பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 26, 2011

அரசியல் பதிவல்ல, இது ஒரு அனுபவ பதிவு!!!

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி எங்க ஊர்ல இருந்து ஒன்பது கிமீ தூரத்தில் இருக்கும் எங்கள் கிராமம் பெருஞ்சேரிக்கு போக வேண்டிய வேலை இருந்தது. அன்றைக்கு என் வண்டியை என் நண்பர் எடுத்து போனதால் பஸ்ஸில் போகலாமே என நினைத்தேன். அந்த ஊர் திருவாரூர் மார்கத்தில் இருந்தாலும் மங்கைநல்லூருக்கு முன்னர் அரை கிமீ தூரத்துக்கு முன்பாகவே பிரிந்து தனி சாலையாக உள்ளே 3 கிமீ செல்ல வேண்டும். இல்லாவிடில் மங்கைநல்லூரில் இருந்து வீரசோழன் ஆற்றை தாண்டி பொறையாறு போகும் சாலையில் ஒரு 3 கிமீ போய் அங்கிருந்து திரும்பவும் வீரசோழன் ஆற்றை கடந்து பெருஞ்சேரிக்கு வர வேண்டும். ஆனால் அந்த கிராமத்துக்குள் போக ஒரே ஒரு டவுன் பஸ் 8ம் நம்பர் மட்டுமே. நான் எப்போது மாயவரத்தில் சுத்தினாலும் அது என் கண்ணில் தென்படும். ஆனால் நான் பெருஞ்சேரிக்கு செல்வதாக நினைத்து வந்தால் ஒரு 3 மணி நேரத்துக்கு கண்ணிலேயே படாது. நான் அதற்காகவே அந்த 8ம் நம்பரை பற்றி எப்போதும் கவலைப்படுவது இல்லை. மங்கைநல்லூருக்கு முன்பாக இறங்கி நடையை கட்டுவேன் அந்த கிராமத்துக்கு.

ஆனால் அன்றைக்கு என்று பார்த்து அந்த பஸ் நிறுத்தத்தை தவறவிட்டுவிட்டேன். நேராக மங்கைநல்லூரில் போய் பஸ் நின்றது. சரி இந்த முறை வேறு வழியாக அதாவது பொறையாறு பாதையில் நடந்து அதாவது தத்தங்குடி, மலைக்குடி வழியாக போய் வீரசோழனை கடந்து கிராமத்துக்குள் போகலாம் என நினைத்தேன். அந்த பகுதி அத்தனை கிராமத்துக்கும் மங்கைநல்லூர் தான் பஸார். ஜவுளிக்கடை, பெரிய பெரிய மளிகைக்கடை, உயர்நிலைப்பள்ளிக்கூடம், ஹோட்டல்,அரசு மருத்துவமணை உரம், பூச்சிமருந்து கடை, விவசாய கொள்முதல் நிலையம், கட்சிகளின் படிப்பகங்கள் (ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில்), ஒரு பேருந்து நிழற்குடை (நல்ல நிலையில் டைல்ஸ் ஒட்டி நன்ராகவே இருக்கின்றது இப்போது) ஒரு வல்லளார் மடம், ஷாப்புகடை (அதாங்க ஸ்டேஷனரி போல) , ஒரு மின்சார அலுவலகம், ஒரு பொதுப்பணித்துறை அலுவலகம் என ஒரு தேர்வு நிலை பஞ்சாயத்து அந்த கிராமம். அங்கே சில ஆட்டோக்களும் நிற்கின்றன. ஆட்டோகாரரிடம் போய் " பெருஞ்சேரிக்கு எத்தனை ரூபாய் என கேட்டுப்பார்ப்போம் என நினைத்து கேட்டேன். 50 ரூபாய் என்று சொல்ல ஆரம்பித்து பின்னர் படிப்படியாக ஒரு கடலைமிட்டாய்க்கு கூட வரும் நிலையில் இருந்தார் அவர். எப்படித்தான் கட்டுப்படியாகின்றதோ என நினைத்துக்கொண்டேன். பின்னர் தான் அந்த பொறையாறு மார்கத்தில் நடந்து போக ஆசை வந்தது. ஏறக்குறைய 32 வருடங்களுக்கு முன்னர் அந்த வழியாக நடந்து போனடு ஞாபகம் வந்தது. மீண்டும் அந்த மாதிரி நடக்க மிகவும் ஆசையாக இருந்தது.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்தில் ஒரு இரண்டு வருடம் எங்கள் கிராமத்துக்கு குடிபெயர்ந்தோம். அப்போது நான் ஏழாம் வகுப்பை எங்கள் நேஷனல் பள்ளியில் படிக்காமல் இங்கே வந்து மங்கைநல்லூரில் இருந்த K.S.O உயர்நிலைப்பள்ளியில் படிக்க நேர்ந்தது. எங்கள் கிராமத்தில் இருந்து ஒரு ஐந்து கிமீ தூரம் அத்தனை மாணவர்களும் அந்த மங்கைநலூர் உயர்நிலைப்பள்ளிக்கு நடந்து தான் வருவார்கள். எங்கள் கிராமம் மட்டும் அல்ல. வழுவூர், எலந்தகுடி, மேலமங்கநல்லூர், கோமல், கழனிவாசல், கொல்லுமாங்குடி, தத்தங்குடி, மலைக்குடி, கழனிவாசல், என சுத்து பட்டு அத்தனை கிராமங்களும் அந்த கிராமங்களுடன் சேர்ந்த குக்கிராமங்களும் அங்கே தான் படிக்க வரவேண்டும். காலை எட்டு மணிக்கே கிளம்பினால் தான் ஒரு பத்து மணிக்கு பள்ளி போய் சேர முடியும்.

அந்த பள்ளியை பற்றி சொன்னால் சொல்லிகொண்டே இருக்கலாம். நல்ல வயல்வெளி நடுவில் எதிரே ரயில்வே ஸ்டேஷன், பள்ளியை சுற்றிலும் போர்செட், ஒரு பக்கம் பாசன வாய்க்கால், பெரிய பெரிய வேப்ப மரங்கள், மிககுளுமையான சூழல், அமைதியான இடம் உள்ளே ஒரு வினாயகர் கோவில், வெள்ளை நிறதோலில் செய்யப்பட்ட ஹெட்மாஸ்டர், இந்திராகாந்தி மாதிரியான மூக்கு வைத்திருந்த ஆர்வி டீச்சர், பில்லூர் சார், பட்டாளத்து சார், விபி சார் என்கிற பிடி சார், திரா சார் என்கிற தமிழய்யா,புலவர் சடாட்சரம் அய்யா, மு.பா சார், முத்தூர் சார் என அருமையான ஆசிரியர்கள். கிராமத்து வெள்ளேந்தியான மாணவர்கள், மாணவிகள், ஐந்து கிமீ தூரம் காலில் செருப்பு இல்லாமல் நடந்து வந்தாலும் முகத்தில் அலுப்பை காட்டிக்காத அந்த மாணவர்கள், மதிய உணவையே நம்பி வரும் பரம ஏழை மாணவ மாணவிகள், (வாழ்க காமராஜர். மனதார சொல்கின்றேன்) , அந்த பள்ளி தாளாளர் கே. சிவவடிவேலு உடையார் பிறந்த தினத்தை கொண்டாடிவிட்டு அவர்கள் வீட்டில் அவர்களின் மாடர்ன் ரைஸ்மில்லில் போடும் சர்க்கரை பொங்கல், புளிசாதத்துக்கே அவரை மனதார வாழ்த்தும் அன்பான அந்த மாணவமாணவிகள் எல்லோரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கடக்கம் என்னும் கிராமத்தில் இருந்து எங்கள் ஊர் வழியாக பள்ளிக்கு போகும் மாணவர்களுடன் எங்கள் ஊர் மாணவ மாணவிகளின் ஊர்வளமும் தொடரும். பெருஞ்சேரியையும் மலைக்குடி கிராமத்தையும் இனைக்கும் ஒரு மூங்கில் பாலத்தினை கடந்து செல்ல ஆரம்பிப்போம். வழியில் நாகப்பழம் காய்த்து குலுங்கும் மரத்தினையும் , நெல்லிக்காய் மரத்தினையும், அத்தனை ஏன் நார்தங்காய் மரத்தை கூட விட்டு வைப்பதில்லை. நடுவே யாராவது போய் பக்கத்து வயலில் இறங்கி ஒரு கரும்பை உடைத்து வந்தால் அதையும் விட்டு வைப்பதில்லை. சப்பாத்திகள்ளியில் இனிஷியல் எழுதி வைப்பதும் அதன் பழத்தை எடுத்து கைநகப்பூச்சு என மாணவர்களும் உதடுப்பூச்சு என மாணவிகளும் பூசிக்கொள்வதுடன், நாகப்பழம் சாப்பிட்டு ஊதா நிற நாக்குகளுடன், கரும்பை கடித்து தின்று வாய் ஓரம் வெத்து போயும், மாங்காய் பால் பட்டு கால், கையில் கொப்பளம் வந்தும், அது காய்ந்து போன நேரத்தில் அரிப்பெடுத்து அதை பிய்த்து அதிலிருந்து ஒழுகும் ரத்தம், சிரங்குகளுடன் ஒரு டிபிகல் கிராமத்து மாணவனாக நான் மாறிப்போனேன்.

ஆனாலும் நான் மட்டுமே அங்கே அப்போது ஃபாரின் ரிட்டர்ன் பையன் ரேஞ்சுக்கு இருந்து தொலைத்தேன். அந்த பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் என்பது மட்டுமே அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் மற்ற பாடங்களில் எல்லாம் தமிழில் சொன்னால் புரிந்து கொள்ளும் பக்குவம் கண்டிப்பாக இருந்தது. அப்பா அறுப்புக்கும், அம்மா நாத்து பறிக்கவும், கரும்பு கட்டு தூக்கவும் போனதால் தன் தங்கச்சி, தம்பிகளை இடுப்பிலும் புத்தக மூட்டையை தோளிலும் சுமந்து ஐந்து கிமீ தூரம் வந்த மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு படிப்பு ஏற வில்லை என்று சொல்வது மகா அபத்தம். எனக்கு அப்படி இல்லை. படிப்பு மட்டுமே வேலை. அப்பா சம்பாதித்ததால் அம்மா குடும்பத்தை மட்டுமே கவனித்து கொண்டதால் எனக்கு படிப்பு மட்டுமே வேலை.தங்கச்சிபாப்பாவை தூக்க வேண்டாம் பள்ளிக்கூடத்துக்கு. அந்த மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு தன் தங்கச்சி பாப்பாவுக்கு தம்பி பாப்பாவுக்கு ஊட்டும், பின்னர் ஆய் போனால வாய்க்காலில் கொண்டு சுத்தம் செய்யும் எந்த வேலையும் எனக்கு இல்லாதபடியாலும் மேலும் என் பள்ளிக்கூடத்தில் நான் வழக்கமாக ஐந்து ரேங் எடுத்து வந்ததாலும், எனக்கு "சார் ஐ ஹம்ப்ளி ரெக்வஸ்ட் யூ டு கிராண்ட் மீ டூ டேஸ் லீவ்" என எழுத்து கூட்டி எழுத தெரிந்ததாலும் நான் ஒரு உயர்தர மாணவனாகவே கருதப்பட்டேன் அந்த மாணவர்கள் மத்தியில்.

இப்படியாக போய் கொண்டு இருந்த போதே முதல் மிட்டெர்ம் தேர்வு வந்தது. நான் 500 க்கு 410 மார்க்குகள் எடுத்து முதல் மாணவனாக இருந்தேன். எனக்கு அது முதல் அனுபவம். முதல் ரேங் என்பது எனகு எட்டாக்கனியாக இருந்தது. ஆர்வி டீச்சர் என்னை எழுந்து நிற்கச்சொல்லி எல்லோரையும் கைதட்ட சொன்ன போது எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. முதல் மாணவனாக இருப்பதில் இத்தனை சிக்கல்கள் வருமென்று அப்போது தான் உணர்ந்தேன். அடுத்த பீரியட் பில்லூர் சார் வரும் போது என்னை எழுந்து நிற்க சொல்லி கிட்டே வந்து கன்னத்தை வருடிக்கொடுத்த போது அவமானமாக இருந்தது. அவருடைய அறிவியல் பாடத்தில் நான் பியூரெட், பிப்பெட் படத்தை தேர்வில் வரைந்ததை சிலாகித்து பேசி என்னை "இவன் கே எஸ் ஓ பள்ளீயின் பிக்காசோ" என்ற போது எல்லோருக்கும் அது பிசாசு என்றே காதில், மனதில் விழுந்து தொலைத்தது. பியூரெட் பிப்பெட்க்கு எல்லாம் பிகாசோ உதாரணம் எல்லாம் டூ மச் என எனக்கு பிகாசோ யார் என்று அறிந்த பதின்ம வயதுகளில் அந்த நிகழ்வை பற்றி வெட்கம் வந்தது. ஆம் பலவருடங்கள் கழித்து!

இலங்கையின் தலைநகரம் கொழும்பு என சொன்னதற்காகவும் அது எங்கே இருக்கின்றது என வகுப்பில் மாட்டப்படிருந்த மேப்பில் நான் காட்டியமைக்கும் பட்டாளத்து சார் தன் கையில் எப்போது கர்ண கவச குண்டலம் மாதிரி வைத்திருந்த பிரம்பை மேசையில் வைத்து விட்டு உதடு துடிக்க சிவாஜி மாதிரி ஒரு முகபாவத்தில் கையிரண்டையும் நீட்டி என்னை அழைத்த போது எனக்கு உடம்பே கூசியது. ஒருவன் படித்தால் இத்தனை கஷ்ட்டங்கள் வரும் என அப்போது தான் தெரிந்தது. முதன் முதலாக எங்கள் மாயவரம் பள்ளியில் முதல் ரேங் எடுக்கும் கனேஷ்ராம், கணேஷ்குமார் மேல் இரக்கம் வந்தது. எப்படித்தான் முதல் ரேங் வாங்கி இத்தனை அவமானங்களையும் பொறுத்து கொள்கின்ரனரோ என்று.

பள்ளி விட்டு வரும் போது மங்கைநல்லூரை அடுத்து தத்தங்குடி கிராமத்தில் வலது பக்கமாக இருந்த சின்னம்மா கல்லரையிலே எல்லா மாணவர்களும் எப்போதும் உப்பும் , மிளகும் கொட்டி வழிபடுவதோடு, சிலர் மெழுகுவத்தியும் ஏற்றி வைப்பர். நெடுதூர நடைப்பயணத்தில் அந்த இடம் ஒரு ஓய்வெடுக்கும் இடமாகவும் இருந்தது. அன்று நான் முதல் ரேங் எடுத்த அன்று அந்த கழனிவாசல் கிராம பெண் காசாம்பூ ஒரு மெழுகுவத்தி ஏற்றி "நீ பஸ்ட்டு மார்க்கு வாங்கினா இந்த மெழுகு வத்தி ஏத்துறேன்னு சின்னம்மா கிட்ட வேண்டிகிட்டேன். அதான்" என சொல்லி ஒரு அன்பான பார்வை பார்த்தது. அதன் ஆட்டோகிராப் அர்த்தம் கூட எனக்கு பல ஆண்டுகள் கழித்த நிலையிலே தான் தெரிந்து வெட்கம் வந்தது. காளியப்பன் என்னிடம் "உனக்கு கால வலிச்சா சொல்லு தூக்கிகிட்டு வர்ரேன்" என சொன்ன போது ஏன் தான் முதல் மார்க் வாங்கினோம் என வருத்தப்பட்டேன். சரி போகட்டும் என என் புத்தக மூட்டையை மட்டும் தூக்கி வரச்சொன்னேன். (என்ன ஒரு மட்டமான குணம்)

இப்படியாக ஒரு மலரும் நினைவுகளின் ஊடாக அந்த வழியாக வந்த போது தான் அந்த சின்னம்மா கல்லரை வந்தது. அது இப்போது அழகாக கட்டப்பட்டு சுண்ணாம்பு அடிக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஒரு கேட் போடப்பட்டு இருந்தது. "புனித சின்னம்மா கல்லரை" என எழுதி இருந்தது. மதர் தெரசாவுக்கே புனிதர் பட்டம் கொடுக்கலாமா வேண்டாமா என ஜான் பெனடிக் யோசித்து கொண்டு இருக்கும் இந்த கால நேரத்தில் சர்வ சாதாரணமாக சின்னம்மாவுக்கு புனிதர் பட்டம் கொடுத்த தத்தங்குடி பக்தர்களை எந்த கோர்ட்டும் எதும் செய்ய முடியாது என நினைத்துக்கொண்டேன். காசாம்பூ இப்போது எப்படி இருக்கும் என நினைத்து பார்த்தேன். 45 வயதில் லூசான ஜாக்கெட்டுடன், தொப்பை விழுந்த வயிறு, காலகலில் சேற்றுப்புண் சுவடு, தலையில் நரை முடி, பற்களில் வெற்றிலை காவி இவைகளுடன் காசாம்பூவை நினைத்து பார்க்க ம்னம் இல்லாமையால் மனதுக்கு ஒரு மாற்றாக நமீதாவை நினைத்துக்கொண்டு நடந்தேன். கொஞ்சம் நடந்த்தும் இடது பக்கம் வீரசோழன் ஆற்றின் கரையில் இரு பக்கமும் சுடுகாடு புடை சூழ பொதுப்பணித்துறை குடியிருப்புகள் (மொத்தமே மூன்று வீடுகள்) இருந்தன. அப்போது நாங்கள் படிக்கும் போது அங்கே யாரும் குடிவரவில்லை. ஏனனில் சுடுகாடு பயம். ஆனால் நாங்கள் திங்கள் கிழமை அந்த பக்கம் வரும் போது பீர் பாட்டில்களும் சிதறிய பிரியானி பொட்டலங்களும் அதன் வாசலில் கிடக்கும். அப்போது கோவிந்தராசு தான் சொல்லுவான். அது பேய்களின் வேலை என்று. சனி, ஞாயிறு லீவில் வந்து அந்த பங்களாவில் பேய் குடித்து விட்டு பிர்யானி தின்று விட்டு அட்டகாசம் செய்வதாகவும் இரவு ஒரு மணி வரை ஒரே சிரிப்பு, சண்டை சத்தம் அதிகமாக இருப்பதாகவும் உடையாரின் உரக்கடையில் வேலை பார்த்து விட்டு இரவில் திரும்பி வரும் சாமிநாதன் அப்பா இவனுடைய அப்பா கிட்டே சொல்லும் போது இவன் கேட்டதாகவும் சொல்லுவான்.

எனக்கு இப்போது தான் தெரிகின்றது. எவன் வீட்டிலோ புது இனைப்பு கொடுத்த லஞ்ச காசில் எவனோ ஜேஈ, ஈ ஈ க்கள் வந்து சனி, ஞாயிரை கொண்டாடி இருக்கின்றனர் என்று.இப்போது அங்கே சில தைரியமான குடும்பத்தினர் குடிவந்து விட்டனர். அதன் பக்கத்தில் இருந்த சுடுகாடுகள் இப்போது கான்கிரீட் கொட்டகையாக ஆக்கப்பட்டு இருக்கின்றன. அந்த சாலையும் கொஞ்சம் அகலப்படுத்தப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து நடந்தேன். மலைக்குடி கிராமம் ஆரம்பம் ஆகியது. இதோ வலது பக்கம் இருக்கும் வீடு தான் கப்பகாரங்க வீடு என்று அழைக்கப்படும் சிங்கபூர்காரங்க வீடு. அந்த வீட்டில் எல்லோரும் சிங்கப்பூரில் இருந்தனர். பின்னர் அந்த வருடம் தான் எல்லோரும் குடும்பத்துடன் இங்கே வந்து செட்டில் ஆனார்கள். வீடு ஒரு விதமாக அந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி முகப்பில் ஜாலி ஒர்க்ஸ் எல்லாம் செய்யப்பட்டு வித விதமான வர்ணம் பூசப்பட்டு இருந்தது.அந்த வீட்டில் ஒரு பையன் செந்தில் என்பவன் வந்திருப்பதாகவும் அவன் சிகப்பாக சப்பை மூக்காக இருப்பதாகவும் என்னை விட ஆங்கில புலமை பெற்றிருப்பதாகவும் அவனுக்கு சிங்கப்பூரில் இருந்தே சைக்கிள் வாங்கி வந்திருப்பதாகவும் என் வகுப்பில் தான் வந்து சேரப்போவதாகவும் வதந்திகள் இறக்கை கட்டி பறந்து அது என் காதிலும் வந்து விழுந்தது. எனக்கும் இந்த முதல் ரேங் அவமானத்தில் இருந்து மீள ஒரு வழி பிறந்துவிட்டதாகவே நினைத்தேன்.

பின்னர் தான் தெரிந்தது அந்த செந்தில் அதிகபட்சமாக பேசும் ஆங்கில வார்த்தையே அம்மாவை மம்மி என்றும் அப்பாவை டாடி என்றும் அழைப்பது மட்டுமே என்று. ஆனால் அவன் சைக்கிள் மாத்திரம் நன்றாக இருந்தது. எனக்கு சிங்கப்பூர் மேலே கோவம் கோவமாக வந்தது. என்னை பொறுத்தவரை நம்ம ஊரை தாண்ட தாண்ட ஆங்கிலம் பிரவாகமாக வந்து கொட்டும், சென்னையில் இருப்பவர்கள் பயங்கரமா ஆங்கிலம் பேசுவர், டெல்லி, பாம்பேன்னா சொல்லவே வேண்டாம், ஆனால் அதையும் தாண்டி தூரமாக இருக்கும் சிங்கபூரில் இருந்து வந்தவனுக்கு ஆங்கிலம் தண்ணி பட்ட பாடாக இருக்கும் என நினைத்த எனக்கு மட்டும் அல்ல அந்த பள்ளிக்கூடத்துகே வியப்பாக இருந்த்து. இப்போது அவன் வீட்டை பார்த்தேன். அந்த 30 வருடத்துக்கு முன்னர் அடித்த வர்ணத்துக்கு பின்னர் அடிக்கவில்லை என நன்றாக தெரிந்தது. வீடு பூட்டியிருந்தது. பின் பக்கம் எல்லாம் இடிந்து விழுந்து இருந்த்து. அதன் பக்கத்து வீட்டில் ஒரு குடிசையில் இருந்து படித்த ராமையன் வீடு இப்போது நன்றாக கட்டப்பட்டு வாஸ்து பெயிண்ட் எல்லாம் அடிக்கப்பட்டு அமாவாசை இரவினில் கூட கண்ணுக்கு தெரியும் வகையில் இருந்தது. வாசலில் ராமையன். B.Sc., P.G.D.C.A , ராணி கேபிள் விஷன் என போர்டு போடப்பட்டு இருந்தது.

அதன் பக்கத்தில் இருந்த ஆஞ்சனேயர் கோவில் அழகாக கட்டப்பட்டு இருந்தது. அதன் எதிரே இருந்த எங்கள் கிராமத்தை சேர்க்கும் மூங்கில் பாலம் காணாமல் போய் அங்கு சிமெண்ட் பாலம் அமைக்கப்பட்டு இருந்து. ஆனால் வீரசோழன் ஆறு இருக்கும் இடமே தெரியாமல் ஆர்றின் நடுவே கூட நாணல் மண்டி கிடந்தது. ஆண்கள் படித்துறை இடிந்து குளிக்க வசதியே இல்லாமல் ஆகியிருந்த்து. பெண்கள் படித்துறை காணாமல் போயிருந்தது. மாடு குளிப்பாட்டும் இடம் துர்ந்து போய் அந்த இடத்துக்கு பக்கத்தில் இறந்து போனவர்களுக்கு காரியம் செய்ய ஒரு கட்டிடம் எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு இருந்தது. அந்த இடங்கள் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. அந்த கட்டிடத்தில் ஒரு நான்கு விடலை பையன்கள் ஏதோ குடித்து கொண்டு முக்கியமான விஷயத்தை பற்றி காரசாரமாக விவாதித்துக்கொண்டு இருந்தனர். என்னவோ முக்கியமான பிரச்சனை போலிருக்கின்றது.


அதை எல்லாம் தாண்டி கட்டை முதலியார் போர்செட், கரும்பு வயல், சம்மந்தம் பிள்ளை போர்செட் எல்லாம் தாண்டி கணபதி குளம் வந்தேன். அது பாழடைந்து கிடந்தது. அதன் நடுவே ஒரு போர் போட்டு அதை ஒரு டேங்கில் ஏற்றி ஊராட்சி மன்றம் தண்ணீர் சப்ளை செய்கின்றது. ஒரு வழியாக நல்ல மலரும் நினைவுகளுடன் என் கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். ம்... சொல்ல மறந்து விட்டேனே. அந்த பள்ளியில் நான் காலாண்டு தேர்விலும் முதல் ரேங் வாங்கியதால் அப்பாவுக்கு கோவம் வந்து என்னை 8ம் நம்பர் பஸ்ஸில் பாஸ் எடுத்து கொடுத்து திரும்பவும் (மூன்றே மாதத்தில்) மாயவரத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். நானும் வாஞ்சையுடன் போய் என் ராதா "வாடா வா" என இரு கைகளை நீட்டி அழைக்க ஓடிப்போய் மாப்பிள்ளை பெஞ்சில் உட்காந்து கொண்டேன். கணேஷ்ராம் என்னிடம் வந்து "என்னடா அங்க போய் பஸ்ட் ரேங் வாங்கினியாமே. இப்ப வா பார்ப்போம், நானா நீயான்னு " என சொல்ல "சே சே அதல்லாம் டூப்புடா, யாரோ தப்பா சொல்லியிருக்காங்க உன் கிட்டே. நான் அது மாதிரில்லாம் செய்ய மாட்டேன். சரி சரி இந்த விஷயம் நமக்குள்ளவே இருக்கட்டும்" என சொல்லி வைத்தேன். பின்னே முதல் ரேங் வாங்கியவன் என மற்ற மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக நான் என்ன மடையனா? போகட்டும் அந்த அவமானங்கள் அந்த பள்ளியோடே....

12 comments:

 1. இப்ப என்னாச்சு?

  கருணாநிதிக்கு கல்லறை திருவாரூரில் வைக்கவேண்டுமா?

  அதுக்கென்ன இன்னும் சில மாதங்களே........

  ReplyDelete
 2. அருமை

  -------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச்'2011)

  ReplyDelete
 3. சரி. பெருஞ்சேரிக்கு பத்திரமா போயி சேந்தீங்களா.. இல்ல ஆட்டோகிராப் சேரன் மாதிரி பராக்கு பாத்துட்டே வேதாரண்யம் பக்கம் போயிட்டீங்களா...

  ReplyDelete
 4. \\ராவணன் said...
  இப்ப என்னாச்சு?

  கருணாநிதிக்கு கல்லறை திருவாரூரில் வைக்கவேண்டுமா?

  அதுக்கென்ன இன்னும் சில மாதங்களே........\\ பரவாயில்லைங்க ராவணன், இங்க உள்ளூர்லயே ஆள் பார்த்துக்கிறோம். வெளியூர் ஆட்கள் அந்த வேலைக்கு வந்தா உள்ளூர்ல பிரச்சனை பண்ணுவாங்க. உங்க அக்கரைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 5. அருமையா இருந்தது...!
  கொஞ்சம் டெம்ப்ளேட் கலரை மாத்துங்க சார்.
  நீலத்தில் வெள்ளை எழுத்துக்கள் கண்களை ஒரு வழி செஞ்ச்சிடுத்து படிக்கறதுக்குள்ளே.

  ReplyDelete
 6. அனுபவங்களை விவரிக்கும் விதம் நல்லாயிருக்குது.இப்படியே தொடரலாமே!பாக்குத்தூள் போடாதீங்க:)

  ReplyDelete
 7. அப்ப்ப்ப்ப்ப்ப்பாடா... ஒரு வழியாப் படிச்சி முடிச்சிட்டேன்.
  தப்பித்தேன்.

  ஆமாம், ஜீவா! நீங்க சொன்னமாதிரியே டெம்ப்லேட்
  கலர, அபி அப்பா அவசியம் மாத்துவாருன்னு
  நம்புறேன்.

  ReplyDelete
 8. நல்ல நீண்ட கட்டுரை அதுவும் நம்ம ஊரைப் பற்றி சிலாகித்துப் படித்தேன். எனக்கு ஊர் திருவாலங்காடு. உங்கள் ஊர் ரயில்வே லைனை தாண்டி ஆற்றோரமாக கோமல் வழியாக வந்து தேரழந்தூர் தாண்டி திருவாவடுதுறை புகுந்து வந்தால் எங்கள் ஊர்; அதாவது உங்கள் ஊர் வழியாக.

  ஊர்பெயரையெல்லாம் முழுமையாக குறிப்பிட்டிருந்தீர்கள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. கேஎஸ் ஓ பள்ளியின் பிக்காஸோ.. மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளியின் ஒபாமா, கழகத் தொண்டர், கலைஞ்ஞ்ஞ்ஞரின் ஆருயிர் தம்பி, தம்பி நட்டுவின் ஆருயிர் டாடி.. அண்ணன்..மயிலாடுதுறை சிங்கம்..அபிஅப்பா வாழ்க.. வாழ்க...

  அன்புடன்
  சீமாச்சு...

  ReplyDelete
 10. நண்பா, மிக்க மகிழ்ச்சி . நானும் ஆறாம் கிளாஸ் KSO ல தான் படிச்சேன் . மலரும் நினைவுகள்......
  பின்னாடி உன்னோடு +2 படிச்சு வாழ்க்கை பயணம் தொடர்ந்தது .....

  இனிய நினைவுகளுக்கு விலையே கிடையாது . மிகவும் நன்றி ..........விஜயராகவன்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))