பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 6, 2009

சின்ன வயது பள்ளி மிட்டாய்கள்!!


சின்ன வயதில் பள்ளி செல்லும் போது என் காலத்தில் கிடைத்த "வாங்கி திங்க" கிடைத்த காசு என்று பாத்தால் ஐந்து பைசா. அத ஐந்து பைசாவுக்கு என்ன என்ன கிடைக்கும் என பார்த்தால் சின்ன கடை தெரு சலாமத் பாய் கடையிலே பொம்மை ரொட்டி மூன்று கிடைக்கும். வாங்கி வாங்கி முதலில் அந்த குருவி மூக்கில் இருந்து ஆரம்பித்து பள்ளி வரும் போடு முழுசா மூன்று ரொட்டியும் முடித்து விடலாம்.

இல்லாவிடில் ஒத்த பைசா சாக்லெட் ஐந்து கிடைக்கும். (பல்லிலே நல்லா ஒட்டிக்கும்.) டீச்சர் பாடம் நடத்தும் போது நாக்கால் பூச்சி பல்லை துழாவினா அருமையா ருசியா இருக்கும். இல்லாவிடில் ஓம மிட்டாய் 2 ஸ்பூன் மடித்து தருவார் பாய். தவிர இரண்டு மிட்டாய் கொசுறும் கிடைக்கும். அந்த சலாமத் பாய் தூய வெள்ளை கைலியும், வெள்ளை ஜிப்பாவும் கருப்பு கலர் கூத்தாநல்லூர் தொப்பியும் ஷேவ் செய்த முகமுமான கட்டையான உருவம். பாய் கடை "ஷாப்பு கடை" அதற்கே உரிய வாசனை அங்கே நிற்கும் கொஞ்ச நேரம் நம்மை மயக்கும். சலாமத் பாய் கடையின் பையன் பேர் கமல் பாய். ஏன்னா அவர் அப்பவே எங்க ஊர்ல ஹிப்பி வச்ச முதல் ஆளாக இருக்கும் என நினைக்கிறேன்.


அப்படியே சலாமத் பாய் கடை பர்ச்சேஸ் முடிச்சுகிட்டு எதிரே இருந்த வண்டிபேட்டை வாதாமரம் வாசலில் ஒரு நாலு பொறுக்கி எடுத்து பையிலே போட்டுகிட்டா அது மாலை திண்பண்டத்துக்கு உதவும். எல்லா நாலும் சலாமத் பாய் கடையில் மட்டும் வாங்குவதில்லை.

அடுத்த நாள் பள்ளி வாசலில் 3'x1' சைஸ்ல ஒரு மர பெட்டி, மேல் மூடி கண்ணாடி. பச்சை கலர் பெயிண்ட் (எப்பவோ அடிச்சது அழுக்கேறி இருக்கும்). பெட்டியை பார்த்தா மேசை மாதிரி இருக்கும். அதிலே அந்த கண்ணாடிக்கு கீழே பார்த்தா உருண்டை உருண்டையா எதோ ஒரு மாவிலே போட்டு புரட்டப்பட்டு முழிச்சு முழிச்சு பார்க்கும் நம்மை. இடது பக்கம் ஐந்து பைசா பெரிய உருண்டையும் வலது பக்கம் ஒரு பைசா சின்ன உருண்டையும் இருக்கும். அதிலே பெரிய உருண்டை வாங்கினா வகுப்பில் மதியம் நெருங்கும் வரை வாயில் வச்சு ஓட்டலாம். ஆனா என்ன எச்சில் ஒழுகும். தவிர டீச்சர் எதுனா கேள்வி கேட்டா நம்மாள சொல்ல முடியாது. உடனே அதை எடுத்து புத்தக மூட்டைக்குள் வத்து விட்டு பதில் சொல்லிட்டு திரும்ப எடுக்கும் போது புத்தக பையின் தூசுகளும் சேர்ந்து வரும். அதை எல்லாம் கண்டுக்காம சாப்பிடனும்.

இதே அந்த ஒத்தை பைசா உருண்டை வாங்கினா கொஞ்சம் சுலபம் திங்க. ஆனா அதிலே ஒரு கஷ்ட்டம் ராதா அவசரமா தின்னு முடிச்சிட்டா காக்காய் கடி கடித்து தந்து தொலைக்கனும். மத்தபடி அந்த சவ்வு மிட்டாய் ஓக்கே தான். அதை தூக்கி வந்து விற்கும் தாத்தாவுக்கு அப்பவே எழுவது வயசு இருக்கும். வாயெல்லாம் பொக்கை, கூன்விழுந்த உடம்பு. இப்ப அவர் உயிரோடு இருந்தா 108 வயசு ஆகியிருக்கும். இடுப்பில் ஒரு அழுக்கு வேஷ்டி. தலையில் ஒரு முண்டாசு. அதே முண்டாசு அந்த பெட்டியை தூக்கும் போது சும்மாடா ஆகிடும். சட்டை எல்லாம் போட்டதில்லை அவரு. ஒரு வேளை தீபாவளிக்கு மாத்திரம் போட்டுப்பாரோ என்னவோ!


அடுத்த நாள் பள்ளிக்கு எதிரே இருக்கும் சாமி கடை. சாமி கடையில் அவருடைய குடும்பமே வேலை பார்க்கும். சாமி கடை ஸ்பெஷல் என்னன்னா கமர்கட்டு மிட்டாய், கடலை உருண்டை, பொறி உருண்டை தான். கமர்கட்டு மிட்டாய் பெரிய சைஸ் மோத்தி பளிங்கு மாதிரி இருக்கும். வாங்கி வாயிலே போட்டா அது போகும் இரு மணி நேரம். அது நம்ம தாமிரா சைஸ்ல வாயிலே போடும் போது இருக்கும். நாம ஒரு மணி நேரம் போட்டு சுழட்டுவதால் என் சைஸ்க்கு ஆகிவிடும். உடனே ஒரு கருக் முருக் போட்டு காலி பண்ணிடலாம்.


அடுத்த நாள் அதே சாமி கடை வாசலில் இருக்கும் ஐஸ் ஸ்டால். இது பத்தி தனி பதிவே போடலாம். ஒரு ஸ்டாண்டிலே ஒரு இழப்புளி. (கார்பெண்ட்டர் வச்சிருப்பாங்களே அதிலே கொஞ்சம் மாற்றம் செய்து) போல்ட் போட்டு வச்சிருப்பாங்க ஆடாம இருக்க. முதலில் ஒரு சாக்கு பையில் பெரிய பெரிய ஐஸ் கட்டி வரும். அது கரையாமல் இருக்க மரத்தூள் அதன் மேலே தூவப்பட்டு இருக்கும்


அதை எடுத்து மண் தரையிலே போட்டு சாமியின் மகன் ஒரு பாயிண்டர் சிசல் வச்சி கோடு போட்டு அதிலே கீறி கீறி அந்த இழைப்புளி மேல் உட்காரும் சைஸ்க்கு உடைத்து சாமியிடம் கொடுக்க சாமி அதை கழுவி அதன் மேல் வைத்து கை விரைக்காம இருக்க மொத்தமான துனியால் அதனை போர்த்தி அதன் மேல் கை வச்சு இழக்க ஆரம்பித்தால் ஐந்து இழைப்பில் அந்த இழைப்புளியின் கீழே வைக்கப்பட்ட அந்த சின்ன கிளாஸ் நிரம்பி விடும். பின்னே அதை எடுத்து அதிலே சிவப்பா ஒரு கொழ கொழ திரவத்தை ஊற்றி அதன் தலையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் போட்டு கொடுத்தா ஆஹா அதை குத்தி குத்தி அந்த திரவத்தை அடிமட்ட ஐஸ் துருவல் கூட அடையும் படி குத்தி சாப்பிட்டா சொர்க்கம் தான் போங்க.

நாம சாப்பிட்டு முடித்தவுடன் அந்த கிளாஸ், ஸ்பூன் ஒரு வாளி தண்ணீரில் கழுவப்படும். அந்த ஒரு வாளி தண்ணீர் அன்றைக்கு முழுக்க மாற்றப்படாது. (கொடுமை) சாப்பிட்டு வகுப்புக்கு வரும் போது வாயெல்லாம் லிப்ஸ்டிக் போட்ட மாதிரி ஒரு சிவப்பா இருக்கும். ரொம்ப பெருமையா இருக்கும்.சாமியை பார்த்தால் குண்டு கட்டையா, சிவப்பா சைக்கிளை எட்டி எட்டி மிதித்து கிட்டு போவது கொஞ்சம் வேடிக்கையாவே இருக்கும். இப்ப வயசாகி போச்சு.

அடுத்து "கனி" என்பவன் விற்க்கும் ஐஸ் பெட்டி கடை. ஐந்து பைசாவுக்கு சாதா உருண்டை ஐஸ். பத்து பைசாவுக்கு பால் ஐஸ். பல பசங்களை கெடுத்தவன். அவன் அப்பவே அக்கவுண்ட் வச்சி ஐஸ் கொடுத்துவிட்டு அநியாய காசுவாங்குவான். அதுக்கு வட்டி எல்லாம் போட்டு. எங்க ஊரின் இப்போதைய தொழில் அதிபர் எல்லாம் கனிக்கு தீவிர ரசிகர்கள். கருப்பா உயரமா. சீவாத பரட்டை தலையோடு, பிளாக் டிக்கெட் விற்பவன் மாதிரியே இருப்பான். இப்போது அந்த தொழில் செய்வதில்லை. போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம் கஞ்சா விற்கிறான். தொழிலில் அடுத்த கட்ட நகர்வு நிகழந்துவிட்டது அவனுக்கு.


இப்படியாக முதல் ஐந்து வருடம் என் "வாங்கி திங்க" காசு ஐந்து பைசாவிலிருந்து பத்து பைசாவாக ஒரு 2 வது சம்பளகுழுவின் பரிந்துரையால் உயர்த்தப்பட்டது. இப்ப உள்ள அரசாங்கம் "நான் சம்பளம் ஏத்துவேன். ஆனா அந்த பாண்டு வாங்கனும், இந்த பாண்டு வாங்கனும்" என்றெல்லாம் டகால்டி விட்டு அதிகமா கொடுத்த சம்பளத்தையும் அரசாங்கத்திடமே அடகு வக்கிறதே. அந்த ஐடியாவை பெத்ததே எங்க அம்மா தான்.


"நீயும் ஆறாவது வந்துட்ட. அதனால இன்னிக்கு முதல் பத்து பைசா"இது அம்மா!


"ஹய் ஜாலி"


"ஆனா ஒரு கண்டிஷன். அதிலே நீ ஐந்து காசுக்கு தான் வாங்கி திங்கனும். மீதி ஐந்து காசை அய்யம்பேட்டை சரோஜா கடையிலே சீட்டு கட்டனும்"


சரி ஏதோ கிடைத்தவரை லாபம் அப்படின்னு ஒத்து கொண்டேன். அது என்ன சீட்டு?


சரோஜா பொட்டி கடையில் ஒரு பிரிண்டட் அட்டை கொடுக்கும். அது தனியா பத்து பைசா. அதிலே 100 கட்டம் இருக்கும். அதாவது மொத்தம் ஐந்து ரூபாய் மதிப்பு. முதல் ஐந்து கட்டம் அதாவது 25 காசு சரோஜாவின் கும்பனிக்கு. தினமும் ஐந்து பைசா கொடுத்தா ஒரு கட்டத்தில் அது கையெழுத்து குறித்து கொடுக்கும். பாதியிலே கூட நாம கழட்டிகிட்டா முதல் ஐந்து கட்டத்தின் காசு போக மீதியை கொடுக்கும். முழுசா கட்டினா 4.75 கொடுக்கும். (கிழிஞ்சுது போ)
நான் முதல் ஒரு பத்து நாள் கட்டுவேன். உடனே கும்பனியில் இருந்து நீங்கி விடுவேன். 25 காசு எனக்கு. 25 காசு சரோஜாவின் கும்பனிக்கு!


இதல்லாம் இப்ப இருக்கான்னு தெரியலை! நினைத்து பார்ப்பதே ஒரு சுகம் தான் எல்லாமே!

32 comments:

  1. மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய் :))


    /சின்ன கடை தெரு சலாமத் பாய் கடையிலே பொம்மை ரொட்டி மூன்று கிடைக்கும்//

    ஹைய்ய்ய்ய் ஸேம் ஸேம்!

    பட் கடை வேற...! :))

    ReplyDelete
  2. /அதை எடுத்து புத்தக மூட்டைக்குள் வத்து விட்டு பதில் சொல்லிட்டு திரும்ப எடுக்கும் போது புத்தக பையின் தூசுகளும் சேர்ந்து வரும். அதை எல்லாம் கண்டுக்காம சாப்பிடனும்.//


    அண்ணே சீனியர்களாகிய நீங்களும் இப்படித்தானா????

    அவ்வ்வ்வ்வ்வ்

    இனி சிவா அண்ணே சீமாச்சு அண்ணே எல்லாம் வந்து ரிப்பிட்டு போடப்போறாங்க???
    :)))))

    ReplyDelete
  3. //சாமி கடையில் அவருடைய குடும்பமே வேலை பார்க்கும். சாமி கடை ஸ்பெஷல் என்னன்னா கமர்கட்டு மிட்டாய், கடலை உருண்டை, பொறி உருண்டை தான். கமர்கட்டு மிட்டாய் பெரிய சைஸ் மோத்தி பளிங்கு மாதிரி இருக்கும்.//

    அண்ணே ஐஸ்????????

    ReplyDelete
  4. //அடுத்த நாள் அதே சாமி கடை வாசலில் இருக்கும் ஐஸ் ஸ்டால். இது பத்தி தனி பதிவே போடலாம். ஒரு ஸ்டாண்டிலே ஒரு இழப்புளி. (கார்பெண்ட்டர் வச்சிருப்பாங்களே அதிலே கொஞ்சம் மாற்றம் செய்து) போல்ட் போட்டு வச்சிருப்பாங்க ஆடாம இருக்க. முதலில் ஒரு சாக்கு பையில் பெரிய பெரிய ஐஸ் கட்டி வரும். அது கரையாமல் இருக்க மரத்தூள் அதன் மேலே தூவப்பட்டு இருக்கும்//


    அது !

    :)))

    சாமி காரூவாய்க்கு ஐஸ் ஒண்ணு !

    மதிய பொழுதுகள் இப்படித்தானே போனது :)

    ReplyDelete
  5. //இதல்லாம் இப்ப இருக்கான்னு தெரியலை! நினைத்து பார்ப்பதே ஒரு சுகம் தான் எல்லாமே!//

    :((

    அண்ணே இன்னும் நீங்க சின்னகடைத்தெருவிலயே சுத்திக்கிட்டிருக்கீங்க கொஞ்சம் வெளியால வாங்க மணிக்கூண்டு பக்கம் !

    ReplyDelete
  6. உங்களுக்கும் எனக்கும் கிடைத்த இந்த மாதிரி சந்தோஷங்கள் இன்றைய குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை.

    5 (அ) 10 பைசாவில் நாம் அடைந்த சந்தோஷத்தை இன்றைய குழந்தகல் ரூ. 100 கொடுத்தால் கூட அடைய முடிவதில்லை.

    வீடு, பள்ளிக்கூடம், ஹோம் ஒர்க் இதுக்குத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கின்றது. அது முடிந்தவுடன் இருக்கவே இருக்கு தொலைக்காட்சி பெட்டி.

    இது மாதிரியான சுகமான நினைவுகள் வருங்கால நம் சந்ததியர்க்கு இருக்குமா?

    ReplyDelete
  7. கூடவே ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவே விட்டுடீங்க..

    கும்பகோணத்தில் உண்டு... மாயவரத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.

    மாங்கா, எலந்தப்பழம்.. இது எல்லாம் வாங்கி தின்ன அனுபவம் உண்டா?

    ReplyDelete
  8. நல்ல வர்ணனை.எல்லாப் பள்ளிகளிலும் இதே போல பலர் இருக்கிறார்கள் இன்னும் நம் மனதை விட்டு நீங்காமல்.

    ReplyDelete
  9. மறக்க முடியாத பள்ளி நாட்களை எழுப்பி விட்டிருக்கீங்க... Superb

    ReplyDelete
  10. நல்ல கொசுவர்த்தி தொல்ஸ்.

    ஆனா, தேன் மிட்டாய், களாக்காய், இலந்தை வடை, பிஞ்சு மாங்காய், அரிநெல்லிக்காய், பெரு நெல்லிக்காய் போன்றவைகள்தான் எங்களுக்குக் கிடைத்தது.

    ஜவ்வு மிட்டாய் பொம்மைகளால் கிடைத்த சந்தோஷம் இப்ப இல்லை.

    ReplyDelete
  11. என் சிறு வ‌ய‌து நினைவுக‌ளைத் தூண்டிவிட்ட‌து. ஒரு முறை நானும்,எங்க‌ அக்காவும் ஒரு மாம‌ர‌த்திலே திருட்டு மாங்காய் ப‌றிக்க‌ப் போக‌, அங்கிருந்த‌ வேலையாள் துர‌த்த‌, நாங்க‌ளும் ப‌ய‌ந்து போய் வேறு வ‌ழியில்லாம‌ல் ப‌க்க‌த்திலிருந்த‌ பெரிம்மா வீட்டிலேயே த‌ஞ்ச‌ம் புக‌..க‌டைசில‌ பார்த்தா அது எங்க‌ பெரிம்மா வீட்டு ம‌ர‌ம் தானாம்:‍)))

    ReplyDelete
  12. //அதை எடுத்து புத்தக மூட்டைக்குள் வத்து விட்டு பதில் சொல்லிட்டு திரும்ப எடுக்கும் போது புத்தக பையின் தூசுகளும் சேர்ந்து வரும். அதை எல்லாம் கண்டுக்காம சாப்பிடனும்//

    ஐயே....அழுக்குப் ப‌ச‌ங்க‌ளா அண்ணா நீங்க‌:‍))))))

    ReplyDelete
  13. //"நான் சம்பளம் ஏத்துவேன். ஆனா அந்த பாண்டு வாங்கனும், இந்த பாண்டு வாங்கனும்" என்றெல்லாம் டகால்டி விட்டு அதிகமா கொடுத்த சம்பளத்தையும் அரசாங்கத்திடமே அடகு வக்கிறதே. அந்த ஐடியாவை பெத்ததே எங்க அம்மா தான்.//
    அச்சச்சோ இது தெரியாமல் யார் யாரையெல்லாமோ திட்டுறேனே!!!

    ReplyDelete
  14. கனாக்காலங்கள் இனிக்கின்றது.

    இன்றைய குழந்தைகளுக்கு பிஷாவும் பாஸ்ட்புட்டும் தான்.

    ReplyDelete
  15. உங்களுக்கு 45 வயசா?

    ReplyDelete
  16. kutti kalla nayabagangal.

    Annal ella vetulum solli vacah matri en 5 paise kodukuraga.?

    Ki

    ReplyDelete
  17. வாப்பா ஆயில்ஸ்! அதிலே உள்ளதுக்கு எல்லாம் உன் சீனியர்ஸ் எல்லாம் வந்து ரிப்பேட்ட்ய் தான் போடனும். நாம பார்த்து பேசி ப்ழகின கடைகாரர்கள் தானே எல்லோரும்.

    விரிவான பின்னூட்டங்களுக்கு நன்னி நன்னி நன்னி!

    ReplyDelete
  18. ஆயில்ஸ்! சின்ன கடை தெரு விட்டு மணிகூண்டு பக்கம் வந்து எழுதலாம். ஆனா எல்லேராம் சார் தான் பஸ்ஸ்டாண்டு தொடங்கி மணிகூண்டு வழியா அடிச்சு தூள் கிளப்பிட்டாரே! இனிமே நான் எழுதினா எடுபடுமா???

    இருந்தாலும் எழுதுவோம்!

    ReplyDelete
  19. வாங்க துபாய்ராஜா! மிக்க நன்றி வருகைக்கு! நீங்கதான் துபாய்க்க்கு ராஜாவா நடத்துங்க!!

    ReplyDelete
  20. \\ இராகவன் நைஜிரியா said...
    உங்களுக்கும் எனக்கும் கிடைத்த இந்த மாதிரி சந்தோஷங்கள் இன்றைய குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை.

    5 (அ) 10 பைசாவில் நாம் அடைந்த சந்தோஷத்தை இன்றைய குழந்தகல் ரூ. 100 கொடுத்தால் கூட அடைய முடிவதில்லை.

    வீடு, பள்ளிக்கூடம், ஹோம் ஒர்க் இதுக்குத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கின்றது. அது முடிந்தவுடன் இருக்கவே இருக்கு தொலைக்காட்சி பெட்டி.

    இது மாதிரியான சுகமான நினைவுகள் வருங்கால நம் சந்ததியர்க்கு இருக்குமா?

    \\

    வாங்க அண்ணா! நீங்க சொல்வது மிக்க சரி! நம்ம வாரிசுகளுக்கு இது போன்ற ஒரு அனுபவம் கிடைக்க இனி வழி இல்லை.

    ஒரு விளையாட்டு கூட விளையாடாம கம்பியூட்டர், டி வின்னு போயிட்டாங்க.

    குறைந்த காசு பெற்றோரிடம் வாங்கி அதை ரசிச்சு அனுபவிச்ச காலம் போய் பிசாவும் பர்கரும் ஆக்கிரமிச்சிடுச்சு அவங்களை!

    ReplyDelete
  21. \\ இராகவன் நைஜிரியா said...
    கூடவே ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவே விட்டுடீங்க..

    கும்பகோணத்தில் உண்டு... மாயவரத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.

    மாங்கா, எலந்தப்பழம்.. இது எல்லாம் வாங்கி தின்ன அனுபவம் உண்டா?

    \\

    பால்கோவாவும், சின்ன அல்வா துண்டும் கூட உண்டு!மாங்கா காசு கொடுத்து வாங்க்கினது இல்லை. ஆனா எலந்தபழம், நாவல் பழம் உண்டு!

    ReplyDelete
  22. \\ நேசன்..., said...
    நல்ல வர்ணனை.எல்லாப் பள்ளிகளிலும் இதே போல பலர் இருக்கிறார்கள் இன்னும் நம் மனதை விட்டு நீங்காமல்.
    \\

    வாங்க நேசன்! வருகைக்கு நன்றி!இப்போ எல்லாம் இதல்லாம் கிடையாதுன்னு நினைக்கிறேன். பசங்க எல்லாம் கிட்காட், குர்குரே, 5 ஸ்டார்ன்னு மாறிட்டாங்க. ஆனா இப்பவும் கிராமத்து பள்ளிகளில் பார்க்கலாம்!!

    ReplyDelete
  23. ## கவிதை காதலன் said...
    மறக்க முடியாத பள்ளி நாட்களை எழுப்பி விட்டிருக்கீங்க... Superb

    ##

    வாங்க கவிதைகாதலன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  24. \\ வடகரை வேலன் said...
    நல்ல கொசுவர்த்தி தொல்ஸ்.

    ஆனா, தேன் மிட்டாய், களாக்காய், இலந்தை வடை, பிஞ்சு மாங்காய், அரிநெல்லிக்காய், பெரு நெல்லிக்காய் போன்றவைகள்தான் எங்களுக்குக் கிடைத்தது.

    ஜவ்வு மிட்டாய் பொம்மைகளால் கிடைத்த சந்தோஷம் இப்ப இல்லை\\

    அண்ணாச்சி வாங்க! நீங்க சொன்ன எல்லாமே இருக்கு. இராகவன் அண்ணா கூட சொல்லியிருக்கார் பாருங்க.

    எல்லாத்தையும் எழுதினா தொடர் பதிவா ஆகிடுமே. அதான் அடக்கி வாசிச்சேன்!

    ReplyDelete
  25. சூப்பர் கொசுவர்த்தி :)))

    எனக்கும் பழைய நியாபகம் வந்துருச்சு... நான் போயி பொழிலன தூங்க வெச்சிட்டு உட்கார்ந்து எல்லாத்தையும் நினைச்சு பாத்துக்கிறேன்... வரட்டா....

    ReplyDelete
  26. சாமி கடையில் சிவந்தமண் என்ற மிட்டாய் நன்றாக இருக்கும். அப்புறம் அந்த watch மிட்டாய்(மறக்க முடியாத ரோஸ் கலரில்)

    ReplyDelete
  27. எலிமென்டரி ஸ்கூல் நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க.. நல்ல தொகுப்பு அபி அப்பா..

    ReplyDelete
  28. எல்லா நுணுக்கமான விவரங்களையும் நினைவில் வைத்து நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ‘டப் டப்’ என மூடியை அடித்து சத்தம் பண்ணியபடி வெண்ணிற தள்ளு வண்டியில் வரும் கனி ஐஸ் சுவைக்காதவங்க இருக்க முடியாது அப்போது. பத்து பைசா பால் ஐசோடு நிறுத்தி விட்டீர்களே, 25 பைசாக்கு க்ரீம் ஐஸ், 30-க்கு க்ரேப் ஐஸ், 50-க்கு மேங்கோ, 75-க்கு கப், ஒரு ரூபாய்க்கு கோன். வீட்டு வாசலுக்கு வருகையில் எல்லாவற்றிற்கும் அனுமதி. பள்ளியிலே பால் ஐஸ்தான்:))!

    ReplyDelete
  29. அருமையான பதிவு.

    எலந்தவடை, நவாப்பழம், உப்பு, மிளகாய் பொடி தூவின மாங்காய்த் துண்டுகள், ஸ்டேட்டு எக்குப்ரெஸ்ஸ் என்று கூவி வரும் ஐஸ் வண்டிக்காரர், எங்கே போனது இதெல்லாம் மா-நரகத்தில்?

    கார்ட்டூன் போட்டா தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கும் என் நான்கு வயது மகன், பிஸ்ஸா வாங்கினால், அவனே தட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்து விடுகிறான். சமீப காலமாய் அதனை தவிர்த்து சப்வே சண்ட்விச் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.

    ReplyDelete
  30. கொசுவத்தி எப்போதுமே நல்லாவே இருக்கும்

    ReplyDelete
  31. அபி அப்பா
    சின்ன வயசில் வாயில் போட்ட மிட்டாய் ,இன்னும் வாயில் கரையாமல், மனதில் உரைந்து போய் கிடப்பது தெரிகிறது.
    அதான் எச்சிலாய் வடிந்ததை எல்லாம் எழுத்தாய் மாற்றி விட்டீர்.
    நல்ல ஸ்லேட்ஸ்னேக அனுபவம்

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))