாருங்க அந்த டிரான்ஸ்பார்மரு கிட்டே ஒரு கட மாடிப்படில. அது கிட்டே நம்ம ஏரியா பசங்க பசிக்குதுன்னு சொல்றாங்கன்னு நான் சொன்னேனு சொல்லி காசு வாங்கியாங்க" என சொல்ல ஒரு நாலு விடலைங்க அந்த பக்கம் நகரசெயலர் குண்டாமணி கிட்டே போய் விட்டு திரும்பவும் வந்து "அண்ணே நகரம் வையுதுண்ணே, தேவூரான், நாவுரான்னு பழமொழில்லாம் சொல்லி திட்டுதுண்ணே" என திரும்ப அந்த நடுத்தரம் நகரத்தை நோக்கி போனது.

அங்கே நகரம் " வாண்ணே, வா, உன் வண்டி நம்பர் என்னாது?" என சொல்லிகிட்டே "ஒ ஈரோ கோண்டா வாங்கிட்டியா, இந்தா இந்த நோட்டுல பேரையும் வண்டி நம்பரையும் எழுது. இத்த புடி 100 ரூவா. சுடும் பாரு. நாசிக்குல இருந்து நேரா பிளைட்ட புடிச்சு வருது. ஆமா உந்தெரு பசங்க டீ குடிக்க காசு வேணும்னு வந்தானுங்க. இருங்கடா தலைவரு வந்துட்டு போவுட்டும்னு சொல்லிட்டு திரும்பி பாக்குறேன், ஒரு பயலையும் காணும். அது கெடக்கட்டும் இது வரக்கிம் 23 வண்டிக்கு கைக்காசு ரெண்டாயிரத்து முன்னூறு குடுத்து இருக்கேன். கேண்டிடேட்டு யாருன்னே தெரியல. காலைல இருந்து நம்ம பயலுவோலுக்கு செலவு பண்ணி கொடிய மன்றத்துல இருந்து கொண்டாந்து நட்டு வச்சிருக்கேன். என்னவோ போ. இதல்லாம் திரும்பி வருமா வராதான்னே தெரியல. சரி உன் பசங்களை கூப்டு அண்ணே, லைட்டா மருந்து வச்சுக்க சொல்லு. இந்தா அதுக்கு இந்த நோட்டுல ஒரு கையெழுத்து போடு. புடி பெரியகாந்திய" என சொல்ல "அட நகரம் என்னாது இதல்லாம் சின்னத்தனமா. தலைவ்ரு எதுகிட்ட வந்துகிட்டு இருக்காருன்னு தெரிஞ்சுகிட்டு போலாம்னு இங்க வந்தா இதல்லாம் ஓடிகிட்டு இருக்குதா. சரி சரி நாம நின்னுருந்தா நம்ம கைக்காசை போட்டு நீயா நானான்னு பார்த்துபுடலாம். ஆனா ஒன்னு எல்லாத்தையும் குறிச்சு வச்சுக்க. ஐசா பைசா இல்லாம கணக்கை தீர்த்துக்க அந்த ஆளுகிட்ட. நான் சொல்றத சொல்லிட்டேன். மீதி ஏமாந்து போறதும் போவாததும் உஞ் சாமர்த்தியம் நகரம்" என சொல்லிக்கொண்டே ஒரு சிறுசை கூப்பிட்டு "எலேய் என் பைக்குல ஒரு நூறு ரூவாய்க்கு எதுத்தாப்புல பெட்ரோலு ஊத்திட்டு வா. ஒரு சேதி இருக்கு சொல்றேன்" என சொல்லிக்கொண்டே பக்கத்து கடைக்கு போய் "தம்பி ரெண்டு 500 தாளு குடு" என சொல்லி பெரிய காந்தியை நீட்ட, அவரு " அண்ணே ஒரு 500 இப்ப வாங்கிக்க அண்ணே, மீதிய சாயந்திரம் வாங்கிக்க" என சொல்லி கொடுக்க பெட்ரோல் ஊத்தி வந்தவன் கிட்டே இந்த நடுத்தரம் " எலேய் நக்ரத்துகிட்டே ஏடாகூடமா வஞ்சிபுட்டேன். சரி அதை வுடு. நம்ம பசங்க எத்தினி பேரு இருக்கீங்க. சரி கணக்கு எல்லாம் எதுக்கு, சின்ன சப்ப மருந்து 5 வாங்கிக்க, 10 கப்பும், 7 பாக்கெட்டு தண்ணியும் வாங்கிக்க, அத்தோ அந்த தேர் அடில இருக்கு பாரு பெருசு, அதுக்கும் ஒரு கட்டிங் மருந்து வையுங்கடா, இந்தா 500, அதுல 330 போவ மீதிக்கு நீங்க எதுனா சாப்புட்டுட்டு எல்லேய் அப்புடியே சாய்ந்திரம் வூட்டு பக்கம் வழியா போம்போது நெய்காராபூந்தி ஒரு இருவத்தி மூணு ரூவாய்க்கு வாங்கிட்டு வந்து என் சின்ன மொவன் வெள்ளாடிகிட்டு இருப்பான் அவன் கிட்ட குடுத்துடு. சாங்காலம் எப்புடியும் காங்கிரஸ்காரன் லிஸ்டு வந்துடும். நா காமராசரு மாளிகைக்கு ஒரு எட்டு பார்த்துட்டு லேட்டா தான் வருவேன் வூட்டு பக்கம். அண்ணி கிட்ட வெவரத்தை சொல்லிடு. கலைஞர் வாழ்கன்னு சத்தம் சரியே இல்லியேடா உங்க கிட்டே. நாங்கல்லாம் அந்த காலத்துல... அட இங்க பார்ரா கார்ல பாஜிரோல போறது யாருன்னு தெரியுதா? பழனிமாணிக்கம். அப்படின்னா இன்னும் பத்து நிமிஷத்துல தலைவர் வந்துடுவாரு. நீங்க அந்த டிரான்ஸ்பார்மர் அடில போய் மருந்து வச்சிட்டு சுருக்கா வந்துடுங்கடா" என சொல்லிக்கொண்டே போனது அந்த நடுத்தரம்.


அந்த நேரம் பார்த்து அந்த நடுத்தரத்துக்கு ஒரு எஸ் எம் எஸ் வர "அட கண்ணாடி எடுத்துட்டு வரலையேப்பா. எலேய் தம்பி இங்க வா. இது என்னான்னு படி" என சொல்லி கொடுக்க "kalaingnar passed away in chidambaram"ன்னு போட்டதை படிச்சுட்டு அதை அந்த கூட்டத்துல வெளியே சொன்னா அடிவிழும் என்ற காரணத்தால் "அண்ணே சிதம்பரம் தாண்டிட்டாராம். அனேகமா இந்நேரம் வல்லம்படுகைக்கு வந்திருப்பாரு"ன்னு சொல்ல அந்த நடுத்தரம் முகத்தில் பெருமையோ பெருமை. பக்கத்தில் இருந்த ஒரு போலீஸ் ஜீப் டிரைவரிடம் " எங்களுக்கு கன் மாதிரி நீஸ் வந்துடும்ல. தலைவரு கொள்டத்துல வரவேற்புல செம கூட்டத்துல மாட்டிகிட்டு இருக்குறாமாம். வண்டி அங்க இருந்தும் நவுந்துடுச்சாம். அடுத்து சீயாழி தான்" என சொல்லிக்கொண்டே "எலேய் மணி என்ன இப்ப 12 ஆச்சா? அடடா ஒரு போனை போட்டு சோழன் சரியான டைமான்னு பாரு. ஏன்னா தலைவரு அரசூரு கேட்டுல மாட்டிக்க கூடாது பாரு" என டிபிக்கல் அரசியல்வாதியாக சொல்ல அந்த மெசேஜ் படிச்ச பையன் " உன் இங்கிலீசுல தீயை வைச்சு கொளுத்த" என டைப் செய்து "அண்ணே அவருக்கு நன்றி சொல்லி ஒரு மெசேஜ் வுட்டுட்டேன் அண்ணே" என சொல்லிக்கொண்டே அதை அனுப்பினான்.

பின்னர் தலைவர் வைத்தீஸ்வரன் கோவில் ஹோட்டல் சதாபிஷேகத்தில் மதிய உணவு மற்றும் ஒய்வு எல்லாம் எடுத்து முடித்து வரும் வரை மருந்து வைக்கப்பட்ட இளசுகள் தலைவர் வாழ்க என கோஷம் போட்டு அந்த இடத்தையே சூடாக்கினர்.அதற்குள் ஒரு ஸ்பீக்கர் கட்டிய ஆட்டோ ஹனீபா பாட்டை போட்டு கொண்டு அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது."இதே நம்ம அச்சுதன் மாத்திரம் சாவாம இருந்திருந்தா இந்நேரம் ஆட்டோவிலே சும்மா ரகளை கட்டி அடிச்சிருப்பாண்டா" என ஒரு பெருசு ஒரு மாதத்துக்கு முன்னர் இறந்து போன திமுக பிரச்சார பீரங்கி அச்சுதனை நினைவு கூர்ந்தது.

இப்படியாக நடந்து கொண்டு இருக்கும் போதே வெய்யில் மண்டையை காய்ச்சி எடுக்க மதியம் 3 மணிக்கு ஒரு போலீஸ் ஜீப் சகிதம் ஒரு பாஜிரோவில் அமைச்சர் எ.வ. வேலு போக நம்ம நடுத்தரம் " வேலு அண்ணன் அவரு சம்மந்தி ஆர். எஸ். கிருஷ்ணா வூட்டுக்கு சாப்புட போராரு" என சொல்லிக்கொண்டே இருக்க அடுத்து எம் எல் சி என திமுகவினரால் அன்போடு அழைக்கப்படும் அமைச்சர் கோ. சி. மணி அடுத்தது ஒரு ஸ்கார்பியோவில் போக ஒரு வித பரபரப்பு. அடுத்து ஒரு அம்பாசிட்டரில் மாவட்ட எஸ்பி வர உடனே பேண்டு வாத்தியம் எல்லாம் கச்சேரியை ஆரம்பிக்க இரு பக்கமும் ஒரே கூட்டம் சேர்ந்துவிட அந்த பக்கம் பள்ளிகள் விட்டு ராஜ் மெட்ரிக், சங்கராவில் இருந்தும் மாணவர்கள் வர சங்கரா பள்ளி மாணவர்கள் ஒதுங்கி போக அந்த இடமே கலைஞர் வாழ்க கோஷத்துடன் அல்லோகலப்பட்டது.
(இந்த காரின் உள்ளே கலைஞர் இருப்பதை கண்டு பிடித்து கொள்ளவும்)
அதற்குள்ளாக அமைச்சர் மதிவாணன் ஒரு காரில் போக சிறிது நேரத்தில் ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ் என எழுதிய போலீஸ் வேனில் இருந்து சோம்பலாக சில போலீசார் இறங்கி வந்து ஒரு கயிறு எடுத்து நீட்டி பிடித்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய லிங்கராஜன், குண்டாமணி ஆகியோர் முன்பக்கமாக வந்து நிற்க நடுவே பாமக, விசிக கூட்டத்தினருடன் மூமுக தொண்டர்களும் வந்து நிற்க மதியம் 3.30க்கு 2728 என்கிற எண்ணுடைய ஒரு காரில் தலைவர் வந்தார். முன்பக்க சீட்டில் அமைச்சர் பொன்முடி இருக்க பின்பக்க சீட்டில் தலைவரும், கனிமொழியும் இருக்க கூட்டத்தை பார்த்து நிற்க குண்டாமணியும், லிங்கராஜனும் வந்து பொன்னாடை கொடுக்க அதை கனிமொழி வாங்கி பாதுகாப்பு போலீசாரிடம் கொடுக்க, அந்த இடமே கஜாமுஜான்னு ஆக தலைவர் வாழ்க என குரல் கொடுக்க தலைவர் கலைஞர் அதி அற்புதமான சிரித்த முகத்துடன் கையை காட்ட ஒட்டுமொத்த கூட்டமும் மெய்சிலிர்த்தது. சிலர் வாய்விட்டு அழுதனர் உண்ர்சி மேலீட்டால். சிலர் தான் எப்படி வாழ்த்து சொல்கின்றோம் என்று தனக்கே தெரியாத அளவு இஷ்ட்டத்துக்கு வாழ்க வாழ்க என உண்ர்சி குவியலாய் கத்த தொடங்க தலைவரின் கான்வாய் மயிலாடுதுறையை கடந்து சென்றது.

"அப்பாடா சாவதுக்குள்ள தலைவரை கிட்டத்துல பார்க்கனும்னு இருந்தேன். பார்த்துட்டேன்" என சொன்ன ஒருவருக்கு வயது 50 இருக்கும். அவரை பக்கத்தில் இருந்தவர் முறைக்க "நான் என்னை சொன்னேன். நான் சாவறத்துக்குள்ள " என அவர் திருத்தி சொன்னார். ஒட்டு மொத்த கூட்டமும் கலைந்து சென்றது. ஒருவன் சத்தமாக பேசிக்கொண்டே போனான். தலைவரு இந்த பீரியட் முதல்வரா முடிக்கும் போது 92 வயசு ஆகியிருக்கும். 7 வது முறை முதல்வரா இருந்து முடிக்கும் போது 97 ஆகியிருக்கும். அப்படின்னா அவரது நூற்றாண்டு விழாவுல அவரு எட்டாவது முறையா முதல்வராக இருப்பாரு. சூப்பர்டா.." என சொல்லிக்கொண்டே போனான். இதான் திமுக தொண்டன். தலைவர் சாவிற்க்கு அப்பாற்பட்டவர் என்ற எண்ணம் வலுவாக இருக்கின்றது. ஆச்சர்யப்பட எதும் இல்லை. இருப்பார். அவரது நூற்றாண்டை முதல்வராக தானே இருந்து நடத்துவார். வாழ்க கலைஞர்.வாழ்க கலைஞர். வாழ்க வாழ்கவே!!!

14 comments:

 1. இன்னுமா இப்படி தொண்டர்கள் இருக்கிறார்கள்? Pretty Weird!

  ReplyDelete
 2. கலக்கல் ரிப்போர்ட்.

  ReplyDelete
 3. therthal mudiyarava vraikum unga blogkku nan leave

  ReplyDelete
 4. இயல்பான, அழகான, வெள்ளந்தியான விவரணை! ரொம்ம்ப நல்லாருந்திச்சி!

  ReplyDelete
 5. சூப்பர்!!!
  பெரியார் கூத்தாடிகள் என்று சொன்னது தப்பேயில்லை.

  ReplyDelete
 6. சூப்பர்.. தலைவரின் கைதை கண்டித்து சென்னைல் நடந்த பேரணியில் தலைவர் வாழ்க என்று உணர்சிப்பெருக்கோடு லட்சகனக்கனவரோடு இணைந்து சென்றது நினைவுக்கு வருகிறது..

  ஆயிரம் சொல்லுங்க.. மக்கள் வெள்ளத்தில் தலைவர் கார் நீந்தி செல்லும் வேளையில் பார்க்கும் அந்த 2 நிமிடத்தில் ஏற்படும் சிலிர்பே தனி..

  ReplyDelete
 7. இப்படியான தொண்டர்கள் இப்போது திமுகவில் மட்டும்தான் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 8. நகரச் செயலாளர், ஐநூறு ரூபாய் என்ற பத்தி சற்று அறுவை.
  அதை தவிர்த்து இந்தப் பதிவு நன்று.

  போன வாரம் வரை, தினமும் மாலை ஐந்து அரை மணி அளவில் தேனாம்பேட்டை, தீ எம் எஸ் அருகில் நின்றால் தினமும் கலைஞரை காரில் பார்க்க முடிந்து இருக்கும்

  ReplyDelete
 9. அனானி,பந்து, விஜேஆர், எல்கே, விந்தைமனிதன்,அனானி, திருச்சி ராஜேஷ்,சரவணகுமார், பிரகாஷ், ராம்ஜி எல்லோருக்கும் மிக்க நன்றி! @ராம்ஜி! நான் பார்த்ததை அப்படியே எழுதியிருக்கேன். அதனால் அந்த பாராவிலே சுவாரஸ்யமாக்க என் மனது விரும்பவில்லை. எனக்கே தெரியும் அந்த பாரா போர் அடிக்கும் என்று. அடுத்து சென்னையில் வசிக்கும் எந்த சின்ன பசங்களும் ஏரோப்பிளேன் போவதை ஒரு அதிசயமாக பார்ப்பதில்லை. ஆனா எங்க ஊர் பக்கம் வந்து பாருங்க. அந்த டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தத்துக்கு வயல் வரப்புன்னு துரத்திக்கொண்டே ஓடும் வெள்ளந்திகள் அய்யா. ஏன் நான் கூட இன்னமும் ஏரோப்பிளேன் சத்தம் ஊரில் கேட்டால் ஓடிப்போய் பார்க்கத்தான் செய்கிறேன். உடனே தலைவரை பார்ப்பதை அந்த விஷயத்தோடு ஒப்பிடுவதாக நினைக்க வேண்டாம். நேற்று அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோருமே அன்றைய ஒரு நாள் வேலையை சம்பளத்தை விட்டுவிட்டு நின்றவர்கள். தலைவரை காண வேண்டும். அதும் அந்த அரசு பரிபாளங்களுடன், கூட்ட வெள்ளத்தில் அவர் கார் நீத்தி போவதை பார்க்க வேண்டும் என்கிற ஆவல், அவர் முகம் காண துடிக்கும் அந்த் உணர்வு... இதை எல்லாம் தான் நான் அங்கே பார்த்தேன். நானும் அதே உணர்சி குவியலில் தான் இருந்தேன். இது சத்தியம். அவர் பின்னாலேயே திருவாரூர் அந்த கூட்டம் போனது. திரும்பி வர இரவு 12 ஆகியது. பின்னர் தான் இந்த பதிவே எழுதினேன்!

  ReplyDelete
 10. கூடவே வந்த பாக்குத் தூள்களை என்ன செய்தீர்கள்? வெட்கம் கெட்ட தொண்டர்கள் தூ

  ReplyDelete
 11. //மேடைக்கு எடது பக்கமா நின்னு மைக்க புடிச்சாருன்னா அவரு போட்டிருக்கும் அந்த கதர் துண்டு தான் பாவம் // கதர் துண்டு இப்போ அவர போட்டு இழுக்குது .... காலம்....

  ReplyDelete
 12. https://picasaweb.google.com/vengadavasan/WallPapers#5587884352866147970

  ReplyDelete
 13. அன்பின் அபி அப்பா - அருமையான நேரடி ஒளி(லி)பரப்பு. விநாடிக்கு விநாடி ஒரு நிகழ்விமையும் தவற விடாமல் ஒலி பரப்பியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))