பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 8, 2012

பெரியாரிஸ்டுகள் ஜாக்கிரதை!!!

ஒரு நாள் என் சுசுகி மேக்ஸ் 100 வண்டியை ஓட்டிக்கொண்டே போகும் போது தான் திடீரென கவனித்தேன். முன்பக்கம் செறுகி இருந்த சாவியை காணும். வண்டி ஆடிய ஆட்டத்தில் அது எங்கயோ துள்ளி குதித்து விட்டது. என் வண்டியில் பிரேக் இல்லை, இண்டிகேட்டர் இல்லை, ஸ்பீடாமீட்டர் இல்லை, டயரில் காத்து இல்லை என்பன போன்ற இல்லைகளுடன் சாவி இல்லை என்னும் புது இல்லையும் சேர்ந்து கொண்டது என நினைத்து கொண்டேன். பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. பூட்டு சாவி இல்லையெனில் எனக்கு பெரிய பாதிப்பு எதும் வந்துவிடாது. ஏனனில் அதை எவனும் "மெனக்கெட்டு" திருட போவதில்லை. ஒரு திருடனுக்கு எத்தனை எத்தனை ரிஸ்க் தெரியுமா? மாட்டிகிட்டா என்ன அவஸ்தை படனும்? ரிஸ்க் எடுத்து திருடும் ஒருத்தன் இதை திருட மாட்டான். எவனாவது வெங்கலப்பூட்டை உடைச்சி வெளக்குமாத்தை திருடுவானா என நினைத்து அதைப்பற்றி கவலைப்படவில்லை.

ஆனால் நான் போகும் இடம் வந்த பின்னர் தான் தெரிந்தது அதை ஆஃப் செய்ய சாவி வேண்டும் என்று. சாவி இல்லாமல் எப்படியும் என் வண்டியை ஆஃப் செய்ய முடியாது. அதுவா நினைச்சா நான் வேகமாக போக வேண்டி ஆக்சிலேட்டர் குடுக்கும் போது தானாக ஆஃப் ஆனாலும் ஆகுமே தவிர நான் என் இஷ்டத்துக்கு எல்லாம் அதை ஆஃப் செய்ய அது ஒத்துக்காது. சரி வேற வழியில்லை புதியதாக சாவி போட வேண்டியது தான் என நினைத்து டி வி எஸ் கம்பனி பக்கம் போய் ட்யூப்ளிகேட் சாவி கிடைக்குமா? போட முடியுமா? என கேட்டேன். என்னை ஒரு மாதிரியாக கேவலமாக பார்த்து விட்டு அவன் "சார் டைட்டானிக் கப்பலுக்கு கூட ட்யூப்ளிகேட் போட்டுடலாம், ஆனா எங்க டி வி எஸ் கம்பனி வண்டிக்கு எல்லாம் எதும் முடியாது. வேண்டுமானா புது லாக் செட் வாங்கி போட்டுகுங்க, என்னூறு ரூபாய் ஆகும்" என சொன்னான்.

சரி போகட்டும், அது என்ன டைட்டானிக் கப்பல் உதாரணம்? அதாவது அவன் கம்பனி டி வி எஸ்சை மிகப்பெரிசா கம்பேர் செய்கிறானாமாம். கஷ்டம்டா சாமீ! போடலாம், என்னூறு ரூபாய் கொடுத்து லாக்செட் போடலாம். அப்படி போட்டா என் வண்டியில் அதிகபட்ச விலை உயர்ந்த ஐட்டமாக அது மட்டுமே இருக்கும். பூட்டுக்கு ஆசைப்பட்டு எவனாவது திருடிகிட்டு போக வேண்டி ஆகலாம். ரைட்... நம்ம வண்டி 108 ஆம்புலன்ஸ் மாதிரி 24 மணி நேரமும் அலர்ட் ஆறுமுகமா ஓடிகிட்டே இருக்கட்டும் என விட்டுவிட்டேன். அப்படியே போகும் வழியில் ஒரு நண்பனை பார்த்தேன். அவன் என் வண்டியின் நிலையை கண்டுவிட்டு கண்டுகாணாம போகாம "நாம சின்ன வயசா இருக்கும் போது லாகடம் பூட்டுகடை தங்கராசுன்னு ஒருத்தர் இருந்தாரே, அவர் கடையிலே போய் கேட்டுப்பாறேன். அவரு கைய வைச்சா திறக்காத பூட்டே இல்லை. பூட்டாத பூட்டே இல்லை" என உசுப்பேத்த என் வண்டி அங்கே போய் நின்றது.

அந்த இடத்தில் இப்போது பூட்டுகடை சுவடே இல்லாமல் வாழை இல்லை நறுக்கி விற்று கொண்டிருக்க அவரிடம் நான் பூட்டுகடை தங்கராசு பற்றி கேட்க அவரோ "அவருக்கு வயசாகிப்போச்சுங்க. அவரு பையன் ஒருத்தர் தான் அமெச்சூரா செஞ்சுகிட்டு இருக்காரு. அவரு வூடு லால்பகதூர் நகர்ல இருக்கு. அவரு வீட்டுக்கு போய் அவர் பையன் வீடு எங்கன்னு விசாரிச்சு பாருங்க" என சொன்னார். சரின்னு நானும் வண்டியை லால்பகதூர் நகர் பக்கம் வண்டியை விட்டேன். அங்கே ஒரு சைக்கிள் கம்பனி, விறகு கடை எல்லாம் இருந்த இடத்தில் பேப்பர் படிச்சுகிட்டு இருந்த ஒருத்தர் கிட்டே "சார் பூட்டுக்கடை தங்கராசு அண்ணன் வீடு எங்க இருக்கு?" என கேட்ட போது "இதோ இந்த சந்திலே போங்க, இரண்டாவது கட்டிங்ல கடைசி வீடு" என சொல்ல நான் அங்கே போனேன். அவங்க வீட்டிலே அவங்க பையன் வீடு எங்கன்னு கேட்டதுக்கு " அப்படியே வந்த வழில ஒரு மெயின்ரோட்டிலே சைக்கிள் கம்பனி, விறகு கடை எல்லாம் இருக்குமே அதுக்கு நேர் எதிரே ஒரு ரோடு போகும் பாருங்க. அதிலே போய் ஒரு 5 வீடு தள்ளி ஒரு காம்ப்ளக்ஸ் இருக்கும் அதிலே முதல் மாடில இருக்காரு" ன்னு சொல்ல நான் திரும்பவும் வந்து அதே பேப்பர் படிப்பவரிடம் "சார் இந்த எதிர் ரோட்டிலே பூட்டுகடை தங்கராசு பையன் வீடு இருப்பதா சொன்னாங்க. அது எது?"ன்னு கேட்டேன். அவரும் அந்த காம்ப்ளக்சை காட்டினார். அங்க போனேன். அவன் மனைவி "ஆமாங்க இதான் அவரு வீடு. அவரு அந்த சைக்கிள் கடையிலே பேப்பர் படிச்சுகிட்டு இருப்பாரு அங்க போய் பாருங்க" என சொன்ன போது எனக்கு கிட்ட தட்ட மயக்கமே வந்துடும் போலிருந்தது. அவர் பேர் என்னங்க என கேட்டதுக்கு அவங்க "அமுதன்"ன்னு சொன்னாங்க.

நான் திரும்பவும் அந்த கடைக்கு வந்து அதே பேப்பர்படிப்பவரிடம் "சார் அமுதன் யார் சார்?" என கேட்க அவர் "நான் தான் என்ன விஷயம்?" என்றார். எனக்கு செம கோவம். அடக்கி கொண்டேன்.

"பின்ன ஏன் சார் அலையவிட்டீங்க?"

"நான் எப்ப அலையவிட்டேன்?" - அவர்

"நான் தான் முதல்லயே பூட்டுகடை தங்கராசு வீடு எதுன்னு கேட்டனே?"

"ஆமாம். நான் தான் சரியா பதில் சொன்னனே"

"ம்.. அது சரி பின்ன வந்து பூட்டுகடை தங்கராசு பையன் வீடு எங்கன்னு உங்க கிட்ட தானே கேட்டேன்"

"ஆமாம். அதுக்கும் சரியா தானே பதில் சொன்னேன்"

எனக்கு என்ன பதில் சொல்வதுன்னு தெரியலை. ஒருவேளை நான் தான் தப்பு பண்ணிட்டனோ என நினைத்து கொண்டேன்.

அவரே மெதுவாக "தம்பி, எனக்குன்னு ஒரு சுயமரியாதை இருக்கு. என் பேரை சொல்லி கேட்டா நான் தான் அதுன்னு சொல்லியிருப்பனே. எங்கப்பாவுக்கு வயசு 85 ஆச்சு. எனக்கோ 50க்கு மேல ஆச்சு. இன்னும் என்னை அப்பா பிள்ளையாக மட்டுமே அறிப்பட்டு இருக்கேன் என நினைத்த போது கொஞ்சம் சுயமரியாதையை இழந்த மாதிரி ஒரு பீலிங். இப்ப சொல்லுங்க என்ன வேண்டும்"

உஷ்.... அப்பாடா... முடியல.. என்னால முடியல... "சார் என் வண்டி சாவி காணாம போச்சு. ட்யூப்ளிகேட் போடனும்" என்றேன். அதுக்கு அவர் "இல்லீங்க நான் சாவி போடுவதில்லை"ன்னு சொன்னார். எனக்கு இன்னும் கோவம் அதிகமாச்சு. இதுக்கு தான் நான் இத்தனை அலைந்தேனா என்று எனக்கு என் மேலயே கோவம். நான் அவரிடம் "சார் அப்பவே அந்த டி வி எஸ் கம்பனி காரன் சொன்னான். டைட்டானிக் கப்பல்க்கு கூட மாத்து சாவி போடலாம் ஆனா எங்க கம்பனிக்கு போட முடியாதுன்னு சொன்னான். அது உண்மை தான் போலிருக்கு" என சொல்லிவிட்டு கியரை போட்டு வண்டியை சர்ன்னு கிளப்பினேன். அந்த தெரு முனைக்கு போய் தான் யூ டேர்ன் அடித்து திரும்பி வரனும். நான் போய் திரும்பி அவரை கிராஸ் செய்து போகும் போது "தம்பி கொஞ்சம் வண்டிய நிப்பாட்டுங்க" என குரல் கேட்டு நிப்பாட்டினேன். வண்டி கிட்ட வந்து ஒரு சாவியை போட்டு வண்டிய ஆஃப் செய்ய அது குழந்தை போல ஆஃப் ஆகியது. "இப்ப ஸ்டார்ட் பண்ணுங்க" என சொன்னார். செய்தேன். அழகா ஸ்டார்ட் ஆகியது. அடடே என நினைத்து கொண்டேன்.

"தம்பி, பொதுவா நான் இது போல ஜுஜுபி கம்பனி வண்டி சாவி எல்லாம் போடுவதில்லை. இதல்லாம் எனக்கு 60 நொடி வேலை தான். நீங்க யூ டேர்ன் எடுத்து திரும்புவதுக்குள்ள என் வண்டி சாவியை இதே ரோட்டிலே கீழே போட்டு தேய்த்து உங்க வண்டிக்கு போட்டுட முடியும். ஆனா பாருங்க உங்களுக்கு மாத்து சாவி கிடைச்சிடும், ஆனா எனக்கு தான் ஜாப் சேட்டிஸ்ஃபேக்ஷன் கிடைக்காது" என சொன்னார்.

எனக்கு இப்போ அந்த டைட்டானிக் உதாரணம் சொன்னவன் மீது கோபம் திரும்பியது. நான் அவரிடம் "உங்க சார்ஜ் எத்தனை சார்" என கேட்டேன். அவர் முப்பத்தி ஏழு ரூபாய் தேவைப்படுது. ஆனா நீங்க நாற்பது கொடுங்க. ஏன்னா சில்லரை இருக்காது என் கிட்ட" என சொன்ன போது எனக்கு மேலும் ஆச்சர்யம். "இது என்னங்க கணக்கு முப்பத்தி ஏழு?" என்றேன். அதற்கு அவர் "எனக்கு இப்போது அவ்வளவு தான் தேவைப்படுது" என சொன்னார். மேலும் பேசினா அதுக்கு எதுனா வியாக்யானம் பேசுவாரோ என நினைத்து நாற்பது கொடுத்து விட்டு கிளம்பி வந்து விட்டேன். திரும்ப வரும் போது அவர் "தம்பி இனிமே இது போல வண்டிக்கு சாவி போடல்லாம் கேட்டு வராதீங்க. ரொம்ப ஒஸ்தியான யாராலும் திறக்க முடியாத பூட்டு கோத்ரெஜ் போல சவாலான வேலைன்னா மட்டும் வாங்க" என சொல்லி நம்பர் கொடுத்தார். எதுக்கும் இருக்கட்டும் என அதை என் போனில் சேவ் செய்து கொண்டேன்.

நிற்க... இதல்லாம் ஒரு வருஷ முந்தின கதை. பின்னர் இப்போ ஒரு மூன்று மாதம் முன்னே நான், என் மனைவி, அபி, நட்ராஜ் எல்லாரும் என் தம்பி வீடு கட்டும் இடத்தில் இருந்து விட்டு மாலை ஒரு 5.30க்கு வீட்டுக்கு திரும்பி கதவை திறந்தால்... ஒரே அடம்.. திறக்க மாட்டேங்குது. என்ன என்னவோ செய்தும் அது திறக்கவில்லை. எல்லோரும் வெளியே நிற்கின்றோம். எனக்கு வியர்த்து விட்டது. கதவை உடக்கவும் முடியாது. நல்ல பர்மா தேக்கு கதவு. பூட்டும் சாதாரண பூட்டு இல்லை. இரண்டு பூட்டுகள். இரண்டும் 7000 மதிப்புள்ள கோத்ரெஜ் நவீன பூட்டுகள். அதில் ஒன்று மட்டுமே பூட்டி விட்டு போனோம். அது தான் மக்கார் செய்யுது. அந்த பூட்டு வாங்கியது என் நண்பனின் தம்பி கடை தான். அதை வாங்கும் போதே "அண்ணே, இதான் இப்போதைக்கு கோத்ரெஜ்ல லேட்டஸ்ட் மாடல். இது வாங்கினா அவங்களே ப்ஃரீ இன்சூரன்ஸ் 50000 ரூபாய்க்கு தருவாங்க. பூட்டை மாத்துசாவி போட்டு திறந்து திருட்டு நடந்தா போலீஸ் எஃப் ஐ ஆர் காமிச்சா இன்சூரன்ஸ் பணம் கிடைச்சிடும்" என்றெல்லாம் சொன்னதால் அதை வாங்கி போட்டோம். ஆனா அது இப்படி மக்கர் செய்யும் என யாரும் எதிர்பார்கலை. அவனுக்கு போன் செய்து திட்டினேன். "என்ன பாபு, இப்புடி ஆகிடுச்சு. பொதுவா இந்த பூட்டிலே ரிப்பேர் வராது ஒருலட்சம் பூட்டிலே ஒன்னுக்கு தான் இதே போல பிரச்சனை வரும்னு சொன்னியே" என கேட்டேன். அதுக்கு அவன் "அண்ணே அந்த லட்சத்தில் ஒரு பூட்டு தான் இது போலிருக்கு" என சொன்னான். இதுக்கு மேல என்ன செய்ய முடியும்.

அப்ப தான் அந்த அமுதன் நியாபகம் வந்தது. அமுதன் சாருக்கு போன் பண்ணினேன்.

"அண்ணே, வீட்டிலே பூட்டு திறக்க மாட்டேங்குது. நீங்க கேட்டபடி சவாலான கேஸ் இது. கோத்ரெஜ் லேட்டஸ்ட் மாடல். வந்து திறந்து தர முடியுமா?" - இது நான்.

"ம்.. அப்படியா? வீட்டின் உள்ளே யாரும் குழந்தைகள் மாட்டி இருக்காங்கலா?"

"இல்லை"

"சரி எதுனா முதியவர், பெண்கள்?"

" முதியவர்ன்னா நான் தான், நானும் வெளியே தான் இருக்கேன். பெண்கள், குழந்தைகள் எல்லாம் வெளியே தான் இருக்காங்க. இண்டர்வியூ பண்ணும் நேரமா இது, உடனே வர முடியுமா?"

"இல்லை தம்பி, மணி இப்போ ஆறு ஆச்சு, நான் இரவு ஒரு எட்டு மணிக்கு வர்ரேன்" என சொல்லிவிட்டு போனை வச்சுட்டாரு.

எனக்கு ஆத்திரம் உச்சத்தை தொட்டது என்றாலும் வேறு வழி இல்லை. நம்ம பசங்களுக்கு தான் நேரம் காலம் தெரியாதே. "அப்பா பசிக்குது" என நட்ராஜ் சொல்ல... ஹோட்டலில் போய் வரலாம் என நினைத்தால் கூட பணம் கூட உள்ளே தான் இருக்கு. அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் ஓடியது. நான் போன் செய்யலாம் என நினைத்த போது அவரே அவருடைய டி வி எஸ் 50ல் வந்தார். வரும் போது கையில் ஒரு "போஸ்க்" பெட்டியில் கொஞ்சம் டூல்ஸ்.

வந்து பூட்டின் சாவியை பார்த்தார். நாங்க அதை நெளிச்சு வச்சிருந்தோம். சாவியில் பால்ரெஸ் வந்து உட்காருவது போல குழி குழியா இருக்கும். அதை தட்டி நெளித்து அந்த குழியில் இரண்டு குழியை கொஞ்சம் ஆழப்படுத்தினார். மொத்தம் இரண்டு நிமிஷம். பூட்டு "ப்ளக்" என திறந்து கொண்டது. எனக்கு மீண்டும் ஆச்சர்யம்.

உள்ளே கூப்பிட்டேன். வந்தார். எத்தனை சார்ஜ் என கேட்டேன். "இருநூறு ரூபாய் தேவைப்படுது" என சொன்னார். இப்பவும் கேட்டேன். அது என்ன கணக்கு தேவைப்படுவது மட்டுமே தான் கேட்பீங்களா? என்றேன். "ஆமாம்" என்றார். கொடுத்தேன். மேசை மேல் இருந்த "ஏ தாழ்ந்த தமிழகமே" என்ற அண்ணாவின் அண்ணாமலை பேச்சு புத்தகம் இருந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்தார். நான் அதற்கு "அது அண்ணாவின் புத்தகம்" என சொன்னேன். "அப்படியா" என கேட்டார். நான் அவரிடம் "ஆமா வேலை செஞ்சது இரண்டு நிமிஷம் தான். அதுக்கு ஏன் இரண்டு மணி நேரம் கழிச்சு தவிக்க விட்டு வரனும். அதிலே என்ன உங்களுக்கு ஒரு சேடிஸ்ட் மனோபாவம். இதிலே வேற குழந்தைகள் உள்ள இருக்காங்களா, முதியவர், பெண்கள் இருக்காங்கலா என்றெல்லாம் வேற கேள்விகள்" என நேரிடையாக கேட்டேன்.

அவர் என்னை கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து " எனக்கு சேடிஸ மனோபாவம் எதும் இல்லை. நீங்க போன் செஞ்ச பத்து நிமிஷம் முன்ன தான் என் அப்பா இறந்து போனாரு. அதான் தகவல் சொல்லிகிட்டு இருந்தேன் எல்லாருக்கும். ஆசிரியர் வீரமணி அய்யா "நான் நாளை கண்டிப்பா வர்ரேன்னு சொன்னாரு. அதனால ஃப்ரீசர் பாக்ஸ் வாங்கி வச்சிடலாம்னு நினைச்சு தான் அதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகுமேன்னு எட்டு மணிக்கு வர்ரதா சொன்னேன்" என அமைதியாக சொன்னார்.

நான் உண்மையாகவே அதிர்ந்து விட்டேன். அட என்ன மனுசன்யா இவருன்னு நினைச்சுகிட்டேன். பின்னர் நான் கேட்டேன் "சரி பின்ன ஏன் உள்ளே குழந்தைகள் மாட்டி இருக்காங்கலா, பெண்கள், முதியவர்ன்னு எல்லாம் கேட்டீங்க" என்றேன். அதுக்கு அவர் "அப்படி யாராவது மாட்டி இருந்தா நான் உடனே வந்திருப்பேன். அப்போ அங்கே இறந்து கிடப்பது என் அப்பா என்பதை விட நாளை அழுக போகும் ஒரு விஜிடபிள் அது என மனசிலே நினைச்சுகிட்டு இங்க வந்திருப்பேன். ச்அப்படி எதும் பிரச்சனை இல்லை என்கிற போது நீங்க ஒரு ரெண்டு மணி நேரம் காத்திருப்பதால் எந்த பிரச்சனையும் வந்துடாது என்றே நினைத்து ஃப்ரீசர் பாக்ஸ் வாங்க போயிட்டேன்"

நான் கொஞ்ச நேரம் எதும் பேசவில்லை. அவர் கிளம்பி போய்விட்டார். நான் அடுத்த நாளே அந்த பூட்டை கொண்டு போய் அதே கடையில் கொடுத்தேன். அதை கோத்ரெஜ் கம்பனிக்கு அனுப்பி விட்டு ஒரு மாதம் கழித்து "இது ரிப்பேர் செய்ய இயலாது, கேரண்டி பீரியட்ம் முடிஞ்சு போச்சு, மன்னிக்கவும்" என கடித்தத்துடன் திரும்பி வந்து விட்டது.

நான் அதை எடுத்து கொண்டு அமுதன் அண்ணன் வீட்டுக்கு போனேன். வாங்கி பார்த்தார்.அந்த கோத்ரெஜ் அனுப்பிய கடித்தத்தையும் பார்த்தார். அவருக்கு மனசு திருப்தி. நான் அவர் வீட்டை பார்த்தேன். அத்தனை ஒரு பொருளாதார நிலையில் மிகப்பெரிய நிலையிலும் அவர் இல்லை. வீடும் வாடகைக்கு தான் இருக்கார். ஆனால் வீடு நிறைய புத்தகங்கள். திராவிட, கம்யூனிச புத்தகங்கள். நான் பார்த்ததே கிட்ட தட்ட ஒரு ஆயிரம் புத்தகங்கள் இருக்கும். அவரின் அப்பா பற்றி கேட்டேன். திராவிட கழகத்தின் முக்கிய தூண் அவர். ஆசிரியர் வீரமணி ஆகியோர்களுக்கு இந்த குடும்பமே நல்ல பழக்கம் என தெரிந்து கொண்டேன். மயிலாடுதுறை நகராட்சியில் அவங்க அம்மா ரெட்டை தொகுதியா இருக்கும் போதே அந்த காலத்தில் 1950களில் கவுன்சிலர். பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்து அவங்க அப்பா அப்போ அவங்க அம்மாவுக்கு தைரியமூட்டி அரசியலில் கொண்டு வந்தாராம். இப்போது போல அப்போது பெண்கள் தொகுதின்னு எல்லாம் இல்லாத காலம் அது என்பதையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட அவருக்கே நான் அண்ணாவின் புத்தகம் பற்றி சொல்லியிருக்கேனே என நினைத்து வெட்கமாக இருந்தது. அவரிடம் அண்ணாவின் பேச்சுகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகமே பார்த்தேன். கிட்ட தட்ட அண்ணாவின் முக்கிய பேச்சுகள் அடங்கிய புத்தகம். நான் அந்த புத்தகம் எல்லாம் பிரித்து பார்த்து பிரம்மித்து கொண்டே இருக்கும் போது அவர் "தம்பி வேலை முடிஞ்சுது" என கொடுத்தார். வழக்கம் போல என்ன சார்ஜ் என கேட்டேன்.

"160 ரூபாய் தேவைப்படுது. அது தவிர இந்த கோத்ரெஜ் கம்பனி காரனுக்கு 'உன்னான செய்ய முடியாததை ஒரு தமிழன் பத்து நிமிஷத்தில் செஞ்சு முடிச்சுட்டான்' என ஒரு கடித்தமும் நீங்க போடனும் இதான் சார்ஜ்" என சொன்னார். நான் அவரிடம் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து கொண்டு "சரி உங்களுக்கு இப்போ ஆயிரம் ரூவாய் தேவைப்பட்டா இந்த வேலைக்கு என்னிடம் எத்தனை கேட்டிருப்பீங்க?" என மடக்கினேன்.
அவர் சொன்னார் "ஆயிரம் ரூபாய்"

எனக்கு பெரியார் படத்தின் ஒரு காட்சி தான் ஞாபகம் வந்தது. இந்த பெரியாரிஸ்டுகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாதான்பா பழகனும்:-)

26 comments:

  1. >>கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  2. கலக்கலான பதிவு

    ReplyDelete
  3. தலைப்பைப் பார்த்து உள்ளே வந்தேன். மரியாதைக்குரிய திரு.அமுதன் அவர்களின் குணநலன்களை அறிந்து பிரமித்து நின்றேன்.

    ReplyDelete
  4. Nice post. Appa iranthu poyirukkum pothu vanthathu unmaiyileye peria vishayam. Appa Mayiladuthurayila "Nalla" pencouncillor galum irunthirukkanga endru ippathivilirunthu ariyaperugiren :)
    Shobha

    ReplyDelete
  5. Very,very interesting.
    என்னா ஓய் பதிவு நீளமா இருக்கு :))

    ReplyDelete
  6. மிக சிறந்த பதிவு......

    ReplyDelete
  7. உங்களுக்கும் அமுதன் அவர்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடல் சிரிப்பை வரவழைத்தாலும் அவரின் சுயமரியாதை கருத்தை மறுக்க இயலாது.

    ReplyDelete
  8. யோவ் தொல்ஸ்,

    இதுதான்யா உம்ம பேட்டை. என்னா ஒரு நேரேட்டிவ் ஸ்டைல். க்ரேட். ரெம்ப நாளைக்கு அப்புறமா ஒரு நல்ல பதிவு உம்மிடம் இருந்து. அபி அப்பாவா கொக்கா?

    ReplyDelete
  9. kasiviswanathan,thanjavurJanuary 9, 2012 at 4:17 PM

    பெரியாரிஸ்ட்கள் ஜாக்கிரதை...
    அருமை அண்ணன்...

    ReplyDelete
  10. நன்றி அனைவருக்கும்.நன்றி சி பி செந்தில்குமார்,செந்தூரன், கலையன்பன்,காசிவிஸ்வநாதன்,நிசாமுதீன், பிரேம்குமார்,மென்பொருள் பிரிவு, ரவிமற்றும் @ஷோபாக்கா:-))))))). வேலன் அண்ணாச்சி நன்றி!

    ReplyDelete
  11. மனிதம் வாழ்கிறது என்பதை அமுதன் உறுதிபடுத்தியிருக்கிறார். அதை சொன்னவிதம்..... நான் உங்க தீவிர ரசிகராக ஆகிகிட்டு இருக்கிறேன். ஜனரஞ்சக பத்திரிக்கைக்கு வரனும் நீங்க....

    ReplyDelete
  12. நல்ல பதிவு. அருமையான நடை.

    ReplyDelete
  13. அருமையான பதிவு! தங்களின் சுவைக்குறையாத நடை!

    //"என்ன பாபு, இப்புடி ஆகிடுச்சு. பொதுவா இந்த பூட்டிலே ரிப்பேர் வராது ஒருலட்சம் பூட்டிலே ஒன்னுக்கு தான் இதே போல பிரச்சனை வரும்னு சொன்னியே" என கேட்டேன். அதுக்கு அவன் "அண்ணே அந்த லட்சத்தில் ஒரு பூட்டு தான் இது போலிருக்கு" என சொன்னான்.//

    மிகவும் ரசித்த வரிகள்!

    ReplyDelete
  14. என்னமோ போங்க. பதிவைப் படிச்சிட்டு கொஞ்ச நேரம் அப்படியே மானிட்டரைப் பார்த்துட்டு உட்கார்ந்திருந்தேன்.

    அமுதனை நினைக்கும் போது பாலகுமாரன் கதைகளில் வரும் கேரக்டர்களை ஞாபகப்படுத்தினார்.

    ReplyDelete
  15. Abi Appa,

    Very interesting and really a great way of narrating the story. Keep it up. As said by SS.Sivasankar why don't you try in regular magazines?

    With regards,
    Nalina

    ReplyDelete
  16. காலையில் பரபரப்பாக இருக்கும் என் அலுவலக வேலை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் பதிவை முழுவதும் படித்து பார்த்தேன். என் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் உங்கள் வருணனையில் லயித்து போன எனக்கு, என் மன கண்களில் திரு. அமுதன் அவர்கள் கண்ணியமிக்க மனிதராகவே காட்சி அளிக்கிறார்.

    ReplyDelete
  17. காலையில் பரபரப்பாக இருக்கும் என் அலுவலக வேலை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் பதிவை முழுவதும் படித்து பார்த்தேன். என் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் உங்கள் வருணனையில் லயித்து போன எனக்கு, என் மன கண்களில் திரு. அமுதன் அவர்கள் கண்ணியமிக்க மனிதராகவே காட்சி அளிக்கிறார்.

    ReplyDelete
  18. அட்டகாசம் தொல்ஸ்..

    ReplyDelete
  19. இன்று தான் உங்க பதிவ முதல் முதலா படிக்கிறேன், இவ்வளவு நாள் தவற விட்டு விட்டேன்,

    திரு அமுதன் அவர்கள் கண் முன்னால் வருகிரார்.

    ReplyDelete
  20. அப்பாவின் சடலத்தை வீட்டில் விட்டுட்டு கடமை செய்ய வந்ததை படிக்கும்போது நிஜமாவே மெய் சிலிர்க்குது

    ReplyDelete
  21. உண்மையான பெரியார் தொண்டர்கள் அனைவரும் நேர்மையானவர்களே உள்ளனர்.
    இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.
    இது எனது அனுபவத்தில் நான் கண்டது.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  22. கருத்து சொல்ல நான் கந்தசாமி இல்லையிங்கோ!! எம்பேரு ராமசாமிங்க...............

    ReplyDelete
  23. அட..அட..ஆஹா..என்னமா எழுதியிருக்கீங்க. அசந்துட்டேன் அபி அப்பா! Superb.
    - @ramadasignal

    ReplyDelete
  24. அன்பு அபி அப்பா,
    ஜாக்கி அண்ணனின் சமீபத்திய பதிவு மூலம் உங்கள் வலை தளம் பழக்கம். என்னடா ஒரே அரசியலா இருக்கேன்னு பார்த்தா சூப்பரான பதிவுகள் பின்னே வந்தன. இந்த அமுதன் ஐயாவை ரொம்ப பிடித்து பொய் விட்டது. அவர் வீட்டுக்கு போய் பார்த்து விட்டு திரும்பி வந்து அவர்தான் நீங்கள் தேடி வந்த ஆள் என்று தெரிந்த நேரம் உங்கள் முகம் எப்படி இருக்கும் என்று நினைத்தால் சிரிப்பு அள்ளுகிறது. ராஜேந்தர குமாரின் ஞே தான் நியாபகம் வருகிறது.

    அதிதி தேவோ பவ என்று வாழும் உங்களை பார்த்தால் நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் வேருன்று கிறது. அபி உங்களுக்கு எழுதிய கவிதை சூப்பர். அபியையும் நட்டுவையும் பார்த்தால் என் பிள்ளைகள் தான் நியாபகம் வருகிறது. அவர்களுக்கு என் ஆசிகள். நேரமிருந்தால் என் வலைதளத்தை
    (http://anandhabavanam.blogspot.in ) எட்டி பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். ரொம்ப இல்லை அஞ்சே பதிவுதான். :-) நன்றி !

    அன்புடன் ,
    ராஜ் முத்து குமார்

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))